சோதிடப் புரட்டு (51- 60)

சோதிடப் புரட்டு (51)
ராஜிவ் காந்தி பதவிக்கு வாறது நிச்சயம்!   

கடந்த மே 4, 2004 ஆம் நாள் இரவு 11.51 மணிக்குப் புவியின் மென்நிழல் பரப்பினுள் (penumbra)  நிலா புகுந்த பொழுது கிரகணம் ஏற்பட்டது. இரவு 12.48 மணிக்குப் பின்னரே கிரகணம் வெற்றுக் கண்ணுக்குத் தெரிந்தது. பின்னர் நிலா அதிகாலை புவியின் கருநிழல் பரப்பினுள் (umbra) புகுந்த பொழுது முழுமையான சந்திர கிரகணம் ஏற்பட்டது. அது அதிகாலை 3.08 மணி வரை நீடித்தது. பின்னர் அதிகாலை 5.10 மணிக்கு கிரகணம் நிறைவடைந்தது.

இந்தச் சந்திர கிரகணம் இந்தியா, ஆப்கனிஸ்தான், கிழக்கு ஐரோப்பா நாடுகளில் முழு அளவிலும், மேற்கு அய்ரோப்பா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்குப் போன்ற நாடுகளில் குறைவான அளவிலும் தெரிந்தது. வட அமெரிக்காவில் தெரியவில்லை.

அடுத்த சந்திர கிரகணம் ஒக்தோபர் 28 இல் இடம் பெறும். அது வடமேற்கு அய்ரோப்பா,அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் முழு அளவில் தெரியும். ஏறத்தாள ஓர் ஆண்டு இடைவெளியில் இடம்பெறும் மூன்றாவது சந்திர கிரகணம் இதுவாகும். கடந்த 2003 மே 15, 16 மற்றும் நொவெம்பர் 8 நாள்களில் சந்திர கிரகணம் இடம் பெற்றது.

இப்பொழுது அதிகாலை நேரங்களில் வானத்தில் இரு புதிய வால்வெள்ளிகள் (comets)  மற்றும் வியாழன், சனி, வெள்ளி, செவ்வாய், புதன் முதலிய கோள்களைக் காணலாம்.

இந்த வால்வெள்ளிகளின் பெயர் நீட் (Neat) மற்றும் லீனியர் (Linear) என்பதாகும். லீனியர் வால்வெள்ளி சிறிய வாலுடன் கூடிய மங்கலான ஒளிப் பந்துபோல் தொடக்கத்தில் தோன்றினாலும், மே மாதத்தின் நடுப்பகுதியில் தூசு மற்றும் வாயுவினாலான அதன் வாலுடன் ஒளிமயமாகத் தெரியும். இந்த வால்வெள்ளியை வானின் தென்மேற்குத் திசையில் பார்க்கலாம்.

நீட் வால்வெள்ளி

ஞாயிறு மறைந்து ஒருமணி நேரத்தின் பின்னர், சைரியஸ் (Sirius) நட்சத்திரத்தின் அருகில் ஆகாயத்தின் தென்மேற்குத் திசையில் நீட் வால் நட்சத்திரம் தோன்றும். மே முதல் கிழமையில் இருந்து இதைத் லீனியர் வால் வெள்ளி தெளிவாகப் பார்க்கமுடியும்.

சந்திர கிரகணம் ஏற்படுவது ஒரு சாதாரண நிகழ்வு. ஞாயிறு, புவி, நிலா இந்த மூன்றும் அதே வரிசையில்  நேர்க் கோட்டில் வரும்பொழுது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஆண்டில் இருமுறை முழுக் கிரகணம் ஏற்பட வாய்ப்புண்டு. சந்திர கிரகண நேரத்தில் சந்திரனில் இருந்து புவியைப் பார்த்தால் புவி ஞாயிறை மறைப்பததைக் காணலாம்.

வானியல் பற்றிய அறிவு குழந்தைப் பருவத்தில் இருந்த காலத்தில் சந்திர-சூரிய கிரகணங்களைக் கண்டு மக்கள் அச்சம் அடைந்தார்கள். இராகு கேது என்ற பாம்புகள் சந்திர-சூரியரைக் கவ்வுவதால் கிரகணம் ஏற்படுகிறது என்று நம்பினார்கள்.

இந்த மூட நம்பிக்கையைச் சோதிடர்கள் இன்னும் கைவிடவில்லை. தென்னிலங்கையைச் சேர்ந்த காமினி விக்கிரமசூரியா என்ற சோதிடர் இந்த சந்திர கிரகணமும் வால் நட்சத்திரங்களும் ஒரே சமயத்தில் தோன்றுவது நாட்டிற்குக் கேடு என்றும் நாடு போருக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றும் எதிர்வுகூறல் கூறியிருக்கின்றார். மேலும் மக்கள் எதிர்வு பாராத விபத்துக்களைச் சந்திக்க வேண்டி வரலாம் என்றும் இவ்வாறானதொரு சந்திர கிரகணம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் ஏற்பட்டபொழுது நாட்டில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதிகமானோர் இறந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சோதிடர் சொல்லும் விபத்துக்கள், வெள்ளப் பெருக்குகள் ஆண்டு முழுவதும் நடைபெறுபவை. சந்திர கிரகணம் இடம் பெறாதபொழுதும் நடைபெற்றவையே.

இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது 14 வது மக்கள் அவைக்கான நான்காவது  கட்டத் தேர்தல் மே 5 இல் நடந்து முடிந்துள்ளது. முதல் மூன்று கட்டத் தேர்தல் முறையே ஏப்ரில் 20, 22, 26 இல் முடிவடைந்தது. இறுதிக் கட்டத் தேர்தல் மே 10 (2004) இல் நடைபெற உள்ளது.

தேர்தல் முடிவுகள் மே 13 இல் இருந்து வெளிவரத் தொடங்கும். மக்கள் அவைக்கான மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆகும்.

தொடக்கத்தில் செய்தி ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புக்கள் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலுள்ள தேசிய சனநாயக முன்னணி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தன. ஆனால் மூன்றாவது நான்காவது கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்த பின்னர் வெளிவந்த கருத்துக் கணிப்புகள் (Exit Poll)  எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் பெரும்பாலும் தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் எனச் சொல்கின்றன.

இந்தியா பெரிய நாடு. மொத்தம் 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் கொண்டது. மக்கள் தொகை 102 கோடி, வாக்காளர் எண்ணிக்கை 65 கோடி. எனவே துல்லியமாக ஒரு கருத்துக் கணிப்பு எடுப்பது எளிதான செயல் அல்ல. முந்திய தேர்தல்களில் ஊடகங்கள் தெரிவித்த கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலும் பொய்த்திருக்கின்றன.

ஆனால் சோதிடர்களோ வீட்டில் இருந்து கொண்டு மிக எளிதாகத் தேர்தல் முடிவுகளை எதிர்வுகூறி விடுகின்றார்கள்.

கடந்த சனவரி மாதம் பூரியில் (ஒரிசா மாநிலம்) அனைத்துலக சோதிடர்களின் மாநாடு நடந்தது. ஒரு கிழமை நீடித்த இந்த மாநாட்டில் இந்தியாவின் 24 முன்னணிச் சோதிடர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களோடு அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க், நேபாளம் மற்றும் அய்ரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ‘உலகப் புகழ்’ பெற்ற 35 முன்னணி சோதிடர்களும்  கலந்து கொண்டார்கள்.

மாநாட்டின் இறுதி நாளன்று உலகத் தலைவர்களின் ஆட்சி பற்றிச் சோதிடர்கள் அலசி ஆராய்ந்தனர். அப்பொழுது பிரதமர் வாஜ்பாய் சாதகமும் கணித்துப் பார்க்கப்பட்டது.

“வாஜ்பாயின் சாதகப்படி அவருக்கு ‘மகாராஜ யோகம்’ நீடிப்பதால் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துப் பிரதமர் பதவியை ஏற்பார் என்று சோதிடர்கள் பலன் சொன்னார்கள்.  அவரது சாதக பலன்படி இந்தியாவில் அவர் அமைதியையும் நல்ல வளத்தையும் ஏற்படுத்துவார். சோனியா காந்தி சாதகப் பலன்களும் நல்ல விதமாகத்தான் உள்ளன. என்றாலும் வாஜ்பாய் சாதக அமைப்புப்படி அவருக்குச் சோனியாவை விட கூடுதல் கிரகங்கள் நட்சத்திரங்களின் அனுக்கிரகங்கள் இருப்பதால் அவரால்தான் ஆட்சியை பிடிக்க முடியும்’ என்று சோதிடர்கள் சொன்னார்கள்.

ஆனால், நடந்து முடிந்த (2004) தேர்தலில் வாஜ்பாயின் கூட்டணி தோற்றுப் போய்விட்டது. மகாராஜயோகம் நடப்பதாகச் சொன்ன மனிதர் இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வரமுடியவில்லை!

தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் தேசிய சனநாயக கூட்டணிக்கு வாக்களித்திருந்தால் மட்டுமே வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வந்திருக்க முடியும். இதற்கும் அவரது மகாராஜ யோகத்திற்கும் என்ன தொடர்பு? பிரதமராக வருவதற்கு மக்கள் ஆதரவு  தேவையில்லை. ‘மகாராஜ யோகம்’ நடந்தால் போதும் என்பது வடிகட்டிய மடத்தனமாகும்.

மறைந்த சோதிடர் பி.வி. இராமனைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது.  உலகப் புகழ் பெற்ற இவர் இந்திய சோதிடர்களின் முடிசூடா மன்னர் எனக் கொண்டாடப்பட்டவர். இவரிடம் தங்கள் சாதகத்தைக் காட்டிப் பலன் கேட்காத இந்திய-ஸ்ரீலங்கா ஆட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், தொழிலதிபர்கள், பெரிய உத்தியோகத்தர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

பி.வி. இராமன் நூற்றுக்கு மேலான சோதிட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். சோதிட இதழ் (The Astrological Magazine ) என்ற ஏட்டுக்கு நீண்ட காலம் ஆசிரியராக இருந்தவர். இவர் 1998 இல் தனது 87 ஆவது வயதில் மாரடைப்பால் இறந்து போனார்.
பி.வி. இராமன் 1989 ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபைக்கு நடந்த தேர்தலில் என்.ரி. இராமராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று கணித்துச் சொன்னார். ஆனால், அவரது கணிப்பு முற்றாகப் பிழைத்து விட்டது.  இந்திய காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டில் ஏறியது. ([ndia Express Express  – 12-7-1989 )

இராமன் தனது சோதிட இதழில் (சனவரி 79, யூலை 79, நொவெம்பர் 79 மற்றும் சனவரி 80) சொல்லிய அரசியல் ஆரூடங்களும் பிழைத்துப் போயின (Ref: Science, Non – science and the Paranormal).   1952 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாகக் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை (1989) வெளியிடும் முன்னர் பரப்புரையைத் தொடக்கியது. தேர்தல் அறிக்கை நொவெம்பர் 3 ஆம் நாள் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், கோள்கள் நட்சத்திரங்களின் பார்வை சாதகமாக இல்லாததால் அதனை அடுத்து வரும் திங்கட்கிழமை வெளியிடுமாறு சோதிடர்கள் ஆலோசனை கூறினார்கள்.

இவ்வளவு தற்பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றுப் போனது. தேர்தல் முடிவை முன்கூட்டிக் கணித்துக் கூறிய சோதிடர்கள் பலர் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்வு கூறியிருந்தனர்.

பல சோதிடர்கள் ராஜிவ் காந்தி திரும்பி அதிகாரத்துக்கு வந்தாலும் அதிகளவு மாநிலங்கள் காங்கிரஸ் அல்லாத கட்சிகளது பிடிக்குள் வரும் என்று எதிர்வுகூறல் சொன்னார்கள்.

அமைச்சர் கே. நட்வார் சிங்  தனது மதுரா தொகுதியில் மாட்டுச் சாணியால் கோவர்த்தன கிரி போல ஒரு மாதிரி மலையைச் செய்து அதன் மேல் 101 லிட்டர் பால் ஊற்றி  அபிசேகம் செய்தார். திருமதி சிங் அவர்களும் அந்த பாலாபிசேக விழாவில் கலந்து கொண்டார். (Times of India  6-11-89)

மும்பையைச் சேர்ந்த பிரபல சோதிடர் ஜாகித் உப்பால் ராஜிவ் காந்திக்குக் கிடைக்கக் கூடிய பெரும்பான்மையின் எண்ணிக்கையை சரியாகக் கூற முடியாவிட்டாலும் அவர் பதவிக்கு வருவது நிச்சயம் என்று அடித்துக் கூறினார். ராஜிவ் காந்தியின் ஜாதகம் கோள்கள் சாதகமான வீடுகளில் இருப்பதைக் காட்டுவதாக சோதிடர் ஜாகித் உப்பால் தெரிவித்தார்.

கரிகிருஷ்ணா என்ற சோதிடர் ராஜிவ் காந்தியின் குண்டலி (சாதகம்) பற்றிக் கருத்து வேறுபாடு இருந்தாலும் குருவின் பார்வை பலமாக இருப்பதால் எமது பிரதமர் வெற்றிவாகை சூடுவார் என்று சொன்னார்.

மும்பையை சேர்ந்த ராக்குவீர் என்ற சோதிடர் மட்டும் பிரதமருக்கு எதிராகச் சுமத்துப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏராளமாக இருப்பதால் அவற்றை சாதாரண பொது மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள் என்று சொன்னார்.

தில்லியை இருப்பிடமாகக் கொண்ட சோதிடர் ஒருவர் தேர்தலில் (1989) இந்திய காங்கிரஸ் 130-140 ஆசனங்களைக் கைப்பற்றும்,  ராஜிவ் காந்தி அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றப்படுவார், யூறேனிஸ் மற்றும் நெப்தியூன் பாகைக்குப் பாகை ஒருங்குசேர்கின்ற  (conjunction)  காரணத்தால் ஆளும் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போகும்.  தேசிய முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு 270 ஆசனங்களைக் கைப்பற்றும் எனச் சொன்னார்.

ஆனால், ஒரு சோதிடராவது தேசிய முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்வுகூறல் சொல்லவே இpல்லை!

காங்கிரஸ் கட்சி வாக்காளப் பெருமக்களை நம்பாது  சோதிடர்களையும் பூசாரிகளையும் நம்பி ஏமாந்து போயிற்று! யாகங்களால் எந்தப் பயனும் இருக்கவில்லை. சோதிடர்களாலும் பயன் இல்லாமல் போய்விட்டது. பிரதமர் வி.பி. சிங்கின் தலைமையில் மாற்றுக் கட்சிகள் 02-12-1989 இல் ஆட்சி அமைத்தன!


சோதிடப் புரட்டு (52)
மூக்குடைபட்ட சோதிடர்கள்!

கடந்த சனவரி மாதம் ஒரிசா மாநிலம் பூரியில் உலகப் புகழ் பெற்ற சோதிடர்கள் கலந்து கொண்ட அனைத்துலக சோதிடர்களின் மாநாடு பற்றி முன்னர் எழுதியிருந்தேன்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி சோதிடர்களும் அமெரிக்கா, பிரான்சு, அவுஸ்திரேலியா, டென்மார்க், நேபாளம் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சோதிடர்களும் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டின் இறுதி நாளன்று உலகத் தலைவர்களின் ஆட்சி பற்றி சோதிடர்கள் அலசி ஆராய்ந்து அடல் பிகார் வாஜ்பாயின் சாதகப்படி அவருக்கு ‘மகாராஜ யோகம்’ நீடிப்பதால் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து பிரதமர் பதவியில் தொடர்வார் என்று சோதிடர்கள் கணித்துச் சொன்னார்கள்.

‘சோனியா காந்தி சாதகப் பலன்களும் நல்ல விதமாகத்தான் உள்ளன. என்றாலும் வாஜ்பாய் சாதக அமைப்புப்படி அவருக்குச் சோனியாவை விட கூடுதல் கிரகங்கள் நட்சத்திரங்களின் அனுக்கிரகங்கள் இருப்பதால் அவரால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்று சோதிடர்கள் அடித்துச் சொன்னார்கள்.

இந்தச் சோதிடர்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள வேறு பிரபல சோதிடர்களும் லோக் சபை தேர்தலில் பாராதிய ஜனதா வெற்றி பெறும் வாஜ்பாய் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பார் என எதிர்வுகூறல் சொல்லியிருந்தார்கள்.

இந்திய இணைய தள ஏடான வுhந சுநனகைக ளுpநஉயைட (ஆயல 12இ2004) ‘நட்சத்திரங்கள் வாஜ்பாய்க்கு அனுகூலமாக இருக்கின்றன’ (Stars favour Vajpyee) என மகிடமிட்டு ஒரு சிறப்பு இதழை வெளியிட்டிருந்தது. அதில் பிரபல சோதிடர்களைச் செவ்வி கண்டு அவர்களது எதிர்வுகூறல்களை எழுதியிருந்தது.

டாக்டர் கீர்த்தி ராஜ்  (36) என்பவர் எம்.ஏ. (அரசியல்) பட்டதாரி. திருப்பதி பல்கலைக் கழகத்தில் படித்து சோதிடக் கலையில் முனைவர் (Ph.D) பட்டம் வாங்கியவர். மூன்றாவது தலைமுறை சோதிடர். சோதிட சாத்திரம் பற்றி எட்டுப் புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது தந்தையார் கே. நாகராச ராவ் சுமார் 5,000 சோதிடர்களைப் பயிற்றிவித்து இருக்கின்றார். அவர்கள் இப்பொழுது இந்தியா முழுதும் தொழில் பார்க்கின்றார்கள்.

முனைவர் ராஜ் அரசியல்வாதிகள் விரும்பித் தேடியலையும் ஒருவர். தேர்தல் காலங்களில் பங்கர் ஜெயநகரில் இருக்கும் அவரது அலுவலகம் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இம்முறை தனது அலுவலகத்தில் 32 அருச்சகர்களை வைத்து 138 வேட்பாளர்களுக்கு நாளும் பொழுதும் பூசை செய்வித்தார். இந்த நிமிடத்திலும் அவரது அலுவலகத்தில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு பூசைகள் நடந்த வண்ணம் உள்ளன. இந்தப் பூசைகள் மே 13 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை தொடரும்.

கடந்த முறை ஒரு திங்களுக்கு முன்னரே பல முன்னணி ஏடுகளில் பிரசுரிக்கப்பட்ட இவரது தேர்தல் எதிர்வுகூறல்கள் சரியாக அமைந்திருந்தன. முனைவர் ராஜ் தேர்தல் 2004 பற்றி எம்மோடு தனியாகப் பகிர்ந்து கொண்ட எதிர்வுகூறல்களைக் கீழே தருகிறோம்.

அடல் பிகாரி வாஜ்பாயின் சாதகத்தில் தற்பொழுது நல்ல யோகம், வசுமதி யோகம், காணப்படுகிறது. நான் அவர் நிச்சயமாக மீண்டும் பிரதமராக வருவார் எனத் திடமாக எதிர்வுகூறல் சொல்லுகின்றேன். தேசிய சனநாயகக் கூட்டணி மீண்டும் நாட்டை ஆளும், பாரதிய ஜனதா கட்சிக்கு  280-290 ஆசனங்கள் கிடைக்கும் என ஆரூடம் சொல்கின்றேன். சென்ற தேர்தலுக்கு சற்று முன்பாக பாரதிய ஜனதா கட்சி 2007 மட்டும் பதவியில் இருக்கும் என ஆரூடம் சொன்னேன், அதனை நான் மீண்டும் சொல்கின்றேன்.

வாஜ்பாயிக்கு ஒன்றரை ஆண்டு கழித்து அவரது உடல் நலம் பற்றிப் பாரதூரமான சிக்கல் ஏற்படும். அந்தக் கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படும். அப்பொழுது பிரதமராக வருவதற்கு எல்.கே. அத்வானிக்கு நல்ல வாய்ப்புள்ளது.

இந்தத் தேர்தல் சந்திர -சூரிய கிரகணங்களுக்கு இடையில் நடக்கிறது. இதன் காரணமாக கருத்துக் கணிப்புக்கள் (exit polls) எல்லாம் பொய்யானவை என்பது எண்பிக்கப்படும்.

இராசன் சர்மா ராஷ்திரிய என்ற சோதிடர் மும்பாய் சாகர் கல்வி நிறுவனத்தில் கடந்த 14 ஆண்டுகளாகச் சோதிடம் படிப்பித்து வருகின்றார்.

எண் 13 மீண்டும் வாஜ்பாயின் (சாதகத்தில்)  வாழ்க்கையில் முக்கிய பாத்திரம் வகிக்க இருக்கிறது. வாக்குகள் எண்ணும் தேதி மே 13 ஆகும். (ஆசிரியர் குறிப்பு – 1997 இல் எண் 13 வாஜ்பாய்க்கு துரதிட்ட எண்ணாக இருந்தது. அவரது ஆட்சி 13 நாள்களில் கவுண்டது. 1998 இல் அவரது ஆட்சி 13 மாதங்களே நீடித்தது. ஆனால், அதன் பின்னர் 13 வது லோக் சபை பிரதமர் வாஜ்பாயின் தலைமையில் 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது.)

வாஜ்பாயின் கிரக நிலை அடுத்த அரசை அமைப்பதற்கு அவருக்கு அனுகூலமாக இருக்கின்றது. அவரது ஆட்சி சுமுகமாகச் செயல்படுவதற்கு அது மேலும்  உதவியாக இருக்கும். மே 13 பூர்வபட்ச (வளர்பிறைத் திதிகள்) நாளாகும். இது வாஜ்பாய்க்கு அதிட்ட நாளாகும்.

இந்தக் காலத்தில் வாஜ்பாயின் வியாழனும் புதனும் முக்கோணமாக அமையப் போகிறது. வியாழன் விரிவாக்கம் பற்றிக் கதைக்கிறது. எனவே அது அரசு அமைப்பதற்கு அவருக்கு அனுகூலமாக இருக்கும். தேசிய சனநாயக அரசோடு இணைந்திருக்கும் எவரும் அதோடு நட்புப் கொண்டிருப்பர். அதனை விட்டு அகல மாட்டார்கள்.

வாஜ்பாயின் உடல்நலம் அவருக்கு அனுகூலமாக இருக்கும்.  மே 28, 2011 வரை அதிகாரத்தை கையாளும் திறமை அவருக்கு இருக்கும்.

உறுதி எடுத்துக் கொள்ளும் சடங்கு  (swearing-in ceremony) அரசின் மீது தாக்கத்தை உண்டாக்கும். எனவே வாஜ்பாய் 1999 இல் செய்தது போல் அந்த நாளை சரியாகத் தெரிவு செய்ய வேண்டும்.

கிரக நிலை காங்கிரஸ் தனது லோச் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்ட உதவி செய்யும். ஆனால், ஆட்சி அமைப்பதற்குரிய எண்ணிக்கை இருக்காது. சோதிடத்தின் மூன்று அம்சங்கள் சோனியா காந்திக்கு எதிராகச் செயல்படுகின்றன.

1) அவரது வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிரகங்கள் எதிர்வு எதிராக இருக்கின்றன. இந்த  இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கு ஒன்று போட்டிக் கிரகங்கள்.

2) நெப்தியூன் பிந்து லக்கினத்துக்கு எதிராக இருக்கின்றது.

3) புளுட்டோ யூறேனிசுக்கு நேர் எதிராக இருக்கிறது.

ரவி கிஷோர் நாராயன் பட்னாவில் இயங்கும் இந்திய சோதிட சபையின் உப தலைவர். மூன்று சகாப்தங்களுக்கு மேலாகச் சோதிடம் பார்ப்பதை முழு நேரத் தொழிலாகக் கொண்டிருகிறார். ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு ஒரு சகாப்தத்திற்கு மேலாகச் சோதிடம் சொல்லி வருகின்றார்.

மார்ச்சு 14, 2004 இல் இருந்து வாஜ்பாய்க்கு வியாழனின் மகாதெசையில் உள்ள அந்ததெசை ஆரம்பித்துள்ளது. எனவே அவர் உச்சம் பெற்ற இலக்கினத்திலும் ராஜயோக தெசையிலும் இருக்கின்றார்.

எனவே வாஜ்பாய்க்கு சிறுபான்மை மக்களது ஆதரவு முன்னரைவிட அதிகமான வாக்குகளைக் கொண்டு வரும். அவரது தேசிய சனநாயக கூட்டணி பதவிக்கு மீண்டும் வரும். ஆனால், அந்தக் கூட்டணியின் கலவையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

பாவங்கள் இந்தச் சோதிடர்கள். சரியான கோமாளிகள் (jokers) ஆக இருக்கின்றார்கள். இவர்கள் சொல்லிய எதிர்வுகூறல் அனைத்தும் பொய்த்து விட்டன. இந்திய நாட்டு வாக்காளப் பெருமக்கள் இந்தச் சோதிடர்கள் முகத்தில் சரியாகக் கரி பூசி விட்டார்கள். கிரகங்களும் நட்சத்திரங்களும் யோகங்களும் இவர்களை அடியோடு கைவிட்டு விட்டன.

உண்மையில் சோதிடர்களுக்கு இந்தத் தேர்தல் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. தங்கள் அம்மணக் கோலத்தை மறைக்க ஒரு சின்னக் கச்சைத் துண்டு கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

தேர்தலில் படு தோல்வியைத் தழுவிக் கொண்ட மகாராஜயோக பிரதமர் வாஜ்பாய் தனது பிரதமர் பதவி விலகல் கடிதத்தை ஆட்சித் தலைவரிடம் கொடுத்துள்ளார்!

இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது 13 வது லோக் சபைக்கான தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.  இதுவரை வெளிவந்த 539 முடிவுகளின் அடிப்படையில் (நான்கு தொகுதிகளில் மறு தேர்தல் நடைபெற இருக்கின்றன) இந்திய தேசிய காங்கிரஸ் அணிக்கு 219 இடங்களும், தேசிய சனநயாக கூட்டணிக்கு (பாரதிய ஜனதா) 188 இடங்களும்,  பிற கட்சிகளுக்கு 132 இடங்களும் கிடைத்துள்ளன.

எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளது ஆதரவுடன் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

தேர்தல் முடிவைத் தீர்மானிப்பது மக்களது வாக்குப் பலமே அன்றி வேறொன்றும் இல்லை. தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கின்றார்களோ அந்தக் கட்சிதான் ஆட்சியை பிடிக்க முடியும். அந்தக் கட்சியி;ன் தலைவரே பிரதமராகவும் வர முடியும். இது ஒரு பொது விதி, புறநடைகள் இருக்கலாம்.

ஒருவருக்கு மகாராஜ யோகமோ அல்லது வேறெந்த யோகமோ இருந்துவிட்டால் அவரும் அவரது கட்சியும் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமராக வந்து விடுவார் என்பது வடிகட்டிய மடைத்தனமாகும்.

அல்லது கிரகங்களை வசியம் செய்ய பூசை அபிசேகம் யாகம் செய்தால் வேட்பாளர்கள் தேர்தலில் வென்று வாகை சூடுவார்கள் என்பதும் மடைத்தனமாகும்.

இப்பொழுது நடந்து முடிந்த லோக் சபைத் தேர்தலின் தலைவிதியை அந்த நாட்டின் 65 கோடி வாக்காளப் பெருமக்களே தீர்மானித்துள்ளானர்.

சோனியா காந்தியின் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மான்மோகன் சிங் (71) இந்தியாவின் 13 ஆவது பிரதமராக மே 22, 2004 அன்று பதவி உறுதி செய்து வைக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் மதத்தால் சீக்கியராவார்.

இந்தியாவில் உள்ள எந்தச் சோதிடரும் இந்தியாவின் அடுத்த பிரதமர் மான்மோகன் சிங் என எதிர்வு கூறவில்லை. அவர்கள் வாஜ்பாய், சோனியா காந்தி இருவரது சாதகங்களையே பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு தனிமனிதனது சாதகத்தை வைத்துக் கொண்டு அவர் பிரதமராக வருவார் அல்லது வரமாட்டார் என்று பலன் சொல்வது பகுத்தறிவுக்கு முரணானது. மக்களை நம்பாது சோதிடர்களுக்குப் பின்னால் அலைந்து தங்கள் வெற்றிக்குச் பூசை யாகம் செய்யும் அரசியல்வாதிகள் சுத்த அறிவிலிகள்.

இந்திய மக்கள் அவைத் தேர்தல் முடிவு முன் எப்பொழுதையும் விட சோதிடம் ஒரு புரட்டு என்பதையும் சோதிடர்கள் புரட்டர்கள் என்பதையும் எந்த அய்யத்துக்கும் அப்பால் தெட்டத் தெளிவாக எண்பித்துள்ளது.

பல கோடி கிலோ மீட்டர் அல்லது கல்களுக்கு அப்பால் வானில் வலம் வரும் கோள்களுக்கும் பல பத்து, நூறு, ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஒளிவிடும் விண்மீன்களுக்கும் மனிதர்களது வெற்றி தோல்வி, இன்ப துன்பம், நல்லது கெட்டது, நலம் நலமின்மை, செல்வம் வறுமை நீண்ட ஆயுள் அற்ப ஆயுள் ஆகியவற்றுக்கும் எந்தவித தொடர்பும் அறவே கிடையாது. அதற்கான சான்று கடுகளவும் இல்லை. அப்படி ஒரு தொடர்பு இருக்கிறதது என நம்புவது கடைந்தெடுத்த மூடத்தனம்.


சோதிடப் புரட்டு (53)
செவ்வாய் சிவப்பு எனவே அது யுத்தகாரன்?    

கோள்கள் இடம்மாறும் பொழுது சோதிடர்கள் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் பலன்களை நூல்களாக எழுதி வெளியிடுகின்றார்கள்.

இந்தச் சனிப் பெயர்ச்சி குரு பெயர்ச்சி என்பது வான்வெளியில் அவ்வப்பொழுது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இயல்பான நிகழ்ச்சியாகும்.

அண்டவெளியில் ஞாயிறைச் சுற்றிக் கோள்கள் அவற்றுக்குரிய பாதையில்  வெவ்வேறு வேகத்தில் சுற்றிய வண்ணம் இருக்கின்றன என்பதை முன்னர் பார்த்தோம்.

கெப்லரின் முதலாவது விதியின்படி கோள்கள் வட்ட வடிவில் அல்லாது நீள்வட்ட வடிவான பாதையில் வலம் வருகின்றன. இதன் பொருள் என்னவென்றால் கோள்களுக்கும் ஞாயிறுக்கும் இடையில் உள்ள தொலைவு ஒரே மாதிரியாக இருக்காது. அதன் இருக்கையைப் பொறுத்து கூடியும் குறைந்தும் காணப்படும்.

கெப்லரின் இரண்டாவது விதியின்படி ஞாயிறையும் கோளையும் இணைக்கும் கோடு சமமான பரப்பை சமமான காலத்தில் மூடுகிறது. அதாவது கோள்கள் ஞாயிறு நீள்கோட்டை அண்மித்து இருக்கும் பகுதியில் (perihelion) வேகமாகவும் நீள்கோட்டின் தொலைப் பகுதியில் (aphelion) இருக்கும் பொழுது மெதுவாகவும் சுற்றுகின்றன.

கெப்லரின் மூன்றாவது விதியின்படி ஒரு கோள் ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலத்தின் மிசைப் பெருக்கத்தின் சமன்பாடு சுற்றுப் பாதையின் மூன்றாம் அடுக்கின் சமன்பாட்டுக்குச் சமமாகும். அதாவது ஞாயிறின் நீள்வட்டத்தின் ஆரை அல்லது  அரைவிட்டம் (radius) அதிகரிக்கும் பொழுது கோள்களின் சுற்று வேகம் மிக விரைவாக அதிகரிக்கிறது.

இதுவே ஞாயிறுக்கு மிக அண்மையில் உள்ள புதன் கோள் ஞாயிறைச் சுற்றிவர 88 நாள்களை எடுக்கும்பொழுது வெகு தொலைவில் உள்ள புளுட்டோ ஞாயிறைச் சுற்றிவர 248 ஆண்டுகள் எடுக்கிறது.

இப்படி வெவ்வேறு தொலைவில்  வெவ்வேறு வேகத்தில் வலம் வரும் கோள்கள் வேக வேறுபாட்டின் காரணமாக ஒன்றையொன்று கடந்து போகின்றன. சோதிடர்கள் தங்கள் பிழைப்புக்காக இந்த இயல்பான நிகழ்ச்சியைத் திரிபு படுத்தி அனர்த்தங்கள், விபத்துக்கள், உயிர் அழிவுகள் ஆகியன நடக்கப் போவதாகப் பயமுறுத்தி; மக்களது மன நிம்மதியைக் குலைக்கின்றார்கள்.

இந்தக் கோள்களின் ஓட்டத்தின் அடிப்படையில் நிகழும் இட மாற்றங்களைப்பற்றி கொழும்பு ஸ்ரீ வித்தியா குருகுல கலாசாலை அதிபர் ஆர்.பாபு சர்மா பெரிய புலுடா விட்டுள்ளார். அவர் சொன்னதை அவரது மணிப்பிரவாளத் தமிழ் உரைநடையிலேயே தருகின்றேன்.  இந்தச் செய்தி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டில் கடந்த கிழமை (மே 2004) வெளிவந்தது. செய்தியின் தலைப்பு ‘அனர்த்தங்கள் ஏற்படுத்தும் கிரக நிலை நெருங்குகிறது’ என்பதாம்.

‘எதிர் வரும் வெள்ளிக்கிழமை முதல் (மே 8) அடுத்த புதன்கிழமை (மே 19) வரையான காலத்தில் நாட்டில் மோசமான சூழ்நிலைகள் ஏற்படக் கூடிய நிலை உள்ளது. கிரக சஞ்சாரங்கள் அதனையே காட்டுகின்றன.

வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பின்படி தற்பொழுது சனிக் கிரக வீட்டில் செவ்வாய் ஏற்கனவே சஞ்சாரம் செய்கின்றது. மேலும், சனிக் கிரக நிலையின்படி சனி தற்பொழுதுள்ள திருவாதிரை 2 ஆம் பாதத்தில் செவ்வாய்க் கிரகமும் மே 14 முதல் மே 19 வரை அதே நட்சத்திர பாதத்தில் சஞ்சாரம்  செய்கின்றது.

யுத்தகாரனான செவ்வாயும் ஆயுள் காரகனான சனியும் சனிக்கிரக நட்சத்திரத்தில் கூடுவது நாட்டில் மோசமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும். இயற்கை அனர்த்தங்கள், விபத்துக்கள், நாடுகளுக்கு இடையே பகைமை வளரல், உயிர் அழிவுகள் ஏற்படலாம். மிதுனராசிப் பகுதியான வட இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பாதிப்புக்கள் கூடுதலாக அமையலாம்.’

உண்மையில் சனியும் செவ்வாயும் 3 ஆம் வீட்டில் இருக்கும் பொழுது வெள்ளி அதே வீட்டுக்கு மே 10 ஆம் நாள் புகுகிறது. சோதிடர் சொல்லியவாறு இலங்கையில் எந்த இயற்கை அனர்த்தங்களோ, விபத்துக்களோ, நாடுகளுக்கு இடையே பகையோ, உயிர் அழிவோ ஏற்படவில்லை. மே 8 க்கு முந்திய காலப் பகுதியில் எவை  நடந்தனவோ அவையேதான்  யுத்தகாரனான செவ்வாயின்; இராசி வீட்டில் ஆயுள்காரனான சனி நுழைந்த பொழுதும் நடந்தன. இனிமேலும் அப்படித்தான் நடக்கும்.

ஞாயிறு குடும்பம்

ஒரு வாதத்துக்குச் சோதிடர் சொல்லிய காலப் பகுதியில் அனர்த்தங்கள், விபத்துக்கள், உயிரழிவுகள் ஏற்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அதற்கும் கோள்களுக்கும் எந்தவித தொடர்பும் அறவே கிடையாது. கோள்களின் சஞ்சாரத்துக்கும் இந்தப் புவியில் நடக்கும் அனர்த்தங்கள், விபத்துக்கள், உயிரழிவுகள் போன்றவற்றுக்கும் அறிவியல் அடிப்படையில் தொடர்பு இருக்க வழியே இல்லை.

செவ்வாயை யுத்தகாரன் எனச் சோதிடர்கள் சொல்வதற்குக் காரணம் அதன் நிறமே. செவ்வாய் சிவப்பு நிறம், சிவப்பு நிறம் குருதியைக் குறிக்கிறது, எனவே செவ்வாய் யுத்தகாரனன்!

முன்னர் கூறியவாறு கிரேக்கரது ஏறஸ் (Ares) என்ற போர்க் கடவுளே உரோமரது செல்வாக்குப் படைத்த கருவளக் கடவுளான மார்ஸ் ((fertility god Mars) ஓடு தொடர்புபடுத்தப் பட்டது. ஏறிசின் மனைவி பெயர் Neiro ஆகும்.  மார்ச்சு என்ற ஆங்கில மாதம் மார்ஸ் கடவுளின் நினைவாக வைக்கப்பட்டதாகும்.

ஏறிஸ் அல்லது மார்ஸ் முன்னர் கூறியவாறு கிரேக்கரது ஏறிஸ் (Ares) என்ற போர்க் கடவுளே உரோமரது செல்வாக்குப் படைத்த கருவளக் கடவுளான மார்ஸ் (fertility god Mars) ஓடு தொடர்புபடுத்தப் பட்டது. ஏறிசின் மனைவி பெயர் நேசைழ ஆகும். மார்ச்சு என்ற ஆங்கில மாதம் மார்ஸ் கடவுளின் நினைவாக வைக்கப்பட்டதாகும். ஏறிஸ் அல்லது மார்ஸ் போலவே சனி (Saturn) வியாழன் (Jupiter) புதன் (Mercury)  வெள்ளி (Venus) நெப்தியூன் ஆகியன கடவுளராக வழிபடப்பட்டனர்.

இந்து சமயக் கடவுளர் போலவே கிரேக்க-உரோம இதிகாசங்களில் காத்தல் கடவுள், காதல் கடவுள், போர்க் கடவுள் என ஏராளமான கடவுளர் மனைவி பிள்ளை குட்டிகளோடு சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்! அவர்கள் எல்லோரும் இப்போது அருங்காட்சியகத்தில் குடியிருக்கின்றனர்!

சனியைப் பாப கிரகமாகவும் சூத்திர கிரகமாகவும் ஆயுளுக்குப் பொறுப்பான கிரகமாகவும் சோதிடர்கள் சித்தரிப்பதற்கான காரணம் அது கறுப்பு நிறம் என்ற பிழையான கணிப்பே!

சோதிட சாத்திரம் கிரகங்கள் ஒருமித்து ஒரு முகமாகச் செயல்படுவது கிடையாது என்கிறது. எப்படி நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எதிர்வுக் கட்சி என்று இரு கன்னைகள் உண்டோ, அதைப்போலவே கிரகங்களுக்கு இடையிலும் ஆளும் கட்சி எதிர்வுக்கட்சி  உண்டு என்கிறது.

சோதிடம் சுப கிரகங்கள் ஆன குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறைச் சந்திரன் ஆளும் கட்சி எனவும்  பாப கிரகங்களான சூரியன், அங்ககாரன், சனி, ராகு, கேது, தேய்பிறைச் சந்திரன் எதிர்க்கட்சி எனவும் கன்னை பிரிக்கிறது!

சோதிடம் கிரகங்களை  பால் அடிப்படையில் ஆண், பெண், அலி எனப் பிரிக்கிறது. வர்ண அடிப்படையில் பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரிக்கிறது.

 உரோமக் கடவுளர்

கிரகங்களில் சூரியன் அரசன். சந்திரன் அரசி, படைத் தளபதி செவ்வாய், இளவரசன் புதன், அமைச்சர்கள் வியாழனும் வெள்ளியும். வேலைக்காரன் சனி, படை இராகு கேது!

சனி சூத்திர கிரகம் என்பதால் அதனைக் கறுப்பு நிறமாகவும் வேலைக்காரனாகவும் ஆரிய முனிவர்கள் எழுதிய சோதிட சாத்திரம் சித்தரிக்கிறது! சோதிட சாத்திரம் கோள்கள், இராசிகள் ஆகியவற்றை அப்பு (தண்ணீர்) தேயு (நெருப்பு) வாயு (காற்று) பிருதிவி (பூமி) ஆகாயம் (வாயு மண்டலம்) என்ற பஞ்சபூத அடிப்படையில் பகுத்துள்ளது.

    கோள்கள்

1) செவ்வாய்  –  நிலம்
2) சந்திரன்   –  தண்ணீர்
3) வெள்ளி   – தண்ணீர்
4) புதன்        –  காற்று
5) குரு          – நெருப்பு
6) சூரியன்   –  நெருப்பு
7) சனி          –  ஆகாயம்

இராசிகள்

1) மேடம், சிம்மம், தனுசு    –   நெருப்பு
2) இடபம், கன்னி, மகரம்     –   நிலம்
3) மிதுனம், துலாம், கும்பம் –  காற்று
4) கடகம், விருச்சிகம், மீனம்   –   தண்ணீர்
(சில சோதிடர்கள் தனுசு இராசியை ஆகாயம் என்று பகுக்கின்றார்கள்)

இந்தப் பகுப்புக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. முதல் நான்கு இராசிகளுக்கும் முறையே நெருப்பு, நிலம், காற்று, தண்ணீர் மூலகங்கள் ஒதுக்கப்படுகின்றன. பின்னர் அடுத்த நான்கு இராசிகளுக்கும் அதற்கு அடுத்து இறுதியாக வருகிற நான்கு இராசிகளுக்கும் அதே வரிசையில் மூலகங்கள் ஒதுக்கப்படுகின்றன.

கோள்கள் சரி, நட்சத்திரங்கள் சரி இவற்றில் தண்ணீர் இல்லை. வெள்ளிக் கோளின் வெப்பம் 850 பாகை பாரன்கைட் (450 பாகை செல்சியஸ்) இருக்கும் பொழுது அதனை தண்ணீர் மூலகத்தோடு  பகுப்பது அறிவீனமாகும்.

சோதிடம் கிரகங்களை மித்துரு (நட்பு)  சத்துரு (பகை) நடுநிலமை (neutral) எனப் பிரிக்கிறது. எதற்காக, எந்த அடிப்படையில் என்பது யாருக்கும் தெரியாது.

               கிரகங்களின் குணாம்சங்கள்

கிரகம் மித்துரு(நட்பு) சத்துரு(பகை) நடுநிலை வர்ணம் (சாதி) பால்
சூரியன் சந்திரன்,அங்ககாரன், குரு சுக்கிரன், சனி, இராகு புதன் சத்திரியன் ஆண்
இராகு சுக்கிரன் சூரியன் ? ? ஆண்
குரு சூரியன்,சந்தின், அங்ககாரன் புதன்,குரு சனி பிராமணன் அலி
புதன் சூரியன், சுக்கிரன் சந்திரன் அங்ககாரன், குரு, சனி வைசிகன் ஆண்
அங்காரன் சூரியன், சந்திரன்,குரு புதன் புதன், சனி சத்திரியன் ?
கேது சூரியன், குரு சந்திரன் ? ? ?
சனி புதன், சுக்கிரன் சூரியன், சந்திரன், அங்ககாரன் குரு சூத்திரன் அலி
சந்திரன் சூரியன், புதன், குரு சனி, இராகு, கேது அங்ககாரன்,குரு,சனி, சுக்கிரன் வைசிகன் பெண்
சுக்கிரன் புதன்,சனி, இராகு சூரியன், சந்திரன் அங்ககாரன், குரு பிராமணன் பெண்

வழக்கம் போல கிரகங்களை மித்திரு, சத்துரு, நடுநிலை எனப் பாகுபடுத்துவதில் சோதிட நூல்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக Elements of Vedic  Astrology என்ற நூல் சந்திரனுக்குச் சத்துரு கிரகங்கள் இல்லை (பக்கம் 69) என்கிறது. ஜோதிட அமுதம் சனி, இராகு, கேது மூன்றும் அதே சந்திரனுக்குச் சத்துருக்கள் (பக்கம் 88) எனச் சொல்கிறது!

இவை கூடப் பருவாயில்லை என்பது போல் சூரியன், அங்காரகன் ஆதிக்கம் கொண்டவர்கள் சுடச் சுட புசிப்பதையும் சூடான பானம் அருந்துவதையும் விரும்புவார்களாம்!

சந்திரன், குரு, சுக்கிரன் ஆதிக்கம் கொண்டவர்கள் ஆறிய அன்னத்தைப் புசிப்பதையும் குளிர்ச்சியான பானத்தைப் பருகுவதையும் விரும்புவார்களாம்!

புதன், சனி, இராகு, கேது ஆதிக்கம் கொண்டவர்கள் சமயத்திற்குப் தக்கபடியும், காலத்திற்கு ஏற்றபடியும் உணவு உட்கொள்வதையும் பானம் அருந்துவதையும் கடைப்பிடிப்பார்களாம்.

இவற்றை எல்லாம் எப்படி ஆராய்ந்து கண்டு பிடித்தீர்கள் எனறு சோதிடர்களைக் கேட்டால் வராகமிகிரர் எழுதிய சோதிடத்துக்கெல்லாம் சோதிட நூலான பிரஹத் ஜாதகத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்ல மட்டுமே அவர்களுக்குத் தெரிகிறது.

‘சோதிடம் உண்மையான சாத்திரம். அரை குறையாக அதனைப் படித்து விட்டு தொழில் செய்யும் சோதிடர்கள்தான் அதற்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கின்றார்கள்’ இவ்வாறு சோதிடத்துக்கு முண்டு கொடுப்பவர்கள் சொல்லாடல் செய்கின்றார்கள்.
பண்டித ஜவகர்லால் நேரு ‘சோதிடத்தை நம்புகிறேன் ஆனால், சோதிடரை நம்பவில்லை’ என்று சொல்லியதை மேற்கோள் காட்டுகின்றார்கள்.

திருமதி காயத்திரி தேவி வாசுதேவ ‘Astrology and the Hoax of Scientifc Temper’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்-

‘ஆரூடங்கள் பலிக்கவில்லை என்பதை மட்டும் வைத்துக் கொண்டு சோதிடத்தை எதிர்ப்பது சரியான வாதம் அல்ல. உயிரைக் காப்பாற்றும் மருந்துகள் இருந்தும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் நாடு முழுதும் சாகின்றார்கள் என்பதால் மருத்துவம் ஒரு மோசடி என்று யாராவது சொல்கின்றார்களா? பாலங்களும் கட்டடங்களும் இடிந்து விழுவது மட்டுமல்ல ஆட்களையும் கொல்லுகிறது. அதற்காக யாரும் பொறியியலைக் கண்டிக்கின்றார்களா?

ஒவ்வொரு தொழிலிலும் ஏமாற்றுபவர்களும் போலிகளும் இருக்கவே செய்வார்கள். உண்மை என்னவென்றால் சோதிடம் மட்டுமே தோல்விகளை வைத்து எடைபோடப்படுகிறது. ஏனைய அறிவியல்கள் வெற்றிகளை வைத்து அளவிடப்படுகின்றன. அறிவியலில் வெறுப்புக்கும் பக்க சார்புக்கும் இடம் இல்லை. ஆனால், சில அறிவியலாளர்கள் சோதிடத்தை இகழும் பொழுது இந்த இரண்டையும் வெளிப்படுத்துகின்றார்கள்.’

இந்த காயத்திரி தேவி வாசுதேவ வேறு யாருமல்ல, இந்திய சோதிடர்களின் ஆசான் எனக் கொண்டாடப்பட்ட பி.வி. இராமனின் மகள்!

ஆனால், இவர் தனது அறியாமை காரணமாக மருத்துவத் திறனையும் பொறியியல் நுட்பத்தையும் நோயாளிகளோடும் இடிந்து விழும் பாலங்கள் கட்டடங்களோடும் ஒப்பிட்டு எழுதுகின்றார்.

பாலங்கள் அல்லது கட்டடங்கள் விழுவது பொறியியல் நுட்பத்தின் குறையல்ல, அதற்கான ஏது தரக்குறைவான பொருட்களும் பிழையான அளவுகளும்தான்.

சோதிடத்தில் ஒரு சோதிடரின் எதிர்வுகூறல் (ஆரூடம்) இன்னொரு சோதிடரின் எதிர்வுகூறலுக்கு எதிர்மாறாக இருக்கிறது. நிச்சயமாக எதிர்வுகூறலில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற இரண்டு எதிர்வுகூறல்தான் இருக்க வேண்டும். மேலும் சோதிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள், ஒன்று மற்றதோடு முரண்படும் அல்லது மாறுபடும் நிலை காணப்படுகிறது.
சோதிடம் ஒரு அறிவியல் என்றால் சோதிடர்கள் மத்தியில் முரண்பாடு, மாறுபாடு இருக்கக் கூடாது. சோதிடர்களின் எதிர்வுகூறல்கள் எல்லாம் பேரளவு ஒரே மாதிரி இருக்க வேண்டும். குறைந்தது நூற்றுக்கு 70-80 விழுக்காடு சரியாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு சோதிடரும் மற்றவர்களை உதவாக்கரை, போலி, ஏமாற்றுப் பேர்வழி என்று திட்டுகின்றார். எனவே சோதிடர்களில் யார் பொய்யர், யார் உண்மையானவர் என்ற பட்டியலைத் தயாரிக்க வேண்டும். சோதிடர் சங்கங்கள் இப்படியான கையேட்டைத் தயாரித்தால் இன்னும் நன்றாக இருக்கும். பி.வி. இராமன் உட்பட எவருமே இதுவரை காலமும் சோதிடம் ஒரு அறிவியல்தான் என்பதை ஆய்வு மூலம் எண்பிக்க முன்வரவில்லை!

காயத்திரி தேவி போலவே கேரள சோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கரும் பண்டைய வேதகால சோதிடக் கலைக்கு நடைபாதைச் சோதிடர்கள் கெட்ட பெயர் வாங்கித் தருகின்றார்கள் எனப் புலம்புகின்றார்.

இந்தச் சோதிடர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர் என்பது தெரிந்ததே. அடுத்த கிழமை சோதிடர் பணிக்கர் சோதிடத்தைப் பற்றியும் சோதிடர்கள் பற்றியும் என்ன சொல்கின்றார் என்பதைப் பார்ப்போம்.


சோதிடப் புரட்டு (54)
இப்படி இருந்தால், ஏன் இப்படியெல்லாம் அமைகிறது?

எதிர் வரும் யூன் 8, 2004 அன்று வெள்ளி ஞாயிறு வட்டிலைப் கடந்து செல்ல (Transit) இருக்கிறது. இது பற்றி முன்னரும் எழுதியிருந்தேன். இப்பொழுது உயிரோடு இருக்கிற எவரும் இதற்கு முன்னர் இ;ந்தக் காட்சியைப் பார்த்திருக்க முடியாது. யூன் 8, 2004 குப் பின்னர் 2012 இல்தான்  மீண்டும் வெள்ளி ஞாயிறைக் கடக்கிறது.

ஆறு மணித்தியாலம் நீடிக்கும் இந்தப் பெயர்ச்சி சூரிய கிரகணத்துக்கு (ஞாயிறுக்கும்  புவிக்கும் இடையில் நிலாவுக்குப் பதில் வெள்ளி ஒரே நேர்க் கோட்டில் வருகிறது ) ஒப்பானதாகும்.

ஒரு நூற்றாண்டில் இர:ண்டு முறை மட்டுமே இந்த வெள்ளிப் பெயர்ச்சி இடம் பெறும். இது வரை 1639, 1761, 1874 மற்றும் 1882 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வெள்ளிப் பெயர்ச்சி வரலாற்றில் பதிவாகியுள்ளன. அடுத்த நூற்றாண்டில் 2117 மற்றும் 2125 ஆண்டுகளில் இடம் பெறும்.

இந்த வெள்ளிப் பெயர்ச்சியை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, அப்படிப் பார்த்தால் சூரிய ஒளி கண்களைப் பழுதடையச் செய்துவிடும். தொலை நோக்கி அல்லது சிறப்புக் கண்ணாடி மூலமே பார்க்க வேண்டும். கிழக்கு மற்றும் மத்திய வட அமெரிக்காவில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஞாயிறு உதிக்கும் பொழுது (யூன் 8) வெள்ளிப் பெயர்ச்சி தொடங்கி இருக்கும்.   வெள்ளிப் பெயர்ச்சி

ஞாயிறு நிலா இரண்டும் நீங்கலாக அதிக ஒளி மிகுந்த கோள் வெள்ளியாகும். வெள்ளியை விடி வெள்ளி மாலை வெள்ளி என்று அழைத்தார்கள். காரணம் வெள்ளி 584 நாள்கள் கொண்ட சுற்று வட்டத்தில் 263 நாள்கள் கிழக்கிலும் 263 நாள்கள் மேற்கிலும் தோன்றுகிறது. மேலும் 50 நாள்கள் ஞாயிறுக்குப் பின்னும் 8 நாள்கள் ஞாயிறுக்கு முன்னும் நிற்பதால் அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை.

இதனால் பண்டைய கிரேக்க வானியலாளர்கள் வெள்ளியை இரண்டு வேறு கோள்கள் என நினைத்தார்கள். கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில்தான் அப்படி இல்லை, இரண்டும் ஒன்றுதான் என்ற உண்மை தெரிந்தது. கிரேக்கர் காதல், அழகு இரண்டின் தெய்வமான Aphrodite இன் பெயரை வெள்ளிக்குச் சூட்டினார்கள். உரோமர்கள் அதே பொருளில் வைத்த பெயர் வீனஸ் (Venus) என்பதாகும்.

வெள்ளி பொதுமேனி 10.82 கோடி கிமீ தூரத்துக்கு அப்பால் ஞாயிறைச் சுற்றி வருகிறது. ஞாயிறைச் சுற்றி வர அது எடுக்கும் காலம் 224.7 புவி நாள்களாகும். தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் 243 புவி நாள்களாகும். எனவே வெள்ளியின் ஒரு நாள் அதன் ஆண்டைவிடக் கூடுதலாகும்! வெள்ளியின் சுற்றுக் காலமும் சுழல் காலமும் 1960 குப் பிறகே சரியாகக் கணிக்கப்பட்டன. வெள்ளி ஏன் கிழக்கு மேற்காகச் சுற்றுகிறது என்பதுக்குரிய ஏது தெரியவில்லை.

அளவில், திண்மையில், அடர்த்தியில் வெள்ளி புவியை ஒத்திருப்பதால் அது புவியின் உடன்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது.
‘உலகப் புகழ் உன்னி கிருஷ்ண பணிக்கர்’  யூனியர் ஆனந்தவிகடன்  இதழில்   இராசி பலன் பற்றி எழுதிவருகின்றார். அதில் அவர் ‘அரைகுறைச் சோதிடர்கள் ஆபத்தான பேர்வழிகள்’ என சாலையோர சோதிடர்களைக் கடுமையாகச் சாடியிருக்கின்றார்.

‘பழம் பெருமையும் புகழும் வாய்ந்த நம் ஜோதிடக்கலையின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா? கவலைக்கிடம்தான். இதற்குக் காரணம் சில அரைகுறை ஜோதிடர்களின் அனுபவமில்லாத அணுகுமுறைதான். ஜோதிடக்கலையில் ஆழ்ந்த ஈடுபாடும் மிகுந்த நம்பிக்கையும் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்திருக்கிறது. இந்தப் போக்கு. ஜோதிடக் கலையின் அருமை பெருமைகளை பலரும் சீரியஸாகவே எடுத்துக் கொள்வதில்லை.

ஜோதிடக்கலைக்குத் தற்பொழுது இறங்குமுகமான காலம் என்று சொன்னால் அதற்குக் காரணமே சில ஜோதிடர்கள்தான் என்று கூடச் சொல்லலாம்.  ஏனென்றால், நமது நாட்டில் குறிப்பாகத் தென்னிந்தியாவின் சாலையோரங்களில் ‘இங்கு ஜோதிடம் பார்க்கப்படும்’ என்று போர்டுகளை மாட்டிக்கொண்டு ஜோதிடம் பார்க்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் உண்மையிலேயே ஜோதிடம் பார்த்தால், அது பாராட்டக்கூடிய விடயமாகத்தான் இருக்கும். ஆனால், ஏதோ மெத்தப் படித்த பண்டிதர் மாதிரி பலரும் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இத்தகைய தெருவோர சோதிடர்கள் பலருக்கும் ஜோதிடத்தின் அடிப்படை விடயம்கூடத் தெரிவதில்லை. ஜோதிடத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மூலதனமாக வைத்து, குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கவே இந்த அரிய கலையை இவ்வகையினர் பயன்படுத்துகின்றார்கள்.’

இந்த அவல நிலைக்கு சோத்pடர் பணிக்கர் பொதுமக்களும் ஒரு காரணம் எனக் குற்றம் சாட்டு;கின்றார். ‘தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஜோதிடரிடம் செல்லும் சாமானிய மனிதர்கள் அந்த ஜோதிடர் எப்படிப்பட்டவர், இவர் இந்தக் கலையில் முழுத் தகுதியுடையவர்தானா என்பதை எந்தக் கட்டத்திலும் ஆராய்வதில்லை.’

‘இந்த ஆள் நன்றாகவே ஜோதிடம் பார்ப்பாராம். இவர் சொல்வதெல்லாம் அப்படியே பலிக்குமாம்!” என்று ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையுடன்தான் அத்தகையோரை அணுகுகின்றனர். இதுமாதிரியான நிலைதான் ஜோதிடக் கலைக்குப் பெரும் அவமானத்தை உண்டு பண்ணுகின்றது.’

தான் ஒருவன் நீங்கலாக ஏனைய சோதிடர்களை உன்னி கிருஷ்ண பணிக்கர் சாடுவதும் சோதிட சாத்திரத்தில் உள்ள பலவீனங்களை அவர் சுட்டிக் காட்டி அவற்றுக்குத் தீர்வு காணவேண்டும் என்று கேட்பதும் அறிவியல் வளர்ச்சி காரணமாக சோதிட சாத்திரத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியே ஏதுவாகும். உன்னி கிருஷ்ண பணிக்கரது புலம்பல் அதைத்தான் துலாம்பரமாகச் சுட்டிக் காட்டுகிறது. எனவே அவரது கட்டுரையில் இருந்து மேலும் சில முக்கிய பகுதிகளை அவரது கலப்புத் தமிழ் நடையிலேயே கீழே தருகின்றேன்.

‘சோதிடம் குறித்த பலமான காரசாரமான விவாதங்கள், விமரிசனங்களை வெளியிடும் பிரபலமான பத்திரிகைகள் கூட, ஏதாவது ஒரு வகையில் ஜோதிடம் பற்றிய குறிப்புகளையும் தங்கள் இதழ்களில் வெளியிடத்தான் செய்கின்றன.  அதாவது, ஒருபுறம் சோதிடக்கலைக்கே எதிர்மறையான செய்திகளை, விமரிசனங்களை, பரபரப்புக்காகவும் விளம்பரத்துக்காகவும் வெளியிடுகின்றன. மறுபுறமோ ஜோதிடக்கலைக்கு ஆதரவான ஒருசில விஷயங்களை வெளியிட்டுத் தன்னை நல்ல மாதிரியாகவும் வாசகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக் கொள்கின்றன. சில பத்திரிகைகளின் இந்த இரட்டைவித நிலைப்பாடு ஜோதிடத்துக்குக் கேடு விளைவிக்கிறது.

அதுமட்டுமல்ல, அரைகுறை ஜோதிடர்களை பத்திரிகைகளின் இத்தகைய செயல்பாடுகள் ஊக்குவிக்கின்றன என்பதுதான் ஆபத்தான விஷயம்.

சமீபகாலமாகச் சில தொலைக்காட்சி சேனல்களில் வரும் ஜோதிட பலன் சொல்லும் நிகழ்ச்சிகளும், மற்ற விமரிசன நிகழ்ச்சிகளும் ரொம்பவே இம்சிக்கின்றன. இந்த அரைகுறை ஜோதிடர்களை ஆகாவென்றும் ஓகோவென்றும் புகழின் உச்சத்துக்கு உயர்த்துகின்றன. சம்பந்தப்பட்ட சேனல்களின் இந்தப் போக்கு மாறவேண்டும்.

சோதிடம் என்பது வங்கி,  இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் போலவோ அல்லது கொம்பியூூட்டர் சாஃப்ட்வேர் போன்றதோ அல்ல. இவையெல்லாம் நாம் கொடுப்பதை உள்வாங்கிக் கொண்டு அவற்றை வேறுவிதமாக நமக்கே திருப்பிக் கொடுக்கின்றன.

ஆனால், சோதிடம் அப்படியல்ல. அதில் எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டவைதான்.

இன்றைய கால கட்டத்தில், ஒரு சோதிடரின் புலமையை நிர்ணயிப்பது விளம்பரம்தான் என்றாகிவிட்டது. ஜோதிடர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் விளம்பரங்களுக்காகச் செலவிடும் தொகையைப் பொறுத்துத்தான் அவரது நிபுணத்துவமும் பிரபலமும் வரையறுக்கப்படுகிறது. இதுவும் ஓர் ஆபத்தான போக்கு என்றுதான் சொல்லவேண்டும்.

பல பத்திரிகைகளும் டி.வி சேனல்களும் ஜோதிடத்தை ஏதோ ஒரு சாதாரண விற்பனைப் பொருளாக்கி, அக்கலையின் தரத்தைத் தாழ்த்திவிட்டன. இதற்கு மீடியாக்களின் பரபரப்பான உத்திகள்தான் துணை போகின்றன என்பது தெளிவான கண்கூடான விடயம்.
இவை எல்லாவற்றையும் விட இன்னொரு விடயம் என்னவெனில், வேறுசில கலைகளைச் செய்வோர், குறிப்பாக மை போட்டுப் பார்ப்பது, மந்திரித்தல், எண்கணிதம், கைரேகை போன்றவற்றைத் தங்கள் தொழிலாக வைத்திருக்கும் பலர், தங்களது செயல்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைப்பதற்காக ஜோதிடக் கலையைத் துணைக்கு அழைத்துக் கொள்கின்றார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் இத்தகைய விடயங்களுக்கும் நம் பாரத சோதிடக் கலைக்கும் துளிகூடச் சம்பந்தமே கிடையாது.

இன்று சோதிடக்கலைக்குள்ள அவல நிலைமையை மாற்றி, மீண்டும் அதற்கு ஒரு புதுப் பொலிவும் பழம்பெருமையும் நிலைக்கும் வகையில் சில நடவடிக்கைகளை நாம் எடுத்தே ஆகவேண்டும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நான் மேலே சொன்ன மைபோட்டு பார்த்தல், மந்திரித்தல், எண்கணிதம், கைரேகை போன்ற கலைகள் பற்றிய மறு சிந்தனை வேண்டும்.

சோதிடத்தை ஆராய முற்படும்பொழுது கணிதம், இயற்பியல் போன்ற நவீன அறிவியலை ஏன் நாம் அளவு கோலாக்கிக் கொள்ளக்கூடாது? நவீன அறிவியலில் ஈடுபாடு உள்ளவர்கள் பலரும் ஜோதிடக்கலையில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்று சிந்திக்க வேண்டும்.

சோதிடம் குறித்த நூல்களும் அது தொடர்பான ஸ்லோகங்களும் வெறும் அறிக்கைகளாகவே இன்றளவும் உள்ளன.
பண்டைய இந்தியாவில் இருந்த வேதம் முதலான மற்ற சாஸ்திரங்களைப் போல சோதிடம் குறித்த விரிவான ஆராய்ச்சிகள் எதுவும் இன்றளவும் மேற் கொள்ளப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் துவங்கப்படவில்லை என்பதுதான் வருந்தத்தக்க ஒன்று. எடுத்துக்காட்டாக,

ஸத்வித்யவ்தனதானதான்
பஹ குண ஸ{க்ரேயனா
யுக்தே ஹரவ்
என்று வராஹமிஹிரர் என்ற ஆச்சாரியார் தனது ஹோரை (ஓரை) சாஸ்திரத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனும் (வெள்ளி) குருவும் (வியாழன்) ஒரே ராசியில் இருந்தால், அந்த ராசிக்குரிய ஜாதகக்காரர் சிறந்த கல்விமானாகவும் செல்வந்தனாகவும் நல்ல பல பண்புகளை உடையவனாகவும் இருப்பான் என்பது இதன் பொருள்.
இப்படி இருந்தால், ஏன் இப்படியெல்லாம் அமைகிறது என்ற கேள்விகளுக்கான விடை அந்த சாஸ்திரத்தில் இல்லை. ஒருவரது ஜாதகத்தில் உள்ள குருவோ, சுக்கிரனோ செல்வம், கல்வி மற்றும் குணநலன்களை எப்படி நிர்ணயிக்கிறது என்பதை வராஹமிஹிரர் ஆச்சாரியார் விரிவாக விளக்கவில்லை.

இப்படி விரிவான விளக்கங்கள் இல்லாததால்தான் நவீன அறிவியல் யுகத்தில் ஜோதிடத்தை ஒருவித அய்யக் கண்ணுடன் பார்க்கின்றார்களோ என்னவோ! எனவே இதுபற்றிய விரிவான, தீவிரமான ஆராய்ச்சி அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.
நவீன அறிவியலுக்கும் சோதிடக்கலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க, இதே ரீதியிலான கண்ணோட்டம் மிகவும் உபயோகமானதாக இருக்கும். பண்டைய காலத்தில் பிரபலமாக இருந்த அறிஞர்கள் பலரும் சோதிட சாஸ்திரத்தில் பெரும் நம்பிக்கை உடையவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

நான் அடிநாள் முதல் தொடர்ச்சியாகக் கேட்டுவரும் கேள்வியையே சோதிடர் பணிக்கர் இப்பொழுது கேட்கின்றார். கேட்டுவிட்டு “இப்படி இருந்தால், ஏன் இப்படியெல்லாம் அமைகிறது என்ற கேள்விகளுக்கான விடை சோதிட சாஸ்திரத்தில் இல்லை” என ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கின்றார்!

ஒருவரது சாதகத்தில் உள்ள குருவோ, சுக்கிரனோ செல்வம், கல்வி மற்றும் குண நலன்களை எப்படித் தீர்மானிக்கிறது என்பதை வராகமிகிரர் விரிவாக விளக்கவில்லை என்பதை சோதிடர் பணிக்கர் ஒப்புக் கொள்கின்றார். வராகமிகிரர் மட்டும் அல்ல பராசரர் முதற்கொண்டு தொலமி வரை யாரும் ஏது மற்றும் விளைவு (cause and effect)  அடிப்படையில் விளக்கம் அளிக்கவில்லை.

ஆனால், அறிவியல் இதற்கு நேர்மாறானது. ஏது மற்றும் விளைவு (காரண காரியம்) இரண்டின் அடிப்படையில் இயற்கை உட்பட எதனையம் ஆய்வு செய்கிறது.

எல்லா ஆய்வுகளுக்கும் முன்னோடியாக முதலில் ஒரு எடுகோள் (hypothesis) இருக்கும். சில நிகழ்வுகளுக்கும் வேறு சில நிகழ்வுகளுக்கும் நேருக்கு நேர் தொடர்பு இருப்பது போலத் தோன்றும். அல்லது வழி வழியாக அப்படியான ஒரு நம்பிக்கை இருந்து வரலாம்.

எடுத்துக்காட்டாக தலை முடியில் தேன் பட்டால் முடி நரைக்கும் என்று ஊரில் உள்ள பலர் சொல்வார்கள். இதனை ஒரு எடுகோள் என வைத்துக் கொள்ளலாம்.

இந்த எடுகோள் உண்மையா? என்பதை எண்பிக்க ஆய்வு செய்து பார்க்க வேண்டும். தேனுக்கும் – நரைக்கும் தொடர்பு இருப்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பலமுறை செய்து பார்க்க வேண்டும்.

ஆய்வு (1) – முடிதிருத்தும் கடைகளில் விழும் கறுப்பு முடிகளில் தேன் கலந்து பார்ப்பது.

ஆய்வு (2) – கறுப்பு முடியுடைய ஆடு, நாய், பூனை போன்ற விலங்குகளின் மீது தேன்
தடவிப் பார்ப்பது.

ஆய்வு (3) – தலை தவிர உடலின் வேறு பாகங்களில் உள்ள முடிகளில் தேன் தடவிப்
பார்ப்பது.

ஆய்வு (4) – மனிதர்களது கறுப்பு முடிக்கு தேன் தடவிப் பார்ப்பது.

இவ்வாறு செய்த ஆய்வுகளில் 80-85 விழுக்காடு தலை நரைப்பதைக் கண்டறிந்தால் அந்த எடுகோளை ஏது மற்றும் விளைவு முறையில் ஒரு பொதுக்கருத்து (concept) ஆக எடுத்துக் கொள்ளலாம்.

சோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கர் ஒருவருடைய சாதகத்தில் சுக்கிரனும் (வெள்ளி) குருவும் (வியாழன்) ஒரே இராசியில் இருந்தால், அந்த இராசிக்குரிய சாதகக்காரர் சிறந்த கல்விமானாகவும் செல்வந்தனாகவும் நல்ல பல பண்புகளை உடையவனாகவும் இருக்கின்றான் என்ற எடுகோளை வைத்துக் கொண்டு நூறு, இருநூறு, ஆயிரம்  சாதகங்களை ஆராய்ந்து பார்த்து அந்த எடுகோள் சரியா தவறா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

ஒருவரது சாதகத்தில் உள்ள குருவோ, சுக்கிரனோ செல்வம், கல்வி மற்றும் குண நலன்களை எப்படித் தீர்மானிக்கிறது என்பதை வராகமிகிரர் விரிவாக விளக்கவில்லை என்று சோதிடர் பணிக்கர் ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது. ஆதனை ஆராய்ந்து பார்த்து உண்மை பொய் அறிய வேண்டும்.

வராகமிகிரர் சொன்னது மட்டும் அல்ல பராசரர் முதற்கொண்டு தொலமி வரை சொன்னதை  ஏது மற்றும் விளைவு அடிப்படையில் ஆய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் அறிவு நாணயமான செயலாகும்.

சோதிடத்தில் உள்ள இப்படியான அடிப்படை ஓட்டைகளை எடுத்துக் காட்டி, அதன் நம்பகத்தன்மை பற்றிக் கேள்விகள் எழுப்பி, அது ஒரு போலி சாத்திரம் என்பதைச் சான்றுகளோடு எண்பித்து வருகின்றேன்.


சோதிடப் புரட்டு (55)
தமிழ் நாட்டின் அடுத்;த “முதல்வர்” ரஜினி

இந்திய தேர்தல் முடிவுகள் பற்றி வடநாட்டு சோதிடர்கள் மட்டுமே எதிர்வுகூறல் சொன்னார்களா? தமிழ்நாட்டு சோதிடர்கள் யாரும் எதிர்வுகூறல் சொல்லவில்லையா? எனச் சிலர் கேட்டு எழுதியுள்ளார்கள்.

ஏன் இல்லை? தினகரன் நாளேட்டில் 32, ஏரிக்கரை தெரு, விருகம்பாக்கம், சென்னை – 92 என்ற முகவரியில் வசிக்கும் ஆர். ஆர். சூரியநாராயணமூர்த்தி என்ற சோதிடர் இந்திய தேர்தல் முடிவுகள் பற்றி எதிர்வு கூறியுள்ளார்.

ஏனைய சோதிடர்கள் போலவே இவரும் வாஜ்பாய் தேர்hதலில் வென்று ஆட்சி அமைப்பார் எனச் சாமியாடிக் கூறினார்.

“இந்திய அரசியலில் இருபெரும் கட்சியாக காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு கடும் போட்டியில் வெற்றி பெறும் தகுதி சோதிட ரீதியாகவும் அவர்களது ஜாதகப் படியும் அவர் சார்ந்து இருக்கும் கட்சியின் ஜாதகப்படியும் ஆராய்ந்து பார்ப்போம்.

பா.ஜ.கட்சி கடந்த 5 ஆண்டு காலமாக ஆட்சி செய்த பொழுதிலும் வாஜ்பாயின் ஜாதகப்படி அவரது துலா லக்னத்திற்கு மாரகாதிபதி திசையும், எட்டுக்குடையவன் புத்தி நடைபெற இருப்பதால் இக்கால கட்டத்தில் அவருக்கு ஆயுள் கண்டம் உண்டு என்பதை கிரகங்கள் குறி காட்டுகிறது.

தற்பொழுது அவருக்கு யோக திசையும்,  புத்தி எதுவும் இல்லை என்ற பொழுதிலும் கிரக கோச்சாரம் சாதகம் இன்றி இருப்பதைக் காட்டுகிறது. அவருக்கு வெற்றியைக் குறிக்கும் 3 ஆம் பாவத்தை குரு சிம்மத்தில் நின்று பார்ப்பதும் 10 ஆம் இடத்தை பார்வை செய்யாத பொழுதிலும் அவருக்கு அரசியல் வெற்றி ஆட்சி அமைக்கும் சக்தியை மாரகத்தை தரக்கூடிய குருவே உதவி செய்கின்றார்.

குருதிசை சுக்ர புத்தி நடப்பில் இருப்பதால் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சக்தியை கொடுத்த வேகத்தில் குருவே ஆயுளை சுணக்கம் செய்து ஆயுள் கண்டத்தை ஆனி மாதத்தில் உருவாக்கித் தருகின்றார். இவர் சார்ந்து இருக்கும் பா.ஜ.கட்சிக்கு தற்பொழுது பாதகமான திசை புத்தி நடைபெற்று வருகிறது.

அக்கட்சிக்கு தற்பொழுது சுக்ர திசை, சனி  புத்தி நடைபெற்று வருகிறது. கோச்சார நிலையும் சாதகமின்றி இருப்பதால் தேர்தலை சந்திக்கும் முன்பே பலவிதமான சோதனைகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். கட்சிக்குள் குளறுபடிகள், தலைமை பதவிக்குப் போட்டிகள், தலைமை பதவி வகிக்கும் தலைவருக்குத் துர்மரணத்தை கொடுக்கும் ஒற்றுமை குறையும்.
இக்கட்சிக்கு வாஜ்பாய் தலைமை வகிக்கும்பொழுது கிரகங்கள் சில வகையில் சாதகமாக இருப்பதால் எண்ணிக்கை குறைவாக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்.

ஆட்சியைப் பிடித்த இரண்டு மாதங்களில் ஆட்சி இழப்பு, தலைமை இழப்பு, ஆயுள் கண்டங்கள் உருவாகும். இந்தியா மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

பா.ஜ.கட்சி வெற்றியைக் குறிக்கும் சிம்மராசியில் குருவும் சிறப்பாக இருப்பதால் ஆட்சி அமைக்கும் நிலை சாதகமாக உள்ளது.
இந்தக் கட்சியை எதிர்த்துப் போட்டி போடும் காங்கிரஸ் கட்சியின் நிலையும் அதற்கு தலைமை வகிக்கும் சோனியா காந்தியின் ஜாதகத்தையும் பார்ப்போம்.

சோனியா காந்திக்கு அரசியல் பலம் நிறைந்து காணப்பட்டாலும் அவருக்கு கோட்சார நிலையும் ஏழரைச் சனி மூன்றாம் சுற்று இருப்பதால் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையும் சாதகமின்றி உள்ளது. தற்பொழுது அவருக்குப் புதன் மகாதிசை சுக்ர புத்தி நடப்பில் இருப்பதால் கட்சி ரீதியாக மக்கள் இடத்தில் செல்வாக்குப் பெற்று புதிய வளர்ச்சி அடைந்து இருந்தாலும், ஆட்சி, பதவி என்பது பல தடைகளை உருவாக்கிவிடும்.

இவர் சார்ந்து இருக்கும் காங்கிரசுக்குச் சாதகமான திசா-புத்திகள் நடைபெற இருப்பதால் கட்சி ரீதியான வெற்றி இருக்கும். ஆனால், பதவி வகிக்க முடியாது. சோனியாகாந்திக்கு நாடாளும் கிரக அமைப்புகள் இருந்தாலும் இந்த தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் உறுப்பினர்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

அதன் பின்பு வருகிற ஆகஸ்டு மாதத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறும். அதன்படி பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டிய நிலையோ அல்லது மாற்றுக் கட்சித் தலைவர்களின் ஆதரவுடன் சோனியா ஆட்சி அமைப்பார். அதிகப்படியான பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் பிறரது ஒத்துழைப்போடு சோனியா காந்தி ஆட்சி அமைப்பார்.

இந்த ஆண்டில் இரண்டு தேர்தல் நடக்க வாய்ப்புகள் இருந்தாலும் சோனியாகாந்தி மூலம் தேர்தல் தவிர்க்கப்பட வேண்டிய நிலை உருவாகும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு சில கட்சிகளின் ஒற்றுமைகள் குறையும். கூட்டணிகளில் மாற்றம் வரும். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகப்படியான வளர்ச்சியைக் காட்டும். ராகு திசை, ராகு புத்தியைக் காட்டுகிறது. இக்கட்சி பல தடைகளுக்குப் பிறகு ஆட்சியை அமைக்கும் எனக் குறி காட்டுகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகப்படியாக இருந்தாலும் இதனை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க. – அ.தி.மு.க கூட்டணியும் சரிபாதியாக வெற்றியைப் பெற்று இருக்கும்.

பொதுவாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பா.ஜ.கட்சிக்கு திடீர் என்று சோதனைகள் வந்து ஆட்சி இழந்துவிட்டுப் பிறகு சோனியா காந்தி தலைமையில் புதிய அரசு அமையும். வருகிற ஆகஸ்டு மாதத்தில் வெற்றிகரமான ஆட்சி பீடத்தைச் சோனியா அமைத்து கொள்வார் என்று கிரக நிலைகள் உணர்த்துகிறது.

சோதிடர் சூரியநாராயணமூர்த்தியின் எதிர்வுகூறல் ஒன்றுமே பலிக்கவில்லை. சுத்தமாக மண்ணைக் கவ்வியுள்ளார்!

‘பாரதிய ஜனதா வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைக்கும். ‘சோனியா காந்திக்கு அரசியல் பலம் நிறைந்து காணப்பட்டாலும் அவருக்கு கோச்சார நிலையும் ஏழரைச் சனி மூன்றாம் சுற்று இருப்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையும் சாதகமின்றி உள்ளது.’

‘தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகப்படியாக இருந்தாலும் இதனை எதிர்த்துப் போட்டியிடும் பா.ஜ.க. அ.தி.மு.க கூட்டணியும் சரிபாதியாக வெற்றியை பெற்று இருக்கும்.’

பாவம் இந்தச் சோதிடர். அவருக்குக் கிரகங்களின் பார்வை சரியில்லை! அவர் சொல்லிய எதிர்வுகூறல் அனைத்தும் ஒன்றுவிடாமல் பொய்த்துவிட்டன. தமிழ்நாட்டில் பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணி சரிபாதி வெற்றிபெறும் என்பது முற்றாகப் பொய்த்து விட்டது. சோதிடர் செய்தித்தாள்களைப் படித்துக் கொஞ்சம் தன்புத்தியைப் பயன்படுத்தி  அவற்றின் அடிப்படையில்  பலன் சொல்லியிருந்தால் இப்படி மூக்கு உடைபட்டிருக்க வேண்டி இருந்திருக்காது!

‘பாஜ. கட்சி ஆட்சியைப் பிடித்த  இரண்டு மாதங்களில் ஆட்சி இழப்பு, தலைமை இழப்பு ஆயுள் கண்டங்கள் உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது’ என்ற சோதிடர் எதிர்வு கூறியுள்ளார். பா.ஜ. கட்சி ஆட்சியைப் பிடிக்கவில்லை என்னும் பொழுது ஆட்சி இழப்பு என்ற பேச்சுக்கு எங்கே இடமிருக்கிறது?

தலைமை இழப்பு ஆயுள் கண்டம் என்னும் போது வாஜ்பாயிக்கு இப்போது அகவை 79 என்பதால் அவருக்குக் கண்டம் ஏற்படுவது சாத்தியமே. யார் கண்டார்கள் காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதையாக அல்லது பனம் பழம் விழ காகம் இருந்த கதையாக அவர் (2004) ஆகஸ்ட் மாதத்துக்கு இடையில் இயற்கை எய்தக் கூடும்! அப்படி நடந்தாலும் ஆகஸ்ட் மாதத்தில் இன்னொரு தேர்தல் வரச் சாத்தியமே இல்லை!

இந்தச் சோதிடர்களுக்கு வெட்கம், துக்கம், மானம், மரியாதை அறவே கிடையாது. எத்தனைமுறை மூக்குடை பட்டாலும் தங்கள் புரட்டுத் தொழிலை விட மாட்டேன் என்று முரண்டு பிடிக்கின்றார்கள்.

இந்தச் சோதி;டர்களின் பேய்த்தனமான எதிர்வுகூறல்களை வெளியிடும் தினகரன் செய்தி ஏட்டின் ஆசிரியர் ஒப்பீட்டளவில் இந்தச் சோதிடரைவிடப் பெரிய அறிவிலி ஆவார்.

தினகரன் ஆசிரியர் போலவே குமுதம் ஆசிரியரும் ஒரு முதல்த்தர கோமாளி போல் தெரிகிறது. ‘தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினிதான்’ என்று அடித்துச் சோல்கின்றார் ராம நடராஜ் தீட்சிதர்’ என்ற தலைப்பில் குமுதம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. யார் இந்த ராம நடராஜ் தீட்சிதர்?

இந்த ராம நடராஜ் தீட்சிதர் மயிலாப்பூரில் இருக்கின்றார். சோழர் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பம் வேத பண்டிதர்களாக இருந்து வந்திருக்கிறதாம்.

யசுர் வேதத்தில் வல்லவரான இவரிடம் இராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்ட ஓலைசு;சுவடி உள்ளது. இதற்குப் போகர் சுவடி என்று பெயராம்.

ஐந்நூறு சுவடிகளைக் கொண்ட போகர் சுவடி மூலம் 10 ஆயிரம் பேருக்குப் பலன்களைச் சொல்ல முடியும். அதாவது ஒரு வரிக்கு 200 அர்த்தம் காணமுடியும் என்பதுதான் போகர் சுவடியின் சிறப்பு. ‘அரசியல், வணிகம், சினிமா, கலை உலகில் 2010 ஆம் ஆண்டு வரை நடைபெறும், நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள், சம்பவங்கள் போகர் சுவடி மூலம் முன்பே அறிந்து கொள்ள முடியும்’ என்று கூறியபடியே கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட சுவடியைப் படிக்க ஆரம்பிக்கின்றார்.

‘ஆச்சார்ய ரிஷிகளே கோடி
மன்னர் கூடுவாய் சித்தர்தானே’

என்று போகும் அந்தச் சுவடிப் பாடலில் எந்த வரியும் நமக்குப் புரியவில்லை. ஆனால், அவர் விளக்கம் சொல்கின்றார்.

திருவோணம் நட்சத்திரத்தில் சிம்ம லக்கினம் மகர ராசியில் பிறந்த சிவாஜிராவ் சூட்டிய நாமத்தில் இரண்டைக் காணோம் என்பதற்கு இணங்க ரஜினிகாந்த் மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றார். இவர் தனது 42 ஆவது வயதில் மனித ஆத்மாவிலிருந்து மலைக் குகைப் பிரதேசத்தில் மறு சித்து மூலம் ரிஷியானவர். தனது பெயர் மாற்றப்பட்டு ஆத்ம ஞானத்தை அடைந்த இந்த ஜீவன் 10 ஆண்டுகள் பெரும் யோக நிலைகளை அடைந்து, பின் 5 ஆண்டுகள் பெரும் விபரீதங்களைச் சந்தித்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தை அடைந்து பெயர், புகழ், செல்வாக்குப் பெற்றது முதல் பத்து ஆண்டுகள் தற்போது சமீபகாலமாக அவர் சந்தித்து வரும் பிரச்சினைகள், நெருக்கடிகள், எதிர்ப்புகள் என்பது பின்னால் வருகிற 5 ஆண்டுகளின் பலன்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலை எதுவரை நீடிக்கும் என்பதற்கும் சுவடியில் விளக்கம் கூறப்பட்டு இருக்கிறது. சாதாசிவ ரிஷி ஞான உபதேசம், சுவடி 815, 818, 831 இல் இதற்கான ஆதாரம் உள்ளது. இதன்படி, வருகிற யூன் மாதம் பதினான்காம் திகதி வரை ரஜினி அவர்களுக்குச் சனி தெசையில் சனி புத்தி அதாவது ஆனி மாதம் அமாவாசை வரை ரஜினி அவர்களுக்கு மிகக் கெட்ட நேரம். அதன் பிறகு நிலைமை மாறுகிறது.

2006 ஆம் ஆண்டு ஒக்தோபர் 28 ஆம் திகதிக்குப் பிறகு எல்லா நெருக்கடிகள், எதிர்ப்புகள், பிரச்சினைகளையும் தவிடு பொடியாக்கி விட்டு கம்பீரமாக முன்னேறுவார்.

இந்தக் கால கட்டத்தில் நாட்டின் நிலைப்பாடு மாற்றப்படும். அந்நிய சக்திகளின் ஆதிக்கம் குறைக்கப்படும். பகைவர்கள் பின்தங்கி விடுவார்கள். சோழர் காலத்தின் சுவடிப்படி மராட்டிய நாட்டின் பெயருடைய ரஜினிகாந்த் தமிழ்நாட்டை ஆளும் காலம் என்பதே மிக முக்கியமான தீர்க்கதரிசனமாகும்.

சுவடியின் தீர்க்கதரிசனம் எங்கும் பொய்த்துப் போனது இல்லை. அதன்படி எதிர்காலத்தில் 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டின் கிங்மேக்கராகவோ அல்லது முதலமைச்சராகவோ ரஜினி முடிசூடுவது முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது. மத்தியில் தற்போது அமரப் போகும் அரசு இரண்டு வருடங்களுக்குள் கலைந்து போக மீண்டும் புதிய அரசு ஏற்பட (அதுவும் காங்கிரஸ்தான்) அதில் ரஜினி அவர்களின் பங்கு முக்கியமானதாக அமையும்’ என்று சுவடியின் தீர்க்க தரிசனங்களைக் கூறுகின்றார் ராமநடராஜ தீட்சகர். ரஜினி நம்பும் சோதிடர்களில் இந்த தீட்சிதரும் ஒருவர். இந்தத் தகவல்களை ரஜினிக்கும் சொல்லியிருக்கின்றாராம்.”

தமிழ்நாட்டில் எதற்குப் பஞ்சம் இருந்தாலும் இப்படியான கோமாளிகளுக்குப் பஞ்சமே இல்லை.

தமிழ்நாட்டில் தற்பொழுது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் ரஜினியும் அவர்களது இரசிகர்களும் எதிர்த்துப் பரப்புரை செய்தார்கள். இருந்தும் பாமக வேட்பாளர்கள் பல இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியிருக்கின்றார்கள். அதில் ஒருவர் மத்திய அமைச்சராகவும் மற்றவர் இணை அமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இதெல்லாம் ராம நடராஜ் தீட்சகருக்கு எப்படித் தெரியாமல் போய்விட்டது என்பது விளங்கவில்லை. வேதம் படிக்கிறவர் அன்றாட நாளிதழ்களைக் கூடப் படிப்பதில்லை போல் தெரிகிறது. ரஜினிகாந்த் தலை கீழாக நின்றாலும் அவரால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர முடியாது என்பதை அரசியல் பாலபாடம் தெரிந்த எல்லோரும் எளிதில் சொல்லிவிடுவார்கள்.

ராம நடராஜ் தீட்சகர் தான் வைத்திருக்கும் சுவடிகள் சப்த ரிஷிகள், வசிட்டர், விசுவாமித்திரர், கவுதமர், பரத்வாசர், போகர் காலத்துக்கு முந்திய சுவடி என்று சொல்லாமல் ஏன் இராஜராசன் (கிபி 985-1014) காலத்துச் சுவடிகள் என்று சொல்கின்றாரோ தெரியவில்லை. சுவடிகள் வடமொழியில் இல்லாமல் கிரந்த எழுத்தில் ஆனால் தமிழ் மொழியில் இருப்பது ஏதுவாக இருக்கலாம்.

சோதிடப் புரட்டு (56)
பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தைகள்!

உலகம் மிகவும் ஆவலோடு காத்திருந்த  வெள்ளிப் பெயர்ச்சி கடந்த யூன் 8 அன்று இடம் பெற்றது. இந்தியா, இலங்கை, நேபாளம், அய்ரோப்பா, ஆபிரிக்கா நாடுகளைச் சார்ந்த கோடிக் கணக்கான மக்கள் இந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்த்து மகிழ்ந்தார்கள்.

வெள்ளிப் பெயர்ச்சியை இணைய தளங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. ரொறன்ரோ அரச வானியல் அவை (Royal Astronomical Society) இந்த வெள்ளிப் பெயர்ச்சியைப் பொது மக்கள் பார்ப்பதற்கு செவ்வாய்க் கிழமை அதிகாலை ஏற்பாடு செய்திருந்தது.

சென்னையில் கிண்டியில் உள்ள பெரியார் கோளரங்கத்தில் வெள்ளி நகர்வைப் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக் கணக்கான மக்கள் வரிசையில் நின்று பார்த்தனர்.

கடைசி நேரம் மட்டும் சோதிடர்கள் இந்த வெள்ளிப் பெயர்ச்சியால் சாலை விபத்துக்கள், உயிர் அழிவுகள், அனர்த்தங்கள், அல்லல்கள் இடம்பெறப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.

உலகத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமெரிக்க அதிபர் றீகன் இறந்தது வெள்ளியின் செயல் என சென்னை பூந்தமல்லியில் வசிக்கும் சோதிட சிகாமணி இராமச்சந்திர சிவாச்சாரியார் (வயது 83) கூறினார். இது தவிர சாலை விபத்துக்கள், பெண்களின் பிரச்சினை உச்சக் கட்டம் அடைதல் போன்ற சம்பவங்கள் இவ்வாரம் முழுதும் நீடிக்கும் என்றார்.

மேலும் வெள்ளியின் தாக்குதலில்; இருந்து தப்ப கோயில்களுக்குச் சென்று அருச்சனை அபிசேகம் செய்யுமாறு சொன்னார். அதிகாலை 10. 30 தொடக்கம் தெய்வங்களை வழிபடுவதுடன் 10. 45 மணி முதல் மாலை 5 மணி வரை அசைவ உணவு உட்கொள்வதையும் மது அருந்துவதையும் தவிர்க்குமாறும், சைவ உணவைக் குறைந்தளவு உண்ணுமாறும் தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்குமாறும் (நல்ல யோசனைகள்) கேட்டுக் கொண்டார்.

இந்த சோதிடர் மாதத்துக்கு ஒரு முறைதான் பேசுவாராம். கிழமைக்கு ஒரு முறைதான் உணவு அருந்துவாராம்.

சோதிடத்தில் வெள்ளிக் கோள் காதல் மற்றும் அழகுத் தெய்வமாக உருவகப்படுத்தப் பட்டுள்ளது. எனவே இந்த வெள்ளிப் பெயர்ச்சி பாலியல் வன்முறைகளை, பாலியலோடு தொடர்புடைய குற்றங்களை அதிகரிக்கும், மணமக்கள் கற்பை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்,  இந்துமத துறவிகள் பிரமச்சாரியத்தை பேய்த்தனம் என எண்ணி அதனைக் கைவிட்டு விடுவார்கள் எனவும் சோதிடர்கள் சொன்னார்கள்.

சோதிடர் பண்டிட் பிரபாத் கபில் தனது இணைய தளத்தில் “வெள்ளிப் பெயர்ச்சியால் உலகில் பெரிய குழப்பங்கள் உண்டாகும் பங்குச் சந்தை சரியும் மணமுறிவு ஏற்படும் வாணிகத்தில் தோல்வி நடைபெறலாம்’ என ஆரூடம் சொன்னார்.

வெள்ளியி;ன் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்ற சிறப்பாக வடிவமைத்த பதக்கங்களையும் வெள்ளைநிற மாணிக்கக் கற்களையும் அணிய வேண்டும் என்று சோதிடர்கள் அறிவுறுத்தினார்கள். மேலும் வெள்ளியின் சக்தி சாதகமாகப் பாய்வதற்கு பசுக்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்றும் யோசனை சொலலப்பட்டது.

இந்த வெள்ளிப் பெயர்ச்சியால் நன்மையே அல்லது தின்மை இல்லை என்று சொல்லும் சோதிடர்களும் இருக்கின்றார்கள். சோதிடர் பேஜன் தாருவாலா இந்த வெள்ளிப் பெயர்ச்சியால் பெண்களது செல்வாக்கு அதிகரிக்கும் என்கின்றார். இவர் ‘கணேசர் சொல்கின்றார்’ என்ற சோதிட பந்தியை எழுதிவருபவர்.

இன்னொரு சோதிடர் அசோக்குமார் இந்த வெள்ளிப் பெயர்ச்சியால் ஏற்படும் தாக்கம் தற்காலிகமானது என்றும் காதல் தொடர்பான வேட்கை சிறிதளவே கூ:டும் என்கின்றார்.

இப்படி சோதிடர்கள் ஆளுக்கு ஆள் எதிர்வுகூறல் (ஆரூடம்) சொன்னார்கள். வானியலாளர்கள் என்ன சொல்கின்றார்கள்?

“இந்த வெள்ளிப் பெயர்ச்சியால் எந்தவொரு பாதிப்பும் இல்லை. சூரியனை வெள்ளிக் கோள் கடப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இந்தப் புவி தோன்றி 455 கோடி ஆண்டுகள் (ஒரு விழுக்காடு கூடிக் குறையலாம்) கழிந்து விட்டது. இந்தக் காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பெயர்ச்சி நடந்து முடிந்து விட்டன” என்கின்றார்கள்.

இந்த வெள்ளிக் கோள் பெயர்ச்சியால் வானியலாளர்களுக்கு என்ன நன்மை?

வெள்ளிப் பெயர்ச்சியின் பொழுது வானியலாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அனைத்துலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து அறிவியலாளர்களை தயார் செய்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தன.

புதினெட்டாம் நூற்றாண்டிலும் 19 ஆம் நூற்றாண்டிலும் இடம்பெற்ற வெள்ளிப் பெயர்ச்சியின் பொழுது ஏராளமான அறிவியலாளர்கள் பங்குபற்றினர். அதன் மூலம் அவர்கள் ஞாயிறு குடும்பத்தைச் சேர்ந்த கோள்களுக்கு இடையே உள்ள தூரத்தைக் கண்டு பிடித்தனர். ஜெர்மன் வானியல் அறிஞரான கெப்லர் கோள்களுக்கு இடையே உள்ள தூரத்தை மதிப்பீடு செய்தார். ஞாயிறுக்கும் புவிக்கும் இடையேயான தொலைவின் அடிப்படையில் பிற கோள்களுக்கும் ஞாயிறுக்கும் இடையில் உள்ள தொலைவை  மதிப்பீடு செய்தார்.

1631 இல் வெள்ளி ஞாயிறைக் கடக்கும் என்று அவர் கணக்கிட்ட போதும் அதைப் பார்க்க அவர் உயிருடன் இருக்கவில்லை. இப்பொழுது நடைபெற்ற வெள்ளிப் பெயர்ச்சியை அவர் முன்னரே கணித்துச் சொன்னார். தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 6 முறை மட்டுமே இந்நிகழ்வு நடந்துள்ளது. ஆனால், கெப்லரோ அல்லது அதற்குப் பின்னர் வந்த வானியலாளர்களோ ஞாயிறு – புவி இரண்டுக்கும் இடையிலான பொதுமேனி தொலைவை துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை.

ரேடார் கருவி கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே  கோள்களுக்கு இடையேயான தொலைவுகள் சரியாகக் கணக்கிடப்பட்டன.  புவிக்கும் ஞாயிறுக்கும் இடையே உள்ள தொலைவு 9 கோடியே 2 இலட்சத்து 5 ஆயிரத்து 80 கல் என கெப்லரும் பிற வானியலாளர்களும் முதலில் துல்லியமாகக் கணிக்கவில்லை. அவர்களால் கணக்கிட முடியாத தொலைவை அவர்கள் வானியல் அலகால் (Astronomial Unit) குறித்து வந்தனர். ரேடார் கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் தொலைவுகள் துல்லியமாகக் கணக்கிடப்பட்டன.

1691 இல் தொலைவைக் கணக்கிட வெள்ளி ஞாயிறைக் கடக்கும் நிகழ்வை இரு இடங்களிலிருந்து வானியலாளர்கள் கணித்த பொழுது (முக்கோண விதிப்படி) தோற்றப்பிழையால் அவர்கள் கணிப்புகள் பிழைத்துப் போயின.  ஞாயிறு – புவி இடையிலான தொலைவை ஒரு அலகாகக் கொண்டால், ஞாயிறு – செவ்வாய் இடையிலான தொலைவு  1.5 அலகு. ஒவ்வொரு கோளின் இருப்பிடத்தைப் பொறுத்து தொலைவு மாறுபடும்.

1769 இல் மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், தொலைநோக்கியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர்களால் துல்லியமான கணிப்பைப் பெற முடியவில்லை.

1791 இல் நடந்த வெள்ளிக்கோள் ஞாயிறைக் கடக்கும் நிகழ்ச்சியில் பிரித்தானிய வானியலாளர்கள் சுமத்ரா தீவில் ஆய்வு நடத்த முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரெஞ்சுக் கடற்படையினர் ஆய்வைத் தென் ஆபிரிக்காவில் செய்யுமாறு கூறிவிட்டனர். அந்நேரத்தில் மேகம், மழை மற்றும் நோய் காரணமாக அவர்களால் ஆய்வுகளை நடத்த முடியவில்லை. குறிப்பாக வெள்ளி நகர்வது அமீபா நகர்வது போன்று தெரிந்ததால் அவர்களால் துல்லியமான முடிவுகளைத் தர முடியவில்லை. இதனால் தொலைவுகளை மதிப்பிடும் அவர்கள் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்தது.

அதன் பின்னர் 1882 இல் வாழ்ந்த வானியலாளர்கள்  ஏ.யு. வின் மதிப்பை ஓரளவுக்கு சரியாகக் கணித்தனர். பின்பு தூரத்தில் உள்ள ஒரு கோளில் ரேடார் அலையை அனுப்பி அது திரும்பி வரும் நேரத்தை வைத்துத் தொலைவைக் கணக்கிட்டார்கள். அவ்வாறு கணக்கிடப்பட்ட பொழுது ஏ.யு.வின் மதிப்பும் அறியப்பட்டது. ஞாயிறு புவிக்கும் இடையில் உள்ள தூரத்தை மேலே உள்ளது போன்று குறிப்பிட்டாலும் இதைத் துல்லியமானது என்று கூறிவிட முடியாது.

அதற்குக் காரணம் ரேடார் அலைகள் ஞாயிறில் பட்டுத் திரும்பி வர ஞாயிறின்  தரைப்பகுதி என்று ஏதும் இல்லை. அங்கு அணுப்பிளவுகள் நடந்து உயர்வெப்ப வாயுக்கள் இருப்பதால் சரியான தொலைவை வானவியாலளர்களால் கணக்கிட முடியவில்லை. இப்பொழுது புவிக்கும் வெள்ளிக்கும் இடையிலான தோலைவு துல்லியமாக வானியலாளர்களுக்குத் தெரியும். இதில் நூறு அடி வேற்றுமை இருக்கலாம். மற்றப்படி துல்லியமாகக் கணித்துள்ளனர்.

இம்முறை ஞாயிறு வட்டுப் பகுதியில் வெள்ளி நகரும் நேரத்தை வைத்து வானியலாளர்கள் புவி – ஞாயிறு இடையே உள்ள தூரத்தைத் துல்லியமாக அளந்து கணக்கிடுவார்கள். புவியின் விட்டம் மற்றும் ஞாயிறு – வெள்ளி இடையே உள்ள கோணம் ஆகியவற்றை அளக்கலாம். மேலும் சூரியன், புவி, வெள்ளி இவற்றின் வழிமண்டலங்களையும் ஆராயலாம்.

சோதிடர்கள் வெள்ளிப் பெயர்ச்சியால் விபத்துக்கள், அனர்த்தங்கள் ஏற்படும் என்று பயமுறுத்தும் பொழுது வானியலாளர்கள் அதே வெள்ளிப் பெயர்ச்சியைப் பயன் படுத்தி கோள்களின் தொலைவு மற்றும் வெப்பதட்பத்தைக் கணிக்கின்றார்கள்.
சோதிடம் வானியல் இரண்டுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான். முன்னது எந்த ஆய்வையும் மேற் கொள்வதில்லை. அதனால் வெள்ளிப் பெயர்ச்சியால் கேடு விளையும் எனக் கற்பனை செய்து பலன் சொல்கின்றார்கள்.

குண்டலி சக்தி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? குண்டலி சக்தி என்பது ஆண் குறியில் இருந்து வெளியேறும் விந்துவை வெளியேற்றாமல் அதனை உடலின் மேற்பகுதிக்குக் கொண்டு சென்று தலையில் வைப்பதாகும்.  இந்தச் சக்தியைப் பெற்றவர்கள் கடவுளிடம் நேரிடையாகத் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த முயற்சியில் ஈடுபட்ட ஒரு தீவிர பக்தர் தனது முயற்சியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர்  ‘நான் கடவுளைத் தேடிச் செல்கின்றேன்……  என் வழியை யாரும் தேட வேண்டாம்’ என நாள்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

இப்படி மூடபக்தியால் அநியாயமாகத் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டவரின்  பெயர் வேணுகோபால் (34) – திருச்சியை அடுத்த நாவல்பட்டு அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாத இவர் துப்பாக்கித் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இனி இந்தச் செய்தியைப் படியுங்கள்.

கோயம்புத்தூர் தாராபுரம் அருகே நடிகர் விஜயகாந்துக்கு இராசேந்திரன் என்ற அவரது இரசிகர் ஒருவர் தனது சொந்தச் செலவில் கோயில் கட்டி இருக்கிறார். ஆறு அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட இந்தக் கோயிலில் உள்ள சிலையின் உயரம் 5½ அடி ஆகும். ‘தமிழ்க் கடவுள் விஜயகாந்த்’ என்று இந்தக் கோயிலுக்குப் பெயர் சூட்டப் பட்டுள்ளது. கடவுளை மனிதனே படைத்தான் என்பதற்கு இந்த இராசேந்திரன் நேரடிச் சாட்சியாவார்.

தமிழ் நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2004)  முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தோல்வியால் கமக்காரர்கள், தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், மாணவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நன்மை அடைந்துள்ளார்கள்.

இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய இன்னும்; ஒருவர் இருக்கின்றார். அவர்தான் பழனி முருகன். பழநி முருகன் கோயில் ஆறு படைவீடுகளில் ஒன்றாகவும் உலகில் உள்ள முருகன் கோயில்களில் மிகவும் புகழ் பெற்றதாகவும் விளங்குகிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் வீற்றிருக்கும் தலங்கள் இருந்தும் இந்தப் பழநி கோயில் மட்டும் மிகவும் சிறப்;பு மிக்கதாகக் கருதப்படுவதற்குக் காரணம் அக்கோயில் கருவறையில் உள்ள முருகன் சிலைதான். இந்தச் சிலை நவ பாஷாணங்களால் அமைக்கப்பட்டது.

இந்தச் சிலைக்கு ஆண்டுக் கணக்காக நாள் தோறும் அபிசேகம் செய்து வந்ததால் அது தேய்ந்து விட்டது. இதனால் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பொழுது அவரின் அரசவைச் சோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கர் முதல்வரைச் சந்தித்து பழநி முருகன் கோயில் கர்ப்ப கிரகத்தில் உள்ள நவபாஷாண சிலையை அகற்றி அந்த இடத்தில் வேறொரு நவபாஷாண சிலையை வைத்தால் அவரது ஆட்சிக்கு எந்த இடரும் வராது எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி புதிய நவபாஷாண சிலையை வடிவமைக்கும் பணியை அ.திமுக அரசு தொடங்கியது. இதனை அறிந்த சென்னை வடபழநியைச் சேர்ந்த ஒரு சித்தர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சில மாதங்களுக்கு முன் நள்ளிரவில் பழநி முருகன் கோயில் கருவறையில் ஏற்கனவே இருந்த நவபாஷாண முருகன் சிலையின் முன் புதிய நவபாஷாண சிலை வைக்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் அ.திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை அ.திமுக ஆராய்ந்தது. அவற்றில் பழநி முருகன் கோயில் சிலையை அப்புறப்படுத்தியது ஒன்றென்று கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்துப் புதிய சிலை வைக்கக் கோரிய சோதிடர் உன்னி கிருஷ்:ண பணிக்கர் பழநி முருகன் கோவிலுக்கு வந்து புதிய நவபாஷாண சிலை முறைப்படி செய்து வைக்கவில்லை, எனவே அதனை அகற்றி விட்டு பழைய சிலையே இருக்கட்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

இதில் இருந்து என்ன தெரிகிறது? சோதிடர்கள் சாதாரண மக்கள் மீது மட்டுமல்ல ஒரு நாட்டை ஆளும் முதலமைச்சர் மீதே செல்வாக்குச் செலுத்துகின்றார்கள் என்பதுதான். சோதிடர், முருகன் சிலையை எடு என்றால் எடுத்து, வை என்றால் வைத்து விடுகின்றார் ஜெயலலிதா!

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி பாரதியார் இப்படியான மூடநம்பிக்கைகளை, சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய் வார்த்தையை நம்பும் மக்களை நினைந்து மனம் நொந்து பாடியுள்ளர்.

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த
மரத்தில் என்பார், அந்தக் குளத்தில் என்பார்,
துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.
மந்திர வாதி என்பார் – சொன்ன
மாத்திரதிலேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனியங்கள் – இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
………………………….
சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் -ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
…………………………………..
கஞ்சி குடிப்பதற் கிலார் -அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவு மிலார்
……………………………………….                  (பாரதியார் பாடல்கள்)
எத்தனை பாரதி, எத்தனை பெரியார் தோன்றினாலும் தமிழ் மக்கள் திருந்தவே மாட்டார்களா?

சோதிடப் புரட்டு (57)
சோதிடம் என்பது வெறும் குப்பை!

ஏழு ஆண்டு கால இடைவிடாப் பறப்பின் பின்னர் (ஒக்தோபர் 1997) கடந்த கிழமை ( யூன் 11, 2004) நாசா அனுப்பிய கசினி (Cassini) விண்கலம் சனிக் கோளின் நிலாக்களில் ஒன்றான Phoebe 1 யை  1285 கல் தொலைவில் (2068 கிமீ ) கடந்து சென்றது. இந்த நிலாவின் விட்டம் 140 கல் (220 கிமீ)  மாத்திரமே.  இவ்வாறு கசினி சனிக் கோளின் 31 நிலாக்களில் 7 நிலாக்களை மொத்தம் 52 முறை அண்மித்துப் பறக்க இருக்கிறது. சனியோடு ஒப்பிடும் போது அதன் வேகம் மணிக்கு 13,000 கல் (20,900 கிமீ) ஆகும்.

Phoebe 1 தனது அச்சில் 9 மணி 16 மணித்துளி தன்னைத்தானே சுற்றுகிறது. சனியை முழுதாக ஒருமுறை வலம் வர எடுக்கும் காலம் 18 மாதங்களாகும். ஏனைய நிலாக்களைப் போல் அல்லாது இது சனியை எதிர்ப்பக்கமாகச் சுற்றுகிறது.

யூன் 30 அன்று கசினி சனிக் கோளைச் சுற்ற ஆரம்பிக்கும்.  கசினிதான் சனியைச் சுற்றும் முதல் விண்கலம். சனியை வலம் வரும் 31 நிலாக்களையும், சனியைச் சுற்றியிருக்கும்  வட்டங்களையும் (rings) இது ஆராய இருக்கிறது. இந்த ஆய்வு 4 ஆண்டுகள் நீடிக்கும். ஒக்தோபரில் Titan என்ற நிலாவின் அருகே கசினி பறந்து செல்லும். அடுத்த ஆண்டு   சனவரி மாதத்தில் கசினி ரித்தான் மீது ஒரு ஆய்வு கூடத்தை (Huygens)   இறக்கும்

கசினி (Cassini)

கசினியின் நிறை 5,384 இறாத்தல் (2,447 கிகி). இதன் தயாரிப்புச் செலவு 330 கோடி அமெரிக்க டொலர் ஆகும்.

சனிக் கோள் உரோமரது வேளாண்மைக் கடவுளது பெயரால் (Saturnus) அழைக்கப்படுகிறது. கிரேக்கர்கள் அதனை Cronus   என்று அழைத்தார்கள். Jupiter உட்பட பல கடவுளரின் தந்தை இவராவார். சனிதான் புவியில் இருந்து ஊனக் கண்ணால் நன்கு பார்க்கக்கூடிய தொலைவில் உள்ள கடைசிக் கோள் ஆகும்.

சனிக் கோள் வாயுவினால் சூழப்பட்டுள்ளது. அதன் வாயு மண்டலம் 88 விழுக்காடு நீரகத்தையும் 11 விழுக்காடு கீலியத்தையும் கொண்டது.

கலிலியோதான் 1610 ஆம் ஆண்டு சனிக்கோளின் வளையங்களை முதன் முதலில் தொலைநோக்கி மூலம் கண்டு பிடித்தவர். தொலைநோக்கி; கண்டு பிடிக்கப்பட்டது வானியல் ஆய்வுக்குப் பெரிய கொடையாக மாறியது தெரிந்ததே.

இப்படி நாசா வானியலாளர்கள் அண்டத்தில் வலம் வரும் கோள்களை ஆராயும் பொழுது எம்மவர் கிரகதோசம் நீங்க நவக்கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்றார்கள்!

வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் சோதிட நம்பிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. தங்களை மனிதக் கடவுளர் (பழனஅநn) எனச் சொல்லிக் கொள்பவர்கள் எண்ணிக்கையும் அங்கேதான் அதிகமாக இருக்கிறது. இதற்கு இந்தியாவில் நிலவும் ஏழ்மையும் கல்லாமையும் காரணமாகும்.

ஊர் பேர் தெரியாத, படிப்பறிவே இல்லாத ஒரு கபட வேடதாரி நெற்றியில் பட்டை அடிச்சுக் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை கட்டி இடுப்பில் காவி உடுத்து ஒரு ஆச்சிரமத்தை உருவாக்கி அங்கே உட்கார்ந்து கொண்டு கடையை விரிக்கிறான்.  ‘தீராத நோய் நொடி, பில்லி சூனியம், பேய் பிசாசு, கிரக தோசம், பணமுடை, மனத்தளர்ச்சி, தொழிலில் இழப்பு, தொழில் இல்லை, திருமணத் தடைகள், குழந்தை பாக்கியம் இன்மை, மணமுறிவு எதுவாக இருந்தாலும் என்னிடம் வாருங்கள், எனக்கு காளியாத்தாவின் அனுக்கிரகம் இருக்கிறது. என்னிடம் இருக்கும் தெய்வீக ஆற்றல் மூலம் எல்லாவற்றையும் ஒரு நொடிக்குள் தீர்த்து வைக்கிறேன்’  என்று சொன்னால் போதும். செய்தி உடனே அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்குப் பரவி அந்த (ஆ) சாமியாரைப் பார்த்து அருள்பெற மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுகிறார்கள்.

மலைபோல வருகிற இடர்களையும் தடைகளையும் குறைகளையும் தனது தெய்வீக சக்கதியால் பனிபோல் தீர்த்துவைக்கக் கூடிய ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை வளமாக வைத்திருக்க வழி தெரியாது ஏன் ஓலைக் கொட்டிலில் அமர்ந்திருக்கிறார் என்று படியாத பாமரரும் படித்த முட்டாள்களும் ஒரு விநாடி கூடச் சிந்திந்துப் பார்ப்பதில்லை.

திருச்சியில் அருணாசலம் தெய்வீக யோகா மையம் நடத்தி வருபவர் பசுபதியார். இவர் தன்னை இரண்டாம் இராமகிருஷ்ணர் எனக் கூறிக்கொள்கின்றார். இவர் கடந்த மே 11ஆம் நாள் (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு ஒரு செவ்வி கொடுத்தார்.
‘நான் நாகூர் ஆண்டவரின் கருணையால் தான் குழந்தை இல்லாமல் இருந்த எனது தாய்க்கு மகனாக வந்து பிறந்தேன். எனது வாழ்க்கையில் அவ்வப்பொழுது இயேசுவும் அருள்வாக்குக் கூறியிருக்கின்றார். எனவே நான் மும்மதக் கடவுளையும் வழிபடுவேன.

சென்னையில் கண்ணகி சிலையைத் தமிழக அரசு அகற்றியதால்தான் காவிரியில் நமக்குத் தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டது, அதனால் வறுமை வாட்டுகிறது. கண்ணகியை ஒரு பெண்ணாகப் பார்க்கக்கூடாது, அவள் பராசக்தியின் உருவம். எனவே கண்ணகி சிலையை அகற்றிய அதே இடத்தில் மீண்டும் சிலை வைக்கவேண்டும்.

அதே போல் பூம்புகார் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரைப் பகுதியில் சிவாலயம் ஒன்றைக் கட்ட வேண்டும்.

நான் இதற்கு முன்னர் மாயாவதி ஆட்சி இத்தனை நாளில் கவிழும் என்று எனது நண்பர்களிடம் கூறியிருந்தேன். அதேபோல் மாயாவதி அரசு நான் குறிப்பிட்ட நாளில் கலைந்தது.

மார்ச்சு முதல் நாளிலிருந்து நூறாவது நாளில் தமிழகத்தில் ஆட்சி செய்யும் அரசு பதவியை இழக்க நேரிடும். எனக்குக் கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பே தெய்வம் காட்டிவிட்டது. அதன்படி வருகிற யூன் 8 ஆம் நாள் தமிழகத்தில் அதிமுக அரசு கவிழ்ந்து விடும்.

இதை எழுதும்பொழுது யூன் 16 ஆகிவிட்டது. ஆனால், தமிழக அரசு கவிழவில்லை,  கவிழும் அறிகுறியும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை.

குறுக்கு வழியில் நோகாமல் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களே இப்படித் தங்களிடம் தெய்வீக சக்தி இருக்கிறது எனச் சொல்லி பாமர மக்களை ஏய்க்கிறார்கள்.

இதோ இன்னொரு செய்தி. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி தாடகை நாச்சி அருவி பக்கத்தில் இரமணகிரி மடம் உள்ளது. அதில் அருகில் உள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரியின் மகன் ஆனந்த சுவாமி (22) சாமியாராக இருக்கின்றார். மழை வேண்டியும், மக்கள் நலனுக்காகவும் இந்த சாமியார் வெள்ளிக்கிழமை (யூன் 11, 2004) இரவு 8 மணிக்கு 7 அடி ஆழத்தில் மூடிய குழிக்;குள் தவம் இருக்கத் தொடங்கினார். ஞாயிறு காலை சரியாக 8 மணிக்கு வெளியில் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என அவரது சீடர்கள் அறிவித்தார்கள். இதைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தார்கள்.

இந்தச் சாமியார் இதற்கு முன்னர் குழி தோண்டிப் புவிக்குள் ஒரு நாள் தவம் இருந்து உயிரோடு வெற்றிகரமாக வெளியே வந்து தனது ‘சக்தி” யை எண்பித்திருக்கின்றார்.

நிலத்துக்குள் குழி தோண்டி அதற்குள் முன்கூட்டியே சுவாமி சிலைகள், படங்கள், பூசைப் பொருட்கள், பழங்கள் தண்ணீர் முதலியன வைக்கப்படும். அதன் பிறகு ஆனந்த சுவாமி தவக் கோலத்துடன் குழிக்குள் இறங்கியதும் குழியின் மேற் பகுதியை சாமியாரின் சீடர்கள் மூடி விடுவார்கள்.

சாமியார் குழிக்குள் இறங்கிய பிறகு மேற் பகுதியை எந்த மாதிரி  மூட வேண்டும் என்று சீடர்களுக்கு யோசனை சொல்லப்படும். அம்மாதிரி மூடும் பொழுது குழிக்குள் காற்றுப் புகுவதற்கு ஏற்றவாறு மூடப் படும். சீடர்களைத் தவிர வேறு பொது மக்கள் யாரும் குழியை மூடுவதற்கு அனுமதிப்பது கிடையாது. ஏனென்றால் பக்தர்கள் குழிக்குள் காற்று நுழைய முடியாதபடி மூடி விடுவார்கள் என்ற பயம் ஆகும். பக்தர்கள் குழி மேல் வராதபடி உள்ளே சுவாமி இருக்கின்றார் கால் படக்கூடாது என்று பயமுறுத்தி விடுவார்கள்.

அப்படித்தான் ஆனந்த சுவாமி தவக் கோலத்தில் குழிக்குள் இறங்கியதும் அவரது சீடர்கள் குழியை மூடினார்கள். வழக்கமாக இந்தச் சாமியார் குழிக்குள் தவம் இருக்கும்பொழுது சுற்றிலும் சுவர் கட்டுவது இல்லை. ஆனால், இம்முறை தவம் இருந்த பொழுது சுற்றிலும் செங்கல் வைத்துச் சுவர் எழுப்பி விட்டனர்.

சீடர்கள் முறைப்படி மூடி,  குழிக்குள் காற்று புகுவதற்கு ஏற்றபடி செய்து விட்டுப் போய் விட்டனர். ஆனால், அதற்குப் பிறகு அங்கு வந்த பக்தர்கள் குழிமேல் மண்ணை போட்டுப்  பலமாக மூடி விட்டனர். இதனால் காற்று குழிக்குள் புகாமல் தடைபட்;டு விட்டது.

இந்த நிலையில் குழிக்குள் தவமிருந்த சாமியார் மூச்சுத் திணறிய நிலையில் மூடியை தள்ளி விட்டு வெளியேற முயற்சித்தார். அப்பொழுது குழியின் மேல் போடப்பட்டு இருந்த பலகை சற்று அசைந்தது. ஆனால், மண் பலமாகப் போட்டு மூடப்பட்டு இருந்ததால் பலகை முற்றாக அசைந்து கொடுக்கவில்லை.

சாமியார் தவக் கோலத்தில் குழிக்குள்ளே இறங்கும்பொழுது சுற்றிலும் தீ மூட்டம் போடும்படியும் கூறி இருந்தார். பலகை அசைந்ததும் சாமியார் தீ மூட்டத்தான் சொல்கின்றார் என்று நினைத்து சுற்றிலும் நின்ற பக்தர்கள் தீயை மூட்டி விட்டனர். தீயில் இருந்து வெளியான வெப்பம் குழிக்குள் புகுந்து சாமியாரைத் திணறடித்திருக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஆனந்த சுவாமி தவக் குழியில் இருந்து வெளிவரும் காட்சியைப் பார்க்கப் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமியின் தாய் தந்தையரும் கூடிவிட்டனர். ஆனால், சாமியார் வெளிவரவில்லை.

பக்தர்களுக்கு அய்யம் ஏற்பட்டது. இருப்பினும் சீடர்கள் சுவாமி சிறிது நேரத்தில் வெளியே வந்து விடுவார் என்று கூறிக்கொண்டே காலம் கடத்தியதை பக்தர்கள் நம்பிக் காத்திருந்தனர். பின்னர் குழியில்; இருந்து கெட்ட நாற்றம் வருவதை அறிந்த சீடர்கள் கலக்கம் அடைந்தனர்.

இந்த நிலையில் குழியின் மேல் மூடப்பட்டிருந்த பலகையைப் பிரித்துப் பார்த்தபொழுது ஆனந்த சுவாமி கவிழ்ந்த நிலையில் குப்புறப் பிணமாகக் கிடந்தார். அவர் முகத்தில் காயங்கள் இருந்தன.

அவர் பிணமாகி இரண்டு நாட்கள் இருக்கும் என்றும் அதனால்தான் அவரது உடல் அழுகிவிட்டதென சவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

குழிக்குள் காற்றுப் புகமுடியாது போகவே சாமியார் இறங்;கிய 4 அல்லது  5 மணி நேரத்தில் பரலோகம் போய்விட்டார்! (தினகரன் யூன் 15. 2004)

மேலும் இரண்டு செய்திகள்.

திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பூவலம்பேடு ஊரில் அமாவாசை நாளன்று (யூன் 16, 2004)  ஊரில் கடவுள் குற்றம் நிகழ்ந்து விட்டதாகவும், வரும் அமாவாசை நாளன்று ஊரைச் சேர்ந்த ஒரு குழந்தையும், அதன் தாயும் மரணமடைவார்கள் என்றும் அந்த ஊரில் ‘அருள்” வாக்குச் சொல்லும் பெண்மணி கூறியுள்ளார்.

இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுகளைப் பூட்டி விட்டு அக்கம் பக்கம் உள்ள ஊர்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் ஊர்ப் பள்ளிக்கூடமும்  மூடப்பட்டுவிட்டது. ஊரும்  வெறிச்சோடிக் கிடந்தது.

ஏறத்தாழ 2,000 பேர் வசிக்கும் அந்த ஊரில் கடந்த 6 மாதத்தில் 16 பேர் பல்வேறு நோய்கள் தாக்கிப் பலியாகியுள்ளனர்.

அமாவாசை முடிந்த பின்னர்தான் மக்கள் ஊருக்குத் திரும்புவார்கள் என்று தெரிகிறது!
கிருஷ்ணா பிரபல தெலுங்கு நடிகர்,  மறைந்த முன்னாள் முதல்வர் என்ரிஆர். அவர்களின் மகன். யூன் 8 ஆம் நாள் தனது வீட்டுக்கு வந்த படத்தயாரிப்பாளர் சுரேஷ், சோதிடர் சத்திய நாராயணாh இருவரோடும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார்.  பின்னர் வாய்;த் தர்க்கம் கைகலப்பாக மாறியபொழுது கிருஷ்ணா அவர்களைத் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இருவரும் மருத்தவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

சோதிடர் சத்தியநாராயணா சுடப்பட்டதற்குக் காரணம் ‘உமது சாதகத்தின் பிரகாரம் இனி உமக்குச் சினிமாத் துறையில் இறங்கு முகம்தான்’ என்று அவர் பலன் கூறியதுதான். பாவம் சோதிடர், தனக்குக் கண்டம் இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. எல்லோருக்கும் சொல்கிற பல்லி கூழ்ப் பானைக்குள் விழுந்த கதைதான்.

சோதிடர்கள், மனித கடவுளர்கள், மாந்திரீகர்கள், அருள்வாக்குச் சொல்வோர் ஆகியோரது கணிப்புகள் பலிக்கிறதோ இல்லையோ எப்படியாவது எதிர்காலத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையில் மக்கள் அவர்களது வீட்டுக் கதவைத் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால், இப்பொழுது சோதிடத்தின் கதவே பலமாகத் தட்டப்படுறது.

உலகிலேயே முதல் முறையாக சோதிடம் பற்றி இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 2,000 பேரிடம் 40 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வு  பலரது அவநம்பிக்கையை உறுதி செய்துள்ளது. அதாவது சோதிடம் என்பது வெறும் குப்பை (rubbish)  மோசடி (fraude) என்பவற்றை அடித்தளமாகக் கொண்டது என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வுபற்றிய தகவல்கள் எல்லோராலும் மிகவும் மதிக்கப்படும் துழரசயெட ழக ஊழளெஉழைரளநௌள ளுவரனநைள  என்ற இதழில் அண்மையில் வெளியானது. இது சோதிடத்தைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட நீண்ட அறிவியல் ஆய்வெனப் போற்றப்படுகிறது.
கனடாவில் உள்ள சஸ்கச்சுவான் பல்கலைக் கழகத்தைச் (Umoversoty of Saskatchewan) சேர்ந்த மனோதத்துவ பேராசிரியர் ஐவன் கெல்லி (ஐஎயn முநடடல) மற்றும் முன்னாள் அவுஸ்திரேலிய சோதிடர் டாக்டர் ஜெப்ரீ டீன் (Geoffrey Dean) ஆகிய இருவருமே இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் ஆவர்.

சோதிடப் புரட்டு (58)
சோதிடத்தால் தீமையே அன்றி எந்த நன்மையும் இல்லை!

ஒரு விடயத்தை நல்லதென்றாவது கெட்டதென்றாவது கேள்வி மாத்திரத்திலே நம்பி விடாதே!

உண்மையாக நடந்திருக்கா விட்டால் எழுதி வைத்திருப்பார்களா என்ற காரணத்தினாலேயே ஒன்று உண்மையானது என்று நம்பி விடாதே!

அநேக இடங்களில் வழங்கப்பட்டுப் பாரம்பரியமாக நடந்து வருகிற அய்தீகம் என்ற காரணத்திற்காக ஒன்றை நம்பி விடாதே!

அநேகர் நம்பி அதன்படி நடக்கின்றார்களே என்ற காரணத்திற்காக அதை உண்மை என்று நம்பி விடாதே!

ஒரு மகாத்மாவால் வரையப்பட்ட கதை என்று காட்டப் பட்டதனாலேயே அதை நம்பி விடாதே!

நமக்கு வியப்பாய்த் தோன்றப் படுவதினாலேயே அது தேவனாலோ அல்லது அற்புதமான ஒருவனாலோ ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டு அதை நம்பி விடாதே!

பெரியோர்களாலும் குருமார்களாலும் சொல்லப்பட்டது என்ற காரணத்தினாலேயே நம்பி விடாதே! ஒவ்வொரு விடயத்தையும் நடுநிலையிலிருந்து ஆராய்ச்சி செய்து சகலருக்கும் நன்மை தரத்தக்கதாக இருந்தால் அப்பொழுது அதை ஒத்துக்கொள்! ஒத்துக் கொண்டபடி நட!

இவ்வாறு 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவுரை வழங்கியவர் கவுதம புத்தர்.

யேசு, மொகமது நபி இவர்களோடு ஒப்பிடும்பொழுது புத்தர் ஒரு பகுத்தறிவுவாதி ஆவார்.  தான் ஒரு கடவுள் அவதாரம் என்றோ தூதுவர் என்றோ அவர் கூறவில்லை. தனது அறிவுரைகளைத் தேவன் வாக்கென்றோ தெய்வ வாக்கென்றோ எடுத்துக் கொள்ளாது அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை உரைத்துப் பார்த்து உண்மை இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்றுமாறு கேட்டார்.

இந்த உலகம், பால்மண்டலங்கள், அண்டம் ஆகியவற்றின் தோற்றத்துக்கும் இயக்கத்துக்கும் ஒரு முதல் காரணன் இல்லை என்று சொன்னார். சோதிடத்தை ‘மிருக சாத்திரம்’ (யுniஅயட ளுஉநைnஉந) என்றும் வர்ணித்தார்.

கிரேக்க அறிஞர் சோக்கிறட்டீசின் புகழ்பெற்ற ‘உன்னையே நீ அறிவாய்’ (Know Thyself) என்ற பொன்மொழியைக் கேள்விப்படாதோர் இருக்க மாட்டார்கள். ‘இவர் சொன்னார் அவர் சொன்னார் என்பதாலேயே எதனையும் நம்பிவிடாதே! எவர் எதைச் சொன்னாலும் அதனை உரைத்துப் பார்த்து உண்மையை அறிந்து கொள்’ என்பது அவரது அறிவுரை.

திருக்குறளிலும் இந்த அறிவுரை எதிரொலிப்பதைப் பார்க்கலாம். ‘எப்பொருள் யார் யார் வாக் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றும் ‘எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்றும் திருவள்ளுவர் கூறியிருக்கின்றார்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘புராதன சம்பிரதாயம் என்பதால் மட்டுமே ஒன்று பொய்யாய் விடாது. புதிய தென்பதால் மாத்திரமே ஒன்றை மெய்யாகக் கொண்டு விடுதலும் பிழை. ஆராய்ந்து அனுபவத்தால் பார்க்குமிடத்தேதான் ஒரு விடயத்தின் மெய்மையும் பொய்மையும் விளங்கும்’ என்கின்றார்.

மனிதருக்கு அறிவியல் ஒன்றே உண்மையை அறிவதற்கு சிறந்த வழியாகும். அறிவியல் அகம் பற்றிய நம்பிக்கையைவிட புறம்பற்றிய அறிவே முற்பட்டதும் முதன்மையானதும் தெளிவானதும் என்கிறது. சில அறிவியலாளர்கள் இந்த இலக்கணத்துக்கு விதி விலக்காக இருக்கலாம்.

அறிவியலில் உண்மைக்கான தேடல் முக்கியமானது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இரண்டையும் கடந்தது அறிவியல். உளவியல் அடிப்படையில் மட்டும் சொல்லப்படும் காரணங்களை அது புறக்கணிக்கிறது. அறிவியல் இயற்கைபற்றிய உண்மைகளை யாரும் பார்த்து தீர்ப்பளிக்கத்தக்கதான சான்றுகளை முன்வைக்கிறது. சான்றுகள்தான் உண்மைகளை அறிவதற்குரிய ஒரே அடிப்படை.

எடுத்துக்காட்டாக ஆன்மீகத்தில் உயிர் என்பது உடம்புக்கு வேறுபட்ட ஒரு ஆற்றலாகக் கருதப்படுகிறது. குழந்தை பிறக்கும்பொழுது உயிர் உள்ளே நுழைவதாகவும், சாவின் பொழுது அது வெளியேறி விடுவதாகவும் நம்பப்படுகிறது.  இதை நம்புவதும், நம்பாததும் ஒருவரது தனிப்பட்ட விருப்பு. ஆனால்,  உடலுக்குள் தனித்து உயிர் என்ற ஒரு தனிப் பொருள் இருப்பதற்கான அறிவியல் சான்று எதுவும் இல்லை.

சிலர் அறிவியல் கண்டுபிடித்துள்ள நுண்ணாய்வு கருவிகள் (scanner) இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் உடல் உறுப்புகளைத்தான் பரிசோதிக்கின்றன, உயிர் உடம்பிலிருந்து வேறுபட்ட, இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் பட்சத்தில் அப்படியான கருவிகளால் அதை அறியவே முடியாது எனக் கூறுகின்றார்கள்.

உயிர் அறிவியலுக்குத்  தெரியாத  வேறு ஒரு ‘பொருள்’ ஆக இருப்பின், அதை அதே ‘பொருள்’ ஆலான கருவிகளால்த்தான் அறிய முடியும். அதாவது உயிரை, உயிரால்த் தான் அறிய முடியும்.  உங்களிடம், என்னிடம், எல்லா உயிரினங்களிடமும் உயிர் இருந்தும், ஒரு உடலிலிருந்து உயிர் பிரிவதை இன்னொரு உயிர் அறிய முடியாமல் இருப்பதால் அறிவியல் அடிப்படையில் (1) உயிர் என்பதே இல்லை. (2) உயிர் என்பது தனித்தனியானது அல்ல, அது எல்லா  உயிர்களுக்கும் பொதுவான ஒரு “பொருள்” என்ற முடிவுக்கு வரலாம். அறிவியல்ப்படி இரண்டு விடைகளும் ஏற்புடையதே!

அறிவியல், புதிய கண்டுபிடிப்புக்கள் முன்னைய கண்டுபிடிப்புக்களை மறுத்தால் அல்லது மாற்றினால் அதனை ஏற்றுக் கொள்கிறது.

கோர்பெனிக்கஸ் (1473-1543) ஞாயிறு மையக் கோட்பாட்டை முதன் முதலாக முன்வைத்தார். ஆனால், அவர் ஞாயிறை வலம் வரும் கோள்கள் வட்டவடிவமான பாதையிலேயே சுற்றுகிறது என நம்பினார். இதனால் தொலமி போல் கோள்களின் பின்நோக்கிய அசைவை (retrograde motion) சிறு வட்டங்கள்  (நிiஉலஉடநள) வரைந்து அதன் மூலம் அதற்கு விளக்கம் கொடுத்தார்.

அவருக்குப் பின் வந்த யோகேன்ஸ் கெப்லர் (1571-1630) கோள்கள் வட்ட வடிவில் அல்ல நீள்வட்ட வடிவில் ஞாயிறை வலம் வருகின்றன எனக் கூறி அவற்றின் அசைவுக்கு கணித விதிகளை வகுத்தார். ஆனால், அப்படி வலம் வருவதற்கு ஞாயிறின் ஈர்ப்பு வலுதான் காரணம் என்பது அவருக்குத் தெரியாது போய்விட்டது.

கலிலியோ (1564-1642) மேலே இருந்து போடப்படும் வெவ்வேறு எடையுள்ள இரண்டு திடப்பொருட்கள் புவியை நோக்கி ஒரே நேரத்தில் வந்து விழுகிறது என்பதை எண்பித்தார். ஆனால், அது புவியின் ஈர்ப்புச் சக்தியால்தான் அப்படி விழுகின்றன என்பது அவருக்குத் தெரியவில்லை.

கலிலியோவைத் தொடர்ந்து வந்த அய்சாக் நியூட்டன் (1643-1727)  ஈர்ப்பு விசையே கோள்கள் நேர்க் கோட்டில் செல்லாது ஞாயிறைச் சுற்றி வருவதற்கான காரணம் என்பதை எண்பித்தார். அதற்கான கணித விதிகளையும் வகுத்தார்.

இந்த எடுத்துக் காட்டுகள் வானியல் புதிய கண்டு பிடிப்புக்கள் கண்டுபிடிக்கும் பொழுது முன்னைய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் மாற்றிக் கொள்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

மேலே சொல்லியவாறு கோர்பனிக்கன் ஞாயிறுமையக் கோட்பாடு அவருக்குப் பின்வந்த கெப்லர், கலிலியோ, நியூட்டன் போன்ற வானியலாளர்களால் செம்மைப்படுத்தப் பட்டது.

சோதிடம் அப்படியல்ல. அது தன்னை ஆய்வுக்கு உட்படுத்துவதும் இல்லை, திருத்தம் எதையும் செய்வதும் இல்லை.

சோதிடம் பராசரர், அகஸ்தியர், பிருகு, வசிட்டர் போன்ற முனிவர்கள் வகுத்த விதிகளையே ஒரு துளியும் மாற்றம் இன்றி இன்றுவரை பின்பற்றி வருகிறது. இந்த முனிவர்கள் புவி ஒரு கோள் என்பதையோ அது உருண்டை வடிவமானது என்பதையோ சரியாக அறிந்திருக்கவில்லை. அவர்கள் புவி ஒரே இடத்தில் அசையாது இருக்கும் ஒரு தட்டு என நம்பினார்கள். சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதனை ஒரு கோள் என நம்பினார்கள். இடைக்கால வானியலாளர்கள் நவகோள்கள் புவியைச் சுற்றி வருகின்றன என நம்பினார்கள்.

நான் சொல்வது என்னவென்றால் சோதிடம் பொய்யானது, அதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுகோல்கள் கிடையாது, அதன் கோட்பாடுகள் செல்லுபடியானவை அல்ல. அதனால் சோதிடத்தால் தீமையே அன்றி எந்த நன்மையும் இல்லை. மனித அறிவுக்கு அதன் பங்களிப்பு என்று சொல்ல ஒன்றுமே இல்லை. நூற்றுக் கணக்கான ஆய்வுகளில் அது தோல்வியுற்றுள்ளது.

உண்மையாகவே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட சோதிடர்கள் இருக்கலாம். ஆனால், பட்டறிவு அடிப்படையில் சோதிடம் சரியான ஒரு சாத்திரம் என்று வாதிடுவது பிழையானது. பட்டறிவு பலம் என சோதிடர்கள் நினைக்கலாம். உண்மையில் அதுதான் அவர்களது பலவீனம்.

உலகம் பற்றிய ஒருவரது நினைப்புக்கள், பழைய எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் அவை உண்மை அல்ல,  உலகம் தன்னைப்பற்றி எவற்றை வெளிக் காட்டுகிறதோ அதுதான் உண்மை.

சான்றுகள் இல்லாது ஒன்றை நம்புவது அறிவியல் நாணயமற்ற செயல். சான்றுகள் இருந்தும் ஒன்றை நம்ப மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றும் (illusion) செயல். பட்டறிவுச் சான்று (empirical  evidence) மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளத்தக்கது.

சோதிட சாத்திரம் மேற்சொன்ன இலக்கணத்துக்கு அமைய இருக்க வேண்டும். இல்லையென்றால் அது வெறுமனே சமய நம்பிக்கையை ஒத்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு போலி அறிவியலாகவே (pseudo – science) கருதப்பட வேண்டும்.

சோதிடம் என்று தனியாக ஒரு சாத்திரம் இல்லை. சோதிடத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. அவை அண்டவெளிக்கும் மனித செயற்பாட்டுக்கும் உள்ள தொடர்பு பற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. எனவே சோதிடத்தை “எண்பித்தல்” அல்லது ஆதரித்தல் என்கின்றபொழுது அது இன்னொரு கேள்விக்கு இட்டுச் செல்கிறது. எந்தச் சோதிடம்? யாருடைய சோதிடம்?

சஸ்கச்சுவான் பல்கலைக் கழகத்தைச் University of Saskatchewan) சேர்ந்த மனோதத்துவப் பேராசிரியர் அய்வன் கெல்லி (Ivan Kelly) மற்றும் முன்னாள் அவுஸ்திரேலிய சோதிடர் டாக்டர் ஜெப்ரி டீன் (Geoffrey Dean) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு பற்றிய தரவுகளை சோதிடத்துக்குக் கெட்ட தெசை எனத் தலைப்பிட்டு இந்தியா ருடே (ஒக்தோபர் 22, 2003) கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதேபோல் சோதிடம் ஒரு குப்பை என்கிறது புதிய ஆய்வு (Astrology Is Rubbish Says New Research) எனத் தலைப்பிட்டு  Times of India (ஆகஸ்ட் 17, 2003) ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. Daily Telegraph  உட்பட பல செய்தி ஏடுகளும் இந்த ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தன.

ஜெப்ரி  டீன் ஒரு காலத்தில் சோதிடராகத் தொழில் பார்த்தவர். மேற்கு அவுஸ்திரேலியா சோதிடப் பேரவையைத் தோற்றிவித்தவர். இப்பொழுது அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அறிவியல் ஆய்வு மற்றும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகளை ஆராயும் குழுவின் (Committee for the Scientific Investigation of Claims of the Paranormal (CSICOP) தலைவராக இருக்கின்றார். நூற்றுக்கும் அதிகமான அறிவியல் மற்றும் தத்துவ ஆய்வுக் கட்டுரைகளைத் தனித்தும் மற்றவர்களோடு இணைந்தும் எழுதியுள்ளார்.

சோதிடப் புரட்டு (59)
ஒரே நேரத்தில் பிறந்த இருவரது குணாம்சங்கள் ஒரே மாதிரியாக இல்லை!

‘கணிப்புகள் பலிக்கிறதோ இல்லையோ எப்படியாவது எதிர்காலத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீராத உந்துதலில்தான் மக்கள் சோதிடர்களின் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால், இப்பொழுது சோதிடத்தின் கதவே பலமாகத் தட்டப்படுகிறது.

பல நூற்றாண்டு காலமாக சோதிடர்கள் மனிதர்களது ஆளுமை மற்றும் அவர்களது தலைவிதி பற்றி ஒருவர் பிறந்த நேரத்தையும் இடத்தையும் வைத்துச் சொல்லிவிடும் ஆற்றல் தங்களுக்கு உண்டு எனச் சொல்லி வந்திருக்கின்றார்கள்.

இந்த ஆய்வு சோதிடத்தின் மையக் கோட்பாட்டை – ஒருவர் பிறக்கும் நேரத்தில் ஞாயிறு, நிலா மற்றும் கோள்கள் செலுத்தும் தாக்கத்தால் அவரது குணாம்சங்கள் உருவாக்கப்படுகிறது – என்ற கருத்தை நார் நாராகக் கிழிக்கிறது.

ஒரே நேரத்தில் பிறந்த இருவர் இடையே கூட குணாம்சங்கள் ஒரே மாதிரியாக இல்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் சோதிட வட்டாரங்களில் பயத்தையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.

பிரித்தானிய நாட்டு சோதிட சங்கத்தின் தலைவர் Roy Gilett,  The Telegraph நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் இந்த ஆய்வின் முடிவுகளை மிக “எச்சரிக்கை” யோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஆய்வு சோதிடத்தை ‘கறை” ப்படுத்தும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

உலகெங்கிலும் பரவலாக கடைப்பிடிக்கப்படும் கிரக நிலை அடிப்படையிலான சோதிடத்தை திறனாய்ந்து மனிதர்களின் குணநலன்கள், அவர்கள் பிறந்த நேரத்தில் சூரியன் மற்றும் கிரகங்களின் இருக்கையைப் பொறுத்தே இருக்கும் என்று சோதிடம் சொல்வதையும் இவர்களது ஆய்வு விளாசுகிறது.

இலண்டனில் 1958 இல் துவங்கிய இந்த ஆய்வுக்காக மீன இராசியில் சில மணித்துளி இடைவெளியில் பிறந்த 2,000 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் சோதிடத்தின்படி அவர்கள் பிறந்த நேரம் அவர்களது எதிர்கால உடல்நலத்தைப்  பாதிக்குமா? ஒரே நேரத்தில் பிறந்த குழந்தைகளின் குணநலன்கள், எதிர்கால ஆளுமை ஆகியவை ஒரே மாதிரியாக இருக்குமா? அனைத்தும் ஒருவருக்கு அவரது பிறந்த நேரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது என்ற  சோதிடர்களின் கூற்று எவ்வளவு தூரம் உண்மை? போன்றவற்றைத் தெரிந்து கொள்வதே ஆய்வின் நோக்கமாகும்.

டீனும் கெல்லியும் 1,000 பேருக்கும் அதிகமானவர்களின் தொழில், கவலை, மண வாழ்க்கை, வலுச்சண்டைக்குப் போதல்,  எவ்வளவு தொலைவு அவர்கள் சமூகத்தோடு பழகுகிறார்கள், கலை, கணிதம், விளையாட்டு, படிப்பு, வாசிப்பு ஆகியவற்றில் அவர்களுக்கு இருந்த திறமை பற்றி ஆய்வு செய்தார்கள்.

ஆனால், ஒரே நேரத்தில் பிறந்த இருவரிடையே கூட இந்தக் குணாம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றையும் ஆய்வாளர்களால் காண முடியவில்லை. ‘நாங்கள் பார்த்த முடிவுகள் சோதிடத்துக்கு எதிராகவே இருந்தது’ என்கிறார் டீன்.

ஒழுங்கற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரது சாதகங்களையும் சிலரது குணநலன்கள் ஆளுமை மற்றும் இயல்புகள் பற்றிய விவரங்களையும் சோதிடர்களிடம் கொடுத்து எந்தச் சாதகம் எவருடையது என்று கண்டு பிடிக்க முடியுமா என டீனும் கெலியும் முயற்சி செய்து பார்த்தபொழுது அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

அவர்கள் கண்டு பிடித்தது ஊகத்தின் அடிப்படையில் செய்யப்படுபவையை விடச் சரியாக இருக்கவில்லை. அதாவது அவர்களால் சரியாகப் பொருத்தப்பட்ட சாதகங்கள் 50 விழுக்காட்டைத் தாண்டவில்லையாம்.

சோதிடர்களுக்கு அவர்கள் கேட்ட முழுத் தகவல்கள் கொடுக்கப்பட்டுத் தங்கள் முடிவுகள் சரியானவை என அவர்கள் நம்பிய பின்னரும் அவர்களது தேர்வு விழுக்காட்டில் மாற்றம் இருக்கவில்லை.

இதே போல் நாற்பதுக்கும் மேலான ஆய்வுகள் மூலம் 700 சோதிடர்களிடம் 40 விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வு செய்யப்பட்டவர்களில் சில இந்திய சோதிடர்களும் அடங்குவர்.

‘சோதிடத்துக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுகோல்கள் இல்லை. அதன் கொள்கைள் பயனற்றது. சோதிடம் நூற்றுக்கணக்கான தேர்வுகளில் பிழைத்து விட்டது. ஆனால், இந்தச் சிக்கல்கள்பற்றி எந்தச் சோதிட நூல்களிலும் காண முடியவில்லை. அதன் தார்ப்பரியம் இந்த நூல்கள் எல்லாம் (மக்களை) ஏமாற்றுகின்றன’ என்கிறார் டீன்.

‘சோதிடத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் முதல் வலுவான ஆய்வு இது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்” என்றார் Journal of Astrology  இதழின் ஆசிரியர் கே.என் ராவ். அதே நேரத்தில் கிரக சஞ்சார இராசியை அடிப்படையாகக் கொண்ட மேலைநாட்டு சோதிடத்தைத்தான்  (Tropical Astrology) இந்த ஆய்வு சாடுகிறது என்று இவர் சொல்கிறார்.

தனக்கு எதிரான கண்டனக் கணைகளை எதிர்வுகொள்ள டீன் ஆயத்தமாய் இருக்கின்றார். ‘நான் நினைக்கின்றேன் சோதிடர்களால் நான்தான் மிகவும் வெறுக்கப்படும் ஆளாக இருக்க வேண்டும். காரணம் அவர்கள் என்னைத்தான் ‘கட்சி மாறியவன்’ (turn-coat) என்று நினைக்கின்றார்கள்.’

இந்த ஆய்வு சோதிடர்களின் கோட்பாடுகளை பலவீனப்படுத்துகிறது. எங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பிறந்த நேரங்களைவிட இவர்கள் குறைந்தளவு நேர வேறுபாடோடு பலன் சொல்கிறார்கள்.

‘சோதிடர்கள் பிறந்த நேரத்தில் ஒரு மணித்துளி வேறுபாடு இருந்தாலும் அது இரண்டு இராசி வீடுகளது எல்லைகளை (ர்ழரளந ஊரளிள) மாற்றிவிடும் என சில சமயங்களில் வாதிடுகின்றார்கள். ஆனால், நடைமுறையில் அவர்கள் தங்கள் வாடிக்கைகாரர் சொல்லும் நேரத்தை அப்படியே எடுத்துக் கொள்கின்றார்கள்’ என்கின்றார் டீன்.

இந்த ஆய்வு மிகச் சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வியாழனும் வெள்ளியும் தங்களது சஞ்சார நிலையிலிருந்து சற்று விலகும். அப்பொழுது திருமணம் செய்யக் கூடாது என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு (2003) அப்படிப்பட்ட ஒரு ஆண்டு என்று இந்திய சோதிடர்கள் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால், பல கோடிகள் புரளும் இந்தியாவின் திருமணச் சந்தை இதைக் கேட்டு அதிர்ச்சி அடையவில்லை. திருமணம் நடத்துவதையும் யாரும் நிறுத்தவில்லை. அதனால் சோதிடம் என்பது நம்பிக்கைக்கு மட்டும்தானே தவிர நடைமுறைக்கு அல்ல என்பது தெளிவாகிறது.

மத்திய மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியின் யோசனைகளுக்கேற்ப வேத சோதிடத்தில் இளநிலை மற்றும் முதுநிலை அறிவியல் பட்டப் படிப்பை பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்துவது பற்றி ஆலோசிக்க, பல்கலைக் கழக மானிய ஆணையம் 2001 இல் இரண்டு பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆனால், அதிலிருந்தே இது பற்றி சர்ச்சையும் விவாதமும்தான் நடந்து வருகிறது. இலண்டன் குiயெnஉயைட வுiஅநள இன் கூற்றுப்படி 100 கும் மேற்பட்ட அறிவியலாளர்களும் 300 அரசியல் மற்றும் மூத்த அறிவியலாளர்களும் இதை எதிர்வுத்து அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார்கள்.

ஆனால், விவாதங்களும் சர்ச்சைகளும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சோதிடத் துறையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு 20 விழுக்காடு ஐரோப்பியர்கள்தான் சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று 80 விழுக்காட்டினர் ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் வரும் இராசி பலனைப் படிக்கத் தவறுவதில்லை. அதில் 60 விழுக்காட்டினர் அதனை அப்பட்டமாக நம்புகின்றார்கள்.

இந்தியாவில் சோதிடர்களை பணம் இல்லாமல் பார்க்க முடியாது. பல சோதிடர்கள் ஒரு மணி நேர ஆலோசனைக்கு உருபா 800 இல் இருந்து உருபா 1,200 வரை பணம் வாங்குகிறார்கள்.

சூரியன் மற்றும் கிரகராசி அடிப்படையிலான சோதிடம் உலகம் முழுவதும் பிரபலமானது என்பதால் கெல்லியின் ஆய்வுபற்றிச் சோதிட வட்டாரமே எரிச்சல் அடைந்திருக்கிறது. இந்தியாவில் சோதிடத்தை நம்பிப் பிழைப்பு நடத்துபவர்கள் 10 இலட்சத்திற்கும் மேல் இருக்கின்றார்கள்.

‘சில நொடிகள் வேறுபாட்டில் பிறந்த இரட்டையர்களுக்கே சாதகம் ஒரே மாதிரியாக இருக்காது. இந்த ஆராய்ச்சி சில அடிப்படை சோதிட விதிமுறைகளைக் கண்டு கொள்ளவில்லை’ என்கின்றார்  Future Samachar  இதழின் ஆசிரியரும் 95 சோதிடக் கல்வி மையங்களை நடத்துபவருமான அருண் பன்ஸால்.

மற்றவர்களுக்கும் கடுப்புத்தான். மத்தியப் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரியும் 25 ஆண்டுகளாக சோதிடக் கலையில் ஆர்வம் கொண்டு அதைப் படித்து வருபவருமான டி.எஸ் மாத்தர், ஐ.ஏ.எஸ் “இந்த ஆய்வு தலைவிதியைக் கருத்தில் கொள்ளவே இல்லை’ என்கின்றார். ‘விதி என்பது முந்தைய சென்மங்களின் வினைகள் அடங்கியது. முந்தைய ஜென்ம வினைகளைப் பொறுத்தே இந்த சென்மம் இருக்கும். இதன் தாக்கம் சாதகத்தில் இருக்கும். இதுதான் சாதகத்தை புரிந்து கொள்ள வேண்டிய விதம்’ என்கின்றார் மாத்தர்.

ஓஷோவின் சீடரும் சீட்டு (Tarot) சோசியக்காரருமான உஷா இராசி பலன்கள் முறையை ஆதரிக்கின்றார். “பன்னிரண்டு இராசிகளை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களது மனம்-உடல் குணாம்சங்களைச் சொல்வது மிகவும் துல்லியமாக இருக்கிறது’ என்கின்றார். அவர் தினசரி பலன்களைச் சொல்ல 12 இராசிகள் உதவிகரமாக இருந்தாலும் வேறு சில பாணிகளையும் கலந்து பார்ப்பதுதான் அதிக பலனைத் தருகிறது என்கின்றார்.

இதுபோல கூட்டு சோதிட முறைகளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தங்கள் தொழில்மீது விமர்சனம் வரும் போதெல்லாம் இந்திய நிபுணர்கள் பராசர முனிவர் எழுதிய பிரிஹத் பரஷார் ஹோர சாஸ்த்ரா என்ற நூலைத்தான் கேடயமாகப் பிடிக்கின்றார்கள்.

போபாலில் சோதிட மையம் ஒன்றை நடத்தி வரும் ஓய்வு பெற்ற பொறியாளர் வி.எஸ். லவ்லேகர் மேற்கத்திய சோதிடம் சூரியனை அடிப்படையாகக் கொண்டு தனி மனிதர்கள், குணங்கள், உறவுகளைப்பற்றிப் பேசுகிறது என்றும் இந்திய சோதிடம் என்பது ஒரு மனிதனது பாரம்பரிய வரலாறு, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்வுகாலம் பற்றிக் கூர்மையான பார்வைகளை முன்வைக்கிறது என்றும் கூறுகின்றார்.

இராசி பலன்களோ, சாதகமோ மக்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவதற்குக் காரணம் எதிர்வுகாலத்தை கணிக்கும் தன்மைதான். இந்த கணிப்புகள் முற்றிலும் சரியாக இருக்கலாம் முற்றிலும் தவறாகவும் இருக்கலாம். சோசியத்தின் மர்மமே இதில்தான் அடங்கியிருக்கிறது.

பயிற்சி வழக்கறிஞரான 26 வயது ஸ்மிதா கோகலே ஜாதகப் பொருத்தம் பார்த்து, நாள் நேரம் பார்த்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான மூன்றாவது நாள் தன் கணவருக்கு ஏற்கெனவே திருமணமான செய்தி அவருக்குத் தெரியவந்தது. அவருக்குத் திருமணமான ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. மனைவிக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டு பக்கவாதம் பீடித்ததால் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டாராம். கோகலே இனி சோசியத்தை நம்ப மாட்டார்.

சோதிடப் புரட்டு (60)
மரணப் படுக்கையில் சோதிடம்!

சோதிடம் என்பது சிறிய, பெரிய தரவுகள் கொண்ட சிக்கலான ஒரு தொகுப்பு. “இதற்கு கணிதத்தின் துல்லியம் தேவை. விளக்கம் சொல்லும் திறன், கணிப்புத் திறன், சரியாகப் பார்க்கும் திறன் வேண்டும்” என்கின்றார் ராவ்.

ஆனால், நம் ஊரில் சோதிடர்கள் பல நாட்டு சோதிட முறைகளை கலந்துகட்டி பலன் சொல்கின்றார்கள். அப்படி இருந்தும் வருங்காலம் பற்றிய அறிவுள்ள ஒருவரிடமிருந்து ஆறுதலான வார்த்தைகளைக் கேட்பது பலருக்கு ஆறுதல் தருகிறது என்பதுதான் மக்கள் அவர்களை நம்பக் காரணம் ஆகும்.

சோதிடர்களின் இந்தத் திறமையை பொது மக்களின் கருத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தலாம். இதனால் நாட்டில் மகத்தான மாற்றங்கள் ஏற்படும் என்கின்றார் டில்லியிலுள்ள விஞ்ஞானியான fT`huh]h. அவர் இந்தியாவின் சோதிடத்திற்கு உலகச் சந்தையில் சிறந்த இடம் உண்டு என்கின்றார். ஆனால், கைரேகை சோசியத்திற்கு ஒரு அமைப்பு ஆரம்பிப்பதைவிட அறிவியல், தொழில்நுட்ப நிலையம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்கின்றார். வான் இயற்பியலாளரான ஜெயந்த் நார்லிகர் சொன்னதுபோல சோதிடத்தை பல்கலைக் கழகப் பாடமாக்குவது இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும்.

சோதிடம் சரியா, தப்பா என்பது பிரச்சினை அல்ல. ஆனால், சோதிடத்தை தேசத்தின், தனிநபர்களின் மனப்போக்கைப் பாதிக்கும் அளவிற்கு அனுமதிக்கலாமா என்பதுதான் கேள்வி. டாக்டர்களும் ராணுவ வீரர்களும் செய்யும் தவறுகளையே கண்டிக்கும்பொழுது சோதிடர்களின் தவறுகளை மட்டும் ஏன் கண்டுகொள்ளாமல் விட வேண்டும் என்று கேட்க வேண்டிய சமயம் வந்துவிட்டது. ( இந்தியா ருடே- 22-10-2003)

இப்பொழுது  Indian Skeptic  தொகுதி 1 (11) என்ற ஏட்டில் மறுபதிப்பு செய்யப்பட்ட மரணப் படுக்கையில் சோதிடம் (Astrology on Death Row) என்ற கட்டுரையின் தமிழாக்கத்தைப் பார்ப்போம். இதனை முதலில், தற்பொழுது செயலற்றுப் போன Kansas City for Skeptical Inquiry என்ற குழுவே ஆய்வு செய்து எழுதி இருந்தது. சோதிடம் எவ்வளவு தொலைவு சரியானது?’

இதனைக் கண்டறிய கன்சாஸ் நகர அய்யுறவு குழுவைச் (KCSI) சார்ந்த ஒரு உறுப்பினர் தான் இளைஞர்களோடு பணியாற்ற விருப்பம் கொண்டவர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அய்ந்து சோதிடர்களை அணுகினார். ஒவ்வொரு சோதிடரிடமும் தனது சாதகத்திற்குப் பதில் யோன் கேசி (John Gacy) என்றவரது பிறந்த திகதி, நேரம் மற்றும் இடத்தை கொடுத்தார். அத்தோடு அனைத்துலக மட்டத்தில் துல்லியமான கணிப்புக்குப் பெயர் போன   Neil F.Michelsen  நிறுவனத்தினால் கணிக்கப்பட்ட சாதகத்தைக் கொடுத்து அவர்களது ஆலோசனையைக் கேட்டார்.

அந்த அய்ந்து சோதிடர்களும் ஒரே குரலில் அவர் செய்ய விரும்பிய பணியை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறினார்கள். மேலும் அந்தப் பணியில் அவருக்கு எந்தச் சிக்கலும் இருக்காது எனவும் சொன்னார்கள்.

இந்த யோன் கேசி என்பவன் சிகாகோவில் 17-03-1943 இல் பிறந்தவன். பிறந்த நேரம் 00.49 CST அல்லது 5.49 GMT ஆகும். இரண்டும் அவனது ஜென்ம லக்கினம்  (Ascendant) விருட்சிகம் (Sagittarius) எனச் சொல்லியது.

இது நடக்கும் பொழுது உண்மையான யோன் கேசி Menard Correctional Centre, Chicago  மரண தண்டனைக் கைதிகளின் கொட்டிலில் அடைக்கப்பட்டிருந்தான். கேசி 33 இளம் ஆண்களையும் பையன்களையும் சித்திரவதை செய்து கொன்ற குற்றத்துக்காக 12 மரண தண்டனையும் 21 ஆயுள் தண்டனையும் பெற்றிருந்தான்.

கேசியின் சாதகத்தைத் தெரிவு செய்ததற்குக் காரணம் ஒரு காமவெறி பிடித்த பாலியல் கொலையாளி ஒருவனை அவனது சாதகம் திருத்தமாகப் படம்பிடித்துக் காட்டும் என்ற எதிர்வுபார்ப்புத்தான். சாதகத்தைப் பார்த்து சோதிடர்கள் ஒருவரது குணாம்சங்கள் மற்றும் எதிர்வுகாலத்தைச் சொல்ல முடியுமானால் அதற்கு கேசியின் சாதகம் எந்தக் குழப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாது.

கேசி தனது பலியாளர்களை (victims) கொன்ற விதம் மிகவும் அருவருக்கத்தக்கது. பெரும்பாலும் அவனால் கொலை செய்யப்பட்டவர்கள் வயதில் குறைந்தவர்கள். அவர்களை அவன் தந்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்றான். அவனிடம் தந்திரமாகச் செய்யப்பட்ட ஒரு சோடி கைவிலங்கு இருந்தது. அதைத் தனது கைகளில் மாட்டிப் பின்னர் அதில் இருந்து தப்பித்துக் கொள்ளுவது போல் செய்து காட்டுவான்.

பின்னர் அந்தக் கைவிலங்கை தனது பலியாளர்கள் கைகளில் மாட்டி அவர்களை மடக்கி விடுவான். அப்படிச் செய்தபின் அவர்களைத் தொடர்ச்சியாக சித்திரவதை செய்து அவர்களோடு பாலியல் உறவு கொள்வான். முடிவில் அவர்கள் தங்களது சாவிற்கு மன்றாடும்பொழுது கழுத்தை நெரித்து, பெரும்பாலும் அவர்கள் அணிந்திருந்த கோவணத்தை, அவர்களது தொண்டைக்குள் திணித்து கொலை செய்தான்.

ஒவ்வொரு சோதிடருக்கும் கணினியில் தயாரித்த சாதகத்தை பார்க்க எவ்வளவு கால அவகாசம் வேண்டுமோ அந்தளவு கால அவகாசம் வழங்கப்பட்டது.

யோன் சான்ட்பச்    (John Sandbach) என்ற சோதிடர் தேசிய மட்டத்தில் நன்கு அறிமுகமானவர். ஆறு புத்தகங்களை எழுதியவர். அவர் கூறிய பலன்? ‘கடந்த காலங்களில் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் என்பதையிட்டு கவலைப் பட வேண்டாம். கடந்த காலங்களில் சாதகம் வேகக் குறைவை காட்டியிருக்கலாம். ஆனால், இப்பொழுது நீங்கள் இளம் பையன்களோடு பணிபுரியலாம். அதனால் உங்களிடம் இருக்கும் திறமைகளை அது வெளிக் கொணர வாய்ப்பை ஏற்படுத்தும்.’

Randy Goodman   என்பவர் இன்னொரு சோதிடர். இவர் Radisson Hotel Muehlebach  என்ற கோட்டலில் மர்மமான முறையில் பறக்கும் hot dogs  பற்றி ஆய்வு செய்தவர் என Kansas City Star  என்ற ஏடு செய்தி வெளியிட்டது. இந்த சோதிடர் கேசி போல நடித்தவருக்குச் சொன்னார் ‘நீங்கள் உண்மையில் மக்களுக்கு சேவை செய்யப் பிறந்தவர்! சென்ற பிறப்பில் உமது ஆற்றலை மிகவும் நல்ல முறையில் பயன்படுத்தி உள்ளீர்கள். எனவே இந்தப் பிறப்பில் நீர் கொடுக்க வேண்டியது மிக அதிகமாக இருக்கும். உமது வாழ்க்கை மிக மிக நேர்த்தியாக அமையும்!’

மற்றுமொரு பிரபல உள்ளுர் சோதிடர் Norman Knight  கும் சாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் சொன்னார் ‘இந்த சாதககாரன் மிகவும் கூருணர்ச்சி படைத்த ஆள்  (very very sensitive person)  நான் நினைக்கின்றேன் இவர் இளைஞர்களோடு நன்கு பழகக்கூடியவர். கொடுக்கல் வாங்கலில் நம்பிக்கை பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்த வழி மிகவும் நல்லதாக இருக்கும்.’

Beverly Farrel  தன்னை ‘உலகளவில் மதிக்கப்படும் நூலாசிரியர், விரிவுரையாளர், சமய போதகர், இயல்கடந்த (ஆநவயிhலளiஉள) ஆய்வாளர், சோதிடர், ஆன்மீகவாதி மற்றும் அதீதஇயல்பு பற்றி 30 ஆண்டுகால அனுபவம் உடையவர்’ எனச் சொல்கின்றார். இவரும் அந்த சாதகத்துக்குப் பின்னால் இருப்பவரை இளைஞர் பணிக்குப் போகுமாறு ஊக்குவித்தார். ‘நீங்கள் இளையவர்களோடு பணியாற்றுகிறீர்கள், உங்களுக்குப் பாரிய கடமைச் சிக்கல்கள் எதுவும் இருக்காது’ என்றார்.

சோதிடர்களின் கணிப்புக்கள் ஒருவர் பிறந்த நேரத்தில் கோள்கள் நின்ற நிலையைப் பார்த்து ஒருவரின் குணாம்சங்கள் பற்றிப் பலன் சொல்ல முடியாது. அது மட்டும் அல்லாது அந்த ஆளின் கடந்த காலத்தையோ எதிர்வுகாலத்தையோ சொல்ல முடியாது. மேலும் தங்கள் வாடிக்கைகாரர்களிடம் தங்களைப்பற்றிய ஒரு உயர்வான படிமத்தை உருவாக்கும் ஆற்றல் நீங்கலாக வேறு நுண்புலம் எதுவும் இல்லாதவர்கள்.
முஊளுஐ மேற்கொண்டு உள்ளுர் கல்லூரிகளில் மெய்யியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கடித உறையைக் கொடுத்தது. அதில் தங்கள் தங்கள் பெயர், பிறந்த நாள், பிறந்த நேரம்பிறந்த இடம் இவற்றை எழுதுமாறு கேட்கப்பட்டது. அதற்குள் கேசியினுடைய சாதகம் சொல்லும் பலன்கள் விபரம் கொடுக்கப்பட்டன. அவை ஒரு துறைசார் சோதிடரால் அவர்களுக்கு சிறப்பாகச் சொல்லப்பட்ட பலன்கள் என மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அந்தப் பலன்கள் ஒவ்வொன்றும் சரியாக பொருந்தி வருகிறதா? பொருந்தி வந்தால் அவற்றைத் தரப்படுத்துமாறு கேட்கப்பட்டது.

சோதிடத்தை நம்பும் மாணவர்கள் செய்த தரப்படுத்தல் சோதிடத்தை நம்பாத மாணவர்களைக் காட்டிலும் சரியானவை என மிகைப்படுத்திக் கூறும் தன்மை பெற்றிருந்தது. மேலும் அவை நடக்கக்கூடியதுதான் என்றார்கள். இந்தப் போக்கு சான்றுகள் இல்லாவிட்டாலும் சோதிடம் சொல்லுமாப்போல் எல்லாம் நடக்கிறது என்று பலர் விடாப்பிடியாகச் சொல்வதை ஒத்திருந்தது.

இப்படிக் கொலைகாரர்களது சாதகத்தைக் காட்டி செய்யப்படும் ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்பட்டன.

சோதிடர்கள் கூறும் பெரும்பாலான பலன்களின் வாசகங்கள் தெளிவற்ற விதத்தில் இருக்கும். இது வேண்டும் என்றே செய்யப்படுவதாகும். இந்தத் தெளிவின்மையே சோதிடர்களது மிகப் பெரிய பலமாக இருக்கிறது. காரணம் சோதிடர்கள் கூறும் பலன்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்வது முடியாத செயலாகப் போய்விடுகிறது. பரிசோதி;த்துப் பார்த்து உண்மை அறிய வேண்டும் என்பது அறிவியலின் அடிப்படைக் கோட்பாடாகும்.

கோள்கள், முக்கியமாக ஞாயிறு சந்திரன் இரண்டும் ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் இராசி வட்டத்தில் எந்த இராசி வீட்டில் சஞ்சரிக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் விதி நிச்சயிக்கப்படுகிறது எனச் சோதிட சாத்திரம் சொல்கிறது.

குழந்தை பிறக்கும் சமயத்தில் அடிவனத்தில் உதயமாகிக் கொண்டிருக்கின்ற இராசி வீடே ஜெனன லக்கனமாகும். ஜெனன காலத்தில் சந்திரன் நின்ற இராசி வீடு ஜென்ன இராசியாகும். சரியா?

இப்பொழுது சந்திரனில் கால் பதித்த விண்வெளி வீரர்களது சாதகங்களை எடுத்துக் கொள்வோம்.

About editor 3149 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply