பொதுவுடமை பாடிய புரட்சிக் கவிஞர்

பொதுவுடமை பாடிய புரட்சிக் கவிஞர்

சார்வாகன்

இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால்
அண்டை வீட்டானுக்கு ஒன்று அளித்தல் சோஷலிசம்
கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்றுக்
காளை வாங்குவது காபிடலிசமாம்
அவ்விரண்டினையும் ஆள்வார்க்கு விற்றுத்
தேவைக்குப் பால்பெறச் செப்பல் கம்யூனிசம்.

இவ்வளவு எளிதாக உலகின் மூன்று வகைப் பொருளியல் சித்தாந்தங்களை விளக்கியது யார்?

கம்யூனிசம் என்றால் என்ன என்பதைப் பற்றிப் பலபேர் எழுதியிருக்கிறார்கள். இராகுலசாங்கிருத்யாயனிலிருந்து ஏ.எஸ்.கே. வரையும் எழுதியிருக்கிறார்கள். “கம்யூனிசத் தத்துவங்கள்” என்று தந்தை பெரியார் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். 1931 இல் சோவியத் நாட்டுக்குப் போய் வந்ததன் தாக்கத்தால் இந்த நூலையும் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரகடனத்தையும் அய்யா வெளியிட்டார் என்று சிலபேர் இன்றைக்கும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

நூல்களை வெளியிட்ட பின்னர்தான் பெரியார் சோவியத்துக்குப் புறப்பட்டார். பதிப்புத் தேதியையும், பயணத் தேதியையும் பார்த்தால் புரியம்.

அது போலவே, பொது உடைமையை யாரோ ஒரு கவி பாடியதாகக் கூறிக் கொண்டு சிலர் இருக்கிறார்கள். புரட்சிக் கவிஞர் பொது உடைமையைப் பற்றிப் பாடியதைப் பாராமல் பேசுகிறார்கள். அல்லது பார்த்தும் மறைத்துப் பேசுகிறார்கள். அவரது பெருமையைக் குறைப்பதாக – மறைப்பதாக – அவர்களுக்கொரு எண்ணம். சிறு மகிழ்ச்சி.

புரட்சிக் கவிஞரின் கோபம்!

“பொது உடைமைக்குப் பகைவனா நான்? பொது உடைமைக்காரர் எனக்குப் பகைவரா? இல்லவே இல்லை. இரண்டும் சரியில்லை. பாரதி பாட்டில் பற்றிய பொது உடைமைத் தீ என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்து கொளுந்து விட்டெரிந்து தொழிலாளரிடத்தும் உழைப்பாளரிடத்தும் உணர்வில் உணர்ச்சியில் மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யாரே?’’ எனக் கேட்கிறார், புரட்சிக் கவிஞர்.

மறுப்பவர் வெளியில் தெரியவில்லை. மறைப்பவர் நிறையப் பேர். “அட்டை” போன்ற குருதி குடிக்கும் ஒரு இனமே உண்டு. ஆனாலும் அவர் “ரேடியம்” இருட்டிலும் மின்னுகிற ரேடியம். “இருட்டடிப்பு செய்தாலும் மின்னுகிற ரேடியம்” அவர் ஒரு கவிஞர் எழுதியதைப் போல.
அன்றே பாடினார்…

சோவியத் புரட்சி 1917 இல்! புரட்சிக் கவிஞர் பாடினார் – புரட்சித் தலைவனை லெனினை – வாழ்த்திப் பாடினார்.

யுகமாகி நின்ற லெனின்
உலகாகி நின்ற லெனின்
உறவாகி நின்ற லெனினே!
அகமாகி நின்ற லெனின்
அறிவாகி நின்ற லெனின்
அரசாள வந்த லெனினே!

எனப் பாடினார். 1918 இல் பாடினார்! கொண்டாட வேண்டியவர்கள் கொண்டாடுவது கிடையாது. ஏன்? மாறாக, “கொலையாலும் கொள்ளை யாலும் அன்பையும் சமத்துவத்தையும் °தாபிக்கப் போகிறோம் (உழைக்கும் மக்களின் புரட்சியைக் குறிக்கிறார்) என்று சொல்வோர், தம்மைத்தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்” என எழுதியவரைக் கொண்டாடுகிறார்கள். கொடுமையல்லவா? சொன்னால், நாம் ஜாதி பார்க்கிறோம் என்று நம்மீதே குற்றம் சாற்றுகிறார்கள்.

காதலில் கூட…

கதைக் காப்பியம் ஒன்று எழுதுகிறார். புலன் பார்வை அற்றவன் எனச் சொல்லிப் பாடம் சொல்லித்தரச் சொல்லுகிறார்கள் – மாணவி இளம்பெண் என்பதால். நிலவின் அழகை ஆசிரியன் பாட மாணவியான மன்னன் மகள் கேட்கிறார். இருவருக்கும் இடையே இருந்த திரையை விலக்கிக் பார்க்கிறார். காதல் வயப்படுகிறார். வாழ்வில் இணைய எண்ணம் கொண்டு, கூறுகிறார்.-

சாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும்
போதாக் குறைக்குப் பொதுத் தொழிலாளர் சமூகம்
மெத்த இழிவென்றும் மிகப் பெரும்பாலோரை யெலாம்
கத்திமுனைகாட்டிக் காலமெலாம் ஏய்த்து வரும்
பாவிகளைத் திருத்தப் பாவலனே நம்மிருவர்
ஆவிகளையேனும் அர்ப்பணம் செய்வோம்.

எனப்பாடுகிறார் கவிஞர்

காதல் போயின் சாதல் என முடி வெடுக்கவில்லை. சாதல், சமுதாயச் சீர்கேட்டைக் களையப் பயன்படட்டுமே என்கிறார் . தொழிலாளரை இழிவுபடுத் தும் “பாவி” கள் என்கிறார். இவர் போற் றப்பட வேண்டிய அளவுக்குப் புகழப்பட வில்லையே, ஏன்?

புவியில் சமூகம் இன்பம் பூணல் சமத்துத்தால்
கவிழ்தல் பேதத்தாலடி சகியே – பேதத்தாலடி.

என எழுதினார். பேதம் என்றால், ஜாதி பேதம், மதபேதம், பாலினப் பேதம், பொரு ளியப் பேதம் போன்ற எல்லாவகைப் பேதங்களையும்தான் குறித்தார். பேதங் களே இல்லை என்று கூட ஒருவர் எழுதி னார். “ஹிந்து ஜன சமூக அமைப்பில் அய்ரோப்பாவில் இருப்பது போலவே அத்தனை அதிகமான தாரதம்மியம் இல்லை. முதலாளி- தொழிலாளி, செல்வன் ஏழை இவர்களுக்கிடையே அய்ரோப்பாவில் உள்ள பிரிவும் விரோதமும் நம் தேசத்தில் இல்லை. ஏழைகளை அங்குள்ள செல்வர் அவமதிப்பது போல் நம் நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது. ஏழைகளுக்குத் தானம் கொடுப்பது என்ற வழக்கம் நமது தேசத்தில் இருக்குமளவு அந்தக் கண்டத்தில் கிடையாது” என்று அவர் எழுதினார். (பார்க்க: பாரதி கட்டுரைகள்)
அபேத வாதம்

இந்த அறுதியிட்ட முடிவை அவர் வெளியிட்ட பின்னர்தான் இந்தியாவில் பொது உடைமை இயக்கம் தோன்றியது. பாரதியைச் சிலாகித்து மயிர் சிலிர்த்துப் போகிறவர்கள் எப்படி ‘அபேதவாதம்’ பேசலாம்? அபேத வாதம் பேசிய புரட்சிக் கவிஞரின் பார்வையில் புரை வளர ஆரம்பித்ததாம் – பகுத்தறிவுக் குழுவினனாக மாறியபின்! பகுத்தறிவுக் கொள்கை புரையாம்! அது இல்லாமல் எட்டுக்குடி முருகனுக்குக் காவடி எடுத்து காவடியில் கொடி கட்டியது என்ற நிலை எல்லாம் கொள்கையை வளர்க்கவில்லை என்பதுதானே நாடு கண்ட மெய்ம்மை நிலை!

வருணமும் ஜாதியும் ஒழிக்கப்படும் வரை பொது உடைமைச் சமுதாயம் அமைதல் சாத்தியமில்லை, அப்படியே ஒரு வேளை சாத்தியமாயினும் அப்பொது உடைமை உயர் ஜாதிக்காரர்களின் நலனுக்கே வழி வகுக்கும் என்று பெரியார் தெரிவித்தாரே, மறுக்க முடியுமா?

பாதிக்குதே பசி என்றுரைத்தால் செய்த
பாபத்தைக் காரணம் காட்டுகிறார் – மத
வாதத்தை உம்மிடம் நீட்டுவார் – பதில்
ஓதி நின்றால் படை கூட்டுவார்’’
எனப் புரட்சிக் கவிஞர்.
நம் நாட்டு நிலையைப் படம் பிடித்தாரே,
தப்பென்று கூற முடியுமா?
எல்லாம் கடவுளாலா?
நடவு செய்த தோழர் கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பிலாத செல்வர்
ஊரையாண்டுலாவலும்
கடவுளாணை என்றுரைக்கும்
கயவர் கூட்டம் மீதிலே
கடவுளென்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்’’

என்று பாடினாரே! எல்லாம் அவன் செயல் என்ற சொற்களும், “இன்ஷா அல்லாஹ்” என்பதும் இன்னமும் இருக்கின்றனவே! நம் நிலைக்குக் காரணம் கடவுள் செயல், தலைவிதி, தலை எழுத்து என்றெல்லாம் கற்பித்தால் – கர்ம பலனை ஏற்றுக் கொண்டால் – ‘கம்முனு’ கிடக்க வேண்டுமே தவிர புரட்சி எப்படிச் செய்யமுடியும்? புரட்சிக்கு எப்படி வருவார்கள்? நம்மால் ஆவது ஒன்றுமில்லை எனும் பழைமைக் கருத்தை மாற்றுவதுதானே பகுத்தறிவு! அதைக் கடைப்பிடித்தால் புரை வளர்ந்தது எனப் பேசினால் என்ன ஆய்வு? என்ன விமரிசனம்?

லெனின் வழி சரியில்லை!

“கொலையாளிகளை அழிக்க கொலையைத்தானே கைக்கொள்ளும்படி நேருகிறது. அநியாயம் செய்வோரை அநியாயத்தால்தான் அடக்கும்படி நேரிடுகிறது என்று சிறீமான் லெனின் சொல்கிறார் – இது முற்றிலும் தவறான கொள்கை” என எழுதினாரே (28.-11.-1917 இல்) நவம்பர் புரட்சிக்குச் சரியாக மூன்று வாரங்களுக்குப் பிறகு – இது புரையோடிய பார்வையா? பூ விழுந்த பார்வையா?

“லெனின் வழி சரியான வழியில்லை” என்றும் எழுதினாரே சி.சு.பாரதி! அதற்குப் பின்னரும் லெனினைப் போற்றி, அவரைப் படிப்பதையே முழுநேரப் பணியாகக் கொண்ட மாணவர்கள் பாரதியைப் புகழ்வது – பாரதியை மட்டுமே புகழ்வது – முரண் அல்லவா? லெனினுக்குச் செய்யும் துரோகமல்லவா?

“எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமையெலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே”

எனப் பாடினாரே புரட்சிக் கவிஞர்! பொது உரிமையும் பொது உடைமையும் என்றார் பெரியார்! பெரியாரின் “அரசவைக் கவிஞர்” அதையே பாடி வைத்தார். பொது உரிமையைப் பேசாதவர்களால் அவரை ஏற்க முடியவில்லை என எடுத்துக் கொள்ளலாமா? பொது உரிமை மறுக்கப்படுவது – காலில் பிறந்த கடையர்கள் என மார்க்சே எழுதிக் காட்டினாரே அவர்கள் எல்லா உரிமையும் மறுக்கப்படுவது இந்திய மண்ணுக்கே உரிய வருண ஆதிக்கமல்லவா? வேறு வகையில் சொன்னால் வருணங்கள் தானே இங்கே வர்க்கம்?

உடைமை பொது

உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய்
புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது

என்றார் புரட்சிக் கவிஞர்.

சமூகச் சீர்திருத்தத்தின் எல்லை பொது உடைமை எனப் பெரியார் சொல்வார். அந்த வகையில் பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே பொது உடைமைக்காரர்கள்! அதைத்தான் புரட்சிக் கவிஞர் பாடினார். ஆனால் “பூர்வீக காலம் முதல் பரம்பரை பரம்பரையாக வழங்கி வரும் சொத்தை ரஷ்யா முதலிய தேசங்களில் நடப்பது போல் நீங்கள் பலாத்காரமாக, எங்களைக் கொன்றும், சிறையிலிட்டும் எங்களிடமிருந்து பறித்துக் கொள்வது நியாயம் இல்லை” என்று எழுதியவர் “அகவய இயக்கத்தைக் குறிக்கோள், கனவுகளால் துரிதப்படுத்தினர். இதுதான் மார்க்சியத்தின் சிந்தனைப் புரட்சி” என்று பூரித்துப் புளகாங்கிதம் அடைகிறார்களே, சரியா? இவர்களின் பூரிப்புக்குக் காரணமான கவிஞர்களின் பட்டியலைப் பாருங்கள் – கம்பன், ஷெல்லி, புஷ்கின், வால்ட் விட்மன், பாரதி.

இதிலே ஷெல்லி சரி, புஷ்கின் சரி, வால்ட் விட்மன் சரி! பாரதி எப்படி இடம் பெறமுடியும்? பொது உடைமைபை; புரட்சியை நியாயம் இல்லை எனும் நபர், எப்படி மார்க்சியத்தின் சிந்தனைப் புரட்சியைத் துரிதப்படுத்தியவர்? அதைவிடக் கொடுமை – ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கம்பன் 19 ஆம் நூற்றாண்டின் மார்க்சியச் சிந்தனைப் புரட்சியை விரைவுபடுத்திய ஆளா? “இல்லாருமில்லை, உடையார்களும் இல்லை மாதோ” என்று அவன் எழுதிய கதையின் நாயகனின் நாட்டைக் கற்பனையில் எழுதிக் காட்டினவன். எல்டொரொடோவில் தங்கச் சுரங்கம் உள்ளது என்பது போன்ற கற்பனையைச் சிந்தனைப் புரட்சி என்றால் புரட்சியே கேலி செய்யப்படுகிறதே! உடோபியன் சோஷலிசம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அந்த ஏட்டுச் சுரைக்காய் கறிசமைக்க உதவாது என்பது யாவர்க்கும் தெரியும்.


புரட்சிக் கவிஞரும், தந்தை பெரியாரும்

(தஞ்சை தமிழ்ப் பல் கலைக் கழகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அறக் கட்டளை சார்பில் மொழிப் புலக் கருத்தரங்கக் கூட்டத்தில் நடைபெற்ற பாரதிதாசன் கருத்தரங்கில் தந்தை பெரியாரும் – புரட்சிக் கவிஞரும் எனும் தலைப்பில் துரை சந்திரசேகரன் படித்தளித்த கட்டுரை)

பாரதிதாசன் – இருண்டு கிடந்த தமிழ்நாட்டு இலக் கிய வானில் ஒளிச்சுடர் என இருளைக் கிழித்துக் கொண்டு வெளிக் கிளம் பிய ஞானசூரியன் மருண்டு வாழ்ந்திருந்த தமிழ் மக் களை மடமைகளிலிருந்து வெளிக்கொணர்ந்த விடி வெள்ளி தன்மான உணர்வின்றி தளர்ந்து கிடந்திட்ட தமிழர் தம் நீடு துயில், நீக்கப் பாடிவந்த – நிலா பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைப்போருக்கு சங்காரமே நிசம் என்று போர்ச்சங்கு முழங்கிய புரட்சிப் பாவலர் ‘புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்! என்று ஆர்ப்பரித்து போர் முரசு கொட்டிய புதுமைக் கவிஞன்.

‘போர் வெறி கொண்டலையும் பேதை உள்ளத்தினர் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கின்றனர் உலகில்! இன்றைக்கும் தேவைப் படும் கவிஞன் புரட்சிக் கவிஞனே! இவரின் பாடல் வரிகள் உலகினை வழி நடத்தும் ஒப்பற்ற லட்சிய கீதங்கள்! பழைய கால புலவர்கள், பண்டித சிரோன்மணிகள் என்போரின் மரபுகளை உடைத்தெறிந்தவர் பாவேந்தர் கைலாயம் சேர்ந்து கதி மோட்சம்பெற கடவுளைப் பாடியோர் உண்டு. பொன்னும் பொருளும் பெற மன்னரை வாழ்த்தியோர் உண்டு. பரிசில்கள் பல பெற்று வளத்தோடும் நலத்தோடும் வாழ்வு அமைய வள்ளல்களைப் பாடிப் போற்றியோர் உண்டு.

இப்படி பாரம்பரிய புலவர்களின் குணாம்சத்தை உதறித் தள்ளி மக்களின் அடிமை வாழ்வு அகல – அறியாமைப் பிணி நீங்க அறிவுப்பசி அடங்க – தக்கநெறி, பெரியார் தம் பகுத்தறிவு நெறியே ‘சரி” என உணர்ந்து, தேர்ந்து தமது பாட்டுத் திறத்தை வெளிப்படுத்தியவர் பாரதிதாசன்.

சாக வேண்டிய தமிழர் சாகிலர்! வீழவேண்டிய தமிழர் வீழ்கிலர்! வறள வேண்டிய தமிழகம் வறண்டிலது. காரணம் பெரியார் கண்காணிப்பே! என்று பெரியாரை அடையாளப்படுத்தி – மொழி நலன், இன நலன் பேணிடப் பெரியாரை துணை கொள்வீர் என மக்களுக்கு புதுவழி காட்டியவர் புரட்சிக் கவிஞர்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரான தந்தை பெரியார் எந்த ஒரு கருத்தை பின்பற்ற வேண்டுமெனிலும், அமைப்பை – தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும், எந்தவொரு லட்சியத்தை ஒழுகிடுவதென்றாலும், அதனை அறிவு – ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, ஆய்ந்து – தேர்ந்து – தெளிந்த பின்பே, அதாவது சொந்த பகுத்தறிவுக்கு சரி எனப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும், பின்பற்றி ஒழுகிடவேண்டும் என்பார்.

“அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காகவோ, 2000 ஆண்டுகட்கும் முந்தைய பழைமையானது என்பதற்காகவோ, மகான்களால், மகாத்மாக்களால் பேசப்பட்டது என்பதற்காகவோ, கடவுள்களால் அருளப்பட்டது என்பதற்காகவோ எந்தவொரு கருத்தையும் ஒத்துக்கொள்ளக்கூடாது” என்று பெரியார், பகுத்தறிவின் சிறப்பை வெளிப்படுத்தினார். இக்கருத்தினை அப்படியே வழிமொழிந்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதையாக்கிய விதம் நம்மை வியக்க வைக்கிறது.

“பழைய நூற்கள் இப்படிப் பகர்ந்தன என்பதால் எதையும் நம்பி விடாதே! உண்மை என்று நீ ஒப்பிவிடாதே! பெருநாளாகப் பின் பற்றப்படுவது வழக்கமாக இருந்து வருவது எதையும் நீ நம்பி விடாதே! உண்மை என்று நீ ஒப்பிவிடாதே! பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர் இருப்பவர் பலரும் ஏற்றுக்கொண்டனர் என்பதால் எதையும் நீ நம்பிவிடாதே! பின்பற்றுவதால் நன்மையில்லை! ஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர் இனிய பேச்சாளர் என்பதற்காக எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்! ஒருவர் சொன்னதை உடன் ஆராய்ந்து பார் அதனை அறிவினாற் சீர்தூக்கிப்பார்! அறிவினை உணர்வினால் ஆய்க! சரி எனில் அதனால் உனக்கும் அனைவருக்கும் நன்மை உண்டெனில் நம்பவேண்டும். அதையே அயராது பின் பற்றி ஒழுகுக!

வள்ளுவப் பெருந்தகையின் வாக்கான, “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு! எப்பொருள் எத்தன் மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்னும் குறட்பாக்களுடன் புரட்சிக் கவிஞர் தம் பாடல் வரிகளை பொருத்திப் பார்த்தலும் ஈண்டு சிறப்பே ஆகும்.

மக்களின் சிந்தனையறிவாம் பகுத்தறிவை பயன் படுத்தவொட்டாமல் தடுத்திட்ட சூதுமதியினர் யார்? தமிழர் அறிவை பாழ்படுத்தி மூளைக்கு விலங்கு மாட்டிய கூட்டம் எது? அக்கூட்டத்தின் சூழ்ச்சிக்கான ஆயுதம் எது? ஒடுக்கப்பட்ட மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்திட்ட கற்பனை வடிவம் எது? ‘கடவுள்.. கடவுள்…! ஆம்! மூடநம்பிக்கைகளின் தலைமையான மூடநம்பிக்கையே ‘கடவுள்’தான் என்பது தந்தை பெரியாரின் கணிப்பு. கடவுள் கொள்கை தகர்க்கப்படும் அன்றேதான் கட்டற்ற சிந்தனையின் பிறப்பிடமாக இருக்கமுடியும் என்றார் பெரியார்!

கடவுள் இல்லை.. இல்லவே இல்லை.. என சாகும்வரை பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்திட்டார் பெரியார்! இல்லை என்போன் நானடா? அந்த தில்லை கண்டு தானடா! தீட்சதரின் சொல்லில் செயலில் – கடவுள் இல்லை என்பேன் நானடா? தில்லை கண்டு தானடா? கடவுள் கடவுள் என்றெதற்கும் கதறுகின்ற மனிதர்காள் கடவுள் என்ற நாம தேயம் கழறிடாத நாளிலும் உடைமை யாவும் பொதுமையாக உலகு நன்று வாழ்ந்த தாம் ‘கடையர்” ‘செல்வர்” என்ற தொல்லை கடவுள் பேர் இழைத்ததே.

இப்படி பல்வேறு பாக்கள் மூலம் கடவுளை மறுத்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கடவுள் கொள்கையை உருவாக்கி மக்களின் அறிவு மேம்பாட்டை தடுத்திட்டவர்கள் பார்ப்பனர்களே என்றும் பறைசாற்றி பெரியாரின் கருத்துக்கு வலுவூட்டுவதைப் பாருங்கள்.
தென்கலைப் பார்ப்பான் வடகலைப் பார்ப்பான் சைவப் பார்ப்பான் எப்பார்ப்பாரும் தமிழர் தலை தடவப் பார்ப்பாரே!
பார்ப்பான் பால் படியாதீர் சொற்குக் கீழ்ப் படியாதீர்! உம்மை ஏய்க்கப் பார்ப்பான் தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் உம் நன்மையிலே ஆர்வமிக உள்ளவன் போல் நம்ப வேண்டாம்..
தமிழர் கடன் பார்ப்பானைத் தரைமட்டம் ஆக்குவதே!

அடடா.. என்ன ஆவேசம்! ஊர்ப்பானை திருடுகின்ற கூட்டத்தை அம் பலப்படுத்துவதில் கவிஞருக்கு எத்துனை ஆர்வம்! பெரியார்தம் ஈரோட்டு கண்ணாடியை அணிந்து சமுதாயத்தைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆவேசம் சாத்தியம்! (தொடரும்)


புரட்சிக் கவிஞரும், தந்தை பெரியாரும் (2)

தஞ்சை தமிழ்ப் பல் கலைக் கழகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அறக் கட்டளை சார்பில் மொழிப் புல கருத்தரங்க கூட்டத் தில் நடைபெற்ற “பாரதி தாசன் விழா கருத்தரங்கில் தந்தை பெரியாரும் – புரட்சிக் கவிஞரும் எனும் தலைப்பில் துரை சந்திர சேகரன் படித்தளித்த (18.7.200 ‘விடுதலை’யில் வெளிவந்த) கட்டுரையின் தொடர்ச்சி வருமாறு:

மதம் யானைக்குப் பிடித்தால் காடே அழியும், மனிதனுக்குப் பிடித்தால் நாடே அழியும் என்பது புதுமொழி அண்மைக் காலமாக இந்திய துணைக் கண்டத்தில் மதம் பீடித்த மனிதர்களின் குருதி வெறியை குவலயமே கண்டு நாணிடவில்லையா? நகைத்திடவில்லையா? ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட் டதும், கன்னியாஸ்திரிகள் மத்திய பிரதேசத்தில் பாலி யல் பலதாத்காரம் செய் யப்பட்டதும், குஜராத்தில் மதக்கலவரத்தால் குருதிப் புனல் கொந்தளித்ததும் எதனால்? மதத்தினால் தானே!
அதனால்தான் பகுத் தறிவுப் பகலவன் பெரியார் சொன்னார்- “மதம் அற்ற இடத்திலேதான் மனித சமத்துவம் காணமுடியும் என்று! அக்கருத்தை வர வேற்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்-

“மத ஓடத்தில் ஏறிய மாந்தரேபலி
பீடத்திலே சாய்ந்தீரே!”

என்று அன்றே அடை யாளப்படுத்தினார் போலும்!

மதம் ஏற்படுத்திய கேடு களில் மிகப்பெரிது ஜாதி, ‘ஜாதி என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல, ‘ஜாதி ஆதியில் தமிழனுக்கு இல்லை ஜாதியைப் புகுத்தி மக்கள் ஒற்று மையை சிதைத்தது மதமே! வளர்ந்திட வேண்டிய தமி ழினம் வளராமல்தமக் குள்ளே பேதா பேதம் காட்டி அடித்துக் கொண்டு அவலத்தில் ஆழ்திடுவதற்கு ‘ஜாதி தானே காரணம்!

எனவேதான் சிந்தனையின் ஊற்றான பெரியார், ஜாதி ஒழிப்புப் போராட் டத்தை நடத்திபல்லாயிர வரை சிறை பெரியார் நெறியை பின்தொடர்ந்த பாவேந்தர் பாரதிதாசன்-

இருட்டறையில் உள்ள தடா உலகம்-ஜாதி
இருக்கின்ற தென் பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே
சுருட்டுகிறார் தம் கையில் கிடைத்தவற்றை
சொத்தெல்லாம் தம தென்று சொல்வார்தம்மை
வெறுட்டுவதே பகுத் தறிவு இல்லையாயின்
விடுதலையும் கெடு தலையும் ஒன்றேயாகும்.

என்று ஜாதியை, மதத் தலைவரை, சுரண்டல் காரர்களை சாடினார் நம் அடிமைத்தனம் அகல வேண்டுமாயின் ஜாதி, மதம் ஒழிந்திட வேண்டும் என்றும் அறிவுறுத்துவதை பாருங்கள்.

“சாதிஅற்ற இட மல்லவோ அன்பு வெள் ளம்
அணைகடந்து விளை நிலத்தில் பாயக் கூடும்!
சர்க்கரைப்பந் தலிலே தேன் மாரி பெய்யும்
சாதிவெறி சமய வெறி தலைக விழ்ந்தால்”

“வென்று சாதிமதம் கான்றுமிழ்ந்தால்
அந்த நொடியே நமது மிடி பறக்கும்”

எனப் பாடியவர் பாவேந்தர்.

பகவத்கீதையும், மனுஸ் மிருதியும் மக்களை நான்கு வர்ணத்தவர்களாகவும், பலநூறு கோத்திர குலங்களாகவும் பிரித்துதமிழர் அய்க்கியம் சாத்திய மற்றது என ஆக்கியது.

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர் பிராமணர், தோளில் பிறந்தவர், சத்தி ரியர், இடையில் பிறந்தவர் வைசியர், காலிற் பிறந்தவர்கள் சூத்திரர் என்று நான்கு வர்ணத்தவர்களாக அடையாளப் படுத்தியது டன் வர்ணத்தவர்களுக்கு அப்பாற்பட்ட ‘அவர் ணஸ்த்தர்களாக தாழ்த்தப் பட்டவர்களை சுட்டின வேத சாத்திரங்கள் வெகுண்டெழுந்த பெரியார்’சூத்திரன்” என்றால் ஆத்திரங்கொண்டு அடி என சுயமரியாதை உணர்ச்சியை சூடேற்றினார்.

பெரியாரின் தன்மான உணர்வினை உள்வாங்கிக் கொண்ட பாரதிதாசன்,

முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?
தோளிர் பிறப்பார் உண்டோ தொழும்பனே?
இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே?
காலிற் பிறப்பார் உண்டோ கழுதையே?
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை எல்லாம் போக்கிலியே!
என்று குமுறும் எரிமலையாய் வெடித்தார்.

உலக அளவிலேயே தந்தை பெரியார் அளவுக்கு பெண்ணுரிமை பற்றி சிந் தித்து தொண்டாற்றி யவர்கள் இல்லை என்பது அண்மைக்கால மதிப்பீடு பெண்கள் உரிமைக்கு பெரிதும் தடையாய் அமைந்திட்ட அடிமைத் தனங்கள் அனைத்தையும் சாடினார் பெரியார்.

பெண்கள் ஆண்களின் போகப் பொருளா?
பிள்ளை பெறும் எந்தி ரமா?
நகை மாட்டும் ஸ்டேண்டா?
வீட்டு சமையல் காரியா? 

என்று கேள்விமேல் கேள்வி கேட்டு ஆணின் அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு உண்டு என சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். பெண்களே! உங்கள் உரிமைக்கு நீங்களேதான் போராட வேண்டும்.- ஆண்களை நம்பி இருக்கக் கூடாது என்றார்.

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? என்றும் கேட்டார்? பெண்கல்விக்கும் பெண்ணுரிமைக்கும் பெரியார் கொடுத்த குரலின் தாக்கமே பெண்களே மாநாடு கூட்டி ‘பெரியார்” எனும் பட்டத்தை பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்குக் கொடுக்க வைத்தது.
கோழி குஞ்சு பொரித்தால் -மாடு கன்று போட்டால் ஆடு குட்டி போட்டால் பெண்ணை வரவேற்கும் சமுதாயம், பெண் குழந்தையை மட்டும் வெறுத்து கள்ளிப்பாலும், பச்சை நெல்லும், பாழும் குப்பைத் தொட்டியும் தேடிச் செல்வது சரியா? என்று பெரியார் எழுப்பிய கேள்வியில்தான் எத்தனை நியாயம்!

மண்ணுக்கும் கீழாய் மதித்தீரோ பெண்ணினத்தை
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்தல் என்பது முயற் கொம்பே!
என்றும்,

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்
நாணமும் அச்சமும் வேண்டுமெனில்
ஆணுக்கும் பெண்ணுக் கும் வேண்டும்
என்றும்

ஆண் உயர் வென்பதும் பெண் உயர்வென்பதும்
நீணிலத் தெங்கனும் இல்லை வாணிகம் செய்யலாம்
பெண்கள்நல் வானூர்தி ஓட்டலாம் பெண்கள்
ஏணை அசைத்தலும் கூடும்-அதை யார் அசைத் தாலுமே ஆடும்
எனவும்

பெண்கட்கு கல்வி வேண்டும்.. ஏனெனில்
உலகத்தைப் புரிந்து கொள்ள
குடும்பத்தை நடத்திட
குழந்தைகளை வளர்த் திட
என்றும்,

பெண்ணுரிமை பற்றிய புரட்சிக் கவிஞர் தம் பாடல்கள் உண்மையிலேயே புரட்சிகரமானவைதான் அந்நாளில்! பிள்ளைப்பேறு என்பதை கட்டுப்படுத்தி குடும்ப நலம், நாட்டு நலம் காக்க வேண்டும். பெண்ணடி மைத்தனத்துக்கு துணை சேர்ப்பது பிள்ளைப் பேறே அதனை கட்டுப் படுத்திட அரசே சிந்திக்காத வேளையில் பெரியார் சிந்தித்தார்! பல ஆண்டுகட்கு முன்னரே ‘கர்ப்ப ஆட்சி” என்ற நூலினை வெளியிட்டு குடும்பநலம் பேணினார். பெரியார் புரட்சிக் கவிஞர் பெரியாரை அடியொற்றி ஒரு பெண்ணைப் பேசவிடுவதை பாருங்கள்.

இருக்கும் பிள்ளைகள் எனக்குப்போதும் அம்மா – என்
கருக்கதவை மூடிவிடுங்கள் அம்மா பெருத்த
வருமானம் எனக்கில்லை இனிப் பிள்ளைபெறும் வலிவும் உடம்பில் இல்லை
மக்கள் தொகை பெருக் கத்தால் வரும் பஞ்சம் இங்கு
வரும் பஞ்சத்தால் ஒழுக் கக்கேடே மிஞ்சும்…
தோன்றியுள்ள மக்கள் நலம் யாவும் – இங்குத்
தோன்றாத மக்கள் தந்த தாகும்….” 

என்ன அற்புதமான சிந்தனை வரிகள்! 5 ஆண்டுகட்கு முன்னமேயே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் தனக்கு குடும்பநல அறு வைச் சிகிச்சை செய்யுமாறு தனக்குள்ள நியாயத்தைக் கூறி பேசுவதாக பாவேந்தர் கவிதை ஆக்கிய திறன் முன்னோக்கியச் சிந்தனை யின் வெளிப்பாடே எனலாம்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் அன்னைத் தமிழும் அர்ச்சனை மொழியாக வேண் டும் என்று நீண்ட காலமாக பெரியார் போராடினார் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடத்திக்  கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சியை அறிவித்தார் (தற்போது அரசின் ஆணைப்படி தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்றும், ஆகமக் கல்லூரியில் படித்துத் தேறிய எவரும் அர்ச்சகராகலாம் என்றும் ஆக்கப்பட்டுள்ளது.)

கோயில்களில் சமஸ்கிருதம் தேவையில்லை தாய்த்தமிழிலேயே வழிபாடு நடத்திடலாம் என்பதை பாவேந்தர்-

தெற்கோதும் தேவாரம்
திருவாய் நன்மொழி யான தேனிருக்கச்
செக்காடும் இரைச்ச லென
வேத பாராயண மேன்
திருக்கோயில் பால்?”
என்று கேட்டார்.

மடிகட்டிக் கோயி லிலே
மேலுடையை இடுப் பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
பூசியிருகைகட்டிப்
பார்ப்பானுக்குப்
படிகட்டித் தமிழ ரெனப்
படிக்கட்டின் கீழ் நின்று
தமிழ் மானத்தை
வடிகட்டி அவன் வட சொல்
மண்ணாங்கட்டிக் குவப்பீர்
மந்தரம் என்றே!
வேற்றுவரின் வட மொழியை
வேரறுப்பீர் கோயி லிலே!”

என தமிழ்மக்களுக்கு ஆணையிடுகிறார் புரட்சிக் கவிஞர் தமிழ் வளர்ந் தால்தான் தமிழன் வளரு வான்.. பிறமொழி ஆதிக் கம் தமிழை அழிப்ப தோடுதமிழனையும் அழித்து விடும் அதனால் தமிழரை இப்படி வேண்டுகிறார் பாவேந்தர்.

தமிழனே இது கேளாய் – உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்
கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழி களோ வெறும் வேம்பு
நமையெல்லாம் வட மொழி க்கிடும் தாம்பு
நம் உரிமைதனைக் கடித்ததப் பாம்பு

என்று சொல்லிவிட்டு

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்….

என இன்றைக்கும் வாழும் சில இனத் துரோ கிகளை அடையாளப் படுத்துகிறார் புரட்சிக் கவிஞர் தாய்மொழிக் கல்வி தமிழ்வழிக் கல்வியே தூய்மையை, நலத்தை, வீரத்தை, இன்பத்தை அளித்திட வல்லது என்பதனையும்,

இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும் சுகம்வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகி விடும்வீரம் வரும் 
என அற்புதமாக வெளிப்படுத்தினார். 

கவிதை உலகில் ஷெல் லியால் பிரிட்டன் பெருமை பெற்றது போல, புஷ்கினால் ருசியா புகழடைந்து போல, ஹீகோ வால் பிரான்சு வெற்றி யடைந்தது போல வால்ட் விட்மனால் அமெரிக்கா சீர் உற்றதுபோல புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் நம் நாடும் பெருமை உற்றது.

உலகமானுடம் உய்விக்கவந்த உத்தமக்கவிஞன் பாரதிதாசன் தமிழரும் ஞாலம் முழுவதும் வாழும் மாந்தர்களும் ஏற்றத் தோடும், எழுச்சியோடும் புரட்சி மணங்கமழ வாழ வேண்டும் என்று விரும்பி யவர் அவர் பெரியாரின் கொள்கை மட்டுமே மனித சமுதாயம் மாண்புபெற வழிகாட்டும் கலங்கரை விளக்கு என்பது அவரின் கருத்து.

“தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்!

என தந்தை பெரியாரை அழகாக தம் கவிதை வரிகளால் படம் பிடித்துக் காட்டியதும் அதனால் அன்றோ! பெரியாரின் மண்டைச் சுரப்பையான அவரின் கொள்கையை இந்த உலகமே ஏற்றுபின் பற்றும் என்பது கவிஞரின் முன்னோக்கிய சிந்தனை!
சாதி, மதம் கடவுள் கருத்துக்களை எதிர்த்துப் பாடியதிலும், பெண் ணடிமை நீக்கி பெண் உரிமைக் கீதங்களை இசைத்ததிலும், தமிழ்தமிழர் எழுச்சிப் பண் பாடியதிலும், தொழி லாளர் துயர் போக்கிட சமத்துவப் பாடல்கள் புனைந்ததிலும் வேதியர்தம் சூதுமதியினைச் சாடிய திலும், சுயமரியாதை உணர்வினை சுடர்விடச் செய்ததிலும் பாரதிதாச னுக்கு அடிப்படையாய் அமைந்தது பெரியாரின் லட்சியங்களே! புதுவை யில் பிறந்து சுப்புரத்தினமாய் மலர்ந்துபாரதி தாசனாய் சுடர்முகம் காட்டிய பாவேந்தர் புரட்சிக் கவிஞராய் உலா வர தந்தை பெரியாரின் தத்துவப் பாட்டையே வழியாய் அமைந்தது என்பதை எவர்தான் மறுப்பர்? தந்தை பெரியாரை தத்துவ வழி காட்டியாய் வரித்துக் கொண்டு வலம் வந்த காரணத்தால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப் பாய் இன்றும் திகழ்கிறார் பெரியார்புரட்சிக்கவிஞர் கொள்கை வழியில் தமிழர் சமுதாயம் விழித்தெழுவ தாகுக. (நிறைவு)


பகுத்தறிவுச் செய்திகள்

புரட்சிக் கவிஞரின் புதிய சிந்தனைகள்
(சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு உள்ள ஆய்வுக் கோவை (2004) யில் சு. சிவகாமசுந்தரி எழுதிய கட்டுரையிலிருந்து)

நாடகமாயினும், காவியமாயினும் உச்சக்கட்டம் என்பதொன்று அமைதல் என்பது வழக்கம். அதற்கெனத் தோற்றம், சூழ்ச்சி, முரண், உச்சநிலை, தீர்வு என அப்படைப்பு அமைக்கப்படும். ஆனால் பாண்டியன் பரிசு தொடக்கத் திலேயே உச்சக்கட்டத் தைக் கொண்டு தொடங்குகிறது. அப்படித் தொடங்கும்போது சென்று தேய்ந்து இறுதல் என்னும் வகையில் காவியத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்நூல் இந்நியதி எதற்கும் கட்டுப் படாமல் தொடக்கம் முதல் முடிப்பு வரை சுவை குன்றாமல் மிடுக்குடன் நடைபோடுகிறது. என்ன காரணம் என வரிசைப் படுத்துகையில்,

காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகள்
பொது உடைமைத் தாக்கம்
பெண்மைக்கு முதன்மை
மக்கள் தழுவிய பாங்கு
தமிழுணர்ச்சி
தாய் நாட்டு நலம்
வீறு மிக்க யாப்பு
என்பவை அடங்கும்.

காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகள் மக்கள் அனைவரும் பிறப்பால் சமம். சாதியில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை. எல்லோரும் ஓர் குலம் என்னும் கருத்தை,

“இருட்டறையில் உள்ளதடா உலகம். சாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்”

என்ற “பாண்டியன் பரிசு’’ வீரப்பன் கூற்றிலிருந்து, அனைவரும் சமம் என்னும் சாதி மறுப்பியத்திற்கான முக்கியத்தவத்தைக் கவிஞர் குறிக்கிறார்.

பொதுவுடைமைத் தாக்கம்

பாண்டியன் பரிசில் வரும் வீரப்பன் ஒரு திருடர் தலைவனாகக் காட்டப்பட்டாலும் கதைப்போக்கில் அவன் செயல்கள் யாவும் நல்லவனாகவே உள்ளன. கதிர் நாட்டின்மேல் வேழநாட்டுப் படைகள் போர்தொடுத்த போது அந்தப் போர்க் குழப்பத்தில் அரண்மனைக்குள் நுழையும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது.. அவன் அங்கு எதையும் களவாடவில்லை. ஆனால் தன் ஆள் என்று தவறாக நினைத்து நரிக்கண்ணன் வீரப்பனிடம் பேழை தருகிறான். அதை அவன் வாங்கிக் கொண்டு நொச்சிமலைக் காட்டுக்குச் சென்று விடுகிறான். அப்பேழையாகிய பாண்டியன் பரிசைத் தானே வைத்துக் கொள்ளாமல் தகுந்த நேரத்தில் அதை அன்னத்திடம் சேர்த்து அவளுக்குரிய ஆட்சியைப் பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயல்படுகிறான்.

எல்லார்க்கும் எல்லாம் என் றிருப்ப தான
இடம் நோக்கி நடக்கின்ற திந்த வையம்…
பொருளுடையோன் திருட்டை வளர்க்கின்றான்
பொதுவு டைமையோன் திருட்டைக் களைவிக்கின்றான்
எல்லோரும் கல்வி கற்க வேண்டும்.
என்ற வீரப்பன் கூற்றில் பொதுவுடைமைத் தாக்கம் புலப்படுகிறது.

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply