ஷர்மினி மறைந்து இரண்டாண்டு ஓடிவிட்டன  கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை!

ஷர்மினி மறைந்து இரண்டாண்டு ஓடிவிட்டன
 கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை!

(நக்கீரன்)

ஷர்மினி ஆனந்தவேல். பாரதி கவிதை மொழியில் வயது பதினைந்து இளவயது மங்கை. பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகம், புன்னகையின்  புதுநிலவும் போற்றவருந் தோற்றம். வீட்டில் பள்ளிக்கூடத்தில் இருந்து அள்ளிக் கொண்டுவந்த விருதுகள். அவர் இம் மண்ணுலகை விட்டு மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

1999ம் ஆண்டு யூன் மாதம் 12ம் நாள் காலை ஷர்மினி கோடை விடுமுறை   காலத்தில்  புதிய வேலையில் சேர தொடர்மாடிக் கட்டிடத்தில்  ஐந்தாம் மாடியில் இருந்த தனது வீட்டைவிட்டுச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்தப் புதிய வேலை ஒரு மோசடி என்றும் ஷர்மினியை அவரது வீட்டில் இருந்து வெளிக் கிளப்புவதற்கு கொலையாளி  அல்லது கொலையாளிகள் கையாண்ட ஒரு சூழ்ச்சி எனக் காவல்துறையினர் அப்போது நினைத்தார்கள்.  ஷர்மினியின் பெயர்  காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

நான்கு மாதங்கள் காவல்துறை சல்லடை போட்டுத் துளைத்தும் ஷர்மினிபற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பெற்றோரும், உற்றோரும், மற்றோரும் விளிப்புப் போராட்டம் நடாத்தினார்கள்.  தேடுதல் செய்தார்கள். ஆனால் ஷர்மினியின் மறைவு பற்றி எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

தகவல்  எதுவும்  கிடைக்கவில்லை என்றாலும் அவரது மறைவுபற்றிய வதந்திகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்கவில்லை. அவை இறக்கை கட்டி காற்றில் பறந்து வந்தன. மற்றவர்களது துன்பத்தில் இன்பம் காணும் இருண்ட உள்ளம் படைத்த சிலர் அவரது மறைவுபற்றி இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி கதை பரப்பினார்கள்.

ஷர்மினியுடன் 8ம் வகுப்பில் படித்த மாணவ மாணவிகள் இப்போது உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள்.

ஷர்மினி மறைந்து  நான்கு மாதங்கள் கழிந்த பின்னர் அவரது எலும்புகள் சில லெஸ்லி மற்றும் பின்ச் அவனியூ கிழக்கு சந்திப்புக்கு அருகில் உள்ள டொன் ஆற்றின் கரையோரமாகக் கண்டெடுக்கப்பட்டன. பல் மருத்தவரது உதவியுடனேயே ஷர்மினி அடையாளம் காணப்பட்டார்.

காவல்துறையினரின் விசாரணையில் ஒரு துப்பும் துலங்கவில்லை. கடந்த ஆண்டு யூன் மாதம் ஒரு முக்கிய தடயம் கண்டெடுக்கப்பட்டது. ஷர்மினி அணிந்திருந்த சட்டையின் ஒரு பகுதியை  காவல்துறையினர் கண்டு எடுத்தனர். அதை வைத்து காவல்துறையினர் டிஎன்ஏ சோதனை செய்தார்கள். ஆனால் அந்தச் சோதனையின் பெறுபேறுகளை தெரிவிக்க காவல்துறையினர் இதுவரை முன்வரவில்லை.

இந்தத் தடயம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கொலையாளி  அல்லது கொலையாளிகள் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஆண்டு இரண்டாகியும் கொலையாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.

காவல்துறையினரின் விசாரணையின்போது ஆனந்தவேல் குடும்பம் வாழ்ந்த அதே  தொடர்மாடிக் கட்டிடத்தில் வாழ்ந்த வெள்ளை இனத்து இளைஞர் ஒருவர் வேலை எடுத்துக் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு ஷர்மினியை அவரது வீட்டில்  அடிக்கடி சந்தித்த தகவல் தெரியவந்தது.

இந்த நபர் ஷர்மினி காணாமல் போனதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு வீடுமாறிப் போய்விட்டார்.

ஷர்மினி, அவரது உடன்பிறப்பு மற்றும் அவரது தோழிகளோடு பல சமயங்கள்  நீச்சல் தடாகத்தில் குளித்ததை ஒப்புக் கொண்ட இந்த நபர், தன்னிடம் கோடைகால விடுமுலை வேலை ஏதாவது எடுத்துத்தர முடியுமா என்று ஷர்மினியும் அவரது தோழியர்களும் கேட்டதாகவும் “அதற்கென்ன, அதற்கான விண்ணப்பத்தை முதலில் பூர்த்தி செய்து தந்தால் வேலை எடுத்துத் தரமுடியும் ” என்று தான் சொன்னதாக அந்த நபர் காவல்துறையினரின் விசாரணையின் போது தெரிவித்ததாகத் தெரிகிறது.

ஷர்மினி காணாமல் போன வாரத்துக்கு முதல் வாரம் இந்த நபர் வடயோர்க் தண்ணீர்த் தடாகத்தில் வேலை இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிப்;பதற்கு விண்ணப்பம் ஒன்றை அவரிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் ஷர்மினியை வேலைக்கு அழைத்த மெட்றோ சேர்ச் யூனிட் (Metro Search Unit) என்ற நிறுவனம்பற்றி தனக்கு யாதொன்றும் தெரியாது என அந்த நபர் காவல்துறைக்குச் சொல்லி விட்டார். இந்தப்  பெயரில்  வேலை நிறுவனம் எதுவும் இல்லை என்றும் அது கொலையாளி அல்லது கொலையாளிகளால் பயன்படுத்தப்பட்ட போலிப் பெயர் என்றும் காவல்துறை நம்புகிறது.

ஆனந்தவேல் குடும்பம் இப்போது ஒட்டாவாவுக்கு இடம்பெயர்ந்து விட்டது. அவரை ஒரு மாதத்துக்கு முன்னர் ஒட்டாவாவில் நான் சந்தித்தபோது அவர் உள்ளத்தாலும், உடலாலும் இளைத்துக் காணப்பட்டார். ஆரம்பத்தில் காவல்துறை காட்டிய அக்கறை காலம் போகப் போக குறைந்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நடாத்திய விசாரணைபற்றிய ஆவணங்கள் பெட்டி பெட்டியாகக் கிடக்கின்;றன. ஷர்மினியின் கொலை குறித்து விசாரித்த துப்பறியும் போலீஸ்காரர் காவல்துறை கல்லூரியில் விரிவுரையாளராக பதவி உயர்வுபெற்றுப் போய்விட்டார். அவரைப் போலவே இந்த விசாரணைக்குப் பொறுப்பாக   இருந்து இன்னொரு போலீஸ்காரரும் பதவி உயர்வு பெற்று வேறு இடத்துக்கு மாற்றலாகிப் போய்விட்டார்.

இவற்றைப் பார்க்கும்போது ஷர்மினியின் கொலைபற்றி காவல்துறையின் அக்கறை படிப்படியாகக் குறைந்து கொண்டுவருகிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. ஆறின கஞ்சி பழம் கஞ்சி என்பதுபோல தமிழ் மக்களும், தமிழ் அமைப்புக்களும் ஆரம்பத்தில் காட்டிய  அக்கறையையும், ஆவேசத்தையும் இப்போது காட்டுவதாகத் தெரியவில்லை.

ஷர்மினியின் மரணம் கொலை என்பது நிரூபரணமாகியுள்ளது. கொலையுண்டவரின் எலும்புகள், சட்டைத்துணி போன்ற தடயங்கள் கிடைத்திருக்கின்றன. சந்தர்ப்ப சாட்சியங்களும் இருக்கின்றன. டிஎன்ஏ சோதனை நடாத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இரண்டாண்டுகளுக்குப் பின்னர்கூட சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. மிக விரைவில் கொலையாளி அல்லது கொலையாளிகள் கைது செய்யப்படுவர்கள் என்று காவல்துறை சொல்லிக் கொண்டிருக்கிறதேயொழிய யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. அது மட்டும் அல்லாது விசாரணையில் ஈடுபட்ட இரண்டு முக்கிய காவல்துறை அதிகாரிகள் வேறு துறைகளுக்கும் பணிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கொலையாளி அல்லது கொலையாளிகளை கைது செய்வதற்கு வேண்டிய துப்புத் தருவோருக்கு சன்மானம் தரப்படும் என காவல்துறை அறிவிக்கப் போவதாக ரொறன்ரோ ஸ்ரார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இதனை காவல்துறை விரைந்து செய்ய வேண்டும். இந்தக் கொலை சம்பந்தமாக தமிழ் மக்களும், தமிழர் இயக்கங்களும் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி ஷர்மினியின் கொலை சம்பந்தமாக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

பிறந்த நாட்டில் இனவாதப் பேய்களிடம் இருந்து தப்பிப் புகுந்த நாட்டில் புதிய வாழ்வைத் தொடங்கலாம் என்று கனவுகளைச்  சுமந்து வந்த ஆனந்தவேல் குடும்பம் அந்தக் கனவுகள் கலைக்கப்பட்ட கையறு நிலையில் உள்ளார்கள்.  பத்து மாதம் சுமந்து பெற்ற மகளை இழந்த சோகத்தில் மிதக்கிறார்கள். அவர்களுக்கு கனேடிய காவல்துறை நீதி வழங்க வேண்டும். அதுவும் விரைந்து வழங்கப்பட வேண்டும். இரண்டாண்டு காலம் ஓடி மறைந்து விட்டது. ஆனந்தவேல் குடும்பம் இன்னும்  எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? கனேடியத் தமிழர்கள் அதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எதிர் பார்க்கிறார்கள்.  (யூன் 12, 2001 தமிழ்ச் சோலை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது)

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply