ஏழில் செவ்வாய் தோசம்?

ஏழில் செவ்வாய் தோசம்?
நக்கீரன்

நான் வருமானவரித் திணைக்களத்தில் வேலை செய்த காலத்தில் என்னுடன் பணியாற்றிய ஒரு நீண்ட கால நண்பரை ஒரு இரவு விருந்தில் அண்மையில் சந்திக்க நேர்ந்தது. அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த அதே உருவம். முகத்தில் அதே புன்சிரிப்பு.

கடந்த காலத்தை தொட்டந் தொட்டமாக இரைமீட்டபின் அவருடைய குடும்பம் பற்றிப் பேச்சுத் திசை திரும்பியது.

ஒரே பெண. படித்துப் பட்டம்பெற்று வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளிக்கூடத்தில் படிப்பிப்பதாகச் சொன்னார். திருமணம் ஆகிவிட்டதா? குழந்தைகள் உண்டா? என்று அடுத்த கேள்விகளை வீசினேன். நண்பருடைய முகம் திரிந்ததை என்னால் பார்க்க முடிந்தது. சரி. பேச்சை வேறு திசையில் திருப்பலாம் என்று நான் நினைத்தபோது அவரே முன்வந்து திருமணம் ஆகவில்லை என்றார்.

என்ன அகவை என்று கேட்டேன். அகவை 34 என்றார்.

ஏன் காலா காலத்தில் பேசித் திருமணம் செய்து வைத்திருக்கலாமே? என்றேன்.                              செவ்வாய்Image result for mars nasa

மகளுக்கு ஏழில் செவ்வாய். சாதகம் பொருந்தி வரவில்லை. ஏழில் செவ்வாய் உள்ள மாப்பிள்ளை என்றால் பொருந்துமாம். அப்படித் தேடியும் ஒன்றும் சரிவரவில்லை என்றார்.

எனக்கு ஒரே வியப்பு. ”இந்த சாதகத்தில் உமக்கு நம்பிக்கை உண்டா? அதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. பின் ஏன் எந்த அடிப்படையும் இல்லாத சோதிடத்தை நம்பி இப்படி ஒரு பிள்ளையின் வாழ்க்கையை பாழ்படுத்துகிறீர்கள்” என்று கேட்டேன்.

“எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் நம்புகிறார்களே?” என்றார் நண்பர் விரக்தியோடு.

ஏழில் மட்டுமல்ல எட்டில் செவ்வாய் என்ற காரணத்தால் திருமணம் செய்யாது தனி மரங்களாக நிற்கும் பலரை எனக்குத் தெரியும். குணம், நடை, படிப்பு, வடிவு இருந்தும் செவ்வாய்க் குற்றம் (தோசம்) இருப்பதாக சோதிடர் சொல்ல நின்று போன திருமணங்கள் பற்பல.

செவ்வாய் தோசம் என்றால் என்ன? செவ்வாய் ஒரு கோள். ஒருவரது சாதகத்தில் இலக்கினத்திலிருந்து 2,4,7,8,12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும். இதைச் சந்திர இலக்கினம் (இராசி), சுக்ரன் இருக்கும் இடங்களிலிருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. மூன்று முறையிலும் தோசமிருப்பின் மிகக் கடுமையான தோசம் எனக் கூறும் சோதிட சாத்திரங்களும் உண்டு. இருப்பினும் இலக்கினத்திலிருந்து கணிப்பதற்கே முழுமையான தோச பலனிருக்கிறது. இதிலும் 7,8 மிகக் கடுமையான தோசம், 4 கடுமையான தோசம், 12 தோசம், 2 குறைவான தோசம் என சோதிடமும் சோதிடர்களும் சொல்கிறார்கள்.

இந்துத் தமிழர்களது வீடுகளில் சாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடைபெறுவதில்லை. இது எழுதாத சட்டம். கல்வி, செல்வம், குடிப்பிறப்பு போன்ற பொருத்தங்கள் மணம் பேசப்படும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்தும் சாதகம் பொருந்தி வரவில்லை என்றால் அந்தத் திருமணப் பேச்சு நின்றுவிடுகிறது.

கல்லாதார் மட்டுமல்ல கற்றவர்களும் இந்த மூடநம்பிக்கைக்கு அடிமையாகியுள்ளார்கள். தங்கள் மூளைக்கு விலங்கு பூட்டி வைத்திருக்கிறார்கள். உலகில் பிறக்கின்ற கோடான கோடி மனிதர்களுக்கும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றை சரியாகக் கணித்துப் பலன் சொல்ல முடியும் என்கிறது சோதிடம். இது அறிவியல் அடிப்படையில் சாத்தியமா?

பொருத்தம் பார்த்து, மங்களகரமான நாள், நட்சத்திரம், இலக்கினம் பார்த்து திருமணம் செய்தோர் ஓகோ என்று வாழ்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. பொருத்தம் பார்த்து ‘சுபயோக சுபமுகூர்த்தம்” பார்த்துச் செய்த திருமணங்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. சோதிடர் வீட்டுப் பெண்களே திருமணம் ஆகி ஓராண்டு முடியுமுன்னர் தாலி இழந்து கைம்பெண்ணாக வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள். பொருத்தம் பார்த்துச் செய்தவர்கள் குழந்தைகள் இல்லாது இருக்கிறார்கள். சிலர் பிரிந்து வாழ்கிறார்கள். சிலர் மணமுறிவு செய்து கொள்கிறார்கள். ஆனானப்பட்ட வசிட்டர் பார்த்து சுபயோக சுப முகூர்த்தத்தில் நிச்சயித்த இராமனது முடிசூட்டு விழா தடைபட்டுப் போய்விட்டது. தடைபட்டதும் அல்லாமல் இராமன் 14 ஆண்டுகள் காடேக நேர்ந்தது!

திருமணப்பொருத்தம் மட்டுமல்ல, வீட்டில் குழந்தை பிறந்து விட்டாலோ, தொழில் நொடிந்து விட்டாலோ, நோய்வந்து பாயில் படுக்க நேரிட்டாலோ, வேலை போய்விட்டாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே சாதகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சோதிடர்களிடம் ஓடுகிறார்கள். சோதிடர் சொல்வது போல் நடக்க வில்லையென்றால் சரியாகச் சாதகம் கணிக்கப்படவில்லை, எதுவும் வித்pப்படித்தான் நடக்கும் இதெல்லாம் பூர்வ பாவ புண்ணியம் அல்லது தோசத்தால் இவ்விதம் நடைபெறுகிறது என்று கூறிச் சோதிடர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்!

இந்த மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்ற ஆசையே சோதிடத்தைப் பற்றியும் வானியல் பற்றியும் படிக்க என்னைத் தூண்டியது. அதன் பயனாகவே சோதிடப் புரட்டு என்ற நூலை எழுதினேன். ஒன்றை அதன் உண்மைத் தன்மைக்கு மாறாக நம்புவது மூடநம்பிக்கை என்பது எனது எண்ணமாகும். .

தமிழில் சோதிடத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கிழித்து எழுதப்பட்ட ஒரு முழு நூல் சோதிடப் புரட்டு ஆகும். அதில் சோதிட நம்பிக்கைக்கு எந்த அடிப்படையும் கிடையாது என்பதை பல சான்றுகள் மூலம் நிறுவி இருக்கிறேன். அந்த நூலை மறுத்து எந்தச் சோதிடரும் இதுகால வரை எதையும் எழுதவில்லை. இப்போது அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தப் பேரண்டம், அண்டம், கோள்கள் (கிரகங்கள்) விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். அறிவியல் என்பது எதையும் காரண காரிய அளவைகளைக் கொண்டு ஆராய்வது. இதற்குத் தொடக்கமும் முடிவும் தேவை.
அறிவியல் முறைமை அய்ந்து படிகளைக் கொண்டதாகும்.

1) ஒரு நிகழ்வை அல்லது நிகழ்வுகளைக் கூர்ந்து அவதானித்துப் பெறப்படும் தரவுகளைத் துல்லியத்தோடும் (accuracy)  மெய்மையோடும் (objectivity)  அளவியல் அடிப்படையோடும் (logical)  வரைப்படுத்தல்.

2) ஒரு நிகழ்வை விளக்குவதற்கு ஒரு புனைகோளை (hypothesis) உருவாக்குதல்.

3) இயற்பியலில் புனைகோள் கணித அடிப்படையில் அமைக்கப்படும்.

4) புனைகோளைப் பயன்படுத்தி நிகழ்வை எதிர்வுகூறல்.

5) எதிர்வுகூறலைச் சுதந்திரமான தனித்தனி சோதனை மூலம் சரிபிழை பார்த்தல்.

இயற்கை சார்ந்து காணப்படும் (படைக்கப்பட்ட) அனைத்தையும் உள்ளடக்குவதே பேரண்டம் எனப்படுகிறது. விண்வெளி முதல் புவியில் காணப்படும் அனைத்தையும் இதற்குள் அடக்கிவிடப்படுகிறது. பேரண்டம் பிரபஞ்சம் என வடமொழியிலும் Universe என ஆங்கிலத்திலும் குறிக்கப்படுகிறது.Image result for solar system planets

கோடிக்கணக்கான விண்மீன்களின் ஒரு தொகுதிதான் அண்டம் (Galaxy) எனப்படுகிறது. நமது ஞாயிறு போன்று அண்ணளவாக 400 பில்லியன் (40,000 கோடி) நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டத்தைத்தான் பால் வழி அண்டம் அல்லது பால் வீதி அண்டம் (Milky Way Galaxy)  என்று குறிப்பிடுகின்றோம். விண்மீன் கூட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றுபோல் சுழன்று வரும் எமது பால்மண்டலப் பகுதியில் எமது ஞாயிறு குடும்பம் (Solar System)  ஒரு ஓரத்தில் காணப்படுகிறது. ஞாயிறைச் சுற்றி நமது புவி உட்பட 9 கோள்கள் வலம் வருகின்றன. இவை விண் உடலிகள் (Heavenly Bodies) எனப்படுகிறது.  இவ்வாறான அண்டங்களின் அனைத்து ஒட்டு மொத்த கூட்டமைப்புத்தான் பேரண்டம் (Universe)!

பூமி வினாடிக்கு 30 கிமீ வேகத்திலும் சூரியன் வினாடிக்கு 250 கிமீ வேகத்திலும் பால்வழி மண்டலம் சூரியக்குடும்பத்துடன் சேர்ந்து வினாடிக்குத் தோராயமாக 390 கிமீ வேகத்திலும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டே செல்கின்றன. நாம் நகரும் வேகத்தை கணக்கிட்டால் அண்ணளவாக 480 கிமீ வேகத்தில் பேரண்ட வெளியில் பயணிக்கிறோம். ஒரு மணி நேரத்தில் 8,04,500 கிமீ தொலைவைக் கடக்கிறோம். எதுவுமே கீழே விழாமல் மைய அழுத்தமும் ஈர்ப்பு விசையும் பார்த்துக் கொள்கின்றன.

இப்போது சோதிடத்தின் அடிப்படை பற்றியும் சாதகம் எப்படிக் கணிக்கப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.

ஒரு குழந்தை பிறக்கும் போது வானில் காணப்படும் 9 கோள்கள், 12 இராசிகள், 12 வீடுகள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இருப்பை வைத்தே சாதகம் கணிக்கப்படுகிறது.

12 கோள்கள்Image result for 12 planets

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. இராகு மற்றும் கேது ஆகியன கோள்களாகும். இதில் ஞாயிறு ஒரு கோள் அல்ல. அது ஒரு விண்மீன். திங்கள் கோளல்ல அது ஒரு துணைக்கோள். மேலும் பூமியைச் சுற்றியே கோள்கள் வலம் வருவதாக சோதிடம் சொல்கிறது. பூமி ஒரு கோள் என்பது தெரியாததே இந்த குருட்டு நம்பிக்கைக்குக் காரணமாகும். இராகு, கேது நிழல் கோள்கள். நெப்தியூன் மற்றும் யூறேனியஸ் கண்ணுக்குத் தெரியாததால் சோதிடர்கள் அதை விட்டு விட்டார்கள். சோதிடம் சில கோள்களை பகைக் (சத்துரு) கிரகங்களாகவும் சில கோள்களை நட்புக் (மித்துரு) கிரகங்களாகவும் சித்தரிக்கிறது. கோள்கள் பால் அடிப்படையில் ஆண், பெண், அலி என்றும் வருண அடிப்படையில் பிராமண. சத்திரிய, வைசிய, சூத்திர எனப் பிரிக்கிறது. கோள்களுக்கு குறைந்த, மத்திம, அதிக பலம் படைத்த பார்வை இருப்பதாகவும் சொல்கிறது. கோள்கள் சில இராசிகள் நீச்சம் பெறுவதாகவும் சில இராசிகள் உச்சம் பெறுவதாகவும் கூறுகிறது. இவற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இவை நாகரிகம் அடையாத மனிதனது கற்பனைகளே!

12 இராசிகள்Image result for 12 இராசிகள்

இராசிகள் என்பது விண்மீன் கூட்டங்களே (Constellations). சோதிட சாத்திரம் புவியை மையமாகக் கொண்ட முறைமை (Geocentric) ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (Zodiac) எனப்படும். ஞாயிற்றின் தோற்றப்பாதைக்கு (உண்மையில் இது புவியின் சுற்றுப்பாதை) (Ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேட இராசி தொடக்கம் மீன இராசி இறுதியாக ஒவ்வொரு இராசி வீட்டிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி, அப் பெயருக்கான சின்னத்தையும் அத்தகைய இராசி வீட்டிற்கு அளித்துள்ளனர். .இப்படிப் பிரிப்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. வானியலாளர்கள் 13 இராசிகள் இருப்பதாகவும் அவற்றில் குறைந்தது 7 பாகை (விருச்சிகம்) கூடியது 45 பாகை (கன்னி) இருப்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள். எந்த இராசியும் சரியாக 30 பாகை கொண்டிருக்கவில்லை.

இந்த இராசிகளின் தோற்றம் செயற்கையானது. சிம்ம இராசி; 13 நட்சத்திரங்களைச் சேர்த்த போது சிங்கத்தின் உருவத்தைத் தோற்றுவிக்கும். அந்த சிங்கத்தின் தலை, விண்மீன்களைப் புள்ளிகளாக்கி இணைக்கும் போது அவை ஒரு தோற்றம் பெறுகின்றன.

சோதிடர்கள் இந்த இராசி மற்றும் நட்சத்திரங்களின் செயற்கையான தோற்றத்தை வைத்து அவற்றின் குணாம்சங்களை அந்தந்த இராசிக்கும் நட்சத்திரத்துக்கும் மாடேற்றி விடுகிறார்கள். இதனால் விருச்சிக இராசியில் பிறந்தவர்கள் தேள் போல் கொட்டுவார்கள் என்றும் சிம்ம இராசியில் பிறந்தவர்கள் யாருக்கும் தலை வணங்காத பேர்வளிகளாக இருப்பார்கள் என்றும் மனம் போன போக்கில் எழுதி வைத்துள்ளார்கள்!

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இராசிகள் (விண்மீன்கள) இப்பொழுது இருக்கின்றனவா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது! காரணம் பல ஒளி ஆண்டுகளுக்கு முன்னர் புறப்பட்ட ஒளியைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்! சிம்ம இராசி 78 ஒளி ஆண்டு, கன்னி இராசி 263 ஒளி ஆண்டு, மிதுன இராசி 2,700 ஒளி ஆண்டு, கும்ப இராசி 37,500 ஒளி ஆண்டு என கற்பனை செய்யமுடியாத தொலைவில் இருக்கின்றன.

27 நட்சத்திரங்கள்Image result for 27 நட்சத்திரங்கள்

நட்சத்திரங்களும் பெயருக்கு ஏற்ப நட்சத்திரங்களின் கூட்டமே. அசுவினி நட்சத்திரம் இராசி வட்டத்தின் முதல் இராசியான மேடத்திலும் இரேவதி நட்சத்திரம் கடைசி இராசியான மீனத்திலும் அமைகின்றன. இராசிகளைப் போலவே நட்சத்திரங்களுக்கும் அதன் செயற்கைத் தோற்றத்தை வைத்தே பெயர் இட்டார்கள். அசுவினி நட்சத்திரக் கூட்டத்தில் மூன்று நட்சத்திரங்கள் கூடி குதிரையின் முகத்தைத் தோற்றுவிக்கிறது எனக் கருதினர். மூன்று நட்சத்திரங்கள் அடங்கிய மிருக சீரிடம் மானின் தலையைத் தோற்றுவிப்பதாகவும் அய்ந்து நட்சத்திரங்களைக் கொண்ட புனர் பூசம் வில் போன்று தோன்றுவதாகவும் அவர்கள் கருதினர்.

12 வீடுகள்

வீடுகள் கற்பனையே. ஒருநாளில் சூரியன் 12 இலக்கினங்களை கடக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் எந்த இலக்னத்தை கடந்து கொண்டு இருக்கிறதோ அது ஜெனன இலக்கினம் ஆகும். இராசிச் சக்கரத்தில் இதுவே முதல் வீடு ஆகும்.Image result for 27 நட்சத்திரங்கள்

பிறப்புக் காலத்தில், சந்திரன் நின்ற இராசி வீடே உடல் இலக்கினம் என்று சொல்லப்படுகிற ஜெனன இராசி ஆகும். சந்திரன் நின்ற நட்சத்திரமே ஜெனன நட்சத்திரம் ஆகும். சோதிடர்கள் ஜெனன இராசியைக் கொண்டே வாழ்நாள் முழுவதும் ஒருவரது இராசி பலன்களைக் கோசார முறையில் கண்டறியலாம் எனச் சொல்கிறார்கள். கோசார முறை என்பது சாதகத்தில் உள்ள கோள் நிலையையும் சாதகம் பார்த்துப் பலன் சொல்லும் பொழுதுள்ள கோள்நிலையையும் சேர்த்துச் சொல்லப்படும் பலனாகும்.

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கிரகங்கள், இராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்று சோதிடர்கள் சொல்கிறார்கள்.

பிறப்பு என்பது ஒரு வினாடியில் நடைபெறுவதில்லை. அது ஒரு செய்முறை (process) ஆகும். இப்போது எல்லாம் மருத்துவம் ஒரு குழந்தையை முன்தள்ளியோ அல்லது பின்தள்ளியோ பிறக்க வழி கண்டுபிடித்துள்ளது. சோதிடத்தை நம்பும் சில மூடர்கள் பிறப்பை முன் பின் தள்ளுகிறார்கள். சோதிடர்கள் 4 நிமிட நேர வேறுபாடு இருந்தாலே சாதகக் கணிப்பு பிழைத்து விடும் என்கிறார்கள்.

மேலும் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள், நட்சத்திரங்களின் கதிர் வீச்சு மற்றும் ஈர்ப்புவிசை குழந்தையில் படிந்து விடுகிறது என்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தையைச் சுற்றி நிற்கும் மருத்துவர் (06), மருத்துவமனை (500) தாய் (20); இவர்களது ஈர்ப்பு விசையின் பெறுமதி செவ்வாய்க் கிரகத்தை (1) விடப் பல மடங்கு அதிகமானது.

சாதகம் சரிவரக் கணிக்கப்பட்டது என்று ஒரு கதைக்கு வைத்தாலும் 9 கோள்கள், 12 இராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 வீடுகள் ஆகியவற்றை மாற்றியமைத்தல் மற்றும் கணித்தல் (Permutation and combination) முறையில் பலன் சொல்வது இமாலயச் சிக்கலாகும். அதனால்தான் சோதிடர்கள் ஆளுக்கொரு பலன் சொல்கிறாhர்கள். பொருத்தம் இல்லை என்று ஒரு சோதிடர் சொன்னால் இன்னொரு சோதிடர் பொருத்தம் இருக்கிறது என்பார்!

சோதிட சாத்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அன்றாட நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கேயும் சிக்கல் இருக்கிறது.

இலக்கினத்தின் கடைசி நட்சத்திரப்பாகையின் பின் பகுதியில், அதாவது அந்த இலக்கினத்தின் முடிவில் பிறக்கும் சாதகக்காரர்களுக்கு இலக்கினம் மாறிவிடும். திருக்கணிதத்தில் கடக இலக்கினம் என்பது, வாக்கியத்தில் சிம்ம இலக்கினம் என்று மாறிக் காட்சியளிக்கும். அதற்குக் காரணம் திருக்கணிதத்திற்கும் வாக்கியத்திற்கும் உள்ள 1 பாகை 57 விநாடிகள் வேறுபாடு ஆகும். இதனால்தான் சிவராத்திரி வெள்ளியா? சனியா? என்று சண்டை பிடிக்கிறார்கள்.

செவ்வாய் தோசம் மட்டுமல்ல சனி தோசம், ராகு, கேது தோசம் (நாக தோசம்) செவ்வாய் தோசம் என்பதெல்லாம் வடிகட்டிய மூடநம்கிக்கையாகும். இவை இளித்தவாயர்களிடம் கிரகபரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்க சோதிடர்கள் செய்கின்ற தகுடுதத்தமாகும்.

எனவே சாதகத்தை கிழித்துக் குப்பையில் போட்டுவிட்டு தொல்காப்பியர் சொல்லும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்த குடிப் பிறத்தல், ஒழுக்கம், ஆள்வினை, வடிவு, அன்பு, நிறைவு, அகவை, அருள், உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் அறிவுடமை அல்லது நுண்ணறிவு மற்றும் செல்வம் ஆகிய பொருந்தங்கள் இருந்தால் தாராளமாகத் திருமணம் செய்து வையுங்கள்.


செவ்வாய் தோஷம் – ஒரு பார்வை…..

இந்தக் கட்டுரையில் செவ்வாய் தோஷத்தைப் பற்றி …….

பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில், திருமண வயதை எட்டிய (20 வயது முதல் 24 வயது வரை) , திருமண வயதைக் கடந்தும் (24 வயதைக் கடந்தும்) திருமணம் தடைபட்டு, திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண் பெண்களை பெற்றுள்ள பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் திருமணம் சம்மந்தப்பட்ட முக்கியமான சில பிரச்சினைகளுள் முதன்மையானதும், வேதனை தரக்கூடியதாகவும் இருக்கின்ற ஒரு விஷயம், இந்த செவ்வாய் தோஷம் தான்.

பெற்றோர்கள் தம மக்களுக்கு திருமணம் நிச்சயிக்க முற்படும்போது திருமணப் பொருத்தம் பார்ப்பதற்காக ஜோதிடரை அணுகும்போது மணமகன் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார், மணமகள் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார். இரு வீட்டாரும் அவரவர் ஜோதிடர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு குழம்பிவிடுகின்றனர்.

செவ்வாய் தோஷத்திற்கு, தென் இந்திய மக்கள்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். வட இந்தியாவில் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியதுவம் தருவதில்லை.

சரி. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும். இது பொது விதி. சில விதி விலக்குகளும் உண்டு. பொது விதியிலேயே முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த முரண்பாடுகளைப் பற்றி முதலில் பார்த்துவிட்டு, விதிவிலக்குகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.

லக்கினத்திற்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்க வேண்டும். சந்திரனுக்கோ, சுக்கிரனுக்கோ பார்க்க வேண்டியதில்லை, லக்கினம் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் ஏற்ப்படும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

லக்கினத்திற்குப் பார்ப்பது போல, சந்திரனுக்கும் பார்க்க வேண்டும். சுக்கிரனுக்குப் பார்க்க வேண்டியதில்லை, லக்கினம் அல்லது சந்திரன், இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கோ அல்லது இரண்டிற்குமா செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷம் ஏற்படும் என்றும் லக்கினத்திற்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்தால் அது முழு தோஷம் என்றும், சந்திரனுக்கு மட்டும் இருந்தால் அது அரைபங்கு தோஷம் என்றும் இரண்டுக்கும் இருந்தால் கடுமையான தோஷம் என்றும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்களால் எழுதப்பட்டு “தி லிட்டில் பிளவர் கம்பெனி” பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட “குடும்ப ஜோதிடம்” என்ற நூலில் லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும், என்று பொது விதியையும் கூறி சில விதிவிலக்குகளையும் குறிப்பிடுகிறார்.

ஆனால் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாரல் நடத்தப்பட்ட “ஜோதிடவியல் பட்டயச் சான்றிதழ்” படிப்பிற்கான பாடத்திட்டத்தைத் தயாரித்த ஆசிரியப் பெருமக்கள் – பல நூறு ஜாதகங்களை ஆய்வு செய்தவர்கள் – பாடப்புத்தகத்தில் “செவ்வாய் தோஷம் திருமணத்தைத் தாமதப்படுத்துமே தவிர தோஷத்தைத் தராது.” என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர். மேலும், பல நுற்றுக்கணக்கான ஜாதகங்களை ஆராய்ந்து அனுபவம் மிக்க ஜோதிடர் ஸ்ரீமான் ஓ.பி. லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், அவர்களால் எழுதப்பட்டு ஆனந்தபோதினி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ஜோதிஷ பாவத்திரைய நிர்ணயம் என்ற நூலில் செவ்வாய் தோஷம் என்று ஒரு தோஷமே இல்லை என்று குறிப்பிடுகிறார்.

இனி விதி விலக்குகளைப் பற்றி பார்ப்போம்

1) மேற்படி 2, 4, 7, 8, 12 –மிடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடாகிய மேஷம், விருச்சிகம் நீச்ச வீடாகிய கடகம், உச்ச வீடாகிய மகரம் ஆகிய ராசிகளாக இருந்து அங்கே செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

2) 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கும் செவ்வாய், – சூரியன், சனி, குரு ஆகிய இம்மூன்று கிரகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

3) ஜென்ம லக்கினம் கடகமாகவோ, சிம்மமாகவோ இருந்தால், 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

4) செவ்வாய் இருக்குமிடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்து அது 2 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

5) செவ்வாய் இருக்குமிடம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து அது 4 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

6) செவ்வாய் இருக்குமிடம் கடகம் அல்லது மகரமாக இருந்து அது 7 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

7) செவ்வாய் இருக்குமிடம் தனுசு அல்லது மீனமாக இருந்து அது 8 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

8) செவ்வாய் இருக்குமிடம் ரிஷபம் அல்லது துலாமாக இருந்து அது 12 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

9) எந்த லக்கினமானாலும், செவ்வாய் இருக்குமிடம் சிம்மம் அல்லது கும்பமாக இருந்து, அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.

10) 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் செவ்வாய் சந்திரன் அல்லது புதன் அல்லது சந்திரன், புதன் இருவருடன் சேர்ந்திருந்தால் தோஷம் இல்லை.

11) செவ்வாய் நின்ற ராசி அதிபதி லக்கினத்திற்கு கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் இருந்தால் தோஷம் இல்லை.

12) செவ்வாய் 8, 12 – ல் இருந்து செவ்வாய் நின்ற ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆனால் தோஷம் இல்லை.

13) ராகு, கேது -களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால், தோஷம் இல்லை.

14) செவ்வாய் சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் இருந்து அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.

மேற்கண்ட பதினான்கு விதி விலக்குகளையும் தேவகேரளம் என்ற மூல நூலிலிருந்து ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்கள் தொகுத்து குடும்ப ஜோதிடம் – நூலில் தந்துள்ளனர்.

மேற்படி 14 விதிவிலக்குகளையும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. பொது விதியை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். அதையாவது முழுமையாக பயன் படுத்துகிறார்களா? என்றால் இல்லை. லக்கினத்துக்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும், என்று ஒரு ரகம், லக்கினத்துடன் சந்திரனுக்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம், லக்கினம், சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்றுக்கும் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம்.

ஒரு சில ஜோதிடர்கள் மேற்படி விதி விலக்குகளை பயன்படுத்துகின்றனர். எப்படி தெரியுமா?

2, 4, 7, 8, 12 – ல் செவ்வாய் இருந்து விதிவிலக்குகளில் ஏதாவது ஒன்றிரண்டின்படி செவ்வாய் தோஷம் இல்லாமலிருந்தாலும், இது பரிகாரச்செவ்வாய் அல்லது கழிக்கும் செவ்வாய், பரிகாரம் செய்து தோஷதைக் கழிக்க வேண்டும் இல்லையென்றால் விபரீதம் ஏற்படும் என்று கூறி பரிகாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பணம் கறந்துவிடுகின்றனர்.

இப்படி முரண்பாடுகளையும், விதிவிலக்குகளையும் கொண்டுள்ள செவ்வாய் தோஷத்தைப் பற்றிய மேலும் சில கருத்துக்களையும் பார்போம்.

மணமக்கள் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றவருக்கு இல்லாவிட்டால் செவ்வாய் தோஷம் இல்லாதவர் மரணம் அடைவார், என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்து சரியானது என்றால், மரணம் எப்பொழுது நிகழும்? என்று கேட்டால் செவ்வாய் திசையில் அல்லது செவ்வாய் புத்தியில் அல்லது செவ்வாய் அந்தரத்தில் மரணம் ஏற்படும் என்று கூறுவார்கள்.

செவ்வாய் திசையில் மரணம் ஏற்படும் என்றால்….

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை சுமார் 70 – 80 வயதுக்கு மேல்தான் நடைமுறைக்கு வரும். 70 – 80 வயதுக்கு மேல் மரணம் என்பது சாதாரண விஷயம்.

செவ்வாய் புத்தியில் ஏற்படும் என்றால்…..

எந்த திசையில்? பொதுவாக ஒவ்வொரு மனிதனும் திருமணத்திற்குப் பிறகு சராசரியாக 3 அல்லது 4 திசைகளை சந்திக்கின்றனர்.

செவ்வாய் அந்தரத்தில் என்றால்…..

எந்த திசையில்? எந்த புத்தியில்?

யாருடைய ஜாதகப்படி செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் மரணத்தை தரும்? செவ்வாய் தோஷம் உள்ளவர் ஜாதகப்படியா? செவ்வாய் தோஷம் இல்லாதவர் ஜாதகப்படியா?

இப்படி கேள்வி கேட்டால், இவன் விதண்டாவாதம் செய்கிறான், இவனுக்கென்ன தெரியும்? நான் என் அனுபவத்தில் எத்தனை ஜாதகங்களை பார்த்திருப்பேன்? என்னைவிட அவன் பெரிய இவனா? என்று ஏளனம் செய்வார்கள்.

அதெல்லாம்சரி…. செவ்வாய் தோஷத்தைப் பற்றி நீர் என்னதான் சொல்லுகிறீர்? என்று யாரோ சற்று கோபமாக கேட்கிறார்கள்.

அவசரம் வேண்டாம் நண்பரே, இதோ உங்கள் கேள்விக்குப் பதில்…

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தை நிர்ணயிப்பதற்கு முன், கீழ்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.

1) அந்தந்த ஜாதகப்படி ஆதிபத்தியத்தின் அடிப்படையில் செவ்வாய் சுபரா? பாவியா?

2) அந்தந்த ஜாதகப்படி செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதி யார்? செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதியின் நிலை சாதகமானதா? பாதகமனதா?

3) மணமக்கள் இருவருக்கும், தோஷம் இருகிறது, அல்லது தோஷம் இல்லாமல் சுத்த ஜாதகமாக இருக்கிறது, என்ற நிலையில் திருமணத்திற்குப் பிறகு எந்த தீய நிகழ்வுகளும் ஏற்படாது? என்பதற்கு எதுவும் உத்திரவாதம் உண்டா?

4) சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய எட்டு கிரகங்களும் தோஷத்தைத் தராதா?

5) 2, 4. 7, 8, 12 ஆகிய இடங்களைத் தவிர 1, 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் உள்ள செவ்வாய் தோஷத்தை செய்யாதா?

6) முன்னதாகக் கூறப்பட்ட 14 விதிவிலக்குகளையும் அனுசரிப்பதா? வேண்டாமா?

7) ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் மூலநூல்களில் கூறப்பட்டுள்ள ராஜயோக கிரக அமைப்பு இருந்த போதும் நடைமுறையில் அனுபவத்தில் ஒத்துப்போகவில்லை, ஏன் என்று கேட்டால் பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து “ சில சிறப்பு விதிகளின்படி யோகம பங்கம் ஏற்பட்டுவிட்டது ”, என்று கூறுகிறார்கள். அதுபோல இந்த செவ்வாய் தோஷத்திற்கு தோஷ பங்க நிலை ஏற்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டுமா? கூடாதா?

8) லக்கினத்திற்கு மட்டும் தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும் என்று கூறுபவர்களுக்கு – களத்திரக்காரகன் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா? உடல்காரகன் மற்றும் மனோகாரகன் சந்திரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா?

தொடரும்………………ஒரு உதாரண ஜோடி ஜாதகத்துடன்…


 

About editor 3015 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply