கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் – பின் நிலைமைகளும் அரசாங்கம் – கட்சிகள் – தமிழ் முஸ்லீம்


கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் – பின் நிலைமைகளும் அரசாங்கம் – கட்சிகள் – தமிழ் முஸ்லீம் மக்கள் : த ஜெயபாலன்

மேலுள்ள தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்றை தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் ஒக்ரோபர் 20 2012இல் ஏற்பாடு செய்திருந்தது. எம் பெளசர் வழிநடத்துகையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அப்துல் வாஜி, எம் பாரூக், சி ராகவன், த ஜெயபாலன் ஆகியோர் உரையாற்றினர். இச்சந்திப்பில் த ஜெயபாலன் வழங்கிய உரையின் முழுமை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகளும் அரசியல் மாற்றங்களும்:

கிழக்கு மாகாணத்தினுடையது என்று குறிப்பாக இல்லாமல் இலங்கை அரசியல் நிலைமைகளைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகள் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை. பெரும்பாலும் தேசியக் கட்சிகள் சிங்கள பேரினவாதத்தைத் திருப்திப்படுத்துவதிலேயே எப்போதும் அக்கறை கொள்கின்றன. சிறுபான்மைத் தேசிய இனக் கட்சிகள் உணர்ச்சிபூர்வமான பிரச்சாரங்களுக்கு அப்பால் செல்ல முயற்சிப்பதில்லை.

கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய ஆளும் ஐக்கிய முன்னணியும் சரி உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. தேர்தல்கள் மூலமாக தங்கள் ஆசனங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அப்பால் இவர்களால் நகர முடிவதில்லை. தேர்தலில் வாக்களிப்பதற்கு அப்பால் மக்கள் அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டவர்களாகவே உள்ளனர். இதற்கு தேசியக் கட்சிகளும் தேசிய சிறுபான்மையினக் கட்சிகளும் விதிவிலக்கு அல்ல.

அரசியல் கட்சிகளின் இணைவு:

தேர்தல் காலங்களில் ஏற்படுகின்ற அரசியல் கட்சிகளின் கூட்டிணைவு கூட கொள்கை அடிப்படையானது அல்ல. கிழக்கில் இணைவுக்கு முற்பட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளுமே சிறுபான்மை இனங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த முன்வரவில்லை. தமிழ் – முஸ்லீம் சமூகங்கள் ஒன்றின் மீது ஒன்று கொண்டுள்ள பகை முரண்பாடுகளைக் களையவும் இவ்விரு கட்சிகளுமே முயற்சிக்கவில்லை. மாறாக கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதில் மட்டுமே அக்கறையாக இருந்தன. இணைவு தொடர்பாக இக்கட்சிகள் வெளியிட்ட சாதகமான கருத்துக்கள் அந்த இணைவு சாத்தியமற்று போனபோது இரு சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கையின்மையை மேலும் து}ண்டியுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக தேசிய சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றி சாதகமாக கருத்து வெளியிட்டு இருந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் ஒரு வாரமாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாருடன் இணைவது என்பது பற்றி வெளிப்படையாகக் கருத்து வெளியிடவில்லை. இறுதியில் ஐக்கிய மக்கள் முன்னணியுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைத்தது.

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது முஸ்லீம் மக்களுக்கு குறிப்பாக தெற்கில் உள்ள முஸ்லீம்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது கிழக்கு மாகாணத்துக்கு வெளியே வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லீம்களுடைய அபிப்பிராயமாக உள்ளது. மேலும் மக்கள் ஐக்கிய முன்னணி அரசில் அமைச்சர் பதவியையும் வகிக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் மற்றுமொரு தேசிய சிறுபான்மைக் கட்சியுடன் இணைவதற்கான வாய்ப்புகளும் இருக்கவில்லை. அப்படி இருந்தும் போலியான உணர்ச்சிகளைக் கிளறும் சுலோகங்களை வைத்து முஸ்லீம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை நிரப்பியது. அதனையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செய்தது.

இலங்கையில் உள்ள தேசிய சிறுபான்மையினக் கட்சிகள் எப்போதும் தேசியக் கட்சிகளுடனேயே கூட்டுச்சேர்வது வழமை. இதற்கு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்ஸோ, தமிழ் தேசியக் கூட்டமைப்போ, தோட்டத் தொழிலாளர் காங்கிரஸோ விதிவிலக்கல்ல. தேசியக் கட்சிகள் எவ்வளவுதான் போட்டி போட்டு சிறுபான்மையினங்களின் உரிமைகளைப் பறித்த போதும் தேசிய சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடன் மட்டுமே கூட்டிணைவை ஏற்படுத்துவது வழமை.

இலங்கையில் சிறுபான்மை இனங்களின் பரம்பல்:

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் வட மாகாணம், கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றிலேயே சிறுபான்மை இனங்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். இம்மாகாணங்களில் வட மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராகவும் முஸ்லீம்களும் சிங்களவர்களும் சிறுபான்மையினராக உள்ளனர். மத்திய மாகாணத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராகவும் மலையகத் தமிழர்களும் முஸ்லீம்களும் சிறுபான்மையினராகவும் உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லீம்களும் சிங்களவர்களும் பெரும்பாலும் ஒரேயளவினராக உள்ளனர். கிழக்கு மாகாணத்தினுடைய இந்தப் பிரத்தியேகத் தன்மை ஏனைய ஒன்பது மாவட்டங்களைக் காட்டிலும் தனித்துவமானது. இலங்கையில் இன உறவுகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு கிழக்கு மாகாணத்தில் இன ஐக்கியமும் சகஜ வாழ்வும் ஏற்படுத்தப்படுவது மிக அடிப்படையானது.

கிழக்கு மாகாணத்தினுடைய 120 வருட சனத்தொகைப் பரம்பல்:

கிழக்கு மாகாணத்தில் தற்போது 40 வீதம் தமிழர்களும் 38 வீதம் முஸ்லீம்களும் 22 வீதம் சிங்களவர்களும் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தினுடைய இந்த சனத்தொகைப் பரம்பல் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரோ அல்லது சுதந்திரம் அடைகின்ற போதோ இவ்வாறு இருக்கவில்லை. 1891இல் சனத்தொகைக் கணக்கெடுப்பு பதிவு செய்யப்பட்ட போது தமிழர்கள் 60 வீதம், முஸ்லீம்கள் 35 வீதம், சிங்களவர்கள் 5 வீதம் இருந்தனர். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு அண்மையாக 1946இல் தமிழர்கள் 50 வீதம், முஸ்லீம்கள் 40, வீதம் சிங்களவர்கள் 10 வீதமாகக் காணப்பட்டனர்.

கிழக்கில் தமிழர்களுடைய சனத்தொகை வீழ்ச்சி என்பது கடந்த 120 வருடங்களாக ஏற்பட்டு வருகின்றது. இது முற்றிலும் திட்டமிட்ட குடியேற்றம் காரணமாக ஏற்பட்ட சனத்தொகைப் பரம்பல் மாற்றம் என்று கூறிவிட முடியாது. ஏனைய காரணிகளும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.  கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுடைய சனத்தொகைப் பரம்பல் 20 வீதத்தால் வீழ்ச்சி அடைவதற்கு 120 வருடங்கள் எடுத்திருந்தது.  மேலும் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் முஸ்லீம்களின் சனத்தொகைப் பரம்பல் அதிகரிக்கவேயில்லை. சுதந்திரம் அடையும் வரை 5 வீதத்தால் அதிகரித்து இருந்தது. அதே காலப் பகுதியில் சிங்களவர்களின் சனத்தொகைப் பரம்பல் 5 வீதத்தில் இருந்து நான்கு மடங்கிற்கும் அதிகமாக – 22 வீதமாக அதிகரித்து உள்ளது. இருந்தாலும் கிழக்கில் இந்த உண்மை நிலைக்குப் புறம்பாக முஸ்லீம்களின் சனத்தொகை அதிகரிப்புப் பற்றி மிகவும் மிகைப்படுத்தப்பட்டு பேசுவது வழக்கத்தில் உள்ளது.

வட மாகாணத்தின் சனத்தொகைப் பரம்பல்:

வடமாகாணத்தில் தமிழ் மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டது போன்றதொரு வீழ்ச்சி கிழக்கில் நிகழவில்லை. கிழக்கில் தமிழர்களின் சனத்தொகைப் பரம்பலில் ஏற்பட்ட 20 வீத வீழ்ச்சி 120 வருடங்களில் நிகழ்ந்தது. ஆனால் எண்ணிக்கையின் அடிப்படையில் சனத்தொகை ஒவ்வொரு 10 ஆண்டும் 100,000 வரை அதிகரித்தே வந்துள்ளது. ஆனால் வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் சனத்தொகை 1981இல் 840,000இல் இருந்து 2007இல் 560,000 ஆக எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஏனைய இனங்கள் வடமாகாணத்தில் கணிசமான அளவில் வாழாததால் இன்றும் வடமாகாணத்தில் தமிழர்களின் சனத்தொகைப் பரம்பல் வீதாசாரத்தில் மாற்றம் ஏற்படவில்லை. 1981இல் வடமாகாணத்தில் 95வீதமாக இருந்த தமிழர்களின் குடிப்பரம்பல் இன்றும் அதே அளவிலேயே உள்ளது. ஆனால் வடமாகாணத்தில் 1.5 மில்லியனாக இருக்க வேண்டிய தமிழர்களின் சனத்தொகை, தற்போது ஒரு மில்லியனாக மட்டுமே உள்ளது.

குறும்தேசியக் கட்சிகள் தனித்து ஆட்சியமைக்கும் சாத்தியம்:

இந்த சனத்தொகைப் பரம்பலின் பின்னணியிலேயே நாங்கள் கிழக்கு மாகாணத்தின் அரசியல் நிலைமையை நோக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 40 வீதம் முஸ்லீம்கள் 38 வீதம் சிங்களவர்கள் 22 வீதம் என்ற அளவிலேயே வாக்கு வங்கி உள்ளது. வெறுமனே இனம் சார்ந்த குறும்தேசிய வாதத்தை மட்டும் பேசிக்கொள்ளும் எந்தவொரு கட்சியும் தனித்து அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. இதனை நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் உறுதிப்படுத்தி உள்ளது. மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஒரு கட்சியே கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைக்க முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்போ சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸோ ஜனநாயக முறையிலான தேர்தலின் மூலமாக தனித்து கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.

கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள்:

United People’s Freedom Alliance                              200,044          31.58 %         14*

Ilankai Tamil Arasu Kadchi                                            193,827          30.59 %        11

Sri Lanka Muslim Congress                                            132,917           20.98 %        7

United National Party                                                          74,901          11.82 %         4

National Freedom Front                                                       9,522              1.5 %           1

தமிழர்கள் 590,000 (40 வீதம்); முஸ்லீம்கள் 550,000 (38 வீதம்); சிங்களவர்கள் 315,000 (22 வீதம்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுதல் ஆசனங்களைப் பெற்றதற்கு முக்கிய காரணம் அக்கட்சி தனித்து ஒரு இனத்தின் வாக்கு வங்கியில் மட்டும் தங்கியிருக்கவில்லை.

முதலமைச்சர் தமிழரா? முஸ்லீமா?

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைப்பதில் எவ்வாறான கொள்கைகள் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலும் அக்கறைகாட்டப்படவில்லை. ஆனால் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லீமா? தமிழரா? வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் முதலமைச்சுப் பதவியை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்க்கு வழங்க முன்வந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதலமைச்சராக வரக் கூடாது என்பதற்காகவே அவர்கள் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்க்கு முதலமைச்சர் பதவியை வழங்க முன்வந்தனர். இவ்வாறு தனிநபர் முரண்பாடுகளின் அடிப்படையிலும் தாங்கள் சார்ந்த கட்சிகளின் நலனின் அடிப்படையிலுமே தேசிய சிறுபான்மைக் கட்சிகளும் இயங்குகின்றனர். கிழக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலுமே இதுவே நிலை.

கட்சிகளும் அரசியல் வாதிகளும் பொதுத்தளத்தில் முன்வைக்கின்ற கருத்துக்களின் அடிப்படையில் கட்சிகளினதும் அரசியல் வாதிகளினதும் அரசியலை ஆராயமுற்படுவது மிகத் தவறான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும். அதனால் அவர்களது அரசியல் நகர்வுகளும் பொதுத்தளங்களுக்கு வெளியே அவர்கள் என்ன அரசியலைப் பேசுகின்றார்கள் என்பதுவும் முக்கியமானது.

கிழக்கு மாகாணத்தின் அரசியல் பிரதிநிதித்துவம்

மட்டக்களப்பு:

தமிழர்கள்      முஸ்லீம்கள்            சிங்களவர்கள்

பெற்ற ஆசனங்கள்:                         07                           04                                 0

மக்கள் தொகை:                         382,000               129,000                          2,500

திருகோணமலை:    

தமிழர்கள்,     முஸ்லீம்கள்,        சிங்களவர்கள்

பெற்ற ஆசனங்கள்:                    03                          04                                 03

மக்கள் தொகை:                      96,000                152,000                        85,000

அம்பாறை:

தமிழர்கள்,      முஸ்லீம்கள்,        சிங்களவர்கள்

பெற்ற ஆசனங்கள்:                   02                          07                                 05

மக்கள் தொகை:                112,000                269,000                      229,000

கிழக்கு மாகாணம்

தமிழர்கள்,        முஸ்லீம்கள்,         சிங்களவர்கள்

பெற்ற ஆசனங்கள்:           12                            15                                   08

மக்கள் தொகை:             590,000                550,000                        316,000

முஸ்லீம் முதலமைச்சர்:

இத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முஸ்லீம்கள் 15 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதே பொருத்தமானது. மேலும் முன்னைய தடவை தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்ததால் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ள ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி முஸ்லீம் ஒருவரை முதலமைச்சராக நியமித்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியில் முன்னாள் முதலமைச்சரான சந்திரகாந்தன் மட்டுமே வெற்றி பெற்ற ஒரேயொருவர். அவரை மீண்டும் முதலமைச்சராக நியமிப்பதற்கான நியாயங்கள் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணிக்கு இல்லை.

இதனை இக்கட்டுரைக்காக முதலமைச்சர் சந்திரகாந்தன் உடன் அவருடைய நண்பர் ஊடாகத் தொடர்பு கொண்ட போது அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். இத்தடவை முஸ்லீம் ஒருவரை முதலமைச்சராக நியமித்திருக்காவிட்டால் அவர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்றும் இது தமிழ் – முஸ்லீம் உறவுகளை மிகவும் பாதித்திருக்கும் என்றும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்து இருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் முஸ்லீம் ஒருவர் முதலைமைச்சராக வரும் போது அவர்கள் தங்கள் சமூகம் மீது கூடுதல் கவனம் செலத்துவார்கள். இதனையே நான் முதலமைச்சராக இருக்கும் போது செய்திருந்ததாகவும், கிழக்கில் தமிழ் – முஸ்லீம் கலகம் என்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

பிரதான போட்டியும் உட்கட்சிப் போட்டியும்:

கிழக்குத் தேர்தலில் முக்கிய போட்டி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமாக இருந்தாலும் தேர்தலுக்கு முன்னும் பின்னும் உட்கட்சிப் போட்டிகள் பலமாகவே இருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் கட்சி உறுப்பினர்களை வெல்ல வைப்பதிலும் ஏனைய உறுப்பினர்களை ஓரங்கட்டுவதிலும் கூடிய கவனம் எடுத்துக்கொண்டனர். அதனால் தான் தேர்தல் முடிவுகளின் பின்னர் அவர்கள் இந்த வெற்றியைத் தங்கள் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகத் தவறாகக் கருதிக் கொண்டனர்.

தமிழரசுக் கட்சியை ஓரம்கட்டும் நடவடிக்கை:

இதற்கெல்லாம் ஒருபடி மேற்சென்று தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டிவிட்டு தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு வழங்கியது. அதற்கு முக்கிய காரணம் தமிழரசுக் கட்சியினராக அறியப்படாத வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றிருந்தமை. ரெலோவில் இருவர், ஈபிஆர்எர்எப் இல் ஒருவர், தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒருவர் வெற்றி பெற்றனர். தமிழரசுக் கட்சியில் வெற்றி பெற்றவர்களில் ஒரு சிலர் மட்டுமே தமிழசுக் கட்சி உறுப்பினர்கள். ஏனையவர்கள் தேர்தலையொட்டி இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். அதனாலேயே அவர்களுக்கு இந்த அரசியல் மயக்கம் ஏற்பட்டது.

மக்களின் தெரிவு தேசியக் கூட்டமைப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் சார்ந்ததுவே அல்லாமல் அவர்களுடைய கட்சி சார்ந்தது அல்ல என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் உணரத் தவறின. மேலும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் பெரும்பாலும் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கவில்லை. இந்த மயக்கத்தில் இருந்து இவர்கள் சற்று தெளிந்தாலும் இக்கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு எப்போதும் சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கும்.

கிழக்கிய அரசியல் – வடக்கு – கிழக்கு:

தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்தில் இருந்து முஸ்லீம்கள் எவ்வாறு தனித்துவமான அரசியல் அடையாளம் ஒன்றைக் கோர நிர்ப்பந்திக்கப்பட்டனரோ அவ்வாறே கிழக்கு மாகாணத் தமிழர்கள் குறிப்பாக மட்டக்களப்பு தமிழர்கள் தங்களுக்கான ஒரு தனித்துவமான அடையாளத்தைத் தேட முற்படுகின்றனர். இதன் எதிரொலிப்பே வடக்கு – கிழக்கு மாகாண இணைப்புக்கு எதிரான குரல்கள்.

குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் இந்த இணைப்புக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளனர். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் சார்பு நிலைப்பாட்டை உடையவர்கள் மத்தியிலும் அவர்களுடைய கடந்தகால வன்முறை வரலாற்றுக்கு எதிரரானவர்கள் மத்தியிலும் வடக்கு – கிழக்கு இணைவுக்கு எதிரான கருத்துக்கள் ஆழமாக உள்ளது.

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு மாகாணத்துக்கான தனித்துவமான அரசியலை மறுதலிக்க முடியாத நிலையிலேயே உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவர்கூட வட – கிழக்கு இணைவை எதிர்க்கவே முற்படுவார். மேலும் வடக்கு குறிப்பாக யாழ் தலைமைகளின் அரசியல் ஆதிக்கம் எப்போதும் கிழக்கின் புறக்கணிப்பாக இருந்து வந்தமை கடந்தகால வரலாறு கூறும் உண்மை.

வடக்கு – யாழ் தலைமைகள்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை தமிழ் கட்சிகளுமே பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையுடைய அத்தனை தமிழ் கட்சிகளுமே மட்டக்களப்புக்கு வெளியே தான் தங்கள் தலைமையைக் கொண்டுள்ளன. இதுவொரு தற்செயலான நிகழ்வு அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் உருவான பெரும்பாலும் அத்தனை விடுதலை அமைப்புகளும் கூட வடக்கு குறிப்பாக யாழ் தலைமையையே கொண்டிருந்தன.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தலைமை தாங்குவது எப்போது ஏற்றுக்கொள்ளப்படுமோ அப்போதே வடக்கு – கிழக்கு இணைவு பற்றி வடக்குத் தலைமைகள் குறிப்பாக யாழ் தலைமைகள் பேசுவதற்கான தகுதியைப் பெறுவார்கள். அதுவரை வடக்கு – கிழக்கு இணைவு பற்றிய பேச்சுக்கள் அர்த்தமற்றவையாகவே அமையும்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களையே தலைவர்களாக ஏற்றுக்கொள்கின்ற யாழ் தலைமையைக் கொண்ட கட்சிகள், அவர்கள் இடதுசாரியானவர்களாக இருந்தாலும் கூட கிழக்கில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை தலைமை தாங்குவதற்கு அனுமதிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இராசையா துரைரத்தினம் அவர் சார்ந்த கட்சித் தலைவரைக் காட்டிலும் ஆளுமை உடையவராக இருந்த போதும் அவர் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவராகவில்லை. இவ்வாறான தொடர்ச்சியான புறக்கணிப்புகள் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தி உள்ளது.

கத்தியின்றி யுத்தமின்றி சிறுபான்மையினங்கள் மெளனிக்கின்றன:

இலங்கை அரசாங்கம் இந்நிலைமைகளை மிகவும் ஆழமாக புரிந்துகொண்டுள்ளது. கிழக்குக்கான தனித்துவமான அரசியலை இலங்கை அரசு மிகத் திறம்படச் சாத்தியமாக்கி உள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சராக சந்திரகாந்தன் நான்கு ஆண்டுகள் ஆட்சியமைத்தது தனித்துவமான கிழக்கு மாகாண அரசியலில் மிக முக்கியமான அம்சம். இலங்கை அரசு நீண்ட காலத்தில் சிறுபான்மை இனங்களை கத்தியின்றி யுத்தமின்றி மெளனிக்க வைக்கின்ற அரசியலை மிக நேர்த்தியாக மேற்கொள்கின்றது. தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுவதும், தமிழ் மக்கள் சிங்களம் கற்பதும், சுதந்திரமான போக்குவரத்தும், பண்டங்களின் சுதந்திரமான நகர்வும் அடுத்த இரு தசாப்தங்களில் இன முரண்பாட்டுக்கான காரணிகளைச் செயலிழக்க வைக்கும்.

மேலும் சிறுபான்மை இனங்கள் வாழுகின்ற மாகாணங்களில் தனது ஆட்சியை நிறுவுவதன் மூலம் தனது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி இன உணர்வுகளை மழுங்கடிக்க முடியும் என்ற உணர்வுடன் அரசு செயற்படுகின்றது. கிழக்கில் தன்னால் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு இரு தடவையும் நடத்தியது. ஆனால் வடக்கு மாகாண சபையைத் தன்னால் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை அரசு இன்னும் பெற்றவில்லை. அதனாலேயே வட மாகாணசபைத் தேர்தல் இன்னமும் நடத்தப்படவல்லை.

http://thesamnet.co.uk/?p=41528

 

About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply