சங்க இலக்கியங்களில் முருகன்
மா.மாரிராஜன்.
சங்க இலக்கியங்களில் முருகக் கடவுளின் பல்வேறு நிகழ்வுகளை ஏராளமான பாடல்கள் பதிவு செய்கின்றன.
முருகு, முருகன், சேஎய், நெடுவேள், தெய்வம், கடவுள், பழந்தெய்வம் என்ற பெயர்களில் முருகன் அழைக்கப்படுகிறார்.
வேலன் வெறியாட்டுடன் மேலும் முருகனது பல்வேறு நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காணலாம்.
குறிஞ்சித் தலைலனாக, பெரும் போர் வீரனாக கடம்ப மரத்தில் இருப்பவனாக, யானைமேல் பயணிப்பவனாக, காதலர் பசலை நோய் தீர்ப்பவனாக, கடுஞ்சினம் கொண்டு போர் புரிபவனாக, அழகனுக்கு உவமையாக – முருகனைச் சிறப்பிக்கும் ஒரு சில பாடல்களின் சுருக்கம்.
புறநானூறு – பாடல் 55
//புணரி அலைக்கும் செந்தில் நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, கடு வளி தொகுப்ப ஈண்டிய வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே //
முருகப்பெருமான் குடியிருக்கும் திருச்செந்தூர் கடலோர
மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும்
பல்லாண்டுக்காலம் வாழ்க பாண்டியனே.
புறநானூறு – பாடல் 23
// கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் //
” கடம்பு மாலை அணிந்து போரிட்ட முருகனின் கூளியர் படை போல பகைநாட்டில் போரிட்டது பாண்டியன் நெடுஞ்செழியனின் படை
புறநானூறு – பாடல் 16
//துணை வேண்டாச் செரு வென்றி, புலவு வாள், புலர் சாந்தின், முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்//
யாரது துணையுமின்றி கையிலே புலால் நாறும் வாளும் மார்பிலே சந்தனமும் கொண்டு போரில் வெற்றிபெற்றான் முருகன் போல் சீற்றமும் தோற்றமும் கொண்ட
இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
புறநானூறு – பாடல் 120
//பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே //
புறமுதுகு காட்டி ஓடும் பகைவர்களைக் கண்டு மகிழும் முருகப்பெருமான் போன்றவன் வேள்பாரி.
புறநானூறு – பாடல் 56
//முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்//
முருகனைப் போல் நினைத்ததை முடிக்கும் பாண்டிய மன்னன்.
அகநானூறு – பாடல் 149
//கூடற் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே//
கூடல் நகருக்கு மேற்குத்திசையில் நெடியோன் குன்றமான முருகனின் திருப்பரங்குன்றம் இருந்தது. நெடியோன் குன்றத்தில் மயில் கொடி உயர்த்தப்பட்டிருக்கும். எப்போதும் இந்தக் குன்றம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அதில் ஆழமான ஒரு நீர்ச்சுனை உண்டு. அதில் நீலம் பூ பூத்திருக்கும். என் காதலி அந்த நீலமலர் போன்ற கண்ணினை உடையவள். அவள் கண்ணில் கண்ணீர் பனி நிறையுமாறு விட்டுவிட்டு நெஞ்சமே.
அகநானூறு – பாடல் 181
//ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப//
மிஞிலி என்னும் படைத்தலைவன் பகைவரின் கோட்டைகள் பலவற்றைக் கைப்பற்றியவன்.. அவன் பெரும் படையுடன் சென்று போர்க்களம் இரத்தத்தால் சிவக்கும்படி முருகக் கடவுள் போலத் தாக்கினான்.
அகநானூறு பாடல் – 158
//புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ //
இப்போது இவளது தந்தையும் இல்லை. புலிக்கூட்டம் போன்ற நாய்களைச் சங்கிலியில் பிடித்துக்கொண்டு வேட்டைக்குப் போய்விட்டான். முருகன் போல் சீற்றம் கொள்ளும் அவள் தந்தை இருந்தாலாவது இவள் அஞ்சாமல் இருப்பாளே.
அகநானூறு – பாடல் 28.
//முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின் //
தேன் ஒழுகும் மாலை அணிந்துகொண்டு, வேட்டை நாயுடன் வந்த உன் வேட்டுவன் அழகில் முருகனோடு போட்டி போடுபவனாக இருக்கிறான். அவனைப் பெறுவதோடு நீ நின்றுவிட்டாய்.
அகநானூறு – பாடல் 59
//சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து//
சூரனைக் கொன்று சுடரும் வேலை உடையவனும் சினம் மிக்க முருகன் குடிகொண்டுள்ள குன்றம் திருப்பரங்குன்றம் .
அகநானூறு – பாடல் 1
//வண்டு படத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவேள் //
வண்டுகள் மொய்க்கும்படி அடர்ந்த மலர்களையுடைய மாலையையும் ஒளிரும் கழல்களையும் அணிந்த அஞ்சத்தக்க குதிரைகளையுடைய மழவர்களை வென்ற முருகனைப் போல், நல்ல போர் வெற்றியை உடையவன் உன் தலைவனாம் தோழி.
நற்றிணை – பாடல் 225
//முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப் பொருத யானை வெண் கோடு கடுப்ப //
முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் செருக்குற்று போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக ஏந்திய மேலே வளைந்த நிலையில் காணப்படுவது போல
குறுந்தொகை – பாடல் 1
// செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம், குருதிப் பூவின் குலைக் காந்தட்டே//
போர்க்களம் குருதியால் செந்நிறம் ஆகும்படி அசுரர்களைக் கொன்று அழித்த குருதியால் சிவந்த திரண்ட அம்பினையும், குருதியால் சிவந்த தந்தத்தையுடைய யானையையும், நெகிழுமாறு அணியப்பட்ட தொடியையும் உடைய முருகக் கடவுளின் இம்மலையானது சிவந்த காந்தள் மலர்க் கொத்துக்களை உடையது.
குறுந்தொகை – பாடல் 87
//மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர் //
ஊரின் மன்றத்தில் உள்ள கடம்பு மரத்தில் தங்கியுள்ளவனும் தீயவர்களுக்கு அச்சத்தை தந்து வருத்துபவனும் ஆன பழமையான தெய்வம் உள்ள குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய எம் தலைவர்.

Leave a Reply
You must be logged in to post a comment.