சோழரின் மத சார்பற்ற ஆட்சிக்குச் சான்றாக விளங்கிய லெய்டன் செப்பேடுகள் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டன

ஆனை மங்கலம் செப்பேடுகள் {லெய்டன் செப்பேடு Leiden Copper plates } என்பவை நெதர்லாந்து நாட்டிலுள்ள லெய்டன் அருங்காட்சியகத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த செப்பேடுகளாகும். இவற்றில் பெரிய செப்பேடானது முதலாம் இராசராசன் காலத்தில் வெளியிடப்பட்டது, சிறிய செப்பேடானது முதலாம் குலோத்துங்கனால் வெளியிடப்பட்டது. இந்த லெய்டன் செப்பேடுகள் இப்போது நெதர்லாந்து அரசினால் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இச் செப்பேடுகள் சோழ அரசின் வரி விதிப்பு முறைமை, வரி விலக்கு முறைமை, அரச மேலாண்மை, வெளியுறவுக்கொள்கை என்பற்றினைப் பற்றிக் கூறுவதுடன், சோழ அரசின் #மத_சார்பற்ற_ஆட்சிமுறை பற்றியும் கூறுகின்றன.
ஆனை மங்கலம் செப்பேடுகள் {லெய்டன் செப்பேடுகள் Leiden Copper plates } காட்டும் சோழரின் மத நல்லிணக்க ஆட்சி![]()
நாகபட்டணத்தில் சோழனால் கட்டப்பட்ட புத்த பள்ளிக்கு கொடை அளிப்பதற்காக ஆனைமங்கல ஊரகப் பொறுப்பாளர்களுக்கும் சோழ அரசுக்கும் இடம் பெற்ற ஒரு உடன்படிக்கை பற்றி இச் செப்பேடு பேசுகின்றது. இந்தப் புத்த பள்ளி (விகாரை) தனியே வழிபாட்டு இடமாக மட்டுமல்லாமல் ; கலங்கரை விளக்கமாக, மருத்துவ சேவை வழங்குமிடமாக, அறிவுரை வழங்குமிடமாக எனப் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளது. இப் பள்ளிக்கான செலவு முழுவதையும் ஆனை மங்கல மக்களே வழங்கியுள்ளனர். விரிவாகச் சொன்னால் சைவ-வைணவ மக்களைப் மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு ஊரின் மக்கள் புத்த பள்ளியொன்றுக்குக் கொடை வழங்கியுள்ளனர். இது மட்டுமல்ல, பல்வேறு சபைகளின் சார்பாக, பொருள் கொடுக்க உள்ளூராட்சித் தலைவர்கள் பலர் அந்தந்த ஊரின் சார்பில் ஒப்புக் கொண்டிருந்தனர். அந்த வகையில் `சன்ன மங்கலம் பிரமதேயம் `என்ற சபையின் சார்பில் கையெழுத்திட்டவர் யார் தெரியுமா?
துருக்கன் கமுதன் ; ஆம் துருக்கி நாட்டிலிருந்து வணிகத்துக்காக தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறி வாழ்ந்த ஒரு இசுலாமியர் (இவரின் பெயரினை `மத்தியஸ்தன் கமுதன் துருக்கனேன்` என ஆ.சிவசுப்பிரமணியன் எனும் பண்பாட்டு ஆய்வாளர் குறிப்பிடுவார்).
சைவ சமயத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊர் மக்கள் தமது வருமானத்திலிருந்து புத்தப் பள்ளி ஒன்றுக்கு வரி செலுத்த ஒப்புக்கொண்டு பொருள் கொடுக்கின்றனர், இதில் ஒரு சிற்றூரின் சபைப் பொறுப்பாளராக ஓர் இசுலாமியர் இருந்துள்ளார்.
இன்றைக்குக் கூட இந்தியாவின் பல பகுதிகளில் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மத நல்லிணக்கத்தினை இற்றைக்கு ஆயிரமாண்டுகளுக்கு முன் செய்து காட்டிய தமிழ் மண்.
இத்தகைய பெருமைமிகு ஆனைமங்கலச் செப்பேடுகளை ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்று, அவற்றினை உரிய இடத்தில் மக்களுக்குக் காட்சிப்படுத்தப் பட வேண்டும்.

Leave a Reply
You must be logged in to post a comment.