நல் அறம் செய்வோர் நல் உலகு அடைவர்

மரணம் இயற்கையானது அதனை யாராலும் தடுக்க இயலாது!

நக்கீரன்

நேற்றுமாலை தமிழ் உணர்வாளர் சிவம் பரமநாதன் அவர்களது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அவரது தமிழ்த் தொண்டு பற்றி சுருக்கமாகப் பேச வாய்ப்புக் கிடைத்தது. தூய தமிழில் அவருக்கு அபார நம்பிக்கை. பிள்ளைகளுக்கு தமிழ்ச்செல்வன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வி………..பெயர்கள். அவர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தில் இருந்தவர். ஆனால் அதன் செய்வினை வேகம் காணாது என நினைத்து தமிழ்த் தாய் மன்றம் தொடக்கியவர். உடல்நலக் குறைவு காரணமாக அவரால் அதனை நீண்ட காலம் இயக்க முடியவில்லை.

இப்படியான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது முதலில் நினைவுக்கு வருவது வள்ளுவரின் நிலையாமை பற்திய அவரது சிந்தனைகள்.  அடுத்து நினைவுக்கு வருவது திருமூலரின் திருமந்திரம். பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் திருமந்திரத்தை தமிழ் ஆகம நூல் என்பார்.  வேதம் பொது நூல் என்றும் ஆகமம் சிறப்பு நூல் எனச் சைவர் கூறுவர். .திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தந்திரம் என்பது பெயர்.  நிலையாமை அதன் முதல் தந்திரம்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.                     (குறள் 339)

நாம் உறங்கப் போகிறோம். உறக்கத்தில் ஒன்றும் நடைபெறுவதில்லை. கனவுகள் வந்து போகின்றன.  அடுத்த நாள் விழித்தால் உயிரோடு இருக்கிறோம் என்று பொருள். இல்லாவிட்டால் இறந்து விட்டோம் என்று பொருள்.

உயிர் என்று தனியொரு பொருள் கிடையாது. உடம்பின் இயக்கமே உயிர் எனப்படுகிறது. உடம்பின் இயக்கம் நின்றால் உடம்பு செத்துவிடும். செத்தவன் பெயர் அழிக்கப்பட்டு பிணம் என பெயர் சூட்டப்படும்.

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.                                       ( குறள் 338)

முட்டைக்கும் பறவைக்கும் உள்ள உறவே உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு என்பது  இந்தக் குறளின் பொருள்.

நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு திருமூலர் உபாயம் சொல்கிறார். திருமூலர் ஏனைய சித்தர்கள் போன்றவர் அல்லர். பெரிதும் வித்தியாசமானவர். காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா என்பதில் திருமூலருக்கு உடன்பாடில்லை. ஒரு காலத்தில் அவரும் அப்படியான சித்தாந்தத்தோடுதான் இருந்தார். பின்னர் தனது  சிந்தாந்தத்தை மாற்றிக் கொண்டு மனித உடம்பின் மகத்துவம் பற்றி கூறத் தொடங்கிவிட்டார். சித்தாந்தம் என்ற சொல்லை திருமூலர்தான் முதன் முதலில் பயன்படுத்தியவர்.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே.                        (திருமந்திரம் – 725)

என்கிறார்.

உடம்பினை வீண் பொருள் என நினைத்தேன், அந்த உடம்பினுக்குள் ஒரு பொருளைக் கண்டேன் அவனே இறைவன் என்று உணர்ந்தேன். எனவே இறைவன் இருக்கும் இந்த உடம்பை பாதுகாத்து வந்தேன் என்கிறார்.  மேலும்,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மனிவிளக்கே. (திருமந்திரம் – 1823)

சைவக் கோயில்களை  சைவ சமயத்தோர் மனித உடம்பு வடிவத்தில் எழுப்பி  வைத்திருக்கிறார்கள்.

திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார்.  இறைவன்  ஆன்மாக்கள் தோறும் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம் உள்ளமாகிய மனமண்டலமாகும். அவ்வுள்ளமே சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும் என்று  குறிப்பிடுகிறார்.

பிற்காலத்தில் தோன்றிய சிவவாக்கியார் எனும் சித்தர் திருமூலரைப் போலவே அக வழிபாட்டை வற்புறுத்துகிறார்,

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே
.    (சிவவாக்கியார் பாடல் 35)

ஆசிரியர் குகதாசன் பேசும் போது பூங்குன்றனார் இயற்றிப் புகழ் பெற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வரா என்று தொடங்கும் பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”    (புறம்: 192)

இந்தப் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது. இதன் பொருள்

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

உயிர் பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். இங்கே புலவர் விதிவழிதான் எல்லாம் நடக்கும் என்ற கருத்தைப் புறந்தள்ளி எல்லாம் இயற்கை வழி நடக்கும் என்கிறார். அதனை அறிவால் தெளிந்ததாகச் சொல்கிறார்.  சாதல் புதுமை இல்லை. வாழ்தல் இன்பமென்று மகிழ்ச்சி அடையக் கூடாது என்கிறார்.

வள்ளுவர் நிலையாமை அதிகாரத்தில், 

நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்தது இவ்வுலகு.       
                                        (குறள் –

என்கிறார். நேற்றிருந்தவன் இன்று இல்லை என்ற பெருமையை  உடையது இவ்வுலகம் என்பது இதன் பொருள். தமிழ் உணர்வாளர் சிவம் பரமநாதனது துணைவியார், பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர் ஆகியோருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

அடுத்துப் பேசிய நான் மரணம் ஒன்றே ஒரு மனிதனுடைய வாழ்வில் நிச்சயமானது. அதில் இருந்து யாரும் தப்பமுடியாது. பிறந்தவர்  இறப்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.  இறந்தவர் பின்னர் பிறப்பதும்  உலக நியதி என ஆத்தீகர்கள் நம்புகிறார்கள். பிறந்தவர் இறப்பது உண்மை. ஆனால் இறந்தவர் மீண்டும் பிறக்கிறார்களா, அதுவும் மனிதர்களாகப் பிறக்கிறார்களா என்பது தெரியவில்லை. பிறந்தவர் யாரும் வந்து தங்கள் முற்பிறப்பைப்பற்றி சொல்லவில்லை.

மரணம் இயற்கையானது அதனை யாராலும் தடுக்க இயலாது என்ற உண்மையை புத்தர் ஒரு ஏழைத் தாய்க்கு உணர்த்தினார் என ஒரு செவிவழிக் கதை இருக்கிறது. புத்தர் ஒரு ஊருக்குப் போனார். அந்த ஊரில் ஒரு தாய். அந்தத் தாயின்  ஒரே பிள்ளை இறந்துவிட்டது. ஊரவர்கள் அந்த ஊருக்கு வருகை தந்திருந்த புத்தரிடம் சென்று அவளது  மகனின் உயிரை மீட்டுத்தரும்படி கேட்குமாறு சொல்லி அந்தத் தாயை அவரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்தத் தாய் தனது ஒரே மகன் இறந்து போனான் அவனை எழுப்பித்தருமாறு புத்தரை மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். புத்தர் அந்தத் தாய்க்கு மரணம் இயற்கையானது அதனை யாரும் புறம்காண முடியாது என்று உண்மை உணர்த்த விரும்பினார். புத்தர் அந்தத் தாயைப் பார்த்து,

தாயே! நின் மனக்கவலை – ஒழிந்திடத்
தக்கநல் மருந்தளிப்பேன்;
சேயினை எழுப்பிடுவேன் – விளையாடித்
திரியவும் செய்திடுவேன்.  

நாவிய கடுகுவேண்டும் – அதுவுமோர்
நாவுரி தானும் வேண்டும்;
சாவினை அறியாத – வீட்டினில்
தந்ததா யிருக்கவேண்டும்! 

பக்கமாம் பதிகளிலே – சென்றுநீ 
பார்த்திது வாங்கிவந் தால், 
துக்கமும் அகலுமம்மா! – குழந்தையும் 
சுகமாக வாழுமம்மா!

(நாவிய – புடைத்தெடுத்த, நாவுரி – நாழியுரி என்பதன் சுருக்கம். நாழி + உரி – ஒன்றரைப்படி. நாழி – ஒருபடி, உரி – அரைப்படி.)

புத்தரின் கட்டளையை செவி மடுத்த அந்த ஏழைத்தாய் அந்த ஊரிலுள்ள எல்லா வீட்டுப் படிகளிலும் ஏறி இறங்கினாள். “இந்த வீடு மரணம் இல்லாத வீடா?” என்று கேட்டாள். எல்லோரும் இல்லை மரணம் நிகழந்த வீடுதான் என்றார்கள். அந்தத் தாய் சோகத்தோடு புத்தரிடம் வந்து நடந்ததைச் சொன்னாள். உடனே புத்தர் “தாயே மரணம் இயற்கையாளது. அதனை யாராலும் தடுக்க முடியாது. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்” எனச் சொல்லி அனுப்பினார்.

புத்தர் மனிதனாகப் பிறந்து ஞானியாக மறைந்தவர். அவர் ஒரு பகுத்தறிவுவாதி. ஏனைய ஞானிகளையோ அல்லது அவதாரங்களைப் போல் அற்புதங்கள் எதனையும் செய்து காட்டாதவர்.  தான் ஒரு ஆசிரியர் என்றும் தான் வகுத்த பாதையில் மனிதன் பயணம் செய்தால் அவன் உயர்நிலை அடைவான் என்றும் அப்படிப்பட்டவனுக்கு  கவலை இருக்காது என்றும்  உபதேசம் செய்தார்.

மகாஅலக்சாந்தர் ஒரு சிறந்த வீரன். சிறுவயதில் முடிசூட்டிக் கொண்டவன் உலகத்தை கட்டியாள ஆசைப்பட்டான். தனது இருபத்தொராவது அகவையில்  பாரசீக பேரரசு மீது படையெடுத்தான். பாரசீகத்தை கைப்பற்றிய பின்னர்  இந்தியாவின் மேற்கில் காணப்படும் பஞ்சாப், கஷ்மீர்  மீது படையெடுத்தான்.  அதற்கு முன்னர் வழியில் இருந்த  எகிப்து, சிரியா, யூடியா, காஸா, மெசெத்தோமியா போன்ற நாடுகளை வெற்றி  கொண்டான். மகா  அலக்சாந்தர் தனது 33 அகவையில்  (யூன் 13, கிமு 323)நோய்வாயப்பட்டு இறந்து போனான். அவன் ஆட்சி செய்த காலம் 12 ஆண்டுகள் எட்டு மாதங்கள். அவன் இறந்துபோன போது அவனது வேண்டுகோளுக்கு இணங்க அவனது சவப்பெட்டியில் இரண்டு பக்கமும் ஓட்டை துளைத்து அவனது  கைகள்  வெளியே தெரியும்படி ஊர்வலாமாக எடுத்துச்  செல்லப்பட்டான். உலகநாடுகளை படையெடுத்து பொன்னும் பொருளும் புகழும் தேடியவன்  தான் இறந்தபின்  எதனையும் தன்னோடு கொண்டுபோகவில்லை வெறும் கையோடு போகிறேன் என்பதைக் காட்டவே மகா அலக்சாந்தர் அந்த ஏற்பாட்டைச் செய்தான். அலெக்சாந்தர் மட்டுமல்ல எல்லோருமே இறந்த பின்னர் வெறுங்கையோடுதான் போனார்கள். பட்டினத்தடிகள் காதறுந்த ஊசியும் வராதே கடைவழிக்கே எனக் கூறினார். சாதல் புதுமை இல்லை. அது இயற்கை.  சாவு மனிதனின் கடைசித் தோல்வி.

தோன்றிய பொருள் யாவும் அழிந்தே ஆக வேண்டும் என்பது நியதி. மணிமேகலையில்  நாகர்களின் தலைவனுக்கு சாதுவன் கூறும் அறுவுரைகளிலும் நிலையாமைக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்” 
     (மணிமேகலை  16 86-89)

விசாகை தன மாமன்மகள் தருமதத்தனுக்குக் கூறும் அறிவுரையில்,

“இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது”

என உணர்த்துகின்றாள்.

எனவே நாங்கள் தானம் செய்து வாழ வேண்டும். கள்ளும் களவும் காமமும் பொய்யும் புறஞ்சொல்லும் ஒழித்து இந்த உலகில் வாழவேண்டும்.


 
About editor 3162 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply