ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்: சரவணபவன் எம்.பி

ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்: சரவணபவன் எம்.பி

மாற்றுத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும். அந்த அணியினரின் தலையில் தமிழ் மக்கள் இறுக்கிக் குட்டி அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அடக்க ஒடுக்கமாக இருக்கச் செய்ய வேண்டும்.

இல்லையேல் அவர்கள் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்து விட்டு தங்கள் நலன்களைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான தலைமை ஒன்று பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் தெரிவித்திருக்கிறார்.

கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவருக்கோ அல்லது அவரது கட்சிக்கோ கூட்டமைப்பின் தலைமையுடன் முரண்பாடுகள் இருந்தால் அதனைக் கூட்டமைப்புக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதுதான் கூட்டணி தர்மம்.அது முடியவில்லை என்றால் கூட்டமைப்பை விட்டு அவரும் அவரது கட்சியும் வெளியேறிச் சென்று மாற்றுத் தலைமை குறித்துப் பேச வேண்டும்.

அதைச் செய்யும் துணிவு அவர்களுக்கு ஒருபோதும் கிடையாது. அவர்கள் அப்படிச் செய்யவும் மாட்டார்கள்.

உள்ளே இருந்து கொண்டே கலகக் குரல் எழுப்புவதன் ஊடாகத் தமது நலன்களைத் தேடிக்கொள்வதே அவர்களின் அருவருக்கத்தக்க பாணி. சிவசக்தி ஆனந்தனோ ஈபிஆர்எல்எவ் கட்சியோ இவ்வாறு சபை குழப்பித் தனத்துடன் நடந்து கொள்வது இன்று நேற்று நடப்பதல்ல.

அவர்களின் வரலாறு முழுவதும் அதைத்தான்அவர்கள் செய்து வந்திருக்கிறார்கள். அவர்களின் கட்சி வரலாற்றை நன்கு உற்றுப் பாருங்கள் அது புரியும்.

அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று ஆயுதம் தூக்கினார்கள். பின்னர் எந்த மக்களுக்காக ஆயுதங்களைத் தூக்கினார்களோ அவர்களையே சுட்டுக்கொன்று ‘மண்டையன் குழு’ என்று பெயர் வாங்கினார்கள்.

அந்த மக்களையே கடத்தினார்கள், அவர்களிடமே கொள்ளையடித்தார்கள். இவையெல்லாம் விடுதலைக்குத் தேவையானவை என்று சப்பைக்கட்டுக் கட்டினார்கள்.

அதாவது எல்லாத் தமிழ் இளைஞர்களும் மக்களுக்காகப் போராடப் புறப்பட்டபோது தாமும்அதிகாரங்களைப் பெற வேண்டும் என்கிற சுயநலத்துடன் ஆயுதங்களைத் தூக்கினார்கள்.

அதனால்தான் அந்த ஆயுதங்களைத் தமது மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தி அதிகாரத்தை நிலை நிறுத்தினார்கள். அவர்களுக்குத் தேவையாக இருந்தது எல்லாம் அவர்களின் சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமே.

அது போகட்டும், கட்சிக்குள்ளே அவர்கள் என்ன செய்தார்கள். ஈபிஆர்எல்எவ் கட்சிக்குள் இருந்த மூத்த தலைவர்கள் உட்கட்சி மோதல்களாலும் சகோதரப் படுகொலைகளாலும் அழிக்கப்பட்ட போது தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

சிவசக்தி ஆனந்தனும் அவரது தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தருணம் வந்த போது தலைமைப் பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

ஆக கட்சிக்குள்ளும் அவர்களின் குறியாக இருந்தது தமது சுயநலனை நிறைவேற்றிக் கொள்ளும் திட்டம் மட்டுமே.

அதன் பின்னர் எந்த மக்களின் விடுதலைக்கு என்று புறப்பட்டார்களோ அந்த மக்களை நட்டாற்றில் கைவிட்டு விட்டு இந்தியாவின் பின்னால் சென்றார்கள். ஏன்? இந்தியாவிடமிருந்து நலன்களையும் பணத்தையும் பெற்றுக்கொள்வதற்காக.

அந்தப் பருப்பு இனிமேல் வேகாது என்று தெரிந்த போது இலங்கைக்கு ஓடி வந்து கொழும்பு அரசுடன் சேர்ந்து கொண்டார்கள்.

சிங்கள அரசுகளிடம் இருந்து நலன்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

அதற்காகத் தமிழ் மக்களையும் அவர்களின் ஒரே போராட்ட இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகளையும் காட்டிக் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்கவில்லை.

அப்போதும் விடுதலைப் புலிகளுக்கான மாற்று இயக்கம் என்றுதான் இவர்கள் கூறிக்கொண்டார்கள். எந்த தமிழ் மக்களுக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அதைக் கைவிட்டு, தமது நோக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு, தமிழ் மக்களுக்காகப் போராடிய இயக்கத்துக்கு மாற்று இயக்கம் என்றார்கள்.

அதன் பயனாக அவர்களுக்குச் சிங்கள அரசு அமைச்சில் ஒரு பதவியைக் கொடுத்தது. பெற்றுக்கொண்டு பயனடைந்தார்கள்.

அதாவது அவர்கள் உயர்த்திய மாற்றுக் குரல் அவர்களுக்கு ஓர் வருமானம் தரக்கூடிய பதவி கிடைத்தது.

வடக்கு மாகாண சபையிலும் அதுவேதான் நடந்தது. அவர்கள் மாற்றுக் கட்சி, மாற்றுத் தலைமை என்று குரல் எழுப்பி ஒருவாறு அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டு விட்டார்கள்.

சுரேஸ் பிரேமச்சந்திரனின் தம்பி இப்போது அமைச்சராகி விட்டார். அவர்கள் மாற்று அணி எனக் கிளம்பியதன் பயனை அடைந்து விட்டார்கள்.

இப்படியேதான் வரலாறு முழுமைக்குமே அவர்கள் நடந்து கொண்டார்கள். ஒரு கொள்கை அணியில் சேர்வதும் பின்னர் தங்கள் நலனுக்காகப் பிரிவதும், அதன் பின்னர் தாம் முன்னர் கொண்ட கொள்கைக்கு முற்றிலும் முரணான பாதையில் பயணிப்பதுடன் அதுதான் மாற்று என்று சொல்வதும் அதற்கூடாகத் தங்கள் சுயநலன்களைப் பூர்த்தி செய்து கொள்வதும் அவர்களின் வாடிக்கை, வழமை.

அதையேதான் இப்போதும் செய்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஈபிஆர்எல்எவ் கட்சியும் சிவசக்தி ஆனந்தனும் மாற்றுத்தலைமை என்று கேட்பதும் மாற்று அணி என்று பேசுவதும் தமிழ் மக்களின் மீதுள்ள அக்கறையின் காரணமாக அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமக்குத் தேவையானவற்றை, தமது நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அவர்கள் இப்படித் தகிடுதத்தம் ஆடுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், நாளைக்கு கொழும்பு அரசில் அமைச்சுப் பதவி கிடைக்கும் என்றால் அதனையும் பெற்றுக்கொண்டு அதுதான் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்றுஅவர்கள் தமிழர்களை முட்டாள்களாக்க முயல்வார்கள்.

எனவே, தமிழ் மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருந்து, இவ்வாறு மாற்றுத்தலைமை, மாற்று அணி என்று பேசுபவர்களின் தலையில் இறுக்கிக் குட்டி அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அடக்க ஒடுக்கமாக இருக்கச் செய்ய வேண்டும்.

இல்லையேல் அவர்கள் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்து விட்டு தங்கள் நலன்களைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள்.

ஈபிஆர்எல்எவ் கட்சி மாற்று அணி பற்றிப் பேசியே மாகாண அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்றுக் கொண்ட போதும் அது போதவில்லைப் போலுள்ளது.

அதனால் தான் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் மாற்றுத் தலைமை பற்றிப் பேச முனைந்திருக்கிறார். அது பற்றி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/151879?ref=home-feed

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply