திருக்குறள் இந்துத்துவ நூலா? சமண மத கருத்துப் பேழையா?
2007-ஆம் ஆண்டு… நான் பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருந்த வேளையில், சென்னையில் அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டின் மாடியில் நடைபெற்ற திருக்குறள் குறித்த நூல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க நேரிட்டது.
ஒரு சாமானியனின் புரிதலைத் தாண்டி திருக்குறள் குறித்த எந்த அறிதலும் இன்றி தான் அக்கூட்டத்தில் பங்கேற்றேன். பேராசிரியர் துளசி ராமசாமி தனது “சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்” என்ற நூல் குறித்து விரிவானதொரு உரை நிகழ்த்தினார். ”மலர்மிசை ஏகினான்” என்ற குறள் எப்படி ஜைன மத கருத்துகளை கொண்டதாக திகழ்கிறது என்று அவர் விளக்கியபோது வியந்தே போனேன். அதுவரை ‘மலர்மிசை ஏகினான்’ என்றால் தாமரை மீது வீற்றுள்ள விஷ்ணு என்று பொதுவாக கூறக்கேட்டுள்ளேன். துளசி ராமசாமி அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே முதியவர் ஒருவர் எழுந்து அவருடன் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கைக்கலப்பு ஏற்படும் சூழல் தான். சண்டையிட்டவர் திரு.வி.கவின் பேரன் என்று சிலர் பேசிக் கொண்டதாக நினைவு.
ஆண்டுகள் சில கடந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் கொள்கையாளரும், பாஜகவை சேர்ந்தவருமான மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய், திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை கையில் எடுத்ததுமே மனதிற்குள் ஏதோ ஒரு அச்சம் தொற்றிக் கொண்டது. வள்ளுவர் நாடாளுமன்றம் வரை சென்றதில் மகிழ வேண்டுமே ஒழிய இதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது என சிலர் வாதாடினர். இந்நிலையில், திருக்குறளின் சமயம் சார்ந்த ஆய்வு ரீதியிலான ஆவணப்படம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எனது முயற்சி, தமிழ் பேராசிரியர் சிலரின் கடும் எதிர்ப்பால் முடங்கிப் போனது. 1930-களில் முடிந்துப்போன ஒரு விவாதத்திற்கு தேவையின்றி நான் உயிர்கொடுக்க முனைவதாக குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டது. திருக்குறள் உலகின் சிறந்த பகுத்தறிவு நூல் என்றும், அதனை மதம் சார்ந்த எல்லைக்குள் வைத்து பார்க்கக் கூடாது என்றும் உபதேசம் செய்யப்பட்டது. திருவள்ளுவரின் காலம் நிர்ணயிக்கப்பட்டது எதன் அடிப்படையில் என்ற எனது கேள்வியே கலகக்குரலாக பார்க்கப்பட்டது.
இதனிடையே, திருவள்ளுவர் இங்கிருந்து கொண்டுச் செல்லப்பட்டு கங்கைக்கரையில் அவமானப்படுத்தப்பட்டார். இந்து மத சாமியார்கள் திருவள்ளுவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தருண்விஜய் வாய்மூடி மவுனியானார். ஓராண்டு காலத்திற்குள் தற்போது மீண்டும் மற்றொரு பாஜக பிரமுகர் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். முன்னணி இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள முரளிதர் ராவ், திருக்குறள் “இந்துத்துவ நூல்” என்றும், இந்துத்துவத்தை பரப்ப திருக்குறளை பயன்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார். இவர்கள் திருக்குறளை கையில் எடுத்ததற்கான நோக்கம் எதிர்பார்த்தபடியே அம்பலப்பட்டு போயுள்ளது.
திருக்குறள் கூறும் கருத்துகள் எம்மதத்தை சேர்ந்தவை? என்னென்ன ஆதாரமெல்லாம் உள்ளது? தமிழ்ப்புலம் சார்ந்த ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்? என்பதை தொகுத்து விரிவான கட்டுரையேனும் இப்போது எழுதுவது அவசியம் என்று கருதியதாலேயே இக்கட்டுரை. விரைவில் நிச்சயம் ஆவணப்படம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் தற்போது எழுந்துள்ளது. தமிழறிஞர்கள் மூவருடன் தொலைபேசியில் நிகழ்த்திய நேர்காணலின் சாரத்தை கட்டுரை வடிவில் தொகுத்து பின்னிணைப்பாக அளித்துள்ளேன். முன்னதாக, திருக்குறள் ஜைன நூல் என்பதற்கு என்னிடமுள்ள நூல்களிலுள்ள ஏராளமான ஆதாரங்களில் சிலதை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்.
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள ”திருக்குறள் ( ஜைன உரை)” எனும் நூல் முக்கியமான ஒன்று. திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் கே.எம்.வேங்கடராமையா பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்த நூல். இந்நூலில் வேங்கடராமையா தெளிவாக சொல்லும் விடயம் திருக்குறள் ஜைன சமய நூல் என்பது. “எம் ஓத்து” என திருக்குறளுக்கு ஜைனர்கள் உரிமைக் கோருவதை சுட்டிக்காட்டும் அவர், அந்நூல் ”ஸ்ரீ குந்த குந்த ஆசாரியர்” எனும் ஜைன சமய பெரியவர் எழுதியது என்றும், அதனை அவரது மாணவரான “திருவுள்ளம் நயினார்” மதுரை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றியதாகவும் கூறுகிறார். திருவுள்ளம் நயினாரே பிற்காலத்தில் திருவள்ளுவர் என அழைக்கப்பட்டதாகவும் வேங்கடராமையா கருத்து தெரிவிக்கிறார்.
ஆசாரியர் ஸ்ரீ குந்த குந்த 95 ஆண்டுகள், 10 மாதங்கள், 15 நாட்கள் உயிர் வாழ்ந்தவர் என துல்லியமான தகவல்களைத் தரும் வேங்கடராமையா, அவரது காலம் கிமு 52 முதல் கிபி 44 வரை என வரையறை செய்கிறார். உலக புகழ் பெற்ற திருக்குறளை இயற்றிய ஸ்ரீ குந்த குந்த தமிழில் திருக்குறள் என்ற ஒரே ஒரு நூலை மட்டுமே இயற்றியதாகவும், பன்மொழிப் புலமை வாய்ந்த அவர் பிராகிருதமொழியில் ஏராளமான நூல்களை (52) இயற்றியுள்ளதாகவும், அவற்றில் ”பஞ்சாஸ்திகாயம்”, ”பிரவசனஸாரம்”, ”மையஸாரம்” ஆகிய 3 நூல்கள் முக்கியமானவை என்றும் வேங்கடராமையா பதிவு செய்கிறார்.
திருக்குறளின் முதல் குறளில் கூறப்படும் ’ஆதிபகவன்’ என்பது ஜைன மதத்தவரின் முதல் தீர்த்தங்கரான ”ரிஷப தேவர்” என்றும், அவரே எண்ணையும் எழுத்தையும் தந்தவர் என ஜைன இலக்கியங்கள் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டுகிறார் வேங்கடராமையா.
”விருப்புறு பொன்எயிற்குள் விளங்கவெண் ணெழுத்திரண்டும் பரப்பிய ஆதிமூர்த்தி”
என்கிறார் சூடாமணி நிகண்டை எழுதிய சமண சமய அறிஞரான மண்டல புருடர். எண்ணையும், எழுத்தையும் உயர்வாய் கருதும் ”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப” என வள்ளுவர் வாய்மொழியை நாம் இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம்.
“கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன் ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்” என்கிறது கயாதர நிகண்டு. “ஆதிபகவனை அருகனை”
என்கிறது திருக்கலம்பகம். இவ்வாறு ஆதிபகவன் என திருக்குறள் குறிப்பிடுவது ஜைன மதக்கடவுளைத் தான் என வேங்கடராமையா எடுத்துக்காட்டுகிறார்.
மூன்றாவது குறட்பாவில் வரும் “மலர்மிசை யேகினான்” என்பது மலர் மேல் நடந்த அருகக் கடவுளை குறிக்கும். அருகக்கடவுளின் கீழ் அமைந்துள்ள தாமரை மலர் தவிர, அவர் செல்லும்போது, முன் 7 தாமரை மலர்கள் தெய்வீக அம்சத்தில் ஏற்படுவதாக ஜைன இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அந்த மலர்கள் மீது (மிசை) அவர் நடந்துச் செல்வார். இதுவே மலர்மிசை ஏகினான் என்பது. இதை சமண மத இலக்கியமான சிலப்பதிகாரம் “மலர் மிசை நடந்தோன்” என பதிவு செய்கிறது. “தன் தாமரைமேல் நடந்தான்” என்கிறது நீலகேசி.
நான்காவது குறளில் வரும் ”வேண்டுதல் வேண்டாமையிலான்” என்பது ஜைனர்களின் அருகக் கடவுளை குறிக்கும் என்பர். “வேண்டுதல் வேண்டாமையில்லாத வீரன்” என திருக்கலம்பகம் (58) அருகனை குறிப்பிடுகிறது. இப்படி திருக்குறளின் பாடல்கள் அடுத்தடுத்து ஏராளமான ஜைன மதக் குறிப்புகளை நமக்கு தடங்களாக விட்டுச் செல்கிறது. இவைகளுக்கெல்லாம் வலு சேர்ப்பது போல், கிபி 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தில் சமணச் சின்னங்களே விரவிக் கிடக்கின்றன.
திருக்குறளின் கூறப்படும் அந்தணர் எனப்படுவோர் பிராமணர்களை குறிக்காது என்றும், ஜைனர்களின் ஸ்ரீபுராணம் கூறும் அந்தணர்களான ஜைனர்களையே குறிக்கும் என்றும், அந்தணர் என்பது பிறப்பின் அடிப்படையிலானது அல்ல என்றும், அது குணத்தாலே அமையப் பெறுவது என்றும் திருக்குறள் கூறுவதாக வேங்கடராமையா குறிப்பிடுகிறார்.
வெள்ளையர் ஆட்சியின் போது சென்னையின் வருவாய் அதிகாரியாக திகழ்ந்தவரும், திராவிட மொழிக்குடும்பத்தை முதன்முதலில் இனம் கண்டவருமான எல்லீஸ், திருவள்ளுவருக்கு தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது சிறப்பு செய்தி. அதில் திருவள்ளுவர் ஜைன மதத்துறவியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், சைவ பற்றாளருமான வ.உ.சிதம்பரனார் பரிமேலழகருக்கும் முந்தி திருக்குறளுக்கு உரை எழுதிய மணக்குடவரின் உரையுடன் திருக்குறளின் அறத்துப்பாலை பதிப்பித்தார். நேரடியாக சமண மதக் கருத்தியலை கொண்டுள்ளதால் திருக்குறளின் “கடவுள் வாழ்த்து”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்” ஆகிய அதிகாரங்கள் இடைச்செருகல் என்று சொல்லும் அளவிற்கு வ.உ.சி சென்றுவிடுகிறார் என்பதை சற்று சிந்திப்போமேயானால், திருக்குறளில் சமண சமயக் கருத்துகள் செலுத்திய செல்வாக்கு புரியும்.
பொ.வேல்சாமி, எழுத்தாளர், தமிழர் வரலாற்று ஆய்வாளர்
திருக்குறளை பொறுத்தவரை அது சங்க இலக்கியத்திற்கும், பிற்காலத்தில் உருவான பக்தி இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. அக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் வைதீக சமயம் மேலோங்கி இருக்கவில்லை. பௌத்தமும், ஜைனமும் மேலோங்கியிருந்த காலக்கட்டம் அது. குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை அந்த காலத்தில் ஜைனமே மேலோங்கியிருந்ததாக கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் பெரும்பாலான நூல்கள் ஜைன தத்துவங்களையும், ஜைன அறங்களையும் பேசுவனவாகவே உள்ளன. அந்த பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றுதான் திருக்குறள். தமிழ் இலக்கியங்களுக்கு ஒரு தொகுப்பு வரலாறு உண்டு. பொதுவாக ஒரு நூலை தொகுக்கும் போது ஒரு பொதுத்தன்மை காணப்படும். சங்க இலக்கியம், பதினெண் கீழ்கணக்கு, பக்தி இலக்கியம், சைவ சித்தாந்த நூல்கள், நாலாயிரம் திவ்ய பிரபந்தம் என பொதுத்தன்மையோடவே நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கருத்துகளை உள்ளடக்கிய நூல்களை ஒன்றாக தொகுத்துள்ளனர். அவ்வாறு பொதுத்தன்மை இல்லாத நூல்கள் ”பல்வகைத் திரட்டு” என்றும், ”பன்னூல் திரட்டு” என்றும் சொல்லி தொகுத்துள்ளனர். இந்த அமைப்பில் வைத்து பார்க்கையில், பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாக உள்ள திருக்குறள் அறம் சார்ந்த நூல். பக்தி சார்ந்ததல்ல.
திருக்குறளை பொறுத்தவரை பரிமேலழகருக்கு முன்பே பல உரையாசிரியர்கள் ஜைன மரபையின் அடிப்படையில் உரை எழுதியுள்ளனர். குறிப்பாக, காளிங்கர் உரையில், ஊழ் அதிகாரத்தில் வரும்,
“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது”
என்ற குறளில், ”வகுத்தான்” என்பதற்கு ”நீ என்ன செய்தாயோ அதற்கு ஏற்ற விளைவுகளை நீ அனுபவிப்பாய்” என்று தான் காளிங்கர் உரை எழுதினார். காளிங்கருக்கு 200 ஆண்டுகள் பிந்தையவரான பரிமேலழகர், “வகுத்தார்” என மாற்றிக் கொண்டார். வகுத்தார் என்றால், உனக்காக வகுத்துக் கொடுத்த ஒருவன் இருக்க வேண்டும் அவர் தான் கடவுள் என்கிறார் பரிமேலழகர். ஆனால், பழைய பாடமான ”வகுத்தான்” என்பதற்கு ஜைன மரபுப்படி காளிங்கர் விளக்கம் அளிக்கிறார்.
19-ம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் தமிழ் மொழியையும், அதன் இலக்கியங்களையும் மறந்துவிட்ட காலத்தில், மேல்நாட்டு அறிஞர்கள் இந்த நூல்களை பார்த்து படிக்க ஆரம்பிக்கும் போது முதல்முதலாக அவர்களுக்கு தமிழர்கள் மீதும், இந்தியர்கள் மீதும் மரியாதை ஏற்படுவதற்கான அடிப்படையான நூலாக திருக்குறள் இருந்தது. பைபிளைப் போலவே இதில் அறநெறிகள் கூறப்படுவதாக எல்லா மேனாட்டு அறிஞர்களும் எழுதுகின்றனர். மேலைநாட்டு அறிஞர்களில் பெரும்பாலானோர் இது ஜைன நூல் என்கின்றனர்.
20-ம் நூற்றாண்டில் இப்பிரச்சனை மேலெழும்பி வரும் போது, ஒரு மிகச்சிறந்த நூல் வெளிவருகிறது. 1931-ல் அனந்தநாத நயினார் எழுதிய ”ஜைன சமயமும் திருக்குறளும்” என்ற நூல். இந்நூலுக்கு திரு.வி.க மிக அழகான முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்த முன்னுரையில் திரு.வி.க சில முக்கிய கேள்விகளை எழுப்புகிறார். ”திருக்குறள் ஜைன நூல் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருக்கின்றன. அது இந்து மதம் சார்ந்த – சைவம் சார்ந்த நூல் இல்லை” என்பதை திரு.வி.க தெளிவாக குறிப்பிடுகிறார். ”திருக்குறள் இந்து மதத்தின் சைவம் சார்ந்ததாகவோ அல்லது வைணவம் சார்ந்த நூலாகவோ இருந்திருந்தால் சைவ அடியார்களில் ஒருவராகவோ அல்லது வைணவர்களின் பன்னிரு ஆழ்வார்களின் வரிசையிலோ வள்ளுவரை சேர்த்திருப்பர். அப்படி நடைபெறவில்லை. பிற்காலத்தில் வந்த சைவ, வைணவ ஆலயங்களிலும் திருவள்ளுவர் சிலை எங்குமே இல்லை. மற்ற அடியார்களுக்கு சிலை உள்ளது.” இதை ஒரு முக்கிய வாதமாக திரு.வி.க முன் வைக்கிறார்.
இரண்டாவது, வடமொழியிலும், தமிழிலும் இந்திய தத்துவ மரபை பேசும் ”பிரபோத சந்திரோதயம்” எனும் நூல் 17-ம் நூற்றாண்டில் ம.வெ.திருவேங்கடநாதர் எனும் பிராமணரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. அந்நூல் தத்துவங்களையே பாத்திரமாக்கி அந்த பாத்திரங்கள் பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜைன பாத்திரம் பேசும்போது,
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.”
என்ற குறளை பாடியவாறு வருவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஜைன மதத்தின் நீதியாக இக்குறளைப் பாடி வருவதாக 17-ம் நூற்றாண்டு இலக்கியமான “பிரபோத சந்திரோதயம்” குறிப்பிடுகிறது.
மூன்றாவதாக, கடவுள் கொள்கை என்று வரும்போது, சைவத்திற்கும், ஜைனத்திற்கும் இடையிலுள்ள மிகமுக்கிய வேறுபாட்டை திரு.வி.க சுட்டிக்காட்டுகிறார். ஜைனத்தில் கடவுள் என்பது அசைவில்லாதது. அது எதையும் செய்யாது. உனது செயல்கள், வினைகள் உனக்கான பலன்களை கொடுக்கும் என்பதுதான் ஜைன வினைக் கொள்கை. நாலடியாரில் கூட, எப்படி வினை அதை செய்தவனை சேரும் என்பதற்கு, ’1000 பசுக்களின் இடையே ஒரு கன்றை விட்டால் அது தன் தாயைக் கண்டு ஓடுவதைப் போல அவரவர் வினைகள் அவரவரை சேரும்’ என்று ஒரு பாடல் உள்ளது. ஆனால், சைவத்தில் அதுபோல கிடையாது. இதையெல்லாம் கொடுப்பது இறைவன் என ஒரு குறிப்பு உள்ளது. திருக்குறளைப் பொறுத்தவரை தெய்வத்தைப் பற்றி குறிப்பிடும் போது ”ஐந்தவித்தான்” என்று குறிப்பிடப்படுகிறது. ஐந்தவித்தல் என்பது ஐந்து புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வருவது. ஐந்து புலன்களை கட்டுக்குள் கொண்டுவருவது என்பது மனித இயல்பு. பசு வர்க்கத்தின் இயல்பு. இந்து மரபில் இறைவனுக்கு புலன்கள் கிடையாது. அப்படி இருக்கும்போது, ”ஐந்தவித்தானை” தான் ’பிறவிப் பெருங்கடல்’ எனும் பாடலில் வள்ளுவர் சுட்டுவதால், புலன்களே இல்லாத கடவுள் என்பதற்கும், புலன்களை வென்ற கடவுள் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி, “ரிஷப தேவர்” தனது புலன்களை வென்றவர் என்பதால், அவரையே ஜைனர்கள் தனது கடவுளாக கருதுகின்றனர் என்றுச் சொல்லி அதற்கான எடுத்துக்காட்டுகளை கூறுகிறார் திரு.வி.க. வடநூலில் இருந்துக்கூட ஒரு மேற்கோளை தருகிறார்.
முதல் குறளில் கூறப்படும் ”ஆதி”, ”பகவன்” என்பது வடசொற்கள். ஆதி என்பதும், பகவன் என்பதும் வடசொற்கள் என்பதால்தான் புணர்ச்சி விதிப்படி, ”ஆதிப்பகவன்” என்றில்லாமல் ”ஆதிபகவன்” என்று வந்துள்ளது. வல்லினம் மிகவில்லை. இந்த ஆதிபகவன் என்பதை தமிழிலுள்ள ஜைன நூல்கள் கையாள்கின்றன. ”மலர்மிசை ஏகினான்” போன்ற பல சொற்களை ஜைனநூல்கள் தொடர்ந்து கையாண்டுள்ளன. இதுபோன்ற எடுத்துக்காட்டுகளை அனந்தநாத நயினார், சக்கரவர்த்தி நயினார் போன்றோர் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும்போது எடுத்துக்காட்டுகின்றனர். சக்கரவர்த்தி நயினார் தனது பதிப்பான கவிராஜ உரையில் மிக தெளிவாக திருக்குறள் ஜைனம் சார்ந்தது என்பதற்கு ஏராளமான குறிப்புகளை தருகின்றார்.
இச்செய்திகளையெல்லாம் ஒருங்கிணைத்து பார்க்கையில், திருக்குறள் என்பது ஜைன மரபின் படி, அதன் கருத்துகளை உள்ளடக்கிய, பொதுவாக எல்லா தரப்பினருக்குமானதாக எழுதப்பட்ட அறிவுசார்ந்த நூல். அறிவுசார்ந்த நூலில் எப்போதும் மதம் சார்ந்த கருத்துகள் மேலோங்கி இல்லாமல் உள்ளடங்கியே இருக்கும் என்பதால், அவ்வாறே திருக்குறள் இயற்றப்பட்டிருக்கும் என்று மிகச்சிறந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் கருதுகின்றனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், 1930-களில் திரு.வி.க எழுப்பிய ஆணித்தரமான கேள்விகளுக்கு இன்றைக்கு வரை அறிவுப்பூர்வமான மறுப்புரையை யாரும் அளிக்கவில்லை.
நம் தமிழ்நாட்டில் ஒரு தமிழ்நூலை ஆராயும் போது வெறும் தமிழைக் கொண்டு மட்டுமே ஆராய முடியாது. தமிழக வரலாறு, அக்காலக்கட்டத்து மொழி நிலை, அந்த காலக்கட்டது அரசியல் பொருளாதார நிலைகள் சார்ந்த பல்வேறு விடயங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையிலேயேதான் திருக்குறளை ஆராய முடியும். பல்வேறுபட்ட நாட்டினரும், மதத்தினரும், காலம் காலமாக வந்து சேர்ந்ததால் அவர்களது கருத்துகளையெல்லாம் உள்ளடக்கியதாக தமிழ் மொழி உள்ளது. பேராசிரியர் சிவதம்பி சொல்வார், ’இந்திய மொழிகளிலேயே இந்திய தத்துவங்களையெல்லாம் பேசக்கூடிய ஒரே பிராந்திய மொழி தமிழ்தான்.’ தமிழை விட்டால் இதெல்லாம் வடமொழியில் மட்டும்தான் உள்ளது. மணிமேகலையில் 7-க்கும் மேற்பட்ட தத்துவங்கள் குறித்த குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. மணிமேகலை, சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், நீலகேசி போன்ற அவைதீகம் சார்ந்த நூல்கள் தத்துவ பிரச்சனையை தர்க்கத்தின் அடிப்படையில் அணுகியுள்ளது. தர்க்கத்தின் அடிப்படையில் அணுகுவது என்பது இந்துத்துவ-வைதீக-வேத மரபுக்கு எதிரானது. வேத மரபு என்பது நம்பிக்கையின் அடிப்படையிலானது. அவைதீக மரபு என்பது கேள்விகளின் அடிப்படையிலானது. கேள்விகளின் அடிப்படையில் எழுதப்படும் நூல்கள் நிச்சயம் வைதீக நூலாக இருக்காது. பகவத் கீதை கேள்விகளை அனுமதிக்காது. அவர் (கிருஷ்ணர்) சொல்வார் நாம் கேள்விகளின்றி கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடே அது வேறுதளத்தை சேர்ந்தது என்பதை வெளிப்படுத்திவிடுகிறது. திருக்குறளை வைதீகம் சார்ந்த நூல் என்பது அவரது (முரளிதர் ராவ்) ஆசையாக இருக்கலாம். அது உண்மையாக இருக்காது.
பேராசிரியர் க.நெடுஞ்செழியன், தமிழர் பண்பாட்டு ஆய்வாளர்.
என்னளவில், திருக்குறளை அவைதீக நூல் என்று குறுக்கக் கூடாது என்பேன். அது தமிழ் மரபுக்கு உரிய நூல். தமிழ் மரபு என்பதே அடிப்படையில் அவைதீகத்திற்கு எதிரானது தான். தமிழ் எனும் மொழியே வைதீகத்திற்கும், சமஸ்கிருத கருத்தியலுக்கும் எதிரானது தான். அதுதான் அதன் அடிப்படை.
இந்துத்துவா என்றால் ”வைதீக நெறியை அடிப்படையாகக் கொண்ட சமயக் கோட்பாடு” என பொருள். அந்த வகையில், இந்தியாவின் எந்த மொழியில் தோன்றிய எந்த நூலாக இருந்தாலும், அது ஒன்று வைதீக சார்பு நூலாக இருக்க வேண்டும், அல்லது வைதீக எதிர்ப்பு இலக்கியமாக இருக்க வேண்டும். இதுதான் இந்திய மொழிகளிலுள்ள இலக்கியங்களின் இலக்கணம். பாலி மொழியில் தோன்றிய பௌத்த இலக்கியங்கள் வைதீகத்திற்கு எதிரானவை. பிராகிருதத்தில் தோன்றிய ஜைன மத இலக்கியங்கள் வைதீகத்திற்கு எதிரானவை. பிராகிருத மொழியில் தோன்றிய காதல் கவிதைகளை உள்ளடக்கிய, ’700 கவிதைகள்’ என பொருள்படும் ”காதா சப்தசதி” கூட அடிப்படையில் சமஸ்கிருத வேள்வி பண்பாட்டிற்கு எதிரான இலக்கியம் தான். புத்தர் காலத்திற்கு பிற்பட்ட ஜைன, பௌத்த இலக்கியங்களானாலும் சரி, புத்தருக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களானாலும் சரி இவையெல்லாமே வேதத்திற்கு எதிரானவை தான். கிமு 6-ம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்த, ஜைன, ஆசிவக சமயங்கள் அனைத்துமே வைதீகத்திற்கு எதிராக உருவாகியவை தான். ”ஸ்ரமணர்” என்ற சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொதுப்பொருளை தரக்கூடியது. பௌத்தத்தை தோற்றுவித்த புத்தரும் சிரமணர் (சமணர்) தான். ஜைனத்தின் மகாவீரரும் சிரமணர் தான். ஆசீவகத்தை தோற்றுவித்த அய்யனாரும் சிரமணர் தான். இந்தியாவில் தோன்றிய சமயங்கள் பெரும்பாலானவை வைதீகத்திற்கு எதிரானவை.
சமயங்கள் தோன்றுவதற்கு முந்தைய காலக்கட்டத்தை சேர்ந்தது திருக்குறள். அப்படிப்பட்ட தொன்மையான இலக்கியமான திருக்குறள் எதிர்க்கக்கூடிய கோட்பாடு எனில் அது வைதீகத்தின் வேள்வி பண்பாடு தான். ஜைன சமயம் சார்ந்தோ அல்லது வேறு எந்த சமயங்கள் சார்ந்த குறிப்புகளோ திருக்குறளில் இல்லை. அதனால் மற்ற சமயங்களை எதிர்க்க வேண்டிய அல்லது ஆதரிக்க வேண்டிய தேவை திருக்குறளுக்கு இல்லை. ஆனால், திருக்குறள் கண்டிக்கக்கூடிய சமயமாக இன்று இந்துத்துவா என சொல்லப்படும் அன்றைய வைதீகமே காணப்படுகிறது. கொல்லாமை எனும் அதிகாரத்தையே வள்ளுவர் வைதீக எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார்.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.”
எனும் குறள், இன்றைய ”இந்துத்துவா”-வின் வேள்வி பண்பாட்டை எதிர்த்து, கண்டித்து முழங்கிய முழக்கம். அந்த வேள்வி பண்பாட்டின் அடிப்படையே பசுவைக் கொல்லுவது தான். இன்றுக்கு பசுவை பாதுகாப்பதற்காக கொடிபிடித்து வரக்கூடிய இக்கூட்டம், ஒருகாலத்தில் பசுவதையை அடிப்படையாகக் கொண்ட வேள்விப் பண்பாட்டை பின்பற்றியதுதான். பசுவை முன்னிலைப்படுத்தியும், பசுக்கொலையை முன்னிலைப்படுத்தியும் உருவான வைதீக பண்பாட்டை எதிர்ப்பதுதான் திருக்குறளின் நோக்கம். அதனால்தான் ஜைன சமய பேரறிஞர் சக்ரவர்த்தி நயினார், திருக்குறளை வைதீக எதிர்ப்பின் அடிப்படையில் காண வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அதே சமயம் திருக்குறள் ஜைன சமய நூலும் அல்ல. ஜைன சமயம் தோன்றுவதற்கு முற்பட்ட நூல் இது.
திருக்குறளை இந்துத்துவ நூல் என்று கூறுவதோ, திருக்குறளை இந்துத்துவ பிரச்சாரம் செய்வதோ திருக்குறளுக்கு எதிரான செயல் என்பதை நாம் வற்புறுத்த வேண்டும். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றிப் பெற முடியாது என்பதையும் நாம் தெரிவிக்க வேண்டும்.
(திருக்குறளை பொருத்தவரை அது ஆசீவகத்தின் 7 எனும் எண்ணை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் என்கிறார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். பொதுப்படையில் திருக்குறளின் வைதீக எதிர்ப்பு வெள்ளிடமலை என்றாலும், அது ஜைன சமயத்தை சார்ந்ததில்லை என்பது அவர் கருத்து. சமணம் என்ற பொதுப்பெயரில் புத்தம், ஜைனம், ஆசீவகம் ஆகிய 3 மதங்களையும் குறிப்பிடும் பழக்கம் அந்த காலத்தில் உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. எப்படி இருப்பினும், பேராசிரியர் நெடுஞ்செழியனின் கருத்து என்பது, திருக்குறள் நிச்சயம் 100 விழுக்காடு இந்துத்துவ நூல் அல்ல என்பதே. )
தமிழ் காமராசன், ஆய்வு மாணவர்.
இந்து மதம் என்றால் என்ன என்பது அடிப்படையான கேள்வி. நவீன காலத்தில் இந்துமதம் என எதை சுட்டுகின்றனர்? இந்து மதம் என்றால் என்ன என்பதை நமது அரசியல் சாசனம் எதிர்மறை பொருளில்தான் வரையறை செய்கிறது. யார் கிறிஸ்துவர் அல்லாதவரோ, யார் இஸ்லாமியர் அல்லாதவரோ அவரெல்லாம் இந்துக்கள் என்று அரசியல் சாசனம் சொல்லியது. சீக்கியர்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு, இந்துக்கள் அல்லாதோர் பட்டியலில் சீக்கியர்கள் இடம்பெற்றனர். இந்து மதத்தை நேர்மறையாக வரையறை செய்ய முடியவில்லை என்பதே, சமகாலத்தில் கூறப்படும் இந்துமதம் என்ற ஒன்று உண்மையில் இருந்ததில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இது முதல் பிரச்சனை.
இரண்டாவது, இந்து மதம் என்ற ஒன்றை உருவாக்குவாக்குவதற்கான முயற்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக காலனிய காலத்தின் தொடக்கத்தில் இருந்து. சில நேரங்களில், இந்து என்பது ஒரு மதமில்லை, கலாச்சாரம், பண்பாடு என அவர்களே கூறிக் கொள்வர். இந்தியாவில் வாழும் எல்லோருள்ளும் இந்துத்துவா என்பது உள்ளூர உறைந்துள்ளது என்பர். இது மாதிரியான பேச்சுகள் எல்லாமே எப்போது தோன்றியது எனில், ஏறக்குறைய இந்தியா முழுமையையும் பிரிட்டிஷார் அடிமைப்படுத்திய காலத்தில் நடைபெற்றது. காலனிய காலத்தில் பிரிட்டிஷ் அரசு இங்குள்ள மக்கள் தொகையை எண்ணிக்கையிட முயற்சி செய்கையில் மக்கள் எண்ணற்ற அடையாளங்களை சொல்கின்றனர். இந்த அடையாளங்களை வகைப்படுத்தி புரிந்துக்கொள்ள முடியாத பிரிட்டிஷார் உருவாக்கிய பொது அடையாளமே (Identity) இந்து என்பது. எல்லாவற்றையும் இந்து என்ற அடையாளத்திற்குள் வெள்ளையர் கொண்டு வந்தனர். வேதத்தை ஏற்கும் பார்ப்பனரையும், வேதத்தை முற்றிலும் மறுத்தளிக்கும் தாந்திரீகரையும் கூட அவர்கள் இந்துக்குள் அடக்கினர். ஆரம்பத்தில் காலனியவாதிகள், புத்தர் மற்றும் மகாவீரருக்கு இடையிலான வேறுபாடு கூட தெரியாதவராகவே இருந்தனர். இரண்டும் சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட ஒரேசமயம் எனக்கூட கருதினர்.
காலனியவாதிகளால் எதிர்மறை பொருளில் உருவாக்கப்பட்ட இந்து என்ற அடையாளம், புதிதாக இடைநிலை வர்க்கமாக (Middle Class) உருவான உயர்சாதி பார்ப்பனர்களால் – குறிப்பாக, தமிழ்நாடு, மராட்டியம், குஜராத், வங்காள பார்ப்பனர்கள் – நேர்மறைப் பொருளில், இந்து தேசியம், இந்திய தேசியம் என்ற புதிய அடையாளத்தில் பயன்படுத்தப்பட்டது. அதுதான் இந்து மதம் என்பதை கட்டமைத்தது. இவர்கள் உருவாக்கிய இந்து மதத்தின் உள்ளடக்கமாக அதற்கு முன்பு இருந்த வைதீக, சனாதனத்தையே உச்சபட்ச அளவுகோலாக வைத்தனர். தாந்திரீகர் வரை எல்லாவற்றையும் அதில் உள்ளடக்க அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால், 1901-ம் ஆண்டு வாக்கில் இந்து மத ஒன்றிணைப்புக்குள் இருந்து பௌத்த, ஜைன மதங்களை அவர்கள் நீக்கினர்.
இந்து மதத்தில் எதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனில், வைதீக, சனாதனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், சங்கரரை, அவரின் கருத்தியலை எல்லாவற்றிற்கும் மேலானதாக (Superior) வைத்தனர். நவீனத்திற்கு முற்பட்ட காலத்தில் இப்படிப்பட்ட பேச்சே கிடையாது. அடிப்படையில், வைதீக, சனாதன கருத்தியலுக்கும், சங்கரரின் கருத்தியலுக்கும் எதிரானதான திருக்குறளை, எப்படி முரளிதர ராவ் போன்றோர் கூறுவதைப் போன்று இந்துத்துவ இலக்கியமாக பரப்ப இயலும்? இது அடிப்படையான பிரச்சனை.
”வைதீக வேத நெறி சார்ந்த” என்ற சொற்றொடரேக் கூட இந்து மதம் போன்றே சிக்கல் வாய்ந்தது தான். ஏனெனில் வேதத்திற்கு என்ற தனித்த நெறியெல்லாம் ஏதுமில்லை. வேதப்பாடல்கள் என்பன மந்திரப் பாடல்கள் – யக்ன பாடல்கள் அவ்வளவே. அது மேய்ச்சல் நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மந்திரப் பாடல்கள். அச்சமூகம் வளர்ச்சி அடைகிறது. வேதத்தில் வர்ண முறையோ, சாதிய முறையோ கிடையாது என்பதை கவனத்தில் கொண்டால், பின்னர் தான், ஆணாதிக்கத்தின் அடிப்படையிலான – தந்தை ஆதிக்கத்தை மையப்படுத்திய குடும்ப அமைப்புகள் தோன்றிய பிறகு, வர்ணமுறை அடிப்படையிலான தொடக்க கால சமூக முறை உருவாகியுள்ளது. அதன் பிறகு, இந்திய வரலாற்றில் சாதி உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொண்டு அதை நீயாயப்படுத்துவதையே தனது கொள்கையின் அதி உச்சபட்ச சாத்தியப்பாடு என செயல்படத் தொடங்கியது.
வர்ண தர்மம் என்பதை அதிகளவு நியாயப்படுத்தக் கூடியவராக சங்கரரே திகழ்கிறார். இதன் அடிப்படையிலேயே, சங்கரரை உயர்ந்தபட்ச அடையாளமாகக் கொண்டு நவீன காலத்தில் இந்து தேசியமும், இந்து பண்பாடும் கட்டமைக்கப்படுகிறது. இதனுடன் நாம் நமது திருக்குறளை அடையாளப்படுத்தவே முடியாது.
மனிதர்களுக்கு இடையில் இலட்சிய நிலையிலும், வைதீகம் அசமத்துவத்தை (சமத்துவம் இன்மை) அர்த்தப்படுத்துகிறது. கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் வாழ்வு கடந்த நிலையில் ஒரு சமத்துவத்தை பேசுகிறது. ஆனால், வைதீகம் வாழ்வு கடந்த நிலையிலும் அசமத்துவத்தையே பேசுகிறது. சங்கரின் கருத்துப்படி வாழ்க்கை என்பது மாயை தான். ஆனால், அதிலுள்ள அசமத்துவத்தை (சமத்துவமின்மையை) நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அப்போதுதான் நீங்கள் மாயையை உணர முடியும் என்பதே அடிப்படையான கருத்து. இந்த கருத்தியலுக்கு எதிராக பௌத்தம், ஜைனம் போன்ற கோஷ்டியினர் செயல்பட்டனர். ”பிறப்பொக்கும்” எனும் குறளில் வழி, வைதீகத்தின் கருத்தியலை அடிப்படையிலேயே வள்ளுவர் எதிர்க்கிறார்.
சாதிய அமைப்புக்கு எதிரான பெரியாரின் திராவிட இயக்கம் உச்சத்திற்கு சென்ற காலத்தில் – 1946-களில் – தங்களது நலனை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், ‘திருவள்ளுவர் சாதியை ஆதரித்தார்’ என பொய்யான பரப்புரையை பரப்ப, “பிறப்பொக்கும்” என்ற குறள் ’சாதியத்தை ஆதரிப்பதாக தோன்றும் வகையில்’ அதன் அர்த்தம் திருத்தி பதிப்பிக்கப்பட்டது. பின்பு வந்த அனைவருமே அதே பொருளை அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். அக்குறளில் வரும் ”சிறப்பொவ்வா” என்பதை ”வினைமுற்றாக” எடுத்துக் கொள்ளாமல் தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் “எதிர்மறை பெயரெச்சமாக” உரையாசிரியர்கள் பயன்படுத்தினர்.
பௌத்தர்கள், ஆசீவகர்கள், ஜைனர்கள் அனைவரின் அடிப்படையான கோட்பாடும் பிறப்பால் எல்லோரும் சமம் என்பது. செய்கின்ற தொழிலால் ஏற்றத்தாழ்வு ஏதுமில்லை என அவர்கள் கூறினர். சமண மதத்தினர் இலட்சிய நிலையிலேனும் சமத்துவத்தை வைத்தனர்.
கிபி 6-ம் நூற்றாண்டு முதல் கிபி 8-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட கால இலக்கியமான நீலகேசியில் பார்ப்பனரை எதிர்த்து வாதம் புரிவதாக ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீலகேசி வைக்கக் கூடிய ஒரு அடிப்படையானக் கேள்வி, “சைவம், வைணவம் என எல்லாவற்றையும் உனது என்கிறாய், கடவுளற்ற அருவ நிலையை உனது என்கிறாய், அவ்வாறெனில் உனது கொள்கை தான் என்ன? உனதுக் கொள்கையே பெரிய குழப்பம் நிறைந்ததாக உள்ளது. உனக்கு கொள்கை என்பதே ஏதுமில்லை. நீ உனது சுயநலத்திற்காக எதையும் பேசுவாய்!” இது நீலகேசியில் இடம்பெற்றுள்ள வேத மதத்தை மறுத்து பேசக்கூடிய சருக்கம்.
இந்து மதத்தை பரப்ப திருக்குறளை பயன்படுத்தப் போவதாக இவர்கள் கூறுவதே மிகவும் வேடிக்கையானது தான். ஏனெனில், இந்து மதத்தின் ஆதாரமே சாதியமும், வர்ணமும் தான் என பெரியார் உள்ளிட்டோர் பேசியது வேடிக்கையானது அல்ல. ஏனெனில், அது அடிப்படையில் எல்லாவிதமான அசமத்துவத்தையும் அங்கீகரிக்கிறது. ஆண் – பெண் எனும் கடக்க முடியாத பண்பாட்டு அசமத்துவத்தை கட்டியமைத்து காப்பாற்றி வருகிறது. அதை வர்ண நிலைக்குள் கொண்டுச் சென்று அர்த்தப்படுத்துகிறது. பெண்கள் என்போரே சூத்திரர்கள் என சொல்கிறது. இது மிகப்பெரிய பிரச்சனை.
இந்துத்துவம் என்பதை துல்லியமாக வரையறைக்கு உட்படுத்தாமல், ஒரு அரசியல் ரீதியிலான ஆதாயத்திற்கான கூற்றாகவே முரளிதர் ராவ் உள்ளிட்டோர் பயன்படுத்துகின்றனர். எவ்விதமான அர்த்தமும் இல்லாமல் ஒரு வாக்கியத்தை வீசி விட்டுச் சென்றுவிடுவதன் மூலம் எல்லோரும் அதைக் குறித்து பேச வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இவ்விதமாக கூற்றுகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பதே என் கருத்து. நம் சொந்த சுயமான பண்பாட்டு மரபுகளை உள்வாங்கிக் கொள்வதே உண்மையில் இதற்கு எதிரான நடவடிக்கையாக அமையும்.
நமது சொந்த சுயமான பண்பாட்டு மரபு என்பது, சமத்துவத்தை நோக்கிய நீண்ட கால கனவே. வள்ளுவர் முதல் அனைத்து அவைதீக மரபிலும் அது விரவிக் கிடக்கிறது. மணிமேகலையில் பேசப்படக் கூடிய பசியை ஆற்றுவதல் என்பது எவ்வளவுப் பெரிய தத்துவார்த்த பிரச்சனை? பசியை ஆற்றுவது குறித்து ஏன் தமிழில் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கின்றனர்? வள்ளலார் கூட பசியை ஆற்றுவதை அடிப்படைப் பிரச்சனையாகக் கொண்டே ஜீவகாருண்யம் என்பதை தோற்றுவிக்கிறார். இதிலிருந்தே உயிர்க்கருணை என்பது வருகிறது. சக உயிரின் மீது கருணையும், அன்பையும் பொழிவதையே உயிர்களின் இயல்பாக வலியுறுத்திய மரபை சேர்ந்தோர் நாம். அதுவே நமது மரபு.
நாம் அந்த காலத்திலேயே அசமத்துவத்தை எதிர்த்துவிட்டோம் என்பதல்ல சிறப்பு. அப்பணி நிறைவடையாமலேயே உள்ளது. சமத்துவத்திற்கான நமது சமர் தொடர வேண்டும். 2000 ஆண்டுகால சமத்துவத்திற்கான கடப்பாடு தொடர வேண்டும். நம் முன்னோர் போன்று நாமும் செய்ய வேண்டிய பணியாக அது உள்ளது.
(”இதற்கு பிறகும் திருக்குறளை இந்து மத இலக்கியம் என்போர் அதற்கான ஆதாரங்களை அடுக்குவதுடன், திரு.வி.க உள்ளிட்டோரின் வாதங்களுக்கு மறுப்புரை கூறுவதுடன், நேர்காணல் செய்யப்பட்டுள்ள பொ.வேல்சாமி, க.நெடுஞ்செழியன், தமிழ் காமராசன் உள்ளிட்டோரின் வரலாற்றுப் பூர்வமான வாதங்களுக்கும் மறுப்புரை கூட கடப்பாடுப் பட்டோரே” – கோ பிரின்ஸ்)
( கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். நியூஸ்7 தமிழ் பொறுப்பாகாது )
http://ns7.tv/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE
Leave a Reply
You must be logged in to post a comment.