“தண்ணீரே வராத காவிரியில் மஹா புஷ்கரம் எதற்கு?” – எதிர்க்கும் ஆதீனம்
காவிரியில் தண்ணீரே வராமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்க, காவிரி மஹா புஷ்கரம் கொண்டாட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. செப்டம்பர் 12-ம் தேதி துவங்கும் இந்த மஹா புஷ்கரத்துக்கு தமிழக அரசு கொடுத்து வரும் ஆதரவும், திருப்பனந்தாள் ஆதீனம் எழுப்பும் எதிர்ப்பும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
144 ஆண்டுகளுக்குப் பிறகு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரம் கொண்டாடப்பட உள்ளதாக சுவாமி இராமானந்தா தலைமையிலான புஷ்கர கமிட்டி அறிவித்துள்ளது. இதற்கு, திருப்பனந்தாள் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாமுனிவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரைச் சந்தித்தோம்.
“நதிகளின் தீர்த்தம், திருக்குளங்களில் தீர்த்தம் என்பதுதான் மரபு. குடகுமலையில் உற்பத்தியாகி பூம்புகார் கடலில் கலக்கும் வரை, காவிரி ஆற்றில் நீர்நிறைந்து அதில் புஷ்கரம் கொண்டாடினால் சரி. ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் பூமி வழியாக கங்கை நதி வந்து நீராடி, தனது பாவங்களைப் போக்குவதாக ஐதீகம். இப்போது காவிரியில் தண்ணீர் இல்லை. விழாக் கமிட்டியினர், காவிரியில் போர்வெல் போட்டு பூமியிலிருந்து தண்ணீர் எடுத்து நீர்நிரப்பி புஷ்கரம் கொண்டாட உள்ளார்கள். பூமியிலிருந்து நீர் எடுத்தால் அது கங்கை நீர்தானே? அது எப்படி காவிரி தீர்த்தமாகும்? 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் கிருஷ்ணா, கோதாவரி நதிகளில் மஹா புஷ்கரம் கொண்டாடினார்கள்.
அதன்படிதானே காவிரியிலும் கொண்டாடமுடியும். இவர்கள் கூற்றுபடி, 144 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா புஷ்கரம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வேத, ஆகம விதிகளைப் பின்பற்றாமல், யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது சரியல்ல” என்றார்.
ஆனால், புஷ்கரப்பணியை ஆதீனம்தான் தொடங்கி வைத்ததாக விழா கமிட்டி கூறுகிறது. “கடந்த மாதம் கும்பகோணம் காவிரிக்கரையில் புஷ்கரப் பணியை ஆதீனம் தொடங்கி வைத்தார். அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது’’ என்கிறார்கள் அவர்கள். இதுபற்றி ஆதீனத்திடம் கேட்டோம்.
“கும்பகோணம் சக்கரப்படித்துறை காவிரியில் மழை வேண்டி ஹோம பூஜை நடத்தினோம். அது புஷ்கரத்துக்காகச் செய்யப்பட்டதல்ல. அவர்களாகவே எல்லாவற்றையும் முடிவுசெய்து அழைப்பிதழை மட்டும் கொடுத்தார்கள். ‘கலந்துகொள்ள வாருங்கள்’ என என்னை அவர்கள் அழைக்கவுமில்லை; நான் வருவதாக ஒப்புக்கொள்ளவுமில்லை. புஷ்கர விழாவின் குளறுபடிகளைப் பற்றி தகுந்த ஆதாரங்களுடன் வேத புலவர் மகாதேவன் என்பவர் அனைத்து ஆதீனகர்த்தர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அது, எனக்கும் வந்திருக்கிறது. மகாதேவனின் கருத்துகளில் தவறு இல்லை” என்றார்.
புஷ்கரப் பணிகளைப் பார்வையிட மயிலாடுதுறை வந்த புதுவை ஓங்கார ஆசிரம மகாதிபதி சுவாமி ஓங்காரநந்தாவிடம் பேசினோம். “ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் மகம் வருகிறது, கொண்டாடுகிறோம். அதுவே 12 ஆண்டுகளுக்குப்பின் வருவதைத்தானே மகாமகம் என கும்பகோணத்தில் நடத்துகிறோம். அதுபோலதான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவிரியில் நடத்தப்படுவது புஷ்கரம். அதுவே, 144 ஆண்டுகளுக்குப்பின் வந்தால் அது மஹா புஷ்கரம். கடந்த மஹா புஷ்கரம் கண்டவர்கள் இன்றில்லை. இப்போது காணப்போகும் நாம், அடுத்த மஹா புஷ்கரத்துக்கு இருக்கப்போவதில்லை. எனவே, கண்டதைக் குழப்பிக்கொள்ளாமல் மஹா புஷ்கரத்தில் காவிரியில் நீராடி எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்றிட வேண்டும்” என்றார்.
புஷ்கர கமிட்டித் துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியனிடம் பேசியபோது, “சுவாமி இராமானந்தா தலைமையில் புஷ்கர கமிட்டி அமைத்ததும், காஞ்சிப் பெரியவரைச் சந்தித்து ஆலோசித்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றபின்பே புஷ்கரப் பணிகளைத் தொடங்கினோம். அதுபோல், தர்மபுரம், திருவாவடுதுறை ஆதீனங்களையும் நேரில் சந்தித்தோம். திருப்பனந்தாள் ஆதீனத்தை மகாலெட்சுமி தலைமையிலான குழு சந்தித்து, அழைப்பிதழை முறையாகக் கொடுத்தது. கடந்த மாதம், கும்பகோணம் காவிரிக்கரையில் புஷ்கரப் பணிகளுக்கு முன்னோட்டமாக திருப்பனந்தாள் ஆதீனம் தலைமையில் யாகபூஜை நடந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன். இவ்வளவு நடந்திருக்கும்போது, ஆதீனகர்த்தர்களைக் கலந்து ஆலோசிக்காமல் தான்தோன்றிதனமாகக் கமிட்டி செயல்படுகிறது என்று கூறுவது தவறு.
கடந்த ஆண்டு சந்திரபாபு நாயுடு தலைமையில், ஆந்திர அரசு சார்பில் கிருஷ்ணா நிதியில் 144 ஆண்டுகளுக்குப்பின் மஹா புஷ்கரம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். அதுபோலதான் காவிரியிலும் கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் மிகவும் புனிதமான இடமாகும். இப்போது, அங்கு 12 ராசிகளுக்குரிய 12 கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாகத்தான் போர்வெல் அமைத்து நீர் நிரப்பியிருக்கிறோம். அதேநேரம், புஷ்கர விழாவுக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி பிரதமருக்கும், கர்நாடக முதல்வருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். சிலர் புஷ்கர விழாவைத் தடை செய்யக்கோரி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். ‘காவிரியில் புஷ்கரம் நடத்தத் தடையில்லை’ என்று தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து புஷ்கர விழா நடைபெறும்” என்றார் உறுதியாக.
– மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார்
Leave a Reply
You must be logged in to post a comment.