யாழ் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட வெசாக் அலங்காரம்!
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் –
(சில தமிழ் யூடியூபர்கள் தேடித் தேடி வெசாக் கொண்டாட்டங்களையும் அலங்காரங்களையும் காட்சிப்படுத்தினார்கள். அரசுத் தலைவர் அனுர வடக்கில் எங்கே சென்றாலும் அங்கே கமெராவைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் சில யூடியூபர்கள் வெசாக் கொண்டாட்டங்களில் மிகவும் ஆர்வமாகவும் குதூகலமாகவும் கலந்துகொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
வரிசையில் நிற்காமல் வரிசையை முறித்துக்கொண்டு போய் சிற்றுண்டிகளை எடுத்துச் சாப்பிட்டார்கள். கிழக்கில் சிலர் தானம் செய்யும் பொலிஸ்காரர்களைச் சுற்றிச் சுற்றிப் படம் எடுத்து பேட்டி கண்டார்கள்.
எனினும் அது பெருமளவுக்கு ஒரு படை மயப்படுத்தப்பட்ட மதக் கொண்டாட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆரியகுளம் சந்தியில் நடந்த நிகழ்வில் ஆளுநர் கலந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தூதுவரும் கலந்துகொண்டார். ஏனைய மதப் பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்.
அவர்களுக்கிடையில் சீருடை அணிந்திருந்த தூய வெள்ளை உடையிலான படை அதிகாரிகள் அதிகமாகக் காணப்பட்டார்கள். அது ஒரு படை மயப்படுத்தப்பட்ட நிகழ்வு. மக்கள் மயப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல.)
அநுராதபுரம், அட்டமஸ்தானாதிபதியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பரவலாக கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வரும் ஒரு சூழலில், இம்முறை வெசாக் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் பகுதிகளில் வெசாக் கொண்டாட்டங்கள் பெருமெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
யாழ் நகரப் பகுதியில் ஆரியகுளம் சந்தி தொடக்கம் பொலிஸ் நிலைய வளாகம் வரையிலுமான பகுதி கிட்டத்தட்ட வெசாக் வலயமாகவே காணப்பட்டது.
அன்றைய நாள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருந்தேன். வழி நெடுக வெசாக் தோரணங்கள், அலங்காரங்கள், வெசாக் கூடுகள் எனக் காணக்கூடியதாக இருந்தது. நாவற்குழி சந்தியில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு குடிபானம் பரிமாறப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்னே ஒரு பொலிஸ்காரர் வாகனத்தை மறித்தார். எமது வாகனத்தின் சாரதி வாகன அனுமதி பத்திரங்களை வெளியே எடுத்தார்.
பொலிஸ்காரர் சொன்னார்: “இல்லை, அங்கே ஐஸ்கிரீம் இருக்கிறது. குடித்து விட்டுப் போங்கள்” என்று.
கண்டி வீதி நீளத்துக்கும் ஆங்காங்கே வெசாக் அலங்காரங்களைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆனால் வடக்கு கிழக்கில் வெசாக் கொண்டாட்டங்களைத் தொகுத்துப் பார்த்தால் பெரும்போக்காகத் தெரிவது என்னவென்றால், அது ஒரு படை மயப்படுத்தப்பட்ட அல்லது பொலிஸ் மயப்படுத்தப்பட்ட விசாக் கொண்டாட்டம்தான். அது மக்கள் மயப்பட்டது அல்ல. பெரும்பாலான படை முகாம்களின் முகப்பில் வெசாக் கூடுகள் தொங்கின. அலங்காரங்கள் காணப்பட்டன. யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தி, பொலிஸ் நிலைய வளாகம் போன்றவற்றில் படைத்தரப்பும் காவல்துறையினரும் அலங்காரங்களைச் செய்திருந்தார்கள்.
தமிழ் மக்கள் அங்கே பார்வையாளர்களாகத்தான் பங்குபற்றினார்கள். பார்வையாளர்களாக வந்த மக்களுக்கு தானம் செய்யப்பட்டது. உணவு, சிற்றுண்டி, குளிர்பானம் போன்றவை வழங்கப்பட்டன.
சில தமிழ் யூடியூபர்கள் தேடித் தேடி வெசாக் கொண்டாட்டங்களையும் அலங்காரங்களையும் காட்சிப்படுத்தினார்கள். அரசுத் தலைவர் அனுர வடக்கில் எங்கே சென்றாலும் அங்கே கமெராவைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் சில யூடியூபர்கள் வெசாக் கொண்டாட்டங்களில் மிகவும் ஆர்வமாகவும் குதூகலமாகவும் கலந்துகொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
வரிசையில் நிற்காமல் வரிசையை முறித்துக்கொண்டு போய் சிற்றுண்டிகளை எடுத்துச் சாப்பிட்டார்கள். கிழக்கில் சிலர் தானம் செய்யும் பொலிஸ்காரர்களைச் சுற்றிச் சுற்றிப் படம் எடுத்து பேட்டி கண்டார்கள்.
எனினும் அது பெருமளவுக்கு ஒரு படை மயப்படுத்தப்பட்ட மதக் கொண்டாட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆரியகுளம் சந்தியில் நடந்த நிகழ்வில் ஆளுநர் கலந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தூதுவரும் கலந்துகொண்டார். ஏனைய மதப் பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்.
அவர்களுக்கிடையில் சீருடை அணிந்திருந்த வெள்ளை உடையிலான படை அதிகாரிகள் அதிகமாகக் காணப்பட்டார்கள். அது ஒரு படை மயப்படுத்தப்பட்ட நிகழ்வு. மக்கள் மயப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல.
இது ஊடகங்களில், குறிப்பாக சமூக ஊடக வலைத்தளங்களில், இன நல்லிணக்கத்தைச் சிதைக்கும் ஒரு செயலாக வர்ணிக்கப்படுகிறது.
யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் பீடங்களில் ஒன்று முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடமாகும். அதுபோலவே கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவியல் நகரில் உள்ள தொழில்நுட்பக் கற்கைகளுக்கான பீடமும் அதிகளவு சிங்கள மாணவர்களைக் கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கடந்த 17 ஆண்டுகளாகவும் படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் உடனடியாக வந்த ஆண்டுகளில், யாழ் பல்கலைக்கழகத்திற்குள் வெசாக் அலங்காரங்களைக் கட்டுவதில் படைத்தரப்பினரின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.
உலகில் படைத்துறை சார்ந்த பல்கலைக்கழகங்களில் படைத்தரப்பின் பிரசன்னம் இருப்பது இயல்பானது. ஆனால் ஒரு சிவில் பல்கலைக்கழகத்திற்குள், ஒரு மரபுரிமைப் பல்கலைக்கழகத்திற்குள், இவ்வாறு வெசாக் கொண்டாட்டங்களை ஒழுங்குபடுத்தும், அலங்கரிக்கும் வேலைகளைப் படைத்தரப்பு மேற்கொண்டது யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
அது மட்டுமல்ல, 2009க்கு பின்னர் உடனடியாக வந்த ஆண்டுகளில், பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் ஒரு பகுதி மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் படை முகாம்களில் இருந்து மதிய உணவுப் பார்சல்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அவதானிக்கப்பட்டது.
மத்தியான நேரங்களில் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு முன்பாக ஒரு முச்சக்கர வண்டி அவ்வாறு உணவுப் பார்சல்களை விநியோகிப்பது அவதானிக்கப்பட்டது.
இவ்வாறு படைத்தரப்பு மாணவர்களுக்கு உணவுப் பார்சல்களை விநியோகிப்பதும், வெசாக் பண்டிகை அலங்கார வேலைகளைச் செய்வதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றன.
பல்கலைக்கழகத்தில் மட்டும்தானா அல்லது வேறு பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற்றதா?
2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் இந்த நடைமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது படைத்தரப்பு பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிப்பதில்லை. மாணவர்களுக்கு உணவுப் பார்சல் கொடுப்பதும் இல்லை. ஆனால் கடந்த 17 ஆண்டுகளிலும் பல்கலைக்கழகம் படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு வலிமையாகி வருகிறது.
இவ்வாறு சிங்கள மாணவர்களை அதிகமாகக் கொண்ட ஒரு பீடத்தில் கட்டப்பட்ட வெசாக் அலங்காரங்களை யாரோ சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக சிங்கள மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருக்கிறார்கள்.
சிங்கள மாணவர்களின் வழிபாட்டு உரிமையை ஆதரித்து முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தின் தமிழ் மாணவர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இன நல்லிணக்கத்தைச் சிதைக்கும் ஒரு செயல் இது என்ற அடிப்படையில் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் எழுந்திருக்கும் விமர்சனங்களுக்கு பதில் கூறும் விதமாக அந்த அறிக்கை அமைந்திருக்கிறது.
யாழ் பல்கலைக்கழகத்தின் கடந்த 17 ஆண்டுகால அனுபவங்களை மனதில் வைத்து, இன முரண்பாடுகளைப் பிரதிபலிக்காமல் இன நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
தமிழ் மக்கள் என்றைக்குமே மதப் பன்மைத்துவத்திற்கு எதிரானவர்கள் அல்ல. தேசியவாதம் என்பது ஜனநாயகத்தை உள்ளடக்கமாகக் கொண்டது என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறுவார்கள். தேசியவாதத்தின் அடிச்சட்டம் ஜனநாயகம்தான்.
இந்த அடிப்படையில் பார்த்தால், தேசியவாதம் எனப்படுவது ஒரு சமூகத்தின் பன்மைத்துவங்களின் மீது கட்டி எழுப்பப்படுவதுதான். தமிழ் மக்கள் என்றைக்குமே மதப் பன்மைத்துவத்திற்கு எதிராக இருந்ததில்லை.
தமிழ் மக்களின் நவீன அரசியல் என்பது மதப் பன்மைத்துவங்களால் வார்த்தெடுக்கப்பட்டதுதான்.
அதே சமயம், தமிழ் மக்கள் எப்பொழுதும் மத, இன, மொழி மேலாண்மைக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். இலங்கைத் தீவின் பிரச்சினையே ஒரு மதத்தின், ஒரு மொழியின், ஓர் இனத்தின் மேலாண்மை அரசியல்தான். அந்த மேலாண்மையை உயர்கல்வி நிறுவனங்களுக்குள்ளும் படிப்படியாக ஸ்தாபிக்க முற்படுவது இன ஒடுக்குமுறையின் ஒரு பகுதிதான்.
இந்த விளக்கத்தோடுதான் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள சிங்கள மாணவர்களுடைய மத உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் என்றைக்குமே பௌத்த மதத்தைப் புறத்தியாகப் பார்த்தது இல்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினை என்னவென்றால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியது போல், “புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக நகர்த்தும்” சிங்கள பௌத்த அரசியல்தான்.
எனவே தமிழ் மக்கள் யாழ் பல்கலைக்கழகம் திட்டமிட்டு படிப்படியாக சிங்கள பௌத்த மயப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. தையிட்டி விகாரையை அதனால்தான் தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள்.
அதே சமயம் தமிழ் பகுதிகளில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வசிக்கின்ற சிங்கள மக்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளைப் பேணுவதையும், பின்பற்றுவதையும், கொண்டாடுவதையும் எதிர்க்கவும் இல்லை; எதிர்க்கவும் முடியாது.
ஏனென்றால் தேசியவாதம் எனப்படுவது சமயப் பன்மைத்துவத்தின் மீதுதான் கட்டி எழுப்பப்படுவதுதான்.

Leave a Reply
You must be logged in to post a comment.