ஒற்றை பாடலில் காவியம் படைத்துள்ள கவியரசர்
கேள்வியின் நாயகனே..
படம் : அபூர்வராகங்கள்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல் : வாணி ஜெயராம் &சசிரேகா
* * *
கேள்வியின் நாயகனே – இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா
இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் – நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்
–
சரணம் –1
பசுவிடம் கன்று வந்து பாலருந்தும் – கன்று
பாலருந்தும்போதா காளை வரும்..?
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் – கொஞ்சம்
சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா..?
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?
*********************
சரணம் -2
தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் – மங்கை
தர்ம தரிசனத்தைத் தேடுகின்றான்
அலமேலு அவன் முகத்தைக் காண்பாளோ – மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
–
ஒரு கண்ணும் மறு கண்ணும்
பார்த்துக்கொண்டால் – அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே
நமது வேதம் தனை மறந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்
வேறு என்ன?
உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி…
மனம் எப்படி?
நீ விரும்பும்படி…
–
கேள்வியின் நாயகியே
கேள்விக்கு பதிலேதம்மா
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் – நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்
–
சரணம் –3
பழனி மலையிலுள்ள வேல் முருகா – சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னைவிடு பெருமுருகா – கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத் திருமுருகா…
திருமுருகா…திருமுருகா
* * *
தன்னை விட அதிகம் வயதான ஆணைத் திருமணம் செய்யும் பெண்களும், தன்னைவிட மூத்த வயதுள்ள பெண்ணைத் திருமணம் செய்யும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவை குறித்து சில திரைப்படங்களும் வந்துள்ளன. நடைமுறையில் செய்திகளாகவும், அக்கம்பக்கத்து வீட்டுக் கதைகளாகவும் நாமும் அறிந்துள்ளோம்.
ஒரு குடும்பத்தில் அப்பாவும் மகனும். இன்னொரு குடும்பத்தில் கணவனைப் பிரிந்த தாயும் மகளும். கருத்துவேறுபாடுகளால் மகன் அப்பாவையும், மகள் அம்மாவையும் பிரிந்து இருக்கிறார்கள். அப்பாவும் மகனுமாக மேஜர் சுந்தர்ராஜனும் கமலும். தாயும் மகளுமாக ஸ்ரீவித்யாவும் ஜெயசுதாவும் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீவித்யா மேடைக்கச்சேரி செய்பவர். கச்சேரியில் அவர் பாடும் ராகங்களை கமல் ரசிக்கிறார். ஒரு கட்டத்தில் அவளையே ரசிக்க ஆரம்பிக்கிறார். கணவனால் உதறித் தள்ளப்பட்ட பாடகிக்கு தன்னை ஒருவன் விரும்புகிறான் என்ற உணர்வு உள்ளுக்குள் மகிழ்ச்சி தர, அவன் தன்னை விட வயதில் இளையவன் என்பதையெல்லாம் மறந்து, மனம் அவனை நாடத் தொடங்குகிறது. அவனும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.
இந்தச் சூழலில் கச்சேரி செய்யும் தாயின் மகள், தன் தந்தை வயது மதிக்கத்தக்க ஒருவரை சந்திக்கிறாள். அவரை அவளுக்குப் பிடித்திருக்கிறது. அவரை மணம் செய்து கொள்ள விரும்புகிறாள். மகள் விரும்பும் அந்தப் பெரியவர், தாய் விரும்பும் வாலிபனின் தந்தையான மேஜர் சுந்தர்ராஜன்.
மேஜர் சுந்தர்ராஜனை, ஸ்ரீவித்யாவின் மகள் ஜெயசுதா காதலிக்கிறார். மேஜரின் மகனான கமலோ ஸ்ரீவித்யாவை காதலிக்கிறார். அவர்கள் நான்கு பேருக்கும் அவர்களின் உறவு தெரியாது.
அம்மா, மகள், அப்பா, மகன் – இந்த நான்கு பேரின் காதல் சரிதானா? சமூகம் ஏற்கக் கூடியதா? அல்லது அந்தத் தாயே ஏற்றாளா? மகளின் நலனுக்காக மனம் மாறினாளா? விட்டுச் சென்ற கணவன் திரும்பி வந்தானா? இதுதான் அபூர்வ ராகத்தின் கதை.
எங்கேனும் கொஞ்சம் சறுக்கினாலும், விபரீதமாகிவிடும் கதையை எளிதாகக் கையாண்டு படமாக்கியிருப்பார் பாலசந்தர். அவரின் பெரும்பாலான படங்களின் மையக்கரு, இந்தச் சமூகம் பேசத்துணியாதவற்றைப் பேசும். தனது படங்களின் மூலம் பெண்களை, அவர்களின் மனங்களை, விருப்பு வெறுப்புகளை உயர்த்திப்பிடித்த புரட்சி இயக்குநர் என்று சொன்னால் மிகையில்லை. `அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் கதையும் அப்படி ஒன்றே.
படத்தின் இறுதிக்காட்சி. தாய் (ஸ்ரீவித்யா) கச்சேரி வாசிக்கிறார். அருகில் கமல் இசைக்கருவியை வாசிக்கிறார். எதிரில் முதல் வரிசையில் ஸ்ரீவித்யாவின் மகளும், கமலின் தந்தையான மேஜர் சுந்தர்ராஜனும் அமர்ந்திருக்கிறார்கள். பாடலின் நடுவே, ஸ்ரீவித்யாவின் கணவனான ரஜினி மனம் திருந்தி வருகிறார். இந்தச் சூழலில் அமையும் பாடல் காட்சி.
எத்தனை வசனங்களாலும் நிரப்பமுடியாத அந்தக் காட்சியை, கவியரசரின் ஒற்றைப் பாடல் அத்தனை அழகாக, எல்லாக் குழப்பங்களுக்கும் தீர்ப்பெழுதுகிறது.
–
கேள்வியின் நாயகனே, இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா… என்று ஆரம்பிக்கிறார். இல்லாத மேடையொன்றில், எழுதப்படாத நாடகத்தைத்தான் நாம் எல்லோரும் நடித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாத்திரம். அவ்வளவுதான். அதை நாமே பார்த்துக்கொண்டும் இருக்கிறோம். இதன் முடிவுதான் என்ன?
சமயங்களில் நம் மனம் ஒன்றை விரும்பும். மனசுக்கு மரபு தெரியாது. சமூகம் தெரியாது. அதற்குத் தெரிந்ததெல்லாம் அதன் விருப்பம் ஒன்றே. அப்படி விருப்பத்தின் பின்னால் ஓடும் மனதை அடக்கியாளத் தெரியாமல் விழிப்பவர்களே அதிகம். கொஞ்சம் பொறுமையாக சிந்தித்துப் பார்த்தால் மட்டுமே அந்த விருப்பத்தின் பின்னால் உள்ள தவறு, நாமே வெட்கப்படும் அளவு நமக்குப் புலப்படும் என்கிற மிகப்பெரிய சித்தாந்தத்தை இரண்டு வரிகளில் எழுதியிருப்பார் கண்ணதாசன்.
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் – கொஞ்சம்
சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்
ஸ்ரீவித்யாவும், கமலும் கதை நாயகர்களாகவே மாறி நடித்திருப்பார்கள். பாடலின் வழியே ஒவ்வொரு கேள்வியாக ஸ்ரீவித்யா கேட்க… கமலின் முகபாவங்கள், தனக்கு விருப்பமான ஒரு பொருளை கண்முன்னே இழக்கும் குழந்தை உதடு பிதுங்க அவதிப்படுவதைப்போல் அற்புதமாக நடித்திருப்பார்.
தனது பாடலுக்கு நடுவே, ராமாயண மகாபாரதக் கதைகளையும், இதிகாசக் கதைகளையும், கோர்க்கும் வித்தைகளில் கைதேர்ந்தவர் கவியரசர். இந்தப் பாடலில் அலமேலு மங்கையைத் தேடி திருச்சானூர் வரும் பெருமாளைப்போல, தலைவியைத் தேடி தலைவன் வந்ததாக எழுதியிருப்பார்.
கேள்வியின் நாயகனே… இந்தக் கேள்விக்கு… என்று முடிக்க முடியாமல் ஸ்ரீவித்யா தடுமாறுகையில், மனம் மாறிய மகள் ஜெயசுதா மேடைக்கு வந்து, தாயின் அருகில் அமர்ந்து பாடலைத் தொடர்வார். பாடலின் கேள்விகளைத் தாங்க முடியாமல் கமல் எழுந்து மேடைக்கு ஓர் ஓரமாக நின்றுகொள்வார்.
இறுதி வரியாக கவியரசருக்குக் கைகொடுத்தது, சிவனிடம் கோபித்துக்கொண்டு பழனி மலைக்குச் சென்ற முருகனின் கதை.
பிடிவாதம் தன்னைவிடு பெருமுருகா – கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத் திருமுருகா…
என்று பாடலை நிறைவு செய்கையில், மனம் திருந்தி, தன் பிடிவாதத்தைக் கைவிட்டு, மேடையிலிருந்து கீழிறங்கி, கமல் தனது தந்தையின் பக்கத்தில் அமர்ந்திருப்பார். பக்கம் பக்கமாக எத்தனை வசனங்கள் வைத்திருந்தாலும், படத்தில் இறுதிக்காட்சி இத்தனை உணர்வுப்பூர்வமாக அமைந்திருக்காது.
கவியரசரின் வரிகள் ஒவ்வொன்றும் உணர்வுப்பூர்வமானவைதானே?
– பயணிப்போம்

Leave a Reply
You must be logged in to post a comment.