சோதிடப் புரட்டு 36-40

சோதிடப் புரட்டு
ஜோசியத்தால் கெட்டேன்!

இந்தக் கிழமை ‘ஜோசியத்தால் கெட்டேன்’ எனச் சிறைக் கொட்டிலில் இருந்து கொண்டு தலையில்  கைவைத்துப் புலம்பும் ஒரு தொழில் அதிபரின் உண்மைக் கதையை சொல்லப் போகிறேன். இதைப் படித்துவிட்டாவது சோதிடம், மாந்தீரிகம், வசியம் போன்ற மந்திர தந்திர யந்திர மூட நம்பிக்கைகளில் இருந்து இளைய தலைமுறையினராவது  விடுபடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.  தன்னம்பிக்கை இல்லாதவர்களே  எளிதில் மூடநம்பிக்கைக்கு ஆளாக விடுகிறார்கள்!

பொதுவாக மனிதர்கள் பின் வரும் வேளைகளில் சாதகத்தைத் தூக்கிக் கொண்டு சோதிடரை நாடி ஓடுகின்றார்கள்.

    1)      தொழில் தொடங்கும் போது அது வெற்றி ஆகுமா இல்லையா என்பதை முன்கூட்டி அறிந்து கொள்ள,

    2)      நோய், துன்பம், இழப்பு, இடர் வந்து சூளும் போது பரிகாரம் என்ன என்பதைக் கேடடறிந்து கொள்ள,

    3)      திருமணப் பேச்சின் போது பொருத்தம் பார்க்க.

இவற்றுக்கான ஏது தெரிந்ததே. பொதுமேனி மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் துன்பம், நன்மை தின்மை, ஏற்றம் இறக்கம், நோய் நொடி, இழப்பு இடர்  ஆகியவற்றுக்குத் தங்களது தன்வினை காரணம் அல்ல வானுலகில் வலம் வரும் கோள்களும் நட்சத்திரங்களும் பொறுப்பு என்று நம்புகின்றார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பிரபல சரவணபவன் உணவகத்தையும் அதன் உரிமையாளர் இராஜகோபால் அவர்களையும் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. எல்;லோரும் அவரை அண்ணாச்சி என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள்.

ரொறன்ரோவில் கூட சரவணபவன் உணவகக் கிளை ஒன்று அண்மையில் தொடக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இராஜகோபால் மண் குடிசையில் இருந்து மாட மாளிகைக்குக் குடியேறியவர். கோவணாண்டியாக இருந்து கோடீசுவரராக உயர்ந்தவர்.

தமிழ்நாட்டில் உணவகத் தொழிலைக் கன்னடர்கள் தங்கள் பிடியில் வைத்திருக்கின்றார்கள். தேநீர்க் கடைகளை மலையாளிகள் தங்கள் மேலாண்மையில் வைத்திருக்கின்றார்கள். தனியார் மருத்துவ மனைகளைத் தெலுங்கர்கள் தங்கள் கைக்குள் வைத்திருக்கின்றார்கள். திரைப்படத் துறையையும் வட்டிக் கடைகளையும் மார்வாடிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள். இப்படித் தமிழர்களைத் தவிர மற்ற இனத்தவர் எல்லோருமே தமிழகத்தில் தொழில் துறையில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள்!

இந்தப் பின்னணியில் பச்சைத் தமிழரான அண்ணாச்சி உணவகத் தொழிலில் வெற்றி பெற்றது மெச்சத்தக்க சாதனைதான்.

அதுமட்டுமல்ல, தனக்குக் கீழ் வேலை செய்யும் சுமார் 5,000 ஊழியர்களது மருத்துவச் செலவு, அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவு எல்லாவற்றையும் அவரே பொறுப்பேற்றுக் கொள்கின்றார்.

ஆனால், அவரது ‘பொல்லாத காலம்’ அவர் ஒரு கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த பல மாதங்களாக சிறைக் கொட்டிலில் அடைக்கப்படுள்ளார். பிணையில் வெளிவந்த அண்ணாச்சி மீண்டும் தெருவால் போன சனியனை வலியப் போய் விலைக்கு வாங்கிக் கொண்டு உள்ளுக்குள் இருக்கின்றார்.

சிறைக்குள் இருக்கும் அண்ணாச்சி ஓயாமல் ஒழியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றார். என்ன புலம்பல்? ‘ஜோசியத்தால் கெட்டேன்’ என்ற புலம்பல்! இது அண்ணாச்சிக்கு ஏற்பட்டுள்ள திடீர் ஞானோதயமா? அல்லது சுடலை ஞானமா? என்ற கேள்விகளுக்குப் போகப் போகத்தான் பதில் தெரியும்!

அண்ணாச்சி பெரிய முருக பக்தர். நெற்றியில் பளிச்சென்ற விபூதிப் பட்டை, நடுவில் ஒரு அணா அளவு குங்குமப் பொட்டு, வாயில் எப்போதும் முருகா முருகா என்ற வேண்டல். திருமுருகானந்த வாரியார் உயிரோடு இருந்த போது தமிழ்நாட்டில் கவனிப்பாரற்றுச் சிதலமடைந்து கிடந்த பல கோயில்களைத் திருப்பணி செய்து குடமுழுக்கும் பெரியளவில் செய்து வைத்தார். வாரியாரின் கோயில் திருப்பணிக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்களில் அண்ணாச்சி முதன்மையானவர்.

அண்மையில் வாரியார் எழுதிய அவரது தன் வரலாற்றைப் படித்துப் பார்த்தேன். வாரியார் தனது நேரத்தையும் நினைப்பையும் பொருளையும் கோயில் திருப்பணி, குடமுழுக்கு ஆகிய இரண்டிலும் கரைப்பதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்தார் என்பதைத்  தெரிந்து கொண்டேன்.

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்’

னப் பாரதியார் சொன்ன அமுத வாக்கை வாரியார் படிக்கவில்லை போலும். படித்திருந்தால் பணத்தைத் திருக்கோயில் திருப்பணியில் பாழாக்கி இருக்கமாட்டார்! மாறாக ஏழைப் பிள்ளைகள் படிக்கப் பள்ளிக்கூடங்களைக் கட்டியிருப்பார்.

பொதுவாக வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்குத்தான் மற்றவர்களைவிடக் கடவுள் பக்தி அதிகம். அதற்கு வணிகத்தில் இருக்கும் இடர்வரவுதான் (risk) காரணம். நிரந்தரமான பணியில் கிழமை அல்லது மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்களுக்கு இடர்வரவு பற்றிய கவலை பெரும்பாலும் இல்லை எனலாம்.

Astrologyannachchi35-1-300x225

‘வாரியார் மீது அண்ணாச்சிக்குப் பெரும் மரியாதை உண்டு. வாரியாரை வணங்கினாலே எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புபவர். இன்று அவரது அந்த நம்பிக்கை ஜோசியர்கள் பக்கம் தாவிவிட்டது. ஜோசியர்கள் சொல்வதுதான் அண்ணாச்சியைப் பொறுத்தவரை வேதவாக்கு. அதன் விளைவாகவே தப்பான பாதைகளில் அவர் போய்க் கொண்டிருக்கிறார்….” என்று வருத்தத்தோடு சொல்கின்றார்கள் அண்ணாச்சியின் விசுவாசிகள்.

அண்ணாச்சி முருக பக்தர் மட்டுமல்ல, அந்த முருகனையே தனது வாழ்க்கைக்கு முன்மாதிரியாகக் கொண்டவர். அதாவது அவனைப் போலவே இவருக்கும் இரு மனைவியர். ஆனால், அந்த முருகனையும் முந்திக் கொண்டு ஏற்கனவே ‘வள்ளி-தெய்வயானை’ என இரு மனைவியர் இருக்க ஏற்கனவே திருமணமான ஒருவரை (இரண்டாவது மனைவி கிருத்திகாவும் ஏற்கனவே திருமணமானவர்) மூன்றாவது மனைவியையும் வரித்துக் கொள்ள முயற்சித்த போதுதான் அண்ணாச்சிக்கு ‘வெள்ளிதிசை’ போய் ‘சனி திசை’ தொடங்கியது.

‘அவனை விட்டு விட்டு என்னோடு வந்து விடு. உன்னைக் கிருத்திகா போல மாளிகையில் குடி வைப்பேன். அதில் நீ இராணி மாதிரி வாழலாம்” என அண்ணாச்சி அந்தப் பெண்ணுக்கு ஆசைவார்த்தைகள் மூலம் தூண்டில் போட்டார். பல இலட்சம் பெறுமதியான பட்டுப் புடவைகள், தங்க நகைகள், வைர மூக்குத்திகள் என வாங்கிப் பரிசளித்தார்.

எல்லாவிதமான மாய மந்திர தந்திர வசிய வித்தை செய்து பார்த்தும் அந்தப் பெண் அவர் போட்ட தங்கத் தூண்டிலைக் கவ்வ மறுத்தாள். நயமாகப் பேசிப் பார்த்தார்,  அது முடியாமல் போகவே பயமுறுத்திப் பார்த்தார். அதற்கும் அந்தப் பெண் மசியவில்லை.

அண்ணாச்சி மனம் தளரவில்லை. பணத்தை அள்ளி வீசினால் யாரையும் வலைக்குள் வீழ்த்தலாம், யாரையும் விலைக்கு வாங்கலாம், எதையும் சாதிக்கலாம் என்ற தத்துவத்தில் அவருக்கு அளப்பரிய நம்பிக்கை இருந்தது. பணக்காரர்களுக்கு இருக்கும் பலவீனங்களில் இதுவும் ஒன்று.

மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்ட அண்ணாச்சி மலையாள சோதிடர்களிடம் தஞ்சம் புகுந்தார். ஏற்கனவே அவருக்குச் சோதிடத்தில் பேரளவு நம்பிக்கை இருந்தது. எதைச் செய்தாலும் சோதிடர்களின் ஆலோசனைப் படிதான் நடந்து கொள்வார்.

அண்ணாச்சி பெரிய புள்ளி என்று தெரிந்ததுமே சோதிடர்கள் தங்களுக்கு வெள்ளி திசை தொடங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு அவரைச் சுழ்ந்து கொண்டனர். அண்ணாச்சி  தங்களிடம் இருந்து எதைக் கேட்க விரும்பினாரோ அதைப் பக்குவமாக அவருக்குச் சொல்ல ஆரம்பித்தார்கள். இது அண்ணாச்சியின் உள்ளத்தில் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த காமத் தீக்கு நெய்யூற்றியது போலாகிவிட்டது.

“உங்கள் சாதகம் இருக்கே….  இது சாட்சாத் அந்த கிருஷ்ணபரமாத்மாவின் சாதகம் போன்ற யோக சாதகம்! இப்படியான சாதகம் உலகில் கோடியில் ஒன்றுதான் இருக்கும்! ஜீவஜோதி உங்களோடு ராசியானதும் பாருங்கள்! உங்கள் தொழில் செழிக்கும் உங்களைப் பிடித்த பிரச்சினைகளெல்லாம் கதிரவனைக் கண்ட பனிபோல் நீங்கும்!” என்று நாவுக்குப் பதமாகவும் வாய்க்கு இதமாகவும் பேசிச் சோதிடர்கள் அண்ணாச்சியின் ஆசைக்குத் தூபம் போட்டார்கள்.

‘ஜீவசோதியை திருமணம் செய்து கொண்டால் இப்போது உள்ளதைவிட பலமடங்கு வேகமாக உங்களுக்கு வியாபார விருத்தி உண்டாகும்” என்று சோதிடர்கள் ஆசை வார்த்தைகளை அள்ளி இறைத்து அண்ணாச்சிக்கு மேலும் உருவேற்றினார்கள்.

தில்லி, சென்னை, துபாய் என்று பல்வேறு இடங்களிலும் அண்ணாச்சி தொடங்கிய உணவகங்கள் நல்ல வருவாய் ஈட்டித்தர ‘ஜோசியக்காரங்க சொன்னது சரிதாம்பா… பாருங்க, ஜீவா என்கிட்ட வந்துட்டதும் எல்லாம் நல்லா நடக்கும். பழைய கூட்டாளிங்க கணபதியும் ராமானுஜமும் கூட எங்கிட்டயே வந்துடு வாங்க,  முறைச்சுக்கிட்டு இருந்த என் மூத்த மகன் சிவகுமார் என்கிட்ட பழையபடி ரொம்ப பாசமாப் பழகுவான்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி அண்ணாச்சி புளகாங்கிதம் அடைந்தார்.

‘கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே’  என்று சொல்வார்களே? அண்ணாச்சி அந்தப் பழமொழிக்கு இலக்கியமானார்.

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்0
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் -ஒண்டொடீ
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.                    (நல்வழி 35)

ஒளி வீசும் வளையல்களை அணிந்த பெண்ணே!

நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் தாம் அழிவடையும் காலத்திலே தாங்கொண்ட கருக்களைப் பெறுதலைப் போல,

மனிதர்கள் அறிவும் செல்வமும் வித்தையும் அழிய நேரிடுங் காலத்திலே, பிற பெண்களின் மேல் மனத்தை வைப்பார்கள்.

காதல் தெய்வீகமானது, காதல் செய்வது தவறல்ல. பாரதியார் ‘காதலினால் மானுடர்க்கு கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் ………ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” எனக் கூவி அழைக்கின்றார்.

ஆனால், அண்ணாச்சியின் ‘காதல்’ ஒருதலைக் காமமான கைக்கிளை அல்லது பொருந்தாக் காமமான பெருந்திணை வகையைச் சேர்ந்தது!

அண்ணாச்சி அப்படியொன்றும் இளமை ஊஞ்சலாடும் வாலிபன் அல்ல, பார்ப்பதற்கு மன்மதனும் அல்ல, வயது போனவர், பணக்காரர்களுக்கே வருகிற நீரிழிவு நோய் வேறு,  அதற்கு ஒரு நாளில் மூன்று முறை ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

Image result for தமிழ்நாடு சரவணபவன்

ஆனால், காம நோய்க்கு அரனும் அரியும் இந்திரரும் சந்திரரும் இருடிகளும் முனிவர்களும் இரையாகி இருக்கும் போது இந்த அண்ணாச்சி எந்த மூலைக்கு? அவருக்கு எங்கிருந்தோ ஒரு அசட்டுத் துணிச்சல் பிறந்தது. “வேலுண்டு வினை தீர்க்க! மயிலுண்டு  எனைக் காக்க!” என்ற மந்திரத்தைத்  மனதுக்குள் செபித்துக் கொண்டார். 

வேறு வழியில்லை, தனது காதலுக்குத் தடையாக இருக்கும் வில்லனைத் தீர்த்துக் கட்ட அண்ணாச்சி முடிவெடுத்தார். அவரிடம் ஏற்கனவே அடியாட்கள் கைவசம் இருந்தார்கள். திட்டம் தீட்டப்பட்டது.

2001 ஒக்தோபர் 25 இல் சாந்தகுமார், ஜீவசோதி, ஜீவசோதியின் தாயார் தவமணி முதலியோரை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வேப்பங்குளம் என்ற ஊருக்கு இரண்டு மகிழுந்துகளில் அண்ணாச்சியும் அவரது அடியாட்களும் கூட்டிச் சென்றார்கள். அங்குள்ள செல்லம்மாள் என்ற பெண் மந்திரவாதி ஒருவரிடம் குறி கேட்கப் போவதாகவும் பரப்பாடிப் பக்கத்தில் உள்ள இளங்குளம் ஊரைச் சேர்ந்த பாண்டியம்மாளிடம் மருந்து எடுக்கப் போவதாகவும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

அவரது கணவன் சாந்தகுமார் வேறொரு வண்டிக்கு மாற்றப்பட்டான். சாந்தகுமாரை திருநெல்வேலியில் இருந்து பாலம் என்ற கிராமத்தின் வழியாக மதுரைக்கு அழைத்துச் சென்று ஒரு ஹோட்டலில் இரவு தங்க வைத்தார்கள். மறுநாள் டாடாசுமோ வண்டியில் கொடைக்கானல் சென்றார்கள். வழியில் வண்டிக்குள் வைத்து அண்ணாச்சியி;ன் அடியாட்கள் சாந்தகுமாரைப் பலமாகத் தாக்கினார்கள். சாந்தகுமார் மூர்ச்சை அடைந்தான். அவன் மூர்ச்சை தெளிந்தபோது தயாராக வைத்திருந்த லுங்கியால் சாந்தகுமாரின் கழுத்தை நெரித்துப்  பிறகு அதே லுங்கியால் அவனது முகத்தில் அழுத்தி மூர்ச்சை அடையச் செய்தார்கள்.

சாந்தகுமார் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகு சடலத்தைக் கொடைக்கானல் பக்கத்தில் உள்ள காட்டுக்குள் வீசி விட்டு சென்னைக்குத் திரும்பினார்கள். மறுநாள் அந்த இடத்துக்குச் சென்று சடலத்தை டைகர் சோழா என்ற இடத்தில் குழி தோண்டிப் புதைத்தார்கள்.

அண்ணாச்சியின் அடியாட்களில் ஒருவனும் கொலையை முன்னின்று செய்தவனுமான டானியல் என்பவன் காவல்துறைக்குக் கொடுத்த வாக்குமூலத்தில் இந்தச் சங்கதிகள் வெளியாகி இருக்கின்றன.

பல நாள் கழித்து சாந்தகுமாரைக் காணவில்லை என்று ஜீவசோதி காவல்துறையிடம் நேரில் சென்று முறைப்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை தொடங்கியது. அண்ணாச்சியின் ஆட்களில் 3 பேரை கைது செய்து முறையாக விசாரித்தபோது அண்ணாச்சி சொல்லி சாந்தகுமாரைக் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து மேலும் ஒன்பது பேர் வெவ்வேறு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். இராசகோபால் (அண்ணாச்சி) காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

jeevajyothi_
ஜீவசோதி

சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தை அடுத்து சாந்தகுமாரின் அழுகிய சடலம் 2001 டிசெம்பர் 01 இல் கொடைக்கானல் காட்டில் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அது பிரேத விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதே நாள் தேத்தான்குடியில் உள்ள ஜீவசோதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் ஜீவசோதி, அவரது தந்தை இராமசாமி தாய் தவமணி மற்றும் தாய்மாமன் ஆகியோர் கொடைக்கானலுக்குச் சென்ற போது அவர்களிடம் சாந்தகுமாரின் சடலத்தின் படம், அணிந்திருந்த கால்சட்டை, சட்டை, பெல்ட் ஆகியவை காட்டப்பட்டன.

ஜீவசோதி, தாயார் தவமணி  கொலை செய்யப்படும் முன்னர் சாந்தகுமார் அணிந்திருந்த உடை மற்றும் அவனது புகைப்படங்களை வைத்துச் சடலத்தை அடையாளம் காட்டினார்கள்.

2001 ஒக்தோபர் 25 அன்று தன்னை விட்டுத் தனது கணவர் பிரிந்தபோது இதே உடைகளைத்தான் அணிந்திருந்தார் என ஜீவசோதி உறுதிப்படுத்தினார்.

அதேபோலக் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட சோதிடர் ரவி மற்றும் இராசகோபால் இருவரும் சாந்தகுமார் சடலத்தை அடையாளம் காட்டினார்கள்.

ஜீவசோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை அண்ணாச்சி சதிசெய்து கொலை செய்வித்;தார் என அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சென்னை பூந்தமல்லி அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.


சோதிடப் புரட்டு (37)

இறந்து போனவரை உயிரோடு இருக்கிறார் என்ற சோதிடர்!  

கொலை செய்யப்பட்ட பிரின்ஸ் சாந்தகுமார் ஜீவசோதியின் தம்பிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அமர்த்தப்பட்டவர். திரைக் கதைகளில் வரும் கதாநாயகி போலவே பாடம் எடுக்க வந்த சாந்தகுமாரிடம் ஜீவசோதி மனதைப் பறி கொடுத்தார். சாந்தகுமார் கிறித்தவ மதத்தவர், ஜீவசோதி இந்துக் குடும்பத்தில் பிறந்தவர், எனவே வழக்கம் போல் மதம் காதலில் குறுக்கிட்டது. இரு வீட்டிலும் எதிர்ப்புக் கிளம்பியது. யார் எதிர்த்த போதிலும் இறுதியில் காதல் வென்றது. இருவரும் ஒரு இந்துக் கோயிலில் தாலி கட்டி மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த ஜீவசோதிதான் அண்ணாச்சி திருமணம் செய்ய முயன்ற மூன்றாவது பெண்!

அண்ணாச்சியின் கழுகுக் கண்கள் எப்போது ஜீவசோதியின் மீது விழுந்தது? நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருக்கிறது தேத்தாக்குடி. இதுதான் ஜீவஜோதியின் அம்மாவான தவமணிக்குச் சொந்தமான ஊர். அங்கே ஜீவசோதியின் அப்பா இராமசாமி வேளாண்மை செய்து வந்தார். வேளாண்மை படுத்துவிடவே அவர்களுக்கு இருந்த நிலபுலன்களை விற்றுவிட்டு சென்னைக்குக் குடி பெயர்ந்தார்கள். பிள்ளைகளை நன்கு படிப்பிக்க வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது. சென்னைக்கு வந்ததும் சரவணபவன் இராசகோபாலின் அறிமுகம் கிடைத்தது.  நிலபுலன்களை விற்று ஊரில் இருந்து கொண்டு வந்த இரண்டு இலட்சம் ரூபாய்களையும் இராமசாமி இராசகோபாலிடம் வட்டிக்குக் கொடுத்தார். அந்த வட்டிப் பணத்தில் குடும்பம் வாழ்ந்து வந்தது.

இந்தக் கால கட்டத்தில்தான் அண்ணாச்சிக்கு ஜீவசோதி பற்றித் தெரிய வந்தது. இதனால்  இராமசாமிக்கு மேலும் அதிட்டம் அடித்தது. அண்ணாச்சி அசோகாநகரில் இருந்த சரவணபவன் கிளையின் உதவி முகாமையாளாராக இராமசாமியை அமர்த்தினார். ஜீவசோதி குடும்பத்தின் வீட்டு வாடகையை அண்ணாச்சியே கட்டினார். அதற்கப்புறம் ஜீவசோதி வீட்டுக்கு அடிக்கடி போய்வரத் தொடங்கினார்.

தனது ஒருதலைக் காமத்துக்குத் தடைக் கல்லாக இருந்த சாந்தகுமாரை அண்ணாச்சி அடியாட்களைக் கொண்டு கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் கொடைக்கானல் காட்டில் வீசிய செய்தியை முன்னர் பார்த்தோம்.

சாந்தகுமார்  கொலை இன்னும் (ஒக்தோபர் 28, 2001) வெளிவராத நிலையில் அண்ணாச்சி ஒன்றும் தெரியாத அப்பாவி போல சாந்தகுமார் உயிரோடு இருக்கிறானா இல்லையா என அறிய ஜீவசோதி குடும்பத்தை அப்போது சென்னை சபரிசாலையில் உள்ள ஒரு மாடி வீட்டில் குடியிருந்த ரவி என்ற சோதிடரிடம் அனுப்பி வைத்தார்! இந்த ரவிதான் கடந்த 10 ஆண்டுகளாக அண்ணாச்சியின் ஆஸ்தான சோதிடராக இருந்து வருபவர் ஆவார்.

ரவி சோதிடரின் பூர்வீகம் கேரளம். ஒரு காலத்தில் சென்னையில் அவருக்கு வீடுகள் தோட்டங்கள் என ஏராளமான சொத்துக்கள் இருந்தன. என்ன காரணத்தாலோ அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தொலைத்துவிட்டுச் சோசியம் பார்க்கச் சென்ற வாடிக்கையாளரது வீட்டு மேல்மாடியில் குடியேறினார். தற்போது அவர் மடிப்பாக்கம் முத்து முகம்மது தெருவில் குடியிருக்கிறார்.

ரவி முழுநேர சோதிடர் அல்ல, புரசைவாக்கம் அலுவலகத்தில் கலால் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகின்றார். அதற்கு முன்னர் சம்பவம் நடந்த காலத்தில் மயிலாப்பூர் திருவல்லிக்கேணி வருவாய்த்துறை அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றினார்.

‘ஜோதிடம் பார்ப்பதும் ஜாதகம் பார்த்துச் சொல்வதும் பொழுது போக்காகச் செய்து வருகிறேன்.  இதற்காக வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்வேன்.  நானாக வற்புறுத்திக் கேட்க மாட்டேன். ஜாதகத்தில் உள்ளபடி நல்லது கெட்டது பார்த்துச் சொல்வேன். கம்புயூட்டர் மூலம் ஜாதகம் கணித்துச் சொல்வேன்.

ஓட்டல் அதிபர் ராஜகோபாலைக் கடந்த 10 ஆண்டுகளாக எனக்குத் தெரியும்.  புதிதாக ஓட்டல் கிளை தொடங்கினால் முகூர்த்தம் பார்கக் கேட்பார், நான் குறித்துக் கொடுப்பேன், நாள் நேரம் கணித்துக் கொடுப்பதற்குச் சன்மானமாகப் பணம் தருவார்.

இராஜகோபால் 2 அல்லது 3 முறை என் வீட்டிற்கு நேரில் வந்திருக்கிறார். போனிலும் பேசியிருக்கிறார். 28-10-2001 அன்று எனது வீட்டுக்கு ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, அவரது தந்தை இராமசாமி ஆகியோர் வந்தனர். சரவணபவன் ஓட்டல் ஜீப்பில்; அவர்களைப் பெருமாள் அழைத்து வந்தார்.

இராஜகோபால் அனுப்பி வைத்ததாகவும், அவர்களுக்குச் ஜோதிடம் பார்த்துச் சொல்லும் படியும் பெருமாள் என்னிடம் தெரிவித்தார்.

ஜீவஜோதியின் ஜாதகத்தையும் அவரது கணவர் சாந்தகுமாரின் ஜாதகத்தையும் என்னிடம் கொடுத்தார்கள். ஜீவஜோதியின் கணவர் காணாமல் போய் விட்டதாகவும் அவர் எப்போது வருவார் என்று ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லும்படியும் என்னிடம் கேட்டார்கள்.

நான் ஜாதகத்தைப் பார்த்து “உன் கணவருக்கு மனநிலை சரியில்லாமல் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கிறார், இப்போது வரமாட்டார்’ என்று கூறினேன்.  ஜீவஜோதி என்னிடம் “என் கணவர் எப்போது வருவார்?” என்று கேட்டார். அதற்கு நான் ‘இன்னும்; 3 வருடங்களுக்கு நேரம் சரியில்லை, பிறகுதான் நல்ல நேரம் வரும், அப்போது உன்னிடம் வந்து சேருவார்” என்று அவரிடம் சொன்னேன்.

‘என்னைத் தேடி ஒவ்வொரு நாளும் 40 அல்லது 50 பேர் பலன் கேட்க வருகின்றார்கள். நான் இவ்வளவு பணம் தாருங்கள் என்று கேட்பதில்லை. கொடுத்ததை வாங்கிக் கொள்வேன்” என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போது சோதிடர் ரவி தெரிவித்தார்.

ஆளுக்கு  உருபா 30 என்று வைத்துக் கொண்டாலும் சோதிடர் நாளொன்றுக்குக் குறைந்தது உருபா 1,200 உழைக்கிறார்! மாதம் உருபா 36,000! ஒரு ஐஏஸ் அதிகாரியின் சம்பளம் இதில் பாதி கூடத் தேறாது என நினைக்கிறேன்!

சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட அன்றே சோதிடர் வீட்டுக்குப் பலன் கேட்க ஜீவசோதி குடும்பத்தை கொலையின் சூத்திரதாரியான அண்ணாச்சியே அனுப்பி வைக்கின்றார். சாந்தகுமார் உயிரோடு இல்லை என்ற உண்மை அண்ணாச்சிக்குத் தெரியும். ரவி சோதிடருக்குத் தெரியாது.

சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட நாள் ஒக்தோபர் 26, 2001, புதைக்கப்பட்ட நாள் ஒக்தோபர் 27, 2001, ரவி சோதிடர் சாந்தகுமார் ஜீவசோதி சாதகங்களைப் பார்த்துப் பலன் சொன்ன நாள் ஒக்தோபர் 28, 2001. சடலம் தோண்டி எடுக்கப்பட்ட நாள் டிசெம்பர் 01, 2001, சடலத்தை ஜீவசோதியும் அவரது தாயாரும் அடையாளம் காட்டிய நாள் டிசெம்பர் 02, 2001, சடலத்தை மருத்துவ பரிசோதனை செய்த நாள் டிசெம்பர் 04, 2001 ஆகும்.

ஆனால், சாதகத்தில் உள்ள கோள், இராசி, நட்சத்திரங்களின் நிலைகளைக் கணித்து அச்சொட்டாகப் பலன் சொல்லும் பிரபல மலையாள சோதிடர் ரவி,  இறந்து போன சாந்தகுமார் “மனநிலை சரியில்லாமல் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கிறார், இப்போது வரமாட்டார், இன்னும்; 3 வருடங்களுக்கு நேரம்; சரியில்லை, பிறகுதான் நல்ல நேரம் வரும், அப்போது அவர் உன்னிடம் வந்து சேருவார்’ என்று பலன் சொல்கின்றார்!

“சாந்தகுமாரின் சாதகத்தின் படி அவருக்கு மரண சனி நடக்கிறது. எனவே அவர் இப்போது உயிரோடு இல்லை, இறந்து விட்டார்” என்று பலன் சொன்னால் நாளை அல்லது மறுநாள் அல்லது சில காலம் கழித்;து சாந்தகுமார் உயிரோடு வந்தால் சாதகம் பிழைத்து விடும்! சோதிடர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுப் போவார்!

எனவே சோதிடர் கொஞ்சம் புத்திசாலித்தனமாக “சாந்தகுமார் மனநிலை சரியில்லாமல் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கிறார்,  இப்போது வரமாட்டார், இன்னும்; 3 வருடங்களுக்கு நேரம்; சரியில்லை, பிறகுதான் நல்ல நேரம் வரும், அப்போது அவர் உன்னிடம் வந்து சேருவார்’ என்று பலன் சொன்னால், அது கெட்ட செய்தியாகவும் இருக்காது நல்ல செய்தியாகவும் இருக்காது. இரண்டும் கெட்டான் நிலையாக இருக்கும். சாதகத்தைக் கொடுத்துப் பலன் கேட்ட ஜீவசோதிக்கு அப்போதைக்குக் கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.  திரும்பி வர 3 ஆண்டு சென்றாலும் கணவன் உயிரோடு இருக்கின்றார் என்ற நிம்மதி!

சோதிடம் ஒரு புரட்டு என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? ரவி சோதிடர் சொன்ன பலன் முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையில் சொன்னதுதானே?

மூடர்களும் மூடத்தனமும் அறிவிலிகளும் அறியாமையும் இருக்கும் வரை ரவி போன்ற சோதிடர்கள் வீட்டில் பணமழை கொட்டிக் கொண்டுதான் இருக்கும்! அவரின் சோதிடம் முழுதும் பொய், ஏமாற்று, ஏய்ப்பு, தகிடுதத்தம், புரட்டு என்று தெரிந்த பின்னரும் அவரிடம் பலன் கேட்கப் படித்தவர்களும் படியாத பாமரர்களும் தொடர்ந்து போய்க் கொண்டுதான் இருப்பார்கள்!

வேடிக்கை என்னவென்றால் ரவி சோதிடரே ஏனைய சோதிடர்களைக் கண்டிக்கின்றார். இதற்குத் தொழிலில் ஏற்பட்ட போட்டியும் பொறாமையும்  (pசழகநளளழையெட சiஎயடசல யனெ தநயடழரளல ) காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

‘நான் முதன் முதலில் பார்த்த ராஜகோபா லின் முகத்தில் இருந்த அப்பாவித்தனம் போய் சமீப காலமாக ஒரு கரடு முரடான தோற்றம் தெரிய ஆரம்பித்தது.  கூடவே, ஜோசியத்தைப் பற்றி தப்பும் தவறுமாக அவரே எல்லாம் தெரிந்ததுபோல் பேச ஆரம்பித்தார். இதே சென்னையில் மடிப்பாக்கத்திலும், நங்கநல்லூரிலும் வீட்டுக்கு 5 ஜோசியர்கள் கிளம்பி, ராஜகோபால் மாதிரியான நபர்களின் மூடப்பழக்கங்களுக்கு தீனி போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள.; அப்படிப்பட்டவர்கள் தான் அவருக்கு தாயத்து, மந்திரம், செய்வினை என்ற ஆபத்துக்களை அறிமுகப்படுத்தியிருப்பார்கள் ஆனால்,, இது எதுவுமே பலன் தராது விதிக்கப்பட்டதுதான் நடக்கும். நாம் செய்யும் புண்ணியம்கூட விதியிலிருந்து நம்மைக் காப்பாற்றாது.

‘பெயர் மாற்றம், வாஸ்து என்ற  ரூபங்களிலும் பொதுமக்களின் நம்பிக்கை மொட்டை அடிக்கப்படுகிறது. வயதான ஒரு கதாநாயகனுக்கு யாகங்கள் நடத்தித் தாயத்துக் கட்டிவிட்டால் அஜீத் போல அவரால் டூயட் பாட முடியுமா? இதுவரை அவரால் பட்டது போதும் இனி அவரது சங்காத்தமே வேணாம்,  அவர் திசைக்கே ஒரு பெரிய கும்பிடு!” என்று அசல் பகுத்தறிவுவாதி போல் சோதிடர் பொரிந்து தள்ளுகின்றார்.

இப்படிச் சொல்லும் சோதிடர் அடுத்த நிமிடமே ‘வேதம் படித்த, நியாயம் மட்டுமே தெரிந்த ஒரு சோதிடன் சொல்லும் எல்லாமே பலிக்கும்” என்கின்றார்!

இவரது சோதிடம் பலிக்கவில்லை. அப்படியென்றால் இவர் ‘வேதம் படித்த, நியாயம் மட்டுமே தெரிந்த ஒரு சோதிடன்’ அல்ல என்பதுதானே  பொருள்?;

தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் சோதிடர் ரவி சாந்தகுமார் ஜீவசோதி சாதகங்களைப் பாத்துவிட்டு ‘சாந்தகுமார் உயிரோடு இல்லை. அவர் இறந்து விட்டார்’ என்று ஏன் சொல்லவில்லை? அந்த உண்மையைப் பச்சையாகச் சொல்ல முடியாவிட்டால் சுற்றி வளைத்துச் சாடை மாடையாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா?

‘நான் சாதகத்தைப் பார்த்து ‘சாந்தகுமாருக்கு மனநிலை சரியில்லை. அவர் இப்போது வரமாட்டார்” என்று கூறினேன். ஜீவசோதி என்னிடம் ‘என் கணவர் எப்போது வருவார்” என்று கேட்டார். அதற்கு நான் இன்னும் 3 வருடங்களுக்கு நேரம் சரியில்லை. பிறகுதான் நல்ல நேரம் வரும்’ என்று அவரிடம் சொன்னேன்” என்று ஏன் படு பிழையாகப் பலன் சொல்ல வேண்டும்?

ஒரு சோதிட பத்திரிகையில் கேள்வி – பதில் பகுதியில் ‘என்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியையை நான் விரும்புகிறேன். ஆனால், இருவருமே கல்யாணம் ஆனவர்கள். நாங்கள் என்ன செய்வது?” என்ற கேள்விக்கு ‘உங்கள் எண்ணம் நிச்சயம் ஈடேறும் என்னை நேரில் சந்தியுங்கள்’ என ஒரு சோதிடர் பதில் சொல்லியிருக்கிறார். அவரை அண்ணாச்சி நேரில் போய் சந்தித்தார் என்கிறார்கள். அந்த சோதிடரின் மூலமாக ஒரு ரசமணிமாலை, ஒரு தாயத்து கயிறு மற்றும் மந்திரிக்கப்பட்ட விபூதியை வாங்கினாராம். கூடவே தனது இடது காலில் அந்த சோதிடர் கொடுத்த ஒரு சில மந்திரக் கயிறுகளையும் கட்டிக் கொண்டு ஜீவசோதியைச் சந்திக்கப் போனார் அண்ணாச்சி.

‘உங்களுக்கு நேரம் சரியில்லை திருநள்ளாறு சனீஸ்வர பகவானைத் தரிசனம் செஞ்சிட்டு வாங்கனு’ என்று அதே சோதிடர் சொன்னதைக் கேட்டு  திருநள்ளாறுக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னர் தான் அண்ணாச்சியை அந்தக் கோயிலில் பதுங்கி இருந்த சனி உண்மையாகவே பாய்ந்து பிடித்திருக்க வேண்டும்!

திருநள்ளாறு சனீஸ்வர பகவானைக் கும்பிட்டு விட்டு அருகில் இருந்த ஜீவசோதியின் ஊருக்கு அடியாட்களுடன் சென்று பணத்தைக் கொடுத்து அவரைச் சரிக்கட்டப் போய் தகராறு செய்த போதுதான் மறுபடி அண்ணாச்சி சட்டத்தின் கைகளில் மாட்டுப்பட்டார்.

ஜீவஜோதியைக் கடத்த முயன்ற குற்றச் சாட்டில் அண்ணாச்சியை மீண்டும் காவல்துறை கைது செய்து சிறைக்குள் அடைத்து விட்டது. சிறையில் இருந்து மறுபடியும் பிணையில் வெளிவர எடுத்த முயற்சி எல்லாம் கைகூடவில்லை!

இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஜீவசோதி கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே தருகிறேன்.

“கடந்த 2003 யூலை 15 ஆம் தேதி இரவு 9 மணிக்கு நானும், எனது தாயும் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ராஜகோபால், அவரது வக்கீல் ராஜேந்திரன், சுப்பிரமணியன், கணேசன், தரணிகராஜன் மற்றும் அவரது ஆட்கள் வீட்டினுள் புகுந்தனர்.

ராஜகோபால் கையில் கம்பியும், ஒரு பையும் இருந்தது. பையில் ரூ. 6 இலட்சம் பணம் உள்ளது இதைப் பெற்றுக் கொண்டு தனக்கு ஆதரவாக சாட்சி கூறினால், உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது.  பணம் வாங்கவில்லை என்றால் சாந்தகுமாரைக் கொலை செய்தது போல உன் குடும்பத்தையும் அழித்து விடுவோம்’ என்றார்.

அப்போது டிரைவர் தரணிராஜன் கத்தியால் குத்த வந்தார். என் தம்பி தடுத்ததால் வலது கையில் காயம் ஏற்பட்டது. உடன் எனது தந்தை கத்தியை பிடுங்கி எறிந்தார். மாமா தசமணி சத்தமிட்டதால் மக்கள் கூடினர். உடன் ராஜகோபால், அவரது ஆட்கள் காரில் தப்பினர்.”

அண்ணாச்சி தப்பி விட அவரோடு தேத்தாக்குடிக்குச் சென்ற அவரது வழக்கறிஞர் மாட்டிக் கொண்டார். ஊர்மக்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தார்கள்!

“ஜீவஜோதி விவகாரத்தில் கடந்த முறை கைதானபோது, பொலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பனும் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலம் மற்றும் கர்ணன் ஆகியோரும் தன்னை ரொம்பவே அலைக்கழித்தார்கள்” என்பதில் அண்ணாச்சிக்குச் சினம். அவர்களை எப்படிப் பழி தீர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவரை மடிப்பாக்கம் சோசியர் கூட்டம் ஒன்று முற்றுகையிட்டது.

‘அந்த மூன்று பேரின் புகைப்படங்களையும் வைத்துச் செய்வினை செய்தால் அவர்களுக்குப் பாதிப்பு நிச்சயம்” என்று சோதிடர்கள் அண்ணாச்சிக்கு குளையடித்தார்கள். சும்மாவே ஆடும் பேய்க்கு சாம்பிராணி காட்டினால் எப்படி? அண்ணாச்சி தலை ஆட்ட அதன்படியே செய்வினையும் செய்யப்பட்டது.

காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக ‘இந்த மூவருமே ஊழல் வழக்குகளில் சஸ்பெண்ட் ஆகவும், ஜோசியர்கள் மற்றும் மாந்திரீகர்கள் மீது அண்ணாச்சியின் நம்பிக்கை அதிகமாகிவிட்டது’ என்கின்றார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.

இதைத் தொடர்ந்து ‘திரும்பவும் ஜீவஜோதியோடு பழகணும். கோர்ட்ல ஜீவஜோதி எனக்கு எதிரா எதுவும் பேசக்கூடாது. இதுக்கும் ஏதாவது பூஜை பண்ணித்தாங்க..” என்று அண்ணாச்சி கேட்டதாகவும் உடனே அந்த மடிப்பாக்கம் ஜோசியர் குழு, சென்னைக்கு அருகிலுள்ள ஒரு சுடுகாட்டில் சிறப்புப் பூசை நடத்தி முடித்ததாகவும் செய்தி வெளிவந்தது.

சோதிடர் ரவி இப்போது என்ன சொல்கின்றார்? “அண்ணாச்சியின் சாதகப்படி டிசெம்பரில் அவருக்கு வெள்ளி திசை ஆரம்பமாகிறது. அவர் வருட முடிவுக்குள் வெளியில் வந்து விடுவார். முன்னரும் அவர் வெளியில் வந்துவிடுவார் என்று சொன்னேன். நான் சொன்னபடி அவர் பிணையில் வெளியில் வந்தார்’ என்கின்றார்.

ஆனால், பூந்தமல்லி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் ஏப்ரில் 27, 2002 அன்று  இராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூபா 55 இலட்சம் தண்டமும் விதித்து தீர்ப்பளித்தார். அந்தப் பணத்தில் ரூபா 50 இலட்சத்தை ஜீவஜோதிக்கு இழப்பீடாகத் தர வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இந்த உண்மைக் கதை ஒருவரது சாதகத்தை வைத்து இந்த இந்த இராசி வீட்டில் இன்ன இன்ன கோள்கள் நட்சத்திரங்கள்  நிற்பதால் சாதககாரருக்கு இன்ன இன்ன பலன்கள் உண்டு எனச் சொல்ல முடியாது என்பதை அய்யத்திற்கு இடமின்றி எண்பிக்கிறது. இராஜகோபாலது முன்னேற்றத்துக்கு 10 ஆண்டுகளாகப் பலன் சொல்லிவந்த சோதிடர் ரவி அவர் சிறையில் கம்பி எண்ண வேண்டி இருக்கும் என்று ஏன் முன்கூட்டியே அவரை எச்சரிக்கவில்லை?

சோதிடத் தொழில் ஏளனமாகவே பார்க்கப்படுகிறது. சோதிடர்கள் சமுதாயத்தின் குருவிச்கைகளாகவே பார்க்கப்படுகிறார்கள். “வைத்தியன் இறக்கு மட்டும் விடமாட்டான், பஞ்சாங்ககாரன் இறந்த பின்னும் விடமாட்டான்” என்ற பழமொழி அதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.

சோதிடர்களும் மனிதர்களே, அவர்களிடம் நிகழ்ந்தவற்றையோ நிகழப்போகின்றவற்றையோ முன்கூட்டி எதிர்வுகூறும் ஆற்றல் இல்லை. அப்படிச் செய்ய முடியுமென்றால் சாந்தி பரிகாரம், பூசை புனர்க்காரம் செய்து தங்களது சொந்த வாழ்க்கையில் எந்தச் சிக்கலும் துன்பமும் இல்லாமல் ஓகோ என்று வாழ்ந்திருப்பார்கள். ஆனால், நாம் காணும் சோதிடர்கள் யாரும் வாழ்க்கையில் கொடி கட்டிப் பறக்கவில்லை. ஏனையவர்களைப் போலவே அவர்களும் சராசரி வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்.

மனித இயல்புகளை அறிந்த சோதிடர்கள் தமக்கு நிகழ்கின்றவற்றையோ அல்லது  பிறருக்கு நிகந்தவற்றையோ சோதிடம் பார்ப்போருக்கு நிகழ்ந்தனவாகவோ, நிகழப் போவனவாகவோ மாட்டேற்றிக் கூறுவர்.  அங்ஙனம் கூறுங்கால், குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல் ஓரிரு நிகழ்ச்சிகள் சரியாக அல்லது ஒத்திருந்துவிடும். அதை வைத்துக் கொண்டு சோதிடம் மெய் என்று சிலர் வாதிடுவர். ஆனால், பகுத்தறிவு,  பட்டறிவு, ஆராய்ச்சி, அறிவியல் துணைகொண்டு ஆழந்து நோக்கின், சோதிடம் சுத்தப் புரட்டு என்பது விளங்கும். சில சோம்பேறிகள், உடலுழைப்பின்றி வாழ வகுத்த வழிகளில் சோதிடமும் ஒன்றாகும்.


சோதிடப் புரட்டு

’16இயற்கையின் மூல விதியை’க் கண்டுபிடித்த கெப்லர்

(38)

வானியல் பற்றிய அறிவை மேலும் பல படி உயர்த்தியவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தைசோ பிராகே (வுலஉhழ டீசயாந) என்பவராவர். தொலைநோக்கி கண்டு பிடிக்க முன்னர் வானுலகத்தை அவதானிக்க பல நுட்பமான கருவிகளைக் கண்டுபிடித்த பெருமை இவரைச் சாரும்.

டென்மார்க்குக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் இருந்த ருசயniடிழசப என்;ற தீவில் இருந்து கொண்டே தைசோ பிராகே (1546-1601) தனது ஆய்வுகளை மேற்கொண்டார். பிராகே கண்டு பிடித்த கருவிகள் கோள்களின் அசைவுகளை முன் எப்போதும் இல்லாதவாறு திருத்தமாகத் தீர்மானிக்க உதவின. பிராகே செவ்வாய் பற்றி விரிவான தரவுகளைத் தொகுத்தார். இந்தத் தரவுகள் பின்னர் கோள்களின் அசைவுகளைப் பற்றிய விதிகளை ஆக்குவதற்கும் செவ்வாயின் கோள்வீதி (ழசடிவை) வட்ட வடிவாக இல்லாமல் ஒரு நீள்வட்டத்தில் இருக்கிறதென எண்பிக்கக் கெப்லருக்கு (முநிடநச) பேருதவியாக இருந்தன.

பிராகே எல்லாவகையிலும் ஒரு வேடிக்கையான மனிதர். யார் கணக்கில் புலி என்பதை எண்பிக்கத் தனது மாணாக்கர் ஒருவரை வாள் சண்டைக்கு வருமாறு அறைகூவல் விடுக்க எதிரியின் வாள் அவரது மூக்கின் ஒரு பகுதியைச் சீவியது. அதன்பின் வெள்ளி மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட செயற்கை மூக்கை பிராகே பொருத்திக் கொண்டு நடமாடினார். அதற்கு அடிக்கடி எண்ணெய் பூசிக் கொண்டே இருப்பாராம்.

கிபி 1588 இல் ஒரு புதிய அரசர் டென்மார்க் நாட்டின் ஆட்சிக் கட்டில் ஏறியபோது அவரோடு பிராகே பிணக்குப் பட்டுப் பிராக் நகருக்குக் குடிபெயர்ந்தார்.

Astrologykepler37-2-235x300

இந்தக் குடிப்பெயர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் அங்குதான் அவர் பாடுபட்டுத் திரட்டிய தரவுகள் முழுதும் கெப்லரது கைக்குப் போய்ச் சேர்ந்தது. கெப்லர் பிராக்குக்குச் சென்று பிராகேயின் உதவியாளராகச் சேர்ந்து கொண்டார். 

பிராகே மூத்திரக் குழாயில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக இறந்து போனார். அவர் பிராக்கில் உள்ள ஒரு பிரபு அளித்த விருந்துக்குப் போய் இருந்தபோது இயற்கைக் கடன் கழிக்க வேண்டி இருந்தும் விருந்து அளித்தவர் மேசையை விட்டுப் போகுமுன் தான் எழும்புவது முறையல்ல என்று நினைத்ததால் அவர் அடக்கிக் கொண்டிருக்க வேண்டி இருந்ததுவே அவரது நோய்க்குக் காரணம் என்கின்றார்கள்.

பிராஹேயின் அவதானிப்புக்கள் முன்னைய வானியலாளர்களது அவதானிப்புக்களை விட ஆழமாகவும் திருத்தமாகவும் இருந்தன. முன்னைய வானியலாளர்கள் ஒரு கோளின் சுற்றுப் பாதையைச் சில தடவைகள்  மட்டும் அவதானித்தார்கள்.  ஆனால், பிராகே ஒரு கோளின் சுற்றுப் பாதையைத் ஆண்டுக்கணக்காகத் தொடர்ச்சியாக அவதானித்து அதன் பெறுபேறுகளைக் குறித்து வைத்தார். கோள்களின் இருப்புக்களை அவர் மற்றவர்களைவிட ஏழு மடங்கு திருத்தமாக அளந்தார். அவரது சில அவதானிப்புக்கள் முன்னரை விட தைசோ பிராகே முப்பது மடங்கு திருத்தமாக இருந்தன.

பிராகேயின் இத்தகைய திருத்தமான அவதானிப்புக்கள் காரணமாகவே கோள்களின் சுற்றுப் பாதைகளில் காணப்பட்ட முரண்பாடுகளைக் களைய முடிந்தது. அதுமட்டுமல்லாமல் அவரது உதவியாளர்களில் ஒருவரான கெப்லர் வானியலில் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கவும் ஏதுவாயிற்று.

பிராகே 1609 ஆம் ஆண்டு யுளவசழழெஅயை ழேஎய என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூல் இவருக்குத் “தற்கால அறிவியலின் தந்தை” என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது. முதல் முறையாக இந்த அறிவியலாளர் பேரெண்ணிக்கையில் குறைபாடான தரவுகளை ஒழுங்கு படுத்தி இயற்கையின் அடிப்படை விதியைக் (The  first time a scientist dealt with a multitude of imperfect data to arrive at a fundamental law of nature) கண்டு பிடித்தார்.

வானியலுக்கு பிராகேயின் பங்களிப்பின் சுருக்கம் பின்வருமாறு:

    1) தொலைநோக்கி கண்டு பிடிக்கும் முன்னர் இவர்தான் பல கருவிகளைக் கண்டு பிடித்துத் திருத்தமான அவதானிப்புக்களில் ஈடுபட்டார்.

    2) கோள்களின் அசைவுகளை, குறிப்பாக செவ்வாய் பற்றி, அவர் மேற்கொண்ட அவதானிப்புக்கள் கெப்லர் போன்ற வானியலாளர்களுக்குத் திருத்தமான தரவுகளைக் கொடுத்து உதவியது. இது இன்றைய ஞாயிறுமைய குடும்ப அமைப்பை உருவாக்கப் பேருதவியாக இருந்தது.

Image result for Supernova

    3) கிபி 1572 இல் பிராகே ஒரு விண்மீனைக் கண்டு பிடித்தார்.  இந்த விண்மீன்  வானத்தில் திடீரெனத் தோன்றி சுமார் 18 திங்கள் நீடித்து நின்றது. பின் அது மங்கி மங்கி மறைந்து விட்டது.  உண்மையில் அவர் கண்டு பிடித்த  நட்சத்திரம் புது நட்சத்திரம் அல்ல. அது வெடித்துச் சிதறிய ஒரு நட்சத்திரம் (Supernova) ஆகும். 

                                                                                                       4) கிபி 1577 இல் பிராகே ஒரு வால்மீனை (Comet) அவதானித்தார். அதன் இடமாறு தோற்றக் கோணத்தை (parallax) அளந்து அதன் தொலைவு  நிலாவை விட அதிகமானது எனக் கணக்கிட்டார். இந்தக் கண்டுபிடிப்பு வால்வெள்ளிகள் வானத்தில் எரியும் வாயு என்ற அரிஸ்தோட்டலின் முடிவுக்கு முரணாக இருந்தது. மேலும் வானம் மாறுவதில்லை என்ற கோட்பாட்டை இந்த வால்வெள்ளி  மாற்றிவிட்டது.

இடமாற்றுத் தோற்றக் கோணத்தை ஒரு சின்னச் சோதனை மூலம் கண்டு பிடித்து விடலாம். நீங்கள் இடது கண்ணை ஒரு கையால் மூடிக் கொண்டு நீட்டிய வலது கைப் பெருவிரலையும் அதன் பின்புலத்தில்; இருக்கும் ஒரு மரத்தையும் பாருங்கள். இப்போது வலது கண்ணை மூடிக் கொண்டு அதே பெருவிரலையும் மரத்தையும் பாருங்கள். அது இடம் மாறித் தோன்றும். காரணம் உங்கள் இடதுகண் வலதுகண் இரண்டுக்கும் இடையில் இடைவெளி இருப்பதால் அவை வெவ்வேறு கோணத்தில் உங்கள் விரலைப் பார்க்கின்றன. தொலைவில்  இருக்கும் மரமும் இடம்மாறித் தோன்றும். ஆனால், அந்தக் கோணம் சிறிதாக இருக்கும். உங்கள் இரண்டு கண்களுக்கு இடையிலான தூரத்தைத் தெரிந்து கொண்டால் முக்கோணக்கணிதத்தைப் (Trigonometry)  பயன்படுத்தி உங்கள் விரலின் தூரத்தைக் கணித்துக் கொள்ளலாம். இது இடமாறு தோற்றக் கோணம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கருத்துருவை வைத்தே வானியலாளர்கள் பல ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் விண்மீன்களின் சரியான தூரத்தைக் கணக்கிடுகின்றார்கள். இந்தக் கண்டு பிடிப்பு 150 ஆண்டுகளுக்கு முந்திய வானியலின் தோற்றத்தையே மாற்றி விட்டது. தொலைவில் உள்ள விண்மீன்கள் அண்ட வெளியில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அவை மிக மிகத் தொலைவில் இருப்பதால் அவற்றின் தோற்றக் கோணம் எங்கள் கண்ணுக்குப் புலப்டுவதில்லை.

    5) இடமாறு தோற்றக் கோணத்தை அதுவரை யாரும் செய்திராதவாறு அவர் கணக்கிட்டார். விண்மீன்களுக்கு  இடமாறு தோற்றக் கோணம் இல்லை என்பதைச் சரியாகத் தெரிந்து கொண்ட பிராகே பின்வரும் முடிவுகளுக்கு வந்தார்-

அ) அண்டத்தின் மையத்திலுள்ள  புவி அசைவற்றது, அல்லது

ஆ) விண்மீன்கள் வெகு தொலைவில் இருப்பதால் அவற்றின் இடமாறு தோற்றக் கோணம்  அளக்க முடியாதவாறு மிகச் சிறியது.

ஆனால், இவ்வாறு சிந்தித்த பிராகே நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருக்கிறது என்பதை நம்ப மறுத்தார். அதனால் அவர் புவிதான் அண்டத்தின் மையம் என்றும் அப்படியல்ல என்று சொன்ன கோபெர்னிக்கஸ் பிழை விட்டுவிட்டார் எனவும் நினைத்தார்.

    6) பிராகே அண்டம்பற்றிய வேறொரு மாதிரிப்படிவத்தை (Model) உருவாக்கினார். அது அரிஸ்தோட்டலின் மாதிரிப்படிவத்திற்கும் கோபெர்னிக்சின் மாதிரிப்படிவத்திற்கும் இடைப்பட்ட ஒன்றாகும். அதாவது புவி அண்டத்தின் மையத்தில் இருக்கிறது  ஏனைய கோள்கள் ஞாயிறைச் சுற்றி வருகின்றன என்பதாகும்.

Image result for Astronomer Brahe

இதனால் பிராகேயின் (Brahe)  அவதானிப்புக்கள் மிகத் திருத்தமாக இருந்தும் அதன் அடிப்படையில் அவர் உருவாக்கிய கோட்பாடுகள் பிழையாக இருந்தன. வேறு விதமாகச் சொன்னால் அவதானிப்பில் அவர் ஒரு விண்ணராக விளங்கினார், ஆனால், அதன் அடிப்படையில் உருவாக்கிய கோட்பாடுகளில் சக்கட்டையாக இருந்தார்.

Brahe

பிராகேயை அடுத்து வானியல் துறையில் பெரிய புரட்சியை செய்தவர் கோபெர்னிக்கன் ஆவார். ஞாயிறுமையக் கோட்பாட்டுக்கு உயிர் கொடுத்த மும்மூர்த்திகளில் ஒருவர் என அழைக்கப்படும் யோகான்ஸ் கெப்லர் (Johannes Kepler – கிபி 1571-1630) ஆவார்.

கெப்லர் இன்றைய ஜெர்மனி நாட்டின் (அன்றைய புனித உரோம பேரரசு) Wurttemburg நகரில் 1571 டிசெம்பர் 27 இல் பிறந்தார். வறிய குடும்பத்தில் பிறந்த இவர் இளமையில் மிகவும் நோஞ்சலாகக் காணப்பட்டார். ஆனால், படிப்பில் மிகவும் சுட்;டியாக இருந்ததால் துபின்ஜென் (Tubingen)  பல்கலைக் கழகத்தில் படிக்கப் புலமைப் பரிசில் பெற்றார். அங்கு அவர் கோபெர்னிக்கன் கோட்பாட்டைப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. அதன் பலனாக அந்தக் கோட்பாட்டை ஆதரித்துப் பேசவும்  எழுதவும் தொடங்கினார்.

கெப்லர் பிராக் நகரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அரச கணிதவிற்பனரான ரிசோ பிராகே இடம் சென்று அவரது உதவியாளராகச் சேர்ந்து கொண்டார்.

ஆனால், கெப்லரும் பிராகேயும் ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போக முடியவில்லை. எங்கே மிகவும் புத்திசாலியான தனது உதவியாளர் தன்னை மேவி விடுவாரோ என்ற அச்சம் பிராகேக்கு இருந்தது. அதனால் தன்னிடம் இருந்த முழுத் தரவுகளில் ஒரு பகுதியை மட்டும் கெப்லருக்குக் காட்டினார். செவ்வாயின் சுற்றுப் பாதையைத் தெரிந்து கொள்ளும் பணியை பிராகே கெப்லரிடம் கொடுத்தார். அது கெப்லருக்கு எளிதாக இருக்கவில்லை.

பிராகே அந்தப் பணியைக் கெப்லருக்குக் கொடுத்ததன் நோக்கமே அது சிக்கலானது என்பதால் கெப்லர் அதோடு மல்லுப் பிடித்துக் கொண்டிருக்கத் தான் அண்டத்தைப் பற்றிய ஆய்வில் கவனம் செலுத்தலாம் என்ற எண்ணமே.

இதில் உள்ள முரண்நகைச்சுவை (சைழலெ) என்னவென்றால் கெப்லர் கோள்களது அசைவுகள் பற்றிய சரியான விதிகளை வகுப்பதற்குச் செவ்வாய் பற்றிய பிராகேயின் தரவுகள்தான் அவருக்குக் கைகொடுத்து என்பதுதான். இதனால் வானியலை முன்னெடுப்பதில் கெப்லர் பிராகேயை முந்திக் கொண்டு அவையின் முன் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டார்.

யோகான்ஸ்  கெப்பலர்      பிராகே போலல்லாது கெப்லர் கோபெர்னிக்கன் ஞாயிறுமையக் கோட்பாட்டை முற்றாக நம்பினார். கோபெர்னிக்கஸ் ஞாயிறை அண்டத்தின் மையத்தில் சரியாக வைத்தார். ஆனால், கோள்களின் சுற்றுப்பாதை வட்ட வடிவமானது என்று அனுமானித்ததில் கோபெர்னிக்கஸ் பிழை விட்டுவிட்டார். அதனால் கோபெர்னிக்கன் கோட்பாட்டில் கோள்களின் அசைவுகளை விரிவாக விளக்க சிறு வட்டங்களின் (epicycles) தேவை ஏற்பட்டது.

இந்தப் புதிரின் கடைசி முடிச்சை அவிழ்ப்பதில் கெப்லர் வெற்றி கண்டார். ஆனால், அதைத் தவிர்ப்பதற்கு அவர் பல நாள் போராடினார்.

முடிவில் கோள்களின் சுற்றுப்பாதை வட்டவடிவமானது என தொலமி நினைத்தது போலவோ அதனை ஓரளவு ஏற்றுக்கொண்ட கோபெர்னிக்சைப் போலவோ அல்லாது அது தட்டையான நீள்வட்டமாக இருக்கிறது என கெப்லர் சொன்னார்.

Astrologyelliptic37-2-150x105

முன்னர் கூறியவாறு பிராகே செவ்வாய்க் கோளத்தைப்பற்றிக் கொடுத்த தரவுகளைக் கொண்டே கெப்லர் இந்த முடிவுக்கு வந்தார். செவ்வாய்க் கோளின் ஓடுபாதையே மற்றைய கோள்களைவிட நீள்வட்டமாக (நடடipளந) அமைந்திருக்கிறது.

பிராகே 1601 இல் இறந்தபோது அவரது இடத்துக்குக் கெப்லர் நியமிக்கப்பட்டார். அதன் பலனாக பிராகே சேகரித்து வைத்திருந்த தரவுகள் அனைத்தும் கெப்லரது கைக்கு மாறியது. பிரகேயின் குடும்பத்தினர் அந்தத் தரவுகளைக் கொடுத்துப் பணம் தேட எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. கெப்லர் அதனைச் சட்டப்படி பெற்றுக் கொண்டார் என்றும் சொல்ல முடியாது. எது எப்படியோ பிராகே திரட்டி வைத்திருந்த தரவுகள் கெப்லர் கோள்களின் அசைவுகளைப்பற்றி வகுத்த மூன்று விதிகளை உருவாக்கப் பெருமளவு உதவியது.

கெப்லர் மொத்தம் மூன்று விதிகளைக் கண்டு பிடித்தார். 1621 ஆம் ஆண்டு ஏழு தொகுதிகளைக் கொண்ட வானியலின் சுருக்கம் (The Epitome Astronomiae Copernicanae)  என்ற நூலை வெளியிட்டார். இவர்தான் முதன் முதலில் கணிப்புகளுக்கு மடக்கையைப் (டுழபயசiவாஅ) பயன்படுத்தி கோள்களின் சென்ற கால அல்லது வருங்கால நிலைகளைத் துல்லியமாகக் கண்டுகொள்ள வழிவகுத்தார்.

புதன் மற்றும் வெள்ளிக் கோள்கள் ஒரே நேர்க் கோட்டில் வருவதை இவர் முன்கூட்டியே கணக்கிட்டுச் சொன்னார். ஆனால், அந்த நிகழ்வு இடம்பெறும் முன் 1630 ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். கெப்லர் பல கண்டுபிடிப்புகளின் தந்தை ஆவார். அவற்;றில் குறிப்பிடத்தக்க சில:

 (1) கோள்களின் அசைவுகளை முதன் முதலாகச் சரியாகக் கணக்கிட்டு விளக்கியதன் மூலம் வானுலக நுட்பங்களுக்கும் இயற்கை விதிகளுக்கும் ( Natural laws) அவர் கால்கோள் இட்டார். இயற்கை விதிகள் என்பது எங்கும் நிறைவானது, சரியானது, சோதனை செய்து பார்க்கக் கூடியது.

 (2) இவர் எழுதிய  Stereometrica Doliorum என்ற நூல் ஒருமுனைப்படுத்தப் பட்ட கல்கியூலசுக்கு (integral calculus) அடிப்படையாக அமைந்தது.

 (3) கடல் பொங்குவதற்கான காரணம் சந்திரனும் ஞாயிறும் என முதன் முதலில் கூறியது.  இதற்காகக் கலிலியோ அவரைக் கண்டித்தார்.

 (4) ஞாயிறு தனது அச்சில் சுழல்கிறது என முதலில் சொன்னது.

 (5) கிறித்து நாதரின் பிறந்த நாளைச் சரியாகக் கணக்கிட்டுச் சொன்னது. அது இன்று உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது.

 (6) தொலைநோக்கி எப்படி இயங்குகிறது என்பதை முதன் முதலில் விளக்கியது.

 (7) விண்மீன்களின் தூரத்தைக் கணக்கிட புவியின் சுழற்சியால் ஏற்படுகிற ளவநடடயச pயசயடடயஒ யைப் பயன் படுத்தியது.


சோதிடப் புரட்டு

விண்ணை ‘ஞானக்’ கண்ணால் பார்த்த கலிலியோ!

(39)

நிலாவின் தொலைவைக் கிட்டத்தட்ட சரியாகக் கணக்கிட்டு அறிந்த கிரேக்கர்களின் வானியல் சாதனைகள் அத்தோடு தேங்கி விட்டன. அதற்கு மேல் அண்டத்தின் நீள, அகல, உயரங்கள் பற்றி அவர்கள் செய்த ஆய்வுகள் திருத்தமாக அமையவில்லை. அரிஸ்தார்க்கஸ் ஞாயிறின் தொலைவைக் கண்டு பிடிக்க முயன்றார். அவர் கையாண்ட கணிதமுறை சரியானதுதான், ஆனால், ஞாயிறு பெருந்தொலைவில் இருக்கிற காரணத்தால் அவர் அளவிட வேண்டிய கோண வேறுபாடுகள் மிகவும் சிறியவையாக இருந்தன. அதனால் அவருக்குச் சரியான விடை கிடைக்காமல் போய்விட்டது. இவற்றை இற்றைக்கு இருக்கிற தற்கால கருவிகளால் மட்டுமே அளவிட முடியும்.

இருந்தும் கிமு 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்றாண்டுவரை அண்டம் பற்றிய சிந்தனை பெரும்பாலும் கிரேக்க தத்துவவாதிகளின் கோட்பாடுகளை ஒட்டியதாகவே இருந்தது. அவ்வப்போது கணிதவியல் அடிப்படையில் செப்பம் செய்யப்பட்டதேயொழிய புதிதாகப் பொதுக் கோட்பாடு எதுவும் உருவாக்கப்படவில்லை. பதின் மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரேக்கர்கள் வானியல் பற்றி எழுதிவைத்த கையெழுத்துப் படிகள் புதிதாக அய்ரோப்பாவில் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகங்களால் இலத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. அதனை அடுத்து வானியல் பற்றிய அறிவு அங்கு பரவத் தொடங்கியது.

.அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் இருண்ட காலத்தின்; (னுயசம யுபந) பின் தோன்றிய மறுமலர்ச்சிக் (Renissance) காலம் என வர்ணிக்கப்படுகிறது. மத்திய கால சிந்தனையில் சமயம் சார்ந்த சிந்தனையின் மேலாண்மை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு பரந்துபட்ட அறிவுத் திறனாய்வு தொடக்கி வைக்கப்பட்டது. மறுமலர்ச்சி அறிவியலாளர்கள் புவியை ஒரு சடப் பொருளாகப் பார்க்கும் ஒரு புதிய ஊழியைத் (நசய) தொடக்கி வைத்தார்கள். அதன் மூலம் அறிவியல் தளத்தில் அறிவியல் அடிப்படையான சிந்தனை, பார்வை இரண்டிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்.

வானியல் மேம்பாட்டுக்கு கெப்லரின் பங்களிப்பு கணிசமானது என்பதைப் பார்த்தோம். அவரை அடுத்து வானியலின் வளர்ச்சிக்கு கலிலியோ கலிலி (1564-1642) ஆற்றிய பங்களிப்பு மிகவும் பாரியது.

கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி வானியல் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாகும். உண்மையில் கலிலியோ தொலைநோக்கியைக் கண்டு பிடிக்கவில்லை. அதைக் கண்டு பிடித்தவர் ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த லெயிடன் (Leyden) ஆவார்.

கலிலியோ பிசா நகரத்தில் 1564 பெப்ரவரி 15 இல் பிறந்தார். இளமை யிலிருந்தே இயற்கை மீதும் அறிவியல் மீதும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே இயற்கை நிகழ்வுகளை அறிவியல் கண்கொண்டே பார்த்தார். கலிலியோவின் தந்தையார் வின்சென்சோ கலிலி ஒரு புரட்சிகர இசைக் கலைஞர். தேவாலயங்களில் இசைக்கப்படும் இசை கவர்ச்சியற்றது எனக் கருதிய அவர் கிரேக்க பாடல்கள் மற்றும் புராணங்களை அடிப்படையாக வைத்துத் தற்கால இசை வடிவங்களை அமைத்தார். இவரது முயற்சியே பின்னர் இத்தாலிநாட்டின் புகழ்பெற்;ற ஓபெரா (Opera) என்ற இசை நாடகமாக உருப் பெற்றது.

கலிலியோ தனது 17வது அகவையில் பிசா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அவரது தந்தையாரின் அறிவுரைப்படி அங்கு மருத்துவம் படித்தார்.  பின்னர் அதனைக் கைவிட்டுக் கணக்கியல் படிக்கத் தொடங்கினார். அப்போது மிகவும் புகழுடன் விளங்கிய திக்சி ( Ricci) என்பவரிடம் கலிலியோ கணிதத்தில் பாடம் கேட்க அவரது தந்தையார் ஒழுங்கு செய்தார்.

கணித பாடத்தில் கலிலியோ மிகவும் கெட்டிக்காரராக விளங்கினார். கிரேக்க தத்துவவாதி ஆர்க்கிமிடீஸ் (கிமு 287-212) கண்டுபிடித்த முடிவுகளுக்கு மேலாகச் சிலவற்றைக் கண்டு பிடித்தார். அவரது 25 ஆவது அகவையில் அதே பல்கலைக் கழகத்தில் கணக்கியல் பீடத்துக்குத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

புpசாவில் இருந்து வெனிஸ் குடியரசுக்குச் சென்றார். தலைநகரமான வெனிசின் அன்றைய மக்கள் தொகை 150,000 ஆக இருந்தது, ஆனால், அந்த நகர மக்கள் ஆண்டில் 44 மில்லியன் (4.4 கோடி) போத்தல் வைனைக் காலி பண்ணினார்களாம்!

1599 ஆம் ஆண்டு கலிலியோ மரினா கம்பா (Maria Gamba) என்ற 21 வயது நிறைந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

வெனிசில் பல பெருங்குடி மக்களின் (Nobles) நட்பு கலிலியோவிற்குக் கிடைத்தது. அதில் ஒருவர் வெனிஸ் குடியரசின் அரச சமயவாதியான பிரா பாஓலா சர்ப்பி (குசய Pயழடய ளுயசிi) ஆவார்.

1604 ஆம் ஆண்டு அய்ரோப்பா கண்டத்து வானியலாளர்கள் மத்தியில் வானத்தில் தோன்றிய வால்வெள்ளி ஒன்று பெரிய திகைப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கியது. கோள்கள் நீங்கலாக அண்டவெளி மாற்றத்துக்கு ஆளாகாத நிரந்தர காட்சி என்று நம்பப்பட்டது. இப்போது வானத்தில் ஒரு வால்வெள்ளி திடீரெனத் தோன்றியது அண்டவெளி பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது.

1609 ஆம் ஆண்டு கலிலியோவிற்கு ஒரு செய்தி எட்டியது. அது அவரின் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.

Image result for galileo galilei

ஒல்லாந்து நாட்டில் வாழ்ந்த லெயிடன் (Leyden) என்பவர் முதன் முதலாகக் கண் பார்வை குறைந்தோரது பாவனைக்கு மூக்குக் கண்ணாடி ஒன்றினைக் கண்டு பிடித்ததாகக் கலிலியோ  (Galileo Galilei) கேள்விப்பட்டார். அது பற்றிய தகவலை அறிந்து கொள்வதற்கு அவர் ஒல்லாந்து நாட்டுக்கு செலவு மேற்கொண்டார். அங்கு சென்ற அவர்    கலிலியோ கலிலி

அதன் செய்முறையைக் கற்றுக் கொண்டார். தொடக்கப் பின்னடைவுக்குப் பின்னர் படிப்படியாக ஒரு பொருளை 20 மடங்கு பெரிதாகக் காட்டும் 60 x தொலைநோக்கியை உருவாக்கினார். அதன் உதவியோடு (1610) வான்வெளியைப் அவர் அண்ணாந்து பார்த்தபோது தற்கால வானியல் பிறந்தது!                                   

அதே சமயம் கடவுள் படைப்புப் பற்றிய கத்தோலிக்க மதத்தின் நம்பிக்கைகள், கோட்பாடுகள் பொடிப் பொடியாகத் தகர்ந்து கொட்டுண்டு போயின!

ஞாயிறில் கறுப்புப் பொட்டுக்கள் இருப்பதைக் கலிலியோ தொலைநோக்கி மூலம் கண்டறிந்தார். அந்தக் கண்டுபிடிப்பு ஞாயிறு மாசுமறுவற்ற விண்மீன் என்ற மத நம்பிக்கையைச் சிதைத்தது.  இதனால் கலிலியோவிற்கும் யேசு சபையினருக்கும் இடையில் மோதல் எழுந்தது.

இந்தக் கால கட்டத்தில் கிறித்தவ திருச்சபையின் ஒரு பிரிவினரான டொமினிக்கன்ஸ் (Dominicans) கோபெர்னிக்கன் அண்டகோளக் கோட்பாடு பற்றித் தெரிந்து கொண்டு அதற்கு எதிராகப் பரப்புரை செய்யத் தொடங்கினார்கள்.  அய்ந்தாவது போப்பாண்டவர் போல் (Pope Paul V) கோபெர்னிக்கன் கோட்பாட்டைத் தான் புறந்தள்ளிய செய்தியை கலிலியோவிற்குத் தெரிவிக்குமாறு பெலாமினைக் கேட்டுக் கொண்டார்.  மேற் கொண்டு கலிலியோ  புவி ஞாயிறைச் சுற்றுகிறதென்ற  கோட்பாட்டை வைத்துக் கொள்ளவோ அதனை ஆதரித்துப் பேசவோ அல்லது மற்றவர்களுக்குப் படிப்பிக்கவோகூடாது எனவும் கட்டளை பிறப்பித்தார். கலிலியோ எழுதிய  புவி வலம் வருகிறது என்ற நூல் தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

1618 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் வானத்தில் 3 வால்வெள்ளிகள் தோன்றின. அந்த வால்வெள்ளிகள் கோள்களின் பாதைகளுக்கு அண்மையாக வலம் வருவதாக யேசுசபையைச் சேர்ந்த ஒரு முக்கிய மதபோதகர் எழுதினார். ஆனால், கலிலியோ அந்த வால்வெள்ளிகள் பெருமளவு நேர்க்  கோட்டில் சுற்றிவருவதாகச் சொன்னார். இதனால் அவருக்கும் யேசுசபையினருக்கும் இடையில் உள்ள பகைமை மேலும் வலுத்தது.

1623 ஆம் ஆண்டு 8 ஆவது போப் ஏர்பன் (Pழிந ருசடியn  ஏ111) பதவிக்கு வந்தார். புதிய போப்பாண்டவர் தன்னை ஒரு கல்விமானாகக் கருதினார். கலிலியோவின் கோட்பாட்டைப் போற்றினார். புதிய போப்பாண்டவரின் வருகைக்குப் பின்னர் கோபெர்னிக்கன் கோட்பாடு எங்கும் பரவியது. 1632 ஆம் ஆண்டு கடற்பெருக்குப் பற்றிய உரையாடல் (Dialogue on Tides) என்ற நூலை கலிலியோ வெளியிட நினைத்தார். ஆனால், அதன் தலைப்பு  புவி ஞாயிறைச் சுற்றிவருகிறது என்ற கருத்தைக் கொடுப்பதாக இருந்ததால் அதனை மாற்றுமாறு அவர் எச்சரிக்கப்பட்டார். எனவே அவர் அதன் பெயரை தொலமி மற்றும் கோபெர்னிக்கன் இருவரது உலகுபற்றிய இரு முக்கிய முறைமைகள் பற்றிய உரையாடல் (Dialogue Concerning the Two Chief systems of the World-Ptolemaic and Copernican)  என மாற்றினார்.

கலிலியோவின் நூல் வெளியானதும் அதனை உடனே நிறுத்துமாறு உரோம் நகர மதவிசாரணை மன்றம் (Inquisition) ஆணை பிறப்பித்தது. அறுபத்தொன்பது அகவை நிரம்பிய கலிலியோ கொற கொறவென இழுத்துவரப்பட்டு  நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். அவரது கை கால்கள் நடுங்கின, உதடு உலர்ந்து போயிருந்தது. நீதிமன்றத்தில் கோபெர்னிக்கன் கோட்பாட்டை வெளியில் சொல்லக்கூடாது என்று யாரும் பணித்ததாகத் தனக்கு நினைவு இல்லை என்று கலிலியோ வாதாடினார். நீதிமன்ற விசாரணை நூலில் சொல்லப்பட்ட அறிவியல்பற்றி இருக்கவில்லை. கலிலியோ போப்பாண்டவரின் பணிமுறைக் கட்டளையை மீறினாரா இல்லையா என்பது பற்றியே விசாரணை இருந்தது.

நூலில் கூறப்பட்ட கருத்துக்கள் பிழை என்று கலிலியோ ஒத்துக் கொண்டால் குறைந்த தண்டனை கொடுக்கப்படும் என்று அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. அதனை ஒத்துக் கொண்ட கலிலியோ தானே தனது வாதத்தினால் அள்ளுப்பட்டுப் போனதாகக் கூறினார். அவருக்கு முதலில் காலவரையற்ற சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்குப் பின்னர் அவரது சிறைத் தண்டனை வீட்டுக் காவலாக மாற்றப்பட்டது. தனது மூப்புக் காலத்தில் கலிலியோ தான் எழுதிய நூலில் தனது கைப்படப் பின்வருமாறு எழுதினார்:

“மதவாதிகளே! நீங்கள் ஞாயிறு – புவிபற்றிக் கொண்டுள்ள நம்பிக்கை ஒரு காலத்தில் புவி நிலையாக இருக்கிறது ஞாயிறு அதைச் சுற்றி வருகிறது என்பவர்களை நம்பிக்கைஈனர்கள் எனப் பெயர் சூட்ட வைத்துவிடும். அப்போது புவி ஞாயிறைச் சுற்றுகிறது என்ற உண்மை சடப்பொருள் மற்றும் ஏரண (logic) அடிப்படையில் எண்பிக்கப்படும் என நான் நினைக்கிறேன்.”

சிறையில் கண்பார்வை இழந்த கலிலியோ 1642 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply