கருப்பு யூலை 1983

Gajan Nadarasa

23-07-2025

#இன்றைய#JVP யின் #அன்றைய#கோரமுகம்#கறுப்பு#யூலை.

// ஓட்டுனர் பக்க கதவின் கண்ணாடியை ஒருவன் உடைத்தான். உள்ளே பார்த்தவன் தமிழ்க் குடும்பம் என்பதை உறுதி செய்ததும் நான்கைந்து பேர் காரை சூழ்ந்து போத்தல் பெட்ரோலை காரில் ஊற்ற ஆரம்பித்தார்கள்.

கார் பற்ற வைக்கப்பட்டது. \\

வெளியே ஏதோ சத்தம் கேட்டுத்தான் நான் கண் விழித்ததே. அறைக்கதவைத் திறந்து வெளியே – கீழே ஓடிவந்தேன். லொட்ஜின் மனேஜர் வாசலின் இரும்புக் கதவைப் பூட்டிவிட்டு சாவித் துவாரத்தின் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரது தோளில் கைவைத்துத் திருப்பினேன்.

“என்ன சத்தம் ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டேன்.

“பொரளை பிரச்சனைதான். வண்டி வண்டியாக ஆட்கள் வந்து தமிழர்களின் கடைகளை தேடித் தேடிக் கொழுத்துகிறார்கள்” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன.. என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். நான் தங்கியிருந்த அந்த விடுதியிலுமே ஆறேழு தமிழர்கள் இருக்கிறார்கள். “அப்போ இங்கே இருக்கும் நவம், லக்ஸ்மன் எல்லாரும்?”

“அவர்களை விடியற் காலையிலேயே இடத்தைக் காலி பண்ணச் சொல்லிவிட்டேன். வெள்ளவத்தை பக்கமாக ஓடிப்போய் எங்காவது பாதுகாப்பாக இடம் தேடித் தங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டேன்.”

ஆசுவாசமாக இருந்தது.

“இப்போது லொட்ஜில் நாங்கள் சிங்களவர்கள் மட்டும்தான் நிற்கிறோம். இனிப் பிரச்சனையில்லை. யாரும் வரமாட்டார்கள். நீங்கள் உங்கள் அறைக்கு சென்று பூட்டிக் கொள்ளுங்கள். வெளியே ஒன்றும் போகவேண்டாம். எல்லாம் சரிவந்ததும் சாப்பாட்டுக்கு ஏதும் வழி பார்க்கிறேன்”

நான் அறைக்கு வந்து கதவை நன்கு தாளிட்டுக் கொண்டேன். கட்டிலில் வந்து அமர்ந்தேன். படபடப்பு போகவில்லை. அருகில் இருந்த மேசையை எடுத்து கதவுக்குக் குறுக்கே வைத்தேன். மேசையை அசைத்துப் பார்த்தேன். பாரம் குறைவாக இருந்தது. இரவு வீட்டுக்குப் போவதற்காக சூட்கேசை அடுக்கி வைத்திருந்திருந்தேன். அதையும் எடுத்து மேசைக்கு மேல் பாரமாக வைத்தேன். மறுபடி கட்டிலில் வந்து அமர்ந்தேன்.

வெளியே ஆரவாரமான ஒலி கேட்டுக் கொண்டே பொரளை மயானத்தில் ஆரம்பித்த பிரச்சனை இந்தளவுக்கு வரும் என்று நான் நினைக்கவில்லை. நம் ஜனாதிபதி அதை சுமுகமாக தீர்த்து விட்டதாகவே நான் எண்ணியிருந்தேன்.

ரப்பர் எரியும் நாற்றமும் புகையும் ஜன்னலின் இடுக்குகளின் வழியே வந்தபடி இருந்தது. தமிழில் கதறும் சத்தங்கள் வலுத்தன. எனக்குத் தமிழ் தெரியாது. ஜன்னலை திறந்து பார்க்கலாமா? பயமாக இருந்தது. நான் இருந்த லொட்ஜ் காலி வீதியோடே இருந்த ஒரு சிறிய லொட்ஜ்தான். நல்ல வேளை, லொட்ஜின் பெயர் அமாலி. சிங்களப் பெயர். இல்லாவிட்டால் ஒவ்வொரு கதவாக உடைத்து இருப்பது யார் என்று பார்த்துத்தான் விட்டிருப்பார்கள்.

ஜன்னலைத் திறக்கும் துணிச்சல் வரவில்லை. ஜன்னலுக்கு மேலே இருந்த கிறில் துவாரம் வழியாக எட்டிப் பார்த்தேன். வீதியே கரும் புகையால் மூடப்பட்டு இருந்தது. உற்றுப் பார்த்தால் வீதியில் பிய்ந்து போன உடல் துண்டுகள் தெரிந்தன. தமிழ் பேசிய உடல்கள். வீதியின் ஓரமாக இருந்த கடைகளில் நான்கைந்து கடைகள் பூட்டியது பூட்டியபடியே இருக்க, மீதிக் கடைகள் உடைக்கப் பட்டிருந்தன. தமிழ்க் கடைகள்.

ஒரு குழுவினர் வீதியில் போகும் வாகனங்களை மறித்து உள்ளே விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிங்களவர் என்றால் போகவேண்டும்.தமிழர் என்றால் சாகவேண்டும். நேரம் போகப் போக, வீடுகளில் இருந்த கத்தி பொல்லு ஆயுதங்களுடன் இன்னும் இன்னும் ஆட்கள் வீதிகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

ஓரத்தில் ஓர் இராணுவ வாகனம் வருவது தெரிந்தது. அப்பாடி… ஆசுவாசமாக இருந்தது. இனி நிம்மதி. விரைவில் கலவரம் செய்வோரை இராணுவத்தினர் அடக்கி விடுவார்கள். சற்று நேரத்தில் அமைதியாகி விடும். உடனடியாக பெட்டியைச் சுருட்டிக்கொண்டு ஊருக்கு ஓடிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

இராணுவ வாகனம் நின்றதும் அதிலிருந்து ஓர் வீரன் இறங்கினான். வேகமாக ஓடிப் போய், கடைகளை அடித்தும் வாகனங்களை மறித்தும் கொண்டிருந்த ஆட்களிடம் ஏதோ பேசினான். உடனே நான்கைந்து பேர் இராணுவ வாகனத்தை நோக்கி ஓடி வந்தார்கள். கமாண்டர் அவர்களுடன் பேசப் போகிறார் என்று எண்ணினேன்.

வாகனத்திலிருந்து அனைவருக்கும் பெரிய பெரிய போத்தல்கள் வழங்கப் பட்டன. அவர்கள் அதை வாங்கிக்கொண்டு மீண்டும் தத்தமது வேலைகளுக்கு விரைந்தார்கள். என்ன ஏதேனும் பானமா?

பெட்ரோல் என்பது அதை ஒரு தமிழ்க் கிழவனின் மேல் ஊற்றிக் கொழுத்தியபோதுதான் எனக்குப் புரிந்தது.

வீதியில் வந்துகொண்டிருந்த வெள்ளைக் கார் ஒன்றை மறித்தார்கள். உள்ளே ஒரு தமிழ்க் குடும்பம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.அப்பா வாகனத்தை ஓட்ட, உள்ளே பக்கத்தில் அம்மா, மடியில் ஓர் குழந்தை – நான்கைந்து வயது இருக்கலாம். பின் சீட்டை பார்த்தேன். ஒரு எட்டு – பத்து வயதுப் பெண் குழந்தையும அவளைச் சுற்றி நிறையச் சாமான்களும். வீட்டில் இருந்த பொருட்களை அவசர அவசரமாகக் காரில் எடுத்துப் போட்டுக் கொண்டு வெள்ளவத்தைப் பக்கமாக தப்பி ஓடிக் கொண்டிருந்த தமிழ்க் குடும்பம். அநியாயமாக இவர்கள் கையில் மாட்டுப் பட்டு விட்டதே என்று எண்ணினேன்.

ஓட்டுனர் பக்க கதவின் கண்ணாடியை ஒருவன் உடைத்தான். உள்ளே பார்த்தவன் தமிழ்க் குடும்பம் என்பதை உறுதி செய்ததும் நான்கைந்து பேர் காரை சூழ்ந்து போத்தல் பெட்ரோலை காரில் ஊற்ற ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவன் – திடீரென்று பின்னால் பார்த்தவன், வலுக் கட்டாயமாக காரின் பின் கதவை திறந்து பின்னால் பொருட்களுக்குள் பயத்துடன் குறுகி இருந்த பெண் குழந்தையை இழுத்து வெளியே போட்டான். மற்றவர்களுக்கு சைகை காட்ட, கார் பற்ற வைக்கப் பட்டது.

அவன் தன கால்களுக்கிடையில் பெண்குழந்தையை அழுத்திப் பிடித்திருக்க, அவன் கைகள் அவளது மார்பை வருட ஆரம்பிக்க, அவள் முன்னாலே குடும்பம் கருக ஆரம்பித்தது. எனக்கு அதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. கத்தவேண்டும் போலிருந்தது. என் தொடையில் ஓங்கிக் குத்தினேன். பற்களை இறுகக் கடித்துக்கொண்டேன்.

காருக்குள் தகப்பன் துடித்து நெளிவது தெரிந்தது. கதவை அவன் திறக்க முயல, இவர்கள் காலால் கதவைத் தள்ளிப் பிடித்தார்கள். தீயின் வெம்மை தந்த வேகமோ என்னவோ எரிந்தபடியே தகப்பன் கதவை உதறிக்கொண்டு திடீரென்று வெளியே பாய்ந்தான். ஒரு உயிருள்ள உடல் எரிந்தபடி நகர்வதைப் பார்த்ததுண்டா? அதைவிடப் பயங்கரமான காட்சி வேறு எதுவுமே இருக்கமுடியாது. வீதியில் தடக்கி விழுந்த அந்தத் தீப் பொம்மை கையை ஊன்றி எழுந்து, பெண் குழந்தையை நெருங்கியத்து. குழந்தையை இறுகிப் பிடித்து வைத்த்திருந்தவன் வெக்கை தாங்காமல் விலக, அந்தத் தகப்பன் குழந்தையைக் கட்டி இழுத்துக்கொண்டு மறுபடி காருக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டான். பெண்குழந்தையும் எரிய ஆரம்பித்தாள்.

அதற்குமேல் பார்க்க முடியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு கட்டிலில் படுத்துக் கொண்டேன். மனதுக்கு நிம்மதியாக இருந்தது. அழத் தொடங்கினேன்.

****

1983 – கறுப்பு ஜூலை

JVP யின் ஸ்தாபக தலைவர் ரோகண விஜேவீர அடித்தட்டு சிங்கள மக்களிடையே ஊட்டிய இனவாத தீ தமிழர்களை எரித்து தனது பயணத்தை தொடர்ந்தது…

சுப்ரமணிய பிரபா

—————————————————————————————————————-

23-07-2025

1983 இன்றுபோலவே அன்றும் விடிந்தது, எங்கள் திருமணத்தின் முதல் ஆண்டு அது. அவளுக்குக் கொழும்பில் அதுவே முதல் இல்லற அனுபவம். வழக்கம்போலவே கொழும்பு திறைசேரியில் என் அலுவலகக் கடமைகள் முடியும் தருவாயில் இருந்தன. தேநீர் தயாரிக்கும் மூலையில் இருவர் கிசுகிசுப்பதைப் பார்த்தேன். “ஊ… கொட்டியாவாக்கே (அவன் புலியாக இருக்க வேண்டும்)” என்று ஒருவர் மற்றொருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அலுவலக மேலாளர் பாலா, பதற்றத்துடன் ஓடிவந்து, “உன்னைப் பற்றி இவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்; நீ உடனே வீட்டுக்கு போ!” என்றார். புதுமணப் பெண்ணான என் மனைவி மாலையில் பூச்சூடி, பொட்டிட்டு, புன்னகையுடன் இருப்பாள் என்ற எதிர்பார்ப்புடன் நான் அன்றைய மாலை அவளைக் காண ஆவலுடன் இருந்தேன். ஆனால் இன்று அதிரடியாக வீட்டுக்கு விரைந்துகொண்டிருந்தேன்.

என்னவோ, ஏதோ என்று வெள்ளவத்தை தயா வீதி வீட்டிற்குள் நுழைந்தபோது, வீட்டு முற்றத்தில் அயல் வீட்டு ரொபேட்டும் அவரது மனைவியும் என் மனைவியுடன் நின்றுகொண்டிருந்தனர். என் மனைவி பேய் அறைந்த முகத்துடன் காணப்பட்டாள். ரொபேட் சொல்லச் சொல்ல, என் நெஞ்சம் கலங்கியது. நாரகன்பிட்டி எரிந்துகொண்டிருக்கிறதாம்; பொரளை கனத்தை முன்றலில் தமிழர்கள் வந்த கார் எரிந்து கொண்டிருக்கிறதாம்.

எங்களுக்கு வியர்த்து நடுங்கத் தொடங்கியது. “பயப்படாதை அருண்; உங்களைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்” என்று ரொபேட் ஆறுதல் கூறினார். இரவு மணி ஏழு இருக்கும். கிருலப்பனைப் பக்கம் வீடுகள் எரியும் சுவாலை வானில் வெளிச்சம் போட்டுக்கொண்டு இருந்தது. ரொபேட்டின் மனைவி எங்களை அழைத்துச் சென்று தங்கள் ஒற்றை அறை சிறிய வீட்டினுள் விட்டுப் பூட்டினார். ரொபேட்டும் அவரும் அறைக்கு வெளியே மேசையின் முன், கையில் கம்பும் கத்தியுமாக அமர்ந்து, எங்களைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் விழித்திருந்தனர்.

இரவு மணி 12. என் வீட்டின் கிழக்கில் இருந்த மாடி வீடு எரிந்து, அதன் உடைந்த பாகங்கள் என் வீட்டின் மீது விழத் தொடங்கின. அப்போதும் “பிள்ளையாரே! பிள்ளையாரே!” என்றபடி கண்களை இறுக மூடினேன். விடியும் வரை ரொபேட்டின் காவலில் நாங்கள் இருந்தோம். விடிந்தும் விடியாததுமாக ரொபேட் எங்களை வெள்ளவத்தை போலீசில் ஒப்படைத்தார். அடுத்த நாள் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் அகதி என்ற முத்திரையுடன், அகதிகள் முகாமில் இருந்தோம். தமிழன், தான் பிறந்த மண்ணிலேயே அகதியாவான் என்று நான் கனவிலும் எண்ணி இருக்கவில்லை.

மாற்று உடை இல்லை, குளிக்க வசதி இல்லை, இயற்கை உபாதைகளைக் கழிக்க வாய்ப்பே இல்லை. முகாமில் அகதிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது. வெட்டுக் காயங்களுடனும், கரி படிந்த ஆடைகளுடனும், உடுத்த உடையுடனும், கலைந்த முடியுடனும், பேதலித்த முகத்துடனும் மக்கள் இருந்தனர். நம் தமிழ் இனம் அங்கே நாதியற்ற இனமாக, தட்டிக் கேட்க ஒரு தலைவன் இல்லையே என்ற வலியுடன், பொத்திய வாயுடன், ஒட்டிய வயிற்றுடன், கலங்கிய கண்களுடன்… பாடசாலை மைதானத்தில்… வானத்தைப் பார்த்தபடி, அழுதுகொண்டிருந்தது.

ஜூலை 23 அன்று நான் எடுத்துச் சென்ற ரேடியோ அலறியது. வெலிக்கடை சிறையில் 51 தமிழ்க் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக சிறப்புச் செய்தி ஒலிபரப்பானது. மைதானத்தில் கூடியிருந்த தாய்மார்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கதறினர். மரணித்தோர் பட்டியல் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை என்று நீண்டது. “ஐயோ கடவுளே!” நான் ஒன்றாகப் படித்து, ஒன்றாக விளையாடித் திரிந்த அச்சுவேலி சத்தி வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி என்னை நிலை குலையச் செய்துவிட்டது.

உணவில்லை, உறக்கமில்லை, ஏன் நல்லது கெட்டது பேசக்கூட சுதந்திரமில்லை. சிங்களம் தெரிந்திருந்ததால், 800 அகதிகளைப் பட்டியலிட்டு 13 பேருந்துகளில் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது, ஆனால் தென் இலங்கை வீதிகளில் ஆங்காங்கே எரிந்த கார்களும் சாம்பல் மேடான தமிழ்க் கடைகளும் இருந்தன. காலி வீதி கருகிப் போய்க் கிடந்தது.

சரக்குக் கப்பலின் பங்கருக்குள் 500 பேர் வாந்தியும் மயக்கமுமாக இருந்தனர். மீதமிருந்தவர்கள் மேல் தளத்தில் ஒரு பிடி சோற்றுக்குக் கையேந்தியபடி இருந்தனர். பங்கரில் இருந்தோரின் மலம், சலம் ஆகியவற்றை வாளியில் கயிறு கட்டி வெளியே இழுத்து கொட்டினோம். மூன்றாம் நாள் காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தில் மீண்டும் அகதியாக இன்னொரு பதிவு நடந்தது.

இந்த நிலை இனியும் வரக் கூடாது. தமிழ், சிங்களம் என்ற பேதங்களைக் களைந்து, புரிந்துணர்வுடன் கூடிய இலங்கை பிரஜைகளாக வாழ நாம் சபதமெடுப்போம்.

சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம் நிலை பெறட்டும்!

அனுபவக் கட்டுரை: Arun Chellappah Arun Chellappah

🔴

About VELUPPILLAI 3406 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply