சோதிடப் புரட்டு (41-50)

சோதிடப் புரட்டு (41-50)
ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்த நியூட்டன்    

இந்தக் கட்டுரைத் தொடர் அறிவியல் தளத்தில் சிந்திக்கக் கூடிய பலரது கவனத்தை ஈர்த்து வருவது  எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கே எருமை மாட்டின் தோலில் மழை பெய்வது போல எனது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்குகிறோமா என்ற அய்யம் அவ்வப்பொழுது என்னுள் எழுவதுண்டு. அப்போதெல்லாம் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் வாய்மொழி மற்றும் அஞ்சல்வழிப் பாராட்டுக்கள் அத்தகைய எண்ணத்தைப் போக்கடித்து விடுகிறது.

தமிழரின் திருநாளான பொங்கல் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பலர் வாழ்த்துக்களை அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசியாவில் இருந்து நண்பர் திருமாவளவன் பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ‘தங்கள் கட்டுரை மிகச் சிறப்பாகத் தொடர்ந்து வெளிவருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. மலேசியாவில் உயர்வோம்; இதழில் இத் தொடர் வெளிவருகிறது. அதன் ஆசிரியர் உங்களோடு தொடர்பு கொள்ள விரும்புகிறார். நான் தமிழீழத்தில் கனடா அன்பர்கள் கண்ணன் முதலானோரைச் சந்தித்தேன். தங்களைப் பற்றி உசாவினேன். செம்பருத்தி மாத இதழில் எது தமிழர் சமயம்?  தொடர் வெளிவருகிறது” என எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து ஒரு வாசகர் சோதிடப் புரட்டுப் பற்றித் தோழர் தாமரைக்கோ தொகுத்த சோதிடம் பற்றிய ஒர் அறிவியல் பார்வை என்ற நூல் ஒன்றை எனக்கு அன்புகூர்ந்து அனுப்பி வைத்திருக்கிறார். இந்நூலை உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் (நெல்லிக்குப்பம்) 1994 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. சோதிடம் பற்றித் தந்தை பெரியார் எழுதிய நீண்ட கட்டுரை உட்பட பல கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

அவ்வப்பொழுது எனது கருத்துக்களை மறுத்துச் சோதிடத்துக்கு ஆதரவாக எழுதுவோரும் உளர். அவர்களில் ஒருவர் நல்ல தமிழ்ப் பெயரை சூடிக்கொண்டுள்ள தாமரைக்கண்ணன் ஆவார். இவர் சிங்கப்பூர் நாள்டுக் குடிமகன். தொழில்முறையில் பொறியாளர், சோதிடம் ஒரு அறிவியல் என வாதிடுகிறார். எவ்வளவுதான் படித்தாலும் பழமையைப் போற்றும் மனப்பாங்கு என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதனைக் குடித்தே தீருவோம் என்று அடம் பிடிப்பதற்கு அதுதான் காரணம்.

‘பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை! –  கிளியே  பாமரர் ஏதறிவார்!”

என்று பொருளோடுதான் பாரதியார் பாடியிருக்கிறார்.

சென்ற கிழமை மூன்று இளைஞர்கள் என்னை வீட்டில் வந்து சந்தித்தார்கள். அவர்களிடம் இருந்து ஏகப்பட்ட கேள்விக் கணைகள். “உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? தெய்வத்தில் நம்பிக்கை உண்டா? கடவுளுக்கும் தெய்வத்துக்கும் இடையில் உள்ள வேற்றுமை என்ன? நாடி சோதிடத்தை நம்புகிறீர்களா? சித்தர்கள் சித்துக்கள் செய்வது உண்மைதானே? அதை மறுக்கிறீர்களா? திருமூலர் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டொன்றுக்கு ஒரு பாட்டாகப் பத்தாயிரம் பாட்டுக்கள் பாடி இருக்கிறாரே? அதை மறுக்க முடியுமா? ”………….. இப்படிப் பல கேள்விகள், அய்யங்கள், மறுப்புக்கள்.

எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் என்னவென்றால் கனடாவில் வாழ்ந்து கொண்டு பேய், பிசாசு, ஆவி, அட்டமா சித்துக்கள் போன்றவற்றை நம்புகிறார்கள் என்பதுதான். ஒன்றுக்கு மேற்பட்ட நாடி சோதிடர்களிடம் சென்று காண்டம் கேட்டிருக்கிறார்கள். நாடி சாத்திரம் உண்மையா பொய்யா என்று உரைத்துப் பார்ப்பதுதான் நோக்கம் என்றாலும் நாடி சோதிடர்கள் தங்கள் பெயர், தாய் தந்தையர் பெயர்களைச் சரியாகச் சொல்லியதையிட்டு வியப்பு அடைகிறார்கள். ஆனால் ‘அறிவியல் நிலாவில் மனிதனை இறக்கிச் சாதனை படைத்தது உங்களுக்கு வியப்பாகத் தோன்றவில்லையா எனக் கேட்டதிற்கு “யாரும் நிலாவிற்குப் போகவில்லை, அது புரட்டு என்று உருசியா ஏற்கனவே சொல்லியிருக்கிறது!”  எனச் சுவரில் எறிந்த பந்து திரும்பி வரும் வேகத்தில் பதில் வந்தது!

இளைஞர்கள் ஆவியுலகம், அறிதுயில் (hypnotism) பற்றிய நூல்களைக் கையோடு கொண்டு வந்திருந்தார்கள். இவர்களது குழப்பத்துக்கு நூல்களைப் படித்து மெய்ப் பொருள் எது? பொய்ப் பொருள் எது?  கற்பனை எது? வரலாறு எது? என்பதைப் பகுத்தறிவைக் கொண்டு பிரித்துப் பகுத்துப் பார்க்க முடியாமல் இருப்பதுதான் காரணம் ஆகும். மேலும் மனித குலத்துக்கு ஒரு கடுகளவு பயன் இல்லாத ஆவி, பேய், பிசாசு போன்றவற்றைப் பற்றிய ஆய்வில் ஏன்தான் தங்கள் பொன்னான நேரத்தை மண்ணாக்குகிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. இந்த அழகில் தமிழர்கள் எந்த நூற்றாண்டில் ஒரு நோபல் பரிசைத் தட்டிக் கொண்டு போகப் போகிறார்கள்?

ஆனால் ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. நூல்கள் படிக்கும் ஆர்வம் இருப்பதால் வயதும் பட்டறிவும் மேலோங்கும் பொழுது குழப்பங்கள் நீங்கி எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவு அவர்களுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது மட்டுமல்ல, சரியோ பிழையோ இவர்கள் சிந்திக்கிறார்கள். அவ்வாறு சிந்திக்கச் சிந்திக்க அறியாமை என்ற இருள் விலகி மெய்யறிவு என்ற ஒளி பிறக்கும்.

நாடி சோதிடம் என்பது ஒரு தலைசிறந்த புரட்டாகும். மற்றப்புரட்டுக்கள் எல்லாம் இதற்கு உறை போடக் கூடக் காணாது. கந்தர் நாடி, காக்கையர் நாடி, சிவசிந்தாமணி நாடி, கவுசிக நாடி, அகத்தியர் நாடி, சுக நாடி, பிரம நாடி எனப் பல நாடிவகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நாடி என்ற சொல்லுக்குத் தேடுதல் என்பது பொருளாகும் .அதாவது ஒருவன் தனது இறந்த காலம் பற்றியும் தனது எதிர் காலம் எவ்வாறு அமையும் என்பது பற்றியும் மேற் கொள்ளும் தேடலாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முனிவர்கள் தங்கள் யோக ஆற்றல் மூலம் விலங்குகளின் தோல்களில் எழுதிவைத்தாகச் சொல்கிறார்கள். சிலர் பரமசிவன் சொல்லப் பார்வதி கேட்டதாகவும் பிற்காலத்தில் அவற்றை ஓலைச் சுவடிகளை எழுதியதாகச் சொல்கிறார்கள். இந்தச் சுவடிகள் தமிழ்ச் செய்யுள் வடிவத்தில் வட்ட எழுத்தில் எழுத்தாணியால் எழுதப்பட்டுள்ளன. இந்தச் சுவடிகள் முக்கியமாக தஞ்சை சரஸ்வதி மகால், வைத்தீஸ்வரன் கோயில் இரண்டிலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடி ஓலைச்சுவடிகள் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ அரசர்களது ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 13 ஆம் நூற்றாண்டளவில் இந்தச் சுவடிகள் சிதம்பரத்துக்கு அருகில் 24 கிமீ தொலைவிலுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் கண்டெடுத்ததாகச் சொல்கிறார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த ஓலைச் சுவடிகளை அவர்கள் பொதுமக்களுக்கு விற்றதாகச் சொல்கிறார்கள். ஏன் விற்றார்கள்? அவர்களுக்கு எங்கே எப்படி அந்தச் சுவடிகள் கிடைத்தன என்ற விபரம் தெரியவில்லை.

ஒருவரது பெருவிரல் அடையாளத்தை வைத்தே ஒருவருக்குரிய ஓலை தேடப்படுகிறது. பெருவிரல் அடையாளங்கள் 108 வகையாக வகுக்கப்பட்டுள்ளனவாம். உலகில் உள்ள மக்களில் 40 விழுக்காட்டினரது ஓலைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உலக மக்கள் தொகை இன்று 600 கோடிக்கு மேல் உயர்ந்து விட்டது. இதில் 40 விழுக்காட்டினருக்கு ஓலைகள் இருக்கிறதென்றால் மொத்தம் 240 கோடி ஓலைச் சுவடிகள் இருக்கவேண்டும். இதோடு இனிமேல் பிறக்கப் போவோர்களது தொகையையும் கூட்ட வேண்டும்!

இந்தச் சுவடிகளை எழுத பனை ஓலைக்கு எங்கே போனார்கள்? அவற்றை எங்கே காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்?
கனடாவுக்கு காண்டம் வாசிக்க வருகிற ஒரு நாடி சோதிடர் கூடியது 1,000 ஓலைச் சுவடிகளுக்கு மேல் சுமந்து கொண்டு வரமுடியாது. கனடாவில் 3 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் 40 விழுக்காட்டினருக்கு ஓலை இருக்கிறதாக வைத்துக் கொண்டால் 1.2 கோடி ஓலைச் சுவடிகள் தேவைப்படும். குறைந்தது ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ளவர்களில் 10 விழுக்காட்டினருக்கு காண்டம் வாசிப்பதற்கு 4 இலட்சம் (மொத்த மக்கள் தொகை 40 இலட்சம்) ஓலைச் சுவடிகள் தேவைப்படுமே?

இரண்டாயிரம் ஆண்டு காலத்து முன்னர் வாழ்ந்த  முனிவர்களுக்கு யோன் போல், கிறச்சியன், பொப்றே, மக்கே, பொலஸ்கி, மக்கலம், மோசஸ், ஜெனி, ஜெனிபர் போன்ற வெள்ளைக்காரர்கள் கனடாவில் பிறப்பது தெரியுமா? அவர்கள் பெயர்கள் தெரியுமா?

தற்காலத்தில் வழங்கப்படும் பிரேம், பிரேமா, ரஞ்சன், ரஞ்சனி, நிஷாந்த், நிஷானி, நிரோஜன், நிரோஜி, கஜன், கஜனி, டில்ஷன், டில்ஷி, துஷி, ஆசா, கோசா, கோசன்னா, யுரேனியா, ஜெகன், ஜெனி போன்ற தமிழர்களது கரடுமுரடான பெயர்கள் அக்காலத்து முனிவர்களுக்குத் தெரியுமா?

காண்டம் வாசிப்பவர்கள் வைத்திருக்கும் ஓலைச் சுவடிகளைப் பார்த்தால் அவை ஒரு 200 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் நடையில்தான் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு இந்தப் பாடலைப் படியுங்கள்.

“புயலாடு புலவன் சரலில் பூமகள் மதிகோலாக
வெயில் மகன் போகி நண்டில், வேதியன் தேள் மீதாக
செயுமிக்கோள் நிலையில் தோற்றும் சேயாறார்க்குயிர் – சியத்தே
பயன்தரு மிலனின் ஜென்மம், பாண்டியன் நாள்டுக்குள்ளே”

ந்தப் பாடலில் சொல்லிய விதமாய் கிரகங்கள் அமையப் பெற்ற ஒரு மனிதனுடைய பிறப்பு பூமியானது “பாண்டியன் நாட்டுக்குள்ளே” இருக்கும் என்பது இதன் பொருளாகும். பாண்டிய, சோழ, சேர மன்னர்கள் தென்னாட்டை 13 ஆம் நூற்றாண்டு வரை அரசு ஆண்டவர்கள். ஏறத்தாழ கிமு 200 ஆம் ஆண்டில் பாண்டியர் மதுரையைத் தலைநகரமாகவும் கொற்கையைத் துறைமுகப் பட்டணமாகவும் கொண்டு ஆட்சி செய்தார்கள். ஆனால் சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் மறைந்து 600 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அப்படியிருக்க பாட்டில் ஏன் பாண்டியன் நாட்டில் பிறந்தான் என எழுதப்பட்டுள்ளது? சுதந்திர இந்தியாவில் அல்லது ஆங்கிலேயர் ஆட்சியில் பிறந்தவன் என்றல்லவா பாட்டு இருக்க வேண்டும்?

இந்தப் பாடல்களைப் பாடிய முனிவர்களுக்கோ, பரமசிவனுக்கோ, பார்வதிக்கோ சேர, சோழ, பாண்டிய அரசுகள் மறைந்து அதன் பின் போர்த்துக்கேயர், பிரஞ்சக்காரர்கள், ஆங்கிலேயர், மராத்தியர், மொகலாயர் அரசுகள் தோன்றும் என்பது எப்படித் தெரியாமல் போய்விட்டது?

பாண்டியன் நாட்டுக்குள்ளே என்பதற்குப் பதில் மேற்கூறிய அரசுகளின் பெயர்கள் அல்லவா பாட்டில் இருந்திருக்க வேண்டும்?

நான் நினைக்கிறேன் இந்த நாடி சோதிடர்கள் ஓலைச் சுவடியைப் பார்த்துப் பலன் சொல்லாமல் வாடிக்கைகாரர்களின் முகத்தைப் பார்த்துப் பலன் சொல்கிறார்கள்! அதன் காரணமாகவே 1,000 சுவடிகளை வைத்துக் கொண்டு 50,000 பேருக்கு காண்டம் வாசிக்க முடிகிறது! இந்த ஓலைச் சுவடிகளை 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முனிவர்கள், கடவுளர் எழுதினார்கள் என்பது திறமான கற்பனையாகும்.

எனக்கு மிகவும் பிடித்த குறள் ‘அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடையரேனும்  இலர்” என்ற குறளாகும். அறிவுடமை என்ற அதிகாரத்தில் (அதிகாரம் 43, குறள் 430) இக் குறள் வருகிறது. அறிவுடமை என்றால் கல்வி கேள்வி இரண்டாலும் வருகிற அறிவோடு உண்மை அறிவைத் தெரிந்து கொள்ளல். இந்த உண்மை அறிவை எல்லோரும், குறிப்பாக இளைஞர்கள், தேடவேண்டும். அறிவு கைகூடிவிட்டால் தமிழர் நிமிர்ந்து விடுவார்கள்! உலகப் பந்தில் தமிழினம் உயர்ந்து நிற்கும்!

இனி விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம். அறிவியலாளர் சேர் அய்சக் நியூட்டன் (Sir Isac Newton)  அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் கலிலியோ மறைந்த அதே ஆண்டு நத்தார் நாளன்று இங்கிலாந்திலுள்ள Woolsthorpe, Lincolnshire   இல் பிறந்தார்.

நியூட்டனைப்பற்றி  ஒரு கதை சொல்வதுண்டு. அப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்து இருந்த அவரது தலையில் அப்பிள் பழம் விழுந்ததாம். ‘அப்பிள் பழம் ஏன் மேலே போகாமல் கீழே விழுகிறது” என்று நியூட்டன் சிந்தித்த பொழுது ஈர்ப்பு விசை பற்றிய கோட்பாட்டைக் கண்டு பிடித்தார் என்கிறார்கள். ஆனால் இந்தக் கதையில் உண்மை இல்லை. யாரோ ஒருவர் இந்தக் கற்பனைக் கதையை எழுதி வைத்து விட்டுப் போய்விட்டார்.

அப்பிள் கதைபோலவே பனம்பழம் தலையில் விழுந்த கதையும் உண்டு. காலைக் கடனைக் கழிக்கப் பனை மரத்தின் கீழ் உட்கார்ந்த தம்பர் அம்மான் தலையில் பனம் பழம் விழுந்த பொழுது ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தாராம். ஆனால், அதை மற்றவர்களுக்குச் சொல்லு முன்னர் அவரது உயிர் போய் விட்டதாம்!

நியூட்டன் பற்றி இன்னொரு கதையும் உண்டு. தனது ஆய்வு கூடத்தில் தான் வளர்த்த குட்டிப் பூனை புகுவதற்குச் சிறிய வட்டமும் தாய்ப் பூனை புகுவதற்கு பெரிய வட்டமும் போட்டு வைத்திருந்தாராம். பெரிய வட்டத்திற்கு ஊடாகக் குட்டிப் பூனையும் புகுந்து போகும் என்ற உண்மை அவரது நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டு மட்டும் அவருக்குத் தெரியாமல் இருந்ததாம்!

கோபெர்னிக்கஸ், கெப்லர், கலிலியோ வரிசையில் வானியல் துறையில் பெரிய புரட்சி செய்தவர் நியூட்டன் (1643-1727) ஆவார். இவரே விண்ணிலும் மண்ணிலும் உள்ள காட்சிப் பொருள்கள் அத்தனையும் ஒரே சீராக அசைவதற்கு ஈர்ப்பு விசையே காரணம் என்பதைக் கணித அடிப்படையில் சூத்திரங்கள் மூலம் எண்பித்தவர். கோள்கள், துணைக் கோள்கள், வால்வெள்ளிகள் எல்லாமே ஈர்ப்பு விதிக்கு அமைய அசைகின்றன என்றார்.

நியூட்டனின் விதிகள் | Newton's Law in Tamil

நியூட்டன் கேம்பிரிட்ச் பல்கலைக் கழகத்தில் படித்து முதலில் இளம் அறிவியல் பட்டத்தை 1665 லும் முது அறிவியல் பட்டத்தை அதே பல்கலைக் கழகத்தில் 1668 லும் பெற்றார். கணக்கியல் மற்றும் இயற்கை மெய்யியல் ((Natural  Philosophy) இரண்டிலும் ஏற்பட்ட புதிய மாறுதல்களை ஆராய்ந்தார். அதன் விளைவாக அறிவியல்த் துறையைத்  தொழிலாகக் கொள்வதற்கான பல கண்டு பிடிப்புக்களை கண்டு பிடித்தார். அதில் ஒன்று Calculus  என்ற நுண்கணித முறையாகும்.

ஒளியியல் (Optics) பற்றி நியூட்டன் கொண்டிருந்த பெரு விருப்புக் காரணமாக நிறங்கள் எப்படி உருவாகின்றன என்பதைக் கண்டு பிடித்தார். அவரே ஞாயிறின் கதிர்கள் வெண்மையாக இருப்பதற்கு அதில் எல்லா நிறங்களும் அடங்கி இருப்பது காரணம் என முதலில் சொன்னவர் ஆவார்.  ஒளிக் கதிரை ஒரு முப்பட்டைக் கண்ணாடி (prism) மூலம் செலுத்தினால் அது வெவ்வேறு நிறங்களாக அதனைச் சிதறடையச் செய்வதைக் காணலாம்.  தனது கோட்பாட்டை 1704 ஆம் ஆண்டு Optics என்ற நூல் மூலம் விளக்கினார்.

1684 இல் பிரபல பிரித்தானிய வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் எட்மண்ட் கால்லே ((Edmund Halley) நியூட்டனைச் சென்று சந்தித்தார். எட்மண்ட் அவரோடு கோள்களின் சுற்றுப்பாதைகள் பற்றிய சிக்கல்களை யிட்டுக் கலந்துரையாடினார். பல்கலைக் கழகத்தில் நியூட்டன் விசையியல் (Dynamics) பாடத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருந்தார். எட்மண்ட் கால்லே அவர்களின் வருகையின் பின் விசையியல் பற்றி நியூட்டன் மேலும் விரிவாக ஆராயத் தொடங்கினார். இந்த ஆராய்ச்சியின் விளைவாக தனது கொள்கையை 1687ஆம் ஆண்டு philosophiae Naturalis Principia Mathematica  என்ற  நூலாக எழுதி வெளியிட்டார். தற்கால விசையியல் வரலாற்றில் இந்த நூல் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. விசையியல் பற்றி நியூட்டன் கீழ்க்கண்ட 3 விதிகளை வகுத்தார்.

முதலாவது அசைவு விதி – ஒவ்வொரு பருப்பொருளும் ஒரே சீரான அசைவின் பொழுது, வெளிவிசை செலுத்தினால் அல்லாது, அதே அசை நிலையில் இருக்கும்.

Every object in a state of uniform motion tends to remain in that state of motion unless an external force is applied to it.

இரண்டாவது அசைவு விதி – ஒரு பருப்பொருளின் பொருண்மை எம், அதன் முடுக்கம் ஏ மற்றும் விசை எவ் என்றால்  F = vk;V ( F = ma). The relationship between an object’s mass m, its acceleration a, and the applied force F is F = ma.

மூன்றாவது அசைவு விதி – ஒவ்வொரு வினைக்கும் அதற்கு எதிரான ஆனால் சமவளவான எதிர்வினை இருக்கும்.

For every action there is an equal and opposite reaction.

இவற்றைக் கோள்களின் ஓட்டங்கள் பற்றிய கெப்லரின் 3 விதிகளோடு இணைத்து உலகளாவிய ஈர்ப்பு விதியை (Universal gravitation )  உருவாக்கினார்.

இந்த இடத்தில் கெப்லரின் மூன்று விதிகளை நினைவு கூருவது நல்லது.

முதல் விதி – கோள்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்ட வடிவானது. ஞாயிறு அவ் நீள்வட்டத்தின் ஒரு குவிமையத்தில் (focus) இருக்கிறது.

The orbits of the planets are ellipses, with the Sun at one focus of the ellipse.

இரண்டாவது விதி – ஞாயிறின் மையயத்தில் இருந்து ஒரு கோளின் மையத்துக்கு வரையப்படும் ஒரு கற்பனைக் கோடு சம இடைவேளை நேரத்தில் சம பரப்பைக் கடக்கிறது.

An imaginary line drawn from the center of the sun to the center of the planet will sweep out equal areas in equal intervals of time.

மூன்றாவது விதி – ஒரு கோள் ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலத்தின் மிசைப் பெருக்கம் அந்த சுற்றுப் பாதை அரை அச்சுகளின் கன சதுர சம விழுக்காட்டுக்குச் சமமானது.

The squares of the periods of the planets are proportional to the cubes of their semimajor axes.

நியூட்டனின் ஈர்ப்பு விதி என்பது என்ன? அண்டத்தில் உள்ள ஒவ்வொரு துகளும் ( particle) அண்டத்தில் உள்ள மற்றைய துகளை ஈர்க்கிறது. அதன் ஈர்ப்பு விசை இரண்டு துகள்களின் விளைபொருள் பொருண்மையை இரண்டுக்கும் இடையில் உள்ள தொலைவின் மிசைப் பெருக்கத்தால் பிரித்து வரும் பெறுபேறைப் பொறுத்தது.

Every particle in the universe with a force that depends on the product of the two particle’s masses divided by the square of the distance between them.

எடுத்துக் காட்டாக இரண்டு துகள்களில் ஒன்றினது அல்லது இரண்டினதும் பொருண்மை அதிகரித்தால் அவற்றுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அதிகரிக்கும். இரண்டு துகள்களில் ஒரு துகளின் பொருண்மையை இரட்டித்தால் அவற்றுக்கு இடையிலான ஈர்ப்பு விசை இரட்டிப்பாகும். அதே சமயம் இரண்டு துகள்களுக்கு இடையிலான தொலைவு அதிகரித்தால் ஈர்ப்பு விசை அவற்றின் மிசைப் பெருக்கத்தால் குறையும். இரண்டு துகள்களுக்கு இடையிலான தொலைவை இரட்டித்தால் ஈர்ப்பு விசை நாலில் ஒரு பங்காகக் குறையும்.

பொதுவாக ஈர்ப்பு விசை இரண்டு துகள்களுக்கு இடையிலான நேர்க்கோடு ஊடாக இடம்பெறும். ஆனால் இரண்டு உருளைகளுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அவற்றின் மையத்துக்கு இடையிலான நேர்க்கோடு ஊடாக இடம் பெறும்.

நியூட்டனின் ஈர்ப்பு விசைக் கோட்பாடே புவியில் உள்ள பொருள்கள் மற்றும் கோள்களின் அசைவுகளைத் துல்லியமாக எடுத்து விளக்கியது. நியூட்டனின் விதியின்படி கோள்களுக்கு இடையிலான ஈர்ப்பும் கோள்களுக்கும் ஞாயிறுக்கும் இடையிலான ஈர்ப்பும் கோள்களை நீள்வட்ட சுற்றுப்பாதையில் ஒழுங்காக வைத்திருக்கிறது. இதே விதி காரணமாகவே புவியின் துணைக் கோளான சந்திரனும் ஏனைய கோள்களின் சந்திரன்களும் அதனதன் சுற்றுப்பாதையில் சீராக ஓடுகின்றன.

நியூட்டனின் ஈர்ப்பு விதியில் காலப் போக்கில் சிக்கல்கள் எழுந்தன. நியூட்டனின் ஈர்ப்பு விதியின்படி ஓடும் தொடர்வண்டியில் இருக்கும் ஒரு பந்தைத் தரையில் நின்று பார்ப்பவருக்கு அதன் அசைவு தொடர்வண்டியின் அசைவுக்குச் சமமாக இருக்கும். ஆனால் தொடர்வண்டியில் இருப்பவருக்கு அந்த பந்தின் அசைவு சுழியமாக (பூச்சியம்) இருக்கும். பெருவெளி, காலம் பற்றிய மரபுவழி எண்ணப்படி இயல் உலகத்தில் ஒரே சீரான வேகம் இருக்க முடியாது, காரணம் எல்லா வேகமும் ஒப்பீடுதான்.

இந்தச் சிக்கலைத் தீர்த்து வைத்தவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்கொட்லந்து நாட்டு இயற்பியலாளர் James Clerk Maxwell என்பவராவர். அவர் சீரான வேகம் ஒரு வினாடிக்கு 300,000 கிமீ (186,000 கல்) என்று நிறுவினார். இதுவே ஒளி அலைகள் உட்படக் காந்த அலைகளின் வேகமாகும். இந்தப் புதிய கண்டு பிடிப்பு, வேகம் ஒப்பீடுதான் என்று சொல்லி வந்த இயற்பியல் துறையில் ஒரு நெருக்கடியை உருவாக்கியது.

1905 இல் இந்த நெருக்கடியைத் தீர்த்து வைத்தவர் புகழ்பெற்ற அறிவியலாளரான அல்பேட் அயின்ஸ்தீன் ஆவார். அவரே எந்தத் துகளும் அல்லது அலையும் அடிப்படை வேகத்தை (ஒளியின் வேகத்தை) மிஞ்ச முடியாது என்றார்.

மே 5, 2000 ஆம் ஆண்டு ஞாயிறைச் சுற்றி வரும் கோள்கள் ஒரே நேர்க் கோட்டில் வந்தன. அதனால் புவியில் பெரிய அனர்த்தங்களும் அழிவுகளும் ஏற்படும் என்று சோதிடர்கள் பூச்சாண்டி காட்டினார்கள். உண்மையில் அந்த நிகழ்ச்சியால் எந்தக் கேடும் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட வழியும் இல்லை. நியூட்டனின் ஈர்ப்பு விதி பற்றிய எடுகோள் அதற்கு இடம் அளிக்காது.
ஈர்ப்பு விசையைப் பொறுத்தளவில் ஞாயிறின் ஈர்ப்பைவிட அண்மையில் இருக்கும் நிலாவின் ஈர்ப்பே புவியை அதிகம் பாதிக்கிறது. ஞாயிறின் ஈர்ப்பு 1 என்று வைத்துக் கொண்டால் ஏனைய கோள்களின் ஈர்ப்பு விசை பின்வருமாறு.

நிலா   – 2.21
ஞாயிறு    – 1.00
வெள்ளி –  0.000113
வியாழன்     –      0.0000131
செவ்வாய்   – 0.0000007
புதன்       – 0.0000023
சனி        – 0.0000005
யூறேனஸ்   – 0.000000001
நெப்தியூன்    – 0.000000002
புளுட்டோ  – 0.0000000000001

சோதிடர்களுக்கு இந்த உண்மை தெரியாததால் அவர்கள் கண் தெரியாதவன் மனைவிக்கு அடித்த கதைபோலக் கோள்களின் பலத்தை மனம்போன போக்கில் தாறுமாறாக அனுமானித்துச் சொல்கிறார்கள்.


சோதிடப் புரட்டு (42)
இந்திய வானியல் வரலாறு

சோதிடப் புரட்டுக்குப் பலியான ஒரு குடும்பத்தின் சோகக் கதை தினகரன் (தமிழ்நாடு) சனவரி 27, 2004 இதழில் வெளிவந்துள்ளது.

மேட்டூர் அருகே, பத்துத் திங்கள் வயிறு நொந்து பெற்றுத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த 3 குழந்தைகளைக் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்து விட்டுத் தாயும் தந்தையும் நஞ்சு குடித்தனர். இந்த கொலைக்குக் காரணம் வறுமை, கடன் தொல்லை, தீராத நோய் என்றுதான் பொதுவாக யாரும் நினைப்பார்கள் நினைப்பீர்கள். ஆனால் கொலைக்குக் காரணம் அவையல்ல.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த புதுச்சாம்பள்ளி அருகே உள்ளது கோம்பூரான்காடு என்ற ஊர். இந்த  ஊரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 30). என்பவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி பெயர் விஜயா (26). இவர்களுக்கு திவ்யா (6) தீபிகா (4) என்ற 2 பெண்பிள்ளைகளும் தினேஸ்குமார் (2) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

உடல்நலக் குறைவாக இருந்த தினேஸ்குமாரைப் பெற்றோர்கள் அரச மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று காட்டினார்கள். தினேஸ்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனது இதயத்தில் ஓட்டை இருப்பதாகக் கூறினார்கள். மருத்துவர்களை நம்பாத பெற்றோர்கள் சோதிடரிடம் சென்று மகனின் சாதகத்தைக் காட்டிப் பலன் கேட்டார்கள். சாதகத்தைப் படித்த சோதிடர் இன்னும் 15 நாளில் தினேஸ்குமார் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று சொன்னார்.

இதனால் கணவன் மனைவி இருவரும் மனம் உடைந்தனர். தங்களுக்கு இருக்கும் ஒரே மகன் இறந்து போவானோ என நினைத்து மன வேதனை அடைந்தனர். மகனை இழந்த பின்னர் உயிரோடு இருக்கக்கூடாது என நினைத்த இருவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை ஈஸ்வரன் வீடு பூட்டிக்கிடந்தது. குழந்தைகளின் சத்தமும் கேட்கவில்லை, இதனால் அக்கம்பக்கத்தினர் அய்யம் அடைந்தனர்.

வீட்டிற்குள் யன்னல் ஓரமாய்ப் பார்த்தபோது ஈஸ்வரன், விஜயா உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தது தெரிந்தது. வீட்டின் தாழ்வாரத்தில் 3 குழந்தைகளும் இறந்து கிடந்தன. ஆனால் பார்ப்பதற்கு தூங்கிக்கொண்டு இருப்பது போல் தெரிந்தது.

இது குறித்து கருமலைக்கூடல் காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் அவர்கள் பூச்சி மருந்து குடித்துவிட்டது தெரிந்தது. தனது மகன் தினேஸ்குமார் இன்னும் 15 நாளில் இறந்து விடுவான் எனச் சோதிடர் கூறியதால் மனம் உடைந்து இந்தத் தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும் 3 குழந்தைகளையும் கயிற்றினால் இறுக்கிக் கொன்றுவிட்டுப் பெற்றோர் நஞ்சு குடித்தாகவும் கூறப்பட்டது.

‘ஜோதிடம் என்ற மூடநம்பிக்கை 3 குழந்தைகளின் உயிர் பறிபோகக் காரணமாக அமைந்துவிட்டது’ என்று தினகரன் நாளேட்டின் முகவர் செய்தியை நிறைவு செய்துள்ளார்.  ஆனால் இதே ஏடு ஆரூடம் (சோதிடம்)  இராசி பலன் பற்றிய கட்டுரைகளைப் பக்கம் பக்கமாக நாள் தோறும் வெளியிட்டு மூடநம்பிக்கைகளுக்குத் தீனி போட்டு வளர்த்து வருகிறது!

பாமர மக்களின் அறியாமையையும் படித்தவர்களது முட்டாளத்தனத்தையும் முதலாக வைத்துக் கொண்டே சோதிடர்கள் தொழில் செய்கிறார்கள். சோதிடர் சொல்லியதை உண்மை என்று நம்பியதால்தான் அந்தப் படிப்பறிவில்லாத பெற்றோர்கள் தாங்கள் பெற்று வளர்த்த குழந்தைக்கு எமனாக மாறினார்கள்.

சென்ற சனவரி 24 ஆம் நாள் திருவரங்கம் திருமண அரங்கில் பந்தல் தீப்பற்றி எரிந்து அதில் மணமகன் குருராசன் அவனது பெற்றோர் உட்பட 59 பேர் இறந்தார்கள். மணமகள் ஜெயஸ்ரீ படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘காசியாத்திரை’ சடங்கு முடிந்து ‘நலுங்கு’ வைக்கும்போதே அந்த எதிர் பாராத நிகழ்ச்சி நடந்தது. சாதகம் பார்த்து, பஞ்சாங்கத்தில் நல்லநாள் (முகூர்த்தம்) பார்த்து ஓமம் வளர்த்து, வேதியர் வேதமந்திரம் முழங்க நடந்த திருமணம்தானே? பின்னர் ஏன் இந்த அனர்த்தம் நேர வேண்டும்?

கடந்த ஆண்டு (2003) டிசெம்பர் 26 இல் இரான் நாட்டின் 2,000 ஆண்டு பழமை வாய்ந்த பாம் (Bam) நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30,000 பேருக்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள் 10 விநாடிக்குள் நித்திரையில் கொல்லப்பட்டார்கள். இரானில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும் நிலநடுக்கம், புயல், சூறாவளி, வெள்ளம் காரணமாக ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் இறக்கிறார்கள்.

அவ்வப்பொழுது விமானங்கள் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்குவதில் 100, 200, 300 பேர் ஒரே நேரத்தில் சாகிறார்கள். இந்தச் சாவுகளுக்கும் அவர்களது தலைவிதிக்கும், கர்ம வினைக்கும், சோதிடத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? அவர்கள் எல்லோரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்தவர்களா? ஒரே நேரத்தில் சாவதற்கு? அதெப்படி   வெவ்வேறு  நேரத்தில்  வெவ்வேறு நாள்டில் பிறந்தவர்கள் ஒரே நேரத்தில் சாகிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு ஏரண (logic) அடிப்படையில் விடை காண்போம்.

1) எல்லாம் பிரமா எப்படித் தலையில் எழுதினாரோ அதன்படி (தலைவிதி) நடக்கிறது. அதனை மாற்ற முடியாது.

2) முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை என்ற கர்ம வினைப்படியே தலைவிதி அமைகிறது. அதனை மாற்ற முடியாது.

3) சோதிட சாத்திரப்படி ஒருவன் பிறந்த நேரத்தில் வானத்தில் கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் இருந்தபடியே தலைவிதி அமைகிறது. அதனை மாற்ற முடியாது.

4) வேண்டுதல், படையல், சாந்தி, பூசை, அருச்சனை, மந்திரம், தந்திரம், யந்திரம் மூலம் மேல்கண்டவற்றை (1,2,3) நிவர்த்தி செய்யலாம்.

கேள்வி என்னவென்றால்?

1) எல்லாம் பிரமா எழுதிய தலையில் எழுதிய விதிப்படி நடக்கிறது என்றால் கர்மவினை, சோதிடம், நிவர்த்தி ஆகியவை அடிபட்டுப் போய்விடும்.

2) எல்லாம் கர்மவினை என்றால் தலைவிதி, சோதிடம், நிவர்த்தி ஆகியவை அடிபட்டுப் போய்விடும்.

3) எல்லாம் சோதிடம் விதித்த விதி என்றால் தலைவிதி, கர்மவினை, நிவர்த்தி ஆகியவை அடிபட்டுப் போய்விடும்.

4) எல்லாம் வேண்டுதல், படையல், சாந்தி, பூசை, அருச்சனை, மந்திரம், தந்திரம், யந்திரம் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்றால், தலைவிதி, கர்மவினை, சோதிடம் ஆகியவை அடிபட்டுப் போய்விடும்.

மனிதன் செய்யும் வினைகள் எல்லாம் சாதகப் பலன்படியும் விதியெல்லாம் முற்பிறப்பில் செய்த இருவினைப்படியும் நடப்பதாய் இருந்தால் பாவ புண்ணியம் என்ற பாகுபாடும் நற்செய்கை துற்செய்கை என்ற வேறுபாடும் எவ்வாறு பொருந்தும்? ஒருவன் கொலை செய்வது விதியின் வழிப்படி என்றால் அவனுக்குத் தண்டனை அளிப்பது என்ன நியாயம்? விதியை நம்புவோர் அதையும் விதி என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறார்கள்!

மேற் கூறிய நான்கு நம்பிக்கைகளும் அறியாமை, அச்சம், பேராசை ஆகியவற்றினால் ஏற்படும் மனமருட்சி; அல்லது மனமயக்கம் (delusions) ஆகும். உண்மையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்குச் சோதிட நம்பிக்கை இருக்கக் கூடாது. அது கடவுளுக்கு சொல்லப்படும் எல்லாம் வல்ல எல்லாம் தெரிந்த எங்கும் நிறைந்த இலக்கணத்தை அவமதிப்பதாகும்.

இந்த இடத்தில் கர்மவினை பற்றி மகாகவி பாரதியார் சொல்லி இருக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்.

‘சாதாரணமாக ஒருவனுக்குத் தலைநோவு வந்தால் கூட அதற்குக் காரணம் முதல் நாள் பசியில்லாமல் உண்டதோ, அளவு மீறித் தூக்கம் விழித்ததோ, மிகக் குளிர்ந்த அல்லது மிக அசுத்தமான நீரினால் ஸ்நானம் செய்ததோ என்பதை ஆராயு முன்பாகவே அது பூர்வ ஜெம்மத்தின் கர்ம பலன் என்று இந்துக்களிலே பாமரர் கருதக்கூடிய நிலைமை வந்துவிட்டது. உலகத்து வியாபார நிலைமையும் பொருள் வழங்கு ம் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றி விடலாம் என்பதும் அங்ஙனம் மாற்றுமிடத்துச் செல்வ மிகுதியாலும் செல்வக் குறைவாலும் மனிதருக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும் அவமானங்களையும் பசிகளையும் மரணங்களையும் நீக்கிவிடக்கூடும் என்பது தற்காலத்து இந்துக்களிலே பலருக்குத் தோன்றவே இடமில்லை.

பிறர் சொல்லிய பொழுதிலும் அது அவர்களுக்கு அர்த்தமாவது சிரமம். ஏனென்றால் பண விஷயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும் தாரதம்மியங்களையும் பாரபட்சங்களையும் கண்டு அதற்கு நிவசஷணம் தேட வழி தெரியா இடத்திலே தான் பெரும்பாலும் இந்தப் பூர்வ ஜன்ம கர்ம விஷயம் விசேஷமாக பிரஸ்தாபத்திற்கு வருகிறது. ஆற்ப ஆயுள் – நீண்ட ஆயுள், நோய் – நோயின்மை, அழகு -அழகின்மை, பாடத்தெரிதல் – அது தெரியாமை, படிப்புத் தெரிதல் – அது தெரியாமை முதலிய எல்லாப் பேதங்களுக்கும் பூர்வ ஜென்மத்தின் புண்ணிய பாவச் செயல்களையே முகாந்தரமாக காட்டினார்களெனினும் பணம் விஷயமான வேறுபாடுகளே இவை எல்லாவற்றைக் காட்டிலும் மனிதர்ளுக்குள்ள கொதிப்பையும் நம்பிக்கைக் கேட்டையும் விளைவித்து, அவர்களை இந்த ஜென்மத்தின் துன்பங்களுக்கு பூர்வ ஜென்மத்திலேயே காரணம் தேடுவதும் அடுத்த ஜெம்மத்தில் பரிகாரம் தேடுவதாகிய விநோதத் தொழிலிலே தூண்டின’ எனப் பாரதியார் கூறுவது (பாரதியார் கதைகள் – பக்கம் 71) இந்து மதத்தவர் அத்தனைபேரும் ஊன்றி மனங்கொள்ளத்தக்கதாகும்.

உண்மையில் அண்டத்தின் தோற்றம், உயிர்களின் தோற்றம், உருமலர்ச்சி, மனிதனின் தோற்றம், உலக சமுதாய வரலாறு, சமுதாய மாற்றத்தின் இயங்கியல் கோட்பாடுகள், உளவியல் ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே இந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்க முடியும். அப்படி ஒழிக்கிற பொழுதுதான் மனிதனின் வாழ்வு ஒளி பெறும் சமுதாயம் நலம் பெறும்.

சென்ற அதிகாரங்களில் மேற்குலக, குறிப்பாக பபிலோனியா, கிரேக்கம், உரோம் போன்ற நாடுகளில் வானியலின் தோற்றம் வளர்ச்சிபற்றி எழுதியிருந்தேன். சோதிடம் ஒரு புரட்டு என்பதை வானியல் மூலந்தான் எண்பிக்க முடியும். கடந்த 500 ஆண்டுகளில் வானியல் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அதன் உச்சகட்ட வளர்ச்சி முதலில் நிலாவில் மனிதனை இறக்கி அங்கிருந்து செவ்வாய்க்கு அனுப்பி வைக்கும் அமெரிக்காவின் திட்டம் ஆகும். இன்னும் 10-15 ஆண்டுகளில் இந்த விந்தை விண்ணில் நிகழும் என்று துணிந்து சொல்லலாம்!

இந்திய அறிவியலைப்பற்றி வெறும் வாய் சப்புபவர்கள் இருக்கிறார்கள். மேற்குலகக் கண்டு பிடிப்புக்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து வெள்ளைக்காரன் திருடிக் கொண்டு போன ஓலைச் சுவடிகளைப் படித்துக் கண்டு பிடித்தவைதான் என வாய் ஓயாது கூறி வருகிறார்கள்.

வெள்ளைக்காரன் விமானம் கண்டுபிடிப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராவணனிடம் புட்பக விமானம் இருந்தது – அதில் அவன் ஒவ்வொரு நாளும் கைலைமலைக்குப் பறந்து சென்று சிவனை வழிபட்டான்!

இராமனிடம் ஏவுகணை இருந்தது, திருதராட்டிரன் அரண்மனையில் குருசேத்திரத்தில் நடந்த சண்டையைப் பார்க்கத் தொலைக்காட்சி இருந்தது! இப்படி ஏகப்பட்ட அண்டப் புளுகுகள்! ஆகாயப் புளுகுகள்!

எகிப்து நாட்டுப் பிரமிட்டா? இந்தியர்தான் அதைக் கட்டியவர்கள் என்கின்றனர். அங்கே பிரமிட் கட்டியவர்கள் இந்தியாவில் ஏன் ஒரு பிரமிட்டையாவது கட்டவில்லை என்று யாரும் அவர்களிடம் திருப்பிக் கேட்கக் கூடாது.

இந்துத்துவா ஆதரவாளர்கள் இப்பொழுது இந்திய வரலாற்றைத் திரித்து எழுதுவதில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆச்சாரியா பரத்வாசர் (கிமு 800) பறக்கும் தொழில் நுட்பத்தை  (Aviation Technology) தொடக்கி வைத்தவர். அவர் யந்திர சர்வாச என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் மூன்று விதமான பறக்கும் யந்திரங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை ஒரு கோளில் இருந்து இன்னொரு கோளுக்குப் பறக்கக் கூடிய யந்திரங்கள். மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றல் வேதகாலத்தில் தெரிந்திருந்தது. ஈர்ப்பு விசையை நியூட்டனுக்கு முன்னரே வேத காலத்தில் கண்டு பிடித்து விட்டார்கள்.

அணை கட்டும் தொழில்நுட்பம், கம்பியில்லா தொழில் நுட்பம், சதுரங்கம் எல்லாம் எப்போதோ கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன.  ஸ்ரீ ஆச்சாரிய சுருஷ்டர் (கிமு 600)  ஒட்டுறுப்பு அறுவை வைத்தியத்தின் தந்தை, அவருக்குக் கண்படலம் ((cataract) அகற்றல் மற்றும் ஒட்டுதல் செய்யத் தெரிந்திருந்தது.

ஆச்சாரியார் ஷாரக் (கிமு 600) என்பவரை மருத்துவத்தின் தந்தை என்கிறார்கள். அவர் எழுதிய ஷாரக் சம்கித 100,000 மூலிகைச் செடிகள் பற்றிக் கூறுகிறது. கபில் ஆச்சாரியார் (கிமு 3000) அண்டயியலின் தந்தை. கானட் ஆச்சாரியார் (கிமு 300) அணுக் கோட்பாட்டின் தந்தை. ‘எல்லாப் பொருள்களும் அணுக்களால் ஆனவை”, அவை அணு மூலக் கூறுகளால் (molecules) ) ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது.

ரிஷி நாகர்ச்சுனா  (கிமு 100) வேதியியலில் விற்பனராக இருந்தார்.

கொலம்பசுக்கு முன்னர் இந்தியர் அமெரிக்காவைக் கண்டு பிடித்தனர். பைதாகொறாஸ் சூத்திரம் கண்டு பிடிக்கு முன்னர் சிற்ப சாத்திர நூலில் அந்த சூத்திரம் எழுதப்பட்டுள்ளது. சமற்கிருத மொழியே மற்ற எல்லா மொழிகளினது மூலமாகும். சமற்கிருத மொழியே கணினிக்கு உகந்த மொழியாகும்.

மேற்கண்டவாறு ஒரு அடிப்படை இந்துத்துவவாதி எழுதியிருக்கிறார்.

முக்காலும் உணர்ந்த முனிவர்கள், கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தர்கள், ககன குளிகையை விழுங்கிவிட்டு வானத்தில் பறக்கும் யோகிகள் இவர்களுக்கும் அந்த நாட்டில் பஞ்சமில்லை. இன்று கூட வேறெந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையான மனிதக்கடவுளர் (godmen)  இருக்கிறார்கள். சாயிபாவாவுக்குப் போட்டியாகக் கேரளத்தில் மாதா அமிர்தானந்தமாயி என்ற ஒரு பெண்சாமியார் இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இந்தியாவையும் உலகத்தையும் வலம் வருகிறார். சாதாரண மக்கள் அல்ல, பாமரமக்கள் அல்ல, நாடாள்வோரே பக்தி சிரத்தையோடு அவர் காலில் விழுந்து எழுகிறார்கள்! அவரும் பக்தர்களைக் கட்டிப்பிடித்து ஆசீர்வதிக்கிறார்!

இந்தியாவை ஆளும் இந்துத்துவா அடிப்படைவாதிகள் இந்திய வரலாற்றைத் திரித்து எழுதும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார்கள். ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல, அவர்கள் இந்திய நாட்டின் பூர்வீக குடிகள் என்கிறார்கள்.  கரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகம் அல்ல அது சரஸ்வதி-மொகஞ்சதாரோ நாகரிகம் என்கிறார்கள். செத்தமொழியான சமற்கிருதம் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படுகிறது. அதே நேரம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்குமாறு தமிழ் சான்றோர்களாலும் தமிழக அரசாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள் நீண்ட கால இழுத்தடிப்புக்குப் பின்னர் இந்திய நடுவண் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வேதகால ஆரியர் நாடோடிகளாக அலைந்து ஆடு மாடுகளை மேய்த்து வாழ்ந்தவர்கள். அவர்களின் வருகைக்கு முன்னரே இந்திய உபகண்டத்தில் நாகரிகம் வளர்ச்சி அடைந்திருந்தது. இந்தியாவின் வரலாறு என்பது இந்து மதத்தின் வரலாறு என்றும், இந்திய நாகரிகம் என்பது இந்து நாகரிகம் என்பதும் உண்மைக்குப் புறம்பானது. இந்து மதம் இந்தியாவில் தோன்றிய பல மதங்களில் ஒன்றாகும். இந்து மதம் என்ற பெயர் வேதங்களை ஏற்றுக் கொண்ட சைவம், வைணவம், காணபத்தியம், சவுரம், கவுமாரம், சாத்தம் போன்ற பல்வேறு சமயங்களுக்குப் பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட பொதுப் பெயர் ஆகும். சைவ சமயத்துக்கு நால் வேதம் பொது நூலாகவும் 28 ஆகமங்கள் சிறப்பு நூலாகவும் அமையும். அவை சிவபெருமானாலேயே அருளப் பெற்றன என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கையாகும். சிவனை வேதத்தோடும் வழிபாட்டை ஆகமத்தோடும் சைவம் இணைத்துள்ளது.  சைவத்தில் காணப்படும் சாதி வேற்றுமை, தீண்டாமை இரண்டுக்கும் இதுவே மூல காரணியாகும்.

சமணம், பவுத்தம், உலோகாயுதம், வைபாடிகம் முதலிய மதங்கள் இந்திய நாள்டின் நாகரிக, சமுதாய, தத்துவ சிந்தனை வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளன. உலகம் படைக்கப்படவில்லை, அண்டத்தின் இயக்கத்திற்கு முதற் காரணன் இல்லை என்று இம் மதங்கள் போதித்தன.

அண்டம் எப்படித் தோன்றிற்று? இந்தக் கேள்விக்கான விடையை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அறிவியலாளர்கள் ஊகத்தின் மூலம் பெரிய வெடிப்புக் கருதுகோள் (Big Bank Throry) என்பதாகும்.

கற்பனைக்கெட்டாத ஒரு காலத்தில், ஒரே ஒரு சிறிய பொருள்தான் இருந்தது.   அதை ‘Cosmic Egg’ என்கின்றனர். பின் ஏதோ ஒரு ஏதுவால், அது வெடித்துச் சிதறியது. அப்படி வெடித்துச் சிதறிய துகள்கள் இன்றும்கூட நாலா பக்கங்களிலும் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆதனால் அண்டம் மேலும், மேலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

இவ்வாறு வெடிச் சிதறியபொழுது வெளிப்பட்ட துகள்கள், தூசுகள், புகை, வாயுக்கள் எல்லாம் நாளைடைவில், விண்மீன்களாகவும் கோள்களாகவும் துணைக் கோள்களாவும் குறுங்கோள்களாகவும்  (asteroids) உருவெடுத்தன. எமது ஞாயிறு குடும்பம், ஞாயிறு என்ற விண்மீனில் இருந்து வெடித்துச் சிதறிய துகள்களால் உருவானவை ஆகும்.

இந்த பெரு வெடிப்பின் பொழுது தோன்றிய வெப்பம், மின் ஆற்றல், காந்த ஆற்றல் ஆக மாறி அண்டம் முழுவதிலும் உள்ள எல்லாப் பருப்பொருள்களும் ஒன்றை ஒன்று இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும்படி செய்து ஒரு ஒழுங்கில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சிறிய மின் காந்தத்தின்   Electro Magnet அருகில் ஒரு சிறிய பிளாஸ்திக் கோப்பையை (Non magnetic material) வைத்து, அதில் சிறிய பிளாஸ்திக் மணியைப் போன்றதொரு நிலையான காந்த மணியை  (Permanent Ball Magnet) வைத்தால் அது உடனே தன்னைத்தானே வெகு வேகமாகச் சுற்றத் தொடங்கும். தன்னைத்தானே சுற்றிக் கொள்வதுமல்லாமல், கோப்பையையும் சுற்றிச் சுற்றி வரும்.

Ball Magnet யை மேல் கீழாகவும், இடம் வலமாகவும் நாம் திருப்பிவிட்டபடி தயக்கம் ஏதும் இல்லாமல் சுற்றம். அது போல அது கோப்பையையும் கடிகாரச் சுற்றுப் போலவும், அதன் எதிர்ச் சுற்றுப் போலவும்  (clockwise and anti-clockwise)  சுற்றும். இன்னொரு  Ball Magnet  யை வைத்ததால் இரண்டும் சேர்ந்து இரண்டு பற்சில்லுகள் இணைந்து சுற்றுவது போல் சுற்றும்.
Electro Magnet  ன் மின் இணைப்பைத் துண்டிக்கும் வரை அதன் இயக்கம் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கும்.

இதைப் போன்ற மிகப் பெரியதொரு மின்காந்த விளைவின் காரணமாகத்தான், நிலா புவியையும், நிலாவும் புவியும்  சேர்ந்து ஞாயிறையும் சுற்றிக் கொண்டு இருக்கின்றன என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இதனை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்த அண்டம் முப்பரிமாணம் உள்ள ஒரு பலூனைப் போல விரிந்து கொண்டு செல்வதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். காணாத பரப்பிரமம் (கடவுள்) ஒன்று மட்டுமே உண்மை, மற்றவை எல்லாம் மாயை, உலகம் மாயை, வாழ்வு பொய், எல்லாம் அவன் செயல், நம்மால் ஆவது ஒன்றுமில்லை என்ற மத தத்துவங்கள் மக்களைச் செயலற்று இருக்கச் செய்தன.

இவ்வாறான சமய தத்தவங்களுக்கு எதிராகத் தோன்றிய இயற்பியல் வாத சிந்தனையே பொருள் முதல்வாத தத்துவமாகும்.
இந்திய உப கண்டத்தில் பொருள் முதல்வாத்ததைச் சார்ந்த, கருத்து முதல்வாதத்தைச் சார்ந்த பல்வேறு தத்துவப் பிரிவுகள் தோன்றின.

பிராமண ஆதிக்கமும் வேத மதமும்  ஆன்மீகவாதமும் வலுவடைந்த உபநிடத காலத்தில் தான் முற்பிறப்பு, மறுபிறப்பு, கர்மவினை, தலையெழத்து, நரகம், சொர்க்கம் போன்ற தத்துவங்கள் பரவத் தொடங்கின.

அவற்றை எதிர்த்து உலோகாயத வாதம் தோற்றம் பெற்றது. உலோகாயதவாதம் என்பது உலகையும் மக்களையும் அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாத தத்துவம். ஆகும். இத்தத்துவத்தைப் பரப்பியவர்கள் உலோகாயதவாதிகள் அல்லது சாருவாகர்கள் என்று அழைக்கப்பட்டனர். சாருவாகர் என்றால் அழகாகப் பேசக் கூடியவர்கள் என்பது பொருள் ஆகும். பிரகஸ்பதி என்பவர்தான் இந்த உலோகாயதவாத தத்துவத்தின் ஆசிரியர் ஆவார். இவர் அசுரரின் குரு என மதவாதிகளால் இகழப்பட்டார்.

உலோகாயதவாதிகள் பொருளே எல்லாவற்றுக்கும் முதல் என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே என்றும் கூறினார்கள். கடவுள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் போன்ற பொருளற்ற கொள்கைகளுக்கு சான்று இல்லை என்றார்கள். “உயிரின் ஒரே உண்மைப் பொருள் உடல் மட்டுமே. ஆன்மா என்பது மாயை தவிர வேறு ஒன்றும் இல்லை, எனக்குச் சொர்க்கத்திலும் மோட்சத்திலும் நம்பிக்கை இலலை. இன்னொரு உலகில் ஆன்மா வாழும் என்பதை நான் நம்பவில்லை” என பிரகஸ்பதி சொன்னார்.

இதனால் உலோகாயதத்தைப் பின்பற்றுபவர்கள் பொருள் முதல்வாதிகள்  (Materialists)   என அழைக்கப்பட்டனர். சமணமும் பவுத்தமும் வேதத்தில் காணப்படும் வருணாச்சிரம தருமத்துக்கு எதிராக எழுந்த சமயங்களாகும். இந்தச் சமயங்கள் அன்பு, உயிர்க்கு உறுகண் செய்யாமை, நல்ல எண்ணங்கள், நற்செயல்கள் முதலியவற்றைப் போதித்தன. மந்திரம், சடங்கு, வேள்வி போன்றவற்றால் பலன் இல்லை என்றன. வேத வழிபாட்டில் முக்கிய இடம்பெறும் யாகங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதைக் கண்டித்தன. பவுத்தம் பிராமணருக்கு உயர்வு வழங்குவதை முற்றாக எதிர்த்தது. பிறப்பால் யாரும் பிராமணர் ஆவதில்லை, ஒருவனது செயலே உயர்வு தாழ்வைத் தீர்மானிக்கிறது என்று கூறியது.

வேத கணிதம் என்பது கிரேக்க கணிதவியலுக்கு உறைபோடவும் காணாது. அது கணிதம் அல்ல, சில கூட்டல் பெருக்கல்களை சுருக்கமாகவும் விரைவாகவும் செய்ய வழிகாட்டுவதே வேத கணிதம் ஆகும்.

ஆரியரின் வானியல்பற்றிய அக்கறை சமயத்தின் விரிவாக்கமாகவும் அதனோடு இழையோடியும் இருந்தது.  வேதகாலத்தில் சடங்குகளுக்கும் வேள்விக்கும் காலக் கணிப்புத் தேவையாக இருந்தது. மேலும் பயிர்ச் செய்கைக்கு மழை காலத்தைக் கணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

வேதகால ஆரியர் இந்திரன், வருணன், அக்கினி, சோமன் போன்றோரை தங்களைக் காக்கும் தெய்வங்களாக எண்ணி வழிபட்டனர். போர்க் கடவுளான இந்திரன் கறுப்பு நிறத்தவரான திராவிடர்களைக் (Dasas or Dasyus) கொன்று அவர்களது கோட்டை கொத்தளங்களை அழித்தவன் என இருக்கு வேதத்தில் போற்றப்படுகிறான்.

நால் வேதங்களுக்கும் பாரசீக மொழியல் எழுதப்பட்டுள்ள அவஸ்தா என்ற பழைய சமய நூலுக்கும் இடையில் பொதுவான நம்பிக்கைகள், தெய்வங்கள் காணப்படுகின்றன.

வேதத்தின் ஒருகூறான சோதிட சாத்திரம் கோள்களும் நட்சத்திரங்களும் மனிதர்களின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கின்றன எனக் கூறுகிறது. வியாழன், சனி, செவ்வாய் பாவ கிரகங்களாகக் கருதப்பட்டன. சாதகம் ஜென்மகுண்டலி என அழைக்கப்பட்டது. அதனைக் கணிக்கும் பொழுது நவ கோள்களின் இருக்கை கணக்கில் எடுக்கப்பட்டன. இந்திய வானியல் காகோல சாத்திரம் என அழைக்கப்படுகிறது. வேத கணிதயியலாளர்கள் தங்களை வானியலாளர்களாகவே பார்த்தனர்.

அதனால் கணிதயியல் வானியலுக்குச் சேடியாகவே இருந்து வந்தது. இதற்கு மாறாக கிரேக்க கணிதயியல் சுதந்திரமாக இயங்கியது. எனவே அது ஒரு தனிக் கலையாக வளர்ந்தது.  வேத கணிதயியல் பெரும்பாலும் பட்டறிவின் அடிப்படையில் இயங்கியது. எண்பித்தல் அல்லது மூலத்தில் இருந்து வருவிப்பு   (proofs or derivations) மிக அரிதாகவே கொடுக்கப்பட்டது. கிரேக்க கணக்கியல் இம்மியும் பிசகாத சான்றோடான விளக்கத்தை வலியுறுத்தியது. இரண்டுக்கும் இடையிலான வேற்றுமை இன்றும் கேத்திர கணிதத்திற்கும் (Geometry)  இயற்கணிதத்துக்கும்  (Algebra)   இடையிலான வேற்றுமை உருவில் நீடிக்கிறது. கணக்கியல் நூல்கள் அனுமான  (deductive ) முறையானது. இயற்கணிதம் விதிகளின் சேர்க்கையானது.
வானத்தில் பார்த்த காட்சிப் பொருள்களுக்கு மருட்சியான பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டது. வானியல் தொடர்பான தரவுகள் நால்வேதம், சித்தாந்தம் மற்றும் சமண பவுத்த இலக்கியங்கிகளில் காணப்படுகின்றன. இருக்கு மற்றும் அதர்வ வேத பாடல்களில் சந்திர ஆண்டைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஒரு சந்திர ஆண்டு 12 மாதங்கள் 360 சந்திர நாள்களைக் கொண்டிருந்தது.

சடங்கு வழிபாட்டுக்கு ஒரு நாள் 3, 4, 5 அல்லது 15 சம பிரிவுகளாகப் பகுப்பட்டிருந்தது. அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கார்த்திகை தொடங்கி பரணி ஈறாக 27 நட்சத்திரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. கோள்களைப் பொறுத்தளவில் வேதங்கள் 5 கோள்களைக் குறிப்பிடுகின்றன. வியாழன் (பிரகஸ்பதி) வெள்ளி (சுக்கிரன்) இரண்டுமே பெயர் சொல்லிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சமண மத தத்துவங்கள் பற்றி 45 கும் அதிகமான நூல்கள் இருக்கின்றன. சடங்குகள், புராணங்கள் மற்றும் சமய தத்துவங்கள் பற்றி சொல்பவை அங்கங்கள்  என அழைக்கப்படும். இவ்வாறு 12 அங்கங்கள் இருக்கின்றன. இதில் ஸ்தானங்கா மற்றும் பகவதி சூத்திரம் என்ற இரண்டும் வானியல் கணிதவியல்பற்றிய நூல்கள் ஆகும். இதேபோல் 12 உப அங்கங்கள் இருக்கின்றன. அவையும் வானியல் பற்றியவவையாகும்.  பிற்காலத்தில் (கிபி 2 ஆம் நூற்றாண்டு) மேலும் சில நூல்கள் வானியல்பற்றி எழுதப்பட்டன.

மகாமேரு மலை புவிமைய அச்சாகக் கருதப்பட்டது. புவி அசைவற்ற சடப் பொருளாக எண்ணப்பட்டது. இவை இரண்டோடும் இராசிகள், கோள்கள், கண்டங்கள், ஆறுகள், கடல்கள் மற்றும் மலைகள் அடங்கிய தொகுப்பு அய்ம்புதுவீப என அழைக்கப்பட்டது. துருவ நட்சத்திரம்  (Polar Star) மேரு மலைக்கு நேர் மேலே இருப்பதாகக் காட்டப்பட்டது.

——————————————————————————————————————–

சோதிடப் புரட்டு (43)
புகழ்பெற்ற வானியலாளர் ஆரியபட்டர்

நாசா அனுப்பிய   Opportunity (வாய்ப்பு) என்ற இரண்டாவது றோவர் செவ்வாயில் கடந்த சனவரி 25, 2004 இல் பத்திரமாக 60 அடி பள்ளத்தில் தரை இறங்கியுள்ளது.  தரையிறங்கிய இடம் கருஞ்சிவப்பு நிற மணல் துகள்கள் நிறைந்த இடமாகும். ஆனால் அதனைச் சுற்றியுள்ள தரை சாம்பல் நிறமாகக் காணப்படுகிறது. செவ்வாயின் எதிர்ப்புறம் 10,620 கிமீ  (6,600 கல்) தூரத்தில் தரையிறங்கிய எழுச்சி (Spirit)  போன்றே இதுவும் செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா? உயிர் வாயு இருக்கிறதா? என ஆய்வு நடத்தும்.  

செவ்வாயில் எழுச்சி ஏற்கனவே அங்கிருந்து  வாய்ப்பு  ஒளிப்படங்களை அனுப்பி வருகிறது. சனவரி 30 இல்  புவியில் இருந்து அனுப்பப்பட்ட சமிக்கைக்கு இணங்க அது லான்டரை விட்டு 10 அடி நகர்ந்துள்ளது. வியாழக்கிழமை (பெப்ரவரி 4) வாய்ப்பு அங்குள்ள கற்களை ஆராய இருக்கிறது. நாசாவுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. சிறிது காலம் ‘நோய்வாய்ப்பட்டு’ இருந்த எழுச்சி  இப்பொழுது குணமாகிப் பழையபடி இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இப்பொழுது இரண்டு இயந்திரமனிதர்களும் ஏக காலத்தில் செவ்வாயின் எதிரெதிர் தரைப் பகுதியை ஆராய்ந்து தகவல்கள் அனுப்பப்போகின்றன.

இதே சமயம் மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் வாழும் புண்ணிய பூமியான இந்தியாவில் இருந்து ஒரு சோகமான செய்தி வந்துள்ளது. உலகளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் தற்பொழுது உள்ளது. ஆனாலும் அங்குள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் திருப்திகரமாக இல்லை. ஏழைகளுக்குக் கிடைக்கும் உணவின் அளவு குறைவாக இருக்கிறது. இதனால் ஏழைகளின் வாங்கும் சக்தி குறைவாக இருக்கிறது. ‘உலகளவில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 3 இல் ஒரு பகுதியினர் இந்தியாவில்தான் வாழ்கின்றனர்’ என்கிறது அந்த அதிர்ச்சிச் செய்தி.

வறுமை ஒழிப்பு நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த பேராளர்களும்,வல்லுனர்களும் கலந்து கொண்ட தில்;லிக் கருத்தரங்கில் பேசிய செமூர் சிமித்தான் இந்தச் செய்தியைத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு நாளைக்கு ஒரு டொலருக்கும் குறைவான வருவாயில் வாழும் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர் என உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் (FAO) வரைவிலக்கணம் வகுத்துள்ளது. இந்த வரைவிலக்கணத்தின்படி இந்தியாவில் 35 கோடி பேர் (35 விழுக்காடு) வறுமைக் கோட்டின் கீழ் வாடுபவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 20 முதல் 25 இலக்கம் (இலட்சம்) ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 9 இலக்கம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஊர்ப்புறங்களில் 5 விழுக்காட்டினரும் நகர்ப் புறங்களில் 10 விழுக்காட்டினரும் உயர் குருதி அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். பட்டிக்காட்டுப் பகுதியில் 3 முதல் 5 விழுக்காட்டினரும் நகர்ப்புறங்களில் 8 முதல் 9 விழுக்காட்டினரும் நீரிழிவால் பாதிக்கப் பட்டுள்ளனர். எலும்புருக்கி நோயைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 18 இலக்கம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

காசி விசுவநாதர், திருப்பதி ஸ்ரீ வெங்கடேசுவரர், சபரிமலை அய்யப்பன், பழனி முருகன், காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி போன்ற பணக்காரக் கடவுளர் தங்களைத் தேடிவரும் பக்தர்களிடம் இருந்து பால், பழம், பணம், நகை நட்டு வாங்கிக் கொண்டு தீராத நோய்களைத் தீர்த்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏன் இந்தியர்களை இவ்வாறான கொடிய நோய் நொடிகள் பீடிக்கின்றன? ஏன் இந்தியர்களை வறுமை வாட்டுகிறது? ஏன் 35 கோடி மக்களைப் பட்டினி வாட்டுகிறது? ஒன்பது கோள்களும் இந்த மக்களின் சாதகத்தில் சொல்லி வைத்தால்போல் பகையாக இருக்கின்றனவா?

உண்மை என்னவென்றால் கடவுள், கோள்கள், கோயில், குளம் ஆகியவற்றுக்கும் நோய் நொடி,  வறுமை, ஏழ்மை முதலியவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!

இந்திய நாட்டு மக்களின் வறுமைக்கு முக்கிய காரணி கட்டுக்கடங்காத மக்கள் பெருக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு அவுஸ்திரேலியாவை (2 கோடி மக்கள்) இந்தியத் திருநாடு கூட்டிக் கொண்டிருக்கிறது.

பிள்ளையைப் பெறுபவர்கள் கடவுள் கொடுக்கிறார் வாங்கிக் கொள்கிறோம் எனத் தலைக்கு அய்ந்து ஆறு பத்து என்று பெற்றுத் தள்ளுகிறார்கள். நிலைமை அப்படி இருக்கும்பொழுது நூறு கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவம், கல்வி, இருப்பிடம் இவற்றுக்கு எங்கே போவது? மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி என்பது ஓட்டைப் பானைக்குள் தண்ணீர் விட்ட கதையாகத்தான் இருக்கும்!

அறிவியலும் தொழில்நுட்பமும் மேல்நாட்டில் வறுமையை ஒழித்துள்ளது. ஆனால் இந்தியாவில் அறியாமையும் மூடநம்பிக்கையும் வறுமையை வளர்க்கிறது!

Image result for aryabhatta
ஆரியப்பட்டர்

இந்திய வானியலின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தவர்களில் சேரநாட்டைச் சேர்ந்த ஆரியப்பட்டர் (கிபி 476-520) குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இந்தியா உருவாக்கிய முதல் விண்கலத்துக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது அவரது புகழுக்கும் செல்வாக்குக்கும்  நல்ல சான்றாகும். இவர் ஆரியப்பட்டியம்  (Aryabhattiya) என்ற நூலைத் தனது 23 வது அகவையில் (கிபி 499) எழுதினார். இந்த நூல் 13 ஆம் நூற்றாண்டில் இலத்தின் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

ஆரியப்பட்டர் சிறுவயதிலேயே புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து வானியல் படித்தவர். பின்னர் அதே பல்கலைக் கழகத்துக்குத் துணை வேந்தராக புத்தகுப்த என்ற மன்னனால் நியமனம் செய்யப்பட்டார்.

ஆரியப்பட்டியம் என்ற நூலில்  கோள வானியல்  (spherical astronomy)  பற்றி முதன் முதலில் ஆரியபட்டர் எழுதினார். புவி உருளை வடிவானது என்றார். மேலும் கோள்களின் இருக்கை பற்றியும் அவற்றின் தொலைவு பற்றியும் எழுதினார். சூரிய – சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகிறது என்பதை வரைபடம் மூலம் விளக்கினார். சூரிய – சந்திர கிரகணங்களுக்குக் காரணம் இராகு கேது என்ற பாம்புகள் அல்ல சந்திரன் மற்றும் புவியின் நிழல் என விளக்கினார். இந்த விளக்கம் வேதத்துக்கு மாறாக இருப்பதாகச் சொல்லி அவர் காலத்து வைதிக சமயத்தவர் அவருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினர்.

சந்திரனும் கோள்களும் சூரிய ஒளியை வாங்கி எறிகின்றன (reflect) என ஆரியப்பட்டர்  சொன்னார். புவி தனது அச்சில் சுழல்கிறது என்றும் நிலா புவியை வலம் வருகிறது என்றும் எழுதினார். புவி தனது அச்சில் சுழலும் காலம் அல்லது நட்சத்திர நாள்  (Sidereal Day) 23 மணி 56 மணித்துளி 4.1 விநாடி எனக் கணித்தார். இன்றைய சரியான  நட்சத்திர நாள் 23 மணி, 56 மணித்துளி, 4.091 விநாடி ஆகும். 6 மணி 9 மணித்துளி, 1.091 விநாடியாகும். ஆனால் புவி-மையக் கோட்பாடே இவரது கோட்பாடாகவும் இருந்ததாகத் தெரிகிறது.

ஆரியப்பட்டர் பையின் பெறுமதியை 3.1416 எனக் கணித்தார். அதே சமயம் அது அண்ணளவான கணிப்பு என்றும் சொன்னார். மேலும் முக்கோண அட்டவணைகள், முக்கோணங்களின் பரப்பளவு, சமன்பாடுகள் பற்றியும் எழுதினார். புரூகத் சம்கித மற்றும் புரூதத் யாதக என்ற நூல்களையும் எழுதினார். இந்த நூல்கள் விண்மீன் கூட்டங்கள் (constellations)  தாவரவியல், விலங்கியல், நிலநூல் பற்றியவை ஆகும்.

Image result for varahamihira

1) சூரிய சித்தாந்தம். எழுதியவர் இலாடா.

2) வசிட்ட சித்தாந்தம். இது ஒரு விண்மீனின் பெயர். எழுதியவர் விஷ்ணுசந்திரர்.

3) உரோமக சித்தாந்தம். உரோம பேரரசின் பெயர். எழுதியவர் ஸ்ரீஷேகர்.
4) போலீசா சித்தாந்தம். எழுதியவர் சயிந்திர (அலெக்சாந்தாரியா ) நகரில் வாழ்ந்த போலீசா என்ற கிரேக்கர்.

5) பிரம்ம சித்தாந்தம். எழுதியவர் பிரமகுப்தர். இவர் ஒரு திராவிடர்.
இவற்றில் சூரிய சித்தாந்தம் அவருக்குப் பின்னர் பலரால் பலமுறை திருத்தி எழுதப்பட்டது. சூரிய சித்தாந்தம் பஞ்சாங்கக் கணிப்பிற்கு முக்கிய ஆதார நூலாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

வராகமிகிரர் மேற்குலக வானியலைத் துறையறக் கற்றிருந்தார். மேலே சொல்லப்பட்ட அய்ந்தில் இரண்டு சித்தாத்தங்கள் மேற்குலக வானியல் பற்றியது. இந்த சித்தாந்தங்களில் வராகமிகிரர் கிரேக்க வானியலாளர் தொலமியின் கணக்கியல் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளை முழுதாகத் தந்திருக்கிறார்.
வராகமிகிரர் பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்ததால் சூரிய சித்தாந்தம் பாரசீக வானியலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சூரிய சித்தாந்தத்துக்கு இன்னொரு பெயர் சவுமார சித்தாந்தம் ஆகும்.  இதன் பொருள் சூரியனை வணங்குபவர்களது சித்தாந்தம் என்பதாகும். இதுவும் அவர் சூரிய வழிபாடுள்ள பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதற்குச் சான்றாகும்.

சூரிய சித்தாந்தம் சந்திரனின் விட்டம் (diameter) 480 யோசனை எனவும் அதன் சுற்றுப்பாதையின் சுற்றளவு 324,000 யோசனை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஒரு யோசனை 5 கல் எனக் கொண்டு கணக்கிட்டால் சந்திரனின் விட்டம் 2,400 கல் ஆகும். அதன் சுற்றுப்பாதை சுற்றளவு 1,620,000 கல் என வருகிறது. இது இன்றைய கணக்கோடு (சந்திரனின் விட்டம் 2,160 கல் சுற்றுப்பாதையின் சுற்றளவு 1,495,000 கல்) ஓரளவு ஒத்து இருப்பதைக் காணலாம்.

பாஸ்கரச்சாரியார் (1114-1183) ஆரியபட்டரின் நூலுக்கு விரிவுரை எழுதினார். இவர் சித்தாந்த சிரோண்மணி, லீலாவதி மற்றும் பீஜாகணிதம் என மூன்று நூல்களை எழுதினார். இந்த நூல்கள் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. இதில் சித்தாந்த சிரோண்மணி என்ற வானியல் நூலே அவருக்குப் புகழை ஈட்டிக் கொடுத்தது. ஆரியபட்டரின் விதியை வைத்துக் கோள்களின் சுற்றுப்பாதையின் தொலைவைக் கணித்தார்.

சூரிய சித்தாந்தத்திற்குப் பாஸ்கரச்சாரியர் எழுதிய விரிவுரையில் புவி ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் நாள்களை ஒன்பது பதின்மானம் (தசமானம்) வரை கொடுத்திருக்கிறார். 365.258756484 என்பதே அவர் கொடுத்த காலக் கணிப்பு. சரியான நாள்கள் 365.2596 ஆகும்.

பாஸ்கரச்சாரியர் ஈர்ப்பு விசையை சேர் அய்சக் நியூட்டனுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்தார் எனச் சொல்லப்படுகிறது. ‘பொருட்கள் புவியை நோக்கி அதன் கவர்ச்சியால் விழுகின்றன. ஆன காரணத்தால் கோள்கள், விண்மீன்க் கூட்டங்கள், சந்திரன், சூரியன் முதலியவை இந்தக் கவர்ச்சி காரணமாக அதனதன் சுற்றுப்பாதையில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன (“Objects fall on earth due to a force of attraction by the earth. Therefore the earth, the planets, constellations, moon and sun are held in orbit due to this attraction?).  இவர் இன்றைய கன்னட மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இந்திய வானியல் வளர்ச்சிக்குச் சேர நாட்டு அறிவியலாளர்களது பங்களிப்பு போற்றத்தக்கதாக இருக்கிறது. கரிதத்தர் என்பவர் கிரகசரனி பந்தனம் மற்றும் மகாமர்கனி பந்தனம் என்ற இரண்டு நூல்களை எழுதினார். இந்தக் கால கட்டத்தில் கரணம் என்று அழைக்கப்படும் பல வானியல் நூல்கள் எழுதப்பட்டன. இதில் தேவசாரியார் (12ஆம் நூற்றாண்டு) எழுதிய கரணநரத்ன என்ற நூல் ஞாயிறு, நிலா, கோள்கள், நீள்வட்டம், கோள்களின் கூடல் (conjunctions) பற்றி விளக்குகிறது.

ஒன்று தொடக்கம் சுழி வரையான எண்களுக்குப் பிறகு பதின்மான (தசமான) முறை கிபி 4 ஆம் நூற்றாண்டில் தோன்றிவிட்டது. குஜராத்தில் (புரதயசயவ) கண்டெடுக்கப்பட்ட (கிபி 585-586) சங்கேத செப்பேட்டில் முதன் முதலாக சுழி பயன்படுத்தப் பட்டது தெரியவந்துள்ளது.

பிரமபுத்தர் (7 ஆம் நூற்றாண்டு) தனது பிரமபுத்த சித்தாந்தம் என்ற நூலில் சுழியை விளக்கி இருக்கிறார். இந்த நூல் அரபு மொழியில் கிபி 770 இல் மொழிபெயர்க்கப்பட்டது.

இவரே புவியின் சுற்றளவை 5,000 யோசனை தூரம் எனக் கணக்கிட்டார். ஒரு யோசனை 7.2 கிமீ என்;ற கணக்குப்படி புவியின் சுற்றளவு 36,000 கிமீ தொலைவாகும். ஆனால் சரியான அளவு 40,046 கிமீ (24,889 கல்) ஆகும்.

சுழி கண்டு பிடிக்கப் படாதிருந்திருந்தால் இரட்டை எண்முறை (Binary)  தோன்ற வாய்ப்பில்லாது போயிருக்கும். பிராமி எண்களை அராபியர்கள் இந்தியர்களிடம் இருந்து கடன் வாங்கி மேற்குலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.  பிரமகுப்தா என்பவர் எழுதிய பிரமசூத்திர சித்தாந்தம் மற்றும் காண்டகடிகை 9-10 ஆம் நூற்றாண்டில் அராபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. சுழி மற்றும் பதின்மானம் கண்டு பிடித்ததற்கு இந்திய வானியலார்களை நிச்சயம் பாராட்டலாம். ஒன்பதாம் நூற்றாண்டில் அரபு நாட்டவரான அல் குவாரிசிமி இந்திய எண்முறை பற்றி ஒரு நூல் எழுதினார். இந்த நூல் 12 ஆம் நூற்றாண்டில் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.


சோதிடப் புரட்டு (44)
இந்திய காலக் கணிப்புகள்

சந்திரனின் பாதையை 27 சரிசமமான பாகங்களாகப் பிரித்து (13.33 பாகை) அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு நட்சத்திரம் ஒதுக்கப்பட்டது. இந்த நட்சத்திரங்கள் காலங்களைக் கணக்கிட உதவின.

Image result for Zenith horizon

ஒரு நட்சத்திர ஆண்டு (Sidereal year)  என்பது ஒரு நட்சத்திர இராசி வட்டத்தை ஞாயிறு சுற்றிவர எடுக்கும் காலமாகும். இது 365.256363 ஞாயிறு நாள்களாகும். ஒரு வெப்பமண்டல ஆண்டு என்பது ஞாயிறு வெப்பமண்டல இராசி வட்டத்தை சுற்றிவர எடுக்கும் காலமாகும். இது 365.242374 ஞாயிறு நாள்களாகும். (புரட்டு 7)                 

வான்முகடு திசைகளும் உச்சியும்

ஞாயிறு ஒரு நாளில் கடக்கும் தொலைவு தோராயமாக ஒரு பாகை ஆகும். ஞாயிறு ஒரு இராசி வீட்டில் இருந்து இன்னொரு இராசி வீட்டுக்குப் பெயர எடுக்கும் காலம் ஒரு ஞாயிறு மாதமாகும். இது சூரிய சங்கிராந்தி என வடமொழியில் அழைக்கப்படும்.

புவி ஞாயிறுக்கு அண்மையில் இருக்கும் பொழுது அதன் வேகம் அதிகமாகவும் தொலைவில் இருக்கும் பொழுது அதன் வேகம் குறைவாகவும் இருக்கும். நட்சத்திர மாதங்களான தனுசு (மார்கழி) மற்றும் மகரம் (தை) இரண்டிலும் புவி ஞாயிறுக்கு அண்மையில் காணப்படும். அப்பொழுது ஞாயிறு 30 பாகை கொண்ட இராசியைக் கடக்க 29 நாள்கள் மட்டுமே எடுக்கிறது. மிதுனம் (ஆனி) மற்றும் கடகம் (ஆடி) இரண்டிலும் புவி, ஞாயிறுக்குத் தொலைவில் இருப்பதால் அப்பொழுது 30 பாகை கொண்ட இராசியைக் கடக்க ஞாயிறு எடுக்கும் நேரம் 31.477 நாள்களாகும்.

ஞாயிறின் ஆகக் குறைந்த வேகம் 57 மணித்துளி 11 விநாடி.  ஆகக் கூடிய வேகம்  61 மணித்துளி 10 விநாடிகள். இதுவே தனுசு மகர வேத மாதங்கள் 29 நாள்களையும், மிதுனம், கடக வேத மாதங்கள் 31 நாள்களையும் கொண்டுள்ளதற்குக் காரணமாகும்.

வியாழ ஆண்டு – வியாழன் 30 பாகையைக் கடக்க எடுக்கும் காலம் 361 நாள்களாகும். ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும்.

நட்சத்திர நாள்- நட்சத்திர நாள் என்பது நிலைத்து நிற்கும் Siderus  நட்சத்திரத்தை புவி சுற்றிவர எடுக்கும் காலமாகும். இது 23 மணி 56 மணித்துளி 4.0953 விநாடியாகும்.

கால வாய்ப்பாடு

60 தற்பரை        – 1 விநாடி
60 விநாடி          – 1 நாழிகை
1 நாழிகை          – 24 மணித்துளி
60 நாழிகை     –  1 நாள்
ஞாயிறு ஆண்டு. – 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 தற்பரை

தொலை வாய்ப்பாடு

60 விகலை (arc second) –    1 கலை (minute)
60 கலை                                –   1 பாகை (degree)
1 பாதம் –  200 கலை
1 நட்சத்திரத்துக்கு            –   800 கலை

நிலாவின் நட்சத்திர காலம்   – நிலா நட்சத்திர இராசி வட்டத்தை சுற்றி வர எடுக்கும் காலம் 27 நாள்கள் 7 மணி 43 மணித்துளி 11.5 விநாடிகள்.

Image result for sidereal day vs solar day

நிலாவின் நட்சத்திர ஆண்டு (Sidereal Year ) – ஒரு நட்சத்திர நாள் என்பது சந்திரன் நட்சத்திர மண்டலத்தில் 13 பாகை 20 மணித்துளி கடக்க எடுக்கும் காலமாகும். சந்திரன்  தனது  அச்சில் தன்னைத்தானே சுற்ற எடுக்கிற  காலம் அல்லது புவியைச் சுற்றிவர எடுக்கும் காலம் 27.3 நாள்கள்  அல்லது ஒரு சந்திர மாதம் ஆகும். எனவே ஒரு சந்திர நட்சத்திர ஆண்டு 327.6 நாள்களாகும். ஞாயிறு நாள் – ஒரு ஞாயிறு நாள் என்பது புவி தனது அச்சில் தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலமாகும். புவி – மையக் கண்ணோட்டத்தில் ஞாயிறு ஒரு நாளில் ஒரு பாகைக்கும் குறைவான (59.13) தொலைவைக் கடக்கிறது.   365 days, 5 hours, 48 minutes and 45 seconds.

ஒரு ஞாயிறு ஆண்டு –  365 நாள்,  5 மணி,  48  மணித்துளி, 45  நொடி. அது  13 பாகை 20 கலை தொலைவைக் கடக்க 13, 14 நாள்கள் எடுக்கிறது.

தமிழர்கள் தவறாது பணம் கொடுத்து வாங்கிப் படிக்கும் ஒரு நூல் இருக்கிறது. வேறு எந்த நூல் இல்லாவிட்டாலும் இந்த நூல் ஒவ்வொருவரது வீட்டிலும் இருக்கும். அந்த நூலின் பெயர் பஞ்சாங்கம்.

தமிழர்கள் வீட்டில் தனி நூலகம் ஒன்று இருப்பதைப் பார்க்க முடியாது. புற நடை இருக்கலாம். ஆனால் அது கஞ்சிக்குள் காணப்படும் பயறு மாதிரி இருக்கும்.   பழைய காலத்தில் பாரதம்,  இராமாயணம், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, நிகண்டு போன்ற சில நூல்கள் மட்டும் இருக்கும். இப்பொழுது மு.வரதராசன், கல்கி, சாண்டில்யன், கண்ணதாசன் முதலியோர் எழுதிய நாவல்கள் சில இருக்கக் கூடும். ஆனால் அய்ந்தாம் வேதம், தமிழரின் பொது மறை என்று போற்றப்படும் திருக்குறள் மிக அருமையாகவே இருக்கும்!

தமிழர்கள்  படிப்பதற்கென்று  தனி அறையை ஒதுக்குவதில்லை. வெள்ளைக்காரர்கள் இதற்கு நேர் எதிர்மாறானவர்கள். அவர்கள் வீட்டில் கட்டாயம் ஒரு நூலகம் இருக்கும. தலைமுறை தலைமுறையாக வாங்கிப் படித்த நூல்களை அதில் பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். உட்கார்ந்து படிப்பதற்கு என ஒரு தனி அறை கூட (study room) இருக்கும். மாதத்தில் பணம் கொடுத்து குறைந்தது நாலு அய்ந்து நூலாவது வாங்கிப் படிப்பார்கள். நாள் குறிப்பு எழுதும் பழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்காரனைப் பார்த்து எதையெதையோ கற்றுக் கொண்ட தமிழர்கள் அவர்களது படிக்கும் பழக்கத்தை மட்டும் கற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்!

பஞ்சாங்கம் என்றால் அய்ந்து உறுப்புக்களைக் கொண்டது என்று பொருள். அவையாவன:

1) நாள் (ஞாயிறு நாள்) சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை.

2) திதி (சந்திர நாள்) சந்திரன் சூரியனில் இருந்து திதி ஒன்றுக்கு 12 பாகை 20 கலை வீதம்  கிழக்கு நோக்கி விலகிச் செல்வதினால் ஏற்படும் பூர்வ பக்கம் (சுக்கில பக்கம்) பிரதமை முதல் அபரபக்கம் (கிருஷ்ண பக்கம்) அமாவாசை வரையுள்ள 30 காலப் பகுதியாகும். அமாவாசையை அடுத்த பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் உள்ள 15 திதிகளை வளர் பிறைத் திதிகள் எனவும் பவுர்ணமி திதிக்கு அடுத்து அமாவாசைத் திதிவரை உள்ள 15 திதிகள் தேய்பிறைத் திதிகள் எனவும் அழைக்கப்படும்.

சந்திரன் ஒரு ஆண்டில் 360 பாகையைச் சுற்றிவருகிறது. ஒரு மாதத்தில் 28 திதிகள், ஒரு பூரணை ஒரு அமாவாசை ஆக மொத்தம் 30 காலப்பகுப்புகள் (திதிகள்) இருக்கின்றன. சூரியனும் சந்திரனும் இணையும் நாள் (0 பாகை) அமாவாசைத் திதி ஆகும். சந்திரனும் சூரியனும் எதிர்த்திசையில் (180 பாகை) இடம் பெறும்பொழுது அது பவுர்ணமி திதியாகும்.

3) சந்திரன் மேட இராசியின் தொடக்கத்தில் இருந்து நட்சத்திரம் ஒன்றுக்கு 13 பாகை 20 கலை விழுக்காடு விலகிச் செல்வதால் ஏற்படும்  அசுவினி முதல் இரேவதி முடியவுள்ள 27 காலப் பகுப்புகளாகும். ஒரு குழந்தை பிறக்கும்  பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இடம்பெற்று இருக்கிறதோ அந்த நட்சத்திரமே ஜெனன நட்சத்திரம் என்றும் ஜென்ம நட்சத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.

4) யோகம் ( கோள்களின் கூட்டு) – சந்திரன் ஒவ்வொரு நட்சத்தி;ரத்தையும் கடக்க எடுக்கும் 13 பாகை 20 கலை கொண்ட 27 காலப் பகுப்புகளாகும்.

5) கரணம் (பாதி சந்திர நாள்)  ஒரு திதியின் சரிபாதி. அல்லது 360 கலை அல்லது 6 பாகை கொண்டது. ஒரு சந்திர மாதம் 60 திதிகள் கொண்டது.

ஒரு (ஞாயிறு) நாள் திவஸ், ராத்திரி, சந்திய, சந்தியான்ஷ என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒரு ஆண்டு என்பது ஞாயிறு ஆண்டாகும். அது சித்திரை நடுப்பகுதியில் தொடங்கும். ஆண்டுகளின் எண்ணிக்கை 60 ஆகும். இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் திரும்பி வருகின்றன. ஒரு ஆண்டு இரண்டு ஆயணங்களைக் கொண்டது. ஞாயிறு தெற்கில் இருந்து வடக்கு நோக்கிப்  பயணம் செல்லும் பொழுது (தையில் இருந்து ஆனி வரை) அதனை உத்தராயணம் (உத்தரம் – வடக்கு) என்றும் ஞாயிறு மறுபடி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பயணம் செல்லும் பொழுது (ஆடியில் இருந்து மார்கழி வரை) தட்சணாயணம்  (தக்கிணம் – தெற்கு) என்றும் சொல்லப்படும்.

ஒரு ருது இரண்டு ஞாயிறு மாதங்கள். ஒரு ஞாயிறு ஆண்டில் 6 ருதுக்கள் இருக்கின்றன.  இந்திய வானியலின்படி-

60 தற்பரை – 1 விநாடி
60 விநாடி – 1 நாழிகை
60 நாழிகை – 1 நாள்

HTML clipboard

ஞாயிறு ஒவ்வொரு இராசியைக் கடக்க எடுக்கும் நாள்கள்

 


இராசி

நாள் மணி மணித்துளி நொடி

மேடம்
30 22 12 0

இடபம்
31 9 37 38

மிதுனம்

31

14 34

24


கடகம்

31

11 13

36


சிம்மம்

31

0 50

0


கன்னி

30

10 57

36


துலாம்

29

21 40

48


விருச்சிகம்

29

12 12

24


தனுசு

29

8 24

48


மகரம்

29

10 57

36


கும்பம்

29

19 24

0


மீனம்
30 8 7 42

மொத்தம்

365

6

12

30

இந்திய வானியல் மிக நீண்ட காலத்தைக் கொண்ட நான்கு யுகங்களைக் குறிப்பிடுகிறது.

கிருதாயுகம்       – 1,728,000 ஆண்டு
திரேதாயுகம்      – 1,296,000  ஆண்டு
துவாபரயுகம்    –   864,000 ஆண்டு
கலியுகம்             – 432,000   ஆண்டு
சதுர்யுகம்           –  4,320,000 ஆண்டு
71 சதுர்யுகம்     –  ஒரு மனுவந்தரம்
1000 சதுர்யுகம்   –  1 கற்பம்

கலியுகம் கிமு 3102 பெப்ரவரி 17-18 வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கியது என அனுமானிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது நட்சத்திர ஆண்டும் ஞாயிறு ஆண்டும் அசுவினியில் 0 பாகையில் இருந்தன. கலி என்ற சொல் சனியைக் குறிக்கும்.

இந்தக் காலக் கணிப்பு ஒரு அதீத கற்பனைக் கதையாகும். கிமு 3102 இல் இந்தியாவில் இருந்தவர்கள் எழுத்தைக் கண்டு பிடிக்கவில்லை. வேதங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகவே படிக்கப்பட்டு வந்தது. ‘எழுது’ என்ற வினைச் சொல் வேத காலத்தில் இருக்கவில்லை. வேதங்கள் எப்போது எழுத்துருப் பெற்றன என்பதில் ஒத்த கருத்துக் காணப்படவில்லை.

கிமு 1,000 ஆண்டளவிலேயே ஆரியர்கள் சிறிது நாகரிகம் அடையத் தொடங்கினார்கள். இதுவே இருக்கு வேதத்தின் காலமும் ஆகும்.

கவுதம புத்தர் கிமு 563 இல் பிறந்தார். தனது 35 வது அகவையில் பூரண ஞானம் பெற்றார். அவர் தனது 80 வது அகவையில் (கிமு 483) பரி நிருவாணம் அடைந்தார். ஆனால் அவரது போதனைகள் பவுத்த தேரர்களால் நெட்டுருச் செய்யப்பட்டு  வாய்மொழியாக போதிக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வந்தன. கிமு 29 இல் இலங்கையில் கூடிய 4 ஆவது பவுத்த மாநாள்டிலேயே புத்தரின் போதனைகள் பாளிமொழியில் எழுதப்பட்டு அதற்கு திரிபீpடகம் (மூன்று கூடை) எனப் பெயர் சூட்டப்பட்டது.

அசோகன் (கிமு 268-232) தூண்களிலும் பாறைகளிலும் பொறித்த கல்வெட்டுக்கள் பிராக்கிரத மொழியில் பிராமி எழுத்தில் எழுதப்பட்டதாகும். யேம்ஸ் பிறின்செப்  (James Princep (1850s என்பவரே முதன்முதலாக இந்தக் கல்வெட்டு வாசகங்களின் பொருளைக் கண்டு பிடித்தார். அவர் ஒரு கட்டடக் கலைஞர். ஆனால் நாணயங்கள் பற்றித் தெரிந்திருந்த ஒரு நிபுணர்.  அதுவே அவருக்கு அசோகன் கல்வெட்டைப் படிக்க வழி சமைத்தது.

மகா அலெக்சாந்தர் (கிமு 356-323)  எகிப்து பாரசீகம் வழியாக இந்தியா மீது படையெடுத்து வந்து காந்தாரம் (இன்றைய ஆப்கனிஸ்தான்) மற்றும் பஞ்சாப் பகுதிகளைக் கைப்பற்றினார். அவரும் அவரது வழிவந்த மன்னர்களும் இந்தப் பகுதிகளை கிமு 200 தொடங்கி கிபி 25 வரை ஆண்டார்கள். அப்பொழுது அவர்கள் நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றில் ஒரு பக்கத்தில் அவர்களது பெயர்களைக் கிரேக்க மொழியிலும் மறு பக்கத்தில் அதன் மொழிபெயர்ப்பை இந்திய மொழியான பிராகிருதத்திலும் பிராமி எழுத்திலும் வெளியிட்டனர். இதை வைத்தே பிராமி எழுத்துக்களின் ஒலி அமைப்பை யேம்ஸ் பிறின்செப் கண்டு பிடித்தார்.

பவுத்த தேரர்களும் சமண முனிவர்களுமே பிராமி எழுத்தை கிமு 3 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்கள். அசோகனது பிராமி எழுத்துக்களே தேவநகரி உட்பட பல இந்திய மொழிகளின் எழுத்துருவுக்கு வழிகோலியது எனச் சொல்லப்படுகிறது. பாண்டி நாள்டு மலைக் குகைகளில் பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றின் மொழி தமிழாகவும் எழுத்து மட்டும் பிராமியாகவும் உள்ளன. பிராமியின் நுழைவினால் தொல்காப்பியர் காலத்துத் தமிழ் எழுத்து மறைந்து வட்டெழுத்து வளர்ச்சி பெற்றது. இதனை ‘தாமிழி’ என்று அழைக்கின்றனர்.

விக்கிரம ஆண்டு – விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளில் இருந்து கணிக்கப்படுகிறது. கிபி 2000 ஆம் ஆண்டு 2058 விக்கிரம ஆண்டாகும். விக்கிரம ஆண்டுக் கணிப்பு வட இந்தியாவிலும் குஜராத்திலும் புழக்கத்தில் உள்ளது.

சக ஆண்டு – இது சாலிவாகனன் அரச கட்டில் ஏறிய ஆண்டாகும். கிபி 2000 ஆம் ஆண்டு 1923 சக ஆண்டுக்குச் சமமாகும். சக ஆண்டுக் கணிப்பு தென்னிந்தியாவில் பின்பற்றப்படுகிறது. கிபி 500 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சமற்கிருதத்தில் எழுதிய வானியல் நூல்கள் பெரும்பாலும் சக ஆண்டையே குறிப்பிடுகிறன. இந்திய அரச நாள்காட்டியும் சக ஆண்டையே பின்பற்றுகிறது.

மேற்கு நாட்டில் ஒரு நாள் என்பது நள்ளிரவு தொடங்கி மறு நள்ளிரவு மட்டும் நீடிக்கும் காலமாகும். ஆனால் இந்திய நாள் சூரிய உதயம் தொடங்கி மறு சூரிய உதயம் இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.

இதன் அடிப்படையில்  டிசெம்பர் மாதம் 13 ஆம் நாள் பின்னிரவு 13.00 மணிக்குப் பிறந்த ஒருவர் மேற்குலக சாதகத்தில் 13 ஆம் நாள் பிறந்தவர் எனக் குறிக்கப்படுவார். ஆனால் இந்திய சோதிடத்தில் இவர் 12 ஆம் நாள் பிறந்தவர் எனக் கணிக்கப்படுவார். எண்சாத்திரக்காரர்கள் மேற்குலகக் கணிப்பை வைத்துத்தான் பலன் சொல்கிறார்கள். இந்திய நாளை ஏன் பயன்படுத்துவதில்லை?

மூச்சு விடும் நேரம் 4 விநாடி ஆகும். இது வடமொழியில் அசு அல்லது பிராண காலம் என அழைக்கப்படும். ஆறு அசு ஒரு விநாடி. அறுபது விநாடி ஒரு நாழி. அறுபது நாழி ஒரு நாள். அதாவது ஒரு நாள் 86,400 விநாடிகள் அல்லது 21,600 அசுக்கள் கொண்டது.

இந்திய வானியலில் ஒரு நாளை 15 இல் ஒன்றாகப் பிரித்துப் பார்ப்பது அடிப்படை அம்சமாகும். பதினைந்து நாள்கள் இருவாரங்களாகும். இப்படி இரண்டுவித இருவாரங்கள் இருக்கின்றன. இருண்ட இருவாரம் கிருஷ்ண பட்சம். ஒளி நிறைந்த இருவாரம் சுக்கில பட்சம். இந்த இரண்டு இருவாரங்களும் கொண்டது ஒரு மாதம்.

நேரான இரண்டு ஞாயிறு மாதங்கள் ஒரு ருது (பருவம்) ஆகும். அப்படி ஆறு ருதுக்கள் இருக்கின்றன. மேடம் இடபம் வசந்தருது. மிதுனம் கடகம் க்கிரீஷ்ம ருது. சிம்மம் கன்னி வர்ஷருது. துலாம் விருச்சிகம் ஸரத்ருது, தனுசு மகரம் ஹேமந்தருது, கும்பம் மீனம் சிசிரருது.

இந்த ஆறு ருதுக்கள் அல்லது 2 அயனாம்சம் கொண்டது ஒரு ஆண்டு. புவி பின்னோக்கி 72 ஆண்டில் ஒரு பாகை போவதால் ஒரு அயனாம்ச வட்டம் 2,160 ஆண்டுகளாகும். இரண்டு இலட்சம் அயனாம்ச வட்டம் ஒரு அண்ட வட்டமாகும்.

ஒரு அண்ட வட்டம் 432 கோடி ஆண்டுகளாகும். இது பிரமாவுக்கு ஒரு நாள். பிரமாவின்  ஆயுட்காலம் 100 நட்சத்திர ஆண்டுகள். அல்லது  2*4.32*360*100 = 3.1104*10^14 ஆண்டுகள் !2*4.32*360*100 = 3.1104*1014 ஆண்டுகளாகும்!

ஞாயிறு வீதி விண்ணக நடுக்கோடுக்கு (விண்ணக நடுக்கோடு புவி  நடுக்கோட்டின் நீட்டம் ஆகும்) 23 பாகை 52 கலை (60 விகலை ஒரு கலை. அறுபது கலை – ஒரு பாகை) சரிந்து இருக்கிறது. இவை இரண்டும் ஒன்றை ஒன்று வெட்டும் சந்தி அயன சந்தி எனப்படும். இது நிலையான சந்தி அல்ல. ஆண்டொன்றுக்கு 50.3 விகலை பின்னோக்கி நகருகிறது.

ஞாயிறு விண்ணக நடுக்கோட்டை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும் பொழுது வெட்டும் சந்திப் புள்ளி மேட இராசியாகும். மறுபுறம் வடக்கில் இருந்து தெற்கே போகும் பொழுது வெட்டும் சந்திப் புள்ளி துலா இராசியாகும்.

கலியுகத்தின் தொடக்கத்தில் எல்லாக் கோள்களும் முதல் இராசியான மேட இராசி மற்றும் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரமண்டலம் (Constellation)  இரண்டின் தொடக்கத்தில் இருந்தன. பின்னர் வேத காலத்தில் முதல் இராசியான மேட இராசி கார்த்திகை நட்சத்திர மண்டலத்தில் இருந்தது. இதனால்தான் வேத காலத்தில் நட்சத்திர மண்டலங்கள் கார்த்திகையில் இருந்து எண்ணப்பட்டன. இப்போது (2000) நட்சத்திரமண்டல மேட இராசி வெட்பமண்டல மேட இராசிக்குப் பின்னால் 23  பாகை 51 கலை 14 விகலையில் (Lahiri-23 degrees 51 minutes 14 seconds ) இருக்கிறது. இந்த அயனாம்ச வேற்றுமை பற்றி ஏற்கனவே நான் விரிவாக விளக்கியுள்ளேன்.

உயர்வுமானி (Astrolabe)   பற்றி இரண்டு பெரிய நூல்கள்  பிற்காலத்தில் (14-16ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டன. இந்தக் கருவி, கோள்கள் நட்சத்திரங்கள் அடிவானத்தில் இருந்து மேல் எழும் கோணத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்டதாகும்.

ஆனால் வெகு தூரத்தில் உள்ள காட்சிப் பொருட்களைப் பார்ப்பதற்கு தொலைநோக்கிக் கருவிகளை இந்திய வானியலாளர்கள் கண்டுபிடிக்கத் தவறியதால் பிற்காலத்தில் வானியல்பற்றிய ஆய்வில் பின் தங்கிவிட்டார்கள்.


சோதிடப் புரட்டு (45)

சங்க கால வானியல்

பண்டைக் காலத்தில் தமிழில் வானியல் பற்றிய தனி நூல்கள் இருந்ததாகத் தெரியவில்லை. கிமு முதலாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குறள் மட்டுமே தமிழில் இயற்றப்பட்ட முதல் நூல் என்பதை அறியும் பொழுது தமிழில் வானியல் நூல்கள் இல்லாது இருப்பதில் வியப்பேதும் இல்லை.

தமிழர்களுடைய கல்வி, கலை, பண்பாடு முதலியன முடியுடை மூவேந்தர்கள் ஆண்ட சங்க கால முற்பகுதியில் மிகவும் சிறப்புற்று விளங்கியது. எனவேதான் சங்க காலம் தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. ஏறத்தாழ 473 சங்கப் புலவர்கள் தீஞ்சுவையும் கருத்தாழமும் மிக்க 2,351 தனிப்பாடல்களையும் (எட்டுத்தொகை) 3,548 அடி அளவு அல்லது 8,552 வரிகளையும் (பத்துப்பாட்டு) இயற்றியுள்ளனர். குறள் உட்பட பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் 3,251 பாடல்கள் இயற்றியுள்ளனர்

புலவர்களில் நல்லிசைப் புலமை பெற்ற 50 கும் கூடுதலான பெண்பால் புலவர்கள் இருந்திருக்கின்றனர். இது சங்க காலத்தில் ஆண் பெண் இருபாலாரும் கல்வி கற்றதைக் காட்டுகிறது. மேலும் கல்விச் செல்வம் அரசர், அரசியர், பாணர், குயத்தியர், குறவர், கூலவாணிகன், மருத்துவன், கொல்லன், பொன்வாணிகன், வேளிர்  என எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவாக இருந்திருக்கிறது. தொழிலின் அடிப்படையில் குடிகள் இருந்தன. பிறப்பின் அடிப்படையிலான வருண (சாதி) வேற்றுமை சங்க காலத்தில் மருந்துக்கும் இருக்கவில்லை. அது மட்டும் அல்லாமல் நிறுவன சமயமும் இருக்கவில்லை.

கல்வி கற்றல் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து என்கிற குறள் வாக்கு, உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே எனப் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் அறிவுரையும் அதற்குச் சான்று பகருகிறது.

ஆனால் பிற்கால தமிழரசர்கள் யாரேனும் தமிழ் மொழி படிக்கவும் தமிழ்க் கலைகள் கற்கவும் பள்ளிக்கூடம் கட்டினான், கல்லூரி நிறுவினான், பல்கலைக் கழகங்களைத் தோற்றுவித்தான், ஆய்வு மையங்களை உருவாக்கினான் என்ற செய்தியே இல்லை.

சங்க கால கடைப்பகுதி தொட்டு தமிழரசர்கள் தங்கள் பொன்னையும் பொருளையும் பொழுதையும் உழைப்பையும் வேள்வி செய்வதிலும், கோயில் கட்டுவதிலும் பார்ப்பனர்களை வடபுலத்தில் இருந்து இறக்குமதி செய்து அவர்களுக்கு இறையிலி பிரமதேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள் முதலியவற்றை உருவாக்குவதிலும், வேத பாடசாலைகளை நடத்துவதிலும் கரைத்தார்கள்! கரைத்தது மட்டுமல்ல அவற்றைப் பெருமையாகவும் கருதினார்கள்.

சோழன் ராசசூயம் வேட்ட கோப்பெரு நற்கிள்ளி, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை முதலிய மன்னர்கள் வேள்விகள் செய்ததையும் பார்ப்பனர்களுக்கு எடைக்கு எடை பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்ததையும் புறநானூறு போன்ற சங்க நூல்கள் எடுத்துக் கூறுகிறன.

ஆரியர் வருகையால் சாதிப் பிரிவுகள் தமிழ்ச் சமுதாயத்தில் தலையெடுத்தன. அதன் பின் கல்வி கற்றல் தேய்வுற்றது. கல்வி கற்றல் திண்ணைப் பள்ளிக்கூடங்களில், ஊர் அம்பலங்களில் கணக்காயர் மற்றும் ஆசிரியர் – மாணாக்கர் என்ற உறவு முறையில் முடக்கப்பட்டது. மருத்துவம், கணிதம், இசை, நடனம் போன்ற கலைகள் குறிப்பிட்ட சில குடும்பங்களால் தலைமுறை தலைமுறையாகப் பயிலப்பட்டு வந்தன.

பதிற்றுப் பத்தின் மூன்றாவது பத்தைப் பாடிய பாலை கவுதமனார் என்ற புலவருக்கு பாட்டுடைத் தலைவன் சேரன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ‘நீர் வேண்டியது கொண்மின்’ என ‘யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்’ எனப் பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர். (மூன்றாம் பத்து – பதிகம்)

சோகம் என்னவென்றால் இந்த அரசர்களில்  யாரும் தங்களுக்கு என்று ஒரு அரண்மனையைக் கூட நாம் பார்த்துப் பெருமைப்படத் தக்கவாறு கட்டி வைக்கவில்லை.

கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்ட சில நூல்கள் கால வெள்ளத்தில் அழிந்து போயின. பன்னிரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டிய பல நூல்கள் கூட இன்று நீருக்கும் நெருப்புக்கும் இரையாகிவிட்டதாலும் போற்றிக் காப்பாற்றப்படாததாலும் மறைந்து போயின. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்குநல்லார் தன் காலத்திற்கு முந்தி இருந்த நாடகத்தமிழ் நூலாகிய பரதம், இலக்கண நூலான அகத்தியம் முதலாவுள்ள தொன்நூல்கள் இறந்தன எனக் குறிப்பிடுகிறார்.

சங்க காலத்தில் புலவர்கள் சிறியதும் நீண்டதும் ஆன தனிப் பாடல்களே இயற்றியுள்ளனர். அவற்றில் ஒரு சிறிய தொகையே சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை பத்துப் பாட்டு இரண்டிலும் இடம் பெற்றுள்ளன.

எட்டுத் தொகையில் உள்ள தனிப்பாடல்கள் சிலவற்றிலும் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் தமிழர்களது வானியல் அறிவு பற்றிய பயனுள்ள செய்திகள் காணப்படுகிறன.

இந்த நூல்களில் தரப்பட்டுள்ள செய்திகள் உருவாகப் பல நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும். சங்க இலக்கியங்களின் மேல் எல்லை கிமு 3 ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. தொல்காப்பியத்தின் மேல் எல்லை கிமு 5ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறது. இவற்றின் அடிப்படையில் ஆரியரது தென்னாட்டு வருகைக்கு முன்னரே தமிழர்களுக்கு வானியல் பற்றிய அறிவு ஓரளவு இருந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.

தொல்காப்பியர் இந்த உலகத்தின் தோற்றத்தைப் பற்றியும், உலகிலுள்ள உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆராய்ந்து அறிவுபூர்வமாகத் தொகுத்து  மரபியலில் எழுதியிருக்கிறார். மரபியல் என்பது  பண்டுதொட்டு வழிவழியாக வரும் முறைமை, வழக்காறுகள் பற்றிக் கூறுவதாகும்.

“நிலமும் நெருப்பும் நீரும் காற்றும் விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று” எனத் தொல்காப்பியர் கூறுகிறார். சமணர்களது கோட்பாடும் இதுதான். இதனால் தொல்காப்பியர் ஒரு சமணர் என்பது பெறப்படும்.

நிலம் தீ நீர் வளி விசும்போடு அய்ந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை அய்ம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.  (தொல். மரபியல் 1589)

இவ்வுலகம் நிலம், தீ, நீர், காற்று, வான் என்ற அய்ம்பூதங்களின் கலவை ஆகும். அதனால் உயர்திணை, அல்திணை, ஆண், பெண், பலர், ஒன்று, பல என்ற இருதிணை, ஆயு;ந்து பால்களின் இயல்பினி;ன்றும் வழுவாது, திரிபு இல்லாத சொற்களால் கூறித் தழுவிக் கொள்ளல் வேண்டும்.

தொல்காப்பியரது கருத்தை அடியொட்டிச் சங்ககாலப் புலவரான முரஞ்சியூர் முடிநாகனார் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும், என்றாங்கு
அய்ம்பெரும் பூதத்து இயற்கைபோலப் ……   (புறம் 2)

இந்தப் பாடலில் பொருள் முதல்வாதத்தைச் சார்ந்த இயற்பியல் கருத்து முன்வைக்கப் பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. உலகம் நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் என்ற அய்ம் பூதங்களினால் ஆனது என்கிறார்.

இதே கருத்தை கிரேக்க தத்துவவாதியான அரிஸ்தோட்டலும் (கிமு 384-322) கூறியிருப்பது மனம் கொள்ளத்தக்கது.  இந்த உலகம் கோள வடிவானது என்று கூறிய அவர் உலகம் அண்டத்தின் நடுவில் இருப்பதாகக் கூறினார். மேலும் அந்த உலகம் நிலம், நீர், தீ, வளி என்ற மூலகங்களால் (பூதங்களால்) உருவாக்கப்பட்டதாகவும் ஆகாயத்தினால் (Ether)  சூழப்பட்டதாகவும் கூறினார்.

சங்க காலத்தில் வானியலிலும் அதன் அடிப்படையிலும் எழுந்த ஆரூடத்திலும் வல்ல அறிஞர்கள், அறிவர், அறிவோர், கணி, கணியன் என அழைக்கப்பட்டனர்.

கணியன் பூங்குன்றன், பக்குடுக்கை நன்கணியார், கணி மேதாவியார் என்ற பெயர்கள் இவர்கள் வானியலிலும் ஆரூடத்திலும் புலமை பெற்று இருந்ததைக் குறிக்கின்றன.

நக்கீரரின் தந்தையார் மதுரையில் பெரிய கணக்கியல் ஆசிரியராக விளங்கினார். அதனால் அவர் ‘மதுரைக் கணக்காயனார்’ என அழைக்கப்பட்டார்.

அரசர்களது அவையில் பெருங்கணிகன் இருந்ததைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார். காலத்தைக் கணிக்க நாழிகை வட்டில் பயன்படுத்தப் பட்டதை சிலப்பதிகாரம் எடுத்துச் சொல்கிறது. இந்த நாழிகை வட்டில் யவனரிடம் (கிரேக்கர்) இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். காலத்தைக் கணிப்பவர் நாழிகைக் கணக்கர் என அழைக்கப்பட்டனர்.

வானியல் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் செய்திகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

புறநானூற்றில் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ள பாடல் பண்டைய நாளில் வான்நூலோர் இருந்ததற்கு சான்று பகருகிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே! அனைத்தும்
அறிவு அறிவாகாச் செறிவினையாகிக்
களிறு கவுள் அடுத்த எறி கல் போல
ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது …………….           (புறநானூறு 30)

சோழன் நலங்கிள்ளி என்ற மன்னன்பாற் காணப்படும்  அடக்கமாகிய பண்பு கண்டு வியந்த முதுகண்ணன் சாத்தனார் “வேந்தே! செஞ்ஞாயிற்றின் வீதியும் அஞ் ஞாயிற்றினது இயக்கமும் அவ் இயக்கத்தாற் சூழப்படும் பார் வட்டமும் காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமுமின்றித் தானே நிற்கிற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றின் அளவை நேரிற் சென்று கண்டவரைப் போல் அறிவால் ஆராய்ந்து உரைப்போரும் உளர்! அவர்களாலும் ஆராய்ந்தறியக் கூடாத அத்துணை அடக்கமுடையவனாய் யானை தன் கதுப்பின்கண் அடக்கிய எறியும் கல்லைப் போல,  வலி முழுதும் தோன்றாதவாறு அடக்கிக் கொண்டு விளங்குகிறாய்.

Image result for star pleiades

உனது வலிமையை யாங்கனம் பாடுவர் புலவர்” எனப் பாராட்டுகிறார்.

செலவு என்பது ஞாயிறு செல்லும் பாதை. பரிப்பென்றது இத்துணை நாழிகைக்கு  இத்துணை யோசனை செல்லுமென்னும் இயக்கத்தை ஆகும்.

பண்டைய தமிழர்கள் 27 விண் (நாண்) மீன்களையும், ஒன்பது கோள் மீன்களையும் (கிரகங்கள்) குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். வானத்தில் ஏற்படும் கோள் மாறுபாடுகளை அறிந்திருந்தனர். ஆனால் புவியும் ஒரு கோள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

கார்த்திகை விழாக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறது. சந்திரனும் கார்த்திகை நட்சத்திரமும் நெருங்கி இருக்கும் நாளைக் கார்த்திகை நாள் என்று கொண்டாடினர்.
கார்த்திகை மீன்
அம்ம வாழி தோழி! கைம்மிகக்
……………………………………………………………

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு உறுத்து, மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு …………………………………….…………………    (அகநானூறு 141)

“தோழி வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! ஆகாயத்தின் கண்ணே சிறு முயலாகிய மறு மார்பிலே விளங்க, முழு மதியாகிய, கார்த்திகை மீன் திங்களுடன் சேர்ந்திருக்கும் நாள் கார்த்திகை நாளாகும். இந்நாளின் நள்ளிரவில் வீதியிலே விளக்கேற்றி வைத்து, மனைவாயில் தோறும் மலர்மாலைகள் தொங்க விட்டு அலங்கரித்து மிகப் பழைமையாகிய முதிர்ந்த ஊரிலுள்ள பலரும் ஒருசேரக் கூடி விழாக் கொண்டாடுவார்கள்….”

வெள்ளி (Venus) என்னும் கோளைக்கொண்டு மழை பெய்யும், பெய்யாது என்பதைக் கண்டறியலாம் எனப் பண்டைத் தமிழர்கள் நம்பினார்கள். வெள்ளி வடக்குத் திசையில் நின்றால் மழை பெய்யும் என்றும், தெற்கித் திசை நோக்கிப் போகின் மழை பெய்யாது என்றும் நல்ல கோள்களுடன் சேரும்பொழுது மழை பெய்யும் என்பதும் அவர்களது நம்பிக்கை ஆகும்.

நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு
……………………………………………………………………
வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப
கலிழும் கருவியொடு கை உற வணங்கி
..…………………………………………………………….     (பதிற்றுப்பத்து 24)

பதிற்றுப்பத்து 69ஆம் பாடவிலும் இதே தரவு தரப்பட்டுள்ளது.

நிலம் பயம் பொழிய, சுடர் சினம் தணிய
பயம் கெழு வெள்ளி ஆனியம் நிற்ப
விசும்பு மெய் அகல, பெயல் புரவு எதிர
நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த,
இலங்கு கதிர்த் திகிரி நின் முந்திசினோரே
………………………………………………………………. ‘     (பதிற்றுப்பத்து 69)

நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளைய, காலத்தே தவறாமல் மழை பெய்தலால் சூரியன் வெப்பந் தணிந்தாற்போன்று, உலகத்திற்குப் பயன்பொருந்திய வெள்ளி என்னும் கோள் மழைக்குக் காரணமாக மற்ற நாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாள்களில் நிற்க……..

புறநானூற்றுப் பாடல்கள் 114, 229, 260, 313 ஆகிவற்றில்  மேலதிக வானியல் குறிப்புக்கள் காணப்படுகிறன. அவற்றைப் படித்து அறிந்து கொள்க.


சோதிடப் புரட்டு (46)

எரிமீன் வீழ்ந்தது கண்டு கலங்கிய புலவர்

புறநானூற்றுப் பாடல் 229 யை பாடியவர் கடலூர் கிழார். கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை என்ற மன்னனது இறுதி நாளில் அவன் இறப்பதற்கு ஏழு நாள்களுக்கு முன் ஒரு விண்மீன் தீ கக்க விழுந்தது. அப்பொழுது வானில் விண்மீன்களின் நிலையைக் கண்டு இந் நிகழ்ச்சிக்கு ஏழாம் நாளில் உலகாளும் வேந்தன் உயிர் நீப்பன் என்று உணர்ந்தார். கடலூர்கிழார் கலங்கியவாறே மன்னன் ஏழாம் நாள் உயிர் நீத்தான்.

ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவின்
முடப் பனையத்து வேர் முதலாக்
கயம் குளத்துக் கடை காய
பங்குனி உயர் அழுவத்துத்
தலை நாண் மீன் நிலை திரிய
நிலை நாண்மீன் அதன் எதிர் ஏர்தரத்
தொல் நாண் மீன் துறை படியப்
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளர்க்கத் திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் கால் எதிர்ப்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே
அதுகண்டு யாமும் பிறரும் பல்வேறு இரவலர்
பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயிலனாயின் நன்று மற்று இல்லென
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப
அஞ்சினம் எழுநாள் வந்தது இன்றே
மைந்துடை யானை கைவைத் துறங்கவும்
திண்பிணி முரசம் கண்கிழிந் துருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
காலியல் கலிமா கதியின்றி வைகவும்
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
……………………………………………………….              (புறநானூறு 229)

மேட இராசி பொருந்திய கார்த்திகை நாளில் முதல் காலின்கண்,

நிறைந்த இருளை உடைய பாதி இரவின் கண்,

முடப்பனை போலும் வடிவையுடைய அனுட்ட நாளில் அடியின் வெள்ளி முதலாக, கயமாகிய குள வடிவுபோலும் வடிவுடைய புனர்பூசத்துக் கடையில் வெள்ளி எல்லையாக விளங்க,

பங்குனி மாதத்தினது முதற் பதினைந்தின்கண்,

உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய,

அதற்கு எட்டாம் மீனாகிய மூலம் அதற்கு எதிரே எழாநிற்க,
அந்த உத்தரத்துக்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய நாண் மீன் துறையிடத்தே தாழ, கீழ்த்திசையில் செல்லாது வடதிசையிற் போகாது கடலால் சூழப்பட்ட புவிக்கு விளக்காக,
கனை எரி பரப்ப காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து,
ஒரு நட்சத்திரம் வானத்தில் இருந்து விழுந்தது,

Image result for comet

எரிமீன்
அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய பல்வேறுபட்ட இரவலர், பறையொலிபோலும் ஒலியை உடைய அருவியை உடைய நல்ல மலைநாள்டு வேந்தனாகியவன் நோயை உடையவன் அல்லானாகப் பெறின் அழகிதென, இரங்கிய நெஞ்சத்துடனே

மடிந்த உள்ளம் பரப்ப யாம் அஞ்சினோம்.
அஞ்சின படியே ஏழாம் நாள் வந்தது ஆகலின்,

இன்று வலிமையுடைய யானை கையை நிலத்தேயிட்டு வைத்துச் துஞ்சவும் திண்ணிய வாராற் பிணிக்கப்பட்ட முரசம் கண் கிழிந்து உருளவும் உலகிற்கு காவலாகிய வெண்கொற்றக்குடை கால் துணிந்து உலறவும் காற்றுப் போலும் இயலையுடை மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக் கிடக்கவும்
இப்படிக் கிடக்க மேலோர் உலகம் எய்தினான் ………………………….
அழல் சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். அக்கினியை அதிதேவதையாக வுடைமையின், கார்த்திகைக்கு அழலென்பது பெயராயிற்று என்ப.

ஆட்டினை வடநூலோர் மேடராசி என்பர். ஆடு முதல் மீன் ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டிற்கும் அசுவினி முதல் இரேவதி ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டேகால் நாள் ஆடாகிய மேடத்துக்குரியவாதலின், கார்த்திகையின் முதற் காலை “ஆடியல் அழற் குட்டம்” என்றார்.

பரணி என்பது மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது. இம் மூன்றும் அடுப்புப் போன்றிருப்பதால் பரணி (அடுப்பு) எனப் பெயர் பெற்றது.

அசுவினி என்பது குதிரையின் தலைபோல உள்ள ஆறு நட்சத்திரங்கள். அசுவம் – குதிரை.

மகம் என்னும் உடுக்கள் (நட்சத்திரங்கள்) கூட்டத்தின் வடிவமைப்பு குளத்தின் கரை போன்று இருந்தது எனப் பொருந்த உரைத்துள்ளனர்.

அனுட்டம் என்பது ஆறு மீன்களின் தொகுதி. அது வளைந்த பனைமரம் போல் அமைதலின் ‘முடப் பனையம்” எனப்பட்டது.

வேர்முதலா                         – அடியின் வெள்ளி அஃதாவது முதல் நாண்மீன்
உயரழுவம்                            – முதற் பதினைந்து நாள்
தலை நாண்மீன்                  – உத்தரநாள்
நிலை நாண்மீன்                  – எட்டாம் மீன்
உச்சி மீனுக்கு முன் எட்டாவது மீன் அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு. “உச்சி மீனுக்கு எட்டாம் மீன் உதய மீன்” என்ப.
தொன்னாண் மீன்              – எட்டாம் மீனாகிய மிருகசீரிடம்
கயக்குளம் புனர்பூசம். இது குளம் போலும் வடிவுடையது. இதனால் புனர்பூசத்தை கயம், குளம், ஏரி என்னும் பெயரிட்டும் அழைக்கப்பட்டது.
பாசி – கிழக்குத் திசை
ஊசி – வடக்குத் திசை

பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழின் இராச பீடை என்பர்.

நல்லநாள் கெட்டநாள் பார்க்கும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடம் இருந்தது. வானத்து விண் மீன்களையும், கோள்களையும் கொண்டே நல்ல நாள் கெட்ட நாள்களைக் கண்டறிந்தனர். நல்ல நாளில் திருமணம் செய்யும் வழக்கமும் இருந்தது.

மைப்புறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப் புணர்ந்து இனிய வாகத் தௌ;ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகடீர் கூட்டத்துக்;
கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
…..………………………………………………………..              (அகநானூறு 136)
“செம்மறியாட்டின் பின் சந்தினை ஆக்கிய கறியொடு நெய்யாளாய வெளிய சோற்றினை இவ் அளவினதென்று கூறப்படாத வண்மையுடனே ஆன்றோரை விரும்பியளித்து வண்டுகள்  வந்து கூடி இனிய இசையெழுப்ப, அழகிய இடமகன்ற ஆகாயம் விளக்கமடையத் திங்கள் உரோகிணியிற் சேர்தலால் தெளிந்த ஒளியுடைய குற்றம் தீரும் கூடுதலுடைய நாளிலே காவலையுடைய மாளிகையை அலங்கரித்து வழிபடு கடவுளை வணங்கி, மார்ச்சனை அமைந்த குடமுழவும், மத்தளமும் பருத்த பலவாச்சியமும் ஒலிப்ப வதுவை நிமித்தமாக அலங்கரிக்கப் பெற்ற பெண்கள் விருப்புற்றுப் ……………………………………………..”

கன்னிப் பெண்கள் தை நீராடுமாறு வைகை ஆற்றில் வெள்ளம் வந்தததைப் பாடுகிற ஆசிரியர் நல்லந்துவனார் தாம் பாடிய பரிபாடலில் (பாடல் 11) அவ் வெள்ளம்  அசுவினி முதலான இருபத்தேழு நாண்மீன்களுள் ஒவ்வோர் இரண்டேகால் நாள்களையும் உள்ளடக்கிய மேடராசி முதலிய வீடுகள் பன்னிரண்டுள் நந்நான்கு வீடுகளைப் பிரிந்து, ஒன்பதொன்பது நாண்மீன்கள் அடங்கிய மூவகை வீதிகளையுடைய இராசி மண்டிலத்தில், வெள்ளியாகிய சுக்கிரன் இடபத்திலும் செவ்வாய் மேடத்திலும் புதன் மிதுனத்திலும் ஆதித்தன் சிம்மத்திலும் வியாழனாகிய குரு மீனத்திலும் திங்களும் சனியும் இராகும் மகரத்திலும் கேது கடகத்திலும் செல்லக்கூடிய ஆவணித் திங்கள் அவிட்டநாளில் திங்களை இராகு தீண்டுகிற கிரகணம் நேருமாயின் மழைபெய்யுமென்ற வானியல் விதிப்படி கோள்கள் கூடினமையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வைகையில் வெள்ளம் புரண்டது என்று சொல்லப்பட்டுள்ளது.

நாள்களின் பெருக்கம் திங்கள், திங்களின் பெருக்கம் யாண்டு, யாண்டுகளின் பெருக்கம் ஊழி என தமிழர் கணித்தனர். “நின் நாள், திங்கள் அனையவாக, திங்கள் யாண்டோரனைய வாக, யாண்டே ஊழி அனையவாக” (பதிற்றுப்பத்து 90)

சங்க காலத் தமிழர் நாளின் பெருக்கமான “திங்களையும்” அத் திங்கள் சிலவற்றின் பெயர்களையும் அறிந்திருந்தனர். சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்களின் பெயர்களும் இடம்பெறவில்லை.

“வைகல், எண்தேர் செய்யும் தச்சன், திங்கள் வலித்த கால் (புறம் 87)

“தைஇத் திங்கள்” (நற்றிணை 80, குறுந்;தொகை 196, புறம் 70)

“நோன்பியர் தை ஊன் இருக்கை” ( நற்றிணை 22)

“தண்பொழில் பங்குனி முயக்கம்” (அகம் 137)

“ஆடித்திங்கள் பேரிருட் பக்கம் (சிலப்பு – கட்டுரைகாதை 133)

“பங்குனி உயர் அழுவத்துத்” (புறம் 229)  கார்த்திகைத் திங்கள் களவழி நாற்பது (17) கார் நாற்பது (26) பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மாதம் என்பது வடமொழிச் சொல், திங்கள் என்பதே தமிழ்ச் சொல். மாதம் தமிழ்ச் சொல் என்று கூறுவோரும் உளர். வருஷம் வடசொல், ஆண்டு என்பதே தமிழ்ச் சொல். ஆண்டு, யாண்டு என்று திரிந்தது. அதே போல் நட்சத்திரம் வட சொல். விண்மீன் அல்லது நாண்மீன் தமிழ்ச் சொல்.

தொல்காப்பியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சி ஆகியவற்றில் மட்டுமே “திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன” எனக் குறிப்பிடுகிறார். இப்போதுள்ள திங்கள்களின் பெயர்களும் இகர அல்லது ஐகார ஈற்றில் முடிவதால் அவர் காலந்தொட்டே இப்போதுள்ள திங்கட் பெயர்கள் வழக்கில் இருந்து வந்திருக்கிறன எனத் தெரிகிறது. இவை வடமொழி மாதங்களது பெயர்களோடு ஒத்ததாக இருப்பதும் மனங்கொள்ளத்தக்கது.

தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணை இயலில் பெரும்பொழுதை வகுத்துக் கூறியவர் நாள்களின் பெயர்களையோ திங்களின் பெயர்களையோ குறிப்பிடவில்லை.

தொல்காப்பியப் பொருளதிகாரம் பொழுதைச்  சிறுபொழுது பெரும்பொழுது எனப் பகுத்துப் பேசுகிறது.

சிறுபொழுது
காலை                    6 – 10 மணிவரை
நண்பகல்            10 – 02 மணிவரை
ஏற்பாடு                 2 – 06 மணிவரை
மாலை                   6 – 10 மணிவரை
யாமம்                 10 – 02 மணிவரை
வைகறை (விடியல்)    02 – 06 மணிவரை

ஒரு நாழிகை                   –   24 மணித்துளி
இரண்டரை நாழிகை    –  ஒரு மணித்தியாலம்.
அறுபது  நாழிகை          –   ஒரு நாள்.

தொல்காப்பிய எழுத்திலக்கணம் நுண்ணிய கால அளவைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மாத்திரை என்பது ஒரு ஒலி அளவு. இயல்பாக ஒருவன் கண்ணிமைக்கிற பொழுதும், கை நொடிக்கிற பொழுதும் எடுத்துக் கொள்ளும் கால அளவு. இது இன்றைய விநாடி அளவாகும். குறில் எழுத்தை ஒலிக்க 1 மாத்திரையும் ஒற்று எழுத்துக்கள் குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம் ஒலிக்க ½ மாத்திரையும் மகரக்குறுக்கம் மற்றும் ஆய்தக் குறுக்கம் ஒலிக்க ¼ மாத்திரையும் எடுக்கும்.

பெரும்பொழுது

இளவேனில்     –  சித்திரை, வைகாசி
முதுவேனில்    –  ஆனி, ஆடி
கார்                     –  ஆவணி, புரட்டாதி,
கூதிர்                  – அய்ப்பசி, கார்த்திகை
முன்பனி           – மார்கழி, தை
பின்பனி          –  மாசி, பங்குனி

இந்தப் பகுப்பு நூலுக்கு நூல் வேறுபடுகிறது. இப்பொழுது கார் காலம் அய்ப்பசி கார்த்திகைத் திங்கள்களில் இடம்பெறுகிறது. அவ்வாறே ஏனைய பெரும் பொழுதுகளின் காலமும் மாறுபடுகிறன. முன்னர் கூறிய அயனாம்ச வேறுபாடே இதற்குக் காரணமாகும்.

தமிழர்கள் தைத் திங்கள் முதல் நாளை தங்கள் ஆண்டின் துவக்கமாகக் கொண்டனர் எனத் தெரிகிறது. தைத் திங்கள் முதல் நாள் (சனவரி 14) ஞாயிறு தனது தென்திசைச் செலவை முடித்துக் கொண்டு வடதிசை நோக்கிச் செல்கிறது. எனவே ஞாயிறு, மகர ஓரையில் (23½ பாகை தெற்கு) தோன்றி வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கும் நாளையே தமிழர்கள் தங்கள் ஆண்டின் துவக்கமாகக் கொண்டிருந்தனர்.

நிலாவின் வளர்பிறை தேய்பிறை

உவவுமதி (பூரணை) நாளில் புவியின் ஒருபுறம் ஞாயிறும், மறுபுறம் 180 பாகையில் திங்களும் எதிரெதிரே நிற்கும் என்பது பண்டைய தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது. திங்கள் தோன்றும்பொழுது ஞாயிறு மறையும் என்பதனை,

உவவுத் தலை வந்த பெரு நாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு……          (புறம் 65)

“முழுமதி வந்து கூடிய பெரிய நாளாகிய பொழுதின் கண் ஞாயிறும் திங்களுமாகிய இரு சுடரும் தம்முள் எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒரு சுடர் புல்லிய மாலைப் பொழுதின்கண் மலைக்குள் மறைந்தாற்போல” என்பது இதன் பொருளாகும். எட்டாம் நாள் பிறைநிலவை “எண்ணாள் திங்கள்” என்றும்,முழுமதி”உவவுமதி” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாமே ஒளிவிடும் மீன்கள் நாண்மீன்கள் என்றும், ஞாயிற்றிடமிருந்து பிறக்கும் ஒளியினால் ஒளிரும் கோள்கள் கோள்மீன்கள் எனவும் அழைக்கப்பட்டன.

கோள் மீன்களின் நிறம் தமிழர்க்கு தெரிந்து இருந்தது. செந்நிறமுடைய கோளை செவ்வாய் என்றும், வெண்ணிறமுடைய கோளை வெள்ளி என்றும், கரிய நிறமுடைய கோளை சனி என்றும் (சனி கரியநிறம் என்பது பிழையான முடிவு) பெயரிட்டனர். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அன்றைய ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்ததாகக் குறிப்பிடுகிறார். இப்படிக் கணக்கிடும் முறை கிமு 500 ஆண்டுக்கு முன் இருந்ததாகக் கூறப்படுகிறது.


சோதிடப் புரட்டு (47)
ஓரைகளும் விண்மீன் கூட்டங்களும்

விண்மீன்களையும் நிலவையும் நிலவின் ஓட்டத்தையும் ஒருங்கிணைத்துத் தமிழர்கள் அதனை ஒரு திங்கள் (மாதம்) என்றார்கள். அதே போல் ஞாயிறு செல்லும் பாதையையும் ஓட்டத்தையும் கணக்கிட்டு ஆண்டுக் கணக்கினை உருவாக்கினர்.  ஓரை (இராசி) வட்டத்தை (Zodiac) 12 ஆகப் பிரித்து ஒவ்வொரு ஓரைக்கும் 2¼ விண்மீன் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர். Zodiac என்ற கிரேக்கமொழிச் சொல்லுக்கு விலங்குக் கூட்டம் என்பது பொருளாகும்.

1) ஆடு                     – புரவி, அடுப்பு, ஆரல் (முதலாம் கால்)
2) மாடு                    – ஆரல் (2-4 ஆம் கால்) சகடு, மான்தலை (1-2 ஆம் கால்)
3) இரட்டையர்     – மான்தலை (3-4 ஆம் கால்) மூதிரை, கழை (முதலாம் கால்)
4) நண்டு                – கழை (2-4 ஆம் கால்) கொடிறு, அரவு
5) சிங்கம்              – கொடுநுகம், கணை, உத்தரம் (முதலாம் கால்)
6) கன்னி                – உத்தரம் (2-4 ஆம் கால்) கை, அறுவை (1-2 ஆம் கால்)
7) எடைக்கோல் –  அறுவை (1-2 ஆம் கால்) விளக்கு, முறம் (1-3 ஆம் கால்)
8) தேள்                   –  முறம்  (4 ஆம் கால்) பனை, துளங்கொளி
9) வில்                   –  குருகு, முற்குளம், கடைக்குளம்; (முதலாம் கால்)
10) மகமீன்           – கடைக்குளம் (2-4ஆம் கால்) முக்கோல், காக்கை (முதலாம் கால்)
11) குடம்               – காக்கை (2-4ஆம் கால்) செக்கு,  நாழி (1-3ஆம் கால்)
12) மீன்                  – நாழி (நாலாம் கால்) முரசு, தோணி

ஓரை மற்றும் விண் மீன்களைப் பொறுத்தளவில் இந்திய வானியல் (சோதிடம்) பகுப்பும் தமிழர்களது வானியல் (கணியம்) பகுப்பும் ஒத்து இருப்பதைக் காணலாம். ஓரையைப் பொறுத்தளவில் அவை கிரேக்கர், பபிலோனியரது பகுப்பை ஒத்திருக்கின்றன.

Image result for phases of moon

தமிழர்களதும் இந்தியர்களதும் மேலை நாள்டினரதும் கிழமை நாள்கள் பொருளில் பெருமளவு ஒத்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

தமிழ்                    இந்தியா                        மேற்குநாடு

ஞாயிறு               சூரியவார்                    Sunday
திங்கள்                சோமவார்                    Monday
செவ்வாய்          மங்களவார்                 Tuesday
அறிவன் (புதன்)   புதன்வார்                 Wednesday
வியாழன்            குருவார்                       Thursady
வெள்ளி              சுக்கிரவார்                    Friday
காரி (சனி)         சனிவார்                         Saturday
திங்கள்               சந்திரவார்                      Monday

நிலவு வளர்ந்து வளர்ந்து நிறைவாகிப் பின் தேய்ந்து தேய்ந்து மறைந்து பின்னர் தோன்றுவதற்கு 30 நாள்கள் ஆகின்றன. இப்படி நிலவு ஒரு சுற்று வளர்ந்து தேய்ந்து நிறைகின்ற காலத்தை தமிழர்கள் திங்கள் என்று அழைத்தனர். பவுணர்மி என்பது உவவுமதி தோன்றியது முதல் மறைநிலவு (அமாவாசை) வரையுள்ள 15 நாள்கள் தேய்பிறை என அழைக்கப்பட்டது. மறைநிலவு முதல் முழுநிலவு உள்ள 15 நாள்கள் வளர்பிறை என அழைக்கப்பட்டது. பிரதமை முதல் சதுர்த்தசி வரை உள்ள திதி நாள்களை தமிழர்கள் முதலாம் பிறை இரண்டாம் பிறை மூன்றாம் பிறை என அழைத்தனர்.

                           பன்னிரு ஓரைகள் (பன்னிரு இராசிகள்)

தமிழ்

வடமொழி இலத்தீன் உருவம்

மாதம்

மேடம் மேஷம் Aries ஆடு சித்திரை
விடை ரிஷபம் Taurus மாடு வைகாசி
ஆடவை மிதுனம் Gemini இரட்டையர் ஆனி
கடகம் கர்க்கடகம் Cancer நண்டு ஆடி
மடங்கல் சிம்மம் Leo சிங்கம் ஆவணி
கன்னி கன்னி Virgo கன்னி புரட்டாதி
துலை துலாம் Libra எடைக்கோல் அய்ப்பசி
நளி விருச்சிகம் Scorpion தேள் கார்த்திகை
சிலை தனுசு Sagitarius வில் மார்கழி
சுறவம் மகரம் Capricorn சுறாமீன தை
கும்பம் கும்பம் Acquarius குடம் மாசி
மீனம் மீனம் Pisces மீன் பங்குனி

Image result for zodiac signs

தமிழர்களின் ஆண்டு சுறவத்தில் (தையில்) தொடங்கி சிலையில் (மார்கழியில்) முடிந்தது. தமிழர்கள் பிற பண்பாட்டுப் படையெடுப்பால் ஆண்டைச் சித்திரையில் தொடங்கி பங்குனிக்குக் கொண்டு சென்று விட்டார்கள். ஞாயிறு தைத் திங்கள் முதல்நாள்தான் சுறவுப் பாதையில் (மகரரேகை) தோன்றி வடக்கு நோக்கி நகருகிறது. அதுவே தமிழரின் ஆண்டுத் தொடக்கமாகும். தமிழர்களுக்குத் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டாகும். சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதை கைவிட்டு தை முதல் நாளைப் புத்தாண்டாகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும்.

இப்பொழுதுள்ள 60 ஆண்டுகள் வியாழன் இராசி வட்டத்தை அய்ந்து முறை சுற்றி வருதலாகிய காலத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகிறது. அது தமிழர்க்கே உரித்தானது என்றும், ஆரியருக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாயின் பிரபவ தொடங்கி அட்சய வரை உள்ள ஆண்டுகளின் பெயர்கள் யாவும் வடமொழியில் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஊர்ப்பெயர்கள், கடவுளர் பெயர்கள், பண்களின் பெயர்களை ஆரியர்கள் வடமொழிமயப் படுத்தியதுபோல ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழிமயப்படுத்தி விட்டார்களா?

மரைக்காடு வேதாரணியம் (மரை, மறை எனப் பிழையாக மொழிபெயர்க்கப்பட்டது) என்றும், மயிலாடுதுறை மாயூரம் என்றும் மாமல்லபுரம் மாபலிபுரம் என்றும் கீரிமலை நகுலேஸ்வரம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது போல தமிழ் ஆண்டுகளின் பெயர்களும் வடமொழிமயப்படுத்தப் பட்டிருக்கலாம்.

பஞ்சாங்கத்தில் அந்தந்த ஆண்டுக்குரிய பலன் சொல்லப்படும். எடுத்துக்காட்டாக சுபானு ஆண்டுப் பலன் வாக்கிய பஞ்சாங்கததில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

சொன்னேன் சுபாதனிற் றோன்று மழை கொஞ்சமாம்
பின்னே விளைவு பெருகாது – மன்னேதுன்
மத்திமக்கோ ளுண்டா மடியுநாற் காற்சீவன்
சற்றுஞ் சுகமில்லைத் தான்.             (வாக்கிய பஞ்சாங்கம் – பக்கம் 33)

சுபானு ஆண்டுப் பிறப்புக்குச் சாதகமும் கணிக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆண்டுப்பலன் ஒருபோதும் மாறுவதில்லை! எங்கள் ஊரில் குடு குடுப்பைக்காரன் ‘நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! ஜெக்கம்மா அய்யா (அம்மா) வுக்கு நல்ல குறி சொல்லு! அய்யா (அம்மா)வை பிடித்த தோசம் எல்லாம்  தொலையுது தனம், தானியம் பெருகுது….. என்று வீடு வீடாக ஒரே மாதிரி மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல ’சுபானு ஆண்டுக்கு (2003-2004) சொல்லப்பட்ட பலன் 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுபானு ஆண்டு (2063-2064) பிறக்கும் போது அதற்கும் அதே பலன்தான் சொல்லப்படும்! அதாவது மழை கொஞ்சம், விளைவு (பஞ்சாங்கத்தில் விழைவு என்று பிழையாக எழுதப் பட்டுள்ளது) பெருகாது என்று சொல்லப்படும்! சோதிடப் புரட்டுக்கு இதுவும் நல்ல சான்றாகும்!

கிழமையின் பெயர்கள் திருநாவுக்கரசர் (கிபி 7 ஆம் நூற்றாண்டு) பாடிய கோளறு பதிகத்தில்தான் முதல்முறையாக வரிசையாகச் சொல்லப்படுகிறது. “ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டுமுடனே…..’  என்பது கோளறு பதிகத்தில் வருகிற தேவார வரிகள் ஆகும்.

தொல்காப்பியர் எழுத்ததிகாரம் குற்றியலுகரப் புணரியல் தொடர்பான சூத்திரங்களில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம், ஒன்பதினாயிரம், நூறாயிரம் எனும் எண்ணுப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்.

திருவள்ளுவர் “இரவாமை கோடி உறும்” (குறள் 1061) “அடுக்கிய கோடி பெறினும்” (குறள் 954, 1005) “பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெய்வோர் எழுபது கோடி உறும்” ( குறள் 639)

கோடி தமிழில் பக்திநெறிக் காலமெனக் கூறப்படும் கிபி 7ஆம் 8 ஆம் நூற்றாண்டுவரை நூறாயிரம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர்தான் இலட்சம் என்ற வட  சொல் புகுந்து கொண்டது.

கிபி 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மணிமேகலையில் சேரன் செங்குட்டுவனை மலைவாழ் மக்கள் வாழ்த்துவதை ‘ஏழ்பிறப்படியேம் வாழ்க நின் கொற்றம் …………………..பன்னூறாயிரத்தாண்டு வாழியர்‘ எனக் குறிப்பிடுகிறது.

உறைசேரும் எண்பத்தி நான்கு நூறாயிரம் யோனி பேதம்…‘  என கிபி 7ஆம் 8 ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறது. இவற்றைப் பார்க்கும் பொழுது ஆயிரம் என்பது தமிழ்ச் சொல் என்பது மட்டுமல்ல தமிழில் பத்தின் தசம பண்பு வெளிப்படும் விதத்தில் அமைந்திருக்கிறது எனலாம்.

ஆரியப்பட்டர் (கிபி 476-550) பை யின் பெறுமதியை 3.1416 எனக் கொடுத்தார் என்பதை முன்னர் பார்த்தோம். ஆனால் இதனை அவர் 6,2832/20,000 என்ற பின்னமாகவே கொடுத்திருக்கிறார். இதனால் பதிம (தசம) முறை அவர் காலத்தில் இருக்கவில்லை எனத் தெரிகிறது.

கிமு 3 ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த காக்கைபாடினியார் என்ற பெண்;பால் புலவர் ஒரு வட்டத்தின் பரப்பளவை தாம் எழுதிய காக்கைபாடினீயம் என்ற நூலில் ஒரு சூத்திரமாகக் கொடுத்துள்ளார். இந்த நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. சில சூத்திரங்களே கிடைத்துள்ளன.

வட்டத்தரை கொண்டு விட்டத்தரை
தாக்கின் சட்டென்று தெரியும் குழி

அதாவது வட்டப்பகுதியின் அரைப்பங்கு நீளத்தை விட்டத்தின் அரைப்பங்கு நீளத்தால் பெருக்கினால் வட்டத்தின் பரப்புப் பெறப்படும். வட்டத்தின் அரைப்பங்கை விட்டத்தின் அரைப்பங்கு நீளத்தால் பிரித்தால் பை யின் பெறுமானம் கிடைக்கும். ஒரு பெருக்கல் செய்கையை தனியே எழுத்தில் கொடுக்க முடியாது. அதற்கு எண்ணும் தேவை. எனவே எண்களைக் குறிக்கும் குறியீடுகள் கிமு சில நூற்றாண்டு முன்னரே தமிழில் ஏற்பட்டிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.

ஆரியப்பட்டர் பிரித்தலாகக் கொடுத்ததை அவருக்குத் தொளாயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்த காக்கைபாடினியார் பெருக்கலாகக் கொடுத்துள்ளார். இந்தப் பையின் பெறுமதியை முதலில் கண்டவர் ஆர்கிமீடிஸ் (யுசஉhiஅநனநள) என்ற கிரேக்கர்ஆவார். இவர் காலம் கிமு 285-212 ஆகும்.

எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்ற நால்வகை அளவை தமிழர்க்குத் தெரிந்திருந்தது. எண்ணுப் பெயர்கள் சிற்றிலக்கம் (கீழ்வாயிலக்கம்) பேரிலக்கம் (மேல்வாய்யிலக்கம்) என இருவகைப்படும். ஒன்றுக்குக் கீழ்ப்பட்டது சிற்றிலக்கம் ஒன்றுக்கு மேற்பட்டது பேரிலக்கம் எனப் பட்டன.

கீழ்வாய்ச் சிற்றிலக்கம்

தேர்த்துக்கள்                        – 1/2,3238245,3022720,0000000
இம்மி                                       – 1/2150400
கீழ் முந்திரி                          –  1/102700
கீழ்க் காணி                          – 1/25600
கீழ் மா                                    – 1/6400
கீழ் வீசம் அல்லது
கீழ் மாகாணி                        – 1/5120
கீழ் அரைக்கால்                  – 1/2560
கீழ்க்கால்                              –  1/1280
கீழரை                                   –   1/640
முந்திரி (முந்திரை)           – 1/320

அரைக் காணி                 – 1/160
காணி                                 – 1/80
கால் வீசம்                       – 1/64
அரை மா                          – 1/40
அரை வீசம்                     – 1/32
ஒரு மா                            – 1/20
இரு மா                            – 1/10
நான் மா                          – 1/5
மாகாணி, வீசம்            – 1/16
அரைக்கால்                   – 1/8
கால்                                  – 1/4
அரை                                – 1/2
முக்கால்                          – ¾

முந்திரி எனும் சிறிய பின்னத்திலிருந்து மேலும் சிறிய பின்னப் பெறு மானங்கள் பெறப்பட்டன. முந்திரியின் ஏழில் ஒருபங்கு இம்மி, இம்மியில் ஏழில் ஒருபங்கு அணு, அணுவில் பதினொன்றில் ஒருபங்கு மும்மி, மும்மியின் ஒன்பதில் ஒருபங்கு குனம் எனக் குறிக்கப்பட்டன.

பேரிலக்கம்

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம், இலக்கம் (நூறாயிரம்), ஒரு கோடி என எண்ணத் தெரிந்திருந்தனர்.

கும்பம்              –  ஆயிரம் கோடி
கணிகம்          –    பத்தாயிரம் கோடி
தாமரை           –    கோடா கோடி
வாரணம்        –    நூறுகோடா கோடி
பரதம்               –   இலக்கம் கோடிக் கோடா கோடி

“நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறியீட்டம் கழிப்பிய வழிமுறை……”  (பரிபாடல் 2)

நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம் (தாமரை) வெள்ளம் போன்ற எண்ணுப் பெயர்கள் பேரிலங்கங்களை குறித்தனவாகும்.

கிரேக்கர்களோடு ஒப்பிடும் பொழுது தமிழர்களது வானியல் அறிவும் கணித அறிவும் குறிப்பிடத்தக்கவாறு இல்லை என்பது கசப்பான உண்மை ஆகும். அதனை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். கோள்கள், கோள்களின் தொலைவு, கோள்களின் அசைவு, கோள்களின் ஓட்டம், புவியின் விட்டம், கிரகணங்கள் ஆகியவைபற்றித் தமிழர்கள் விரிவாகவும் திருத்தமாகவும் ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை. செய்திருந்தாலும் அவை இன்று கிடைத்திலது.                                                                                    நிலாமறைப்பு

Image result for lunar eclipse

புறநானூற்றுப் பாடல் (260) இல் “வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையேயிற் றுய்ந்த ……” என வரும் அடிகளில் பாம்பினது கூரிய பற்களின்றும் பிழைத்துப் போன திங்களைப் (சந்திரன்) பற்றிய குறிப்பு வருகிறது. இது பண்டைய தமிழர்களிடத்தும் நிலா மறைப்புக் காலத்தில் (கிரகணம்) பாம்பு அதனைக் கவ்வுகிறது என்ற மூடநம்பிக்கை குடிகொண்ருந்ததைக் காட்டுகிறது.

சங்க காலத் தமிழர்களுக்கு இருந்த வானியல் பற்றிய அறிவு அதன் பின்னர்  வந்த தலைமுறையினரால் மேம்படுத்தப் படவில்லை. பிற் காலத்தில் கோள்களைப் பற்றி ஆராய்வதற்குப் பதில் அவற்றுக்குத் தெய்வீகம் கற்பிக்கப்பட்டு கோயில்களில் வழிபாடு செய்யப்பட்டன.

சூரியன், சந்திரன், சனி, இராகு, கேது ஆகிய கோள்களுக்குத் தனிக் கோயில்கள் கட்டப்பட்டன. “எல்லாம் விதி” “கடவுள் விட்ட வழி” என்ற ஆரியர்களின் வெட்டி வேதாந்தத்தில் தமிழர் மதியிழந்து குட்டிச்சுவராயினர். இந்த அவல நிலை இன்றும் தொடர்கிறது.


சோதிடப் புரட்டு (48)

கோள்களுக்கும் பிறக்கும் குழந்தைக்கும் உள்ள முடிச்சு எது?

மேலே பண்டைய கிரேக்கம், இந்தியா, தமிழகம் போன்ற நாடுகளின் வானியல் தோற்றம் வளர்ச்சி பற்றிப் பார்த்தோம்.

பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டுவரை, அதாவது கோபெர்னிக்கஸ் மற்றும் கலிலியோ போன்ற அறிவியலாளர்களது காலத்துக்கு முன்னர், வானியல் தனித்த ஒரு இயலாகத்  தோற்றம் பெறவில்லை. வானியலும் சோதிடமும் ஒன்றாகவே பார்க்கப்பட்டன. தொலமி வானியல் பற்றியும் சோதிடம் பற்றியும் தனித் தனி நூல்கள் எழுதினார்.

வானியலுக்கும் சோதிடத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமை பற்றி முன்னர் விரிவாக எழுதியுள்ளேன். வானியல் அண்டத்தில் காணப்படும் எண்ணிறந்த விண்மீன்கள், வால் மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், பால்மண்டலங்கள் போன்றவற்றின் தன்மை, அமைப்பு, இருக்கை, அசைவு பற்றிக் கணக்கியல் மற்றும் இயற்பியல் அடிப்படையில் இடைவிடாது ஆய்வு செய்து அதன் பெறுபேறுகளை விதிகளாக வகுத்துள்ளது.

இதற்கு மாறாகச் சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கிறன என்று சொல்லுகிறது. இதனை அறிவியல் அடிப்படையில் எண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.

சோதிடம் ஒரு போலி அறிவியல் என்பதை அவ்வப்பொழுது தக்க சான்றுகளோடு எண்பித்து வந்திருக்கிறேன். அவற்றைச் சுருக்கமாக மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன.

2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யூரேனஸ் மற்றும்  புளுட்டோ  கோள்களை கணக்கில் எடுக்கிறது. ஆனால்  கேது கோள்களையும் 27 நட்சத்திரங்களையும் கணக்கில் எடுப்பதில்லை.

3) இந்திய சோதிடம் நெப்தியூன், யுறேனஸ், புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இராகு கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.

4) சோதிடம் ஞாயிறு குடும்பத்தின் மையம் புவி என்று சொல்வது பெரிய மடமை. அதன்  மையம் ஞாயிறு என்பது இன்று அறிவியல் பால பாடம்.

5) சோதிடம் ஞாயிறு போன்ற விண்மீனையும் நிலா போன்ற துணைக் கோளையும் கோள்களாகவே கொள்கிறது.

6) இராசி மண்டலத்தை 12 ஆகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் 30 பாகை கொண்ட வீட்டுக்குள் அடைப்பது செயற்கை ஆனது. அப்படிப் பிரிக்கப்படுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. அது முற்றிலும் விதிக் கட்டுப்பாடின்றி மனம் போன போக்கில் வகுக்கப் பட்டதாகும்.

7) இராசி உருவங்கள் (மேடம், இடபம்…) வெறும் கண்காட்சியை அடிப்படையாகக் கொண்டது. வெவ்வேறு தொலைவில் கூட்டமாக இருக்கும் நட்சத்திரங்கள் பண்டைய மனிதனுக்கு ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்ற தோற்ற மயக்கத்தைக் கொடுத்தன. அந்தத் தோற்றத்தை வைத்து அந்த இராசிகளுக்கு உண்மையான ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்றவற்றின் குணாம்சங்களை மாட்டேற்றினர்! அறிவியல் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் அறிவிலிகளான சோதிடர்கள் தங்கள் மூடத்தனத்தைக் கைவிடாது தொடர்ந்து சோதிடத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்து
வருகின்றனர். கரடி விண்மீன்குழு

8) சோதிடத்தில் ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் இடம் முக்கியமானது. ஆனால்  குழந்தையின் பிறப்பு என்னும் பொழுது அது குழந்தை கருவறையில் இருக்கும் பொழுது உயிர் ஏற்பட்ட நேரமா?  பிறக்கும் பொழுது தலை வெளியில் தெரிந்த நேரமா? கால் தரையில் படும் நேரமா? மருத்துவிச்சி கையில் எடுத்த நேரமா? தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நேரமா? மருத்துவர் வயிற்றை அறுத்து எடுத்த நேரமா? குழந்தையின் முதல் மூச்சா? அல்லது அழுகையா? இதில் எது என்பதில் சோதிடர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. இரண்டொரு மணித்துளி நேர வித்தியாசம் ஒரு குழந்தை பிறக்கும் சமயத்தில் அடிவானத்தில் எழுகின்ற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இலக்கினம், சந்திரன் நின்ற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இராசி, பிறப்புக் காலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இடம்பெற்று இருந்ததோ அந்தப் பிறப்பு (ஜென்ம) நட்சத்திரம் ஆகியவை  வேறு வேறாக மாற்றி விட வாய்ப்பு இருக்கிறது. வடமீன்குழு

9) புவி தன்னைத்தானே தனது அச்சில் சுற்றும்பொழுது தளம்பல் (wobble) ஏற்படுகிறது. அதனால் ஞாயிறு தனது பயணத்தில் புவியின் நடுக்கோட்டை கடக்கும் பொழுது முந்திய ஆண்டைவிட மறு ஆண்டு சற்று மேற்கு நோக்கிக் கடக்கிறது. இந்த வேறுபாட்டை வெப்ப மண்டல சோதிடம் கணக்கில் எடுப்பதில்லை. இரண்டுக்கும் இடையிலான இந்த வேறுபாடு இன்று 24 பாகையை (24 நாள்களை)  எட்டி இருக்கிறது.

(10) ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கோள்கள், இராசிகள் மற்றும் விண்மீன்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்றால் அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? பல கோடி கல் அப்பால் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? ஆம் என்றால் அந்தக் குழந்தைக்கு அண்மையில் உள்ள பருப்பொருட்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசை ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை?
(சிம்ம இராசி)

(11) புவியின் நடுக்கோட்டுக்கு அணிமித்த நிலப் பகுதிகளிலேயே சோதிட சாத்திரம் தோற்றம் பெற்றது. இதன் தார்ப்பரியம் என்னவென்றால் நடுக்கோட்டுக்கு வடக்கே அலஸ்க்கா, நோர்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதகம் கணிப்பது முடியாத செயலாகும். காரணம் இந்த நாடுகளில் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. சோதிடத்தின் அடித்தளமே இதனால் ஆட்டங்கண்டு விடுகிறது.

(12) மனிதன் பிறந்த புவி;க் கோளையும் அதன் தாக்கத்தையும் சோதிட சாத்திரம் அறவே கணக்கில் எடுப்பதில்லை. புவியும் ஒரு கோள் என்பது சோதிட சாத்திரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதே அதற்கான ஏது ஆகும்.

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை ஈர்ப்பு விசையின் பெறுமதியை (செவ்வாய்க் கோளோடு ஒப்பிடும் பொழுது) காட்டுகிறது. செவ்வாய்க் கோள் விதிக் கட்டுப்பாடின்றித் தெரிவு செய்யப்பட்டது. செவ்வாயோடு ஒப்பிடுவது சோதிடம்; அந்தக் கோளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவே! .

ஈர்ப்பு விசை          ஈர்ப்பு விசையின் பெறுமதி

தாய்                                     20

மருத்துவர்                        06

மருத்துவமனை           500

ஞாயிறு              854,000

நிலா                            4,600

புதன்                               .38

வெள்ளி                          27

செவ்வாய்                       1

வியாழன்                     46

யுறேனஸ்                  0.1

நெப்தியூன்             0.03

ஈர்ப்பு விசை கோள்கள் புவிக்கு அருகில் வரும்பொழுது கணிக்கப்பட்டதாக கொள்ளப்பட்டது. மேலதிகமாக கொள்ளப்பட்ட அனுமானங்கள் (Assumptions).

குழந்தையின் எடை     – 3 கிலோ

தாயின் எடை                – 50 கிலோ

மருத்துவர் எடை       – 75 கிலோ

மருத்துவமனைக் கட்டடத்தின் எடை                                   – 2.1 தர 1012

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை   – 0.1 மீ

மருத்துவருக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை –   0.3 மீ

மருத்துவமனையின் மைய எடைகும் குழந்தைக்கும் இடையில் உள்ள தூரம் – 6.1 மீ

மேலே கொடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் குழந்தை பிறக்கும் பொழுது  தாய், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக் கட்டடம் மூலமாக இடம் பெறும் ஈர்ப்பு விசையின் தாக்கம் (force of gravity  சோதிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் செவ்வாய்க் கோளை விட முறையே 20, 6 மற்றும் 500 மடங்கு கூடுதலாக இருப்பதை நீங்கள் காணலாம். எனவே ஒரு சோதிடர் ஒரு குழந்தையின் சாதகத்தை ஈர்ப்பு விசை அடிப்படையில் தயாரித்தால் கோள்களை மட்டுமல்ல விண்வெளியிலும் மண்ணிலும் காணப்படும் ஏனைய பருப்பொருள்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

ஈர்ப்பு விசை அல்ல அந்த ஆற்றல் மின்காந்த ஆற்றல் (நடநஉவசழ-அயபநெவiஉ நநெசபல)  என்று சோதிடம் சொல்லுமானால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் மீது பருப்பொருட்கள் செலுத்தும் மின்காந்த ஆற்றல் செவ்வாய்க் கோளில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலோடு ஒப்பிடும்பொழுது பின்வருமாறு காணப்படும்.

பருப்பொருள்                               மின்காந்த ஆற்றல்

ஞாயிறு                                                 3 x 109

200 வட்ஸ் மின்குமிழ் (2 மீ தொலைவில்)   9 x 106

முழு நிலா                                                    7,600

புதன்                                                       0.4

வெள்ளி                                                4.4

செவ்வாய்                                            1

வியாழன்                                          0.8

சனி                                                       0.1

யுறேனஸ்                                    .0004

நெப்தியூன்                                .00005

மேலே கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்  200 வட்ஸ் ஆற்றல் உடைய ஒரு மின்குமிழியில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றல் செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கோள்களைவிட பல ஆயிரம் மடங்கு வலுவானது.

குழந்தை பிறக்கும் பொழுது அதனைப் பாதிப்பது கோள்களின் ஈர்ப்பு விசையும் அல்ல மின்காந்த விசையும் அல்ல என்றால் பின் எதுதான் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்பதைச் சோதிடர்கள் தெளிவாக்க வேண்டும். பிறப்பதற்கு முன்னரே முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை  காரணமாக ஒவ்வொரு உயிரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று இந்து மதம் சொல்கிறது!

அது உண்மையென்றால் ஒரு குழந்தையின் பிறப்பின் பொழுது கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் ஆகியவற்றின் இருக்கை முக்கியமற்றுப் போய்விடுகிறது.

சோதிடம் முற்றிலும் பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதற்கு மேலே எடுத்துக் காட்டியவை மேலதிக சான்றுகளாகும்.

வானியல் பற்றிய அறிவு இன்றிருப்பது போல் பண்டைக் காலத்தில் இல்லாததால் சோதிடர்கள் மனம் போன போக்கில் கோள்கள் பற்றியும் இராசிகள் பற்றியும் இராசி வீடுகள் பற்றியும் எழுதி வைத்தார்கள். அப்படி எழுத வைத்ததைப் பெரிய குற்றம் என்று சொல்ல முடியாது.  அன்றைய அறிவு அவர்களுக்கு அந்த மட்டத்தில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய சோதிடர்கள் தொலமி, வராகமிரர் போன்றோர் தங்கள் காலத்தில் எழுதி வைத்ததையே கிளிப்பிள்ளை போல் மனப்பாடம் செய்து அதன் அடிப்படையில் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இது சோதிடர்களின் உச்சகட்டப் புரட்டு ஆகும்.

ஒரு குழந்தையின் நிறம் குணம் உடல் நலம் புத்திக் கூர்மை ஆயுள் பலம் போன்ற குணாம்சம்கள் அந்தக் குழந்தையின் தாய் தந்தை இருவரது மரபுக் குறியே (genetic  code) தீர்மானிக்கின்றன. இதுவே இன்றைய அறிவியலின் முடிந்த முடிபாகும். அடுத்த கிழமை பிரபல சோதிடர்கள் சொன்ன எதிர்கூறல்கள் எப்படிப் பிழைத்துப் போனது என்பது பற்றிப் பார்ப்போம்.


சோதிடப் புரட்டு (49)

இந்தியாவின் கிளி சோதிடர்கள்!

எதிர்வரும் யூன் 8 ஆம் நாள் (2004) வான் வெளியில் ஒரு வியத்தகு காட்சி இடம்பெற உள்ளது. நூற்றி இருப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கும் புவிக்கும் இடையே வெள்ளிக் கோள் புகுந்து ஒரு குறுகிய கால ஞாயிறு கிரகணத்தை ஏற்படுத்த இருக்கிறது. அதாவது வெள்ளிக் கோள் புவிக்கும் ஞாயிற்றுக்கும் இடையே தோன்றி சூரியனை மறைத்துச் செல்லும்.

பொதுவாகப் புவியின் துணைக் கோளான நிலாதான் புவிக்கும் ஞாயிறுக்கும் இடையே வந்து ஆண்டில் இரண்டு அல்லது மூன்று ஞாயிறு கிரகணத்தை ஏற்படுத்துவது வழக்கமாகும்.

ஆனால், வருகிற யூன் 8 ஆம் நாள் நிலாவுக்குப் பதிலாக வெள்ளி இடையில் மு.ப. 5.13 மணிக்குப் புகுந்து முப 11.26 க்கு விலகிச் சென்றுவிடும். புவியில் இருந்து நிலாவைப் பார்த்தால் அது அளவில் ஏறக்குறைய ஞாயிறு போல் இருக்கும். அதனால் கிரகணத்தின் பொழுது நிலா ஞாயிறை முழுதாக மறைத்து விடுகிறது. ஆனால் வெள்ளி ஞாயிறை முன்னால் கடந்து செல்லும் பொழுது ஞாயிறை முழுமையாக மறைக்க இயலாது.

இதற்கு முன்பு இந்த அரிய நிகழ்ச்சி 1882 ஆம் ஆண்டு இடம் பெற்றது. சிறப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு அந்த நாளில் ஞாயிறை நோக்கினால் அதன் மீது கருப்பு வட்டம் ஒன்று படிந்து மெதுவாக ஊர்ந்து செல்வதைக் காண முடியும். அப்பொழுது சூரிய வட்டிலின்  1000 இல் ஒரு பகுதியை மட்டுமே வெள்ளியின் நிழல் மறைக்கும். பின்னர் வெள்ளி படிப்படியாக வெளியேறும் காட்சியைப் பார்க்கலாம்.

கோள்களில் வெள்ளி மட்டுமே இடம் வலமாக (clock-wise) தன்னைத்தானே சுற்றுகிறது. எனவே வெள்ளிக் கோளில் இருந்து பார்த்தால் ஞாயிறு மேற்கில் உதித்து கிழக்கில் படுவதைப் பார்க்கலாம்.

வெள்ளி ஏன் ஞாயிறை முழுதாக மறைப்பதில்லை என்பதற்குரிய காரணம் உங்களுக்குத் தெரியும். வெள்ளி புவிக்கும் ஞாயிறுக்கும் இடையில் உள்ளது.  அளவில் வெள்ளி  புவியை விட சற்றே சிறியது. வெள்ளியின் விட்டம் 12,103.6 கிமீ புவியின் விட்டம் 12,742 கிமீ. நிலாவின் விட்டம் 3,476 கிமீ. நிலாவை விட பரப்பளவில் நான்கு மடங்கு பெரிய வெள்ளி ஞாயிறை முற்றாக மறைக்க முடியாமல் இருப்பதற்குப் புவிக்கும் வெள்ளிக்கும் (40.00 மில்லியன் கிமீ அல்லது 25.00 மில்லியன் கல்) புவிக்கும் நிலாவுக்கும் (384,467கிமீ) இடையில் உள்ள தொலை வேறுபாடே காரணமாகும். வெள்ளி சந்திரனை விட 104 மடங்கு தொலைவில் உள்ளது.

வெள்ளி தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம் 243 புவி  நாள்களாகும்.  ஞாயிறை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் காலம் 225 புவி  நாள்களாகும். வெட்பம் 13-202 பாகை செல்சியஸ் ஆகும். (அதிகாரம் 7)

தமிழ்நாள்டில் இருந்து வெளிவரும் தினகரன் என்ற நாளேடு 2002 ஆம் ஆண்டுக்குப் பிரபல இந்திய சோதிடர்கள் சொல்லிய ஆரூடத்தை வெளியிட்டிருந்தது. அந்தச் செய்திக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு புத்தாண்டு எப்படி இருக்கும்? துணைத் தலைப்பு “இந்தியா-பாகிஸ்தான் போரில் நாடு இரத்தக் காடாகும், பிரபல ஜோதிடர்கள் கணிப்பு’ என்பதாகும்!

சென்னை, சனவரி 2- இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் போர் மூளும். நாடு இரத்தக்காடாகும் என்று ஜோதிடர்கள் புத்தாண்டு பலனைக் கணித்துக் கூறி உள்ளனர்.

2002 ஆம் ஆண்டு இன்று பிறந்தது. இந்தப் புது வருடத்தில் நாள்டில் என்னென்ன நடக்கும்? என்பது பற்றி பிரபல ஜோதிடர்களின் கணிப்பு வெளியாகி உள்ளது. ஜோதிடர்களின் கணிப்பு வருமாறு:

புவனேசுவரம் ஜோதிட பேராசிரியர் நிமய பானர்ஜி

புத்தாண்டின் முதல் பாதி நமது நாள்டுக்கு எல்லா வகையிலும் கஷ்டகாலம். இந்திய – பாகிஸ்தான் உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டு 2002 ஆம் ஆண்டு மத்தியில் முழுமையான போர் வெடிக்கும். மே, யூன் மாதத்தில் சனி-ராகு ஒரே வீட்டுக்கு வருவதும், 5 கிரகங்களின் கோட்சாரமும் நன்றாக இல்லை. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இரு நாள்டுக்கும் பாதகம் ஏற்படும். இது போன்ற காலக்கட்டத்தில் பெரிய நாசமும், இரத்தக்காடாகும் நிலையும் கடந்த காலங்களில் ஏற்பட்டு உள்ளன. எனவே போர் வந்தால் அது இந்தக் கட்டத்தில் ஏற்படும்.

இந்திய- பாகிஸ்தான் உறவு உச்சக் கட்டத்தை எட்டி, சரியாகும். அல்லது 2005 குள் நிலைமை சீரடையும். இதே கால கட்டத்தில் இந்திய நிலப் பகுதியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சர்வதேச அளவிலும் இந்தியாவின் செல்வாக்கு உயரும்.

ஏப்ரில், மே மாதத்தில் பிரதமருக்கு எதிர்க்கட்சியாலும், கூட்டணிக் கட்சிகளாலும் கடும் சோதனை ஏற்படும் சர்வதேச பதட்டமும், வகுப்பு மோதல்களும், இயற்கைப் பேரழிவும் இந்தக் காலத்தில் ஏற்படும். செப்தெம்பர் மத்தியில் இருந்து ஒக்தோபர் மத்திக்குள் இயற்கை சீரழிவு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஆண்டின் மத்தியில் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை அரசுக்கு சிரமத்தை தரும். பருவம் தவறிய மழை, கடும் வறட்சி இரண்டுமே இந்த ஆண்டில் இருக்கும்.

பெங்கர் கே.என் தைவந்த சோமயாஜு

பாரதிய ஜனதா கட்சி தனது அரசியல் ஆதிக்கத்தை உத்திர பிரதேசத்திலும் நாள்டிலும் இழக்கும். காங்கிரஸ் பலம் உயரும். ஆனால் அது சோனியாவுக்கு அரசியல் செல்வாக்கை உயர்த்தாது. உ.பி தேர்தலில் பெரிய அளவில் வன்முறை நடக்கும். இந்தியா தனது எல்லா எல்லையிலும் சோதனையை சந்திக்கும். இந்தியாவும், பாகிஸ்தானும் போரில் ஈடுபடுவது போன்ற நிலை வருட ஆரம்பத்தில் இருக்கும், ஆனால் முழுப் போர் வராது. இராணுவ செலவு கூடும்.

நாடு நல்ல மழையைப் பெறும். விவசாய உற்பத்தி நன்றாக இருக்கும். ஆனால் விவசாயிக்கு இலாபம் வராது. கணினித் தொழிலில் ஸ்திரத் தன்மை ஏற்படும்.

ஆந்திர சோதிடர் தொயட்டி பானுமூர்த்தி

பெரிய விபத்துகள், தீவிரவாதம், போர் பதட்டம் இந்தியாவைப் பாதிக்கும். ஆனால் 3 ஆவது உலகப் போர் வராது. பெப்ரவரி 1 முதல் 2003 ஆம் ஆண்டு மே வரை இந்தியாவுக்கு கடுமையான சோதனை காலம். குழந்தைகளை நோய் தாக்கும். உணவில் விஷம் கலப்பதால் பேராபத்து வரும். நாடு முழுவதும் மக்கள் தொகை பெருமளவில் குறையும். அரசின் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் வெடிக்கும். ஆசிரியர்களும் வேலைநிறுத்தம் செய்வார்கள். நாள்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படும்.

கொச்சி மகாதேவ அய்யர்

இந்த ஆண்டு தொழில் துறைக்கு நல்ல ஆண்டு. மத்திய ஆட்சி தலைமையில் மாற்றம் வரலாம். மே, யூனில் இயற்கைப் பேரழிவு ஏற்படும். யூனுக்குப் பிறகு நிலைமை சீராகும்.

ஒன்பது கோள்கள், 12 இராசிகள், 12 இராசி வீடுகள், 27 நட்சத்திரங்கள், கோள்களின் பெயர்ச்சி போன்றவற்றைக் கணித்துப் பலன் சொல்வதாகச் சோதிடர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பலன்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மட்டுமல்ல ஒன்றுக்கு ஒன்று நேர் எதிர்மாறாகவும் இருக்கின்றன.

‘போர் பதட்டம் இந்தியாவைப் பாதிக்கும் ஆனால் 3 ஆவது உலகப் போர் வராது” என்று ஆந்திர சோதிடர் தொயட்டி பானுமூர்த்தி சொல்ல அதற்கு நேர் எதிர்மாறாகப் புவனேசுவரம் ஜோதிட பேராசிரியர் நிமய பானர்ஜி ‘புத்தாண்டின் முதல் பாதி நமது நாட்டுக்கு எல்லா வகையிலும் கஷ்டகாலம். இந்திய- பாகிஸ்தான் உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டு 2002 ஆம் ஆண்டு மத்தியில் முழுமையான போர் வெடிக்கும்’ என்கிறார்.

இந்தச் சோதிடர்கள் சொல்லிய பலன்களைக் கீழ்க் கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.

1) பொது அறிவின் அல்லது பட்டறிவின் அல்லது புத்திசாலித்தனமான அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டவை.

2) இப்படியும் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என்ற இரண்டும் கெட்டான் மாதிரிச் சொல்லப்பட்டவை.

3) ஒற்றை இரட்டை பார்த்துச் சொல்லப்பட்டவை.

4) முற்றாகப் பிழைத்துப் போன பலன்கள்.

‘யூன் மாதத்தில் இருந்து இயற்கை பேரழிவு ஏற்படும். பருவம் தவறிய மழை, கடும் வறட்சி இரண்டுமே இந்த ஆண்டில் இருக்கும்.

ஏப்ரில், மே மாதத்தில் பிரதமருக்கு எதிர்க்கட்சியாலும், கூட்டணிக் கட்சிகளாலும் கடும் சோதனை ஏற்படும் செப்தெம்பர் மத்தியில் இருந்து ஒக்தோபர் மத்திக்குள் இயற்கைச் சீரழிவு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

புத்தாண்டின் முதல் பாதி நமது நாள்டுக்கு எல்லா வகையிலும் கஷ்டகாலம். கணினித் தொழிலில் ஸ்திரத் தன்மை ஏற்படும்.

சர்வதேச பதட்டமும், வகுப்பு மோதல்களும், இயற்கைப் பேரழிவும் இந்தக் காலத்தில் ஏற்படும். இதே காலக்கட்டத்தில் இந்திய நிலப் பகுதியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சர்வதேச அளவிலும் இந்தியாவின் செல்வாக்கு உயரும்.

உ.பி தேர்தலில் பெரிய அளவில் வன்முறை நடக்கும். இந்தியா தனது எல்லா எல்லையிலும் சோதனையைச் சந்திக்கும். குழந்தைகளுக்கு நோய் தாக்கும். பெரிய விபத்துகள், தீவிரவாதம் தலை தூக்கும், போர்ப் பதட்டம் இருக்கும்.’

இந்திய அரசியல், சமூக, படை நிலவரங்கள் பற்றிச் சராசரி அறிவுள்ள எவரும் மேற்கண்ட ‘பலன்”களை மிக எளிதாகச் சொல்லிவிட முடியும். அதற்குச் சோதிட அறிவு தேவையில்லை. பொது அறிவின் அடிப்படையில் சொல்லிவிடலாம்!

இந்தியாவில் வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை அழிவுகள், வேலை நிறுத்தம், வகுப்பு மோதல்கள், போர்ப் பதட்டம் போன்ற மனித செயல்பாடுகள் இயல்பான நிகழ்வுகள். யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்.

‘இந்தியாவும், பாகிஸ்தானும் போரில் ஈடுபடுவது போன்ற நிலை வருட ஆரம்பத்தில் இருக்கும் ஆனால் முழுப் போர் வராது. ராணுவ செலவு கூடும். போர் மூளுவது போன்ற பதட்டம் நிலவுமே தவிர, பெரிய அளவில் போர் வராது. மத்திய ஆட்சி தலைமையில் மாற்றம்வரலாம். நாடு நல்ல மழையை பெறும். விவசாய உற்பத்தி நன்றாக இருக்கும். ஆனால் விவசாயிக்கு இலாபம் வராது. மத்திய ஆட்சி தலைமையில் மாற்றம் வரலாம். பிரதமர் வாஜ்பாய் அவரது உடல் ஆரோக்கியம் பற்றி ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.’

இப்படிப் பலன் சொல்வது நடக்கும் நடக்காமலும் போகலாம் என்ற இரண்டும் கெட்டான் வகையைச் சார்ந்தவை.

‘இந்திய- பாகிஸ்தான் உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டு 2002 ஆம் ஆண்டு மத்தியில் முழுமையான போர் வெடிக்கும், நாடு முழுவதும் மக்கள்தொகைப் பெருமளவில் குறையும்.’ இவை முற்றாகப் பிழைத்துப் போன எதிர்கூறல்.

‘ஜெயலலிதாவின் கடவுள் பக்தியால் அவர் மீண்டும் முதலமைச்சர் பதவியில் அமருவார். அவருக்குக் குருவின் அனுக்கிரகம் வெகு சிறப்பாக உள்ளது’ என்பது ஒற்றை இரட்டை பார்த்துச் சொல்லப்பட்ட பலன். தேர்தலில் நிற்கும் ஒருவர் ஒன்றில் வெல்ல வேண்டும் அல்லது தோற்க வேண்டும். கொஞ்சம் வெற்றி கொஞ்சம் தோல்வி என்றோ ஒரு பெண் அரைக்கற்பமாக இருக்கிறாள் (hயடக- pசநபயெவெ) என்ற பாணியில் சொல்ல முடியாது.

அது சரி. இந்திய நாட்டுக்கு எப்படிச் சோதிடர்கள் சாதகம் கணிக்கிறார்கள்? இந்தியா எப்பொழுது என்ன இலக்கினத்தில் என்ன இராசியில் பிறந்தது? சோதிடர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை வைத்து (ஆகஸ்ட் 15, நள்ளிரவு 1947) சாதகம் கணிப்பது அறிவியலுக்கு ஒத்துவருமா? இந்தியா குடியரசாகப் பிறந்த நாளை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது? உண்மையில் இந்தச் சோதிடர்களுக்கும் தெருவில் இருந்து கொண்டு கிளி சோதிடம் சொல்கிறவர்களுக்கும் வேறுபாடில்லை.



சோதிடப் புரட்டு (50)

சோதிடர்களை ஏமாற்றும் கிரகங்கள்!

உலக உத்தமர் காந்தியாரின் ஆயுள் பலம் பற்றி திருத்தணி சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் 15-8-1947 அன்று வெளிவந்த பாரத தேவி இதழில் எழுதியிருந்தார். அவர் சொன்ன எதிர்கூறல் என்ன தெரியுமா? அவரது வடமொழிக் கலப்பு நடையிலேயே அதனைத் தருகிறேன்.

“காந்தியடிகள் பிறந்தது சிம்க லக்கினம் மக நட்சத்திரம் விடியற் காலம். மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு தீர்க்காயுள் யோகம் உண்டு. இதே போல் சிம்க லக்னமும் நீண்ட ஆயுள் தரக்கூடியது.

“மேலும் ஜன்ம லக்கினம் சிம்கமாகவும் அதில் சந்திரன் தனித்து இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு தசம கேந்திரத்தில் நின்று லக்னாதி பதியான சூரியனையும் ஆயுட்காரகனாதிய சனியையும் பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற கணக்கான 120 வருஷங்கள் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு.

தவிர, முன் காலத்தில் தபஸ்ரேஷ்டர்களான ரிஷீஸ்வரர்கள் தமது தபோ மகிமையாலும், யோகாசன அனுஷ்டான ஆகார நியமங்களினாலும் தமது ஆயுளைப் பெருக்கிக் கொண்டு ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஜீவித்திருந்ததாக நமது புராணங்களின் வாயிலாக அறிகிறோம்.

“இதேபோல காந்தியடிகளும் தமது ஆகார, அனுஷ்டான நிர்ணயங்களாலும் தெய்வ பிரார்த்தனையாலும் தமது ஆயுளை விருத்தி செய்து கொண்டு, ஜாதக ரீதியாக ஏற்படும் பரமாயுள் 120 வருஷங்களுக்கு அதிகமாகவே ஜீவித்திருப்பாரென்பது எனது திடமான அபிப்பிராயம்.’

காந்தியார் பிறந்த நாள் 2-10-1869. கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனனால் சுட்டுக் கொல்லப் பட்ட நாள் 30-1-1948.  ஆக மொத்தம் 78 ஆண்டுகள்  உயிருடன் இருந்தார்.

திருத்தணி சோதிடரின் அசைக்க முடியாத சாதகக் கணிப்புப்படி மேலும் 40 ஆண்டுகள் காந்தியார் உயிருடன் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் சோதிடரின் பொல்லாத காலம் கிரகங்கள் அவரை ஏமாற்றிவிட்டன. அவரது எதிர்கூறல் முற்றாகப் பிழைத்து விட்டது. அவர் பலன் சொல்லிச் சரியாக 5 1ஃ2 மாதங்களில் காந்தியார் இறந்து  போனார்!

திருத்தணி சோதிடர் மட்டுமல்ல வேறு எந்தச் சோதிடனாலும் காந்தியாரின் அகால சாவை முன்கூட்டியே சொல்ல முடியவில்லை!

சோதிடர்களைத் தேடி ஓடுவதில் இந்திய – ஸ்ரீலங்கா அரசியல்வாதிகள் பெயர் போனவர்கள். வேட்பு மனு தாக்கல் செய்வது தொடக்கம் பதவி உறுதி மொழி எடுப்பது வரை சோதிடர்கள் கணித்துக் கொடுத்த கால நேரத்தை வேதவாக்காக மதித்து அதனை அச்சொட்டாகப் பின்பற்றுகிறார்கள்.

இராகு காலம், எமகண்டம் இடம்பெறும் நேரங்களில் எந்தவிதமான நல்ல செயல்களையும் தொடங்கவோ செய்யவோ கூடாது என்பது சோதிட விதி. அப்படி மீறிச் செய்தால் தீய பலன்கள் ஏற்படும் எடுத்த காரியம் தோல்வியில் முடியும்.

எந்தச் செயலைச் செய்ய முடிவு எடுத்தாலும் அது நிறைவேறாது எனச் சோதிடர்கள் பாமர மக்களை மட்டுமல்ல படித்த அரசியல்வாதிகளையும் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்.

‘துல்லியமாக’ கணித்த பிரபல சோதிடர்களின் பல கணிப்புக்கள் பிழைத்து இருக்கின்றன! பலன்கள் பொய்த்து இருக்கின்றன. குருட்டு வாக்கில்தான் சில பலித்துள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். பிரதமர் ஆனவுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் சோதிடர் செல்லப்பா அய்யரிடம் தனது சாதகத்தைக் கொடுத்துப் பலன் கேட்டார்.

‘அய்ந்து ஆண்டுகளுக்கு உங்களை யாரும் அசைக்க முடியாது’ என்று சோதிடர் அடித்துச் சொன்னார். அதனை நம்பித் தம் இச்சைபோல் சில முடிவுகளைத் தேவகவுடா எடுத்தார். விளைவு? பிரதமராக வந்து (01-06-1996) எண்ணிப் பத்து மாதங்களில் (21-04-1997) பதவி பறி போயிற்று!

பெஜன் தாருவாலா உலகின் புகழ்பெற்ற முதல் நூறு சோதிடர்களில் ஒருவர். அவர் 2003 யூன் 24 குப் பின்னர் கஷ்மீர் சிக்கல் தீர்த்து வைக்கப்படும் என்று 2001 இல் கணித்துச் சொன்னார். பாவம் சோதிடர், கஷ்மீர் சிக்கல் இன்னும் தீர்ந்த பாடில்லை. அங்கே குண்டு வெடிப்புக்களும் துப்பாக்கிச் சூடுகளும் சாவுகளும் நாளாந்தம் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

ஆரதி சக்கரவர்த்தி எண்கணித சோதிடர். அவரது கணிப்பின்படி அடல் பிகாரி வாஜ்பாயின் அரசு இரு ஆண்டுகளே நீடிக்கும் என்றும் 2001 இல் அடுத்த பொதுத் தேர்தல் வருமென்றும் 1999 இல் சொன்னார். ஆனால் வாஜ்பாய் அரசோ எந்த வில்லங்கமும் இன்றி  கிட்டத்தட்ட அய்ந்து ஆண்டு காலம் பதவியில் நீடித்தது. இப்பொழுது இன்னொரு பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுத்துள்ளது.

சண்டிகாரைச் சேர்ந்த பிரபல சோதிடர் பி. குரானா ‘அடுத்த பிரதமர் சிம்மராசிக்காரர். அவரது பெயர் டி அல்லது எம் இல் ஆரம்பமாகும். வாஜ்பாயிக்கு எந்த வாய்ப்பும் இல்லை.  காங்கிரஸ் கூட்டணி  அரசு ஒக்தோபர் 27, 2000 வரை நீடிக்கும்’ என்று 1998 இல் சொன்னார். ஆனால் நடந்ததோ நேர் எதிர்மாறு. வாஜ்பாய் 1999 இல் பிரதமரானார். காங்கிரஸ் எதிர்க்கட்சி ஆனது!

அம்ரித்லால் இந்திரா கொலையை முன்னரே கணித்துச் சொல்லியதாகப் பெருமை பேசிக் கொள்ளும் கொல்கத்தா சோதிடர். அவரது கணிப்பு வாஜ்பாயோ, சோனியாவோ பிரதமராக முடியாது. புதிய அரசு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாக இருக்கும் என்று 1999 இல் சொன்னார். ஆனால் நடந்ததோ வேறு, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமரானார். காங்கிரசால் எந்தக் கூட்டணியையும் வைக்க முடியவில்லை.

சென்னையை அடுத்த கேளப்பாக்கத்தில் ஸ்ரீராம இராஜ்யம் என்ற பெயரில் ஆச்சிரமமும் கல்வி நிலையங்களும் நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. மறைந்த யாகவா முனிவருடன் தொலைக் காட்சியில் ஆளுக்கு ஆள் நாயே பேயே பிசாசே என்று சென்னைத் தமிழில் திட்டிக் கொண்டவர்கள்.  இந்தச் சிவசங்கர் பாபா நக்கீரன் கிழமை இதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:

‘கோவை பீளமேட்டில் விசுவாமித்திரர் நாடி சோதிட மையம் இருக்கிறது. இங்கு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு விசுவாமித்திரர், அகத்தியர், சித்தர்கள் எல்லாம் எழுதி வைத்துவிட்டுப் போன சுவடிகள் (காண்டங்கள்) இருக்கின்றன. இதில் மனிதர்களது எதிர்காலப் பலன்களை எழுதியிருக்காங்க அந்த ஞானிகள். இந்தச் சுவடிகளை வைத்துத் தன்னை நாடி வருபவர்களுக்கு எதிர்காலப் பலன்களைச் சொல்லி வருகிறார். நாடி சோதிடரது பெயர் சுப்பிரமணியம்.

ஒருமுறை கேரளாவுக்குப் போயிருந்த ரஜினிகாந்த் நாடி சோதிடர் சுப்பிரமணியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தார். ரஜினிக்காக எடுக்கப்பட்ட சுவடிகளில் சோனியா காந்தி ரஜினியை அரசியலுக்கு கொண்டு வருவாங்கன்னு எழுதப்பட்டிருக்கு. நாடி சோதிடர் சுப்பிரமணியம் போன பவுர்ணமி அன்று என்னைக் கேளப்பாக்கத்தில் சந்தித்தபோது இதைப்பற்றி விரிவாகவே பேசினார்.

சுவடியில் என்ன எழுதியிருக்கிறது என்றால்….

சுபானு தாண்ட நங்கை ஒருத்தி,
நாடு விட்டு நாடு கடந்து,
பதியை இப் பாருக்காக இழந்து,
பிள்ளையும் தானும் பரிதவிக்க,
இக் காலம் மூவர்ணக் கொடிதன்னை
ஏந்தி முயன் றிருப்பாள் ஆட்சியைத்தான்
கவ்வுவாள். கவ்விய பின்னே பாபாவின்
திருவடி இருக்கும் இடம்தேடி வருவாள்!”

என்று எழுதப்பட்டு உள்ளது.

அதாவது இத்தாலி  தேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் சோனியா, இந்தியாவுக்காக தனது கணவனை இழந்து பரிதவிப்பவர், இப்போது மூன்று வர்ண கொடியான காங்கிரஸ் கொடியை ஏந்திப் பிடித்திருக்கிறார். அவர் இப்போ நடக்கும் சுபானு வருடம் முடிஞ்சதும் ஆட்சியைப் பிடிப்பார். இதில் குறிப்பிடப்படும் நங்கை சோனியா காந்தி ஆகும்.

‘மேலும், மராட்டிய மன்னனின் நாமத்தைத் தாங்கும் இவனுக்கு பவானியே குலதெய்வம். நிர்வுத்தாடுபவன். இத் தென்தமிழ் மண்ணை ஆளும் யோகமும் பாக்கியமும் அவனுக்குச் சேர சுபானு தீர்ந்து ஆண்டு இரண்டு கழியக் காணீர்” என்று வருகிறது.

அதாவது ரஜினியின் இயற்பெயர் சிவாஜிராவ், மராட்டிய மன்னனின் பெயர் சிவாஜி, இவருக்குக் குலதெய்வம் பவானி, பவானி என்பது அம்பாளைக் குறிக்கும். ரஜினிக்கும் குலதெய்வம் அம்பாள்தான். நிர்வுத்தாடுபவன், அதாவது சினிமாக்காரன். அப்படிப்பட்ட ரஜினி அரசியலுக்கு முழுமையாக வருவதற்கு சோனியா காந்தி வித்தாக (விதையாக) இருப்பார்.

இன்னும் விளக்கமாகச் சொன்னால் ரஜினியை அரசியலுக்கு இழுத்துக்கொண்டு வருவார் என்கிறது சுவடி. இந்தச் சம்பவம் எல்லாம் சுபானு வருடம் கழிந்து 2 வருடம் கடந்த பிறகு நடக்கும் என்பதுதான் இதன் பொருள்.

இந்தச் செய்தியைக் கடந்த ஒக்தோபர் 16, 2003 இல் வெளியான தினகரன் (தமிழ்நாடு) நாளேடு வெளியிட்டது. சுபானு (2003-2004) ஆண்டு கழிந்து இப்போது தாரண (2004-2005) ஆண்டு நடக்கிறது. இதுவும் கழிந்தால் அடுத்து வரும் பார்த்திப (2005-2006) ஆண்டில் நாடி சோதிடர் சொன்ன கணிப்புப் பலிக்க வேண்டும். அதாவது ரஜினியை இத்தாலியில் பிறந்து தற்போது இந்திய காங்கிரசின் தலைவியாக இருக்கும் சோனியா காந்தி (காங்கிரஸ்) அரசியலுக்கு இழுத்து வரவேண்டும். ஆனால் இப்போது (2004) மக்கள் அவைக்கு நடக்கும் பொதுத் தேர்தலில் நதி நீர் இணைப்பை முன்னெடுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கே தனது வாக்கு என்று ரஜினி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இமயமலை அடிவாரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பாபாவின் பக்தரான ரஜினிக்கு சாயி பாபா காலில் விழுந்து எழும் வாஜ்பாய் தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சியைத்தான் பிடித்திருக்கிறது. இதில் ஒன்றும் வியப்பில்லை. மதசார்பற்ற காங்கிரஸ் கட்சியையோ அதன் தலைவி  சோனியாவையோ இந்து அடிப்படைவாதியான ரஜினிகாந்துக்குப் பிடிக்கும் என்பது சாத்தியம் இல்லை.

எது எப்படியிருந்தாலும் இன்னும் ஒரு ஆண்டு கழிந்தால் நாடி சோதிடர் சுப்பிரமணியத்தின் புரட்டு அம்பலமாகி விடும். பொறுத்திருந்து பார்ப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் குமுதம் கிழமை ஏடு பெயர் குறிப்பிடப்படாத ஒருவரின் பிறந்த திகதியையும் அவரது பெருவிரல் அடையாளத்தையும் தமிழ்நாள்டில் உள்ள நான்கு பிரபல நாடி சோதிடர்களிடம் அனுப்பிப் பலன் சொல்லுமாறு கேட்டது. அந்த நான்கு சோதிடர்களும் நிலாமறைப்பு ஆளுக்கு ஆள் முற்றிலும் முரணான பலன் சொன்னார்கள்.

முதலாவது  சோதிடர் குறிப்பிட்ட ஆள் ஒரு பிரபல மருத்துவர் என்றார். இரண்டாவது சோதிடர் பிரபல நடிகர் என்றார். மூன்றாவது சோதிடர் வழக்கறிஞர் என்றார். நான்காவது சோதிடர் உயர் அரச அதிகாரி என்றார்.

உண்மை என்னவென்றால் அந்தக் கைவிரல் அடையாளம்  சென்னை கோடம்பாக்கப் பகுதியில் தெருத் தெருவாகப் பிச்சை எடுத்துத் திரிந்த ஒரு பிச்சைக்காரனுக்குச் சொந்தமானது! குமுதம் அவனது கைவிரல் அடையாளத்தை எடுத்து அதனைச் சோதிடர்களுக்கு அனுப்பி இருந்தது!

ஒரு பிரபல கிழமை ஏடு ஒரு பிச்சைக்காரனது பெருவிரல் அடையாளத்தை அனுப்பி இருக்கும் என்று நாடி சோதிடர்கள் கனவிலும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். அதனால்தான் ஆளுக்கு ஆள் மனம் போன போக்கில் தங்கள் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு முற்றிலும் பிழையான பலனைச் சொன்னார்கள்! இப்படி மூக்குடை பட்டாலும் தங்கள் தொழிலை மட்டும் அவர்கள் விடுவதில்லை. தொடர்ந்து படியாத பாமர மக்களையும் படித்த முட்டாள்களையும் ஏய்துப் பிழைக்கிறார்கள்.

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply