ஜெயலலிதா கருணாநிதி செய்தது துரோகம் எனக் குற்றம் சாட்டுவது கறிச்சட்டி பானையைப் பார்த்து “நீ கருப்பு” என்று சொன்ன கதை போன்றது!

ஜெயலலிதா கருணாநிதி செய்தது துரோகம் எனக் குற்றம் சாட்டுவது  கறிச்சட்டி பானையைப் பார்த்து “நீ கருப்பு” என்று சொன்ன கதை போன்றது!

நக்கீரன்

இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி செய்தது துரோகம் என  ஜெயலலிதா குற்றம் சாட்டுயிருக்கிறார். இது கறிச்சட்டி பானையைப் பார்த்து “நீ கருப்பு” என்று சொன்ன கதையாக இருக்கிறது! திருச்சியில்  ஏப்ரில் 23, 2016 சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்  ஜெயலலிதா பேசும்போது  கருணாநிதியை வசைபாடியுள்ளார்.

பொதுவாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இல்லாதது தன்னடக்கம், நிதானம், பொறுமை,  பண்பாடு போன்றவகையாகும். மூத்த அரசியல் தலைவர்களை அவமரியாதையாக ஒருமையில் விளிப்பது  அவருக்கு கைவந்த கலை.

முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருப்பது தலைக்கனம், ஆணவம், திமிர், ஆடம்பரம், பகட்டு, மூடத்தனம், இறுமாப்பு,   வேளைக்கேற்றவாறு பேசுதல், முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்ளல்   ஆகியன.

சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்று சொல்லிவிட்டு அதனைப் பின்னர் மூர்க்கத்தனமாக அதனை எதிர்த்தார்.  “சேது இராமபிரான்  கட்டிய பாலம், அதனை இடிப்பதா? இடிக்க விடமாட்டேன்”  என்றார்.

போரின் இறுதிக் கட்டத்தில்  வானில் இருந்தும் தரையில் இருந்தும் சிங்கள இராணுவம் நடத்திய குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது “இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டுமென்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் – போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப்பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக இராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று 17-1-2009 அன்று வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போல ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டார்.

“விடுதலைப்புலிகளை எதிர்த்துத்தான் இராஜபக்சே போர் நடத்துகிறார். ஆனால் அவர் நடத்தும் போர்  தமிழர்களை எதிர்த்து என்று இங்கே உள்ள அரசியல் கட்சிகள் சொல்வதை ஏற்க முடியாது” என்று ஜெயலலிதா மார் கொட்டினார்.

ஈழச் சிக்கலில்  திரைத்படைத் துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் என்றும் அவர்களைக் கைது செய்ய வேண்டுமென்றும் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியை மிரட்டினார். பிறகு திருமாவளவனைக் கைது செய்ய வேண்டுமென்றார். கடைசியில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

கலைஞர் கருணாநிதி  பலவற்றை செய்யத் தவறி இருக்கிறார் என்பது  உண்மை. பதவியைத் தக்க வைக்க மத்திய காங்கிரஸ் அரசோடு ஒத்துழைத்தார். பதவி துறப்பு, மனித சங்கிலி,  ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், உண்ணா நோன்பு என கூத்தாடினார்.

அதே நேரம் போரின் இறுதிக்கட்டத்தில்   ஜெயலலிதா என்ன செய்தார்? என்ன பேசினார்? என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும்.   திமுக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்   போன்ற கட்சிகள் தெருவில் இறங்கிப் போராடின. கொட்டும் மழையிலும் மனித சங்கிலிப் போராட்டங்களை  நடத்தின. உண்ணா நோன்பு போராட்டத்தை அனுட்டித்தன. ஆனால்  ஜெயலலிதாவும் அவரது அதிமுகவும் வீதிக்கே வரவில்லை.  எந்தப் போராட்டத்திலும் இறங்கவில்லை. இராஜபக்சா மேற்கொண்ட  தாக்குதல்களை நியாயப்படுத்தினார். அது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று சொன்னார்.

இலங்கையில் அரங்கேற்றப்படும்  தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது – ஜெயலலிதா மட்டும்  “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள்மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள் நாட்டுப்போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை” என்று கூறியதோடு  “இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும் அதனால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார்” என்றும் அறிக்கை விட்டார்.

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தமிழக அரசின் சார்பில் இலங்கைப் பிரச்சினைக்காக சென்னை தலைமைச் செயலகத்திலே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திய போதும்,  மனித சங்கிலி ஒன்றை நடத்தியபோதும், தில்லி சென்று பிரதமரைச் சந்தித்த போதும் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இலங்கைத் தமிழர்களுக்காக அக்கறை கொண்டவர் போல் ஜெயலலிதா செயல்பட்டார். அவரது நடையில் சொல்ல வேண்டும் என்றால் நாடகம் ஆடினார்.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது வி.புலிகளை தீவிரமாக ஆதரித்தார். ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படுவதற்கு வி.புலிகளுக்கு  தனது சொந்தப் பணத்தில் உரூபா 4.5 கோடி கொடுத்து உதவினார். ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்காக அள்ளிக் கொடுத்த வள்ளலாக தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம்  அதனை ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில்   பதிவு செய்திருக்கிறார்.

“ஈழத் தமிழர்கள்மீது உண்மையான அன்பு கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அதனால், ஈழத் தமிழர்களது பேரன்புக்கும் பெரும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்த தம்பி பிரபாகரன் அவர்கள் மீதும் பாசத்தைக் கொண்டியிருந்தார். அவருக்காக, புரட்சித் தலைவர் அவர்களது இல்லமும், அவரது மனக் கதவுகளும் என்றுமே திறந்தே இருந்தது என்றால் அது மிகை அல்ல”  என  அன்ரன் பாலசிங்கம்  தனது நூலில் எழுதியிருக்கிறார்.

டிசெம்பர் 24, 1987 இல் எம்ஜிஆர் மறைந்த பின்னர்  சிறிது காலம் ஜெயலலிதா தன்னை புலி ஆதரவாளராகக் காட்டிக் கொண்டார். பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழ்நாட்டில் குருதி ஆறு ஓடும் என முழக்கம்  செய்தார்.     ஆனால்  பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்ச்சிக்கத் தொடங்கினார்.  மே  21, 1991 அன்று   இராஜீவ் கொலையுண்டதற்குப் பின்னர்,  அரசியல் இலாபம் கருதி ஜெயலலிதா இந்திய காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்துக் கொண்டு வி.புலிகளது தீவிர எதிர்ப்பாளராக மாறினார்.  வி.புலிகள் பயங்கரவாதிகள் என நிந்தித்தார். அவரது மனமாற்றத்துக்கு  காரணம் கேட்ட போது அப்போது தான் அதிமுக இல் இருந்த மூத்த தலைவர்களின் சொற்படி நடக்க வேண்டியிருந்தது என்று விளக்கம் கொடுத்தார்.

திமுக ஆட்சியைக் கலைப்பதற்காகவே “புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுங்கிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது” என ஒரு புரளியைக் கிளப்பினார். வி.புலிகளை பயங்கரவாத இயக்கம் எனப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று இந்திய நடுவண் அரசைக்  கேட்கும் தீர்மானத்தை தமிழ் நாடு சட்டசபையில கொண்டு வந்து நிறைவேற்றினார்.

1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக, மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) அதாவது  பொடா சட்டத்தின் கீழ் தடை செய்தது.

1991 இல்  நடந்த சட்டசபைத்   தேர்தலின் போது  ஜெயலலிதா, இராஜீவ் காந்தியை கொன்றது வி.புலிகளும் திமுக வும் எனக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். தேர்தல் பரப்புரைக்கு இராஜீவ் காந்தியின்  பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்தார்.  இராஜீவ் காந்தியை கொன்றதில்  திமுக க்கும் பங்குண்டு என்ற பரப்புரையை  மக்கள் நம்பியதால் அந்தக் கட்சி  தேர்தலில் 2  தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று  வரலாறு காணாத   படுதோல்வியைத் தழுவிக் கொண்டது.

 தமிழக சட்ட சபைத் தேர்தல் முடிவுகள் 1991

முன்னணி/கட்சி வென்ற தொகுதிகள் மாற்றம் கிடைத்த வாக்குகள் %
அதிமுக அணி 225 +172 147,381,042 59.8
அதிமுக 164 +137 10,940,966 44.4
காங்கிரஸ் 60 +34 3743,859 15.2
மற்றவர்கள் 1 +1 53,217 0.2
திமுக அணி 7 -164 7,405,935 30.0
திமுக 2 -148 5,535,668 22.5
தமாகா 2 -1 371,645 1.5
கம்யூனிஸ்ட் (எம்) 1 -14 777,532 3.2
இ. கம்யூனிஸ்ட் 1 -2 305,143 1.2
ஜனதா தாள் 1 +1 415,947 1.7
மற்றவர்கள் 2 -8 2,505,431 10.2
பாமக 1 +1 1,452,982 5.9
ஜேபி 0 -4 51,564 0.2
சுயேட்சை 1 -5 390,227 1.6
மொத்தம் 234 24,649,408 100

மூலம் – இந்திய தேர்தல் ஆணயம்

இப்படி, இராஜீவ் கொலையைப் பயன்படுத்தி பதவியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, ஈழம், தமிழ், தமிழர் என்ற சொற்களைப் பயன்படுத்துவதே பயங்கரவாதக் குற்றம் என்று கூறுமளவுக்கு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார். ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமெனப்  பகிரங்கமாகப்  பேசத் தொடங்கினார்.

புலிப் பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து, அகதி முகாம்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற் கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை இல்லாது  செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.

பத்மநாபா கொலை வழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அரச சாட்சியாக ஆக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும், அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி இரவிச்சந்திரனை தடா  சட்டத்தின் கீழ் கைது செய்து 22 மாதங்கள் சிறையில் அடைத்தார்.

இராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல புலிகள் சதி செய்வதாகப் புலம்பிய ஜெயலலிதா, எம்ஜிஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது, தன்னைப் பார்க்க வந்த தனது ஆதரவாளரையே ‘என்னைக் கொல்ல விடுதலைப் புலி வந்தான்’ என  அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்.

இனத்தை இனம் சாரும் என்பதற்கு ஒப்ப அடிப்படை (பார்ப்பன) அரசியல் காரணமாக புலி எதிர்ப்பாளர்களாக இருந்த  துக்ளக் சோ, இந்து இராம், சுப்பிரமணியன் சுவாமி போன்றோர்களோடு ஜெயலலிதா கை கோர்துக் கொண்டார்.

மேலும்  கடந்த 36 ஆண்டுகளாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் விலங்குகள் போல்  அண்ணளவாக 65,000 தமிழீழ ஏதிலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த  ஏதிலிகள் அடிமைகளை விட மோசமாக நடத்தப்படுகிறார்கள். மாடுகள் கூடப் படுக்க முடியாத  கொட்டில்களில் முழுக் குடும்பமே   சமைத்துச் சாப்பிட்டுப் படுத்து உறங்கின.   சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்கள்.  யாராக இருந்தாலும் மாலை 6.00 மணிக்கு முன் முகாம் திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.  அந்தக் கட்டுப்பாடு  இப்போதும் இருக்கிறது.  இந்த ஏதிலிகளின் அவலம் பற்றி  ஜெயலலிதா அக்கறை காட்டவில்லை.  மத்திய அரசிடம் அவர்கள் சார்பாக வாதாடி உதவி கேட்டதில்லை.   அண்மையில் கூட  மதிப்பெண்  அடிப்படையில் பல்கலைக் கழகத்தக்கு எடுபட்ட ஒரு  ஏதிலி மாணவியின்  பெயரை ஜெயலலிதா அரசு நீக்கிவிட்டது.

கடந்த மாதம் மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு ஊரில் உள்ள முகாமைச் சேர்ந்த இரவீந்திரன் என்ற தமிழீழ ஏதிலியர் அலுவலர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டார்.

முகாமில்  கணக்கெடுப்புக்காகச் சென்ற வருவாய் அலுவலர் ஒருவர், இரவீந்திரன் முகாமில் இல்லாதது குறித்து உசாவியுள்ளார்.  அப்பொழுது அங்கு வந்த இரவீந்திரன் உடல்நலம் பாதித்த பேரனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்ததால் காலதாமதம் ஆனதாகக் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த அலுவலர், இரவீந்திரனின்  பெயரை ஏதிலியர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். “இப்படிச் செய்தால் நாங்கள் எப்படி வாழ முடியும்” என்று இரவீந்திரன் கேட்டபொழுது, “வாழ வழியில்லை என்றால் மின்சாரக் கம்பத்தில் ஏறித் தற்கொலை செய்து கொள்” என்று திமிராகக் கூறியுள்ளார்.   இதனால் மனம் உடைந்த இரவீந்திரன் அங்கிருந்த  உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி, மின் கம்பியைக் கால்களால் மிதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இடம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்களுக்கோ திபெத்திய அகதிகளுக்கோ கொடுக்கப் பட்ட உரிமைகள், வசதிகள், வாயப்புக்களில் நூறில் ஒரு பங்குகூட  தமிழ்நாட்டு முகாம்களில் பசியால் மெலிந்து பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு கொடுக்கப்படவில்லை.  இதில் ஐயா ஆட்சி, அம்மா ஆட்சி என்ற வேற்றுமை கிடையாது. 

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்திய நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

இந்த எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட முதல் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடைமுறைப்படியும் அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், தமிழக சட்டமன்றப் பேரவை மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

மேலும் ஸ்ரீலங்கா அரசினால், பிரபாகரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது”  என்று தமிழகச் சட்டப்பேரவையில் ஏப்ரில் 16, 2002 அன்று ஜெயலலிதா 7 பக்கத்  தீர்மானத்தை அவசர  அவசரமாக  கொண்டு வந்து   நிறைவேற்றினார்.

யூன் 29, 2002 இல் விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த மதிமுக இன் 9 ஆவது தொடக்க விழாப்  பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வைகோ, பழ. நெடுமாறன், சுப வீரபாண்டியன், சாகுல் அமீது, கணேசமூர்த்தி, பாவாணன், பரந்தாமன், தாயப்பன் போன்றோர் மீது ஜெயலலிதா கொடிய பொடா சட்டத்தை ஏவி  சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பரப்புரை  செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெயலலிதா, ‘மதிமுக தடை செய்யப்படவேண்டிய இயக்கம் அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார்.

ஓகஸ்ட் 14, 2002  இந்திய விடுதலை நாளையொட்டிக் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழின உணர்வாளர்களுக்கு மறைமுகமாகச் சில எச்சரிக்கைகளை விடுத்தார். அவர் தனது உரையில், ‘‘மொழி, இன, வட்டார உணர்வு என்ற போர்வையில், சில சக்திகள் தலைதூக்க முற்பட்டுள்ளன. அந்தப் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் புகட்ட, இங்கே தடந்தோள்கள் உண்டு’’ என்று கூறினார்.

மதிமுக மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவந்த  இராமதாசு,  திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என இராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெயலலிதா பிரிவினைவாதம்   பேசுவோர் பயங்கரவாதிகள் எனச் சித்தரித்தார்.

எந்தவிதக் குற்றமும் இழைக்காத ஈழத்தமிழ் அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான தமிழகத்தின் முள் வேலிச் சிறையில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்க்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட ஒரு அரசாணையே போதுமானது. ஆனால், சிங்கள அரசிடமிருந்து விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, தனித் தமிழீழமே இலங்கையின் இனச் சிக்கலுக்கு தீர்வு எனப் பேசும் ஜெயலலிதா சிறப்பு முகாம்கள் எனும் இந்தக் கொடும் சிறையிலிருந்து ஈழத்தமிழர்களை விடுவிக்க ஏன் மறுக்கிறார்?

இந்த சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூடங்களை ஈழத்தமிழருக்காக உருவாக்கியது யார் தெரியுமா? சாட்சாத் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். 1990 ஆம் ஆண்டு இந்த அகதி முகாம்களை அவர்  உருவாக்கினார்.

செப்டம்பர் 2007 இல் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும் வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கலைஞர் கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெயலலிதா ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

இப்போது இலங்கையின் இனச் சிக்கலுக்கு தனித் தமிழீழம்தான் சரியான தீர்வுதனித் தமிழீழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

“அன்று ஈழத்தை எதிர்த்தார்,  இன்று ஆதரிக்கிறார்” என இன்றைய இளைய தலைமுறையினர் இதனை எளிமைப்படுத்திப் புரிந்துகொண்டு விடக்கூடாது.

எல்லாவிதமான மக்கள் சிக்கல்களையும் பின்னுக்குத் தள்ளி, புலிப் பூச்சாண்டி காட்டுவதையும் பயங்கரவாத அச்சத்தையூட்டுவதையுமே தனது பாசிச அரசியல் வழிமுறையாக 2009  வரை வைத்திருந்தவர் ஜெயலலிதா அவர்கள்.

“விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தோ, ஈழத்தமிழர் நலன் என்ற பெயரிலோ நடைபெறும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெயலலிதா.

செப்டம்பர் 1991 சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  மாநாடு தடை செய்யப்பட்டது.

சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற புஇமு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மாநாடும் தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியினர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் “சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு “ஈழ ஆதரவு, புலி ஆதரவு” எனக்கூறி நீக்கப்பட்டது.

இராஜீவ் காந்திக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுவதாகவும் ஜெயலலிதா சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்களைக் கூடத் தடைசெய்து இராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப் போவதாக மிரட்டினார்.

“என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தற்கொலைப்படை தமிழகத்துக்குள் இரகசியமாக ஊடுருவி உள்ளனர்” என  ஜெயலலிதா மனதாரப் பொய் சொன்னார். இராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்திவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தைத் தகர்க்கவும் இராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்” என்று சட்டசபையிலேயே புளுகி மக்களிடையே அச்சத்தை கிளப்பினார்.

1991இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார்.

பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.

ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும், ஈழ அகதிகள் வெளியேற்றப்படுவதை எதிர்த்த குற்றத்துக்காகவும்  தமிழகம் முழுதும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்பின் தோழர்கள் தடாவில் கைது செய்யப்பட்டனர். மகஇக  மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் உள்ளிட்ட 4 தோழர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

மருத்துவத்துக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை இராமகிருஷ்ணன் உள்ளிட்ட திராவிட கழகத்தினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.

ஜெயலலிதாவுக்கு வாழப்பாடி கும்பல் தொடர்ந்து கொடுத்த நிர்ப்பந்தத்தால், இராஜீவ் கொலைக்கு பின்னர், வாரம் ஒரு கப்பல் வீதம் ஈழ அகதிகள் கட்டாயப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

போயஸ் தோட்டத்துக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த நரிக்குறவர்களையும், “வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த “கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெயலலிதா.

“தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுருவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரகத் துப்பாக்கிகளும், சாதனங்களும் அவசியமாக உள்ளது” என்று கூறி இதற்காகக் கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்கென சிறப்பு நிதியைக் கேட்டுப் பெற்றுக்கொணடார்.

1992 இல் வி.புலிகளைத் தடை செய்யும் தீர்மானம் தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா வி.புலிகளை பயங்கரவாதிகள் எனச் சொல்லித்   தடைசெய்தது.

1992 இல்  தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில், புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் இராமதாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், ததே கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 7 பேர் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜெயலலிதா  அரசால் கைது செய்யப்பட்டனர்.    “தேசத் துரோக, பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்தார் ஜெயலலிதா.

இராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் அனுப்பிவிட்டு, நீதிபதி கந்தசாமி பாண்டியனை அமர்த்திப் பிணையை இரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.

தமிழகத்தில் கேடிகள், இரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறிப் பரப்புரை  செய்தார். நாகை கீவளூர் அருகே ஓட்டுனரை அடித்துப் போட்டு அவரது வண்டியைக்  கடத்தியதாகக் கூறி, 4 புலிகளை அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி கைது செய்ததாக ஜெயலலிதா  அரசு கூறியது.

மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் இரவுடிகளால் சமயநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி, “கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன்” என்று ஜெயலலிதா சபதம் செய்தார்.

1993 புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக பழ.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரை ஜெயலலிதா  கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் ஆதாரங்களைக் கொண்டு பழ.நெடுமாறன் போன்றோரை “தடா’வின் கீழ் சிறை வைத்தார்.

1993 மே “நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்” என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெயலலிதா.

பெரியார் திராவிட கழகத்தைச் சார்ந்த கோவை இராமகிருஷ்ணன், கோவையில் சிறு பொறியியல் தொழிலை நடத்தி வந்தார். அவரையும்  பெரியார் திராவிட கழகத்தின்  தலைமை நிலையச் செயலாளர் ஆறுமுகசாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதா  சிறையில் அடைத்து அழகு பார்த்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும் ஆயுத தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெயலலிதா  அரசு, அவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேசவிரோதமாகச் சதி செய்தாகக் குற்றம்சாட்டிய ஜெயலலிதா அவர்களை தடாச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

“திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை  ஜெயலலிதா  தடாவில் உள்ளே தள்ளினார்.

ஜெயலலிதாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும், அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு காவல்துறையால்  பிடித்துச் செல்லப்பட்டார். திமுக வை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்கும் நோக்கத்தில் ஐ.பி தயாரித்திருந்த சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அவர் மிரட்டப்பட்டார். அவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே, சட்டவிரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர்.

திலீபன் மன்றத்தின் சார்பில் தியாகு தொடுத்த ஆட்கொணர்வு மனுவால், 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார்.

நீதிமன்ற உத்திரவுப்படி பாலச்சந்திரன் மதுரைச் சிறையிலும் அடைக்கப்பட்டார். 1988 இல் நடந்த (அதாவது பாலச்சந்திரன் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய) கொடைக்கானல் தொலைக்காட்சிக் கோபுர வெடிகுண்டு வழக்கிலும்சென்னை நேரு சிலை குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து, குண்டுவைக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். (அந்தத் தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார்).

தேசியப் பாதுகாப்பு  சட்டக் காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992 இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தது. இந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் பாலசந்திரனை சிறப்பு முகாமில் ஜெயலலிதா  அரசு அடைத்தது.

கொடைக்கானல் குண்டு வழக்கில் அதிகாரிகள் இவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனால் நீதிமன்றத்தில் தோன்றவில்லை என்று கூறி பாலச்சந்திரன் மீது பிடியாணை  பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993 இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது.

மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய 14 நபர்களுக்கும் அப்போது பிணை வழங்க நீதித்துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் வைத்து அரசு அவரை வாட்டியது.

இன்று ஈழத்துக்கு ஆதரவாகக்  கூரையேறி கொக்கரிக்கும்  முதலமைச்சர் ஜெயலலிதா  ஈழத்தமிழர்களை எவ்வாறெல்லாம் வாட்டி, வதைத்து  சித்திரவதை செய்தார் என்பதற்கு பாலச்சந்திரனின் சோகக் கதை ஒரு எடுத்துக்காட்டாகும்.

1995 இல் தஞ்சையில் ஜெயலலிதா  நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தந்த முனைவர்  கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்களை  புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி நாட்டை விட்டு வெளியேற்றினார்.

ஜெயின் ஆணைக்குழுவின் விசாரணையில் “விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பாமக, தவிர மகஇக என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயலலிதா.

ஏப்பரில் 2002 புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால், பேச்சுவார்த்தைகளில் இந்தியா “பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாத அச்சத்தைக் கிழப்பி “புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது” என ஜெயலலிதா கொக்கரித்தார். வி.புலிகள் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை விட மோசமான பயங்கரவாதிகள் என ஜெயலலிதா வர்ணித்தார்.

“என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தற்கொலைப்படை தமிழகத்துக்குள் இரகசியமாக ஊடுருவி உள்ளனர்” என ஜெயலலிதா பச்சைப் பொய் சொன்னார்.

ஜெயலலிதாவின்  அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகள் செய்த படுகொலைகளைப் பட்டியல் போட்டு, “ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது” என நடுவண்  அரசுக்குக் கடிதம் எழுதினார். ஜெயலலிதாவின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

2008 இல் அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசாரிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்திருந்தனர். ஆனால், இச்சம்பவத்தைக் கூட ஜெயலலிதா விட்டுவைக்கவில்லை.

“கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது” என ஊளையிட்டார்.

“போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று சிங்கள இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்தினார். ஈழப்பிரச்சினைக்காகத் திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் என்றும், அவர்களைக் கைது செய்ய வேண்டுமென்றும் கருணாநிதியை மிரட்டினார். பிறகு திருமாவளவனைக் கைது செய்ய வேண்டுமென்றார். கடைசியில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

2008 அதியமான் கோட்டையில் காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசாரிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்திருந்தனர். ஆனால்,இச்சம்பவத்தைக் கூட ஜெயலலிதா விட்டுவைக்கவில்லை.

“கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது” என கூக்குரல் இட்டார். “இந்திய சிறப்பு நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர், இலட்சக்கணக்கான மக்களின் இறப்புக்கு காரணமாக இருந்த ஒருவர், ஒரு பயங்கரவாத அமைப்புக்கு தலைவராக இருப்பவர்…. இது  மட்டுமீறிய செயலாகும்” என்று ஆவேசப்பட்டார்.

ஜெயலலிதா தனது அரசியல் சுயலாபத்துக்காக எதையும்  செய்யக்கூடியவர். பேயோடும் படுக்கக் கூடியவர். பழிவாங்குவதில் பயங்கர கெட்டிக்காரர். அவரது சுயரூபத்தையும் கடந்த கால வரலாற்றையும்  மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அவர் இன்று போடும் நாடகத்தைப் பார்த்து  மக்கள் ஏமாந்து விடக் கூடாது. நாளை புலி எதிர்ப்பு தனக்கு அரசியலில் இலாபம் என்றால் அதனைக் கையில் எடுக்க கிஞ்சித்தும் தயங்கமாட்டார்.  அதனை நியாயப்படுத்த ஆயிரம் பொய் சொல்லக் கூடியவவர்.

இப்போது ஜெயலலிதா சிறிலங்கா தமிழர்களின்  சிக்கல் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.  சுதந்திர தனி ஈழம் ஒன்றே அவர்களது சிக்கலுக்கு ஒரே தீர்வு என திருச்சியில் ஏப்ரில் 26, 2016 அன்று நடந்த  தேர்தல் மேடையில் பேசியிருக்கிறார். தேர்தல் காலங்களில் இப்படி மேடைகளில் பேசுவதை அவர் ஒரு சடங்காக வைத்திருக்கிறார். 2009 இல் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தல் தொடக்கம் இந்த நாடகத்தை  அவர் அரங்கேற்றி வருகிறார்.

ஓகஸ்ட் 28, 2013 இல் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் போர்க்காலத்தில் பொதுமக்களைக் கொன்றொழித்தவர்கள் மீது போர்க்குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களைப் போல் ஒத்துரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது.

மார்ச் 27, 2013 அன்று தமிழகச் சட்டசபையில்   தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு கொண்டுவருதல், சிறிலங்காவை பகைநாடாக அறிவித்தல், போர்க்குற்றம் மீதான சர்வதேச விசாரணை, பொருளாதாரத்தடை போன்ற விடயங்களை இட்டு  ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில் தீர்க்கமாக வெளியிட்டு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

செப்தெம்பர் 2015 இல் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைத் தேவை என்று தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது.

ஆனால் இந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஜெயலலிதா எந்த முனைப்பையும் காட்டவில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் 37 உறுப்பினர்களை வைத்திருக்கும் அதிமுக இந்த தீர்மானங்கள் பற்றி எதையும் பேசவில்லை. எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. தமிழக சட்ட சபைத் தீர்மானங்கள் ஏட்டுச்  சுரைக்காயாகவே இருந்து வருகிறது.

ஜெயலலிதாவின் ஆதரவு எங்களுக்குத் தேவை. ஆனால் அவரது கடந்த கால அரசியல் வரலாறு – முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது – சந்தர்ப்பவாத அரசியல்    அதனைக் கேள்விக் குறி ஆக்குகிறது.  நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும்  அது எடுத்துக் காட்டுகிறது.

ஜெயலலிதா அவரது இதய தெய்வம்  எம்ஜிஆர் வழியில் வி.புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்திருந்தால் – தமிழீழ சிக்கலில் ஒருவர் மீது ஒருவர் பழிபோடாது ஜெயலலிதாவும் கருணாநிதியும் கைகோர்த்திருந்தால் –  இந்திய மத்திய அரசுக்கு கடிவாளம் போட்டிருக்கலாம். அதனை இவர்கள் செய்யவில்லை.

ஜெயலலிதா இன்று தேர்தல் காலத்தில் கருணாநிதி செய்தது துரோகம் எனக் குற்றம் சாட்டுவது  கறிச்சட்டி பானையைப் பார்த்து “நீ கருப்பு” என்று சொன்ன கதை போன்றது!

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply