சனிப் பெயர்ச்சியும் அறிவியலும்!

நக்கீரன்
சோதிடர்களது காட்டில் இந்த மாதம் பணம் பெய்யும் மாதம். எந்தச் செய்தித்தாளைப் புரட்டினாலும் “சனிப் பெயர்ச்சிப் பலன்கள்” பக்கக்கள் கண்ணைக் கவர்கின்றன. சனி பகவானால் எந்த எந்த இராசிக்காரர்களுக்கு என்ன என்ன பலன் என விலாவாரியாகச் சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள்.
சனிப் பெயர்ச்சியையொட்டி கோயில்களில் சிறப்பு யாகம், கிரக பரிகாரம், அபிசேகங்கள், அருச்சனைகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக சிம்மம், கன்னி, துலாம், கும்பம், மீனம், இடபம், மிதுனம் ஆகிய இராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாம்.
தமிழக கோயில்களில் அபிசேகத்துக்கு ரூ.500, பரிகார கோமங்களுக்கு ரூ.3,500 கட்டணம் அறவிடப்படும். அதற்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கனடாவிலும் கோயில்களில் சனி பகவானை சாந்தப்படுத்த யாகம் நடைபெறுகிறது!
அண்டவெளியில் தன்பாட்டில் ஞாயிறைச் சுற்றிவரும் சனிக் கோள் கெட்டது செய்யும் அதற்குப் பரிகாரமாக அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் நன்மை பெறலாம் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மையன்று. எணணூறு மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சனிக்கு இங்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் அது அந்தக் கோளைத் திருப்திப் படுத்துமா?
அறிவியல் கண்டுபிடித்த அச்சு யந்திரம், தொலைக் காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சனிப் பெயர்ச்சியை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப் போகிறார்களாம்!
சனி பகவான் பற்றிய புராணக் கதைகளுக்குப் பஞ்சமில்லை. சனி ஒரு கோள் என்பதற்குப் பதில் சனி மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பகவான் என்பதுதான் சோதிடர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நளச் சக்கரவர்த்தி, சனீசுவரன் இருவரும் வழிபட்ட ஒரே தலம் திருவாரூர். சிவபெருமானால் ஈசுவரப் பட்டம் வழங்கப் பெற்றவர் சனீசுவர பகவான். சனீசுவரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பர். சனீசுவர பகவானை வென்றவர் தசரத மகாராசா தன்னைப் வென்ற தசரதனுக்கு வேண்டும் வரத்தைத் தருவதாக சனீசுவர பகவான் கூற, தசரதன் தனது மூதாதையர்களும் தானும் வழிபாடு செய்த திருவாரூர் வருவோருக்கு துன்பங்கள் தராமல் நன்மையை மட்டுமே செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டார்.
அதன்படி, சனி பகவானும் திருவாரூர் வருவோரைத் தனது கண்டசனி, பாதசனி, அட்டமத்துச் சனி என எந்தக் காலமானாலும் நன்மையே செய்வதாக வரம் கொடுத்தார்.
அதனால், திருநள்ளாற்றில் வழிபாட்டை முடித்த நளனும் திருவாரூரில் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து, தன்னை இனியும் நவகோள்கள் துன்பப்படுத்தக் கூடாது என வேண்டிக் கொண்டார்.
எனவே தான் “திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே’ என்று கூறப்படுகிறது.
சோதிடர்களிடம் சனிப் பெயர்ச்சி பற்றிய காலத்தையும் நேரத்தையும் கணிப்பதில் கருத்தொற்றுமை இல்லை.
நிகழும் விரோதி ஆண்டு புரட்டாசி மாதம் 10 ஆம் நாள் (26.09.2009) சனிக்கிழமை சுக்ல பட்சத்து அஷ்டமி திதி, நட்சத்திரம் மூலம் நடைபெறும் நாளில், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக சரியாக மதியம் மணி 3.18 க்கு சனி பகவான் சிம்ம இராசியிலிருந்து கன்னி இராசிக்குள் நுழைகிறார் என வாக்கிய பஞ்சாங்கம் சொல்கிறது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் 2009 செப்டம்பர் 9 ஆம் நாள் சனிப் பெயர்ச்சி இடம்பெறுகிறது என்கிறது. இந்த கால வேறுபாட்டுக்கு என்ன காரணம்?
2007 இல் ஏற்பட்ட சனிப் பெயர்ச்சி பற்றியும் இந்த இரண்டு பஞ்சாங்கங்களும் இருவேறு காலத்தைக் குறிப்பிட்டன. திருக்கணிதப்படி யூலை 16 இல் சனிப் பெயர்ச்சி, வாக்கியப் பஞ்சாங்கப்படி ஓகஸ்த் 5 இல் சனிப் பெயர்ச்சி இடம் பெற்றது.
காலத்தை நாம் இரண்டு வழிகளில் அளக்கலாம். ஒன்று ஞாயிறை மையமாகக் (Geocentric) கொண்டு அளப்பது. மற்றது விண்மீனை (Sidereal) வைத்து (Spica என்ற நட்சத்திர மண்டலத்திற்கு நேர் எதிரே 180 பாகையில் உள்ள புள்ளியை வைத்து) அளப்பது. முன்னது சாயான (Sayana) என்றும் பின்னது நிராயான (Nirayana) என்றும் அழைக்கப்படுகிறது. சாயான என்றால் அசைவது (Tropical Zodiac with precession) என்பது பொருள். நிராயான அசையாதது (Fixed Zodiac without precession) என்று பொருள். (இது பற்றிய மேலதிக தரவுகளை நான் எழுதிய சோதிடப் புரட்டு நூலைப் புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளவும்)
அண்டவெளியில் காணப்படும் விண்மீன்கள், கோள்கள் எல்லாம் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை நகர்கின்ற வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மாறுபடுகின்றது. சந்திரன் ஓர் இராசியை 2 1/4 நாளில் கடக்கின்றது. சூரியன் அதே இராசியைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. குருவுக்கு (வியாழன்) ஒரு ஆண்டும் இராகு (Ascending Node) கேது (Descending Node) இரண்டும் 1 1/2 ஆண்டும் சனிக்கு 2 1/2 ஆண்டும் ஆகின்றன. இராகு கேது கோள்கள் திடப்பொருளால் ஆனவை அல்ல. அவை நிழல்கோள்கள்.
இவ்வண்டம் எல்லை அல்லது முடிவு அற்றது என நியூட்டன் உட்படப் பெரும்பாலான அறிவியலாளர்கள் எண்ணினர். பேரறிஞர் அயின்ஸ்தீன் இவ்வண்டத்தில் நேர்க்கோடு என்பதே கிடையாது எல்லாம் வட்டங்களே என்கிறார்.
இவ்வண்டத்துக்கு எல்லை இருக்கிறது என்று ஏன் கருத முடியாது? அப்படி எல்லை உள்ளதாகக் கருதினால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற வில்லங்கமான கேள்விக்கு விடை கூற வேண்டி வந்துவிடும்! இவ்வண்டத்தின் ஆரம் 35,000,000,000 (336 கோடி கோடி கிமீ) ஆகும்.
அண்டத்தொகுதிக்கு சூரியன் என்பது ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற கோடிக்கணக்கான வின்மீன்கள் நமது அண்டத் தொகுதிக்குள் உள்ளன. சூரியக் குடும்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை கோள்களின் எண்ணிக்கை 9 எனக் கணக்கிடப்பட்டது. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ என்பனவாம். ஆனால் புளூட்டோ கோள் என்னும் வரையறுக்குள் வராத காரணத்தால் அறிவியலாளர்களால் நீக்கப்பட்டுள்ளது. எனவே மேலே சொன்ன வற்றுள் புளூட்டோ நீங்கலாக 8 கோள்கள் மட்டுமே கோள்கள் என்னும் தகுதியைப் பெற்றுள்ளன. சூரியன் கோள் அல்ல விண்மீன். சந்திரன் கோள் அல்ல துணைக் கோள். அதனால் சோதிடத்தில் 9 கோள்கள் (நவக்கிரகங்கள்) இருக்கின்றன.
வெறும் கண்ணால் வானத்தில் உலா வரும் சூரியனையும் சந்திரனையும் நாம் பார்ப்பது போல சில கோள்களை நம்மால் பார்க்க இயலும். சூரியன் மறைவதற்கு முன்போ அல்லது தோன்றுவதற்கு முன்போ புதன் கோளை நம்மால் பார்க்க இயலும். வெள்ளிக் கோளை மேற்கு அடிமானப் பகுதியில் மாலை விண் மீனாகவும் கிழக்கு அடிமானப் பகுதியில் காலை விண்மீனாகவும் பார்க்கலாம். செவ்வாய் கோளை ஆண்டு முழுவதும் அநேக நேரங்களில் பார்க்கலாம். பூமியிலிருந்து நோக்கும்பொழுது செவ்வாய்க் கோள் வானத்தில் சூரியன் இருக்கும் இடத்திற்கு எதிர் திசையில் இருக்குமானால் அது தெளிவாகத் தெரிகிறது.
வெற்றுக் கண்களால் செவ்வாய் கோளினைப் பார்க்கும் பொழுது .அதனுடைய நிறம் சிவப்பாகத் தோன்றுகிறது. சனிக் கோளினை வெற்றுக் கண்களால் பார்க்கும்போது மஞ்சள் நிறமாகத் தெரியும். 1610 ஆம் ஆண்டில் கலிலியோ தொலைநோக்கியைக் கொண்டு சனிக் கோளை உற்று நோக்கினார். யுரேனஸ் கோளினை தொலை நோக்கியினைக் கொண்டு பார்த்தால் பச்சை நிறமாகத் தெரியும்.
பழங்காலத்தில் வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்தபொழுது நகர்ந்த கோள்களை தெய்வங்கள் எனக் கிரேக்க மற்றும் உரோமானியர்கள் நம்பினர். அவற்றிற்கு உரோம கடவுள்கள் பெயரையே சூட்டியுள்ளனர். சாதக சோதிடம் அண்மையில் புனையப் பட்டது. எனவே கோள்களின் எண்ணிக்கை 9 என்று கூறியிருக்கிறார்கள்.
சீன சோதிடத்தில் கண்ணுக்குத் தெரிந்த 5 கிரகங்களை மட்டும் வைத்துக்கொண்டு பலன் சொல்லுகின்றார்கள்- ஆனால் அவர்கள் இந்த 5 கிரகங்களும் சூரியன், சந்திரன் இரண்டிலிருந்தும் வேறுபட்டது என்று தெரிந்து வைத்திருந்தார்கள். விண்மீன்களைப் பார்த்த மனிதன் தனக்குப் பழக்கப் பட்ட விலங்குகளின் பெயரைக் கொடுத்திருக்கின்றான். சீன சோதிடத்தில் எலி, காளை மாடு, புலி, முயல், முதலை, பாம்பு, குதிரை, குரங்கு, செம்மறி ஆட்டுக் கிடா, சேவல், நாய், பன்றி என்ற 12 விலங்குகள் இராசிகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவில், 12 விண்மீன் கூட்டங்களுக்கு எலி, காளை, மாடு, புலி, முயல், முதலை, பாம்பு எனக் கொடுத்திருப்பது போல மேலைச் சோதிடத்தில் (Tropial Zodiac) நாடுகளில் Aries, Gemini, Leo, Libra, Sagittarius and Aquarius, whereas the feminine signs are Taurus, Cancer, Virgo, Scorpio, Capricorn and Pisces என கிரேக்க – உரோம பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்கள்.
நகரும் கோள்கள் மற்றும் நகராத ஏதோ ஒரு உருவ அமைப்புள்ள விண்மீன் கூட்டங்கள் (Constellations) இவைதான் இந்திய சோதிடத்தின் (Vedic or Sidereal Zodiac) அடிப்படை.
இந்திய சோதிடர் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயர் கொடுத்திருக்கின்றார்கள். இதற்கான சில உருவப் படங்களையும் (Signs) கொடுத்திருக்கின்றனர்.
கோள்கள் சூரியனைச் சுற்றி வருவது அறிவியல். ஆனால் சனிக் கோள் நகர்வதை சனிப் பெயர்ச்சி என்றும் அதனால் தனிப்பட்ட மனிதர்கள் வாழ்வில் மாற்றங்கள் வரும் என்கிறார்களே? அது எப்படி? சனிப் பெயர்ச்சி என்னும் புரட்டுக்குக் கூட்டம் சேர்கிறது, படித்தவர்களிடம் இருந்தும் படியாத பாமரர்களிடம் இருந்தும் பரிகாரம் என்னும் பெயரில் சோதிடரும் கோயில் குருக்கள்மாரும் பணம் கறக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் சனி பெயர்ச்சி போலவே குருப் பெயர்ச்சி, இராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி ஆகியவற்றை வைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள. இதன் மூலம் தமிழ்க் குமுகம் ஒரு அறிவுடைய குமுகமாக மாறவிடாது தடுக்கிறார்கள். இதற்கு ஊடகங்கள் துணை போகின்றன. இன்று சுப நேரம், இராகு காலம், யமகண்டம், இராசி பலன், ஆண்டு பலன், போடாத ஏடுகளையே பார்க்க முடியாது.
நோபல் பரிசு பெற்ற வானியலாளர் சோதிடம் என்பது பொய் என அறிவித்த பிறகும் சோதிடம் அறிவியல் எனச் சோதிடர்கள் எழுதிக்கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள்.
சூரிய மண்டலத்தில் பூத வடிவான வியாழக் (Giant Jupiter) கோளுக்கு அடுத்தபடி மிகப் பெரிய கிரகம் சனிக் கோள் ஆகும். சனிக் கோளம் புவியிலிருந்து குறைந்தது 720 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. கோள வடிவில் சனி, பூமியை விட சுமார் பத்து மடங்கு பெரியது. ஒரே மட்ட அமைப்பில் ஏகமைய வட்டங்களில் [Concentric Circles] பல வளையங்களை அணிந்து மிக்க எழிலுடன் இலங்கும் சனிக் கோளுக்கு ஈடு, இணை சூரிய மண்டலத்தில் எந்தக் கோளும் இல்லை.
சனி (Saturn)                                                                                                                                                                      சனிக் கோள்Astrologypics 060
சனிக் கோள் உரோமரின் வேளாண்மைத் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. சனிக் கோளே பண்டைக் கால மக்களுக்குத் தெரிந்திருந்த கடைசித் தொலைக் கோளாகும். வியாழனுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கோளும் இதுவே. ஏனைய கோள்களைப் போலவே சனிக் கோள் ஓர் அழகான கோள். சோதிட சாத்திரம் சொல்வது போல் அதன் நிறம் கறுப்பு அல்ல. அதன் நிறம் கறுப்பு என்பதோ, அதன் வாகனம் காக்கை என்பதோ வெறும் மூடநம்பிக்கை. இந்தக் கோளைச் சுற்றிலும் வளையங்கள் காணப்படுகின்றன. இந்த வளையங்களை முதன் முதலில் கலிலியோ கலிலி (Galileo Galilei (1564-1642) என்ற வானியலாளரே தனது சிறிய தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார்.
ஞாயிறிடம் இருந்து இந்தக் கோள் பெறும் ஒளியும் வெப்பமும் மிகக் குறைவாகும். சனிக் கோள் சூரிய குடும்பத்தில் 798.30 மில்லியன் மைல் தொலைவில் வரிசையில் ஆறாவது கோளாக சுழல்வீதியில் சுற்றி வருகிறது.
                                                                                                                                                                                     
விட்டம்                                                             – 120,660 கிமீ (74,978 மைல்)
மேற்பரப்பு                                                        – வாயு மற்றும் நீர்மம் (Gas and liquid)
ஈர்ப்பு விசை                                                     – 1.16 (புவி 1)
திணிவு                                                             – 95.2 (புவி 1)
வளிமண்டலம்                                                 – நீரகம் (hydrogen) 88 விழுக்காடு கீலியம் (helium) 11 விழுக்காடு
வெப்பம்                                                            – 288 பாரன்கைட் (-178 செல்சியஸ்)
அச்சின் சாய்வு                                                  – 26.73 பாகை
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்       – 10 மணி 40 மணித்துளி, 0 வினாடி (0.436 புவி நாள்)
தன்னைத்தானே சுற்றும் வேகம்                    – நொடிக்கு 9.87 கிமீ (மணிக்கு 35,500 கிமீ)
ஞாயிறைச் சுற்நி வர எடுக்கும் காலம்          – 9 ஆண்டுகள் 167 நாள்கள் (29.46 புவி ஆண்டுகள்)
ஞாயிறைச் சுற்றும் வேகம்                             – நொடிக்கு 9.64 கிமீ
புவியில் இருந்து பொதுமேனி தொலைவு     – 1280.00 மில்லியன் கிமீ (798.30 மில்லியன் மைல்)
உங்கள் எடை (200)                                        – சனியில் 212.8 கிலோ
நிலாக்கள்                                                        – 31
சனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாக்கி நீரகம் திரவமாய்த் தணிவடைகிறது [Condenses into a Liquid] உட்கருவில் திரவ நீரகம் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக நீரகம் [Metallic Hydrogen] பாறை ஆகி, மின்கடத்தியாக (Electrical Conductor] மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக (Magnetic field) இருப்பதற்கு இதுவே காரணம்.
Solarsystem2னியின் நடுவே ஒரு வேளை கடும் பனிக்கரு உறைந்துபோய் இருக்கலாம்! அல்லது கன மூலகங்கள் (Heavy elements) பேரழுத்தத்தில் பாறையாகி ஏறக்குறைய 15,000 பாகை C வெப்பம் உண்டாகியிருக்கலாம்! 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சூரிய குடும்பத்தில் பிறந்த வியாழன் சனி இரண்டும் ஈர்ப்பியல் கொந்தளிப்பு [Gravitational Settlement] அடங்கி இன்னும் நிலைப்பாடு [Stability] பெறவில்லை. அதனால் அண்டத்தின் கருச் சுருக்கம் (Contraction] வெப்பத்தை மிகுந்து வெளிப்படுத்தி, சனிக்கோள் தான் சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தைவிட மூன்று மடங்கு மிகையாக விண்வெளியில் அனுப்புகிறது!
பூமியில் உள்ள நவீன தொலை நோக்கி மூலம் பார்த்தாலும் சனி மண்டலத்தில் ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளிக்கு மேல் ஆராய முடியாது. புவிச் சுழல்வீதியில் (Earth’s Orbit) சுற்றி வரும் ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கியில் (Hubble Space Telescope] 1990 ஆம் ஆண்டு, முதன் முதலில் சனிக் கோளில் ஒரு மாபெரும் வெண்ணிறத் தளம் (White Spot) கண்டு பிடிக்கப் பட்டது. பல மில்லியன் மைல் தூரத்தில் சூரிய மண்டலத்தின் வெளிக்கோள்களில் ஒன்றாக, ஆமை வேகத்தில் சுற்றி வரும் சனிக்கோளை, விண்வெளி ஆய்வுக் கலங்கள் (Space Probes) மூலமாகத்தான் அறிய முடியும்.
இது காறும கூறியவற்றால் சனி என்பது ஏனைய கோள்கள் போலவே 798.30 கோடி மைல் தொலைவில் ஞாயிறைச் சுற்றிவருகிற ஒரு கோளாகும். அது ஒரு சடப்பொருள். அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று இல்லை. சனிக்கோள் மட்டுமல்ல வேறு எந்தக் கோளிலும் மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை. அப்படியிருக்க இந்த 21 நூற்றாண்டிலும் சனி கெட்ட (நீச கிரகம்) சனி பகவான் பொல்லாதவன் – அவன் கோபத்தைத் தணிக்க எண்ணெய் தேய்த்து முழுக வேண்டும் கோயிலுக்குச் சென்று எள்ளெண்ணை எரிக்க வேண்டும் விரதம் இருக்க வேண்டும் பூசைஈ அருச்சனை செய்ய வேண்டும் என்று படியாத பாமர மக்கள் மட்டுமின்றி படித்த முட்டாள்களும் நம்புகிறார்கள்.
தமிழினம் கல்வி, பொருண்மியம், தொழில், கலை, பண்பாட்டுத் துறைகளில் மேலோங்க வேண்டும் என்றால் எமது குமுகம் மூடநம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். நாமே நமது மூளைக்குப் போட்டிருக்கும் விலங்கை உடைக்க வேண்டும்.
இந்த இடத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதி தமிழனைப் பார்த்துக் கூறிய அறிவுரையை ஊன்றிப் படியுங்கள். படிப்பதோடு நின்று விடாமல் மூடநம்பிக்கைகளை விட்டொழியுங்கள். புது மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் பிடியுங்கள்.
புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே!
தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்!
இவற்றை நீக்கி விடு. வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு. எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.
தமிழா! ..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. “முந்திய சாஸ்திரம் தான் மெய் பிந்தைய சாத்;திரம் பொய்” என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் எனப் பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.
எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்ச்சி. சனீசுவரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பது எல்லாம் சனிக் கோள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் முன்னோரின் மூடநம்பிக்கை ஆகும்.
மண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது. (முற்றும்)
About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply