THURSDAY, DECEMBER 31, 2015
வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது! நக்கீரன் கனடா
தலைவர் பிரபாகரனே பல இயக்கங்களை ஒன்று சேர்த்து கட்சி அமைத்தார் என்கிறார். அது உண்மை. அதே சமயம் சேர்த்தார் என்பதை விட சேர்ந்தபோது அதற்கு ஒப்புதல் அளித்தார் என்பதுதான் சரி. ஆனால் தலைவர் பிரபாகரன் கூட புளட், இபிடிபி இயக்கங்களைச் சேர்க்கவில்லை. காரணம் இந்தக் குழுக்கள் அரசோடு சேர்ந்து விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடிய குழுக்கள். போர் முடிந்த போது “வி.புலிகளைத் தோற்கடித்ததில் புளட்டுக்கு கணிசமான பங்கு உண்டு” என்று சித்தார்த்தன் மார்தட்டிக் கொண்டவர்.”ததேகூ உம் ஒரு தீர்வினை முன்வைக்கலாம் தமிழ் மக்கள் பேரவையும் ஒரு தீர்வினையைத் தயாரிக்கட்டும். எங்களுடைய கட்சியும் தீர்வுத் திட்டங்ளை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதே போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருடைய கூட்டு முயற்சியாக எல்லோரும் ஒரே புள்ளியில் சந்தித்து நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக் கொள்வதுதான் மிக முக்கியமானது” என சிறிதரன் சொல்கிறார். அதன் பொருள் என்ன?
அப்படியென்றால் சென்ற தேர்தலில் ததேகூ க்கு மக்கள் கொடுத்த ஆணை என்னாகிறது? ஒரு நாடு இரு தேசம் கேட்கும் ததேமமு, தமிழீழமே முடிந்த முடிவு என்று நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படி ஒரு புள்ளியில் வருவது? ஒரு நாடு இரு தேசக் கோட்பாட்டை, தமிழீழக் கோரிக்கையை சர்வதேசம் ஆதரிக்குமா? சர்வதேச நாடுகளது ஆதரவு இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமா?
பெரும்பான்மைத் தமிழ்மக்கள் தங்கள் சார்பாக பேசுவதற்கு ததேகூ க்கு மட்டுமே ஆணை கொடுத்துள்ளார்கள். ஏனைய அமைப்புகளையும் அவற்றின் கொள்கை கோட்பாட்டுக்களையும் அவர்கள் நிராகரித்துள்ளார்கள். இனச் சிக்கலுக்கான தீர்வுத் திட்டத்தை ததேகூ தான் முன்வைக்க வேண்டும்.
நிற்க. இந்த தமிழ் மக்கள் பேரவை யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது? அதற்கான விடையை ரெலோ கட்சித் தலைவர் மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தமிழ் மக்கள பேரவை என்பது கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் தேசிய பட்டியல் வாய்ப்பை இழந்தவர்களும் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பேரவையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லியிருக்கிறார். (பின்னர் யாரோ கொடுத்த நெருக்கடி காரணமாக தான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்துள்ளார்)
அரசோடும் சர்வதேச சமூகத்தோடும் ஒரே குரலில் பேசுவது நல்லதா அல்லது ஆளுக்கொரு குரலில் பேசுவது நல்லதா?
கடந்த தேர்தலில் ஒரு நாடு இரு தேசம் என்ற மலட்டு முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளார்கள். அதே சமயம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைப்பாட்சி அடிப்படையில் அரசியல் தீர்வு என்ற கோட்பாட்டுக்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் (70 விழுக்காடு) வாக்களித்தார்கள். அப்படியிருக்க பதவி ஆசை பிடித்தவர்களும் அதிருப்தியாளர்களும் குடைச்சல்காரர்களும் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை இன் தேவை என்ன? மக்களை குழப்ப நினைப்பதன் நோக்கம் என்ன?
சிறிதரன் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் எல்லாம் எமது போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாகச் சொன்னார். அவரது அறியாமை கண்டு நான் வருந்துகிறேன்.
சென்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை (ததேமமு) அவர் குறிப்பிடும் தேசிய மக்கள் அவைகள் ஆதரித்தன. அதன் குடை அமைப்பான அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (International Council of Eelam Tamils (ICET) ததேமமு யை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தது. அதில் “தமிழர் தாயகமே, எமது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தின் அடித்தளம். ஆதலால், அனைத்துலகளவில் நாம் தொடரும் போராட்டங்கள் வெற்றியடைவதற்கு, தாயகத்தில் வாழும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓங்கி ஒலிக்கின்ற உறுதியான குரலொன்று எமக்குத் தேவை. அந்தக் குரல் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பதே எமது நிலைப்பாடு.
‘நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம், சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும், தமிழின அழிப்புக்கு நீதியையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வல்லமை பொருந்திய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதனால், உங்களுடைய வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இடப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.
“புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளே, ஊரில் உள்ள உங்கள் உறவுகளுடன் விரைவாகக் தொடர்புகொண்டு, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுங்கள். புலம்பெயர் தேசத்தில் செயற்படும் ஏனைய அமைப்புகளையும் இந்த பரப்புரை பணியில் இணைந்து கொள்ளுமாறு சகோதரத்துவத்துடன் அழைக்கிறோம்.”
இந்த அறிக்கையோடு நில்லாமல் 5 1/2 கோடி பணமும் திரட்டிக் கொடுத்தார்கள். ஆனால் எமது மக்கள் புத்திசாலிகள். அவர்களை பகட்டு வார்த்தைகளாலும் மலட்டு கோட்பாடுகளாலும் ஏமாற்ற முடியாது. மக்கள் ததேமமு முற்றாக நிராகரித்தார்கள். அதற்கு வாக்களிக்குமாறு கேட்ட அனைத்துல ஈழத்தமிழர் மக்களவையின் (அஈதம) முகத்தில் கரி பூசினார்கள். மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு புள்ளடி போட்டார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எல்லாம் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்கின்றன என சிறிதரன் பேசுவது சரியா? ததேமமு க்கு ஆதரவாகவும் ததேகூ க்கு எதிராகவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (அஈதம) படாது பாடு பட்டது என்பது சிறிதரனுக்கு எப்படித் தெரியாமல் போயிற்று?
இப்போது முளைத்துள்ள தமிழ் மக்கள் பேரவையை அஈதம அமைப்பு வரவேற்றிருக்கிறது. இது எதிர்பார்த்ததே. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் / அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் இன்னொரு முகம்தான் இந்த அஈதம அமைப்பு. இந்த அமைப்பு வன்னியின் எச்சங்கள் மே 2009 க்குப் பின்னர் உருவாக்கிய அமைப்பு. முன்னைய உலகத் தமிழர் அமைப்புகளுக்கு ஈடாக உருவாக்கப்பட்டவை.
அஈதம அமைப்பு ததேமமு இன் இன்னொரு முகம் என்பதற்குச் சான்றாக தமிழ் மக்கள் பேரவையை ஆதரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை வரவேற்கும் அதே வேளை சிறிலங்கா அரசும் வேறு சில சுயநல சர்வதேச அரசியல் சக்திகளும் தங்கள் நலத்துக்காக எமது மக்களின் வேட்கைகளையும் அவர்களது உரிமைகளையும் கணக்கில் எடுத்து அவற்றின் அடிப்படையில் ஒரு நீடித்த அரசியல் தீர்வினை எட்டுவதற்குப் பதில் தமிழ்மக்களைக் கட்டாயப்படுத்தி ஒரு அரசியல்தீர்வை திணிக்கப் பார்க்கிறார்கள். (While welcoming the formation of the Tamil Peoples Council, Sri Lankan State and some international powers with vested interest are actively seeking to force a compromised political solution on Tamils instead of finding a sustainable political solution based on the aspirations and inalienable rights of our people) என ஒப்பாரி வைத்துள்ளது.
சர்வதேச அரசியல் சக்திகள் என இந்த அமைப்பு குறிப்பிடுவது அமெரிக்க, கனடா, ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைத்தான். இந்த நாடுகள் தங்களது நலனுக்காக ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழ்மக்கள் மீது திணிக்கின்றனவாம். தெரியாமல்தான் கேட்கிறோம்? இந்த நாடுகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு வேறு எந்த நாடுகளது உதவியோடு தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர அஈதம யோ வேறு அவையோ நினைக்கிறது?
இதே அமைப்பு ஐநாமஉபேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானமானது நீதியைப் படுகொலை செய்து மானுட தர்மத்தை குழிதோண்டிப் புதைத்து அந்தக் கல்லறை மீதே நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்று பாமரத்தன்மையோடு விமர்ச்சித்திருந்தது. மேலே கூறியவாறு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2010 இல் கட்டுக்காசை இழந்த காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு எதிராக புள்ளடி போடுமாறு அறிக்கை மூலம் கேட்டது. ஆனால் எமது மக்கள் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் முகத்தில் பென்னாம் பெரிய நாமத்தைப் போட்டார்கள்.
வேதாளத்தை பிடிக்க தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மறுபடியும் முருக்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை தனது உடைவாளால் வீழ்த்திய கதை மாதிரி சல்லிக்காசுக்குப் பெறுமதியில்லாத அறிக்கைகளை அஈதம என்ற அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
உண்மையில் தமிழர்களை ஒன்றுபடுத்த என்று சொல்லிக் கொண்டு உருவாக்கப் பட்ட தமபே யை புலம்பெயர் நாடுகளில் உள்ள அஈதம, தமிழ்நெட் போன்ற அமைப்புகளே பின்னால் இருந்து கொண்டு பொம்மலாட்டம் நடத்துகின்றன. இந்த அமைப்புகளே ததேமமு மற்றும் தமபே இன் சூத்திரதாரிகளாகவும் நிதியுதவி செய்யும் வள்ளல்களாகவும் இயங்குகின்றன. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் தமபே க்கு ஆன அத்திவாரம் 3 மாதங்களுக்கு முன்னர், தேர்தல் தோல்வியை அடுத்து ஜெனிவாவிலும் சுவிசிலும் போடப்பட்டது. அதில் முக்கியமானவர்களில் தமிழ்நெட் ஜெயச்சந்திரன் ஒருவர். மற்றவர் தமிழ் சிவில் சமூக அமையம் என்ற கடிதத் தலைப்பை வைத்திருக்கும் குமாரவடிவேல் குருபரன்.
ஜெயச்சந்திரன் என்பவர் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு திரட்டுமுகமாக நோர்வேயில் கூட்டம் நடத்த முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி மக்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
எனவே இந்த அமைப்புகள் எல்லாம் ததேகூ எதிராக சர்வதேச மட்டத்தில் ஒரு வலைப் பின்னலை உருவாக்கி செயற்பட்டு வருகின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. அர்தத்தோடுதான் ஆடுகின்றது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த அமைப்புக்கள் திரு சம்பந்தரையும் திரு சுமந்திரனையும் பரம விரோதிகளாகவும் துரோகிகளாகவும் பார்க்கும் போது சிறிதரனை நேசத்தோடும் பாசத்தோடும் பார்க்கின்றன. அவரது காணொளி நேர்காணல் அந்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது. மரத்தை வளர்க்கிறவனையும் மரத்தை வெட்டுகிறவனையும் ஒன்றாக பார்க்க முடியாது.
உண்மையில் தமபே அரசியல் அமைப்பு அல்ல அது ஒரு சமூக அமைப்பு என முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வது சரியென்றால் அரசியல்வாதிகள் ஏன் அழைக்கப்பட்டார்கள்? தமிழ் அரசுக் கட்சி ஏன் அழைக்கப்படவில்லை? மூடிய கட்டிடத்துக்குள் ஏன் கூட்டம் நடந்தது? இந்த அமைப்புக்கு ஒன்றுக்கு மூன்று இணைத் தலைவர்களை நியமித்தது ஏன்? அது சொல்லும் செய்தி என்ன? அதற்குள் ஒற்றுமை இல்லை, தலைமைப் பதவிக்கு சிலர் நாயாய் பேயாய் அலைகிறார்கள் என்பதுதானே?
அதிதீவிர தமிழ்த் தேசியம் பேசுகிற இந்த அமைப்புக்களைச் சார்ந்தவர்களே ஜெனிவாவில் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானங்களை எரித்தார்கள். அமெரிக்காவின் தேசியக் கொடியை வீதியில் போட்டு எரித்தார்கள். நொவெம்பர் 2013 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய இராஜ்சியத்தின் பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராக நூல் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சுமந்திரனின் உருவப் பொம்மையை தனது வண்டியில் கொண்டுவந்த அனந்தி அதனை நிலத்தில் போட்டு எரித்தார். பின்னர் இலண்டனில் திரு சம்பந்தர், திரு சுமந்திரன் உருவப் பொம்மைகளை எரித்தார்கள். திரு சுமந்திரன் மீது அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிஸ் கனடா போன்ற நாடுகளில் வன்முறையை கட்டவுழ்த்து விட்டார்கள்.
கனடா ஐயப்பன் கோயில் அரங்கில் ததேகூ (கனடா) ஒழுங்கு செய்த கூட்டத்தில் சுமந்திரன் பேசுவதை விரும்பாத ஒரு மாபியா கூட்டம் ஐயப்பன் ஆலய அறங்காவலர்களுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது. பயந்து போன கோயில் முதலாளிகள், கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரமிருக்க எந்த வெட்கமோ துக்கமோ இன்றி மண்டபத்தைத் தரமுடியாது என்று கையை விரித்தார்கள்.
இங்குள்ள ஒரு சமூக வானொலி, ஊரார் வீட்டுச் சேலையில் கொய்யகம் கட்டும் வானொலி ஒன்று சுமந்திரனின் பெயர் இருப்பதால் கூட்டம் பற்றிய அறிவித்தலை ஒலிபரப்ப மறுத்தது. இவை என்னத்தைக் காட்டுகிறது? யதார்த்த அரசியல்வாதி திரு சுமந்திரனைக் கண்டு இந்த மாபியாக் கூட்டம் அச்சம் அடைகிறதைக் காட்டுகிறது. சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என இந்த மாபியாக் கூட்டம் நினைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கனடா நாட்டின் சனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தங்களது அடாவடித்தனத்துக்கு தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஓகஸ்ட் 17 இல் நடந்த தேர்தலில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட சில அரசியல்வாதிகளுக்கு ததேமமு மற்றும் தமிழ்க் காங்கிரஸ் என்ற முக மூடிகளுக்கு அப்பால் தமபே என்ற முகமூடி தேவைப்படுகிறது. இதே போல் விக்னேஸ்வரன் ஐயாவுக்கும் தனக்குப் போற்றி பாடவும் தன்னை பல்லக்கில் வைத்துத் தூக்கித் திரியவும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.
வட மாகாணசபை தேர்தலைப் புறக்கணித்தவர்கள்தான் இப்போது விக்னேஸ்வரனை பல்லக்கில் வைத்து ஊர்வலம் வருகிறார்கள். மாகாண சபையா? அது அதிகாரம் அற்ற அலங்கார மாநகர சபைக்குச் சமம், 13ஏ திருத்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, வட – கிழக்கு மாகாணங்களைப் பிரித்ததை ஏற்றுக் கொள்வில்லை என எள்ளி நகையாடியவர்கள் அவரை தமபே இன் இணைத் தலைவராக நியமித்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் காலத்தில் ஒரே தலைமை ஒரே கொடி ஒரே இயக்கம் என்று முழங்கியவர்கள் இப்போது தமிழ் அரசுக் கட்சியின் முதன்மை (ஏக அல்ல) இடத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மொத்தம் 10 இடங்களில் ஆறு இடங்களில் 1 – 3 மற்றும் 5 – 6 இடங்களை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே கைப்பற்றினார்கள். தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு மொத்தம் 288,890 (70.70%) விருப்பு வாக்குகளும் புளட்டுக்கு 53,740 (13.15%) வாக்குகளும் இரண்டு இடங்களுக்குப் போட்டியிட்ட இபிஎல்ஆர்எவ் க்கு 45,314 (11.09%) வாக்குகளும் ரெலோவுக்கு 20,684 (5.06%) வாக்குகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் 207,577 (69.12%) வாக்குகளும் இபிடிபி க்கு 30,232 (10.07%) வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 20,025 வாக்குகளும் (6.67%) ஐக்கிய மக்கள் சுதந்திர மக்கள் முன்னணிக்கு 17,309 (5.76%) வாக்குகளும் கிடைத்தன. ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ததேமமு 15,022 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எண்ணி 6 வாக்குகளால் கட்டுக்காசை காப்பாற்றிக் கொண்டது. அந்த 6 வாக்குகள் ததேகூ க்கு விழுந்திருந்தால் ததேகூ மேலும் ஒரு இருக்கை கிடைத்திருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் விஜயகலா வெறுங்கையோடு வெளியேறியிருப்பார்.
இவை சொல்லித்தரும் பாடம் என்னவென்றால் தமிழ்மக்களில் பெரும்பான்மையோர் ஒவ்வொரு தேர்தலிலும் ததேகூ க்கு வாக்களிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்.
இப்போது முளைவிட்டுள்ள தமபே ஒரு சமூக அமைப்பு என்று சொல்லிக் கொண்டாலும் இந்த அமைப்பு கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் தேசிய பட்டியல் வாய்ப்பை இழந்தவர்களும் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புத்தான். இந்தப் பேரவையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
திரு செல்வம் அடைக்கலநாதனுக்கு இருக்கிற இருக்கின்ற அரசியல் அறிவை சிறிதரனிடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். சம்பாதிப்பதற்கென்றே அரசியலுக்கு வந்தவர். அதுவும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் ஊடாக த.தே.கூ வினுள் நுழைந்து கொண்டவர். இவரது சகோரர்களின் ஊடகங்களின் மாயாஜாலங்களால் இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளார். எவ்வளவு காலத்திற்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவர் இரண்டு தோணிகளில் கால் வைக்கப் பார்க்கிறார். அரசனை நம்பி புருசனை கைவிட நினைக்கிறார். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்.
இன்றைய புவிசார் அரசியல் ஒழுங்கில் இனச் சிக்கலுக்கு ஒரு நிரந்தர, நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய, வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் பேசும் மக்களது வரலாற்று வாழ்விடத்தில் அவர்களுக்கு உள்ள உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு இணைப்பாட்சியை உருவாக்க ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராஜ்சியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு ஒரு கௌரவமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டுகின்றன. அமெரிக்க இராஜதந்திரிகள், ஐநாமஉ பேரவை இராஜதந்திரிகள் இலங்கைக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள். ஐநாமஉ அவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானம் ஒரு வாள் போல் சிறிலங்கா அரசின் தலைமீது தொங்கிக் கொண்டு இருக்கிறது.
அடுத்த ஆண்டு சனவரி 9, 2016 அன்று பிரதமர் விக்கிரமசிங்கா நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் யாப்பு அவையாக மாற்றுவதற்கும் 24 பேர் கொண்ட நடவடிக்கைக் குழுவை நியமிக்கவும் கோரும் தீர்மானத்தை முன்மொழிகிறார். இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 உறுப்பினர் வீதம் சென்று மக்களது எண்ணங்களை கேட்டறிவார்கள். அதன்பின் புதிய யாப்பு ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும். அதையிட்டு ஒரு பொது வாக்கெடுப்பும் நடத்தப் படவேண்டும்.
எனவே வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்க தமஅ மெத்தப் பாடுபடுகிறது. தமிழ் மக்கள் பேரவை போன்ற காளான் அமைப்புக்களினால் எந்தப் பலனும் இல்லை. ததேகூ யும் அதன் தலைவர் திரு சம்பந்தரையுமே அனைத்துலக சமூகம் தமிழ்மக்கள் சார்பாக பேசக் கூடிய தரப்பாக அங்கீகரித்துள்ளது.
2016 இல் இனச் சிக்கலுக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு முறைக்குப் பலமுறை தெரிவித்துள்ளார். எனவே அவருக்குக் கால்தடம் போட்டு விழுத்த எண்ணாமல் தேசியத்தை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரும் ததேகூ யும் தலைவர் சம்பந்தனின் கைகளைப் பலப்படுத்த முன்வரவேண்டும்.
வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.