Thiru Yo
கத்தோலிக்க மதத்தைப் பரப்பவென கடல்கடந்து வந்த கான்சுடான்சோ பெசுக்கி தமிழைக் கற்று, பேசி தமிழில் புலமைபெற்று தமிழ் – இலத்தீன் அகராதியை வெளியிட்டார். தமிழ் – போத்துகீசிய அகராதியை எழுதினார். தமிழுக்எஉ பல்வேறு தொண்டாற்றினார். தமிழ் மொழி நூல்களை மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்த்தார்.

ஜி. யு. போப் (G. U. Pope) கனடாவில் பிறந்து, கிறித்தவ சமயப் பணியாற்ற தமிழகம் வந்தவர். தன்னை ஒரு “தமிழ் மாணவன்” என்றே பிரகடனப்படுத்திக் கொண்டார். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்தார். தமிழ் மொழியைக் கற்கும் வெளிநாட்டவர்களுக்காகப் பல தமிழ் இலக்கணப் பாடப்புத்தகங்களை எழுதினார்.
இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) அயர்லாந்து நாட்டில் பிறந்து, நெல்லை மாவட்டம் இடையன்குடியில் கிறித்தவ சமயப் பணி செய்தவர். 1856-இல் கால்டுவெல் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூல், தமிழ் ஒரு தனித்துவமான, சுதந்திரமான மொழி என்பதை உலகிற்கு நிரூபித்தது. தமிழை உயர்தனிச்செம்மொழி என நிலைநிறுத்த வித்திட்டவர்களில் கால்டுவெல் முதன்மையானவர்.
சீகன்பால்கு (Bartholomäus Ziegenbalg) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். தரங்கம்பாடியில் கிறித்தவ சமயப் பணியாற்றினார். தமிழகத்தில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி, தமிழில் புத்தகங்களை அச்சிட்ட அச்சுக்கலையின் முன்னோடி அவர். விவிலியத்தின் ‘புதிய ஏற்பாடு’ பகுதியை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார்.
இவர்களைப் போல தமிழ்ப்பணி செய்தவர்கள் பலர். இராபர்ட் டி நொபிலி, ஹென்றி ஹென்றிக்கேஸ், சீசியசு டேனியல் என பலர் தங்களின் கிறித்தவ மதப் பரப்குரைகளைத் தாண்டி, தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் உணர்ந்து, அதன் உரைநடை, அச்சுக்கலை, அகராதியியல் மற்றும் இலக்கண வளர்ச்சிக்கு பங்களித்தனர்.
மாறாக, தாய்மொழியில் பேச இயலாத தனது குறைக்கு மதத்தை துணைக்கு அழைத்து, அதன் பின்னால் மறைவது எவருக்கும் அழகல்ல. அது ஏற்கத்தக்க வாதமும் அல்ல. அதுவொரு திசைதிருப்பல்.
கிறித்தவ மூல தத்துவ, இறையியல் நூல்கள் லத்தீன் மொழியில் உள்ளன. லத்தீனின் பேசியிருந்தால் கிறித்தவம் கற்றுத்தந்த மொழியென்று சொல்லியிருக்கலாம். ஆங்கிலம் காலனியாதிக்கம் வழி வந்த மொழி என்பது பொருந்தும்.

Leave a Reply
You must be logged in to post a comment.