முதலமைச்சர் விக்னேஸ்வரன் உருத்திராட்சப் பூனைகளின் வேடத்தைக் கண்டு ஏமாந்து போனார்!
நடராசா லோகதயாளன்
முதல்கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழி இன்று அரசியல் கட்சிகள் எடுக்கும் நிலைப்பாட்டிற்குப் பொருத்தமாகவே காணப்படுகின்றது.
டிசம்பர் 19, 2015 அன்று தொடக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை முதல் கோணல். இப்போது கடந்த நொவெம்பர் 12, 2017 இல் யாழ்ப்பாணம் நூலகத்தில் வைத்து ஒரு அரசியல் கூட்டணி என அறிவிக்கப்பட்ட போது பேரவை முற்றும் கோணலாகி விட்டது.
அதாவது அக்கூட்டணியில் முதலமைச்சரை இணைத் தலைவராக கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் தாம் அரசியல் முன்னணியை ஆரம்பிப்பதாக கஜேந்திரகுமாரும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் அறிவித்தனர்.
ஆனால் இதே சந்திப்பில் பங்கு கொண்ட இதே தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையின்போது அது தொடர்பாகக் கருத்துரைக்கும்போது உள்ளூராட்சித் தேர்தலின் அறிவித்தல் வெளிவந்துள்ளன. இப்பொழுதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைப்புக் கட்சிகளாக இருக்கும் சில கட்சிகள் தம்மிடையே போட்டி போடக் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன. ஒரு பக்கத்தில் சகல கட்சிகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கீழ் ஒன்றுபடுத்த பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சில கட்சிகளின் தனித்துவமான கட்சி எதிர்பார்ப்புக்கள் அல்லது கட்சியின் நல உரித்துக்கள் பற்றிய அவர்கள் சிந்தனைகள் அக் கட்சிகளைத் தனித்துப் போட்டியிட உந்துகின்றன போலத் தெரிகின்றது. இவற்றுள் எமக்கு அனுசரணை வழங்கும் கட்சிகள் சிலவும் உள்ளடங்குகின்றன என்றார்.
ஆரம்பத்திலிருந்தே ஐந்து கட்சிகள் சேர்ந்தே என்னை முதலமைச்சர் பதவிக்கு சிபார்சு செய்ததன் அடிப்படையில் கட்சி ரீதியாக முரண்பட நான் முன்வரவில்லை என்றும் இதே சந்திப்பில் தெரிவித்தது மட்டுமன்றி இதனையே வெளியில் காத்திருத்த ஊடகவியலாளர்களிடமும் தெரிவித்தார்.
இங்கேதான் உட்கட்சி மோதல் உச்சம் பெற்றது. முதலமைச்சரின் இக் கூற்றினை வன்மையாக கண்டிப்பதாக இக் கூட்டத்திலேயே சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து வெளியிட்டார். அவரது கருத்தினை ஒட்டிக் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமாரும் சுரேசின் கருத்தை வழிமொழிந்தார். இந்த நேரம் மற்றுமோர் பேரவையின் உறுப்பினர் முதலமைச்சரை நம்பியே பேரவைக்கு வந்தோம், முதலமைச்சர் இந்த அணியைப் பலப்படுத்த வேண்டும் மாறாக நலினப்படுத்தும் கருத்துக்களை முன்வைக்க கூடாது என்ற வகையில் கருத்தினை முன் வைத்தார்.
இதன் காரணமாக தனது கருத்தில் உறுதியாக இருந்த முதலமைச்சர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். உதவியாளர் மூலம் முதலமைச்சரின் கோப்புக்களும் வெளியில் வந்தன. இவ்வாறு வெளியேறிய முதலம்மைச்சரே தனது நிலைப்பாட்டினை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்து விட்டு வெளியேறினார். இதனால் தமிழ் மக்கள் பேரவையில் சர்ச்சை மூண்டது.
அதாவது ஒப்புக்குக் கூட்டத்தினை நடாத்தி அதன் மூலம் கஜேந்திரகுமார், சுரேஸ் மற்றும் பேரவையில் அங்கம் வகிக்கும் சிலரை அரசியலில் இடம்பிடிக்க வைக்கும் முயற்சி பிசுபிசுக்குமா? என்ற ஐயம் பேரவையினரின் மத்தியில் தொற்றியபோதும் இறுதியில் கட்சி மற்றும் பேரவை சார் வேட்பாளர் தேர்விற்கும் பேரவையின் மூன்றாவது இணைத்தலைவர் வைத்தியக் கலாநிதி லக்ஸ்மன் தலமையில் ஓர் குழு தெரிவு செய்யப்பட்டது.
இதேநேரம் டிசம்பர் 19, 2015 இல் யாழ்ப்பாணத்தில் பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போதே இப்படியான நிலமைதான் பேரவையில் ஏற்படும் என அன்றே பலர் ஆருடம் கூறியபோது சிலர் அதனை மறுத்தனர். பேரவை அரசியல் கட்சியாகவோ அல்லது அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ ஒருகாலமும் செயற்படாது என அடித்துச் சொன்னார்கள். வடக்கு மாகாண முதலமைச்சர் அதற்கும் ஒரு படிமேலாக பேரவை மக்கள் இயக்கம் மட்டுமே அரசியல் கட்சியாக எந்தக் காலத்திலும் மாற்றப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தின் பின்பே தான் இணைத் தலமைக்கு இணங்கினேன் என்றார்.
அவ்வாறானால் 12 ஆம் திகதிய கூட்ட முடிவில் பிறேமச்சந்திரனும் கஜேந்திரகுமாரும் கூறிய கூற்றுத் தவறானது என தீர்ப்புக் கூறவேண்டிய பொறுப்பு தற்போது நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடமே விடப்பட்டுள்ளது. இங்கே வடக்கு மாகாண முதலமைச்சர் அன்றும் இன்றும் கூறிய கூற்றுச் சரியானது என்றால் இருகட்சிகளும் கூறியவை தவறானது எனப் பகிரங்கமாக முதலமைச்சர் மீண்டும் ஒருமுறை கூறியே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது.
அல்லது அந்த இரு கட்சிகளும் கூறுவதே சரி என்றால் “இந்த தமிழ் மக்கள் பேரவை என்றும் அரசியலில் ஈடுபடாது என எனக்கு எழுத்தில் உத்தரவாதம் அளித்ததின் பின்னரே நான் பேரவையின் இணைத் தலைவர் பதவியினை ஏற்றேன்” என அப்போது சொன்னதற்கும் முதலமைச்சரின் தற்போதைய நிலைப்பாடும் என்னவாக இருக்கப்போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.
ஏனெனில் பேரவை எனவும் எழுக தமிழ் எனவும் கூறும்போதே இதற்குள் பலர் தமது கட்சி அரசியல் சார்ந்தே நிற்கின்றனர். தாம் இழந்த பதவிகளை அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பின் கதவால் வர இந்தப் பேரவை வழி சமைக்குமா என நினைத்தார்கள். அவற்றிற்கெல்லாம் பதிலளித்த முதலமைச்சர் அவற்றை அடியோடு மறுப்பதாகத் திடமாகக் கூறப்பட்டது. உயரத்தை எட்டும் ஏணியாகவே முதலமைச்சரைப் பயன்படுத்துகின்றனர் எனக் கூறிய கூற்று தற்போது மெய்ப்பிக்கப்படுகின்றது.
அல்லது தமிழ் மக்கள் பேரவையே முதலமைச்சரின் கையை மீறி அல்லது கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டது எனவும் எண்ணத்தோன்றுகின்றது. இதே நேரம் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்தவேளையும் சரி எழுக தமிழ் காலத்திலும்சரி இருந்த பல முகங்களை இன்று பேரவையில் காண முடியவில்லை. இதனால் இவ்விடயத்தில் இறுதி முடிவினையும் இறுதிப் பதிலினையும் மக்களிற்கு அளிக்கவேண்டிய பொறுப்பு முதலமைச்சரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ்மக்கள் பேரவையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது அது தேர்தலில் தோற்றுப் போனவர்களையும் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டவர்களையும் பின் கதவால் கொண்டுவரத் துடிக்கும் அமைப்பு எனக் கூறப்பட்டது. அப்போது, இல்லை இது மக்கள் இயக்கம் அரசியல் கட்சிகளின் பணிக்கு வலுச்சேர்க்கும் ஆனால் தேர்தலில் ஈடுபடாது எனக்கூறிய பேரவையின் கூற்றில் உண்மை இருக்குமா எனத் தேடிய பலரும் உள்ளனர். பேரவை உருவாக்கியபோது அவசர அவசரமாக ஒருமுகமாக ஒரு யாப்பு மட்டும் வரையப்பட்டு வெளியிடப்பட்டது.
அதற்கும் அப்பால் இரு பேரணிகள், ஒரு கதவடைப்பு எனச் செய்தவை தவிர்ந்து வேறு எதனையும் சாதிக்காத பேரவை தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கையில் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படும் நிலையில் ஒப்புக்குத்தன்னும் ஒரு கருத்தரங்கையோ அல்லது ஓர் விளக்க கூட்டத்தையோ நடாத்தக்கூட திராணியற்ற பேரவையயாக இருக்கிறது. ‘அண்ணன் எப்ப மண்டையைப் போடுவான் திண்ணை எப்போது காலியாகும்’ என்ற மனநிலையில் இருந்தவன் போல் தேர்தல் எப்பவரும் வேட்பு மனுவை எப்ப தாக்கல் செய்யலாம் என மக்கள் பேரவை உறுப்பினர்கள் காத்திருந்ததாகவே கருதப்படுகின்றது.
தமிழ் மக்கள் பேரவையில் இரண்டு கட்சிகள் அங்கம் வகித்த போதே அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு முகமூடி அணி எனப் பரவலாகப் பேசப்பட்டது. அது இன்று உண்மையாகிவிட்டது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் பாவம். உருத்திராட்சப் பூனைகளின் வேடத்தைக் கண்டு ஏமாந்து போனார்.
Leave a Reply
You must be logged in to post a comment.