1 ஏக்கர்… ரூ 3 லட்சம் லாபம் – வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி!

1 ஏக்கர்… ரூ 3 லட்சம் லாபம் – வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி!

இ.கார்த்திகேயன்

இ.கார்த்திகேயன்
ஏ.சிதம்பரம்

மகசூல்இ.கார்த்திகேயன் – படங்கள்: ஏ.சிதம்பரம்

மிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். மழை இல்லாததால், ஆறுகளில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றில் தண்ணீர் இல்லை.

இந்நிலையில், ‘கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப சாகுபடிப் பரப்பைக் குறையுங்கள். இல்லையேல், குறைவான தண்ணீர்த் தேவைப்படும் பயிருக்கு மாறுங்கள்’ என்பதுதான் நீர் மேலாண்மை வல்லுநர்களின் ஆலோசனையாக இருக்கிறது. காலத்தின் கட்டாயத்தால், பல விவசாயிகள் இக்கோட்பாட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவபிரசாத்.

சிவபிரசாத், குறைவான தண்ணீர் பயன்படுத்தி ‘ரெட்லேடி’ ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்துவருகிறார். தூத்துக்குடி மாவட்டம், கானத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள கந்தசாமிபுரம் கிராமத்தில் உள்ளது, இவரது பப்பாளித் தோட்டம். பழங்கள், அறுவடை நடந்துகொண்டிருந்த சமயத்தில் சிவபிரசாத்தைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், மகிழ்ச்சியோடு வரவேற்றவர், ஒரு பழுத்த பப்பாளிப்பழத்தை நறுக்கிச் சாப்பிடக் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

“பூர்வீகமாவே விவசாயக் குடும்பம்தான். நெல், வாழைதான் இந்தப் பகுதியின் முக்கியப் பயிர். ரொபாஸ்டா, நேந்திரன் வாழை போடுவோம். பருவத்துக்கேத்த ஒட்டு ரக நெல்லைச் சாகுபடி செய்வோம். ஆரம்பத்துல இருந்தே ரசாயன உரம்தான் போட்டுட்டு இருந்தோம். நான் பள்ளிகள்ல படிக்கிறப்பவே விடுமுறை நாள்கள்ல தோட்டத்துல வேலை செய்ய வந்துடுவேன். களை எடுக்கிறது, வரப்பு வெட்டுறதுனு எல்லா வேலைகளையும் தெரிஞ்சுகிட்டு ஈடுபாட்டோட செய்வேன். அப்படியே கல்லூரி படிப்பு முடிச்சுட்டு விவசாயம் பார்க்கலாம்னு ஆசைப்பட்டேன். முதல் வருஷம் வாழை நடவு போட்டதுல ஒண்ணும் சரிப்பட்டு வரல. அதனால, மும்பை போய் இட்லிக் கடை வெச்சேன். அதுவும் சரிப்பட்டு வரல. அடுத்த வருஷமே ஊர் திரும்பிட்டேன்.

திரும்பவும் விவசாயமே செய்யலாம்னு முடிவு செஞ்சிருந்தேன். அந்தச் சமயத்துல ஒரு நாளிதழில் இயற்கை விவசாயம் பத்தி கட்டுரை வந்திருந்துச்சு. அதைப் படிச்சப்போ ஒண்ணும் புரியலை. ஆனா, இயற்கை விவசாயம் மூலமா உரம் போடாம விவசாயம் பண்ணலாம், நிலம் மலடாகாம பாத்துக்கலாம்னு மட்டும் தெளிவாகப் புரிஞ்சது. ஏன்னா, அந்தச் சமயத்துல ரசாயன உரத்தைக் கொட்டிக்கொட்டி எங்களோட நிலமே சிமென்ட் தரை மாதிரி இறுகிக் கிடந்துச்சு. தொடர்ந்து இயற்கை விவசாயம் பத்தின விஷயங்களைத் தேடிட்டு இருந்தேன். அப்போதான் ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு.

அதுல, சுபாஷ் பாலேக்கரோட ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை பத்தி ஒரு கட்டுரை வந்திருந்துச்சு. அதோட பயிற்சி வகுப்பு பத்தின அறிவிப்பும் இருந்துச்சு. உடனே ஈரோட்டுல நடந்த அந்த நாலு நாள் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செஞ்சிட்டேன். அந்தப் பயிற்சி வகுப்புல, செலவில்லாத இயற்கை முறை விவசாயத்தைப் பத்தி முழுமையாகத் தெரிஞ்சுகிட்டேன்.

பயிற்சியில கலந்துகிட்டு வந்த கையோட ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு ஏக்கர்ல நேந்திரன் வாழைச் சாகுபடி செஞ்சேன். சுமாரான மகசூல்தான் கிடைச்சது. ஆனா, எனக்கு மண்ணை வளமா மாத்துறதுதான் குறிக்கோளா இருந்துச்சு. ரெண்டாவது வருஷம் நல்ல மகசூல் கிடைச்சது” என்று தான், இயற்கை விவசாயத்துக்கு மாறியது குறித்து சொன்ன சிவபிரசாத் தொடர்ந்தார்.

“அடுத்தடுத்து பாரம்பர்ய ரக நெல், வாழை, பப்பாளினு ஜீரோ பட்ஜெட் முறையில் பயிர் செய்ய ஆரம்பிச்சேன். முழு இயற்கை விவசாயத்துக்கு மாறி, கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் ஆயிடுச்சு. இது மொத்தம் 6 ஏக்கர் நிலம். செம்மண் கலந்த மணல் பாங்கானது. நெல், வாழைக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுறதால அதைச் சுருக்கிக்கிட்டு, இப்போ பப்பாளி சாகுபடியை அதிகரிச்சிட்டேன். ஒரு ஏக்கர் நிலத்துல ரெட்லேடி ரகப் பப்பாளி மகசூல்ல இருக்கு. ஒன்றரை ஏக்கர் நிலத்துல ரஸ்தாலியும், 1 ஏக்கர் நிலத்துல பூலாஞ்செண்டு வாழையும் இருக்கு. வாழை அறுவடைக்கு வர இன்னும் நாலஞ்சு மாசமாகும். மூணு மாசத்துக்கு முன்னாடி ஒன்றரை ஏக்கர் நிலத்துல ரெட்லேடி ரகப் பப்பாளி நட்டேன். மீதி ஒரு ஏக்கர் நிலத்தை உழுது வெச்சிருக்கேன்.

பப்பாளியில் ஊடுபயிரா தட்டைப்பயறையும் வெங்காயத்தையும் போட்டிருந்தேன். பப்பாளிக்குக் கொடுத்த ஊட்டத்திலேயே, இது ரெண்டும் ஓரளவுக்கு விளைஞ்சது. அதை வீட்டுத்தேவைக்கு எடுத்து வெச்சிக்கிட்டேன். அறுவடை முடிஞ்சதும் தட்டைப்பயறு செடியை, அப்படியே விட்டு வெச்சிட்டேன். அது உயிர் மூடாக்காக மாறி கொஞ்ச நாள்ல அப்படியே மட்கி உரமாயிடுச்சு.

பப்பாளியைக் கன்றுகளாக வாங்கி நடவு செய்ய மாட்டேன். விதைகளா வாங்கி வந்து, நானே கன்றுகளை உற்பத்தி செஞ்சுக்கிறேன். எந்த மண்ணுல நடவு செய்யப்போறோமோ, அதே மண்ணுல உற்பத்தி செய்றப்போ நல்ல தரமான கன்றுகள் கிடைக்குது” என்ற சிவபிரசாத் விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“கானம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் பகுதிகள்ல இருக்கிற பழக்கடைகளில்தான் பப்பாளியை விற்பனை செய்திட்டிருக்கேன். இந்தப் பகுதியில எல்லா விவசாயிகளுமே வாழை, பப்பாளி ரெண்டையும் பரவலா சாகுபடி செய்றாங்க. அதனால, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பப்பாளினு கூடுதல் விலையெல்லாம் கிடைக்கிறதில்ல. ஆனா, இயற்கையில் விளையுறதாலயும், சுவை அதிகமா இருக்கிறதாலயும், அதிக நாள் இருப்பு வைக்க முடியுங்கிறதாலயும் என்னோட பழங்களைக் கடைக்காரங்க கேட்டு வாங்குறாங்க.

இப்போ ஒரு ஏக்கர்ல போட்டிருக்கிற பப்பாளிதான் மகசூல் கொடுத்துட்டு இருக்கு. பறிப்புக்கு வந்ததுல இருந்து 9 மாசமா காய் பறிச்சுக்கிட்டு இருக்கேன். நடவு செஞ்சது 860 மரங்கள்; அதுல 40 மரங்கள் சரியா வளரல. மீதி மரங்கள்ல இருந்துதான் பழங்கள் கிடைச்சிட்டு இருக்கு. முதல் ரெண்டு மாசம் 5 நாளைக்கு ஒரு தடவை காய்கள பறிச்சேன். அதுக்கடுத்து, 4 நாளைக்கு ஒரு தடவை காய் பறிச்சிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 15,582 கிலோ பப்பாளி மகசூலாகியிருக்கு. ஒரு கிலோ 17 ரூபாய்னு விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். அந்த வகையில 15,582 கிலோ பப்பாளியை விற்பனை செஞ்சது மூலமா 2,64,894 ரூபாய் வருமானமாகக் கிடைச்சிருக்கு. உழவு, விதை, நடவு, இடுபொருள், அறுவடைனு இதுவரைக்கும் 76 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். அதைக் கழிச்சா 1,88,894 ரூபாய் இதுவரைக்கும் லாபமா எடுத்திருக்கேன். சொட்டுநீர் அமைச்சது நிரந்தரச் செலவுங்கிறதால, அதைச் செலவுக்கணக்குல சேர்க்கல.

இன்னும் 5 மாசம் வரைக்கும் பப்பாளி அறுவடை செய்யலாம். ஆனா, தண்ணீர் பற்றாக்குறையா இருக்கிறதுனால எப்படியும் 4 மாசம் வரைக்கும் பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதுல எப்படியும் 8 ஆயிரம் கிலோவுக்கு மேல பழங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு. அதை விற்பனை செஞ்சா 1,36,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு. இன்னும் 4 மாசத்துக்குக் கணக்குப்போட்டால், அறுவடைக்கும் பாராமரிப்புக்கும் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு பண்ண வேண்டியிருக்கும். அதைக்கழிச்சா 1,11,000 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன். எப்படியும் ஒரு ஏக்கர்ல 3 லட்சம் ரூபாய்க்கு குறையாம லாபம் பார்த்துட முடியும்” என்ற சிவபிரசாத் நிறைவாக,

“பப்பாளி கிட்டத்தட்ட 22 மாசப்பயிர். வருஷத்துக்குனு கணக்குப் பார்த்தா ஏக்கருக்கு ஒன்றரை லட்ச ரூபாய்தான் லாபம். இது பெரிய லாபம் இல்லைனாலும், தண்ணீர்ப் பற்றாக்குறையால விவசாயமே இல்லைனு சொல்லாம, இந்தளவு சம்பாதிக்க முடியுறது என்னைப் பொறுத்தவரையில பெரிய லாபம்தான். அதுக்கு நான் இயற்கை விவசாயத்துக்கும் குறைவான தண்ணீர்லயே விளையுற பப்பாளிக்கும்தான் நன்றி சொல்லணும்” என்று சொன்னபடியே அறுவடைப் பணிகளில் மும்முரமானார்.

தொடர்புக்கு, சிவபிரசாத்,
செல்போன்: 97874 39077


மாதம் ஒரு முறை ஜீவாமிர்தம் கன்று நடவு செய்த

5-ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசல் என்ற கணக்கில் பாசனத் தண்ணீருடன் கலந்து விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கன்று நட்ட 100-ம் நாளுக்கு மேல், பூ பூக்கத் தொடங்கும். இந்தச் சமயத்தில் 200 லிட்டர் தண்ணீரில் 250 கிராம் பெருங்காயப் பொடியை நன்கு கலக்கிப் பாசனத் தண்ணீருடன் கலந்து விட வேண்டும். இதனால், பூக்கள் உதிராமல் பிஞ்சு பிடித்துவிடும். பிஞ்சு பிடிக்கத் தொடங்கும் நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி தேமோர் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.


7 அடி இடைவெளி

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு ஓட்டி, பத்து நாள்கள் காய விட வேண்டும். பிறகு டில்லர் மூலம் 2 முறை உழவு ஓட்ட வேண்டும்.முக்கால் அடி விட்டம், முக்கால் அடி ஆழம் இருக்குமாறு 7 அடி இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஏக்கருக்கு 889 குழிகள் எடுக்கலாம். ஆனால், நிலத்தின் அமைப்பைப் பொறுத்து குழிகளின் எண்ணிக்கை மாறுபடும். சிவபிரசாத், ஏக்கருக்கு 860 குழிகள் எடுத்திருக்கிறார். குழி எடுத்தவுடன் ஒரு குழிக்கு அரைக் கிலோ அளவு தொழுவுரம் இட்டு, நான்கு நாள்கள் குழியை ஆற விட வேண்டும்.


மாவுப்பூச்சிக்கு வேப்பெண்ணெய்…

பப்பாளியில், மாவுப்பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். இவை எந்நேரத்திலும் தாக்கக்கூடும் என்பதால், கன்று நட்டதிலிருந்தே தொடர்ந்து கவனித்து வர வேண்டும். மாவுப்பூச்சி தென்பட்டால்,மழை பொழிவது போலத் தண்ணீரைக் கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

தண்ணீர் தெளித்த 2 மணி நேரத்துக்குள் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வேப் பெண்ணெய், சிறிது காதி சோப் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து விட வேண்டும்.


பப்பாளிக் கன்று தயாரிப்பு

பப்பாளி நடவு செய்யப்போகும் நிலத்திலிருந்து 100 கிலோ மண் எடுத்து அதனுடன் 30 கிலோ தொழுவுரத்தைக் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு, 4 அங்குல அகலம், 6 அங்குல உயரம் கொண்ட பாலித்தீன் பைகளில் மண்ணை நிரப்பி, பூவாளியால் நீர்த் தெளிக்க வேண்டும். பிறகு, ஒரு பைக்கு ஒரு விதை என்ற கணக்கில் முக்கால் அங்குல ஆழத்தில் ஊன்றி, பைகளை வரிசையாக அடுக்கி பாலித்தீன் ஷீட் கொண்டு மூடி விட வேண்டும். தினமும் தண்ணீர் தெளித்து, ஷீட்டை மீண்டும் மூடி விட வேண்டும். 8-ம் நாளுக்கு மேல் விதைகள் முளைக்கும். தேவையான அளவைவிட சற்றுக் கூடுதலாகக் கன்றுகள் உற்பத்தி செய்துகொண்டால், சரியாக வளராத கன்றுகளை அப்புறப்படுத்திவிட்டு நடவு செய்ய ஏதுவாக இருக்கும். 45-ம் நாளிலிருந்து 60-ம் நாளுக்குள் கன்றுகளை நடவு செய்து விட வேண்டும்.


பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி

ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை தேவைப்படும். இந்த விதையை 250 மில்லி பீஜாமிர்தக் கரைசலில் மூழ்க வைத்து எடுத்து, ஓலைப்பாயில் கொட்டி, நிழலில் வைத்து 15 நிமிடங்கள் உலர்த்த வேண்டும். இப்படி விதைநேர்த்தி் செய்து விதைத்தால், வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.


நூற்புழுவை விரட்டும் வேப்பம் பிண்ணாக்கு

கன்று நட்ட 20 மற்றும் 40-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். முதல் களை எடுத்த பிறகு, ஒவ்வொரு கன்றின் தூரைச் சுற்றிலும் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கைத் தூவி மண் அணைக்க வேண்டும். இப்படிச் செய்வதால், நூற்புழுக்கள் வராது. நடவு செய்த 6 மற்றும் 10-ம் மாதங்களில் ஒவ்வொரு கன்றைச் சுற்றிலும் அரைக் கிலோ தொழுவுரம் இட வேண்டும்.


மாலை நேரத்தில் நடவு

சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கன்று நடுவதற்கு முந்தைய நாள் குழிகள் நன்கு நனையும்படி தண்ணீர் விட வேண்டும். காலை வேளையில் நடவு செய்து தண்ணீர்ப் பாய்ச்சினால், வெயிலில் ஆவியாகிவிடும். அதனால், மாலை வேளையில் நடவு செய்தால் கன்று உயிர்ப்பிடித்து வளர ஏதுவாக இருக்கும். குழிக்கு ஒரு கன்று வீதம் நடவுசெய்து பாசனம் செய்ய வேண்டும். முதல் மாதம் தினமும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. பப்பாளிக் கன்றின் வளர்ச்சியைப் பொறுத்து சொட்டு நீர்க் குழாய்களைக் கன்றின் தூரிலிருந்து விலக்கிக்கொண்டே வர வேண்டும். ஊடுபயிர் சாகுபடி செய்ய நினைப்பவர்கள், பப்பாளி நடவு செய்த அன்றே வெங்காயம், தட்டைப்பயறு போன்றவற்றை விதைக்கலாம். இவையிரண்டும் பப்பாளிக்குத் துணைப்பயிர்கள் என்பதால், இந்தப் பயிர்களோடு பப்பாளியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.


9-ம் மாதத்திலிருந்து பறிப்பு

கன்று நட்ட 9-ம் மாதத்திலிருந்து காய்கள் கிடைக்கும். 11-ம் மாதத்துக்கு மேல் மகசூல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். நன்றாகப் பராமரித்தால் பறிக்க ஆரம்பித்ததிலிருந்து 16 மாதங்கள் வரை காய்கள்  பறிக்கலாம்.


செம்மண்

ஏற்றது ரெட்லேடி பப்பாளி செம்மண் வகைகளில் நன்கு வளரும். இதை நடவு செய்ய ஆடிப்பட்டமும் கார்த்திகைப் பட்டமும் ஏற்றவை.

http://www.vikatan.com/pasumaivikatan/2017-jun-10/yield/131354-siva-prasanth-farmer-earns-lakhs-from-acres.html

 

About editor 3121 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply