தமிழருக்கான கனடா லிபரல் கட்சியின் தேர்தல் அறிக்கையும், தற்போதைய லிபரல் அரசாங்கத்தின் போக்கும்

தமிழருக்கான கனடா லிபரல் கட்சியின் தேர்தல் அறிக்கையும், தற்போதைய லிபரல் அரசாங்கத்தின் போக்கும்

கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து விரைவில் மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன.

கடந்த தேர்தலின் போது லிபரல் கட்சியின் தமிழர்களுக்கான தேர்தல் அறிக்கையில் (Platform for Tamils) இலங்கையில் மனித உரிமைகள் மீறல் பற்றிக் குறிப்பிடப்பட்டு பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அவை பிரச்சார அறிக்கைகளாகப் பிரசுரிக்கப்பட்டு கனடாத் தமிழர்களின் ஆதரவை லிபரல் கட்சி பெருமளவில் பெற்றுக்கொண்டது என்பது யாவரும் அறிந்த உண்மை.

பதவிக்கு வந்த பின்னர் கனடாவின் லிபரல் அரசாங்கம் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த எந்தவொரு நடவடிக்கையாவது ஆக்கபூர்வமாகச் செய்திருக்கிறதா என்று வினாவினால் அதற்கு ‘இல்லை’ என்றே பதில் கிடைக்கிறது.

இந்த இடத்தில் தான் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 2015 தேர்தல் வருவதற்கு முன்பு லிபரல் கட்சி தமிழர்களின் ஆதரவை பெற பெரும் பிரயத்தனம் செய்துவந்தது.

ஹாப்பர் எடுத்து வந்த நடவடிக்கைகளுக்கும் மேலாக தம்மால் செய்ய முடியும் என்ற பிரச்சாரத்தையும் தமிழர்களிடையே கட்டவிழ்த்திருந்தது.

தேர்தல் காலத்தில் (Platform for Tamils) என்று லிபரல் கட்சி அந்த நேரத்தில் வெளியிட்ட திட்டம் அந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியேயாகும்.

Platform for Tamils திட்டத்தில் பங்கேற்றவர்களில் 7 பேர் தேர்தலில் வென்று இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாகியிருக்கின்றனர். அவர்களுள் இன்றைய அமைச்சர்களாக இருக்கும் சிலரும் அடங்கும்.

ஆனால் தேர்தல் வெற்றியின் பின்னர் Platform for Tamils தான் உறக்க நிலைக்குச் சென்றுவிட்டது. அது மரணித்துவிட்டதா என்றும் தெரியவில்லை சிறிலங்காவோடு இணக்கப்பாட்டுடன் நடப்பதாயின் பின்பற்றவேண்டிய மூன்று கடப்பாடுகளை கனடாவின் லிபரல் கட்சி முன்மொழிந்துள்ளதாக சந்திப்பின் பின்னர் அறிவிக்கப்பட்டது.

அங்கு சொல்லப்பட்ட கடப்பாடுகளாக,

  1. இலங்கையில் பொறுப்புக் கூறல் (Accountability in Sri Lanka)
  2. நிரந்தர அரசியல் தீர்வு (Permanent Political Solution)
  3. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் (Assisting the war affected families) என்பன இருந்தன.

இலங்கையுடனான இணக்கப்பாடு என்பது மேலே சொல்லப்பட்ட மூன்று கடப்பாடுகளின் நிறைவேற்றத்தில் தங்கியுள்ளது என்றும் முழங்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட சந்திப்பின்போது ‘பொறுப்புக்கூறல்’, ‘அரசியல் தீர்வு’ மற்றும் ‘போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்’ ஆகியவற்றை அடைவதற்கு கனடா மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியத்தை ஜஸ்ரின் ரூடோ வற்புறுத்தி வந்துள்ளார் என்றும் பெருமையாகத் தெரிவிக்கப்ட்டிருந்தது.

ஆனால் இன்று நடப்பது என்ன? இன்றுவரை மேலே சொல்லப்பட்ட மூன்று கடப்பாடுகளில் எதுவாகினும் நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இதுவரை லிபரல் அரசாங்கத்தில் இருந்து பதில் எதுவும் இல்லை.

எதிர்க்கட்சியான கொன்சவேடிவ் கட்சியின் Sherwood Park – Fort Saskatchewan நாடாளுமன்ற உறுப்பினரான Garnett Genuis MP நேரடியாகவே இது குறித்து நாடாளுமன்றத்தில் வைத்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு வெளியுறவு அமைச்சரான Hon. Chrystia Freeland லிபரல் அரசாங்கத்தினர் ‘செயல்பட்டுக்கொண்டிருப்பதாக’ ஒரு மழுப்பலான பதிலை கொடுத்ததைத்தான் காண முடிந்தது.

ஒருவேளை வெளியுறவு அமைச்சர் தெரிவித்தது போல அரசாங்கம் ‘செயல்பட்டு’, நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றனவென்றால் அதுகுறித்த விபரங்களை நாடாளுமன்றத்தில் தருவதற்கு வெளியுறவு அமைச்சர் ஏன் தயங்க வேண்டும்? காரணம் வெளிப்படையானது.

மனித உரிமை மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களின் கருத்துப்படி லிபரல் கட்சியினர் தாம் நிறைவேற்றுவதாக சொல்லியிருந்த மூன்று கடப்பாடுகளில் இதுவரை எதையும் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை.

மேலும், ‘இலங்கைத் தீவில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டுமென்றால் பொறுப்புக் கூறல் அவசியம்’ என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார் என்றும் அடிக்கடி லிபரல் கட்சியினரால் சொல்லப்பட்டு வருகிறது.

அந்த பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பிரதமரால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதையும் எங்கும் யாரும் தெரிவிப்பதாயில்லை. ஒருவேளை அடுத்த தேர்தல் வரும்வரை லிபரல் கட்சி காத்திருக்கிறதோ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

இதற்கு முன்பு, கொன்சவேடிவ் அரசாங்கம் பதவியில் இருந்தபோது சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த பொதுநலவாய மாநாட்டினைப் அன்றைய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் பகிஸ்கரித்திருந்தார் என்பது இங்கு நினைவுறுத்தப்பட வேண்டும்.

‘ராஜபக்சவுடன் கை குலுக்குவது மனித உரிமை மீறல்களை அங்கீகரிப்பது போலாகிடும்’ என்று கடுமையான தொனியில் அன்று முன்னாள் பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் தெரிவித்திருந்தார்.

ஹாப்பரின் கொன்சவேடிவ் அரசாங்கம் இலங்கையைப் பொறுத்தவரை போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் என்பனவற்றை தீவிரமாக கவனத்தில் கொண்டிருந்தது. மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றுக்கு ஆதரவளித்தல் தொடர்பான நீண்ட கால வரலாறு கனடாவுக்கு உண்டு.

நல்லிணக்க அரசாங்கத்துடன் கனடா அரசாங்கம் இணக்கமாக இருக்கவேண்டும். அது இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்று என்று சிலரால் சொல்லப்படலாம்.

அப்படியேயிருந்தாலும் அந்த இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப, இந்த முக்கியமான மூன்று கடப்பாடுகளும் எந்தவிதமான, ஒளிவு மறைவுகளும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன், கனடாவின் மற்றைய சர்வதேசக் கடமைகளுடன் ஒத்ததாக மேலெடுக்கப்பட்டு வரவேண்டும்.

ஒருவேளை லிபரல் கட்சியினர் தாம் பதவிக்கு வருவதற்காக தமிழருக்குத் தந்த தேர்தல் வாக்குறுதிகளே அவை என்றும் சமாதானங்கள் சொல்லப்படக்கூடும்.

தேர்தல் வாக்குறுதிகள் மீறப்பட்டு வருவதை ஒருபுறம் வைத்துவிட்டு, ஆளும் கட்சியாக வந்தபின் தம்மால் உறுதிமொழிபோலத் தரப்பட்ட மூன்று கடப்பாடுகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் குறித்த அறிக்கையொன்றாவது கூட அரசாங்கத் தரப்பில் இருந்து வெளிவராமல் இருப்பதுதான் வேடிக்கை.

சிந்தித்துப் பார்த்தால் மேலே சொல்லப்பட்ட கடப்பாடுகள் ‘தானாக நடந்துவிடும்’ என்ற நினைப்புடன் அரசாங்கக் கட்சியினர் இருக்கிறார்களா தெரியவில்லை.

அப்படி நினைப்பார்களேயானால் அது மாபெரும் தவறாகும். ‘தமிழருக்கான பண்டிகைகளின் போது வாழ்த்துக்கள் தெரிவிப்பது, விழாக்களின்போது கைகுலுக்கல்கள், போட்டோ எடுத்தல் போன்ற மாபெரும் விடயங்களை கனடா பிரதமர் செய்தாலே போதுமானது’

என அசட்டையாக ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல் விவகாரங்களை தொடர்ந்தும் கவனிக்காமல் லிபரல் கட்சியினர் இருப்பார்களேயானால் அடுத்த தேர்தல் களத்தில் தமிழ் மக்களின் ஆதரவை அவர்கள் இழப்பது நிச்சயம் என்பதை ஒரு எச்சரிக்கைபோல முன்கூட்டியே தெரிவிக்க வேண்டியுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புரிமை நோக்கிய நகர்வில் கனடா தனக்கு ஆதரவான நாடுகளை பட்டியலிட்டு அவற்றுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது நாம் அறிந்ததே.

அந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால்தான் ஸ்ரீலங்கா அரசுடன் உறவுகளை பேணும் வகையில் தாம் முன்னர் சொன்ன இலங்கையில் பொறுப்புக் கூறல், நீண்ட கால அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் என்ற மூன்று கடப்பாடுகளையும் ஜஸ்ரின் அரசு பின்போட்டு வருகிறது.

ஒரு அரசாங்கமாக இயங்கியும் இந்த நடவடிக்கைகளை செய்வதில் லிபரல் கட்சியினர் பின்நிற்கும் பட்சத்தில், இந்த அரசாங்கத்தினருக்கு உரிய அழுத்தம் கொடுக்குமாறு இங்குள்ள தமிழ் அமைப்புக்களும், தமிழ் ஊடகங்களும் மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கிக் கேள்விகளை எழுப்பிட வேண்டும்.

ஜனநாயக வழியில் எமது உரிமைகளுக்காக பாடுபடுவது என்பது இதுவேயாகும். ஜஸ்ரின் ரூடோ அரசாங்கத்தினது சிறிலங்கா அரச ஆதரவு நிலைப்பாடு மிகக் கவனமாக செய்யப்பட்டு வருகிறது.

தமக்கான தமிழ்க் கனேடிய மக்களின் வாக்கு வங்கியை சிதைத்து விடாத வகையில் மிக இரகசியமான முறையில் செய்யப்பட்டு வரும் இந்த தமிழர் விரோத முன்னெடுப்புக்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதும், இதற்கான காரணங்களை பொதுவெளி விவாதத்திற்கு எடுத்து வருவது தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்களின் கடமையாகிறது.

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply