நவராத்திரி நதிமூலம், ரிஷிமூலம், உண்மையான மூலம்
இதுதானப்பா கொலுவின் ரிஷி மூலம், நதிமூலம் உண்மையான மூலம் எல்லாம்.
நவராத்திரியின் ஜோடிக்கப்பட்ட கதை புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான தத்துவத்தையே கொன்றுவிட்டார்கள்.
ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது. சாதிக்க முடியாது’ என்று சொல்வதுதான் கொலு(!) தத்துவம்.
பகுதி – 57
சில பல அத்தியாயங்களாக பெண்கள், பெண் தெய்வங்கள் ஆகியோருக்கு நமது சம்ப்ரதாயம் சபித்து வைத்த அநியாயங்களை யெல்லாம் விஸ்தாரமாகவே பார்த்தோம். அவற்றைப் படித்து விட்டு… சில ஸ்திரீகள் என்னிடம் ‘இப்படியா ஸ்வாமீ… அப்படியா ஸ்வாமீ… என ஆச்சரியத்தை கொட்டினார்கள். அனுபந்தமாக ஒரு கேள்வியையும் கேட்டனர்.
பெண் தெய்வங்கள் கூட படாதபாடு படறாள்னு சொன்னீர்கள். ஆனா… பெண் தெய்வங்களுக்காகவே பிரத்யேகமாக நவராத்திரி கொண்டாடுகிறோமே… நான்கூட எங்க ஆத்துல நவராத்திரி 9 நாளும் கொலு வைக்கிறேனே… இது பெண் தெய்வத்துக்கு பெரிய விசேஷம்தானே…” என்றாள் அந்த சின்னப்பெண்.‘அப்படி வா வழிக்கு…’ என்று சொல்லிவிட்டு நவராத்திரி கொலுபற்றி அவளிடம் விளக்கத் தொடங்கினேன். அதை நீங்களும் கேளுங்கள்
நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக விசேஷமாக நடத்தப்படுகிறது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால்… இதன் நதிமூலம், ரிஷிமூலத்தைப் பார்த்தால் விஷயமும் வேறு. விசேஷமும் வேறு. அந்த ரிஷிமூலத்தை பார்ப்பதற்கு முன்பு… நவராத்திரியின் ஜோடிக்கப்பட்ட கதையைப் பார்த்து விடுவோம்.
மகிஷாசுரன் என்றொரு அரக்கன் எருமைத்தலையை உடையவன். தேவர்களுக்கு பெரும் துன்பங்கள் கொடுத்துக் கொண்டிருந்தவன். காரணம் அவன் பெற்றிருந்த ஒரு வரமாம். ‘என்னை கொல்ல முடியுமானால் அது ஒரு பெண்ணால்தான் நடக்கவேண்டும் என்பதுதான் வரம். அதாவது… பெண்ணால் என்ன செய்ய முடியும்? பெண் தெய்வங்களே கோயிலை விட்டு வெளியே வருவதில்லை. பிறகு எப்படி நம்மை அழிக்க முடியும்-என்ற நினைப்பு நம்பிக்கை அப்போது தேவர்களிடம் நிலவி இருந்ததால் அந்த அரக்கன் அப்படியொரு வரத்தை கேட்டான்.
தெய்வங்களும்… ‘பெண்கள்’ மீது வைத்திருந்த அபிப்ராயத்தாலோ என்னமோ வரம் கொடுத்துவிட்டன. பெண்தானே நம்மை அழிக்கவேண்டும். எந்த பெண்ணால் அது முடியும்?… என்ற திமிரில் கொடுமைகள் செய்ய ஆரம்பித்து விட்டான். இது சிவனின் மனைவி பராசக்திக்கு எட்டியது. “பெண்தானம்மா அவனை அழிக்க வேண்டும். அது எப்படி முடியப் போகிறது.உன்னால் அவனை அழிக்க முடியுமா?…” என்று பராசக்தியிடம் மற்ற தேவ, தேவதைகள் பிரார்த்திக்கிறார்கள்.
பராசக்தி யோசிக்கிறாள். ‘நம்மால் முடியுமா?…’ பக்கத்து வீட்டு பெண்கள் (!) போன்ற லட்சுமியிடமும், சரஸ்வதியிடமும் ஆலோசிக்கிறாள்.அவர்கள் சொல்கிறார்கள். ‘நமக்கு ஏது அவ்வளவு பலம்?… இறந்து போனவர்களுக்கு மோட்சம் கொடுக்கக்கூட வக்கில்லாதவர்கள் நாம். நம்மால் எப்படி ஒரு அரக்கனை கொல்லமுடியும்?…”…என பெண் தெய்வங்களே தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையோடு பேசுகின்றன.
சரி பிறகு?… என்ன செய்வது? அப்போது ஒரு கருத்து அங்கே உதிக்கிறது. அரக்கனை அழிக்க வேண்டுமென்றால் ஆண்களின் பலம் வேண்டும். ஆனால், பெண்ணால்தான் அவன் அழிவான் என அவன் தலையில் வரம் விதி வரைந்திருக்கிறது. அப்படியென்றால் என்ன செய்யலாம். தேவர்கள் அத்தனை பேரின் பலத்தையும் நாம் வாங்கிக் கொள்ளவேண்டும். அதன் மூலம் மகிஷாசுரனை அழிக்கவேண்டும்.
…என பெண் தெய்வங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த இடத்தில் வேதம் சொன்ன ஒரு உண்மையை இங்கே உங்களுக்கு சுட்டிக்காட்டி… புராணத்தை அதனுடன் ஒப்பிட்டுக் காட்ட பிரயாசைப்படுகிறேன்.
வேதம் என்ன சொன்னது?…“ஸ்த்ரீனாம் த்விகனம் ஆஹாரம்புத்தீஸ் சாபிசதுர் குணம்…” இதை வேதத்தில் பெண்களைப் பற்றிப் பார்க்கும் போதே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். அதாவது… பெண்கள் ஆண்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் அவர்கள், 4 மடங்கு புத்தியும், பலமும் ஆண்களைவிட அதிகமாக பெற்றிருப்பார்கள் என்றது வேதம்.
ஆனால்… புராணத்தில் நடக்கும் பெண் தெய்வங்களின் ‘Meeting’-கில் என்ன நடக்கிறது?‘ஆண்களின் பலத்தைப் பெற்றால்தான் நாம் பலமாக முடியும். அதன் மூலமாகத்தான் நாம் அசுரனை அழிக்க முடியும்…’ என்று பேசுகிறார்கள்.
சரி… விஷயத்துக்கு வருவோம். அனைத்து தேவாதி தேவர்களின் புஜபலம், பராக்கிரம பலம் அனைத்தையும் பெற முடிவு செய்தாள் பராசக்தி. பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களின் ஆற்றலையும் கேட்டாள் பராசக்தி. நீங்கள் உங்களது அனைத்து பலத்தையும் கொடுத்தால்தான்… நான் அந்த அரக்கனை அழிக்க முடியும். பெண்ணாகிய என்னால் தனித்து இயங்க முடியாது. உங்கள் கூட்டணி எனக்கு வேண்டும். தாருங்களேன் என்கிறாள்.என்ன செய்வது?… வரம் கொடுத்து மாட்டிக் கொண்டவர்களாயிற்றே. தங்கள் பலத்தை கொடுத்தார்கள். அனைத்து ஆண் தெய்வங்களின் பலத்தையும் உறிஞ்சிய பராசக்தி அந்த அரக்கனை அழித்தாள். உடனே தேவர்களெல்லாம் பராசக்தியை போற்றிப் புகழ்ந்து துதிபாடியிருக்க வேண்டுமே… எங்களைக் காப்பாற்றினாய் என்று அவளின் தாழ் பணிந்திருக்க வேண்டுமே… ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த பராசக்தி பெண்ணை யாரும் போற்றவில்லை புகழவில்லை. காரணம்…எல்லா பலத்தையும் கொடுத்துவிட்டார்களே…
அதனால் தேவர்கள் அனைவரும் அதுவரைக்கும் அப்படியே அசைவற்று பொம்மைகளாய் நின்றார்கள்…அந்த பொம்மைகள்தான்…
பகுதி – 58
கடந்த அத்தியாயத்தில் சொன்ன பொம்மைகளை நினைவுக்கு இழுத்து வாருங்கள்.அதைத்தான் கொலு… கொலு… என்று கொண்டாடுகிறார்கள். அதாவது… `பெண்ணால் எதையும் தனித்துச் செய்ய முடியாது, ஆண்களின் உதவியோடு தான் அவள் காலந்தள்ள முடியும்’ என்ற கருத்தைச் சொல்வதுதான் கொலுவின் உள்ளே குடியிருக்கும் நீதி.
சரி… இந்தப் புராணக் கதையை வைத்து பின்னிப்பின்னி பின்னர் செய்தது தான் கொலு பண்டிகையா?
இந்தப் புராணக் கதையின் மேல்தான் கொலு பொம்மைகளை நிறுத்தி வைத்தார்கள். அதாவது தேவர்களெல்லாம் பொம்மைகள் ஆகிவிட்டனர். அவர்களை நாம் வழிபட்டு, பராசக்தியின் புகழைப் போற்றவேண்டும் என்று அய்தீகம் வகுத்தனர்.பின்னர் இந்த கொலு கலாசாரத்தில் ஒரு பாகப் பிரிவினை போட்டி வந்தது. யாராருக்கு…? பார்வதி, லட்சுமி, சரஸ்வதி. யாரை அதிகம் போற்றுவது என்பதுதான் பிரச்சினை. அதையும் இங்கேயே முடிவெடுத்து விட்டார்கள்.
லட்சுமிக்கு மூன்று நாள், சரஸ்வதிக்கு மூன்று நாள், பராசக்திக்கு மூன்று நாள் சரியான பாகப் பிரிவினைதான்.
பிறகு… இதற்கு நைவேத்யத்தையும் நிர்ணயித்து விட்டார்கள். அதானே… விடுவார்களா. முதல் நாள் வெண்பொங்கல் படைக்கவேண்டும். இரண்டாம் நாள் புளியோதரையாம். மூன்றாம் நாள் சர்க்கரைப் பொங்கல். நான்காம் நாள் கதம்பசாதம். அதாவது பலதரப்பட்ட காய்கறிகளைப் போட்டு பண்ணப்படும் சாதம். அய்ந்தாம் நாள் தயிர் சாதம். ஆறாம் நாள் கொஞ்சம் வித்தியாசமாகத் தேங்காய் சாதம். ஏழாம் நாள் எலுமிச்சை சாதம். எட்டாம் நாள் பாயாசம் வை. ஒன்பதாம் நாள் மறுபடியும் சர்க்கரைப் பொங்கல் பண்ணு… என்றெல்லாம் நவராத்திரியின் பெயரைச் சொல்லி நவ நைவேத்யங்களையும் படைத்து விட்டார்கள்.
இதிலே இன்னொன்று… தினமும் சுண்டல் கடலை வேறு சேர்த்து விட்டார்கள். எனக்கொரு சந்தேகம்.. இந்த புளியோதரை, தயிர் சாதமெல்லாம் சாப்பிட்டுவிட்டு அரக்கர்களை அழிக்க முடியுமோ என்னமோ?
இப்படியாக வருஷத்துக்கு 9 நாள்கள் கொண்டாடப்படும் நிகழ்ச்சியைத்தான் கொலு என்கிறார்கள். கொலு… என்பதற்கு என்ன அர்த்தம் சொல்லப்படுகிறது என்றால்… இதுதான். ஆனால்… கொலுவின் நதிமூலம், ரிஷிமூலமே வேறு. நாம் கொண்டாடும் கொலு… நமது வாழ்க்கை முறையிலிருந்து வந்ததுதான். ஆனால்… புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான தத்துவத்தையே கொன்றுவிட்டார்கள்.
கொலுவுக்கும், பராசக்திக்கும் சம்பந்தம் இல்லை. கொலுவுக்கும், லட்சுமிக்கும் சம்பந்தம் இல்லை. கொலுவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பந்தமே இல்லை. பிறகு இதெல்லாம் எப்படி வந்தது?
அரக்கனை சொல்லி… அவனை அழிப்பதற்கு காரணம் சொல்லி… அதற்காக ஒரு கதையையும் சொல்லி – இன்று 9 நாள்கள் நவ நைவேத்யம் படைப்பதுதான் மிச்சம்.
அப்படியென்றால், கொலுவுக்கு என்னதான் அர்த்தம்? இதற்குப் பதில் காண மன்னர் காலத்துக்கு நாம் செல்லவேண்டும். அதாவது, பழங்கால தமிழ் மன்னர்கள் யுத்தத்துக்கு தயாராவதற்கு முன் பல விஷயங்களை சிந்திப்பார்கள். இப்போது போன்று அப்போதெல்லாம் நினைத்த உடனே பீரங்கிகளையும், யுத்த தளவாடங்களையும் தயாரித்துக் கொண்டு யுத்தத்தில் இறங்கிவிட முடியாது. சீதோஷ்ண நிலையை பொறுத்து தான் யுத்த தந்திரமே வகுக்கப்படும். ஏனென்றால், இயற்கையை அனுசரித்து வாழ்ந்த, வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்த காலம் அது.
அதில் மழைதான் மிக முக்கியமான அம்சம். எத்தனை பெரிய மன்னனாக இருந்தாலும் மழைக்காலத்தில் போர் தொடுக்க யோசிப்பான். ஏனென்றால்… காயும் சூரியனை தாங்கிக் கொண்டு போர் நடத்திவிட முடியும். ஆனால்… பேயெனக் கொட்டும் மழைக்குள் திட்டம், தந்திரம், தாக்குதல், வியூகம் எல்லாமே தலைகீழாக மாறிப் போய்விடக்கூடிய காலம் அது. இத்தனை காரணங்களால்… மன்னர்கள் தங்கள் சேனைகளையும், யுத்த தளவாடங்களையும் மழைக்காலத்தில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். வரிசையாக அவற்றை நிறுத்தி வைத்திருப்பார்கள். அதை பார்ப்பதற்கே ஒரு கம்பீரமாக, அழகாக வசீகரமாக இருக்கும்.
தனக்கு வெற்றி தேடித்தரும் செல்வங்கள் இவைதான் என்பதால்… படைத்தளபதியும், சேனாதிபதிகளும் அந்தப் போர் ஆயுதங்களை பழுது நீக்கி, புதிதாக்கி யுத்தத்துக்கு தயார் ஆவார்கள். வெற்றித் தேடித் தரவேண்டும் என்று வீரத்தோடு தங்கள் படைக்கலங்களுக்கு வணக்கம் செலுத்துவார்கள். மழை மெல்ல முடிந்ததும்… பதுங்கியிருந்த புலி பாய்வதுபோல பாய்ந்து எதிரிகளை வெல்வார்கள். இதுதானப்பா கொலுவின் ரிஷி மூலம், நதிமூலம் உண்மையான மூலம் எல்லாம்.
இதைப் பார்த்த பிராமணர்கள் தான்… இந்த தத்துவம் நன்றாக இருக்கிறதே. இதை பகவான் பெயரைச் சொல்லி பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்குமே? என யோசித்தார்கள். உண்டானது நவராத்திரி. 9 நாள் முடிந்ததும்… வெற்றிக்காக போருக்கு புறப்படுவதை விஜயதசமி ஆக்கினார்கள்.
இதில் லட்சுமி எங்கிருந்து வந்தாள்? பார்வதி எங்கிருந்து வந்தாள்? சரஸ்வதி எங்கிருந்து வந்தாள்? பெண் தெய்வங்களின் புகழ் பாடுகிறேன் என்று சொல்லியே… `ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது. சாதிக்க முடியாது’ என்று சொல்வதுதான் கொலு(!) தத்துவம்.
இந்த கொலு தத்துவத்தை செயல்படுத்துவதில் கூட நமக்குள் பற்பல வேறுபாடுகள். சிவனின் பெண்டாட்டி பார்வதி, விஷ்ணுவை பொம்மையாக்குவதா? அதை நாம் பண்டிகையாகக் கொண்டாடுவதா? என்று வைஷ்ணவர்கள் மத்தியில் ஒரு சங்கல்பம். எனவே, இன்றும் கொலு வைப்பதை வைஷ்ணவர்கள் சம்பிரதாயப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தனை கதைகளும் ஒரு உண்மையும் கொண்டதுதான் கொலு. அடுத்து? -அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 56-2. வேதப்படி கணபதி கடவுள் இல்லை.?? மிருகங்களை வழிபடுதல்.
Leave a Reply
You must be logged in to post a comment.