நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. நெடுந்தீவு தலைத்தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிசேகத்தீவு, தயிர்த்தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது. யாழ் குடாநாட்டில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதனால் இத்தீவு நெடுந்தீவு என்று பெயர் பெற்றது என்பர்.
இலங்கை இராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்தைத் தொடர்ந்து பெரும்பாலன மக்கள் யாழ் குடாநாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ புலம்பெயர்ந்து விட்டார்கள். இன்று இங்கு பொருளாதார வசதிகள் அருகிய தமிழ் மீனவ சமூகத்தை சாந்த 2500 இருந்து 3000 மக்களே கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை அரச சேவைகள் கூட கிடைப்பதில்லை.
வரலாறு
சிதைந்த நிலையில் வெடியரசன் கோட்டை
தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத் தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த் டீ போலோ (hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத் தீவின் அழகையும் வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்கிறான்[மேற்கோள் தேவை]. நெடுந்தீவின் வளங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை. நெல் சிறுதானிய பயிர்களும் (கோதுமை ஒல்லாந்தர் காலத்தில் பயிரிட்டதாக கூறப்படுகின்றது) சணல், பெருக்கு, பாலை, பனை, தென்னை, மூலிகை செடி கொடிகளுடன் கடலும் கடல் சார்த்த இடமுமான இந்த நெய்தல் நிலத்தில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறுகள் பல. மருந்து மாமலை வனம் என இத்தீவினை போற்றி பெருமிதம் கொண்டார் மன்னன் செகராசசேகரன்
போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். அமைச்சர்கள், படைவீரர்களுடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடியரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகிறது.
அமைவிடமும் பரப்பளவும்
யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே. யாழ்ப்பாணத்திலிருந்து இதன் தூரம் 45 கிலோமீட்டர் ஆகும். ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே. புங்குடுதீவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நெடுந்தீவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டர் அகலத்தையும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்ட ஒரு சரிந்த இணைகர வடிவில் 30 கிமீ சுற்றளவையும், 48 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.
நெடுந்தீவில் உள்ள ஊர்கள்
ஆலங்கேணி
பெரியான்துறை
மாவலித்துறை
பூமுனை
சாமித்தோட்டமுனை
வெல்லை
குந்துவாடி
தீர்த்தக்கரை
துறைமுகங்கள்
பின்னனியில் மாவிலித் துறைமுகம்
நெடுந்தீவு மக்கள் பண்டைய காலத்தில் தென்னிந்தியாவுக்குச் செல்வதற்கு பெரியதுறை என அழைக்கப்பட்ட துறைமுகத்தைப் பயன்படுத்தினர். இங்கிருந்து மக்கள் படகுகளில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, புங்குடுதீவு ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்தனர். இது நெடுந்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
இதனைவிட மாவிலித் துறைமுகம், கிழக்கே கிழக்குத்துறை, வடக்கே தாளைத்துறை, குடுவிலித்துறை, தெற்கே குவிந்தாதுறை, வெல்லாதுறை ஆகிய துறைமுகங்களும் உள்ளன. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பெரியதுறையிலிருந்து எவரும் இந்தியாவிற்கு செல்லாதபடி தடைவிதிக்கப்பட்டிருந்தது. இத்துறைமுகத்தை அண்டியே வெடியரசனுக்கும், மீகாமனுக்கு சண்டை நடந்ததாக வரலாறு கூறுகிறது.
நெடுந்தீவின் சிறப்புகள்
கட்டைக்குதிரைகள்
“பெருக்கு மரம்” (பாவோபாப் மரம்)
நெடுந்தீவுக் கட்டைக்குதிரைகள்
நெடுந்தீவு கட்டைக்குதிரைகளுக்குப் பேர் பெற்றது. இவை தன்னிச்சையாக நெடுந்தீவு வெளிகளில் மேய்ந்து திரிகின்றன. இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுநராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார். 19 ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன. இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.
பெருக்குமரம்
நெடுந்தீவில் உள்ள பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் உள்ளது. இது நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. இம்மரத்தில் உள்ள துளை வழியே உள்ளே சென்றால் அங்கே குகை போன்ற அமைப்பு உள்ளது. இங்கு ஒரு குடும்பம் நிற்கக்கூடிய இட வசதி உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இம்மரத்தை அரேபிய வியாபாரிகள் இங்கு ஏழாம் நூற்றாண்டளவில் இங்கு கொண்டு வந்தனர்.
https://www.facebook.com/photo.php?fbid=413386079029610&set=pcb.413376655697219&type=3
Leave a Reply
You must be logged in to post a comment.