தமிழ் மக்களையும், தமிழர் அரசியலையும் பலவீனப்படுத்தும் முதல்வர் விக்கியின் செயற்பாடுகள்
அ.அஸ்மின் (வட மாகாண சபை உறுப்பினர்)
வடமாகாணசபையில் எழுந்த அண்மைக்கால நெருக்கடிகள், குழப்பங்கள் குறித்து களத்திருந்தவரின் உள்ளத்திலிருந்து பரந்து விரிந்த பார்வை இதோ!
ஒரு மக்கள் கூட்டத்தின், ஒரு சமூகத்தின், ஒரு இனத்தின் உரிமை சார்ந்த போராட்டமானது மிகவுமே பலமான அடிப்படைகளில் கட்டியெழுப்பப்படுதல் வேண்டும், அப்போது மாத்திரமே அப்போராட்டமானது காலத்தால் அழியாது நிலைத்து நின்று மக்களின் நலன்களைப் பெற்றுக்கொடுக்கின்ற மகோன்னத போராட்டமாக வடிவம்பெறும். இப்போது வடக்கு அரசியலில் விக்னேஸ்வரனிஸம் என்னும் புதிய ஒழுங்கு அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மக்களை என்றுமே அழிவில் வைத்திருக்க விரும்பும் ஒரு சிலர் மக்களை உணர்ச்சியூட்டி விக்னேஸ்வரனை அடித்தளமாகக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை கட்டமைக்கின்ற ஒரு முயற்சியை முன்னெடுக்கின்றார்கள். இதன் உள்ளார்ந்த நிலைமைகளை தெளிவுபடுத்தும் பொறுட்டு இந்த ஆக்கம் எழுதப்படுகின்றது.
தமிழ் மக்களின் அரசியலில் இந்த மாற்றுத்திட்டம் எப்போது தொடங்கப்பட்டது என்பதை நாம் உண்ணிப்பாக அவதானித்தல் அவசியமாகின்றது; 2009களின் பின்னரான தமிழர் அரசியலில் தீர்க்கதரிசனம் மிக்க தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை மாத்திரமே காணக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு ஜனநாயகாவாதி; தந்தை செல்வாவை தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டவர்; இடைக்காலங்களில் வேறு எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளாதாவர்; வன்முறை சார்ந்த எந்த முயற்சிகளுக்கும் துணை நிற்காதவர்; தனது இனத்தையே காட்டிக்கொடுக்காதவர்; எந்தவொரு மனித உயிரையும் கொலை செய்யாதவர்; சிங்களவர்களாலும், முஸ்லிம் மக்களாலும் மதிக்கப்படுகின்றவர்; சர்வதேச சமூகத்தவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்; இலங்கை நாட்டில் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை வேண்டி நிற்கின்றவர். இத்தகைய தலைமையின் பின்னால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஜனநாயக வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்போது தன்னுடைய கொள்கைகளை, கோட்பாடுகளை, வழிமுறைகளை அறிமுகம் செய்து, மக்கள் ஆணையொன்றினை அவர் தமிழ் மக்களிடம் வேண்டி நின்றார். அந்த சந்தர்ப்பத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிகரான பலம்பொருந்திய அணியொன்றோ; இரா சமபந்தரைப் போன்ற தீர்க்கதரிசனம் கொண்ட தலைமைத்துவமொன்றோ; தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கவில்லை. தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்க்கு வழங்கினார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே தலைவர் இரா.சமந்தர் அவர்களால் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் பிரபல சட்டத்தரணி அவர்கள் தமிழர் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றார். தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் பாதையில் சுமந்திரன் அவர்களின் அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2010 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஒரு மிகப்பெரும் ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கினார்கள்.
அடுத்து 2012ம் ஆண்டின் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்; அதிலும் இதேபோன்றதொரு தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்பட்டு மக்கள் ஆதரவு உறுதி செய்யப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போனாலும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கொண்ட கட்சி என்ற நிலை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2013களில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இச்சந்தர்ப்பத்தையும் நாம் முழுமையாக மக்கள் ஆணையொன்றிற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்ட அவரது தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அணி களமிறக்கப்பட்டு தேர்தல் சந்தர்ப்பம் எதிர்கொள்ளப்பட்டது. அச்சந்தர்ப்பத்திலும் மக்கள் தமது பணியை சீராகச் செய்தார்கள். வடக்கு மாகாணசபையின் அறுதிப் பெரும்பான்மையுடனான ஒரு ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கினார்கள்.
அமையப்பெற்ற வடக்கு மாகாணசபை அபிவிருத்தி விவகாரங்களிலே புரட்சிகளை நிகழ்த்தும் என்றோ; வடக்கு மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் நிறுவனமாக செயற்படும் என்றோ; எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வு நோக்கிய பயணத்தில் வடக்கு மக்களை ஒழுங்கமைக்கின்ற ஒரு அதிகாரபூர்வ நிறுவனமாக; உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகங்கள் எம்மைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தளமாக; செயற்படும் என்ற நம்பிக்கையே பலரிடத்தில் காணப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றமான நோக்கில் சிந்திக்கின்ற ஒரு சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா. சம்பந்தர் அவர்களுக்கு சமாந்தரமான ஒரு தலைமையை வேண்டி நின்றார்கள்.
அத்தகையவர்கள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் காணப்பட்ட புகழ்விரும்பி, பிடிவாத குணம், தலைமைத்துவ அவா போன்ற தனிப்பட்ட பலவீனங்கள் குறித்தும், நன்கு அறிந்து வைத்திருந்தனர்; அது மாத்திரமன்றி நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் காணப்பட்ட அரசியல் அறியாமை, தமிழ்த் தேசியப் போராட்டம் குறித்த அறிவும் புலமையும் அனுபவமும் இன்மை போன்ற விடயங்களையும் அறிந்தே வைத்திருந்தனர். எனவே அவரை கையாளக்கூடிய பொறுத்தமான சந்தர்ப்பமொன்றினையும் அவர்கள் எதிர்பாத்திருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் முற்போக்கான தமிழ்த் தேசிய சக்திகளுடனான தொடர்புகளை விக்னேஸ்வரன் சீராகப் பேணுவதற்கு ஒரு சிலர் தடைகளை ஏற்படுத்தினர். குறிப்பாக தனிப்பட்ட குறுகிய நோக்கங்களுக்காக அவரைச் சூழ்ந்துகொண்ட ஒரு சில தனிநபர்கள் பற்றி இங்கு குறிப்பிடுவது பொறுத்தமானதாக இருக்கும் என எண்ணுகின்றேன். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டு எவ்வித கட்சிக் கட்டுப்பாடும் இன்றி இருந்த முன்னைய நாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவர்களுள் முக்கியமானவர்; முதலமைச்சரின் உறவுக்காரரும், அவரது ஆலோசகருமான நிமலன் கார்த்திகேயன் அடுத்த நபராவார். இவர்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய கடமைகளையும் பொறுப்புக்களையும் மறந்து செயற்படத் தொடங்கினார்.
இவ்வாறான சூழ்நிலையில் 2014ம் ஆண்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெற்றது. அம்மாநாட்டிலே விக்னேஸ்வரன் முக்கியமான நபராக இருக்கவில்லை; அம்மாநாட்டிலே மாண்புமிகு இரா. சம்பந்தர் அவர்களும், கௌரவ. மாவை சேனாதிராஜா அவர்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பெறுப்பிற்கு தான் முன்மொழியப்படுவேன் என்ற எதிர்பார்ப்பு விக்னேஸ்வரனிடம் காணப்பட்டதாக ஒரு சில தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து நின்றன.
ஆனால் குறித்த மாகாநாட்டிலே நீதியரசர், முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தின் புத்திஜீவிகள் ஒரு சிலருக்கூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான சக்திகள் விக்னேஸ்வரனை அணுகத் தொடங்கினர். இவ்வாறான நடவடிக்கைகளின் விளைவாக விக்னேஸ்வரன் தனிவழியே பயணிக்கத் தொடங்கியிருந்தார்.
இதனை உணர்ந்துகொண்ட வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 2015ம் ஆண்டின் ஆரம்பத்திலே வடக்கு மாகாணசபையினை சீரான பாதையில் ஒழுங்கமைக்கும் நோக்குடன் 24 மாகாணசபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் (அமைச்சர்கள், அவைத் தலைவர் நீங்கலாக) கையெழுத்திட்டு முதலமைச்சர் அவர்களுக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்கள்.
அக்கடிதத்திலே “வினைத்திறனான மாகாணசபை” மற்றும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுதல்” ஆகிய இரண்டு விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரனை நெறிப்படுத்தும் பல்வேறு முயற்சிகளின் ஒரு அங்கமாகவே 2017 ஜூன் 14ம் திகதி முன்வைக்கப்பட்ட முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானமாகும்.
2015 ஜனவரி முதல் 2017 ஜூன் மாதம்வரை முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளைத் தொகுத்து நோக்கும் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ் மக்களுக்கும் மாறான பல்வேறு செயற்பாடுகளில் அவர் வெளிப்படையாக ஈடுபடுவதை கண்டுகொள்வார்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழையான பாதையில் செல்கின்றது என்று முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கருதுவாராக இருந்தால் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமகளோடு கலந்துரையாடி அவர்களை சீர்செய்திருக்க வாய்ப்பிருந்தது, அல்லது அடுத்த நடவடிக்கையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பெற்றுத்தரப்பட்ட முதலமைச்சர் பதவியை விட்டுவிலகி தமிழ் மக்களோடு இணைந்து தனக்கான தனியான பாதையில் பயணித்திருக்கலாம், என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட முதலமைச்சர் என்னும் மகுடத்தை தன் தலையில் சுமந்துகொண்டு தன்னுடைய நயவஞ்சகத்தனத்தை அரங்கேற்றுவது ஏற்புடையதல்ல என்றும் மக்கள் கருதுகின்றார்கள்.
2015 ஜனவரி முதல் 2017 ஜூன் வரையிலான அவரது செயற்பாடுகளை நோக்குமிடத்து
2015 பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டமை. முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பமாகும், அப்போது அவர் எந்தவொரு தேர்தல் மேடைகளுக்கும் செல்லவில்லை, இறுதி சந்தர்ப்பத்திலே ஒரு அறிக்கை வெளியிட்டார், அதிலே “ வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார், இது மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காதீர்கள் என்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தி நின்றது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலைமை உருவாகியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சொற்ப வாக்குகளால் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும், வவுனியா மாவட்டத்தில் மற்றுமொரு ஆசனத்தையும் இழந்தனர். இது முதலமைச்சரின் முதன்மையான பிறழ்வான நடவடிக்கையாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
2015 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அரசியல்வாதிகள், அரசியல்ல் கட்சிகளை இணைத்துக் கொண்டு 2015 ஒக்டோபர் மாதமளவில் தமிழ் மக்கள் பேரவை என்னும் அமைப்பை தானும் இணைத்தலைமையாக பங்கேற்று ஸ்தாபிதம் செய்தமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சமாந்தரமான மற்றுமொரு அணி இருக்கின்றது என்ற தோற்றப்பட்டை உருவாக்கி, தமிழ் மக்களின் ஏகோபித்த பலத்தை இரு அணிகளாகப் பிரிக்கவும், அதன்மூலம் தேசிய சர்வதேசிய அரங்கிலே தமிழ் மக்களின் பலத்தை மலினப்படுத்தி பிரித்துக்காட்டவும் முயல்கின்றமை மற்றுமொரு பிறழ்வான நடவடிக்கையாகும்.
2015 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் முறையாக வாக்களித்து தம்முடைய முழுமையான ஆதரவினை மீண்டுமொருதடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்க்கு வழங்கிய பின்னரும், பிறழ்வான முறைகளினூடாக மக்களை பிழையாக வழிநடாத்தி, மக்களை உணர்ச்சியூட்டி நடாத்தப்பட்ட எழுக தமிழ் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றமையும், அதற்கு மாகாணசபையின் வளங்களைப் பயன்படுத்தியமையும் அடுத்த பிறழ்வான நடவடிக்கையாகும், இவ்வாறான நிகழ்வுகளினூடாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் சென்று தமிழ் மக்களை வன்மம் சார்ந்த, தீவிர இனவாதம் சார்ந்த, மக்களை அழிவுநோக்கி வழிநடாத்த முயலும் தீய சக்திகளுக்கு முதலமைச்சர் வலுச்சேர்க்கின்றார் என்று மக்கள் கருதுகின்றார்கள்.
மக்கள் நலன்சார்ந்த மாகாண அரசாங்கத்தின் எத்தனையோ செயற்திட்டங்களையும், மத்திய அரசாங்கத்தின் செயற்திட்டங்களையும் தன்னுடைய பலவீனங்களின் மூலமாக தன்னுடைய தீவிரவாத அணுகுமுறைகளை நியாயப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக மறுதளிக்கின்றமை, ஒத்துழைக்காமை. இதிலே முதன்மையாக ஐக்கிய நாடுகளின் சபையின் வடக்கு மாகாணத்திற்கான 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவித்திட்டம் திருப்பியனுப்பப்பட்டமை, மாகாணத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு விவசாய, மற்றும் முதலீட்டுத்திட்டங்கள் திருப்பியனுப்பப்பட்டமை, இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்திலே ஏற்பட்ட வீணான குழப்பங்கள், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை பாதுகாக்க முயன்றமை போன்றன முதலமைச்சர் மீது முன்வைக்கப்படும் பாரிய குற்றச்சாட்டுக்களாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான விடயமாக இருக்கின்ற அரசியலமைப்பு மாற்றம் முன்வைக்கப்படவிருக்கின்றது. இச்சுழ்நிலையில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் சார்ந்த விடயத்தில் மக்களை குழப்பியடித்து அரசியல் தீர்வுக்கு எதிராக மக்களைத் திருப்பவேண்டும் என்ற எண்ணப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்க்கு எதிராகச் செயற்படுகின்றவர்களிடம் காணப்படுகின்றது, இதற்கு பலம் சேர்க்கும் விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இரண்டாகப் பிழக்கின்ற ஒரு நடவடிக்கையாக 2017 ஜூன் மாதமளவில் வடக்கு மாகாண அமைச்சர்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி அவர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கி, தன்னுடைய தீவிர எண்ணங்களுக்கு துணை நிற்கின்றவர்களை அமைச்சர்களாக்கி அதன்மூலம் மாகாணசபையின் வளங்களை தன்னுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த முனைகின்றமை.
போன்ற முக்கிய குற்றச்சாட்டுக்கள் விக்னேஸ்வரன் மீது சுமத்தப்படுகின்றன; இவை அனைத்துமே யதார்த்தமானதும் எல்லோராரம் கண்டுகொள்ளப்பட்டதுமான குற்றச்சாட்டுகளாகும். இவையனைத்துமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சிதைக்கும். தமிழ் மக்களை நிரந்தரமான அழிவுப்பாதையில் விட்டுச்செல்லும்.
Leave a Reply
You must be logged in to post a comment.