வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறுவது  அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது!

வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறுவது  அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது!

நக்கீரன் 

சுரேஷ் பிறேமச்சந்திரன் ஒரு அவசரக் குடுக்கை. அவருக்கு இராஜதந்திரம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது. அது அவரது அகராதியில் இல்லாத சொல். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதுதான் அவரது பாணி.

எடுத்ததற்கெல்லாம் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி சம்பந்தன் ஐயா  சுமந்திரன் இருவரையும் அர்ச்சிப்பதை பிறேமச்சந்திரன் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அவர் ததேகூ இல் இருந்து கொண்டே சம்பந்தருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு வருவது ஒன்றும்  இரகசியமல்ல.  அவருக்குச் சுமந்திரனையும் பிடிக்காது.  2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனைத் தோற்கடிக்க அவர் மெத்தப் பாடுபட்டார். தனக்கு மூக்குப் போனாலும் பருவாயில்லை சுமந்திரன் தோற்க வேண்டும் என்பது அவரது  பேராசையாக இருந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரில் மாதத்தில் “எங்கே போகிறார் சம்பந்தன்?” என்று பிறேமச்சந்திரன் இது போன்ற செய்தியாளர் மாநாட்டைக் கூட்டிக் கேள்வி கேட்டார்.  அதற்குப் பதிலளித்த சம்பந்தன் ஐயா  “நாம் ஒர் இலக்கை அடைய பயணிக்கின்றோம் இது தொடர்பில் வெற்றி அடையவேண்டும் இதனைக் குழப்பும் வகையில் கருத்துக்கூற முயலக்கூடாது. சுறேஸ்பிறேமச்சந்திரன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்கின்றார். நாம் இலக்கினை அடையக்கூடாது என கருத்துக் கூறுபவர்கள் தெற்கில் மட்டும் அல்ல எமது மத்தியிலும் இருக்கின்றனர்” என்றார்.

திரு சுரேஸ் பிறேமச்சந்திரன் சனாதிபதி தேர்தலின்போது சிறிசேனாவுக்கு வேண்டா வெறுப்பாக வாக்குப் போட்டவர். சிறிசேனாவுக்கு ஆதரவாக ததேகூ நடத்திய பரப்புரைக் கூட்டங்களில் அவர் பங்குபற்றவில்லை. தேர்தலுக்கு முதல்நாள்தான் தமிழ்நாட்டில் இருந்து நாடு திரும்பியிருந்தார்.  அவர் ஆட்சிமாற்றத்தை விரும்பவில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் சிறிசேனாவுக்கு வாக்களித்ததாக செய்தியாளரிடம் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு கடைசியில்  சம்பந்தர், மாவை சேனாராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும்  சுமந்திரன் ஆகியோர்  அமெரிக்கா சென்று எமது மக்கள் எதிர்கொள்ளும் அல்லல்கள் அவலங்கள் பற்றியும் இனச் சிக்கலுக்கான தீர்வு பற்றியும்  இராசாங்க உயர் அதிகாரிகளுடன்  இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.   அந்தப் பேச்சுவார்த்தை காரணமாகவே அமெரிக்கா 2013, 2014, 2015 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  தீர்மானங்களைக்  கொண்டு வந்து நிறைவேற்றியது.   ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் அமெரிக்க நாட்டின் கொடியையும்   பிரித்தானிய தமிழர் ஒன்றியம், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை  இரண்டோடும் கூட்டுச்  சேர்ந்து எரித்தன. அதில் ததேகூ சேர்ந்த பிறேமச்சந்திரனும் கலந்து கொண்டார். இப்படி எல்லாம் செய்துவிட்டு “சம்பந்தர் எங்கே போகின்றார்” என்று அப்போது கேட்டார்.

இப்போது அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் “வழிகாட்டல் குழுவில் இருந்து சம்பந்தன், சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டும்!” எனக் கூக்குரல் இட்டுள்ளார்.  சென்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த ஒருவருக்கு, கண்ணே கண்ணு,  ஒண்ணே ஒண்ணு  என  நாடாளுமன்றத்தில் ஒரு உறிப்பினரைக் கொண்ட கட்சியின்  தலைவர் இப்படிப் பொறுப்பில்லாமல் பேசலாமா? பேசுவது அவருக்கு அழகா? அரசாங்க  அமைச்சர்கள் சிலர் கண்டபடி பேசுகிறார்கள் என்பதற்காக சம்பந்தரும் சுமந்திரனும் வழிகாட்டுக் குழுவில் இருந்து வெளியேற வேண்டுமா? அப்படிப் பார்த்தால்  ததேகூ  நாடாளுமன்றம் சென்றிருக்க வேண்டியதில்லையே? யதார்த்தம் என்னவென்றால்  அமைச்சர்கள் சிலர் இப்போதல்ல, எப்போதும் இப்படிப் பேசிவருகிறார்கள்.   இன்னும் சொல்லப் போனால் அப்படித்தான் அவர்கள் பேசுவார்கள்.

அரசியல் நிர்ணயசபையில்  செல்வம் அடைக்கலநாதன் துணைத் தலைவராக  இருக்கிறார். வழிகாட்டுக் குழுவில்  சம்பந்தன் மற்றும் சுமந்திரன் இருக்கிறார்கள். ஆறு உப குழுக்களில் சுமந்திரன், சேனாதிராசா, சாந்தி சிறிஸ்கந்தராசா, சிறிதரன், சரவணபவன், சிறீநேசன் இருக்கிறார்கள். தர்மலிங்கம் சித்தார்த்தன் மத்திய – சுற்றயல் உறவுகள் பற்றிய குழுவுக்கு  தலைவராக இருக்கிறார். ஆனால் பிறேமச்சந்திரன் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மட்டும்  வழிகாட்டுக் குழுவில்  இருந்து  உடனடியாக வெளியேற வேண்டும் என ஏன் கொக்கரிக்கிறார்? இதற்கான விடை போன 2015 நாடாளுமன்றத் தேர்தலின் போதே கிடைத்தது.

2015 இல் நடந்த நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுரேஷ் பிறேமச்சந்திரன்,  சம்பந்தன் அய்யாவையும் சுமந்திரனையும் ஓரங்கட்டி ததேகூ இன் தலைமைப் பதவியைப் பிடிக்க மெத்தப் பாடுபட்டார். அதற்காக தனக்குப் நிதி தேவைப்படுகிறது என்றும் அதனைக் கொடுத்து உதவுமாறும் தனது நண்பர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சல்கள் பிறேமச்சந்திரனின் நண்பர்கள் என்ற போர்வையில் அனுப்பியிருந்தாலும் மின்னஞ்சல் முகவரி பிறேமச்சந்திரனுடைய மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சல்களில்  கூறியிருப்பதாவது:

சுமந்திரனும் சம்பந்தனும் ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையோ அல்லது தமிழ் மக்களைத்தானும் கலந்துரையாட வேண்டிய தேவையின்றி தமது சொந்தத் தீர்மானங்களை எடுக்கின்றனர். அவர்களது கொள்கைகள் ஏமாற்றமளிப்பதாயுள்ளன. சிங்களத் தலைவர்களாலும் அவர்களது இராணுவத்தாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணைசெய்வதற்கான சர்வதேச விசாரணையைத் தூண்டுவதை அவர்கள் ஏற்கனவே கைவிட்டுவிட்டார்கள் போலத் தோன்றுகின்றது. சுமந்திரனும் சம்பந்தனும் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டுவிட்டார்களென்பது போலவும் தோன்றுகின்றது.

கொள்கை நடைமுறைப்படுத்துவது பற்றிய சுமந்திரனின் வழியைத் (அவர் தனது சொந்தத் தீர்மானத்திற்கிணங்க விடயங்களைச் செய்வதோடு அவற்றைப் பற்றி நாம் பின்னரே அறிந்துகொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது) தடுத்து நிறுத்துவதற்கு, சுமந்திரனும் சம்பந்தனும் பிறேமச்சந்திரனோடு  கலந்துரையாடவேண்டுமென்ற அளவிற்குப் பிறேமச்சந்திரனது கைகளைப் பலப்படுத்தி அவருக்கு ஆதரவளிக்கும் போதியளவு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுவரவும் நாம் விரும்புகின்றோம். பிறேமச்சந்திரனைப் பலப்படுத்துவதற்கு 5 இருக்கைகள் போதுமானதென நாங்கள் எண்ணுகின்றோம்.

சுமந்திரனின் தன்னிச்சையாகச் செயற்படும் வழிமுறையினை நிறுத்துவதற்கான ஒரேயொரு சனனாயக வழியாக இது மட்டுமே உள்ளது.

ஒரு சர்வதேச விசாரணையை நடாத்துவதற்கும் வடக்கு-கிழக்குத் தமிழர்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பினை நடாத்துவதற்கும் சுரேஷ் பிறேமச்சந்திரனின் கொள்கைகள் ஒத்துப்போவதால் நாங்கள் அவருக்கு ஆதரவளிக்கின்றோம். அவர் சுமந்திரன் மற்றும் சும்பந்தனின் கொள்கைகளுக்கு எதிராகக் கதைத்துள்ளார். இதனால் எமது உதவியும் ஆதரவும் கிடைப்பதற்கு அவர் தகுதிடையவரென்பது எங்களுக்கு மேலும் உறுதியாகின்றது.”

புலம்பெயர் தமிழர்களிடம் நிதிகேட்டு அனுப்பிய மின்னஞ்சலில் தனது கட்சி 4-5 இடங்களில் (யாழ்ப்பாணம் 1-2, வன்னி 2, மட்டக்களப்பு 1)  வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் அதன் மூலம் சிறிலங்கா சிங்கள அரசிடம் பிச்சை கேட்கும்  தேசபக்தியில்லாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்தலாம் எனவும் சொல்லியிருந்தார். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என கடிதத்தை முடித்திருந்தார். நண்பர்கள் எழுதியதாகச் சொல்லப்பட்டாலும் பிறேமச்சந்திரன் எழுதி அனுப்பிய மின்னஞ்சல் சம்பந்தனையும்  சுமந்திரனையும் எப்படி ஓரங்கட்டலாம் என்ற யோசனை முன்வைக்கப் பட்டிருந்தது.

“ஒரு சர்வதேச விசாரணையை நடாத்துவதற்கும் வடக்கு-கிழக்குத் தமிழர்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பினை நடாத்துவதற்கும் சுரேஷ் பிறேமச்சந்திரனின் கொள்கைகள் ஒத்துப்போவதால் நாங்கள் அவருக்கு ஆதரவளிக்கின்றோம்” என்பது பிரித்தானிய தமிழ் ஒன்றியம், பிரித்தானிய இளையோர் அமைப்பு, அனைத்துலக ஈழத் தமிழர் பேரவை போன்றவற்றின் நிலைப்பாடாகும்.

எந்த முகூர்த்தத்தில் இந்த அமைப்புகள் தமது ஆசையை சொன்னார்களோ சுரேஷ் பிறேமச்சந்திரன் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுத்  தோற்றுப் போனார். சம்பந்தன் – சுமந்திரன் இருவருக்கும் வெட்டிய குழியில் தானே விழுந்து போனார். ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இந்த இரண்டு அமைப்புகளும் பிறேமச்சந்திரனை ஆதரித்து அறிக்கை விட்டது அவருக்கு  எமனாகப் போய்விட்டது. இந்த அறிக்கைகள் வராதிருந்தால் பிறேமச்சந்திரன் தேர்தலில் ஒருவேளை வென்றிருக்கக் கூடும்!

பிறேமச்சந்திரனின் ஆசை ததேகூ இன் தலைமையைக் கைப்பற்றுவது என்பதுதான். அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டவன் கதை போன்றது. அவரது ஆசைக்கு  இடையூறாக அல்லது குறுக்கே நிற்பது சம்பந்தன் ஐயாவும் சுமந்திரன் இருவருமே! எனவேதான் அவர்களை பெயர் சொல்லித் தாக்கி வருகிறார். அவர்களது உருவப் பொம்மைகள் அவரது கட்சி ஆதரவாளர்களால் எரிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது, நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பது போன்றவற்றால் புண்ணியமில்லை என்பது எமது வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். எமது உரிமைக்கான போராட்டம் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் என இரண்டு தளங்களில் நடைபெற  வேண்டும்.

அரசியல் நிர்ணயசபை நியமித்த உப குழுக்களில் ஒன்றான மத்திய சுற்றயல் உறவுகள் பற்றிய குழு எமக்குச் சாதகமான பல யோசனைகளை முன்வைத்துள்ளது. அந்த யோசனைகள் சுதந்திரக் கட்சி  உறுப்பினர்கள் உட்பட 11 உறுப்பினர்களால்  ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய – சுற்றயல் உறவுகள்  குழு ஒரு மனதாக நிறைவேற்றிய அறிக்கை தமிழ்மக்களைப் பொறுத்தளவில் நம்பிக்கை தருவதாக உள்ளது. அதன் முக்கிய விதப்புரைகள் பின்வருமாறு:

(1) மாகாண ஆளுநர் தற்துணிவின் பேரில் செயற்படும் அரசியலமைப்பு எற்பாட்டைத் தவிர, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சபையின் ஆலோசனையின் பேரில் செயற்படும்  பெயரளவில் நியமிக்கப்பட்ட தலைவராக இருந்து செயலாற்ற வேண்டும்.

(2) மாகாண பகிரங்க சேவையானது  தேசிய பகிரங்க சேவை ஆணைக் குழுவைப் போன்ற சுயாதீன மாகாண பகிரங்க சேவை ஆணைக் குழுவொன்றின் கீழ் கொண்டு வரப்பட ல் வேண்டும்.

(3)  மாகாண பொலிஸ் சேவையானது தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற சுயாதீனமான ஆணைக்குழுவொன்றின் கீழ் கொண்டுவரப்படல்  வேண்டும்.

(4) நியதிச் சட்டங்கள் மாகாணசபையால் நிறைவேற்றப்படுவதற்கான ஆளுநரின் ஒப்புதல்  இல்லாதொழிக்கப்படல் வேண்டும்.

(5) நிதி சம்பந்தமான மாகாண நியதிச் சட்டங்களுக்கு தேவைப்படும் ஆளுநரின் பரிந்துரை நீக்கப்படல் வேண்டும். அதற்குப் பதிலாக நியதிச்சட்டங்கள் இயற்றுவது தொடர்பில் நிதிச் சட்டமூலங்கள் அறிமுகம் செய்வதற்காக அமைச்சர்கள்  சபையின் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும்

(6) ஆளுநர்,  சனாதிபதியால் முதலமைச்சரின் இணக்கத்துடன் நியமிக்கப்படல் வேண்டும்.

(7) 13ஏ இல்  காணப்படும் ஒருங்கிசைவுப்  (concurrence) பட்டியல் ஒழிக்கப்பட வேண்டும்.

(8)  சட்டமும் ஒழுங்கும்  மாகாணத்தின் விடயமாக இருக்க வேண்டியுள்ளது. மத்திய அரசாங்கத்தில் உள்ளது போல் சுயாதீன மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் மூலமாக இருக்க வேண்டும். மற்றும் பொலிஸ்  தொடர்பான அதிகாரங்கள் வழங்குவதற்கு அவசியமான நிருவாக ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.

(9) மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கும் நியாயமான நிதி ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

(10) மாகாணாத்திலுள்ள அரச காணி மாகாணத்தின் சட்டவாக்க நிறைவேற்று அமைப்புகளினால் கையாளப்பட வேண்டிய விடயமாக இருக்க வேண்டும்.  அரசாங்கத்தின் சட்ட ரீதியான பாவனைக்கு ஏதேனும் அரச காணித் துண்டொன்றை விடுவிக்குமாறு மாகாணத்தை  கோரும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருத்தல் வேண்டும். அந்த நோக்கத்திற்காக அம்மாகாணத்தில் உள்ள அத்தகைய அளவிலான அரச காணியை மத்திய அரசாங்கத்திற்கு விடுவிப்பது மாகாண நிறைவேற்றுத்துறையின் கடமையாகவும் இருத்தல் வேண்டும்.

(11) அதிகாரப் பரவலாக்கமானது  செயற்றிறன்  மிக்கதாக மாத்திரம் இருக்காமல் இருமை இல்லாமலும் இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக  மாவட்ட நிர்வாகமானது  மாகாண நிர்வாகத்தின் அங்கமாகும் வகையில் மீள்கட்டமைக்கப் படல் வேண்டும்.

(12) அரசாங்க அதிபர்களும் பிரதேச செயலாளர்களுளும் முறையே  மேலதிக பிரதம  செயலாளர்களாகவும் பிரதிப் பிரதம செயலாளர்களாகவும்  மகாண சபைக்கு நியமிக்கப் படவேண்டும்.

(13)  மாகாணத்திலுள்ள சகல கிராம சேவை உத்தியோகத்தவர்களும் அந்த மாகாணத்தின் மாகாண அரச சேவைக்கு உள்வாங்கப்படல் வேண்டும்.  இந்தப் விதப்புரைகள் (12,13) மாகாணத்தில் ஒரே   ஆட்சி நிலவ வழிகோலும்.  மத்திய அரசின் சார்பில் அரசாங்க அதிபர்களும்  மாகாணசபை சார்பில் பிரதம செயலாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

மத்திய சுற்றயல் பற்றிய உபகுழு  மொத்தம் 34 பக்கங்கள் கொண்ட தமிழ் அறிக்கையில் 67 விதப்புரைகளை  வழங்கியுள்ளது. முழு அறிக்கையை https://www.colombotelegraph.com/index.php/new-constitution-centre-periphery-relations-sub-committee-report-full-texts-in-three-languages/  என்ற  இணைய தள முகவரியில் படிக்கலாம்.

மொத்தத்தில் மத்திய – சுற்றயல் உறவுகள்  குழு  மாகாணங்களுக்கு உச்ச  அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட  வேண்டும் என விதப்புரைத்துள்ளது.

எனவே வழிகாட்டல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டும் என சுரேஷ் பிறேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மாநாட்டைக் கூட்டிக் கேட்டிருப்பது வெண்ணெய் திரண்டுவரும் போது தாழியை உடைப்பது போன்றது.   ஒரு சனநாயக நாடாளுமன்ற முறைமையில் வெளியேற்றம், புறக்கணிப்பு பலன் தராது. எந்தக் கட்டத்திலும் ததேகூ அரசியல் நிர்ணய சபையில் இருந்து வெளியேறக் கூடாது. கடைசி வரை உள்ளிருந்து தமிழ்மக்களது உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். வரலாற்றில் நாம் விட்ட பிழைகளை மீண்டும் விடக் கூடாது.

தென்னிலங்கை  அதிதீவிர சிங்கள தேசியவாதிகளிடம் இருந்து  கலகக் குரல்கள் கேட்பது உண்மைதான். இவை நாம் எதிர்பார்த்ததே. அதேபோல் அமைச்சர்கள் எதையும் பேசலாம். ஆனால் அரசியல் நிர்ணய சபையின் முடிவு என்ன என்பதுதான் முக்கியம்.

“தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அது நியாயமான அதிகாரத்தைத் தரவேண்டும். சுயாட்சியைத் தரவேண்டும். எமது பொருளாதார சமூக, கலாசார, அரசியல் தேவைகளை நாங்கள் நிறைவேற்றக்கூடிய வகையில் தீர்வு அமைய வேண்டும்.   ஒரு நாட்டில் பிரச்சினை தொடர்கதைகளாக இருக்க முடியாது. ஒருகால கட்டத்தில் முடிவு வரவேண்டும். எம்மைப் பொறுத்தவரை முடிவு வரவேண்டிய காலம் வந்துவிட்டது” என ததேகூ இன் தலைவர்  இரா சம்பந்தன் பேசியுள்ளார்.

எனவே கிடைத்த தருணத்தை நன்கு பயன்படுத்தி எமது உரிமைகளுக்காக உள்ளிருந்தே போராட வேண்டும். அதுதான் அரசியல் சாணக்கியம்!  அதனையே பன்னாட்டு சமூகம் எதிர்பார்க்கிறது. மாறாக வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறுவது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது!

 

 

 

 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply