வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

 முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி June 28, 2009  தமிழ் இலக்கியம்முருகன்வேதம்சிவன்தமிழ்சங்க இலக்கியம்தொல்காப்பியம்வேள்விமூவேந்தர்கள்

வேதநெறி

“வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை விளங்கவும்” திருஞானசம்பந்தர் புனிதவாய் மலர்ந்து அழுததாகத் தெய்வச்சேக்கிழார் கூறுகின்றார்.

வேதநெறி என்பது மலைமேல் உற்பத்தியாகிப் பெருகிவரும் நதிபோன்றது. அந்த நதி ஓடி வரும் இடங்களில் மக்களும் விலங்குகளும் பயன்கொள்ளும் பலதுறைகளும் உண்டு. அந்தத் துறைகள் அவ்வப்பகுதி மக்களுக்கும் விலங்குகளுக்கும் பயன்பட்டாலும் அவை அனைத்தும் பாதுகாப்பனவை என்றோ தூய்மையானவை என்றோ கூறமுடியாது. சிலதுறைகளில் கால் கழுவலாம். சிலவற்றில் குளிக்கலாம். சில விலங்குகளுக்கே பயன்படும். அதுபோல வேதநெறியில் பல தத்துவங்களும் சமயநெறிகளூம் கிளைத்தெழுந்தன. மக்கள் அனைவரும் அறிவிலும் ஆன்மநெறியிலும் ஒத்த அளவு பக்குவமுடையவரல்லர். இவர்களுடைய பக்குவத்திற்கேற்பவும் வாழ்க்கை நிலைக்கேற்பவும் ஆன்றோர்கள் வேதத்தின் அடிப்படையில் ஒழுகலாறுகளை அமைத்து மன்பதையை மேம்படுத்தினர்.

இந்திய நாட்டில் தோன்றிய தத்துவ தரிசனங்களும் சமய நெறிகளும் வேதத்தை முன் நிறுத்தியே தோன்றின என்பது ஆன்றோர்கள் கருத்து. சார்வாகம் என்னும் இந்திய உலோகாயத மதமும் வேதத்தை முன்னிறுத்தி அதை மறுக்க எழுந்த மதமே. கடவுட் கொள்கையை மறுத்து கன்மக்கொள்கையை ஏற்றுக்கொண்ட நாத்திகமான மீமாம்சையும் வேதமதமே. வேதம் கன்மகாண்டத்தில் கூறிய வேள்வியையும் உயிர்க்கொலையையும் மறுத்து எழுந்த கலகக்கொள்கைகள் சமணமும் பவுத்தமும். ஆக, பாரத நாட்டில் தோன்றிய எல்லாத் தத்துவ ஞானங்களும் வேதத்தை உடன்பட்டோ வேதத்தை மறுத்தோ தோன்றின என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தில் வேதத்தின் செல்வாக்கு

தென்நாட்டில் தோன்றிய சைவசித்தாந்தமும் வேதத்தைத் தழுவிக் கொண்ட சமயமே. எனவே வேதமென்னும் நதிக்கு அமைந்த நீர்த்துறைகளில் பாதுகாப்பானதும் தூய்மையானதும் மக்களை எல்லாவகையானும் மேம்படுத்துமான துறை, சைவத்துறை என்பது சேக்கிழார் கருத்து எனலாம்.

மெய்ப்பொருள் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் தோற்றுவித்த நூல் வேதம் என்பதால் பிற்காலத்தில் தோன்றிய தத்துவச் சிந்தனைகளை அறிஞர்கள் அவ்வேதத்தோடு தொடர்புபடுத்தியே கண்டனர். நம் முன்னோர் வேதோபநிடதங்களின்பால் சிறப்புவகையால் பற்றுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவை மனோலயத்தை வலியுறுத்துவனவாகவும் சுவானுபூதியை எடுத்தியம்புவனவாகவும் உள்ளமையாலாகும். நம் பாரதநாட்டு ஞானியர், எக்கொள்கையராயினும், தம் மெய்ப்பொருளாராய்ச்சிகளுக்கு வேதம் முதலிய வித்தைகள் பதினெட்டுள் வேதத்தின் ஞானகாண்டமாகிய நூற்றெட்டு உபநிடதங்கள் முதலியவற்றையே தலைமைப் பிரமாணங்களாகக் கொண்டனர். தென்னாட்டுச் சைவ சித்தாந்தமும் இதற்கு விலக்கன்று.

வேதவொலி கேட்டுத் துயிலெழும் மதுரை

தமிழகத்தில் வேதத்தின் செல்வாக்கு சங்க காலத்திலேயே இருந்தது. பாண்டியரின் தலைநகராகிய மதுரையில் மக்கள் நான்முகனுடைய நாவினுட் பிறந்த நான்மறை ஓதும் ஓசை கேட்டுத் துயில் எழுவார்களேயன்றி, சேரசோழர்களின் தலைநகர்களாகிய கோழி (உறையூர்) ,வஞ்சி வாழ் மக்களைப் போலக் கோழி கூவத் துயில் உணர்வதில்லையாம்.

“பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப
ஏம வின்துயி லெழுத லல்லதை
வாழிய வஞ்சியுங் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே” (பரிபாடல் – திரட்டு.7)

மதுரைக் காஞ்சியும் “ ஓதலந்தணர் வேதம் பாட” (31) என்றது.

தொல்காப்பியமும் மறைநூலும்

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கி.மு மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றியது என்பதும், தொல்காப்பியர், தலைச்சங்க காலத்தவரேயல்லால் இடைச்சங்ககாலத்தவரல்லர் என்பதும் மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் கருத்து. பெரும்பாலான அறிஞர்களால் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனக் கருதப்படுகின்றது. தொல்காப்பியர் வேதத்தை அறிந்திருந்தார் என்பதற்குப் பல அகச்சான்றுகள் உள. தொல்காப்பியரின் ஒரு சாலை மாணக்கராகிய பனம்பாரனார் தாம் தொல்காப்பியத்திற்கு எழுதிய சிறப்புப்பாயிரத்தில், இந்நூல் ‘அறங்கரை நாவின் நான்மறை முற்றிய’ அதங்கோட்டாசானுக்கு’அரில்தப’ எடுத்துக் காட்டினார் என்று கூறுகின்றது. “ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றி” என்றதால் தொல்காப்பியர் ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரணத்தையும் நன்கு அறிந்திருந்தாரெனத் தெரிகின்றது.

எழுத்துக்களின் பிறப்பையும் அவற்றின் அளபினையும் கூறிவந்த தொல்காப்பியர், அவற்றுக்கு,
“அகத்தெழு வளியிசை —- —- அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே” என்று பிறன்கோட் கூறலாகக் கூறினார். (தொல். எழுத்து. பிறப்பியல் 102)

வடசொல்லும் தமிழில் செய்யுளீட்டச் சொல்லாகும் என்று உடன்பட்ட தொல்காப்பியர், வடசொற்கள் தமிழ்ச் செய்யுளில் எவ்வாறு பயிலப்பெறும் என இலக்கணமும் வகுத்தார். (தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்ச சூத்திரம் 5)

தொல்காப்பியர், வேதவழக்கினையுடையாரிடத்து நடக்கும் திருமணவகை எட்டு என்றும் அவற்றுள் தமிழருக்குரிய களவு மணம் வேதவழக்குட்பட்ட காந்தருவம் போன்றது; ஆனால் காந்தருவம் அன்று என்றார். (மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள், துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே. தொல். – பொருள் – களவியல்1)

களவுத் திருமணத்தில் பொய்யும் வழுவும் புகுந்த பின்னர், வேதவழக்காகிய ‘பிரசாபத்தி’யத்தை யொட்டிக் கரணமொடு கூடிய கற்புத் திருமணத்தை ‘ஐயர்’ யாத்தனர் (கற் 4) ‘ஐயர்’ என்று தொல்காப்பியர் கூறிய பெயருக்கு முனைவர் என்றும் இருடிகள் என்றும் தலைவியின் தமையன்மார் என்றும் பெரியோர் என்றும் பிற்காலத்தவர் பொருள் கூறினர்.

தொல்காப்பியம் தமிழ்நாட்டை உரிப்பொருளுக் கேற்ற வகையில்,

மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்”

எனப் பகுத்தது.

மாயோனையும் சேயோனையும் தமிழ் நாட்டுத் தெய்வம் எனக் கொண்டாலும் இந்திரனும் வருணனும் வேதக் கடவுளர் என்பது தெளிவு. மாயோனும் தமிழ்நாட்டுத் தெய்வம் என்பதைவிட புராணக் கடவுள் என்பதுதான் ஏற்புடையது. வேதக் கடவுளரும் புராணக் கடவுளரும் ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககாலத்திலேயே தமிழ்ப்பண்பாட்டில் வேற்றுமையின்றிக் கலந்துவிட்ட நிலைமையினை இந்நூற்பா எடுத்துக் காட்டுகின்றது.

திருமுருகாற்றுப்படையில் வேத வழக்கு

பத்துப்பாட்டுத் தொகுதியின் கடவுள்வாழ்த்துப் பாடல்போல அமைந்திருக்கும் திருமுருகாற்றுப்படை தமிழர் சமயப் பண்பாடு வேதநெறியுடன் கலந்துவிட்ட நிலைமையையும், அக்கலப்பினால் தன் தனித்தனித்தன்மையை இழந்து விடாத நிலயையும் காண்கிறோம். (சிறுதெய்வவழிபாடு வேதநெறிக்கு மாறும் இயக்கநெறி பின்னர் ஆராயப்படுகின்றது)

வேதத்தில் கூறப்படாத கடவுளரான முருகனும் கொற்றவையும் முறையே குறிஞ்சி, பாலை ஆகிய திணைநிலைத் தெய்வங்கள் எனும் ‘கருப்பொருள்’ நிலையினின்றும் வேதங்கூறும் பெருந்தெய்வநிலைக்கு உயர்ந்து இந்தியப் பண்பாட்டில் கலந்துவிட்டமைத் திருமுருகாற்றுப்படை நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

சிறுதினையரிசியைப் பூக்களுடன்கலந்து ஆட்டிக்கிடாயை அறுத்து கோழிக்கொடிநிறுத்தி ஊர்தொறும் எடுத்துக் கொண்ட திருவிழாக்களிலும், வேலன் வெறியாடும் களனிலும் ‘உருவப் பல்பூத் தூஉய் வெருவரக், குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் , முருகியல் நிறுத்து முரணின ருட்க முருகாற்றுப் படுத்த’ களங்களிலும் முருகன் குறிஞ்சிக் கிழவனாக இருந்த , (திருமுரு. பழமுதிர்ச்சோலை) அந்தமுருகனையே வேதங்கூறிய பிரமசரிய நெறியில் நாற்பத்தெட்டாண்டு இளமையைக் கழித்த அந்தணர்கள், எப்பொழுதும் அறன்நவில்கின்ற கொள்கையர், முத்தீச் செல்வத்தர், முப்புரிநுண்ஞாண் இருபிறப்பாளர், தாங்கள் வழிபடும் காலத்தை அறிந்து, ஈர ஆடையை அணிந்து, அருமறை ஆறெழுத்து மந்திரத்தை நாவியல் மருங்கில் நவிலப்பாடி, நறுமலர் எடுத்து அருச்சித்து, துதிக்கின்றனர்.(திருவேரகம்)

“மடவை மன்ற முருக’ எனச்சங்க இலக்கியத் தோழியால் எள்ளப்படும் நிலைக்கு மாறாக , முருகன், திருச்சீரலைவாயிலில், உலக இயக்கத்திற்குக் காரணனனாகக் கூறப்படுகிறான். தமிழ் முருகன் “மந்திர விதியின் மரபுளி வழாமல், அந்தணர் செய்யும் வேள்வியைக் காக்கின்றான். இந்திரன் , இயமன், வருணன், குபேரன், ஆகியோர் வேதத்தலைவர்கள் முருகனின் செவ்வி பெறக் காத்ததிருப்பதாகக் கூறப்பெறுகின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் தங்கள் தொழில் நிலைபெறக் குமரனைத் தொழுது நிற்கின்றனர்.

நூறு வேள்வி செய்து ஆயிரங்கண்ணுடைய இந்திரனானது, பிரமன் திருமாலின் உந்தியிற் பிறந்தது,. பன்னிரு ஆதித்தர், பதினொரு உருத்திரர், எட்டு வசுக்கள், மருத்துவர்(அசுவினி) இருவர், பதினெண்கணத்தோர், கந்தருவர், விண்செலல் மரபின் ஐயர், இருடிகள் எழுவர், சுரர், அசுரர் இவை போன்ற பல செய்திகளை வேத வழக்கொடுபட்டுத் திருமுருகாற்றுப்படை பேசுகின்றது.

தமிழ் முருகனை, உயர்ந்த இமயமலைச் சாரலி லிருக்கின்ற கருங்குவளைகளையுடைய பசிய சரவணப் பொய்கையில் தோன்றியதாகக் கூறுவதும் அவனை அக்கினிதேவன் தன் கையிலேற்றதாகவும், கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டியதாகவும் ஆறு வடிவங்கள் அம்மை யெடுக்க ஒன்றாய் இசைந்ததாகவும் திருமுருகாற்றுப்படை பேசுகின்றது.

முருகனை, கொற்றவையின் புதல்வனாகவும் பழையோளாகிய காடுகிழாளின் குமாரனாகவும் கூறிய இந்நூல், இமயமலையரசனுக்கு மகளாகிய உமாதேவியாருடைய குமாரனாகவும் கூறுகிறது. கொற்றவை, பழையோள் ஆகிய தொல்குடிப் பெண் தெய்வங்கள் (autochothonous goddesses), வைதிகக் கடவுளாகிய ‘மால்வரை மலைமகளு’டன் இணையப் பெறுகின்றனர். அந்த இணைப்பைச் செய்பவன் முருகன். இது தொல்பெரும் தமிழ் மரபும் வேத நெறியும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தம்முட் கலந்து இணங்கியமைக்குத் தக்க சான்றாகும்.

பரிபாடலில் வேத வழக்கு

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் தமிழோடு கலந்து விட்ட வேதப் பண்பாட்டைக் காட்டும் செய்திகள் பலவுள்ள நூலாகும். பெரும்பாலும் முருகனையும் திருமாலையும் சிவனையும் துதிக்கும் பாடல்களைக் கொண்டுள்ள இந்தநூலில் திருமாலின் வாகனமாகிய கருடன் , திருமகள், சிவபெருமானின் வாகனமாகிய காளை பற்றிய வடமொழிப் புராணக் கதைகள் பேசப்படுகின்றன.
முருகனின் பிறப்பைப் பற்றி ஒரு பரிபாடல் கூறுகின்றது. அந்தக் கதை, முருகனை முழுமுதற் கடவுளாகப் போற்றும் தமிழ் நெஞ்சங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வடமொழி மரபையொட்டிய அக்கதையினை மறுத்து வேறோர் விதமாக முருகனின் அவதாரத்தைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம், குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. இதனால் அகில இந்திய பண்பாட்டு மரபினோடு இணைகின்றபோது, தமிழ்ச் சமுதாயம் தொன்றுதொட்டுப் போற்றி வந்த தம் விழுமியங்களுக்கு ஏற்புடையனவற்றையே தழுவிக் கொண்டது என அறியலாம். அத்தோடு இக்கலப்பு புறத்திருந்து வலுவந்தமாகத் திணிக்கப்பட்டதன்று, ஏதோ ஒருபயன் கருதி தமிழ்ச்சமுதாயம் விரும்பி ஏற்றுக் கொண்டதே எனவும் அறியலாம்.

புறநானூறில் வேத வழக்கு

பால் புளிப்பதும் பகல் இருளுவதும் இயற்கையல்ல. அவ்வாறே எக்காலத்திலும் நான்கு வேதத்தினது ஒழுக்கம் வேறுபடுவதில்லை. (புறம் 2) வேதம் நான்கென்றும் அதனைக் கற்றமுனிவர் நான்மறை முனிவரென்றும் போற்றப்பட்டனர். (புறம்6) வேதத்தில் கூறப்படும் வேள்வி நெருப்பு முத்தீ எனப்பட்டது. (புறம்2). வேதத்தில் வளர்க்கப்பட்ட முத்தீ அரசர்களூக்கு உவமையாகவும் கூறப்பட்டது. (புறம் 2, 367) தரும சாத்திரங்களும் வேதத்தினொடு சங்கத்தமிழர்களால் அறியப்பட்டிருந்தன.

“நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி” (புறம் 15)

எனும் புறப்பாடலில், சங்ககால மன்னர், எய்தற்கரிய சமிதையும் பொரிமுதலாகிய கண்ணுறையோடு மிக்க நெய் ஆவுதியாகச் சொரிந்து பலமாட்சிமைப்பட்ட யாகங்களை முடித்தனர் என்றும் அத்தகைய வேள்விச் சாலைகள் பல இருந்தன என்றும் ஒவ்வொரு வேள்வியின் முடிவிலும் வேள்வி முடித்தற்கு அடையாளமாகத் தூண் நட்டனர் என்றும் அறியப்படுகின்றது. (புறம் 15)

புறநானூறு 166ஆம் செய்யுள் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், பார்ப்பனவாகை என்னும் துறையில் பாடியாதும் இப்பாடல் சங்ககாலத்தில் வேதமும் வேள்வியும் பெற்றிருந்த ஏற்றத்தை நன்கு விளக்குகின்றது. பூஞ்சாற்றூர் சோழநாட்டில் முடிகொண்டானாற்றங்கரையில் உள்ளதோரூர். கவுணியன் என்றால் கெளண்டின்னிய கோத்திரத்தில் பிறந்தவன் என்பது பொருள். அது பார்ப்பனர்களின் கோத்திரங்களில் ஒன்று என்பதும், ஏழாம் நூற்றாண்டில், ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க’ அவதாரம் செய்த திருஞானசம்பந்தர் தோன்றியதும் கெளணிய கோத்திரம் என்பதறியத் தக்கது. இப்பாடலால் சிறப்பிக்கப்பட்ட பார்ப்பானின் பெயர் விண்ணந்தாயன். இது வாமனனாக வந்து, மாபலியிடம் மூவடி மண் யாசித்து விண்ணும் மண்ணும் அளந்த திருமாலாகிய திரிவிக்கிரமனின் பெயர்.

பார்ப்பான் என்பது மரியாதைக்குரிய பெயராகவே வழங்கியது. அது அகக்கண்ணில் பிரம்மத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் வேதியரொழுக்கத்தைச் சுட்டியதொரு பெயர். இப்பார்ப்பான் ஆற்றிய வேள்வியைப் பொருளறிந்து பாராட்டிய புலவர் ஆவூர் மூலங்கிழார் என்னும் வேளாளர். கிழார் எனும் பெயர் நிலவுரிமையைச் சுட்டும் கிழமை என்னும் சொல்லிற் பிறந்ததாகும். பார்ப்பானின் வேதக் கல்வியையும் வேதவேள்வியையும் அறிந்து மதிப்பிடும் திறமை பிராமணரல்லாத வேளாளராகிய புலவர்க்கு இருந்துளது. இதனால் சங்ககாலத்தில் வேதக்கல்வி பற்றிய அறிவு பார்ப்பனரல்லாத சமுதாயத்திலும் இருந்துள்ளதென அறியலாம்.

இனி, இந்தப் பாடலின் சிறப்பை நோக்குவாம்.

இப்பாடலில் சிவன் ‘நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன்’ எனப்பட்டான். சிவனின் சடை ஞானத்தைக் குறிக்கும். ஆராயப்பட்ட நீண்டசடை என்றது வேதக் கல்விக்கு முதல்வன் சிவன் என்பதாம். ‘ஈஸ்வர சர்வ வித்யானாம்’ என்பது வேதம்.சிவன் , ‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளா’தலால் முதுமுதல்வன் எனப்பட்டான். வேதம் அவன் வாயை விட்டு நீங்காது. அப்பெரியோனாலும் எக்காலமும் அவ்வேதம் அத்தியயனம் பண்ணப்படும். வேதம் அறம் ஒன்றையே மேவியது. நான்கு கூற்றையுடையது. ஆறங்கத்தால் உணரப்படுவது. பழைய நூலாகிய அவ்வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைச் செய்துகொண்ட (புத்தர், சமணர் முதலாயின ) புறசமயத்தோரது மேம்பாட்டைச் சாய்க்க வேண்டி ‘மெய்போன்ற பொய்யினை’ அறிந்து, அப்பொய்மையை மெய்யென்று கருதாமல், உண்மைப்பொருளை அவர்கள் அறிவு கொளும்படிச் செய்தவன்; இருபத்தொரு வேள்வித்துறையும் குறைவின்றி செய்துமுடித்த புகழும் தலைமையும் சான்ற அறிவுடையோர் மரபில் வந்தவன் இப்பாடலின் தலைவனாகிய பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் விண்ணந்தாயன்.

வேள்வி செய்யும்போது, காட்டுநிலத்தில் வாழும் கலைமானின் தோல் மார்பில் உள்ள பூணூலின்மீது சிறந்து தோன்றுமாறு போர்த்துக் கொள்வர்.. அரிய கற்பினையும் , அறநூல்கள் புகழ்ந்த ‘சாலகம்’ சூடி, மனமொத்த துணையராகிய பத்தினிமார் தத்தமக்குப் பொருந்திய ஏவற்றொழிலைக் குறிப்பறிந்து செய்வர்.(சாலகம்- ஜாலகம். இது யாகபத்தினிகள் அணியும் அணிவிசேடம்). எழுவகைக் காட்டுப்பசுக்கள், எழுவகை நாட்டுப்பசுக்கள் ஆகியவற்றினின்றும் பெற்ற நறுநெய்யினை நீர் நாணும்படியாகச் சொரிந்தும் எண்ணற்ற பலவேள்விகளை வேட்டும் மண்போதாமற் புகழைப் பரப்புவர். வேள்வி முடிவில் அதிதிபூசையாகிய விருந்தோம்பல் நடைபெறும்.

இவ்வாறு விண்ணந்தாயன் ஆற்றுகின்ற வேள்வியை, ‘ யாங்கள் எந்நாளும் காண்பேமாக’ என்று வாழ்த்துகின்றார். இவ்வாறு வேள்விசெய்ததால் மழைவளம் பெற்றுக் காவிரியில் நீர் பெருகித் தாங்கள் வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை, ஆவூர் மூலங்கிழார்,

“விருந்துற்றநின் திருந்தேந்துநிலை
என்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்
உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்
செல்வலத்தை யானே”

என்று பாராட்டியதோடு, பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயனை
“மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீய ரத்தைநீ நிலமிசை யானே” என வாழ்த்தினார்.

இவ்வேள்வி உயிர்க்கொலை யின்றி நெய்யாவுதி செய்து சிவனை முன்னிறுத்திச் செய்த சிவவேள்வியாகும்.

வேதங் கற்ற பார்ப்பனர்களாகிய அந்தணர்கள் சங்ககால சமுதாயத்தில் நன்கு மதிக்கப்பட்டிருந்தனர். ஓரரசனைப் புலவர், “இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த, நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே” (புறம்6:19-20) என வாழ்த்துகின்றார். மற்றொருவர், “பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே” (பதிற்று 63:1) எனப் பாராட்டுகின்றார்.

பார்ப்பனர் சிறிதும் தீங்கு செய்யத்தகாத சாதியர் எனக் கருதப்பட்டனர். ஆதலால் “ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்’ என ஆக்களோடு ஒருங்கு வைத்து எண்ணப்பட்டனர். (புறம் (:1)

பசுவதை, பார்ப்பனக் கொலை, கருச்சிதைவு முதலாயின வாக்காற் சொல்லப்படாமையின் “ ஆன்முலையறுத்த அறனிலோர்க்கும், பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்” எனக் கூறப்பட்டது. (புறம் 43:3)

“நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார், என்பாரை யோம்பே னெனின்யா னவனாக வென்றான்” எனச் சமண இலக்கியமாகிய சீவகசிந்தாமணியும் (443) பார்ப்பாரின் உயர்வை வழிமொழிகின்றது.

ஒரு புலவர் ஒரு சோழ இளவரசனை நோக்கி “ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம், பார்ப்பனர் நோவன செய்யலர்” எனக் குடிப்பண்பினை அறிவுறுத்தினார்.

பார்ப்பனர்கள் இவ்வாறு போற்றப்பட்டமைக்குக் காரணம், வேதத்திற்கு உபகாரப்படும் சாத்திரங்களான வியாகரணம், நிருத்தம், சோதிடம் முதலிய கலைகளில் அவர்கள் பெற்றிருந்த அறிவு, இந்திரியங்களின் வழியோடாது உள்ளடங்கிய தூய வாழ்வு, கடவுளரும் விழைதக ஆவுதி யளித்தல் முதலிய பண்புகளை அவர்கள் பெற்றிருந்தமையாலாகும்.* இத்தகைய “ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்ற மாக, மன்ன ரேவல் செய்யச்” சங்ககால மன்னர்கள் வேள்வி முடித்தனர். (புறநா 26:12-5).

*“சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி யவைதுணை யாக
எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபிற் கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி” பதிற்று 3;1-7)

இத்தகைய வேள்வியால் மழைவளமேயன்றி வேறுபல அற்புதங்களும் நிகழ்த்தியதைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

அதியமான் என்னும் அரசனின் முன்னோர்,
“அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்”விண்ணுலகத்திலிருந்து இவ்வுலகத்துக்குக் கரும்பைக் கொண்டு வந்தனர். (392:19-21)

பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கெளதமனார் எனும் புலவர் பாடினார் பத்துப்பாட்டு. அரசன் ‘நீர் வேண்டியது கொண்மின்’ என, ‘யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும்’ என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார் எனப் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தின் பதிகம் பதிவுசெய்கின்றது.

இந்த நிகழ்ச்சியை, மதுரைக் காஞ்சியும், “ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து, மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல” (494-95) எனப் பதிவு செதுள்ளது.

இமயமுதல் குமரி வரை சமயப்பண்பாட்டால் ஒருநாடு என்னும் எண்ணம் இருந்தமை, “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்” (புறநா 6:1-2) எனும் வரிகள் உணர்த்துகின்றன. இக்கருத்தே, பிற்காலத்தில் ‘ஆஸேது ஹிமாசல பரியந்தம்’ என வடமொழியில் சங்கற்பம் செய்ய வழி வகுத்தது எனலாம். இமயமும் பொதியமும் சமமாக எண்ணப்பட்டன. இரு மலைகளிலும் அந்தணர்கள் முத்தீ வளர்த்து வழிபாடுகள் நிகழ்த்தினர். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் ஆண்டுப் பயிலுவதால் மான்கூட்டம் அங்குக் கவலையின்றித் துயின்றன.(புறநா 2:21-24)*

*(சிறுதலை நவ்விப் பெருங்கண் மான்கணம்
அந்தி யந்தணர் அருங்கட னிருக்கும்
முத்தீ விளக்கின் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் எனும் புலவர், இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கின்ற நின்புகழாகிய செல்வத்தை இனிது கண்டோம் என்று வாழ்த்தினார். அவர் இமயத்தைக் கூறும்போது, ‘நெருங்கி வளர்ந்துள்ள முள்ளுடை முருங்கை மரங்களின் நீழலில் துஞ்சும் கவரிமான்கள் நரந்தம் புல்லை உண்டுமகிழுவதகக் கனாக் காணும். அருவிகள் பல நிறைந்த, ‘ஆரியர்’ துவன்றிய பேரிசை இமயம்’ என அவர் இமயத்தை வருணிக்கின்றார்.

“கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்” (பதிற்றுப்பத்து 11:21 – 24)

இப்பாடலில் ‘ஆரியர்’ என்றது வடநாட்டவர்களைக் குறித்தன்று. ஆரியரென்றது இமயத்தில் தவம் புரியும் மேலோராகிய முனிவரை. ‘ஆரியராணையானே ,”மயிர்நீப்பின் வாழாக்கவரிமா”(குறள்) என்று சிறப்பிக்கப்பட்ட கவரிமான், முருக்கென்னும் முள்ளுடை மரமும் தன் மயிர்க்கும் வருத்தம் செய்யாமையால், அக்கவிர் செறிந்த சிலம்பின்கண்ணே இனிதாக உறங்குமென்றவாறு’ என்பது பதிற்றுப்பத்தின் பழையவுரை.

“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப், புள்ளுறு புன்கண் தீர்த்தோனாகிய” ‘சிபி’ என்னும் புராண வேந்தனின், வழி வந்தவர் சோழ மரபினர் என்று போற்றப்பட்டனர். (புறநா 37: 5-6), புறநா 39, 43, 46)

மகாபாரதம் , இராமாயணம் ஆகிய இதிகாசங்களைச் சங்கத் தமிழ்ர்கள் அறிந்திருந்தனர், (புறநா2:13-16, 378:18-22, அகநா70:13-16) ஆனிலையுலகம் எனப்படும் ‘கோலோகம்’, கீழ்க்கடல் சகரரால் தோண்டப்பட்டமையின் ‘தொடுகடல்’ எனப்படுதல் (6:7, 2:29) போன்ற செய்திகள் தமிழ் மரபினை அகில இந்தியப்படுத்துகின்றன.

(தொடரும்)

Be the first to comment

Leave a Reply