குருப் பெயர்ச்சியால் தோசம் ஏற்படுகிறதா? பணம் பறிக்கவே அப்படிச் சோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள்!
திருமகள்
கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டால் போதும். இஸ்லாமியர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மசூதிக்குப் போய் தொழுதால் போதும். ஆனால் இந்துக்கள் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் அல்ல ஆண்டில் 365 நாட்களும் கோயிலுக்குச் சென்று கும்பிடுகிறார்கள்.
தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடித் திருத்திகை, ஆவணி மூலம், புரட்டாசி சனி, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை விளக்கீடு, மார்கழி திருவம்பாவை எல்லாம் கோயில் விழாக்கள். இவற்றை விட கொடியேற்றம், சப்பரம், தேர், தீர்த்தம், பூங்காவனம், மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, முக்களி உற்சவம், ஆடி அமவாசை, மகாசிவராத்திரி, இராம நவமி, குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நவராத்திரி, சதுர்த்தி என ஆண்டு முழுதும் திருவிழாக்கள். இவற்றுக்கும் அப்பால் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி என்று ஆண்டு முழுதும் பரிகார தோசங்கள்.
உலகில் எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் தமிழ்நாட்டில் தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 38,529 கோயில்கள், அவற்றின் சொத்துகள் இந்து அறநிலைத் துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றில், 36,488 கோயில்களுடன், 17 சமணத் கோயில்களும் அடங்கும். பண்டய காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பண வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது.
ஆகமத்திற்குப் புறம்பாக 77,450 கோயில்களை பொது மக்களுக்கு இடையூறாக, பொது இடங்கள் மற்றும் நடை பாதையில் கோயில் கட்டுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சாதனை படைத்திருக்கிறது.
கோயில்களை கட்டி மக்களின் மூடநம்பிக்கைகளை மூலதனமாக்கி அவர்களிடம் இருந்து காசு, பணம் பறிக்கும் தந்திரம் சாணக்கியர் அல்லது கவுடில்யர் (கிமு 350 – கிமு 283) காலத்தில் இருந்து வருகிறது. மவுரிய வம்சத்தைத் துவக்கியவர் சந்திரகுப்த மவுரியர். சந்திரகுப்த மௌரியரின் அரசியல் குரு சாணக்கியர்.
சந்திரகுப்த மவுரியரின் அரசவையில் சாணக்கியர் என்ற பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். யுகம் தாண்டி – எல்லை தாண்டி ஆட்சி அதிகாரங்களில், மக்களின் அன்றாட வாழ்க்கையின் சுவடுகள் அனைத்திலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் தனது ஆளுமையை உரத்த குரலோடு இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான அமைப்புக்கள் மேற்பார்வை செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும் ஊர்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் வரும்படிகளையும் கோவில்களுக்குப் பக்தர்களிடமிருந்து பணமாக அறவிட்டு, அப்படி அறவிடும் பணத்தையும் அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன. மேலும் மக்களை ஏமாற்றி அரசாங்கத்திற்குப் புதிய வருவாய் பெறுவதற்கும் பல திட்டங்கள் இருந்தன.
ஓர் இரவில் பொது மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுள் சிலையை ஓரிடத்தில் வைத்து அது தானாகத் தோன்றியது என்று பரப்புரை செய்து அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள், தோசங்கள் விலகுமென்று கூறி, திருவிழாக்கள் முதலியன நடத்தி அதன் மூலம் பணம் திரட்டி கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.
அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாகப் பொதுமக்களிடம் பயத்தை ஏற்படுத்தி விட வேண்டும். பிறகு அதை விரட்டவும் திருப்தி செய்யவும் பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகையை அறவிட்டு கருவூலத்தில் சேர்த்துவிட வேண்டும்.
அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணத்தை அறவிட வேண்டும். இதனால் பிசாசு நகரத்தை விட்டுப் போய் விடுகிறது பணம் அரசரது கருவூலத்தில் சேருகிறது. அந்த காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்க வேண்டும். மேலும் சாணக்கியர் கூறியிருப்பதாவது:
(1) அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரத்தில் பால் வடிகிறது, ஒரு கிணற்றில் அனேக தலைகளை யுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் அறவிடலாம்.
(2) இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத சனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும் பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்துமயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் காரணம் என்றும் சொல்ல வேண்டியது.
(3) தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது கருவூலத்தில் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டு பணம் அறவிட ஒரே இரவில் தேவதைகளையும் பீடங்களையும் நிறுவி திருவிழாக்கள் நடத்த வேண்டும்.
சாணக்கியர்கள் சொல்லிக் கொடுத்த தந்திரங்களை அரசர்களுக்குப் பதில் இன்று கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் முதலாளிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு வேற்றுமை, அறவிட்ட பணம் அரசர்களது கருவூலத்துக்குப் போகாமல் அர்ச்சகர்கள், கோயில் முதலாளிகள் பைக்குள் போகிறது. கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள கோயில்களில் 98 விழுக்காடு ஆகமமுறைப்படி கட்டப்படவில்லை. சைவக் கோயில்களை பொறுத்தளவில் மூன்று வகையான கோயில் கட்டிடக் கலை வளர்ந்து வந்திருக்கிறது.
(அ) குடைவரை, (ஆ) சிற்பக் கோயில்கள், (இ) கற்றளி
குடைவரையும் சிற்பக் கோயில்களும் பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்தில் தோன்றி வளர்ந்தவைகள். அதாவது கிபி 5 ஆம் நூற்றாண்டு முதல். கற்றளி என்பது பல்லவ பேரரசின் இடையிலும் பிற்கால சோழர் காலத்திலும் வளர்ந்த கட்டிடக் கலை. இதில் குடைவரை என்பது பாறையைக் குடைந்து கோயிலாக வடிக்கும் தொழில் நுட்பம். சிற்பக் கோயில் என்பது ஒரு முழுப் பாறையை கோயிலாக வடிக்கும் தொழில் நுட்பம். கற்றளி என்பது சதுரமாக அறுக்கப்பட்ட பாறைக் கற்களை கொண்டு கோயில் கட்டும் தொழில் நுட்பம்.
கோயில்கள் கணித, வேத, ஆகம, சிற்ப விதிகளுக்கு அமையக் கட்டப்பட வேண்டும். கோவில்களை எப்படிக் கட்டுவது, எவ்வகை நிலப்பரப்பைத் தேர்ந்தெடுப்பது, அளவு, கட்டுவதற்கு ஏற்ற இடம் போன்றவற்றை முறைப்படி பின்பற்ற வேண்டும். கோயில் அமைவதற்கு பல இடங்களில் “பூ பரிட்சை” நடத்தபட்டு அதன் பின்னரே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும்.
சிவா விஷ்ணு கோயில் அமைப்பது பற்றி சைவ ஆகமத்திலோ வைண ஆகமத்திலோ எதுவும் சொல்லப்படவில்லை. இருந்தும் விதியை மீறி இன்று உலகம் முழுவதும் சிவா விஷ்ணு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
சிவன் விஷ்ணுவையாவது நாம் புராணங்களில் படித்திருக்கிறோம். ஆனால் இன்று ஸ்ரீரடி சாய்பாபாவுக்கு ஆகம விதிகளை மீறி புராணகால கடவுளுக்கு இணையான இடம் கிடைத்துள்ளது. ஐயப்பசாமி கோயில்களும் ஆகம மீறல்தான். ஐய்யப்பன் வழிபாடு 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. ஐயப்னை பூசை செய்வதற்கு என்ன மந்திரத்தை எப்போது அர்ச்சகர்கள் கற்றுக் கொண்டார்கள்? அதிகபட்சமாக தாத்தாவிட மிருந்து கற்றுக் கொண்டிருப்பார்கள்!
கண்ட கண்ட இடங்களில் ஆகம விதிகளை மீறிக் கட்டப்படும் கோயில்களுக்கு பண ஆசை பிடித்த சிவாச்சாரியார்கள் பூசை புனர்க்காரம், கும்பாபிஷேகம் செய்து வைக்கிறார்கள். கோயில்களில் ஆகம விதிகள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன என்பதை நீதிபதி மகாராசன் அறிக்கை விலாவாரியாக வரிசைப்படுத்திச் சொல்கிறது.
கனடாவில் உள்ள கோயில்களில் 98 விழுக்காடு கோயில்கள் முன்னர் பண்டகசாலைகள் ஆக இருந்தவை. சில பண்டகசாலைகள் முன்பு மதுபான சாலையாக இருந்தவை. மேலே கூறியவாறு அர்ச்சகர்களுக்கும் சோதிடர்களுக்கும் எல்லா நாட்களும் எல்லா மாதங்களும் பணம் காய்ப்பவை ஆக அமைந்துள்ளன.
குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, இராகு – கேது பெயர்ச்சி இடம் பெறும் போதேல்லாம் கோயில் குளங்களில் சிறப்புப் பூசைகளை, பரிகார பூசைகள் இடம் பெறுகின்றன. சோதிடர்கள் இப்படியான பெயர்ச்சி நடைபெறும் போது இராசி பலன்கள் சொல்கிறார்கள். தோச பரிகாரம் செய்கிறார்கள். பெயர்ச்சி என்பது ஒரு இராசியில் காணப்பட்ட கோள்கள் அடுத்த இராசிக்குள் நுழைவதையே பெயர்ச்சி (transit) என்கிறார்கள். சூரியனை வலம்வரும் கோள்களில் உண்மையான கோள்கள் 7, நிழல் கோள்கள் (இராகு, கேது) இரண்டு. ஆக மொத்தம் ஒன்பது கோள்கள். இவற்றில் இராகு, கேது நிழல் கோள்கள. சந்திரன் உப கோள். எனவே கோள்களின் உண்மையான எண்ணிக்கை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி என ஆறு மட்டுமே. இவை ஈர்ப்புச் சக்தி காரணமாக இந்த ஆறு கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. கீழ்க் கண்ட அட்டவணை கோள்கள் சூரியனை சுற்றிவர எடுக்கும் கால அளவை மற்றும் அவற்றின் பண்புகளைக் காட்டுகின்றன. சோதிடம் பூமி ஒரு கோள் என்பதை கணக்கில் எடுப்பதில்லை.
எமது சூரிய குடும்பம்
1 | பெயர் | நடுவரை விட்டம் |
பொருண்மை | அரைப் பேரச்சு(வானியல் அலகு) | சுற்றிவரும் நேரம்(ஆண்டுகள்) |
சூரிய நடுவரைக்குச் சரிவு (°) |
சுழற்சி நேரம் (நாள்கள்) |
நிலாக்கள் | அச்சு சாய்வு | வளிமண்டலம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1. | புதன் | 0.382 | 0.06 | 0.39 | 0.24 | 3.38 | 58.64 | 0 | 0.04° | சிறுமம் |
2. | வெள்ளி | 0.949 | 0.82 | 0.72 | 0.62 | 3.86 | −243.02 | 0 | 177.36° | CO2, N2 |
3. | பூமி | 1.00 | 1.00 | 1.00 | 1.00 | 7.25 | 1.00 | 1 | 23.44° | N2, O2, Ar |
4. | செவ்வாய் | 0.532 | 0.11 | 1.52 | 1.88 | 5.65 | 1.03 | 2 | 25.19° | CO2, N2, Ar |
5. | வியாழன் | 11.209 | 317.8 | 5.20 | 11.86 | 6.09 | 0.41 | 67 | 3.13° | H2, He |
6. | சனி | 9.449 | 95.2 | 9.54 | 29.46 | 5.51 | 0.43 | 62 | 26.73° | H2, He |
7. | யுரேனஸ் | 4.007 | 14.6 | 19.22 | 84.01 | 6.48 | −0.72 | 27 | 97.77° | H2, He, CH4 |
8. | நெப்டியூன் | 3.883 | 17.2 | 30.06 | 164.8 | 6.43 | 0.67 | 14 |
கடந்த ஓராண்டு காலம் கன்னி இராசியில் பயணித்து வந்த குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி செப்தெம்டம்பர் 2 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துலாம் நிகழ்ந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 6.50 மணிக்கு நிகழவுள்ளJ.
இந்த இரண்டு கணிப்புக்களுக்கும் இடையே 9 நாள்கள் 21.00 மணி வித்தியாசம் இருக்கிறது. சோதிடர்கள பிறககும நேரததில 2 மணித்துளி வேறு பட்டாலே சாதகம் பிழைத்துவிடும் என்கிறார்கள். அப்படி எனறால் 9.21 நாள்கள் பிழைககும் பொழுது சாதகம் எழுதும் கடதாசிக்கே பெறுமதி இலலாமல போயவிடும! சோதிடம் அறிவியல் அல்ல என்பதற்கு இது வலுவான சான்றாகும்.
நவக்கிரகங்களிலே மிகவும் பெரியது குரு (வியாழன்) ஆகும். சோதிடர்கள் குரு சுபக்கிரகம் என்பார்கள். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். அதனால்தான் ‘ குரு பார்க்க கோடி நன்மை’ என்று சொல்கிறார்கள். சக்தியும் பலமும் வாய்ந்தது குருவின் பார்வை.
சோதிடர்கள் இன்னயின்ன இராசியில் பிறந்தவர்களுக்குக் குருப் பெயர்ச்சி இடம்பெறுவதால் தோஷம் என்று சொல்லி அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என கோயில்கள் முழுப்பக்க விளம்பரம் செய்கின்றன. தோசம் நீங்க கோயில்களில் சிறப்பு மஹாஹோமம்
வியாழன் (Jupiter)
(யாகம்), கிரக பரிகாரம், அபிசேகங்கள், அருச்சனைகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக இடபம், மிதுனம், சிம்மம் (சிங்கம்), கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய இராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாம். பரிகாரம் செய்தால் மனச்சஞ்சலம், உடல்நலக் குறைவு, தொழில் நலிவு, குடும்பப் பிரச்சனை, பிரயாண கண்டம், பகைவரால் இடைஞ்சல் ஆகியவை நீங்குமாம்.
வானத்தில் கோள்கள் மற்றும் பல கோடி கோடி நட்சத்திரங்கள் பல ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பது உண்மை. ஆனால் அந்த நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்று தொடுத்து அவற்றை இராசிகளாக சித்தரிப்பது கற்பனையாகும். அதே போல் மேடம், இடபம், மிதுனம் போன்ற 12 இராசிகள், 12 வீடுகள், 9 கோள்கள், 27 நட்சத்திரங்கள் அடங்கிய இராசி வட்டமும் மனிதனால் உருவாக்கப்பட்டவையே. இராசிகளை ஆண், பெண், அலி, நெருப்பு,, நிலம், காற்று, நீர் என்று மனம் போன போக்கில் பிரித்து வைத்துள்ளார்கள்.
உண்மையில் கோள்களின் எண்ணிக்கை 9 அல்ல. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் சனி மட்டுமே கோள்கள். திங்கள் ஒரு உபகோள். சூரியன் ஒரு நட்சத்திரம். இராகு, கேது என்ற கோள்கள் அண்ட வெளியில் இல்லை.
இப்போது வியாழ கோள்பற்றிய வானியல் தரவுகளைப் பார்ப்போம்.
வியாழன் ஞாயிறு மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய கோளாகும். புவியின் விட்டத்தைவிட 11 மடங்கு நீளமானது. அதன் காரணமாக உரோமரது முதன்மைக் கடவுளின் பெயர் (Jupiter) இதற்குச் சூட்டப்பட்டது. கிரேக்கர் இதற்கு Zeus என்ற கடவுளின் பெயரைச் சூட்டினார்கள். சுமார் 1,300 புவிகளை இதற்குள் அடக்கலாம்! தொலைநோக்கி மூலம் பார்க்கும் பொழுது வியாழன் மிக அழகாக இருக்கும். நீலம், ஊதா, மஞ்சள், செம்மஞ்சள் (Orange) நிறத் திட்டுக்கள் காணப்படுகின்றன.
விட்டம் – 142,984 கிமீ (88,612 கல்)
திணிவு – 1.897 x 1027 kg. புவியைவிட 317.83 மடங்கு அதிகமானது
செறிவு (density) – 1.33
ஈர்ப்பு விசை – 2.4
வளிமண்டலம் – சுழன்றடிக்கும் முகில் கூட்டங்கள், அமோனியா, நீரகம் (hydrogen) 89.8 விழுக்காடு கீலியம் (helium) 10.2 விழுக்காடு
வெப்பம் – -234 பாரன்கைட் (-148 செல்சியஸ்)
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் – 9 மணி 55 மணித்துளி
தன்னைத்தானே சுற்றும் வேகம் – நொடிக்கு 13.07 கிமீ ( மணிக்கு 43,500 கிமீ)
ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம் – 11.8618 புவி ஆண்டு (4,333 புவி நாள் )
ஞயிறைச் சுற்றும் வேகம் – நொடிக்கு 13.06 கிமீ அல்லது ஒரு மணிக்கு 47,051 கிமீ (29,236 மைல்)
புவியில் இருந்து பொதுமேனி தொலைவு – 588.50 மில்லியன் கிமீ (367.04 மில்லியன் கல்)
ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு – 778.33 மில்லியன் கிமீ (483.63 மில்லியன் கல்) ஞாயிறில் இருந்து புவியின் தொலைவை விட 5.2 மடங்கு அதிகமானது.
துணைக் கோள்கள் – 67 எங்களது சூரிய குடும்பம்
சூரிய மண்டலத்தின் உட்கோள்களான (Inner Planets) புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் (Rocky Planets) போன்றில்லாது, புறக்கோள்களில் (Outer Planets) ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம். சூடான பாறையும், திரவ உலோகம் (Liquid Metal) சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும் மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது.
இப்போது சொல்லுங்கள் 588 மில்லியன் கிமீ தொலைவில் சூரியனை வலம் வரும் வியாழ கோளினால் மனிதனுக்கு ஏதாவது நன்மை தின்மை, தோசம் சந்தோசம் ஏற்பட முடியுமா? முடியும் என்றால் எப்படி முடிகிறது? அதற்கான சான்று என்ன?
வானில் ஒளிரும் வியாழ கோளை பண்டைய மனிதன் தெய்வமாக நினைத்து வழிபட்டதில் தவறில்லை. ஆனால் செவ்வாய்க் கோளுக்கு பயணம் செய்ய மனிதன் அணியமாக இருக்கும் இன்றைய கால கட்டத்திலும் அதனை தெய்வமாக நினைத்து வழிபடுவதும் வியாழன் ஒரு இராசியை விட்டு இன்னொரு இராசிக்கு இடம் பெயரும்போது சில இராசிக்காரர்களுக்கு தோஷம் இருக்கிறது என அர்ச்சகர்களும் சோதிடர்களும் சொல்வதைக் கேட்டு அவற்றுக்குப் பரிகாரம் தேடி ஓடவேண்டாம். இந்துக்களைத் தவிர்ந்த வேறு யாரும் கோள்களால் தோசம் உண்டு என்பதை சொல்வதும் இல்லை நம்புவதும் இல்லை.
பக்தர்கள் பனியிலும் வெய்யிலிலும் பாடுபட்டு உழைத்த பணத்தைப் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் சில இராசிக்காரர்களுக்கு தோசம் என்கிறார்கள்! அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள்! அதனை நம்பி பணத்தை விரயமாக்க வேண்டாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.