https://www.virakesari.lk/article/234641 (not sure if I am doing anything illegal)
‘இலங்கை வரலாற்றுப் பின்னணியில் சமஷ்டியைப் பெறுதல்’

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக் களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் ‘இலங்கை வரலாற்றுப் பின்னணியில் சமஷ்டியைப் பெறுதல்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய நினைவுப் பேருரை
வரலாற்றுப் பின்னணி
இலங்கை அந்நியர் ஆட்சிக்குட்படும் வரையில் தமிழர் பிரதேசமானது தனக்கென தனியான ஆட்சியைக் கொண்டதாக இருந்து வந்தது. தமிழ் பிரதேசங்களுக்கு சிங்கள மன்னர்களின் சட்டங்கள் பிரயோகிக்கப்படாது, தனியான தமிழ் மக்களுக்கான சட்டங்கள் இருந்து வந்தன. அந்நியர் ஆட்சியின் போது நிருவாக வசதி கருதி முழு இலங்கையும் ஒன்றாக இணைக்கப்பட்ட போது தமிழ் மக்கள் தமது ஆட்சி இறைமையை இழந்தனர். நாடு சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்கள் தமது இழந்த இறைமையை அதனை இழந்த போது இருந்தவாறாக மீளக் கோரவில்லை. பதிலாக தம்மை ஆளும் உரிமையை சமஷ்டி என்ற ஆட்சி வடிவத்தில் கோரினார்கள்.
ஆனால், ஆட்சிக்கு வந்த தூர நோக்கில்லாத தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தனிச் சிங்களச் சட்டம், பிரஜா உரிமைச் சட்டம், பல்கலைக்கழக அனுமதிக்கான இன ரீதியான தரப்படுத்தல், 1972 இல் குடியரசு அரசியலமைப்பு என்பவைகளைக் கொண்டு வந்து தமிழ் மக்களை நாட்டின் இரண்டாந்தர பிரஜைகளாக்கினார்கள். திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினர் ஆக்கப்பட்டனர். இவைகளுடன் சேர்ந்த தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் கலவரங்களும் தமிழ் மக்களை சமஷ்டி என்பதில் இருந்து பிரிந்து செல்கின்ற தனிநாடு என்ற நிலைக்குக் கொண்டு வந்தது.
இது ஒரு ஆயுதப் போராட்டமாக 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இந்நிலையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை என்பது சர்வதேச மயப்பட்டதுடன் இந்தியாவின் நேரடி தலையீட்டிற்கும் வழிவகுத்தது. இந்தியா இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1987 இல் இந்திய –- இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கியது. இந்திய -, இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவற்காக இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பிற்கான பதின்மூன்றாவது திருத்தத்தை கொண்டு வந்து மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தியது. இவ்வாறான வரலாற்றுப் பின்னணியில் சமஷ்டியைப் பெறுதல் என்பது இன்றைய எனது உரையின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
அதிகாரப் பரவலாக்கமும் அதிகாரப் பகிர்வும்
ஆட்சி முறைமையில் அதிகாரப் பரவலாக்கம் என்பது வேறு, அதிகாரப் பகிர்வு என்பது வேறு. இன்றுள்ள மாகாண சபை முறைமையானது அதிகாரப் பரவலாக்கம் என்பதாக உள்ளது. மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அரசாங்கம் மீளப் பெறலாம். அரசியலமைப்பிற்கு ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து மாகாண சபை முறைமையை முற்றாக இல்லாதாக்கலாம்.
சமஷ்டி என்பது அதிகாரப் பகிர்வு என்பதாக உள்ளது. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வில் மத்திய அரசானது பிராந்திய அரசுகளுடன் பகிர்ந்த அதிகாரங்களை மீளப் பெற முடியாது. மத்திய அரசின் சட்டவாக்க சபைக்கு உள்ள அதிகாரங்களைக் கொண்டமைந்த பிராந்திய சட்டவாக்க சபை அமைந்திருக்கும். நிறைவேற்று அதிகாரங்கள், நீதித்துறை அதிகாரங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவைகளும் பிராந்தியங்களுக்கு உச்ச அளவில் பகிர்ந்து அளிக்கப்பட்டவையாக இருக்கும்.
இலங்கைக்குப் பொருத்தமான ஆட்சி முறைமை சமஷ்டி ஆட்சி முறைமை என்பதனை முதலில் பிரேரித்தவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க. இவர் 1956-1959 காலப் பகுதியில் பிரதமராக இருந்தவர். 1926 இல் சிலோன் மோர்னிங் லீடர் என்ற பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரைகளில் இலங்கைக்குப் பொருத்தமான ஆட்சி முறைமை சமஷ்டி என்பதனைப் பிரேரித்தார். தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி ஆட்சி முறைமையை வலியுறுத்தாத கால கட்டத்திலேயே பண்டாரநாயக்க சமஷ்டி ஆட்சி முறைமையை முன்வைத்தார். அவர் 17-07–-1926 அன்று யாழ்ப்பாணத்தில் மாணவர் காங்கிரஸினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திலும் ‘சமஷ்டி முறைமையே எமது அரசியல் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு’ என்ற தொனிப்பொருளில் பேசினார்.
தமிழரசுக் கட்சியும் சமஷ்டியும்
1949 இல் இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வினை முன் வைத்து அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) தமிழரசுக் கட்சியினைத் ஸ்தாபித்தார். தமிழரசுக் கட்சி 1951 ஏப்ரலில் திருகோணமலையில் நடைபெற்ற அதனது முதலாவது தேசிய மாநாட்டில் சமஷ்டி ஆட்சியினை முன்வைத்து ஏழு தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானங்கள் சமஷ்டிக் கோரிக்கைக்கான சரித்திர ரீதியான நியாயப்படுத்தல்களை முன்வைத்தன.
ஆயினும், பின்னர் செய்யப்பட்ட இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் சமஷ்டி ஆட்சி முறைமை என்பது முதன்மைப்படுத்தப்பட வில்லை. 1957இல் பண்டார நாயக்க – செல் வநாயகம் ஒப்பந்தமும் 1965 இல் டட்லி சேனநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் அவைகளுக்கு எதிரான அழுத்தங்கள் காரண மாக நடைமுறைப்படுத்தப்படாது பின்னர் கிழித்தெறியப்பட்டாலும் கூட தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்கான வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் பிரேரிக்கப்பட்ட சபைகள் சமஷ்டி ஆட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இந்த சபைகளை இந்த ஒப்பந்தங்களில் தந்தை செல்வாவும் தமிழ்த்தலைவர்களும் ஏற்றதற்கான காரணமாக ஒரே நாளில் ஒரே பாய்ச்சலில் சமஷ்டித் தீர்வினை அடைய முடியாது என்பதுவும் படிமுறையிலான பரிணாம வளர்ச்சி மூலமே சமஷ்டித் தீர் வினை அடைய முடியும் என்பதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.
சமஷ்டி பற்றிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா (SC SPL No.03/2014) என்ற வழக்கில் இலங்கை உயர் நீதிமன்றமானது சமஷ்டி என்பது பிரிவினை என்று ஆகாது என்ற தீர்ப்பினை வழங்கியது. இவ்வழக்கின் முதலாவது எதிர்வாதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்த காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியானது அதன் குறிக்கோள்களில் ஒன்றாக இலங்கை ஆள்புலத்தினுள் தனியான அரசு ஒன்றைத் ஸ்தாபிப்பதைக் கொண்டுள்ளது என விளம்புமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தது.1983 ஆம் ஆண்டில் அரசியலமைப்பிற்குக் கொண்டு வரப்பட்ட ஆறாவது திருத்தத்தின் மூலம் இலங்கை ஆள்புலத்தினுள் தனியான அரசைத் ஸ்தாபிக்க முயற்சிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தனியான அரசை ஸ்தாபிக்க கட்சியொன்று முயற்சிப்பதாக உயர் நீதிமன்றம் விளம்பிய பின்னர் அவ் வாறான முயற்சியில் அக் கட்சியானது ஈடுபடுமாயின் அக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குற்றம் புரிந்தவர்களாகக் காணப்படுவதன் மீது அவர்களது குடியுரிமையை ஏழு வருட காலப்பகுதிக்கு இழப்பதுடன் அவர்களது அசையும், அசையாத சொத்துக்கள் பறிமுத லுக்கு உள்ளாவதுடன் அவர்கள் பாராளு மன்ற அங்கத்தவர்களாயின் அவர்களது பதவி யையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிடப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சிக்கெதிராக வழக்கிட்டவர் இக் கட்சியானது தனது யாப்பினை 2008 இல் திருத்தி சமஷ்டி என்று இருந்த சொற்பதத்தை கூட்டாட்சி என்ற சொற்பதத்தால் பதிலீடு செய்துள்ளது எனவும் பதிலீடு செய்யப்பட்ட இச் சொற்பதமானது தனியான சுதந்திர அரசுகள் ஒன்றாக சேருவதையே குறிக்குமென்பதால் இலங்கை தமிழரசுக் கட்சியின் குறிக்கோள்களில் ஒன்றாக தனியான அரசு ஒன்றை இலங்கை ஆள்புலத்தினுள் ஸ்தாபிப்பது உள்ளது எனவும் வாதிட்டார். தனது வாதத்திற்கு ஆதாரமாக 1976 இல் பண்ணாகத்தில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்துவ கட்சியாக இருந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழ் ஈழம் என்ற தனியான அரசை ஸ்தாபிப்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஏற்று அங்கீகரித்துள்ளது என்றார். அவர் தனது வாதத்திற்கு ஆதாரமாக வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தையும் சமர்ப்பித்திருந்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியானது தனது யாப்பிலுள்ள சமஸ்கிருத சொற் பதமான சமஷ்டி என்பதனை இணை யான தூய தமிழ் சொற்பதமான இணை ப்பாட்சி என்ற சொற்பதத்தால் பதிலிட்ட தனை இவ்வழக்கிட்டவர் தவறான மொழி பெயர்ப்பின் மூலம் தனியான சுதந்திர அரசுகள் ஒன்றாக சேர்ந்து அமைக்கின்ற கூட்டாட்சி என்பதாக புரிந்துள்ளார் என் பதையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் நோக்கம் பிரிக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கையினுள் தமிழ் பேசும் வடக்கு, கிழக்கிலான பாரம்பரிய பிரதேசங்களில் சுய நிர்ணயக் கோட்பாடுகளுக்கு அமைய மக்களுக்கான சுய ஆட்சியைப் பெறுவ தாகும் என்பதையும் இலங்கை தமிழரசுக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதார ஆவணங்களிலிருந்து உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தமிழரசுக் கட்சியானது தனது திருத்தப்பட்டவாறான யாப்பின் வாசகமானது ‘ஐக்கிய இலங்கை இணைப் பாட்சி அங்கமாக…’ என இருப்பதனை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தது.
இவ்வழக்கில், ரொனால்ட் உவாற்ஸின் ஆக்கமான கனடாவில் சமஷ்டியும் பல்லினத் தன்மையும் என்பதில், மாகாண சுயாட்சியா னது ஏற்கனவே வழங்கப்படாதிருந்தால் பிரிந்து செல்வதற்கான இயக்கமானது பல வீனமடைந்திருக்க மாட்டாது மாறாக மேலும் வலுப்பெற்ற ஒன்றாகவே இருந்திருக்கு மென குறிப்பிட்டதனையும் உயர் நீதிமன் றம் தனது தீர்ப்பிலே உள்ளடக்கியிருந்தது.
சமகால சர்வதேச சட்டத்தின் அண்மைக் கால வளர்ச்சியானது மக்களின் சுய-நிர்ணய உரிமையானது வெளியக மற்றும் உள்ளக பரிமாணங்களைக் கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றது. வெளியக சுய-நிர் ணய உரிமை என்பது அந்நிய ஆட்சியி லிருந்து விடுதலை பெறுவதையும் உள்ளக சுய-நிர்ணய உரிமையென்பது தமது அரசாங் கத்தின் தொடர்ச்சியான அடக்கு முறையி லிருந்து விடுபடும் வழியை தமது விருப்பில் தேர்வு செய்வதையும் குறிக்கும் என சர்வதேச நீதிமன்றமானது 2010 இல் கொசோவோ ஆலோசனை அபிப்பிராயத்தை வழங்கிய போது நீதியரசர் ஹன்காடோ ரின்டாடே குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியானது இவைகளை எடுத்துக்காட்டி சுய-நிர்ணய உரிமையென்பது நாட்டினுள்ளே மக்களின் நன்மைக்காகப் பிரயோகிக்கப்படக் கூடிய உள்ளக பரிமாணமொன்றையும் கொண்டுள்ளது என சமர்ப்பணம் வைத் துள்ளதென தனது தீர்ப்பிலே உயர் நீதிமன் றம் குறிப்பிட்டது.
இவ்வாறான பின்னணியில் உயர் நீதி மன்றமானது அரசொன்றில் உள்ளக சுய நிர்ணயத்தைக் கோருவது தனியான அரசைக் கோருவது ஆகாது எனவும் அர சொன்றினுள் இறைமையை மற்றும் அதிகாரத்தைப் பகிர்வதன் மூலம் சமஷ்டி முறையிலான அரசாங்கத்தைக் கோருவது பிரிவினையைக் கோருவது ஆகாது எனவும் தனது தீர்ப்பை வழங்கியது. உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பிலே தமிழ் அரசியல் போராட்டங்களுக்கு கிடைத்த எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சுட்டிக்காட்டியது. சிங்கள பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பின் காரணமாக பண்டா – செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தம் ஆகியவைகள் கிழித்தெறியப்பட்ட வரலாற்றையும், 1970 களில் ஆயுத போராட்டம் மூலம் தனியான அரசைத் ஸ்தாபிக்க தமிழ் இளைஞர்களின் போராளிக்குழுக்கள் தோற்றம் பெற்றதையும், இனப்பிரச்சினை தீர்வுக்காக 1985 இல் இடம்பெற்ற திம்புப் பேச்சு வார்த்தையையும், தனது தீர்ப்பில் உயர் நீதிமன்றம் உள்ளட க்கியது.
சுதந்திர இலங்கையின் அரசியலமைப்புகள்
இலங்கையின் சுதந்திர அரசியலமைப்பான சோல்பரி அரசியலமைப்பானது, சிறு பான்மை மக்களுக்குப் பாதகமான அல்லது பெரும்பான்மை மக்களுக்குச் சாதகமான சட்டங்களை ஆக்க முடியாதென சட்ட ஏற்பாட்டைக் கொண்டிருந்தது. இவ்வாறான ஏற்பாடு இருக்கையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் பிரஜா உரிமையையும் அரசியல் உரிமையையும் பறிக்கின்ற பிரஜா உரிமைச் சட்டம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமையைப் பறிக்கின்ற தனிச் சிங்களச் சட்டம் என்பன ஆக்கப்பட்டன. இவை இலங்கையில் இன ரீதியாக துருவமயப்பட்ட அரசியலுக்கும் இலங்கையர் என்ற அடையாளத்தை விட இன ரீதியான அடையாளத்திற்கு முக்கியத் துவம் வழங்கும் அரசியல் கலாசாரத்திற்கும் வழியமைத்தன.
சிங்கள மற்றும் பௌத்த அடையாளத்திற்கு அரசியலமைப்பு ரீதியான முதன்மைத் தானம் வழங்கும் அரசியலமைப்பாக 1972 இல் முதலாவது குடியரசு அரசியலமைப்பு ஆக்கப்பட்டது. இலங்கை ஒற்றையாட்சி நாடு என்பதற்கும், இலங்கையின் அரச கரும மொழி சிங்களம் என்பதற்கும், அரசு பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்குதல் வேண்டும் என்பதற்குமான அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரம் இந்த அரசியலமைப்பால் வழங்கப்பட்டது.
1978 இல் இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பிலும் இலங்கை ஒற்றை யாட்சி நாடு என்பதுவும், இலங்கையின் அரச கரும மொழி சிங்களம் என்பதுவும் அரசு பௌத்த மதத்திற்கு முதன்மைத் தானம் வழங்குதல் வேண்டும் என்பதுவும் மீள உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வகையில் இலங்கை அரசியலமைப்பிலும் இலங்கை அரசியலிலும் ஒற்றையாட்சி என்பதுவும் பௌத்த மதத்திற்கான முதன்மைத் தானம் என்பதுவும் அகற்ற முடியாதவாறு ஆழமாக வேரூன்றியவைகளாக ஆக்கப்பட்டன.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம்
பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது இந்திய– இலங்கை ஒப்பந்தமென்ற பின் னணியில் அரசியலமைப்பிற்கு அறிமு கப்படுத்தப்பட்ட ஒரு திருத்தச் சட்ட மாகும். பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது இலங்கை அரசியலமைப் பிலிருந்து வேறானதொன்றல்ல. இன்று அரசியலமைப்பின் பாகமாக உள்வாங்கப் பட்டு உள்ளடக்கப்பட்டுள்ள ஒன்றாகும். பதின்மூன்றாவது திருத்தத்தினால் அறி முகப்படுத்தப்பட்ட விடயங்களில் முக்கி யமான விடயங்களாக தமிழுக்கான அரச க ரும மொழி அந்தஸ்து, அடுத்துள்ள மாகா ணங்களின் இணைப்பு, மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள விடயங்களின் நிரல், மாகாண சபைகளின் நியதிச்சட்ட ஆக்க தத்துவம், மாகாண சபைகளுக்கான காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் என்பவைகளைக் குறிப்பிடலாம். மாகாண சபைகளுக்கு இந்த அதிகாரங்கள் முழுமை யாக வழங்கப்படவில்லை என்றாலும் இனப்பிரச்சினைத் தீர்விற்கான சில ஆரம்ப படிநிலைகளை இவை அறிமுகப்படுத் தியுள்ளன என்பதைனை மறுப்பதற்கில்லை. இவை அதிகாரப் பரவலாக்கம் அல்லது அதிகாரப்பகிர்வு பற்றிய சில சிந்தனைகளை தென்னிலங்கை மக்கள் மத்தியிலும் விதைத் துள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு
பதின்மூன்றாவது திருத்தத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய படிநிலை களிலொன்று மாகாணங்களின் இணைப்பு ஆகும். அரசியலமைப்பின் 154 A (3) ஆனது பாராளுமன்றம் அடுத்துள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை சட்டத் தின் மூலம் இணைக்கலாம் என்கின்றது. பதின்மூன்றாவது திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்னணியில் அடுத்துள்ள மாகா ணங்களின் இணைப்பு என்பது வடக்கு ,கிழக்கு மாகாணங்களின் இணைப்பினையே கருதியதாகும். இன்றைய அரசாங்கம் வடக்கு, கிழக்கை இணைக்க விரும்பினால் அதற்கு அரசியலமைப்பை திருத்த வேண் டிய அவசியமோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டிய அவசியமோ இல்லை. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சாதாரண சட்ட திருத்தத்தின் மூலம் இதனைச் செய்யலாம். இணைந்திருந்த வடக்கு ,கிழக்கு மாகாணங் களை பிரிப்பதாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் அரசியலமைப்பிலுள்ள மாகாணங்களை இணைப்பது பற்றிய ஏற்பாடு இல்லாதாக்கப்படவில்லை. அப்பொழுதிருந்த நிபந்தனைகளுக்கு மாறாக வடக்கு ,கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்ந்து இருந்து வந்தது என்ற அடிப்படையிலேயே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மாகாண சபைகளும் நியதிச் சட்டங்களும்
மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் உட்பட முப்பத்தேழு விடயங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாகாண சபைகள் அவைகளுக்கு அளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நியதிச் சட்டங்களை ஆக்குவதன் மூலம் தமது அதிகாரங்களை வலுப்படுத்துதல் வேண்டும். அவ்வாறாக மாகாண சபைகள் நியதிச் சட்டங்களை ஆக்குகின்ற போது, அவ்விடயங்கள் தொடர் பாக பாராளுமன்றத்தால் ஆக்கப்பட்ட சட்டங்கள் சம்பந்தப்பட்ட மாகாணத்தில் நடைமுறையில் இல்லாது இடை நிறுத் தப்பட்டவைகளாக அமையும். மாகாண சபைகள் அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நியதிச்சட்டங் களை ஆக்குதல் வேண்டுமென்பது, மாகாண சபைகளின் நிறைவேற்று அதிகா ரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மட்டுமல்லாது, அந்த நியதிச் சட்டங்களை வினைத்திறனுள்ள வகையில் நடைமுறைப் படுத்துவதற்காக காணி அதிகாரங்களையும் பொலிஸ் அதிகாரங்க ளையும் கோருவதனை நியாயப்படுத்துவதற்கும் அவசியமான தாகும்.
மாகாண சபைகளின் காணி அதிகாரம்
மாகாண சபைகளுக்கு எந்தளவிற்கு அரச காணிகள் மீதான அதிகாரம் உள்ளது என்பது சிக்கலான ஒன்றாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ளது. உயர் நீதி மன்றம் சோலைமுத்து என்ற வழக்கிலே இது பற்றிய சட்ட பொருள்கோடலை வழங் கியுள்ளது. இதற்கமைய அரச காணிகளின் சொந்தமானது மாகாண சபைகளுக்கு இருக்கமாட்டாது. மாகாண சபை விடயங்க ளுக்காக மத்திய அரசினால் வழங்கப்படும் அரச காணிகளைப் பயன்படுத்துவதற்கான அதிகாரம் மட்டுமே மாகாண சபைகளுக்கு உள்ளது. அரசாங்கம் நியாயமான கொள்கை வகுப்பு மூலம் அரச காணிகளை மாகாண சபைகள் பெறுவதனை இயலச் செய்தல் வேண்டும்.
மாகாண சபைகளின் பொலிஸ் அதிகாரம்
மாகாண சபைகள் தமக்கு வழங்கப்பட் டுள்ள விடயங்கள் தொடர்பில் நியதிச் சட்டங்களை உருவாக்கி, அவைகளை நடை முறைப்படுத்தும் போது எழக் கூடிய பிரச் சினைகளைக் கையாள சம்பந்தப்பட்ட மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுதல் அவசியமானாதாகின்றது. பொலிஸ் அதிகாரம் முழுமையாக மத்திய அரசிடம் இருந்தால் மாகாண சபைகள் தமது நிறைவேற்று அதிகாரத்தை வினைத் திறனுள்ள வகையில் நிறைவேற்ற முடி யாத நிலை ஏற்படும். மாகாண சபைகளின் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தென்னிலங் கையிலுள்ள பெரும்பாலானவர்கள் மத்தி யில் தவறான புரிந்துணர்வு உள்ளது. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப் படுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்த லாக அமையும் என்பதே இந்த தவறான புரிந்துணர்வு ஆகும்.
பொலிஸ் அதிகாரம் என்பது பொதுமக்கள் ஒழுங்குடன் சம்பந்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு என்பது இராணுவத்துடன் சம்பந் தப்பட்டது. தேசிய பாதுகாப்பு பற்றிய விடயங்கள் எதுவும் மாகாண பொலிஸ் அதிகாரத்தினுள் உள்ளடக்கப்படவில்லை. மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபரை நியமிப் பதில் பொலிஸ் மாஅதிபருக்கும் மாகாண முதலமைச்சருக்கும் இடையே இணக்கப்பாடு இருந்தால் அவர்களால் கூட்டாக நியமிக்கப் படுபவர் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆவார். அவர்களுக்கிடையில் இணக்கப்பாடு இல்லையாயின் தேசிய பொலிஸ் ஆணைக்குழு முதலமைச்சருடன் கலந்துரையாடி மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபரை நியமிக்கும். முதலமைச் சருடனான கலந்துரையாடல் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை பிணிக்காதென்பதால் மத்திய அரசின் விருப்பத்திற்குரிய ஒருவரே மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியமுள்ளது.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவிலுள்ள மூன்று பேரில் ஒருவர் மாத்திரமே முதல மைச்சரால் நியமிக்கப்படுபவராக இருப்பார் என்பதால் மாகாண பொலிஸ் ஆணைக்குழு வும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே அமையும். மாகாண பொலிஸ் ஆளணியினர் பயன்படுத்தும் ஆயுதங்களின் வகை மற்றும் அளவு என்பவை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டு தீர்மானிக்கப்படும். எனவே, மாகாண பொலிஸாரின் ஆயுதங்கள் பற்றி தீர்மானிப்பது மாகாண சபையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக இல்லை. மாகாணமொன்றில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி பொலிஸ் அதிகாரங்களை ஜனாதிபதி கையேற்கலாமென்பதுடன் பொலிஸ் மாஅதிபர் மத்திய பொலிஸ் ஆளணியினரையும் சேவையில் ஈடுபடுத் தலாம்.
இவ்வாறான நிலையில் பொலிஸ் அதிகா ரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது எவ்வகையிலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குகின்ற போது மாகாணத்திலான பொதுமக்கள் ஒழுங்கு மாகாண சபையின் கண்காணிப்பின் கீழ் வரும். மாகாண சபையானது மக்களின் கண்காணிப்பின் கீழ் வரும். பொலிஸாரின் சேவையை கண் காணிப்பவர்களாக மக்கள் மாறுவார்கள். இது மாகாண பொலிஸார் ,பொதுமக்கள் ஒழுங்கு தொடர்பில் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்குவதாக அமையும்.
ஏனைய அதிகாரங்கள்
மாகாண சபை நிரலில் மாகாண சபைக ளுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களை மத்திய அரசு அபகரிப்பது என்பது மாகாண சபை முறைமையை பலவீனமான ஒன்றாக ஆக்கும். மாகாண நிரலில் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களை மாகாண சபை மீளப்பெற்று தக்க வைக்கின்ற அதேவேளை மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் பொதுவான ஒருங்கிணை நிரலில் உள்ள விடயங்களில் மாகாண சபைக்கு அவசிய மானவைகளையும் மாகாண சபை பெறுதல் வேண்டும். மாகாண ஆளுநரும் அந்த மாகாண மக்களால் ஏற்கப்படுகின்ற ஒருவராக இருப்பதுடன் மாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாகாண முதல்வருக்கு முழு அளவான அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும். இவைகளுடன் மாகாண சபைகளுக்குப் போதுமான நிதி வழங்கப்படுவதுடன் மாகாண சபைகள் நிதி வருமானத்தைப் பெறும் வகையில் நிதி மூலங்கள் கையளிக்கப்படுதலும் வேண்டும்.
இந்தியாவின் வகிபாகம்
இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி முறைமையிலான தீர்வு கருதப்பட்டிருக்கலாம். ஆனால், 1987 இந்திய – –இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அதன் பின்னணியில் அரசியலமைப்பிற்கான பதின்மூன்றாவது திருத்தம் ஆக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் நிலைப்பாடானது பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபை முறைமையை நடைமுறைப்ப டுத்துவதாகவே இருந்து வருகின்றது. இதுவரை இதிலும் இந்தியா தோல்வி கண்டதாகவே இருந்து வருகின்றது.
இந் நிலையில், இந்தியா மாகாண சபை முறைமைக்கு அப்பாலான ஒரு தீர்வினை பெற்றுத் தருவதற்கான அழுத்தத்தினை இலங்கை அரசுக்கு வழங்கும் என எதிர்பார்க்க முடியாது. இந்தியா தனது சொந்த பூகோள அரசியல் நலன்கள் காரணமாக தென்னிலங்கைக்கு விரோதமான எந்தவொரு செயற்பாட்டிற்கும் செல்லவும் மாட்டாது. இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவை கடந்து எந்தவொரு நாடும் இலங்கைக்கு வரவும் மாட்டாது. முள்ளிவாய்க்காலிற்கு வராத சர்வதேச சமூகம் சமஷ்டியைப் பெற்றுத் தருவதற்கு இலங்கை பாராளுமன்றத்திற்கு வரும் என எதிர்பார்க்கவும் முடியாது. இருந்தாலும், சர்வதேசமயப்படுத்தப்பட்டதாக சமஷ்டித் தீர்வினை தொடர்ந்து நாம் தக்க வைத்திருக்க வேண்டியது சமஷ்டித் தீர்விற்கான படிமுறையிலான வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று.
புதிய அரசியலமைப்பு முயற்சிகள்
வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாழ்விலிருந்தும் ஆட்சி உரிமைகளிலிருந்தும் அரசியலிலிருந்தும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக அரசியலமைப்பு உள்ளது. இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இன்று வரை மூன்று அரசியலமைப்புகள் உள்ளன. அரசியலமைப்புகள் ஆக்கப்படும் போது தமிழ் மக்களின் உணர்வுகள் வெந்து தணிந்தது வரலாறு. இவ்வாறான பின்னணியில் இன்று புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது பற்றியும் பேசப்படுகின்றது.
ஆட்சியிலிருக்கும் கட்சி தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை முன்வைக்கும் போது அவைகளை எதிர்க்கட்சி எதிர்ப்பதுவும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் பின்னர் அவைகளைக் கைவிடுவதும் இலங்கையின் அரசியல் வரலாறு. 2000 ஆம் ஆண்டில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சியின் போது சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பிற்கான வரைபானது அரசு மத்தியையும் பிராந்தியங்களையும் கொண்டதாக அமையும் என்று இருந்தது. இது தெளிவான சொற்பதத்தாலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான நாட்டின் அமைப்பு முறையிலான ஒரு மாற்றமாகும். தமிழ் மக்களுக்குச் சாதகமான பல அம்சங்களைக் கொண்டிருந்த அரசியலமைப்பு முயற்சி எதிர்ப்பின் காரணமாக இல்லாமல் ஆனது.
09 மார்ச் 2016 அன்று பாராளுமன்ற தீர்மானத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையானது, 05 ஏப்ரல் 2016 அன்று அதனது முதலாவது அமர்வில் ஏகமனதாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ரணில் விக்கிரம சிங்கவை தவிசாளராகக் கொண்ட வழிப்படுத்தும் குழுவை நியமித்து புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் இந்த முயற்சியும் நிறைவேறவில்லை.
2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையால் புதிய அரசியலமைப்பினை உருவாக்கு வதற்கான நிபுணர் குழு நியமிக்க ப்பட்டது. இக் குழுவில் ஒரேயொரு தமிழ் அங்கத்தவராக நான் இருந்தேன். இக் குழுவில் பல விடயங்களில் நான் உடன் படவில்லை. அந்த அரசியலமைப்பு வரைபில் உள்ளடக்கப்பட்ட அதிகாரப் பரவாலாக்கம் பற்றிய அத்தியாயத்தின் எந்த ஒரு பகுதியையும் ஏற்காது அந்த அத்தியாயத்தினை முழுமையாக நான் நிராகரித்திருந்தேன்.
இன்றைய அரசாங்கம் புதிய அரசியல மைப்பு உருவாக்க முயற்சிக்கு உடனடியாகச் செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. புதிய அரசியலமைப்பு ஒன்று வருவதாக இருந்தால் அதில் அதிகாரப் பகிர்வினை உள்ளடக்கும் வகையில் உபாயங்களை தமிழ்த் தலைமைகள் வகுத்தல் வேண்டும். இதில் முக்கியமானதாக அரசாங்கத்தில் உள்ள அதிகாரப் பகிர்விற்கு ஆதரவானவர்களது ஆதரவினைப் பெறுதல் வேண்டும். அதே வேளை, அதிகாரப்பகிர்வின் நியாயப்படுத்தல்களை ஏனைய சமூக ங்கள் மத்தியில் கொண்டு சென்று, அவர்கள் மத்தியில் நம்பிக்கையினைக் கட்டியெழுப்பி, அவர்களின் ஆதரவினைப் பெறும் முயற்சியினையும் தீவிரப்படுத்த வேண்டும்.
சிங்கள மக்களின் அச்சம் களைதல்
சமஷ்டி என்பது பிரிவினை என்றவாறான அச்சம் சிங்கள மக்கள் பலர் மத்தியில் உள்ளது. இவ்வாறான அச்சம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டும் உள்ளது. சமஷ்டி என்பது ஒரு ஆட்சி முறைமை என்பதுவும் இலங்கையை விட சிறிய நாடுகளிலும் இவ்வாறான ஆட்சி முறைமை உள்ளது என்பதுவும் இன்று பல நாடுகள் பிரிந்து செல்லாது ஒன்றாக இருப்பதற்கு இந்த ஆட்சி முறைமையே காரணமாக உள்ளது என்பதுவும் அரசியல் தீர்வாக மட்டுமல்லாது அபிவிருத்திக்கான தீர்வாகவும் இது அமையும் என்பதுவும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுதல் வேண்டும்.
இது அவர்கள் மத்தியில் சந்தேகங்களைக் களைந்து அச்சத்தை நீக்கி நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதாக அமையும். சமஷ்டி என்பது சிங்கள மக்கள் மத்தியில் அச்சம் தரும் சொல்லாக இருந்தால் பதிலாக வேறேதேனும் சொற்பதம் பயன்படுத்தப்படலாம். பெயர்ப் பலகை எது என்பதனை விட எந்தளவிற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது தான் முக்கியமானது. இனப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் பாராளுமன்றத்தால் ஆக்கப்படுகின்ற அரசியலமைப்பிலேயே உள்ளடக்கப்படுதல் வேண்டும். இது சாத்தியமானதாவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் அச்சம் களைந்து நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது அவசியமானது.
முடிவுரை
புதியதொரு அரசியலமைப்பினை உருவாக்கும் நிலையில் இன்றைய அரசாங்கம் உள்ளதா என்பதுவும் அவ்வாறு புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டால் அதில் தமிழ்மக்கள் வேண்டி நிற்கின்ற அரசியல் தீர்வு உள்ளடக்கப்படுமா என்பது வும் சந்தேகமானதாகும். இந் நிலையில் அரசாங்கமானது ஆகக்குறைந்தது பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தினால் அரசிய லமைப்பினுள் ஏற்கனவே உள்ளடக் கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கம் பற்றிய விடயங்களை முழுமையாக நடைமுறைப் படுத்துவதையாவது செய்தல் வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தத்தை முழு மையாக நடைமுறைப்படுத்துவது தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக அமையாது. ஆனால் அதிகார பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அவசியமான பெரும் பான்மை மக்களின் மனமாற்றத்தை படிப்படியாக ஏற்படுத்துவதற்கான வழி வகையொன்றாக அது அமையும். இல்லாதவைகளை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாறுவதனை விட பதின்மூன்றாவது திருத்தத்தால் மாகாண சபை முறைமைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளவைகளை நடைமுறைப்படுத்துவது இனப்பிரச்சினைத் தீர்விற்கான சமஷ்டி பாதையில் சில படி நிலைகளையாவது கட்டியெழுப்புவதாக அமையும்.
வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி அரசியல் என்பதுவும் அவசியமானது. அபிவிருத்தி இல்லாதபோது மக்களை தக்க வைக்க முடியாது. மக்கள் இல்லாத போது இடத்தைத் தக்க வைக்க முடியாது. இடத்தைத் தக்க வைக்காத போது இனத்தைத் தக்க வைக்க முடியாது. எனவே வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி அரசியலிலும் கவனம் செலுத்துதல் வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் வெறுமனே உசுப்பேத்தல் அரசியலாக இல்லாது அறிவார்ந்த யதார்த் தமான அரசியலாகவும் வளருதல் வேண்டும். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் பல கட்சிகளாக சிதறுண்ட அரசியலாக இல்லாது சில கட்சிகளாக ஒன்றுபட்ட அரசியலாக சிறந்த தலைமைத்துவத்தில் வளருதல் வேண்டும். இதன் மூலமே நாம் இனமாக எழுந்து எமது அபிலாஷைகளை அடைய முடியும்.


Leave a Reply
You must be logged in to post a comment.