முடிந்த மட்டும் நடுநிலையோடு இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது. இப்படியான அணுகுமுறையை பலர் கைக் கொள்வதில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என விமர்ச்சிப்பவர்கள்தான அதிகம்.
கட்டுரையாளரின் ஆதங்கங்கள் எனக்குப் புரிகிறது.
கடந்த கால கசப்பான அனுபவங்கள் தமிழர் தரப்பு எதையும் ஐயத்தோடும் தோல்வி மனப்பான்மையோடும் பார்க்கத் தூண்டுகிறது.
ததேகூ என்பது கட்சி அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. தமிழ்த் தேசிய ஆதரவு வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணி. ஒரே கட்சியில்லை என்பதன் அடையாளம்தான் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன.
ஹெல உறுமய மற்றம் ஜேவிபி இந்த இரண்டு கட்சிகளது சிங்கள பௌத்த தேசிய சிந்தனையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒன்று பட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கலை ஜேவிபி கட்சி ஆதரிக்கும் எனச் சொல்லுகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியும் இறங்கி வர வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.
“சர்வதேச அரசுகளை நம்பி அல்லது போர்க் குற்ற விசாரணைகளை நம்பி தமிழ் அரசியலை நடத்த முடியாது. நாம் எமது மக்களை நம்ப வேண்டும். அவர்களை நம்பும் அணுகுமுறைகளோடு இணைத்துச் செல்ல வேண்டும். இவை பரந்த, விரிந்த கருத்தாடலின் மூலமே வெல்லப்பட வேண்டும்” என்பது தவறான பார்வை. இன்றைய அரசியல் பூகோள அரசியல் என்ற அச்சில்தான் சுழல்கிறது. எமது மக்கள்தான் எமது பலம் என்பது சரி. ஆனால் அதுவே தொடக்கமும் முடிவும் அல்ல. பன்னாட்டு அரசுகளின் ஆதரவும் தேவைப்படுகிறது.
தமிழர்களது தேசிய சிக்கலை ததேகூ சர்வதேச மயப்படுத்தியுள்ளது. இது எமது வரலாற்றில் மிகப் பெரிய திருப்பு முனை. கடந்த காலங்களில் சர்வதேசங்களின் ஆதரவு தமிழர் தரப்புக்குக் கிடைக்கவில்லை. ஆதரவு கிடைக்காதது மட்டுமல்ல அதன் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டோம். 9-11 தாக்குதல் தெரிவித்த செய்தியை நாம் செவி மடுக்க மறுத்தோம். கணக்கில் எடுக்கத் தவறினோம்.
எமக்கு இரண்டு எதிரிகள் ஏக காலத்தில் இருக்கும் போது அதில் ஒரு எதிரியோடு கைகோர்த்து மற்ற எதிரியை வெல்ல வேண்டும். இந்த உத்தியைத்தான் 2015 இல் ததேகூ கையாண்டது. ஒரு சிலர் மைத்திரியும் மகிந்தாவும் ஒன்று, பெயர்தான் வித்தியாசம் என மலட்டுத் தத்துவம் பேசினார்கள். இன்னும் சிலர் சிறிசேனா வந்தால் உடனடி இன்பம். பின்னர் துன்பம் என்றார்கள். மகிந்தா வந்தால் உடனடி துன்பம் பின்னர் இன்பம் என்று வரட்டு வேதாந்தம் பேசினார்கள்.
அதிகாரத்துக்கான போட்டியே அரசியல். அது சாத்தியமான கலை. அது எது சரி, எது பிழை அல்லது எது நல்லது என்பது பற்றி அல்ல. ஒருவர் விரும்பிய எல்லாம் கிடைத்துவிடும் என்பது சாத்தியமில்லை. அது இலட்சிய இலக்குக்கு மாறாக யதார்த்த அரசியலோடு – நடைமுறை சாத்திய அரசியலோடு தொடர்புடையது. சில சமயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் தேவைப்படும். இல்லாவிட்டால் கிடைக்கிறதும் கிடையாமல் போகும்இ நல்ல முடிவு கிடைக்கா விட்டால் அடுத்து எது நல்லது என்பது பற்றி யோசிக்க (second best) வேண்டும். இதைத்தான் ததேகூ கடைப்பிடிக்கிறது. கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் விடக் கூடாது.
நக்கீரன்
மனம் திறந்து விவாதிப்போம்
“கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடு சரியா? தவறா?” வி.சிவலிங்கம்
வாசகர்களே!
இலங்கையின் அரசியல் நிலமைகள் மிக மோசமடைந்து செல்கின்றன. பொருளாதாரமும், அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் உள்ளன. இந் நிலையில் தேசிய இனப் பிரச்சனைக்கான அடிப்படைத் தீர்வுகளை தற்போதைய சூழலில் எட்ட முடியுமா? என்பதே எம் முன்னால் உள்ள கேள்வியாகும். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள கூட்டமைப்பினர் தற்போது அரச யந்திரத்தின் பிரதான அங்கமாக செயற்படுகின்றனர். நாட்டின் ஸ்திரமற்ற அரசியல்,பொருளாதார காரணிகளால் தேசிய இனப் பிரச்னையைத் தீர்க்க முடியாத புறச் சூழல் கடினமாகிச் செல்கிறது. இந் நிலையில் கூட்டமைப்பினர் அரச பொறிமுறையில் இணைந்திருப்பதால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. எனவே அரசிலிருந்து வெளியேற வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
நாம் கடந்த காலங்கள் போல் அல்லாமல் உணர்ச்சிகளுக்க இடம் கொடுக்காமல், கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, யதார்த்த நிலமைகளையும் கவனத்தில் எடுத்து அரசியல் அணுகுமுறையை வகுத்துச் செல்ல வேண்டியள்ளது. தமிழர் தேசியக் கூட்டமைப்பானது ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் அதற்கு ஏற்ப அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. பல்வேறு நலன்களின் கலவையாக, தனி நபர்களின் ஆதிக்கம் நிறைந்ததாக,ஜனநாயகம் அற்றதாக காணப்படுகிறது. எனவே இச் சிக்கல் நிறைந்த சூழலில் கூட்டமைப்பிற்குள் அடிப்படை மாற்றங்கள் ஏற்படும் என எண்ணுவது ஓர் கனவாகும். ஆகவே பகிரங்க உரையாடல்களும், விவாதங்களுமே மாற்றத்திற்கான குறைந்த பட்ச கருவிகளாக உள்ளன.
இதன் காரணமாக இவ் விவாதம் நகர்த்தப்படுகிறது. வாசகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்,ஜனநாயக சக்திகள் இவற்றில் பங்கெடுத்து காத்திரமான ஜனநாயக சூழலை உருவாக்க உதவுவார்கள் என எண்ணுகிறேன். இக் கருத்துக்களில் பல மிகவும் விமர்சனங்களைத் தூண்டும் வகையில் தரப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் தேசிய இனங்களிடையே காணப்படும் ஆழமான பிளவுகளை நன்கு அடையாளப்படுத்தியுள்ளது. அதே ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் அதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இவை ஓர் நீண்ட கால அரசியல் போக்கில் காணப்பட்ட பண்பு மாற்றங்களின் விளைவுகளாகவே உள்ளன. அவற்றின் போக்கை சற்று மீள்பார்வையுடன் செல்வதே பொருத்தமானது.
2009ம் ஆண்டு மே மாதம் 19ம்திகதி போர் முடிவடைந்த போது சிங்கள பௌத்த தேசியவாதம் முன்னெப்போதையும் விட பலமாக காணப்பட்டது. நாட்டில் சிறுபான்மையோர் என்ற மக்கள் குழாம் இல்லை என நிராகரித்துச் சென்றது. அதிகாரச் செருக்கு, ராணுவ ஆதிக்கம், சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனையின் பலம் என்பன அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை 2வருட ஆட்சிக் காலம் மேலும் இருக்கையில் தேர்தலை நடத்த உந்தித் தள்ளியது.
நாட்டின் பொருளாதாரத் தேவைகள் பலவற்றைப் புறம் தள்ளி சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் ஆளணியுடன் நடத்தப்பட்ட போரிற்கு மிகப் பெரும் தொகையான கடன்களே உதவின. போர் முடிவடைந்ததும் மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவது சிக்கலாகியது. இதனால் போரின் போது பயன்படுத்திய சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனைகளை தொடர்ந்தும் மக்களிடம் எடுத்தச் செல்ல முடியவில்லை. சரிந்து செல்லும் மக்கள் ஆதரவு தேர்தலில் தோல்வியைத் தரலாம் என எண்ணிய அவர், எதிர்க் கட்சியிலும் பலமான அபேட்சகர் இல்லை என்பதால் அத் தருணத்தைப் பயன்படுத்தி தேர்தலில் குதித்தார்.
போரின்போது சிங்கள பௌத்த பேரினவாத சுலோகங்களால் மூடி மறைக்கப்பட்டிருந்த ஊழல்,குடும்ப ஆதிக்கம், இறுமாப்பு, அரச நிறுவனங்களைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகள்,பத்திரிகையாளர் மீதான தாக்குதல்கள் என்பன வெளியே தெரிந்தன. அரச நிறுவனங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், தலைநகரத்தை அண்டிய பகுதிகளில் காணப்பட்ட விலையுயர்ந்த நிலங்களின் விற்பனை, நிதித் துறையில் மோசடி, நீதித்துறைத் தலையீடு அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசரரின் வெளியேற்றம் என்பன பெரும் ஊழலுக்கான வாய்ப்புகளை அளித்தன.
அரச ஜனநாயக நிறுவனங்களின் அதிகாரங்கள் உதாரணமாக மாகாண சபைகளின் அதிகாரங்கள்‘தெவி நெகும’ மசோதா மூலம் பறிக்கும் முயற்சிகள் தொடர்ந்தன. சுயாதீன ஆணைக் குழுக்களை அமைத்து ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்தும் 17 வது திருத்தம் முடக்கப்பட்டு 18 வது திருத்தத்தின் மூலம் தேசிய சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பும் நிர்மூலமாக்கப்பட்டது.‘பொதுபல சேன’என்ற இனவாத பிக்குகள் அணியின் செயற்பாடுகளை ஆதரித்து சிறுபான்மைத் தேசிய இனங்களை குறிப்பாக முஸ்லீம் மக்களை அச்சத்தில், பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியது. தேசிய இனப் பிரச்சனைக்கு உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வினைத் தருவதாகக் கூறிய அரசு பின்னர் மௌனமாகியதோடு புலிகளின் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருப்பதாக புதிய கதைகளைப் புனைந்து வடக்கு, கிழக்கில் ராணுவத்தை நிரந்தரமாக வைத்திருக்க திட்டமிடப்பட்டன. அத்துடன் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் மாகாண நிர்வாகங்களுக்குள் அமர்த்தப்பட்டனர்.
1978ம் ஆண்டு நடைமுறைக்கு வந்து இன்னமும் செயற்பாட்டிலுள்ள இரண்டாவது குடியரசு யாப்பு நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனமாக்கியதோடு, ராணுவ அமைப்புகளையும் ஜனநாயக,சிவில் அமைப்புகளில் படிப்படியாக இணைத்துக் கொண்டது. எனவே தற்போதைய அரசியல் பொறிமுறையை இந்த வரலாற்றுப் பின்னணியுடன் இணைத்துப் பார்க்கையில் இன்றைய இலங்கை அரசியல் பொறிமுறை என்பது ராணுவ, ஜனநாயக அம்சங்கள் கலந்த ஒர் சிக்கலான கலவையாகவே உள்ளது.
இப் பின்னணியில் பல்வேறு மாற்றங்களை, நல்லாட்சியைத் தருவதாக வாக்குறுதி அளித்த மைத்திரி அரசு இச் சிக்கலான நிலமைகளிலிருந்து விடுபட அதிசயங்களை நிகழ்த்த முடியாது. அரசியல் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் பெரும் தொகையாக உள்ளன. ஊழலுக்கெதிரான வழக்குகள் முதல் பாராளுமன்றத்தில் தேவையான மசோதாக்கள் நிறைவேற்றம் வரை பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைப்பதானால் மக்கள் வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டும் என்பதால் அந்த மாற்றமும் சாத்தியமாகும் வாய்ப்பு இல்லை. கட்சிகளுக்குள்ளும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாகவும் ஆதரவு இல்லை. அரசியல் அமைப்பின் 18வது திருத்தம் ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து விடுபட்டு சமநிலையைப் பேணும் முறைக்குச் செல்வது கடினமாகவே உள்ளது.
2015ம் அண்டில் இடம் பெற்ற இரண்டு தேர்தல்களிலும் நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்கள் தமது நம்பிக்கையை பாரிய அளவில் வெளிப்படுத்தியிருந்தன. தேசிய இனப் பிரச்சனை தீர்க்கப்படாமல் தொடர்ந்து கூர்மை அடைந்து செல்வதற்குக் காரணமாக அமைந்த இரண்டு பிரதான கட்சிகளான ஐ தே கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன வரலாற்றின் முதற் தடவையாக தேசிய ஐக்கிய கூட்டணி அரசை உருவாக்கியதால் எழுந்த பெரும் நம்பிக்கையே அந்த ஆதரவாகும்.
எதிரும், புதிருமாக செயற்பட்ட இரண்டு கட்சிகளும் மைத்திரி அவர்களின் வருகையால் ஏற்பட்ட திடீர் அரசியல் திருப்பு முனையால் இணைந்தன. குறுகிய கால ஏற்பாடு என்பதால் நீண்ட கால அரசியல் முரண்பாடுகள் தற்காலிகமாகவே பின் தள்ளப்பட்டுள்ளன. பிளவுபட்ட அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளும், தனி நபர் ஆதிக்கமும் ஏற்படுத்தி வரும் தாக்கங்களை சமாளிப்பது புதிய ஜனாதிபதி எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது.
இந்த இணைந்த கூட்டணியில் இன்னொரு முரண்பட்ட சக்திகள் இணைந்துள்ளன. சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளான ஜாதிக ஹெல உறுமய, ஜே வி பி என்பவையாகும். இவை சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் என்பதால் அதிகார பரவலாக்கத்திற்கும், ராணுவத்தை விலக்குவதற்கும் எதிரான போக்கைக் கொண்டுள்ளனர். இவர்களையும் ஜனாதிபதி சமாளிக்க வேண்டும்.
1978ம் ஆண்டு அறிமுகமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையும்,அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தேர்தல் முறையும், அவற்றுடன் தொடர்ந்த போரும், அதன் தாக்கங்களும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் பாரிய சிந்தனை மாற்றத்திற்கு வித்திட்டன. போரின் தாக்கங்களும், விளைவுகளும், சர்வதேச ஆதரவும், அழுத்தங்களும், புலம்பெயர் தமிழர்களும் தமிழர் தலைமைக்குள்ளும் மாற்று அணுகுமுறைகளை நோக்கித் தள்ளின. இதன் விளைவாக தேசிய அரசியலில் தமிழ் அரசியலின் பங்களிப்பை மாற்ற உதவின.
இதன் காரணமாகவே 2015ம் ஆண்டின் தேர்தல்களில் ஆளும் தரப்பினரிடம் எந்தவித உத்தரவாதங்களையும் எதிர்பார்க்காமல் மைத்திரி-ரணில் அரசை கூட்டமைப்பினர் ஆதரித்தார்கள். இம் மாற்றத்திற்கான ஆதாரங்களை சுதந்திரத்திற்குப் பின்னதான அணுகுமுறைகளின் தோல்விகளின், அனுபவங்களின் பின்னிணியிலிருந்தே பார்க்க வேண்டும். எனவேதான் தமிழர் தரப்பில் காணப்படும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் செயற்பட கூட்டமைப்பு முயற்சிப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவே நீண்ட கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்கான புறச் சூழல்களைக் குலைக்காமல் அதே வேளை அங்கு காணப்படும் அவ்வப்போது எழும் மாகாண நிர்வாகத்திலும், காணிகளை விடுவிப்பதிலும் ராணுவத்தின் தலையீடு மற்றும் விடயங்களில் கவனம் செலுத்துகின்றனர்.
கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாட்டினை மேற்குறித்த விதங்களில் அணுகுவது என்பது அதன் அரசியலை ஏற்றுச் செல்வது என்பதாக அர்த்தப்படாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் அதன் ஜனநாயக கடமையைச் செய்யவும், அதன் போக்கு மீண்டும் ஒர் தோல்வியைத் தாராமல் தடுக்கவும் எடுக்கப்படும் கடமை எனக் கொள்ளுதல் வேண்டும். அதன் அரசியலை விமர்சிப்பது என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அல்லது தேர்தல் மூலம் மாற்றத்தைத் தேடும்போது மேற்கொள்ளப்பட வேண்டியது.இதே போன்று கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் போக்கை விமர்;சிக்கும் அமைப்புகள், தனி நபர்கள் மேலே தெரிவித்த பிரச்சனைகள் குறித்து தமது விளக்கத்தை முன் வைக்க வேண்டும். கூட்டமைப்பினை விமர்ச்சிப்பது மட்டும் அரசியலாக மாட்டாது.
மகிந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மத, இன விரோத செயற்பாடுகளால் பிளவுண்டுள்ள சமூகத்தை மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிக்கலாகிச் செல்கிறது. இன, மதவாத சக்திகள் அதிகார சக்திகளின் பின்னணியில் சட்டத்தை மதிக்காது செயற்பட்டன. ராணுவம்,பொலீஸ் என்பன அரசியல் மயப்படுத்தப்பட்டதால் சட்ட விரோத சக்திகள் பயமற்றுச் செயற்பட்டன. கூடவே இதர சமூக விரோத சக்திகளும் இணைந்து பலமான வலைப் பின்னலைக் கொண்டிருந்தன.
பலவீனமான ஜனநாயகக் அரசுக் கட்டுமானம் நாட்டின் பாதுகாப்பை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. அதன் காரணமாக பெரும் தொகையான தனி நபர்கள் ஆயுதக் குழுக்களாக, ஆயுத விற்பனையாளர்களாக, மனிதர்களைக் கடத்துபவர்களாக, போதை வஸ்து விற்பனையாளர்களாக மாறி நாட்டின் பாதுகாப்பு என்பது இவர்களின் கைகளிற்குச் சென்றுள்ளது. இதனால் சட்டம்,ஒழங்கை மீண்டும் பலப்படுத்துவது என்பது அல்லது இவ்வாறான வலைப் பின்னலை உடைப்பது என்பது மிகவும் சிக்கலாகவே உள்ளது.
கடந்த அரசு நாட்டின் தேசிய வருமானத்தை விட மிக அதிகமான கடன்களை மிக உயர்ந்த வட்டியில் பெற்றிருந்தது. துறைமுகங்கள், விமானத் தளங்கள், பெரும் தெருக்கள் அமைத்தல் என்ற போர்வையில் மிகப் பெருந்தொகையான தேசிய வளம் தனி நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. இவ் அபிவிருத்தித் திட்டங்களால் வருமானம் பெறுவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும். ஆனால் இவற்றை நிர்மாணிப்பதற்குக் குறுகிய கால கடன்கள் பெறப்பட்டுள்ளதால் கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கு தேசிய வருமானத்தில் பெரும் பகுதி செலவாகிறது. இதனால் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியவில்லை. விலைவாசி அதிகரிப்பால் தொழிற் சங்கங்களும், பொது மக்களும் அமைதி அற்று உள்ளனர். இவற்றைச் சமாளிப்பதும் ஜனாதிபதி எதிர் நோக்கும் இன்னொரு பாரிய பிரச்சனையாக உள்ளன.
இத்தனை பிரச்சனைகளும் சுமார் மூன்று வருடங்களை முடித்துள்ள அரசு முகம் கொடுக்கும் பிரச்சனைகளில் சிலவாகும். இன்னமும் இரண்டு வருடங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த அரசு சிங்கள- பௌத்த தேசியவாத சக்திகளுடன், ராணுவமும் இணைந்து நடத்தும் தடைகளை எவ்வாறு தாண்டுவது? ஜனநாயகத்தைப் பாதுகாப்பது?
வாசகர்களே!
இவ் விவாதங்கள் அரசைப் பாதுகாக்க உதவுகிறது என்ற ஒடுங்கிய பார்வைக்குள் அல்லாமல் பரந்த ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்தல் என்ற கோணத்தில் அணுகுவது பொருத்தமானது. இந்த அரசு ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளைத் தோற்கடிக்காது தடுக்கும் நோக்கத்துடன் முன் வைக்கப்படுகிறது. ஜனநாயக விரோத சக்திகள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பது மிகத் தலையாய தேவையாக உள்ளது.
தமிழர் தரப்பில் காணப்படும் அமைதியற்ற நிலை நியாயமானதாக இருப்பினும்.பரந்த ஜனநாயக அடிப்படைகள் பலமாக இல்லாதிருப்பின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது ஒருபோதும் சாத்திமில்லை. சர்வதேச அரசுகளை நம்பி அல்லது போர்க் குற்ற விசாரணைகளை நம்பி தமிழ் அரசியலை நடத்த முடியாது. நாம் எமது மக்களை நம்ப வேண்டும். அவர்களை நம்பும் அணுகுமுறைகளோடு இணைத்துச் செல்ல வேண்டும். இவை பரந்த, விரிந்த கருத்தாடலின் மூலமே வெல்லப்பட வேண்டும்.
முற்றும்.
( கட்டுரையாளரைத் தொடர்பு கொள்வதற்கு vsivalingam@hotmail.com)
Leave a Reply
You must be logged in to post a comment.