அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழ மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர்.

அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர்.

சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாக கூறப்படுகின்றதே இந்தப் பசங்களாவது மக்களுக்கு என்று ஏதாவது நன்மை ஏற்படும்படி ஆண்டு இருக்கிறார்களா? இந்தப் பசங்கள் வெளிநாட்டுக்குப் போய் வென்றார்கள், அது பண்ணினார்கள், இது பண்ணினார்கள் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்களே இந்த ராஜாக்களில் எவனாவது மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்கள் என்று கூற முடியுமா?

இந்த முட்டாள் பசங்கள், பார்ப்பான் படிக்க வேத பாடசாலை, சமஸ்கிருதப் பள்ளிகள் ஏற்படுத்தி, ஓசிச் சோறும் போட ஏற்பாடு செய்து இருப்பார்களே ஒழிய, நமது சமுதாயத்திற்காக என்று எந்த காதொடிந்த ஊசி அளவாவது நன்மை செய்தார்களா?

நான் ஒன்றும் விளையாட்டுக்கு ஆகவோ, இவர்களைத் திட்ட வேண்டும் என்பதற்காவோ இப்படிக் கூறவில்லை. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் என்ற ஊர்க் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். வரகுண பாண்டியன் என்ற ராஜா, தன் மனைவியை, தான் மோட்சம் அடைவதற்காகப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாக கோயில் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது!

இவனது சிவ பக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே – வரகுண மகாராஜன் தன் மனைவியினைப் பார்ப்பானுக்குக் கொடுத்ததைப் புகழ்ந்து பாடியுள்ளார். இந்தப் பாண்டியன், சேர, சோழர்களை எல்லாம் வென்ற பராக்கிரமசாலி என்று சரித்திரம் கூறுகின்றது. இப்படிப்பட்டவன்தான் இப்படிக் கேவலமாக மானமற்று நடந்து கொண்டான்.

இந்த அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். இவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது எல்லாம் “இவன் மனு முறை தவறாது ஆண்டவன்” என்றும் புகழ்ந்து கூறப்படுகின்றது! அடுத்து நாயக்கனோ, மராட்டியனோ, முஸ்லிமோ ஆட்சி செலுத்தினார்கள் என்றாலும், இவர்களும் மக்களுடைய குறைபாடுகள் மற்றும் தேவைகள் என்ன என்று ஆய்ந்து அதற்காகப் பரிகாரம் தேடியவர்கள் அல்ல.

நமது தற்குறி நிலைமையைப் போக்கவும், நம் இழிவுகள் போக்கவும் பாடுபடவே இல்லை. அடுத்து வெள்ளைக்காரன் ஆண்டான். இவனாவது நமது இழி நிலையினைப் போக்கவும், நமது தற்குறித் தன்மையினையும் போக்க வேண்டும் என்ற கருத்தை வைத்து ஆண்டார்களா? இல்லையே!

(பெரியார் வட ஆற்காடு மாவட்டம் பேரணாம்பட்டில் 7.4.1961 அன்று ஆற்றிய உரை

About VELUPPILLAI 3406 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply