காவிரிப் போராட்டம் தமிழ்த் தேசியத்தின் பகைவர்களை இனம் காட்டி விட்டது!
நக்கீரன்
”பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்”
பார்ப்பனர்கன் மீசை வைக்கக் கூடாது என்ற சாத்திர விதியை மீறி தடிமீசை வைத்த அன்றைய பாரதியின் பாடல் வரிகள் இவை.
”பேசாப் பொருளான காவிரி பற்றிப் பேசியே தீருவேன்” என்று மார் தட்டிப் புறப்பட்ட இயக்குனர் திலகம் பாரதிராசா இன்று எல்லோரையும் காவிரிபற்றிப் பேச வைத்திருக்கிறார்.
காவிரிச் சிக்கல் உச்ச கட்டத்தில் இருந்தபோது தொல்காப்பியத்துக்கு உரை எழுத கோவா போன கலைஞர் கருணாநிதி இப்போது காவிரிப் பிரச்சினையில் இந்திய அரசு நடுநிலமையோடுதான் நடந்து கொள்கிறது என்ற முட்டாள்த்தனமான ஒரு கருத்தை வெளியிட்டாலும் ” அரசியல் சாசனத்தின் 256 ஆவது பிரிவை பயன்படுத்தி சிறப்பு ஆணை வெளியிட்டு காவிரி தண்ணீரைத் திறந்துவிட பிரதமர் வாஜ்பாய் (கர்நாடக மாநிலத்துக்கு) உத்தரவிடவேண்டும்” என்று கூறியுள்ளார்.
”இந்தக் காவிரிப் பிரச்சினை இந்தியாவின் எதிர்கால ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஒரு அக்கினிப் பரீட்சையாக இருக்கிறது. எனவே தாங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி நதிநீர் ஆணைய உத்தரவையும் நறைவேற்றுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என வேலூர் சிறைக் கோட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் திரு. வைகோ இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கு மடல் எழுதியிருக்கிறார்.
கடலூர், வேலூர் மற்றும் சென்னை சிறைகயில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கைதிகள் நெய்வேலிப் போராட்டத்தை ஆதரித்தும் கர்நாடகம் காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்றும் கூறி ஒரு நாள் உண்ணா நோன்பை மேற்கொண்டார்கள்.
”இப்போது காவிரி நதி நீர் பிரச்னைப் பற்றியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறப்படுவது பற்றியும், கர்நாடக அரசின் அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு எதிரான நடத்தையைப் பற்றியும் தமிழ்த் திரையுலகமே பேசுகிறது.”
”ஆம். எல்லோரும் பேசுகிறார்கள்; பேசட்டும்… எல்லோரும் பேசட்டும்; பேசவேண்டும். இதைத்தான் விரும்பினேன். இதுதான் எனது நோக்கம். அது பூரணமாக முழுவதுமாக நிறைவேறிவிட்டது. இதற்காக தமிழ்த் திரையுலகில் உள்ள அனைவருக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி சொல்கிறேன்” எனப் பாரதிராசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
”பிரச்னையை என் பக்கம் திருப்பாதீர்கள், காவிரி நீர் பக்கம் திருப்புங்கள்” என்று பாரதிராசா உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ”உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதைத் தொடர்ந்து தொலைபேசியிலும் கடிதங்களிலும் உறுதி செய்து கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.
காவிரிச் சிக்கல்பற்றி கிஞ்சித்தும் அக்கறையின்றி. அப்படி ஒரு சிக்கலே இருப்தைக் கண்டு கொள்ளாது வாய்மூடி மவுனியாக இருந்த சில சோற்றுப் பிண்டங்கள் பாரதிராசா நெய்வேலிப் போராட்ட மேடையில் கலைஞர் கருணாநிதியையும் ரஜினிகாந்த்தையும் விமர்ச்சித்தார் என்ற காரணத்துக்காக அவரை சொல்லாhல் அடித்துக் காயப் படுத்தினார்கள்! அவரது சொந்தக் கிராமத்தில் உள்ள வீடு கல்லெறிக்கு ஆளானது!
ஞாயிறு (ஒக்தோபர் 15) முழுநேரமும் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்துக்குச் சொந்தமான சன் தொலைக்காட்சி பாரதிராசவைக் குறிவைத்து நேர்காணல் என்ற போர்வையில் நடிக நடிகைகளைப் பேச வைத்து அவரது மனதைக் காயப்படுத்திக் கொண்டிருந்தது.
நாலு நாயகர்களை இதுவரை மணம் முடித்து பாஞ்சாலியின் சாதனையை உடைக்க இன்னும் ஒருவர் மட்டும் மிச்சம் வைத்திருக்கும் மூன்றெழுத்து நடிகை ஒருவர் ” பாரதிராசா (ஜெயலலிதாவிடம்) பெட்டி வாங்கிக் கொண்டுதான் காவேரிப் போராட்டம் நடத்தினார்” என்று சன் தொலைக்காட்சியில் வாந்தி எடுத்தார்!
இயக்குனர் பாரதிராசாவை தொலைபேசி மூலம் நேரில் பாராட்டியவர்களில் நானும் ‘முழக்கம்’ ஆசிரியர் திருவும் அடக்கம். உலகம் வாழ் தமிழர்கள் அவருடன் தொலைபேசி மூலமும் மடல்கள் வாயிலாகவும் பாராட்டுத் தெரிவித்தது காயப்பட்ட அவரது மனதுக்கு ஒத்தடமாக இருந்திருக்கும்!
ஆனால் இந்த வசைகளைப்பற்றி பாரதிராசா கவலைப்படுபவர் அல்ல அல்லது சோர்ந்து போய் மூலையில் முடங்கி விடுபவர் அல்ல.
” எங்களைப் பொறுத்தவரை காவிரி நதிநீர் பிரச்சினை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி எங்களது பயணம் தொடரும். என் மீது படுகிற கல்லடியோ, சொல்லடியோ நான் பொறுத்துக் கொள்கிறேன்” என அடக்கத்தோடு சொல்லி இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் உண்ணா நோன்புப் போராட்டம் எதைச் சாதிக்காவிட்டாலும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தை அரசியல் அடிப்படையில் அதிமுக திமுக எனப் பிளவுபட வைத்துவிட்டது. அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் நடிகர் சங்கத்தில் பதவி வகிக்கக்கூடாது என விஜயகாந்த் நெய்வேலிக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று சொன்ன ரஜினிகாந்த் தனது வார்த்தையை மீறித் தன்னிச்சையாகச் செயல்பட்டார்.
ஒருவர் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருந்தால் அந்த அமைப்பு எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படல் வேண்டும். அதுதான் முறை. அதுதான் பண்பாடு.
ஆனால் ரஜினிகாந்த் ‘என்வழி தனிவழி’ என்ற ஆணவம் (ego)காரணமாகத்தான் நெய்வேலிப் போராட்டத்தைப் புறக்கணித்துவிட்டு சென்னையில் உண்ணா நோன்பு இருந்தார்.
நெய்வேலிப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்களும் நடிகைகளும் மரியாதை நிமித்தமாக உண்ணா நோன்பு இருந்த ரஜினிகாந்தைப் பார்த்து தங்கள் வாழ்த்தைத் தெரிவித்தார்கள்.
ஆனால் எந்த நட்சத்திர நடிகர்களோ நடிகைகளோ அவரோடு சேர்ந்து காலை தொடங்கி மாலை வரை இருக்கவில்லை. வெறுமனே முகத்தைக் காட்டிவிட்டுப் போய்விட்டார்கள். கன்னட நடிகர் விஜயகுமார் மற்றும் கார்த்திக் மட்டுமே ரஜினிகாந்த்தோடு முழு நேரமும் மேடையில் இருந்தார்கள்.
அரசியல்வாதிகளும் அப்படித்தான். முதலில் உண்ணா நோன்பு மேடைக்கு வந்த திரு. ப.சிதம்பரம் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எழுந்து போய்விட்டார்.
இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த ஈ.வே.க. இளங்கோவன், சோ. பாலகிருஷ்ணன், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எல். கணேசன், திமுகவைச் சேர்ந்த மு.க. ஸ்டாலின். டிஆர்.பாலு போன்ற அரசியல்வாதிகள் வரிசையாக வந்து ரஜினிகாந்த்தைக் கும்பிட்டுவிட்டுப் போனார்கள்.
இந்திய காங்கிரஸ் தலைவர்களும் பாரதிய ஜனதா தலைவர்களும் ரஜினிகாந்தை ”காக்காய்” பிடிப்பதன் பொருள் புரிகிறது.
அவர்கள் ரஜினிகாந்தை தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் வாக்குகள் காய்த்துக் குலுங்கும் மரமாகப் பார்க்கிறார்கள்.
ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி. இமயமலையில் இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் பாபா பக்தர். நெற்றியில் பட்டை, கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை கட்டிக் கொண்டு திரிபவர். எனவே அவரது ஆதரவு தங்களுக்கு என்று காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் நினைக்கின்றார்கள்.
ஆனால் திமுக தலைவர்கள்? நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொசிவதுபோல ரஜினிகாந்த்தின் அருட்பார்வை தங்களது பக்கமாகவும் படும் என்ற நப்பாசை அவர்களுக்கு.
திமுக தலைவர்கள் இப்போது பகுத்தறிவு, தமிழ் உணர்வு என்பதையெல்லாம் மூட்டை கட்டி பரணில் வைத்து விட்டார்கள்.
இளவரசர் ஸ்டாலின் தனது மனைவி துர்க்கா சகிதம் காஞ்சி காமகோடி சரஸ்வதி சங்கராச்சியாரைப் பார்த்து ஆசி பெற்றிருக்கிறார்கள். இந்தச் செய்தியை காஞ்சி சங்கராச்சியாரே கலைஞர் கருணாநிதியின் வாயை அடைக்க வெளியிட்டிருக்கிறார்!
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் திரைப்பட நடிகர் இயக்குனர் டி. இராசேந்திரர். நெய்வேலிப் போராட்டத்திற்குப் புறப்பட்ட இவர் தன்னை ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை என்று கோபித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார். இவரது தகுதி என்ன தெரியுமா? ஆண்டு தோறும் தவறாமல் ஐயப்பசுவாமிக்கு இருமுடி தரித்து மாலை போட்டு சபரிமலை ஏறுவது!
ஆனால் கலைஞர் கருணாநிதியோ தனது கொள்கை பரப்புச் செயலாளர் கோவில் குளம் என்று அலைவதைப் போல அலையும் ஜெயலலிதாவை வறுத்து எடுக்கிறார். இது என்ன நியாயம்? ஆளுக்கொரு நீதியா?
செய்தியாளர்: தங்களிடமிருந்து தங்கள் குடும்பத்தாரிடமிருந்தும் அண்ணாவின் கொள்கைகளைக் காப்பாற்றிவிட்டதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளாரே, அது என்ன அண்ணாவின் கொள்கை?
கலைஞர் கருணாநிதி: இது தெரியாதா? மூகாம்பிகை கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்வது, மைசூர் சாமுண்டீசுவரி ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் நடத்துவது, காஞ்சி சங்கராச்சாரியாரை தரிசிப்பது, குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை கொடுப்பது, கும்பகோணம் மகாமகத்தில் திறந்தவெளிக்குளியல் நடத்துவது, யாகங்கள் செய்வது, ஓமங்கள் வளர்ப்பது, கோவில் குடமுழுக்கு விழாக்களில் தமிழ்மந்திரம் தடுப்பது, பிறந்த நாளில் மண் சோறு சாப்பிடுவது, கோவில்களில் பால்குடம் தூக்குவது, காவடி எடுப்பது, வேப்பஞ்சேலை கட்டி ஆடுவது, தீ மிதிப்பது, இவைகள் எல்லாம் ®பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி® என்று தன்னைத்தானே சட்டப் பேரவையில் புகழ்ந்து கொண்ட ஜெயலலிதா பார்வையில் அண்ணாவின் கொள்கைகளாகும்.”
ரஜினியின் உண்ணா நோன்பை நேரடி ஒளிபரப்புச் செய்த சன் தொலைக்காட்சி பாரதிராசாவை ‘வில்லன்’ ஆகக் காட்ட மெத்தவும் பாடுபட்டது. அந்தக் கைங்கரியத்தை செய்தவர் வேறு யாரும் அல்ல. தன்னை தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரியாக வெளிப்படையாகக் காட்டிக் கொண்ட தூக்குக் கயிறு புகழ் மாலன்தான். முன்னாள் குமுதம் ஏட்டின் ஆசிரியரான இவர்தான் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி. கலைஞர் கருணாநிதியின் மருமகன் அமைச்சர் மாறனின் மகன் கலாநிதிதான் அதன் தலைவர்.
கலைஞர் கருணாநிதியின் குடும்பம் ரூபா 3,000 கோடி பெறுமதியான ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சொந்தக்காரர்களாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இதையும் அப்போலோ மருத்துவ மனையைப்போல் ஒரு தெலுங்கனோ கன்னடக்காரனோ சொந்தமாக்கி இருந்தால் தமிழர் இழித்தவாயர் என்ற பட்டத்தை சுமந்திருப்பார்கள்.
ஆனால் சன் தொலைக்காட்சி தமிழுணர்வையும் தமிழ் தேசிய உணர்வையும் மழுங்கடிக்கத் தன்னாலன திருத்தொண்டைச் செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் சென்ற மாதம் கால் பதித்த இந்தத் தொலைக்காட்சி விரைவில் கனடாவிலும் கால் பதிக்க இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை தமிங்கிலம் மற்றும் அம்மாமித் தமிழ் மூலம் மழுங்கடித்துக் கொண்டிருக்கும் இந்தத் தொலைக்காட்;சி கனடாவிலும் தேவையா? என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.
காவிரிச் சிக்கல் இன்னும் முடியவில்லை. கலைஞர் கருணாநிதி எதைச் சொன்னாலும் காவிரிச் சிக்கலில் பிரதமர் வாஜ்பாய் தமிழக நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் சட்ட அமைச்சருமான திரு. ஜனா கிருஷ்ணமூர்த்தி காவிரிச் சிக்கலில் மத்திய அரசு தலையிடாது என்று கையை விரித்து இருக்கிறார். இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாவிட்டால் வேறு யார்தான் அதனை நடைமுறைப்படுத்துவது?
காவிரி நீருக்கான நெய்வேலிப் போராட்டம் தமிழ்த் தேசியவாதிகள் யார்? தமிழுணர்வாளர்கள் யார்? அவர்களின் எதிரிகள் யார்? என்பதைத் தெளிவாக்கி விட்டது. தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பகை முடிக்க தமிழ்ப் படை அணிதிரள வேண்டிய நேரம் இது.
(முழக்கம் – ஒக்தோபர் 18,2002)
Leave a Reply
You must be logged in to post a comment.