சோதிடப் புரட்டு (8-15)

சோதிடப் புரட்டு

(8)

கோள்களில் ‘பாவ’ ப் பட்ட சனி!

முன்னர் ஞாயிறு குடும்பத்தைச் சார்ந்த கோள்கள் பற்றி வானியல் தரும் தரவுகளைத் தந்திருந்தேன்.

இப்படியான தரவுகள் அண்மைக் காலத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் பெறப்பட்டவையாகும். முன்னர் போலல்லாது இன்று அறிவியல் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

மனிதன் வெறுமனே தனது ஊனக் கண்களால் பார்த்த கோள்களை முதன் முதலில் தொலைநோக்கியின் உதவியோடு பார்த்த வானியலாளர் கலிலியோ கலிலி (Galileo Galilei ) ஆவார்.

தொலைநோக்கி மூலம் கலிலியோ கண்ட காட்சி அவரைத் திகைக்க வைத்தது. இன்று கோள்கள் மற்றும் விண்மீன்களைக் கலிலியோவின் தொலைநோக்கியை விடப் பல ஆயிரம் மடங்கு வலு வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் வானியலாளர்கள் அளந்து கொண்டிருக்கின்றார்கள்.

நமது ஞாயிறு குடும்பம் மட்டுமல்ல அண்டத்தில் பல இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஏனைய ஞாயிறு குடும்பங்கள், பால்மண்டலங்கள் போன்றவற்றையும் வானியலாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

புவி மைய அண்டம்
புவி மைய அண்டம்

அரிஸ்தோட்டல் (கிமு 384 – 322) தொலமி (கிபி 90-170) போன்ற வானியலாளர்களது அண்டங்கள் பற்றிய தரவுகள் பல இன்று மறுக்கப்பட்டு விட்டன. எடுத்துக்காட்டாக இந்த இருவரும் உலகத்தைச் சுற்றியே ஞாயிறு உட்பட ஏனைய கோள்கள் வலம் வருகின்றன எனச் சொன்னார்கள். கண்ணால் பார்க்க முடியாத தொலைவில் வலம் வந்த யூறேனஸ், நெப்தியூன், புளுட்டோ அவர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்படாததால் அவை பற்றி அவர்களுக்கு அடியோடு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அது அவர்கள் குற்றமில்லை, இன்றைய அறிவும் கருவிகளும் அன்றிருக்கவில்லை.

அரிஸ்தோட்டல் மற்றும் தொலமி எழுதி வைத்ததை உலகம் ஏறத்தாழ ஆயிரத்து எழுநூறு ஆண்டு காலமாக நம்பி வந்தது. மேற்குலக நாட்டு அறிவியலாளர்கள் அவற்றை வேதமாகக்  கொண்டிருந்தார்கள்.

அரிஸ்தோட்டல் இந்தப் புவி உருண்டை வடிவானது என்று ஓரளவு நம்பினார். ஆனால் புவி வெங்காயத்தை மூடியிருக்கும் தோல்போல் பல உருண்டைகளை உள்ளடக்கியது என்று நினைத்தார். மேலும் புவி நாற்பெரும் பூதங்களினால் ஆனது எனவும் முகில் மண்டலத்திற்கு அப்பால் உள்ள தூய வானவெளி எதர் (ether) என்னும் பூதத்தினால் நிரப்பப்பட்டுள்ளது எனவும் கூறினார். அரிஸ்தோட்டலைப் பின்பற்றித் தொலமி என்பவரும் அண்டத்தின் மையம் புவி என்றும், ஞாயிறு, சனி, வியாழன் ஆகிய கோள்கள் புவியைச் சுற்றி வருகின்றன என்றும் சொன்னார்.

இந்த ஊகங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்து, சூரிய மண்டலத்தின் நடுவில் ஞாயிறு இருக்கிறதென்றும், அதனைச் சுற்றிப் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஏழு கோள்களும் வலம் வருகின்றன என்றும் சான்றுகளோடு விளக்கி வானுடலிகளின் சுழற்சிகள் (The Revolutions of Heavenly Bodies) என்ற நூலை நிக்கலஸ் கோபெனிக்கஸ் (Nicholas Copernicus) என்ற வானியலாளர் முதன் முறையாக எழுதினார். இவர் போலந்து நாட்டில் 1473 பெப்ரவரி 19 ஆம் நாள் பிறந்தவர்.

அண்டம்
ஞாயிறு குடும்பம்

இன்று வானியல் பற்றிய அறிவு நாளும் பொழுதும் வளர்ந்த வண்ணம் உள்ளது. நிலாவில் மனிதனை இறக்கி ஒரு புதிய வரலாறு படைத்த வானியலாளர்கள் செவ்வாய் போன்ற பிற கோள்களில் விண்வெளிக் கப்பல்களை இறக்கி அவற்றின் இயல்புகளை ஆராய்கின்றார்கள்.

Harvard astronomer revolutionizes search for alien life with new project -  The Jerusalem Post

விண்ணை நோக்கிக் கலிலியோ தனது தொலைநோக்கியைத் திருப்பியதன் பின்பே அண்டத்தைப் பற்றிய வானியல் துறையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது.

Astrologuzodiacthinnai

வானியலில் அதே போன்ற ஒரு திருப்பு முனை கபிள் (Hubble)  என்ற தொலை நோக்கியை நாசா 1990 ஆம் ஆண்டு விண்ணில் ஏவியபோதும் ஏற்பட்டது.

ஞாயிறு மைய அண்டம்
ஞாயிறு மைய அண்டம்

புவியில் இருந்து 600 கிமி (375 கல்) உயரத்தில் கபிள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அது புவியில் இருந்து தொலை நோக்கிகள் செயற்கைக் கோள்கள் மூலம் அண்டத்தைப் பார்ப்பதைவிட கூர்மையான புத்தம் புதிய கருவிகளைப் பயன்படுத்தி அண்டத்தைப் பத்து மடங்கு ஆழமாக ஆய்வு செய்து வருகிறது. அதனை விண்வெளி வீரர்கள் அவ்வப்போது சென்று செப்பனிட்டுப் பேணி வருகின்றார்கள். தேய்ந்த அல்லது பழுதுபோன உதிரிப் பாகங்களை மாற்றி விடுகின்றார்கள். அல்லது இன்னும் நுட்பமான கருவிகளை அதில் பொருத்தி விடுகின்றார்கள்.

புவியை 97 மணித்துளிக்கு ஒருமுறை சுற்றிவரும் இந்த கபிள் தொலைநோக்கி இதுவரை (2002) 1,489 பில்லியன் (148.9 கோடி) கல் செலவு செய்துள்ளது. 7.3 terabites அளவுள்ள தரவுகளை அது புவிக்கு அனுப்பி வைத்துள்ளது. அதாவது ஒரு கணினியை ஒவ்வொரு நாளும் பத்து ஆண்டுக்கு நிரப்பக் கூடிய தரவுகள். அதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு 2,663   அறிவியல் அறிக்கை களைத் தயாரிக்க உதவியுள்ளது. மொத்தம் 330,000 புகைப்படங்களை எடுத்துள்ளது.

ஆனால் தமிழர்கள் இந்தக் கண்டு பிடிப்புகளைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. வியப்பு அடைவதும் இல்லை. மூக்கில் விரலை வைப்பதும் இல்லை.

சாயி பாபாவின் படத்தில் இருந்து பத்துச் சதம் பெறுமதியில்லாத திருநீறு கொட்டுகிறது என்று யாராவது சொன்னால் போதும். உடனே வாயைப் பிளக்கின்றார்கள். பிள்ளையார் பால் குடிக்கின்றார் என்று சொன்னால் போதும் – அலறிப் புலறி அடித்துக் கொண்டு கோயில் குளம் நோக்கித் தலை தெறிக்க ஓடுகின்றார்கள்.

இப்படிப்பட்டவர்கள், அரிஸ்தோட்டல் தொலமி காலத்தில் அல்லது அதற்கும் முந்திய கற் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இறைவன் பற்றிய நம்பிக்கை இருக்கலாம் ஆனால் இறைவன் பற்றிய மூடநம்பிக்கை இருக்கக் கூடாது.

மேலே (புரட்டு 7) ஒவ்வொரு கோளும் ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலம் பற்றிய தரவுகளைத் தந்திருந்தோம்.

சனிக் கோள் ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலம் 29.46 ஆண்டு என்பதைப் பார்த்தோம். எனவே ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு இடம் பெயர எடுக்கும் காலம் 2½ (2.45) ஆண்டுகள் ஆகும். இது ஒரு இயல்பான இயற்கை நிகழ்ச்சி, ஆனால் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போன தமிழர்களை கோள்களின் இடப் பெயர்ச்சி கிலி கொள்ள வைக்கிறது! இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள்.

‘இரண்டரை ஆண்டுகாலம் இடப ராசியில் ஆட்சி செலுத்தி வந்த சனீஸ்வர பகவான் இன்று காலை சரியாக 8.27 மணிக்கு இடப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார். அப்பொழுது சனி பகவானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் செய்யப் பட்டன. புதுவைத் துணைநிலை ஆளுநர் மல்கானி கலந்து கொண்டு சனீஸ்;வரரைத் தரிசனம் செய்தார். மேலும் புதுவை அமைச்சர் சந்திரராசு, துணைச் சபாநாயகர் ஏ.வி.சுப்பிரமணியன், நீலகங்காதரன் எம்எல்ஏ மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.

முன்னதாக இன்று காலை 7.15 மணியளவில் காரைக்கால் அரசு விருந்தினர் மாளிகையில இருந்து புறப்பட்ட புதுவைத் துணைநிலை ஆளுநர் மல்கானி காலை 7.30 மணியளவில் திருநள்ளாறு வந்தார். திருநள்ளாறு வந்த அவர் தெற்கு வீதியில் உள்ள தருமபுரம் மடத்துக்குச் சென்றார். அங்கு ஆளுநர் மல்கானியைத் திருப்பனந்தாள் சுவாமிகள் வரவேற்றார். பின்னர் சனீஸ்வர பகவான் ஆலயம் சென்று அங்;குள்ள அனைத்துச் சன்னதிகளிலும் வழிபட்டார்.

சனிப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இதுவரை 4 இலட்சம் பக்தர்கள் வரை வந்திருந்து சனீஸ்வரரைத் தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று இரவு சனீஸ்வர பகவான் உற்சவ மூர்த்தியாக வசந்த மணடபத்துக்குத் தங்;க காக்கை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.’ (தினகரன் – மே 22, 2003)

காரைக்காலில் உள்ள திருநள்ளாறில் என்ற ஊரிலேயே சனிக் கோளுக்குக் கோயில் உள்ளது. அங்குதான் துணைநிலை ஆளுநரும் மற்றவர்களும் வழிபாடு செய்துள்ளனர். படியாத பாமர மக்கள் சனிக் கோளைக் கடவுளாக எண்ணி வழிபாடு செய்தால் அதனைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், நாடாளும் துணைநிலை ஆளுநரும் ஏனைய பரிவாரமும் சனீஸ்வரனுக்குச் சிறப்பு ஆராதனை அபிசேகம் செய்வதுதான் வியப்பாக இருக்கிறது!

பூமியில் இருந்து ஏறத்தாழ 1,321,416,800 கிமீ (821,190,000 கல்) தொலைவில் அதனை வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு கோள் இந்தப் புவியில் வாழும் மக்களது நன்மை தின்மை, யோகம் அவயோகம், சுகம் துக்கம் போன்றவற்றை முடிவு செய்கிறது என்பது மூடத்தனமாகும்.

பார்ப்பதற்கு ஏனைய கோள்களைப் போலவே மிக அழகாக ஆனால் சற்று மங்கலாகத் தெரியும் சனிக் கோளைச் சோதிடர்கள் இருண்ட கறுப்பு நிறக் கடவுளாக வர்ணித்துள்ளார்கள். போதாதற்குக் கறுப்பு நிறக் காக்கையை அதன் வாகனமாக்கிப் போட்டார்கள். சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் காகத்துக்குச் சோறு போட்டுவிட்டு நோன்பை முடிப்பதற்கு இந்த உறவே காரணம் ஆகும்.

கோள்களின் தன்மை, இயல்பு, இயக்கம் முதலியன பற்றிச் சரியாகத் தெரிந்திராத கால கட்டத்தில் அதனைக் கண்டு பயந்த மனிதன் அவற்றைப்பற்றித் தனது கற்பனைக்கு எட்டியவாறு எழுதி வைத்ததை, அறிவு வளர்ச்சி அடைந்த இந்தக் காலத்தில் வாழும் மக்களும் நம்புகின்றார்கள். இதுதான் பெரிய சோகம் ஆகும்.

ஒரு சோதிட நூல் ‘குரு பார்வை எவ்வளவுக்கெவ்வளவு சிறந்தது என்று சொல்கிறோமோ, சனி பார்வை அவ்வளவுக்களவு கொடிய பார்வையாகும். யோகர்களும் சுபர்களும் சனி பார்வை பெற்றால் அவ்வளவும் பாழ்’ என்று சொல்கிறது.

இரவி மதிமால் பாம்பு, வெள்ளியு மேழை நோக்கும்
பரவிய செவ்வாய் நான்கேழ் எட்டது பார்வையாகும்
குரு தனக்கைந் தொன் பானேழ் கூறு நற்பார்வையாகும்
தருகிய சனி மூன்றேழுந் தசமது பார்வையாமே.                          (ஜோதிட அமுதம் – பக்கம் 75)

கோள்களில் ‘பாவப்’ பட்ட கோள் இந்தச் சனிதான். பெற்றோர்கள் சிலர் சினத்தில் பிள்ளைகளைச் ‘சனியனே! என்முன் நிற்காதே! போ! போய்த் தொலை!’ என்று திட்டுவதை இன்றும் பார்க்கலாம். பொங்கு சனி, மங்கு சனி, அட்டமத்துச் சனி, ஏழரைச் சனி, மரண சனி என்று சனிகளில் பலவித சனிகள் உண்டு! நளனை ஏழரைச் சனியன் பிடித்து ஆட்டியதாகக் கதை எழுதி வைத்திருக் கின்றார்கள்.

சனி தோசத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அல்லது அதன் கெட்ட பார்வையில் இருந்து தப்பிக் கொள்ள மூடர்கள் கோயில்களில் எள்ளெண்ணைச் சட்டி எரிக்கின்றார்கள். அதனால் எண்ணெய் வாணிகனுக்கும் கோயில் அருச்சருக்குந்தான் வருவாய்! எள்ளெண்ணைச் சட்டி எரித்தவருக்குப் பணம் பாழாகியதுதான் மிச்சம்!

பாமர மக்களிடமும் படித்த முட்டாள்களிடமும் இருந்து பணம் பறிக்கவே இந்தச் சோதிட சாத்திரத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள் என்று எண்ண வேண்டியுள்ளது. மற்றப்படி சோதிட சாத்திரத்தால் சமுதாயத்திற்கு ஒரு எள்முனைப் பயனும் இல்லை!

சோதிடப் புரட்டு

(9)

சூரியன் சனி ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாம்!

சனி பகவான் பிறந்தவுடன் அவரைப் பார்ப்பதற்காகத் தந்தையாராகிய சூரிய பகவான் ஓடோடி வந்தார். சனியின் எதிரில் சூரியன் வந்து நின்றவுடன், சனி அவரைத் தொடர்ந்து ஏறெடுத்துப் பார்த்தார்.

சனியின் பார்வை பட்டவுடனேயே சூரியன் தரையில் மயங்கி விழுந்தார். அவர் பேச்சு மூச்சு ஏதுமின்றிக் கிடந்ததால் உலகெங்கும் இருள் சூழ்ந்தது. ஓரிடத்திலும் ஒளி இல்லை. சூரிய ஒளி இல்லாததால் செடி கொடிகள் எல்லாம் வாடின.

சூரியனைக் காணாமல் தவித்த தேவர்கள் அனைவரும் சூரியனுக்கு என்ன ஆயிற்று? ஏதாயிற்று? என்று தெரியாமல் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மாவோ சிவனிடம் இது குறித்து முறையிட்டார். உடனே சிவபெருமான் சூரியன் மயங்கிக் கிடந்த இடத்திற்கு வந்தார். நடந்தது என்ன என்பதை அவர் தெரிந்துகொண்டார். சனியின் பார்வை எவ்வளவு பலம் கொண்டது என்பதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தந்தையையும் மகனையும் பிரித்து வைப்பதென்ற முடிவுக்கு வந்தவராய் சூரியனைத் தட்டி எழுப்பினார்.

சிவபெருமான் சூரியனை நோக்கி, ‘உமது மைந்தன் சனியின் பார்வை பட்டதால் நீ தரையில் சாய்ந்து விழுந்து சகலரையும் சங்கடத்திற்கு உள்ளாக்கினாய். பன்னெடுங்காலம் நீங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் இந்த உலகம் என்னாவது? இந்த உலகத்திற்கு ஒளி எப்படிக் கிடைக்கும்? ஆகவே, இன்று முதல் தந்தையும் மகனுமாகிய நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளக்கூடாது. இன்று முதல் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரம எதிரிகள் ஆனீர்கள். ஒரு ஜாதகத்தில் இருவரும் சேர்ந்து இருந்தால் இருவருக்கும் இடையில் மோதல்கள் உருவாகும்’ என்றார்.

அதன் பின்னர் தந்தையான சூரியனும், மகனான சனியும் பிரிந்து விட்டனர். சாயாதேவியின் மகனான சனீஸ்வரபகவான் காசிக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபட்டார். அதனால் சனிக்குக் கிரக பதவி கிடைத்தது.

இந்தப் புவி பற்றியோ, அண்டம் பற்றியோ எந்த அறிவும் அற்ற ஒரு புராணிகர் எழுதிவைத்த புளுகுக் கதை இதுவாகும்!

சனிக் கிரகத்தினால் என்னென்ன கேடுகள் விளையும் என்று பட்டியல் போட்டு ஒரு சோதிடர் படிப்பறி வில்லாத பாமர மக்களையும் படித்த முட்டாள்களையும் ஒரு சேரப் பயமுறுத்துகின்றார்.

‘ஒரு ஜாதகத்தில் சனி சூரியனைப் பார்த்தால் தந்தை மகனுக்கிடையே மோதல்கள் உருவாகி நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீராமபிரானின் ஜாதகத்தைப் பாருங்கள்.

ஸ்ரீராமபிரானின் ஜாதகத்தில் சூரியனும் சனியும் எதிர் எதிராகப் பார்த்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால் தசரதசக்கரவர்த்தி புத்திர சோகத்தால் மரணமடைந்தார். தனது தந்தை தசரதர் கைகேயிக்குக் கொடுத்த வரத்தால் மகனான ஸ்ரீராமன் காட்டுக்குச் சென்றார். மகனின் கஷ்டத்திற்குத் தந்தை செய்த தவறுதானே காரணம்!

ஒருவருக்கு அட்டமத்துச் சனியோ, ஏழரை நாட்டுச் சனியோ அல்லது வேறு சனியோ தொடங்கி விட்டால் சனி பகவான் உங்களுக்குத் தொல்லை தருவதற்காக மனித உருவத்தில் வருவார். உறவினர்கள் உருவத்தில், தந்தை உருவத்தில், தாய் உருவத்தில், சகோதர சகோதரிகள் உருவத்தில், மேலதிகாரிகள் உருவத்தில் என எவர் உருவத்திலும் அவர் வரக்கூடும்!

ஒருவருக்கு ஏழரைச் சனியோ, அட்டமத்துச் சனியோ தொடங்கி விட்டால் அவரது வாழ்க்கை சோதனையும் வேதனையும் வாதனையும் நிறைந்ததாகத்தான் இருக்கும்!

நீங்கள் அஞ்சி அஞ்சி வாழ்க்கை நடத்தும் பயந்தாங்கொள்ளி ஆளாக இருந்தாலும் கூட வஞ்சனைப் பேய்கள் உங்களைப் பிடித்து ஆட்டும்!

நீங்கள் கள்ளம், கபடம், கர்வம் இல்லாமல் இருந்தாலும்கூட பொல்லாத விதி உங்களைச் சும்மா விட்டு வைக்காது!

துரியோதனன் குடிக்குச் சகுனிபோல உங்களைக் கெடுப்பதெற் கென்றே ஒருவர் உங்களிடம் வந்து சேருவார்.

கங்கை நீர் என நினைத்து ஓடிச் சென்றால் கானல் நீராகக் காட்சி அளிப்பதைப் போல எந்த ஒரு காரியமும் முடிந்துவிடும் என்று நினைத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அந்தக் காரியம் முடியாமல் நீண்டு கொண்டே செல்லும்.

நீங்கள் அறிவின் வலிமை கொண்டுதான் நித்திய வாழ்க்கையை நடத்த வேண்டி இருக்கும். ஆனால் சனியோ உங்களது திறத்தைக் குறைத்துச் சதி பல வளர்ப்பதிலேயே குறியாக இருப்பார்.

ஏழரை நாட்டுச் சனி பிடித்த போதுதான் அரிச்சந்திரன் தனது பதவியைத் துறந்து மனைவி, மக்களோடு நாலுமுழத் துணியோடு காட்டுக்குச் சென்றான். கிரேதா யுகத்தில் பிறந்து வாய்மையின் இலக்கணமாக அரசாட்சி புரிந்து கொண்டிருந்த அரிச்சந்திர மன்னனிடம் விசுவாமித்திர முனிவரை அனுப்பி வைத்து சதி லீலைகள் புரிந்து அரிச்சந்திரனைக் குடும்பத்தோடு சனீஸ்வரன் காட்டுக்கு அனுப்பி வைத்து கஷ்டங்களை அனுபவிக்கச் செய்தார்.

வாய்மையின் இலக்கணத்திற்கே அப்படியொரு சோதனையென்றால் மற்றவர்கள் எம்மாத்திரம்! ஏழரை நாட்டுச் சனி காலத்தில் நளச்சக்கரவர்த்தி நாடிழந்து, நகரிழந்து, காட்டுக்குச் சென்று, கார்க்கோடன் என்னும் பாம்பு தீண்டியதால் கரிய உருவம் பெற்று சமையல்காரனாக வேலை பார்த்து துன்பத்தின் உச்சத்திற்கே சென்று, திருநள்ளாறு தலத்திற்கு வந்து நல்ல வழியை அடைந்தார். நளனுக்கு நன்னெறியைக் காட்டியதால் திருநள்ளாறு எனப் பெயர் ஏற்பட்டது.

ஏழரைச் சனியின் வல்லமைகள் பற்றி விசுவாமித்திரர் பல இடங்களில் கூறியுள்ளார். ஒருவருக்குச் சனி பிடித்து விட்டால் உண்ணலும், உறங்கலும் நலம் என்று விசுவாமித்திரர் கூறுகின்றார்.

சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தூங்குவதற்கு பரம்பரைச் சொத்து வேண்டாமா? சொத்து இல்லாதவர்கள் எங்கே போவது?

சனி பிடித்தால் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? என்று பலர் கேட்கின்றனர். எந்த மதத்தினரையும் சனி பகவான் விட்டு வைப்பதில்லை. உலகிலுள்ள அத்தனை மதத்தைச் சார்ந்தவர்களையும் அவர் பிடித்து ஆட்டுகின்றார்.’

கோள்கள் ஆண் பெண் கலவி மூலம் பிறக்கின்றன என்று கூறுவதும், அதனை அறிவாளிகள் என்று கூறிக் கொள்வோர் நம்புவதும் இந்துக்களிடையே அன்றி வேறு யாரிடமும் காண முடியாத மூடநம்பிக்கையாகும். அதனாலேயே துணைநிலை ஆளுநர் உட்பட இலடச்சக்கணக்கான பாமரமக்கள் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வழிபடுகின்றார்கள்!

இங்குள்ள கோயில்கள் சனி தோசம் நீங்க அருச்சனை செய்ய வாருங்கள் என்று வானொலி மூலம் பக்தர்களை வருந்தி அழைத்தன! காசு பிடுங்குவதற்குத்தான் இந்த அறிவிப்பு! பகிடி என்னவென்றால் கோயில் அருச்சகருக்கு அல்லது நிருவாகிகளுக்கு ஏதாவது ஒன்றென்றால் அருச்சனை செய்வதில்லை, தோச சாந்தி செய்வதில்லை, குடும்ப மருத்துவரிடம்தான் போகின்றார்கள்!

இந்தச் சனி பகவான் என்கிற கோள் ஓர் இராசியிலிருந்து இன்னோர் இராசிக்குச் செல்லத் தேவைப்படும் காலம் இரண்டரை ஆண்டு அது ஞாயிறைச் சுற்றிவர எடுக்கிற காலம் 29.46 ஆண்டு என்று மேலே பார்த்தோம்.

எல்லாக் கோயில்களுக்கும் ஒரு தலபுராணம் தயாராக இருக்கும். திருநள்ளாறு தலத்துக்கும் அப்படி ஒரு தலபுராணம் உண்டு. நளன் என்று ஒரு அரசன் சனி பிடித்தததால் நாட்டை இழந்தான், மனைவி மக்களைப் பிரிந்து பெரும் துன்பப்பட்டான், கடவுள் அருளால் மீண்டும் அவற்றை அடைந்தான், அதன்பின் திருநள்ளாறு வந்து அங்கு குடி கொண்ட பாரண்யேசுவர சுவாமியை வழிபட்டான்.

நளனிடத்தில் தொற்றிக் கொண்டிருந்த அந்தச் சனிபகவான் இறைவன் சன்நிதிக்குப் போகும் போது, இறைவனின் கடும் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி நளனிடமிருந்து விலகி நள்ளாற்றுக் கோயில் மடத்தில் ஒளிந்து கொண்டான். நளன் திரும்பி வரும்பொழுது மீண்டும் அவனைத் தொற்றிக் கொள்ள வேண்டும் என்பது சனியின் திட்டம்.

பாரண்யேசுவரரிடம் நளன் போட்ட விண்ணப்பம் என்ன தெரியுமா? ‘உன்னை வணங்கித் துதிக்கின்றவர்களை வெளியே ஒளிந்திருக்கும் சனி தீண்டாமல் இருக்க அருள்பாலிக்க வேண்டும்’ என்பதே அந்த வேண்டுகோள். அதற்கான வரத்தையும் இறைவனிடமிருந்து நளன் பெற்றுக் கொண்டானாம்.

இக்கோயிலில் வழிபட்டு நளன் தோசம் நீங்கப் பட்டதால் அங்கேயே சனீஸ்வரனுக்கென்றே அந்த அரசன் தனிக்கோயில் ஒன்றை எழுப்பினான்.

சனி பார்வைபட்டுத் துன்பப்படுபவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் எல்லாத் தோசமும் நீங்கி நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.

இங்கு நளதீர்த்தம் என்ற ஒரு குளம் இருக்கிறது. அதில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் அய்தீகமாக்கி விட்டார்கள்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி பற்றித் தமிழ்நாட்டு ஏடுகள் தடபுடல் விளம்பரங்கள் செய்தன. சோதிடர்கள் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகப் பலன்களை எழுதிக் குவித்தார்கள். அது தொடர்பான புராணக் கதையை எந்த வெட்கமோ துக்கமோ துளியும் இன்றிப் பச்சை பச்சையாக எழுதினார்கள்.

படித்தவர்களின் அறிவும், பத்திரிகைகளின் தரமும், முடைநாற்றம் வீசும் மூடத்தனத்தை வளர்க்க மேற்கொள்ளும் அறிவு நாணயமற்ற தன்மையும் எந்த அளவுக்குக் கொடிகட்டிப் பறக்கிறது என்பதற்கு இந்தச் சனிப்பெயர்ச்சிப் பித்தலாட்டம் ஒன்றே போதுமானதாகும்.

பண்ணைபுரம் தேனியைச் சேர்ந்த இலட்சுமி இராசா என்பவர் திருநள்ளாறு சனீசுவரன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்திருக்கின்றார். அங்கு ‘பக்தர்கள் செய்த அருவருக்கத்தக்க செயல்களால் மனவேதனை அடைந்தேன்’ எனத் தினமலர் நாளேட்டுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

நளன் சாபம் நீங்கியதாகக் கருதப்படும் குளத்தில் பக்தர்கள் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்தனர். தண்ணீர் சென்னை கூவம் நதி போல் இருந்தது. ‘சோப்பு, சீகைக்காய், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது’ என்று அங்கு ஒலிபெருக்கியில் சொல்லிக் கொண்டு இருந்தனர். ஆனால், யாரும் கேட்பதாக இல்லை. எத்தனை இலட்சம் மக்கள் குளிக்கின்றனர்? அனைவரும் எண்ணெய், சீகைக்காய், சோப்புப் பயன்படுத்தினால் தண்ணீர் எந்த நிலையில் இருக்கும்? பொதுமக்களுக்குக் கொஞ்சம் கூட அறிவு கிடையாதா? படித்தவர்கள் கூட இவ்வாறு நடந்து கொள்கின்றனர். உடுத்திக் குளித்த ஆடைகளைக் குளத்திற்குள் தூக்கி எறிந்து விட்டு வருகின்றனர். வெறுமனே முங்கிக் குளித்தால் பாவம் தீராதா?

இறைவன் உள்ள இடம் பாவம் செய்வதற்கு உரிய இடம் அல்ல என்பதைப் பக்தர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

சனீஸ்வர பகவானுக்குச் சக்தி இருப்பது உண்மையானால் அந்தப் பகவான் கோயில் கொண்டுள்ள அந்த திருநள்ளாறில் மக்கள் எல்லாம் செல்வத்தில் புரள வேண்டும். நோய் நொடியின்றி வாழ வேண்டும். அங்கே மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் தேவை இருக்கக் கூடாது. அப்படியெல்லாம் நடக்கிறதா?

ஆனால் சனி தோசம் செவ்வாய் தோசம் நாகதோசம் இருக்கிறது என்று சோதிடர்கள் சொல்வதை நம்பும் பாமரமக்கள் உளவியல் அடிப்படையில் உண்மையிலேயே பாதிக்கப்படுகின்றார்கள்! தோசம் இருப்பதாக நம்பிக் கொண்டு தங்கள் மன நலத்தையும் மன நிம்மதியையும் தொலைத்துவிட்டு நாளும் பொழுதும் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். தோசத்துக்குப் பரிகாரம் தேடிக் கோயில், குளம், தேர், தீர்த்தம் என்று அலைகின்றார்கள்!

சோதிடப் புரட்டு

(10)

சோதிட நம்பிக்கைக்குக் காரணம் பயம்!

வெப்ஸ்டரின் ஆங்கில அகராதி சோதிட சாத்திரத்தை ஒரு போலி அறிவியல் (pseudo-science) என்று வரைமுறை செய்கிறது. சோதிடம், வானியல் இரண்டின் தொடக்கம் ஒன்றுதான். இரண்டும் நெருக்கமான பல அம்சங்களைக் கொண்டிருந்தன, ஆனால் 16 ஆம் நூற்றாண்டின் பின் வானியலில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.

அந்த முன்னேற்றத்துக்குக் கோபெனிக்கஸ், கலிலியோ, கெப்லர், நியூட்டன், அய்ன்ஸ்தீன் போன்ற அறிவியலாளர்கள் காரணமாக இருந்தார்கள்.

சோதிட சாத்திரம் மட்டும் அப்படியே தேங்கிப் போய் புவியைத்தான் ஞாயிறும் மற்றக் கோள்களும் சுற்றிவருவதாக இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில் கோள்கள் ஞாயிறைப் பெரும் வேகத்துடன் நீள்கோடுகளில் (elliptic) சுற்றி வருகின்றன. அதே நேரம் ஞாயிறும் அண்ட வெளியில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. எமது பால் மண்டலத்தில் (ஆடைமல றுயல) காணப்படும் 10,000 – 20,000 கோடி விண்மீன்களில் ஞாயிறு ஒரு நடுத்தர அளவுள்ள விண்மீன் ஆகும். ஆங்கிலத்தில் அதனை மஞ்சள் குள்ளன் (Yellow Dwarf) என்று அழைக்கின்றார்கள். பால் மண்டலத்தின் நடுவில் இருந்து 8 மடைழியசளநஉள ( 2.5 பில்லியன் பில்லியன் பில்லியன் கல்) தொலைவில் ஞாயிறு இருக்கிறது. அதாவது 30,000 ஒளியாண்டுத் தொலைவில் இருக்கிறது!

ஞாயிறின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் (450 கோடி) என வானியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். மேலும் 5 பில்லியன் ஆண்டுகள் அது நீடித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பால் வெளியை ஞாயிறு வலம் வர எடுக்கும் தொலைவு 220 மில்லியன் கல் ஆகும்!

ஞாயிறும் ஞாயிறு குடும்பமும் அருகிலுள்ள விண்மீன்களோடு ஒப்பிடும் போது மணிக்கு 72,000 கி.மீ. அல்லது நொடிக்கு 20 கி.மீ. (44,906 கல் அல்லது விநாடிக்கு 13 கல்) வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.

ஞாயிறு புவியைப் போலவே தனது அச்சில் தன்னைத்தானே வலமிருந்து இடமாக (Anti-Clockwise) சுற்றுகிறது. சுற்ற எடுக்கும் காலம் 25 நாள் (நடுக்கோட்டில்) – கடகக் கோட்டுக்கு (Tropic of Capricorn) மேல், மகரக் கோட்டுக்குக் (Tropic of Cancer) கீழ் பொதுமேனி 35 நாள் ஆகும்.

ஞாயிறும் ஏனைய கோள்களும் புவியைச் சுற்றி வருகின்றன என்ற நம்பிக்கையை முதன் முதலாக கோபெர்னிக்கஸ் என்பவரே மறுத்து ஞாயிறைச் சுற்றியே ஏனைய கோள்கள் வலம் இருந்து இடமாக சுற்றி வருவதாக எண்பித்துக் காட்டினார். இந்த உண்மை தெரியததாலேயே இராசி வீடுகளில் புவி என்ற கோள் இடம் பெறாமல் ஞாயிறு என்ற விண்மீன் இடம் பெற்றிருக்கிறது. இது ஒரு முதன்மையான முரண்பாடு ஆகும். இருந்த போதிலும், சோதிடர்கள் தமது கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை.

உயிரற்ற கோள்களும் விண்மீன்களும் புவிக்கோ, மனிதர்களுக்கோ நன்மையோ, தின்மையோ செய்ய முடியாது. அதற்கான வாய்ப்பு இல்லை. சோதிடத்தில் பாமரர்களும் படித்தவர்களும் பயம் காரணமாகவே கோள்களில் நம்பிக்கை வைக்கின்றார்கள்.

இத்தகைய மூட நம்பிக்கைகளை ஒழிக்கக் கல்லூரி அல்லது பல்கலைக் கழகப் படிப்பு மட்டும் போதாது, ஆறாவது அறிவான பகுத்தறிவும் மெய்ப்பொருள் காணும் திறனும் நெஞ்சுறுதியும் வேண்டும்.

எனது உறவினர் ஒருவர் தனது சாதக்தை ஒரு சோதிடரிடம் காட்டி இருக்கிறார். சோதிடர் சாதகத்தைப் படித்துப் பார்த்துவிட்டு அவருக்கு நாக தோசம் இருப்பதாகச் சொன்னார். தோசத்துக்குப் பரிகாரம் என்னவென்று கேட்ட போது தோசம் நீங்க கோயிலில் அருச்சனை செய்ய வேண்டும் என்றும் அந்தச் சோதிடர் அறிவுரை கூறினார்.

தோசகாரர் இங்குள்ள ஒரு பெரிய கோயிலுக்குச் சென்று 108 டொலர் கொடுத்து சீட்டு வாங்கி நாக தோசத்துக்கு அருச்சனை செய்தார். அருச்சகர் இரண்டு மூன்று மணித்துளியில் தோச அருச்சனையைச் செய்து முடித்துவிட்டார். எனது நண்பருக்கு ஒரு அய்யம். ‘அருச்சகர் இவ்வளவு கெதியாக அருச்சனையைச் செய்து முடித்து விட்டார், நாகதோசம் முற்றாக நீங்கியிருக்குமா?’

அருச்சகரிடமே அவர் தனது அய்யத்தை வெளியிட்டார். அருச்சகர் சொன்னார் ‘முழுத் தோசமும் நீங்கவில்லை. முழுத் தோசமும் நீங்க வேண்டும் என்றால் இன்னும் 108 டொலர் கொடுத்து நீங்கள் அருச்சனை செய்ய வேண்டும்!’

வேறு வழியின்றி இன்னும் ஒரு அருச்சனைச் சீட்டு வாங்க நண்பர் புறப்பட்ட போது அருச்சகர் மெல்ல அவர் காதில் ‘அங்கே 108 டொலர் கொடுத்து அருச்சனைச் சீட்டு வாங்குவதை விட எனக்கு 50 டொலர் தாரும் அருச்சனை செய்கிறேன்!’ என்று சொன்னார்.

இந்தப் பேரம் நண்பருக்குப் பிடித்துப் போய்விட்டது. காரணம் 108 இல் 50 போனால் 58 டொலர் இலாபம். இரண்டு இருபது ஒரு பத்து டொலர் தாள்கள் கைமாறியது. அருச்சகர் இரண்டாவது அருச்சனையைச் செய்து முடித்தார். நண்பர் மொத்தம் 158 டொலர் கொடுத்து ஒரு பாதித் தேங்காய், இரண்டு வாழைப்பழம், திருநீறு, சந்தனம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போனார்.

‘ஓர் அருச்சனை செய்தாய் சரி. பின் ஏன் இரண்டாவது அருச்சனை செய்தாய்? அதன் பின்பும் தோசம் நீங்கிவிட்டதற்கு என்ன உத்தரவாதம்?’ என்று கேட்டேன்.

‘முதல் அருச்சனையில் தோசம் முற்றாகப் போகவில்லை என்றுதான் அருச்சகர் சொல்லிவிட்டாரே! இரண்டாவது அருச்சனை செய்யாவிட்டால் முதல் கொடுத்த 108 டொலரும் அல்லவா வீணாகிவிடும்?’

தாண்டினால் முழுக் கிணறும் தாண்ட வேண்டும் பாதிக் கிணறு மட்டும் தாண்டி என்ன பயன்? கிணற்றுக்குள் அல்லவா விழ வேண்டும்!

எனது உறவினர் ஒரு பட்டயகக் கணக்காளர், உயர்ந்த பதவியில் இருக்கின்றார், எனவே அவருக்கு மிகுவருவாய் இழப்புக் கணக்குப் பார்க்கத் தெரியும். மிகுவருவாய் கிடைக்காத இடத்தில் இழப்பைக் குறைக்க வேண்டும் என்பது அவர் படித்த கணக்குப் பாடங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்ட உத்திகளில் ஒன்று. ஆங்கிலத்தில் இதனை உரவவiபெ வாந டழளளநள என்று சொல்வார்கள்.

இன்னொரு நாகதோசக்காரர் தனக்குத் தோசம் இருப்பதாக எண்ணிக் கொண்டு அது நீங்க அருச்சனை செய்ய விரும்பினார். நாகதோசம் நீங்க நாகபூசணி அம்மன் கோயில்தானே பொருத்தம். இந்து மதத்தில் ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாக ஒவ்வொரு கடவுளைப் புராணிகர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். எனவே அங்கே விசாரித்துப் பார்த்தார். நாகதோச அருச்சனை செய்ய 151 டொலர் கேட்டார்கள். விலைவாசி ஏறுகிறதோ இல்லையோ கோயில் நிருவாகிகள் அருச்சனைக் கட்டணத்தை ஆண்டு தோறும் உயர்த்தி வருகின்றார்கள்!

சனி தோசம், செவ்வாய் தோசம், நாக தோசம் என்று நம்மவர்கள் கோயில் கோயிலாக அலையும்போது உருசிய, அய்ரோப்பிய நாட்டு அறிவியலாளர்கள் செவ்வாய்க் கோளை ஆய்வு செய்ய அதனை நோக்கி நீண்ட செலவு மேற்கொள்ளும் செவ்வாய் கடுகதி (Mars Express) என்னும் விண்கலத்தை விண்ணுக்கு ஏவி இருக்கின்றனர்.

சிவப்புக் கோளம் என அழைக்கப்படும் செவ்வாய் பற்றி இதுவரை அறியப்படாத பல முடிச்சுக்களை அவிழ்ப்பதற்காக விண்வெளித்துறை அறிவியலாளர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 30 கும் அதிகமான விண்வெளி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 12 வெற்றி பெற்றன. மிகுதி தோல்வியில் முடிந்தன.

உருசிய மற்றும் அய்ரோப்பிய அறிவியலாளர்கள் கஜக்ஸ்தான் (Kazakhstan) நாட்டில் உள்ள பைகானூர் விண்வெளி ஆய்வுத் தளத்திலிருந்து சோயுஸ் பிரிகாட் ஏவுகணை (Soyuz-Fregat rocket) மூலம் ஏவிய செவ்வாய் கடுகதி விண்கலத்தின் எடை 1.2 தொன – அதற்கு ஆகும் செலவு 300 மில்லியன் யூறோ ஆகும். அண்டவெளியில் 55 மில்லியன் (5.5 கோடி) கிமீ தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளத்தை நோக்கித் தன் செலவை அது தொடங்கியுள்ளது.

REPLAY: Soyuz Progress 79P cargo launch to the ISS (27 Oct 2021)

விண்கலம் விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட தொலைவு சென்ற பின் சோயுஸ் பிரிகாட் என்னும் ஏவுகணையிலிருந்து பிரிந்து மணிக்கு 10,800 கிமி வேகத்தில் செவ்வாய் நோக்கி அது செல்லும். ஆறு மாதங்களில் அது செவ்வாயை அடையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த சோயுஸ் ஏவுகணை சோவியத் -அமெரிக்க வல்லரசு நாடுகள் இரண்டுக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த பனிப் போர்க் காலத்தில் அணுக்குண்டுகளைக் காவிக் கொண்டு போய் நேட்டோ நாடுகள் மீது வீசுவதற்கு 1957 இல் சோவியத் நாட்டினால் உருவாக்கப்பட்டது! உருசியா இதுவரை 1,600 சோயுஸ் ஏவுகணைகளை விண்வெளிக்கு ஏவியிருக்கிறது என்கின்றார்கள். அதன் வெற்றி விழுக்காடு 98-99 ஆகும்.

1961ஆம் ஆண்டு மாந்த வரலாற்றில் முதன் முதலாக அண்ட வெளியில் யூறி ககாறின் (Yuri Gagarin) செலவு செய்த விண்கலனை இந்தச் சோயுஸ் மாதிரியான Vostok ஏவுகணைதான் விண்ணுக்கு அனுப்பியது. உருசிய நாட்டு மக்கள் இந்த ஏவுகணையைத் தங்கள் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த கண்டு பிடிப்பாகப் போற்றி மகிழ்கின்றார்கள்.

செவ்வாய்க் கோளை அண்மித்தவுடன் செவ்வாய் கடுகதி விண்கலம் அதனை வலம் வரத் தொடங்கும். அப்பொழுது பிரித்தானியா உருவாக்கிய பீகிள் 2 (Beagle2) என்ற ஆய்வு கூடத்தை வான்குடை மூலம்                                                                             செவ்வாயில் தரை இறக்கும்.

Astrologymars

தரை இறங்கிய பீக்கிள் 2 பல்வேறு ஆய்வுகளைத் தானே மேற்கொள்ளும். செவ்வாயின் நிலப்பரப்பு எப்படி உள்ளது? நீர் நிலைகள் உள்ளனவா? உயிர்ப் பிறவிகள் இருக்கின்றனவா? என்பன பற்றியெல்லாம் நுணுக்கமாக ஆய்வு செய்து பீக்கிள் 2 தரவுகளைப் புவிக்கு அனுப்பும். இந்த ஆய்வுப் பணி அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்று கருதப்படுகிறது.

இந்த மாபெரும் அறிவியல் திட்டத்தை அய்ரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency) உருவாக்கியது. அதன் தலைமைப் பேராளர் அலெய்ன் பவுர்ணிய சிக்ரே ஆவார். எனவே செவ்வாய் கடுகதி ஒரு உருசிய-அய்ரோப்பிய கூட்டு முயற்சியாகும். செவ்வாய் கடுகதியைத் தொடர்ந்து வெள்ளி கடுகதி (Venus Express) விண்வெளிக்குச் செலவு மேற்கொள்ள இருக்கிறது.

உருசிய – அய்ரோப்பிய சாதனையைப் பார்த்துவிட்டு அமெரிக்கா சும்மா இருந்துவிடுமா என்ன? செவ்வாய்க் கோளில் இயந்திர மனிதர்களை (Robots) இறக்க நாசா (NASA) மும்மரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

நூற்றி அய்ம்பது அறிவியலாளர்கள், 170 பொறியாளர்கள் நாசா கோள் நடுவத்தில் (NASA Planetary Centre) இரண்டு இயந்திர மனிதர்களைப் படைக்கும் பணியில் இரவு பகல் ஈடுபட்டுள்ளார்கள். முதல் இயந்திர மனிதன் இயக்கும் றோவரை (Rover) யூன் 12 லும் இரண்டாவது றோவரை யூன் 25 லும் அனுப்ப இருக்கின்றார்கள். ஒன்றின் பெயர் Opportunity மற்றதன் பெயர் Spirit என்பதாகும்.

இயந்திர மனிதன்

நூறு கோடி டொலர் செலவழித்து 1999, 2001 ஆண்டுகளில் நாசா மேற்கொண்ட செவ்வாய் ஆய்வு எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.

செவ்வாயின் மேற்பரப்பில் காணப்படும் கல், மண், தண்ணீர் தொடர்பான சான்றுகளை விண் ஓடத்தில் அனுப்பப்படும் இரண்டு இயந்திர மனிதர்களும் ஆராய்வார்கள்.

இந்த ரோவர் விண்கலம் மற்றும் இயந்திர மனிதர்களுக்காக நாசா வானாய்வு நடுவம் 800 மில்லியன் டொலர்களைச் செலவு செய்துள்ளது. முந்தைய விண்ஓடங்கள் செவ்வாயை அடைய 11 மாதங்களை எடுத்துக் கொண்டன. இந்த ரோவர் விண்கலம் ஏழு மாதங்களிலேயே செவ்வாயை எட்டிவிடும் எனக் கூறப்படுகிறது.

புவியைப் போலவே செவ்வாயில் ஒரு நாள் 24 மணி 39.5 மணித்துளி கொண்டது. எனவே ஞாயிறின் ஆற்றலில் இயங்கும் இந்த இயந்திர மனிதர்கள் காலையில் ஞாயிறு கீழ்த்திசையில் எழும் நேரத்துக்குக் கணக்காக விழித்தெழுவார்கள்!

விண்கலத்தைச் செவ்வாய்க்கு அனுப்ப யூன் (2003) மாதத்தைத் தேர்ந்து எடுத்ததற்குத் தக்க முகாந்திரம் இருக்கிறது. இருபத்தாறு மாதங்களுக்கு ஒருமுறை ஞாயிறு, புவி, செவ்வாய் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. ஆனால், இந்த ஆண்டுதான் செவ்வாயும் புவியும் மிகக் கிட்டிய தொலைவில் வர இருக்கின்றன. இப்படியான நெருக்கம் 15-17 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வருமாம்.

‘இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் செவ்வாய்க் கோளம் நீள் வட்டச் சுற்றுப் பாதையில் நிலக்கோளத்தை (புவியை) நெருங்கி வரும். அப்பொழுது நிலத்துக்கும் செவ்வாய்க்கும் இடையேயான தொலைவு குறைந்து காணப்படும். எனவே எதிர்பார்த்த செலவு காலத்தைவிட மிக விரைவாகவே செவ்வாய்க் கடுகதி விண்கலம் செவ்வாயை அடைந்து விட வாய்ப்பு உள்ளது. எரி பொருளும் குறைவாகவே செலவு ஆகும்’ என உருசிய வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உருசியன், அமெரிக்கன், அய்ரோப்பியன், யப்பான்காரன் எனப் போட்டி போட்டுக் கொண்டு செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யும் பொழுது தமிழன் என்ன செய்கிறான்? தனது பிள்ளை அல்லது பெண் சாதகத்தில் ஏழுச் செவ்வாய் இருப்பதாகச் சோதிடன் ‘புலுடா’ விட அதனை நம்பிக் கொண்டு அதே ஏழுச் செவ்வாய் உள்ள மணமகளை அல்லது மாப்பிள்ளையைத் தேடிச் செருப்புத் தேய அலைகிறான்! செவ்வாய் விரதம் பிடித்தால் நல்ல மணவாளன் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் குமரிப் பெண்கள் கோயில்களில் விளக்குப் பூசை செய்கின்றார்கள்! a

சோதிடப் புரட்டு

(11)

படிப்போ பட்டமோ இல்லாத சோதிடர்!

இரு மனங்கள் ஒரு மனதாக இணைந்து நறுமணத்தோடு இல்லறம் ஏற்கின்ற இனிய விழா திருமணம் ஆகும். திருமணம் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஆண், பெண் இருவரையும் தேடிப் பிடித்து அவர்களை வாழ்நாள் முழுதும் ஒன்றிணைக்கின்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவாகும். ‘ஒரு மனதாயினர் தோழி, மணமக்கள் நன்கு வாழி’ எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்த்துவார்.

ஆறாம் அறிவான பகுத்தறிவின் வளர்ச்சியே திருமணமாகும். இத்திருமணம் சங்க காலத்தில் களவு, கற்பு என இரு ஒழுக்கமாக இடம்பெற்றது.

தலைவன் தலைவி ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு நெடுநாள் தாய் தந்தையருக்குத் தெரியாது பழகிப் பின் பெற்றோரது ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. இதனைக் களவில் தொடங்கிக் கற்பில் முடியும் திருமணம் எனத் தொல்காப்பியப் பொருள் இலக்கணம் கூறும். களவு காலத்தில் மனத்தளவே மணம் புரிந்தவராக மட்டும் இருப்பர். கற்புக் காலத்தில்தான் உடல் அளவில் மணம் இடம்பெறும். புறநடையாகப் பெற்றோர் திருமணத்துக்கு உடன்பட மறுக்கும் இடத்தில் தலைவனும் தலைவியும் ஊரைவிட்டு ஓடிவிடுவதும் உண்டு. இதனை உடன்போக்கு என்று தொல்காப்பியம் இலக்கணம் கூறும்.

உடன்போக்கில் ஊரை விட்டு ஓடியவர்களைப் பெற்றோர்கள் தேடிப் பிடித்து வந்து ஊரறியத் திருமணம் செய்து வைத்தார்கள்.

தாய் தந்தையர் பேசிச் செய்யும் திருமணம் சங்க காலத்தில் இருந்ததற்குச் சான்று எதுவும் இல்லை. சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இருநிதிக் கிழவன் மாசாத்துவான் மகன் கோவலனுக்கும் வான்நிகர் வண்கை மாநாய்க்கன் மகள் கண்ணகிக்கும் இடையில் இடம்பெற்ற திருமணந்தான் பெற்றோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணம் என அறிமுகப்படுத்தப் படுகிறது. அதுமட்டும் அல்லாமல் இந்தத் திருமணமே தமிழர் திருமணங்கள் ஆரியமயப்படுத்தப்பட்டு ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீ வலம்’ செய்து நிறைவேறிய வைதீகத் திருமணமாகவும் காணப்படுகிறது.

கம்பர் காலத்தில் (12 ஆம் நூற்றாண்டு) திருமணத்தில் ஓமம் வளர்த்தல், தாரை வார்த்துக் கொடுத்தல், அக்கினி வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது.

கம்பராமாயணம் பாலகாண்டம் எதிர்கோள் படலம் இராமனுக்கும் சீதைக்கும் நடந்த மணச் சடங்கை விரித்துக் கூறுகின்றன.

இந்தப் படலத்தில்தான் ‘தோள் கண்டார் தோளே கண்டார், தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார்’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

வலம்கொடு தீயை வணங்கினர் வந்து,
பொலம்பொரி செய்வன செய்பொருள் முற்றி,
இலங்கொளி அம்மி மிதித்(து), எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்.

லமாகச் சுற்றி எரியும் தீயை இராமனும் சீதையும் வலம் வந்து வணங்கி, நெற்பொரி இட்டுச் செய்யும் சடங்குகள் முதலியவற்றையும் செய்து, அம்மி மிதித்து கற்பிற் சிறந்த அருந்ததி கண்டார்கள்.

எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் உள்ள பாடலொன்று தந்தை, தாய் உறவுடையாரே திருமணம் செய்து கொள்ளல் வழக்கம் என்பதை எதிர்மறையில் சான்று பகருகிறது. அந்த இனிய பாடல் இது.

யாயும் ஞாயும் யாரா கியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!                (குறுந்தொகை – பாடல் 40)

என் தாயும் உன் தாயும் யார் யாரோ?
என் தந்தையும் நின் தந்தையும் எவ்வழியில் உறவுடையார்?
நானும் நீயும் இப்பொழுது கண்டு பழகியது அல்லாமல்
வேறு எவ்வழியில் முன்னர் அறிந்துள்ளோம்?

ஆயினும் நாம் கண்ட அளவிலே நமது நெஞ்சங்கள்
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர்
அம்மண்ணின் நிறத்துடனும் மணத்துடனும்
பிரிக்க முடியாதவாறு கலந்து விடுவது போன்று
இரண்டறக் கலந்து ஒன்றாகவே ஆகிவிட்டன அன்றோ!

சங்க காலத்தில் சாதகம் (ஜாதகம் வடசொல்) பார்க்கும் பழக்கமோ சாதி (ஜாதி வடசொல்) உயர்வு தாழ்வு பார்க்கும் வழக்கமோ இருந்ததில்லை.

பெண் ஆண் இருவருக்கும் இடையில் ஒத்த கல்வி, ஒத்த செல்வம், ஒத்த தோற்றம் என்பன போன்ற பொருத்தங்களே பார்க்கப்பட்டன.

திருமணத்துக்கு நல்ல நாள் பார்க்கும் வழக்கம் இருந்தது. திங்களோடு உரோகிணி கூடிய நன்னாளில் திருமணம் நடந்தது என அகநானூற்றுப் பாடல் (136) ஒன்று தெரிவிக்கிறது.

சாதகமும் சாதியும் பிற்காலத்தில் ஆரியர்களால் தமிழர்களுக்கு இடையே புகுத்தப்பட்ட கொடிய பழக்க வழக்கங்களாகும். இராசிப் பெயர்களோ, நட்சத்திரப் பெயர்களோ ஒன்றேனும் தமிழ் இல்லை.

தனித்தனியாக இருந்தவர்கள் திருமணத்துக்குப் பின்னர்தான் மணமக்கள் ஆகித் தாய் தந்தை என உயர்ந்து, வாழையடி வாழையென வளரும் குல வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டுகின்றார்கள்.

திருமணப் பேச்சில் மாப்பிள்ளைக்குப் பெண் தேடுகிற பெற்றோர்களுக்குப் பொறுப்பும் வில்லங்கங்களும் அதிகமாகும்.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் கல்வி, அகவை, குணம், அழகு, அடக்கவொடுக்கம், பிறந்த குடி, குலம், மரபு இவைகளையெல்லாம் ஆராய்ந்து தெளிந்து பெண் கொள்ள விரும்புகின்றார்கள்.

அதே சமயம் பெண்ணைப் பெற்றவர்கள் இன்னும் சற்று நுணுக்கமாக, குடி, மரபு, ஒழுக்கம், அறிவாற்றல், உழைப்பு உட்பட எல்லாவற்றிலும் உயர்வு என்று நிறைவு ஏற்பட்டாலே பெண் கொடுக்க இசைகின்றார்கள். அதன் பின்னரே மணமக்களின் சாதகக் குறிப்பைச் சோதிடரிடம் கொடுத்துப் பொருத்தம் பார்க்கின்றார்கள்.

இந்த நடைமுறைகள் எல்லாம் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வழக்கத்தில் இருந்தன. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. மக்கள்தொகைப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி இவைகளால் தாக்குண்ட மக்கள் வசதிகள் தேடி, சுற்றம், சொந்தம், சூழல் மறந்து சிற்றூர்களை விட்டுவிட்டு பட்டணங்களில் குடியேறி வாழ்கின்ற நிலை வந்துள்ளது. தமிழீழத் தமிழர்களைப் பொறுத்தளவில் புலப் பெயர்வு காரணமாக சொந்தங்களும் பந்தங்களும் திக்குத் திக்காகப் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளுரிலும் இடப் பெயர்வு காரணமாக பழைய இறுக்கமான ஊர் வாழ்க்கை நெருக்கமான உறவு போன்றவை ஈடாடி விட்டன.

இந்த நிலையில் அகவை வந்த பெண்ணுக்குப் பொருத்தமான ஆணைத் தேடுவதும், அகவை வந்த ஆணுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடுவதும் கடினமாகி விட்டது. தனிப்பட்ட திருமணத் தரகர்கள், நண்பர்கள், செய்தியேடுகள் மூலமாக மணமகள் மணமகன் தேடுவது வழக்கத்துக்கு வந்துள்ளது.

இதனால் பேசி முடித்த பின்னர் சாதகம் பார்க்கும் வழக்கம் மறைந்து பேச்சைத் தொடங்கும் முன்னரே சாதகம் பார்க்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

சோதிடர்கள் சாதகம் பார்த்துச் சொல்லப்படுகின்ற பலன்கள் தெய்வ வாக்காகக் கருதப்படுகிறது. ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் தோற்றால் மேல் நீதிமன்றத்துக்கு மேன் முறையீடு செய்யலாம். அதிலும் சாதகமான தீர்ப்பு வராவிட்டால் உச்ச நீதி மன்றத்தை அணுகி நீதி கேட்கலாம். ஆனால், சோதிடரின் தீர்ப்புக்கு எதிராக யாரும் மேன்முறையீடு செய்ய முடியாது. முதல், இடை, கடை எல்லாம் அவரேயாவர்.

ஆண், பெண் இருவருக்கும் சாதகப் பொருத்தம் இருந்தாலே குடும்பம், குடி, குலம், குணம், அழுகு, கல்வி, பணி என்று பார்க்கிற அடுத்த கட்டத்திற்குப் போகின்றார்கள். சாதகப் பொருத்தம் இல்லையென்றால் குடும்பம், குடி, குலம், குணம், அழகு, கல்வி, பணி என எல்லாம் பொருந்தியிருந்தாலும் அந்தக் குடும்பத்துடனான இணைப்பு முயற்சி கைவிடப்படுகிறது.

ஆக, திருமணங்கள் சொர்க்கத்தில் முடிவு செய்யப்படுவது என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் மாறி சோதிடரின் வீட்டில் திருமணங்கள் முடிவு செய்யப்படுகிற நிலை வந்துவிட்டது.

சோதிடர்களிடம் சாதகக் குறிப்பைக் காட்டிப் பலன் கேட்டால் ஆளாளுக்கு வௌவேறு பலன் சொல்வார்கள்.

ஒருவர் 13 பொருத்தம் பார்க்க வேண்டும் என்பார். இன்னொருவர் 12 பொருத்தம் பார்க்க வேண்டும் என்பார். மற்றொருவர் 10 உப் பொருத்தம் பார்த்தாலே போதும் என்பார். ஒருவர் 12 இல் 6 பொருத்தம் இருந்தாலே செய்யலாம் அதில் குற்றமில்லை என்பார். இன்னொருத்தர் பாப கிரகங்களுக்குத் தோச பரிகாரங்கள் செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்பார்.

பிறிதொருவர் உச்ச கட்டமாகப் போய் பொருத்தமே இல்லை, மீறித் திருமணம் நடந்தால் ஆணுக்கு அல்லது பெண்ணுக்குக் கண்டம், குழந்தைப் பேறு இல்லை எனப் பெரிய கல்லைத் தூக்கிப் போடுவார். இப்படிச் சாதகப் பொருத்தம் இல்லாமல் போனதால் நின்று போன திருமணங்கள் ஏராளமாகும்.

சாதகத்தில் செவ்வாய் தோசம், மூல நட்சத்திர தோசம் உள்ளவர்களுக்குத் திருமணப் பேசப்படும் பொழுது அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். குறிப்பாகப் பெண்கள் அளவுக்கு அதிகமாக நோகடிக்கப்படுகின்றார்கள்.

ஒரு சோதிடர் வராகமீரரைக் மேற்கோள் காட்டி ‘செவ்வாய் 7 அல்லது 8 ஆம் வீட்டில் நின்றால் தன் பங்காக 5 புள்ளிகள் தோசத்தையும் அந்த வீட்டிற்குரிய பங்காக 5 புள்ளிகள் தோசத்தையும் ஏற்படுத்துவார். இதே செவ்வாய் 12 ஆம் வீட்டில் நின்றால், தன் பங்காக 5 புள்ளிகள் தோசத்தையும: 12 ஆம் வீட்டின் பங்காக 2 புள்ளிகள் தோசத்தையும் ஆக மொத்தம் 7 புள்ளிகள் தோசத்தை ஏற்படுத்துவார. இவ்வாறே இரண்டு சாதகங்களையும் புள்ளிகள் முறையில் கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்’ என்கின்றார். இப்படிப் புள்ளி இடுவதை எப்படி வராகமீரர் கண்டு பிடித்தார்கள் என்பது தெரியவில்லை!

ஆண், பெண் ஆகிய இரு பிறப்புக்களில் பெண் பிறப்புக்கு மட்டும் ஆகாத நட்சத்திரங்கள் இருக்கின்றன. சோதிடம் எழுதினவர்கள் ஆண்களாக இருந்த காரணத்தால் பெண்களைப் பழிவாங்கி விட்டார்கள் போலும். பொதுவாக இந்து மதம் (வைதீக அல்லது சநாதன மதம்) பெண்களைப் பாபப்பட்ட பிறப்புக்களாகவே சித்தரிக்கின்றன. அவர்களுக்கு வீடு பேறு இல்லை என்கிறது.

சூத்திரர்கள் போல் பிராமணப் பெண்கள் நால் வேதத்தை ஓதக்கூடாது. காதால் கேட்கக் கூடாது என மனுஸ்மிருதி தடை போட்டுள்ளது.

ஆண் குழந்தை இல்லாத தந்தைக்கு இறந்தபின் மோட்சம் இல்லை, ஆனபடியால்தான் பிதிர் கடன் செய்வதற்குக் குடும்பத்தில் ஆண் வாரிசு தேடப்படுகிறது.

கற்பைப் பெண்களுக்கு மட்டுமே விதித்தார்கள். அதனாலேயே தாசி வீட்டுக்குக் கணவனைக் கூடையில் வைத்துச் சுமந்து சென்ற நளாயினி கற்புக்கரசி என்று பாராட்டப் படுகிறாள். இந்திரனால் கெடுக்கப்பட்ட அகலிகை கல்லாகப் போகுமாறு கவுதம முனிவரால் சபிக்கப்பட்டாள்.

மேலும் திலோத்தமையைப் பிரமன் கெடுத்தான், சிவன் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளைக் கெடுத்தான், சந்திரன் குரு பத்தினி தாரையைக் கெடுத்தான், மகா விட்டுணு சவுந்திரன் மனைவியைக் கெடுத்தான், அக்கினி சப்தரிசி பத்தினிகள் மீது காமுற்றான் எனப் புராணிகர்கள் புராணங்கள் எழுதி வைத்துள்ளார்கள்.

ஆனால் வைதீக திருமணங்களில் ‘சிவன்-பார்வதி சாட்சியாக, விட்ணு மகாலட்சுமி சாட்சியாக, அக்கினி சாட்சியாக, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக திருமணம் நடைபெறுவதாக’ அய்யர் மந்திரம் சொல்கின்றார். காம மயக்கத்தால் பிறன்மனை விரும்பிய அக்கினி போன்ற காமுகனைத் திருமணப் பந்தலுக்குச் சாட்சியாக அழைப்பதை எந்தவகையில் நியாயப்படுத்தலாம்? முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக என்று சொல்லும் போது அவர்களது அரசனான இந்திரன் பெயர் மட்டும் சொல்லப்படுவதில்லை. கவுதம முனிவர் இட்ட சாபத்தால் இந்திரன் உடல் முழுதும் ஆயிரம் யோனிகள் (பெண்குறிகள்) இருப்பது காரணமாக இருக்கலாம்!

சோதிடப் புரட்டு

(12)

சோதிடம் தனை இகழ்!

எதிர்காலம் பற்றிய மக்களின் பாதுகாப்பின்மையைச் சோதிடர்கள் தங்களது சுரண்டலுக்குப் பயன்படுத்தி வருகின்றார்கள். இதனால் தலைமுறை தலைமுறையாகச் சோதிடப் புரட்டுக்குத் தமிழ்ச் சமூகம் இரையாகி வருக்கிறது. சோதிடம் என்ற மூடநம்பிக்கையால் தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளன.

சோதிடம் குறிப்பிட்ட தோச நட்சத்திரங்களில் பிறந்த பெண் சாதககாரர் களுக்குக் கீழ்க்கண்ட தோசங்களில் ஏதாவது ஒன்று காட்டும் என்பது விதி ஆகும் என்கிறது.

1) மகப் பேறு இல்லாமை.

2) கணவர் முதலில் இறப்பார்.

3) கர்ப்பமாய் உள்ள வேளையில் கணவருக்கு மாரகம் (இறப்பு) காட்டும்.

4) கணவன் – மனைவி பிரிவு உண்டாகும். (ஜோதிட அமுதம் – பக்கம் 52)

சோதிடம் விடுக்கும் இந்தப் பயமுறுத்தல் கொடியவர்கள் விடுக்கும் கொலைப் பயமுறுத்தலைவிட அச்சம் தரக் கூடியது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மகாகவி பாரதியார் நாட்டு விடுதலைக்காகப் பாட்டுக் கட்டிய ஒரு தேசியக் கவி மட்டுமல்ல தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்திட வேணும் என்று முரசு கொட்டி முழக்கிய மக்கள் கவிஞன் ஆவான்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் -புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் -நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்

என்று பெண் விடுதலைக்கு ஓங்கிக் குரல் கொடுத்த பெண்ணியவாதி,

தனியொருவனுக்கு உணவில்லை என்றால்
ஜெகத்தினை அழித்திடுவோம்

என முழங்கிய பொதுடமைவாதி,

சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

என்று தமிழினத்தின் தீராத நோயான சாதியைச் சாடிய சமூக சமன்மைவாதி,

சூத்திரனுக்கு ஒரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் – அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்!

என ஒரு சாதிக்கு ஒரு நீதி சொல்லும் மனு ஸ்மிருதியை, கீதையைக் கடுமையாகக் கண்டித்த புரட்சிவாதி. மேலும்-

சோதிடம் தனை இகழ்

வானநூல் பயிற்சி கொள்

மௌட்டியந்தனைக் கொல்

எனப் புதிய ஆத்திசூடி இயற்றிப் பொறுக்கி எடுத்த சுடு சொற்களால் மூடநம்பிக்கைகளைச் சாடினார். வானநூல் படிக்கச் சொன்னார்.

சோதிடம் தனை இகழ் என்ற சொல்லாட்சியில், இகழ் என்ற சொல்லுக்குக் கொடுத்துள்ள அழுத்தமும் கொல் என்னும் சொல்லுக்குக்குக் கொடுத்துள்ள கடுமையும் ஊன்றிக் கவனிக்கத்தக்கன.

மௌட்டியம் என்றால் அறியாமை என்று பொருள். ‘நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை’ எனப் பாரதியார் அறியாமைக்கு வரைவிலக்கணம் கூறுவார். அறியாமையில் மூழ்கி இருப்போர் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மெய்யறிவு இல்லாதவர்களுக்கு வாழ்க்கையில் குழப்பங்கள், அய்யங்கள் ஏராளம் தோன்றும். அறியாமையோடு வாழ்வது பள்ளமும் மேடும், கல்லும் முள்ளும், தூசும் தும்பும், கரடும் முரடும் நிறைந்த பாதையில் கண்ணைக்கட்டிக் கொண்டு நடப்பதைப் போன்றது.

எதைச் சொல்லி என்ன? பாரதி என்ற உலக மகா கவிஞன் சொன்ன அறிவுரையை யார் கேட்கின்றார்கள்? பாரதியாருக்கு விழா எடுப்பவர்களே கேட்பதில்லை என்றால் மற்றவர்கள் எப்படிக் கேட்பார்கள்?

இட்டமுடன் என் தலையில்
இன்னபடி யென்றெழுதி
விட்ட சிவனும் செத்து
விட்டானோ….

என அவ்வை பாடியிருக்கிறாராம்.

இன்னொரு புலவர் ‘அழுதாற் பயனென்ன….. பங்கயத்தோள் எழுதாப்படி வருமோ….’ என்கின்றார். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே, தூங்கையிலே வாங்குகிற மூச்சு – அது சுழி மாறிப் போனால் போச்சு, அவனன்றி ஓர் அணுவும் அசையாது, அன்றெழுதியை அழித்தெழுத வல்லார் யார், எல்லாம் இறைவன் விட்ட வழி, எல்லாம் விதிப் பயன், எல்லாம் கிரக பலன், நட்சத்திர தோசம் என மதங்கள் மனிதர்களின் மூளையைச் சலவை செய்து வாழ்க்கையில் உழைத்து முன்னேற வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் குலைத்து விடுகின்றன.

அருச்சனை, அபிசேகம், தேரோட்டம், திருவிழா, காவடி, இருமுடி, செபம், தோத்திரம், தாயக்கட்டு, நூற்கட்டு, காப்புக்கட்டு, துளசிமாலை, தோசபரிகாரம், எள்ளெண்ணெய்ச் சட்டி எரித்தல், தீமிதித்தல் போன்ற குறுக்கு வழிகளை மதங்கள் பாமர மக்களுக்குக் காட்டுகின்றன. பக்தி மார்க்கம் என்பதே பாமர மக்களுக்காக வகுக்கப்பட்ட வழிபாடாகும்.

அறியாமையை ஒழிக்க வேண்டும் என்றால் மக்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு மெய்ப்பொருள் காண வேண்டும்.

படித்தல், பார்த்தல், கேட்டல், சிந்தித்தல், உரைத்துப் பார்த்தல், ஆராய்தல் மூலம் அறியாமை என்னும் பெரு நோயைப் போக்கலாம். கல்வி அறியாமையை அகற்றும். ஆனால் அது ‘முதலுதவி’ (First-Aid) போன்றது. அதற்கும் அப்பாலே மக்கள் தங்கள் பகுத்தறிவை, தங்கள் தன் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

சோதிட சாத்திரம் மூலம் மாமனாருக்கு ஆகாது, ஆயிலியம் மாமியாருக்கு ஆகாது, கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது, விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லுமேயானால் பகுத்தறிவைப் பயன்படுத்தி அதன் உண்மை பொய்மையை மக்கள் ஆய்ந்து பார்க்க வேண்டும்.

ஒவ்வொருவருடைய நன்மை தின்மை, சுகம் துக்கம், சாதகப்படியே தீர்மானிக்கப்படுகிறது என்பது உண்மையானால் பின் இன்னொருவரது சாதகத்தில் உள்ள நட்சத்திரங்கள் எப்படி மாமனாருக்கு, மாமியாருக்கு, மூத்த மைத்துனருக்கு மற்றும் இளைய மைத்துனருக்கு ஆகாது போகும்? நட்சத்திரங்களுக்கு மூத்த மைத்துனர், இளைய மைத்துனர் என வேறுபடுத்திப் பார்க்கத் தெரியுமா? அவை என்ன உயிருள்ள பொருளா? இல்லை உயிரற்ற பருப்பொருளா?

எமது ஞாயிறு குடும்பம், எமது பால் வழி மண்டலத்தின் (Milky Way Galaxy) ஒரு கோடியில் (edge) உள்ளது என்பதை முன்னர் பார்த்தோம்.

இந்தப் பால் வழி மண்டலத்தின் நடுப் பகுதி ஓர் இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு (100,000 light years) அப்பால் உள்ளது. ஓர் ஆண்டு என்பது ஒளி ஒரு விநாடிக்கு 300,000 கிமீ தொலை வேகத்தில் ஓராண்டு செல்ல எடுத்துக் கொள்ளும் தொலைவு ஆகும். அதாவது ஓர் ஒளி ஆண்டு என்பது 9.46 திரில்லியன் (1000 பில்லியன் ஒரு திரில்லியன்) கிமீ தொலைவாகும்!

பால் வீதி மண்டலத்தின் இருபுறத்தின் (sideto side) தொலை 100,000 ஒளி ஆண்டுகள் ஆகும். இதன் நடுப் பகுதி விட்டத்தின் அளவு 30,000 ஒளி ஆண்டு ஆகும். இந்தப் பால் வீதி மண்டலத் தட்டின் பருமன் (புவி இருக்கும் இடத்தில்) 700 ஒளி ஆண்டு ஆகும்.

Astrologycosmos
பால்மண்டலம் (Galaxy)

பால் மண்டலத்தின் வயது 13-15 பில்லியன் ஆண்டுகள், ஞாயிறு மண்டலத்தின் வயது 4.49 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப் பட்டுள்ளது.

எமது ஞாயிறைப் போல எமது பால் வெளியில் 100-200 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) விண்மீன்கள் காணப்படுகின்றன.

எமது பால் வீதியைப் போல் எமக்குத் தெரிந்த இயலுலகில் (Known Unierse) 360 பில்லியன் பால் வீதிகள் உண்டு! எமது ஞாயிறுக்கு அருகிலுள்ள அடுத்த விண்மீன் Alpha Centauri ஆகும். இது 4.3 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. அதாவது 9.46 திரில்லியன் கிமி தொலைவில் உள்ளது.

இன்றைய நவீன விண்கலம் ஒன்றில் இந்த விண்மீனுக்குச் செலவு மேற்கொண்டால் அதனைச் சென்றடைய 30,000 ஆண்டு எடுக்கும். ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகத்தில் போவதென்றாலும் 430 ஆண்டு எடுக்கும்!

எமது பால் வீதி மண்டலத்துக்கு அண்மித்து உள்ள Andromoed Galaxy 2.2 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது! ஆகக் கூடிய தொலைவில் உள்ள பால் வெளி 10 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. அது கபிள் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் ஒரு மங்கலான நீள் உருண்டையாகத் (முட்டை வடிவு) தெரிகிறது!

What type of Galaxy is Andromeda? - Quora
Andromoed Galaxy

இவ்வாறு இந்த இயலுலகில் (அண்டம்) கோடி கோடி விண்மீன்கள் இருக்கும் பொழுது குழந்தைகள் கடற்கரையில் அல்லது ஆற்றங்கரையில் மணல் வீடு கட்டி விளையாடுவது போலச் சோதிடர்கள் ஒன்பது கோள்களையும் பன்னிரண்டு வீடுகளையும் பன்னிரண்டு இராசி மண்டலங்களையும் 27 நட்சத்திரங்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு சாதகம் கணித்துப் பலன் சொல்கின்றார்கள்! மக்களது வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள்!

பன்னிரண்டு இராசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உலகில் ஏறத்தாழ 600 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். எனவே அதில் பன்னிரண்டில் ஒருபங்கினர் (50 கோடி) ஒரே ஜென்ம இராசியில் பிறந்திருப்பார்கள். அவர்களது சாதக பலன் பேரளவு ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும்! நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால் 27 இல் ஒரு பங்கினர் (22.22 கோடி) ஒரே ஜென்ம நட்சத்திரந்தில் பிறந்திருப்பாhர்கள்! அவர்களது சாதக பலனும் பேரளவு ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும்! அப்படி இருக்கிறதா?

சோதிடம் ஒரு புரட்டு, சோதிடர்கள் புரட்டர்கள் என்று எண்பிப்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் ஏதாவது வேண்டுமா?

இனி இந்தத் திருமணப் பொருத்தங்கள் பற்றிச் சோதிட சாத்திரமும் சோதிடர்களும் சொல்வதைப் படியுங்கள். வழக்கம் போல பொருத்தத்தின் அடிப்படை, அவற்றின் எண்ணிக்கை, அவற்றின் முக்கியத்துவம் பற்றி யானை பார்த்த குருடர்கள் போல் ஆளுக்கு ஆள் மாறுபடக் கூறுகின்றார்கள்.

பொருத்தங்கள் பெரும்பாலும் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கம் கிரகப் பொருத்தத்தையும் சேர்த்துள்ளது.

இப்போது திருமணப் பொருத்தமாகப் பார்க்கப்படும் பொருத்தங்கள் எவையெவை என சோதிட சாத்திரம் கூறுவதைப் பார்க்கலாம்.

கிரகப் பொருத்தம் கிரகங்கள் சாதகமாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவது.

தினப் பொருத்தம் என்பது கணவன்-மனைவி இருவரும் நோய்கள் எதுவும் இல்லாமல் உடல்நலத்தோடு மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் குறிப்பது.

கணப்பொருத்தம் என்பது மணமக்கள் இடையிலான உடலுறவு சுகத்தைக் (அதாவது சயன சுகபோகத்தை அனுபவித்தல்) குறிக்கும்.

மகேந்திரப் பொருத்தம் குடும்ப சந்ததியைக் குறிப்பிடுகிறது.

பெண் தீர்க்கப் பொருத்தம் என்பது செல்வ வளத்தைத் தீர்மானிக்கக்கூடியது.

யோனிப் பொருத்தம் என்பது கணவன் – மனவியிடையிலான நெருக்கமான உறவை, உள்ளார்ந்த உறவைக் கூறுவது.

இராசிப் பொருத்தம் என்பது குடும்பத்தின் மகிழ்ச்சிகளையும் முழுமையையும் குறிப்பிடுவது.

இராசி அதிபதிப் பொருத்தம் என்பது குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகள் எதுவுமில்லாமல் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதைச் சொல்வது.

வசியப் பொருத்தம், கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் வசியப்பட்ட நிலையில் நல்ல இணையர்களாக வாழ்வதைக் காட்டுவது.

இரச்சுப் பொருத்தம் என்பது மாங்கல்யத்தின் பலத்தை உறுதியாக்கி நீண்டகால மணவாழ்க்கையைத் தருவது.

நாடிப் பொருத்தம் நோய்கள் எவுமின்றியும் தங்கள் வாரிசுகள் குறையில்லாமல் பிறப்பததையும் குறிப்பிடுவது.

வேதைப் பொருத்தம் சுகபோகங்களில் கணவனும், மனைவியும் தங்களுக்குள் குறைகள் இருந்தாலும், அவற்றை அனுசரித்து வாழ்க்கையை நடத்தத் தீர்மானிப்பதாகும்.

இலக்கினப் பொருத்தம் மற்றும் இலக்கின அதிபதிப் பொருத்தம் என்பது இணையர்களுக்குள் ஏற்படும் சிக்கலான விடயங்களில் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ உதவுவது.

நட்சத்திரத்தை அடிப்படயாகக் கொண்ட பதின்மூன்று பொருத்தங்களில், எட்டுப் பொருத்தங்கள் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இரச்சுப் பொருத்தம், நாடிப் பொருத்தம், இலக்கினப் பொருத்தம் இலக்கின அதிபதிப் பொருத்தம் ஆகியன முக்கியமானவை ஆகும்.

திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக பார்க்கின்ற பொருத்தங்களின் மூலம் ஒவ்வொருவரும் தங்களுடய வாழ்க்கையின் முக்கிய கட்டத்தை தீர்மானிக்க முடிகிறது. பொதுவாக திருமண வாழ்க்கையை பதினொரு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம்.

நீண்ட மணவாழ்க்கை, ஆயுள் பலம், உடல்நலம், குழந்தைப் பேறு, பொருளாதார வசதி, சமூக படிமானம், கணவன் மனவிக்குள் உள்ள பழக்க வழக்கங்கள், உறவினர்களுடன் உள்ள பழக்க வழக்கங்கள், ஒருவருக்கொருவர் புரிந்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்தல், சொத்து மற்றும் நிம்மதியான ஓய்வுகால வாழ்க்கை. இந்த ஒவ்வொரு விடயத்திற்கும் சாதகரீதியான அம்சங்கள் உள்ளன. இவற்ற மிகுந்த கவனத்துடன் சரிபார்த்துப் பொருத்தம் ஏற்படுவதால், ஒரு நல்ல திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

திருமண வாழ்க்கை மிக இனிதாக அமையக் கிரகப் பொருத்தம்தான் மிக அவசியம். இருந்தாலும், நட்சத்திரப் பொருத்தம் பற்றிய விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது.

பொதுவாக பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிற அனைத்து இந்து திருமணங்களும் மணமகன்-மணமகள் சாதகப் பொருத்தத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. திருமணப்பேச்சு வார்த்தையின் முதல் அம்சமே சாதகப் பரிமாற்றமும் அது தொடர்பான சாதகப் பொருத்தம் பார்ப்பதுந்தான்.

இக்கால கட்டத்தில் பட்டறிவு வாய்ந்த வீட்டுப் பெரியவர்கள் ஆண் – பெண் சாதகத்தை மேலோட்டமாகப் பார்த்து இராசிப் பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து விடுகின்றனர்.

ஆனாலும் கூட அவர்களும் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்கிற நினைப்பில் நல்லதொரு சோதிடரிடம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் பட்டறிவு வாயிலாக பொருத்தம் இருக்கிறதா என்று எப்படிப் பார்க்கின்றார்கள் எனில் இராசிப் பொருத்தத்தின் அடிப்படையில்தான். ஆக, திருமண நிச்சயத்திற்கு இராசிப் பொருத்தம், தினப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், கணப்பொருத்தம், இராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம் பார்த்து அதன் அடிப்படையில் தான் நிச்சயிப்பார்கள். எல்லாப் பொருத்தமும் இசைந்து வராவிட்டாலும்கூட பெரும்பாலான பொருத்தங்கள் இசைந்து வந்தால்தான் திருப்தியுடன் திருமணத்தை உறுதி செய்ய முன்வருவார்கள. இப்படிப் பார்க்கிற பொருத்தங்களில் முதல் அம்சமாக திகழ்வது இராசிப் பொருத்தமே.

இந்த இராசிப் பொருத்தம் தான் எல்லாப் பொருத்தங்களையும் விட மிக மிக முக்கியமானது. அதே சமயம் அவசியமான பொருத்தமும் ஆகும்.

குறிப்பிட்டுச் சொல்லப்போனால் சாதகப் பொருத்தம் பார்க்கின்ற பொழுது ஒரு சோதிடர் மணமகன் – மணமகள் சாதகத்தை வைத்து முதல் அம்சமாக இராசிப் பொருத்தத்தைப் பார்ப்பதற்குக் காரணமே மற்றப் பொருத்தங்களான தினப் பொருத்தம், கணப் பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், இரட்சிப் பொருத்தம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம் போன்றவைகள் தோன்றின என்பதனால்தான். அதற்காக இராசிப் பொருத்தம் மட்டும் இருந்தால் போதும் ஏனைய பொருத்தங்களெல்லாம் தேவையில்லை என்று அர்த்தமில்லை.

இப்போது சோதிடம் சொல்லும் பொருத்தங்களைப் பார்ப்போம்.

(1) கிரகப் பொருத்தம்


கிரகங்கள்


சூரியன், சனி, ராகு, கேது

செவ்வாய்

இடம்

1,7, 8

2, 4, 121,7, 82 ,4, 12
நட்பு

  ஆட்சி

உச்சம்

பகை, நீசம்
4

8

12

16

 
1

 

2

3 4

 

 


8

16

24

32

 

 2

4

6

8

இங்ஙனம் கணக்கிட்டுக் கூட்டி வந்த தொகையைப் பதினாறால் பிரித்த பேறு கிரகபாப சங்கியையாம். இருவருக்கும் கிரகபாவம் இல்லையாயினும் இருவர் பாபசங்கியைகளும் சமமாயின் உத்தமம். ஒருவர் பாபத்திலும் மற்றவர் பாவம் ஒன்று வரையிற்குறையின் மத்திமம். ஓன்றிற்கு மேல் குறையின் பொருந்தாது. செவ்வாயினால் ஏற்படும் பாபம் மற்றைய கிரகங்களின் பாவங்களாற் சாந்தியாகாது. இருவர் சாதகத்திலும் செவ்வாய் தோசம் ஏறக்குறைய சமமாயிருப்பின் நன்று.

(2) தினப் பொருத்தம் (நட்சத்திரப் பொருத்தம்)

பெண் ஆண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாயின் அது உரோகிணி, திருவாதிரை, மகம், அத்தம், விசாகம், திருவோணம், உத்தரட்டாதி, இரேவதி என்பவற்றுள் ஒன்றானால் உத்தமம். அசுவினி, கார்த்திகை, மிருகசீரிடம், புநர்பூசம், பூசம், பூரம், உத்தரம், சித்திரை, அனுட்டம், பூராடம், உத்தராடம் என்பவற்றுள் ஒன்றாயினும் மத்திமம்.

ஏக நடட்சத்திரம் இரண்டு இராசிக்கும் பங்குபட்டதாயின் முதல் இராசிப் பாதம் ஆணுக்காயின் நன்று. பெண்ணுக்காயின் நீக்கப்படும்.

வேறு நட்சத்திரமானால் பெண் நட்சத்திரம் முதல் புருடநட்சத்திரம் வரை எண்ணிக் கண்ட தொகை 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 20, 22, 24, 26 என்பனவற்றுள் ஒன்றாயினும், 27 ஆம் நாள் ஏகராசியாயினும் உத்தமம்.

12 ஆம் நாளின் 2,3,4 ஆம் கால்களும்
14 ஆம் நாளின் 1,2,3 ஆம் கால்களும்
16 ஆம் நாளின் 1,2,4 ஆம் கால்களும்
21, 23, 26 ஆம் நாட்களும் ஆகிய இவற்றுள் ஒன்றாயின் மத்திமம்.

பெண் நட்சத்திர பாதத்தினின்றும் 88 ஆம் பாதம் 22 ஆம் நாளிலாவது 23 ஆம் நாளிலாவது அமையின் அது வைநாசிகம் என்று நீக்கப்படும். இதில் சொல்லப்படாத நாள்களாயின் பொருந்தாது.

(3) கணப் பொருத்தம்

கணங்கள் மொத்தம் மூன்று. அவையாவன:

(அ) தேவ கணம்

(ஆ) மனித கணம்

(இ) இராட்சத கணம்

அசுவினி, மிருகசிரீடம், புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அனுட்டம், திருவோணம், இரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தேவ கணங்கள்.

பரணி, உரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மனித கணங்கள்.

கார்த்திகை, ஆயிலியம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் இராட்சத கணங்கள்.

இவற்றில் மணப்பெண் நட்சத்திரமும் மணமகன் நட்சத்திரமும் ஒரே கணத்தைச் சேர்ந்ததாயின் உத்தமம் – மணம் செய்யலாம்.

தேவ கணம் மனித கணமாக இருந்தால் மத்திமம். பொருத்தம் உண்டு.

மணமகன் இராட்சத கணமாக இருந்து மணப்பெண்ணும் இராட்சத கணமாக இருந்தால் மணமகளின் நட்சத்திரத்திலிருந்து 14 ஆவது நட்சத்திரத்திற்கு மேல் மணமகன் நட்சத்திரம் இருந்தாலும் மணம் செய்விக்கலாம்.

மணமகள் இராட்சத கணமாகவும் மணமகன் தேவகணம் அல்லது மனித கணமகாவோ இருந்தால் பொருத்தம் இல்லை.

அதே நேரத்தில் மணமகன் மனித கணமாகவும், மணமகள் இராட்சத கணமாகவும் இருந்தாலும் பொருத்தம் உண்டு.

ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் (பக்கம் 25) தேவகணமும் – இராட்சத கணமும் மனிதகணமும் – இராட்சத கணமும் பொருந்தாது என்கிறது!

(4) மகேந்திரப் பொருத்தம்

மணப்பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணிக் கொண்டு வந்து மணமகன் நட்சத்திரத்தில் முடியும் போது அந்த எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,24 என்று ஏதாவது ஒன்றாக இருந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

நட்சத்திரங்களை மிருக அம்சமாகக் கொண்டு, எந்த எந்த நட்சத்திரத்துடன் எந்த எந்த நட்சத்திரங்கள் பொருந்தும் என்று தெரிந்து கொள்ளலாம்.

அசுவினி, சதயம்                                                                  –     குதிரை
பரணி, இரேவதி                                                                    –     யானை
கார்த்திகை, பூசம்                                                                 –     ஆடு
உரோகிணி, மிருகசீரிடம்                                                 –     பாம்பு
திருவாதிரை, மூலம்                                                          –     நாய்
புனர்பூசம், ஆயிலியம்                                                      –     பூனை
மகம், பூரம்                                                                              –     எலி
உத்திரம், உத்திரட்டாதி                                                    –     பசு
அத்தம்                                                                                     –     எருமை
சித்திரை, விசாகம்                                                             –     புலி
அனுசம், கேட்டை                                                             –     மான்
பூராடம், திருவோணம்                                                    –     குரங்கு
உத்திராடம்                                                                            –     கீரி
அவிட்டம், பூரட்டாதி                                                        –     சிங்கம்

இவற்றில் ஒன்றுக்கொன்று பகையான யோனிகள் பின்வருமாறு,

குதிரை                                       –     எருமை
யானை                                       –     சிங்கம்
குரங்கு                                        –     ஆடு
பாம்பு                                           –     கீரி
ஏலி                                               –     பூனை
மான்                                            –     நாய்
மாடு                                             –     புலி

இந்தப் பட்டியலில் இல்லாதவாறு விலங்குகள் அமைந்தால் இல்லற வாழ்க்கை சுகமாக அமையும். அதாவது இருவருக்கும் ஒரு யோனியாயினும் பகையில்லாத யோனிகளில் ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்குமாயினும் அல்லது இருவருக்கும் பெண்யோனியாயினும் உத்தமம்.

இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம்.

ஆணுக்குப் பெண்யோனியும் பெண்ணுக்கு ஆண்யோனியாயினும் பொருந்தாது.

இந்தப் பொருத்தம் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல் வானியல்பற்றிக் கொஞ்சமேனும் அறிவில்லாத முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் தான்தோன்றித்தனமாக மனம் போன போக்கில் எழுதி வைத்தவை ஆகும்.

யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்றால் மணம் செய்ய விரும்பும் ஆணையும் பெண்ணையும் மகப்பேறு மகளிர் மருத்துவரிடம் அனுப்புவதே அறிவார்ந்த செயலாகும்!

(6) பெண் தீர்க்கப் பொருத்தம்

பெண் தீர்க்கப் பொருத்தம் என்பது செல்வ வளத்தை தீர்மானிக்கக்கூடிய பொருத்தமாகும். மணப் பெண்ணின் நட்சத்திரத்தில் தொடங்கி மணமகனின் நட்சத்திரம் வரை எண்ணி வரும் கூட்டுத் தொகை 13 க்கு மேற்படின் பொருத்தம் உண்டு. 9 க்கு மேல் 13 வரைரயில் மத்திமம், 9 வரை பொருந்தாது.

(7) இராசிப் பொருத்தம்

இராசி என்பது சந்திர இலக்கினத்தைக் குறிக்கும்.

ஒரு மணமகளுக்கு இராசிப்பொருத்தம் பார்க்கின்றபோது, மொத்தமுள்ள பன்னிரெண்டு இராசிகளில் மணமகளுடைய ஜென்ம இராசிக்கு 3 அல்லது 7 அல்லது 11 ஆவதாக வரும் இராசிகளில் பிறந்த மணமகனுடைய சாதகம் மிகப் பொருத்தமாக அமையும் என்றும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் வளமான வாழ்க்கை அமையும் என்பது சோதிட சாத்திர நம்பிக்கை ஆகும்.

ஆனால், எல்லா மணமகளுக்கும் அல்லது எல்லா மணமகனுக்கும் மேலே சொல்லப்பட்டது மாதிரி இராசிப் பொருத்தம் அமைந்துவிடுவது இல்லை. இவ்வாறு அமையாத சாதகருக்கு இராசிப்பொருத்த அடிப்படையில் எப்படித் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது?

இடபம் முதல் மீனம் வரை பிறந்த ஆணிற்கு 4 ஆவது, 8 ஆவது, 12 ஆவதாக அமையப் பெற்ற பெண் இராசி பொருந்தி வரும்.

மேடம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய இராசியில் பிறந்த ஒரு பெண்ணிற்கு 4 ஆவது, 8 ஆவது 12 ஆவது இராசிகள் பொருந்திவராது. ஆனால், இந்த இராசிக்காரர்களுக்கு 2 ஆவது, 6 ஆவது, 10 ஆவது இராசிகள் மிக மிகப்பொருத்தமாக இயைந்து வரும். இவ்விரு சாதகத்தையும் இணைக்கலாம்.

இடபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் போன்ற இராசியில் பிறந்த பெண்ணிற்கு 2 ஆவது, 6 ஆவது, 10 ஆவது இராசி அமைப்புகள் துளிகூடப் பொருந்தி வராது. இவர்கள் இணைந்தால் நோய், சயரோகம், விபத்து, பொருளாதாரத் தடைகள், புத்திர பாக்கியமின்மை, தாய்க்கு சுகக்கேடு, இல்வாழ்க் கையில் இன்பமின்மை போன்றவை ஏற்படலாம்.

எனவே இடபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுடன் கண்டிப்பாக 2 ஆவது, 6 ஆவது, 10 ஆவது இராசிகளை இணைப்பது அவ்வளவு உசிதமல்ல. அதற்கு மாறாக இந்த இராசிகளில் பிறந்தவர்களுக்கு 4 ஆவது, 8 ஆவது, 12 ஆவது இராசியில் அமையப் பெற்ற சாதகம் மிகவும் பொருந்தும்.

மேடம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆக ஏதேனும் ஒன்று மணப்பெண்ணுக்குரிய இராசியாக இருந்தால் ‘சஷ்டாங்க’ தோசம் இல்லை என்பது சிலர் கருத்து ஆகும்.

அதேபோல் இடபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆக ஏதேனும் ஒன்று மணப்பெண்ணுக்குரிய இராசியாக இருந்தால் 2 ஆம் இடம் 12 ஆம் இடம் தோசமில்லை என்பது சிலர் கருத்து ஆகும்.

வாக்கிய பஞ்சாங்கம் ஆணும் பெண்ணும் ஒரே இராசி எனினும், பெண் இராசிக்கு ஆண் இராசி 6 க்கு மேற்படினும் உத்தமம் என்கிறது. பெண் இராசிக்கு ஆண் இராசி 2 ஆயின் மிருத்து. 3 ஆயின் துக்கம். 4 ஆயின் தரித்திரம். 5 ஆயின் வைதவ்வியம். 6 ஆயின் புத்திரநாசம் எனப் பயமுறுத்துகிறது.

இடபம் முதலான இரட்டை இராசிகளில் பிறந்த பெண்ணக்கு 2 ஆம் இராசி ஆண் இராசியாக வரினும் மேடம் முதலான ஒற்றை இராசியில் பிறந்த பெண்ணுக்கு 6 ஆம் இராசி ஆண் இராசியாக வரினும் மத்திமம். பெண்ணும் ஆணும் ஒரு இராசியாகும் போது பெண் நட்சத்திரத்துக்கு ஆண் நட்சத்திரம் பிந்தியதாகில் பொருந்தாதாம்.

(8) இராசி அதிபதிப் பொருத்தம்

ஒவ்வொருவருக்கும் அவரவர் இராசி அதிபதி யார் என்பதைக் கொண்டு இராசிப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

இராசி அதிபதி மணப்பெண், மணமகன் இருவருக்கும் ஒருவராகவே இருந்தால் உத்தமம்.

இராசி அதிபதிகள்

மேடம்                     –     செவ்வாய்
இடபம்                     –     சுக்கிரன்
மிதுனம்                   –      புதன்
கடகம்                     –     சந்திரன்
சிம்மம்                    –     சூரியன்
கன்னி                     –     புதன்
துலாம்                     –     சுக்கிரன்
விருச்சிகம்                 –     செவ்வாய்
தனுசு                        –     குரு
மகரம், கும்பம்                                –     சனி
மீனம்                                                  –     குரு

கிரகம் மித்துருக்கள்
சூரியன்        குரு
சந்திரன்      புதன், குரு
செவ்வாய்      புதன், சுக்கிரன்
புதன்    சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன்,    சனி
குரு    சூரியன், சந்திரன், புதன், சுக்கரன்,    சனி
சுக்கிரன்    செவ்வாய், புதன், குரு, சுக்கிரன்
சனி   புதன், குர, சுக்கரன்

மித்திரு (நட்பு) அல்லாதன சத்துருக்கள் (பகை) ஆகும்.

(9) இரச்சுப் பொருத்தம் (தாலிப் பொருத்தம்)

சிரோரச்சு – மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.
கண்டரச்சு – ரோகிணி, திருவாதிரை, அத்தம், சுவாதி, திருவேணம், சதயம்.
நாபிரச்சு – கார்த்திகை, புனர்பூசம், உத்தரம், விசாகம், உத்தராடம், பூரட்டாதி.
ஊருரச்சு – பரணி, பூசம், புரம், அனுசம், பூராடம், உத்தராட்டாதி.
பாதரச்சு – அசுவினி, ஆயிலியம், மகம், கேட்டை, மூலம், இரேவதி.

இந்தப் பட்டியலில் மணப்பெண், மணமகன் இருவரது நட்சத்திரங்களும் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது. அவை சிரோரச்சில் இருந்தால் ஆண் மரணம். கண்டரச்சுவில் இருந்தால் பெண் மரணம். நாபிரச்சுவில் இருந்தால் புத்திர நாசம். ஊருரச்சுவில் இருந்தால் தன நாசம். பாதரச்சுவில் இருந்தால் தூரதேச வாசம்.

மேலும் ஆரோகத்திலாவது, அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால் இரச்சுப் பொருத்தம் இல்லை!

ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் இருந்தாலும் ஒரே இரச்சுவாக இருந்தாலும் இரச்சுப் பொருத்தம் உண்டு.

(10) நாடிப் பொருத்தம்

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அத்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பார்கவ நாடியைச் சேர்ந்தவை.

பரணி, மிருகசிரீடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திய நாடியைச் சேர்ந்தவை.

கார்த்திகை, உரோகிணி, ஆயிலியம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வர்ம பார்கவ நாடியைச் சேர்ந்தவை. மணமகள், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப் பொருத்தம் உண்டு.

சோதிடப் புரட்டு

(13)

சோதிடர்களே! சில எண்கள் செய்த பாவம்தான் என்ன?

திருமணப் பொருத்தங்கள் எனச் சோதிடம் சொல்லும் பொருத்தங்களில் இதுவரை கிரகப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம, யோனிப் பொருத்தம், பெண் தீர்க்கப் பொருத்தம், இரச்சுப் பொருத்தம் இராசிப் பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம், நாடிப் பொருத்தம் என பத்துப் பொருதங்களைப் பார்த்தோம். தொடர்ந்து எஞ்சிய திருமணப் பொருத்தங்களையும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

(11) வேதைப் பொருத்தம்

வேதைப் பொருத்தம் என்பது ஏற்கனவே கூறியவாறு சுகானுபாகங்களில் கணவனும் மனவிவியும் தங்களுக்குள் குறைகள் இருந்தாலும் அவற்றை அனுசரித்து வாழ்க்கை நடத்துவதைத் தீர்மானிப்பது.

அசுவினி               – கேட்டை
பரணி                     – அனுடம்
கார்த்திகை          – விசாகம்
உரோகிணி          – சுவாதி
திருவாதிரை       – திருவோணம்
புனர்பூசம்            – உத்தராடம்
பூசம்                      – பூராடம்
ஆயிலியம்         – மூலம்
மகம்                      – இரேவதி
பூரம்                       – உத்தரட்டாதி
உத்தரம்                – பூரட்டாதி
அத்தம்                  – சதயம்
மிருகசீரிடம்       – சித்திரை, அவிட்டம்

ஆண், பெண் இருவருடைய நட்சத்திரங்கள் மேற்குறித்தவாறு ஒன்றினுக்கொன்று வேதையாயிருப்பிற் பொருந்தாது. மாறிவரின் பொருத்தம்.

(12) வசியப் பொருத்தம்

இராசிகளில் எதற்கு எதனோடு உடன்பாடு என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் வசியப் பொருத்தத்தை கண்டறியலாம்.

மேடத்துக்கு வசியம் சிம்மம், விருச்சிகம்
இடபத்துக்கு வசியம் கடகம், துலாம்
மிதுனத்துக்கு வசியம் கன்னி
கடகத்துக்கு வசியம் விருச்சிகம், தனு
சிம்மத்துக்கு வசியம் துலாம்
கன்னிக்கு வசியம் மிதுனம், மீனம்
துலாமுக்கு வசியம் கன்னி, மகரம்
விருச்சிகம் வசியம் கடகம், கன்னி
தனுசுக்க வசியம் மீனம்
மகரத்துக்கு வசியம் மேடம், கும்பம்
கும்பத்துக்கு வசியம் மேடம்
மீனத்துக்கு வசியம் மகரம்

என்று வசியப் பொருத்தம் கூறப்பட்டிருக்கிறது. மணப்பெண் இராசிக்கு, மணமகன் மேற்கூறப்பட்டுள்ளபடி பொருந்துமானால் அதுவே சரியான வசியப் பொருத்தம்.

பெண் இராசியும் ஆண் இராசியும் ஒன்றாயினும் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமாயிருப்பதுடன் ஆணின் இராசிக்கு பெண்ணின் இராசி வசியமாயினும் பெண் இராசிக்கு மணமகன் இராசி வசியமாக ஆணுக்குப் பெண் இராசி வசியமில்லாது இருப்பினும் உத்தமம். ஆண் இராசிக்கு பெண் இராசி வசியமாகப் பெண் இராசி வசியம் இல்லாதிருப்பின் மத்திமம்.

இருவர் இராசிகளும் ஒன்றினுக்கொன்று வசியமில்லாதிருப்பின் பொருந்தாது.

(13) ஆயுள் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரையும் எண்ணின் தொகையும் ஆணின் நட்சத்திரம் முதல் பெண் நட்சத்திரம் வரையும் எண்ணின் தொகையும் தனித் தனி 7ஆல் பெருக்கி 27 ஆல் பிரித்து வந்த மிச்சங்களில் இருதொகைகளும் சமமாயினும் பெண்ணினுடைய தொகை 7 வரை குறையினும் உத்தமம், ஆணின் தொகை 7 வரை குறையின் மத்திமம். ஒரு தொகையிலும் பார்க்க மற்றது 7க்கு மேற் குறையின் பொருந்தாது.

(14) பிள்ளைப் பொருத்தம்

குழந்தைகள் பிறப்பதற்கு ஒவ்வொருவருடைய சாதகங்களிலும் அய்ந்தாம் இடம், ஒன்பதாம் இடம், ஏழாம் இடம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த மூன்று ஸ்தானங்களில் ஏதாவது ஒன்று வலிமை இல்லாமல் இருந்தாலும், குரு பலமில்லாமல் இருந்தாலும் அந்தச் சாதகருக்கு குழந்தைப் பாக்கியத்தில் தடைகள் ஏற்படுகின்றன. அய்ந்தாம் இடத்துக்கு அதிபதி குரு, இது பாவ வர்க்கமடைந்து பாபர் சேர்தல் நோக்குதல் பெற்றிருப்பினும் 6, 8, 12 ஆம் அதிபர்களுடன் கூடியிருப்பினும்  5 க்கு அதிபனும் குருவும் பெலவீனராய் 6,8, 12 ஆம் இடங்களிலிருப்பினும் புத்திர தோசம் உண்டாம். சுபர் சேர்தல், நோக்குதல் உண்டாயின் மேற்கண்ட தோசங்கள் சாந்தியாகும். பெண்ணுக்கும் ஆணுக்கும் புத்திர தோசமின்றாயின் உத்தமம். பெண்ணுக்கு மாத்திரம் புத்திர தோசமின்றாயின் மத்திமம். பெண்ணுக்குப் புத்திர தோசம் அதிகமிருப்பினும் இருவருக்கும் புத்திர தோசமிருப்பினும் பொருந்தாது.

செவ்வாய் தோசம்

சோசங்களில் மிகவும் கெட்ட தோசமாக செவ்வாய் தோசம் சோதிட சாத்திரத்தில் கூறப்படுகின்றது. செவ்வாய்க்கு எப்படி தோசம் ஏற்படுகிறது?

செவ்வாய் நன்கு பலம் பெற்றிருந்தால் அதாவது ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் தோசம் இல்லை. செவ்வாய் பலவீனப்பட்டு இருந்தால்தான் தோசம் ஏற்படுகிறது. இவ்வாறு ஒருவருக்குச் செவ்வாய் பலவீனப்பட்டு இருக்கும்போது ஏற்படுகிற தோசம் செவ்வாய் தோசம் எனப்படும்.

சாதகப் பொருத்தத்தில் செவ்வாய் தோசம் பெரும் குறையாகக் கருதப்படுகின்றது. சாதகத்தில் செவ்வாய், லக்கினம், சந்திரன், சுக்கிரனுக்கு 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இருக்கிறது என்று பொருள். இலக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்க்கு தோசம் ஏற்படுகிறது. மணப்பெண், மணமகன் இருவர் சாதகத்திலும் இந்த இடம் அமையாவிட்டால் நல்லது. இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பாக இருந்தாலும் நல்லதுதான்.

மிதுனம், கன்னி ஆகிய வீடுகளில் 7 அல்லது 8 ஆம் இடமாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் கடும் தோசம் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு நடப்பு திசை செவ்வாயாக இருந்தால் மிகவும் பாதிக்கப்படுவர்.

மேடம், கடகம், விருச்சிகம், மகரங்களில் செவ்வாய் குருவோடு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோசம் இல்லை.

செவ்வாய் தோசம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதைப் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டால் அந்த திசை புத்தி நேரங்களில் கணவரையோ அல்லது மனைவியையோ இழக்க நேரலாம். அல்லது பிரிய நேரலாம். திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இந்தச் செவ்வாய் திசை முடிந்துவிட்டால் சிக்கல் இல்லை.

மேற்கூறிய 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் கீழ்க்கண்ட வீடுகளாக இருந்தால் தோசம் இல்லை. அவைகளாவன:

1) மேடம், விருச்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இந்த இரு வீடுகளும் செவ்வாய்க்கு ஆட்சி வீடு என்பதால் தோசமில்லை.

2) மகரம், கடகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இதில் மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடு என்பதாலும் கடகம் நீச வீடு என்பதாலும் தோசமில்லை.

3) தனுசு, மீனம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இது நட்பு வீடாக இருப்பதால் தோசமில்லை.

4) கும்பம், சிம்மம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை இதில் கும்பம் சனி வீடாகவும், சிம்மம் சூரியனின் வீடாகவும் இருப்பதால் செவ்வாய் தோசம் அடிபடுகிறது.

5) சந்திரனுடன் செவ்வாய் இணைந்திருந்தால் சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இதனால் செவ்வாய்க்கு தோசம் இல்லை.

விவாகப் பொருத்தம் பற்றிச் சொல்லும் வசாக்கிய பஞ்சாங்கம் பிராமணருக்கு அதிபதியும், சத்திரியருக்குக் கணமும், வைசியருக்கு பெண் தீர்க்கமும் சூத்திரர்க்கு யோனியும் பிரதானமாகப் பொருந்த வேண்டும் என்கிறது.

விவாகப் பொருத்தத்தில் கூட வேதங்களின் ஓர் அங்கமான சோதிடம் நால்வருணத்தைப் புகுத்தி இருக்கிறது. கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஒருவன் பிராமணன், ஒருவன் சத்திரியன், ஒருவன் வைசிகன், ஒருவன் சூத்திரன் என்ற வேறுபாடு தெரியுமா?

சாத்திரமானாலும் சடங்கானாலும் எங்கும் வருணவேறுபாடு சோதிட சாத்திரம் எழுதியவர்களால் திட்டமிட்டுப் புகுத்தப் பட்டுள்ளது. கோள்களை வருண அடிப்படையில் வகுத்திருக்கின்றார்கள்.

வருணம் கிரகம் இராசி

பிராமணன் – குரு, சுக்கிரன் கடகம், விருச்சிகம, மீனம் (4, 8, 12)

சத்திரியன் – சூரியன், செவ்வாய் மேடம், சிம்மம், தனுசு (1, 5, 9)

வைசிகன் – சந்திரன், புதன் இடபம், கன்னி, மகரம் (2, 6, 10)

சூத்திரன் – சனி மிதுனம், துலாம், கும்பம் (3, 7, 11)

சோதிடத்தில் சனி கெட்ட கோளாகவும் கறுப்பு நிறம் உடையதாகவும் கற்பிக்கப்பட்டதாலேயே அது சூத்திரருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழர்கள் சோதிட சாத்திரம் தங்களை சூத்திரர் என்று இழிவு படுத்தினாலும் அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், கவலைப்படாதது மட்டுமில்லாமல் அதனைப் பெருமையாக எடுத்துக் கொண்டு மற்ற வருணத்தாரைவிட சோதிடத்தை
கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த பிரபாவதி படத்தில் ஒரு காட்சி. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.

படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.

‘ஏண்டா என்னை மிதிச்சே?’ கோபத்தோடு கேட்பான் அசுரன்.

‘இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்’ என்பார் கலைவாணர்.

‘பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி’ என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.

ஒரு சோதிடர் இருவரது சாதகத்திலும் 12 பொருத்தங்களில் 11 சரி வந்தாலும் திருமணம் முறிந்து விடும் என்கின்றார்.

‘சாதகத்தில் பொருத்தம் பார்க்கும் பொழுது, 12 பொருத்தத்தில் 5 க்கு மேற்பட்ட பொருத்தங்கள் அமைந்தாலே திருமணம் செய்துவிடுகின்றனர். ஆனால் சாதகத்தில் முழுமையாகப் பொருத்தம் உள்ளதா? என்பதைப் பார்க்கத் தவறி விடுகின்றனர்.

எட்டாமிடம் ஆண்களின் சாதகத்தில் ஆயுள் ஸ்தானமாகவும் பெண்களின் சாதகத்தில் மாங்கல்ய பலத்தைக் குறிப்பதாகவும் அமைகிறது

மேற்சொன்ன ஸ்தானங்களில் அசுப கிரங்கள் என்று அழைக்கப்படும் ராகு, கேது, சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும் அல்லது அவர்கள் பார்வை ஏற்பட்டாலும், 10 க்கு மேற்பட்ட பொருத்தங்கள் அமையப் பெற்றாலும் இத்தகைய அமைப்பு வரன் சாதகத்தில் அமையப் பெறவில்லையாயின், அப்படி நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவடைகின்றன.

நண்பர் பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். அவருக்கு 2-9-1997 அன்று திருமணம் நடைபெற்றது. நண்பரின் நட்சத்திரம் இரேவதி மற்றும் பெண்ணின் நட்சத்திரம் உத்திரம் ஆகும்.

பொருத்தம் பார்த்த பொழுது மொத்தம் 12 பொருத்தங்களில் 11 பொருத்தம் உள்ளதால், திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆயினும் திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் இருவருக்கும் ஒத்துப் போகாததால், மணப்பெண் தாய் வீட்டிற்குச் சென்றுவிட நேரிட்டது. பலமுறை நேரில் சென்று சமாதானப் படுத்தியும் அவர் மனம் மாறாததால், நண்பர் மணமுறிவு வழக்கொன்றை மார்சு 98 இல் தொடர்ந்தார்

நண்பரின் முன்னாள் மனைவியின் சாதகத்தில் செவ்வாய் சனியோடு இணைந்து களத்திரஸ்தானமான 7 ஆம் இடத்தில் அமையப்பெற்றது கடுமையான செவ்வாய் தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர் சாதகத்தில் செவ்வாய் தோசம் அமையப்பெறவில்லை. மேலும் அவருடைய சாதகத்தில் 7 ஆம் இடத்தில் களத்திரகாரகரான சுக்கிரன் அமையப்பெற்றது காரகோ பாவ நாஸ்தி என்ற விதியின்படி திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தியது.

கடக லக்கினத்திற்குச் சுக்கிரன் பாதகாதிபதியாகின்றார். அவர் களத்திர ஸ்தானமான 7 ஆம் இடத்தில் அமையப் பெற்றால் இல்வாழ்வு சிறப்பதில்லை.

மேலும் விரையஸ்தானாதிபதியான புதன் 7 ஆம் இடத்தில் அமையப் பெற்றதால் இல்வாழ்வில் சிக்கல், பிரிவினை போன்று பாதகமான பலன்களை ஏற்படுத்தியது. மேலும் இவர்களுக்குத் திருமணம் நடைபெறுகின்ற பொழுது, நண்பருக்கு ஏழரைச்சனியும், அவருடைய மனைவிக்கு அட்டமா சனியும் நடைபெற்று வந்ததும் திருமணம் தோல்வியைத் தழுவியதற்கு ஒரு காரணம் ஆகும். (ஆர்.வி.சேகர், ஏ.பி 860, எச் பிளாக், 2வது தெரு, அண்ணா நகர், சென்னை-40, தினகரன்)

சாதகத்தில் 12 பொருத்தத்தில் 11 பொருத்தம் அமைந்தும் திருமணம் முறிந்துவிட்டது என்றால் சாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வதால் என்ன பயன்?

சாதகம் பார்த்துச் செய்த இணையர்களுக்கு இடையில் மணமுறிவு மட்டுமல்ல அவர்களுக்குக் குழந்தைகள் கூடப் பிறக்காமல் போகிறதே? அது ஏன்?

மேலே கூறிய திருமணப் பொருத்தங்கள் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல், வானியல்பற்றிக் கொஞ்சமேனும் அறிவு இல்லாத அறிவிலிகளால் விதிக்கட்டுப்பாடின்றித் தான்தோன்றித்தனமாக விதிக்கப்பட்டவை ஆகும்.

ஒரு சோதிட நூல் திருமணப் பொருத்தத்தில் கிரகப் பொருத்தந்தான் முக்கியம் என்கிறது. இன்னொன்று இராசிப் பொருத்தந்தான் முக்கியம் என்கிறது. பிறிதொன்று தினப் பொருத்ந்தான் முக்கியம் என்கிறது. இதில் எது சரி? எது பிழை? எல்லாமே சரியாக இருக்க முடியாது!

ஆண்-பெண் இரு பாலாரையும் தேவ கணம் மனித கணம் இராட்சத கணம் என்று பிரிப்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. இந்த 27 நட்சத்திர மண்டலங்களது உருவமைப்பை (pattern) வரைந்து அவற்றுக்குப் பெயர் வைத்ததே மனிதன்தான். பின்னர் இந்த நட்சத்திரங்களைத் தேவ கணம், மனித கணம், இராட்சத கணம் என்று பிரிப்பதும் அவை ஒன்றுக்கு ஒன்று பொருந்தாது என்று கூறுவதும் முட்டாள்த்தனத்தின் உச்சக் கட்டமாகும். அதற்கு அறிவியல் அடிப்படை எதுவுமே இல்லை.

வசியப் பொருத்தம் என்பது ஆண், பெண் ஆகிய இருவருடைய உள்ளங்களிலும் பாசத்தையும் உண்மையான அன்பையும் வளர்ப்பதற்கும் ஒருவரிடத்தில் மற்றொருவர் அன்பு கொண்டு வாழச் செய்வதற்கும் மணப் பொருத்தம் இல்லாத ஒருவரை மற்றொருவர் வசியம் செய்வதற்கும் மிக அவசியமாம். இராசிப் பொருத்தம் மூலம் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் வசியப்பட்டு எந்தக் கணத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காது பரிபூரண அன்புடன் வாழ்க்கை நடத்துவர் எனச் சோதிட சாத்திரம் சொல்கிறது.

பிறவியில் மேட இராசியாக இருக்கும் பெண் சிம்மராசி அல்லது விருச்சிக இராசி ஆணிடத்தில்தான் வசியமாவாள். அத்தகைய பெண்ணை வேறு இராசியுடைய ஆணுக்குத் திருமணம் செய்து வைத்தால் அத்தகைய பெண் இயற்கையிலேயே இயற்கையின் தூண்டு தலிலேயே சிம்மராசியுடைய அல்லது விருச்சிக இராசியுடைய ஆணிடத்தில்தான் மன நாட்டங்கள் கொண்டுவிடுவாள். இதனால் அவளது கற்பொழுக்கத்திற்கும்கூட களங்கம் ஏற்பட்டு விடக்கூடுமாம். இவ்வாறு சோதிடர் ஒருவர் பெண்களைப்பற்றி மிகவும் இழிவாக எழுதியுள்ளார்.

ஒரு இராசிக்கு இன்னொரு இராசி வசியம், வசியம் இல்லை என்பதைச் சோதிட சாத்திரம் எழுதிய முனிவர்கள் எப்படிக் கண்டு பிடித்தார்கள்? அதற்கான சான்று என்ன?

மனிதர்களை அவர்களது குருதியின் அடிப்படையில் ஏ, பி, ஏபி. ஒ பிரிவு என்று மருத்துவர்கள் பிரித்து வைத்திருக்கின்றார்கள். அதற்கு அறிவியல் அடிப்படை இருக்கிறது. குருதி தேவைப்படும் ஒரு நோயாளிக்கு இன்னொருவருடைய குருதியை ஏற்றும் முறை 1900 இலேயே நடைமுறைக்கு வந்தது. நோயாளியின் குருதி எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்பதைச் சோதனை செய்து அதே பிரிவைச் சேர்ந்த குருதியையே ஏற்றுகின்றார்கள்.

சோதிடம் சில எண்களைப் பொருத்தம் என்று ஏற்றுக் கொள்வதும் சில எண்களைப் பொருத்தமில்லை என்று தள்ளுவதும் மூடநம்பிக்கையே யொழிய அதற்குச் அறிவியல் அடிப்படை எதுவம் இல்லை. மணப்பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணிக் கொண்டு வந்து மணமகன் நட்சத்திரத்தில் முடியும் போது அந்த எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று ஏதாவது ஒன்றாக இருந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு என்று சோதிடம் சொல்கிறது.

மிகுதி எண்களான 1,2,3,5,6,8,9,11,12,14,15,17,18,20,21,23, பொருத்தம் இல்லை என்று அதே சோதிடம் சொல்கிறது. கேள்வி என்னவென்றால் இந்த எண்கள் செய்த பாவம்தான் என்ன? ஏன் அவற்றைக் கெட்ட எண்கள் என்று தள்ள வேண்டும்? அடிப்படை என்ன?

இருபத்தேழு நட்சத்திரங்களை மிருக அம்சத்தோடு சோடி சேர்த்து அதன் அடிப்படையில் யோனிப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது சொல்லாமலே உங்களுக்கு விளங்கும்.

உரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்களோடு பாம்பைச் சேர்க்கச் சொன்னது யார்? உத்திராடம் நட்சத்திரத்தோடு கீரியை முடிச்சுப் போடுமாறு யார் சொன்னது? அதற்கான ஏது அல்லது ஏதுக்கள் என்ன?

கீரிக்கும் பாம்புக்கும் இடையில் இயற்கையாக இருக்கும் பகைமையை மனதில் கொண்டு உரோகிணி, மிருகசீரிடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இடையில் யோனிப் பொருத்தம் இல்லை என்று சொல்வது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை ஆகும்.

தமிழர்களைப் பொறுத்தளவில் குறிப்புப் பார்க்காமல் திருமணம் நடைபெறுவதில்லை. அறிவியல் பட்டதாரிகள் கூட இதற்குப் புறநடை இல்லை. இது காரணமாகவே திருமணப் பொருத்தம் பார்ப்பது ஒரு புரட்டு என்பதை மெய்ப்பிக்க அது பற்றி விரிவாக எழுத வேண்டி நேரிட்டது.

சோதிடப் பேய் பிடித்துப் பலர் அலைவது போதாதென்று இப்போது எண் சாத்திரக்காரர்களும் கடை விரிக்கின்றார்கள்.

யாருக்காவது உங்கள் பிறந்த நாளைத் தற்செயலாகச் சொல்லிப் பாருங்கள். உடனே ‘அதுதானே பார்த்தேன். நீங்கள் ஒண்ணாம் இலக்கக்காரர். அதாவது பிறந்த நாளும் ஒன்று பிறந்த திகதியின் கூட்டுத்தொகையும் ஒன்று. ஒண்ணாம் இலக்ககாரர்கள் பிடிச்சிராவிகள், இறங்கி வரமாட்டார்கள்’ என்று பலன் சொல்வார்கள்.

சோதிடம்போல் எண் சாத்திரத்தில் கூட்டல், பிரித்தல், கணித்தல் (computation) வரிசை ஒழுங்கு மாற்றல் (permutation) போன்ற சிக்கல்கள் இல்லை. ஒன்றில் இருந்து ஐம்பது வரை எண்ணத் தெரிந்திருந்தால் போதும் சுப்பனும் குப்பனும் தங்களை எண்சாத்திரிகள் என்று சொல்லிக் கொண்டு பலன் சொல்லக் கிளம்பலாம்!

தமிழர்கள் வீடு வாங்கும்போது 8 ஆம் இலக்கத்தை விரும்புவதில்லை. சோதிடத்தில் எட்டு சனியோடு (அட்டமத்துச் சனி) தொடர்பு படுத்திப் பேசப்படுவதே அதற்குக் காரணமாகும். வேறு காரணம் இல்லை.

இதே போல் சீனர்கள் 4 யை விரும்புவதில்லை. அது மரணத்தோடு தொடர்புடைய எண் என்பது அவர்கள் கொண்டிருக்கும் மூட நம்பிக்கை ஆகும். கிறித்தவர்கள் 13 யை விரும்புவதில்லை. தொடர்மாடி வீடு கட்டும்போது 12 ஆவது மாடிக்கு அடுத்த மாடியை 14 ஆவது மாடி என்றுதான் இலக்கமிடுகின்றார்கள். காரணம் இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முதல்நாள் அவரது இறுதி இரவு உணவில் கலந்து கொண்டவர்களது எண்ணிக்கை 13 என்பதே!

பன்னிரண்டாம் மாடிக்கு மேலே 13 ஆவது மாடி இல்லாமல் 14 ஆவது மாடி இருப்பது கனடியத் தமிழ் வானொலி சக்கிடுத்தாருக்கும் ஒரே குழப்பம்!

சோதிடப் புரட்டு

(14)

புவியின் முதல் விஞ்ஞானி யார்?

சென்ற கிழமை இறுதியில் நியூயேர்சி மாநிலத்தில் ஆண்டுதோறும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்திய தமிழர் திருநாள் விழா விற்குப் போயிருந்தேன்.

வழக்கமாக இந்த விழாவை ஆண்டு தோறும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் தமிழ்நாடு அறக்கட்டளையும் சேர்ந்து நடத்தி வந்தன. இம்முறை தனித்தனியாக அ.த.ச. பேரவை நியூயேர்சியிலும் தமிழ்நாடு அறக்கட்டளை புளோரிடாவிலும் தங்கள் விழாக்களை நடத்தின.

இன்றைய புதிய தொழில் நுட்ப வசதிகளின் விளைவாக தில்லி இராஜ்பவனில் இருந்து கொண்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தொடக்கவுரையை நிகழ்த்தி அ.த.ச. பேரவையின் 16 ஆவது மாநாட்டைத் தொடக்கி வைத்தார்!

‘தமிழ்நாட்டின் இராமேசுவரம் தீவில் ஒரு நடுத்தரத் தமிழ்க் குடும்பத்தில் நான் பிறந்தேன். என் அப்பா ஜைனுல்தீன் பெரிய பணக்காரர் அல்ல. மெத்தப் படித்தவரும் கிடையாது. இருந்தாலும் அவர் ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அவர் தரும சிந்தனை நிறைந்தவர். என் அம்மா ஆஷியம்மா அப்பாவின் மனதிற்கேற்ற துணை. தினந்தோறும் அம்மா எவ்வளவு பேருக்குச் சாப்பாடு போடுவாள் என்பது துல்லியமாக என் நினைவுக்கு வரவில்லை. ஆனால் எங்கள் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களைவிட அதிகமான வெளியாட்கள் எங்களுடன் சாப்பிடுவார்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.’ என்ற முன்னுரையோடு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாம் எழுதிய அக்கினிச் சிறகுகள் தன்வரலாற்றை தொடங்குகின்றார்.

தனது சொந்த முயற்சியால் பல்கலையும் கற்று இன்று இந்திய நாட்டின் முதற் குடிமகனாக அப்துல் கலாம் உயர்ந்து இருக்கின்றார். அவர் ஒரு நாடறிந்த அறிவியலாளர். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளின்டன் இந்தியா சென்றிருந்தபோது அவர் காண விரும்பிய ஒரே மனிதர் அப்துல் கலாம்தான். காரணம் அவர்தான் இந்திய அரசின் அணுக்குண்டு மற்றும் ஏவுகணை தயாரிப்பின் முதன்மை அறிவியல்வாதி. ஒலியின் வேகத்தைவிட 12 மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடிய அக்கினி, ஆகாஷ் போன்ற ஏவுகணைத் திட்டத்தின் சூத்திரதாரி அவர்தான். அதற்காக 1990 ஆம் ஆண்டு குடியரசுத் தினத்தில் பத்மவிபூஷணன் விருது கொடுத்து மேன்மைப் படுத்தப்பட்டார்.

மதத்தால் முஸ்லிம் ஆக இருந்தாலும் மனதால் தமிழராக அப்துல் கலாம் வாழ்கின்றார். தொடக்கக் கல்வியைத் தமிழ்மொழி மூலம் படித்தவர். தமிழ்ச் சிறார்களின் கற்கைமொழி கட்டாயம் தமிழாக இருக்கவேண்டும் என்பதை அடிக்கடி வற்புறுத்தி வருகின்றார். திருக்குறளில் நல்ல தேர்ச்சியும் ஈடுபாடும் உள்ளவர். அன்று அவர் ஆற்றிய உரையின் போது இரண்டு திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

அப்துல் கலாம்தான் அடுத்த குடியரசுத் தலைவர் என முடிவாகிய பின்னர் அவரது பதவி ஏற்பு விழாவை ஒட்டிய ஒழுங்குகளைச் செய்ய அமைச்சர் ஒருவரை இந்திய நடுவண் அரசு நியமித்திருந்தது.

அமைச்சர்: ‘எந்த நாளில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? அதாவது சோதிடத்தின்படி நாள் நட்சத்திரம் பார்த்து சுபநேரத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்?’

அப்துல் கலாம் ‘புவி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கிறது. காலத்துக்கும் நேரத்துக்கும் இந்தச் சுழற்சிதான் காரணம்! என்னைப் பொறுத்தளவில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே! எல்லா நேரமும் நல்ல நேரமே! எந்த நாளும் நேரமும் உங்களுக்கு இசைவோ அன்று பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம்’ என விடை அளித்தார்.

அப்துல் கலாம் அவர்களது அறிவுபூர்வமான விடைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதற் காரணம் அவர் ஓர் அறிவியலாளர். இரண்டு அவர் ஒரு முஸ்லிம். இந்து மதம் போல் அல்லாது இஸ்லாமிய மதத்தில் பல தெய்வ வழிபாட்டுக்கோ, நாள் கோள் நட்சத்திரம் போன்றவற்றுக்கோ இடம் அறவே இல்லை. புராணக் கதைகளுக்கோ, புனைந்துரைகளுக்கோ, அருச்சனை அபிசேகத்துக்கோ, உருவ வழிபாட்டுக்கோ இடமில்லை.

குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கொடுத்த பதிலைக் கேட்டு அரங்கம் கையொலி எழுப்பி ஆரவாரித்தது. அந்தக் கையொலியை வைத்துப் பார்த்தால் அங்கு வந்திருந்தவர்களில் குறைந்தது 90 விழுக்காட்டினர் நாளும் கோளும் பார்க்காத பகுத்தறிவுவாதிகள் என்று நினைக்கத் தோன்றும்! அப்படித்தான் நானும் நினைத்தேன்.

ஆனால் திரும்பி வரும் வழியில் டீசனைபநறயவநச என்ற இடத்தில் நல்ல அமைதியான சூழலில் கலையழகோடு கட்டியிருக்கும் ஸ்ரீ வெங்கடேசுவரர் கோயிலையும் எட்டிப் பார்த்துவிட்டு வரலாம் என்று நண்பர்களோடு போனபோது நான் கண்ட காட்சி எனக்கு ஒரே வியப்பாக இருந்தது.

முதல்நாள் கைதட்டிய பலர் அங்கிருந்த நவக்கிரகங்களை வரிசையில் நின்று சுற்றிக் கும்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்!

நான் நினைக்கிறேன். இந்திய நாட்டின் வரலாற்றில் நாள், கோள், நட்சத்திரம் பாராது குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டவர் அப்துல் கலாம் ஒருவர்தான். அவர் ஆழ்ந்த இறைபக்தி உடையவராக இருந்தாலும் காலம் நேரம் என்று வரும்போது அவர் ஓர் அறிவியல்வாதி என்பதை எண்பித்துக் காட்டி விட்டார்!

அண்மையில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்னை மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்:ண மடத்து ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் இருக்கும் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேடையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. மாணவர்கள் மேடையில் இருந்து ஏறத்தாழ 10 அடி தொலை தரையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அப்துல் கலாம் உள்ளே நுழைந்ததும் மேடைக்குச் செல்லாமல் நேராக மாணவர்கள் அருகிலேயே சென்று, அவர்களுடன் அன்பாகப் பேசி அவர்களது பெயர்களைக் கேட்டார். உடனே எல்லா மாணவர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். பத்திரிகைப் படப்பிடிப்பாளர்கள், தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்கள் அவரை நெருங்கிப் படம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாவலர்கள் அப்துல் கலாமை மேடைக்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். அதன் பிறகு அவர் மேடைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்

மாணவர்கள் மேடையில் இருந்து சிறிது தொலைவு தள்ளிப் போய் அமர்ந்தனர். இதைப்பார்த்த அப்துல் கலாம் அனைவரையும் மேடைக்கு அருகிலேயே வந்து அமரும்படி சொன்னார். உடனே அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி மேடைக்கு அருகில்ப் போய் அமர்ந்து கொண்டனர்.

பிறகு அப்துல் கலாம் மாணவர்கள் மத்தியில் பேசினார். ‘உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ என்ற திருக்குறளை முதலில் சொல்லி மாணவர்களிடம் அதனைத் திரும்பச் சொல்லச் சொன்னார். அவர்களும் ஒரே குரலில் திரும்பச் சொன்னார்கள். யாராவது ஒருவர் அதற்குப் பொருள் சொல்லுங்கள் என்று கேட்டார். ஒரு மாணவன் எழுந்து ‘உயர்வான எண்ணத்தையே எண்ண வேண்டும். அது கைகூடாவிட்டாலும் எண்ணுவதைக் கைவிடக் கூடாது’ என்று விடை இறுத்தான்.

‘நமக்கு உயர்வான எண்ணம் இருக்க வேண்டும் நம்முடைய இலட்சியத்தில் வெற்றி பெற உள்ளத்தில் உயர்ந்த எண்ணம் இருக்க வேண்டும் அப்போதுதான் வெற்றியும் அதிகம் கிடைக்கும். நீங்கள் எல்லாம் பத்தாம் வகுப்பு வரை இங்கு படிக்கிறீர்கள். படித்து முடித்த பிறகு என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?’

மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று ‘நான் மருத்துவராக வர விரும்புகிறேன், பொறியாளராக வர விரும்புகிறேன், ஐ.பி.எஸ். அதிகாரியாக வர ஆசைப்படுகிறேன்’ என ஆளுக்கொரு விடை சொன்னார்கள்.

ஒரு துடிப்பான மாணவி எழுந்து ‘நான் உங்களைப்போல விஞ்ஞானி ஆவேன்’ என்றாள். அப்போதுதான் கலாமுக்கு உற்சாகம் ஏற்பட்டது. ‘அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ‘ என்று ஆர்வத்துடன் கேட்க, மாணவர்கள் ‘கடினமான உழைப்பு (hயசன றழசம) வேண்டும்’ என்றனர்.

‘அப்படி டாக்டர் ஆக, என்ஜினீயர் ஆக, விஞ்ஞானி ஆக வேண்டும் என்றால் உங்களுக்கு அப்படி ஆக வேண்டும் என்ற இலட்சியம் முதலில் தேவை. இரண்டாவதாக நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்க வேண்டும். மூன்றாவதாக தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாது. தோல்வியை விரட்டியடிக்க வேண்டும். இடும்பைக்கு இடும்பை கொடுக்க வேண்டும். அப்படியென்றால் துன்பத்திற்குத் துன்பம் கொடுக்க வேண்டும் என்று பொருள்.

நீங்கள் எல்லாம் இறைவனின் பிள்ளைகள். நான் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்லுங்கள். ‘இறைவனின் மக்கள் நாங்கள், வைரத்தை மிஞ்சும் நெஞ்சம் கொண்டோர் வெல்வோம், சாதிப்போம், வேதனையைத் துடைத்து எறிவோம் எந்தை அருளால் எதுவும் எம் வசமாகும்.’ (இதை மாணவர்கள் அப்படியே திருப்பிச் சொன்னார்கள்) அடுத்து அப்துல் கலாம் மாணவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.

அப்துல் கலாம்: புவியின் முதல் விஞ்ஞானி யார்? சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவன்: இறைவன்!

அப்துல் கலாம்: உனக்கு 10 மதிப்பெண்தான் கொடுக்க முடியும்!

இன்னொரு மாணவன்: முதல் விஞ்ஞானி குழந்தை!

அப்துல் கலாம்: உனக்கு 100 மதிப்பெண்! ஏன் அப்படி? அதைச் சொல்லாமல் உன்னை விடமாட்டேன்!

மாணவன்: குழந்தைதான் தனது அம்மாவிடம் நிறையக் கேள்வி கேட்கும்!

அப்துல் கலாம்: குழந்தைகள் 3 வயதில் இருந்து கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். அறிவியல் என்றால் என்ன? என்று கேள்வி கேட்க வேண்டும். அப்போதுதான் விடை கிடைக்கும். மின்சாரம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்டதாலேயே மின்சாரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. புவி சுற்றுவதால்தான் இரவும், பகலும் வருகிறது. புவி சூரியனைச் சுற்றுவதற்கு ஒரு வருடம் ஆகிறது. நான் 71 தடவை சுற்றி முடித்து இருக்கிறேன். இப்போது 72 ஆவது தடவை சுற்றுகிறேன். அப்படி என்றால் என் வயது என்ன?

மாணவர்கள்:      72 வயது!

அப்துல் கலாம்: 71 முடிந்து 72 வயது நடக்கிறது. சூரியன், பாலுலகம் எனப்படும் பால்மண்டலத்தை ஒருதடவை சுற்றுவதற்கு 220 மில்லியன் ஆண்டு ஆகிறது. புவி, சூரியன் என எல்லாம் சுற்றும்போது நாம் ஏன் சுற்றக்கூடாது? மனிதன் மட்டும் ஏன் ஓய்வு எடுக்க வேண்டும்? வாழ்க்கையில் வெற்றிபெற உழைக்க வேண்டும். நான் சிறுவனாக இருந்த போது இரண்டு விடயங்களைப் படித்தேன். எனது ஆசிரியர் அய்யாத்துரைசாமி ‘எண்ணெய் ஊற்றுவதால் விளக்கு எரியும்., மனிதன் இறைவன் இல்லாமல் வாழ முடியாது’ என்று ராமகிருஷ்ண பரமகம்சர் கூறிய கருத்தைச் சொல்வார். நான் 8 ஆவது படிக்கும்போது அதைக் கேட்டேன்.

இன்னொரு ஆசிரியர் ராமகிருஷ்ணய்யர் எங்களை அடிப்பார். ஆனால் அன்பாகவும் இருப்பார் (உங்களை ஆசிரியர்கள் அடிப்பார்களா? என்று கேள்வி கேட்டுச் சிரிக்க வைத்தார்) அவர் சுவாமி விவேகானந்தர் சொன்ன ஒளி பற்றிக் கூறினார். அதையெல்லாம் நான் கேட்டுப் பயன்பெற்றுள்ளேன்.

இனி நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். இதைத்தொடர்ந்து மாணவர்கள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அப்துல் கலாம் சளைக்காது பதில் அளித்தார்.

கேள்வி: மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இதில் நீங்கள் வெற்றிபெற யார் பங்கு அதிகம்?

பதில்: குருதான். எனக்கு அருமையான தந்தை, அருமையான தாய் கிடைத்தார்கள். என் முன்னேற்றத்தில் அவர்களுக்குப் பங்கு உண்டு. ஆனால் என் கல்விக்கு முதல் வழிகாட்டி எனது 5 ஆவது வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம்தான். அவர்தான் அறிவு விளக்கு ஏற்றி வைத்தார். எனவே, அவரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்

கேள்வி: நீங்கள் இந்த அளவுக்கு உயர்வீர்கள் என்று இளமைப் பருவத்தில் எதிர்பார்த்தது உண்டா?

பதில்: எனது 5 ஆவது வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம் ஒருதடவை பள்ளியில் பறவை எப்படிப் பறக்கும் என்று பாடம் நடத்தினார். வகுப்பில் மொத்தம் 40 மாணவர்கள் இருந்தோம். 40 நிமிடம் அவர் பாடம் நடத்தினார். பிறகு புரிந்ததா? என்று கேட்டார். நான் எழுந்து புரியவில்லை என்றேன். அதே போல 30 மாணவர் புரியவில்லை என்றனர். பத்து மாணவர் மட்டும் தெரிந்தவர்கள் போல உட்கார்ந்துகொண்டனர். உடனே ஆசிரியர், ரொம்ப சந்தோசம், நீங்கள் எல்லாம் உண்மையைச் சொன்னீர்கள், பறவை எப்படிப் பறக்கும் என்று இன்று மாலை உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். அதன்படி இராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பறவைகள் எல்லாம் பறப்பதைக் காட்டினார். இறக்கையை விரித்து அவை பறப்பதைப் பார்த்தபோது பறவை எப்படிப் பறக்கும் என்று எனக்கு 5 நிமிடத்தில் புரிந்தது. அந்தக் கணத்தில் நான் ஒரு முடிவு எடுத்தேன். அப்போது எனக்கு 10 வயது இருக்கும். விஞ்ஞானி ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தேன். Phலளiஉள (இயற்பியல்) படித்து யுநசழ யேரவiஉயட நுபெiநெநசiபெ விஞ்ஞானி ஆனேன்.

மாணவர்களிடையே அப்துல் கலாம் ஒரு தமிழ் ஆசிரியரைப் போல முழுக்க முழுக்கத் தமிழிலேயே உரையாடி அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

குழந்தைகள் கேள்வி கேட்டால் ‘சும்மா இரு, கேள்வி கேட்காதே, எதிர்த்துப் பேசாதே, வாய்க்கு வாய் காட்டாதே, வாயை மூடிக் கொண்டிரு’ என்று சொல்லித்தானே தமிழ்ப் பெற்றோர்கள் அவர்களது வாயை அடைக்கின்றார்கள்! அப்புறம் தமிழ்க் குழுந்தை ஒன்று ஓர் அறிவியல்வாதியாக எப்படி வரமுடியும்? எந்த நூற்றாண்டில் வர முடியும்?

வாழ்க்கையில் உயர்வதற்கு உயர்ந்த எண்ணம் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். தெளிவாகச் சிந்திக்கத் தெரிய வேண்டும். ஏன்? எப்படி? எதற்காக? எனக் கேள்வி கேட்கத் தெரிய வேண்டும்.

இது தெரியாத மூடர்கள் மந்திர தந்திரங்களால், பூசை புனர்க்காரங்களால், அருச்சனை அபிசேகங்களால், தேர் தீர்த்தங்களால், தட்சணை காப்புக்களால், இருமுடி மாலைகளால் இறை அருள்பெற்று வாழ்க்கையில் உயர்ந்து விடலாம் என்று பகற் கனவு காண்கிறார்கள்! அதற்காகக் கோயில் கோயிலாக ஏறி இறங்குகின்றார்கள்!

புவியில் எள்ளெண்ணைச் சட்டி எரித்தால் அது எப்படி 1280.00 மில்லியன் கிமீ (798.30 கல்) தொலைவில் உள்ள ஒரு வாயுக் கோளமான சனியின் கெட்ட பார்வையை அல்லது தோசத்தை நீக்க முடியும்? சனி என்ன உயிருள்ள பொருளா? ஆறறிவு படைத்த மனிதர்கள் இவற்றை இட்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இன்று மூட நம்பிக்கைகள், முட்டாள்த்தனமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பாழ்பட்டுப் போகும் தமிழ் சமுதாயத்திற்கு அவசர அவசியமாகத் தேவைப்படுவது அறிவியல் கல்வி ஆகும். முத்தமிழின் பெருமையை முழங்கிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது? நான்காவது தமிழாக அறிவியலை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் சேர்த்துக் கொள்ளும் பொழுதுதான் தமிழ் மொழி மட்டுமல்லத் தமிழ் இனமும் ஏனைய இனங்களைப் போல் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

தொடர்ந்து விட்ட இடத்தில் இருந்து எழுதுமுன் ஒரு சிலர் தேவ கணம், மனித கணம், இராட்சத கணம் என்றால் என்ன? நாங்கள் எல்லோரும் மனிதர்கள்தானே? பின் எப்படி தேவ கணமாகவோ இராட்சத கணமாகவோ இருக்க முடியும்? என்று கேள்வி கேட்டு எழுதியுள்ளார்கள்.

முதலில் சோதிடம் என்பது ஒவ்வொருவரது மனதில் குடி கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் அந்த நம்பிக்கையை ஏது விளைவு (காரண காரியம்) கொண்டு மறுக்க முடியாது.

இன்றைய செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். புண்ணிய பூமி, புனித கங்கைகள், வானுயர்ந்த கோயில்கள், மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்வதாகக் கூறப்படும் இந்தியாவில் ஒரு மணித்துளிக்கு ஒருவர் எலும்புருக்கி (tuberculosis) நோயால் இறந்து கொண்டிருக்கின்றார். இதேபோல் உலகத்தில் தொழுநோயால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் பாதிப் பேர் இந்தியாவில்தான் இருக்கின்றார்கள். கண் பார்வை தெரியாதவர்கள் எண்ணிக்கையும் அப்படித்தான்.

இதற்கு ஏது என்ன? நாளும் கோளுமா? விதியா? அல்லது இந்தியாவில் நிலவும் வறுமை, ஏழ்மை, சூழல் சீர்கேடு, சத்துணவு இன்மை, நல்ல குடிதண்ணீர் பற்றாக்குறை போன்றவையா?

இங்குள்ள கோயில் நிருவாகங்கள் பக்தர்களை வானொலியில், தொலைக்காட்சியில் வருந்தி வருந்தி அழைக்கின்றன. கோயிலுக்கு வந்து வழிபட்டால் அம்பாள் வேண்டுமட்டும் அருள்பாலிப்பாள் என்கின்றன. முருகனுக்கு இரண்டு கைகளால் அள்ளிக் கொடுத்தால் அவன் பன்னிரு கைகளால் திருப்பித் தருவான் என்கின்றார்கள்.

தெரியாமல் கேட்கிறேன், தமிழீழத்தில் பக்தர்கள் செய்த நான்கு காலப் பூசை, அருச்சனை, அபிசேகம், தேர்த் திருவிழா குடமுழுக்கு கொஞ்ச நஞ்சமா? செடில்க் காவடி பறவைக் காவடி எத்தனை? வாரியாருக்குக் கொடுத்த பொற் காசில் கஞ்சத்தனம் செய்தோமா? எதில் குறை வைத்தோம்? அவை என்னவாயிற்று? அங்கு நடக்காத அற்புதம் இங்கு மட்டும் நடந்து விடுமா?

தேவ கணம், மனித கணம், இராட்சத கணம் பற்றிய கேள்விக்கு விடை காண்பதற்கு வேத காலத்துக்கு நாம் திரும்பிப் போக வேண்டும்.

சோதிடப் புரட்டு

(15)
ஆரியர் தேவர் திராவிடர் இராட்சதர்!

மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவிற்குள் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்த ஆரியர் பழங் குடிமக்களாகிய திராவிடர்களோடு கடும் போர் புரிய வேண்டி இருந்தது. இது தொடர்பான செய்திகளை நால் வேதங்களில் ஒன்றான இருக்கு வேத சுலோகங்களில் காணலாம்.

இந்துமத வேதங்களிலும் சாத்திரங்களிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் ஆரியர்கள் தேவர்கள் என்றும் ஆரியரல்லாத திராவிடர்கள் குரங்குகள், அசுரர்கள், இயக்கர்கள், இராட்சதர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.

இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய ‘தஸ்யூக்கள்’ அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரிப்பதாகும்.

தென்னிந்தியாவில் வாழ்ந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. ( பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய திராவிடரும் ஆரியரும் – பக்கம் 4)

இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால், ஆரிய நாகரிகத்திற்கும் ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் அவற்றின் தலைவர்களான இராமன் – இராவணன் ஆகியவர்களுக்கு இடையே நடந்த போராகும். (ராதாகுமுத் முகர்ஜி எழுதிய இந்து நாகரிகம் பக்கம் 141)

இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் வாழ்ந்தவர்களை, ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும். ( ரோமேஷ் சந்திரடட் எழுதிய பண்டைய இந்தியாவின் நாகரிகம் – பக்கம் 139-141)

தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற் பொழிவுகளும், கட்டுரைகளும், இராமாயணம் – பக்கம் 587-589)

ஆரியன் என்கின்ற பதம் இந்தியாவின் புராதனக் குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் பயன்படுத்திக் கொண்ட பதம் ஆகும். தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு ஆரியர்கள் கொடுத்த பெயராகும். ( 1922 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட பழைய இந்தியாவின் வரலாறு என்னும் நூல்)

ஆரியரல்லாதவர்களை இருக்கு வேதத்தில் தாசர்கள் (சூத்திரர்கள்) என்றும் தஸ்யூக்கள் என்றும் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப்பற்றி இருக்கு வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் பண்பாடு வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும். ( டாக்டர் ராதா குமுத்முகர்ஜி எழுதிய இந்து நாகரிகம் பக்கம் 69)

ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய மொழிகளைக் கற்றுக் கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி நேர்ந்தது. (பண்டர்காரரின் கட்டுரைகள் தொகுதி 3, பக்கம் 10)

இராமாயணத்தில் தென் இந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற இராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள். (பி.டி சீனிவாச அய்யங்கார் எழுதிய இந்திய வரலாறு முதல் பாகம் – பக்கம் 10)

தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில் ஆரியர்கள் வடக்கேயிருந்து வந்தவர்களாதலால். (டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய தென் இந்தியாவும், இந்தியக் கலையும் – பக்கம் 3)

திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், இராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள். ( ஜோஷி சந்தர்தம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும் – பக்கம் 15)

ஆரியக் கடவுள்களாகிய இந்திரனையும், இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் பின்பற்றியவர்களும் தங்களைத் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் இடையில் விடாப்பகை இருந்து கொண்டே வந்தது. ( ஏ.ஸி. தாஸ் எழுதிய ரிக் வேத காலத்து இந்தியா – பக்கம் 151)

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை நூல்களில் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், இராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆரியர்கள், திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் ஏற்பட்ட இழப்பினால் இப்படி எழுதினார்கள். (சி.எஸ். சீனிவாசராகவச்சாரி மற்றும் எம்.எஸ் இராமசாமி அய்யங்கார் எழுதிய இந்திய வரலாறு முதல் பாகம் இந்து இந்தியா என்னும் தலைப்பில் பக்கம் 16-17)

ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள். (எச்.ஜி. வெல்ஸ்) எழுதிய உலகத்தின் சுருக்க வரலாறு – பக்கம் 105)

சாதிப்பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதன குடிகள். (புதிய சகாப்த கலைக் கழஞ்சியம் (1925) – பக்கம் 273)

இராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல். (சி.ஜே. வர்க்கி எழுதிய இந்திய வராலாற்றுப் பாகுபாடு – பக்கம் 15)

சுருங்கக்கூற வேண்டும் என்றால் பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு அந்த நிலைமையை முறைகேடாகப் பயன்படுத்தித் ங்கள் விருப்பம் போல் எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விடயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் கெட்டித்தனமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப் படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவைகளாகும். (கென்றி பெரிட்ஜ் எழுதிய விரிவான இந்திய வரலாறு முதல் பாகம் – பக்கம் 15)

இராம இராவணப் போரானது ஆரிய-திராவிடர்களுக்கு இடையில் நடந்த போர்க் கதையாகும். (பண்டிதர் ஜவகர்லால் நேரு எழுதிய ‘Discovery of India)

இராமாயணத்தில் வரும் தமிழர்கள் பெயர்களை இழிபொருள் தரும் பெயர்களாக அதனை எழுதிய வால்மீகி மாற்றி எழுதியுள்ளர்.

அன்றைய இலங்கையை ஆண்ட மறத்தமிழன் அய்யிரண்டு திசையும் தன் புகழை வைத்த இராவணனின் மனைவியின் பெயர் வண்டார்குழலி என்பதாகும். வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்கும் பூக்கள் அணிந்த கூந்தலையுடையவள் என்பது அதன் பொருள். ஆனால் வடநாட்டுக் கவிஞர் வால்மீகி மண்டோதரி என்பதை பெரிய வயிறு உடையவள் (மண்டு-பெரிய, உதரி-வயிறு) என இழிவாக எழுதி வைத்துவிட்டார்.

அதுபோலவே சூர்ப்பனகையின் இயற்பெயர் காமவல்லி ஆகும். ஆனால் வால்மீகி சூர்ப்ப என்றால் முறம், நகா என்றாள் பல்லையுடையவள் அதாவது ‘முறப்பல்லி’ என்று இழிவுபடுத்தி விட்டார்.

மறத்தமிழன் இராவணனின் தம்பி கும்பகர்ணனின் பெயர் குடக்காதன் அதாவது குடம் போன்ற காதுகளை உடையவன் (கும்பம் – குடம், கர்ணன் – காதுகளை உடையவன்) எனப் பழித்து எழுதி விட்டனர்.

வட ஆரியர்கள் இவ்வாறு தமிழினத்து மன்னர்கள், அரசிகள், வீரர்கள் பெயர்களை இழித்தும் பழித்தும் பெயர் சூட்டிவிட்டனர். பக்தி போதையில் இருந்த தமிழன் அதனை ஏற்றுக் கொண்டான். வட ஆரியர்களை நம்பி ஏமாந்தான். இன்றும் ஏமாந்த வண்ணம் இருக்கிறான்.

இருக்கு வேதகாலத்தில் ஆரியர்களால் இந்திரன், அக்கினி, வருணன், சோமன் ஆகியோரே பெரிய தெய்வங்களாக வழிபடப் பட்டார்கள். இதில் சோமன் என்பவன் சோமச் செடியில் இருந்து பெறப்படும் மதுவின் உருவகம் ஆகும். இந்திரன் தேவர்களது அரசனாகவும் கொண்டாடப்பட்டான். பிற்காலத்தில்தான் உருத்திரன், விஷ்ணு பதவி உயர்வு பெற்றார்கள்.

இந்துக் கடவுளர்கள் அல்லது அவதாரங்கள் அசுரர்களையும் இராட்சதர்களையும் கொன்று தேவர்களைக் காப்பாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்திருக்கின்றார்கள். வால்மீகி எழுதிய இராமாயணமும் கச்சியப்பர் எழுதிய கந்தபுராணமும் இதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.

விஷ்ணு அவதாரங்கள் அத்தனையும் வேதங்களை எதிர்த்தவர்களையும் வேள்விகளை எதிர்த்தவர்களையும் ஆரியர்களின் எதிரிகளையும் ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்கவும் தடுக்கவும் முயன்றவர்களைக் கொல்லவும் அழிக்கவும் சதி செய்யவும் தேவர்களைக் காப்பாற்றவும் எடுக்கப்பட்டவை ஆகும்.

நரகாசுரன் வதம், சங்காசுரன் வதம், சோமகன் வதம், அயக்கிரீவன் வதம், இரண்யாட்சகன் வதம், மாபலி வதம், இரணியன் வதம், வாலி வதம், சம்புகன் வதம், கம்சன் வதம் முதலியன காத்தல் கடவுளான விஷ்ணு செய்த வதங்களாகும்.

இதனால்தான் பெரியார் ‘மனித சமுதாய வளர்ச்சிக்கும் மனிதத்தன்மைக்கும் இமயமலை போன்ற தடையானவர்களும், கேடானவர்களும் நமது சோசியர்களும் மந்திரவாதிகளும் மத, புராண, இதிகாசப் பிரச்சாரகர்களும் ஆவார்கள்’ எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் ‘தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும் தமிழர் வீரத்தையும் கலையையும் நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும் ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்!

இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும் இந்து என்பதையும் மறப்பதாலேயே அக் கட்டுப்பாடுகளிலிருந்தும் கூட்டுக்களிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும் ஞானத்துக்கும் வீரத்துக்கும் பகுத்தறிவுக்கும் மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும் இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.

இந்த விடயங்கள் தெளிவுபட்டு ஒரு நிலை ஏற்பட்டால் ஒழியத் தமிழனுக்கு விடுதலை இல்லை, உரிமை இல்லை, மானம் இல்லை என்பதை உண்மையாகவே உணர்த்துகிறேன்’ எனப் பெரியார் அறிவுறுத்தினார்.

இதுதான் தேவ கணம், மனித கணம், இராட்சத கணம் பிறந்த வரலாற்றுப் பகைப்புலமாகும். ஆரியர்கள் தேவர்கள், திராவிடர் இராட்சதகர்கள். தேவகணம் மேலானது இராட்சத கணம் கீழானது எனவே இராட்சத கணம் உடைய பெண் திருமணத்துக்குப் பொருத்தமற்றவள் என்று ஆரியர்கள் எழுதி வைத்தார்கள். ஏமாளித் தமிழர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

இனி விட்ட இடத்தில் இருந்து (அதிகாரம் 13) தொடர்கிறேன்.

சக்கிடுத்தார்: செல்லத்துரை! 12 ஆவது மாடிக்கு மேலே 14 ஆவது மாடி என்றால் 13 ஆவது மாடி எங்கே செல்லத்துரை?

செல்லத்துரை: அது சக்கிடுத்தார் அவங்கள் 13 ஆவது மாடியைத்தான் 14 ஆவது மாடி என்று போட்டிருக்கிறாங்கள்!

சக்கிடுத்தார்: செல்லத்துரை உனக்கு விசர்! 13 ஆவது மாடி இல்லாமல் 14 ஆவது மாடி எப்படி நிற்கிறது!

இதுகாறும் கூறியதிலிருந்து தெரிய வருவது யாதெனில், எண்கள் மீது மனிதர்களுக்கு உள்ள விருப்பு வெறுப்பு அவரவர்களது பண்பாட்டைப் பொறுத்தது. அது ஒரு மன அளவிலான (subjective feeling) உணர்வு, அது புலன் அளவிலான உணர்வு (ழடிதநஉவiஎந கநநடiபெ) அல்ல.

முன் சொன்னவாறு யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்றால் மணம் செய்ய விரும்பும் ஆணையும் பெண்ணையும் மகப்பேறு மகளிர் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அதே போல் மகேந்திரப் பொருத்தத்தை மகப்பேறு மருத்துவர் இடம் இருந்து கேட்டு நிச்சயம் செய்ய வேண்டும். அதுதான் அறிவார்ந்த செயலாகும்.

இன்று பிள்ளை பெறமுடியாத குறை பெரிய குறையல்ல. குழந்தை வேண்டும் என்று அரசமரங்களைச் சுற்றியகாலம் போய் பிள்ளை வேண்டாம் என்று ‘ஆசுப்பத்திரியை’ சுற்றுகிற காலம் இன்றைய காலம்

இருந்தும் குழந்தைப் பேறு இல்லாதவர்களும் இருக்கின்றார்கள், ஆனால் அவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தி. இன்றைய நவீன மருத்துவம் இந்தக் குறையை நூற்றுக்கு எண்பது விழுக்காடு தீர்த்து வைத்துவிடுகிறது.

முன்னர் மலட்டுத்தன்மைக்குப் பெண் மட்டுமே ஏது என்று சோதிடன் முதல் பாட்டி வரை சொன்னார்கள். இப்போது ஆணும் காரணமாக இருக்கலாம் என்பது உறுதிப் படுத்தப்பட்டுவிட்டது.

எனக்குத் தெரிந்த பலர் தகுந்த மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து ஒற்றைக்குப் பதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் தந்தையராகி மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள்.

மேல் நாட்டில்தான் இப்படியான மருத்துவ வசதி இருக்கிறது என்று யாரும் நினைக்கக் கூடாது. குழந்தை பெறுவதற்கு மனிதன் காரணமல்ல ‘கடவுளாகப் பார்த்துக் கொடுக்கின்றார், நாம் என்ன செய்வது? கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொள்கிறோம்’ என்று சொல்கின்ற பாமர மக்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் இந்தத் துறையில் புகழ்பெற்ற மருத்துவர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களில் ஒருவர் மருத்துவர் கமலா செல்வராஜ் ஆவார். இவர் பழம்பெரும் திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் அவர்களது மகள் ஆவார்.

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply