நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி 

Oct 21, 2017

Siragu nadugal2

அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் மதங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல் எனும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த வகையில், சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கின்றபோது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கின்றது எனத் தெரிய வருகின்றது. வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் இறந்தபின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கின்றது. மதம் என்ற நிறுவனமயம் ஆக்கப்பட்ட அமைப்பு நம்மிடையே சங்க காலத்தில் இல்லை. திணை வழிபாடு இருந்துள்ளது. இயற்கையை தமிழர்கள் வழிபட்டிருக்கின்றனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கின்றது என்றோ அது தான் இயற்கையை, மனித வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றது என்றோ, மனிதர்களை ஒரு கடவுள் தான் படைத்தார் என்ற கருத்து முதல்வாதம் எந்த மதம் சார்ந்தும் வாழாத தமிழர்களிடம் ஆதியில் இல்லை.

நடுகல் வழிபாடு எனப் பார்க்கின்ற போது சங்க இலக்கியத்தில் அதியமான், கோப்பெருஞ்சோழன், சோழன் ஆகியோர்களுக்கு நடுகல் இருந்ததாக நாம் பாடல்களின் மூலம் அறிந்து கொள்கின்றோம். அதே போல் ஆண்களுக்கு மட்டுமே நடுகல் நடப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கின்றது. புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியப் பாடல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் உண்டு.

நடுகல் மீது மயில் இறகு கொண்டு அலங்கரித்தல், கள் ஊற்றுதல், ஆடுகளை துடி அடித்து பலி கொடுத்தல் எனும் வழக்கம் இருந்துள்ளது. இன்றும் ஈழத்தில் இறந்த மாவீரர்களுக்கு நடப்பட்ட நடுகல் வணக்கத்தை நாம் பார்க்கின்றோம்.

புறநானூற்றுப் பாடல் 335 இல் மாங்குடி கிழார் எழுதியப் பாடலின் மூலம் நடுகல் சிறப்பை அறிந்துகொள்ள முடியும்.

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335)

Siragu nadugal1

ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது என நடுகல் வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகின்றது.

அதே போன்று கோப்பெருஞ்சோழன் இறந்தபின் அவனுடைய நண்பரான பொத்தியார் அவனை நினைத்து வருந்திப்பாடுவதாக புறநானூற்றுப் பாடல் 221 இன் மூலம் அறிந்து கொள்கின்றோம்.
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (புறநானூறு 221)
நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது. குறையில்லா நல்ல புகழையுடையவன் நடுகல்லாகி விட்டானே என வருந்துகின்றார்.

மலைபடுகடாம் எனும் ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் மற்றொரு பாணரை அரசனை கண்டு பரிசில் பெற ஆற்றுப்படுத்துவார், அதில் வழி நெடுக நடுகல் இருக்கும் எனும் அடையாளத்தைக் கூறி வழி கூறுவார்.

ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390

புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில். உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுதொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள் என ஆற்றுப்படுத்துவதாக அந்தப் பாடலில் குறிப்புகள் காணப்பெறுகின்றது.

அதே போன்று ஐங்குறுநூற்றில், ஓதலாந்தையார் எனும் புலவர் யானையின் தும்பிக்கையின் சொர சொரப்பை எழுத்துகள் பொறித்த நடுகல்லோடு ஒப்பிடுகின்றார்.

விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை                    (ஐங்குறுநூறு 352)

அகநானூற்றுப் பாடல் 343 இல் மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் இருக்கும் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி குறிப்பிடுகின்றார்.
மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப், புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்(அகநானூறு 343)

About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply