பெரியபுராணம் தந்த சேக்கிழார்

பெரியபுராணம் தந்த சேக்கிழார்

 பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி ராம தேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது சகோதரர் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார். 1133ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது. சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவார். இதனால் சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயின. தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு அந்தப்பதவி கிடைத்தது. அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராகவே நியமித்தான். சேக்கிழார் தனது பொறுப்பை நல்லமுறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்றார். இறைவனைக் கண்டதும் அவரது கண்கள் பனித்தன. அவர் உடலே இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அரசபதவியை விட்டுவிட்டு தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு திடீரென மாறியது. மன்னன் அநபாயச்சோழன் சீவகசிந்தாமனி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழித்தான். எனவே சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார்.

அவன் சேக்கிழாரிடம், சமயநூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக இருந்தது. சேக்கிழார் அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறினார். நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உண்மை நெறியை மக்களுக்கு எடுத்துக்காட்டினான். அப்படிப்பட்ட மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூறினார். இதையடுத்து மன்னன் திருந்தினான். சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தரவேண்டும் என சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சேக்கிழார் சிதம்பரம் நகருக்கு சென்றார். அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினார். தில்லையம்பல நடராஜர் உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்தார். அதை முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன.

எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியார் போல நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கினான். அப்போது விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த அசரீரி வாக்கு கூறியது.

இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்லநாளும், திருஞான சம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது . மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். ஒருபக்கம் சிலம்பாட்டம், மற்றொரு பக்கம் நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்டன. வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்கள் அலங்கரித்தன. இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது. அரங்கேற்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்து. கதை முடிந்தபாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடினார். அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார்.

சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்தான். சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு தொண்டைமான் என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.


About editor 3043 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply