வீர.சந்தானம் முதல் வீர.சந்தனம் வரை!
தானே புயல் கடலூரைக் கலங்கடித்த தருணத்தில் விகடனைத் தொடர்புகொண்டார், ஓவியர் வீர.சந்தானம். ‘‘தமிழக ஓவியர்களை ஒருங்கிணைத்து விகடன் சார்பில் ஓவியக் கண்காட்சி நடத்துங்கள். ஆளுக்கு ஓர் ஓவியம் கேளுங்கள். ஓவியங்களை விற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை திரட்டலாம்’’ என்றார். அது நிகழ்ந்தது. பல லட்சங்கள் திரண்டது. தமிழ் மண்ணுக்காகவும் தமிழினத்துக்காகவும் எப்போதும் துடித்த நல்லிதயம் அவர்.
தஞ்சை மாவட்டம் கலைகளின் பூமி. சிற்பங்களும், ஓவியங்களும் இசையும், நாட்டியமும் ஒருங்கே வளர்ந்த இடம். வீர.சந்தானம் அவற்றோடு வளர்ந்தவர். கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்தவர் என்பதாலோ என்னவோ, சிற்பங்களின் மீது இயல்பாகவே அவருக்கு ஆர்வம் இருந்தது. கோயில் சிற்பங்களைப் பார்த்து வரையத் தொடங்கித்தான் அவருடைய ஓவியக் கலை வளர்ந்தது.
நெசவுத் துறையில் மத்திய அரசுப் பணியாளராக இருந்தபோது அவருடைய ஓவிய ஆற்றல் உச்சம் தொட்டது. ஆடைகளில் ஓவியங்கள் பவனி வந்தன. ஓவியத்தில் பல பரிட்சார்த்தங்களைச் செய்தவர். தூண் சிற்பங்களில் இடம்பெற்ற பறவைகளைத் தொகுத்து வரைந்தார். ‘சந்தியா ராகம்’ படத்தில் ஓவியராகவே அவருடைய பாத்திரம் அமைந்தது. ‘மகிழ்ச்சி’, ‘பீட்சா’, ‘கத்தி’ போன்ற திரைப்படங்களில் பெயர் சொல்லும் பாத்திரங்கள். கி.ராஜநாராயணன் எழுதி, இவர் நடிப்பில் வ.கௌதமன் இயக்கிய ‘வேட்டி’, சர்ச்சைக்குரிய குறும்படம்.
ஓவியர், நாடக நடிகர், திரைப்பட நடிகர், பேச்சாளர், சிற்பக் கலைஞர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் சந்தானம். இவை எல்லாவற்றையும்விட அவருக்கு இன்னொரு முகம் உண்டு. அது தமிழ் தேசியம். அவருடைய ஓவியங்கள் ஈழத்தைப் பற்றியே பேசின; அவர் உதடுகளும் ஈழம் பற்றியே பேசின. கட்சிப் பாகுபாடு இன்றி ஈழம் குறித்த எல்லா போராட்டங்களிலும் இடம்பெற்றார். வீர.சந்தானம் என்ற தம் பெயரை, வீர.சந்தனம் என மாற்றிக்கொள்ளவும் அவருடைய தமிழார்வமே காரணமாக இருந்தது.
தஞ்சைக்கு அருகே விளாரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சிற்பங்கள், அவர் கலை கற்ற தஞ்சையில் ஈழத்தின் சாட்சியாக இப்போதும் இருக்கின்றன.
– தமிழ்மகன்
ஓவியம்: பிரேம் டாவின்ஸி
Leave a Reply
You must be logged in to post a comment.