யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் ஏன் போத்துக்கீசருக்கு ஏற்பட்டது ?
[பாகம் 3]
முதலாவதாக, மன்னார் முத்து வர்த்தகத்தை எப்படியும் தம் வசமாக்க வேண்டுமென்ற பேராசை, கோட்டையில் போத்துக்கீசர் மேலாதிக்கம் ஏற்பட்டதோடு மிகத் தீவிரமடைந்தது. கோட்டையிலிருந்து பெறும் கறுவா போன்ற வாசனைத் திரவியங்களிலிருந்து பெற்ற அதிக வருமானமும், கோட்டை மன்னர்கள் கொடுத்த வருடாந்தத் திறைகளும் நிச்சயம் போத்துக்கீசருக்கு பெரும் பேராசையைத் தூண்டிய விடயங்களாகும்.
அவ்வாறான ஒரு பேராசை அவர்களை யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி மன்னார் முத்து வர்த்தகத்தைத் தமதாக்கி, யாழ்ப்பாண மன்னனிடமிருந்து திறையாகப் பெருந்தொகைப் பணத்தையும், விலைமதிப்பற்ற யானைகளையும் பெறலாம் என்ற அவா மேலோங்கி இருந்தது என்பதனை மேற்கூறப்பட்ட பல்வேறு விடயங்களிலிருந்து அறியமுடிகிறது.
மன்னாரில் 1560 களில் போத்துக்கீசர் நிலைகொள்ள வாய்ப்பளித்ததன் பயனாக, அவர்கள் தென்னாசிய, தென் கிழக்காசிய வர்த்தகத்தில் தம்மை இலகுவாக ஈடுபடுத்த முடிந்தது. ஆனால் யாழ்ப்பாண அரசர்களின் தலையீடுகளும், படையெடுப்புக்களும் போத்துக்கீசருக்கு நெருக்கடியைக் கொடுத்தவண்ணம் இருந்தன.
யாழ்ப்பாண இராச்சியத்தையும் கைப்பற்றிவிட்டால் அவ்வாறான நெருக்கடியிலிருந்து விடுபட்டு, இந்தியாவிலும் இலங்கையிலும் தாம் சுதந்திரமாக நடமாடி அந்நாட்டு வருமானங்களைப் பெற்று, வர்த்தகத்தினூடாகவும் அதிக வருமானத்தை ஈட்டமுடியும் என்ற பேராசை ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது.
போத்துக்கீசருக்கு, இந்து சமுத்திரக் கடற்பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியாவின் மேற்கு, கிழக்குக் கரையோரத் துறைமுகங்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவது, ஒரு பாரிய சவாலாக இருந்தது.
யாழ்ப்பாண அரசு கைப்பற்றப்பட்டால், அவ்வாறான இராணுவ, வர்த்தகப் போக்குவரத்துத் தொடர்புகளுக்கு மிக இலகுவானதாகவும், இந்தியா, இலங்கை, மலாக்கா, தென்கிழக்காசியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து அடிமைப்படுத்துவதற்கு மிகவும் வாய்ப்பாகவும் அமையும் என்பதைப் போத்துக்கீசர் கருதிய தன் விளைவும், யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
மேலும், கோட்டை இராச்சியம், 1543 இல் போத்துக்கீச மேலாண்மையை ஏற்றிருந்தது. அத்தோடு கோட்டை மன்னன் தர்மபாலனின் மரண சாசனப்படி 1597 இல் கோட்டை போத்துக்கீச முடிக்குரியதாகியது. யாழ்ப்பாண இராச்சியத்தையும் கைப்பற்றிவிட்டால், இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் அனைத்தும் தம்வசம் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இருந்தது.
அவ்வாறான ஒரு நிலையில் தமக்கு எதிரான கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு மிக இலகுவாக அமையும் என்றும், கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டால் இலங்கை முழுவதும் தமது ஆளுகைக்கு உட்பட்ட நாடாக வரும் என்ற ஒரு பாரிய திட்டமும், யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றக் காரணமாக அமைந்தது.
இவ்வாறான ஒரு நிலையில், தமது வர்த்தகத்துடன் போட்டியிடும் இலங்கை, தென்னிந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் மேலாதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி, தாமே வர்த்தகத்தின் ஏகபோக உரிமையைப் பெற்று அதிக இலாபம் பெறலாம் என்ற பேராசை போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றக் காரணமாகவும் இருந்தது.
செல்வம் சேர்ப்பதும், கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதுமே போத்துக்கீசரின் ஆசிய நாடுகளுக்கான பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
அரசியல், வர்த்தக நோக்கம் நிறைவேறும் பட்சத்தில் தமது மதத்தைப் பரப்புவதும் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. மன்னாரில் ஏற்கனவே கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, அங்கு வெற்றிபெற்ற போத்துக்கீசருக்கு, செறிவாக மக்கள் வாழும் யாழ்ப்பாணப் பிரதேசத்திலும் தமது மதத்தைப் பரப்ப வேண்டும் என்ற அதிதீவிர நோக்கமும், யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றக் காரணமாக அமைந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில், எவ்வாறான காரணிகள் யாழ்ப்பாண இராச்சிய மன்னர் தமது இராச்சியத்தைப் போத்துக்கீசர் வசம் இழக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதனையும் நோக்குவது அவசியமாகும்.
முதலாவதாக, 1560 இல் யாழ்ப்பாண இராச்சிய மன்னர், போத்துக்கீசருக்குத் திறைசெலுத்த ஒப்புக் கொண்டமை, அவர்களின் பொருளாதாரத்தைத் தளர வைத்தது. அத்தோடு மன்னார் போத்துக்கீசர் வசமாகிய நிகழ்வினால், அதுவரையும் முத்து வர்த்தகத்தின் மூலம் பெற்ற பெருந்தொகை வருமானத்தை யாழ்ப்பாண அரசு இழந்தது.
இதுவே யாழ்ப்பாண அரசு பொருளாதார ரீதியாக ஆட்டம் கண்டமைக்குரிய அடிப்படைக் காரணமாகும். அத்தோடு மன்னாரில் போத்துக்கீசர் தமது படைகளை நிறுத்தி, அப்படைகள் மூலம் கரையோரப் பிரதேசங்களை வேவு பார்த்து, யாழ்ப்பாண அரசனுக்கு எதுவித இராணுவ, பிற உதவிகள் தென்னிந்தியாவிலிருந்து வராத வண்ணம் பார்த்துக் கொண்டனர்.
தேவையான நேரத்தில், தென்னிந்தியாவிலிருந்து இராணுவ உதவிகளைப் பெறுவதில் யாழ்ப்பாண அரசர்கள் பெருஞ் சிரமப்பட்டார்கள். மேலும், கோட்டையும், மன்னாரும் போத்துக்கீசர் வசம் இருந்தபடியால் தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் போத்துக்கீசப் படைகள் இலகுவாக வந்து இருமுனைத் தாக்குதல்களை யாழ்ப்பாண அரசிற்கு எதிராகத் தொடுக்கக்கூடியதாக இருந்தது.
கோட்டை இராச்சியம் கடற்கரையோரமாக இருந்ததன் விளைவே அவ் இராச்சியத்தைப் போத்துக்கீசர் இலகுவில் கைப்பற்ற வாய்ப்பளித்தது. யாழ்ப்பாண இராச்சியமும், சாதகமான ஒரு புவியியல் சூழ்நிலையைப் போத்துக்கீசருக்கு வழங்கியது. கண்டி இராச்சியம் இறுதிவரை போத்துக்கீசரால் கைப்பற்றப்படாமல் இருந்தமைக்கு, அவ் இராச்சியத்தின் புவியியற் பின்னணியும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
டச்சுக்காரர்களின் ஆசியா நோக்கிய பயணங்களும் அவர்கள் 1610 இல் இந்தியாவிலுள்ள புலிக்கட்டில் (Pulicat) தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும், தெற்கிலுள்ள சிங்கள இராச்சியங்கள் போத்துக்கீசருக்கு எதிராக டச்சுக்காரரின் உதவியை நாடுவதாகப் போத்துக்கீசர் அறிந்தமையையும், அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றி அதனூடாக முழு இலங்கையையும் வசமாக்கத் தம்மைத் தயார்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.
அத்தோடு போத்துக்கீசரின் இராணுவபலம், குறிப்பாக துப்பாக்கி, வெடிபொருள், கனரக ஆயுதங்கள் கொண்ட தரைப்படை, கடற்படைக்கு முன் யாழ்ப்பாண அரச படைகள் கத்தி, வாள், அம்பு, ஈட்டி போன்றவற்றை வைத்துக்கொண்டு அவர்களை எதிர்க்க முடியாமற் போய்விட்டது.
போத்துக்கீசப் படைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதிலும், கோட்டையிலிருந்து சிங்களக் கூலிப்படைகளை (lascarians) ஆயிரக்கணக்கில் போத்துக்கீசத் தளபதி பெற்று யாழ்ப்பாண இராச்சியத்தைத் தாக்கி அழிக்கப் பயன்படுத்தினான். அத்தோடு மன்னாரில் மதம்மாறிய தமிழ்க் கத்தோலிக்கர்களும், யாழ்ப்பாணத்தில் மதம்மாறிய தமிழ்க் கத்தோலிக்கர்களும், குறிப்பாக மேல்மட்ட வர்க்கத்திலிருந்த முதலியார்களும், போத்துக்கீச அந்நிய சக்திகளுக்கு விலைபோய், யாழ்ப்பாண இராச்சிய வீழ்ச்சிக்கும், அழிவுக்கும் காரணமாக இருந்திருக்கின்றார்கள்.
இறுதியாக, முதலாவது சங்கிலி மன்னனின் ஆட்சிக்குப் பின் ஒரு வலுவான, திறமையுள்ள, நாட்டுப் பற்றுள்ள அரசன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆளவில்லை.
அரச கட்டிலுக்காகவும், பதவிக்காகவும் தமக்குள்ளே போட்டி போடுகின்ற நிலைமையும், அரசகட்டில் ஏறுவதற்காகப் போத்துக்கீசரிடம் போய் உதவி கேட்கின்ற நிலைமையுமே காணப்பட்டது. இவ்வாறான பலவீனங்களும் சுயநலப் போக்கும், யாழ்ப்பாண அரசர் போத்துக்கீசரிடம் தோற்றுப் போனதற்கு காரணங்களாக அமைந்தன.
யாழ்ப்பாண அரசர், போத்துக்கீகருடனான சண்டைகளுக்கு, தஞ்சாவூர் நாயக்கரின் படை உதவிகளையும், கள்ளிக்கோட்டை சமோரினின் படை உதவிகளையும் அடிக்கடி பெற்றுப் போர் புரிந்தமைபற்றி மேலே கூறப்பட்டது.
ஆனால் யாழ்ப்பாண அரசர் தம் சொந்த மக்களைத் திரட்டி, நல்ல கட்டுக்கோப்பான, திறமைவாய்ந்த, நாட்டுப்பற்றுள்ள ஓர் உள்ளூர் இராணுவத்தைக் கட்டியெழுப்பத் தவறியமை நிச்சயமாக அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை இழந்தமைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்திருக்கின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாகப் போத்துக்கீசரை எதிர்த்துப் போராடுவதற்கு, யாழ்ப்பாண அரசர்கள் பல்வேறு வகைகளில் முயன்றுள்ளார்கள். ஆனால் அவர்களால் கண்டி இராச்சிய மன்னனினதும், படைகளினதும் உதவியைப் போத்துக்கீசருக்கு எதிரான போரில் பயன்படுத்த முடியாமற் போனதுடன், ஆயிரக்கணக்கில் சிங்களக் கூலிப்படைகளைப் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசுக்கு எதிரான போரில் பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஒரு பொது எதிரியை, அந்நிய ஆதிக்கத்தை நாட்டைவிட்டுத் துரத்துவதற்காக யாழ்ப்பாண அரசர்களால் மேற்படி சிங்களக் கூலிப்படைகளைத் தகுந்த முறையில் கையாள முடியாமற் போய்விட்டமையையும் யாழ்ப்பாண அரசைப் போத்துக்கீசர் அழிக்கக் காரணமாக இருந்தவைகளில் ஒன்றாகும்.
எந்தவொரு இறைமையுள்ள தேசமும், நாட்டுப் பற்றுள்ள, தூரநோக்கம் கொண்ட, எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்நிய சக்திகளிடம் விலைபோகாத ஒரு தலைவனைக் கொண்டு காணப்படவில்லையோ, அந்தத் தேசம் அந்நியர்களிடம் அடிமையாவது தவிர்க்க முடியாததாகும்.
அதேபோன்று எத் தேசம் ஒரு கட்டுக்கோப்பான, தேசப்பற்றுக் கொண்ட, சொந்த இராணுவத்தைத் தன்னகத்தே கொண்டு காணப்படவில்லையோ, அத்தேசம் அந்நியர்கள் கையில் அகப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது என்பதனையே யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு புகட்டும் பாடமாக அமைகின்றது என்று கூறுவதில் தவறில்லை.
போத்துக்கீசர் ஆட்சியும், அழிவுகளும்
1619 ம் ஆண்டுடன் யாழ்ப்பாண இராச்சியம் முற்றாகப் போத்துக்கீசர் கைக்கு மாறியதுடன், யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலி குமரனும், அவனுடைய அரசுரிமை வாரிசுகளும் யாழ்ப்பாண மண்ணிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டு, கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு, கோவாவிற்கு அனுப்பப்பட்டார்கள்.
“அரச குடும்பம் சம்பந்தப்பட்ட யாவற்றையுமே இங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவதே மிகச் சிறந்தது.”
என த ஒலிவேறா விளங்கப்படுத்தினான். இக்கூற்று அவன் யாழ்ப்பாண இராச்சியத்தை அடியோடு அழித்துவிட்டதை உணர்த்துகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஒலிவேறா முற்றாக ஒழித்துக்கட்டி, தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிட்டதாகப் பெருமிதம் அடைந்த வேளையில், அவனுக்குச் சில அதிர்ச்சிகளும் காத்திருந்தன.
1619 களை அடுத்துவரும் இரண்டாண்டுகளில் தஞ்சாவூர் நாயக்கர்களின் படைகள், உள்ளூர் தமிழர்களுடன் சேர்ந்து போத்துக்கீசரை யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றப் படையெடுத்தமையே அவ் அதிர்ச்சியாகும்.
யாழ்ப்பாண இராச்சியம் தமக்குச் சொந்தமாகிய நிலையில் ஒலிவேறா தனது படைகளிற் பலரையும், கூலிப்படைகளில் பெரும்பாலானவர் களையும் கோட்டைக்குத் திருப்பி அனுப்பிவிட்டான். குறைந்தபட்சம் 200 போத்துக் கீசப் படைகளையும், 1000 த்துக்குக் குறைவான சிங்களக் கூலிப்படைகளையும் மட்டுமே அவன் யாழ்ப்பாணத்தில் வைத்திருந்தான்.
ஒலிவேறாவுக்கு பிரதான அனுகூலமாகக் கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்ட தமிழர் பெரும்பாலமாக அவன் பக்கம் நின்றமை, கோட்டையிலிருந்தும், நாகபட்டினத்திலிருந்தும் எந்நேரமும் கடல்மார்க்கமாகக் கிடைக்கக்கூடிய போத்துக்கீசப் படையுதவிகளும், வெடி கருவிகளும் கிடைக்கக் கூடியதாக இருந்தமை என்பவற்றின் காரணமாக மேற்படி எதிர்ப்பை அவன் எதிர்கொள்ளும் நிலையில் இருந்தான் என்றே கூறவேண்டும்.
முதலாவது சவாலை சித்திரை 1620 இல் ஒலிவேறா எதிர்நோக்க வேண்டியிருந்தது. 1619 இல் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தைத் தமதாக்கிக் கொண்டபோது டொம் லூயி (Dom Louis) என்ற தமிழ்க் கிறிஸ்தவ முதலியார் போத்துக்கீசர் தனக்கு வழங்கிய அதிகாரத்தில் அதிருப்தி கொண்டு காணப்பட்டான்.
இதன் விளைவாக அவன் தஞ்சாவூர் நாயக்கரிடம் சென்று படையுதவி பெற்று, போத்துக்கீசரை வெளியேற்ற முனைந்தான். தஞ்சாவூர்ப் படைகளையும், உள்ளூர்த் தமிழர்களையும் உள்ளடக்கிய 3000 படைகளுடன் போத்துக்கீசரை எதிர்த்தான்.
சிறிதளவு படைகளை யாழ்ப்பாணத்தில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்திலும், நல்லூர்க் கோவிலிலும் ஒலிவேறா நிறுத்தியிருந்தான். இந் நிலைமையில் ஒலிவேறாவுக்கு கோட்டையிலிருந்து போத்துக்கீசப் படைகளும், இலங்கைக் கூலிப்படைகளும் உரியநேரத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்தன.
அந்த வேளையில் நாகப்பட்டினத்திலிருந்து ஆயுத விநியோகமும் உரிய நேரத்தில் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அதனால் டொம் லூயியின் படைகளை முற்றாக ஒழிக்க ஒலிவேறாவுக்கு மிக இலகுவாக இருந்தது.
ஆனால் டொம் லூயி தனது முயற்சியை இத்துடன் நிறுத்தவில்லை. 1621 இல் மறுபடியும் தஞ்சாவூர் நாயக்கர்களின் படை உதவியுடனும், உள்ளூர்த் தமிழர்களையும் ஒன்றுசேர்த்து ஒலிவேறா மீது போர் தொடுத்தான். ஆனால் ஒலிவேறா இப் போரிலிருந்து நல்லூருக்குப் பின்வாங்கினான். ஏற்கனவே செய்ததுபோன்று, கோட்டையிலிருந்து போத்துக்கீசப் படைகளையும், சிங்களக் கூலிப்படைகளையும் அவசரமாக வரவழைத்தான்.
டொம் லூயியின் படைகளை, நல்லூரிலும், கோப்பாயிலும் வைத்து ஒலிவேறா தோற்கடித்தான். மேலும், தஞ்சாவூரிலிருந்து துணைப்படைகள் டொம் லூயியினால் வரவழைக்கப்பட்டன. அச்சுவேலியில் 11 மாசி 1621 இல் இருபகுதியினரும் போரில் ஈடுபட்டனர்.
அப் போரிலும் டொம் லூயியின் படைகள் ஒலிவேறாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. இத்துடன் போத்துக்கீசரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றும் டொம் லூயியின் முயற்சியும், தஞ்சாவூர் நாயக்கர்களின் முயற்சியும் கைவிடப்பட்டன.
மேற்படி சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் போத்துக்கீசர் எதுவித எதிர்ப்புமின்றி 1628 வரை ஆட்சிசெய்தனர். இக் காலப்பகுதியில் ஒலிவேறா, எல்லா வகையிலும் மேலாண்மை செலுத்தும் ஒரு தளபதியாகக் காணப்பட்டான்.
பல நூற்றாண்டுகளாக நல்லூரிலிருந்த தமிழர்களின் இராசதானியை ஒலிவேறா 1621 இல் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினான். எதிரிகளின் போர் நடவடிக்கையைத் தடுப்பதற்கும், தலைமையகத்துடன் தொடர்பு வைத்திருப்பதற்கும், தேவை ஏற்படும்போது உதவிப் படைகளைப் பெறுவதற்கும் கடலுக்கு அண்மித்த யாழ்ப்பாண நகர் நல்லூரைவிட முக்கியத்துவம் வாய்ந்து காணப்பட்டது.
முதல் பெரேரா ஊர்காவற்றுறையில் கோட்டை ஒன்றைக் கட்டியபோதும், யாழ்ப்பாணமே தலைநகரமாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதான கோட்டையின் அவசியத்தை உணர்ந்த போத்துக்கீசர் 1624 இல் கோட்டை கட்ட ஆரம்பித்தனர். ஆனால் 1632 வரை அக் கோட்டை கட்டும் வேலை பூரணமாக்கப் படவில்லை என அறியமுடிகிறது.
கோட்டை இராச்சியம் ஏற்கனவே போத்துக்கீசர் வசமாகிவிட்டது என மேலே கூறப்பட்டது. 1617 களில் கண்டி மன்னனுடன் போத்துக்கீசர் செய்த சமாதான உடன்படிக்கையின்படி, அங்கு தற்காலிக அமைதி நிலவியது. தற்பொழுது மன்னார் உள்ளிட்ட யாழ்ப்பாணப் பிரதேசமும் போத்துக்கீசர் வசமாகிவிட்டது. இந் நிலையில் 1621 களில் இருந்து 1630 கள் வரை போத்துக்கீசரின் கீழ் இருந்த பிரதேசங்களை த ச நொரன்காவே ஆட்சிசெய்தான்.
ஒருபுறத்தில் இலங்கை நிலைமை போத்துக்கீசருக்கு ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்தியபோதிலும், மறுபுறத்தில் ஒரு பேரிடி காத்திருந்தது. ஆனி 1619 இல் ஆங்கிலேய – டச்சு (The Anglo-Dutch) உடன்படிக்கை ஐரோப்பாவில் கைச்சாத்திடப்பட்டது.
அரசியல், வர்த்தகக் கூட்டு நடவடிக்கை சம்பந்தமாக இவ் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இந் நிகழ்வு டச்சுக்காரரின் நடவடிக்கை ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இடம்பெறப் போகிறது என்பதைத் தெளிவாகக் காட்டிநிற்கின்றது. 1620 இல் டச்சுக்காரர்கள் போத்துக்கீசரின் காலனித்துவ நாடுகளான பாகியா, அங்கோலா ஆகிய நாடுகளைத் தாக்கினர்.
இந் நிகழ்வு, போத்துக்கீசருக்கு அதிக செலவினங்களையும், பெரும் படை நகர்வுகளையும் ஏற்படுத்தின. தொடர்ந்து 1622 இல் ஆங்கிலேய – டச்சுப் படையினர் மேலும் போத்துக்கீசக் காலனியான மொசாம்பிக்கைத் தாக்கி போத்துக்கீசப் படைகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தினர்.
மேலும் மேற்படி கூட்டுப்படையினர் கோவாவிலிருந்து வருடம் ஒருமுறை லிஸ்பனுக்குப் போகும் போத்துக்கீசரின் சரக்குக் கப்பல்களை 1622 – 1623 களில் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்குச் செல்லவிடாது தடைபோட்டனர்.
இதேவேளை பாரசீகப் படையினருக்கு ஆங்கிலப் படையினர் 1622 களில் ஓமுஸ்ஸை (Ormuz) கைப்பற்ற உதவியிருந்தனர். பாரசீகக் குடாவில் போத்துக்கீசருக்கு இருந்த ஆதிக்கம் பறிக்கப்பட்ட நிகழ்வு, அவர்களுக்கு மிகப் பாரிய உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்த காரணமாயிற்று.
அடுத்து வருகின்ற வருடங்களில் பாரசீகக் குடாவைத் திரும்பப் பெற்றுத் தமது மேலாண்மையை அங்கு பாதுகாப்பது என்பது போத்துக்கீசருக்கு பெரும் சவாலாக அமையப் போகின்றது என்ற உளவியற் தாக்கமாகவே அது காணப்பட்டது.
மேலும், இம் முயற்சியில் அதிகளவு போர்வீரர்களையும், படை பலத்தையும், பணத்தையும் செலவிட வேண்டியிருப்பதால் இலங்கையின் பாதுகாப்பு நிலை பாதிக்கப்பட்டு இலங்கையை டச்சுக்காரரிடம் இழக்கவேண்டி நேரலாம் என்ற அச்சமும் போத்துக்கீசரிடம் காணப்பட்டது.
மூலம் : இலங்கையில் தமிழர்: ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000) – முருகர் குணசிங்கம்

Muralitharan Nadarajah

Leave a Reply
You must be logged in to post a comment.