தேர்தல் வரும் பின்னே வெகுமதிகள் வரும் முன்னே
நக்கீரன்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. இது பழமொழி. தேர்தல் வரும் பின்னே வெகுமதிகள் வரும் முன்னே. இது புது மொழி. ஒன்ரேறியோ மாகாண லிபரல் கட்சி 2003 இல் இருந்து பதவியில் இருந்து வருகிறது. அதாவது மூன்றுமுறை தேர்தலில் வென்று தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கிறது. பொதுவாக இரண்டு முறைக்கு மேல் ஒரு கட்சி ஆட்சியில் இருப்பதில்லை. தலையிடிக்கு தலையணையை மாற்றுகிற மாதிரி ஆட்சியில் உள்ள கட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு எதிர்க்கட்சியை வாக்காளர்கள் பதவியில் அமர்த்துவார்கள். ஆனால் இந்த விதிக்கு லிபரல் கட்சி விலக்காக இருக்கிறது. சென்ற தேர்தல் யூன் 12, 2014 இல் இடம்பெற்றது. கருத்துக் கணிப்புக்கள் பழமைவாதக் கட்சித் தலைவர் ரிம் குடக் (Tim Hudak) ஆட்சியைப் பிடிப்பார் என எதிர்கூறல் கூறப்பட்டது. ஆனால் கடைசி நாட்களில் நிலைமை மாறியது. அதற்கு ஒரு காரணம் ரிம் குடக் தான் பதவிக்கு வந்தால் 100,000 அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாகச் சபதம் செய்தது. தேர்தல் முடிவுகள் வந்த போது கத்லீன் வின் தலைமையில் உள்ள லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
41 ஆவது ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் – 2014
லிபரல் | பழமைவாதக் கட்சி | புதிய சனநாயகம் | |
2011 | 53 | 37 | 17 |
2014 | 58 | 28 | 21 |
வேறுபாடு | 5 | -9 | +4 |
விழுந்த வாக்குகள் | 1,862,907 | 1,506,267 | 1,144,576 |
விழுக்காடு | 38.65 | 31.25 | 23.75 |
சாய்வு | +1.00 | -4.20 | +1.01 |
தலைவர் | கத்லீன் வின் | ரிம் குடக் | அன்றியா ஹோவர்த் |
தெரிவு | சனவரி 26,2013 | யூன் 27, 2009 | மார்ச் 07,2009 |
இப்போது வெளிவரும் கருத்துக் கணிப்புக்கள் ஆளும் லிபரல் கட்சியை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியுள்ளது. போரம் (Forum) நிறுவனம் ஏப்ரில்10 இல் எடுத்த கருத்துக் கணிப்பு பழமைவாதக் கட்சிக்கு 38 விழுக்காடு ஆதரவும் புதிய சனநாயகக் கட்சிக்கு 31 விழுக்காடும் லிபரல் கட்சிக்கு 22 விழுக்காடு ஆதரவும் இருப்பதாகத் தெரிவிக்கிறது. முதலமைச்சர் கத்லீன் வின் அவர்களது தனிப்பட்ட செல்வாக்கு அதல பாதாளத்தில் இருக்கிறது. அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு பற்றிக் பிறவுண் 21 விழுக்காடு ஆதரவும் அன்றியா ஹோவர்த் 19 விழுக்காடு ஆதரவும் கத்லீன் பன்னிரண்டு விழுக்காடு ஆதரவும் தெரிவித்துள்ளார்கள். இருபத்தெட்டு விழுக்காடு யாருக்கும் தங்கள் ஆதரவு இல்லை என்று கைவிரித்துள்ளார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் இருப்பதால் இந்தக் காட்சி மாறலாம். லிபரல் கட்சியின் நிதி அமைச்சர் தனது வரவு – செலவு அறிக்கையில் அறிவித்துள்ள வெகுமதிகள் லிபரல் கட்சியின் தலைவிதியை மாற்றி அமைக்கலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஒன்ரேறியோ நிதி அமைச்சர் சார்ல்ஸ் சூசாவின் 2017-2018 வரவு – செலவு அறிக்கை கடந்த ஏப்ரில் 27 அன்று மாகாண நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. செலவு 133.9 பில்லியன் (ஒரு பில்லியன் =100 கோடி). பற்றாக்குறை 4.3 பில்லியன் டொலர். இந்தப் பற்றாக்குறை அடுத்த 2018-2019 நிதி ஆண்டில் நிரப்பப்பட்டு செலவும் வருவாயும் சமன்படுத்தப்படும்.
இதன் மூலம் 2008 இல் வரவு – செலவு அறிக்கை சமன் படுத்தப்படும் என்ற வாக்குறுதியை லிபரல் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அப்போது 19 பில்லியன் டொலர் பற்றாக் குறை இருந்தது. இந்தப் பற்றாக்குறை வரவு – செலவுத் திட்டத்தில் அரசியலும் கலந்துள்ளது. பற்றாக்குறையை சம்பளங்களை மட்டுப்படுத்துவதன் மூலமும் வருமானத்தைக் கூட்டுவதன் மூலமும் சரி செய்யப்பட்டது.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிறவுண் “புத்தகங்களை சோடித்திருக்கிறார்கள்” என வருணித்துள்ளர். நிதி அமைச்சரின் வரவு – செலவு அறிக்கையில் பின்வரும் வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
(1) அடுத்த மூன்று ஆண்டுகளில் நல்வாழ்வுக்கு 78 பில்லியன் டொலர் செலவழிக்கப்படும்.
(2) இருபத்துநான்கு அகவைகுக் குறைவான 4 மில்லியன் சிறார்களின் மருத்துவ திட்டத்துக்கு 465 மில்லியன் செலவழிக்கப்படும். தேவையான மருந்து விலையில்லாது கொடுக்கப்படும்.
(3) புகையிலை வரி அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு காட்டனுக்கு 10 டொலர் அதிகரிக்கப்படும். உடனடியாக 2 டொலர் அதிகரிக்கப்படும்.
(4) உயர் பள்ளி மற்றும் உயர்தர பள்ளி மாணவர்களது வேலை தொடர்பான தொழிற் பயிற்சிக்காக 190 மில்லியன் ஒதுக்கப்படும்.
(5) நான்கு அகவை மட்டும் உள்ள குழந்தைகள் பராமரிப்புக்கு 24,000 இடங்கள் உருவாக்கப்படும்.
(6) வெளிநாட்டவர் வாங்கும் வீடுகளுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்படும்.
(7) ஏற்கனவே அறிவித்தது போல பல்கலை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை.
(8) ஓசாப் பட்டதாரிகள் 35,000 டொலர் சம்பாதிக்கப்படத் தொடங்கிய பின்னர் கடனைத் திருப்பிக் கட்டலாம். முன்னர் இது 25,000 டொலர் ஆக இருந்தது.
(9) வீட்டுக் குடிகூலி கட்டுப்படுத்தப்படும்.
(10) இரண்டு மருத்துவ மனைகள் வின்சர் மற்றும் நயக்கரா நகரங்களில் கட்டப்படும்.
(11) 2,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு பயன்பாட்டில் இல்லாத 75 – 100 மில்லியன் பெறுமதியான நிலம் ஒதுக்கப்படும்.
(12) எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு 4.3 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணைத்தை 25 விழுக்காட்டால் குறைக்கப் போவதாக ஒன்ரேறியோ மாகாண அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது. அது இந்தக் கோடை காலத்தில் நடைமுறைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்னர் சனவரி முதல் நாள் முதல் ஒருங்கமைந்த 8 விழுக்காடு வரி (HST) குறைக்கப்பட்டது. மின்சாரக் கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்களுக்கு இந்தக் குறைப்புக்கள் பெரும் ஆறுதலையாக இருக்கும். இந்தக் குறைப்புகள் 2018 இல் எதிர் கொள்ள இருக்கும் தேர்தலை மனதில் வைத்துச் செய்யப்படுகிறது என்பதில் ஐயமில்லை. இருந்தும் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொன்னவன் போல இதனை முதல் அமைச்சர் கத்லீன் வின் மறுத்திருக்கிறார்.
புதிய சனநாயகக் கட்சித் தலைவர் அன்றியா ஹோவார்த் அவர்களும் நல்வாழ்வுத் துறைக்கு ஆண்டுதோறும் 575 மில்லியன் டொலர்களை ஒதுக்குவோம் என்று சொல்கிறார். அவரது திட்டத்தின் படி 125 வகையான நோய்களுக்கான மருந்து விலையில்லாமல் கொடுக்கப்படும். லிபரல் அரசின் நல்வாழ்வு பராமரிப்புத் திட்டம் தங்களது திட்டத்தோடு ஒப்பிடும் போது கிட்டவும் வர முடியாது எனச் சொல்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிரவுண் தான் அன்றியா ஹோவார்த் அவர்களது திட்டத்தை ஆதரித்தாலும் அதற்கான பணம் எங்கிருந்து வரப் போகிறது என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். நாட்டில் 1,300 வித்தியாசமான மருந்துகள் விற்கப்படுகின்றன.
நிதி அமைச்சர் சார்ல்ஸ் சூசா வரவு – செலவு அறிக்கையை பேரளவு சமன்படுத்த முடிந்தமைக்கு முக்கிய காரணம் ஒன்ரேறியோ மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாக இருப்பதே. அதன் வளர்ச்சி கனடா உட்பட ஜி7 நாடுகளது பொருளாதார வளர்ச்சியைவிட அதிகமாக இருக்கிறது. கனடாவில் வேலை இல்லாதோர் விழுக்காடு 2017 ஆண்டின் தொடக்கத்தில் 7.2 விழுக்காடாக இருந்தது. இது ஒன்ரேறியோ மாகாண வேலையற்றோர் விழுக்காட்டை (6.7 விழுக்காடு) விட 0.5 கூடுதலானது. 2009 ஆண்டு முதல் 600,000 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் வேலையற்றோர் விழுக்காடு 2019 ஆண்டனலில் 6.1 விழுக்காடாகக் குறையும் என மாகாண அரசு சொல்கிறது.
இந்த ஆண்டு மார்ச் 31 வரை ஒன்ரேறியோ அரசின் கடன் சுமை 296.1 பில்லியன் டொலர்கள் ஆகும். இது அடுத்த ஆண்டு 308.3 பில்லியன் ஆக உயரும். தற்போது மாகாண அரசு வரலாற்றில் மிகக் குறைந்த வட்டி விழுக்காடு நடைமுறையில் இருந்தும் 11.8 பில்லியன் டொலர்களை வட்டியாயகக் கொடுக்கிறது. இந்தச் செலவினம், நல்வாழ்வு மற்றும் கல்வி நீங்கலாக, அதிக டொலர்கள் செலவழிக்கப்படுகிறது. பொது மக்கள் தங்களுக்கு வேண்டிய சேவையை கணினி வாயிலாக பெற்றுக் கொள்ளும் வசதி மேலும் அதிகரிக்கப்பட இருக்கிறது.
பாதாள பொருளாதாரத்தின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரி கட்டாது ஏய்ப்வர்கள் மீது மாகாண அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற கணக்காய்வாளர்களைப் பணிக்கு அமைர்த்தி உள்ளது. மாகாண அரசு 2013 – 2014 நிதி ஆண்டுகளுக்குப் பின்னர் 930 மில்லியன் டொலர்களை வரி ஏய்ப்பவர்களிடம் இருந்து அறவிட்டுள்ளதாக புளுகுகிறது. சென்ற ஆண்டு மட்டும் 330 மில்லியன் அறவிடப்பட்டதாம். இதில் 630 மில்லியன் மத்திய அரசுக்குரிய தொகை. மிகுதி 300 மில்லியன் டொலர் மாகாண அரசுக்குரியது.
புள்ளிவிபரத் திணைக்களம் 2012 ஆம் ஆண்டில் பாதாள பொருளாதாரத்தின் பெறுமதி 42.4 பில்லியன் டொலர் அல்லது 2.3 விழுக்காடு என மதிப்பிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடக்கம் வீடுகளுக்கு கூரை மாற்றுவோரை இலக்கு வைத்து நடத்திய சோதனைகளின் போது நல்வாழ்வு, பாதுகாப்பு, ஆதாயத்தைக் குறைத்துக் காட்டிய 1,700 பேருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டது. இதில் 250 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
மாகாண அரசு சில்லறை விற்பனையில் இருந்து வரும் வருவாயை அதிகரிக்க முனைப்பாக உள்ளது. இதன் நிமித்தம் இலத்திரனல் விற்பனையை மறைக்க அல்லது குறைத்துக் காட்ட உதவும் மென்பொருள் (zappers) பாவனை அல்லது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. விற்பனையைக் குறைத்துக் காட்டுவதன் மூலம் அங்காடிகள் அரசுக்குக் கட்ட வேண்டிய வரிப் பணத்தைக் குறைத்துக் காட்டுகின்றன. பாவனையாளர்களிடம் இருந்து அறவிடப்படும் 13 விழுக்காடு விற்பனை வரியையும் விழுங்கி விடுகின்றன.
கனடா வருவாய் வாரியம் 12 வணிகர்கள் மீது விற்பனையை குறைத்துக் காட்டிய குற்றத்துக்காக வழக்குத் தொடரப்பட்டது. இதன் மூலம் 835,000 டொலர் வரி அறவிடப்பட்டது. இப்படியான மோசடியில் ஈடுபடுகிற வணிகர்களுக்கு முதல் குற்றத்துக்கு 5,000 டொலர் தண்டமும் அப்படியான கருவிகளை தயாரித்து அல்லது விற்பனை செய்வோருக்கு 500,000 டொலர் தண்டமும் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும். ஆனால் இதுவரை யாரும் அப்படித் தண்டிக்கப்படவில்லை. கியூபெக் மாகாணத்தில் இயங்கும் உணவங்கள் தங்களது அலகுகளை ( modules) வருமான வரி வாரிய கணினிகளோடு இணைத்து இருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டால் முதல் ஆண்டில் மட்டும் 160 மில்லியன் டொலர் அறவிடப்பட்டுள்ளது. மேலும் 2018-2019 வரி ஆண்டுக்கு இந்த தொகை 2.1 பில்லியன் டொலராக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
2017-2018 கல்வி ஆண்டில் குடும்ப வருமானம் 50,000 டொலருக்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்லூரியில் அல்லது பல்கலையில் படித்தால் அவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மாணவர்கள் வீட்டில் அல்லாது வெளியில் இருந்து படிக்க வேண்டும். குடும்ப வருமானம் 83,000 டொலருக்கு குறைவாக இருந்தால் அந்த மாணவர்களுக்கு மானியம் வழங்கப்படும். ஒசாப் திட்டத்தின் கீழ் கடன் கொடுக்கும் தொகை அதிக வருமானம் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு 10,000 டொலர் ஆக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
இப்போது 150 பேரங்காடிகள் வைன் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. மேலும் 70 புதிய பேரங்காடிகளில் ஆண்டு இறுதியில் 35 வகை உள்நாட்டு வைன், 35 வகை வெளிநாட்டு உள்நாட்டு வைன் விற்பனை செய்யப்படும். 2025 ஆண்டளவில் ஒன்ரேறியாவில் உள்ள 1,500 மளிகைக் கடைகளில் 300 மளிகைக் கடைகளில் மது விற்பனை செய்யப்படும். இனிமேல் குடிமக்கள் கடைகளில் பால்கட்டி (cheese) வாங்கும் போது வைனும் வாங்கலாம் என மகாண முதலமைச்சர் பெருமைப்படுகிறார். இதே வேகத்தில் போனால் ஒன்ரேறியோ தண்ணீரில் தள்ளாடும் காலம் மிக விரைவில் வரலாம். மேற்கு நாட்டவர் அளவோடு குடிப்பார்கள். எங்கடை ஆட்கள் அப்படியில்லை. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த பெருங்குடி மக்கள்.
2002 இல் நடைபெற்றற ஆய்வில் மது அருந்துவதால் கனடாவுக்கு ஓர் ஆண்டில் 14.6 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படுகிறது. இதில் 7.1 பில்லியன் டொலர்கள் மறைமுக செலவாகவும் 3.3 பில்லியன் டொலர்கள் மருத்துவமனை பராமரிப்புச் செலவாகவும் மேலும் 3.1 பில்லியன் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் செலவாகிறது. அதே சமயம் புகை பிடிப்பதால் 17 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படுகிறது.
மது அருந்திவிட்டு வண்டிகள் ஓட்டுவதால் வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள், குடும்பச் சிக்கல்கள், சமூகச் சிக்கல்கள், வன்முறை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், நரம்புத் தளர்ச்சி, தோல் தொடர்பான வியாதிகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், வாதம், மஞ்சள்காமாலை, புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம் எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மாகாண அரசு ஒன்றுக்கு ஒன்று எதிர்மாறான கொள்கையை ஒரே நேரத்தில் கடைப்பிடிக்கிறது. வருவாயையப் பெருக்க மது விற்பனையை அதிகரிப்பது, அந்த வருவாயை மதுவினால் வரும் உபாதைகளுக்குச் செலவழிப்பது அரசின் கொள்கையாக இருக்கிறது. மது ஒழிப்பு கனடா போன்ற நாடுகளில் நினைத்தும் பார்க்க முடியாத காரியம் ஆகும்.
கத்லீன் வின் ஒரு அசாதாரண அரசியல்வாதி என்பதில் ஐயம் இல்லை. நிறையப் படித்து பட்டங்கள் வாங்கியிருக்கிறார். முதலமைச்சராக வருமுன் பல அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்திருக்கிறார். கடுமையாக உழைப்பாளி. பார்ப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறார். உருவு கண்டு எள்ளாமைக்கு முதலமைச்சர் நல்ல எடுத்துக்காட்டு. 2003 இல் மாகாண நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட கத்லீன் வின் 2013 இல் ஒன்ரேறியோ மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார். ஓரினச்சேர்க்கைப் பெண் முதலமைச்சர் என்பது இன்னொரு சாதனை. அவருக்கு 3 வளர்ந்த பிள்ளைகளும் 3 பேரப்பிள்ளைகளும் கணவியும் இருக்கிறார்கள். பொதுவாக அவரது அரசியல் எதிரிகள் அவரை குறைத்து மதிபிடுவதும் கத்லீன் வின் அதனை மீறி வெற்றிகளைக் குவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மாகாண முதலமைச்சர் கருத்துக் கணிப்பில் அதல பாதாளத்தில் இருப்பதைப் பார்த்துவிட்டு பல மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன் முதலமைச்சரை கழட்டிவிட யோசித்தார்கள். அவர்களுக்கு இந்த வரவு – செலவு அறிக்கை நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். ஆட்சியின் சாதனைகளை வைத்துக் கொண்டு அடுத்த தேர்தலில் அவர்கள் கரைசேர வாய்ப்பு இருக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.