சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! 16-30

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
சோதிடர் கூறியதை நம்பிய பெண் மனம் உடைந்து தற்கொலை!
(16)

எதிர்காலம் பற்றிய மக்களின் பாதுகாப்பின்மையைச் சோதிடர்கள் தங்களது சுரண்டலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தலைமுறை தலைமுறையாகச் சோதிடப் புரட்டுக்குத் தமிழ்ச் சமூதாயம் இரையாகி வருகிறது. சோதிடம் என்ற மூடநம்பிக்கையால் தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.   

சோதிடம் குறிப்பிட்ட தோச நட்சத்திரங்களில் பிறந்த பெண் சாதககாரர்களுக்குக் கீழ்க்கண்ட தோசங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டும் என்பது விதி என்கிறது

எனப் புதிய ஆத்திசூடி இயற்றிப் பொறுக்கி எடுத்த சுடு சொற்களால் மூட நம்பிக்கைகளைச் சாடினார். வானநூல் படிக்கச் சொன்னார்.

சோதிடம் தனை இகழ் என்ற சொல்லாட்சியில், இகழ் என்ற சொல்லுக்குக் கொடுத்துள்ள அழுத்தமும் கொல் என்னும் சொல்லுக்குக்குக் கொடுத்துள்ள கடுமையும் ஊன்றிக் கவனிக்கத்தக்கன.

மௌட்டியம் என்றால் அறியாமை என்று பொருள். ‘நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை” எனப் பாரதியார் அறியாமைக்கு வரைவிலக்கணம் கூறுவார். அறியாமையில் மூழ்கி இருப்போர் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மெய்யறிவு இல்லாதவர்களுக்கு  வாழ்க்கையில் குழப்பங்கள், அய்யங்கள் ஏராளம் தோன்றும். அறியாமையோடு வாழ்வது பள்ளமும் மேடும், கல்லும் முள்ளும், தூசும் தும்பும், கரடும் முரடும் நிறைந்த பாதையில் கண்ணைக்கட்டிக் கொண்டு நடப்பதைப் போன்றது.

எதைச் சொல்லி என்ன? பாரதி என்ற உலக மகா கவிஞன் சொன்ன அறிவுரையை யார் கேட்கின்றார்கள்? பாரதியாருக்கு விழா எடுப்பவர்களே கேட்பதில்லை என்றால் மற்றவர்கள் எப்படிக் கேட்பார்கள்?

தூங்கையிலே வாங்குகிற மூச்சு – அது சுழி மாறிப் போனால் போச்சு! அவனன்றி ஓர் அணுவும் அசையாது, அன்றெழுதியை அழித்தெழுத வல்லார் யார்? எல்லாம் இறைவன் விட்ட வழி! எல்லாம் விதிப் பயன்! எல்லாம் கிரக பலன்! நட்சத்திர தோசம்! என மதங்கள் மனிதர்களின் மூளையைச் சலவை செய்து, தன்னம்பிக்கையைச் சிதறடித்து வாழ்க்கையில் உழைத்து முன்னேற வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் குலைத்து விடுகின்றன.

அருச்சனை, அபிசேகம், தேரோட்டம்,  திருவிழா, காவடி, இருமுடி, செபம், தோத்திரம், தாயக்கட்டு, நூற்கட்டு, காப்புக்கட்டு, துளசிமாலை, தோசபரிகாரம், எள்ளெண்ணெய்ச் சட்டி எரித்தல் போன்ற குறுக்கு வழிகளை மதங்கள் பாமர மக்களுக்குக் காட்டுகின்றன. பக்தி மார்க்கம் என்பதே பாமர மக்களுக்காக வகுக்கப்பட்ட வழிபாடாகும்.

பாரதிகள் மட்டுமல்ல எத்தனை பெரியார்கள் வந்தாலும் மக்கள் திருந்தவே மாட்டார்கள் போல் படுகிறது.

இணைய தளத்தில் (Thatstamil) இன்று வந்த இந்தச் செய்தியைப் படியுங்கள். தமிழ் நடையைச் சிறிது செம்மைப்படுத்தியுள்ளேன்.

கைமேல் பலன் இதோ!

ஜோதிடர் கூறியதை நம்பிய பெண் மனம் உடைந்து தற்கொலை!

சென்னை, பெப்ரவரி 11- கணவர் ரத்தப் புற்று நோயால் இறந்து விடுவார் என்று ஜோதிடர் கூறியதை நம்பிய பெண், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். கோயம்பேடு ஜெயின் நகரைச் சேர்ந்தவர் செந்தமிழன். இவர் மனைவி உமா மகேசுவரி. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

உமாமகேசுவரி ஈரோட்டிலுள்ள உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஜோதிடரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அவர் ஜாதகம் பார்த்து சோதிடம் சொல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் ஒரு நாள் ஜோதிடர் கோயம்பேட்டிலுள்ள உமாமகேசுவரியின் வீட்டுக்கு வந்து சோதிடம் பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

அப்போது உமா மகேசுவரியின் கணவருக்கு 50 ஆம் வயதில் இரத்தப் புற்றுநோய் வரும், வேறு பல நோய்களும் வரும் இதைத் தடுக்க வேண்டுமானால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய உமாமகேசுவரி கணவரிடம் தெரிவித்துள்ளார். செந்தமிழன் சோதிடத்தை நம்பக் கூடாது என்று கூறியுள்ளார்.

மனம் உடைந்த உமாமகேசுவரி சனிக்கிழமை காலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து செந்தமிழன் கோயம்பேடு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சோதிடர்கள் ஒருவரது சாதகத்தைப் பார்த்து “உன்னைப் பிடித்த ஏழரைச் சனியன் இந்த மாதத்தோடு விட்டு விலகுகிறான். இனி உங்களுக்கு வெள்ளி துலாவிலும் வியாழன் பட்டையிலும் நிற்கப் போகின்றன! அப்புறம் பாருங்கள் அடுத்த பத்தாண்டுகள் உமக்கு இராசயோகம்தான்!” என்று சொன்னால் கேட்பவனுக்கு உளவியல் அடிப்படையில் ஒரு உற்சாகம் நம்பிக்கை ஆவது பிறக்கும். பின் எதற்காக இந்த சோதிடர் “உனது கணவருக்கு 50 ஆம் அகவையில் இரத்தப் புற்றுநோய் வரும், வேறு பல நோய்களும் வரும்” என்று சொல்ல வேண்டும்? காரணம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிப் பணம் பிடுங்க வேண்டும் என்ற தீய நோக்கந்தான்.

இதில் இன்னொன்றைக் கவனியுங்கள். செந்தமிழனுக்கு சாதகத்தில் நம்பிக்கை இல்லை. “அய்ம்பதாம் அகவையில் இரத்தப் புற்றுநோய் வரும், வேறு பல நோய்களும் வரும் என்று சோதிடர் சொல்கிறான் ” என்று சொன்ன மனைவியிடம் “சோதிடத்தை நம்பக் கூடாது” என்று கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண் தனது கணவன் சொன்னதை நம்பவில்லை.

இது எதைக் காட்டுகிறது என்றால் ஆண்களைவிட இளகிய மனம்கொண்ட பெண்களிடமே கூடுதலாக மூடநம்பிக்கை குடிகொண்டிருக்கிறது.  பெண்களுக்கு அறிவு இயற்கையாக இருந்தாலும் மண்ணுக்குள்ளே சில மூடர் அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர்களது அறிவைக் கெடுத்தது காரணமாக இருக்கலாம்! சோதிடப் புரட்டுப் போல் தெய்வீகமும் ஒரு புரட்டுத்தான். மனிதர்களை மடையர்களாக்குகிற புரட்டு.

அவ்வப்போது பிள்ளையார் பால் குடிக்கிறார், யேசுநாதர் சிலையில் இருந்து குருதி வடிகிறது, மேரிமாதாவின் கண்களில் இருந்து கண்ணீர் சொரிகிறது, அனுமாரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. செய்தி ஏடுகள் விற்பனைக்காக இப்படியான செய்திகளுக்குக் கண் காது வைத்து வெளியிடுகின்றன!

உத்தரப் பிரதேசத்தில் மதுரா என்ற நகர். அங்கு ஒரு அனுமார் மந்திர் (கோயில்) இருக்கிறது.  கடந்த சனவரி  21 ஆம் நாள் அந்தக் கோயிலில் பக்தர்கள் ஆயிரம் பதினாயிரம் என்ற கணக்கில் திரண்டார்கள். அனுமானைத் தோத்திரம் செய்து விழுந்து விழுந்து கும்பிட்டார்கள். என்ன காரணம்? வேறொன்றுமில்லை, அனுமான் விக்கிரகத்தில் இருந்து கண்ணீர் வழிந்தோடியதைக் தான் கண்டதாக மந்திர் பூசாரி ஜேஷ்கான் சொல்லி இருக்கிறார். இந்தச் செய்தி அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் தீ போல் பரவ பக்தர்கள் இலட்சக்கணக்கில் மந்திர்ரை படையெடுத்தார்கள். கண்ணீர் வழிந்தோடியதை அற்புதம் அல்லது கெட்ட சகுனம் என்று நினைத்த பக்தர்கள் பூசை, ஆராத்தி எடுத்து பரிகாரம் செய்தார்கள்.

அடுத்த நாள் ராஜ்கொட் நகரில் உள்ள இன்னொரு அனுமன் கோயில் விக்கிரத்தில் இருந்தும் கண்ணீர் வருவதாக வதந்தி பரவியது. அங்கும் வெள்ளம் போல் பக்தர்கள் திரண்டார்கள். அனுமனுக்கு தோத்திரம் சொன்னார்கள். பக்திப் பாடல்கள் பாடினார்கள். ஆனால் கோயில் அறங்காவல் அவை உறுப்பினர் ஒருவர் அனுமார் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தான் பார்க்கவில்லை என்ற உண்மையைச் சொன்னார். ஆனால் பக்தர்கள் சளைக்கவில்லை. தொடர்ந்து பூசை, அருச்சனை என்று செய்தார்கள். கோயிலுக்கு எக்கச்சக்கமான வருமானம்!

சரி, மூடநம்பிக்கை நிறைந்த இந்தியாவில்தான் இப்படி என்றால் படித்த யாழ்ப்பாணத்தவர்கள் வாழும் யாழ்ப்பாணத்திலும் இதே மாதிரியான வதந்தி பரவியதை அடுத்து பட்டினம் அல்லோல கல்லோலப்பட்டது!  வழமைபோல் செய்தியில் காணப்பட்ட தமிழைச் செம்மைப்படுத்தியுள்ளேன்.
பரபரப்பு (மேலதிக இணைப்பு)

February 09, 2007 (Friday)  (யாழ்வாணன்)

கன்னி மரியாளின் திருவுவத்தின் இரு கண்களில் இருந்து இரத்தம் வடிவதாக வெளியான தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை யாழ் நகரில் பரபரப்புக் காணப்பட்டது.

யாழ். ஆசுப்பத்திரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்தத் திருவுருவத்தின் கண்களில் இருந்து சிவப்பு நிறமான திரவம் வருவதை வீட்டில் இருந்தவர்கள் கண்டுள்ளனர்.

இது பின்னர் அயலவர்களுக்குத் தெரியவந்து யாழ் நகரம் எங்கும் பரவத் தொடங்கியது. இதனால் அதனைக் காண்பதற்காக மக்கள் அந்த வீட்டை நோக்கிப் படையெடுத்தனர்.

இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்துக்கு அந்த சொரூபத்தைக் கொண்டு சென்று வைத்தனர்.

இதன் பின்னர் அந்த ஆலயத்துக்கும் மக்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.

மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆலய நிர்வாகத்தினர் திண்டாடினார்கள். பின்னர் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்த மாதா சொரூபத்தில் இரு கண்களிலிருந்தும் இரத்தம் போன்ற சிவப்பு நிறத்திலான திரவம் ஒன்று வடிந்து உறைந்த நிலையில் இருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

கன்னி மரியாளின் திருச்சொரூபத்தின் இரு கண்களில் இருந்து குருதி ஏன் வடிய வேண்டும்? யாழ்ப்பாண மக்கள் படும் அல்லல்கள், அவலங்கள், அனர்த்தங்கள், இன்னல்கள் கண்டு கன்னி மரியாள் அழுதாரா? அல்லது பெப்ரவரி 4 சுதந்திர நாள் அன்று நாட்டுமக்களுக்கு மகிந்தா இராசபக்சே ஆற்றிய உரையைப் படித்துவிட்டு ( கேட்டுவிட்டு) அழுதாரா? அல்லது மகிந்தரின் தீர்வுத்திட்டத்தை முன்கூட்டி அறிந்து விட்டு அழுதாரா? ஏன் அழுதார்? எதற்காக அழுதார்? அப்படி அழுது என்ன பலன்? மக்களது கண்ணீரை அல்லவா கன்னி மரியாள் தனது தெய்வீக சக்தியால் துடைக்க வேண்டும்? கொலைகள், காணமால் போதல், கடத்தல், பசி பட்டினி, நோய் ஆகியவற்றைப் போக்கி மக்களை நிம்மதியாக அல்லவா வாழவைக்க வேண்டும்?

சுனாமியின் போது கரையோரத்தை அடுத்து இருந்த கிறித்தவ தேவாலயங்கள், இந்துக் கோயில்கள, இஸ்லாமிய மசூதிகள், பவுத்த விகாரைகள் ஆகியவற்றை பக்தர்களோடு கடல் விழுங்கிய செய்திகளைத்தானே செய்தித்தாள்களில் படித்தோம்! தொலைக்காட்சியில் பார்த்தோம்! தங்களைக் காப்பாற்ற ஆற்றலற்ற கடவுளர்கள் மற்றவர்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?

சிறிது காலத்துக்கு முன்னர் கனடாவிலும் ஒரு கிறித்தவ தேவாலயப் பாதிரியார் யேசுபிரானின் திருவுருவத்தில் இருந்து குருதி வடிவதாகக் கூறி ஊரைக் கூட்டி அந்த அற்புதத்தைக் காட்டினார். செய்தித்தாள்களும் பெரிய எழுத்தில் தலைப்பிட்டு அந்தச் செய்தியைப் பிரசுரித்தன. காவல்துறை பாதிரியாரை துருவித் துருவி விசாரித்தது. அப்போது பாதிரியார் உண்மையைக் கக்கினார். தேவாலயத்துக்கு வருமானம் இல்லை. எனவே தேவாலயத்துக்கு  கொஞ்சம் விளம்பரம் தேடத் தானே யேசுநாதரின் சிலையில் குருதியைத் தடவி ஊரை ஏமாற்றியதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்! (வளரும்)


 

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
சோதிடர்களுக்குத் தெரியாத உண்மைகள்!
(17)

உயிரினங்கள் கடவுளால் படைக்கப்பட்டதா (Creation) ? கண்டுபிடிக்கப்பட்டதா (Invention) ? உருமலர்ச்சி மூலம் உருவானதா (Evolution)?

உலகம், உயிர்கள் உருவானவை என அறிவியல் சொல்கிறது. இவை உருவாக்கப்படவில்லை கடவுளால் படைக்கப்பட்டது என மதங்கள் (புத்தம், சமணம் ஆகிய மதங்கள் மட்டும் விதிவிலக்கு) சொல்கின்றன.

இந்து மதத்தில் 18 புராணங்கள்  உண்டு. இந்தப் புராணங்கள். இந்த உலகம், உயிர்கள் ஆகியவற்றின் “படைப்பு’ ப் பற்றி சொல்கின்றன. வழக்கம் போல் ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு விதமாகப் புளுகுகின்றன. உலகின் அமைப்புப் பற்றிப் புராணிகர்கள் எழுதி வைத்திருக்கும் புளுகுகளை இப்போது பார்ப்போம்.

பூ மண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சுற்றி ஏழு வகையான சமுத்திரங்கள் உள்ளன. ஏழு வகையான பர்வதங்கள் (மலைகள்) உள்ளன.

இந்தியா (பாரதவர்ஷம்) ஒரு தீபகற்பம்   (peninsula). அது எட்டுத் தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை இந்திரத் தீவு, சுசேருமனத்தீவு, தாம்ரபரணத் தீவு, கபதி மானத்தீவு, நாகத்தீவு, சவம்யத் தீவு, காந்தர்வத் தீவு, வாருணத்தீவு என்பவை ஆகும். ஒன்பதாவது பகுதி கடலில் மூழ்கிவிட்டது. பாரத வர்ஷத்தின் கிழக்கில் கிராதர்களும், மேற்கில் யவனர்களும் வாழ்கிறார்கள்.

பூமிக்கடியில் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாய்த் தட்டுகள் போல் அமைந்துள்ளன.

இவற்றில் தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியோர் வாழ்;கின்றனர். இந்தப் பாதாள லோகங்கள் மிகவும் அழகியவை. இங்கு பொன்னும் பொருளும் குவியல் குவிலாகப் குவிந்து கிடக்கின்றன. காடு, பறவைகள் போன்ற ஜீவராசிகளும் நிறைந்துள்ளன.  பூமண்டலப் பகுதியாக பல நகரங்கள் அமைந்துள்ளன. இதற்கெல்லாம் தலைவன் யமதர்மராஜன். அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப இங்கு ஜீவன் தண்டிக்கப்படுகிறது.

இப் பூமி மண்ணிலிருந்து விண் வரை பரவியிருப்பது . புவர் லோகம் இதில் ஒரு பகுதி. மற்றும் வரிசையாக சூரிய மண்டலம், சந்திர லோகம், புதன், சுக்கிரன், அங்காரகன் (செவ்வாய்) குரு, சனி, சப்தரிஷி மண்டலம், துருவ லோகம் என்று பல பிரிவுகள் உள்ளன. கல்ப முடிவில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டும் அழியும்.

பாதாள லோகத்திற்கு நெடுந்தொலைவில் ஆதிசேஷன் இருக்கிறார். அவர் விஷ்ணுவின் திருமேனியாய் விளங்குகிறார். ஆயிரம் தலைகள் கொண்டவர் அவர். உடல் போன்ற மலை கொண்ட திருவரையில் நீலப்பட்டாடை உடுத்தியும் வெண்மையான முத்து மாலைகளை அணிந்தும் விளங்குகிறார்.

இரு புறங்களிலும் சாந்தி தேவியினாலும், வாருணீ தேவியினாலும் உபாசிக்கப்படுகிறார். இவர் எல்லா பூ மண்டலங்களையும் தாங்கிக் கொண்டு பாதாளத்தின் அடியில் இருக்கிறார். அவருடைய ஆற்றலை அறிந்தவர் யாருமிலர்.

இந்தப் பூமியின் பரப்பளவு தூரம் மேலே உள்ளது. பூமிக்கு மேல் லக்ஷம் யோஜனை தூரத்தில் சூரிய மண்டலம் உள்ளது. அதற்கு மேல் அதே அளவு தூரத்தில் சந்திர மண்டலம், அதே போல் அதற்கு மேலே நக்ஷத்ர மண்டலம், அதற்கு மேல் புதன், அதற்குமேல் சுக்கிர மண்டலம், அதற்குமேல் அங்காரக மண்டலம், பிருஹபதி மண்டலம், சனி மண்டலம் ஆகியவை உள்ளன. அவற்றிற்கு மேல் சப்தரிஷி மண்டலம், துருவ மண்டலம் உள்ளன. இவை சுவர்க்க லோகம் எனப்படும்.

இவற்றிற்குமேல் மஹர்லோகம், அதற்குமேல் ஜனலோகம் அதற்கு மேல் தபோலோகம் உள்ளது. இதற்கு மேல் பிரம்மாவின் சத்தியலோகம் உள்ளது. ஆக, மேலே ஏழு உலகங்களையும், கீழே ஏழு உலகங்களையும் கொண்டது பிரஹ்மாண்டம் ஆகும்.

இந்தியா தீவு அல்ல. இது புராணிடகர்களின் முதல் தவறு. பூமிக்குமேல் இலட்சம் யோசனை தூரத்தில் சூரிய மண்டலம். அதற்கும் மேலே அதே அளவு தூரத்தில் சந்திர மண்டலம் என்பது தவறு. பூமிக்கு அருகில் (385,000 கிமீ அல்லது 238,700 மைல்) சந்திரனும் அப்பால் சூரியனும் (சராசரி 150 மில்லியன் கிமீ அல்லது 93.2 மில்லியன் மைல்)  காணப்படுகின்றன என்பதுதான் உண்மை. அறிவியல் கண்டுபிடிப்பு எல்லாமே புராணப் புளுகுகளை மறுக்கிறது.

இனி இந்தப் புராணிகர்கள் சூரியனைப் பற்றி எழுதி வைத்திருப்பதைப் பார்ப்போம்.

சூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரமே உள்ளது. சக்கரத்தில் மஹாக்ஷம் என்னும் அச்சு உள்ளது. துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு. தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சக்கரம் ஸம்வத்ஸரம் எனப்படும் காலச்சக்கர சொரூபமாக உள்ளது. தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. சூரியனுடைய தேர் ஆதித்தியர்கள் எனப்படும் தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரசுகள், யக்ஷர்கள், ஸர்ப்பங்கள், ராக்ஷசர்கள் ஆகியோரால் அதிஷ்டானம் செய்யப்பட்டிருக்கிறது.

சூரியன் தக்ஷிணாயன காலத்தில் பன்னிரண்டு முகூர்த்த கால அளவில் பதின்மூன்றரை நட்ஷதிரங்களைக் கடந்து மிகப் பெரிய பூமியைக் கடக்கிறான். இரவு காலத்தை பதினெட்டு முகூர்த்த காலத்தில் கடக்கிறான். அதனால் பகற்பொழுது குறைந்தும், இரவுப் பகுதி நீண்டும் தோன்றுகிறது.

சூரியன் விஷ்ணுவின் அமிசமானவன். அந்த ஒளிமயமான சூரியனுக்குள் நிர்விகாரமான பிரம்மம் இருக்கிறது. அதுவே பிரணவத்தின் பொருளாகப் பொருந்தி நிற்கிறது. எனவே, பிரணவம் என்னும் பிரம்மம்தான் சூரியனை இயக்குகிறது.

சந்திரனுடைய தேருக்கு மூன்று சக்கரங்கள். தேரின் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் பத்து வெண்ணிறக் குதிரைகள் கட்டப்பட்டுள்ளன. துருவனை ஆதாரமாகக் கொண்டு விரைவாகச் செல்லும் இந்தத் தேரினால் தான் இந்திரன் நாகவீதி முதலியவற்றில் உள்ள நட்ஷத்திரங்களைக் கடந்து செல்கிறான். சந்திரனுக்கும் உதயாதி காலங்களில் கிரணங்கள் குறைவதும் நிறைவதும் உண்டு.

சந்திரனது கலைகள் பதினாறு ஆகும். அவற்றுள் பதினைந்து கலைகளை தேவர்கள் பருகி வருகின்றனர். கடைசி ஒரு கலையுடன் நிற்கும் சந்திரனைச் சூரியன் பதினைந்து நாட்களில் முழுமை பெறச் செய்கிறான். இவ்வாறு முழுமை பெற்ற பூர்ண சந்திரனிடத்தில் உள்ள அமுதத்தினைத் தான் தேவர்கள் பருகிக் களிக்கின்றனர்.

சூரியன் ஒரு நட்சத்திரம். சந்திரன் பூமியின் துணைக்கோள். ஆனால் இந்த இரண்டையும் கிரகங்கள் என்ற கணக்கில் சேர்த்து சாதகம் கணிக்கும் புரட்டர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் தலைக்கு ஒரு தேர் கட்டி ஊர்வலம் விடுகிறார்கள்.

புராணிகர்கள் போலவே சோதிடர்களும் இராசிகள் (சூரியன் பயணிக்கும் பாதையின் இரு மருங்கிலும் – மேலும் கீழுமாக 15 பாகை அகலம் – காணப்படும் 1 – 100 வரையிலான சிறு சிறு விண்மீன் கூட்டங்கள்) பற்றியும் கோள்கள் பற்றியும் சோதிடர்களும் தாறுமாறாகக் கற்பனை கலந்து எழுதியுள்ளார்கள். அன்றைய அறிவு அந்தளவுதான் இருந்தது. இன்று இருப்பது போல் விண்ணை அளக்கும் தொலைநோக்கிகள், விண்கலங்கள், செய்மதிகள் இருக்கவில்லை.

எங்களது சூரியன் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான நட்சத்திரமாகும். நாம் வாழும் பூமி சூரியனைப் போலவே 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறிய போது உருவானது. தொடக்கத்தில் புவி ஒரு சிறிய நட்சத்திரம் போலவே இருந்தது. ஆனால் புவி உருவில் சிறியதாக இருந்ததால் சூரியனில் இடம்பெறும் வெப்ப அணு ஆற்றல் புவியில் இடம்பெற வாய்ப்பில்லாது போய்விட்டது. எனவே புவி குளிரத்தொடங்கியது. புவியில் உயிரினம் சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம். உயிர் எப்படித் தோன்றியது? உயிரினங்கள் (மரம்செடி மற்றும் விலங்குகள்) எல்லாவற்றிலும் மரபணு (DNA)  இருக்கிறது. மரபணு கோடிக்கணக்கான மூலக்கூறுகளால் (molecules) ஆனது. எப்படி வளர வேண்டும் எப்படி தன்னைப்போலவே இன்னொரு உயிரை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற அறிவுரை இந்த மரபணுவுக்குள் பொதிந்து கிடக்கிறது.

500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனின் ஈர்ப்பு விசை மிகுந்து, பிய்ந்து, சிதறி, கோள்கள் உருவாகின. பூமியின் வெப்ப நிலை உயர்ந்து நிலநடுக்கமும், எரிமலை வெடித்தலும் ஏற்பட்டன. 300 கோடி ஆண்டுகளுக்கு முன் பெருமழை தொடர் மழை பெய்ததன் விளைவாகக் கடல்கள் உருவாகின. இந்தக் கொள்கைதான் ஆவி முகில் திரள் கொள்கை (Nebular  Hypothesis) எனப்படுகிறது.

ஆறுகள் நிலப்பரப்பை அரித்துக் கொண்டு ஓடி கடல் நீரில் கலந்தபோது, ஆற்று நீரில் கரைந்த உப்பு கடலில் கலந்த காரணத்தால் கடல் நீர் உப்பானது. அதேபோல கடல் நீரில் அமினோ அமிலங்கள் (Amino Acids) மற்றும் நியூக்லிக் அமிலங்கள்(Nucleic Acids) உருவாகி பிறகு புரோட்டீன், புரோட்டோ பிளாசம் உருவாகியது. புரோட்டோ பிளாசத்தில் மெல்லிய சவ்வுப் படலம் சூழ்ந்ததன் விளைவாக ஓர் உயிர் அணு (Cell) தோன்றி, நீர்ப்பாசி (Algae) தோன்றி அதன் பிறகு புரோட்டோசோவா (Protozova) உருவானது. நீர்ப்பாசியுடன் இணைந்து அமீபா (Ameba) எனும் ஒரு செல் உயிரி தோன்றியது. நுண்ணுயிர்கள் (Bacteria) உருவாகி, கடல் பஞ்சு, பவளப் புற்றுகள், புல் பூண்டுகள், செடி, கொடி, மரங்கள் என உருமலர்ச்சி பெற்றன. பின் புழுக்கள், நட்சத்திர மீன்கள் ஆரவயவiடிn எனும் நிலையால் உருவாகின. பின் தவளை, மீன் என்று பற்பல உயிர்களும் உருமலர்ச்சி பெற்றன.

உயிரினங்கள் உருமலர்ச்சி மூலம் உருவானது என்பதே அறிவியலாளர்களது முடிவாகும். அதனை முதல் முதல் நிறுவியவர் சார்ல்ஸ் டார்வின் (Charles Darwin (1809-1882) ஆவார்.

உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு (Theory of  evolution) நீர் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப்படவில்லை என்பதை நிறுவியது.

மேலும் நாம் காணும் உயிரினங்களின் உருவம் தொடக்க காலத்தில் இருந்தே வரவில்லை. அவை ஒரு கல (single cell) உயிரியிற் தொடங்கி இடையறாத மாற்றம், படிமுறை வளர்ச்சி, மலர்ச்சி, இனப் பெருக்கம், இடப் பெருக்கம், இயற்கைத் தேர்வு (Natural Selection) நிலத்தின் தன்மை, சூழல் முதலியவற்றுக்கு ஏற்ப வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்தல் காரணமாக உருமாற்றம் அடைந்து வந்துள்ளன.

இன்று நாம் காணும், மரம், செடி, கொடிகள் கடலில் இருந்து கரையில் விழுந்த சிறு சாதாளையின் உருமலர்ச்சி ஆகும்.

மனிதனை எடுத்துக் கொண்டால் அவன் “முழுசாகக் கடவுளால் படைக்கப்படவில்லை, மண்ணின் செழுமையால் ஒன்று கூடி உண்டான உயிரணுக்களின் உருமலர்ச்சியே (பரிமாண வளர்ச்சியே) மனிதன். அதாவது பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாய் மனிதன் தோன்றினான்” என டார்வின் உருமலர்ச்சிக் கோட்பாடு மூலம் நிறுவினார்.

மனிதன் ஊர்வன நிலையைக் கடந்து நாலு காலால் நடக்கும் குரங்கு நிலை எய்திப் பின்னர் வளைந்த முதுகை நேர் நிமிர்த்தி நாலு கால்களில் இரண்டைக் கைகளாகப் பயன்படுத்தி மீதி இரண்டு காலால் நடக்கக் கற்றுக் கொண்டு மரக் கொப்புகளுக்குப் பதில் குடிசை கட்டி சிற்சில கருவிகளைச் செய்து வாழப் பல இலட்சம் ஆண்டுகள் எடுத்தது என டார்வின் விளக்கினார்.

உலகத்தையும் அதிலுள்ள உயிர்களையும் கடவுள் படைத்தார், அரைகுறையாக அல்ல ஒவ்வொன்றையும் முழுதாகவே படைத்தார், அதே போல் ஆறறிவு படைத்த ஆணையும் பெண்ணையும் கடவுளே படைத்தார் என்றும் மதங்களும் மதவாதிகளும் சொல்லி வந்த படைப்புக் கோட்பாட்டை டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு தகர்த்து எறிந்தது.

டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு உயிரினங்கள் தம் நிலை பேற்றுக்காகப் போராடுகின்றன, இறுதியில் தகுதியுள்ளவை மட்டுமே தப்பிப்பிழைக்கின்றன (The Struggle for Existence and Survival of the Fittest) எனக் கூறியது. (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
பஞ்சாங்கம் பார்த்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

(18)

இன்று வெளிவரும் திரைப்படங்களைப் பார்த்து இளையோர் கெட்டுப் போவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. திரைக்கதையில் நிறைய வன்முறைக் காட்சிகளையும் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளையும் ஒளிவு மறைவின்றிக் காட்டுகிறார்கள். ஒவ்வொருத்தராக வரிசையில் வரும் பத்துப் பதினைந்து மல்லர்களை ஒரு நோஞ்சான் கதாநாயகன் ஆகாயத்தில் பறற்து பறந்து உதைக்கும் காட்சிகள் இல்லாத படமே கிடையாது. அதே போல் பொக்குள் தெரிய அரைகுறை ஆடைகளில் குலுங்கக் குலுங்க ஆடிப்பாடும் கதாநாயகி இல்லாத படங்களையும் பார்க்க முடியாது.

மறுபுறம் சாதகம், பஞ்சாங்கம் போன்றவை கூறும் பலன்களை படித்தோ அல்லது கேட்டறிந்தோ கெட்டொழிந்து போகிறவர்களும் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைப்பாடு. இது பற்றி முன்னரும் எழுதியுள்ளேன்..பத்து, பன்னிரண்டு அகவைச் சிறுவர்கள் கொலை செய்கிறார்கள்;. அதற்கான திட்டங்களைத் துல்லியமாகத் தீட்டுகிறார்கள்;. கொலை செய்த பிறகு அந்த உடலை யாரும் கண்டறியாதவாறு என்னென்ன செய்யவேண்டும் என்பதுவரை தெரிந்து வைத்துள்ளார்கள்.

கொலை செய்த குற்றத்தில் பிடிப்பட்ட சிறுவன்  “இந்தப் படத்தில் வருகிற காட்சியில் கொலை செய்தவன் உடலை எப்படி யார் கண்ணிலும் படாமல் இலாவகமாக மறைத்து விடுகிறான் என்பது காட்டப்படுகிறது. அதன்படிதான் நானும் செய்தேன்’’ என்கிறான்.

இதோ குருதியை உறைய வைக்கும் ஒரு குரூரச் செய்தி.

சேலம் புறநகரான மணியனூரைச் சேர்ந்த 20 அகவை இளைஞன் இரமேஷ்.  சிறுவயதில் பெற்றோரை இழந்த இவன் சித்தியால் வளர்க்கப்பட்டான்.  சிறு வயது முதற்கொண்டே பஞ்சாங்கத்தைத் தூக்கிக் கொண்டு அலைந்திருக்கிறான். கோயில் குளம் என்று சுற்றித் திரிந்திருக்கிறான்.

தன்னை இரமேஷ் சித்தன் என்று சொல்லிக் கொண்டான். அவன் தலையில் ஒரு நாள் பல்லி விழுந்துவிட்டது. கும்ப இராசிக்காரன் தலையில் பல்லி விழுந்தால் மரணம் நிச்சயம் என்று பஞ்சாங்கம் பலன் சொல்லியது. .

என்ன செய்தான் அந்த இளைஞன்? 13 தூக்க மாத்திரைகளை முதலில் சாப்பிட்டு இருக்கிறான். சாவு அவனை வாரிக் கொண்டு போகவில்லை. அதன்பின் சயனைட் சாப்பிட்டு இருக்கிறான். சயனைட் சுவை எப்படி இருக்கும் என்று தெரியுமுன்பே ஆளைக் கொன்றுவிடும்.  இவனும் இறந்தே போய்விட்டான். அதுவும் எங்கு? ஊத்துமலை சக்கராதேவி கோயில் சன்னதிக்கு முன் செத்துக் கிடந்தான். அவனுடைய நாள் குறிப்பைப் புரட்டிப் பார்த்தபோது கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.

“இருபது வயதில் சாகவேண்டும் என்பது என் விதி. பல்லியும் என் தலையில் விழுந்துவிட்டது. சாவு நிச்சயம். ஆகவே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன். முதலில் 13 தூக்க மாத்திரைகள் சாப்பிட்டேன். சாவு வரவில்லை. இப்பொழுது சயனைட் சாப்பிட்டுச் சாகிறேன். 14 – 03 – 2007 அன்று மறு அவதாரம் எடுப்பேன்’’ என்று எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து விட்டான்.

இருபது வயது இளைஞன் அநியாயமாகத் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறானே – இதற்கு என்னதான் பரிகாரம்? யார்தான் பொறுப்பு?

இந்தச் செய்தி பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வீட்டில் சாமி, பேய், பிசாசு, மந்திரம், மாயம், பக்தி, சாதகம், பஞ்சாங்கம் என்று பேசித் தொலைக்க வேண்டாம். இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துப் பெரியவர்கள் நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடந்து கொண்டால் பிள்ளைகளை அது உளவியல் அடிப்படையில் கடுமையாகப் பாதிக்கும். அவர்களை நோயாளியாகவும் ஆக்கிவிடும்.

பஞ்சாங்கம் என்பது அறிவியல் நூலா? மக்கள் மத்தியிலே அறிவியல் மனப்பான்மையை (scientific temper) உண்டாக்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டமே கூறுகிறது. அப்படியானால் அறிவியலுக்கு எதிரான இந்தப் பஞ்சாங்கக் குப்பைகளைத் தடை செய்ய வேண்டாமா?

இரமேஷ் தற்கொலை செய்துகொண்டான்  அவன் கதை முடிந்துவிட்டது. ஆனால் வெட்கமோ துக்கமோ எதுவுமின்றி ஏடுகளும், இதழ்களும் சோதிடம், பஞ்சாங்கம், இராசி பலன் போன்ற மூடத்தனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தங்களை சோதிட ஆசான், சோதிட சக்கரவர்த்தி, சோதிட இரத்தினம் என்று யாரும் சொல்லிக் கொள்ளலாம். கேட்பார் இல்லை. கனடாவில் இராசிபலன் பகுதி இல்லாத ஏடுகளைப் பார்ப்பது மிகவும் அரிது.  இங்குள்ள நூலகம் ஒன்று சோதிடத்துக்கு தனி இடம் ஒதுக்கியுள்ளது! அறிவியலுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. அரசுகள் இவற்றையாவது தடை செய்ய வேண்டாமா?

இனி விட்ட இடத்தில் இருந்து தொடருவோம்.

சார்ல்ஸ் டார்வின் பல ஆண்டுகள் நாடு நாடாகச் சென்று ஆய்வு செய்து எழுதிய உயிரினங்களின் மூலம் (The Origin of Species) என்ற நூல் 1859 இல் வெளிவந்தபோது மனித வரலாற்றில் அதுவரை காலமும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டன. உயிரினங்களின் மூலம் முதல் பதிப்பு முழுதும் (1,250 படிகள்) ஒரே நாளில் விற்று முடிந்தன. உலகம் கண்டிராத ஒரு சிந்தனைப் புரட்சியை 230 பக்கங்கள் கொண்ட அந்த நூல் ஏற்படுத்தியது. அதற்கு முன்னர் 1842 ஆம் ஆண்டு இயற்கைத் தேர்வுக் கோட்பாடு (Theory of Natural Selection) என்ற சிறு நூலை எழுதி வெளியிட்டார். டார்வின் உருமலர்ச்சி பற்றி மொத்தம் 18 நூல்கள் எழுதினார்.

டார்வின் 1874 ஆம் ஆண்டு மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவன் (Man is  the Developed Monkey) எனப் பல சான்றுகள் மூலமாக எடுத்துக் காட்டினார்.

டார்வினின் உருமலர்ச்சிக் கோட்பாடு மதவாதிகள் மத்தியில், குறிப்பாகச் செல்வாக்குப் படைத்த கிறித்தவ மதவாதிகள் மத்தியில், திகைப்பையும் வியப்பையும் அச்சத்தையும் உருவாக்கியது. கடவுள் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்னர் 6 நாள்களில் தேவலோகங்களையும் இந்தப் புவியையும் படைத்தார். தண்ணீரை ஆகாயத்தில் இருந்து பிரித்தெடுத்தார். புல், செடி, மரத்தைப் படைத்தார். இரவு பகலையும் நட்சத்திரங்களையும் படைத்தார். கடல்வாழ் உயிரினங்கள், ஊர்வன மற்றும் பறவைகளைப் படைத்தார். விலங்குகளைப் படைத்தார். தனது சாயலில் முதல் மனிதர்களான ஆதாம் – ஏவாள் ஆகியவற்றைப் படைத்தார். ஏழாவது நாளில் ஓய்வு எடுத்தார், கடவுள் பரமண்டலத்தில் இருக்கிறார். புண்ணியம் செய்தோர் சொர்க்கத்துக்கும் பாவம் செய்தோர் நரகத்துக்குப் போவார்கள்.

இவ்வாறு பேசியும் எழுதியும் வந்த மதகுருமார்க்கு டார்வின் மீது சொல்லி மாளாத சினம் ஏற்பட்டது. டார்வினும் அவர் எழுதிய நூலும் பலத்த கண்டனத்துக்கும் எதிர்புக்கும் உள்ளாகியது. மதவாதிகள் உருமலர்ச்சிக் கோட்பாட்டைக் கடுமையாக எதிர்த்தார்கள். ‘அண்டம், அதில் அடங்கிய உலகம் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை அதனை மறுப்பவர்கள் சாத்தானின் அவதாரங்கள்’ என ஆயர் வில்பபோர்ஸ் (Bishop  Wilburforce) கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

உயிரினங்களின் மூலம் என்ற நூல் நூல் வெளிவந்த ஆறு மாதத்துக்குள் (யூன் 30, 1860) நடந்த சொற்போரில் ஆயர் வில்பபோர்ஸ் பின்வருமாறு பேசினார்-

“மதிப்புக்குரிய மகாசனங்களே! பரம பிதாவின் பெயரால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன், சாத்தானின் அவதாரமான சார்ல்ஸ் டார்வின் நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என்று கொஞ்சமும் நாக் கூசாமால் கூறியிருக்கிறான். நீங்களே சொல்லுங்கள்? உங்களைக் கால்மேலும் தோள்மேலும் போட்டுச் சீராட்டி வளர்த்த உங்களுடைய பாட்டன்மார்களும் முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் இத்தனை இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளுக்குப் பின்னும் எந்தவித உருமலர்ச்சி கொள்ளாமல் அப்படியே இருக்கின்றான்? ஏன் அவனுக்கு இன்னும் ஒரு கொம்போ, ஒரு இறக்கையோ, ஒரு வாலோ அல்லது வேறு எதுவுமே உண்.டாகவில்லை? குரங்கின் உருமலர்ச்சி மனிதன் என்றால் மனிதனின் உருமலர்ச்சி என்ன?

இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நம்மைப் படைத்த ஆண்டவனை ஏளனம் செய்வது எத்தனை பெரிய பாவம் என்பதை நீங்கள் உணரவில்லையா?”

இவ்வாறு சொல்லாடல் செய்கின்;ற மதவாதிகள் ஒன்றை மட்டும் மறந்து விடுகின்றனர். .உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றால் கடவுளைப் படைத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது. அவர் யாராலும் படைக்கப்படவில்லை என்றால் இயற்கையின் செயல்களில் காரணம் இன்றி காரியம் இல்லை என்பதால் கடவுளும் படைக்கப்பட்டவரே என ஒப்புக் கொள்ள வேண்டி நேரிடும்.

இந்த அண்டத்தின் அகலம், நீளம், ஆழம் பற்றி முன்னர் (அத்தியாயம் 2) பார்த்தோம்.

எமக்குத் தெரிந்த  பேரண்டத்தில் (Known Universe) ஏறத்தாழ 36,000 கோடி பால்மண்டலங்கள் (Galaxies) இருக்கின்றன எனவும் ஓவ்வொரு பால் மண்டலத்திலும் 10,000 – 20,000 கோடி விண்மீன்கள் (Stars) காணப்படுகின்றன எனவும் வானியலாளர்கள் சொல்கின்றார்கள்! ஆனால் மனிதனது ஊனக் கண்களுக்கு சுமார் 6,000 நட்சத்திரங்கள் மட்டுமே இரவில் தெரிகின்றன! (அத்தியாயம் 2)

அப்படியென்றால் இந்த அண்டத்தில் வேறு கோள்கள் இல்லையா? அதில் உயிரினம் இல்லையா?

தமிழர்கள் வானியல் பற்றி அறிந்து கொள்வதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை. வாக்கிய பஞ்சாங்கம் அல்லது இரகுநாதய்யர் பஞ்சாங்கம் இல்லாத தமிழர்களது வீட்டையே பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் வீட்டில் ஒரு அட்லஸ் (Atlas) இருக்காது! வானியல் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டால் சோதிடம் பற்றிய மூடநம்பிக்கையில் இருந்து விடுபடுவது எளிதாகிவிடும்!

இன்று சூரிய குடும்பம் (solar system)  பால் வழி மண்டலம் (Milky Way galaxy) அண்டம் (Universe) பற்றிய ஆய்வு இடைவிடாது நடந்த வண்ணம் உள்ளது. நாசா (NASA) போன்ற அமைப்பு இந்த ஆய்வில் முன்னணி வகிக்கிறது. இதனால் சூரிய குடும்பம், பால் வழி மண்டலம் மற்றும் அண்டம் பற்றிய அறிவு நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
இறந்தவரை உயிரோடு இருப்பதாகச் சொன்ன நாடி சோதிடர் நீதிமன்றம் ஏறுகிறார்!
(19)

முதல் இல்லாத அதே நேரம் பணம் கொழிக்கும் ஒரு தொழில் உண்டு என்றால் அது பக்தி வணிகமாகவே இருக்க வேண்டும். அடுத்து சோதிடத் தொழிலைக் குறிப்பிடலாம்.

இந்த இரண்டு வணிகமும் மனிதனுக்குத் தனது எதிர்காலம் பற்றிய அச்சத்தையும் பேராசையையும் மூலதனமாக வைத்துச் சுரண்டிப் பிழைக்கின்றன.

கனடா வந்து கூடாரம் அடித்து கடை விரித்திருக்கும் தமிழ்நாட்டுச் சோதிடர்களது பெயர்ப்பட்டியலையும் அவர்களது வீர தீர அதி பராக்கிரமத்தைப் பற்றியும் முன்னர் (அத்தியாயம் 6) எழுதியிருந்தேன்.

ரொறன்ரோவில் மாதக்கணக்கில் கூடாரம் அடித்து சாத்திரம் சொல்லும் சோதிடர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இரண்டு பேர் நாடு திரும்ப நாலு பேர் விமானம் ஏறிக்; கனடாவுக்குப் பறந்து வருகிறார்கள்.

சுற்றுலா விசாவில் வரும்  இவர்களில் சிலர் ஒரு அங்காடியில் உள்ள மாடி அறையை வாடகைக்கு எடுத்துத் தன்பாட்டில் தொழில் செய்கிறார்கள். இன்னும் சிலர் தமிழ்நாட்டில் இருந்து சோதிடர்களை வரவழைத்து சோதிடத்தை ‘சயிட்’ தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார்கள்!

“வியாபாரம் பெருக விளம்பரம் செய்யுங்கள்” என்ற பொன்மொழிக்கு அமைய இங்குள்ள வார ஏடுகளிலும் தொலைக் காட்சியிலும் தடல்புடலாகத் தங்களைப் பற்றி சோதிடர்கள் விளம்பரம் செய்கிறார்கள். அறிவியல் கண்டு பிடித்த தொலைக்காட்சி மூடநம்பிக்கையைப் பரப்பப்பப் பயன்படுத்தப்படுகிறது!

சராசரி எல்லா மனிதர்களுக்கும் தங்களது எதிர்காலம் பற்றி எப்போதுமே ஒரு இனந் தெரியாத அச்சம் இருக்கும். அதிலும் இடர்காப்பின்மை (risk) இல்லாத பெரு இழப்பு ஏற்படக்கூடிய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த அச்சம் மிகவும் அதிகம். ஆனபடியால்தான் முதலாளிகள் பெரிய பெரிய சுவாமி படங்களை சுவாமி அறைமுழுதும் மாட்டி வைக்கிறார்கள். சுவாமி அறை இல்லாத அங்காடியைப் பார்க்கவே முடியாது. இவர்கள் வருவாய் வந்தாலும் சரி இழப்பு ஏற்பட்டாலும் சரி கோயில் தேர், திருவிழாக்களுக்கு நன்றாகச் செலவழிக்கிறார்கள். தொழிலில் வருவாய் வந்தவர்; மேலும் வருவாய் வரும் என்ற நம்பிக்கையில் செலவழிக்கிறார். தொழிலில் இழப்பைச் சந்தித்தவர் மேலும் இழப்பைத் தடுப்பதற்குச் செலவழிக்கிறார்.

கோயில் கட்டப் போகிறோம் அல்லது கோபுரம் எழுப்பப் போகிறோம் அடியார்கள் தலைக்கு ஆயிரம் டொலர் காணிக்கை கொடுங்கள் – நீங்கள் இரண்டு கையால் கொடுப்பதை முருகன் பன்னிரு கையால் திருப்பிக் கொடுப்பான் – என்று ஒரு கொப்பியோடு பத்துக் கடை ஏறி இறங்குங்கள். யாரும் மறுக்க மாட்டார்கள். கொடுக்காவிட்டால் கடவுள் கோபித்துக் கொள்வார் என்ற அச்சமே அதற்குக் காரணம்.

இதே பேர்வழிகளிடம் தமிழுக்கு விழா எடுக்கிறோம் என்று நிதி கேட்டுப் பாருங்கள். கொடுக்கவே மாட்டார்கள். அதுக்குக் கொடுத்து விட்டேன் இதற்குக் கொடுத்து விட்டேன் என்று சாட்டுச் சொல்வார்கள். வீட்டு முகவராக இருந்தால் “கடந்த மூன்று மாதங்களாக ஒரு வீடு கூட விற்கவில்லை” என்று மூக்காலே அழுவார்!

இங்கு ஏழு நாளும் காலை தொடங்கி இரவு வரை தொழில் பார்க்கும் ஒரு பல் மருத்துவரிடம் “தமிழ்க் கிழமை” கொண்டாடியவர்கள் நிதியுதவி கேட்டுப் போனார்கள். அவர்களை ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு “நான் இப்படிப்பட்ட காரியங்களுக்குக் கொடுப்பதில்லை” எனப் பல்மருத்துவர் கையை விரித்துவிட்டார். இவ்வளவிற்கும் அவரது விளம்பரம் வானொலியில் “என்னிடம் வாருங்கள் தமிழில் பேசி உங்கள் சேவையைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என மணித்தியாலத்துக்கு ஒருக்கா ஒலித்துக் கொண்டிருக்கிறது!

மனிதர்களுக்கு இயல்பாக இருக்கக் கூடிய அச்சம், ஆசை இரண்டையும் பயன்படுத்தி சுரண்டிப் பிழைக்கும் சோதிடரிடம் பலன் கேட்டுப் போன ஒரு பெண்ணின்  கதையைக் கேளுங்கள்.

அவர் மத்திய வகுப்பைச் சேர்ந்தவர். பெரிய படிப்புப் படித்தவர். ஒரு கடையின் மாடியில் தங்கி தொழில் பார்த்துக் கொண்டிருந்த சோதிடரைப் பார்க்க நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து விட்டுக் கடைசியாக சோதிடரைச் சந்தித்தார். சோதிடர் அவரை உற்றுப் பார்த்து எடைபோட்டு விட்டு அருகில் இருந்த ஒரு உண்டியலைக் காட்டி அதற்குள் 21 டொலரைப் போடுமாறு கேட்டார். பின்னர் பிறந்த நாள், நட்சத்திரம் இரண்டையும் கேட்டுவிட்டு கொஞ்சம் கண்ணை மூடித் தியானம் செய்தார்.

“நீங்கள் நல்ல கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் (பலன் கேட்டவர் நன்றாக உடுத்திருந்தார்) நல்ல குணவதி. எல்லோருக்கும் பலனை எதிர்பாராது உதவி செய்யும் மனம் உங்களது மனம். ஆனால் உங்கள் கணவர் (கழுத்தில் இருந்த தாலியை சோதிடர் கவனித்திருப்பார்) பற்றி அப்படிச் சொல்ல முடியாது.  தற்சமயம் உங்களுக்கு பணச் சிக்கல் இருக்கிறது. அதனால் உங்களுக்கு ஏகப்பட்ட மனவுளைச்சல்!” என்றார். அதனைக் கேட்டு அதிசயித்த அந்தப் பெண் தங்களுக்குச் சொந்தமான ஒரு சொத்தை விற்க நீண்டகாலமாக முயற்சி செய்தும் கைகூடாது இருக்கிறது என்றும் அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்று கேட்டார்.

“ஏன் இல்லை? எல்லாவற்றிற்கும் பரிகாரம் இருக்கிறது. இதற்கும் நிச்சயம்  பரிகாரம்  இருக்கிறது. அம்பாளுக்கு (அறை நிறைய விக்கிரகங்கள்) தோச பரிகாரம் செய்தால் அந்தச் சொத்து ஒரு மாதத்துக்குள் கட்டாயம் விலைப்பட்டுப் போய்விடும். ஆயிரம் டொலர் கொடுங்கள் நாளைக்கே அம்பாளுக்கு  பரிகார பூசையை ஆரம்பித்து விடலாம்” எனச் சோதிடர் ஆங்கிலத்தில் சொன்னார்.

சோதிடம் கேட்க வந்திருக்கும் பெண்ணை அளவிட்ட சோதிடருக்கு சட்டென்று எல்லாம்  புரிந்து விட்டது. தான் போட்ட தூண்டிலைக் கவ்வ மீன் ஆயத்தம் எனக் கண்டு கொண்டதுமே மேலும் அவருக்குச் சிந்திக்க இடம் கொடாது வணிகத்தை உடனே முடிக்க நினைத்த சோதிடர் மீண்டும் “நாளைக்கே தோசபரிகார பூசையைத் தொடங்கலாம்” என அவசரப்படுத்தினார்.

அந்தப் பெண்ணின் மனம் கடிகார முள்போல் ஊசலாடியது! ஆயிரம் டொலரை முதலீடு செய்தால் அய்ந்து இலட்சம் டொலர் பெறுமதியான சொத்தை ஒரு மாதத்துக்குள் விற்று விடலாம். இருந்தும் “வீட்டுக்காரரைக் கேட்காமல் நான் எதையும் செய்வதில்லை. அவரிடம் கேட்டு விட்டு நாளை வந்து உங்களைப் பார்க்கிறேன்!” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் (தப்பி) வந்துவிட்டார்.

சோதிடர் செய்யும் தோச பரிகாரத்தால் சொத்துக்களை ஒரு மாதத்துக்குள் விற்று விடலாம் என்றால் வீடு விற்பனை முகவர்கள் எதற்கு? அவர்களுக்கு ஏன் ஐயாயிரம் பத்தாயிரம் என்று தரகு கொடுக்க வேண்டும்?

இப்படி ஒரு நாளைக்கு பத்து இளித்தவாய்த் தமிழர்கள் கிடைத்தாலே போதும். சோதிடர் காட்டில் இல்லை வீட்டில் ஒரே பண மழைதான்.

பத்தாம் வகுப்பைத் தாண்டியிராத சோதிடர்கள் பல்கலைக் கழகத்தில் படித்து, இளங்கலை, முதுகலை, முனைவர் எனப் பட்டங்கள் பெற்ற படிப்பாளிகளை எளிதாக முட்டாக்களாக்கி விடுகிறார்கள்.

இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள். “கோர்ட் படியேறுகிறார் கோபாலகிருஷ்ணன் – நாடி சோதிடர்களை சும்மா விடமாட்டேன்” என்ற தலைப்போடு ஆனந்தவிகடன் (மார்ச்சு 11, 2007) இதழில் வெளிவந்தது. ஆனந்தவிகடனின் அம்மாமித் தமிழை முடிந்தளவு செம்மைப்படுத்தியுள்ளேன்.

சப்த நாடியும் ஒடுங்கிப்போய் கவலையுடன் இருக்கிறார்கள் நாடி சோதிடர்கள். குறிப்பாக, வைத்தீஸ்வரன் கோயில் சோதிடர்கள்தான் குலைநடுக்கத்தில் இருக்கிறார்கள். காரணம், இங்கு சோதிடம் பார்க்க வந்த ஆள் ஒருவர், ‘இந்த நாடி ஜோதிட விவகாரமே ஏமாற்று வேலைதான்’ என ஆதாரங்களோடு நீதிமன்றம் படி ஏறியிருப்பதுதான்!

நாடி சோதிடத்தைப் பற்றி அறியாதவர்கள் அநேகமாக இருக்க முடியாது. சித்தர்கள் எழுதி வைத்துவிட்டுப் போன நாடிகளை வைத்து, உலகத்தில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் அவர்களது முற்பிறப்பு, இப்பிறப்பு, அடுத்த பிறப்பு வரையிலான அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லப்படுவதுதான் நாடி சோதிடத்தின் தனி முத்திரை (speciality).  சோதிடம் பார்க்க வருகிறவரின் கைரேகை மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பெற்று, அதைக் கொண்டு அவரவர்களுக்கு உரிய சுவடியைத் தேடி எடுத்து, அதைப் படித்துக் காட்டுவார்கள். வைத்தீஸ்வரன் கோயிலில் தொடங்கிய இந்த வகை சோதிடம், இன்று உலகம் முழுதும் கிளை பரப்பி, சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. வைத்தீஸ்வரன் கோயிலில் மட்டுமே இப்போது 48 சோதிட நிலையங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அதற்கான மவுசைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இப்படி நாடி ஜோதிடத்தைப் பலர் கொண்டாடுவது ஒருபுறமிருந்தாலும், இது சுத்த ஏமாற்று வேலை என்று அதற்கெதிராகக் கொடிபிடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படித்தான் கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒருபடி மேலே போய் நீதிமன்றத்துக்கே போய்விட்டார்.

‘‘பக்கத்துல சீர்காழிதான் என் ஊரு. 35 வயசாகியும் இன்னும் கல்யாணம் ஆகலையே, ஏதாவது தோஷம் கீஷம் இருக்குமான்னு ஜோசியம் பார்ப்போம்னு முடிவு பண்ணி, வைத்தீஸ்வரன் கோயில்ல பிரபலமா இருக்கிற சிவசாமி நாடி ஜோசியர்கிட்டே போனேன். அங்க நிறைய பேரு நாடி படிப்பாங்க. அதுல ஒருத்தர் தான் எனக்கு நாடி படிச்சாரு. எல்லாத்தையும் அப்படியே புட்டுப்புட்டு வைப்பாருன்னு பார்த்தா, ‘உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு முதல்லயே தப்பா சொன்னார். அப்புறம் செத்துப்போன எங்க அம்மா உயிரோட இருக்காங்கன்னும், பத்தாவது படிச்ச நான் பட்டப் படிப்பு முடிச்சு மின்துறையில வேலை பார்க்கிறேன்னும் அள்ளி விட்டார். இதுக்கு 500 ரூபா தட்சணையும் வாங்கிக்கிட்டாங்க.

அப்பதான் நாடி ஜோதிடர்கள் எல்லோருமே ஏதோ ஃபிராடு (fraud)  வேலைதான் செய்யுறாங்கன்னு என் மனசுல பட்டுச்சு. இதை நம்பி பல்லாயிரக்கணக்கானவங்க வந்து தங்களோட பணத்தைத் தொலைச்சிட்டுப் போறாங்களேன்னு கவலையாவும் இருந்துச்சு. அதனால இதை என்னான்னு பார்த்துடணும்னு முடிவு பண்ணினேன். 2003 ஆம் ஆண்டு செத்துப்போன எங்க அண்ணனோட கைரேகை ஒரு பத்திரத்துல இருந்துச்சு. அதை படி எடுத்துட்டுப் போய்க் கொடுத்து, ‘இவரு வெளியூர்ல இருக்காரு. நேர்ல வரமுடியல. அதான் கைரேகை கொடுத்து அனுப்பிச்சாருன்னு சொன்னேன். அவரோட உண்மையான பிறந்த தேதியையும் சொன்னேன்.

அதை வச்சு அவரோட ஓலைச் சுவடியை எடுத்துட்டதா சொன்ன சிவசாமியோட ஆள் ஒருத்தர், எங்கண்ணன் உயிரோட இருப்பதாகவும், அவருக்கு 78 வயது வரை நீண்ட ஆயுள் இருப்பதாகவும் சொன்னார். அதை அப்படியே அவர்கள் கையால் எழுதியும், ஒலி நாடாவையும் வாங்கிக்கிட்டு வந்துட்டேன். இதை வச்சு தான் நாடிஜோதிடம் பொய்ங்கிறதை உலகுக்குச் சொல்ல முடிவெடுத்தேன். அதற்கு முதல்படியாதான் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறேன்’’ என்று விளக்கமாகச் சொன்னார்.

சோதிடம் பார்த்தபோது சோதிடர் காட்டிய ஓலைச் சுவடிகளைப் படமெடுத்துக் கொண்ட கோபாலகிருஷ்ணன், அதை தஞ்சை சரஸ்வதி மகாலுக்கு எடுத்துச் சென்று அவர்களிடம் காட்டி விளக்கம் கேட்டிருக்கிறார். அவர்கள், ‘இது பண்டைக்கால தமிழ் எழுத்தே இல்லை. இப்போது தயார்செய்யப்பட்ட ஓலைதான் இது’ என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஓலைச்சுவடிகள் குறித்து நன்கு அறிந்த ஒருவர், ‘‘சித்தர்கள் எழுதி வைத்துள்ளதாக மொத்தம் 42,000 ஓலைச்சுவடிகள் நமக்குக் கிடைத்துள்ளது. அவை அரசால் பத்திரப்படுத்தப்பட்டு விட்டன. அவை தவிர வேறு எவரிடமும் சித்தர்கள் ஓலைச்சுவடிகள் கிடையாது. மேலும் சித்தர்கள் இலக்கியம், இலக்கணம், இசை, வரவுசெலவு கணக்கு, வர்மம், யோகா, மருத்துவம் இவை பற்றித்தான் எழுதியிருக்கிறார்களே தவிர, உலகத்தில் பிறக்கிற எல்லோருக்கும் பக்கம் போட்டு ஜாதகம் எழுதி வைக்கவில்லை. ஆனால், அவர்கள் பெயரைச் சொல்லி சிலர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களில் ஒருவருக்குக்கூட சித்தர்களின் ஓலைச் சுவடியில் இருக்கும் ஒரு வரியைக்கூட படிக்கத் தெரியாது எனபதுதான் உண்மை. ஆனால் இவர்களாகவே ஓலையைத் தயார் செய்து, அதற்கு ஒரு கவிதை நடை சந்தத்தை உருவாக்கி, கெட்டிக்காரத்தனமாக பிழைப்பு நடத்தி வருகிறார்கள்’’ என்றார்.

தன்னைப் போல் இனியும் யாரும் நாடி ஜோதிடரிடம் ஏமாறக்கூடாது எனக் கருதி, மயிலாடுதுறை வழக்கறிஞர் குபேந்திரன் மூலம் சீர்காழி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் சோதிட நிலையம் மீது முறைப்பாடு விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார்.

“பண்டைய காலத்தில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்று போலியாகத் தயாரிக்கப்பட்ட பனை ஓலைச் சுவடிகளை வைத்து எனக்கு நாடி ஜோதிடம் பார்த்துப் பொய்யான தகவல் களைக் கூறியுள்ளனர். பரிகாரம் தேடா விட்டால் பல சங்கடங்கள் வரும் என்று என்னை அச்சுறுத்திப் பணம் பறித்துள்ளனர். எனவே, உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கவேண்டும்” என்று அந்த விண்ணப்பத்தில் அவர் கேட்டுள்ளார்.

சீர்காழி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கில் வரும் 21 ஆம் றாள் சிவசாமியை நேரில் தோன்றுமாறு உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி நீலாவதி.

மக்களை ஏமாற்றுவதில் நாடி சோதிடர்கள் மன்னர்கள். நாடி சோதிடம் பார்த்தவர்களைக் கேட்டுப் பாருங்கள் “அது முற்றிலும் உண்மை. எனது அப்பா அம்மா பெயர் எல்லாம் அச்சொட்டாகச் சொன்னார்” என்பார்கள். அந்தப் பெயர்களை சில கேள்விகள் மூலம் வாடிக்கையாளரிடம் இருந்தே நாடிசோதிடர் வரவளைத்தார் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிவதில்லை.

உலகில் 6,000 கோடி மக்கள் வாழ்கிறார்கள். பல ஆயிரம் போடி மக்கள் வாழ்ந்து மடிந்து போனார்கள். இவர்கள் எல்லோருக்கும் 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர், பிருகு, வியாசர், வால்மீகி, வசிட்டர் ஆகியோர் ஓலை, அதிலும் தமிழில், எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்களா? கேழ்வரகில் நெய்வடிகின்றதென்றால் கேட்பவனக்கு மதியில்லையா?

மேற்கு இந்திய தீவுகளில் 13 அணிகள் பங்குபற்றும் உலகக் கோப்பைக்கான (2007)  கிரிக்கெட் போட்டி இன்று (மார்ச்சு 13) தொடங்கி ஏப்ரில் 28 வரை நடைபெற இருக்கிறது. வழக்கம் போல சோதிடக்கள், எண்கணித சோதிடர்கள் கடையைத் திறந்து விட்டனர்.

இந்திய அணி வெல்ல வேண்டும் என்று இந்தியா எங்கும், குறிப்பாக வருணாசியில்,  யாகங்களும் பூசைகளும் செய்யத் தொடங்கி விட்டனர்!

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் கழுத்திலும் மணிக்கட்டிலும் பல வண்ணங்களில் மந்திரக் கயிறுகள், தாயத்துக்கள், துளசி மாலைகள். ஒவ்வொரு பந்தை வீசும் போதும் அடிக்கும்போதும் சூரிய நமஸ்காரம், காயத்திரி மந்திரம், செபம் செய்வார்களாம்!

முன்னர் 2003 இல் நடந்த போட்டியின் போதும் இதே கதைதான். ஆனால் இந்தியா மண்ணைக் கவ்வியது!

ஒவ்வொரு நாட்டுக்காரர்களும் அந்தந்த நாடுதான் வெற்றிவாகை சூடவேண்டும் என்று யாகமும் யோகமும்  செபமும் செய்யத் தொடங்கினால் விளையாட்டு வீரர்களின் திறமைக்கு என்னதான் மதிப்பு? இது என்ன ஒவ்வொரு மதக் கடவுளுக்கிடையே நடக்கும் போட்டியா? (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

இந்திய அணி படுதோல்வி! வேள்விகள் பல செய்தும் பலன் இல்லை!

(20)

“ஒவ்வொரு நாட்டுக்காரர்களும் அந்தந்த நாடுதான் ஜெயிக்க வேண்டும் என்று யாகமும், ஜெபமும் செய்ய ஆரம்பித்தால், விளையாட்டு வீரர்களின் திறமைக்குத்தான் என்ன மதிப்பு? இது என்ன ஒவ்வொரு மதக் கடவுளுக்கிடையே போட்டியா?” என முன்னர் (அத்தியாயம் 18) கடாவி இருந்தேன் அல்லவா?

இந்திய அணி வெல்ல வேண்டும் என்று இந்தியா எங்கும், குறிப்பாக வருணாசியில், வேள்விகளும் (யாகங்களும்) பூசைகளும் செய்யத் தொடங்கி விட்டனர் எனவும் எழுதியிருந்தேன்.

சென்னைக் கடற்கரையில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதற்காக 10 அடி உயர ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தார்கள்! கொளுத்தியவர் சாதாரண ஆள் அல்ல.  சென்னை மாநகராட்சி மன்ற மேயர் எம். சுப்பிரமணியன்!

இவர் பாரதீய ஜனதாகட்சியைச் சேர்ந்தவர் அல்ல. பகுத்தறிவு பேசும் கலைஞர் கருணாநிதி தலைவராக இருக்கும் திமுக உறுப்பினர்! இதைப் பார்த்துவிட்டு சென்னைக் கடற்கரையில் எதையும் தாங்கும் இதயம் இங்கே தூங்குகிறது என்று எழுதிவைக்கப்பட்டுள்ள கல்லறையில் படுத்திருக்கும் அறிஞர் அண்ணா அவமானத்தால் நெளிந்திருப்பார் என்பதில் அய்யமில்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பகுத்தறிவு  என்ற முழக்கத்தோடு தான் உருவாக்கிய திமுக எப்படியெல்லாம் தடம் புரண்டு பகுத்தறிவுக்கு விடை கொடுத்து விட்டது என்ற கவலை அவருக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கம் உலகக் கோப்பைக்கான கிறிக்கட் போட்டி பற்றி மாலை முரசு (28.2.2007) இதழ் பின்வருமாறு எழுதி இருந்தது.

“ஒரு அணியில் என்னதான் திறமையான வீரர்கள் இருந்தாலும் போட்டி நடை பெறும் நாள், நேரம் ஆகியவை எந்த அணிக்குச் சாதகமாக இருக்கிறதோ அந்த அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று எண் கணித நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வீரர்களின் பெயர்கள் அவர்களது பிறந்த நாள் மற்றும் அவர்கள் அணியும் பனியன்கள், எண்கள் ஆகியவைகூட வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று சோதிடர்கள் ஆதாரங்களுடன் தெரிவிக்கிறார்கள்.”

சரி.  கடந்த முறை 2003 இல் நடைபெற்ற உலகக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏன் தோற்றதாம்? அதற்கும் மாலை முரசு காரணம் சொல்லுகிறது.

“கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை அபாரமாக முன்னேறியது. ஆனால் அவுஸ்திரேலிய அணியிடம் பரிதாபமாகத் தோற்று உலகக் கோப்பையை இழந்தது.

இதற்குச் சனிக்கிரகத்தின் ஆதிக்க எண்ணான 8 தான் காரணமாம். அதாவது இந்திய அணி தொடர்ந்து 7 போட்டிகளில் வென்று 8 ஆவது போட்டிக்குள் நுழைந்தது. எனவே இந்திய அணிக்குத் தோல்வி ஏற்பட்டதாக எண் கணித நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதே போல் அப்போதைய கேப்டன் கங்குலியின் இராசியும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாம். அவரது இராசியான எண்கள் 1,3,5 மற்றும் 6 ஆகியவை என்றும் 8 ஆம் எண் அவருக்குச் சிறிதுகூட இராசி இல்லாத எண் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

2003 இல் தோற்றதற்கு இப்பொழுது  இந்த எண் கணித சோதிடர்கள் காரணங்கள் சொல்லுகிறார்களே? அப்பொழுது 2003 இல் என்ன சொன்னார்கள்? எண் கணிதத்தை எல்லாம் கட்டம் போட்டுக் கூட்டிக் கழித்துப் பெருக்கி அவர்கள் சொன்னது என்ன?

இதோ தினத்தந்தி (14- 3- 2003) அன்று சொன்ன எதிர்கூறல்.

“தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையை இடது கை ஆட்டக்காரரான இந்திய கேப்டன் கங்குலி கைபற்றுவார்” என்று பிரபல எண் கணித ஜோதிடர் ஒருவர் தெரிவித்து உள்ளார். மேலும் அந்த ஜோதிடர் தெரிவித்ததாவது:

“1979 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் 1999 ஆம் ஆண்டு வரை நடந்துள்ள உலகக் கோப்பை வரை ஒரு உலகக் கோப்பையை இடது கை ஆட்டக்காரர் (கேப்டன்) கைப்பற்றினால் அதற்கு அடுத்த உலகக் கோப்பையை வலது கை பழக்கமுள்ள கேப்டன் என மாறி மாறி வென்றுள்ளனர். அந்த வகையில் இந்த முறை இடது கை ஆட்டக்காரரான கங்குலி தலைமையில் உள்ள இந்திய அணிதான் கோப்பையைக் கைப்பற்றும்” என்று சொன்னார். இந்த எதிர்கூறலைத் தினத்தந்தி மூன்று பத்தி தலைப்புப் போட்டு வெளியிட்டது.

தினத்தந்தி மட்டுமா? தினமணி (14- 3- 2003) யும் இந்தியாதான் வெல்லும் என்று செய்தி வெளியிட்டது.

“இந்தியாவுக்கே கோப்பை எண் ஜோதிடம் கணிப்பு”  என்று நான்கு பத்தி தலைப்புப் போட்டு எண்கணித சோதிடரின் கணிப்பை வெளியிட்டது!

“ஒரு உலகப் போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையில் உள்ள ஆண்டுகளின் எண்ணிக்கை நான்கு. அவுஸ்திரேலியா 1987, 1999 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. இடைவெளி 12 ஆண்டுகள் – எண் கணக்கீட்டின்படி அடுத்த எண் 20 (அதாவது 4,12,20) அந்த அடிப்படையில் கோப்பை இந்தியாவுக்கு வந்து சேரும் என்று கூறுகிறது ஜோதிடம்” என்று தினமணியின் எண்கணித ஜோதிடர் கணித்துச் சொன்னார்.

2003 இல் உலகக் கோப்பை இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததா? 2003 இல் இந்தியா தோல்வியைத் தான் சுமந்தது!

இந்தத் தோல்விபற்றி தினமலர்  (26.3.2003) நான்கு பத்தியில் செய்தியை வெளியிட்டது. “கிறிக்கெட் என்றாலே ஓடும் ஜோதிடர்கள்” என்பது தலைப்புச் செய்தி. செய்தி இப்படித் தொடங்குகிறது.

“உலகக் கோப்பையை இந்தியாதான் ஜெயிக்கும்!” என்று ஊடகங்கள் மாற்றி, மாற்றி சத்தியம் செய்து செவ்வி அளித்த ஜோதிடர-கள் நிலைமை நிரம்பப் பரிதாபம்.  பாவம்! வெளியில் தலை காட்டவே பயப்படுகிறார்கள்!”  என்று தினமலர்  செய்தி வெளியிட்டிருந்தது. கடைசியில் தினமலர் எப்படிச் செய்தியை முடித்திருந்தது?

“தனது ஜோதிடம் தலைகீழாகப் போனதால் பயங்கர வநளெழைn னில் இருக்கிறாராம் மித்திரனின் சோதிடர் நம்பூதிரிபாட். இந்த நிலையில் வெளியில் தலை காட்டுவது நன்றாக இருக்காது என்பதால், வீட்டோடு முடங்கி இருக்கிறாராம். “நான் என்ன செய்ய முடியும்? என்னிடம் அவுஸ்திரேலிய, இந்தியக் கேப்டன் இருவரதும் பிறந்த தேதி மட்டும்தான் கிடைத்தது. பிறந்த நேரம் துல்லியமாகக் கிடைத்திருந்தால் கணிப்பும் கச்சிதமாக இருந்திருக்கும்’ என்று கண்ணில் தட்டுப்படும் நண்பர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம்.’’ இவ்வாறு மங்கலம் பாடி முடித்தது தினமலர்  ஏடு!

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாட்டு என்பார்கள். அல்லது ஆடத்தெரியாத ஆடல்மகள் கூடம் கோணல் என்றாளாம். இந்தப் பழமொழிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. பிறந்த நேரந்தான் துல்லியமாகக் கிடைக்கவில்லையே பேசாமல் இருக்க வேண்டியது தானே? யாரை ஏமாற்ற இந்தத் தகடு தத்தம் அல்லது சப்புக்கட்டு?

2003 இல் சோதிடர்கள் கூறிய எதிர்கூறல்கள் எப்படிப் பொய்த்துவிட்டனவோ அதேபோல் இப்போது நடக்கும் உலகக் கோப்பைப் போட்டி தொடர்பாக சொல்லப்பட்ட எதிர்கூறல்களும் பொய்த்துவிட்டன.

கிறிக்கட் பக்தர்கள் செய்த யாகங்கள், பூசைகள், தோச பரிகாரங்கள் எல்லாமே முழுமையாக றயளவந ஆகி விட்டன. பால் பழம் நெய் தயிர் சாப்பிட்ட கடவுள்கள் பக்தர்களை ஏமாற்றிவிட்டன!

நேற்று (சனிக்கிழமை – 18 -03- 2007) நடந்த முதல் போட்டியில் இந்திய அணி  மோசமாக ஆடித் தோற்றுவிட்டது. சாதாரண தோல்வி அல்ல – படுதோல்வி – கேவலமான தோல்வி. அதுவும் யாரிடம்? கிரிக்கட் விளையாட்டில் கற்றுக்குட்டிகள், காகிதப் புலிகள் என்று எண்ணப்பட்ட வங்கதேச அணியிடம்!

இந்தத் தோல்வி இந்திய இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் போட்டியிலேயே சாதாரண அணியான வங்கதேசத்திடம் இந்திய வீரர்கள் திணறிப் போனார்கள்.  இது இந்தியாவுக்கு மிகப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்திய அணியின் கோப்பைக் கனவை கேள்விக் குறியாக்கிவிட்டது.

தங்களது அணி வலிமை வாய்ந்த இந்தியாவை வீழ்த்தியதைத் தொலைக்காட்சி மூலம் பார்த்த பல்லாயிரக்கணக்கான வங்கதேச கிரிக்கெட் இரசிகர்கள் தெருக்களில் கூடி ஆடிப்பாடி உற்சாக வெள்ளத்தில் மூழ்கி அந்த வெற்றியைக் கொண்டாடினர். பட்டாசுகள் சரமாரியாக வெடிக்கப்பட்டன

இதே சமயம் கோப்பைக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் தீவிர கிரிக்கெட் இரசிகர்களுக்கு வங்கதேச அணியிடம் இந்திய அணி மோசமாக ஆடித் தோல்வியைத் தழுவியது பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்திய கிறிக்கெட் அணி வீரர்களின் உருவப் படங்களை இரசிகர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.  ஜலந்தர், பட்னா, கொல்கத்தா போன்ற பல்வேறு ஊர்களில் கண்டனப் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர்.

இந்திய அணி வங்கதேச அணியிடம் புறமுதுகு காட்டியது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. ஆனால் இந்திய அணி சோதிடர்களின் எதிர்கூறல்களையும், வேள்வி, பூசை, அருச்சனை, மந்திரித்தல் போன்ற மூடச்சடங்குகள் – நம்பிக்கைகள் – ஆகியவற்றைப் பொய்க்கச் செய்தது எனக்கு மெத்த மகிழ்ச்சிதான்!

தேர்தல் முடிவானாலும் சரி, கிறிக்கெட் போன்ற விளையாட்டுகளின் முடிவுகளானாலும் சரி ஏதோ குருட்டாம் போக்கில் பலன் சொல்லி காக்கை உட்காரப் பனம் பழமும் விழுந்தது என்பதற்கேற்ப சில நேரங்களில் பலிப்பதை வைத்துக் கொண்டு சோதிடம் என்றால் உண்மை, முக்காலும் உண்மை என்று பிழைப்பு நடத்தும் கூட்டத்தை இனியும் தொழில் செய்ய அனுமதிக்கலாமா? மக்கள்தான் அவர்களை  நம்பலாமா? கிறிக்கெட் திருவிழா நடக்கும் இந்தக் கால கட்டத்தில் மக்கள் சிந்திக்க வேண்டும்.

எந்தச் சிக்கல் ஆனாலும் அதற்குள் மூக்கை நுழைத்து, தங்கள் சுரண்டல் தொழிலை நடத்தும் ஒரு கொள்ளைக்காரக் கூட்டம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் – நுகர்வோர் – இப்போது நீதிமன்றததுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.  ஏனெனில் சோதிடத்தை இவர்கள் தொழிலாகத்தானே நடத்துகிறார்கள்? தமிழக அரசு சோதிடத்தால் விளையும் கேட்டை மனதில் கொண்டு அதனைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதில் ஊடகங்களுக்குப் பெரும் பங்குண்டு. முதலில் அவர்கள் சோதிடம் பற்றிய விளம்பரங்களை, செய்திகளை, பலாபலன்களைப் போடுவதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதில் அறிவியல் பற்றிய தகவல்களை நிறைய வெளியிட வேண்டும். மானிட முன்னேற்றத்துக்கு அறிவியலும் பகுத்தறிவு இரண்டுமே உதவக் கூடியவை. (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

இந்திய அணியைக் கைவிட்ட கிரிக்கெட் பிள்ளையார்!
(21)

இந்திய கிரிக்கட் அணி மீண்டும் மோசமான தோல்வியைச் சந்தித்து அவமானம் அடைந்துள்ளது.

இந்தியாவை எதிர்த்து ஆடிய இலங்கை அணி 254 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 185 ஓட்டகங்கள் மட்டுமே எடுத்தது. ஆகவே 69 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியைத் தழுவியது. இதனை அடுத்து இந்திய அணி மூட்டை முடிச்சுடன் நாடு திரும்புகிறது.

பெர்மூடா அணி வங்காளதேச அணியை வெற்றி கண்டால் இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புண்டு என்ற எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்டது. மழை காரணமாக பெர்மூடா – வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறவில்லை. எனவே ஏற்கனவே இந்திய அணியை வென்ற வங்காளதேச அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மழை இல்லாது இருந்தாலும் பெர்மூடா அணி வங்கதேச அணியை வென்றிருக்க வாய்ப்பில்லை. காரணம் பெர்மூடா அணி ஒரு தொழில்சார் அணியல்ல. அதில் சட்டம்பிகள், காவல்துறையினர் போன்றோர்தான் விளையாடினார்கள். விளையாடின அத்தனை ஆட்டங்களிலும் பெர்மூடா அணி பெரிய வித்தியாசத்தில் தோல்வியைக் கண்டது.

நோஞ்சான் அணியான பெர்மூடாவை இந்திய அணி துவைத்து எடுத்தது. ஆனால் இலங்கை அணியிடம் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டது. இனை அடுத்து இந்திய அணி ஆட்டக்காரர்களின் படம், உருவப் பொம்மைகள் கொளுத்தப்பட்டன. சில ஆட்டக்காரர்களுக்குச் சொந்தமான வீடுகள் ஓட்டல்கள் தாக்கப்பட்டன. இப்போது சச்சின் தென்டுக்கார் உட்பட பல ஆட்டக்காரர்களது வீடுகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

வென்றால் ஆட்டக்காரர்களது படங்களுக்கு கற்பூரம் ஏற்றுவதும் தோற்றால் உருவப் பொம்மைகளை எரிப்பதும் இயல்புதான்.

உலகக் கோப்பைப் போட்டியை உற்று நோக்குவோருக்கு திறமையும் அணி மனப்பான்மையும் (team spirit) உடைய அணி வெற்றிவாகை சூடுவதையும் திறமையற்ற அணி தோல்வியைத் தழுவுவதையும் அவதானிக்கத் தவறமாட்டார்கள்.

இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவது அந்தந்த அணிகளின் திறமையைப் பொறுத்ததே தவிர வேள்வி, பூசை, புனர்க்காரத்தால் அல்ல என்பது தெளிவாகிறது.

உலகக் கோப்பை போட்டி தொடங்கிய கையோடு திடீரென்று ஆங்காங்கு கிரிக்கெட் பிள்ளையார்கள் முளைத்து விட்டார்கள். சென்னை அண்ணா நகரில் இராமகிருஷ்ணன் என்பவர் கோயில் கட்டி அதில் பதினொரு முகம் கொண்ட “கிரிக்கெட் பிள்ளையார்’’ என்ற பொம்மையைப் பிரதிஷ்டை செய்துவிட்டார். இந்தக் கிரிக்கெட் பிள்ளையாரின் ஒரு கையில் மட்டையையும், ஒரு கையில் பந்தையும் தந்து பூசைகள் நடத்தி கும்பிட ஏற்பாடு செய்தார்.

பிபிசி தமிழோசைக்கு நேற்று (சனிக்கிழமை) செவ்வி அளித்த இராமகிருஷ்னன் கிரிக்கெட் பிள்ளையாரால் எதனையும் சாதிக்க முடியும் என்றார். பிள்ளையார் இந்திய அணியோடு சேர்ந்து விளையாடி வெற்றியைப் பெற்றுத் தருவார் என்றார். அதற்காக இரவு பகல் ஓம் நமகா மந்திரம் சொல்லி பிள்ளையாரை வழிபடுவதாகச் சொன்னார்.

அண்ணாநகர் அமர்ந்த கிரிக்கெட் பிள்ளையாரே
உனக்கு நல்லபெயர் கொடுத்த எனக்குக் கைகொடு
இந்திய அணியை ஜெயிக்கவிடு!
ஆடு கணேசா ஆடு கணேசா
இந்திய அணியை ஜெயிக்க விடு கணேசா!

இப்படி தான் எழுதிய பாடல் ஒன்றையும் பாடிக்காட்டினார். ஆனால் இந்தப் பிள்ளையார் விளையாடவும் இல்லை, வெற்றியைப் பெற்றுத் தரவும் இல்லை. கிரிக்கெட் பிள்ளையார் இந்திய அணியைக் காப்பாற்ற அடியோடு தவறிவிட்டார்!

1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பையைப் பெற முடியாமல் தொடர்ந்து இந்தியா தோற்றுவருகிறது. இந்த முறையும் தோற்றது. எந்த மதக் கடவுளும் இந்தியாவுக்குக் கை கொடுக்கவில்லை. யாகம் செய்ததும் வீண். பூசை செய்ததும் வீண். மெழுகுவத்தி ஏற்றி வைத்ததும் வீண்.

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி யாகத்தால் பலன் இல்லை, பதினொரு முகப் பிள்ளையாருக்கும் ஆற்றல் இல்லை என்பதை எண்பிக்கவே பயன்பட்டுள்ளது. வட நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது சிறுநீரகத்தை (கிட்னி) விற்று கிரிக்கெட் பார்க்கச் சென்றாராம்.

போதை மருந்தை விட இந்தக் கிரிக்கெட் வெறி மோசமாக இருக்கிறது.

உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை அடுத்து ஒரு புதிய சோதிடம் உருவாகியுள்ளது. அதற்கு வைத்துள்ள பெயர் கிரிக்கெட் சோதிடம் (Cricket Astrolology)! இந்தச் சோதிடத்தைக் கண்டுபிடித்தவரது பெயர் வி. ஆனந்த். இவர் ஒரு வழக்குரைஞரும் ஆவார். அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கத்தைக் கீழே படியுங்கள்.

“கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வராகமிருகர் என்பவரே சோதிடக் கலையின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் விண்ணில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி எழுதியிருக்கிறார். சூரிய – சந்திர கிரகணங்கள் இடம்பெறுவதை 14 அல்லது 15 நாள் வித்தியாசத்தில் எதிர்கூறல் கூறியுள்ளார். அவர் கூறியவற்றை நிகழ்காலத்துக்கு மாட்டேற்றுச் செய்து பார்த்தால் கடந்த மார்ச்சு 4 ஆம் நாள் சந்திர கிரகணமும் மார்ச்சு 19 ஆம் நாள் சூரிய கிரகணமும் இடம் பெற்றன. இதனால் பல இலட்சம் மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கிய விளையாட்டு விழா நடைபெற இருக்கிறது. இதனைக் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் வரிசைநிலை (alignment)  தொட்டுக்காட்டுகிறது.

உலகக் கோப்பை போட்டியில் 16 அணிகள் போட்டியிடுகின்றன. அவற்றின் கோள் நிலையை வைத்துப் பார்த்தால் மேற்கு இந்திய அணியோடு அவுஸ்திரேலியா இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடக்கத்திலேயே நன்றாக ஆடுவார்கள். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளின் தகுதிநிலை (form) மார்ச்சு 7 அளவில் தாழக்கூடும். ஆனால் மார்ச்சு 21 க்குப் பின்னர் தனிப்பட்ட ஆட்டடக்காரர்களின் திறமையான விளையாட்டால் இரண்டு அணிகளும் தலைதூக்கிவிடும். அதே சமயம் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பு மார்ச்சு 31 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்குச் சிறிது பின்னடைய நேரிடும். அதன் பின்னர் அவுஸ்திரேலிய அணி திறமையாக விளையாடும்.

தொடக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்காவிற்கு நிலைமை சாதகமாக இருக்காது. ஸ்ரீலங்கா அணியின் ஆட்டம் ஆட்டக்காரர்கள் காயம்படுவதால் அதற்கு பின்னடைவு ஏற்படும். நியூசீலந்து, நெதர்லன்ட்ஸ், சிம்பாவே, கென்யா, வங்காளதேசம், பெர்மூடா மற்றும் கனடா தொடக்கத்தில் நன்றாக ஆடுவார்கள். நியூசீலந்து அணி படிப்படியாக வீழ்ச்சி அடையும்.
எந்த அடிப்படையும் இல்லாத .சோதிடர் ஆனந்தின் எதிர்கூறல் தப்பும் தவறுமாக இருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.

ஒரு தனிமனிதனது சாதகத்தை வைத்து பலன் சொல்லலாம். ஆனால் ஒரு அணிக்கு எதை வைத்துப் பலன் சொல்வது? அணித் தலைவரது சாதகத்தையா? அப்படியென்றால் மற்றவர்களது சாதகம் வெறும் வெற்றுத்தாள்களா என்ன?

இந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்கு மட்டுமல்ல ஸ்ரீலங்காவின் அரசியல்வாதிகளுக்கும் சோதிட்தில் நம்பிக்கை இருக்கிறது. அதிலும் இன்றைய ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சேக்கு சோதிடத்தில் அபார நம்பிக்கை இருக்கிறது. அவர் எந்த முடிவை எடுக்கு முன்னரும் சோதிடர்களோடு கலந்து பேசிவிட்டே முடிவு எடுக்கிறார்.

கவுதம புத்தர் சோதிடம் முட்டாள்கள் விரும்பும் ஒரு திரஸ்ஷீன வித்ய (Thirascheena Vidya) என்று வருணித்துள்ளார். திரஜ்ஷீண வித்ய என்றால் விலங்கு அறிவியல் என்பது பொருள் ஆகும். பவுத்த பிக்குகளும் பிக்குணிககளும் சோதிடத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்றும் அதனைத் தொழிலாகக் கொள்ளக் கூடாது என்றும் புத்தர் போதித்துள்ளார்

புத்தர் மனிதனது எதிர்கால வாழ்க்கை அவனது எண்ணங்களைப் பொறுத்தே அமையும் என்றும் கோள்கள் நட்சத்திரங்கள் போன்றவற்றால் அல்ல எனவும் போதித்தார். பவுத்த ஜாதக கதை ஒன்றில் கோள்கள் – நட்சத்திரங்களின் இருப்பை வைத்து முடிவு எடுக்கப்படுவது எள்ளி நகையாடப் பட்டுள்ளது. (Glossary of Buddhist terms Astrology)

புத்தரது சோதிட எதிர்ப்பு வினை வினைப்பயன் (காரண காரியம்) நம்பிக்கையற்ற வேதகால பார்ப்பனர்களின் எதிர்ப்பை அவருக்குத் தேடிக் கொடுத்தது.

இருந்தும் சோதிடத்தை நம்பும் பவுத்தர்கள் எங்கும் பரவலாகக் காணப்படுகிறார்கள். அது மட்டுமல்ல பவுத்த தேரர்களே சோதிடர்களாகத் தொழில் செய்வதைக் காணக் கூடியதாக உள்ளது. எனவே மகிந்த இராசபக்சேக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருப்பது ஒன்றும் வியப்பில்லை. முன்னாள் ஆட்சித்தலைவர் ரணசிங்க பிரேமதாசாவுக்கும் இந்தச் சோதிடப் பயித்தியம் இருந்தது. அவரது அகால இறப்பை எந்த சோதிடரும் முன்கூட்டிச் சொல்லி அவரை எச்சரிக்வில்லை என்பது வேறு கதை.

கடந்த 2002 – 08- 18 இல் இலங்கை பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் பன்னாட்டு சோதிடம் மற்றும் ஆன்மீக அறிவியல் மாநாடு நடந்தது. அதில் நீதி அமைச்சர் முதன்மை விருந்தினராகக் கலந்து கோண்டார்.

இராசபக்சே தன்னைச் சந்தித்த அமைச்சர்களிடம் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை எதிர் வரும் ஏப்ரில் மாதத்துக்கு முன்னரே செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். காரணம் ஏப்ரில் மாதத்துக்கு முன்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சோதிடர்கள் எதிர்கூறல் கூறியுள்ளார்களாம்!

இந்தச் செய்தியை ளுரனெயல டுநயனநச (மார்ச்சு 25,2007) ஞாயிறு வெளியீட்டில் அரசியல் பத்தி எழுத்தாளர் சுரனிமாலா “Astrology dominates cabinet as moves to arrest Mangala gets underway ”  என்று தலைப்பிட்டு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையில் “பிரபல சோதிடர்கள்” பலர் சோதிடத்தை முழுநேரமாகக் கொண்டு தொழில் பார்க்கிறார்கள். சோதிட மாத இதழ்களும் வெளிவருகின்றன. ஆனால் பெரும்பாலான சோதிடர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாடிக்கையாளர் விரும்பும் எதிர்கூறலைச் சொல்லிவிடுகிறார்கள்.

சென்ற முறை நடந்த ஆட்சித்தலைவர் தேர்தலில் அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்காவே வெல்வார் என Ira-Handa  ஏடு எதிர்கூறல் சொன்னது. சோதிடரது எதிர்கூறல் பொய்த்து தேர்தலில் விக்கிரமசிங்கி தோற்றுப் போகவே தான் வேண்டும் என்றே பொருள் வருவாய் நோக்கோடு அப்படியான எதிர்கூறலைச் சொன்னதாக அதன் ஆசிரியர் சொல்லித் தப்பித்துக்கொண்டார்.

இப்படி சோதிடர்கள் புரட்டு வேலைகளில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றினாலும் சோதிடத்துக்குரிய மவுசு குறையாமல் இருக்கிறது. ஏன் வளர்ந்து வருகிறது என்னறு கூடச் சொல்லலாம்!

இரக்குவானையைச் சேர்ந்த மார்ஷல் என்பவரிடம் அருள்வாக்குக் கேட்ட இரணில் விக்கிரமசிங்கி தான் ஏப்ரில் மாதத்தில் ஆட்சியைப் பிடித்து விடப் போவதாகச் சொல்கிறார். எனவே ஏப்ரில் 14 மட்டும் தாக்குப்பிடித்து விட்டால் அதற்குப் பிறகு எந்தச் சிக்கலும் இருக்காது என இராசபக்சே அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார். அமைச்சரவை சோதிடத்தைப் பற்றி அதிக நேரம் கதைத்ததாகத் தெரிகிறது.

இன்றைய நவீன உலகத்தில் கூட தமது சாதகத்தில் சனி ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வந்திருக்கிறது என்று ஒரு சோதிடன் சொல்வதைக் கேட்டு விட்டு நடு நடுங்கிப்போய், மூளை குழம்பிக் கொஞ்சங் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறவர்கள். கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

இயற்கை நிகழ்ச்சிகளான சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும், பெரிய பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதால் ஏற்படுவதாக நம்பிக் கொண்டு தமது தாத்தா, பாட்டிகளையும் விட வேகமாக ஆறு, குளங்களுக்கும் கடலுக்கும் ஓடிப்போய் முழுக்குப் போட்டுப் பாவத்தைத் தொலைக்க முயற்சிக்கிறவர்களில் இளங்கலை முதுகலை படித்துப் பட்டடம் பெற்ற பட்டதாரிகளும் இருக்கிறார்கள்.

சாதகம் பொருந்த வில்லை என்பதற்காகப் பல திருமணங்கள் தடைபட்டுப் போகின்றன. சாதகத்தில் பத்து அம்சங்கள் பொருந்தியிருக்க வேண்டுமாம். அவற்றில் சில பகுத்தறிவுக்கு எதிரானவை. கோள்களை பகை – நட்பு, கெட்டது – நல்லது எனப் பிரித்து வைத்துள்ளார்கள்.

மூலம் ஆயில்யம், அனுஷம் போன்றவை கெட்ட நட்சத்திரங்கள், விருச்சிகம் (நட்டுவக்காலி) துலாம் போன்றவை கெட்ட இராசிகள், ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்சத்திரங்கள், இராசிகள் பொருந்தி வராவிட்டால் திருமணத்தைச் சோதிடர்கள் தடுத்து விடுகின்றனர்.

ஆண் – பெண் இருவரது தாய் தந்தையரின் குடிப் பிறப்பு, கல்வி, செல்வம், உடல் நலம், வேலை இவையெல்லாம் இரண்டாம் பட்சமாகப் போய் விடுகின்றன.

புதன் போன்ற ‘நல்ல’ கோள்களைவிட சனி போன்ற ‘கெட்ட’ கோள்களுக்கு வழிபாடு அதிகமாக இருப்பது அச்சத்தின் அடிப்படையில் தான்.

கோள்கள், நட்சத்திரங்கள் எப்படி இவ்வளவு தொகையினரை அடிமையாக்கி வைத்திருக்கின்றன? சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்ததிலிருந்து வளர்ச்சியே அடையாமல் தேக்கமடைந்திருக்கிற சோதிடம், ஏராளமான முரண்பாடுகளை உள்ளடக்கியிருக்கிற ஒரு கலை. அது மனித குலத்தை முன்னேற விடாமல் எப்படித் தடை செய்து கொண்டிருக்கிறது?

புவியைத் தவிர்த்து ஏனைய கோள்கள் எல்லாம் வெறும் பாலைவனங்கள். அங்கே உயிரினங்களே வாழ முடியாது. இவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருந்தும் வானத்தில் இந்தக் கோள்கள் இருக்கும் நிலைகளைப் பொறுத்துதான் நமது நலம் நலமின்மை அமைகின்றன என்று மக்களால் எப்படி நம்பிக் கொண்டிருக்க முடிகிறது?

Webster’s  ஆங்கில அகரமுதலி, சோதிடம் ஒரு போலி அறிவியல் (pseudo science) என்று சொல்கிறது.

சோதிடம், வானவியலுடன் (Astronomy) சில அம்சங்களில் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கிறது. ஆனால், வானியலில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும் போது சோதிடம் மட்டும் அப்படியே தேங்கிப் போய்ப் புவியைத்தான் சூரியனும் மற்றும் கோள்களும் சுற்றி வருவதாக இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறது. (தொடரும்)சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!
குழந்தை பிறந்த நேரம் எது?
(22)

சாதகக் கணிப்பில் ஒரு குழந்தை பிறந்த நேரம் மிகவும் முக்கியமாகும். நான்கு மணித்துளி வேற்றுமை இருந்தாலே இராசிகள், கோள்கள் மாறுபட்டுப் போய்விடும் என சோதிடர்கள் சொல்கிறார்கள்.

வெள்ளைக்காரன் கண்டு பிடித்த மணிப்பொறி அறிமுகம் செய்யப்படு முன்னர் இந்திய சோதிடர்கள் காலத்தை அல்லது நேரத்தை பகலில் ஞாயிறின் வான இருப்பை வைத்துக் கணித்தார்கள். இரவில் விண்மீன்கள் மற்றும் சந்திரன் போன்றவற்றின் வான இருப்பை வைத்துக் கணித்தார்கள். அப்படியா கணிப்புக்கள் துல்லியமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அண்ணளவாகவே இருந்திருக்கும்.

சோதிடர்கள், ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் இப்புவியைச் சுற்றிக் கிழக்கும் மேற்குமாக மேலும் கீழுமாக வான வீதியில் –

(அ) படர்ந்துள்ள இராசிச் சக்கரத்தின் (Zodiac  Sign)  இருபுறமும் 6 பாகைக்குள் காணப்படும் 12 இராசி மண்டலங்கள் (விண்மீன் கூட்டங்கள்)

(ஆ) 360 பாகை கொண்ட இராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 கூறுகளாகப் பிரித்து வரும் 12 இராசி வீடுகள்.

(இ) வானவீதியில் இராசிச் சக்கரத்தை வலம் வரும் 9 கிரகங்கள்.

( ஈ) இராசிச் சக்கரத்தின் பின்புலத்தில் காணப்படும் 27 நட்சத்திரங்கள்.

ஆகியவற்றின் தாக்கம் அந்தக் குழந்தையின் தலைவிதியைத் தீர்மானிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்தத் தாக்கம் அல்லது ஆற்றல் எது என்பதைச் சோதிடர்கள் சொல்வதில்லை. ஏதோ ஒரு ஆற்றல் என்று சொல்லி மழுப்பிவிடுகிறார்கள்.

ஒரு நாளில் 24 மணித்தியாலங்கள் இருப்பதால் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒவ்வொரு இராசியாக ஒன்றன் பின் ஒன்றாக உதித்தவண்ணம் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக அன்றாடும் உதயத்தின் போது ஞாயிறோடு உதிக்கும் முதல் உதய இராசியே அன்றைய நாள் அவ்ஞாயிறு இடம் பெற்றுள்ள இராசியாகும்.

எடுத்துக்காட்டாக சித்திரை 14 ஆம் நாள் ஞாயிறு உதயத்தின் போது அவ்ஞாயிறு இடம்பெற்றுள்ள மேட இராசியே அன்றைய நாளின்  உதய இராசியாக இடம் பெற்றிருக்கும். அதே போல் கார்த்திகை 27 ஆம் நாள் ஞாயிறு உதிக்கும்  போது அவ்ஞாயிறு நின்ற விருச்சிக இராசியே அன்றைய நாள் உதய இராசியாக இடம் பெற்றிருக்கும்.

இந்த இராசி வீடே உயிர் இலக்கினம் என்று சொல்லப்படும் ஜென்ம இலக்கினம் ஆகும். ஜெனன காலத்தில் சந்திரன் நின்ற இராசி வீடு உடல் இலக்கினம் என்று சொல்லப்படுகின்ற ஜெனன இராசி ஆகும்..

இவ்விதம் அமையும் உதய இராசிக்கு அடுத்து உதயமாகும் இரண்டாவது இராசி இல்லமாகும். இவ்விதமாக ஞாயிறு கிழக்கே உதித்து மேற்கே மறைந்து மறுபடியும் கிழக்கே உதிக்கும் 24 மணித்தியாலங்களில் சமமான 60 நாழிகையில் (24 மணித்துளி கொண்டது ஒரு நாழிகை) 12 இராசி வீடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக உதித்து பின்னர் மறைந்துவிடுகின்றன.

இராசிகள் போலவே நட்சத்திர மண்டலங்களையும் சோதிடர்கள் ஒரு இராசிக்கு 2 ¼ நட்சத்திரங்கள் (27/12 = 2 ¼ ) என்ற விழுக்காட்டில் அடக்கிவிடுகின்றனர். அதற்கு இசைவாக ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்தையும் கால், அடி வயிறு, மேல் வயிறு, தலை என நான்கு பாகங்களாகப் பிரித்துள்ளனர். இந்தப் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒரு பாதம் என்றும் முதல் கால், இரண்டாம் கால், மூன்றாம் கால், நான்காம் கால் என்றும் சொல்லப்படுகின்றன.

உண்மையில் நட்சத்திர மண்டலங்கள் (இராசிகளும் நட்சத்திர மண்டலங்களே) கிழக்கு அடிவானில் உதிப்பதில்லை.

புவி மேற்குக் கிழக்காகச் சுற்றுகிறது. இதனால் நட்சத்திர மண்டலங்கள் கிழக்கு மேற்காகத் தோன்றி மறைகின்றன. இது வெறும் புலணுர்வு அல்லது புலக்காட்சியே ஆகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் புவியின் 66.5 பாகைக்கு வடக்கு அல்லது தெற்கு திசைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதகம் கணிக்க முடியாது. காரணம் அங்கு அடிவானத்தில் இருந்து இராசிகள மற்றும் சூரியன் 30 பாகை அளவில் உதிப்பதில்லை!

ஒரு குழந்தையின் சாதகத்தைக் கணிப்பதற்கு அந்தக் குழந்தை பிறந்த நேரம் முக்கியமானது என்று பார்த்தோம். காரணம் ஞாயிறு, மதி, கோள்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் இருப்பு மணித்துளிக்கு மணித்துளி மாறிக் கொண்டிருக்கிறது. நான்கு மணித்துளி வேறுபாடு இராசி மற்றம் கோள்களின் இருப்பை மாற்றிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு குழந்தை பிறக்கும் போது உதய இராசி முதலாம் வீட்டில் பாகை 29 மணித்துளி 57 இல் நிற்பதாக வைத்துக் கொண்டால் 4 மணித்துளி கழித்து அடுத்த இராசி மணித்துளி 1 இல் உதித்துவிடும். இங்கே 4 மணித்துளி பேறுபாடு இராசியையே மாற்றிவிடுகிறது.

குழந்தை பிறந்த நேரம் என்று சொல்கிறார்களே? அந்த நேரம் எது?

பிறப்பு என்பது ஒரு நிகழ்வு அல்ல. ஒரு கணத்தில் திடீரென்று குழந்தை பிறந்துவிடுவதில்லை ( birthing process isn’t instantaneous) – அது ஒரு தொடர் நிகழ்வு. சோதிடர்களுக்கு இடையே பிறந்த நேரம் பற்றிய கருத்தொற்றுமை இல்லை.

ஒரு குழந்தையின் பிறந்த நேரம் தாய் கருத்தரித்த நேரமா? பனிக்குடம் உடைந்த நேரமா? யோனி வாசலில் தலை முதலில்; தெரிந்த நேரமா? அல்லது யோனிவாசலில் இருந்து வெளிவந்த நேரமா? குழந்தை முதல் முதலாக மூச்சுவிட்ட நேரமா? தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நேரமா? குழந்தை குவா குவா என்று அழுத நேரமா? அல்லது மருத்துவரும் தாதியும் மணிப்பொறியைப் பார்த்து குறித்துக் கொண்ட நேரமா?

இவற்றில் எது என்பது பற்றி சோதிடர்களுக்கு இடையில் கருத்தொற்றுமை இல்லை. ஆன காரணத்தினால் குழந்தை பிறந்த நேரத்தில் 4 மணித்துளி வேபாடு இருந்தாலும் சாதகக் கணிப்புப் பிழைத்துவிடும் என்று சொல்வதில் பொருள் இல்லை!

கருவுற்பத்தி நேரத்தை விட பிறந்த நேரம் ஏன் முக்கியம் என்று கொள்ள வேண்டும்? ஒரு குழந்தையின் தாயினது உடல்நலத்தைவிட செவ்வாய்க் கிரகத்தின் ஆட்சி, உச்சம், பார்வை, ஏற்றம், இறக்கம் (ஆரோக்கணம் அவரோக்கணம்) ஏன் முக்கியமாகக் கொள்ள வேண்டும்?

பேரளவு சூரியன் ஓரளவு சந்திரன் இரண்டும் உயிரினங்கள் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. சூரியன் இல்லாவிட்டால் உயிரினங்கள் வாழமுடியாது. ஆனால் சூரிய – சந்திர செல்வாக்கு எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. இருந்தும் அவற்றை சாதகக் கணிப்பில் எடுத்துக்கொள்வதை சிறிதளவு நியாயப்படுத்தலாம்.

கோள்களைக் கணக்கில் எடுத்த சோதிடர்கள் குழந்தை பிறந்த இந்த உலகத்தைக் கணக்கில் எடுக்காமல் அடியோடு கைவிட்டு விட்டார்கள். புவி ஒரு கோள் என்பது அவர்களுக்குத் தெரியாது இருந்ததே காரணமாகும்!

மனிதனது மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி, பண்பாடு, கலை ஆகியவற்றில் இந்த உலகத்தின் புவியியல் சூழல் பேரளவு செல்வாக்குச் செலுத்துகிறது.

மனிதன் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், மூச்சுவிடும் காற்று மனிதர்களது உடல்நலத்தைப் பேணுகிறது அல்லது பாதிக்கிறது.

கனடாவில் பிறந்த ஒருவரின் சராசரி அகவை 81 ஆகும். அதே நேரம் ஒரு இந்தியனின் சராசரி அகவை 56 மட்டுமே? இதற்கும் கோள்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

ஒரு குழந்தை பிறக்கும் போது புவியைச் சுற்றி வானத்தில் காணப்பட்ட இராசிகள், கோள்கள், நட்சத்திரங்கள் அந்தக் குழந்தையின் தலைவிதியை தீர்மானிப்பதாக சோதிடர்கள் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் சோதிடர்கள் சொல்வது போல் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் இராசிகள், கோள்கள், நட்சத்திரங்கள் அந்தக் குழந்தையின் தலைக்கு மேல் – கீழ் நின்றனவா?
இன்று உலகில் இரண்டு விதமான சோதிட முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று மேற்குலக சோதிடம். மற்றது இந்திய சோதிடம் ஆகும். சீனர்களுக்குத் தனியான சோதிட முறைமை இருக்கிறது. அவ்வாறே இனத்துக்கு இனம் நாட்டுக்கு நாடு வௌ;வேறு சோதிட முறைமைகள் இருக்கின்றன.

மேற்குலக சோதிட முறை வெப்ப இராசிவட்டம் (Tropical Zodiac) என்றும் இந்திய சோதிட முறை  விண்மீன் இராசிவட்டம் (Sidereal Zodiac)  என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த இரண்டு சோதிட முறைகளும் காலத்தைக் கணிப்பதிலும் கோள்களைத் தெரிவு செய்வதிலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இதனால் சோதிடர்கள் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றனர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை நட்சத்திர மண்டலங்களின் பின்புலத்தில் ஞாயிறு உட்புகுந்து வெளிவரும் (உண்மையில் ஞாயிறு உட்புகுவது இல்லை, புவிதான் உட்புகுந்து வெளிவருகிறது) காலம், அது எடுக்கும் நாள்களின் எண்ணிக்கை, அது கடக்கும் பாகையின் அளவு, மேற்குலக (வெப்பமண்டல) சோதிடக் கணிப்பில் ஞாயிறு உட்புகுந்து வெளிவரும் காலம், இறுதியாக இந்திய (நட்சத்திர) சோதிடக் கணிப்பில் ஞாயிறு உட்புகுந்து வெளிவர எடுக்கும் காலம் தரப்பட்டுள்ளது.

                                                                                   ஞாயிறும் நட்சத்திர மண்டலங்களும்

பால் மண்டலம் ஞாயிறு புகுதல் /வெளியேறுதல் -வானியல்

 

நாள் பாகை மேற்குலக சோதிடம் இந்திய சோதிடம்
மேடம் ஏப்ரில் 19 – மே 13 25 24.66 மார்ச்  21  – ஏப்ரில் 20 ஏப்ரில் 14 –       மே 14
இடபம் மே  14 –       யூன்  19 37 36.49 ஏப்ரில் 21 –      மே 21 மே 15 –        யூன் 14
மிதுனம் யூன்  20 –    யூலை 20 31 20.58 மே  22 –       யூன் 21 யூன்  15 –      யூலை 15
கடகம் யூலை 21  – ஓகஸ்ட்  9 20 19.73 யூன்  22 –    யூலை 22 யூலை 16  –  ஓகஸ்ட் 16
சிம்மம் ஓகஸ்ட் 10 – செப்தெம்பர் 15 37 36.49 யூலை 23  – ஓகஸ்ட்  22 ஓகஸ்ட் 17 – செப்தெம்பர் 16
கன்னி  செப்தெம்பர் 16 – ஒக்தோபர் 30 45 44.38 ஓகஸ்ட்  23 – செப்தெம்பர் 23 செப்தெம்பர்  17 – ஒக்தோபர் 16
துலாம் ஒக்தோபர் 31 – நொவெம்பர் 22 23 22.69 செப்தெம்பர் 24 – ஒக்தோபர்  23 ஒக்தோபர் 17 – செப்தெம்பர் 15
விருச்சிகம் நொவெம்பர்  23 – நொவெம்பர்  29 7 6.9 ஒக்தோபர்  24 – நொவெம்பர் 22 செப்தெம்பர் 16 – டிசெம்பர் 15
பாம்பாட்டி நொவெம்பர் 30 – டிசெம்பர் 17 18 17.75 கணக்கில் எடுப்பதில்லை கணக்கில் எடுப்பதி்ல்லை
தனு டிசெம்பர்  18 – சனவரி  18 32 31.56 நொவெம்பர் 23 –டிசெம்பர் 21 டிசெம்பர்  16  –  சனவரி  13
மகரம் சனவரி  19 –  பெப்ரவரி  15 28 27.62 டிசெம்பர் 22 – சனவரி 20 சனவரி  14–பெப்ரவரி 12
கும்பம் பெப்ரவரி  16 – மார்ச் 11 24 23.67 சனவரி  21–பெப்ரவரி 19 பெப்ரவரி  13 –  மார்ச்  12
மீனம் மார்ச்  12  – ஏப்ரில்  18 38 37.48 பெப்ரவரி  20 – மார்ச்  20 மார்ச் 13  – ஏப்ரில்  13

இந்த அட்டவணை ஒவ்வொன்றும் 30 பாiகை கொண்ட செயற்கையான இராசிகளுக்கும் (signs)  உண்மையான நட்சத்திர மண்டலங்களுக்கும் (constellations)  தொடர்பே இல்லை என்பதைத் துலாம்பரமாகக் காட்டுகிறது! (தொடரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

சோதிடரின் இராசிகளுக்கும் வானியல் இராசிகளுக்கும் தொடர்பில்லை
(23)

ஞாயிறு இராசி வட்டத்தில் ஒவ்வொரு இராசியாகப் புகுந்து வெளியேற எடுக்கும் கால அளவு வானியலுக்கும் சோதிடத்துக்கும் வித்தியாசப்படுவதை ஞாயிறும் நட்சத்திரமண்டலங்களும் என்ற அட்டவணையைப் பார்த்துத் (அத்தியாயம் 22)  தெரிந்திருப்பீர்கள்.

எடுத்துக்காட்டாக வானியல் அவதானிப்பு மூலம் ஞாயிறு மேட இராசியில் ஏப்ரில் 19 ஆம் நாள்தான் உட்புகுகிறது. ஆனால் இந்திய சோதிடத்தில் ஞாயிறு மேட இராசியில் புகும் நாள் ஏப்ரில் 14 ஆகும். முழுமையாக 5 நாள் வித்தியாசம் காணப்படுகிறது. எனவே ஏப்ரில் 14 ஆம் நாள் பிறந்த குழந்தை மேடராசியில் பிறந்தது என்பது பிழையான கூற்றாகும். ஏப்ரில் 14 ஆம் நாள் ஞாயிறு மேடராசிக்கு முந்திய இராசியான மீன இராசியில் (25 பாகை) நின்றது என்பதுதான் சரியாகும்.

இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். சோதிடம் ஒவ்வொரு இராசியும் 30 பாகை கொண்டது என்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. கும்ப இராசியின் அளவு 23.67 பாகை மட்டுமே. அதற்கு அடுத்த மீன இராசியின் அளவு 37.45 பாகை. இவ்வாறு ஒவ்வொரு இராசியும் வௌ;வேறு அளவு கொண்டவை. எந்த இராசியும் சரியாக 30 பாகை கொண்டிருக்கவில்லை.

இறுதியாக வானியல் அடிப்படையில் பாம்பாட்டி இராசி என்றொரு இராசி இருக்கிறது. சோதிடத்தில் அந்த இராசி கணக்கில் எடுக்கப்படவில்லை. சோதிடர்கள் அந்த இராசியை விருச்சிக இராசியோடு இணைத்துவிட்டார்கள்!

இதன் பின்பும் “ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு மூலகத்தின் சக்தியுள்ளது. ஒருவர் புவியில் பிறக்கும் போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களின் கதிர்களும் அப் பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறது. இது அந்தப் பிள்ளை புவியில் பிறக்கும்  நேரம் நடக்கிறது. அவ்வக் கிரகங்கள் இருந்த தூரங்கள், கோணங்கள் முதலியவற்றைப் பொறுத்தே அவ்வக் கிரகங்களின் மூலகங்களின் அளவு அந்தப் பிள்ளையின் உடலில் செலுத்தப்படும். அதை பொறுத்தே அப் பிள்ளையின் புத்தி மற்றும் உடற்கூற்று விடயங்கள் ஏற்படுகின்றன” என்று சோதிடர்கள் கூறுகிறார்கள். .

“ஒருவர் புவியில் பிறக்கும்போது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களின் கதிர்களும் அப் பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறது” என்பது நடைமுறைச் சாத்தியம் அற்ற நிகழ்வாகும். காரணம் கிரகங்கள், விண்மீன் ஆகியவற்றில் இருந்து ஒளி வேகத்தில் (ஒரு வினாடிக்கு 186,000 கல் அல்லது 300,000 கிமீ) வரும் கதிர் புவியை உடனடியாக வந்து சேருவதில்லை. நேரம் கழித்தே வருகிறது.

புவி – சந்திரன்                  –     1.25 வினாடி
புவி – ஞாயிறு                  –      8.3 மணித்துளி
ஞாயிறு – வியாழன்        –   41.0 மணித்துளி
ஞாயிறு – சனி                  –   85.0 மணித்துளி
ஞாயிறு – புளுட்டோ      –    5.5 மணி
ஞாயிறு – Alpha  Centauri    விண்மீன்                   –    4.24 ஒளி ஆண்டு
ஞாயிறு -மிருகசீரிடம் (Orion)  Rigel  விண்மீன் –    777 ஒளி ஆண்டு

ஒரு குழந்தை பிறந்த நேரத்தைச் சரியாகக் கணிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஞாயிறின் கதிர்கள் புவியை வந்து சேர எடுக்கும் 8 மணித்துளியையும் புவி நேரத்தோடு கூட்ட வேண்டும்! சோதிடர்கள் அப்படிச் செய்வதில்லை.

சோதிடர்கள் பிறக்கும் நேரத்தில் 2 மணித்துளி வேறு பட்டாலே சாதகம் பிழைத்துவிடும் என்கிறார்கள். அப்படி என்றால் 1-7 நாள்கள் பிழைக்கும் பொழுது சாதகம் எழுதும் தாளுக்கே பெறுமதி இல்லாமல் போய்விடும்! இதனால் சோதிடம் எவ்வளவு புரட்டு என்பது  புரியும் என நினைக்கிறேன்.

ஆனால் தமிழர்கள் திருமணப் பொருத்தம் பார்க்க இந்த சோதிடப் புரட்டின் சின்னமான சாதகத்தை எடுத்துக் கொண்டு நாயாகப் பேயாக சோதிடர்களிடம் அலைகிறார்கள். சோதிடர் மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தம் இல்லை என்று சொன்னால் திருமணம் நின்றுவிடுகிறது!

Image result for                    earth orbit around the sun

புராணிகர்கள் நாம் வாழும் உலகம், சூரியன், கோள்கள், அண்டம் பற்றி எழுதி வைத்திருப்பதைப் படிப்பவர் அவை மிகவும் குழந்தைத்தனமானது என்பதை தெரிந்து கொள்வார்கள்.

இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது அண்டவெளியில் மணிக்கு சராசரி 107,300 கிமீ (67,062 மைல்) வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறோம் என்ற செய்தி எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம் பூமி சராசரி 149,597,870 மில்லியன் கிமீ (92,955,808 மில்லியன் மைல்) தூரத்தில் உள்ள ஞாயிறை தன் சுற்றுப் பாதையில் வினாடிக்கு 29.8 கிமீ (18.5 மைல்) வேகத்தில் சுற்றிவருகிறது. எனவே ஓர் ஆண்டில் பூமி ஞாயிறைச் சுற்றிவரும் தொலைவு 939,953,014 கிமீ (584058636 மைல்) ஆகும்! (பூமி ஞாயிறை வட்டப் பாதையில் சுற்றாமல் நீள்வட்டப்பாதையில் சுற்றுவதால் இந்தக் கணக்கு முற்றிலும் சரியல்ல!)

ஞாயிறு ஒரு நட்சத்திரம் என முன்னர் பார்த்தோம். இந்த நட்சத்திரம் போல் கோடான கோடி நட்சத்திரங்கள், கோடான கோடி பால் மண்டலங்களில் இந்த அண்டத்தில் காணப்படுகின்றன! அவையும் அண்டவெளியில் ஓடிய வண்ணமே இருக்கின்றன.

எமது சூரிய குடும்பம் போல் எமது பால் வீதி மண்டலத்தில் பல கோடி சூரிய குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றில் புத்திசாலி உயிரினம் வாழும் சாத்தியம் இருக்கிறது. அவ்வாறு புத்திசாலி உயிரினம் வாழ்ந்தாலும் அவை எமது பூமியை வந்தடைவது முடியாத காரியம். அவை ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு – ஒரு விநாடிக்கு 30,000 கிமீ – செலவு செய்தாலும் (நாசா சனிக் கோளுக்கு அனுப்பிய விண்கலம் விநாடிக்கு 32 கிமீ வேகத்தில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது) பூமியை வந்தடைவதற்கு 1,000 கோடி ஆண்டுகள் பிடிக்கும்! மனிதர்கள் போல், வேறு நாகரிகங்கள் எங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள எடுக்கும் காலத்தைச் சுருக்கிக் கொள்ள வழி இருக்கிறது. வான் வெளியில் கசியும் எமது தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளி ஒலி பரப்பினை ஒட்டுக் கேட்கலாம்!

ஒரு கதைக்கு பால் வீதி மண்டலத்தின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் 2 கிழமைகளில் கடக்க ஒரு அதியற்புத பயண வண்டியைக் கண்டு பிடித்தாலும் எமது சூரிய மண்டலத்தைக் கண்டு பிடிக்க பல இலட்சம் ஆண்டுகள் எடுக்கலாம். அது எமது ஆயுட்காலத்தில் சாத்தியமில்லை.

சோதிடர்கள் தொடர்ந்தும் ஒன்பது கிரகங்கள் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் வானியலாளர்கள் இப்பொழுது எமது புவியைப் போன்ற இன்னொரு புவி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர.

அய்ரோப்பிய விண்வெளி ஆய்வாளர்களே பால்மண்டலத்தில் இரண்டாவது புவியைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதற்கு Gliese  581 C  எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்.

நாம் வாழும் புவியிலிருந்து 20.5 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள சிவப்பு குள்ளன் (Red Dwarf) என அழைக்கப்படும் புடநைளந 581 நட்சத்திரத்தை இந்த இரண்டாவது புவி சுற்றி வருகிறது. நாம் வாழும் பூமி ஞாயிறைச் சுற்றி வருவது போல் இந்த இரண்டாவது புவி புடநைளந 581  நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. அளவில் எமது புவியைவிட 5 மடங்கு பெரியது. அந்தப் புவியில் ஓராண்டு என்பது 13 புவி நாள்களுக்கு சமமானது. எமது ஞாயிறில் இருந்து புவி இருக்கும் தொலைவை விட மூன்று மடங்கு தொலைவில் இந்தப் புவி நட்சத்திரத்தைச் சுற்றிவருகிறது. இந்தச் சிவப்பு குள்ளன் ஞாயிறு போல் கண்கூசும் ஒளி படைத்தது அல்ல. எமது ஞாயிறைவிட 50 மடங்கு அதன் ஒளி மங்கலானது.

இப்புதிய கண்டுபிடிப்பில் காணப்படும் இக்கோளின் தட்பவெப்ப நிலை பூமிக்கு ஒப்ப இருப்பதால் அங்கு தண்ணீர் திரவ வடிவத்தில் கிடைக்கும் என்றும் அங்கு உயிரினங்கள் இருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது. இதனால் இதனை Super Earth  எனவும் இரண்டாவது பூமி எனவும் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

சிலி நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஈசோ 3.6 மீட்டர் தொலைநோக்கு கருவியைப் பயன்படுத்தியே  இரண்டாவது பூமியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டாவது பூமியின் வெப்ப நிலை 0 முதல் 40 பாகை செல்சியசாக இருக்குமென மதிப்பிட்டுள்ளதால் அங்கு தண்ணீர் திரவ வடிவத்தில் இருக்கக் கூடுமென்று ஜெனிவா ஆய்வாளர் டெபானே உட்ரி கூறுகிறார்.

இதனுடைய விட்டம் பூமியைப் போல் ஒன்றரை மடங்கு இருக்கும் என்றும் அதனுடைய தரைப் பகுதியில் பாறைகளும் கடல் பகுதிகளும் இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். இக்கண்டுபிடிப்பை விளக்கிக் கூறும் ஆய்வியல் அறிக்கையின் முதன்மைத் தயாரிப்பாளராக டெபானே உட்ரி செயல்படுகிறார். எதிர்கால விண்வெளிப் பயணிகளின் முக்கிய இலக்காக இரண்டாவது பூமி இருக்குமென மற்றொரு கண்டுபிடிப்பாளர் சேவியர் டெல்போ கூறுகிறார். இந்தப் புதிய கண்டுபிடிப்பு அறிவியல் மற்றும் விண்கோள் ஆய்வாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கிழமை திருமணத்தின் போது சாதகப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு அறிவீனம் என்பதைப் பார்ப்போம். (தொடரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

பொருத்தம் பார்த்துச் செய்து வைத்த திருமணங்கள் தோல்வியில் முடிந்துள்ளன!
(24)

சோதிடம் காலம் காலமாக மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் கருவியாக சோதிடர்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. வான வீதியில் வலம் வரும் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளை வைத்து மக்களின் எதிர்காலத்தைத் தங்களால் கணித்துக் கூறமுடியும் என இந்தச் சோதிடர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது எதிர்காலம் பற்றிய அச்சம், கவலை இருக்கின்றன. இந்தப் அச்சத்தையும் கவலையையும் சோதிடர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் சோதிடப் புரட்டுக்குத் தமிழ்ச் சமுதாயம் இரையாகி வருகிறது. சோதிடம் என்ற மூடநம்பிக்கையால் தமிழ் சமுதாயத்தின் அறிவியல் முன்னேற்றம் சிந்தனை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்துத் தமிழர்களது வீட்டுத் திருமணம் சாதகப் பொருத்தம் பார்க்காமல் நடைபெறுவதில்லை. கல்வி, செல்வம், குடிப்பிறப்பு போன்ற பொருத்தங்கள் மணம் பேசப்படும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்தும் சாதகம் பொருந்தி வரவில்லை என்றால் அந்தத் திருமணப் பேச்சு நின்றுவிடுகிறது.

படியாதவர்கள் மட்டுமல்ல படித்தவர்கள் கூட செக்கு மாடுகள் போல் சாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் எட்டாம் வகுப்பைத் தாண்டாத ஒரு சோதிடரிடம் சாதகங்களைக் காட்டிப் பொருத்தம் பார்க்கிறார். அவரைப் படித்த முட்டாள் என்று அழைப்பதைவிட வேறு எவ்வாறு அழைக்கலாம்?

சரி பொருத்தம் பார்த்துச் செய்த திருமணங்கள் எல்லாம் வாழ்க்கையில் எந்தச் சிக்கலும் இல்லாமல் எல்லாச் செல்வங்களும் இன்பங்களும் பெற்று ஓகோ என்று வாழ்கிறார்களா?

பொருத்தம் பார்த்துச் செய்தவர்கள் குழந்தைகள் இல்லாது இருக்கிறார்கள். சிலர் பிரிந்து வாழ்கிறார்கள். சிலர் மணமுறிவு செய்து கொள்கிறார்கள். சிலர் மாங்கல்யம் இழந்து விடுகிறார்கள். ஆனானப்பட்ட வசிட்டர் பார்த்து சுபயோக சுப முகூர்த்தத்தில் நிச்சயித்த இராமனது முடிசூட்டு விழா தடைபட்டுப் போய்விட்டது. தடைபட்டதும் அல்லாமல் இராமன் 14 ஆண்டுகள் காடேக நேர்ந்தது!

சோதிடம் பிழைக்குப் போது சோதிடர்கள் தோல்வியை விதிமீது சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்கிறார்கள்!

தலைவிதி பற்றி வேலையில்லாத புலவர்கள், புராணிகர்கள் கண்டபடி பாடியிருக்கிறார்கள். அவை பண்டிதர் முதல் பாமரர் வரை எடுத்தாளப்படுகிறது. “நாமென்ன அவர்களுக்கும் மேலானவர்களா?” என்று சோம்பேறி ஞானம் பேசிக்கொண்டு திரிகின்றனர.

இன்னபடி யென்றெழுதி
இட்டமுடன் என் தலையில்
விட்ட சிவனும் செத்து
விட்டானோ….

என்பதாக அவ்வை பாடியிருக்கிறாராம். அதுவும் எப்பொழுது? அவளது தாய் அவளைப் பெற்றவுடன் வளர்க்க ஆற்றலற்றவளாய் குழந்தையைப் பார்த்து பிரிந்துவிடப் போகிறோமே என்று கலங்கி நிற்கும் சமயத்தில் மேற்கண்டமாதிரி (குழந்தை) பாடிற்றாம்,
சரி, இன்ன – இன்னபடி தான் நடக்குமென்றுதான் எழுதி விட்டாரே? பின் அதன்படி தானே எல்லாம் நடக்கும். எதற்காக காலம் கெட்டுவிட்டது, கலிமுற்றி விட்டது, தெய்வ நம்பிக்கை அற்றுவிட்டது, பெரியோர் சொல்லைக் கேட்பார் இல்லை, என்று சமயவாதிகள், பண்டிதமணிகள் கதறவேண்டும்? இவ்வாறு உலகில் கதறித் திரியும்படி அவர்கள் தலையில் பிரம்மன் எழுதிவிட்டான் போலும்!

“அழுதாற் பயனென்ன…. பங்கயத்தோன் எழுதாப்படி வருமோ….”

“ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே”

“அவனன்றி ஓர் அணுவும் அசையாது”

“விதிப் பயன்படியே எல்லாம் நடக்கும்”

“அன்றெழுதியதை அழித்தெழுதப் போவதில்லை” என்றால், தேங்காய், பழம், சூடம், அருச்சனை, ஆராதனை, காயத்திரி மந்திரம், சகஸ்ரநாம அருச்சனை முதலிய சடங்குகளால் அதனை நீக்கமுடியுமா?

ஒரு பாடல்  “சிவாய நமவென்று சிந்தித்திருப்பாருக்கு அபாயம் ஒரு நாளுமில்லை” என்று சொல்கிறது. இது உண்மையாக வேண்டுமானால் அவ்விதம் சிந்திப்பவர் மண்டையோட்டில் அபாயமே கிடையாது என்று எழுதப்படவேண்டும். இல்லையேல் அன்றெழுதியதை அழித்தெழுதப் போவதில்லை என்பது இவரைப் பொறுத்தளவில் பொய்யாகிவிடும்.

தூங்கையிலே வாங்குகிற மூச்சு – அது சுழி மாறிப் போனாலும் போச்சு, எல்லாம் கிரக பலன், நட்சத்திர தோசம் என இந்து மதம் தமிழர்களின் மூளையைச் சலவை செய்துவிட்டது.

பாரதியார் ஒரு புரட்சிக் கவிஞர். மூடப் பழக்க வழக்கங்களை கவிதை எனும் சாட்டையால் விளாசியவர். தமிழ்ச் சாதியின் நாடியை நன்கு பிடித்துப் பார்த்து தமிழ்ச் சாதியைப் பீடித்திருந்த நோயை நுட்பமாகக் கண்டறிந்து நோய்க்கு மருந்து சொன்னவர். தமிழ்ச் சாதியில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளைக் கண்டு கடும் சினம் கொண்டவர்.

“நாள் தோறும் சிலர் இறந்து போகிறார்கள்.  மிஞ்சியிருக்கும் மூடர் “விதிவசம்” என்கிறார்கள். ஆமடா விதிவசந்தான், “அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை” என்பது ஈசனுடைய விதி! தமிழ் நாட்டிலே சாத்திரங்களில்லை, உண்மையான சாத்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து  விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வாழ்கிறார்கள்.” (பாரதியார் பாடல்கள் – பக்கம் 433 – 334)

பாரதியார் “அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை” என்று கடிவதோடு நில்லாமல் –

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரையாம் என்றிங்கு ஊதடா சங்கம்!

என மேலும் இடித்துரைக்கிறார்.

‘வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பிறகு நம்பு. புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளாதே.

தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைள், லௌகிகக் கொள்கைகள், வைதிக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கி விடு, வீட்டிலும் வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்! உண்மையிருக்க வேண்டும்!

நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது! பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது! பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும்!

Image result for poet bharathiyar

எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர், உண்மை சாத்திரங்களுக்கெல்லாம் வேர், உண்மை இன்பத்துக்கு நல்லுறுதி, உண்மை பரமாத்மாவின் கண்ணாடி, ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்!

தமிழா! எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை, எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரந்தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய் என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? ‘தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள்” என்று பங்ச தந்திரம் நகைக்கிறது.” (பாரதியார் கட்டுரைகள் – பக்கம் 134)

மேற்கு நாடுகளில் சோதிடமும் மதமும் கலகப் படுவதில்லை. ஆனால், இந்தியாவில் சோதிடமும் இந்து மதமும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. சோதிடர்கள் தோசம் இருக்கிறதாகச் சொல்லிக் கோயில்களில் சாந்தி செய்யுமாறு தோசகாரர்களை அனுப்பி வைக்கிறார்கள். சோதிடர்கள் அனுப்பத் தவறியவர்களை கோயில்காரர்களே வானொலி, நாளிதழ் வாயிலாக வெருட்டி அழைக்கின்றனர். கிரக தோசத்தால் இரண்டு பேர் காட்டிலும் மழை!

மற்ற எந்த இனத்தவரையும்விட தமிழர்கள் சோதிட சாத்திரத்தின் மேல் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

திருமணம் மட்டுமல்ல மற்ற எந்த நல்ல நிகழ்வென்றாலும் பஞ்சாங்கம் பார்க்காமல் எதையும் செய்யும் துணிவு தமிழர்களிடம் இல்லை. கடை திறப்பு விழாவா? வீடு குடிபூரலா? பிள்ளைக்குச் சோறு ஊட்டலா? காது குத்தலா? நீத்தார் நினைவா? எதற்கு எடுத்தாலும் இராகு காலம், அட்டமி நவமி, யமகண்டம், மரணயோகம் என நாளும் கோளும் பார்க்காமல் பெரும்பான்மையான தமிழர்கள் அடுத்த அடி எடுத்து வைப்பதில்லை!

பல்லி சொன்னால் போதும் எழுந்திருந்தவர் உட்கார்ந்து விடுவார். பூனை குறுக்கே போனால் சொல்லவே வேண்டாம், சகுனப் பிழை என்று சொல்லி வேலை நிமித்தமாக வெளியே போக இருந்தவர் பேசாமல் வீட்டில் இருந்து விடுவார்.

காலங்காலமாகச் சோதிடத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வளர்ந்து வருகிறதே ஒழியக் குறைந்த பாட்டைக் காணோம்.

வாணிக நோக்கோடு நடத்தப்படும் செய்தி ஏடுகள், கிழமை ஏடுகள் பாமர மக்களின் சோதிட மோகத்திற்கு நெய்யூற்றி அதனை மேலும் வளர்த்து வருகின்றன.

சோதிடம், இராசி பலன், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி, திருமணப் பொருத்தம், தோச சாந்தி, கேள்வி பதில் போன்றவற்றைத் தாங்கி வராத ஏடுகளே இன்று இல்லையென்று சொல்லிவிடலாம்.

மற்ற இனத்தவர்கள் விழுந்தால் எழும்பி விடுகிறார்கள். இரண்டாவது உலகப் போரில்  பாரிய உயிர் இழப்புக்களையும் உடமை  இழப்புக்களையும் சந்தித்த ஜெர்மானியரும் யப்பானியரும் மீண்டும் எழுச்சி பெற்று இமயம் போல் உலக அரங்கில் எழுந்து நிற்கிறார்கள்! உலகின் பணக்கார நாடுகளில் ஜெர்மனியும் யப்பானும் முன்வரிசையில் நிற்கின்றன! தொழில்துறையில், தொழில்நுட்பத்தில், பொருள் உற்;பத்தியில் கொடிகட்டிப் பறக்கின்றன!

ஆனால், தமிழர்கள் விழுந்தால் எழும்பவே மாட்டார்கள். அப்படித் தப்பித் தவறி எழும்பினாலும் மீண்டும் அதே ஈரநிலத்தில் விழுந்து விடுகின்றனர்!

சோதிடப் பொருத்தம் பார்த்து, நல்லநேரம் பார்த்து, வேத மந்திரங்கள் முழங்க, அக்கினி வளர்த்து,

‘முதலில் இந்த மணப் பெண்ணைச் சோமன் வசப்படுத்திக் கொண்டான், அடுத்து கந்தர்வன் உன்னை அடைந்தான், மூன்றாவது இந்திரனுக்கு மனைவியானாள், நான்காவது அக்கினி உன்னை அனுபவவித்தான். பெருமையும் புகழும் கொண்ட இந்த தேவ புருஷர்களால் அனுபவிக்கப்பட்ட உன்னை மனிதனான நான் இப்போது வரிக்கிறேன்”

(சோம: (ஹ) ப்பிரதமோ, திவிதே கந்தர்வோ,
விவித உத்தர: (ஹ) த்ருதியோ அக்கினிஷ்டே
பதி (ஹ) துரீயஸ்தே மனுஷ்யஜா (ஹ)

என்று சொல்லி, அக்கினி சாட்சியாக, பார்வதி பரமேசுவரன் சாட்சியாக, இலக்குமி ஸ்ரீநாராயணன் சாட்சியாக, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக தாலி கட்டி, கைத்தலம் பற்றி,  ஏழடி எடுத்து வைத்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினி வலம் வந்து செய்துகொண்ட திருமணங்கள் தோல்வியில், மணமுறிவில் முடிந்துள்ளன.

சோதிடப் பொருத்தம் பார்க்காமல் செய்து கொண்ட பல காதல் திருமணங்கள் வெற்றி பெற்றுள்ளன.

ஆண் பெண் இருவரது சாதகங்களைப் பார்த்துப் மணப் பொருத்தம் இல்லை என்று சோதிடரால் தள்ளிவிட்ட சாதகங்கள் உண்மையில் ‘பொருத்தமாக’ இருந்திருக்கலாம்! பொருத்தம் என்று சொன்ன சாதகங்கள் உண்மையில் “பொருத்தம் அற்றதாக” இருக்கலாம்!

சோதிட இரத்தினங்கள், சோதிட சிகாமணிகள், சோதிட கலைக்கோக்கள் பிழையான சாதகத்தைக் கணித்து அதன் அடிப்படையில் திருமணப் பொருத்தம் பார்த்து பலரது எதிர்கால வாழ்க்கையை நாசமாக்கி விடுகிறார்கள்.  (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

பொருத்தம் பார்த்துச் செய்து வைத்த திருமணங்கள் தோல்வியில் முடிந்துள்ளன!
(25)

தமிழ்த்  திருமணங்களில் 90 விழுக்காடு சாதகப் பொருத்தம் பார்க்காது செய்யப்படுவதில்லை. குறிப்பாகச் சொன்னால் மற்ற நேரங்களில் அவ்வளவாக சோதிடத்தை நாடாதவர்களும் திருமணம் என்று வரும்போது அதில் அடைக்கலம் புகுகிறார்கள்.

கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு நாளேட்டில் மணமகன் – மணமகள் தேவை பகுதியில் அண்மையில் வந்த விளம்பரத்தைப் படியுங்கள். சாதியை எடுத்துவிட்டேன்.

யாழ் இந்து …… 85 ஆம் ஆண்டு. 5’ 3″ உயரம். மூலம் 1 ஆம் பாதம், சிங்க லக்கினம்  3 இல் சனி கேது, 5 இல் சந்திரன், 6 இல் குரு, 8 இல் சூரியன் சுக்கிரன் புதன், 9 இல் செவ்வாய்  ராகு, லக்கினத்துக்கு 4 பாவம். A/L Computer படித்த மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை.

யாழ் றோமன் கத்தோலிக்க ……. 85 ஆம் ஆண்டு.  5’ 3″ உயரம். உத்தரம் 1 ஆம் பாதம். துலா லக்கினத்தில் சனி கேது,  4 இல் குரு, 6 இல் சுக்கிரன், 7 இல் ராகு, 8 இல் சூரியன் செவ்வாய் புதன், 11 இல் சந்திரன்.  லக்கினத்துக்கு 56 பாவம். Banking course  படித்த JAAT  படித்து கொண்டிருக்கும் மணமகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மணமகன் தேவை.

இந்திய வம்சாவளி ……. 82 ஆம் ஆண்டு. 5’ 4″ உயரம். அத்தம் 4 ஆம் பாதம். மேட லக்கினம். 3 இல் ராகு, 6 இல் சனி செவ்வாய் சந்திரன், 7 இல் குரு, 9 இல் கேது, 10 இல் சூரியன் சுக்கிரன் புதன். லக்கினத்துக்கு பாவம் இல்லை. BA படித்து தொழில் புரியும் மணமகளுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை.

கத்தோலிக்க சமயத்தவர் சாதகம் பார்த்துத் திருமணம் செய்வதில்லை என எனது கத்தோலிக்க நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்களும் சாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்கிறார்கள் என்பதை மேலேயுள்ள விளம்பரம் எண்பிக்கிறது.

புராணங்களிலும் இதிகாசங்களிலும் காவியங்களிலும் சாதகம் பார்த்து திருமணம் நடந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. சீதை இராமனையும் தமயந்தி நளனையும் திரவ்பதி பாண்டவர்களையும் கைப்பிடித்தது சுயம்வரத்தில். உருக்மிணி – கிருஷ்ணன், சுபத்திரை – அருச்சுனன் திருமணங்கள் மாப்பிள்ளை பெண்ணைத் தூக்கி வந்து நடத்தியவை! முருகன் வள்ளியைக் காட்டில் தேடிச் சென்று மணந்தான். துஷ்யந்தன் சகுந்தலையைக் காட்டில் கண்டு காதல் கொண்டு காந்தர்வ திருமணம் புரிந்தான். சிவன் – பார்வதி, முருகன் – தெய்வானை, கண்ணகி – கோவலன் திருமணங்கள் பெற்றோர்கள் ஒப்புதலுடன் உற்றார் உறவினர் முன்னிலையில் நடந்தது.

தொல்காப்பியர் காலத்தில் சாதகம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் இருக்கவில்லை. கடைச்சங்க காலத்திலும் அந்த வழக்கம் இருந்ததில்லை.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் பண்டைய தமிழர்கள் செய்து கொண்ட திருமணம் பற்றிய செய்திகள் இரண்டு பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன.

முதல் பாடல்  “உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை” எனத் தொடங்கும் நல்லாவூர் கிழார் என்ற புலவர் பாடிய பாடல் (எண் 86). இரண்டாவது “மைப்புறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு” எனத் தொடங்கும் விற்றூற்று மூதெயின்னார் பாடிய பாடல் (எண் 136).

எளிய முறையில் அய்யர் இல்லாது, அக்கினி வளர்க்காது, தீவலம் வராது, அம்மி மிதிக்காது, அருந்ததி பார்க்காது பிள்ளைகளைப் பெற்ற மணிவயிறு கொண்ட பேரிளம் பெண்டிர் மணமகளை நீராட்டி, புத்தாடை அணிவித்து “கற்பொழுக்கத்தினின்றும் வழுவாது இல்லறத்துக்குரிய கடமைகளைச் செய்து, உன்னை மனைவியாகப் பெற்றவன் பெரிதும் விரும்பும் இல்லத்தரசி ஆக, பெருமைக்குரிய இல்லக் கிழத்தி ஆக வாழ்வாய் ஆக” என வாழ்த்தி திருமணத்தை இனிது செய்து வைத்தார்கள். இத்திருமணங்கள் சாதகம் பார்க்காது செய்யப்பட்டன எனச் சொல்ல வேண்டியதில்லை. .

நட்சத்திரம், இராசி, கிரகம், திதி, திவசம், யோகம், கரணம், அட்டமி, நவமி, எமகண்டம், இராகு காலம், தோஷம், குளிசம், சோசியம், சோதிடம், மாந்திரிகம், பில்லி – சூனியம் என்பன தமிழ்ச் சொற்களன்று.

இவை பிற்காலத்தில் வைதீக நெறி தமிழரிடை பரவியபோது வழக்கத்துக்கு வந்த மூடப்பழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் ஆகும்.

சங்க காலத்தில் பெற்றோர் பார்த்துச் செய்து வைத்த திருமணங்கள் வழக்கில் இருந்தன. அதனைக் கற்புமணம் என அழைத்தனர்.

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரிய மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே. (தொல். 1088)

உரை – கற்பு என்பது திருமணச் சடங்கோடு பொருந்த கொள்ளுதற்குரிய முறைமையினையுடைய தலைமகன், தலைமகளைக் கொடுத்தற்குரிய முறைமையுடையோர் மனமொத்துக் கொடுக்க, வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதாம்.

பெற்றோர்களுக்கும் ஊராருக்கும் தெரியாமல் ஒரு ஆணும் (தலைவன்) ஒரு பெண்ணும் (தலைவி) அன்பினால் நெஞ்சம் கலந்து மறைவாக ஒழுகிவந்த ஒழுக்கம் களவு எனப்பட்டது.

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே.
புணர்ந்து உடன்போகிய காலையான.  (தொல் 1089) ல

உரை – கொடுப்பார் இன்றியும் மணம் உண்டு. அது எப்போதென்றால் களவொழுக்கத்தில் இணைந்து உடன்போகிய காலத்து.

களவொழுக்கத்தில் ஈடுபட்டோர் புறத்தார்க்குத் தெரிந்தபோது திருமணம் செய்து கொள்வர். புறத்தார்க்கு தெரியாமலும் மணந்து கொள்வர். அது உடன்போக்கு என அழைக்கப்படும்.

பெரும்பான்மையான திருமணங்கள் களவில் தொடங்கி கற்பில் முடிந்தன.

களவு முறையில் நாளடைவில் பொய்ம்மையும் இழுக்கும் நேர்ந்தமையின் தமிழ்ச் சான்றோர் சடங்குகளுடன் கூடிய கற்பு முறையை வகுத்தனர்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப,   (தொல். 1091)

மணம், மன்றல், வதுவை, திருமணம் என்பன காதலர் இருவர் கருத்து ஒருமித்தே நடைபெறும்.

திருமணம், வதுவை, மன்றல் ஒரு பொருள் குறிக்கும் சொற்கள் ஆகும். திரு என்பது அழகு, சிறப்பு, செல்வம், மேன்மை, பொலிவு, கவர்ச்சி, விரும்பும்தன்மை என்னும் பொருள் தரும் சொல். மணம் என்பது இருமனம் ஒருமனம் ஆக இணையும் போது பிறக்கும் இன்பம், நறுநாற்றம் என்னும் பொருள் கொண்டது.

பகல், கிழமை, திங்கள், ஆண்டு ஆகிய கணக்கிடப் பிற்றைஞான்று தமிழ் அய்யர் (சான்றோர்) ஆக்கிக் கொண்டவையே.

தாலி என்பது பண்டு ஆண்குழந்தைக்குப் பிறந்த ஐந்தாம் நாள் அணிந்த ஓர் அணிகலன் ஆகும். அதனை ஐம்படைத்தாலி என்றும் கூறுவர்.

பொன்னுடைத்தாலி என்மகன் என அகநானூறு அய்ம்பத்து நான்காம் பாடலும்

தார் பூண்டு,
தாலி களைந்தன்று மிலனே பால்விட்டு
அயினியும் அன்றயின் றனனே,

என்ற புறநானூறு எழுபத்தேழாம் பாடலும் புகல்வன காண்க.

ஆகவே, அன்று ஆணுக்குப் பெண் அடிமை என்பதற்கு அறிகுறியாகத் தாலி அணியப் பெறவில்லை என்பது ஒரு தலை. (தமிழ்பேரறிஞர் முனைவர் மா. அரசமாணிக்கனார் எழுதியுள்ள “தமிழர்க்குத் தாலி உண்டா” என்னும் நூல் கண்டு தெளிவு பெறுக)

பண்டு மணமக்களைத் தேர்ந்தெடுக்குங்கால் இன்று நடைமுறையில் உள்ள “திதி, யோகம், கரணம், லக்கினம், யோனி, ராசி, கிரகம், நட்சத்திரம், திசை, புத்தி ” ஆகிய பத்து வகைப் பொருத்தங்கள் பார்ப்பாரிலர்.

இன்று மணமகள் மணமகன் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து தங்களுக்குள் மனப்பொருத்தம் இருக்கிறதா என்பதை அறிய பெரும்பாலும் வாய்ப்புக் கொடுக்கப்படுவதில்லை. இஃது  பண்டைய தமிழ் மரபுக்கு மாறானதாகும்.
எமது முன்னோர் கற்புமணத்தின் போது தலைவனுக்கும் தலைவிக்கும் பொருத்தம் இருக்கிறதா எனப் பார்த்தார்கள். அந்தப் பொருத்தங்கள் பற்றித் தொல்காப்பியர் அழகாகக் கூறியிருக்கிறார்.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொரு திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே   (தொல். 1219)

(1) குடிப்பிறப்பு (2) ஒழுக்கம் – பண்பாடு (3) ஆள்வினையுடமை (4) அகவை (5) வடிவு – வனப்பு (6) காம ஒழுக்கத்துக்குரிய உள்ளக் கிளர்ச்சி (7) சால்பு – நற்குணம் (8) அருளுடமை (9) உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு (10)  தெய்வப் பொலிவு.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர் பகுத்தறிவுக்கு ஏற்ற ஒத்த திரு, ஒத்த அழகு, ஒத்து குணம், ஒத்த குடிப்பிறப்பு போன்ற பொருத்தங்கள் பார்த்துத் திருமணம் செய்தார்கள் எனப் படிக்கும் போது பெருமையாக இருக்கிறது.

இந்நாள் தமிழர்கள்

(1) கிரகப் பொருத்தம்
(2) நட்சத்திரப் பொருத்தம்
(3) கணப் பொருத்தம்
(4) மகேந்திரப் பொருத்தம்
(5) பெண் தீர்க்கப் பொருத்தம்
(6) யோனிப் பொருத்தம்
(7) இராசிப் பொருத்தம்
(8) இராசியதிபதிப் பொருத்தம்
(9) வசியப் பொருத்தம்
(10) இரச்சுப் பொருத்தம்
(11) வேதைப் பொருத்தம்
(12) விருஷப் பொருத்தம்
(13) ஆயுள் பொருத்தம்
(14) புத்திரப் பொருத்தம்

ஆகிய பொருத்தங்களைப் பார்த்து திருமணத்தை நிச்சயம் செய்கிறார்கள்.

பொருத்தம் பார்ப்பதில் கூட சோதிடர்களிடம் ஒத்த கருத்தில்லை. சிலர் பத்துப் பொருத்தங்கள் பார்த்தால் போதும் என்பார்கள். ஒரு சோதிடர் நட்சத்திரம், கணம், யோனி, இராசி, இரச்சு ஆகிய அய்ந்தும் முக்கியம் என்பார்.  அது மதுமட்டும் அல்லாமல் பிராமணருக்கு அதிபதியும் சத்திரியருக்குக் கணமும் வைசிகருக்கு பெண் தீர்க்கமும் சூத்திரருக்கு யோனியும் முக்கியமாகப் பொருந்த வேண்டும்.

பத்துப் பொருத்தங்களில் அய்ந்துக்கு மேல் பொருந்தின் உத்தமம். அய்ந்து பொருந்தின் மத்திமம்.

நட்சத்திரங்களைக் கொண்டறியப்படும் பொருத்தங்களிலும் கிரகநிலையைக் கொண்டறியும் பொருத்தமே முக்கியமானது. (வாக்கிய பஞ்சாங்கம் – பக்கம் 24-26)

இந்தப் பொருத்தங்கள் இந்த அண்டம் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் சரிவரத் தெரியாத காலத்தில் – மனித நாகரிகம் குழந்தைப் பருவத்தில் இருந்த காலத்தில் –  விதிக்கட்டின்றி வரையப்பட்டவை ஆகும்.

பொருத்தம் பார்ப்பதில் கிரக- நட்சத்திரங்களின் இருப்பைவிட சோதிடரின் மனநிலைதான் முக்கியமானது. ஒரு சோதிடர் திருமணப் பொருத்தம் இல்லை என்று சொல்வார். இன்னொருவர் பொருத்தம் இருக்கிறது – செய்யலாம் என்பார். அல்லது கிரகங்களுக்கு தோஷ பரிகாரம் செய்த பின்னர் செய்யலாம் என்பார்.

சோதிடர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்துத்தான் சாதகத்தைக் கணிக்கிறார்கள். சிக்கல் என்னவென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பஞ்சாங்கங்கள் இருக்கின்றன. அவை ஆண்டுப் பிறப்பு, சிவராத்திரி நாள், கிரகப் பெயர்ச்சி போன்றவற்றில் வேறுபடுகின்றன. ஆனால் இரண்டும் தாம் சொல்வதே சரியென வாதிடுகின்றன!

வாக்கிய பஞ்சாங்கம் பார்த்து கணித்த சாதகம் காட்டும் இராசி, கிரக இருக்கைகள் திருக்கணித பஞ்சாங்கத்தைப் பார்த்துக் கணித்து சாதகத்தில் இருந்து வேறுபடும். இந்த இரண்டில் எது சரி? ஒன்று சரியாக இருந்தால் மற்றது பிழையாக இருக்கும். அல்லது இரண்டும் பிழையாக இருக்கலாம். நிச்சயமாக இரண்டும் சரியாக இருக்க முடியாது. இதனை அடுத்த கிழமை பார்ப்போம். (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

கணிப்பில் மாறுபடும் பஞ்சாங்கங்கள்!
(26)

‘வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பிறகு நம்பு. புராணங்களை வேதங்களாக  நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளாதே.

தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைள், லௌகிகக் கொள்கைகள், வைதிக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கி விடு, வீட்டிலும் வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்! உண்மையிருக்க வேண்டும்!

நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது! பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது! பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும்!

எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர், உண்மை சாத்திரங்களுக்கெல்லாம் வேர், உண்மை இன்பத்துக்கு நல்லுறுதி, உண்மை பரமாத்மாவின் கண்ணாடி, ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்!

தமிழா! எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை, எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரந்தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய் என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? ‘தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள்” என்று பங்ச தந்திரம் நகைக்கிறது.” (பாரதியார் கட்டுரைகள் – பக்கம் 134)

ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கடிந்துரையையே மேலே தந்துள்ளேன்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ‘எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது’ என்று நவின்ற பாரதிக்கு இருந்த சிந்தனைத் தெளிவு இன்றைய தமிழனுக்கு இல்லாமல் இருக்கிறது.

சாதகம் கணிப்பதற்கு அடிப்படையாக இருப்பது பஞ்சாங்கம் என முன்னர் கூறியிருந்தேன். அந்தப் பஞ்சாங்கங்கள் ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றன என்றும் கூறியிருந்தேன். பஞ்சாங்கம் என்றால் அய்ந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பது என்பது பொருள். அவை பின்வருமாறு:

வாரம்
திதி
கரணம்
நட்சத்திரம்
யோகம்

ஏற்கனவே கூறியவாறு ஒன்றுக்கு மேற்பட்ட பஞ்சாங்கங்கள் இருக்கின்றன. ஒன்று வாக்கியம் மற்றது திருக்கணிதம். இந்தப் பஞ்சாங்கங்களின் பெயர்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

வாக்கிய பஞ்சாங்கத்தை கணித்து வெளியிடுபவர்கள் தங்கள் கணிப்புத்தான் சரி என்று கூறுகிறார்கள். அதே சமயம் திருக்கணித பஞ்சாங்கத்தை கணித்து வெளியிடுபவர்கள் தங்களின் கணிப்புத்தான் முற்றிலும் சரி என்கிறார்கள்.

வாக்கியம் எனப்படுவது முன்னோர்கள் கூறியதை அல்லது எழுதிவைத்ததை அப்படியே கடைப்பிடிப்பது. திருக்கணிதம் என்பது சந்திரனின் நகர்வை கணக்கில் கொண்டு திருத்தி அமைக்கப்பட்ட முறையாகும்.  அறிவியல் முறைப்படி கணக்குபோட்டு எந்த, எந்த கோள் எத்தனை பாகையில் உள்ளதென்று கூறுவது. ஆரியபட்டர் திருக்கணித முறைப்படிதான் கணக்குப்போட்டார் என்கிறார்கள்.

திருக்கணித பஞ்சாங்கத்தை விட வாக்கிய பஞ்சாங்கம் காலத்தால் முந்தியது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கங்கக் கணிப்பு முறையில் பிழைகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றைத் திருத்திப் புதிய முறையைக் கண்டனர். அதற்கு “திருகணித முறை” எனப் பெயர் வைத்தனர். இந்த திருக்கணித முறையை ஒட்டிப் பஞ்சாங்கங்கள் கணிக்கப் படுகின்றன.

தென் இந்தியாவில் பெரும்பாலும் வாக்கிய முறைப்படிதான் சாதகம் கணிக்கப்படுகிறது. வட இந்தியாவில் திருக்கணிதத்தை அடியொற்றிச் சாதகம் கணிப்பதாகச் சொல்லப்படுகிறது.

பஞ்சாங்கத்தின்படி சிவராத்திரி பூசை எப்போது? ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி எப்போது என்பதில் பஞ்சாங்கங்களுக்கு இடையே குழப்பம் இருந்து வருகிறது. ஒரு பஞ்சாங்கம் பெப்ரவரி 16 ஆம் திகதி இரவு சிவராத்திரி என மற்றது இல்லை பெப்ரவரி 15 என்று அடித்துக் கூறியது.

மகாசிவராத்திரி 16 ஆம் தேதி வருவதாக பஞ்சாங்கம் குறிப்பிட்டாலும் இந்தத் தேதியில் வேதை தோஷம் இருப்பதால் முதல் நாளான 15 ஆம் தேதி மகாசிவராத்திரியை கொண்டாட வேண்டும். இதுதான் நாட்டிற்கும் அரசுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் எனப் பழநி கே.எஸ். பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரை தலைவராக கொண்ட ஆகம வல்லுனர் குழு தீர்மானித்தது. இந்தக் கருத்தை திருவாவடுதுறை ஆதீனமும் ஏற்றுக்கொண்டார்.

ஆனால், மகாசிவராத்திரியை 16 ஆம் தேதி தான் கொண்டாட வேண்டும் என்று அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் தெரிவித்தது. அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மகாசிவராத்திரி பூசை முற்றிலும் திதியை அடிப்படையாக கொண்டது. மாசி மாதத்தில் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி திதியே சிவராத்திரி பூசைக்கு உகந்தது. மகாசிவராத்திரி உத்தமம், மத்திமம், அதமம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாசி மாதம் 3 ஆம் தேதி (பெப்ரவரி 15 ஆம் தேதி) வியாழக்கிழமை லிங்கோத்பவகாலமான நடுநிசி நேரத்திற்கு பிறகும் திரயோதசி இருப்பதால் காமிகாகம்படி மகாசிவராத்திரி விரதம் மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை 16 ஆம் தேதி அன்று தான் அனுஷ்டிக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை நடுநிசி நேரத்தில் 12. 33 முடிய சதுர்த்தசியும், பின்பு அமாவாசையும் சம்பந்தப்படுகிறது. எனவே, நடுநிசிக்கு பிறகு 33 நிமிடங்கள் சதுர்த்தசி இருப்பதால் அன்று தான் அனுஷ்டிக்க வேண்டும். இந்நாளில் வேதை இருப்பதாகக் கருதப்பட்டாலும் மகாசிவராத்திரி அன்று திருவோணம், அவிட்டம், சதயம் இம்மூன்று நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று சம்பந்தபட்டால் வேதை தோஷம் இல்லை. இவ்வாண்டு திருவோணம் நட்சத்திரம் சம்பந்தப்படுவதால் வேதை தோஷம் இல்லை என உத்ரகாரணாகமம் கூறுகிறது. இவ்வாண்டு சிவராத்திரி கன்யச பட்சத்தில் அமைந்துள்ளது. எனவே, 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவே மகாசிவராத்திரி பூஜை செய்யப்பட வேண்டும் என அகில இந்திய சிவாகம வித்வத் சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சிவராத்திரி போலவே சர்வசித்து புத்தாண்டு பிறந்த நாள், நேரம் எது என்பதிலும் வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணித பஞ்சாங்கமும் வேறுபட்டன. சர்வஜித் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் தேதி (14- 4 -2007) கும்பராசி சதய நட்சத்திரத்தில் காலை 10.45 க்கு பிறக்கிறது எனத் திருக்கணித பஞ்சாங்கம் சொல்லியது. வாக்கிய பஞ்சாங்கம் வேறு காலத்தைக் குறிப்பிட்டது.

இப்படி ஆளுக்கொரு முறை இருந்தால் எந்தப் பஞ்சாங்கத்தின்படி கணித்த சாதகம் சரியானதாக இருக்கும்?

முன்னால் ஞானக் கண்ணால் பார்த்த கோள்களையும் நட்சத்திரங்களையும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி மூலம் துல்லியமாகப் பார்க்கின்றனர். விண்கலங்களை அனுப்பி செவ்வாய், சனி போன்ற கோள்களை படம் பிடிக்கிறார்கள். யந்திரமனிதர்களை(robot) இறக்கி கோள்களின் மேற்பரப்பை ஆராய்கிறார்கள். கோள்களின் துல்லியானமான தொலை, கிரகங்களின் வேகம், அதன் சுற்றுப்பாதை, வெட்பதப்பம் போன்றவற்றைக் கண்டறியும் அளவிற்கு வானியல வளர்ந்து விட்டது.

வானியல் கணித முறையும் திருக்கணித முறையும் பெரும்பாலும் ஒத்து இருப்பதால் திருக்கணித முறை தான் சரியான முறை என வாதிடுகிறார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமை வாய்ந்தது என்று பழமையைக் கொண்டாடுகிறார்கள். சரி! திருக்கணிதப் பஞ்சாங்கங்கள் எவை?

  1. ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியாள் மடத்துப் பஞ்சாங்கம்.
  2. ஸ்ரீ காஞ்சி ஆச்சாரியாள் பாரத் கணிதப் பஞ்சாங்கம்
  3. ஆனந்த போதினி திருகணிதப் பஞ்சாங்கம்

காஞ்சிபுரத்து காம கோட்டிகள் திருக்கணித முறையைதான் பின்பற்றுகிறார்கள். இந்தப் பஞ்சாங்கங்கள் காலக் கணிப்பை தற்பரை, வினாடி, நாழிகை, நாள் என அழைக்கிறது. அந்தக் கணக்கு பின்வருமாறு.

60 தற்பரை  –   1 வினாடி
60 வினாடி   –   1 நாழிகை
60 நாழிகை  –   1 நாள்
1 மாதம் 29   – 32 நாள்
1 ஆண்டு 365 நாள், 15 நாழிகை, 31 வினாடி, 15 தற்பரை
1 கிழமை       –          7 நாள்
2 1/2    நாழிகை  –   1 மணி
2 1/ 2   வினாடி –     1 மணித்துளி (நிமிடம்)

மேற்கத்திய காலக் கணிப்பின் படி இரவு 12. 01 மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள். இந்திய காலக் கணிப்புப்படி சூரிய உதயம் முதல் மறு நாள் சூரிய உதயம் முடிய ஒரு நாள். எடுத்துக்காட்டாக இன்றைக்கு காலை 6. 40 க்கு சூரியோதயம். நாளை காலை 6. 39 க்கு சூரிய உதயம். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும்.அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும். (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

சோதிடம் அறிவியல் அடிப்படை அற்ற ஒரு மனநம்பிக்கை!
(27)

உலகத்திலேயே மாபெரும் சுரண்டல் ஒன்று இருக்கிறது என்றால் அது  சோதிட சாத்திரமாக இருக்க வேண்டும். மக்களின் பேராசையையும் சோம்பேறித்தனத்தையும் அச்சத்தையும் பயன்படுத்தி சோதிடர்கள் அவர்களைப் பழிவாங்கித் தீர்த்து விடுகின்றனர்!

சோதிடத்தில் ஏமாந்து போகிறவர்கள் அப்பாவி மக்கள் மட்டும்தான் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. மெத்தப் படித்தவர்களும் பேராசைக்கும் சோம்பலுக்கும் அச்சத்துக்கும் இரையாகிறார்கள்.

சோதிடர்களுக்கு வருவாய் பலன் சொல்வதால் மட்டும் வருவதில்லை. பரிகாரம் சொல்வதால்தான் கூடிய வருவாய் வருகிறது.  சோதிடத்தில் என்ன தோஷம் இருந்தாலும் அதை பூசை, புனஸ்காரம், மந்திரக் கயிறுகள், தகடுகள் போன்றவற்றால் சரிப்படுத்திவிடலாம் எனச் சோதிடர்கள் புலுடா விடுகிறார்கள். சோதிடர்கள் தாங்களே பரிகாரம் செய்கிறார்கள். இல்லாவிட்டால் பரிகாரம் செய்ய குறிப்பிட்ட கோயிலுக்குப் போய் பூசை, யாகம் செய்யச் சொல்கிறார்கள். கோயில்கள் சோதிடர்களுக்கு தரகுப் பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி இப்போது சோதிடம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தை எந்த நேரத்தில் பிறந்தால் குழந்தைகளின் எதிர்காலம் ஓகோ என்றிருக்கும்  என சோதிடர்கள் குறித்துக் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் குறித்துக் கொடுக்கும் நேரத்தில்; சிசேரியன் செய்து குழந்தையைப் பிறக்க வைக்கிறார்கள்! எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவரே இப்படி நல்ல நேரம் பார்த்து குழந்தையை சிசேரியன் மூலம் பிறக்க வைத்திருக்கிறார்!

விதியை வெல்ல முடியாது என்று சொல்லும் ஜோதிடர்களே, அதை வெல்லும் பரிகாரங்களையும் சொல்வது வேடிக்கைதான்!

இந்திய காலக்கணிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை  (Leap year) கூட்ட வேண்டும். இந்திய சோதிடமுறையில் இப்படிக் கூட்ட வேண்டிய தேவையில்லை. காரணம் நேரக் கணிப்பீடு வானவெளியில் காணப்படும் சித்திரை நட்சத்திரத்தை இலக்காகக் கொண்டு (Spica, alpha-virginis) புவி ஞாயிறை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 23 மணி 56 மணித்துளி 4. 09 வினாடி ஆகும். சூரிய ஆண்டு புவி சூரியனை ஒருமுறை சுற்றி வரும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அண்ணளவாக 24 மணித்தியாலம் ஆகும்.

சூரியன் சித்திரை நட்சத்திரம் மேட இராசி இரண்டிலும் புகும் நாளே சித்திரைப் புத்தாண்டாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

நட்சத்திர நாளுக்கும் சூரிய நாளுக்கும் இடையில் வேறுபாடு இருப்பது போல் ஒரு நட்சத்திர ஆண்டுக்கும் சூரிய ஆண்டுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.

ஒரு நட்சத்திர ஆண்டில் 365.256363 நாள்கள் (365 நாள், 6 மணி, 9 மணித்துளி, 9.54 வினாடி) இருக்கின்றன. ஒரு சூரிய ஆண்டில் 365.2425 நாள்கள் (365 நாள், 5 மணி, 48 மணித்துளி, 45.51 வினாடி) இருக்கின்றன. ஒரு சூரிய ஆண்டு நட்சத்திர ஆண்டைவிட 20.2413 (20 மணித்துளி 23.5 வினாடி) மணித்துளி நேரம் அதிகமானது.

ஏன் இந்த வேறுபாடு? இதற்குரிய விடை தெரிய வேண்டும் என்றால் எமது பூமியின் அசைவு பற்றிப் தெரிந்து கொள்ள வேண்டும்.

புவியின் முதல் அசைவு கதிர்வீதியில் (ecliptic) ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை மையமாக வைத்து சூரியனைச் சுற்றிவருவது. இப்படிச் சுற்ற எடுக்கும் காலம் 365 நாள், 6 மணி, 9 மணித்துளி, 9.54 வினாடி. இதுவே நட்சத்திர (Sidereal year)ஆண்டாகும்.

Image result for              equinox      

புவியின் இரண்டாவது அசைவு விண்நடுக்கோட்டில் (celestial equator) ஒரு சமதரையை உருவாக்குகிறது. இந்த சமதரை கதிர்வீதியில் (ecliptic) ஒரு சமஇரவு (vernal equinox) புள்ளியில் இருந்து மீண்டும் அதே சமஇரவு புள்ளிக்கு வந்து சேர புவி எடுக்கும் காலம் 365 நாள், 5 மணி, 48 மணித்துளி, 45.51 வினாடி. இதுவே சூரிய அல்லது வெப்பமண்டல (Solar orTropical year) ஆண்டாகும்.

முன்னரே இந்த இரண்டு அசைவுக்கும் உள்ள வித்தியாசம் 20 மணித்துளி 23.5 வினாடி என்று காட்டியுள்ளேன். இந்திய சோதிடத்தில் இந்த வித்தியாசத்தை அயனாம்சம் எனக் குறிப்பிடுகிறார்கள்.

2000 ஆம் ஆண்டு சித்திரை நட்சத்திரம் கதிர்வீதியில் 23 பாகை 51 மணித்துளி 11 வினாடி இருந்தது என நிறுவப்பட்டது. இது இலையுதிர் கால சமஇரவு (கூதிர் காலம்) 23 பாகை 51 மணித்துளி 11 வினாடிக்கு சமமானது. 2000 ஆம் ஆண்டுக்குரிய அயனாம்சம் (லாகிரி கணிப்பு) 23 பாகை 51 மணித்துளி 11 வினாடி.

ஒவ்வொரு ஆண்டும் இந்த வித்தியாசம் அதிகரித்துக் கொண்டு போகிறது. எழுபத்து இரண்டு ஆ;டுகளுக்கு ஒரு பாகை அதிகரிக்கிறது.

சோதிடத்தைக் கணிப்பதற்கு வாக்கியம் – திருக்கணிதம் என இரண்டு பஞ்சாங்கங்கள் இருக்கின்றன எனப் பார்த்தோம். இந்த இரண்டுக்கும் அமாவாசை, பவுர்ணமி தவிர ஆயிரத்தெட்டு வேறுபாடுகள் உண்டு.

எடுத்துக்காட்டாக சர்வசித்து ஆண்டின் பிறப்பைக் கணிப்பதில் இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒரு குழந்தைக்குத் திருக்கணிதம் வாக்கியம் ஆகியவற்றின் கீழ் சாதகம் கணித்தால் இராசி, நட்சத்திரம், கிரகநிலை போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கும்! .

எடுத்துக்காட்டாக 2004 ஆம் ஆண்டு ஆடி 30 ஆம் நாள் (ஆகஸ்ட் 14) மாலை 5.00 க்கு (27 நாழிகை 25 வினாடி) ஒரு குழந்தை சென்னையில் பிறக்கிறதாக வைத்துக் கொள்வோம். சென்னை நிரைக்கோடு (Longitude) 80 பாகை .18 மணித்துளியிலும் குறுக்குக்கோடு (Latitude) 13 பாகையிலும் இருக்கிறது. சூரிய உதயம் 5 மணி 51 மணித்துளி அந்தக் குழுந்தையின் சாதகம் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி பின்வருமாறு இருக்கும்.

                                         திருக்கணிதம்

 

சந்திரன் சனி

குரு சுக்கிரன் ராகு
 

இராசி சக்கரம்

சூரியன்
லக்கினம்(மகரம்)  புதன்
கேது  செவ்வாய்  

                                             வாக்கியம்

 

சனி

குரு,சுக்கிரன், ராகு, சந்திரன்
 

இராசி சக்கரம் 

சூரியன் 
லக்கினம் (மகரம்)

 

புதன்
கேது

 

செவ்வாய்  

திருக்கணித பஞ்சாங்கத்தில் சந்திரன் மேடராசியில் இருக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தில் ரிஷப இராசியில் இருக்கிறது. எனவே ஜெனன இராசி (குழந்தை பிறக்கும் போது சந்திரன் நின்ற இராசி) மாறிக்காணப்படுகிறது. நட்சத்திரங்களும் மாறுபடுகின்றன.

திருமணப் பொருத்தம் பார்க்க திருக்கணித பஞ்சாஞ்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட மாப்பிள்ளையின் சாதகத்தை வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட பெண்ணின் சாதகத்தோடு பொருத்திப் பார்த்தால் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படும். இந்தக் குழப்பங்கள் காரணமாகவே மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த சாதகங்களைப் பார்த்த சோதிடர் பொருத்தம் இல்லை என்னும் போது பெண்வீட்டார் கொடுத்த சாதகங்களைப் பார்த்த மற்றொரு சோதிடர் “பொருத்தம் இருக்கிறது. செய்யலாம்” என்று சொல்கிறார்.

சோதிடர், எண்சாத்திரி, வாஸ்து ‘விற்பன்னர்கள்’ ஆகியோரிடம் ஒரு கேள்வியைக் கேட்டால் இரண்டுக்கு மேற்பட்ட விடைகள் (Ask a question and you will get more than two different answers)   வரும்!

வேடிக்கை என்னவென்றால் சோதிடர்கள் திருக்கணிதம் வாக்கியம் இரண்டும் சரியென்று வாதிடுகிறார்கள்.

அறிவியல் அப்படி அல்ல. அறிவியல் முடிவுகள் அல்லது கணிப்புகள் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எண்பிக்கக் கூடியவை. ஒருதரத்துக்கு மேல் செய்து காட்டக் கூடியவை  என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஒரு குறிப்பிட்ட அளவு வேதிப் பொருள் (A) இன்னொரு குறிப்பிட்ட அளவுள்ள வேதிப் பொருள் (B) இரண்டும் சேர்ந்து புதிய பொருள் ஒன்று (C) உண்டாகிறதென்றால் அது வட துருவத்திலும் தென் துருவத்திலும் கண்ணனுக்கும் பொன்னனுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. அதுதான் அறிவியல். எப்போது ஒரே பொருளில் இரண்டாவது கருத்துக்கும் இடமிருக்கிறதோ அங்கே அது ஒரு எடுகோள் (hypothesis)   ஆக – ஒரு கருத்தாக மட்டுமே – மாறி விடுகிறது. அது சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம்.

சோதிட சாத்திரத்தை நம்புவோர் முன்வைக்கும் ஒரு வாதம் இருக்கிறது. சோதிடம் ஒரு அறிவியல் தான்;  அது ஒரு கணித முறையில் கணக்கிடப்படுகிறது – சிக்கல் என்னவென்றால் சிலர் அதைத் தவறாகக் கணக்கிடுவதால் தவறுகள் நடந்து விடுகின்றன!

அவை ‘கணக்கு’ என்றால் அதில் தவறேதும் நடக்க முடியாது. விதி முறைகள், வழி முறைகள் எல்லாம் ஒரு ஒழுங்கில் இருந்தால்தானே அது ஒரு கணக்காகும்? ஒருவருக்கு ஒரு வகைக் கணக்கு இன்னொருவருக்கு வேறு வகைக்கணக்கு என்றால் அது கணக்கே அல்ல.

அறிவியல் சோதனைகளில் ‘control’ என்ற ஒரு அம்சம் இருக்கும். ஒரு  guninea pig  யை வைத்து சோதனை நடக்கிறதென்றால் இருவகை சோதனை விலங்குகளை வைத்து சோதனை செய்வார்கள். ஒன்றில் ஒரு மருந்தை ஊசிமூலம் ஏற்றி சோதனை நடத்துவார்கள். மற்றதில் அந்த ஊசிபோடுவதால் வரக்கூடிய விளைவுகளை நீக்கி மருந்தின் விளைவை மட்டும் தனித்து அறிய அடுத்த சோதனை விலங்குகளை மருந்தில்லாமல் வெறும் ஊசி (placebo) போடுவார்கள். இந்த இரண்டாவது விலங்குகள் control group  ஆக இருக்கும்.

சாதகம், எண்சாத்திரம், வாஸ்து, இராசிக்கல் போன்றவற்றில் இது போல் செய்ய முடியாது. செயல்முறைக்கு ஒத்துவராது என்பதாலேயே இதை வைத்து ‘வாணிகம்’ செய்பவர்களுக்கு வாசியாகப் போய்விட்டது. நம்புவர்களுக்கும் வசதியாகப் போய்விட்டது.

இந்துக்கள் சாதகப் பொருத்தம் பார்க்காது திருமணம் செய்வதில்லை. சாதகம் பார்த்துத் திருமணம் செய்துகொண்ட மணமக்களது வாழ்க்கை சொர்க்கமாகவும் மற்றவர்கள் வாழ்க்கை நரகமாகவும் இருப்பதில்லை.

நாவுக்கரசர் “ நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் …” என உரக்கப் பாடியிருக்கிறார். ஆனால் சைவர்கள் அப்பர் சொன்னதைக் காதில் விழுத்துவதில்லை.

யாருடைய வாழ்க்கையில்தான் துன்பம் இல்லை? தொல்லை இல்லை? கவலை இல்லை? இழப்பில்லை?

ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும், இன்பமும் துன்பமும், வளர்ச்சியும் தேய்வும், உயர்வும் தாழ்வும், செல்வமும் வறுமையும், நன்மையும் தின்மையும், ஏற்றமும் இறக்கமும் கலந்தே இருக்கின்றன. இதனை நூல்களாலும் நடைமுறை வாழ்க்கையாலும் அறிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு மணமக்களிடையே மன ஒற்றுமை இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

சாதகத்தில் உள்ள இராசிகள் வானத்து இராசிகள் அல்ல!
(28)

‘மூட பக்திகளிலே மிகவும்  தொல்லையான அம்சம் யாதெனில் எல்லாச் செய்கைகளுக்கும் நாள், நட்சத்திரம். லக்கினம் முதலியன பார்த்தல். சவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட நம்மவர் மாசப் பொருத்தம், பட்சப் பொருத்தம், நாள் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

சவரத்துக்குக் கூட இப்படியென்றால் இனிக் கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள்  முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விடயத்தில் நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது.

சகுனம் பார்க்கும் வழக்கம் கார்யங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும் அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதனால் காரிய நஷ்டம் மாத்திரம் உண்டாகின்றது. நாள் பொருத்தம், லக்னப் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே, கார்ய நஷ்டம் மட்டுமின்றி மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகின்றது.’ (பாரதியார் கட்டுரைகள் – பக்கம் 8-9)

இன்று என்ன வாழுதாம்? பாரதி காலத்தைவிட இன்று மோசமான மூடநம்பிக்கைகளில் தமிழ்மக்கள் மூழ்கிப் போய் இருக்கிறார்கள்! எத்தனை பெரியார்கள் வந்து எதைச் சொன்னாலும் மூடநம்பிக்கைகளை விடமாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள்!

சோதிட சாத்திரத்துக்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. சோதிடத்துக்கு உள்ள ஒரே அடிப்படை மனத்தளவிலான வெறும் நம்பிக்கைதான்.

புவியில் இருந்து வானத்தை அண்ணாந்து பார்த்த பபிலோனியர்களுக்கு இந்த விண்மீன் (நட்சத்திர) கூட்டங்கள் ஒவ்வொன்றும் ஒரு உருவத்தின் சாயலைக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. அந்த உருவத்தையே அந்த விண்மீன் கூட்டத்துக்கு வரைந்து அதற்குப் பெயரும் வைத்து குணத்தையும் கற்பித்தார்கள்.

சோதிட சாத்திரம் இihசி வட்டத்தை ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 சமவளவுள்ள வீடுகளாக விதிக்கட்டின்றி (arbitrary) பிரித்துள்ளது என்றும் அதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை அது வானியல் முடிவுக்கு மாறானது என முன்னர் (அத்தியாயம் 22, 23) பார்த்தோம். மீண்டும் ஒருமுறை அந்த அட்டவணையைப் பாருங்கள்.

இராசி மண்டலங்கள்

பால் மண்டலம்  காலம் நாள் பாகை  உருவம்  
மேடம் ஏப்ரில் 19 – மே 13 25 24.66 ஆடு  
இடபம் மே  14 –       யூன்  19 37 36.49 எருது  
மிதுனம் யூன்  20 –    யூலை 20 31 20.58 ஆண்- பெண்  
கடகம் யூலை 21  – ஓகஸ்ட்  9 20 19.73 நண்டு  
சிம்மம் ஓகஸ்ட் 10 – செப்தெம்பர் 15 37 36.49 சிங்கம்  
கன்னி செப்தெம்பர் 16 – ஒக்தோபர் 30 45 44.38 பெண்  
துலாம் ஒக்தோபர் 31 – நொவெம்பர் 22 23 22.69 தராசு  
விருச்சிகம் நொவெம்பர்  23 – நொவெம்பர்  29 7 6.9 நட்டுவக்காலி  
பாம்பாட்டி நொவெம்பர் 30 – டிசெம்பர் 17 18 17.75 பாம்பாட்டி  
தனு டிசெம்பர்  18 – சனவரி  18 32 31.56 வில்  
மகரம் சனவரி  19 –  பெப்ரவரி  15 28 27.62 சுறா மீன் – கடற்குதிரை  
கும்பம் பெப்ரவரி  16 – மார்ச் 11 24 23.67 குடம்  
மீனம் மார்ச்  12  – ஏப்ரில்  18 38 37.48 இரட்டை மீன்கள்  

Image result for zodiac signs

கும்ப இராசியின் அளவு 23.67 பாகை மட்டுமே. அதற்கு அடுத்த மீன இராசியின் அளவு 37.45 பாகை. இவ்வாறு ஒவ்வொரு இராசியும் வௌ;வேறு அளவு கொண்டவை. எந்த இராசியும் சரியாக 30 பாகை கொண்டிருக்கவில்லை. வானியல் பாம்பாட்டி இராசி என்றொரு இராசி இருக்கிறது எனக் கூறுகிறது. ஆனால் சோதிடத்தில் அந்த இராசி கணக்கில் எடுக்கப்படவில்லை. சோதிடர்கள் அந்த இராசியை விருச்சிக இராசியோடு இணைத்துவிட்டார்கள்!

வானியல் படி ஞாயிறு மேட இராசியில் ஏப்ரில் 19 ஆம் நாள்தான் உட்புகுகிறது. ஆனால் இந்திய சோதிடத்தில் ஞாயிறு மேட இராசியில் புகும் நாள் ஏப்ரில் 14 ஆகும். முழுமையாக 5 நாள் வேறுபாடு காணப்படுகிறது. எனவே ஏப்பிரில் 14 ஆம் நாள் பிறந்த குழந்தை மேடராசியில் பிறந்தது என்பது பிழையான கூற்றாகும். ஏப்ரில் 14 ஆம் நாள் ஞாயிறு மேடராசிக்கு முந்திய இராசியான மீன இராசியில் (25 பாகை) நின்றது என்பதுதான் சரியாகும்.

விருச்சிக இராசியை ஞாயிறு கடக்கும் தொலைவு 7 பாகை மட்டுமே. அதே நேரம் கன்னி இராசியைக் கடக்கும் தொலைவு 45 பாகை! ஆறு மடங்குக்கு மேல்! விடுபட்ட பாம்பாட்டி இராசி மண்டலத்தை ஞாயிறு சுடக்கும் தொலைவு 18 பாகை ஆகும். விருச்சிக இராசியை விட (7 பாகை) 11 பாகை அதிகமானது!

ஆகவே ஞாயிறு 25 பாகை நீளமுள்ள மேட இராசியை 25 நாள்களில் ( ஏப்ரில் 19 – மே 13) கடந்து விடுகிறது. ஆனால், சோதிடருக்கு மேட இராசியை ஞாயிறு கடக்க எடுக்கும் காலம் 30 நாள்கள் அல்லது 30 பாகை நீளம்! இதனால் ஞாயிறு மேடராசியை மே 13 அன்று கடந்து விட்டாலும் சாதகம் கணிக்கும் சோதிடர் மே 18 வரை ஞாயிறு இன்னமும் மேடராசியில் இருப்பதாகவே எடுத்துக் கொள்வார். இவ்வாறு ஏனைய இராசிகளை ஞாயிறு உண்மையாகக் கடக்க எடுக்கும் காலத்துக்கும் சோதிடர்கள் ஞாயிறு கடப்பதாகக் கொள்ளும் காலத்துக்கும் வேறுபாடு ஏற்படுகிறது! ஞாயிறுக்குச் சொன்னது ஏனைய கோள்களுக்கும் பொருந்தும்.

இப்படியான குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் சோதிடத்தில் அளவு கணக்கே இல்லை!

நடைமுறையில் ஞாயிறு இராசிகளைக் கடப்பதில்லை என்றும் புவிக் கோள் ஞாயிறு என்ற விண்மீனைச் சுற்றி வருவது எங்கள் கண்ணுக்கு ஞாயிறு புவியைச் சுற்றுவது போன்ற மாயத் தோற்றத்தை (illusion) உண்டாக்குகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஞாயிறு, கோள்கள், இராசிகளைக் கடந்து செல்கிறது என்று எழுதுவதை புவி, இராசிகளின் பின்புலத்தில், ஞாயிறு விண்மீனைச் சுற்றி வருகிறது என்று பொருள் கொள்ள வேண்டும்!

உண்மையில் மனிதனைப் பாதிக்கும்; கோள் ஏதாவது உண்டென்றால் அது அவன் பிறந்த இந்தப் புவியாகத்தான் இருக்க வேண்டும்.

மனிதனது வாழ்க்கையை அவன் பிறந்த மண்ணும் அவனைச் சுற்றியுள்ள சூழலும் பாதிக்கின்றன. அவன் மூச்சுவிடும் காற்று, அவன் குடிக்கும் தண்ணீர், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வாழும் உறைவிடம், தட்ப வெட்பம் அவனை வெகுவாகப் பாதிக்கின்றன.ஆனால் சோதிடம் இந்தப் புவியை அறவே கைவிட்டு விட்டது. என்ன காரணம்?

Image result

(அ) புவி உருண்டை வடிவமாக இருப்பது,
(ஆ) புவி தனது அச்சில் 23½ பாகை சரிந்திருப்பது,
(இ) புவி தனது அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை
ஞாயிறையும் சுற்றிவருவது,
(ஈ) புவி செவ்வாய், புதன் போல் ஒரு கோள்.

போன்ற வானியல் உண்மைகள் சோதிடர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதுவே கோள்களின் பட்டியலில் புவி விடுபட்டதற்குக் காரணமாகும்.

புவி உருண்டை என்பது சோதிடர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதாலேயே புவியை இரண்யாட்சகன் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலில் ஒளித்து வைத்தான் என்ற புராணக் கதையைப் புராணிகர்கள் எழுதி வைத்தனர். கடலைப் பாயாகச் சுருட்டினான் என்றால் எதன் மீது நின்று சுருட்டினான்? புவியை எப்படிக் கடலில் ஒளிக்க முடியும்? கடல் புவியில்தானே இருக்கின்றது!

தட்டையான புவியை ஆதிசேடன் தாங்கிக் கொண்டு நிற்கிறான் என்று எழுதி வைத்தார்கள். அந்த ஆதிசேடனை யார் அல்லது எது தாங்கிக் கொண்டு நிற்கின்றது என்பதைப்பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை!

புவி ஞாயிற்றைச் சுற்றி வருவது மட்டுமல்ல அது 23½ பாகை அதன் அச்சில் ஒரு பக்கம் சாய்ந்து (ecliptic) இருப்பதோடு அதன் வடதுருவம். (North Pole) எப்போதும் ஞாயிறை நோக்கியே இருக்கும். இவை காரணமாகவே பருவங்கள் ஏற்படுகின்றன.

Image result for earth ecliptic

புவி ஞாயிறைச் சுற்ற 365 நாள்கள் எடுக்கிறது. எனவே ஒரு நாளைக்கு ஏறத்தாழ 1 பாகையை ஞாயிறு கடக்கிறது. 30 பாகை கொண்ட ஒரு இராசியைக் கடக்க 30 நாள்கள் எடுக்கிறது.

ஏப்ரில் 14 இல் ஞாயிறு மேட இராசியில் புகுகின்றது என்பதைப் பார்த்தோம். எனவே ஏப்பிரில் 14 தொடக்கம் மே 14 வரை பிறந்தவர்களுக்கும் பிறக்கப் போசிறவர்களுக்கும் கணிக்கப்படும் சாதகம் மேட இராசியில் சூரியன் நிற்பதாகக் காட்டும். அதில் மாற்றம் இருக்காது. வீடு மட்டுமே வேறுபடும்.

சந்திரன் ஒரு இராசியைக் கடக்க 2 ½ நாள் மட்டும் எடுக்கிறது. அதனால்தான் அதற்கு சோதிடத்தில் சூரியனைவிட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரில் 14 தொடக்கம் ஏப்பிரில் 16.5 வரை சந்திரன் ஒரே இராசியில் காணப்படும். வியாழன் ஒரு இராசியைக் கடக்க ஒரு ஆண்டு எடுப்பதால் ஒரு குறிப்பிட்ட ஆண்டு முழுவதும் பிறந்த அனைவருக்கும் வியாழன் நின்ற இரா

Image result for                           புவி மையக் கோட்பாடு)

கோள்களின் வேகம் (புவி – மையக் கோட்பாடு)சி ஒன்றாகவே இருக்கும். ஏனைய கோள்களும் அவ்வாறே.

ஞாயிறு குடும்பம்

கோள்கள்

சுற்றும் காலம் 

இராசியில் நிற்கும் காலம்

ஓர் ஆண்டில் அசைவு

சந்திரன் 

 28 நாள்கள்

 2 ½  நாள்கள்

  13 சுற்றோட்டம்
ஞாயிறு 

  1 ஆண்டு

 1 மாதம்

 360 பாகை
புதன்

  1 ஆண்டு

 1 மாதம்

 360 பாகை
வெள்ளி

  1ஆண்டு

 1 மாதம்

 360 பாகை
செவ்வாய்

 2 ஆண்டு

 2 மாதம்

 180 பாகை
வியாழன்

 12 ஆண்டு

 1 ஆண்டு

  30 பாகை
சனி

 30 ஆண்டு

 2 ½ ஆண்டு

  12 பாகை
யுறேனியஸ்

 90 ஆண்டு

 7 ½ ஆண்டு

   4 பாகை
நெப்தியூன் 180 ஆண்டு  15 ஆண்டு    2 பாகை
       

மேற்காட்டிய காரணங்களால் சோதிடம் அடிப்படையிலேயே பிழையான அடித்தளத்தில் எழுப்பப்;பட்டுள்ளது தெரியும். மேலும் சோதிடம் உண்மை சோதிடர்களே கணிப்பில் பிழைவிடுகின்றார்கள் என்பதில் எவ்வித உண்மையும் இல்லை.   (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

செய்மதிகள் கோள்களைச் சுற்றுகின்றன தமிழர்கள் நவக்கிரகங்களைச் சுற்றுகிறார்கள்!
(29)

எந்தப் புராணத்தையோ சாத்திரத்தையோ வேதத்தையோ வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அவற்றின் பொருளை ஆராய்ச்சி செய்துபாருங்கள். வேதகாலத்தவருக்கு  இமயமலைக்கு அப்பால் எதனையும் தெரிந்து கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. அது மாத்திரமல்லாமல் புராணிகர்களுக்கு கய்லாயமே இமயமலைதான். அது பனிக் கட்டியால் மூடியிருப்பதால் அதை வெள்ளியங்கிரி என்று அழைத்தனர். அந்தக் காலத்தில் அத்தனை உயரமலைக்கு யாரும் போகமுடியாமல் இருந்ததால் சிவனை அங்கு இருத்திவிட்டனர். உமையவளாகிய பார்வதி அந்த மலைக்குத்தான் பிறந்தாள் என்று கதை எழுதி வைத்துவிட்டனர்.  பிரமா அங்கு தான், ரிஷிகள் அங்குதான், தேவர்கள் அங்குதான், சொர்க்கம் அங்குதான் என்று எல்லாவற்றையும் அந்த மலையின் தலையிலேயே ஏற்றிவிட்டனர்.

அது மட்டுமா? நதியைப் பார்த்தால் அது ஒரு தேவதை. சமுத்திரத்தைப் பார்த்தால் அது ஒரு தேவதை. மழை ஒரு தேவதை, சூரியன் ஒரு தேவதை, சந்திரன் ஒரு தேவதை, நட்சத்திரம் ஒவ்வொன்றும் தனித்தனித் தேவதை. தொட்டதெல்லாவற்றுக்கும் தேவதை என்று பெயர்வைத்து ஒவ்வொன்றின் பேராலும் தமிழரது மடியில் கையை வைத்து கொள்ளையடிக்க வழி வகுத்துக்கொண்டனர்.

வேதகால ஆரியர்களது முட்டாள் தனம் தமிழர்களது உழைப்பையும் பணத்தையும் கொள்ளை அடிக்க அவர்களுக்கு உதவியாக இருக்கின்றது. ஆனால், பகுத்தறிவுவாதிகள் அந்த முட்டாள்த்தனத்தைக் கண்டிக்க முனையும் போது தமிழர்களே எதிர்க்கிறார்கள்.

இராவணன், சூரபதுமன், நரகாசுரன், இரணியன், மாபலி போன்ற தமிழரசர்கள் கொடியவர்களாகச் சித்திரிக்கப்பட்டு வஞ்சகத்தால் வீழ்தப்பட்டதை நாமே கொண்டாடி மகிழ்கிறோம்!

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த பாரதியார் அக்கிரகாரத்தில் பிறந்தும் அறிவுக்கும் முட்டாள்த்தனத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர். அவர் சுத்த அறிவொன்றே தெய்வம் என்கிறார்.

எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென்றோதி அறியீரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ?  – பல
பித்தமதங்களிலே தடுமாறிப் பெருமை அழிவீரோ?

பாரதியார் உண்மைக்கும் பொய்க் கதைகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்.  எனவேதான் ‘வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பிறகு நம்பு. புராணங்களை வேதங்களாக  நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளாதே” என்று கடிகிறார்.

புராணங்கள் என்ற தலைப்பில் பாரதியார் பாடியிருக்கும் பாடல் இது.

உண்மையின் பேர்தெய்வம் என்போம் – அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்,
உண்மைகள் வேதங்கள் என்போம் – பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்
கடலினினைத் தாவும் குரங்கும் – வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே – தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்
நதியி னுள்ளேமுழு கிப்போய் – அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த – திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் – ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் – அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்
கவிதை மிகநல்ல தேனும் – அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி – நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.  (பாரதியார் பாடல்கள்)

யூலை 14 ஆம் நாள் நாளேடுகளில் ஒரு செய்தி வந்தது. தமிழ்மொழி ஊடகங்கள் அந்தச் செய்தியைப் பெரும்பாலும் இருட்டடிப்புச் செய்து விட்டன. அந்தச் செய்தியின் தலைப்பு “நீருடன் உள்ள கோள் – சூரிய மண்டலத்திற்கு வெளியே முதன்முதல் கண்டுபிடிப்பு” என்பதாகும்.

உயிர் வாழ்வதற்கு ஓர் அடிப்படைத் தேவையான நீர் உள்ள கோள் (கிரகம்) ஒன்று, சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருக்கிறது என்பதை வானியலாளர்கள் தெரியப்படுத்தினர்.

நீரைப் பெற்றிருக்கிற இந்தக் கோள் வேதி (ரசாயன) எரி பொருள்களைக் கொண்டு நாம் செலுத்தும் ஏவுகணைகள் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறது, வாழ்வதற்குப் பொருத்தமற்றதாகவும் உள்ளது. அதில் பாறையில்லை. வாயுதான் இருக்கிறது. அதில் உள்ள வெப்பநிலை எஃகுவை உருக்கத்தக்கதாகும்.  அதனால் அதிலிருக்கும் நீர், மிகுவெப்ப நீராவியாக மாறிவிடுகிறது.

இந்தக் கோளுக்கு (கிரகத்திற்கு) 189733டி எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. சூரிய மண்டலத்தில் சுற்றிவரும் வியாழ கோளைவிட 15 விழுக்காடு பெரிதாக இந்தக் கோள் இருக்கிறது.

உல்பெகுலா (நரி) எனும் பெயரைக்கொண்ட நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஒரு நட் சத்திரத்தைச் சுற்றி இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோள் சுற்றுகிறது. சூரியனைப் போன்று தானே ஒளி விடும் விண்பொருள் நட்சத்திரம் (உடு) என்றும், நட்சத்தி ரத்தில் இருந்து ஒளியைப் பெற்றுப் பிரதிபலிக்கும் விண் பொருள் கோள் (கிரகம்) என் றும் அழைக்கப்படுகின்றன. கோள்கள் ஏதாவது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன.

அய்ரோப்பிய விண்வெளி முகாமை  மற்றும் இலண்டனில் உள்ள பல்கலைக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த குழு, ஜியோவன்னா டினட்டி என்பவரின் தலைமையில் இந்தக் கோளைக் கண்டுபிடித்ததாக பிரித்தானிய அறிவியல் வார இதழான  Nature (இயற்கை) தெரிவிக்கின்றது.

Image result for HD 189733b

HD 189733b எனும் இந்தக் கோள், அது சுற்றிவரும் நட்சத்திரத்தின் ஒளியைப் பிரதி பலித்தபொழுது உண்டான ஒளிச் சிதறல், அதன் வெளிப் பகுதியில் நீர் இருப்பதைக் காட்டியது.  

சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள உலகங்கள் முதன் முதலில் 1995 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 245 உலகங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. மாதம் ஒன்றிற்கு மூன்று அல்லது நான்கு வீதம் அவற்றின் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன என்று “சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள கோள்களின் கலைக்களஞ்சியம்’’ கூறுகிறது.

இந்தக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அந்தக் கோள்கள் அவற்றின் நட்சத்திரங்களின் ஒளியைப் பிரதிபலிக்கும் பொழுது, அந்த ஒளியில் ஏற்படும் அசைவைக் கொண்டு நிகழ்ந்தவை ஆகும். இந்த ஒளி ஊசலாட்டம், கோளின் அளவு, சுற்றுப்பாதை, வெளி மண்டலம் ஆகியவற்றின் தன்மைகளைப்பற்றித் தெரிவிக்கிறது.

HD 189733b எனும் கோளுக்கும் அதன் நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள தொலைவு, புவிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 30 மடங்கு குறைவு ஆகும். அதன் காரணமாக இந்தக் கோளின் வெளிமண்டல வெப்பம் 2000 பாகை  செல்சியஸ் (3000 பாகை  Farenheit ) ஆக இருக்கிறது.

நீரை எப்பொழுதும் ஆவி நிலையில் வைக்கும் மிகு வெப்பமோ, அதை எப்பொழுதும் உறை நிலையில் இருத்தும் மிகு குளிரோ அற்ற நீர்ம (திரவ) நிலையில் நீரை வைத்திருக்கும் நமது பூமியை ஒத்த வெப்ப நிலையை உடைய கோள் ஒன்றினைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடை பெறுகிறது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் நாள் வான்வெளியை ஆராய HD 189733b என்ற செய்மதியை யப்பான் அண்டவெளி ஆராய்ச்சி முகாமை (Japan Aerospace Exploration Agency) அய்ரோப்பா அண்டவெளி முகாமையோடு இணைந்து விண்ணுக்கு ஏவியது. இதன் நோக்கம் பால்மண்டலங்கள், உடுக்கள், கோள்கள் ஆகியவற்றின் உருவாக்கம் மற்றும் உருமலர்ச்சி பற்றி ஆழமாக அறிந்து கொள்வதாகும். இந்தச் செய்மதியில் பொருத்தப்பட்டுள்ள தொலை – சிவப்பு அளவை (Far=Infrared Surveyor)   கருவி சிவப்பு அலைவரிசையில் (infrared wavelengths 60,90 and 140 microns )   முன் எப்பொழுதும் இல்லாதவாறு எமது பால் மண்டலத்தின் அயல் மண்டலமான The Large Magellanic Cloud (LMC), or Nubecula Major)  துல்லியமாகப் படம் பிடித்து அந்த வியத்தகு படிமங்களை (images) பூமிக்கு அனுப்புகிறது. அந்த படிமங்கள் – பல உடுக்கள் (நட்சத்திரங்கள்) இப்போதும் உருவாகுவதைக் காட்டுகிறது.

இந்தப் பெரிய மகெல்லானிக் முகில் 160,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் (வானியல் அளவுப்படி இது மிகவம் அண்மித்த தொலைவாகும்) உள்ளது. இந்த உடுமண்டலத்தில் (படயஒல) 10 ஆயிரம் மில்லியன் (ஆயிரம் கோடி) நட்சத்திரங்கள் இருக்கின்றன. எமது பால் வெளிமண்டலத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை பத்தில் ஒன்றாகும்.

கடந்த ஏப்பிரில் மாதம் எங்களது சூரிய மண்டல முறைமைக்கு அப்பால் புவியைப் போன்ற ஒரு கோளை வானியலாளர்கள் கண்டு பிடித்தார்கள். இந்தக் கோள்  Gliese  581 என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதால் அதற்கு Gliese 581c என்று பெரிட்டுள்ளனர். இந்த நட்சத்திரம் எமது புவிக்கு 20.5 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இந்தக் கோள் புடநைளந 581c  நட்சத்திரத்தை மிக அணிமையில் (ஞாயிறைச் சுற்றிவரும் புதன் கோளைவிட அணித்தாக) சுற்றி வருகிறது. கிட்டத்தட்ட நாம் வாழும் புவியை ஒத்த தட்பவெப்பம் இந்தக் கோளில் இருப்பதாக வானியலாளர்கள் கூறுகிறார்கள். அளவில் எமது புவியை விட 50 விழுக்காடு பெரியது.

தமிழர்கள் இந்த வியத்தகு அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. “பூ இவ்வளவுதானா? எங்கள் முருகன் தன்னந்தனியே மயிலில் உலகத்தைச் சுற்றி வந்தவர்” எனத் தம்பட்டம் அடிக்கிறார்கள். அல்லது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இராவணன் புட்பக விமானத்தில் ஒவ்வொரு நாளும் கயிலைக்குப் பறந்து சென்று சிவபெருமானைக் கும்பிட்டு வந்தவன் எனக் கூறுகிறார்கள்.

மேற்குலக வானியலாளர்கள் எமது ஞாயிறு மண்டலத்தைச் சுற்றிவரும் கோள்களை ஆராய ஏவிய செய்மதிகள் அவற்றைச் சுற்றிவருகின்றன. தமிழனோ நவகோள்களைச் சுற்றிக் கொண்டு இருக்கிறான்.

சோதிட சிகாமணிகளும் வானியல்பற்றி அறிந்து கொள்ள எத்தனிப்பதில்லை. சோதிடர்கள் ஒரே சாதகத்தைப் பார்த்து எதிர்மாறான பலன்களைச் சொல்வதையிட்டு கவலைப்படுவதில்லை. ஒரு குழந்தை பிறந்த நேரத்தைக் கணிப்பதில் ஏற்படும் குழப்பங்கள் பற்றிக் கிஞ்சித்தும் வெட்கப்படுவதில்லை.

‘என்னுடைய வாழ்க்கையில் எனது சாதகத்தில் சொன்னபடி, எனது கைரேகை சாத்திரம் சொன்னபடி எல்லாம் அச்சொட்டாக நடக்கிறது ‘ என்று சொல்லும் ஏமாளிகளும் கோமாளிகளும் நிறைய இருக்கு மட்டும் சோதிடர்கள் எதற்காகக் கவலைப் படவேண்டும்? எதைப்பற்றிக் கவலைப் படவேண்டும்? (வளரும்)


சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்!

சனிக் கோள் சோதிடர்களுக்கு காசு காய்க்கும் மரம்!
(30)

சோதிட சாத்திரத்தில் அறிவியலின் அம்சங்கள் சில காணப்படுவது உண்மையே. எடுத்துக்காட்டாக கணக்கு, சிக்கலான வரைபடங்கள் (complicated  diagrams) மற்றும் தனித்துவமான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும் சோதிடம் ஒரு போலி அறிவியல் (pseudo – science)  என்பதில் எந்த அய்யமும் இல்லை. அறிவியலாளர்கள் அளவைகளை (measurements ) கட்டுப்பாடான ஆய்வுகள் மூலம் நிறுவுகிறார்கள்.

சோதிடர்கள் தங்கள் சித்தாங்கங்களை எண்பிக்க எந்த ஆய்வுகளையும் மேற்கொள்வதில்லை. மாறாக சிலருக்குத் தாங்கள் சில சமயம் சொல்லிய சில பலன்கள் சரியாகப் பலித்ததாகச் சொல்லுபவர்களின் கதைகளையே சான்றாகக் காட்டுகிறார்கள். பலசமயம் சொல்லிய பல பலன்கள் பலிக்காது போன கதைகள் அம்பலத்துக்கு வருவதில்லை. பாமர மக்களும் நூறு பலன்கள் சொல்லி அதில் ஒன்றிரண்டு குருட்டுத்தனமாகப் பலித்தால் சோதிடம் உண்மை என நம்பிவிடுகிறார்கள். மிகுதிப் பலன்கள் பலிக்காமல் போனதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

சோதிடர்கள் அவர்களது வாழ்நாளில் ஒருபோதும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தியது கிடையாது. உடுக்கள், கோள்கள், உடுமண்டலங்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்வதே கிடையாது. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் இன்னமும் பரசாரர், வராஹமிகிரர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சோதிடர்கள் அறிவியலாளர்கள் கண்டு பிடித்த கணினி மூலம் கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இருக்கை, ஓட்டம் போன்றவற்றை அறிந்து கொள்கிறார்கள். பல நாட்கள் எடுத்துக் கையால் கணித்த சாதகங்களை இன்று கணினி இரண்டு வினாடியில் கணித்துப் பலனும் சொல்லிவிடுகிறது!

இப்போது தமிழ் ஊடகங்களில் சனிப் பெயர்ச்சி பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. சோதிடர்கள் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பொறுததளவில் சனிக் கோள் காசு காய்க்கும் மரமாகும்!

Image result for solar system planets

பாமர மக்கள் மட்டுமல்ல படித்த முட்டாள்களும் சனிப் பெயர்ச்சி என்றால் சனீஸ்வரன் மூட்டை முடிச்சுக்களை எல்லாம் கட்டிக்கொண்டு தன் குடும்பத்தோடு அடுத்த வீட்டுக்குக் குடி பெயர்ந்து போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

எமது சூரிய குடும்பம் தோன்றி அண்ணளவாக 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. அன்று தொட்டு இன்றுவரை சனிக் கோள் ஞாயிறைச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் நானூறு கோடி ஆண்டுகளாவது தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கும்.

சனிக் கோள் மட்டுமல்ல ஏனைய கோள்களும் (8) ஞாயிறை மணிப்பொறிக்கு எதிர்த்திசையில் தங்களது சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டு வருகின்றன. அப்படிச் சுற்றிக் கொண்டு வரும்போது தத்தமது அச்சில், வெள்ளிக் கோள் நீங்கலாக, மணிப்பொறிக்கு எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கின்றன. வெள்ளி மணிப்பொறிக்கு ஒத்த திசையில் சுற்றுகிறது. சனிக் கோளே புவியில் உள்ள மனிதர்களது ஊனக் கண்ணுக்கு வான்வெளியில் தெரியும் கடைசிக் கோளாகும்.

சனிக் கோள் உரோமர் மற்றும் கிரேக்கர்களது வேளாண்மைக் கடவுளாக (Agricultural god) வழிபடப்பட்டது.

எல்லாக் கோள்களும் நீள்வட்டத்தில் சாய் கோணத்தில் சுற்றுகின்றன. கோள்களில் புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய கோள்கள் பாறைகளினால் ஆனவை. வியாழன், சனி, நெப்தியூன், யூரேனுஸ் ஆகிய கோள்கள் வாயுவினாலும் ஆனவை.

சோதிட சாத்திரமும் சோதிடர்களும் சனிக் கோளை கெட்ட கோளாகச் சித்திரிக் கிறார்கள். திட்டும் போது கூட “சனியனே” என்று திட்டுவது அந்தக் கோளைப் பற்றிய மக்களது வெறுப்பைக் காட்டுகிறது. சனிக் கோளை கருப்பு நிறமாகவும் நால் வருணததில் கடைசி வருணமான சூத்திரனாகவும முடவனாகவும் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் குரூர புத்தியுடைய வில்லனாகவும் சோதிடர்கள் வருணிக்கிறார்கள்.

நல்லவர்களை விடக் கெட்டவர்களுக்குப் பயப்படுவது மனித இயல்பாகும். கடவுளுக்குப் பயப்படாதவர்கள் கூட சனிக்குப் பயப்படுகிறார்கள். சனீசுவரனின் வாகனம் காகம். தானியம் எள்ளு (அதுதான் எள்ளெண்ணைச் சட்டி எரிப்பதற்குக் காரணம்) கலி, காரி, முடவன் என்றும் சனிக்குப் பல பெயர்கள் உண்டு.

ஓடிப் போனவனுக்கு 10 ஆம் இடத்தில் குரு அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி என்ற பழமொழி இருக்கிறது.

சனியை ஏன் முடவன் என்று இழிவு படுத்துகிறார்கள்? அதற்கொரு புராணக் கதை இருக்கிறது. இராவணனின் மகன் இந்திரஜித்து மிகப் பெரிய வீரன். இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி இராவணன் கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீசுவரனை பதினோராம் வீட்டில் (வெற்றியைத் தரும் வீடு) இருக்க முகூர்த்தம் குறிக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தைத் துண்டித்து விட்டான்.

ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி (8 இல் சனி சஞ்சாரம் செய்தால் சிறைத் தண்டனை பெறப் பலன் உண்டு) மங்கு சனி, பொங்கு சனி எனச் சனிக்குப் பல பெயர்கள் உண்டு. சனியின் பார்வை கொடியது. நீண்ட கால வாழ்வுக்கும் மரணத்திற்க்கும் காரகன் சனி. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்ணெய், கருமைநிறம் இவைகளுக்கும் சனி காரகன். ஒருவரது சாதகத்தில் சனி 8 ஆவது வீட்டில் காணப்பட்டால் அது மரணத்தைக் குறிக்கும். ஒருவரது சாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும்.

ஜாதக பாலதீபகை என்பது வடமொழியில் மந்திரேசுவரர் என்பவரால் எழுதப்பட்ட சோதிட நூல். வராஹமிகிரர், ஸ்ரீபதியத்ததி, ஸாராவளி ஆகியவற்றுக்கு விளக்கம் கூறும் ‘அற்புத’ நூல். இந்த நூலை பிரம்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதில் பாப கிரகமான சனிக் கிரகத்தைப் பற்றி எழுதியிருப்பதை இப்போது (பக்கம் 45) படியுங்கள். படித்து விட்டு அழுவதா சிரிப்பதா என்பதை நீங்களே முடிவு கட்டுங்கள்.

சனி – ஒரு கால் நொண்டியும் ஆழத்திலிருக்கும் கண்ணுள்ளவனும் இளைத்த சரீரமுள்ளவனும் நீண்டவனும் நரம்படர்ந்தவனும் சோம்பலுள்ளவனும், கறுத்த அங்கங்களுள்ளவனும் வாயு நிறைந்தவனும் அதிகம் கோள் சொல்பவனும் சிறுநரம்படர்ந்தவனும் தயவற்றவனும் பிடிவாதக்காரனும் ஸ்தூலமான நகம், பல் இவையுள்ளவனும் கடினமான ரோமம் அங்கம் இவையுள்ளவனும் அசுத்தனும் தாமஸ ஸ்வபாவமுள்ளவனும் பயங்கரனும் கோபத்தைப் பிரதானமாய்க் கொண்டவனும் கிழத்தனம் வாய்நதவனும் கறுத்த வஸ்திரமுளவனுமாவான்.

பயப்பட வேண்டாம். இவற்றில் ஒரு துளி கூட உண்மையில்லை. எல்லாம் சோதிடர்களின் புலுடா! சோதிடர்கள் சொல்வது போல் சனி தெய்வம் அல்ல, மனிதன் அல்ல, நொண்டி அல்ல. அது வாயுவினால் ஆன ஒரு கோள்!

சனிக் கோள்பற்றி வானியலாளர்கள் தரும் தரவுகளை இப்போது பாருங்கள்.
சூரியனில் இருந்து 6 ஆவது தொலை இடத்தில் இருக்கும் சனிக் கோள் பற்றிய விளக்கம் அதனை ஆய்வு செய்த வோயேஜ்ஜர் விண்கலம் அனுப்பிய (1980 – 91) தரவுகளால் கிடைக்கப் பெற்றவை ஆகும். சனி ஒரு நீள்வட்டத்தில் 9,500 மில்லியன் மைல் தொலைவில் தனது அச்சில் தன்னைத்தானே சுற்றியவாறு சூரியனைச் சுற்றி வருகிறது. சனி தன்னைச் சுற்ற எடுக்கும் காலம் 10 மணி 39 வினாடியாகும். அது சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் 29.5 புவி ஆண்டுகளாகும்.

இரண்டாவது பெரிய கோளான சனி 88 விழுக்காடு நீரக வாயு (hydrogen) மற்றும் 11 விழுக்காடு ஹீலியம் (helium) வாயு ஆகியவற்றால் நிறைந்துள்ளது. நடுக் கோட்டில் சனியின் விட்டம் 75,000 மைல் (119,300 கிமீ) ஆகும். துருவ விட்டம்  [Polar Diameter]  66,000 மைல் ஆகும். சனி எமது புவியை விட 8,000 மடங்கு ஆற்றல் வாய்ந்த காந்த களத்தை உடையது.

துருவங்கள் சற்றுச் சப்பையான உருண்டை வடிவத்தில் இருக்கின்றன. பூமியில் உள்ள நவீன தொலைநோக்கி மூலம் பார்த்தாலும் சனிக் கோளின் ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளிக்கு மேல் ஆராய முடியாது.

சனியின் மேகக் கூட்டங்களின் வெப்பம் -176 பாகை ஊ. நடுக்கோட்டில் மத்திம ரேகைக் காற்று  Equatorial   Winds அடிக்கும் வேகம் மணிக்கு 1060 மைல்!

நாசாவின் வானியலாளர் னுச.டுiனெய ளுpடைமநச  என்பவர் ஒரு இராட்சத தொட்டியை எம்மால் உருவாக்க முடியும் என்றால் அதில் சனிக் கோள் மிதக்கும் என்கிறார்.

சனிக் கோள் ஞாயிறைச் சுற்றிவருகிறது என்பதை மேலே பார்த்தோம். 360 பாகை கொண்ட இந்த வான்வெளி வட்டத்தை சனிக் கோள் சுற்றிவர 29 ஆண்டு 7 மாதங்கள் எடுக்கிறது. அதாவது 360 மாதங்களில் மாதம் கிட்டத்தட்ட ஒரு பாகை என்ற கணக்கில்) ஒரு சுற்றை முடிக்கும். சனிக் கோள் ஒரு இராசியின் 30 பாகைகளைக் கடந்து அடுத்த இராசியின் எல்லைக்குள் நுழைவதைத்தான் சோதிடர்கள் சனிப் பெயர்ச்சி என அழைக்கிறார்கள்.

ஞாயிறைச் சுற்றி வரும் மற்றக் கோள்களும் அவற்றின் வேகத்தைப் பொறுத்து (அத்தியாயம் 28) ஒவ்வொரு இராசி வீட்டையும் கடந்து செல்கின்றன. ஆனால் சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி இரண்டுக்குமே சோதிடம் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறது.

கடக இராசியில் சுமார் இரண்டரை ஆண்டு;களுக்கு முன்பு நுழைந்த சனிக் கோள் அந்த இராசியின் முழுத் தூரத்தையும் (30 பாகை) கடந்து இப்போது 121 ஆவது பாகையில்  தொடங்கும் சிம்ம இராசிக்குள் புகுந்துள்ளது. (இராசிகள் ஒவ்வொன்றையும் 30 பாகையாகப் பிரித்ததற்கு வானியல் அடிப்படை இல்லை என்பதை ஏற்கனவே 28 ஆவது அத்தியாயத்தில் விளக்கியுள்ளேன்)

சனிக்கோள் பெயர்ச்சி எந்த நேரத்தில் இடம்பெறுகிறது என்பதில் சோதிடர்களிடம் ஒத்த கருத்தில்லை. இது வழக்கமான சங்கதி என்பது உங்களுக்குத் தெரியும்.

புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு கோயிலின் அதிகாரபூர்வ அறிக்கை சனிப் பெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கப்படி) வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் (அதாவது ஆடி மாதம் 20 ஆம் நாள்) சனிப் பெயர்ச்சி என்று கூறுகிறது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் (Based on the Indian Ephemeris)சனிப் பெயர்ச்சி கடந்த யூலை 16 ஆம் நாள் திங்கட்கிழமை காலை 4.46 (இந்திய நேரம்) மணிக்கு இடம்பெற்றுவிட்டது எனக் கூறுகிறது! அடுத்த சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி யூலை 17 இல் பிறந்த குழந்தையின் சாதகத்தில் சனி சிம்மராசியில் Sa = Saturn  இருப்பதைக் கவனியுங்கள். (வளரும்)


About editor 3020 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply