நாராய் நாராய் செங்கால் நாராய்!
சத்திமுத்தப் புலவர்
சத்திமுத்தப் புலவர் என்றொருவர் இருந்தார். சத்திமுத்தம் என்பது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊரின் பெயர். புலவரின் இயற்பெயர் தெரியாததால் ஊர்ப்பெயரை வைத்து அவரைச் ’சத்திமுத்தப் புலவர்’ என்று அழைத்திருக்கின்றார்கள்.
’பிரிக்கமுடியாதது வறுமையும் புலமையும்’ என்பதுபோல் இந்தப் புலவரையும் வறுமை பிரியாதிருந்தது. பழுமரம் தேரும் பறவைபோலத் தம் வறுமைதீரப் பொருள் நல்கும் வள்ளலைத் தேடி மதுரை வந்த புலவர், ஒருநாள் பசிக்கொடுமை மிகுதியால் வாடி, ஆங்கோர் பொழிலில் இருந்த மரத்தடியில் சாய்ந்திருந்த வேளையில், இல்லத்தில் தம் வரவுக்காகக் காத்திருக்கும் மனையாட்டியின் நினைவு அவரை வாட்டியது. பொழிலருகே இருந்த பொய்கையில் இரைதேடி வந்த நாரைகளைக் கண்டார்; அவற்றில் ஒன்றைத் தம் மனையாட்டியிடம் தூதுவிடக் கருதி,
”சிவந்த கால்களைக் கொண்ட நாரையே, பனங்கிழங்கைப் பிளந்ததுபோன்ற பவளக் கூர்வாயைக் கொண்ட பறவையே, நீயும் உன் மனைவியும் தென்திசைக் குமரிக்கடலில் நீராடிப் பின்பு வடதிசை நோக்கிச் செல்லுகையில் எனது ஊரான சத்திமுத்தத்திலுள்ள சோலையில் தங்கி, இற்றுப்போன ஓலைகளைக் கூரையாகக் கொண்ட என் வீட்டில் என் வருகையைத் தெரிவிக்கும் பல்லியின் ஓசையைக் கேட்க ஆவலாய்க் காத்திருக்கும் என் மனையாட்டியைக் கண்டு, எனது அரசனான மாறன்வழுதி ஆட்சிசெய்யும் கூடல்நகரில் மேலே போர்த்திக்கொள்ள ஆடையின்றி வாடைக்காற்றில் வருந்தி, கையையே போர்வையாகக் கொண்டு மெய்யைப் பொத்தி, கால்களைக் கொண்டு உடலை அணைத்துச் சுருண்டு, கூடைக்குள் படுத்திருக்கும் பாம்பு மூச்சுவிடுவதைப்போல் மூச்சுவிட்டுக்கொண்டு படுத்திருக்கும் ஏழையாளனான உன் கணவனைக் கண்டேன் என்று சொல்வாயாக” என்கிறார். ![]()
“நாராய் நாராய் செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரல் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.“
நாரையின் கூர்வாய்க்குப் பிளந்த பனங்கிழங்கை உவமையாக்கிய புலவரின் நுண்ணறிவு வியக்கவைக்கின்றது. வறுமையால் உடல்மெலிந்து நடைதளர்ந்தாலும் புலவரின் கண்கள் தம் கூர்மையை இழக்கவில்லை என்பதற்கு இவ் அரிய உவமை சான்று!
அந்நாளில் வீட்டைவிட்டு வெளியூருக்குச் சென்ற ஆடவர் திரும்பி வரும்வரை வீட்டிலுள்ள பெண்டிர் சுவரில் கோடு வரைந்து அவர்கள் சென்ற நாளை எண்ணிக் கலங்கியதையும், பல்லி சத்தமெழுப்பி நல்ல சகுனத்தைச் சொல்லுமா, காக்கை கரைந்து வெளியில் சென்றவரை வீட்டுக்கு அழைத்துவருமா என்று ஏங்கிக்
காத்திருந்ததையும் பழந்தமிழ்ப் பாடல்கள் வாயிலாய் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.
செல்பேசியில் செயல்மறந்து பேசிக்கொண்டிருப்பதும், புலனக் காணொளியின் துணையோடு பொழுதுபோவது தெரியாமல் சலனமின்றிக் கதைப்பதும் சாத்தியமில்லாத அக்காலத்தில் அஃறிணை உயிர்களே உயர்திணையோர்க்கு, தம் செய்கைகள் மூலம், சற்றே ஆறுதல் அளித்திருக்கின்றன.![]()
அது சரி…கையதுகொண்டு மெய்யது பொத்திச் சோக கீதமிசைத்த சத்திமுத்தப் புலவரின் வறுமை தொலைந்ததா, இல்லையா?
புலவரின் நாரைவிடு தூதுப் பாடல் மாறன்வழுதியின் காதுகளைச் சேர, அவன் புலவரின் வறுமையைத் தூர விரட்டினான் என்று தெரியவருகின்றது.![]()
சத்திமுத்தப் புலவரின் கதையைக் கற்பனை கலந்து நாடகமாக்கியிருக்கின்றார் பாவேந்தர் பாரதிதாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது!
~மேகலா இராமமூர்த்தி

Leave a Reply
You must be logged in to post a comment.