சிவபூமி திருவள்ளுவருக்கு மதச் சாயப் பூச்சு – நெற்றியில் குங்கும்!
சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளா்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 39 மொழிகளில் திருக்குறளின் பெருமைகளை அறிந்து கொள்ளும் வசதியுடன் மிகப் பிரமாண்டமாக மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் வளாகம் வரும் 02.02.2025ம் திகதி மங்களகரமாக திறந்து வைக்கப்பவுள்ளது.
திருக்குறள் வளாகத்தின் பெருமைகள் மற்றும் சிறப்புகள் பற்றி சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் அவர்கள் அரிய பல தகவல்களை வழங்கினார்.

வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்தால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

திருக்குறள் வளாகத்தின் மாலை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்துகொண்டார். செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற மாலை நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் ம.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், தமிழ்த்துறை பீடாதிபதி விசாகரூபன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆளுநர் தனது அதிதி உரையில், ஏனையோரால் நினைத்துப்பார்க்க முடியாத விடயங்களை ஆறு.திருமுருகன் அவர்கள் சாதித்து வருவதாக புகழாரம் சூட்டினார். தமிழுக்கும், சைவத்துக்கும் அவர் தனது வாழ்வையே அர்ப்பணித்து அரும்பணியாற்றி வருகின்றார் என்று குறிப்பிட்டார். ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியாக சமூகப்பணிகளை அவர் முன்னெடுத்து வருகின்றார் எனக் குறிப்பிட்ட ஆளுநர் அதை ஏனைய ஆலயங்களும் பின்பற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


இன்று பலர் கொடையளிக்க தயாராக இருந்தாலும் நிதி மீதான வெளிப்படைத்தன்மை இன்மையால் தயங்குகின்றனர் எனத் தெரிவித்த ஆளுநர், ஆறு.திருமுருகன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் பலர் நிதி கொடுக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார். ஏமாற்றுபவர்கள் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாது அவர்கள் விரைவில் அழிவது இயற்கை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
திருக்குறள் தமிழர்களுக்கு பெருமை எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய நூலாக திருக்குறள் அமைந்திருப்பதைக் குறிப்பிட்டார். எந்தமொழி பேசுவோரும், எந்த மதத்தைப் பின்பற்றுவோரும் திருக்குறளை படிக்க முடியும் எனத் தெரிவித்த ஆளுநர், திருவள்ளுவர் தமிழராகப் பிறந்தமை எங்களுக்கும் பெருமை எனச் சுட்டிக் காட்டினார்.
வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
02.02.2025
#Northern#provence#Honorable#Governors#vethanayhan#todaynews#highlightsシ゚

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் பூதாகரமான பேசுபொருளாகியுள்ளது. வேண்டாத செயல் அல்லது இந்தியாவின் மாறாத பெரியண்ணா இயல்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் திருவள்ளுவரை வேண்டாதவராக விம்பப்படுத்தும் வாதங்கள் பொதுவெளியில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் தமிழுக்கு பெருமையாக உள்ள திருவள்ளுவரை எல்லைகடந்து கொண்டாடுவதில் ஈழத்தவர்கள் பின்நின்றதில்லை என்பதற்கான சாட்சியமும் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அரங்கேற உள்ளது. யாழ்ப்பாணத்தின் நீண்டகாலமாக சைவத்திற்கும் தமிழிற்கும் சமுகப்பணியாற்றி வரும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையிலான சிவபூமி அமைப்பின் மற்றொரு முயற்சியாக, மாவிட்டபுரத்தில் பெப்ரவரி-02 அன்று திருக்குறளுக்கான வளாகம் திறக்கப்படுகின்றது. இது ஈழத்தில் சிவபூமியின் கடந்தகால பணிகளின் தொடர்ச்சியாக ஒரு மைல்கல்லாகவே அமைகின்றது. இக்கட்டுரையும் திருக்குறள் வளாக உருவாக்கத்தை பற்றிய தொகுப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையிலான சிவபூமி அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர் வாழும் திசையெல்லாம் சைவத்தினதும் தமிழினதும் இருப்பை பாதுகாப்பதற்கான பணியாற்றி வருகின்றது. ஆரம்பத்தில் தேவைப்படுவோருக்கு உதவிகளை வழங்கிடும் செயற்பாட்டை முன்னெடுத்தது. நாளடைவில் எண்ணங்களும் செயல்களும் பரிணமித்துள்ளது. ஈழத்தில் 21ஆம் நூற்றாண்டில் சைவத்தையும் தமிழையும் பாதுகாப்பதில் சிவபூமி தவிர்க்க இயலாத நிறுவனமாக வளர்ச்சியுற்றுள்ளது. மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பாடசாலைகள், முதியோர் இல்லங்கள், இலவச வைத்தியசேவை, நூதனசாலை, கருங்கற்களால் பொறிக்கப்பட்ட திருவாசக – திருமந்திர அரண்மணை, மடங்கள் மற்றும் ஆச்சிரமங்கள் என இலங்கையில் தமிழர்கள் வாழுமிடங்கள் எல்லாம் சிவபூமியின் பணி ஆழமாக விரிந்துள்ளளது. இவ்வாறான விஷ;தரிப்பின் ஒரு பகுதியாகவே மாவிட்டபுரத்தில் திருவள்ளுவர் வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி-02அன்று (ஞயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தின் மாவிட்டபுர பிரதேசத்தில் திருக்குறள் வளாகம் திறந்து வைக்கப்பட உள்ளது. வரலாற்றில் மாவிட்டபுரம் தனித்துவமான வரலாற்றை இதிகாச காலங்களில் நிலைநாட்டியுள்ளது. அதன் பயனாகவே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வரலாறும் நிலைபெறுகின்றது. ஏறத்தாழ 50ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் ஏப்ரலில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் புதுப்பொலிவுடன் மஹா கும்பாபிஷேகம் காண உள்ளது. சமாந்தரமாக மாவிட்டபுரத்திற்கு புதியதொரு அடையாளமாக திருக்குறள் வளாகம் அமைய இருப்பது அதன் சிறப்பை மேலும் அதிகரிப்பதாக அமைகின்றது. இங்கு திருக்குறள் வரலாற்றில் என்றும் அழியாத வகையில் கருங்கற்களால் பதிக்கப்படுவது சிறப்பானதாகும். இந்தியாவின் பெருமையாக திருக்குறள் முதன்மைப்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் கலாசார இராஜதந்திர பொறிமுறைக்குள் சமகாலத்தில் திருக்குறளும் உள்வாங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண கலாசார நிலையத்தின் பெயர் மாற்றத்தின் பின்னால் இக்கலாசார இராஜதந்திரமும் உரையாடப்படுகின்றது. எனினும் வரலாற்றில் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் கருங்கல்லில் பதித்து அதற்கான ஆராய்ச்சிப் பணிக்கான வளாகமாக உருவாக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இது ஈழத்தமிழர்கள் தமிழிற்கு அழிக்கும் முக்கியத்துவத்தையே உறுதி செய்கின்றது.
திருக்குறள் வளாகம் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக இந்தியாவின் நீதியரசர் அரங்க மகாதேவன் வரவேற்கப்பட்டுள்ளார். இவர் ஆழமாக தமிழ் வரலாற்று பேணுகையில் ஈடுபாட்டை கொண்டுள்ளார். நீதியரசராக 2021இல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பழங்கால நினைவுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் பாராம்பரிய இடங்களை பாதுகாப்பதற்கான முக்கிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். மேலும், திருக்குறளை 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்த்து நன்னெறி போதிக்க வலியுறுத்தியிருந்தார். பிரதம விருந்தினருக்கான கௌரவம் ஈழத்தமிழர்கள் தமிழகம் சார்ந்து கொண்டுள்ள நிலையான உறவை வெளிப்படுத்துவதுடன், தமிழுக்கு ஈழத்தமிழர் வழங்கும் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதாகவும் அமைகின்றது. தமிழகத்தில் திருக்குறளுக்கான உயர் கௌரவமாக கன்னியாகுமரியில் 133அடி (41 மீட்டர்) உயரத்தில் திருவள்ளுவருக்கு கம்பீரமான சிலை உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்குப் பக்கத்தில் ஒரு பாறையில் திருவள்ளுவரின் சிலை அமைந்துள்ளது. இந்திய சிற்பி வி.கணபதி ஸ்தபதியால் உருவாக்கப்பட்டு ஜனவரி-1, 2000அன்று அப்போதைய தமிழ்நாடு முதல்வரான மு.கருணாநிதி அரசாங்கத்தால் அர்ப்பணிக்கப்பட்டது. தமிழகம் திருக்குறளின் ஆசான் திருவள்ளுவரை கௌரவித்து உயர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் இடைவெளியில், ஈழத்தில் திருக்குறளின் ஆழமான கருத்தியலை பாதுகாக்கும் முனைப்பில் திருக்குறள் கருங்கற்களில் பதிக்கப்பட்டு வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் நிலைப்பதற்கு திருக்குறள் நிலைப்பது அவசியமாகின்றது. தமிழ்நாட்டில் கன்னியாக்குமாரியில் திருவள்ளுவரின் சிலை நிலைப்பதற்கு ஈழத்தில் மாவிட்டபுரத்தில் திருக்குறள் வளாகம் நிலையான அடித்தளத்தை வழங்குகின்றது. அரசியல் வரலாறும் அத்தகையதொரு பிணைப்பையே தமிழகம் மற்றும் ஈழத்தமிழர் உறவில் கொண்டுள்ளது.
திருக்குறள் வளாகம் நீண்டகால இலக்குகளை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் அதன் சிறப்பால் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுவரை உலகளவில் 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரே மொழியில் பலரும் மொழிபெயர்ப்பு செய்துள்ளமையால் 345முறை திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆதலாலேயே உலகப்பொதுமறையாகவும் திருக்குறள் சிறப்பிக்கப்படுகின்றது. இப்பின்னணியில் திருக்குறள் வளாகம் திருக்குறளை உலகப்பொதுமறையாகவே காட்சிப்படுத்துகின்றது. கருங்கற்களில் 1330 குறள்களும் மூலமான தமிழ் மொழியில் பதியப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளான சிங்களம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களின் கருத்துக்கள் உறுதியான தகட்டில் பதியப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பு ஹவாய் ஆதினத்தின் திருக்குறள் மொழிபெயர்ப்பின் கருத்துக்களே இரும்பில் பதிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 36 மொழியிலான மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் பார்வை இழந்தவர்களுக்கு பிரெயில் எழுத்திலான திருக்குறள் புத்தகமும் இதுவரை சேகரிக்கப்பட்டு திருக்குறள் வளாகத்தில் காட்சிப்படுத்தப்படுப்படுகின்றது. மேலதிக மொழிபெயர்ப்பு நூல்களை பெற்று திருக்குறள் வளாகத்தில் காட்சிப்படுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
திருக்குறள் வளாகம், திருக்குறளை மையப்படுத்திய ஆராய்ச்சிகளுக்குhன களமாகவே வடிவமைப்பட்டுள்ளது. இரு தளங்களை கொண்ட கட்டிடத்தில் அடித்தளத்தில் ஆராய்ச்சி நூல் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு திருக்குறள் சார்ந்து வெளியாகிய அனைத்து நூல்களையும் ஆய்வுப்பயன் கருதி சேகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வாறே காலத்துக்கு காலம் வரையப்பட்டுள்ள திருவள்ளுவரின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றது. மேலும் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் பெயர்கள் பதிக்கப்படுகின்றது. ஈழத்திலும் 1890ஆம் ஆண்டில் பண்டிதர் விநாயகத்தம்பி வேலுப்பிள்ளை என்பவர் முதல் பலர் உரை எழுதியுள்ளார்ள். அவர்களை எதிர்கால தலைமுறைக்கு எடுத்து சொல்லும் வகையில் வரலாற்றை பேணும் முயற்சியை திருக்குறள் வளாகத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆய்வாளர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளும் திருக்குறள் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாடி தளத்தில் மண்டபம் கலந்துரையாடல், தியானம் மற்றும் யோகா பயிற்சி நெறிகள் மேற்கொள்ளக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
திருக்குறள் வளாகம், திருக்குறளை கருங்கற்களில் பதிப்பதனூடாக அதன் சிறப்பை எடுத்தியம்புவதுடன், முழுமையாக ஆய்வுக்கான இலக்குகளை மையப்படுத்தியே நிறுவப்பட்டுள்ளது. இதன் உருவாக்கத்தில் ஆறு. திருமுருகன் அவர்களின் எண்ணங்கள் பல்கலைக்கழகம் எனும் விருட்சத்திற்கான விதையாகவே அமைகின்றது. சிவபூமி அமைப்பினால் கடந்த காலங்களில் வடக்கே நாவற்குழியில் திருவாசகம் மற்றும் கிழக்கே கொக்கட்டிச்சோலையில் திருமந்திரமும் கருங்கற்கலில் பதிக்கப்பட்டுள்ளன. இவை சிவபூமியின் அரண்மனைகளாகவே பெயரிடப்பட்டுள்ளன. எனினும் மாவிட்டபுரத்தில் திருக்குறளின் கருங்கல் பதிப்பு ‘வளாகமாக’ பெயரிடப்பட்டுள்ளது. இவ்வளாகம் எதிர்காலத்தில் தமிழ் ஆய்வுத் துறையில் பல்கலைக்கழகமாக உயர வேண்டும் என்ற உயரிய நோக்கம் உருவாக்கத்திலேயே காணப்படுகின்றது. திருக்குறள் வளாகம் பற்றி வலையொளி ஒன்றுக்கு வழங்கிய காணொளியில் ஆறு. திருமுருகன் அவர்கள், ‘எதிர்காலத்திலே இவ்வளாகம் விருட்சம் பெற்று ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகமாக தமிழ் ஆராய்ச்சி நிலையமாக பரிணமிக்க வேண்டும் எனக் கனவு காண்கின்றோம்’ எனத் தெரிவித்திருந்தார். இக்கனவு ஈழத்தமிழர்களுக்கு அவசியமானதாகும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று தமிழகத்தில் தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் ஆய்வுத்துறைகள் முதன்முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பின்னணியில் அங்கே சிற்பத்துறை, இசைத்துறை, நாடகத்துறை, ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச்சுவடித்துறை, கல்வெட்டியல்துறை, நீரகழாய்வு மையம், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, மொழிபெயர்ப்புத் துறை, அகராதியியல் துறை, சமூக அறிவியல் துறை, அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, இலக்கியத் துறை, மொழியியல் துறை, தத்துவமையம், பழங்குடி மக்கள் ஆய்வு மையம், இந்திய மொழிகள் பள்ளி, நாட்டுப்புறவியல் துறை, சித்தமருத்துவத்துறை, தொல்லறிவியல் துறை, தொழில்-நிலறிவியல் துறை, கணிப்பொறிவியல் துறை, கட்டடக்கலைத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை என இருபத்தைத்து துறைகளூடாக தமிழ் பல்பரிமாணங்களில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. மேலும் தனித் திட்டங்களாக அறிவியல்–வாழ்வியற் களஞ்சிய மையம், பெருஞ்சொல்லகராதித் திட்டம், தூயதமிழ்-சொல்லாக்க அகரமுதலிகள் திட்டம் ஆகியனவும், பதிப்புத்துறை, நூலகம், அருங்காட்சியகம் ஆகியனவும் தமிழ் மொழியை மையப்படுத்தி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைந்துள்ளன. இது தமிழகம் சார்ந்து தமிழ் இருப்பை பேணுவதிலும், தமிழ் மொழி சார்ந்த வரலாற்றை பேணுவதிலும் அறிவியல் துறையில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றது.
இத்தகையதொரு பரந்த ஆய்வு ஈழத்தமிழ் மொழி வரலாற்றுக்கும் அவசியப்படுகின்றது. தமிழ் மொழியின் வரலாறு என்பது பெரும்பாலும் தமிழகத்தை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. ஈழத்தமிழ் வரலாறு இடைச்செருகலாக அமைகின்றது. ஈழத் தமிழ் சமூகம் இந்தியாவின் தொப்புள் கொடி என வர்ணிக்கப்படுகின்ற போதிலும் தனித்துவமான தமிழ் வரலாற்றை இலக்கணத்தை இலக்கியத்தை பேணி வருகின்றார்கள். அவை பாதுகாக்கப்படுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும் அவசியமானதாகும். ‘நாமும் நமக்கென்றோர் நலியா கலையுடையோம்’ என்பதை மார்தட்டுவதால் மாத்திரம் ஈழத்தமிழ் வரலாற்றின் சிறப்பு நிலைபெற்றிட போவதில்லை. அதனை உறுதி செய்யக்கூடிய ஆய்வுகளும் சான்றுகளும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவாக வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை 2024ஆம் ஆண்டு பொன்விழாவை நிறைவு செய்துள்ளது. எனினும் ஈழத்தமிழ் மொழியின் ஆய்வுத்துறையில் தனித்துவமான நிலையை உறுதி செய்யமுடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சர்வதேச ஆய்வு மாநாட்டை ஒழுங்குபடுத்தி வருகின்றது. இவ்ஆய்வு மாநாடு கருப்பொருட்களும் பொதுமையான தமிழக வரலாற்றை ஒத்ததாகவே அமைகின்றது. 2023ஆம் ஆண்டு நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டின் வாழ்த்துரையில் ஆறு. திருமுருகன் அவர்கள் இக்குறையை சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் ஈழத்தமிழர்களின் தமிழ்ச்சிறப்பை சமகால நோக்கு நிலையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தமிழ்த்துறையின் பொறுப்பையும் நினைவுபடுத்தியிருந்தார். ஐந்தாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டின் கருப்பொருள், ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்: இலக்கியத்தின் ஊடான மானுடவிடுதலை’ என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்து தமிழ் வரலாறு தனது தனித்துவத்தை நிலைநாட்ட பரந்த ஆய்வு விரிவாக்கம் காலத்தின் தேவையாகும். நாமும் நமக்கென்று ஓர் நலியாக் கலையுடையோம் என்பதனை நிறுவுவது ஈழத்து தமிழ் மொழிசார் ஆய்வு பரப்பின் விரிவாக்கத்திலேயே உள்ளடங்குகின்றது. அதற்கான அஸ்திவார கனவு திருக்குறள் வளாகம் நிறுவப்படுவதில் உருவாக்கியுள்ளது. 1921ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் கல்விப் பாரம்பரியத்தின் சுயாதீனத்தை பாதுகாக்கும் முனைப்பில் சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வரா கல்லூரி 1974ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் உயர் கல்வி நிறுவனமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக உயர்ந்தது. பல சைவர்களின் முயற்சியில் சமய ஆய்வுப்பணியின் விஷ;தரிப்பை இலக்காக கொண்டு இந்து கற்கைகள் பீடம் தனிப்பீடமாக வளர்ச்சியுற்றுள்ளது. அவ்வாறான பாதையில் எதிர்காலத்தில் தமிழ்த்துறையும் தனிப்பீடமாக வளர்ச்சியுற்று, தனிப்பல்கலைக்கழகமாக வளருவது, ஈழத்து தமிழ் பற்றிய ஆய்வின் விஷ;தரிப்புக்கு அவசியமானதாகும். அத்தகையதொரு கனவையே ஆறு. திருமுருகன் அவர்கள் திருக்குறள் வளாகம் நிறுவுவதில் கொண்டுள்ளார். நல்லோர் எண்ணங்களும் விதைகளும் நிச்சயம் பெரும் விருட்சமாகும்.
எனவே, மாவிட்டபுரத்தில் அமையப்பெற்றுள்ள திருக்குறள் வளாகம் பெரியதொரு இலட்சியத்திற்கான விதையாக அமைந்துள்ளது. ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதி செய்வது அவர்தம் மொழியின் இருப்பிலேயே தங்கியுள்ளது. அம்மொழியின் இருப்பை உறுதி செய்யக்கூடிய ஆய்வுக்கான களத்தை திருக்குறள் வளாகம் திறந்துள்ளது. இதுவொரு வகையில் தமிழ்த்தேசியத்திற்கான உன்னத பணியாகவே அமைகின்றது. தேசியப் பணி என்பது இதனையே உணர்த்தி நிற்கின்றது. பொதுவெளியில் ஷதேசியம்’ என்பது அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்துக்கான சொல்லாடாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், வெறுமனவே அரசியல் பதமாக நோக்கும் நிலையே ஈழத் தமிழ்ப்பரப்பில் காணப்படுகின்றது. எனினும் அவரவர் தம் பணியை இதயசுத்தியுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வதே தேசத்திற்கான பணியாகவே அமைகின்றது. திருக்குறள் வளாகம் சிவபூமியின் தமிழ்த்தேசியத்துக்கான பணிகளில் ஓர் மைல்கல்லாக அமைகின்றது. திருக்குறளின் ஓர் குறள், ‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ எனக்குறிப்பிடுகின்றது. இதன் பொருள், ‘உலக நடைமுறையை அறிந்து உதவியாக தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர் வாழ்வான்’ என்பதாகும். திருக்குறள் வளாக உருவாக்கமும் உலக நடைமுறையை அறிந்து நிறுவப்பட்டதொரு அறிவியல் நிறுவனமாகவே அமைகின்றது.
சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!
இந்த நூற்றாண்டில் திருவள்ளுவர் முன்னைய காலங்களைவிட போற்றிப் புகழப்படுகிறார். அவர் நினைவாக பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள். பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. திருக்குறள் பற்றிய ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. திருக்குறள்தான் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல். நீண்ட காலமாக திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் புலவர்கள் மத்தியில் மட்டுமே போற்றிப் புகழப்பட்டது. திருக்குறள் என்ற நூல் இருப்பதே மக்களுக்குத் தெரியாது இருந்தது. திருக்குறள் மறைக்கப்பட்டதற்கு அது ஒரு மதசார்பற்ற நூலாக இருந்தது முக்கிய காரணம்.
திருக்குறள் ஓலைச் சுவடி தப்பிப் பிழைத்தற்கு ஒரு ஆங்கிலேய ஆளுநர் காரணம் என்றால் நீங்கள் வியப்படைவீர்கள்.
இந்தியாவை ஆள்வதற்காக ஆங்கிலேயர் அனுப்பிய எல்லிஸ் துரை எனும் ஆளுநர், சென்னைக்கு வந்து, தமிழ் கற்று, தமிழில் செய்யுள் எழுதும் அளவிற்குத் திறன் பெற்றதோடு நில்லாது, பழங்காலத் தமிழ்ச் சுவடிகளை எல்லாம் சேகரித்து நூலாக்குவதிலும் ஈடுபட்டார்.
அவரது நண்பரான மதுரை கவர்னர் ஆரிங்டன் துரையிடம் சமையல்காரராகப் பணிபுரிந்தவர் பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார், கந்தசாமி என்பவர். தன்னிடம் அடுப்பெரிக்க வந்த பல ஓலைச்சுவடிகளை ஆரிங்டன் துரையிடம் கொடுக்க, அவர் அவற்றை எல்லிஸ் துரையிடம் கொடுக்க, அவையே திருக்குறள் சுவடிகள் என்று பின்பு அறியப்பட்டன. திருக்குறள், நாலடியார், திருவள்ளுவமாலை ஆகிய மூன்றும் அவ்வாறு 1812ல் நூலாகி வெளிவந்தபோது, அதே கால கட்டத்தில், தஞ்சையில் ஞானப்பிரகாசர் என்பவர் மூலமாகவும் திருக்குறள் முதன்முறையாக வெளிவந்தது. (இப்போது அவை ஏதாவது ஓர் அருங்காட்சியகத்தில் இருக்கலாம்.)
இந்த எல்லிசு துரை திருக்குறளின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் முதன்முறையாக மொழிபெயர்த்தார். திருவள்ளுவருக்கென (தாடியில்லாத உருவில்) காசு அச்சடித்து வெளியிட்டார். அவர் பெயரில் மதுரையில் எல்லிஸ் நகரும், சென்னையில் எல்லிஸ் சாலையும் உள்ளன.
வள்ளுவருக்கு தாடி, சடாமுடி எப்ப வந்தது என்பது தெரியவில்லை..
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். (குறள் 187)
ஆதாவது உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
எனவே இதனை அறுத்து இறுத்திச் சொன்ன வள்ளுவர் தாடி, சடை வைத்திருந்து இருக்க மாட்டார். நாமும் வைக்கக் கூடாது.
இப்போதெல்லாம் இந்துத்துவவாதிகள் வள்ளுவரை ஒரு சனாதனி எனக் காட்ட முயல்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி வள்ளுவருக்கு காவி அணிவித்து அவரை அவமானப்படுத்தியுள்ளார். இழுக்கு ஏற்படுத்தியுள்ளார்.
சிவபூமி வளாகத்தில் நின்ற கோலத்திலல் வைக்கப்பட்டிருக்கும் வள்ளுவர் சிலைக்கு குங்குமப் பொட்டு வைத்திருக்கிறார் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் அருமுருகன் ஆறுமுகம். நல்ல காலம் வள்ளுவர் நெற்றியில் விபூதிப்பட்டை சாத்தவில்லை.
வள்ளுவருக்கு மதிப்பளிக்க விரும்புவர்கள் அவரது கொள்கை, கோட்பாட்டுக்கு ஊறு செய்யாத வண்ணம் செய்ய வேண்டும். இழுக்கு ஏற்படா வண்ணம் செய்ய வேண்டும்.
வள்ளுவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். கடவுள் என்ற சொல்லைத் தான் எழுதிய 1333 குறள்களில் பயன்படுத்தாதவர். முதல் அதிகாரத்துக்கு கடவுள் வாழ்த்து என்ற தலைப்பைக் கொடுத்தவர்கள் பின்னால் வந்த உரையாசிரியர்கள்.
இன்னும் சொல்லப் போனால் வள்ளுவர் ஒரு பகுத்தறிவுவாதி. இரந்தும் உயிர் வாழ வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகியாற்றியான் எனச் சாபம் போட்டவர்.
எனவே வள்ளுவரது நெற்றியில் குங்குமம் சாத்தியது மன்னிக்க முடியாத தவறு. குற்றம்.
வள்ளுவருக்கும் தியானத்துக்கும் என்ன தொடர்பு? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்று சொன்னவர் வள்ளுவர்.
எனவே வள்ளுவரைப் பெருமைப்படுத்த நினைப்பவர்கள் அவருக்கு மதசாயம் பூசப்படாது.