சம்பந்தனையும் சுமந்திரனையும் வசைபாடுவதே கஜேந்திரகுமாரின் அரசியல்!
மாதம் ஒருமுறை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி திரு சம்பந்தனையும் திரு சுமந்திரனையும் வசைபாடுவதே திரு கஜேந்திரகுமாரின் அரசியலாகும்.
வட மாகாண சபை ஒழுங்கு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது கட்சி பங்குபற்றவில்லை. எனது வழி தனி வழி என்று மலட்டு அரசியல் நடத்தும் திரு கஜேந்திரகுமார் தனியே ஒரு கூட்டத்தை நடத்தினார். காணொளியில் அவர் பேசுவதைக் காட்டினார்களேயொழிய அங்கு ‘திரண்ட’ மக்கள் கூட்டத்தைக் காட்டவில்லை.
வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த பிரதமர் விக்கிரமசிங்காவை “பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத சுமந்திரன் அண்மையில் யாழிற்கு வருகை தந்த பிரதமரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சொந்தம் கொண்டாடியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்” என ஒப்பாரி வைத்திருக்கிறார் திரு கஜேந்திரகுமார்.
இது பிள்ளை பெறாதவள், பிள்ளை பெற்றவள் பார்க்குமாறு அம்மிக் குளவியை வயிற்றில் கட்டிக் கொண்டு திரிந்த கதையாக இருக்கிறது!
ஒரு நாட்டின் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும்போது அவரைத் தனது தொகுதியில் இருக்கும் வீட்டிற்கு விருந்தினராய் அழைத்தது என்ன பஞ்சமா பாதகமா? அரசியல் அநாகரிகமா? அதனை தமிழர்களுக்கே உரித்தான விருந்தோம்பல் பண்பென்று பார்க்க ஏன் திரு கஜேந்திரகுமார் மறுக்கிறார்?
பிரதமர் இரணிலோடு அவ்வப்போது சந்தித்துப் பேசுவதாலேயே தமிழ்மக்களது சிக்கல்கள் சிலவற்றையாவது திரு சுமந்திரனால் தீர்த்து வைக்க முடிகிறது.
நால்வகை உத்திகளில் இன்றைய காலகட்டத்தில் சமாதானமாக பேசி தீர்வு காண்பதே புத்திசாலித்தனம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாதவர் என சுமந்திரன் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சரியானதா? அந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் திரு சுமந்திரன் பிரதமர் இரணிலோடு மட்டுமல்ல சனாதிபதி சிறிசேனாவோடும் கண்டு பேசுகிறார். பேசி சில காரியங்களை செய்ய முடிகிறது. அவர்களோடு பேசினால்தானே தீர்வு ஏற்படும்? இதுகூட திரு கஜேந்திரகுமாருக்கு புரியாமல் இருக்கிறதே?
ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 217. இப்போது 99 ஆக்க் குறைந்துள்ளது.
சம்பூரில் மொத்தம் 1055 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்பட்டுள்ளது. அதற்காக திரு சுமந்திரன் உச்ச நீதிமன்றத்தின் படியேறி வாதாடி வெற்றி பெற்றார். இன்று காணிகளைத் திரும்பப் பெற்ற 905 குடும்பங்கள் வீடுகள். கிணறுகள், கழிவறைகள் கட்டி ஓரளவு வசதியாக வாழ்கிறார்கள். இந்த மக்கள் 2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 18 முகாம்களில் 9 ஆண்டுகள் அகதிகளாக வாழ்ந்தவர்கள். இந்த மக்கள் சார்பாக சட்டத்தரணி கஜேந்திரகுமார் ஒரு வழக்கையாவது வைத்து நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறாரா? இதையிட்டு மட்டுமல்ல அவர் எந்த வழக்கிலும் நீதிமன்றத்தில் பேசுவது இல்லை என்பதுதானே வரலாறு?
வலிந்து காணாமல் போகச் செய்தவர்கள் பற்றிய சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பெற்றுவிட்டது. அதனை அரசாணையில் பிரசுரிப்பதில்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது.
2015 ஒக்தோபர் முதல்நாள் ஐநாமஉ பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானத்தால் எந்தப்பயனும் இல்லை, அதில் தமிழ் என்ற சொல் கூட இல்லை என்று சொல்லி திரு கஜேந்திரகுமார், திரு கஜேந்திரன், திருமதி அனந்தி போன்றோர் அதனை ஜெனீவா வீதிகளில் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
ஆனால் இன்று அந்த்த் தீர்மானம் நடைமுறைப் படுத்தவில்லை, கால அவகாசம் கொடுத்துவிட்டார்கள் என்று ஒப்பாரி வைக்கப்படுகிறது. நீங்கள்தான் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லை அதில் தமிழ் என்ற சொல்கூட இல்லை என்று புலம்பியவர்கள் ஆயிற்றே? எரித்தவர்கள் ஆயிற்றே? பின் ஏன் இந்த ஒப்பாரி?
கடந்த ஏழு ஆண்டுகளாக திரு கஜேந்திரகுமாரும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் பாலைவனத்தில் விடப்பட்டுள்ளார்கள்.
2010 மற்றும் 2015 இல் நடந்த தேர்தகளில் அவரும் அவரது தோழர்களும் கட்டுக்காசை இழந்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் யானை கூட சைக்கிளை மிதித்துள்ளது. இவ்வளவிற்கும் சம்பந்தரை திருகோணமலையிலும் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரனை யாழ்ப்பாணத்திலும் தோற்கடிக்கப் போகிறேன் என்று நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த திரு கஜேந்திரகுமார் அறைகூவல் விட்டார். இதைக் கேட்பவர்களுக்கு சிரிப்பு வருமா? இல்லையா? புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் அவருக்கு கொடுத்த ஆதரவு அவரை அப்படி வீராவேசமாகப் பேசவைத்திருக்கக் கூடும். ஆனால் பணத்தினால் மட்டும் தேர்தலில் வெற்றபெற முடியாது என்ற உண்மை அரசியல் தெரிந்தோருக்குத் தெரியும்.
மேலும் வரலாற்றுக் கறைபடிந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது. போட்டியிட்டாலும் வெல்ல முடியாது. இது ஒரு அடிப்படை உண்மை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடி அணிந்து வந்தாலும் பலன் இல்லை.
நாற்பதினாயிரம் சடலங்கள் வன்னியில் இருந்து வருகிறது 40,000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்று சந்திமுனையில் அல்ல நாடாளுமன்றத்தில் சிங்களத் தலைவர்களைப் பார்த்துப் பேசிய ஒருவரை தமிழ்மக்கள் தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா?
இன்று ததேகூ யை வசைபாடும் செல்வராசா கஜேந்திரன் 2010 இல் தனக்கும் பத்மினி சிதம்பரநாதனுக்கும் வேட்புமனு கேட்டு ஏன் கெஞ்சினார்?
ததேமமு என்பது கொள்கை வேறுபாடு காரணமாகத் தொடக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல. ததேகூ சிலருக்கு வேட்புமனு கொடுக்க மறுத்த காரணத்தால் இரவோடு இரவாகத் தொடக்கப்பட்ட கட்சி.
திரு கஜேந்திரகுமார் அளந்து நாகரிகமாக மேடைகளில் பேச வேண்டும். நா காக்க வேண்டும்.
அவரது பேச்சுக்கள் அவரது பாட்டனார் திரு ஜிஜி பொன்னம்பலம் “செவிடன் செல்வநாயகம்” என்று மேடைகளில் திட்டியது போன்று “சம்பந்தனுக்கு முதுகெலும்பு இல்லை” என்று ஒருமையில் விளித்துப் பேசுகிற பேச்சாக இருக்கக் கூடாது.
அது யானை தனது தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்ட மாதிரி இருக்கும்!
நக்கீரன்
Leave a Reply
You must be logged in to post a comment.