பவுத்தமும் தமிழும் (12-13)

மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

12. பௌத்தர் இயற்றிய தமிழ்நூல்கள்

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக் கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்ததையும் கண்டோம். அந்தப் பௌத்த ஆசிரியர் பாலிமொழியில் பல நூல்களை இயற்றி வைத்தனர் என்பதையும் அறிந்தோம். ஈண்டு, பௌத்த ஆசிரியர் தமிழ்மொழியில் என்னென்ன நூல் இயற்றியுள்ளார் என்பதை ஆராய்வோம்.

இப்போது தமிழில் உள்ள பௌத்த நூல்கள் மிகச் சில. இலக்கியத்தில் ஒன்றும் இலக்கணத்தில் ஒன்றும், ஆக இரண்டு நூல்களே இப்போது முழுநூலாக எஞ்சி நிற்கின்றன. ஏனைய நாலைந்து நூல்களின் பெயர்மட்டும் வழங்கப்படுகின்றனவேயன்றி நூல் முழுவதும் கிடைக்கப் பெற்றிலம்.

ஜைனரும், பௌத்தரும் தத்தம் மதக் கொள்கைகளை அந்தந்த நாட்டுத் தாய்மொழி வாயிலாகப் பரவச் செய்தனர் என்று ‘பௌத்தரும் தமிழும்’ என்னும் அதிகாரத்தில் கூறினோம். அங்ஙனமாயின், தமிழ்மொழியிலும் அவர்கள் பல நூல்களை இயற்றிவைத்தனர் என்பதில் யாதோர் ஐயமுமில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டில் உரகபுரம் (உறையூர்), பூம்புகார், பூதமங்கலம் முதலான இடங்களில் தங்கி, பௌத்தமத ஊழியம் புரிந்துவந்த பேர்பெற்ற புத்ததத்தர் என்னும் தமிழ்ப் பௌத்தர், பாலி மொழியில் பாலி மொழி நூல்களுக்குப் பல உரைகள் எழுதியிருப்பதில், தென்னாட்டில் வழங்கிய பல பௌத்தக் கொள்கைகளை எடுத்துக் கூறியிருக்கிறார் என்றும், அவற்றை அக்காலத்திலிருந்த தமிழ்ப் பௌத்த நூல்களினின்றும் எடுத்திருக்கக்கூடும் என்றும் ரைஸ் டேவிட் என்னும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். நீலகேசி உரையிலும், வீரசோழிய உரையிலும் பௌத்தமதச் செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில பாடல்கள் எந்த நூலினின்று எடுக்கப்பட்டன என்பது அறியக்கூடாமல் இருக்கின்றது. எனவே, பண்டைக்காலத்தில், பௌத்தமதம் தமிழ்நாட்டில் வழங்கி வந்தபோது, பௌத்தரால் இயற்றப்பட்ட பல தமிழ்நூல்கள் இருந்தன என்பதில் ஐயமில்லை.

அங்ஙனமாயின், அந்த நூல்கள் இப்போது எங்கே? இவ்வினாவுக்கு விடைபெறுவது கடினமன்று. பௌத்த மதத்துக்குப் பெரும் பகைஞராக இருந்தவர் ஜைனரும் வைதீகரும் என்பதனை ஆறாம் அதிகாரத்தில் அறிந்தோம். பௌத்த மதத்தின் பிறவிப் பகைஞராகிய இவர்களால் பௌத்த நூல்கள் அழிவுண்டன போலும். பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற சமயப்போரில், வைதீக மதம் ஜைன மதத்தை அழித்துவிட்ட போதிலும், சில ஜைனர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் அருகிக் காணப்படுகின்றனர். இவ்வாறு எஞ்சி நின்ற ஜைனரால் ஜைனமத நூல்கள் சில இறந்துபடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால், பௌத்த மதம் ஜைன மதத்தைவிடக் கடுமையான வீழ்ச்சியை அடைந்துவிட்டது. பௌத்தத் தமிழ் நுல்களைப் போற்றிப் பாதுகாக்கத் தமிழ்ப் பௌத்தர் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ்ப் பௌத்த நூல்கள் எவ்வாறு உயிர் பெற்றிருக்கும்? அவை யாவும் ‘கொலை’ செய்யப்பட்டன. இப்போது எஞ்சி நிற்கும் இரண்டொரு பௌத்த நூல்கள் எவ்வாறு தப்பிப் பிழைத்திருக்கின்றன என்பது பெருவியப்பாக இருக்கின்றது. தமிழ்நாட்டுப் பௌத்த ஆசிரியர் இயற்றிய பாலிமொழி நூல்கள் மட்டும் எவ்வாறு இன்றும் நின்று நிலவுகின்றன என்றால், அவை இலங்கை, பர்மா முதலான தேசத்துப் பௌத்தர்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்ப் பௌத்த நூல்களைப் போற்றுவதற்குத் தமிழ்ப் பௌத்தர் இல்லாதபடியால் அவை இறந்துவிட்டன.

பௌத்த நுல்களை இழந்துவிட்டோம். அஃதாவது, தமிழ் இலக்கியச் செல்வத்தின் ஒரு பகுதியைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. ஒரு நாடு தனது பொருட்செல்வத்தை இழந்து வறுமைப்படுவதைவிட இலக்கியச் செல்வத்தை இழந்துவிட்டது பெரிதும் வருந்தத் தக்கது. இலக்கியங்கள் மறைந்துவிட்டன என்றால் அவற்றில் கூறப்பட்ட கருத்துக்களும் இறந்துவிட்டன என்பது பொருள். என்ன செய்வது? சென்றது சென்றுவிட்டது. இனி தமிழில் இப்போது எஞ்சியுள்ள பௌத்த நூல்களைப்பற்றி ஆராய்வோம்.

1. மணிமேகலை

தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. சிந்தாமணி, சிலப்பதிகாரம் இரண்டும் ஜைனரால் இயற்றப்பட்டன. மணிமேகலை, குண்டலகேசி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை. இந்த இரண்டில் மணிமேகலையைத் தவிர மற்றது இறந்துவிட்டது. மணிமேகலை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றென்று கூறப்படுகின்றபோதிலும், இது சிலப்பதிகாரத்துடன் தொடர்புடையது. இதனை,

‘மணிமே கலைமே லுரைப்பொருண் முற்றிய
சிலப்பதிகார முற்றும்’

என்னும் சிலப்பதிகார வஞ்சிக்காண்டக் கட்டுரைச் செய்யுட் பகுதியினால் அறியலாம். எனவே, சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் ஒரே காப்பியம் என்று கூறினும் பொருந்தும். ஆயினும், ஆன்றோர் இவையிரண்டனையும் செவ்வேறு காப்பியங்களாகவே கொண்டனர்.

மணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனார். (இவரது வரலாற்றினை 11 அம் அதிகாரத்தில் காண்க.) இந்நூல் முழுவதும் ஆசிரியப்பாவினால் அமைந்தது. ‘கதை பொதி பாட்டு’ என்னும் பதிகத்தைத் தவிர்த்து, ‘விழாவறை காதை’, முதலாகப் ‘பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை’ இறுதியாக முப்பது காதைகளையுடையது. இதற்கு மணிமேகலை துறவு என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றிய சாத்தனார், இளங்கோ வேந்தர் என்னும் இளங்கோ அடிகள் முன்னிலையில் இதனை அறந்கேற்றினார். இவற்றை,

“இளங்கோ வேந்த னருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்மா
வண் டமிழ்த்திற மணிமே கலைதுற

வாறைம் பாட்டினு ளறியவைத் தனனென்”

எனவரும் பதிக ஈற்றடிகளால் அறியலாம்.

மணிமேகலை பல திறத்தானும் சிறப்புடைய நூல். சொல் வளமும் பொருள் ஆழமும் செறிந்து திகழும் இந்நூல் வெறும் இலக்கியம் மட்டும் அன்று. பண்டைத் தமிழ்நாட்டின் வரலாற்றினையும், கலைகளையும், நாகரிகத்தினையும் அக்காலத்திலிருந்த சமயங்கள் அவற்றின் கொள்கைகள் முதலியவற்றையும், அக்கால வழக்க ஒழுக்கங்களையும் ஆராய்வதற்கு இது பெரிதும் பயன் படுகிறது. இந்த மணிமேகலை நூல் தமிழ்த்தாய்க்கு அணிசெய்யும் மணிமேகலையாகவே இலங்குகின்றது. இந்த நூல் இயற்றப்பட்ட காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. (இணைப்பு காண்க.)

சுவைமலிந்த இச்செந்தமிழ் நூலை முதன் முதல் அச்சிற்பதிப்பித்தவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை யவர்களாவர். 1894 ஆம் ஆண்டுக்கு நேரான ‘விஜய தனுர் ரவியில் இப்புத்தகம் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 – அணாவுக்கு விற்கப்பட்டது. மகாவித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் தம்மிடமிருந்த ஏட்டுச் சுவடியைமட்டும் ஆராய்ந்து வெளியிட்ட நூலாதலின், இதில் சிற்சில பிழைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பிள்ளையவர்கள் பதிப்பு வெளிவந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், டாக்டர் உ. வே சாமிநாத ஐயரவர்கள் பல பிரதிகளை ஆராய்ந்து 1898 ஆம் ஆண்டில் அரும்பத உரையுடன் இந்நூலை அச்சிற் பதிப்பித்தார்கள். ஐயரவர்களுக்கு உதவியாயிருந்த பல ஏட்டுப் பிரதிகளுள் மகாவித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் உதவிய பிரதியும் ஒன்றாகும். பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலைப் புத்தகத்தையும் ஐயரவர்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால், எக்காரணத்தினாலோ ஐயரவர்கள், பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலையைப் பற்றிக் குறிப்பிடாமலே விட்டார்கள். பிள்ளையவர்களின் பதிப்பில் காணப்பட்ட பிழைகள் பலவும் ஐயரவர்களின் பதிப்பில் திருத்தப்பெற்றன. எஞ்சி நின்ற ஒரு சில பிழைகளும் இரண்டாவது, மூன்றாவது பதிப்புகளில் திருத்தப்பெற்றன. இந்த அருமையான சிறந்த செந்தமிழ் நூல் இறந்துபடாமல் உய்வித்தருளிய இரண்டு பெரியாருக்கும் தமிழ்நாட்டின் நன்றி என்றும் உரியதாகுக.

இந்நூல் நடையினை அறியக் கீழே சில பகுதிகளை எடுத்துக்காட்டுவோம். புகார்ப்பட்டினத்தின் உவவனம் என்னும் பூஞ்சோலையைக் கூறும் பகுதி இது:-

‘குரவமு மரவமுங் குருந்துங் கொன்றையுந்

திலகமும் வகுளமுஞ் செங்கால் வெட்சியும்

நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்

பிடவமுந் தளவமு முடமுட் டாழையுங்

குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமுஞ்

செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்

எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி

வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே

ஒப்பத் தோன்றிய வுவனந் தன்னைத்

தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு

மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென்’

(மலர்வனம் புக்க காதை 160-171)

மேற்சொன்ன உவவனத்திற்குச் சென்றது மணிமேகலைக்கு அதுவே முதல் தடவையாதலின், அவளுடன் சென்ற சுதமதி என்பவள், அப் பூஞ்சோலையின் இயற்கை எழிலினை மணிமேகலைக்குக் காட்டி விளக்குகின்றாள், அப்பகுதி இது:-

‘பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்

கிருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்

குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட

மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய

வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்

மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்!

மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப்

பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்

றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை

அரச வன்ன மாங்கினி திருப்பக்

கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்

கம்புட் சேவற் கனைகுரன் முழவாக்

கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய்!

இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து

வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம் போல்

விரை மலர்த் தாமரை கரைநின் றோங்கிய

கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த

வால்வெண் சுண்ண மாடிய திதுகாண்!

மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து

தாதுண் வண்டின மீது கடி செங்கையின்

அஞ்சிறை விரிய வலர்ந்த தாமரைச்

செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்

கெறிந்தது பெறாஅ திரையிழந்து வருந்தி

மறிந்து நீங்கு மணிச்சிரல் காண்! எனப்

பொழிலும் பொய்கையுஞ் சுதமதி காட்ட

மணிமே கலையம் மலர்வனம் காண்புழி’

(பளிக்கறை புக்க காதை. 1-26)

2. வீரசோழியம்

இஃதோர் இலக்கண நூல். வடமொழி இலக்கணத்தை சிறுபான்மை தழுவித் தமிழ் ஐந்திலக்கணங்களையும் சுருக்கமாக கூறுவது. இதனை இயற்றியவர் புத்தமித்திரனார். இந்நூற்கு உரை எழுதியவர் இவர் தம் மாணவராகிய பெருந்தேவனார். (நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறுகளை 11ஆம் அதிகாரத்தில் காண்க.) புத்தமித்திரனாரை ஆதரித்த வீரராசேந்திரன் என்னும் வீரசோழன் பெயரால் இந்நூல் இயற்றப்பட்டதாகலின், இதற்கு இப்பெயர் வாய்ந்தது. இதனை, ‘எதிர்நூல்’ என்பர்.

இதற்கு ‘வீரசோழியக் காரிகை’ என்னும் பெயரும் உண்டு. எழுத்ததிகாரம், சந்திப்படலம் என்னும் ஒரே படலத்தையுடையதாய் 28 செய்யுள்களையுடையது. சொல்லதிகாரம், வேற்றுமைப்படலம் (9 செய்யுள்), உபகாரப் படலம் (6 செய்யுள்), தொகைப்படலம் (8 செய்யுள்), தத்திதப்படலம் (8 செய்யுள்), தாதுப்படலம் (11 செய்யுள்), கிரியாபதப்படலம் (13+2 செய்யுள்) என்னும் ஆறு படலங்களையுடையது. ஏனைய பொருள், யாப்பு, அணி என்னும் மூன்று அதிகாரங்களும் முறையே பொருட் படலம் (21 செய்யுள்), யாப்புப்படலம் (36 செய்யுள்), அலங்காரப்படலம் (41 செய்யுள்), என்னும் ஒவ்வொரு படலமுடையன. இவற்றையன்றி மூன்று பாயிரச் செய்யுள்களையுமுடையது.

இது வழக்கொழிந்த இலக்கண நூல்களுள் ஒன்று. கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தை இயற்றிக் கச்சிக் குமரகோட்டத்தே அரங்கேற்றுங் காலத்தில், அப்புராணத்தின் முதற் செய்யுளில் வருகிற ‘திகடசக்கரம்’ என்னும் சொற்புணர்ச்சிக்கு இலக்கணங் காட்டும்படி அவையிலுள்ளோர் தடை நிகழ்த்தியபோது, அவர்களுக்கு இந்த வீரசோழியத்திலிருந்து இலக்கணம் காட்டப்பட்டதென்றும், பின்னர் அவையிலுள்ளோர் அப் புணர்ச்சியை ஒப்புக் கொண்டனரென்றும், ஒரு வரலாறு கூறப்படுகின்றது. இவ்வரலாற்றினின்றும் அக்காலத்திலேயே இந்நூல் வழக்கொழிந்து விட்டதென்பதை நன்குணரலாம். இது இயற்றப்பட்ட காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.

இந்த நூலும் இதன் உரையும் தமிழ்நாட்டின் சரித்திரம் முதலியவற்றை ஆராய்வதற்குச் சிறிது உதவி புரிகின்றன. சோழர்கள் கூடல் சங்கமம் முதலிய இடங்களில் அயல்நாட்டு வேந்தரை வென்ற செய்திகள் இவ்வுரையில் காட்டப்படும் மேற்கோட் செய்யுள்களினால் விளங்குகின்றன. இச் செய்திகளைக் கல்வெட்டுச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. குண்டலகேசி விருத்தம், கலிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம், உதயணன் காதை, நியாய சூடாமணி, புதியா நுட்பம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம், வச்சத்தொள்ளாயிரம் முதலிய நூல்களின் பெயர் இவ்வுரையில் கூறப்படுகின்றன. புத்தரைப்பற்றிய அழகான பாடல்கள் யாப்புப் படல உரையில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. இந்நூல் இணைப்பில் சேர்க்கப்பட்ட செய்யுள்களில் பல இவ்வுரையினின்றும் எடுக்கப்பட்டவையே.

போற்றுவோரின்றி இறந்துபட்ட சில நூல்களைப் போன்றே இந்நூலும் இறந்துபட்டிருக்கும். நற்காலமாக, இறக்குந்தறுவாயிலிருந்த இந்த நூலினைக் காலஞ்சென்ற ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் அச்சிற் பதிப்பித்துப் புத்துயிர் கொடுத்தார்கள். 1881 ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பிக்கப்பட்டது இப்புத்தகம்.

அகத்திய முனிவர், சிவபெருமானிடத்தில் தமிழைக் கற்றார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. ஆனால், பௌத்தராகிய புத்தமித்திரனார், அகத்தியர் அவலோகிதீஸ்வரர் (போதி சத்துவர்) இடத்தில் தமிழ் கற்றதாகக் கூறுகிறார்.

“ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண்தமிழ்”

என்று இவர் தமது வீரசோழியப் பாயிரத்தில் கூறுவது காண்க. அன்றியும், அவலோகிதரே தமிழ்மொழியை உண்டாக்கினார் என்றும் இவர் கூறுகிறார். “பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த்தமிழ்” என்று இவர், கிரியாபதப்படலக் கடைசிச் செய்யுளில் கூறுவது காண்க.

கீரா சந்தேஸ்யம் என்னும் செய்யுள் நூல் சிங்கள மொழியில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், இலங்கையரசன் பராக்கிரமபாகு VI (கி.பி. 1412-1467) காலத்தில் இயற்றப்பட்டது. இலங்கையிலே தோட்ட கமுவா என்னும் இடத்தில் இராகுலதேரர் தலைமையில் ஒரு கல்லூரி நடைபெற்றிருந்ததென்றும், அக்கல்லூரியில் சமஸ்கிருதம், பாலி, சிங்களம், தமிழ் மொழிகள் பயிலப்பட்டன என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. சோழமன்னர் இலங்கையைக் கைப்பற்றி அரசாண்ட காலத்தில், இலங்கையில், தமிழ்நாகரிகம் போற்றப்பட்டதோடு, தமிழ் மொழியையும் சிங்களவர் கற்று வந்தனர் என்பது தெரிகிறது.

இலங்கையிலே சிங்களவர் தமிழ் பயின்றபோது, பௌத்தராகிய அவர்கள், பௌத்தரால் இயற்றப்பட்ட வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கணத்தைக் கற்றிருக்க வேண்டும். ஏனென்றால் சிங்களவர் சம்ஸ்கிருதம் படிக்கும் போது, சந்திரகோமினி என்னும் பௌத்தர் இயற்றிய சம்ஸ்கிருத இலக்கணத்தைத்தான் கற்பது அவர்கள் வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல, தமிழ் கற்பதற்குப் பௌத்தர் இயற்றியவீரசோழிய இலக்கணத்தைத்தான் கற்றிருக்கவேண்டும். அன்றியும், ஸிததஸங்கரா என்னும் சிங்கள மொழி இலக்கணம் கி.பி 13ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இந்நூலில், இரண்டாம் வேற்றுமையைக் கூறுகிற பகுதி, வீரசோழியத்தைப் பின்பற்றி எழுதியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனால் இந்த இலக்கணநூல், பௌத்தர்களால் போற்றப்பட்டதென்பது விளங்குகின்றது.

மாதிரிக்காக, இந் நூலினின்றும் சில செய்யுள்களைக் காட்டுவோம்:-

‘மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால்

தொக்கவன் யார்க்குந் தொடரவொண்ணாதவன் தூயனெனத்

தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்

புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே.’

‘ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட்

டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க

நீயு முளையோ வெனிற்கரு டன்சென்ற நீள்விசும்பில்

ஈயும் பறக்கு மிதற்கென் கொலோசொல்லு மேந்திழையே!’

‘நாமே வெழுத்துச்சொ னற்பொருள் யாப்பலங் காரமெனும்

பாமேவு பஞ்ச வதிகார மாம்பரப் பைச்சுருக்கித்

தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயராற்

பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்றுகொண்டே.’

(பாயிரம்)

‘அறிந்த வெழுத் தம்முன் பன்னிரண் டாவிகளான, கம்முன்

பிறந்த பதினெட்டுமெய், நடுவாய்தம், பெயர்த்திடையா

முறிந்தன யம்முத லாறும், ஙஞண நமனவென்று

செறிந்தன மெல்லினம், செப்பாத வல்லினந் தேமொழியே.

இந்நூல் உரைப் பகுதியினுன்று மாதிரிக்காகக் கீழ்கண்ட பகுதியைத் தருகிறோம். இது, பொருட் படலத்தில், ‘நாற்குலப் பக்கம்’ என்னும் தொடக்கத்தினுடைய 19ஆவது செய்யுள் உரை:

(சந்தி 1)

‘களவழி களத்திலழிவு. குரவையாவது, இன்றேர்க் குரவையிட்டாடுதல். ஆற்றலாவது, ஆரியரணாத் தன் பகைமிகையை மதியாது பொரும் ஆற்றல். வல்லாண் பக்கமாவது, பகை வென்று விளங்கி மதிப்பெரு வாகை வண்டாரத்துப் பெறுவான் செங்களத்துப் புலர்ந்து மாய்தல். வேட்கையார் பக்கமாவது, விருந்தோம்பலு மழலோம்பலு முட்பட வெண்வகைத்தாம் பக்கம். மேன்மையாவது, பெரும்பகை தாங்குமேன்மை. அது அருளோடு புணர்ந்த வகற்சியாம்.

‘புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு தனாஅது

முலைமறா அக் குழவி வாங்கி வாய்ப்படுத்

தீரையெனக் கவர்ந்தது நோக்கி யாங்க

வேரிளங் குழவிமுன் சென்று தானக்

கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய

வாளெயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப்

பாசிலைப் போதி மேவிய பெருந்தகை

ஆருயிர் காவல் பூண்ட

பேரருட் புணர்ச்சிப் பெருமை தானே.’

பொருளாவது, அறம் பொருளின்ப மூன்று பொருளினும் விடாமற் புணர்ப்பது. காவலாவது, பிழைத்தோரைத் தாங்குதல். துறவாவது, தவத்தினை வென்ற பக்கம். அஃதாவது

‘வாடாப் போதி மரகதப் பாசடை

மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கும்

அருளின் றீந்தே னுரைப்பநனி நெகிழ்ந்து

மலரினு மெல்லி தென்ப வதனைக்

காமர் செவ்வி மாரன் மகளிர்

நெடுமா மழைக்கண் விலங்கி நிமிர்ந்தெடுத்த

வாளும் போழ்ந்தில வாயின்

யாதோ மற்றது மெல்லிய வாறே.’

கொடை யென்பது,

‘பாசடைப் போதிப் பேரருள் வாமன்

வரையா ஈகை போல யாவிருங்

கொடைப்படு வீரக் கொடைவலம் படுமின்

முன்ன ரொருமுறைத் தன்னுழை யிரந்த

அம்பி லரக்கர் வேண்டளவும் பருக

என்புதொறுங் கழிப்பிந் தன்மெய் திறந்து வாக்கிக்

குருதிக் கொழும்பதங் கொடுத்தது மன்றிக்

கருசிமிட் பட்ட கள்ளப் புறவின்

மாய யாக்கை சொல்லிய தாற்றன்

உடம்பு நிறுத்தக் கொடுத்தது மன்றி’ எனவரும்.

படையாளர் பக்கமாவது, கருதறியும் படையாளர் பக்கம். ஒற்றுமையாவது, சிறியோர் நாணப் பெரியோர் கூறிய கூறுபாட்டிற் கழிமனத்தை யொற்றுமை கொள்ளல். ‘மற்று’ மென்றமையால், எட்டியல் சான்றோர் பக்கமுட்படக் கண்டுகொள்க. எட்டியலாவன:

‘அழுக்கா றிலாமை யவாவின்மை தூய்மை

யொழுக்கங் குடிப்பிறப்பு வாய்மை – யிழுக்காத

நற்புலமை யோடு நடுவு நிலைமையே

கற்புடைய வெட்டுறுப்புக் காண்’

என்றமையா லறிக. சான்றோர் பக்கமாவது, பகைவர் கண்ணுந் தன்பாலார்கண்ணு மொப்புமையாகப் பாசறையுள்ளாச் சால்புடைமை கூறுதல். அஞ்சாச் சிறப்பென்பதுமது. பிறவு மன்ன.

3. குண்டலகேசி

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய இந்த நூல் இப்போது இறந்துவிட்டது. ‘தருக்கமாவன: ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க’ என்று யாப்பருங்கலவிருத்தியுரையாசிரியர் ‘மாலை மாற்றே சக்கரம் சழிகுளம்’ என்னும் சூத்திர உரையில் கூறியிருப்பதனால் ‘குண்டல கேசி’ தருக்கநூல் என்பது அறியப்படும். எனவே, பௌத்த சமயச் சார்பான இந்நூல் தருக்க வாயிலாக ஜைனம், வைதீகம் முதலான சமயங்களைக் கண்டிபதாகும். இது பெரும்பான்மையும் விருத்தப் பாவினால் இயற்றப்பட்டதாகலின், இதனைக் ‘குண்டலகேசிவிருத்தம்’ என்றும் கூறுவர். ‘குண்டலகேசி முதலான காப்பியமெல்லாம் விருத்தமாம்’ என்பது வீரசோழிய (யாப்பு. 23 ஆம் பாட்டு) உரை. எனினும், இடையிடையே கலித்துறைச் செய்யுள்களும் விரவியிருந்தன என்பது “குண்டல கேசி விருத்தம் … முதலாயினவற்றுட் கலித்துறைகளு முளவாம்” என வரும் வீரசோழிய (யாப்பு. 21 ஆம் செய்யுள்) உரையினால் விளங்குகின்றது. “குண்டலகேசி ..முதலாகவுடைய வற்றிற் றெரியாத சொல்லும் பொருளும் வந்தனவெனின், அகலக் கவி செய்வானுக்கு அப்படியல்லாதாகாதென்பது. அன்றியும், அவை செய்த காலத்து அச் சொற்களும் பொருள்களும் விளங்கியிருக்கும் என்றாலும் அமையுமெனக் கொள்க” என்ற வீரசோழிய (அலங். 4 ஆம் செய்யுள்) உரைக் குறிப்பினால், இக் காவியத்தில் பொருள் தெரியாத சொற்கள் சில இருந்தன என்பது விளங்குகின்றது.

இந்நூலாசிரியர் நாதகுத்தனார் என்பவர். இதனை நீலகேசி 344 ஆம் பாட்டுரையில் ‘புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு’ என்னும் குண்டலகேசிச் செய்யுள் அடியை எடுத்துக்காட்டி, நாதகுத்தனார் வாக்கெனக் குறிப்பிடுவதனால் அறியலாம். (கீழ்க்காணும் மாதிரிச் செய்யுள் 3 ஆவது காண்க.)

மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி மணிமேகலை என்பவளின் பெயரையே அக் காப்பியப் பெயராகச் சூட்டினமை போல, இக் காவியத் தலைவியின் பெயர் ‘குண்டல கேசி’ என்பதாகலின், இக் காப்பியத்திற்குக் குண்டலகேசி என்னும் பெயர் சூட்டப்பட்டது. குண்டலகேசி என்பவள் புத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில் வடநாட்டிலிருந்த ஒரு பெண் துறவி. இப்பெண்மணியின் வரலாறு பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூலாகிய ‘தேரிகாதையிலும்’ ‘தம்ம பதா’, ‘அங்குத்தரநிகாயா’ என்னும் நூலிலும், நீலகேசி என்னும் ஜைனத் தமிழ் நூல் (286 ஆம் செய்யுள்) உரையிலும் கூறப்பட்டிருக்கின்றது. குண்டலகேசியின் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு:

இராசகிருகம் என்னும் நகரத்தை அரசாண்ட அரசனின் மந்திரிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்குப் பத்திரை எனப் பெயரிட்டுப் பெற்றோர் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். இவ்வாறு வளர்ந்த அப்பெண் மகவு பெரியதாகி மணம் செய்யத்தக்க வயதடைந்தது. ஒருநாள், இப்பெண் மாளிகையின் மேற்புறத்தில் உலாவியபோது, தெருவழியே கட்டழகு மிக்க காளையொருவனை அரசனது சேவகர் கொலைக்களத்துக்கு அழைத்துக்கொண்டு போவதைக் கண்டாள். கண்டு அக்காளையின் மேற் காதல் கொண்டாள். அவன் அரசனின் புரோகிதன் மகன். வழிப்பறி செய்த குற்றத்திற்காகக் கொலைத் தண்டனை அடையப்பெற்றுக் கொலைக்களத்திற்கு அழைத்தேகப்பட்டான். இக்குற்றவாளியின் மேல் காதல் கொண்ட பத்திரை, ‘அவனையே மணம்புரிவேன்; அன்றேல் உயிர்விடுவேன்’, என்று பிடிவாதம் செய்தாள். இதனையறிந்த இவள் தந்தை கொலையாளருக்குக் கைக்கூலி கொடுத்து அவனை மீட்டுக்கொண்டு வந்து நீராட்டி ஆடையணிகளை அணிவித்துப் பத்திரையை அவனுக்கு மணஞ்செய்வித்தான்.

மணமக்கள் இருவரும் இன்பமாக வாழுங் காலத்தில் ஒருநாள், ஊடல் நிகழ்ச்சியின்போது பத்திரை தன் கணவனைப் பார்த்து, “முன்பு கள்வன் அல்லனோ?” எனக் கூறினாள். அவன், அவள் தன்னை இகழ்ந்ததாகக் கருதிமிக்க சினங்கொண்டான். ஆயினும், அதனை அப்போது வெளியிற் காட்டாமல் அடக்கிக்கொண்டான்.

பின்னர், ஒருநாள் அவன் பத்திரையை அழைத்து, அவளிடம் தன் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தை வழிபடும் பொருட்டு அருகிலிருந்த மலையுச்சிக்குப் போக விரும்புவதாகவும் அவளையும் உடன்வரும்படியாகவும் கூறினான். அவளும் இசைய இருவரும் மலையுச்சிக்குச் சென்றனர். மலையுச்சியினை அடைந்தவுடன், அக் கொடியோன் அவளைச் சினந்து நோக்கி, ‘அன்று நீ என்னைக் கள்வன் என்று கூறினாயன்றோ? இன்று உன்னைக் கொல்லப் போகிறேன். நீ இறக்குமுன் உனது வழிபடு கடவுளை வணங்கிக்கொள்’, என்றான், இதனைக் கேட்டுத் திடுக்கிட்ட அவள், ‘தற்கொல்லியை முற்கொல்ல வேண்டும்’ என்னும் முதுமொழியைச் சிந்தித்து, அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிபவள் போல நடித்து, ‘என் கணவனாகிய உன்னையன்றி எனக்கு வேறு தெய்வம் ஏது? ஆதலின், உன்னையே நான் வலம்வந்து வணங்குவேன்’, என்று சொல்லி, அவனை வலம் வருவதுபோல் பின்புறம் சென்று, அவனை ஊக்கித் தள்ளினாள். இவ்வாறு அக் கொடியவன் மலையுச்சியினின்றும் வீழ்ந்து இறந்தான்.

இதன் பிறகு, பத்திரை உலகத்தை வெறுத்தவாளாய் ஜைன மதத்தில் (நிகண்ட மதத்தில்) சேர்ந்து துறவு பூண்டாள். அந்த மதக்கொள்கைப்படி, துறவியான பத்திரையின் தலைமயிரைக் களைந்துவிட்டார்கள். ஆயினும், மீண்டும் தலையில் மயிர் வளர்ந்து சுருண்டு காணப்பட்டது. ஆகவே, ‘சுருண்ட மயிரினையுடையவள்’ என்னும் பொருள்படும் ‘குண்டலகேசி’ என்று அவளைக் கூறினர். இப்பெயரே பிற்காலத்தில் இவளுக்குப் பெரும்பாலும் வழங்கப்பட்டது. சில வேளைகளில் இவளது இயற்கைப் பெயரையும் காரணப்பெயரையும் ஒருங்கு சேர்த்துப் ‘பத்திரா குண்டலகேசி’ என்றும் சொல்வதுண்டு.

ஜைன மதத்திற் சேர்ந்த குண்டலகேசி ஜைனர்களிடம் சமய சாத்திரங்களையும் தர்க்க நூல்களையும் கற்றுத்தேர்ந்து, சமயவாதம் செய்யப் புறப்பட்டு, சென்ற விடமெங்கும் நாவல் நட்டு, வாதப்போர் செய்து வெற்றி கொண்டு வாழ்ந்தாள். (வாதப்போர் செய்வோர் நாவல் மரக்கிளையை ஊர் நடுவில் நட்டு வாதுக்கழைப்பது அக்கால வழக்கம்.) இவ்வாறு நிகழுங்கால், ஒருநாள் ஓர் ஊரையடைந்து, அவ்வூர் நடுவில் மணலைக் குவித்து நாவல் மரக் கிளையை நட்டு, உணவு பெறுவதற்காக வீடுதோறும் பிச்சைக்குச் சென்றாள். அவ்வமயம் புத்தர் தமது சீடர்களுடன் அவ்வூர்க்கருகிலிருந்த ஒரு தோட்டத்தில் வந்து தங்கினார். அவருடைய சீடர்களில் சாரிபுத்தர் என்பவர் உணவுக்காக அவ்வூர்க்குட் சென்றார். சென்றவர் அங்கு நாவல் நட்டிருப்பதைக் கண்ணுற்று, அதன் காரணத்தை அங்கிருந்தவர்களால் அறிந்து, அங்கிருந்த சிறுவர்களை அழைத்து, அக் கிளையினைப் பிடுங்கி எறியும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

பின்னர், உணவுகொள்ளச் சென்ற குண்டலகேசி மீண்டும் திரும்பிவந்தபோது, தான் நட்ட நாவல் மரக்கிளை வீழ்த்தப்பட்டிருப்பதைக் கண்டு, அதனை வீழ்த்தியவர் அருகிலிருந்த சாரிபுத்தர் என்பதனை யறிந்து, அவ்வூர்ப் பெரியோரை அழைத்து, அவை கூட்டச் செய்து, சாரி புத்தருடன் வாதம் செய்யத் தொடங்கினாள். நெடுநேரம் நடைபெற்ற வாதத்தில் குண்டலகேசி வினாவிய வினாக்களுக்கெல்லாம் சாரிபுத்தர் விடையளித்தார். பின்னர், சாரிபுத்தர் வினாவிய வினாவுக்குக் குண்டலகேசி விடையிறுக்கத் தெரியாமல் தான் தோற்றதாகச் சொல்லி, அவர் காலில் விழுந்து வணங்கி, அவரை அடைக்கலம் புகுந்தாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் பார்த்து, ” என்னிடம் அடைக்கலம் புகாதே; என் குரு புத்த பகவானிடம் அடைக்கலம் புகுவாயாக.” என்று சொல்லி, அவளை அழைத்துச் சென்று, அவளைப் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதுவே குண்டலகேசி என்னும் தேரியின் வரலாறு.

இந்தக் குண்டலகேசி பௌத்தமதத்தைச் சேர்ந்த பிறகு சமயவாதம் செய்யப் புறப்பட்டு, ஜைனம், வைதீகம் முதலான சமயங்களைத் தருக்க முறையாகக் கண்டிப்பதாக இயற்றப்பட்டது தான் குண்டலகேசி காப்பியம் என்பது. இந்தக் குண்டலகேசி நூலுக்கு விடையிறுத்து, ஜைன மதக் கொள்கையை நாட்ட இயற்றப்பட்டது நீலகேசி என்னும் நூல். குண்டலகேசி இயற்றப்படாமலிருந்தால் நீலகேசியும் இயற்றப்பட்டிராது. இப்போது நீலகேசி நூல் அழியாமல் இருக்க, குண்டலகேசியோ மறைந்துவிட்டது. இது சமயப் பொறாமையின் விளைவு. சமயப் பகை தமிழ்நாட்டில் பெருந்தீங்கு விளைத்திருக்கின்றது. நினைத்தால் மனம் பதறுகின்றது. குண்டலகேசியை இழந்துவிட்டது தமிழ் இலக்கியத்துக்குப் பெருங்குறையே. ஏனென்றால், தமிழ்நாட்டின் பழக்கவழக்கங்கள், சரித்திரக் குறிப்புகள், அக்காலத்திலிருந்த சமயங்கள், அவற்றின் கொள்கைகள் இவற்றையும், அக்காலத்தில் தமிழ்நாட்டுப் பௌத்தமதக் கொள்கைகளையும், அம் மதத்தின் நிலைமையையும் தெரிவிக்கக் கூடிய ஒரு நூலை நாம் இழந்துவிட்டோம். இந்த நூல் இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை.

குண்டலகேசி மறைந்துவிட்டது. ஆயினும், பல நூல்களினின்றும் தொகுக்கப்பட்ட ‘புறத்திரட்டு’ என்னும் நூலில் குண்டலகேசிச் செய்யுட்கள் காணப்படுகின்றன. அன்றியும், தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை என்னும் இவற்றில் குண்டலகேசிச் செய்யுள்கள் சில மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. செய்யுள் நடைமாதரிக்காக, அவற்றுட் சிலவற்றைக் கீழே தருகின்றோம்:

கடவுள் வாழ்த்து

“முன்றான் பெருமைக்க ணின்றான் முடிவெய்து காறும்

நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்

றொன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தா

னன்றே யிறைவ னவன்றாள் சரணங்க ளன்றே.”

அவையடக்கம்

“நோய்க்குற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்ககில்லார்

தீக்குற்ற காதலுடையார் புகைத்தீமை யோரார்

போய்க்குற்ற மூன்று மறுத்தான்புகழ் கூறுவேற்கென்

வாய்க்குற்ற சொல்லின் வழுவும்வழு வல்லவன்றே.”

“எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல்

தினைப் பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவுமாகி

நுனைய புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட

இனைய உடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ.”

“வகையெழிற் றோள்க ளென்று மணிநிறக் குஞ்சியென்றும்

புகழெழ விகற்பிக் கின்ற பொருளில்லா மத்தை மற்றோர்

தொகையெழுங் காதல் தன்னால் துய்த்துயர்ந் துடைத்து மென்பார்

அகையழ லழுவந் தன்னை நெய்யினா லவிக்க லாமோ.”

“அனலென நினைப்பிற் பொத்தி யகந்தலைக் கொண்ட காமக்

கனவினை யுவர்ப்பு நீராற் கடையற வலித்து மென்னார்

நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குது மென்று நிற்பார்

புனவினைப் புனலி னாலே யாவர்போ காமை வைப்பார்.”

“பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்துங்

காளையர் தன்மை செத்தும் காமுறு மிளமை செத்தும்

மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி

நாளுநாட் சாகின் றோமால் நமக்குநா மழாத தென்னோ.”

4. சித்தாந்தத் தொகை

இஃது, இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. இது பௌத்தமதக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் நூல் எனத் தெரிகின்றது. இதனை இயற்றியவர் இன்னார் என்பதும், ஒருவரா பலரா என்பதும் தெரியவில்லை. இயற்றப்பட்ட காலமும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் என்னும் சைவசமய நூலுக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரையில் பரபக்கம் சௌத்திராந்திகன் மதம் 2.3.1 பாட்டுகளின் உரை கீழ்கண்ட செய்யுளை இந்நூலிருந்து மேற்கோள் காட்டியிருக்கின்றார்:

‘அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப்

பொருண் முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்றன்

அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார்

மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ.’

‘மருடரு மனம் வாய் மெய்யிற் கொலைமுதல் வினைப்பத்தாமே என்பது சித்தாந்தத் தொகை’ என்று நீலகேசி, புத்தவாதச் சருக்கம் 64 ஆம் பாட்டுரையில் கூறப்பட்டிருக்கின்றது. இவற்றைத் தவிர இந்நூற் செய்யுள்கள் வேறொன்றும் கிடைக்கவில்லை.

5. திருப்பதிகம்

இதுவும் இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. இந்நூல் ஆசிரியர் யாவர், இந்நூல் எத்தனைப் பாக்களைக் கொண்டது என்னும் செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. காலமும் தெரியவில்லை. இந்நூலின் பெயரைக்கொண்டு இது புத்தர்மீது இயற்றப்பட்ட தோத்திரநூல் என்று கருத இடமுண்டாகிறது. சிவஞான சித்தியார் (பரபக்கம் சௌத்திராந்திகன் மதம், 2ஆம் செய்யுள், மறுதலை, 8 ஆம் செய்யுள்) உரையில் ஞானப்பிரகாசர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள்காட்டி ‘இது திருப்பதிகம் எனக் கொள்க’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

‘எண்ணிகந்த காலங்க ளெம்பொருட்டான் மிகவுழன்று

எண்ணிகந்த காலங்க ளிருடீர வொருங்குணர்ந்தும்

எண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி

எண்ணிகந்த குணத்தினா னெம்பெருமா னல்லனோ.’

நீலகேசி உரையாசிரியர் கடவுள் வாழ்த்து உரையில் மேலே காட்டிய செய்யுளையும், கீழ்க்கண்ட செய்யுளையும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், இச் செய்யுள்கள் இந்நூலிருந்து எடுக்கப்பட்டன என அவர் குறிப்பிடவில்லை. ஆயினும், அவர் காட்டிய கீழ்கண்ட செய்யுளும் இந்த நூலைச் சேர்ந்ததுதான் என்பதில் ஐயமில்லை.

‘என்றுதா னுலகுய்யக் கோளெண்ணினா னதுமுதலாச்

சென்றிரந்தார்க் கீந்தனன் பொருளுடம் புறுப்புக்க

டுன்றினன் பிறக்குந னுளனாயின் மாமேருக்

குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ.’

6. விம்பசார கதை

இந்தப் பெயர்கொண்ட பௌத்தநூல் ஒன்றிருந்த தென்பது நீலகேசி உரையினால் (190 ஆவது பாட்டுரை) அறியப்படும். நீலகேசி உரையாசிரியர் விம்பசார கதையிலிருந்த நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, ‘இது விம்பசார கதை என்னும் காவியம்; பௌத்தருடைய நூல்; அதன்கட் கண்டு கொள்க’ என்று எழுதியிருக்கின்றார். சிவஞான சித்தியார் என்னும் நூலுக்கு உரையெழுதிய ஞானபிரகாசர் (பர: சௌத்தி: மறுதலை. 5 ஆம் செய்யுளுரை) நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய அதே நான்கடிகளை மேற்கோள் காட்டி, விம்பசார கதையைப்பற்றி அவர் எழுதியவற்றை அவ்வாறே எழுதியிருக்கிறார்.

விம்பசார கதை என்னும் இந்தக் காப்பியம் எத்தனை செய்யுள்களையுடையது, எத்தனை அதிகாரங்களையுடையது, இதனை இயற்றியவர் யாவர் என்பதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும், அவருக்குப் பலவிதத்திலும் தொண்டுசெய்து அவரை ஆதரித்துவந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றினைக் கூறுவது இக் காப்பியம் என்று கருதக்கிடக்கின்றது. விம்பசாரனது வரலாற்றுச் சுருக்கம் இதுவாகும்.

விம்பசாரன் அல்லது பிம்பிசாரன் என்னும் அரசன் இராசகிருகம் என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டு மகதநாட்டை (கி.மு. 542 முதல் 490 வரையில்) அரசாண்டான். அக்காலத்தில் இல்லறவாழ்க்கையைத் துறந்து, துன்பத்தை நீக்கும் வழியைக் காண்பதற்காகச் செல்லும் சித்தார்த்தர் (புத்தர்), இராசகிருக நகரத்திற்குச் சென்றபோது அவரைக்கண்ட விம்பசார அரசன் அவரை அழைத்துச் தன் இராச்சியத்தில் சரிபாதியை அவருக்குக் கொடுப்பதாகக் கூறினான். சித்தார்த்தர், தாம் செல்லும் நோக்கத்தைத் தெரிவிக்க, அவன் அவரது நோக்கம் நிறைவேறிய பிறகு தன்னிடம் வந்து தனக்கு உபதேசம் செய்யவேண்டும் என்று இரந்து வேண்டினான். சித்தார்த்தர் அதற்கு உடன்பட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றார். பின்னர், சித்தார்த்தர் புத்தரான பிறகு விம்பசாரனுக்குத் தாம் வாக்களித்ததை நினைத்து, தம் சீடர்களுடன் இராசகிருகத்தின் அருகில் சுபதித்த சேதியத்தில் வந்து தங்கினார். இதனை யறிந்த அரசன் தனது சுற்றத்தாருடன் சென்று புத்தரை வணங்க, அவர் அவர்களுக்கு உபதேசம் செய்தார். அன்று முதல் அரசன் பௌத்த மதத்தை மேற்கொண்டான்.

அடுத்த நாள் அரசன் புத்தரையும் அவருடைய சீடர்களையும் அரண்மனைக்கழைத்து அவர்களுக்கு விருந்தளித்த பின்னர், அவர்கள் தங்குவதற்கு ‘வெளுவனம்’ என்னும் தோட்டத்தைப் புத்தருக்குத் தானமாக் கொடுத்தான். அன்றியும், அவன் இறக்கும்வரையில் புத்தருக்கும் அவரது சங்கத்தாருக்கும் பற்பல உதவிகளையும் தொண்டுகளையும் செய்துவந்தான்.

இந்த அரசனுக்கு அஜாத சத்ரு என்னும் மகன் ஒருவன் இருந்தான். இவன் பிறந்தபோது இவனால் அரசனுக்கு மரணம் நேரிடும் என்று நிமித்திகர் கூறினார்.

கௌதம புத்தருக்கு மைத்துனன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தேவதத்தன். அவன் புத்தரின் தாய் வழி மாமனின் மகன். இந்தத் தேவதத்தன், புத்தர் உலகத்தாரால் போற்றிப் புகழப்படுவதைக் கண்டு அவர் மேல் பொறாமை கொண்டான். பௌத்த சங்கத்தின் தலைவராக வீற்றிருக்கும் புத்தரை நீக்கிவிட்டு, அவர் இடத்தில் தான் அமர்ந்து பெருமையடைய அவாக் கொண்டான். ஆனால், புத்தரும் விம்பசார அரசனும் உயிரோடுள்ள வரையில் தனது விருப்பம் நிறைவேறாதெனக் கண்டு, அவர்களைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான்.

தேவதத்தன் சில சித்திகள் கைவரப்பெற்றவனாகலின், அவன் அரசன் மகன் அஜாத சத்துருவிடம் சென்று, அவன் அஞ்சும்படி சில சித்திகளைச் செய்து அவனைத் தன் வசப்படுத்தி, அரசனைக் கொன்று அரசைக் கைப்பற்றிக் கொள்ளுமாறும், புத்தரைக் கொன்று பௌத்த சங்கத் தலைமைப் பதவியைத் தனக்களிக்குமாறும் அவனுக்குக் கூறினான். இவன் சித்திகளைக் கண்டு இவனிடம் அச்சமும் மதிப்புங்கொண்ட அரசகுமாரன் இவன் கற்பித்த தீச்செயல்களைச் செய்ய உடன்பட்டான்.

தேவதத்தன், அரச குமாரன் உதவியால் சில வில் வீரர்களை ஆங்காங்கேயிருக்கச் செய்து, புத்தர் வழியே செல்லும்போது அவரை அம்பெய்து கொல்லுமாறு ஏவினான். புத்தர் வீதி வழியே சென்றபோது, வில்வீரர்கள் அவர்மேல் அம்பெய்ய முடியாதவர்களாகி விறைத்து நின்றனர். பின்னர், அவர்கள் புத்தரிடம் வந்து அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றனர். தனது நோக்கம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், தானே புத்தரைக் கொல்ல முடிவுசெய்து, அவர் பாதை வழியே செல்லும்போது பெரும்பாறைகளை மலைமீதிருந்து உருட்டினான். அவை அவருக்குப் பெரிய ஊறு செய்யவில்லையாயினும் காலில் சிறிது காயத்தை உண்டாக்கின. இதனையறிந்த அவருடைய சீடர்கள் அவரை வெளியே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். புத்தர், ‘ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் ஆகாது’, என்று சொல்லி, தம் வழக்கம்போல் வெளியே சென்றுவந்தார். பின்னர், தேவதத்தன், அரசகுமாரன் உதவியால், ‘நளாகிரி’ என்றும் ‘தனபாலன்’ என்றும் பெயருள்ள மதம்பிடித்த யானையைக் கள்ளூட்டி வெறிகொள்ளச் செய்து, புத்தர் வீதிவழியே செல்லும்போது அவரைக் கொல்ல அதை ஏவினான். அவ்வியானை புத்தரைக் கண்டபோது மதமும் வெறியும் தணியப்பெற்று அவரை வணங்கியது.

இவ்வாறு தேவதத்தன் புத்தரைக் கொல்லச் சூழ்ச்சி செய்திருக்க, அஜாத சத்துரு, அரசனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான். இதனையறிந்த அரசன் தன் மகனுக்கு அரசாட்சியைக் கொடுத்துவிட்டுத் தான் அப் பதவியினின்றும் விலகிக்கொண்டான். ஆயினும், தேவதத்தன் அரசகுமாரனிடம் சென்று, அரசனைக் கொல்லும்படி வற்புறுத்தினான். அதனைக்கேட்டு, அஜாத சத்துரு அரசனைச் சிறைப்படுத்தி, காற்றோட்டமில்லாத ‘பொதியறை’ யில் அடைத்து, அரசியைத் தவிர ஒருவரும் அங்குச் செல்லக் கூடாதென்றும், ஒருவரும் அரசனுக்கு உணவு கொடுக்கக் கூடாதென்றும் கட்டளையிட்டான். இவ்வாறு சிறைப்பட்ட விம்பசார அரசனுக்கு அவன் மனைவி அவனைக் காணச் செல்லும் போதெல்லாம் தனது உடையில் உணவை மறைத்துக்கொண்டு போய்க் கொடுத்து வந்தாள். இது கண்டறியப்பட்டபின், தனது தலையணியில் சிறிது உணவை மறைத்துக்கொண்டு போனாள். இதுவுங் கண்டறியப்பட்டபோது, அந்த அரசி நீராடித் தன் உடம்பில் ‘சாதுர் மதுரம்’ என்னும் நால்வகை இனிப்பு வகைகளைப் பூசிக்கொண்டு அரசனிடம் சென்றாள். அரசன் அவள் உடம்பில் பூசப்பட்ட இனிப்பை நக்கி உண்டு உயிர் வாழ்ந்தான். இதுவும் கண்டுபிடிக்கப்பட்டு, அரசி விம்பசாரனைப் பார்க்ககூடாதென்று தடுக்கப்பட்டது.

விம்பசாரன் மனம் கவலாமல் பொதியறையாகிய அச் சிறையில் உலாவிக் கொண்டிருந்தான். இதனையறிந்த அஜாத சத்துரு சில மயிர் வினைஞரை அனுப்பி, விம்பசாரனுடைய பாதத்தைக் கத்தியால் கீறியறுத்து, உப்பையும் புளித்த காடியையும் இட்டுக் கட்டுமாறு கூறினான். இக் கொடுஞ் செயலைச் செய்ய மனமற்றவராக இருந்தும் அவ்வூழியர் அவ்வாறே செய்தனர். இக்கொடுமையால் ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கப் பொறாமல், விம்பசாரன் சிறைச் சாலையில் உயிர் நீத்தான்.

விம்பசாரன் உயிர் துறந்த அதே நாளில், அஜாத சத்துருவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையிடத்தில் தந்தைக்கு உண்டாகும் அன்புணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. தன்னையும் தன் தந்தை இப்படித்தானே நேசித்திருப்பான் என்று அவன் கருதி, அவன் தன் தாயிடம் சென்று இதைப்பற்றி வினவினான். அஜாத சத்துரு பிறந்தது முதல் விம்பசார அரசன் எவ்வாறு அவனை அன்பாக நேசித்தான் என்பதனையும் எவ்வாறு கண்ணுக்குக் கண்ணாயும் உயிருக்குயிராயும் போற்றிக் காப்பாற்றினான் என்பதையும் அவள் அவனுக்கு விளக்கிச் சொன்னாள். இவற்றையெல்லாங் கேட்ட அஜாத சத்துரு தான் தன் தந்தையாகிய விம்பசார அரசனைக்கொடுமையாய்ச் சித்திரவதை செய்து கொன்றதை நினைத்து வருந்தினான்.

இவ்வரலாற்றினைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த விம்பசார கதை என்னும் காப்பியம் எனத் தோன்றுகின்றது. இஃது இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை. இந்தக் காப்பியத்தினின்று கிடைத்திருப்பன நான்கு அடிகள் மட்டுமே. அவை பின் வருவன:

‘உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி

வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல்

ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்

ஈன்றோன் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்.’

இச்செய்யுள் நடையை நோக்கும்போது, இந்தக் காப்பியம் மணிமேகலையைப் போன்று ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது.

10. மணிப்பிரவாள உரைநடை

பௌத்த மதமும் ஜைன மதமும் வடநாட்டிலே தோன்றிய மதங்கள். ஆகவே, அந்த வடநாட்டில் வழங்கிய பாகத (பிராகிருத) மொழிகளில் எழுதப்பட்டன. பண்டைக் காலத்திலே, பௌத்த ஜைனர்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியில் தமது சமய நூல்களை எழுதவில்லை. ஏனென்றால், சமஸ்கிருத மொழி, பொது ஜனங்களால் பேசப்படாத (கற்றவர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காத) பேச்சு வழக்கற்ற மொழியாக இருந்தது. ஆகவே, பொதுமக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய பேச்சுவழக்கில் இருந்த பிராகிருத மொழிகளிலே பௌத்த ஜைனர்கள் தமது மதநூல்களை அக்காலத்தில் எழுதி வைத்தார்கள். பௌத்தர், மாகதி எனப்படும் பாலி மொழியையும் ஜைனர் அர்த்தமாகதி எனப்படும் சூரசேனியையும் தமது ‘தெய்வ’ மொழியாகக் கொண்டு அம்மொழிகளிலே தமது மதநூல்களை எழுதிவைத்த படியினாலே, தமிழ்நாட்டிலே அந்த மதங்கள் பரவியபோது, தமிழரும் அந்த மதநூல்களைப் பயிலவேண்டிய தாயிற்று. அந்தப் பிராகிருத மொழிகளிலே, சமஸ்கிருத மொழியில் உள்ளது போன்று, நான்கு ககரங்களும் நான்கு டகரங்களும், இரண்டு சகரங்களும், இரண்டு ஜகரங்களும் ஷ, க்ஷ, ஸ, ஹ முதலிய எழுத்துக்களும் உள்ள படியினாலே, அவ்வெழுத்துக்கள் இல்லாத தமிழ்மொழியிலே அந்தப் பிராகிருத பாஷைகளை எழுதிப் படிக்க முடியவில்லை. ஆகாவே, பௌத்த ஜைனர்கள் தமது சமயநூல்கள் எழுதப்பட்ட பிராகிருத மொழிகளைத் தமிழருக்குக் கற்பிக்க வேண்டிப் புதிதாக ஒருவகை எழுத்துக்களை உண்டாக்கினார்கள். பிராமி எழுத்துக்களிலிருந்து புதிதாக உண்டாக்கப்பட்ட அவ்வெழுத்துக்களுக்குக் கிரந்த எழுத்து என்பது பெயர். இவ்வாறு பிராகிருத மொழிகள் முதன் முதல் தமிழ்நாட்டிலே பயிலப் படுவதற்குக் காரணமாக இருந்தவர் பௌத்த ஜைனர்களே.

(சமஸ்கிருத மொழி என்று கூறினால், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் ஆரியவேதங்கள் எழுதப்பட்டதும், ஆரியர்கள் பேசியதுமான பழைய மொழி என்று ஒரு தவறான எண்ணம் கற்றவர்கள் இடத்திலும் நிலவிவருகிறது. இது தவறு. ஆரிய வர்த்தம் எனப்படும் பஞ்சாப் சிந்து நதிக்கரைகளில் குடியேறிய ஆரியர் பேசியமொழி சமஸ்கிருதம் அன்று. வேதகாலத்து ஆரியர் பேசிய ஆரியமொழி இறந்து அழிந்து ஒழிந்து போயிற்று. பழைய ஆரியம் அழிந்தொழிந்த பிறகு, சமஸ்கிருதம் எனப்படும் வடமொழி மெல்லமெல்ல உருவடையத் தொடங்கிற்று. பிறகு ஏறத்தாழ கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலே சமஸ்கிருதம் உருவடைந்தது. சமஸ்கிருதத்திலே பழைய ஆரியச் சொற்களும், தொன்றுதொட்டு இந்தியாவில் வழங்கிவந்த பிராகிருத மொழிச் சொற்களும், திராவிட மொழிச் சொற்களும் கலந்துள்ளன. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட சமஸ்கிருதத்துக்குப் புதிதாக இலக்கணமும் அமைக்கப்பட்டது. சமஸ்கிருதம் என்னும் பெயரே, இது புதிதாகத் தோன்றிய மொழி என்பதை வலியுறுத்துகிறது. (சமம் + கிருதம் = சமஸ்கிருதம் = நன்றாக, செம்மையாக (perfect or improved) செய்யப்பட்டது என்பது பொருள்.) பிராகிருதம் என்பதற்கு அடிப்படையானது, அநாதியாக உள்ளது என்பது பொருள். சமஸ்கிருத மொழியிலே பல நூற்றுக்கணக்கான திராவிட மொழிச் சொற்களும் கலந்திருப்பதைக் கற்றறிந்த அறிஞர் காட்டியுள்ளார்கள். புதிதாக உண்டாக்கப்பட்ட சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் கலக்கப்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்திலே (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே) வட இந்தியாவில் திராவிட மொழிகள் வழங்கிவந்தன. திராவிடச் சொற்களும், பிராகிருதச் சொற்களும் பழைய ஆரியச் சொற்களும் சேர்ந்து புதிதாக அமைந்ததே சமஸ்கிருத பாஷை என்பதும், அதற்கும் பழைய ஆரிய பாஷைக்கும் மாறுபாடுகள் உண்டு என்பதும் அறியற்பாலன. பிராகிருத மொழிகள் முந்தியவை. சமஸ்கிருதம் பின்னால் உண்டானது. சமஸ்கிருதத்திலிருந்து பிராகிருத மொழிகள் உண்டாயின என்று சிலர் கருதுவது தவறு. )

(இக்காலத்திலே கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பௌத்த ஜைன மதங்கள் செல்வாக்கிழந்து பிராமண மதம் செல்வாக்கு பெற்ற காலத்திலே, பிராகிருத மொழிகளுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ்கிருத மொழிக்கு ஆதிக்கம் ஏற்பட்டது. அப்போது பௌத்தர்களும் (முக்கியமாக மகாயான பௌத்தர்களும்) ஜைனர்களும் தமது மதநூல்களை வடமொழியில் எழுதிவைத்தார்கள்.)

பௌத்தர்களும் ஜைனர்களும் பிராகிருத மொழியைக் கற்றவர்கள் என்பதைத் தேவாரத்தில் திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கூறியுள்ளார்கள்.

“ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்

பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள் வெட்குறுபக்கமா

மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணு மாசுசேர்

ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயரன் நிற்கவே” (2)

இதில், சங்கத பங்கதம் என்பது சமஸ்கிருத மொழியை பாகதம் என்பது பிராகிருத மொழியை.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், பௌத்த ஜைனர்கள் பிராகிருத மொழியை ஓதியதை ஏளனம் செய்து காட்டுகிறார். அச்செய்யுள்:

“நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்றிவர் (றியே

குமணமாமலைக் குன்றுபோல் நின்று தங்கள் கூறையொன் றின்

ஞமண ஞாஞண ஞாணஞோணமென் றோதியாரையு நாணிலா

அமணராற் பழிப் புடையரோநமக் கடிகளாகிய அடிகளே.” (9)

சமஸ்கிருத மொழியில் க்ஷகர, ஸகர, ரகரங்கள் அதிகமாகப் பயின்று வருவது போல பிராகிருத மொழிகளிலே ஙகரம், ஞகரம், ணகரம், மகரங்கள் அதிகமாகப் பயின்று வருகின்றன. மாகதி, அர்த்தமாகதி மொழிகளைப் பயின்றவர்கள், அல்லது பயிலக் கேட்டவர்கள் இந்த உண்மையை நன்கறிவார்கள். இதைத்தான் மேலே காட்டிய தேவாரத்தில், சுந்தரமூர்த்திகள் “ஞமண ஞாஞண ஞாணஞோணம்” என்று ஏளனம் செய்து காட்டுகிறார். இதனால், சம்பந்தர், சுந்தரர் காலத்திலும் அதாவது 7 ஆவது 8 ஆவது நூற்றாண்டுகளிலும் பௌத்த ஜைனர் பிராகிருத நூல்களை ஓதிவந்தார்கள் என்பது தெரிகிறது.

இடைக்காலத்தில், பௌத்த ஜைனர்கள், தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் விரவிக் கலந்து மணிப்பிரவாளம் என்னும் புதியதோர் உரை நடையை உண்டாக்கினார்கள். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட பௌத்த ஜைன நூல்கள் இடைக்காலத்திலே பயிலப் பட்டன. பௌத்த மதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்து போய்விட்டபடியினால், பௌத்தச் சார்பானா மணிப்பிரவாள நடை நூல்களும் அழிந்துவிட்டன. ஆனால், பௌத்தர் இயற்றிய வீரசொழியம் என்னும் தமிழ் இலக்கண நூலிலே மணிப்பிரவாள நடை குறிப்பிடப்படுகிறது.

“இடையே வடவெழுத் தெய்தில் விரவியல் ஈண்டெதுகை

நடையேது மில்லா மணிப்பிர வாளம்நற் றெய்வச் சொல்லின்

இடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கிவியன்

தொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே”

என வரும் வீரசோழியம், அலங்காரப்படலச் செய்யுள் 40 காண்க.

ஜைனமதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்துவிடாமல் இப்போது இருக்கிறபடியினாலே அவர்கள் இயற்றிய ஸ்ரீபுராணம் முதலிய மணிப்பிரவாள உரைநடை நூல்கள் இன்னும் வழங்கப் படுகின்றன.

பிற்காலத்திலே, கி. பி 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், வைணவ சமயத்தார், ஆழ்வார்கள் அருளிய தூய செந்தமிழ்ப் பாக்களுக்கு உரையெழுதியபோது, பௌத்தர்களையும் சமணர்களையும் பின்பற்றி, மணிப்பிரவாள நடையில் உரைகளை (வியாக்கியானங்களை) எழுதினார்கள். அவர்கள் எழுதிய மணிப்பிரவாள உரை நூல்கள், படிப்பார் இல்லாமல் இப்போது பயனற்றுக் கிடக்கின்றன. ஏனென்றால், சமஸ்கிருதம் படித்தவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால், அவர்களுக்கு மணிப்பிரவாளம் விளங்குவதில்லை. தமிழ்மொழி படித்தவர்களுக்கும் சமஸ்கிருதம் தெரியாதாகையினாலே, அவர்களுக்கும் மணிப்பிரவாளம் விளங்குகிறதில்லை. வடமொழி தமிழ்மொழி இரண்டையும் கற்றவர்களோ மிகமிகச் சொற்பமானவர், ஆயிரத்தில் ஒருவராவது இரண்டையும் கற்றவர் உளரோ என்பதே ஐயத்திற்கிடமாயிருக்கிறது. அப்படிப் படித்தவர்களிலும் வைணவப்பற்றுள்ளவர் எத்தனைப்பேர்? இவ்வாறு, நாலாயிரப் பிரபந்தத்தின் மணிப்பிரவாள உரை, இருந்தும் இறந்த நூலாக இருக்கிறது. இது தமிழ் நாட்டிலே மணிப்பிரவாள நடைக்கு இடமில்லை என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக விளங்குகிறது. மணிப்பிரவாள நடை வடமொழி கற்றவருக்கும் விளங்காமல் தமிழ்மொழி கற்றவருக்கும் விளங்காமல், ஒரு புதிய மொழியாக இருக்கிறது. ஆகவே, இப்போது சென்னைப் பல்கலைக்கழத்தார் நாலாயிரப் பிரபந்த மணிப்பிரவாள உரைக்குத் தமிழில் விளக்க உரை எழுதி வெளியிட்டு வருகிறார்கள். மணிப்பிரவாள நடை தமிழ்மொழிக்கு வேண்டாத ஒன்றாகும்.

இதனால், பாகத மொழிகளைத் தமிழ்நாட்டிலே பயிலச் செய்தவர் பௌத்த ஜைனர்கள் என்பதும், அவர்கள் மூலமாகத் தமிழ்மொழியிலே சில பாகதச் சொற்கள் கலந்தன என்பதும், தமிழ் பாகத மொழிகளைக் கற்பதற்காக அவர்கள் கிரந்த எழுத்துக்களை உண்டாக்கினார்கள் என்பதும், இடைக்காலத்திலே, பிராமணீயம் ஆதிக்கம் பெற்று சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பௌத்த ஜைனரும் சமஸ்கிருதத்தில் நூல்களை இயற்றினார்கள் என்பதும், அன்றியும் அவர்கள் மணிப்பிரவாள நடையைத் தமிழில் அமைத்து மணிப்பிரவாள உரைநடை நூல்களை இயற்றினார்கள் என்பதும், இப்போது மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து விட்டதென்பதும் கூறப்பட்டன.

இந்தச் சரித்திர வரலாற்றினை அறியாதவர்கள், தமிழ் மொழி ஆராய்ச்சி செய்கிறபோது, தமிழிலே பிராகிருத மொழிச் சொற்கள் நோக்கக் கலந்திருப்பதை உணராமல், அச் சொற்கள் சமஸ்கிருத மொழி வாயிலாகக் கலந்தன என்று தவறாக முடிவுகட்டுகிறார்கள். முதலில் பௌத்த ஜைனர்கள் வழியாகப் பிராகிருத மொழிச் சொற்கள் கலந்தன; சமஸ்கிருத மொழிச் சொற்கள் கலந்தன; சமஸ்கிருத மொழிச் சொற்கள் சில பிற்காலத்தில் நுழைந்தன என்னும் சரித்திர உண்மையை மனத்திற்கொண்டு மொழியாராய்ச்சி செய்ய முற்படுவோர் உண்மையைக் காண்பார்கள். இவ்வாறு மொழியாராய்ச்சி செய்வோர், தமிழ்மொழியை நன்கு கற்றிருக்க வேண்டியதோடு பிராகிருத மொழிகளையும் சமஸ்கிருத மொழியையும் கற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உண்மை காண முடியும்.


பௌத்தமும் தமிழும்

13. தமிழில் பாலிமொழிச் சொற்கள்

வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வேவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.

தமிழில் போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, அரபி முதலிய அயல்மொழிச் சொற்கள் அண்மைக்காலத்தில் கலந்துவிட்டது போலவே, பாகத (பிராகிருத) மொழிகளில் ஒன்றான பாலி மொழியிலிருந்தும் சில சொற்கள் முற்காலத்தில் கலந்து காணப்படுகின்றன. பாலிமொழி இப்போது வழக்காறின்றி இறந்துவிட்டது. என்றாலும், பண்டைக் காலத்தில், வட இந்தியாவில் மகதம் முதலான தேசங்களில் அது வழக்காற்றில் இருந்து வந்தது. ‘தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்’ எனப் போற்றப்படும் கௌதம புத்தர், இந்தப் பாலிமொழியிலேதான் தம் உபதேசங்களை ஜனங்களுக்குப் போதித்து வந்தார் என்பர். பாலிமொழிக்கு மாகதி என்றும் வேறு பெயர் உண்டு. மகதநாட்டில் வழங்கப்பட்டதாகலின், இப் பெயர் பெற்றது போலும். வைதீக மதத்தாருக்குச் சமஸ்கிருதம் ‘தெய்வபாஷை’ யாகவும் ஆருகதருக்குச் சூரசேனி என்னும் அர்த்தமாகதி ‘தெய்வ பாஷை’ யாகவும் இருப்பது போல, பௌத்தர்களுக்கு மாகதி என்னும் பாலிமொழி ‘தெய்வபாஷை’ யாக இருந்து வருகின்றது. ஆகவே பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாம் பாலிமொழியிலே எழுதப்பட்டுவந்தன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள், பாலி மொழியைத் தள்ளி, சமஸ்கிருத மொழியில் தம் சமயநூல்களை இயற்றத் தொடங்கினார்கள். ஆனாலும், தென்இந்தியா, இலங்கை பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்றுதொட்டு இன்றுவரையில் பாலிமொழியையே தங்கள் தெய்வ மொழி’ யாகப் போற்றி வருகின்றார்கள். பௌத்தமதம், தமிழ்நாட்டில் பரவி நிலைபெற்றிருந்த காலத்தில் அந்த மதத்தின் தெய்வ பாஷையான பாலிமொழியும் தமிழ்நாட்டில் இடம் பெற்றது.

பாலிமொழி தமிழ்நாட்டில் இடம் பெற்றிருந்தது என்றால், தமிழ்நாட்டுப் பௌத்தர்கள் அந்த மொழியைப் பேசிவந்தார்கள் என்று கருதகூடாது. பாலிமொழி ஒருபோதும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பொது மக்களால் பேசப்படவில்லை. ஆனால், பௌத்தக் குருமாரான தேரர்கள் பாலிமொழியில் இயற்றப்பட்ட தம் மதநூல்களைப் படித்து வந்தார்கள். பிராமணர்கள், தம் மதவிஷயங்களை அறியத் தமது ‘தெய்வமொழி’ யான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படிப்பதும், உலக நடவடிக்கையில் தமிழ், தெலுங்கு முதலான தாய்மொழிகளைக் கையாளுவதும் போல, பௌத்தப் பிக்ஷுக்களும் தம்முடைய மதநூல்களை மட்டும் பாலிமொழியில் கற்றும், உலகவழக்கில், தமிழ்நாட்டினைப் பொறுத்தமட்டில், தமிழ் மொழியைக் கையாண்டும் வந்தார்கள். இந்தப் பிக்ஷுக்கள் பொதுமக்களுக்குப் பாலிமொழி நூலிலிருந்து மத உண்மைகளைப் போதித்தபோது, சில பாலிமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன.

இவ்வாறே அர்த்தமாகதி என்னும் வேறு பாகத மொழிச்சொற்களும், சமஸ்கிருதமொழிச் சொற்களும் ஆருகத மதத்தவராகிய ஜைனர்களாலே தமிழில் கலந்து விட்டன. ஆருகதரும் பௌத்தரும் தமிழை நன்கு கற்றவர். அதனோடு பாகத, சமஸ்கிருத மொழிகளையும் பயின்றவர். இதனை,

‘ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்

பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள்…’

என்று சமணரைப் பற்றித் திருஞான சம்பந்தர் திருவால வாய்ப் பதிகத்தில் கூறியிருப்பதினாலும் அறியலாம்.

மாகதி என்னும் பாலிமொழிச் சொற்கள் சில தமிழில் கலந்துள்ளன என்பதைத் தக்கயாகப்பரணி உரையாசிரியர் கூறியதிலிருந்தும் உணரலாம். 410 ஆம் தாழிசை உரையில், ‘ஐயை – ஆரியை. இதன் பொருள் உயர்ந்தோனென்பது. ஆரியையாவது சங்கிருதம்; அஃது ஐயையென்று பிராகிருதமாய்த் திரிந்தவாறு; மாகததென்னலுமாம்’ என்று எழுதியிருப்பதைக் காண்க. அன்றியும் 485ஆம் தாழிசையுரையில் ‘தளம் – ஏழு; இது பஞ்சமா ரூடபத்திர தளம்; இது மாகதம்’ என எழுதியிருப்பதையுங் காண்க.

தமிழ்நாட்டிலே, காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, பாண்டிநாட்டுத் தஞ்சை, மானாவூர்,துடிதபுரம், பாடலிபுரம் சாத்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பௌத்தபுரம் முதலான ஊர்களில் பாலிமொழியை நன்கறிந்திருந்த பௌத்த ஆசிரியர் பண்டைக் காலத்திருந்தனர் என்பது பௌத்த நால்களாலும் பிற நூல்களாலும் தெரிகின்றது. பாலிமொழியை நன்கு கற்றுத் தேர்ந்து, அந்த மொழியில் நூல்களை இயற்றிய தமிழ்நாட்டுப் பௌத்த ஆசிரியர்களின் வரலாற்றினைத் ‘ தமிழ்நாட்டுப் பௌத்தப்பெரியார்; என்னும் தலைப் பெயரையுடைய அதிகாரத்தில் காண்க. இது நிற்க:

தமிழில் கலந்து வழங்கும் பாலிமொழிச் சொற்கள் அனைத்தினையும் எடுத்துக்காட்ட இயலவில்லை. அவ்வாறு செய்வது, தமிழ், பாலி என்னும் இருமொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்களால் மட்டிமே இயலும். ஆயினும், பாலிமொழிச் சொற்கள் தமிழில் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. யாம் அறிந்தமட்டில் தமிழில் வழங்கும் பாலிசொற்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.

உய்யானம், ஆராமம்: பூந்தோட்டம் என்பது பொருள். பௌத்தரின் பள்ளி, விகாரை, தூபி முதலியவை இருக்கும் இடத்தைச் சேர்ந்த பூஞ்சோலைகளுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இச்சொற்கள் மணிமேகலையில் வந்துள்ளன.

சமணர்: இப் பெயர் ஜைன, பௌத்தத் துறவிகளுக்குப் பொதுப்பெயர். ஆயினும், இப்போது தமிழ்நாட்டில் ஜைன மதத்தினரை மட்டும் குறிக்கத் தவறாக வழங்கப்படுகின்றது. வடமொழியில் இது ‘ஸ்மரணர்’ என்று வழங்கப்படுகிறது. இச்சொல் தேவாரம், மணிமேகலை முதலிய நூல்களில் காணப்படுகின்றது.

சைத்தியம் சேதியம் தூபம் தூபி: இச் சொற்கள் பௌத்தர் வணங்குதற்குரிய கட்டடங்கள், ஆலயங்கள், முதலியவற்றைக் குறிக்கின்றன. ‘தூபம்’, ‘தூபி’, என்பனவற்றை ‘ஸ்தூபம்’ ‘ஸ்தூபி’ என்னும் வடமொழிச் சொற்களின் தமிழ்த் திரிபாகவும் கொள்ளலாம். ஆயினும் பாலி மொழியிலிருந்து தமிழில் வந்ததாகக் கொள்வதுதான் வரலாற்றுக்குப் பொருத்தமுடையது. இச்சொற்களை மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் காணலாம்.

தேரன், தேரி: இவை பௌத்தத்துறவிகளில் மூத்தவர்களுக்கு வழங்கும் ஆண்பால் பெண்பாற் பெயர்கள். இச்சொற்கள் மணிமேகலை, நீலகேசி, தேவாரம் முதலிய நூல்களில் வந்துள்ளன.

பிக்ஷு, பிக்ஷுணி: (பிக்கு, பிக்குணி) முறையே பௌத்த ஆண், பெண் துறவிகளைக் குறிக்கின்றன. மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் இச்சொற்கள் காணப்படுகின்றன.

விகாரை, விகாரம்: பௌத்தக் கோயிலுக்கும் பிக்ஷுக்கள் வாழும் இடத்துக்கும் பெயர்.

வேதி, வேதிகை: திண்ணை என்பது பொருள். அரசு முதலான மரங்களின் கீழ் மக்கள் தங்குவதற்காகக் கட்டப்படும் மேடைக்கும் பெயர்.

போதி: அரசமரம்.

பாடசாலை: பள்ளிக்கூடம்

விகாரை: பௌத்த பிக்குகள் வசிக்கும் கட்டடம்.

வேணு, வெளு: மூங்கில்

சீலம்: ஒழுக்கம்

அர்ஹந்தர்: பௌத்த முனிவர்.

சீவரம்: பௌத்த பிக்குகள் உடுத்தும் ஆடை

சேதியம்: கோவில்

ததாகதர்: புத்தர்

தம்மம்: தர்மம்

நிர்வாணம்: பௌத்தருடைய வீடுபேறு

சாவகர்: பௌத்தரில் இல்லறத்தார்

ஹேது: (ஏது) காரணம்

இவையன்றியும், நாவா (கப்பல்) , பக்கி (பறவை), பாடசாலை (பள்ளிக்கூடம்), நாவிகன் (கப்பலோட்டி), பதாகை (கொடி), நாயகன் (தலைவன்), தம்பூலம் (தாம்பூலம் – வெற்றிலை) முதலிய சொற்களும் பாலிமொழியிலிருந்து பௌத்தர் மூலமாகத் தமிழ்நாட்டில் வழங்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றன. பாகத, அஃதாவது பிராகிருத மொழிச் சொற்களுக்கும் சமஸ்கிருத மொழிச்சொற்களுக்கும் சிறு வேறுபாடுகள் தாம் உள்ளன. எனவே, இச்சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தனவா, பிராகிருத மொழிகளிலிருந்து வந்தனவா என்று முடிவுகட்ட இயலாது. ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், பௌத்தமதமும் சமணமதமும் முதலில் தமிழ்நாட்டில் சிறப்புற்றிருந்தன வென்பதும், பிறகுதான் வைதீகப் பார்ப்பனீயம் சிறப்புப் பெற்றதென்பதும் நன்கு விளங்கும். எனவே, பௌத்தரின் சமய மொழியாகிய மாகதி (பாலி) சமணரின் சமயமொழியாகிய அர்த்த மாகதி என்னும் இரண்டு பிராகிருத மொழிகளின் மூலமாகத்தான் திசைச்சொற்கள் தமிழில் கலந்திருக்கவெண்டும்

பாலி சிங்களம், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளைக் கற்றவரும் பௌத்தருமாகிய முதலியார் ஏ. டி. எஸ். ஜி. புஞ்சிஹேவா அவர்கள் 26-10-40 இல் எமக்கு இலங்கையிலிருந்து எழுதிய கடிதத்தில் இதுபற்றி எழுதியிருப்பதை ஈண்டுக் குறிப்பிடுவது அமைவுடையது. அவர் எழுதியது இது:-

“பாலிச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் கலந்து வழங்கி வருவதைக் காணலாம். சமனல என்னும் சிங்களச் சொல் தமிழில் சமனொளி என்பதாகவும் வழங்கி வருகின்றது. பாலிச் சொற்கள், சமஸ்கிருத மொழிச் சொற்கள் என்ற எண்ணத்துடன் வழங்குவதாகவும் காணப்படும். உச்சரிக்கையில் ஏறக்குறையச் சமமாயிருக்கும் ஒரு பொருட் சொற்கள் பாலிமொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் காணப்படுகின்றன. சமஸ்கிருதச் சொற்கள் எனப்படும் இச்சொற்கள் தமிழ்மொழியில் இருவிதமாக எழுதப்படுகின்றன. ஒருவிதம் பாலிமொழிக் கிணக்கமாகவுள்ளது; மற்றது சமஸ்கிருத மொழிக் கிணக்கமாகவுள்ளது. பாலிக்கிணக்கமுள்ள சொல் பாலி மொழியிலிருந்து வந்ததாகவும் சமஸ்கிருததுக் கிணக்கமன சொல் சமஸ்கிருத மொழியினின்று வந்ததாகவும் துணியலாம். உதாரணங்கள் பின்வருமாறு:

பாலி தமிழ் சமஸ்கிருதம் தமிழ்

அத்த (பொருள்) அத்தம் அர்த்த அருத்தம்

கய (நிறைதல்) கயம் கய கயம்

காம (ஊர்) காமம் க்ராம கிராமம்

ஸத்த (ஒலி) சத்தம் சப்த சப்தம்

தம்ம (அறம்) தன்மம் தர்ம தருமம்

தன (முலை) தனம் ஸ்தன தனம்

தல (இடம்) தலம் ஸ்தல தலம்

தான (இடம்) தானம் ஸ்தான தானம்

தோஸ (குற்றம்) தோசம் தோஷ தோடம்

விஸய (பொருள்) விசயம் விஷய விடயம்

ஸந்தோஸ (மகிழ்ச்சி) சந்தோஷ சந்தோஷம் சந்தோடம்

பக்க (நட்பு, புறம்) பக்கம் பக்ஷ பட்சம்

பவாள (பவளம்) பவளம் பரவாள பிரவாளம்

யக்க (கந்தருவன்) இயக்கன் யக்ஷ இயட்சன்

லக்கண (குறி) இலக்கணம் லக்ஷண இலட்சணம்

வண்ண (நிறம்) வண்ணம் வர்ண வருணம்

வத்து (பொருள்) வத்து வஸ்து வத்து

இக்கொள்கையை அறிஞர்கள் ஆராய்ந்து பார்ப்பார்களாக.

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

பின்னிணைப்பு

1.புத்தர் தோத்திரப் பாக்கள்

வீரசோழிய உரை, நீலகேசி உரை முதலியவற்றில் புத்தரைப்பற்றிய பாடல்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துக் கீழே தருகிறோம். அவற்றின் சொல்லழகு பொருளழகுகளைச் சுவைத்து இன்புறுக:-

1. போதி, ஆதி பாதம், ஓது!

2. போதிநிழற் புனிதன் பொலங்கழல்

ஆதி உலகிற் காண்!

3. மாதவா போதி வரதா வருளமலா

பாதமே யோது சுரரைநீ — தீதகல

மாயா நெறியளிப்பாய் வாரன் பகலாய்ச்சீர்த்

தாயா யலகிலரு டான்!

4. உடைய தானவர்

உடைய வென்றவர்

உடைய தாள்நம

சரணம் ஆகுமே!

5. பொருந்து போதியில்

இருந்த மாதவர்

திருந்து சேவடி

மருந்து ஆகுமே!

6. போதி நீழற்

சோதி பாதம்

காத லால்நின்

றோதல் நன்றே!

7. அணிதங்கு போதி வாமன்

பணிதங்கு பாதம் அல்லால்,

துணிபொன் றிலாத தேவர்

மணிதங்கு பாதம் மேவார்!

8. விண்ணவர் நாயகன் வேண்டக்

கண்ணினி தளித்த காதற்

புண்ணியன் இருந்த போதி

நண்ணிட நோய்நலி யாவே!

9. மருள்அறுத்த பெரும்போதி மாதவரைக்

கண்டிலனால்! – என்செய்கோ யான்!

அருள் இருந்த திருமொழியால் அறவழக்கங்

கேட்டிலனால்! – என்செய்கோ யான்!

பொருள்அறியும் அருந்தவத்துப் புரவலரைக்

கண்டிலனால்! – என்செய்கோ யான்!

10. தோடார் இலங்கு மலர்கோதி வண்டு

வரிபாட நீடு துணர்சேர்

வாடாத போதி நெறிநீழல் மேய

வரதன் பயந்த அறநூல்

கோடாத சீல விதமேவி வாய்மை

குணனாக நாளும் முயல்வார்

வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப

வினைசேர்தல் நாளும் இலரே!

11. தொழும்அடியர் இதயமலர் ஒருபொழுதும் பிரிவரிய

துணைவர் எனலாம்

எழும்இரவி கிரணநிகர் இலகுதுகில் புனைசெய்தருள்

இறைவர் இடமாம்

குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர

கவனும் எவரும்

தொழுதகைய இமையவரும் அறம்மருவு

துதிசெய்தெழு துடித புரமே!

12 மணியிலகு செறிதளிரொ டலர் ஒளிய

நிழல் அரசின் மருவி அறவோர்

பிணிவிரவு துயரமொடு பிறவிகெட

உரை அருளும் பெரிய அருளோன்

துணியிலகு சுடருடைய அரசரொடு

பிரமர்தொழு தலைமை யவர்மா

அணியிலகு கமலமலர் அனையஎழில்

அறிவனிணை அடிகள் தொழுவாம்!

13. எண்டிசையும் ஆகி இருள் அகலநூறி

எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி

வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து

மழைமருவு போதி உழைநிழல்கொள் வாமன்

வெண்டிரையின் மீது விரிகதிர்கள் காண

வெறிதழல்கொள் மேனி அறிவனெழில் மேவு

புண்டரிக பாதம் நமசரனம் ஆகும்

எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார்!

14. கூர் ஆர் வளைஉகிர் வாள் எயிற்றுச் செங்கட்

கொலை உழுவை காய்பசியால் கூர்ந்த வெந்நோய் நீங்க

ஓர் ஆயிரங்கதிர்போல் வாள்விரிந்த மேனி

உளம்விரும்பிச் சென்றாங் கியைந்தனை நீ என்றால்

கார் ஆர் திரைமுளைத்த செம்பவளம் மேவும்

கடிமுகிழ்த் தண்சினைய காமருபூம் போதி

ஏர்ஆர் முனிவரர்கள் வானவர்தங் கோவே!

எந்தாய்! அகோ! நின்னை ஏத்தாதார் யாரே!

15. மிக்கதனங் களைமாரி மூன்றும் செய்யும்

வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி

ஒக்கஅரிந் தொருகூற்றை இரண்டு கண்ணை

ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை

எக்கிவிழுங் குருதிதனை அரசு தன்னை

இன்னுயிர்போல் தேவியைஈன் றெடுத்த செல்வ

மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்

வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே!

16. வான் ஆடும் பரியாயும் அரிண மாயும்

வனக்கேழற் களிறாயும் எண்காற் புள்மான்

தானாயும் பணை எருமை ஒருத்த லாயும்

தடக்கை இளங் களிறாயும் சடங்க மாயும்

மீனாயும் முயலாயும் அன்ன மாயும்

மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க

மானாயும் கொலைகளவு கள்பொய் காமம்

வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே!

(சடங்கம் – ஊர்க்குருவி)

17. பைங்கண்வாள் எயிற்றினைப் பகட்டெருத்தின் வள்உகிர்ப்

பரூஉத்திரட் குரூஉக்கொடாட் பாலுடைச் சேனாவுடைச்

சிங்கஏறு நான்குதாங்க மீதுயர்ந்த சேயொளிச்

சித்திரங் குயிற்றிநூறு செம்பொனாசனத்தின்மேல்

கொங்குநாறு போதுசிந்தி வானுளோர் இறைஞ்சிடக்

கோதிலா அறம்பகர்ந் தமர்ந்தகோன் குளிர்நிழற்

பொங்குதாது கொப்புளித்து வண்டுபாடு தேமலர்ப்

போதிஎம் பிரான் அடிக்கண் போற்றின்வீட தாகுமே!

18. வீடுகொண்ட நல்அறம் பகர்ந்துமன் பதைக்கெலாம்

விளங்குதிங்கள் நீர்மையால் விரிந்திலங்கும் அன்பினோன்

மோடுகொண்ட வெண்நுரைக் கருங்கடற் செழுஞ்சுடர்

முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியின்

ஆடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமான

ஐந்தொடங்கோர் மூன்றறுத்த நாதனாள் மலர்த்துணர்ப்

பீடுகொண்ட வார்தளிப் பிறங்கு போதி யானைஎம்

பிரானை நாளும் ஏத்துவார் பிறப்பிறப் பிலார்களே!

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

19. திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக

உருமேவி அவதரித்த உயிர் அனைத்தும் உயக்கொள்வான்

இவ்வுலகும் கீழுலகும் மிசையுலகும் இருள்நீங்க

எவ்வுலகும் தொழுதேத்த எழுந்தசெழுஞ் சுடர்என்ன

விலங்குகதிர் ஓர் இரண்டு விளங்கிவலங் கொண்டுலவ

அலங்குசினைப் போதிநிழல் அறம்அமர்ந்த பெரியோய் நீ!

(தாழிசை)

மேருகிரி இரண்டாகும் எனப்பணைத்த இருபுயங்கள்

மாரவனி தையர்வேட்டும் மன்னுபுரம் மறுத்தனையே!

‘வேண்டினர்க்கு வேண்டினவே அளிப்பனெ’ன மேலைநாள்

பூண்டஅரு ளாள! நின் புகழ்புதிதாய்க் காட்டாதோ!

உலகமிக மனந்தளர்வுற் றுயர்நெறியோர் நெறி அழுங்கப்

புலவுநசைப் பெருஞ்சினத்துப் புலிக்குடம்பு கொடுத்தனையே!

பூதலத்துள் எவ்வுயிர்க்கும் பொதுவாய் திருமேனி

மாதவன் நீ என்பதற்கோர் மறுதலையாய்க் காட்டாதோ

கழல் அடைந்த உலகனைத்தும் ஆயிரம்வாய்க் கடும்பாந்தள்

அழல் அடைந்த பணத்திடை இட்டன்றுதலை ஏறினையே!

மருள் பாரா வதம் ஒன்றே வாழ்விக்கக் கருதியநின்

அருள்பாரா வதஉயிர்கள் அனைத்திற்கும் ஒன்றாமோ!

(அராகம்)

அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை

எரிசுடர் மறைமலர் எனவிடும் அடியினை!

அகலிடம் முழுவதும் அழல்கெட அமிழ் துமிழ்

முகில்புரி இமிழ்இசை நிகர் தரும் மொழியினை!

(ஈரடி அம்போதரங்கம்)

அன்பென்கோ! ஒப்புரவென்கோ! ஒருவன் அயில்கொண்டு

முந்திவிழித் தெரியப்பால் பொழிந்தமுழுக் கருணையை!

நாணென்கோ! நாகமென்கோ! நன்றில்லான் பூணுந்

தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை!

(ஓரடி அம்போதரங்கம்)

கைந்நாகத் தார்க்காழி கைக்கொண் டளித்தனையே!

பைந்நாகர் குலம் உய்ய வாய்அமிழ்தம் பகர்ந்தனையே!

இரந்தேற்ற படைஅரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே!

பரந்தேற்ற மற்றவர்க்குப் படருநெறி மொழிந்தனையே!

(தணிச்சொல்)

எனவாங்கு.

(சுரிதகம்)

அருள்வீற் றிருந்த திருநிழற் போதி

முழுதுணர் முனிவ! நிற் பரவுதும் தொழுதக

ஒருமனம் எய்தி இருவினைப் பிணிவிட்டு

முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்

தோங்குநீர் உலகிடை யாவரும்

நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே!

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

மண்வாழும் பல்லுயிரும் வானவரும் இமைவரும்

கண்வாழும் மாநகர் கிளை அனைத்தும் களிகூர

அந்தரதுந் துபிஇயங்க அமரர்கள் நடம்ஆட

இந்திரர்பூ மழைபொழிய இமைவர்சா மரையிரட்ட

முத்தநெடுங் குடைநிழற்கீழ் மூரியர சரியணைமேல்

மெய்த்தவர்கள் போற்றிசைப்ப வீற்றிருந்த ஒரு பெரியோய்!

(தாழிசை)

எறும்புகடை அயன்முதலா எண்ணிறந்த என்றுரைக்கப்

பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி

எவ்வுடம்பில் எவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின்

அவ்வுடம்பின் உயிர்க்குயிராய் அருள்பொழியும் திருவுள்ளம்

அறங்கூறும் உலகனைத்தும் குளிர்வளர்க்கும் மழை முழக்கின்

திறங்கூற வரைகதிரும் செழுங்ககலம் நனிநாண

ஒருமைக்கண் ஈர்ஒன்பான் உரைவிரிப்ப உணர்பொருளால்

அருமைக்கண் மலைவின்றி அடைந்ததுநின் திருவார்த்தை!

இருட்பார வினைநீக்கி எவ்வுயிர்க்கும் காவலென

அருட்பாரம் தனிசுமந்த அன்றுமுதல் இன்றளவும்

மதுஒன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும்

பொதுஅன்றி நினக்குரித்தோ புண்ணிய! நின் திருமேனி!

(பேரெண்)

ஆருயிர்கள் அனைத்தினையும் காப்பதற்கே அருள் பூண்டாய்!

ஓருயிர்க்கே உடம்பளித்தால் ஒப்புரவிங் கென்னாகும்!

தாமநறுங் குழல்மழைக்கண் தளிரியலார் தம்முன்னர்க்

காமனையே முனந்தொலைத்தால் கண்ணோட்டம் யாதாங்கொல்!

(சிற்றெண்)

போர் அரக்கர் ஓர்ஐவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே!

ஆர் அமிழ்தம் மணிநாகர் குலம் உய்ய அருளினையே!

வார்சிறைப்புள் அரையர்க்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே!

பார்மிசை ஈரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே!

(இடையெண்)

அருளாழி நயந்தோய் நீஇ!

அறவாழி பயந்தோய் நீஇ!

மருளாழி துறந்தோய் நீஇ!

மறையாழி புரந்தோய் நீஇ!

மாதவரில் மாதவன் நீஇ!

வானவருள் வானவன் நீஇ!

போதனரிற் போதனன் நீஇ!

புண்ணியருட் புண்ணியன் நீஇ!

(அலவெண்)

ஆதி நீஇ! அமலன் நீஇ!

அயனும் நீ! அரியும் நீஇ!

சோதி நீஇ! நாதன் நீஇ!

துறைவன் நீஇ! இறைவன் நீஇ!

அருளும் நீஇ! பொருளும் நீஇ!

அறிவன் நீஇ!அநகன் நீஇ!

தெருளும் நீஇ! திருவும் நீஇ!

செறிவும் நீஇ! செம்மல் நீஇ!

(தனிச்சொல்)

எனவாங்கு.

(சுரிதகம்)

பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப்

பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும்

போதியந் திருநிழற் புனித! நிற் பரவுதும்

மேதகு நந்தி புரிமன்னர் சுந்தரச்

சோழர் வண்மையும் வனப்புந்

திண்மையும் உலகில் சிறந்துவாழ் கெனவே!

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

பூமகனே முதலாகப் புரந்தோர் எண்திசையும்

தூமலரால் அடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள்

காமமுங் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்

தீமைசால் கட்டுரைக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த

நாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்

சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே!

(தாழிசை)

தானமே முதலாகத் தசபாரம் நிறைந்தருளி

ஊனமொன் றில்லாமை ஒழிவின்றி இயற்றினையே!

எண்பத்தொன் பதுசித்தி இயல்பினால் உளஎன்று

பண்பொத்த நுண்பொருளைப் பார்அறியப் பகர்ந்தனையே!

துப்பியன்ற குணத்தோடு தொழில்களால் வேறுபட

முப்பதன்மேல் இரண்டுகளை முறைமையால் மொழிந்தனையே!

(அராகம்)

ஆதியும் இடையினோ டிறுதியும்அறிகுவ

தமரரும் முனிவரும் அரிதுநின் நிலைமையை!

மீதியல் கருடனை விடஅர வொடுபகை

விதிமுறை கெடஅறம் வெளியுற அருளினை!

தீதியல் புலியது பசிகெடு வகைநின

திருஉரு அருளிய திறமலி பெருமையை!

போதியின் நலமலி திருநிழ லதுநனி

பொலிவுற அடியவர் இடர்கெட அருளினை!

(பேரெண்)

திசைமுகன் மருவிய கமலநல் நிறமென

வசைஅறு முனிவொடு மலியும் நின்அடி!

உயர்வுறு பெருமையோ டயரறு மயர்வொடு

புரைஅறு நலனொடு பொலியும் நின்புகழ்!

(சிற்றெண்)

கற்புடை மாரனைக் காய்சினந் தவிர்த்தனை!

பொற்புடை நாகர்தந் துயரம் போக்கினை!

மீனுரு ஆகி மெய்ம்மையிற் படிந்தனை!

மானுரு ஆகி வான்குணம் இயற்றினை!

(இடையெண்)

எண்ணிறந்த குணத்தோய் நீஇ!

யாவர்க்கும் அரியோய் நீஇ!

உண்ணிறைந்த அருளோய் நீஇ!

உயர்பார நிறைந்தோய் நீஇ!

மெய்ப்பொருளை அறிந்தோய் நீஇ!

மெய்யறம்இங் களித்தோய் நீஇ!

செப்பரிய தவத்தோய் நீஇ!

சேர்வார்க்குச் சார்வு நீஇ!

(அளவெண்)

நன்மை நீஇ! தின்மை நீஇ!

நனவும் நீஇ! கனவும் நீஇ!

வன்மை நீஇ! மென்மை நீஇ!

மதியும் நீஇ! விதியும் நீஇ!

இம்மை நீஇ! மறுமை நீஇ!

இரவும் நீஇ! பகலும் நீஇ!

செம்மை நீஇ! கருமை நீஇ!

சேர்வும் நீஇ! சார்வும் நீஇ!

(தனிச்சொல்)

எனவாங்கு.

(சுரிதகம்)

அலகிலா நின்றன் அடிஇணை பரவுதும்

வெல்படைத் தொண்டைமான் விறற்சேனாபதி

சிங்களத் தரையன் வெண்குடை யதனொடு

பொங்குபுகழ் வில்லவன்றன் புறக்கொடை கண்டு

பொலிதரு சேந்தன் பொன்பற்றி காவலன்

மலிதரு பார்மிசை மன்னுவோன் எனவே.

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

பின்னிணைப்பு

2. சாத்தனார் – ஐயனார்

‘சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அஃதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிகின்றது. பௌத்த நூலாகிய ‘மணிமேகலை’ யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் ‘சாத்தனார்’ என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. மற்றும், ‘பெருந்தலைச் சாத்தனார்’, ‘மோசி சாத்தனார்’ , ‘வடவண்ணக்கன் பெருஞ் சாத்தனார்’, ‘ஒக்கூர்மாசாத்தனார்’, ‘கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்’ முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக் கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த ‘சாத்தன்’ என்னும் பெயரைக் கொண்டு கருதலாம்.

கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் ‘சாஸ்தாவு குடி’ என்றும், ‘சாஸ்தா வேஸுவரம்’ என்றும், ‘சாஸ்த்தாவுகள’ என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்தமதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுவது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் ‘சாத்தன் காவுகள்’ என்று பெயர். (காவு-கா- தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்.) பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு ‘ஆராமம்’ (பூந்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தவை, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு ‘ஐயப்பன்’ என்னும் பெயரும் மாலையாள தேசத்தில் வழங்கிவருகின்றது. காவிரிப்பூம் பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. ‘சாஸ்தா’ அல்லது ;சாத்தன்’ என்னும் வடசொல்லிற்கு நேரான தமிழ்சொல் ‘ஐயன்’ அல்லது ‘ஐயனார்’ என்பது. ‘ஐயன்’ என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம் மதக்கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்துமதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனராரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகக் சேர்த்துக்கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.

‘பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்

சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்

கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதய நல்ல

தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்ரனாரே.’

என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.

பிற்காலத்தில், ‘சாத்தனார்’,’ஐயனார்’,’அரிஹரபுத்திரர்’ என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாய்ச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.

‘சாத்தன்’ அல்லது ‘சாஸ்தா’ என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப்பற்றியதாகும். சிலப்பதிகாரம், கனாத்திறமுரைத்த காதையில், ‘பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு’ என வரும் அடியில், ‘பாசண்டச் சாத்தன்’ என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு: “பாசண்டம் தொண்ணூற் றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை; இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின், ‘மகாசாத்திர’ னென்பது அவனுக்குப் பெயராயிற்று.” இவர் கூறும் உரைக் கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, ‘சூடாமணி நிகண்டும்,’

‘அண்ணலே மாயா தேவி சுதன்அக ளங்க மூர்த்தி

தண்ணிய கலைகட் கெல்லாம் நாதன்முக் குற்ற மில்லோன்’

என்று கூறுகின்றது. ‘அருங்கலை நாயகன்’ என்று திவாகரம் கூறுகின்றது. நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ‘ஸ்வஸ்தீ ஸ்ரீஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்’, என்று எழுதியிருப்பது காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் ‘சாஸ்தா’ அல்லது ‘மகா சாஸ்தா’ என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். ‘லலிதாவிஸ்தார’ என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண்கூடான சான்று யாதெனில், காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் இருந்த புத்தர் உருவச்சிலைக்குச் ‘சாஸ்தா’ என்னும் பெயர் உள்ளதுதான். இச்சாஸ்தாவைப்பற்றிக் ‘காமாட்சி லீலாப்பிரபாவம்’ என்னும் காமாக்ஷி விலாசத்தில், ‘காமக் கோட்டப்பிரபாவத்தில்,’ ‘தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து(முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம், காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. ‘சாஸ்தா’ என்பவரும் ‘புத்தர்’ என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருந்த சாத்தன் (புத்தன்) உருவத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கோபி நாதராயர் அவர்கள் கண்டுபிடித்து அதைப் படம்பிடித்து வெளியிட்டார்கள். (Indian Antiquary Vol. XLIV) அந்த உருவத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சிக்காம கோட்டத்தில் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அது சுமார் ஐந்தடி உயரமுள்ள கருங்கற் சிலையுருவம். புத்தர் பெருமான் நின்ற வண்ணம் உபதேசம் செய்வதுபோல அமைந்துள்ளது. இந்தச் சாஸ்தாவின் (புத்தரின்) கையிலிருந்து பெற்ற செண்டு என்னும் ஆயுதத்தினால் கரிகாலன் என்னும் சோழ அரசன் மேருமலையை அடித்தான் என்று ஒரு கதையுண்டு.

“கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்

மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் – கைச்செண்டு

கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்

செம்பொற் கிரிதிரித்த செண்டு”

என்னும் பழைய செய்யுள் இதனைக் கூறுகிறது. இச்செய்யுள் அடியார்க்கு நல்லாரால் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டப்பட்டது. இவ்வளவு புகழ்வாய்ந்த காமகோட்டத்துப் புத்தர் உருவச்சிலையை, இப்போது சென்னை அரசாங்க பொருட்காட்சிச் சாலையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, அஃது இருந்த இடத்தில் ஐயப்பன் உருவத்தைப் புத்தம்புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த உருவம், இரண்டு கைகளையும் கால் முட்டியின் மேல் தாங்கி உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது. மலையாளத்திலுள்ள சாத்தன் காவுகளிலிருந்து புத்த விக்கிரங்களும் எடுக்கப்பட்டு இது போன்ற ஐயனார் உருவங்களை வைத்தார்கள் போலும்.

‘சாஸ்தா’ என்னும் புத்தருடைய கோயில்களை ‘ஐயனார் கோயில்கள்’ என்றும், ‘சாதவாகனன் கோயில்கள்’ என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச்செய்துவிட்டது போலவே ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாக தெரிகிறது, சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், ‘தலைவெட்டிய முனீஸ்வரன்’ கோயில் என ஒன்று உண்டென்றும், அக் கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்போது காணப்படும் ‘தருமராஜா கோயில்கள்’ என்பனவும் பண்டொரு காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. ‘தருமன்’ அல்லது ‘தருமராசன்’ என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று. பிங்கல நிகண்டில் ‘தருமன்’ என்றும் திவாகரத்திலும் நாமலிங்கானு சாசனத்திலும் ‘தர்மராஜன்’ என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்த கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில் பௌத்தர் போற்றும் ‘போதி’ என்னும் அரசமரங்கள் இன்றைக்கும் காணப்படுவது தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் ‘தரும ராஜா’, அல்லது ‘தருமதாகூர்’ என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே. தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று கருதப்படும்.

இவ்வாறே, தாராதேவி, மங்கலதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது, ‘தருமராஜா’ என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, ‘தாராதேவி’ என்னும் பௌத்த அம்மன் கொயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதியின் கோயிலாக்கப்பட்டது,

சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் ‘வரதராசர் கோயில்;. ‘திருவரங்கர் கோயில்’,’வேங்கடேசர் கோயில்’ முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் ‘கபாலீஸ்வரர் கோயில்’, ‘தியாகராசர் கோயில்’,’சொக்கலிங்கர் கோயில்’ முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் ‘தருமராஜா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’,’முனீஸ்வரர் கோயில்’ என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டு வந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது அதை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராமதேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகிறது.


பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

பின்னிணைப்பு

3. பௌத்தமதத் தெய்வங்கள்

1. கடற்காவல் தெய்வம் மணிமேகலை

பௌத்தமதத்தின் உயர்ந்த தெய்வம் புத்தர் பெருமான். புத்தர் பரிநிர்வாணம் அடைந்தபிறகு அவருடைய உடம்பைக் கொளுத்தி அதில் எஞ்சிய எலும்பு சாம்பல் ஆகிய இவற்றை எட்டுப் பங்காகப் பங்கிட்டு ஒவ்வொரு பங்கையும் ஒவ்வோர் ஊரில் கொண்டுபோய்ப் புதைத்து அதன்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். புத்தருடைய தலைமயிர், நகம், பல் முதலிய தாதுக்களையும் சேமித்து அவற்றின்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். இவற்றிற்குச் சாரீரிக சைத்தியம் என்பது பெயர். சேதியம் எனினும் சைத்தியம் எனினும் ஒன்றே.

புத்தர் பெருமான் உபயோகித்துவந்த கைத்தடி, ஆடை, பாத்திரம், மிதியடி முதலிய பொருள்களையும் சேமித்து வைத்து, அவரின் நினைவுக்குறியாக அவற்றை வணங்கினார்கள். இவற்றிற்குப் பாரிபோக சைத்தியம் என்பது பெயர். புத்தகயாவில் புத்தர் போதிஞானம் பெற்ற அரசமரம் இன்றும் வணங்கப்படுகிறது. இந்த அரசமரமும் பாரிபோக சைத்தியமாகும்.

பகவன் புத்தர் காலமான பிறகு சில நூற்றாண்டு வரையில் அவருக்கு உருவம் அமைக்கப்படவில்லை. ஆனால், தரும பீடிகை, பாதபீடிகை ஆகிய உருவங்கள் மட்டும் பௌத்தர்களால் வணங்கப்பட்டன. தருமபீடிகை என்பது சக்கரம் போன்ற உருவமாக அமைக்கப்பட்டது. பாதபீடிகை என்பது புத்தரின் பாதங்கள் போன்று உருவம் அமைத்து வணங்கப்பட்டது.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு புத்தரின் உருவங்கள் கல், கதை, செம்பு முதலிய பொருள்களால் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டன. இவ்வுருவங்களுக்கு உத்தேசிக சைத்தியம் என்பது பெயர்.

பௌத்தர்கள் புத்தரின் உருவங்களை வணங்கி வந்ததோடு, வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி வந்தார்கள். அந்தத் தெய்வங்களைப்பற்றி கூறுவோம்.

சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப் பற்றித் ‘தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்’ என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.

இந்த மணிமேகலையைக் கதைத் தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச் சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் ‘மணிமேகலை’ என்பது பெயர். இந்த நூலினைப் பற்றித் ‘ தமிழ்ப் பௌத்த நூல்கள்’ என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.

இங்கு ‘மணிமேகலை’ என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி ஆராய்வோம். இந்தத் தெய்வம் ‘சமுத்திர மணிமேகலை’ என்றும் கூறப்படும். ‘முது மணிமேகலை’ என்றும் கூறுவர். இது பௌத்தர்களுக்குரிய சிறு தெய்வங்களில் ஒன்று. இதன் வரலாறு வருமாறு:

பௌத்தர்களுக்குரிய ஆறு தெய்வலோகங்களுள் ‘மகாராஜிக லோகம்’ என்பது ஒன்று. இந்த உலகத்தின் குணதிசையைத் ‘திருதராட்டிரர்’ என்பவரும், குடதிசையை ‘விருபாக்ஷர்’ என்பவரும், வடதிசையைத் ‘வைசிரவணர்’ என்பவரும் ஆட்சி செய்து வருகின்றார்கள். இவர்களுக்குச் ‘சாதுர் மகராஜிகர்’ என்பது பெயர். துடிதலோகத்தில் வீற்றிருக்கும் போதிசத்துவர் மாயாதேவியின் திருவயிற்றில் கருத்தரித்து மண்ணுலகிற் பிறந்து வாழ்ந்து இறுதியில் பரிநிர்வாணம் அடைகின்றவரையில், அவருக்கு யாதோர் இடையூறும் நேரிடாவண்ணம் காப்பதாக மேற்சொன்ன நான்கு தெய்வ அரசர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அன்றியும், பௌத்த தர்மத்தைப் பின்பற்றி யொழுகும் நல்லோர்க்கும், பெற்றோர், ஆசிரியர் முதலியவரை வழிபட்டொழுகும் சீரியோர்க்கும் யாதேனும் இடையூறு நேரிடுமாயின், அவற்றினின்று அன்னவரைக் காப்பாற்றவும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இவ்வாறு கடமை ஏற்றுக்கொண்ட இவர்கள் மண்ணுலகில் ஆங்காங்க்கே சிறு தெய்வங்களை இருக்கச் செய்து, நல்லோருக்கு நேரிடும் துன்பத்தைத் தீர்க்கும்படி அச் சிறு தெய்வங்களுக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு இருத்தப்பட்ட தெய்வங்களில் மணிமேகலையும் ஒன்று. கடலில் கப்பல் யாத்திரை செய்யும் நல்லோருக்கு இடுக்கண் நேரிடுமாயின், அன்னவரின் துயர்தீர்த்து உதவிசெய்வது மணிமேகலைத் தெய்வத்தின் பொறுப்புவாய்ந்த கடமையாகும்.

இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட மணிமேகலை, தனது கடமையைச் செய்துவருவதாகப் பௌத்தர்கள் கருதுகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் உடைந்து நீரில் மூழ்கி இறக்குந் தறுவாயிலிருந்த நல்லோரை இந்தத் தெய்வம் காப்பாற்றிய செய்திகள் பௌத்த நூல்களில் கூறப்பட்டுள்ளன. மிகப் பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்தஜாதகக் கதைகளில் இரண்டு இடங்களில் இத்தெய்வத்தைப் பற்றிய வரலாறு கூறப்படுகின்றது. அவற்றின் சுருக்கமான வரலாற்றினைக் கீழே தருகின்றோம்.

சங்கஜாதகம்: ‘மோலினி’ என்னும் பெயருடைய காசிமா நகரத்தில் சங்கன் என்னும் அந்தணன் செல்வத்திற் சிறந்தவன். இவன் காசிநகரத்தின் நான்கு கோட்டை வாயிலிலும், நகரத்தின் நடுவிலும் தனது இல்லத்திலும் ஆக ஆறு அறச்சாலைகள் அமைத்து நாள்தோறும் அறவினையை முட்டின்றிச் செய்துவந்தான். ஒருநாள் இவன் ‘குன்றத்தனை செல்வமும் ஒரு காலத்தில் குன்றும். அக்காலத்து அறம் செய்யப் பொருள் முட்டுப்படுவதற்கு முன்னரே யான் மேன்மேலும் பொருள் ஈட்டுவேன்’ என்று சிந்தித்துத் தேர்ந்து மனைவியை அழைத்து அவளுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து, ‘யான் திரும்பிவருமளவும் நான் செய்துவரும் இவ்வறச்சாலைகளைச் செவ்வனே நடத்திக் கொண்டிரு’ என்று கட்டளையிட்டு, சொர்ணபூமி என்னும் பர்மா தேசத்திற்குச் செல்லப் புறப்பட்டான். ஏவலாளர் தன் பின்னர் வர, இவன் காலில் செருப்பணிந்து, குடைபிடித்துச் செல்லும்போது, நண்பகல் ஆயிற்று. அப்போது கந்தமாதன மலையில் வீற்றிருந்த பாச்சகபுத்தர் என்னும் போதிசத்வர் இந்தச் சங்கன் என்னும் அந்தணன் போவதையறிந்து, ஒரு மனிதனாக உருக்கொண்டு, அனல்வீசும் மணல்வழியே செருப்பும் குடையுமின்றி இவன் எதிரில் தோன்றினார். ஓர் ஆள் வெயிலில் வாட்டமுற்று வருந்தி வருவதைக் கண்ட சங்கன்,அந்த வழிப்போக்கனை அருகில் அழைத்து, ஒரு மரநிழலில் அமரச்செய்து, காலை நீர்கொண்டு கழுவி, தான் அணிந்திருந்த செருப்பைத் துடைத்து எண்ணெயிட்டு அவருக்குக் கொடுத்ததுமின்றி, தன் குடையினையும் கொடுத்துதவினான். இவற்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஆள் தமது உண்மை உருவத்தோடு வானத்தில் பறந்து தம் இருப்பிடம் சேர்ந்தார்.

பிறகு சங்கன் துறைமுகம் அடைந்து, கப்பலேறிக் கடல்யாத்திரை புறப்பட்டான். கப்பல் கடலில் ஏழு நாள்கள் சென்றன. ஏழுநாள்களுக்குப் பின்னர், புயலடித்துக் கப்பல் பாறைமேல் மோதி உடைந்துவிட, பிரயாணிகள் மூழ்கி இறந்தனர். சங்கனும் அவன் வேலையாள் ஒருவனும் உயிருடன் கடலைக் கையினால் நீந்திக் கொண்டிருந்தனர். ஏழுநாள் வரையில் இவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது கடற்தெய்வமாகிய மணிமேகலை அங்குவந்து சங்கன் கண்களுக்கு மட்டும் தோன்றி, தங்கத்தட்டில் அமிர்தம் போன்ற அறுசுவை உணவை அவனுக்குக் கொடுத்தது. அதனைச் சங்கன் மறுத்து ‘இன்று உபவாசநாள்; ஆகையால், இன்று நான் உணவு உட்கொள்ளேன்.’ என்றான். சங்கன் தனக்குள் ஏதோ உளறுகிறான் என்று அவனுடன் நீந்திக் கொண்டிருந்த வேலையாள் கருதி, ‘ஐயா, என்ன பிதற்றுகின்றீர்?’ என்றான். சங்கன், ‘நான் பிதற்றவில்லை; என் கண்முன் நிற்கும் பெண்முன் பேசுகிறேன்’ என்றான். ஏவலாளன், ‘அங்ஙனமாயின் அவள் மண்ணுலக மங்கையா, தெய்வலோகத் தெய்வமா என்பதைக் கேளும் அன்றியும் இப்போது இந்தத் துன்பத்தினின்றும் காப்பாற்ற உதவி செய்ய முடியுமா என்றும் கேளும்’ என்றான். சங்கன் மணிமேகலையை இக்கேள்விகளைக் கேட்க, அவள், ‘நான் இக்கடலில் வாழ்கின்ற தெய்வம். நீ செய்த நற்செயலுக்காக உன்னைக் காப்பாற்ற வேண்டுவது எனது கடமையாதலால் நான் இவ்விடம் வந்தேன். நீ இப்பொது எங்குச் செல்ல விரும்புகின்றாய்?’ என்று கேட்க, அவன் ‘எனது காசிமாநகரம் செல்லவேண்டும்’ என்று சொன்னான். உடனே மணிமேகலை தனது தெய்வ ஆற்றலினால் பெரிய கப்பல் ஒன்றினைச் செய்தது. அது நிறைய விலையுயர்ந்த பண்டங்களை அமைத்துச் சங்கனையும் அவனது ஏவலாளையும் அதில் ஏற்றி, தானே கப்பலைச் செலுத்திக் காசிமாநகரம் கொண்டு போய்விட்டது.

‘மகாஜனக ஜாதகம்’ என்னும் கதையிலும் இந்தத் தெய்வம் உதவி செய்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் பின்வருவது:

மிதிலை தேசத்து அரசன் ஜனகன் என்பவனுக்கு அரிட்டஜனகன், பொலஜனகன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் இறந்த பின்னர், மூத்தவனான அரிட்டஜனகன் அரசனானான். இப்போது இளையவனான பொலஜனகன் தமையன் மேல் பகைகொண்டு, படை திரட்டி வந்து சண்டை செய்தான். சண்டையில் அரிட்டஜனகன் இறக்க, அவன் தம்பி அரசனானான். இறந்த அரிட்டஜனகனின் மனைவி, அப்போது வயிறு வாய்த்திருந்தவள், பெருஞ் செல்வத்தை எடுத்துக்கொண்டு, ஒருவருமறியாமல் சண்பை நகரம் சென்று, அங்கு ஓர் ஆண்மகவைப் பெற்றாள். அக்குழந்தைக்கு மகாஜனகன் என்று பெயர் இடப்பட்டது. குழந்தையாகிய மகாஜனகன் பெரியவனாக வளர்ந்தபிறகு, தன் சிற்றப்பன் தனது நாட்டைக் கவர்ந்து ஆள்கிறான் என்பதறிந்து, தன் நாட்டை மீட்கக் கருதி, அதன் பொருட்டுச் செல்வம் தேட உறுதி கொண்டான். இக்கருத்தைத் தன் தாய்க்குத் தெரிவித்து, அவள் உத்தரவு பெற்றுக் கப்பல் ஏறிச் சுவர்ண பூமிக்குப் புறப்பட்டான். இடைவழியில் நடுக்கடலில் புயலடித்துக் கப்பல் உடைந்துவிட, மற்றவர் மூழ்கி இறந்தனர். மகாஜனகன் முயற்சியை விடாமல் கையினால் கடலை நீந்திக் கொண்டிருந்தான். ஏழாம் நாள், மணிமேகலை அவன் முன்தோன்றி ‘இப்பெரிய கடலைக் கையினால் நீந்திக் கடக்க முடியுமா?’ என்று கேட்க, ‘கரை சேர்வது கூடுமா கூடாதா என்பது பற்றி கவலையில்லை; ஆனால் முயற்சி செய்ய வேண்டுவது என் கடமையல்லவா?’ என்று விடையிறுத்தான். இவனது ஊக்கத்தை மெச்சிய மணிமேகலை, இவன் செய்துள்ள நற்கருமங்களுக்காக இவனது இடுக்கணைத் தீர்க்கக் கருதி, தான் யார் என்பதை அவனுக்குத் தெரிவித்து, அவன் போக நினைத்த இடம் யாது எனக் கேட்டது. மகாஜனகன் தான் மிதிலை நகரஞ் செல்ல விரும்புவதாகச் சொல்ல, மணிமேகலை, தாய் குழந்தையைத் தூக்குவது போல, அவனை இரு கையாலும் தூக்கிக் கொண்டு வானத்தில் எழுந்து பறந்து சென்று, மிதிலை நகரத்து மாஞ்சோலையில் விட்டுவிட்டுச் சென்றது.

இதற்குள் மிதிலை நகரத்தை ஆண்ட பொலஜனகன் இறந்துவிட, அவனின் ஒரே மகளாகிய ‘சீவாலி தேவி’ என்பவளை மகாஜனகன் மணந்துகொண்டு அரசனானான். அவளை மணப்பதற்குமுன், ஆயிரம் வீரராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்தல் முதலியவற்றைச் செய்தான். பிறகு இவன் தன் பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றான்.

பௌத்தக் கதைகள் அடங்கிய இரசவாகிளி என்னும் நூலிலும் ‘பலக கண்டதின்னஸ்ஸ வத்து’ என்னும் துண்டுப் பலகை கொடுத்தவன் கதையில், மணிமேகலை கடலில் ஒருவனைக் காப்பாற்றிய செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் இது:

வறட்சிமிக்க வேனிற் காலத்தில், தென்னாட்டினின்றும் வடநாட்டிற்கு யாத்திரை சென்ற ஒருவன், நீர் வேட்கை கொண்டு எங்கும் நீர் கிடைக்காமல் வருந்தி, ஒரு மரநிழலில் அமர்ந்து, தன்னிடமிருந்த இரண்டு வெற்றிலைகளையாவது மென்று சாற்றினை விழுங்கி, வேட்கை தீர்க்கலாம் என்று எண்ணினான். அவ்வமயம் அவனைப் போலவே வடநாட்டினின்று தென்னாட்டிற்கு யாத்திரை வரும் ஒருவன், நீர் வேட்கை மிக்கவனாய், பருக நீர் கிடைக்காமல் வருந்தி, அதே மரத்தடியில் வந்து அமர்ந்தான். வந்தவன் முன்னவனைப்பார்த்து, ‘ஐயா, எனது நீர் வேட்கை தீர ஒரு வெற்றிலையாவது கொடும்,’ என்று இரந்து வேண்டினான். அதற்கு அவன், ‘எனக்கும் நீர் வேட்கை மிகுதியாயிருக்கின்றது. என்னிடமுள்ளது இரண்டு வெற்றிலைகளே; ஒன்றை உமக்குக் கொடுத்துவிட்டு யான் என்ன செய்வது?’ என்று சொல்லி மறுத்தான். பின்னவன், ‘என்னிடம் காசு இருக்கிறது; தருகிறேன்; ஒரு வெற்றிலை தாரும்’ என்று கேட்க, அதற்கும் அவன் மறுத்தான். பின்னர், பெருந்தொகை கொடுப்பதாகச் சொன்னபோது, அவன் அப்பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு வெற்றிலையைக் கொடுத்தான். இருவரும் ஒவ்வொரு வெற்றிலையை மென்று ஒருவாறு நீர்வேட்கையைத் தீர்த்துக் கொண்டனர்.

பின்னர், இருவரும் புறப்பட்டு வெவ்வேறு வழியே சென்று, கடைசியாக ஒரு துறைமுகத்தை அடைந்து, மரக்கலம் ஏறிக் கப்பல் யாத்திரை புறப்பட்டனர். ஆனால், அக்கப்பலில் இருவரும் ஒருங்கே யாத்திரை செய்வது அவர்களுக்குத் தெரியாது. சில நாள் சென்றபின், நடுக்கடலில் புயல் அடிக்க, மரக்கலம் உடைந்துவிட்டது. கப்பல் யாத்திரிகரில் சிலர் மூழ்கி இறந்தனர். சிலர் தம் உயிரைக் காக்கக் கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு நீந்தியவர்களில் வெற்றிலையைப் பெரும் பொருள் கொடுத்து வாங்கியவன் ஒரு மரப்பலகையைப் பற்றிக்கொண்டு அதன் உதவியினால் நீந்திக் கொண்டிருந்தான். வெற்றிலையை விற்றவனோ யாதொரு பற்றுக்கோடுமின்றி அப்பெருங்கடலினைத் தன் வெறுங்கைகளால் நீந்தித் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது பலகையுள்ளவன் அவனைக் கண்டு, பெருந்தொகை பெற்றுக்கொண்ட போதிலும், தக்க நேரத்தில் ஒரு வெற்றிலையையாவது கொடுத்து உதவி செய்த அவனது நன்றியை நினைவுகூர்ந்து, தன்னிடமிருந்த ஒரே மரப்பலகையை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வெறுங்கைகளால் நீந்தத் தொடங்கினான்.

அப்போது மணிமேகலை இவனது இரக்கமுள்ள மனப்பான்மையினையும் தன்னலமற்ற உதவியையுங் கண்டு மெச்சி, இத்தகைய நன்மகனைக் காப்பாற்ற வேண்டுவது தனது நீங்காக்கடமை எனக்கண்டு, அவன் மீது அருள் கூர்ந்து, அவன் கண்களுக்குத் தோன்றாமலே அவனை ஒரு கரையிற் கொண்டு போய்விட்டது. பின்னர், நெடுநேரஞ் சென்று, தனக்குக் கிடைத்த மரப்பலகையின் உதவியினால் மற்றவன் கடலை நீந்தி அதே கரையையடைந்தான். அடைந்தவன், தனக்கு முன்பே தன் நண்பன் வந்திருப்பதைக் கண்டு வியப்புற்று, ‘ஐயா, வெறுங்கையினால் இப்பெருங்கடலை நீந்தி எனக்கு முன்னரே எவ்வாறு வந்தீர்? பலகையுள்ள எனக்குக் கரைசேர இவ்வளவு நேரம் சென்றதே! கையினால் கடலை நீந்தியதோடு, களைப்பின்றியும் காணப்படுகின்றீரே!’ என்று வினவினான். அதற்கு மற்றவன், ‘நான் இங்கு வந்த விதம் எனக்குத் தெரியாது,’ என்று சொன்னான். அப்போது, அதுவரையில் அவர் கண்களுக்குப் புலப்படாதிருந்த மணிமேகலா தெய்வம் அவர் கண்முன்னர்த் தோன்றி, ‘நானே உன்னை இங்குக் கொண்டு வந்தேன். பெற்றோரைப் பேணி ஒழுகுகின்றவர்களையும், புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணடைந்து ஒழுகுகின்றவர்களையும், பஞ்சசீலம், அஷ்டாங்க சீலம், பிரதிமோக்ஷ சம்வரசீலம் என்னும் சீலங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களையும், மெய் மொழி மனங்களால் பிறருக்கு நன்மை செய்கின்றவர்களையும், செய்ந்நன்றி அறிந்து உதவி செய்கின்றவர்களையும் துன்பத்திலிருந்து தேவர்கள் காப்பாற்றுவார்கள்’ என்று சொல்லிற்று.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் பலகை கொடுத்துதவியவன், ‘தாங்கள் சொல்லிய தர்மங்களில் ஒன்றையேனும் நான் செய்தவனல்லவே! அப்படியிருக்க, என்னைக் கடலினின்றுங் காப்பாற்றிய வகை என்ன?’ என்று வியப்புடன் வினாவினான். அதற்கு அத்தெய்வம், ‘உனக்கு ஒரு வெற்றிலை கொடுத்து உதவிய நன்றியை நினைத்து, நடுக்கடலில் உன் உயிரையும் பாராமல் மற்றவனுக்கு உன் பலகையைக் கொடுத்து உதவினாய். இந்த நன்றியறிதல் என்னும் உனது நற்குணத்துக்காக உன்னை நான் காப்பாற்றினேன்’ என்று சொல்லி, அக்கடற்றெய்வம் மறைந்து விட்டது.

கம்போடியா தேசத்திலும் சீயாம் தேசத்திலும் மணிமேகலையைப் பற்றிய கதைகள் வழங்குகின்றனவென்று திரு. ‘சில்வன் லீவி’ (Silvain Levi) என்னும் ஆசிரியர் எழுதியிருக்கின்றார். அதன் சுருக்கம் இதுவாகும்:

கம்போடியா தேசத்து இராமாயணத்தில் கீழ்கண்ட பகுதி காணப்படுகின்றது. தேவர்களும் தெய்வமகளிரும் ஓர் அரங்கத்தில் கூட நடனம் செய்கிற வழக்கப்படி, அரங்கத்தில் ஒருநாள் தேவர்கள் கூடியிருந்தார்கள். அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள மணிமேகலா தெய்வம் தனது ஒளிவீசும் அணிகளை அணிந்து, கையில் மாணிக்கக் கல் ஒன்றனை எடுத்துக் கொண்டு சென்றது. செல்லும் வழியில் ‘ராமசூரன்’, அல்லது ‘ராம பரசு’ என்னும் பெயருள்ள அசுரன் அவள் கையில் உள்ள ஒளிவீசும் மாணிக்கக் கல்லைப் பிடுங்கிக்கொள்ள விரும்பி அவளைத் தொடர்ந்தான். அதனை அறிந்த மணிமேகலை மேகத்தில் மறைந்தொளிந்தாள். அசுரன் அங்கும் அவளைத் தொடர அவள் தன் கையிலிருந்த மாணிக்க நகையை அவன் கண்முன் காட்ட அதன் ஒளியினால் கண்கூசி, அவ்வரக்கன் திகைத்து நின்றான். அப்போது மணிமேகலை அவனிடமிருந்து தப்பி ஓடினாள். அவ்வமயம் தெய்வங்களின் அரங்கத்திற்குச் செல்லுவதற்காகப் போய்க்கொண்டிருந்த வீரமிக்க ‘வர்ஜூன்’ என்னும் தேவன், ராமபரசு என்னும் அசுரன் மணிமேகலையைத் துரத்துவது கண்டு, அவ்விடம் வர, அவனுக்கும் ராமசூரனுக்கும் பெரும் போர் நடந்து, கடைசியில் வர்ஜூன் என்பனை ராமசூரன் தன் பரசு என்னும் ஆயுத்திதினால் கொன்று வென்றான். இந்தக் கதை கம்போடியா தேசத்து அரண்மனையில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகின்றது.

சயாம் தேசத்து இராமாயணத்திலும் இதே கதை கூறப்பட்டிருக்கின்றது. கி.பி 1783 முதல் 1809 வரையில் அரசாண்ட சயாம் தேசத்து அரசன், ‘முதலாவது ராமன்’ என்பவன் காலத்தில், இந்த இராமாயணம் எழுதப்பட்டது. இதுவும் கம்போடியா தேசத்து இராமாயணம் போன்றதே. இதில் காணப்படும் சிறு மாறுபாடு என்னவென்றால், ‘வர்ஜூன்’ என்னும் தேவன் பெயர் ‘அர்ஜூனன்’ என்று காணப்படுவதுதான். கம்போடியா, சயாம் தேசத்துக் கதைகளும் மணிமேகலை சமுத்திரத்தில் வாழ்வதாகவும் அது கடற்தெய்வம் என்பதாகவும் கூறுகின்றன.

‘ச-கேச-தாது வம்சம்’ என்னும் (Cha-Kesa-Dhatuvamsa) பிற்காலத்துப் பாலிமொழிப் பௌத்த நூலில், புத்தர் தமது ஆறு சீடர்களுக்கு ஆறு உரோம தாது கொடுத்ததாகவும், அவர்கள் அவற்றைக் கொண்டு தென்னாட்டிற்கு வந்தபோது, கடலால் சூழப்பட்ட ஓர் அசோக வனத்துக்கு வந்ததாகவும், அப்போது அந்தத் தாதுவை வைக்கத் தூபி கட்டுவோரைக் காணாமல் அச்சீடர்கள் வருந்த, புத்தர் கட்டளையினால் மணிமேகலா தெய்வம் அவர்களுக்குத் தோன்றி, ஒரு தூபியைக் கட்டியதாகவும் காணலாம். (மணிமேகலை ‘பாசாத’ என்னும் பெயருள்ள பௌத்தப் பள்ளி ஒன்று இலங்கையில் இருந்த தென்பதும், அதனை ‘இரண்டாவது சேனன்’ என்னும் அரசன் பிற்காலத்தில் பழுதுபார்த்துப் புதுப்பித்தான் என்பதும் தெரிகின்றன. இந்தப் பள்ளி மணிமேகலை கட்டியதாகக் கூறபடும் தூபி அன்றென்பது உறுதி.)

இலங்கையில் சிங்களவர் வழங்கும் கதை சிலவற்றிலும் மணிமேகலையைப் பற்றிய குறிப்புகள் காணபடுகின்றன. அவற்றையெல்லாம் இங்கு எழுதவேண்டுவதில்லை. ஆனால், அக்கதைகள் ஒன்றில் தமிழருக்கு வியப்பைத் தருவன எவையென்றால், ‘பாலங்கா’ என்பவன் தன் மனைவி ‘பத்தினி’ என்பளுடன் மதுரைக்குச் செல்லும் வழியில் ‘வைத’ என்னும் ஆறு குறுக்கிட்டதால், பத்தினி தன் விரலில் அணிந்திருந்த ஆழியைக் கழற்றி ஆற்றில் எறிய, அந்த ஆற்றுநீர் விலகி இவர்களுக்கு வழிவிட்டது என்பதும், அக்கரையையடைந்த பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து ஆற்றில் எறியப்பட்ட மோதிரத்தை எடுத்து பத்தினியிடம் கொடுத்தது என்பதுவுமே. இங்கே பாலங்கா என்பவன் கோவலன்; பத்தினி என்பவள் கண்னகி: வைத என்பது வைகை ஆறு.

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு தமிழ்க் காவியங்களிலும் மணிமேகலா தெய்வத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கடலில் கப்பலோட்டி வாணிகம் செய்த கோவலனுடைய குலதெய்வமாக இருந்தது மணிமேகலா தெய்வம் என்றும், கோவலனுடைய மூதாதையார் ஒருவர் வாணிகத்தின் பொருட்டுக் கடலில் கப்பலேறிச்சென்றபோது, நள்ளிருளில் கப்பல் கவிழ்ந்து துன்புற்றபோது, அத்தெய்வம் அவரைக் காப்பாற்றியதென்றும், அந்நன்றியை மறவாமல் கோவலன் தன் மகளுக்கு அத்தெய்வத்தின் பெயரையே சூட்டினான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது; (சிலம்பு, அடைக்கலக் காதை 21-39) கோவலன் மகள் மணிமேகலைக்கு, உதயகுமரனால் நேர இருந்த இடையூறுகளை மணிமேகலா தெய்வம் நீக்கிய செய்தி மணிமேகலை நூலினால் அறியப்படும். காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்திரவிழாவை, ஓர் ஆண்டு, சோழமன்னன் நடைபெறாமல் நிறுத்திய காரணத்திற்காக மணிமேகலா தெய்வம் கோபங்கொண்டு சபிக்க, அவ்வூர் வெள்ளத்தினால் அழிந்தது என்று நூலினால் அறியப்படுகிறது. இத்தெய்வத்தைக் கடல் காவலுக்காக இந்திரன் நிறுவினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

(மணிமேகலைத் தெய்வத்தின் படம் சயாம் தேசத்து அரசரின் அரண்மனையில் இருக்கிறது.)

2. தரைக்காவல் தெய்வம் சம்பாபதி

சாதுர் மாகராஜிக லோகம் என்னும் தெய்வலோகத்தில் உள்ள நான்கு தேவர்கள், நிலவுலகத்திலே நல்லவர்களுக்கு நேரிடுகிற துன்பங்கங்களைப் போக்கச் சில தெய்வங்களை நிறுவினார்கள் என்பது பௌத்தர்கள் நம்பிக்கை. அவ்வாறு நிறுவப்பட்ட தெய்வங்களுள் மணிமேகலை என்பது ஒன்றென்றும், இத்தெய்வம் கடலில் மரக்கலத்தில் செல்வோருக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்கி அவர்களைக் காப்பாற்றியது என்று மேலே விளக்கினோம். தரையில், நல்லவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்க, அத்தேவர்கள் சம்பாபதி என்னும் தெய்வத்தை நிறுவினார்கள் என்று கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், சம்பாபதி என்னும் தெய்வத்தைக் கோதமை என்பவள் இவ்வாறு போற்றியதாக மணிமேகலை நூல் கூறுகிறது.

“துறையும் மன்றமும் தொல்வலி மரனும்

உறையுளும் கோட்டமும் காப்பாய், காவாய்!”

(மணி 9-ஆம் காதை)

“நாவலோங்கிய மாபெருந் தீவினுள், காவல் தெய்வம்” என்று சம்பாபதி கூறப்படுகிறபடியினாலே, இத்தெய்வம் நாவலந் தீவு (இந்தியா தேசம்) முழுமைக்கும் காவல் தெய்வமாக அமைந்திருந்தது. இமயமலையினின்று இத்தெய்வம் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், நாவல் மரத்தின் கீழ்த் தங்கி அரக்கரால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்க இத்தெய்வம் தவம் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

“இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்கொளி மேனி விரிசடை யாட்டி

பொன் திகழ் நெடுவரை யுச்சித் தோன்றித்

தென்றிசைப் பெயர்ந்த இத்தீவத் தெய்வதம்

சாகைச் சம்பு தன்கீழ் நின்று

மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு

வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற

சம்பு என்பாள் சம்பா பதியினள்.”

(மணி பதிகம் 1-8)

சம்பாபதி தெய்வம், முந்தை முதல்வி, முதுமூதாட்டி, தொன்மூதாட்டி, முதியாள், அருந்தவமிதியோள் என்றும்; சம்பு, கன்னி, குமரி என்றும் மணிமேகலை நூலில் கூறப்படுகிறது. இத்தெய்வத்தின் கோயில் குச்சரக்குடிகை எனப் பெயர் கொண்டிருந்ததென்றும், இக்கோயில் காவிரிப் பூம்பட்டினத்தில் இடுகாட்டிற்கு அருகில் இருந்ததென்றும் அந்நூல் கூறுகிறது.

இத்தெய்வத்தைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. சார்ங்கலன் என்னும் பார்ப்பனச் சிறுவன், தன்னந் தனியனாய்ச் சுடுகாட்டிற்குச் செல்ல, அங்கு ஒரு பேய்மகள் பிணத்தின் தலையொன்றினைக் கையிலேந்திக் கூத்தாடியதைக் கண்டு அஞ்சி நடுங்கினான். அவ்வச்சம் நீங்காமல் அவன், வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி அச்சத்தினாலே உயிர்விட்டான். அவனுடைய தாய் கோதமை என்பவள், ஆறாத் துயரத்துடன், அவனது உடலைத் தோளில் தூக்கிக் கொண்டு சம்பாபதி கோயிலுக்கு வந்து, அவனை உயிர்பித்துக் கொடுக்கும்படி வரம் வேண்டினாள். சம்பாபதி தெய்வம் அவள்முன் தோன்றி, “அவன் விதிவசத்தினால் இறந்தானேயன்றி அவனைப் பேய் கொல்லவில்லை. அவன் ஆயுள் அவ்வளவுதான். இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் எனக்குக் கிடையாது” என்று கூறியது. இதனைக் கேட்ட கோதமை மனம் வருந்தி, “தெய்வங்கள் கேட்ட வரத்தைக் கொடுக்கும் என்று உலகோர் கூறுகிறார்கள். உனக்கு இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் இல்லை என்று கூறுவது என்னை?” என்று வினவினாள். அப்போது சம்பாபதி தெய்வம், அவள் முன்பாக, சக்கரவாளங்களிலுள்ள எல்லாத் தெய்வங்களையும் தனது தெய்வ ஆற்றலினால் வரவழைத்து, “இவர்களில் யாரேனும் இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் உடையவராயிருந்தால், நானும் உன் மகனை உயிர்ப்பித்துக் கொடுப்பேன்” என்று கோதமைக்குக் கூறியது. வந்த தெய்வங்கள் எல்லாம், ‘தமக்கு அத்தகைய ஆற்றல் இல்லை’ என்று கூறின. அதனால் மனம் தெளிந்த கோதமை, தன் இறந்த மகனது உடலைச் சுடலையில் அடக்கம் செய்து சென்றாள். இக்கதை மணிமேகலை (6-ஆம் காதை) யில் கூறப்பட்டுள்ளது.

சாயாவனம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலின் தென்பக்கத்தில் சம்பாபதி கோயில் ஒன்று இப்போதும் இருக்கிறதென்றும், இக்கோயில் சம்பாபதியம்மன் தெய்வம் என்றும், பிடாரி கோயில் என்றும் வழங்கப்படுகிறதென்றும் கூறுவர் டாக்டர் சுவாமிநாத ஐயர் அவர்கள். (மணி. அரும்பத அகராதி)

பிடாரி என்பது பீடையை (துன்பத்தை) அரிப்பவள் (போக்குபவள்) என்று பொருள்படும். சம்பாபதி அம்மன், உலகில் உள்ள நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குகிறவள் ஆதலின், பிடாரி என்று கூறப்படுகிறாள் போலும்.

சீர்காழி இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 14 மைல் தூரத்தில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் (இப்போது சிறுகிராமமாக) இருக்கிறதென்றும், இங்குள்ள மருவத்தூர் கிராமம் என்னும் இடத்தில், சம்பாபதி கோயில் இருக்கிறதென்றும், இங்குள்ள பல்லவனேச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கருகில் இரண்டு மண்மேடுகளும், சம்பாபதி கோயிலுக்கருகில் இரண்டு மண்மேடுகளும் காணப்படுகின்றன என்றும் ஆர்க்கியாலஜி இலாகா அறிக்கை கூறுகிறது.

இவ்வறிக்கையில் கூறப்படுகிற மருவத்தூர் கிராமம் என்பது சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற காவிரிப்பூம்பட்டினத்தின் மருவூர்ப்பாக்கமாக இருக்கக்கூடுமோ? இவ்வறிக்கையில் கூறப்படுகிற மேடுகளை அகழ்ந்து பார்த்தால், தமிழ்நாட்டுச் சரித்திர சம்பந்தமான பழைய பொருள்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும்.

3. கந்திற் பாவை

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த குச்சரக்குடிகை என்னும் பெயருள்ள சம்பாபதி கோயிலிலே ஒரு தூணில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. (கந்து – தூண், பாவை – பதுமை) இவை இரட்டைத் தெய்வங்களின் உருவங்கள். துவதிகன், ஓவியச்சேனன் (சித்திரச்சேனன்) என்னும் பெயருடையவை. இவையும் பௌத்தர்களால் போற்றப்பட்ட சிறு தெய்வங்களாம். இத்தெய்வங்கள் முக்கால நிகழ்ச்சிகளை அவ்வப்போது, தம்மை வழிபடுவோருக்குக் கூறிவந்தன என்று மணிமேகலை நூலினால் அறிகிறோம்.

4. சாதுர் மகாராஜிகர்

உலகத்தின் நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்கள் காவலாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சதுர் மகாராஜிகர் என்பது பொதுப் பெயர். உலகத்திலே மனிதர் செய்கிற நன்மை தீமைகளை அறிந்து அவற்றை அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கவேண்டியது இவர்கள் கடமை. இவர்களைத் திசைக் காவலராக நியமித்தவன் இந்திரனே. இவர்களின் பெயர் வருமாறு;

திருதராட்டிரன்: இவன் கிழக்குத் திசைக்குத் தெய்வம். இவன் கந்தவர்களுக்கு அரசன்.

விருதாட்சன்: இவன் தெற்குத் திசைக்குத் தெய்வம். இவன் கும்பாண்டர்களுக்கு அரசன்.

விருளாட்சன்: இவன் மேற்குத் திசைக்குத் தெய்வம். இவன் இயக்கருக்கு அரசன்.

வைசிரவணன்: இவன் வடக்குத் திசைக்குத் தெய்வம். இவன் நாகர்களுக்கு அரசன்.

இந்த நான்கு தெய்வங்களும் சக்கனுக்கு (இந்திரனுக்கு) அடக்கமானவர்கள் என்பதும், உலகத்திலே நான்கு திசைகளிலும் நிகழ்கிற எல்லாச் செய்திகளையும் இவர்கள் அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கிறார்கள் என்பதும் பௌத்தர்களின் நம்பிக்கை.

5. சக்கன்

சக்கன் என்னும் சக்கரன் விண்ணுலகத்துக்கு அரசன். இவனை இந்திரன் என்றும் கூறலாம். இவன் பௌத்தச் சிறு தெய்வங்களுக்கெல்லாம் தலைவன். இவன் பௌத்த தர்மப்படி நடக்கிற நல்லவர்களுக்கு உதவி செய்கிறான் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை. இவன், விண்ணுலகத்திலே சிம்மாசனத்தின் மேல் விரிக்கப்பட்ட பாண்டு கம்பளத்தின்மேல் அமர்ந்திருக்கிறான் என்றும், ஏதேனும் சிறப்பான நிகழ்ச்சிகள் உலகத்தில் நிகழுமானால் இவனுடைய பாண்டு கம்பளம் சூடுகொள்ளும் என்றும், அப்போது இவன் அந்நிகழ்ச்சிகளை அறிந்துகொள்கிறான் என்றும் பௌத்தர்கள் நம்புகிறார்கள். இந்திரனைப் பற்றிய பல கதைகள் பௌத்த நூல்களிலே கூறப்படுகின்றன. இந்தச் சக்கனாகிய இந்திரன் வேறு; வைதீக மதத்தில் கூறப்படுகிற இந்திரன் வேறு.

6. அவலோகிதர்

பௌத்தரால் வணங்கப்படும் தெய்வங்களில் அவலோகிதரும் ஒருவர். இவர் மேலே கூறப்பட்ட தெய்வங்களுக்கு மேற்பட்டவர். ஆனால், புத்தருக்குக் கீழ்ப்பட்டவர். இவருக்கு உலகநாதர் என்றும் போதிசத்துவர் என்றும் பெயர் உண்டு. துஷிதலோகத்திலே இவர் இருக்கிறார். அறநெறியைப் பூவுலகத்தில் போதிப்பதற்காகப் புத்தராகப் பிறக்கிறவர் இவரே.

“அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து

முடி தயங் கமரர் முறைமுறை யிரப்பத்

துடித லோக மொழியத் தோன்றித்

போதி மூலம் பொருந்தி யிருந்து

மாரனை வென்று வீர னாகிக்

குற்றம் மூன்றும் முற்ற வறுக்கும்

வாமன் வாய்மை யேமக் கட்டுரை

யிறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்”

என்று மணிமேகலை கூறுவது காண்க.

இந்த அவலோகிதர் இடத்திலே அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்பது தமிழ்நாட்டுப் பௌத்தர்களின் நம்பிக்கை. வீரசோழிய நூலாசிரியராகிய புத்தமித்திரர் இதனைக் கூறுகிறார்.

“ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன்கேட்

டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ் …”

என்று அவர் கூறுகிறார்.

அவலோகிதரைப் பௌத்தர்கள் வணங்குகிறார்கள். தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் பரவியிருந்த காலத்தில் அவலோகிதர் உருவ வழிபாடு நடந்து வந்தது. நாகைப்பட்டினத்தில் இருந்து கிடைத்த அவலோகிதரின் செம்பு உருவங்களைச் சென்னைக் காட்சிச் சாலையில் இன்றும் காணலாம்.

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

பின்னிணைப்பு

4. ஆசிவக மதம்

அழிந்தொழிந்துபோன இந்த மதம் இப்போது முழுதும் மறக்கப்பட்டிருப்பதால், இதைப் பற்றிக் கூறுவது அமைவுடையது.

பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வடஇந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரி புத்திரர் என்பவர். பாலி மொழியில் இப்பெயர் மக்கலி புத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் ‘கோசால’ என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலி புத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.

‘மக்கலி’ என்பது வடநாட்டில் பண்டைக்காலத்தில் இருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தார்க்குப் பெயர் என்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆகையால் இவருக்கு ‘மக்கலி புத்திரர்’ என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். ‘மக்கலி’ என்பது இவருடைய தந்தையின் பெயர். ஆகையால் இவருக்கு ‘மக்கலி புத்திரர்’ என்னும் பெயர் வழங்கியதென்று வேறு சிலர் உரைப்பர்.

மக்கலி அல்லது மற்கலி என்பவர், ஆருகத மதத்தையுண்டாக்கிய மகாவீரரும், பௌத்த மதத்தையுண்டாக்கிய கௌதமபுத்தரும் உயிர்வாழ்ந்திருந்த அதே காலத்தில் இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்து வந்த காலத்தில் அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி அவரிடம் சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரின் உடன்பாடு பெற்று, அவருடன் சில ஆண்டு தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்துபோய், ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் ‘ஆசிவக மதம்’ அல்லது ‘ஆஜீவகமதம்’ என்பது. ஆருகத மதக்கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி, மற்கலி இந்த மதத்தை உண்டாக்கினாரென்று சொல்லப்படுகின்றது.

சற்றேறத்தாழ, கி.மு. 500 இல் மற்கலி காலமானார் என்று கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவீரர் வீடுபெற்றார் என்பர். மாகாவீரர் வீடுபெற்ற சில ஆண்டுகளுக்குப் பின்னர், கௌதமபுத்தர் நிர்வாணம் அடைந்தார்.

ஆசீவகர், பௌத்தர், ஜைனர், வைதீகர் ஆகிய மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது.

ஆசீவக மதக்கொள்கைகளைக் கூறும் நூலுக்கு ‘நவகதிர்’ என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப் பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூயவெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும், தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர்நிலைப் பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர் தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு இலட்சம் மகா கல்ப காலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும், இந்த நியதிமாறி உயிர்கள் வீடு பேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடு பெறான். அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருந்து ஒருவன் காலநியதியைக் கடந்து, தீயகருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல முயன்றாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும் அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாக வேண்டும் என்பது இம்மதக் கொள்கைகளில் சிலவாம்.

நவகதிரையன்றி, ‘ஆதித்தியம்’ என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, “ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப் பற்றியிருக்கும்; அது சோதிசாத்திரமென உணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வானமண்டல வரவுடையாரெனப்படுவர்” என்று கூறும் தக்கயாகப்பரணி (183-ஆம் தாழிசை) உரைப்பகுதியினால் இது அறியப்படும்.

மற்கலிக்குப் ‘பூரணர்’ என்னும் பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு இப்பெயர் உண்டாயிற்றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க்கண்டவாறு ‘நீலகேசி’ என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

‘உரையா னிறைவ னுணலு மிலனாய்த்

திரையா னரையான் றெரிவில் லுருவம்

வரையா வகைவா னிடுவில் லனையன்

புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.’

(ஆஜீவக வாதச் சருக்கம் 15 – ஆம் செய்யுள்)

(உரை) ‘வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை முதலாயினவுமுடையனல்லனாகி ஆகாசதலத்து இந்திர தனுசுபோலத் தோன்றும் தோற்றத்தையுடையனாகிக் குற்றப்படாத அறிவையுடையவன் பூரணனென்னும் எம்முடைய ஆப்தன் என்றவாறு.’

ஆசீவக மதத்துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப்பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,

‘தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்

பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே’

என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர் ‘தாழி-முதுமக்கட் சாடி .. தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம்செய்வராதலின், அவரைச் சுட்டிநின்றது’ என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.

மேலே காட்டிய உரைப்பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகிறது. அஃதாவது, ஆசீவகமதம் ஆருகதமதமாகிய ஜைனமதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், ‘மணிமேகலை’,’நீலகேசி’ என்னும் நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவக மதம் வேறு என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இத்தவற்றினைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப்பரணி உரையாசிரியர் எழுதியிருக்கிறார். நிகண்டுகளும் ஆசீவக மதம், ஆருகத மதத்தின் பிரிவு என்றே கூறுகின்றன.

‘சாவகர் அருகர் சமணர் ஆகும்;

ஆசீ வகரும் அத்தவத் தோரே’ (சேந்தன் திவாகரம்)

‘சாவகர் அருகர் சமணர் அமணர்

ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே’ (பிங்கலநிகண்டு)

‘சிவஞான சித்தியார்’ என்னும் சைவ சமய நூலிலே, இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். ‘திகம்பரமொப்பினும் அநேகாந்தவாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க’ என்று எழுதியிருக்கிறார். அஃதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப் போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். ‘மணிமேகலை’, ‘நீலகேசி’ என்னும் இரண்டு நூல்களைத் தவிரப் பிற்காலத்து நூல்களாகிய ‘சிவஞான சித்தியார்’ , ‘தக்கயாகப்பரணி’, ‘திவாகரம்’, ‘பிங்கலநிகண்டு’ முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம் என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவகமதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டு வந்த பொதுவான சில கொள்கைகளாகும். உடையின்றி யிருத்தலும், குளியாமல் அழுக்குடம்புடன் இருத்தலும் இவை போன்ற சில வெளிப்பார்வைக்குப் பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும் இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவகமதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிறகாலத்தில் தவறாகக் கருதப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமன்று வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டு வந்தனர்.

இந்த மதத்தைப் பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுவதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் பகைவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளன என்று கருதப்படுகின்றது. ‘மணிமேகலை’ என்னும் பௌத்த நூலிலும் (சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை), ‘நீலகேசி’ என்னும் ஜைன நூலிலும் (ஆசீவகவாதச் சருக்கம்), ‘சிவஞான சித்தியார்’ என்னும் சைவ நூலிலும் (பரபக்கம் ஆசீவக மதம்) இந்த மதக்கொள்கைகள் எடுத்துக் கூறி மறுக்கப்பட்டுள்ளன. இந்த மதத்தைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு மேற்சொன்ன தமிழ் நூல்களும் (Encyclopaedia of Religion and Ethics by James Hashings) என்னும் நூலும் உதவி புரியும்.

இந்த மதம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது. தமிழ்நாட்டிலே சமதண்டம் என்னும் ஊரிலே இந்த மதத் தலைவர்கள் இருந்ததாக ‘நீலகெசி’ என்னும் நூல் கூறுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

‘கண்ணகி தாதை கடவுளர் கோலத்

தண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்

புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்’

(நீர்ப்படைக்காதை)

என வரும் அடிகளால் அறியலாம்.

இராசராச சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சிலாசாசனங்களில் ‘ஆசுவ கடமை’ என்னும் ஆயம் (வரி) குறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஆசீவகமதத்தாருக்கு அக்காலத்தில் ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர் சிலர். இதை மறுத்து, சாசனங்களில் கூறப்பட்டுள்ள ‘ஆசுவ கடமை’ என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச் செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக மதத்தாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்காது என்றும், அவ்வாறு கூறுவது தவறு என்றும் பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம் பதிப்பித்துள்ள ‘நீலகேசி’ யின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக எழுதியிருக்கின்றார்கள். ஆகவே, ஆசீவக மதத்தாருக்கு இறை விதிக்கப்பட்டிருந்ததாகக் கருதுவது தவறாகும்.


பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

பின்னிணைப்பு

5. மணிமேகலை நூலின் காலம்

மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால், அது பெரியதொரு தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே பலரின் கொள்கை. ஆயினும் சிலர் மட்டும் ஐயப்பாட்டிற்கிடமான சில ஆதாரங்களைக் காட்டி, இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவர். ஈண்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை எழுதப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை முதலில் எடுத்துக்காட்டிப் பின்னர், இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவோரின் கூற்று ஆதாரமற்றதென்பதை விளக்குவோம்.

‘மணிமேகலை’யை இயற்றிய ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரும், ‘சிலப்பதிகாரத்தை’ இயற்றிய இளங்கோ அடிகளும் நண்பர்களென்பதும், சிலப்பதிகாரக் காவியத்தின் தொடர்ச்சியே மணிமேகலைக் காவியம் என்பதும் யாவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அன்றியும் இளங்கோ அடிகளின் தமையனான சேரன் செங்குட்டுவனுக்கும் சீத்தலைச் சாத்தனார் உற்ற நண்பர். கன்ணகியின் வரலாற்றினைச் சீத்தலைச்சாத்தனார் சொல்லக் கேட்டுக் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி அவளுக்குக் கோயில் அமைத்த செங்குட்டுவ மன்னன், இலங்கைத் தீவை அரசாண்டிருந்த கஜபாகு (கயவாகு) என்னும் அரசனைப் பத்தினிக் கடவுளான கண்ணகியின் விழாவுக்கு அழைத்திருந்தான். கஜபாகு மன்னனும் இவ்விழாவுக்கு வந்திருந்ததோடு, இலங்கைக்குச் சென்று அங்கும் கண்ணகி வணக்கத்தை ஏற்படுத்தினான். இன்றைக்கும் சிங்களவர் ‘பத்தினித் தெய்யோ’ (பத்தினி தெய்வம்) என்று கண்ணகியைக் கொண்டாடி வருகின்றனர். பத்தினி தெய்வ வணக்கத்தை இலங்கையில் ஏற்படுத்திய கஜபாகு வேந்தன் கி.பி. 171 முதல் 193 வரையில் இலங்கையை அரசாண்டான். இவனுக்கு ‘கஜபாகு காமினி’ என்னும் பெயரும் உண்டு. எனவே, கஜபாகு நண்பனான சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும், சீத்தலைச் சாத்தனாரும் ஒரே காலத்தவர் என்பது பெறப்பட்டது. ஆகவே, மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றியிருக்க வேண்டும்.

மணிமேகலை நூலில் இருபத்தேழாவது காதையில்

“வேத வியாகனுங் கிருத கோடியும்

ஏதமில் சைமினி யெனுமிவ் வாசிரியர்

பத்து மெட்டு மாறும் பண்புறத்

தத்தம் வகையாற் றாம்பகர்ந் திட்டனர் “

என வரும் அடிகளிற், ‘கிருதகோடி’ என்னும் ஆசிரியரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. “கிருத கோடி என்பது மீமாம்சை சாத்திரமாகிய வேதாந்த சூத்திரத்திற்குப் ‘போதாயனர்’ என்பவர் இயற்றிய உரை. ‘பிரபஞ்ச ஹ்ருதயம்’ என்னும் சமஸ்கிருத நூலில், மீமாம்சை சாஸ்திரம் முழுவதுக்கும் போதாயனர் என்பவர் ஒரு பாஷ்யம் (விரிவுரை) எழுதினார் என்றும், அந்த உரைக்கு ‘கிருதகோடி’ என்பது பெயர் என்றும், இந்த உரை மிக விரிவாக இருந்தது பற்றி ‘உபவர்ஷர்’ என்பவர், அதனைச் சுருக்கி அமைத்தனர் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. வேதாந்த சுத்திரத்திற்கு இராமாநுசர் எழுதிய ‘ஸ்ரீபாஷ்யம்’ என்னும் உரையிலும், போதாயனர் வேதாந்த சூத்திரத்திற்குப் ‘பிரம்மசூத்திரம்’ என்னும் விருத்தியுரை எழுதினார் என்றும், அந்த விரிவுரையைப் ‘பூர்வாசாரியர் சுருக்கமாக அமைத்தார்’ என்றும் கூறியிருக்கின்றார். இங்கு இவர் ‘பூர்வாசாரியார்’ என்று கூறுவது உபவர்ஷரை. இந்த உபவர்ஷர் என்பவர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது ஆராய்ச்சி வல்லோர் முடிவு. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த உபவர்ஷருக்கு, முன் மீமாம்சை சாத்திரத்துக்கு ஒரே ஓர் உரை இருந்ததென்றும், அது போதாயனர் எழுதிய ‘கிருதகோடி’ என்னும் உரை என்றும், இந்தக் ‘கிருதகோடி’ உரை எழுதிய போதாயனர் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்றும் ஆராய்ச்சிவல்ல அறிஞர் முடிவு கட்டியுள்ளனர். எனவே, கிருதகோடி ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற ‘மணிமேகலை’ அவ்வுரை பெரிதும் வழக்காற்றிலிருந்த கி.பி. முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனைப் பற்றி முற்றும் விளக்கி எழுதினால் இடங்கொள்ளும் என்றஞ்சிச் சுருக்கமாகக் குறிக்கப்பட்டது. இதனை நன்குணர வேண்டுவோர் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களினால் ஐயமறத் தெளியலாம். (Vedanta Commentators before Sankaracharya by P.V. Kane, Proceedings, Fifth Indian Oriental Conference, Vol II Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.)

மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது ஈனயான பௌத்த மதம்; மகாயான பௌத்த மதத்தைப் பற்றி அதில் கூறப்படவில்லை. எனவே, மணிமேகலை மகாயான பௌத்தக் கொள்கைகள் பரவுதற்கு முன்பு எழுதப்பட்ட நூல் என்று விளங்குகின்றது.

மகாயான பௌத்த மதத்தை உண்டாக்கியவர் நாகார்ஜூனர். இவரும் இவர் மாணவராகிய ஆரியதேவரும் மகாயான மத நூல்களை இயற்றி அந்த மதத்தைப் பரவச் செய்தனர். நாகர்ஜூனர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். எப்படி எனில், கூறுவோம்: ‘குமாரஜீவர்’ என்னும் ஆசிரியர் கி.பி 399 முதல் 417 வரையில் பௌத்த நூல்களை எழுதினார் என்று சீன தேசத்து நூல்களினின்றும் தெரிகின்றது. இந்தக் குமாரஜீவர் கி.பி. 400 இல் நாகர்ஜூனர் சரிதத்தையும், அவர் மாணவராகிய ஆரியதேவரது சரிதத்தையும் எழுதியிருக்கின்றார். எனவே இவரது காலத்துக்கு ஒன்றிரண்டு நூற்றாண்டுக்கு முன்பு நாகர்ஜூனர் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். நாகர்ஜூனர் ‘சாதவாகன’ அரசர்களின் காலத்தில் இருந்தவர் என்று தெரிகின்றபடியாலும், சாதவாகன அரசாட்சி கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியின் மங்கிவிட்ட படியாலும், நாகர்ஜூனர் அந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அஃதாவது கி.பி. 250 இல் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். ஆசிரியர் கீத் (Prof Keith) என்பவர், நாகர்ஜூனர் ஏறக்குறையக் கி.பி 200-இல் வாழ்ந்திருந்தவர் என்று கூறுவதும் இதனை ஆதரிக்கின்றது. எனவே நாகர்ஜூனர் கி.பி 200-250 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது தெளிவாகின்றது. மணிமேகலையில் ‘சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை’ யில் தமிழ் நாட்டிலிருந்த பல்வகைச் சமயங்களைப் பற்றிக் கூறுகின்ற சீத்தலைச் சாத்தனார், ஈனயான மதத்துக்கு மாறுபட்ட கொள்கைகளையும் தத்துவங்களையும் உடைய மகாயான மதத்தைப் பற்றிக் கூறாதிருப்பது, நாகர்ஜூனரது கொள்கைகள் பரவுவதற்கு முன்னே மணிமேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பதைக் காட்டுகிறது. எனவே, மணிமேகலை நாகர்ஜூனருக்கு முன், அஃதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்றப்பட்டதாதல் வேண்டும். இதனைக் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களில் விளக்கமாக காணலாம். (The Buddhism of Manimekalai by Dr. S. Krishnaswami Aiyengar in Buddhist Studies, Edited by B.C. Law; Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.)

சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை. அதிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டு வேந்தர்களை ஆங்காங்குக் குறிப்பிட்டுச் செல்கின்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல்லவ அரசர்களைக் கூறவில்லை. பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் வடபகுதியை அரசாண்ட பேர் பெற்ற மன்னர். இவர்களைப் பற்றி கூறப்படாதது பற்றி, பல்லவர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் ‘மணிமேகலை’ இயற்றப்பட்டிருக்க வேண்டும். காஞ்சிபுரத்தை அரசாண்டவன் சோழமன்னன் என்றும், அவன் ‘நலங்கிள்ளி’ என்பவன் தம்பி ‘இளங்கிள்ளி’ என்பவன் என்றும் மணிமேகலை கூறுகின்றது. பல்லவர் முதல் முதல் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது கி.பி நாலாம் நூற்றாண்டிலென்றும், கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் சோழர்கள் சோழநாட்டிலும் தொண்டை நாட்டிலும் வலிமை பெற்றிருந்தார்களென்றும் ‘குமாரவிஷ்ணு’ அல்லது ‘ஸ்கந்தவர்மன்’ என்னும் பெயருள்ள பல்லவ அரசன் தமிழ்நாட்டின் வடக்கிலிருந்து வந்து காஞ்சிபுரத்தை முதல் முதல் கைப்பற்றினானென்றும் அவன் காஞ்சியைக் கைப்பற்றியது ஏறத்தாழக் கி.பி. 325 ஆம் ஆண்டென்றும் கூறுவர் ஹீராஸ் பாதிரியார் (Studies in Pallava History by Rev. H. Hearas.)

பல்லவர் காஞ்சியைச் சோழரிடமிருந்து முதல் முதல் கைப்பற்றியது கி.பி. 325 ஆம் ஆண்டில் ஆகையாலும், மணிமேகலையில் கூறப்பட்டுள்ள காஞ்சியை அரசாண்ட மன்னன் சோழர் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையாலும், மணிமேகலை இந்த ஆண்டுக்கு முன் இயற்றப்பட்டதாதல் வேண்டும். ஆனால், மேலே கூறப்பட்ட கஜபாகுவின் காலத்தையும் செங்குட்டுவன் காலத்தையும், நாகர்ஜூனர் காலத்தையும், கிருதகோடி உரை இயற்றிய ‘போதாயனர்’ காலத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் கடைசியில் இயற்றப்பட்டதாதல் வேண்டும் என்பது ஐயமற விளங்குகின்றது.

மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை விளக்க இன்னும் வேறு சான்றுகள் வேண்டுவதில்லை. இனி, இந்த நூல் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் இயற்றப்பட்டதென்று கூறுவோர் காட்டும் சான்றுகளை எடுத்துக்காட்டி, அவை தக்க சான்றுகளல்ல என்பதை விளக்குவோம்.

1. மணிமேகலையில் ‘குச்சரக்குடிகை’ என வரும் சொற்றொடருக்கு உரையெழுதிய டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள், ”கூர்ச்சர தேசத்துப் பணி அமைந்த சிறிய கோயில்’ என்று எழுதியிருக்கிறார்கள். இதனை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு ஒரு சிலர், ஏனைய ஆதாரங்களையெல்லாம் மறந்துவிட்டு, மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இயற்றப்பட்ட தென்பர். கூர்ச்சரர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவுக்கு வரவில்லை என்றும், கூர்ச்சரரைக் குறிப்பிடுகிறபடியால், மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்ட தென்றும் கூறுவர். இந்த ஆராய்ச்சி முடிவை எதிர்த்தும், ஆதரித்தும் ‘குச்சரக்குடிகை’க்கு வேறு பொருள் கற்பித்தும் அறிஞர் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஈண்டுக் காட்டப்புகின் விரியும். ஆனால், இந்த ஆராய்ச்சி ஐயப்பாட்டுக்கு இடமான முடிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். ‘குச்சரக்குடிகை தன்னகம் புக்கு’ என வரும் மணிமேகலை அடிகளுக்குக் ‘குஞ்சக்குண்டிகை தன்னகம் புக்கு’ என்னும் பாடபேதமும் காட்டப்பட்டுள்ளது; (18 ஆம் காதை, 145) இந்தப் பாடபேதம் முதற் பதிப்பில் காட்டப்படவில்லை. எதிர்வாதங்கள் எழுந்த பின்னர், பிற்பதிப்புக்களில் இந்தப் பாடபேதம் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பாடபேதம் முதற் பதிப்பிலேயே காட்டப்பட்டிருக்குமானால், பல ஆராய்ச்சியாளரின் காலமும் உழைப்பும் வீணாக்கப்பட்டிரா. ஆனால், முதல் பதிப்பின் பாடத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதன் உரையையும் தெய்வவாக்காக கொண்டு, ஆராய்ச்சியாளரிற் சிலர் மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என வாதித்தனர். இந்த வாதத்தை V.A. Smith போன்ற சில மேல்நாட்டு அறிஞரும் நம்பி இடர்ப்பட்டனர். நேர்மையான பாடம் ‘குச்சரக் குடிகை’யா அல்லது ‘குஞ்சக் குண்டிகை’ யா என்பதை முடிவுகட்டிய பின்னரே இந்த ஆராய்ச்சியில் இறங்கவேண்டும். இந்த ஐயப்பாட்டைத் தீர்க்காமல், ‘கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்’ என்னும் உரையை ஒப்புக்கொண்டு முடிவுகட்டுவது, வழுக்கு நிலத்தில் ஊன்று கோலின்றி நடப்பது போலாகும்.

இனி ‘குச்சரக்குடிகை’ என்னும் பாடந்தான் சரியானதென்று ஒப்புக்கொள்வதாயிருந்தாலும், இச்சொற்றொடர்க்கு உரையாசிரியர் காட்டிய பொருள் தவறு என்றும், இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் என்றும் தோன்றுகின்றது. கூர்ச்சரர் கட்டடத்தொழிலில் பேர்பெற்றவர் அல்லர் என்பதை நிலைநாட்டி, இந்த உரையை மறுத்து, டாக்டர் கு. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் தாம் எழுதிய Manimekhalai in its Historical Setting என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். விரிவஞ்சி அதனை ஈண்டுக் குறிக்காமல் விடுகின்றோம்.

‘குடிகை’ எனபதற்குச் ‘சிறிய கோயில்’ என்று எழுதப்பட்டுள்ள உரையும் சரியானதாகத் தோன்றவில்லை. ‘குடிகை’ என்பதற்கு ஓலையால் வேய்ந்த குடிசை என்பதே பொருள் எனத்தோன்றுகின்றது. இந்தப் பொருளிலேயே இந்தக் ‘குடிகை’ என்னும் சொல்

மணிமேகலையில் வேறு இடத்திலும் வந்துள்ளது.

“தண்டு மண்டையும் பிடித்துக் காவலர்

உண்டுகண் படிக்கும் உறையுட் குடிகையும்.”

நகரத்தை இரவு முழுதும் காவல் காத்த காவலாளர் காலையில் ஊண் உண்டு படுத்து உறங்கும் குடிசையை (ஓலையால் வேய்ந்த குடிசை) இது குறிப்பிடுகின்றது. இதற்குக் குறிப்புரை எழுதியவர், “குடிகை -பர்ணசாலை. ‘குடிகா’ என்னும் வடமொழிச் சிதைவென்பர். இஃது இக்காலத்து ‘குடிசை’ என்று வழங்குகின்றது” என்று எழுதியிருக்கின்றார். இந்த உரை மிகவும் பொருத்தமானதே. ஆனால், ‘குச்சரக் குடிகை’ என்பதற்குப் பொருள் எழுதியபோது, சிறிய கோயில், அஃதாவது, கட்டடத்தால் அமைந்த சிறிய கோயில் என்னும் பொருள்பட எழுதியுள்ளார். ஓரிடத்தில் ‘குடிசை; என்றும், இன்னோரிடத்தில் ‘கட்டடம்’ என்றும் எழுதியிருக்கின்றார். இஃது எவ்வாறு பொருந்தும்?

“உறையுட் குடிகை யுள்வரிக் கொண்ட

மறுவில் செய்கை மணிமே கலைதான்”

“உலக வறவியும் முதியாள் குடிகையும்”

என வரும் அடிகளில், ‘குடிகை’ என்பதற்குக் குடிசை, ஓலையால் வேய்ந்த பர்ணசாலை என்றே பொருள் கொள்ளத் தக்கதாயிருக்கின்றது. சம்பாபதி கோயில் சுடுகாட்டை அடுத்திருந்த ஒரு கோயில். ‘உலகவறவி’ என்னும் மன்றத்தில் ஒரு புறத்தில் அஃது அமைந்திருந்தது. இந்தக் கோயிலின் கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது. இப்பொழுதும் சில கிராமதேவதை கோயில்கள் ஓலைக்கொட்டகையால் அமைந்திருப்பதைக் காணலாம். ஓலையால் கொட்டகை அமைக்கக் கூர்ச்சர தேசத்திலிருந்து தொழிலாளர் வரவேண்டுவதில்லை. எனவே, ‘குச்சரக் குடிகை’ என்பதே சரியான பாடமாயிருந்தாலுங்கூட, அதற்கு வேறு பொருள் இருக்கவேண்டுமே தவிர ‘கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்’ என்னும் பொருள் சிறிதும் பொருந்தாது. ஆகவே, இதை ஆதாரமாகக் கொண்டு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மணிமேகலை எழுதப்பட்டதென்பது அறிவுக்குச் சிறிதும் பொருத்தமானதன்று. இதனை மேலும் விளக்கப்புகின் விரியும் என்றஞ்சி இதோடு நிறுத்துகின்றோம்.

சாவகத்தீவில் பௌத்த மதம் பெரிதும் பரவியிருந்ததென்பது மணிமேகலையினால் அறியப்படுகின்றது. ‘சாவகம்’ என்பது இப்போதுள்ள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான சுமத்திரா தீவு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். இந்தச் சுமத்திரா தீவுக்குக் கி.பி. 400 இல் சென்ற ‘பாஹியன்’ (Fa-Hien) என்னும் சீனர், அங்குப் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருக்கிறதென்றும், பௌத்த மதம் தாழ்மையான நிலையில் இருக்கிறதென்றும் எழுதியிருக்கிறார். ஆனால், கி.பி 600 இல் இந்தத் தீவுக்குச் சென்ற ‘இத்-ஸிங்’ (It Sing) என்னும் சீனர் இங்குப் பௌத்த மதம் செழித்தோங்கியிருக்கிறதென்று எழுதியிருக்கின்றார். இதனை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி மணிமேகலையில் சாவகத் தீவில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்ததாகக் கூறியிருப்பதனாலும், இத்ஸிங் என்பவரும் அவ்வாறே கூறியிருப்பதனாலும், பாஹியன் காலத்தில் அஃது இங்குச் செல்வாக்குப் பெறாதிருந்தபடியாலும், கி.பி. 400-600 இடைப்பட்ட காலத்தில் சுமத்திரா தீவில் பௌத்தம் செல்வாக்குற்றிருக்க வேண்டும் என்றும், ஆகவே அதனைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை இந்தக் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர்.

இஃது ஐயப்பாட்டுக்கிடமான போலிக் காரணம் என்று திரு. V.R. இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் எழுதியுள்ளதைக் காட்டி விளக்குவோம். இந்தக் கூற்றை இவர் கீழ்வருமாறு மறுக்கிறார்:

முதலாவது, பாஹியான் இந்த விஷயத்தைப் பற்றிச் சரியான செய்தியைத் தரவில்லை. ஒருவேளை, சுமத்திரா தீவில் இவர் சென்ற பகுதியில் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.

இரண்டாவது, ஆபுத்திரன் சுமத்திரா தீவை அரசாண்டபோது, அஃதாவது கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில், செல்வாக்குற்றிருந்த பௌத்த மதம் கி.பி. 400 இல் சீன யாத்திரிகர் சென்றபோது, செல்வாக்குக் குன்றியிருக்கக் கூடும். பின்னர், மீண்டும் அதன் செல்வாக்கு நிலைபெற்று, கி.பி 620 இல் சென்ற சீன யாத்திரிகர் காலத்தில் சிறப்படைந்திருக்கக் கூடும்.

மூன்றாவது, மணிமேகலையின் காலத்தைக் கி.பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் அமைக்கவேண்டும். மூன்றாவது சொல்லிய முடிபு எமக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மற்ற ஆதாரங்களுக்கும் சான்றுகளுக்கும் இது பொருத்தமாக இருக்கவில்லை. ஆகவே முதலாவது அல்லது இரண்டாவது சொன்ன முடிவுகளில் ஒன்றையே நாம் மேற்கொள்ள வேண்டும்.

இவர் கருத்து என்னவென்றால், கி.பி. 400-க்கும், 600-க்கும் இடைப்பட்ட காலத்தில் மணிமேகலை இயற்றப்பட்டதென்பது ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல; அது கிறிஸ்து சகாப்தத்தின் (Buddhism in Tamil Literature. Chapter XXVII, Buddhistic Studies: Edited by B.C. Law) தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது.

பாஹியன் என்னும் சீன யாத்திரிகர், இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது, இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம் நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம் என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம் என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார். ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது.

மணிமேகலை சற்று எளிய நடையில் அமைந்திருப்பதும், அதில் வரும் ‘மாதவி’,’சுதமதி’,’மணிமேகலை’,’சித்திராபதி’,’சங்கதருமன்’ முதலான பெயர்கள் சங்க நூல்களில் காணப்படாத வடநாட்டுப் பெயர்களாகவிருப்பதும் பற்றி இந்த நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவர் சிலர்.

மணிமேகலையை இயற்றிய சாத்தனார் இந்நூலைப் பண்டிதர்களுக்கு மட்டும் இயற்றினாரில்லை; புலமை நிரம்பாத மற்றவர்களுக்கும் விளங்கவேண்டும் என்பதே அவரது கருத்து. ஏனென்றால், பௌத்த மதத்தையும் அதன் கொள்கைகளையும் பல்லோருக்கும் அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இஃது இயறப்பட்டதாகத் தெரிகின்றது. பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதக் கொள்கைகளைப் பல்லோருக்கும் விளங்கும்படி எழுதவும் பேசவும் வேண்டும் என்பது அம்மதங்களின் கொள்கை. ‘பௌத்தரும் தமிழும்’ அதிகாரம் காண்க.

மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள மக்கட் பெயர்கள் பெரும்பான்மையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன வென்பது உண்மையே. வடமொழிப் பெயராக இருப்பது கொண்டு பிற்காலத்து நூலென்று சொல்வதற்கில்லை. பௌத்தம், ஜைனம் முதலான மதங்கள் வடநாட்டினின்று வந்த மதங்கள். ஆகையால், அம்மதங்களை மேற்கொண்ட தமிழர்களுக்கு அம்மதச் சார்பான வடமொழிப் பெயர்கள் அமைப்பது இயல்பு. இப்பொழுதும் தமிழன் கிறித்தவனாகவோ முகம்மதியனாகவோ மதம் மாறினால் ‘அந்தோனி’, ‘ஜான்’,’ஜோசப்’ முதலிய பெயர்களையாவது, ‘அப்துல்லா’,’ரஹ்மான்’,’யூசூப்’ முதலிய பெயர்களையாவது அம்மதச் சார்பு பற்றிச் சூட்டிக்கொள்கிறான். அதுபோல, பௌத்த வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப் பௌத்தர் சூட்டிக்கொண்டதில் வியப்பு இல்லை. இனி, சங்க நூல்களில் வடமொழிப் பெயர்கள் காணப்படவில்லை என்பதும் தவறு. சங்கச் செய்யுள்களை இயற்றியவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டவர் ‘சாத்தனார்’ என்னும் பெயர் கொண்டிருக்கிறார். இப்பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் தமிழ்த்திரிபு. ‘(இளம்) போதியார்’ என்னும் பெயர் வடமொழி. ‘நிகண்டனார் (கலைக்கோட்டுத் தண்டனார்)’ என்பது வடமொழிச் சிதைவு. ‘கோவலன்’ என்பது ‘கோபாலன்’ என்பதன் திரிபு. ‘கோதமனார் பிரமனார்’,’தாமோதரனார்’,'(சோழன்) நல்லுருத்திரன்’,'(ஆவூர்க் காவிதிகள்) சாதேவனார்’, ‘பிரமசாரி’, ‘பெருங் கௌசிகனார்’, ‘பெரும்பதுமனார்’ முதலிய பெயர்கள் வடமொழிப் பெயர்களே. இப்பெயருள்ளவர்கள் இயற்றிய செய்யுள்கள் நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, சங்ககாலத்தில் வடமொழிப் பெயர்கள் இருந்ததில்லை என்று கூறுவது தவறு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, வடநாட்டவரான ஜைன மதத்தவரும், பௌத்த மதத்தவரும், வைதீக மதத்தவரும் தென்னாட்டிற்கு வந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. அங்ஙனமிருக்க, கடைச்சங்க நூல்களில் சில வடமொழிப் பெயர்களும் காணப்படுவதில் வியப்பில்லை. ஆகவே, வடமொழிப் பெயர்கள் காணப்படுவது கொண்டு ‘மணிமேகலை; காலத்தால் பிற்பட்ட நூலென்று கருதுவது தவறு.

மணிமேகலை சிலப்பதிகார வரலாற்று நிகழ்ச்சிகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) நிகழ்ந்தவை. அந்நிகழ்ச்சிகள் நடந்த அண்மைக் காலத்திலேயே இந்நூல்கள் இயற்றப்பட்டவை. ஆகவே இந்நூல்கள் கி.பி 200-க்குள் எழுதப்பட்டவை. கி.பி. 200-க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களபரர் பிடித்துக் கொண்டு ஏறத்தாழக் கி.பி 575 வரையில் அரசாண்டார்கள். ஆகவே கி.பி 200-க்குப் பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி 200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply