பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப்   பெரியார்

பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப்   பெரியார்

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 17, 1879

இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)

இறப்பு: டிசம்பர் 24, 1973

பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.

ஆரம்ப வாழ்க்கை

தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின்  வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.

காசிக்கு பயணம்

காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு  வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.

வைக்கம் போராட்டம்

பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம்

1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.

இந்தி எதிர்ப்பு

1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.

பெரியாரின் திராவிட கழகம்

பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு

பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு,  மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948  ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இறுதிகாலம்

இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973  டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.

புனைபெயர்கள்

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.

இறப்பு

‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.

பலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.

காலவரிசை

1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.

1898 – நாகம்மையாரை மணந்தார்.

1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.

1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.

1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.

1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.

1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.

1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.

1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.

1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.

1939 – நீதி கட்சி தலைவரானார்.

1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.

1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.

1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.

1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.


 

*பெரியாரைக் கேளுங்கள்!*

*கேள்வி:* தங்களின் தாய் மொழி யாது?
*பெரியாரின் பதில்:* என்னுடைய தாய் மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதனை நான் தினசரிப் பேச்சு வழக்கத்தில்
கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிலும் தமிழ் மொழியினைத் தான் பயன்படுத்தி வருகின்றேன். எனக்குக் கன்னடத்தை விடத்
தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால் வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமே யாகும்.
இருந்தாலும் தமிழ் மொழியில்தான் என்னுடைய கருத்துக்கள் அத்தனையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்.

*கேள்வி:* தங்களுடைய பிறந்த நாள் கோண்டாடத் தாங்கள் அனுமதிப்பதேனோ?
*பெரியாரின் பதில்:* சாமிக்கு கல்யாணம் பண்ணுகிறார்கள். ஒரு வருஷம் பண்ணினால் போதாதா? வருஷா வருஷம் ஏன்
பண்ணுகிறார்கள்? பெண்டாட்டி ஓடிப்போச்சா? அல்லது செத்துப் போச்சா? ஏன்? கடவுள் பிரச்சாராம் காரணமாகவே இப்படி
செய்கிறார்கள். அது போலவே தான் நமது பிறந்த நாளை வருஷம் முழுதும் கொண்டாடுகிறார்கள் என்றால் நமது
கொள்கையினைப் பிரச்சாரம் செய்ய ஒரு சாதனமாக அமைவதாகக் கருதியே நானும் அனுமதிக்கிறேன்.

*கேள்வி:* தன்மானம் நாட்டுப்பற்று ஆகியவற்றில் தாங்கள் எதற்கு முதன்மை தருவீர்கள்?
*பெரியாரின் பதில்:* என்னைப் பொறுத்தவரை தேசாபிமானமும், இராச்சிய ஞானமும் எனக்கு உண்டு என்பதை மற்றவர்களுக்கு
அறிவிக்க வேண்டியது அனாவசியம். என்னுடைய சுயமரியாதைக்கும் , சுதந்திரத்திற்கும் தேசாபிமானத்தையும், இராச்சிய
ஞானத்தையும் கூட விற்கத் தயாராக இருக்கிறேன்.

*கேள்வி:* அரசியலில் தங்கள் ஆதரவு அடிக்கடி மாறுவது ஏன்?
*பெரியாரின் பதில்:* எவன் ஆண்டாலும் சரி, இந் நாட்டு மக்களை மனிதனாக மதிக்க வேணும்; அதற்கெல்லாம் பாடுபட
வேண்டும்; பாடுபட இடமளிக்க வேண்டும். இந்த லட்சியத்தை முன் வைத்து யார் பாடுபட்டாலும் இதை எங்கெல்லாம் நான்
கண்டாலும் அங்கெல்லாம் நான் வலியப் போகிறவன்; ஆதரிக்கிறவன் சாதி ஒழிய வேண்டும்; நாடு சுதந்திரம் அடைய வேண்டும்;
காட்டு மிராண்டித்தன்மை மாறி அறிவாளி மக்களாக ஆக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை முன் வைத்து யார்
பாடுபட்டாலும் அவர்களை ஆதரிப்பது என்னுடைய கடமை.

*கேள்வி:* அய்யா, தங்களுக்கு எப்பற்றும் இல்லை போல் தெரிகிறதே, அது எதனால்?
*பெரியாரின் பதில்:* ஒரு பகுத்தறிவு வாதி என்கின்ற நிலையில் எனக்கு மதப்பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கிய பற்றோ,
மொழிப் பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடைச்
செய்வது எதுவோ அதைப்பற்றியே பேசுவேன்.

நன்றி: சிவானந்தம் மாரியப்பன்.


பெரியார் என்றொரு கலகக்காரர்

பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24, 1973

தீண்டாமை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை ஒழிப்பதே பெரியாரின் லட்சியம்

இப்போது இவருக்கு வயது 89. திருச்சிராப் பள்ளியிலே ஒரு பழையகால இல்லத்திலே வசித்துவருகிறார். அதன் முகப்பிலே பெரியார் மாளிகை என்ற பெயர்ப் பலகை காணப் படுகிறது. தமிழ் கலை இலக்கியப் பேரவை ஆண்டு மாநாட்டுத் தொடக்க விழாவுக்காக நான் திருச்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது நான் “திராவிடர் கழக முதுபெரும் தலைவரைச் சந்திக்க வேண்டும். தொலைபேசியில் கேட்டு அவரது வசதியை அறிந்து சொல்லுங்கள்” என்று நண்பர் ஒருவரிடம் தெரிவித்தேன். அவரும் உடனே பெரியார் மாளிகையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார். உடனே வரச் சொல்லுங்கள் என்று அவர் தெரிவித்ததாகப் பதில் கிடைத்தது.

திகைக்க வைத்த காட்சி

15 நிமிடங்களில் நாங்கள் பெரியார் மாளிகையைச் சென்றடைந்தோம். நாங்கள் பெரியார் மாளிகை நுழைவாசல் கதவை அடைந்ததும், ஒரு விசித்திர முரண்பாடான காட்சியைக் கண்டேன். திகைத்தேன். தாம் ஒரு நாத்திகர், பகுத்தறிவுவாதி, கடவுள் சிலைகளை உடைப்பவர் என்று பெரியார் அவர்கள் உலகறிய பகிரங்கமாகச் சொல்லிவருபவர். அப்படியிருந்தும் கதவு நிலைக்குமேல் ஒரு கடவுள் உருவம் செதுக்கப் பட்டிருப்பதைச் சற்று தொலைவிலிருந்து கண்ணுற்றேன். திகைக்கவைத்தது இந்தக் காட்சி என்னை. ஆனால், அணுகிப்பார்த்தபோது, அது பெரியார் அவர்களுடைய உருவமே என்பதைக் கண்டறிந்தேன். நாமே கடவுள், நம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று அறிவிப்பது போலத் தென்பட்டது.

பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள், தமது 89 வயதிலே வெண்தாடி தாழ்ந்து ஊஞ்சலாட, வெண்கேசம் படர்ந்த தலையுமாக, யாவருக்கும் தாத்தா என்று அறிவிக்கும் தோற்றம் பெற்றவர். அவரது முதுபெரும் வயதைக் கவனிக்கும்போது, அவர் சாதாரணமான மற்றவர்களைவிட நல்ல உடல் நிலையுடனும் நினைப்புச் சக்தியுடனும் இருக்கிறார் என்பதை அறிந்தேன். இப்போதும்கூட அன்றாடச் செய்திப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படித்தபடி இருக்கிறார். கட்டுரைகள் எழுதுகிறார். கருத்துக்களை வாயால் சொல்லி, மற்றொருவரை எழுதிக்கொள்ளும்படி செய்கிறார்.

தம்மைக் காண வருபவர்களுக்கு உடனுக்குடன் பேட்டியளிக்கிறார். அவர்களுடன் உறுதியான, கனத்த குரலில் தடுமாற்றமின்றி உரையாடுகிறார். அந்தக் குரலிலும் பேச்சிலும் தளர்வும் தடுமாற்றமும் கொஞ்சமும் இல்லை. வயது இவ்வளவு ஆகியும் அவரது கொள்கை உறுதியோ அல்லது தீவிரமோ சற்றும் தளரக் கிடையாது. தம்மைப் பின்பற்றுகிறவர்கள் பொதுத்தேர்தலில் பெரும் வெற்றிபெற்றதோ, அவரது திராவிடக் கழகத்தின் கிளையாகத் தோன்றிய திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததோ அவருக்கு முழுத் திருப்தி அளித்துவிடவில்லை என்றே புலப்படுகிறது.

முதல் கேள்வியும் பெரியார் பதிலும்

“இப்போது திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறதே. உங்களுடைய ஆயுட்கால வேலைகள் திருப்தியாக நிறைவேற்றி வைக்கப்பட்டுவிட்டன என்று தாங்கள் நினைக்கிறீர்களா?” என்பது, நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி. நான் இந்தக் கேள்வியை ஆங்கிலத்தில்தான் கேட்டேன். இதனைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்வதற்கு முன்பே அவர் ‘‘இல்லை’’ என்று தமிழில் உறுதி தொனிக்கப் பதில் அளித்தார்.

இவ்விஷயத்தைத் தொடர்ந்து விளக்குகையில் அவர், நான் இன்னொரு முறையும் பிறந்து தொடர்ந்து இத்துறையில் பணியாற்றினாலும், சரியே நான் எடுத்துக்கொண்டு நடத்திவரும் வேலைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. ஆனாலும், இதற்கான விஷயங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். நாங்கள் என்ன வழியில் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

குறிக்கோள்

வைதீகப் பாசி படிந்த இந்து சமுதாயத்தினைச் சீர்திருத்த வேண்டும் என்ற மன எழுச்சியால், இவர் தமது இயக்கத்தைத் துவக்கினார். இது நாளுக்கு நாள் தீவிரமாயிற்று. இந்தத் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் நாடு பிரிவினை இயக்கமும் தோன்றிற்று.

நெடுங்கால நண்பரான திரு.சி. இராசகோபாலச் சாரியார் (ராஜாஜி) தூண்டுதலால் இவர் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர், இவர் நீதிக்கட்சியில் சேர்ந்தார். சர் பட்டம் பெற்றவர்களும் ராவ்பகதூர்களும் கொண்டது நீதிக்கட்சி. டொமினியன் அந்தஸ்து கோரும் நிதானவாதிகளின் கட்சி அது. இவர் தலைவரானதும் அதன் அமைப்பை மாற்றிக்காட்டினார்.

முஸ்லிம் லீக், பாகிஸ்தான் தனி நாடு கோரிக் கையைத் துவக்கிய அதே காலத்தில் திராவிடர் கழகமும் தனிநாடு கோரிக்கைப் பரணியை முழக்கிற்று. பெரியார் அவர்களே தமது திராவிட நாடு இயக்கத்தின் குறிக்கோள்கள் எவை என்று 1950-ம் ஆண்டில் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

‘திராவிட இயக்கமானது மத சமுதாயச் சீர்திருத்த அமைப்பு. சமுதாயத்தை இப்போதைவிட, அதிக மனிதாபிமானமும் பகுத்தறிவும் கொண்ட அடிப்படையில் சீர்திருத்தி அமைக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். சாதியை அடியோடு ஒழித்துக்கட்டவும் விரும்புகிறது. திராவிட மக்கள் அனைவரையும் அவர்கள் எந்த அரசியல் கொள்கையைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறது.’

இந்த திராவிடர் கழகத்தின் இறுதி லட்சியம், கொள்கை மதங்களை ஒழிக்க வேண்டும் என்பதே யாகும். இந்த திராவிட இயக்கமானது இவ்வித சமுதாயப் புரட்சியுடன் நின்றுவிடவில்லை. பொருளா தாரத் துறையிலே, வடநாட்டின் தொடர்பு அதாவது, மத்திய அரசின் ஆதிக்கத்திலிருந்து தமது திராவிட நாடு அறுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் திராவிட இயக்கத்தின் நோக்கம்.

1950-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வகைக் கொள் கைகளிலும் லட்சியங்களிலும் ஏதாவது மாறுதல் உண்டா என்று நான் மேற்கொண்டு கேட்டபோது அவர், ‘‘இல்லை’’ என்று தமிழில் உறுதி தொனிக்கப் பதிலளித்தார். இவரது தனி திராவிட நாடு, தெளிவாகக் கூறுமிடத்து தனித் தமிழ்நாடு கொள்கை அரசியல், நல்ல வெற்றிபெற்றுள்ளது.

அவர் தீவிரப் பிரச்சாரம் நடத்திவந்தும் இன்னும் பலர் கோயிலுக்குப் போகிறார்களே என்று நான் கேட்டபோது அவர், ‘‘அங்கேதான் ஆண்களும் பெண்களும் சந்திக்க வசதிப்படுகிறது’’ என்றார்.

கடவுள் மறுப்புச் சுவரொட்டிகள்

சுவரொட்டி அறிக்கை ஒன்றைக் கொண்டுவரச் செய்து எனக்குக் காட்டினார். இந்த சுவரொட்டிப் பிரதிகள் அவர் பேசிடும் கூட்டங்களிலும் ஊர்கள்தோறும் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனங்களும் ஆயிரக் கணக்கில் இதனை வாங்கி, தங்கள் வீடுகளிலும் தி.க. கூட்டங்கள் நடக்கும் இடங் களிலும் வைத்திருக்கிறார்கள்.

அந்த சுவரொட்டி அறிக்கையில்…

கடவுள் இல்லை

கடவுள் இல்லை

கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்

வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று எழுதப்பட்டிருந்தது. கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்றே இந்தப் பெரியார் உறுதி தொனிக்கக் கூறுகிறார்.

தீண்டாமை, சாதி வேற்றுமைகள், மூடநம்பிக்கைகள், மடமைச் சடங்குகள் ஆகியவற்றை இவர் கடுமையாக, வன்மையாகக் கண்டித்து அவற்றை விட்டொழிக்கும்படி வலியுறுத்திவருகிறார். இவர் மார்க்சியவாதி அல்ல. இவர், பொதுமக்கள்மீது அவர்களுடைய லட்சியங்கள், நல்வாழ்க்கை விஷயமாகவும் கொண்டுள்ள பற்றுதலும், ஒரு இனத்தவர்கள் மற்ற இனத்தவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதையும் இவர் வெறுப்பதும் இவரைக் கிட்டத் தட்ட மார்க்சியவாதி என்றே எண்ணச் செய்கிறது.

உருது-இந்தி எழுத்தாளரான கே.ஏ. அப்பாஸ் (1914-1987), தந்தை பெரியாரைச் சந்தித்து அவரைப் பற்றி 1968-ல் எழுதியதன் தமிழாக்கம் விடுதலை நாளிதழில் வெளியானது. அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

– தகவல் உதவி: சு.ஒளிச்செங்கோ,
ஓய்வுபெற்ற செய்தியாளர்

 

About editor 3160 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply