எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை – அரசியல் சமூக பகுப்பாய்வு
1972 ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். அன்றிலிருந்து ஜெயலலிதா மறையும் வரை தமிழகத்தின் பெரிய கட்சி என்கிற நிலையில் இருந்து அதிமுகவை யாரும் அசைக்க முடியவில்லை. தற்போது இருக்கிற அதிமுக இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்கிற விமர்சனம் எதிர்தரப்பிலிருந்து காட்டமாக வந்துகொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் அதிமுகவின் தொடக்கம் முதல் தற்போது உள்ள சூழல் வரை அரசியல் சமூக பகுப்பாய்வு அவசியமாகிறது.
1972 ம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தபோது, மு.க.முத்துவை திட்டமிட்டு வளர்த்தது, கட்சியில் கணக்கு கேட்டது போன்ற காரணங்களால்தான் எம்ஜிஆர் கட்சியை விட்டு விலகினார் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. இது ஒருபுறமிருந்தாலும்,எம்ஜிஆர் கட்சி தோற்றுவிக்க காங்கிரசுதான் காரணம் என்கிற நுட்பமான பார்வையும் அரசியல் பார்வையாளர்களிடம் இருந்தது. திமுகவினர் பலர் எம்ஜிஆர் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டு இதுதான்.இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்கிற திறனாய்விற்கு செல்லுவதற்கு முன் எம்ஜிஆரின் இயல்பை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
எம்ஜிஆர் திமுகவில் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்டபோதே காமராசரை தன் வழிகாட்டி என அறிவித்தார். அந்த சர்ச்சை கழகத்தில் சில நாட்கள் நீடித்து அதன் பிறகு அடங்கிவிட்டது. திமுகவில் அண்ணா கலைஞர் போன்றோர்களுக்கு இருந்த பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்கிற முத்திரை எம்ஜிஆருக்கு இல்லை. இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆருக்குக்கு கூட அந்த முத்திரை இருந்த்து. ஆனால் எம்ஜிஆருக்கு அந்த முத்திரை இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுநபர் என்கிற அடையாளம் தனக்கு வேண்டும் என்பதில் எம்ஜிஆர் தெளிவாக இருந்தார். திமுகவின் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆரின் திரைப்படங்கள் உதவியாக இருந்தன. தான் நடிக்கும் படங்களில் உதயசூரியன் என்கிற பெயர் வருமாறு பார்த்துக் கொள்வார் .அன்பே வா படத்தில் “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்கிற வரி வரும். அன்றைய காங்கிரசு அரசு உதயசூரியன் என்கிற வரியை தணிக்கை செய்து புதிய சூரியன் என்று வெளியிட்டது. நம் நாடு படத்தில் “காரிருள் மறையுதுங்க சூரியன் உதிக்குதுங்க” என்று ஜெயலலிதா பாடுவார்.
இது போன்ற எண்ணற்ற படங்களை சொல்ல்லாம். 72 வரை அவருடைய அனைத்து படங்களிலும் “அண்ணாவும்” “உதயசூரியனும்” குறியீடுகளாக தவறாமல் இடம்பெறும். 72 க்கு பிறகு,அண்ணா மட்டுமே தவறாமல் இடம்பெற்றார்.
எம்ஜிஆரால் திமுக வளர்ந்த்தா? திமுகவால் எம்ஜிஆர் வளர்ந்தாரா? என்றால், இரண்டுமே சரிபாதியாக நிகழ்ந்த்து. “முகம் காட்டு ராமச்சந்திரா முப்பது இலட்சம் வாக்குகள் திமுகவிற்கு” என்று அண்ணா சொன்ன வாசகம் திமுகவில் எம்ஜிஆருக்கு இருந்த வசீகரத்தை காட்டியது. திமுகவில் சிறு பிணக்கு ஏற்பட்ட சமயம் ‘என் கடமை’ படம் வெளியானது. படம் படுதோல்வியடைந்த்து. இந்த தோல்வி எம்ஜிஆரின் வெற்றிக்குப் பின்னால் திமுகவின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியது.
எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இருந்த்தா? இல்லையா? என்று தெரியவில்லை. எந்த திரைப்படங்களிலும் கடவுளை வணங்கியதாக காட்சி இல்லை. கதாநாயகியை கடவுளை வணங்க சொல்லிவிட்டு அமைதியாக நிற்பார். ஒருமுறை இதுகுறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தன் தாயைத்தான் கடவுளாக வணங்குவதாக தெரிவித்தார். ஆனாலும்,ஆன்மீகவாதிகள் அனைவரும் விரும்பத்தக்க தலைவராகத்தான் எம்ஜிஆர் இருந்தார். திமுகவின் மீது ஆன்மீகவாதிகளுக்கு இருந்த அதிருப்தி எம்ஜிஆரிடம் இல்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கிருபானந்தவாரியார் சம்பவத்தை சொல்ல்லாம்.
“கடவுள் இல்லை என்று சொல்பனுக்கே அமெரிக்காவிற்கே சென்று மருத்துவம் பார்த்தாலும் மரணம்தான்” என்று கிருபானந்தவாரியார் கூறினார். (அண்ணாவிற்கு அமெரிக்காவில் சிகிச்சையளித்தும் பலனிக்கவில்லை என்பதை மறைமுகமாக கிருபானந்தவாரியார் சுட்டிகாட்டுகிறார்). இது திமுகவிலிருந்த எம்ஜிஆர் ரசிகர் உட்பட பலரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. பல இடங்களில் கிருபானந்தவாரியார் உரை நிகழ்த்திய இடங்களிலெல்லாம் பதற்றம் ஏற்பட்டது. உடனே,எம்ஜிஆர் தலையிட்டு, கிருபானந்தவாரியாரை சமதானபடுத்தினார். அதன்பிறகு,கிருபானந்தவாரியார் தலைமையில் எம்ஜிஆருக்கு பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. “பொன்மனச்செம்மல்” என்கிற பட்டமும் எம்ஜிஆருக்கு கிருபானந்தவாரியாரால் வழங்கப்பட்டது.
அதிமுக எம்ஜிஆர்
72 ல் எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோது அவருக்கு கைகொடுத்த காரணிகள் இரண்டு
-
திமுகவிலிருந்த எம்ஜிஆர் ரசிகர்கள்
-
திமுகவிற்கு அப்பாற்பட்டு எம்ஜிஆரை நேசித்த அமைப்புகள் ,சமூகங்கள்,மாற்று கருத்தாளர்கள்
72 ம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி எம்ஜிஆர் பின்னால் திரண்டவர்கள் யார் என்பதை காண்பிக்கும் தேர்தல். 77 லில் எம்ஜிஆரை கோட்டைக்கு அனுப்பியது அருப்புக்கோட்டை. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக 80 ல் மதுரை மேற்கு, 84 ல்ஆண்டிப்பட்டி என தென்மாவட்டங்களையே தனக்கான களமாக கருதினார். திமுகவிலிருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர் திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையையோ, வடதமிழகத்தையோ, காவிரி கடைமடைபகுதிகளிலுள்ள ஏதேனும் தொகுதியையோ தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால்,எம்ஜிஆர் தேர்ந்தெடுத்த்தோ திமுகவிற்கு பெரிய வெற்றிவாய்ப்புகளை தந்திராத தென்மாவட்டங்களைத்தான். திமுகவில் இருந்தபோது 67 மற்றும் 71 ஆகிய இரண்டு தேர்தலைகளை சந்தித்தார். அப்போது பரங்கிமலைத் தொகுதியில்தான் நின்றார். அதாவது திமுகவிற்கு சாதகமான தொகுதி. ஆனால்,தனியாக கட்சி ஆரம்பிக்கும்போது தென்மாவட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்.
எம்ஜிஆர் பின் அணிதிரண்ட சமூகங்கள்
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, திமுகவின் சாதி ஒழிப்பு சுயமரியாதை திருமணசட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபாடில்லாத சமூகங்கள் எம்ஜிஆரின் பின்னால் அணி திரண்டன. குறிப்பாக பிரான்மலை கள்ளர்,கொண்டைய கொட்ட மறவர் ,கொங்கு வேளாள கவுண்டர் போன்றோர்களின் வாக்குகள் எம்ஜிஆருக்கு சாதகமாகின.
பார்ப்பன எதிர்ப்பில் தீவிரம் காட்டும் சமூகங்களான தஞ்சாவூர் கள்ளர்,வட தமிழகத்திலுள்ள வன்னியர், முதலியார் போன்ற சமூகங்கள் திமுக ஆதரவில் நிலைத்து நின்றன. காங்கிரசு வாக்கு வங்கியாக இருந்த ஆதிதிராவிடர்களும் கணிசமாக எம்ஜிஆருக்கு ஆதரவளித்தனர். மதுரை வீரன் படத்தில் இருந்தே எம்ஜிஆர் மீது காதல் வயப்பட்டிருந்த அருந்த்தியர்கள் அப்படியே எம்ஜிஆர் பக்கம் சாய்ந்தனர்.
தமிழகத்தில்,எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையில் எந்த சாதியும் சொந்தமும் கிடையாது பந்தமும் கிடையாது. அதுவே, எம்ஜிஆருக்கு சாதகமான அம்சமாகிவிட்டது. எம்ஜிஆர் திண்டுக்கல் இடைத்தேர்தலில் காமராசரிடம் ஆதரவு கேட்டார். காமராசர், அதிமுக திமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என கூறி ஆதரவு தர மறுத்துவிட்டார்.அந்த கோபத்தை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்தில் காண்பித்தார். “முதுகளத்தூர் கலவரத்தின்போது ,காமராசர் தேவர் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொண்டார்” என்று காமராசருக்கு எதிராக குற்றம்சாட்டினார். பெரும்பாலும் சாதியைப் பற்றி பேசாத எம்ஜிஆர், திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது காமராசரை எதிர்ப்பதற்காக சாதியை சொல்லி பேசினார்.
எம்ஜிஆரும் நடுவண் அரசின் செயல்பாடும்
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்திரா காந்தி ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்தார்.
தமிழகத்தில் நெருக்கடி காலத்தில் இந்திரா காங்கிரசை ஆதரித்த ஒரே மாநில கட்சி தமிழகத்தில் அதிமுக மட்டும்தான். நெருக்கடி நிலையை ஆதரித்த இந்திய பொதுவுடைமைக் கட்சி கூட பின்னாளில் இந்திரா ஆதரவு நிலை எடுத்தமைக்காக, வருத்தம் தெரிவித்த்து. இமயம் தொலைக்காட்சிக்கு எனக்களித்த நேர்காணலில், தா.பாண்டியன் இது குறித்து விரிவாக பதிவு செய்திருப்பார். ஆனால், நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்திக்கு ஆதரவு கொடுத்ததற்கு இதுவரை அதிமுக வருத்தம் தெரிவிக்கவில்லை. அந்த அளவிற்கு இந்திரா காந்திக்கு ஆதரவாக எம் ஜி ஆர் நடந்து கொண்டார்.
ஆனால், எம்ஜிஆர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபோது,மொரார்ஜி தேசாய் மத்தியில் பிரதமரானார். உடனே, சுதாரித்துக் கொண்டு மொரார்ஜியை முழுமையாக ஆதரிக்க ஆரம்பித்தார். மொரார்ஜி ஆட்சிக்குப்பிறகு சரண்சிங் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் பொம்மை அரசு என்று கூட சரண்சிங் விமர்சிக்கப்பட்டார். அந்த ஆட்சியில் மத்திய அமைச்சரைவயில் அதிமுகவின் இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றனர். திராவிட ஆட்சியில் மத்தியில் பங்கு வகித்த முதல் அமைச்சர்கள் என்கிற பெருமையை அதிமுக வழங்கியது..அதிலும் சத்தியவாணிமுத்து என்கிற ஒடுக்கப்பட்டோர் அரசியல் உணர்வுடைய ஆதிதிராவிட பெண் முதன் முறையாக மத்திய அமைச்சரவைக்குச் சென்றார்.
இவ்வாறாக,இந்திரா காந்தி,மொரார்ஜி தேசாய்,சரண்சிங் என யார் ஆட்சிக்கு வந்தாலும் எம்ஜிஆர் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கவே விரும்பினார். இந்திரா காந்தி மறைவிற்குப் பிறகு ராஜீவ் காந்தியுடன் எம்ஜிஆர் நல்லுறவுடன் இருந்தார். 84 தேர்தலில் இந்திரா காந்தி சாவுக்கு ஒரு ஓட்டு,எம்ஜிஆர் நோவுக்கு ஒரு ஓட்டு என்கிற வாசகம் மிகவும் பிரசித்திப்பெற்றது .அந்த தேர்தலில்தான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டே எம்ஜிஆர் வெற்றிப் பெற்றார்.
67ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுத்துக்கொண்டே வெற்றிப் பெறுவேன் என்று அண்ணாவிடம் சவால் விட்டவர் காமராசர். ஆனால்,உண்மையில் படுத்துக் கொண்’டே வெற்றிப் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்ஜிஆர்தான்.
மத்திய அரசை எதிர்கொண்ட வித்த்தில் எம்ஜிஆர் அண்ணாவின் அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. அண்ணா எழுதிய நல்ல தம்பி போல் நடந்து கொண்டார்.
ஜெயலலிதா வருகை
89ம் ஆண்டு தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் இல்லாமலே ஜெயலலிதா என்கிற தனிப்பட்ட வசீகரத்திற்கு வாக்களித்தனர் கொங்கு நாட்டு மக்கள்.அந்த கொங்கு நாட்டு கவுண்டர் மற்றும் அருந்த்திய சமூக மக்களின் வாக்குகளே ஜெயலலிதா அரசியல் பிரவேசத்திற்கு அச்சாணி போட்டது. ஏற்கனவே எம்ஜிஆருக்கு முக்குலத்தோர் ஆதரவு இருநத்து, ஜெயலலிதாவிற்கு கவுண்டர் செல்வாக்கும் இணைந்து ஜெயலலிதா அரியணை ஏற உதவியது. அன்றிலிருந்து அதிமுக, முக்குலத்தோர்+கவுண்டர் ஆதரவு கட்சியாகவே இருக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையைக் கவனித்தால் இந்த உண்மை நமக்குத் தெரியும்.
திராவிட இயக்கத்தில் ஜெயலலிதா ஆட்சி
91 ல் அதிமுக காங்கிரசு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ராஜீவ் படுகொலை ஜெயலலிதாவின் வெற்றிக்கு கூடுதல் காரணியாயிற்று. திராவிட இயக்க வரலாற்றில் ஆரியத் தலைமையா? என்கிற விமர்சனம் எழுந்த்து. சட்டசபையில் “ஆமாம் நான் பார்ப்பார்த்திதான் “ என்று ஜெயலலிதா பகிரங்கமாக சொன்னது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அதே சமயம் தமிழகத்திற்கான 68 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை பாதுகாத்து தந்தவர் ஜெயலலிதாதான். திராவிடர் கழகம் சமூக நீதி காத்த வீராங்கணை என்கிற பட்டம் தந்து மகிழ்ந்த்து. முதன் முதலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அங்கீகரித்தவர் ஜெயலலிதா. அதே போன்று உடனடியாக வாஜ்பாயி ஆட்சியை கவிழ்த்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவரும் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவிற்கு இருந்த்து இந்து மதப்பற்று என்று சொல்வதை விட வைணவப்பற்று என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். பல பாலாஜிக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்த்தற்கு, ஜெயலலிதாவின் வைணவபற்றும் ஒரு காரணம்.
கோவிலில் ஆடு மாடு வெட்டக்கூடாது சட்டம் கொண்டு வந்தவரும் ஜெயலலிதாதான். சங்கராச்சாரியாரை கைது செய்தவரும் ஜெயலலிதாதான். திராவிட இயக்கத் தன்மையிலிருந்து ஜெயலலிதாவை முற்றிலும் விலக்கியும் பார்க்கமுடியாது,முற்றிலும் ஆதரித்தும் பார்க்கமுடியாது.
நடுவண் அரசும் ஜெயலலிதாவும்
ஈழத்தமிழர் விவகாரம்,காவிரி பிரச்சனை,முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகளில் கடுமையான அழுத்த்த்தை நடுவண் அரசிற்கு கொடுத்தார். 2009 க்குப் பிறகு, ஈழஆதரவாளர்கள் பலருக்கு கருணாநிதி மீது இருந்த கோபத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார் ஜெயலலிதா.ஆரம்பத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஜெயலலிதா கடைசிகாலத்தில் ஈழத்தாயாக உருவகப்படுத்தப்பட்டார்.
தேசிய வளர்ச்சிக் குழு மாநாட்டில் தனக்கு பேச கூடுதல் நேரம் ஒதுக்கவில்லை என்பதற்காக இந்திய வரலாற்றிலே முதன்முறையாக வெளிநடப்பு செய்து இந்தியாவையே அதிர வைத்தார். காங்கிரசு எதிர்ப்பு உச்சத்தில் இருந்த்து.
2014 ல் மோடி பிரதமரானபோது, அதிமுக வலிமையான கட்சியாக தமிழகத்தில் இருந்த்து.. நீட் தேர்வு, ஜிஸ்டி வரி போன்ற விவகாரங்களில் மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் ஜெயலலிதா திண்ணமாக இருந்தார்.
2016 ல் மீண்டும் வெற்றிப்பெற்றபோது, அந்த வெற்றி கொண்டாடத்தக்க வெற்றியாக இல்லை. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக உருப்பெற்றிருந்த்து. மத்தியில் பலம் வாய்ந்த அரசு,மாநிலத்தில் பலமான எதிரக்கட்சி இந்த இரண்டையும் ஜெயலலிதா எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பதை நமக்கு பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
எடப்பாடியார் அதிமுக
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி என்பது முழுக்க முழுக்க நடுவண் அரசின் கையடக்கமான ஆட்சி. நீட்,ஜிஎஸ்டி என எல்லாம் மத்திய அரசின் ஆணைக்கிணங்க செயல்படும் அரசாகவே நீடிக்கிறது. ம்க்கள் செல்வாக்கு இல்லாத ஆளுமைகள் என்பதால் மத்திய அரசை துணிச்சலாக எதிர்க்கும் துணிச்சல் இல்லை. ஜெயலலிதாவின் 91,2001,2011 மூன்று ஆட்சிக் காலங்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தார். எதிர்க்கட்சி மிகச் சில இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த்து. ஆக,மத்திய அரசிடம் மோதிப் பார்க்கும் துணிச்சல் இருந்த்து.
. எம்ஜிஆர் ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமான நட்பை விரும்பினார். இருந்தாலும்,தனது ஆட்சியை கவிழ்த்தபோது,”ஆட்சியை கவிழ்த்துவிட்டார்கள் நான் என்ன குற்றம் செய்தேன்” என்பதையே மக்கள் மன்றத்தில் கேள்வியாக வைத்து, தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை எம்ஜிஆர் பெற்றார்.
தற்போது மோடி அரசு எடப்பாடி அரசை கவிழ்த்துவிட்டால்,மக்களை சந்தித்து வெற்றிப் பெறும் மக்கள் செல்வாக்கு இல்லை. ஆகவே.அவர்கள் அனுசரித்து போகவேண்டிய நிலையில் உள்ளனர். வருமான வரி சோதனையைக் காட்டி மத்திய அரசு மிரட்டுவதாக சொல்கிறார்கள்.
எம்ஜிஆர் ஆட்சியிலும் ஊழல் வழக்குகள் இருந்தன. ரே கமிசன்,பால் கமிசன் போன்ற கமிட்டிகளெல்லாம் 80 களில் மிகவும் பிரபலம். ஜெயலலிதா ஆட்சியின் மீதும் ஊழல் வழக்குகள் இருந்தன. எல்லாவற்றையும் தாண்டி ஜெயலலிதா மத்திய அரசோடு சமர் புரிந்த்தற்கு காரணம் அவருக்கு இருந்த ம்க்கள் செல்வாக்கு(crowd pulling personality).
எம்ஜிஆர் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார். ஜெயலலிதா சமர் புரிந்தார்.எடப்பாடியார் மத்திய அரசின் சொல்படி கேட்டு நடக்கும் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட கட்சி இன்று மத்திய அரசின் கட்சி என்று வெளிப்படையாக விமர்சிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.
– ஜீவசகாப்தன்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33475-2017-07-18-04-53-38?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29
Leave a Reply
You must be logged in to post a comment.