இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் முழுவிபரம்
2017-11-15
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு வவுனியாவில் உள்ள வன்னி இன் ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் பங்கேற்றார்
இந்தக் கூட்டத்தில் இடைக்கால அறிக்கை குறித்தும், உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆராய்ந்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என ஈபிஆர்எல்எவ் கட்சி அறிவித்துள்ளபோதிலும், அது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு இன்னும் தகவல் கிடைக்கில்லை என கேள்வியொன்றுக்குப் பதிலளித்த தலைவர் இரா.சமப்ந்தன் அவ்வாறு ஒரு தகவல் கிடைத்தால், அதுபற்றி பரிசீலித்து, கருத்து தெரிவிக்கப்படும் என கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சுமந்திரன் மேலும் தெரிவித்ததாவது:
அரசியலமைப்பு நடவடிக்கை குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை பற்றிய விவாதம் நரைடபெற்றுள்ளதன் பின்னணியிலே அந்த விடயங்கள் சம்பந்தமாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இதிலே சொல்லப்பட்ட விடயங்கள் முன்மொழிவுகள் எப்படியானவை இந்த அறிக்கை என்னமாதிரியான அறிக்கை என்பது பற்றி கலந்து பேசினோம்.
இது ஒரு வரைபு அல்ல. இடைக்காலத்திலே வெளிவந்துள்ள ஓர் அறிக்கை. இது இறுதியிலே வந்த அறிக்கையுமல்ல. அது சம்பந்தமாக சில சில முன்மொழிவுகள் நாட்டினுடைய சுபாவம் பற்றி, ஆட்சி முறை பற்றி அதிகாரப் பகிர்வைப் பற்றி இதிலே சொல்லப்பட்டுள்ள முன்னேற்றகரமான விடயங்கள் பல அவதானிக்கப்பட்டன. சில விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாமலிருப்பது என்பது இந்த அறிக்கையிலே வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு மாகாணங்கள் இணைவது சம்பந்தமாக இன்னும் கூடுதலாகப் பேசப்பட வேண்டும் என்று தெளிவாக அதிலே சொல்லப்பட்டு மூன்று மாற்றுத் தெரிவுகள் அதிலே போடப்பட்டுள்ளது. ஆகையினாலே இந்த இடைக்கால அறிக்கைக்குப் பின்னர் வருகின்ற வழிநடத்தல் குழு கூட்டங்களிலே இன்னமும் இணங்காமல் இருக்கின்ற அல்லது இணக்கம் காhணப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக கட்சியின் உறுப்பினர்கள் வழிநடத்தல் குழுவிலே என்னமாதிரியாக அவற்றைக் கையாள வேண்டும் என்ற யோசனைகள் பல முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
அதேநேரத்திலே இந்த இடைக்கால அறிக்கையிலே எங்களுடைய கட்சியின் கொள்கையோடு இணங்கிய பல முற்போக்கான விடயங்கள் வெளிவந்துள்ள போதிலும், இது சரியான முறையிலே மக்களைச் சென்றடையவில்லை என பல உறுப்பினர்களினால் எடுத்தியம்பப்பட்டது. விசேடமாக கட்சிக்கு வெளியில் இருந்து வருகின்ற விமர்சனங்களும், ஊடகங்களிலே பரவலாகச் சொல்லப்படுகின்ற விமர்சனங்களும், அதாவது ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டார்கள் என்பது- ஒரு உதாரணம்.
இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்று அறிக்கையிலே சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ள போதிலும், பல விமர்சனங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டார்கள் என்பதாக இருக்கின்றது. அது ஒரு உதாரணம். அப்படியான பொய்யான பரப்புரையகளை மக்கள் நம்பாமல் வெளிவந்துள்ள அறிக்கையை சரியான விதத்திலே மக்கள் மத்தியிலே எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளை கட்சி எடுக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தங்கள் தங்கள் மாவட்டங்களுக்கு வந்து இது சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டங்கள் வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள்.
ஏற்கனவே தொகுதிவாரியாக பல கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இன்றைய கூட்டத்திலே விசேடமாக கிழக்கு மாகாணத்திலே ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி உறுப்பினர்களுக்கு சரியான நிலைமையை விளங்கப்படுத்துகின்ற கூட்டங்களை நாங்கள் ஒழுங்கு செய்திருக்கின்றோம்.
அத்துடன், வருகின்ற உள்ளுராட்சி தேர்தல் எவ்வாறு சந்திக்கப்படப் போகின்றது என்பது குறித்து ஆராய்ந்திருக்கின்றோம். புதிய தேர்தல் முறை சம்பந்தமாக பல தெளிவுபடுத்தல்கள் அவசியமாகியிருந்தது.
ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மூன்று யாழ்ப்பாணத்திலே சந்தித்து சில முன் நடவடிக்iகைகள எடுத்திருக்கின்றோம். அதைத் தொடர்ந்து மாவட்டங்களிலே சில சந்திப்புக்களை நடத்தி என்ன விதமான நாங்கள் சேர்ந்து போட்டியிடுவது என்று முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கின்றது.
அது சம்பந்தமாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அந்த மாவட்டத்தின் சூழ்நிலையை அனுசரித்து பல கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு அது சம்பந்தமான முடிவுகளை வருங்காலத்திலே எடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
கேள்வி: தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வது சம்பந்தமாக தமிழரசுக்கட்சி சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிப்பதாக சில பங்காளிக்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
பதில்: தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போது 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. பல தேர்தல்களை நாங்கள் கூட்டமைப்பாக சந்தித்திருக்கிறோம். இன்னுமொரு கட்சியாகப் பதிவு செய்யப்படாததன் காரணமாக எந்தவிதமான பின்வாங்கல்களும் கூட்டமைப்புக்கு ஏற்படவில்லை. அது தவிர முதலிலே ஒரு புரிந்துணர்வு எழுதப்பட்டு கைச்சாத்திடப்பட்டு, படிப்படியாக நாங்கள் முன்னேறலாம் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. அதற்கான வரைபும் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சிக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அது ஒருவராலும் இன்னும் செய்யப்படவில்லை.
ஆனால் இதில் பங்காளிகளாக இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதாக இருந்தால் ஐந்தாவது கட்சியாகப் பதிவு செய்வதாக இருக்கும். ஆகையினால் அது சம்பந்தமாக தமிழரசுக்கட்சியிடம் இணக்கப்பாடு இருக்கவில்லை. பங்காளிக்கட்சிகள் அனைத்தும் இணங்கிளால்தான் இன்னுமொரு புதிய கட்சியை உருவாக்க முடியும்.
ஆனால் அப்படியான மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக ஒற்றுமையாக இதுகால வரையிலும் தேர்தல்களை சந்திப்பது மட்டுமல்ல மக்களுடைய அங்கீகாரத்தை முழுமையாகப் பெறுவதிலே நாங்கள் எந்தவிதமான பின்னடைவையும் காணவில்லை.
கேள்வி: வீட்டுச் சின்னத்தில் ஈபிஆர்எல்எவ் போட்டியிடுவதில்லை என்று கூறியிருக்கின்றது. இந்த நேரத்தில் அவர்கள் வெளியில் செல்வதை தமிழரசுக் கட்சி சம்மதிக்கின்றதா?
இந்தக் கேள்விக்கு சம்பந்தன் பதிலளித்தபோது, அவ்விதமான ஒரு தகவலும் ஈபிஆர்எல்எவ் கட்சியினால் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குக் கிடைக்கவில்லை. அவ்விதமான ஒரு தகவல் கிடைத்தால், அதற்குப் பிறகு அந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பரிசீலித்து, எமது கருத்தைக் கூறுவோம் என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.