தந்தை செல்வா அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும்!

தாய்மார்களே, பெரியோர்களே நண்பர்களே!

இன்று தமிழ்த் தேசியத்தின் தந்தை செல்வநாயகம் அவர்களின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தலை அனுட்டித்துக் கொண்டிருக்கிறோம். தந்தை செல்வநாயகம் தனி மனிதர் அல்ல. அவர் ஒரு வரலாறு. அவர் தமி்ழினத்துக்கு வாராது வந்த மாமணி. அவர் பிறந்திரரேல் ஈழத் தமிழர்களது வரலாறு திசை மாறிப் போயிருக்கும். அவரைப் பற்றி இங்கே அமர்ந்திருக்கும் பேச்சாளர்கள்  விரிவாகப் பேச இருக்கிறார்கள்.

சோல்பரி ஆணையத்தின் முன் ஜிஜி பொன்னம்பலம் 50:50 கேடு வாதாடிய போது இளம் வழக்கறிஞராக இருந்த தந்தை செல்வாநாயகம் அவருக்கு உதவியாக இருந்தார். 1944 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடக்கப்பட்ட போது அதன் துணைத் தலைவராக தந்தை செல்வநாயகம் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1947 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் சார்பாக காங்கேசன்துறைத் தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. ஒரு சுதந்திர இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படாது என்று டி.எஸ் சேனநாயக்க கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழ் சட்ட சபை உறுப்பினர்கள் இலங்கை சுதந்திர சட்டத்திற்கு (Ceylon Independence Act) ஆதரவாக  வாக்களித்தார்கள். அப்போது சட்ட சபையில் உரையாற்றிய பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா பின்வருமாறு பேசினார்.

“I do not normally speak as a Sinhalese, and I do not think that the Leader of the Council ought to think of himself as a Sinhalese representative; but for once, I should like to speak as a Sinhalese and to assert with all the force at my command that the interests of one community are the interests of all. We are one of another, whatever our race or creed.”

Urging Tamils and other minority communities to accept the Soulbury Constitution, Senanayake reached out further:

“Do you want to be governed from London, or do you want, as Ceylonese, to help govern Ceylon? On behalf of the Congress and on my own behalf, I give minority communities the sincere assurance that no harm need you fear at our hands in a free Lanka.”

“நான் வழக்கமாக ஒரு சிங்களராகப் பேசுவதில்லை; சடட சபையின் தலைவரும் தன்னை ஒரு சிங்களப் பிரதிநிதியாகக் கருதக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் இம்முறை, ஒரு சிங்களராகப் பேச விரும்புகிறேன். என் முழு வலிமையுடனும் கூற விரும்புவது என்னவென்றால், ஒரு சமூகத்தின் நலன் எல்லா சமூகங்களின் நலனாகும். நாம் இனம் அல்லது மதம் எதுவாயினும், ஒன்றுக்கொன்று உடன்பிறப்புகள் ஆக இருக்கிறோம்.”

தமிழர்களையும் பிற சிறுபான்மை சமூகங்களையும் சோல்பரி அரசியலமைப்பை ஏற்குமாறு கேட்டுக்கொண்ட அவர் மேலும் கூறினார்:

“நீங்கள் இலண்டனிலிருந்து ஆளப்பட விரும்புகிறீர்களா? அல்லது இலங்கையர்களாக இருந்து இலங்கையை ஆளுவதில் பங்கேற்க விரும்புகிறீர்களா? தேசிய காங்கிரஸின் சார்பிலும், எனது  சார்பிலும், சிறுபான்மை சமூகங்களுக்கு நான் உளமார்ந்த உத்தரவாதம் அளிக்கிறேன்—சுதந்திர இலங்கையில் எங்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.”

ஆனால் சேனநாயக்கா அவர்கள் உதட்டில் தேனும் உள்ளத்தில் நஞ்சும் வைத்துப் பேசினார் என்பதை அன்றைய அப்பாவித் தமிழ்ப் பிரதிநிதிகள் அறிந்திருக்கவில்லை. சேனநாயக்கா பேசியதை வேதவாக்காக நம்பினார்கள்.  சேனநாயக்காவின் வேடம் இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் கலைந்தது. அதுவரை நடந்த சட்டசபைத் தேர்தல்களில் வாக்களித்த 8 இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை 1948 ஆம் ஆண்டு சேனநாயக்காவினால் சட்ட சபையில் கொண்டு வந்து  நிறைவேற்றப்பட்ட இலங்கை குடியுரிமை சட்டம் இல. 48 இன் மூலம் பறிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின் முதல் வாசிப்பு ஓகஸ்ட் 04 ஆம் திகதி. இரண்டாம் வாசிப்பு ஓகஸ்ட் 19, மூன்றாம் வாசிப்பு ஒகஸ்ட் 20, 1948, சட்டமான திகதி நொவெம்பம்பர் 20, 1948. மொத்தத்தில் நாடு சுதந்திரம் பெற்று 285 நாட்களுக்குள் 700,000 இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தார்கள். இந்த சட்டத்தை தந்தை செல்வநாயகம் நாடாளுமன்றத்தில் மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்துப் பேசினார்.

“You are now hitting at the weakest section of the Tamils. You are hitting at the innocent and weak that labouring in the chill and the cold of the plantations producing your wealth. We will know where we stand… when our turn comes  next …We will know when the next piece of legislation in this series comes…… The one dealing with our language.”  

“நீங்கள் இப்போது தமிழர்களில் மிகவும் நலிந்த பிரிவினரைத் தாக்குகிறீர்கள்; உங்கள் செல்வத்தை உருவாக்கும் தோட்டங்களில் கடுங்குளிரிலும் ககடுமையான சூழலிலும் உழைக்கும் அப்பாவி மக்களை, நலிந்தவர்களைத் தாக்குகிறீர்கள். அடுத்ததாக எங்கள் முறை  முறை வரும்போது நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம்… இந்தத் தொடரில் அடுத்த சட்டம் வரும்போது, ​​அதாவது எங்கள் மொழியைப் பற்றிய சட்டம் வரும்போது, ​​நாங்கள் அறிந்து கொள்வோம்.”

இந்தச் சட்டத்தை  எதிர்த்து திருவாளர் ஜிஜி பொன்னம்பலம்  பேசினாலும் திரைமறைவில் அவர் டி.எஸ். சேனநாயக்கா அவர்களது அமைச்சரவையில் அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். தந்தை செல்வநாயகம் இந்தச் சட்டத்தை எதிர்த்து பேசிக் கொண்டிருந்த போது பொன்னம்பலம் அவரது வேட்டியைப் பிடித்து “Chelva don’t burn the boats” (“செல்வா, படகுகளை எரிக்க வேண்டாம்.”) என்று தனது வேட்டியைப் பிடித்து இழுத்த வண்ணம் இருந்தார் என  தந்தை செல்வா எம்மிடம் ஒரு முறை சொன்னார்.   Don’t  burn the boats means avoid irreversible actions; keep your options open. இதன் பொருள் உங்கள் பின்வாங்கும் வாய்ப்புகளையும், சமரசம் செய்யும் வாய்ப்புகளையும், எதிர்காலத் தேர்வுகளையும் நீங்களே அழித்துக்கொள்ள வேண்டாம் என்பதாகும். பச்சையாகச் சொன்னால் நான் அமைச்சர் அவையில் அமைச்சராகச் சேர  சேனநாயக்கா அவர்களோடு பேரம் பேசிக் கொண்டிருக்கிறேன் அதனைக் கெடுத்துவிடாதே” என்று பொருள்.  

நான் ஏற்கனவே சொன்னது போல இலங்கை குடியுரமைச் சட்ட வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நிறைவேற்றப்படுகிறது. அதே ஆண்டு  செப்தெம்பர் மாதம் 09 ஆம் திகதி பொன்னம்பலம் மீன்பிடி, கைத்தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.   இந்த இரண்டகத்தை மனதில் வைத்துத்தான்  தந்தை செல்வநாயகம்  டிசெம்பர் 19, 1949 அன்று இதஅக தொடக்கப்பட்ட போது தனது தொடக்க உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“சென்ற காலங்களில் தலைவர்களின் உறுதியற்ற நிலையே, எமது பலவீனத்துக்குக் காரணமாயிருந்தது.. இக்குறையை நிவர்த்தி செய்தாலன்றி, எமது கட்சியும் தோல்வியுறும். ஐரிஷ் தேசியவாதிகளைப்போல, சுதந்திரத் தமிழ் அரசு நிறுவப்படும் வரை, “பதவி ஏற்கவே மாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சில் ஒரு நோக்கமுமாக யாம் இருத்தலாகாது.

 இலங்கை குயுரிமைச் சட்டத்தை அடுத்த ஆண்டு  இலங்கை நாடாளுமன்ற தேர்தல் (திருத்த) சட்டத்தில்  ஒரு வரி  திருத்தம் செய்யப்பட்டது. “நாட்டின் குடிமக்களே தேர்தலில் வாக்களிக்க உரிமையடையவர்கள்” என்பதே அந்தத் திருத்தம்.

இந்தச் சட்டங்களினால் 8 இலட்சம் மலையகத்தமிழர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வாக்குரிமை இரண்டையும் இழந்தார்கள். அதன் விளைவாக  –

  • 1947 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  7 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த மலையமக்கள் 1952 இல் ஒருவரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
  • 1964 இல்  சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின் அடிப்படையில் 525,000 மலையகத் தமிழர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
  • 1946 இல் 780,600  (11.73 விழுக்காடு) ஆக இருந்த மலையகத் தமிழர்களின் மக்கள் தொகை  2024 இல் 600,360 (2.08 விழுக்காடு) ஆகக் குறைந்தது.
  • 1946 இல் இலங்கைத் தமிழர்களின்  மக்கள் தொகை 733,700 (11.02 விழுக்காடு)  இன்று (2024) இல் 26,81,627 (12.30) உயர்ந்துள்ளது.
  • 1946 இல் சிங்களவர்களது  தொகை 46,20,500 (69.41 விழுக்காடு, 2024 இல் 161,44,,037 (74.10 விழுக்காடு) ஆக உயர்ந்துள்ளது. அதாவது  78 ஆண்டுகளில் மூன்றரை மடங்கு உயர்ந்துள்ளது.   இத்துடன் எனது பேச்சை நிறைவு செய்து கொள்ள விரும்புகிறேன். தந்தை செல்வநாயகம் அவர்களின் கனவுகள் நிறைவேற்றப்படவில்லை. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், பவுத்த மயமாக்கல் தொடர்கிறது.  தமிழர் பிரதேசங்களில் விகாரைகள்  ஆயிரக்கணக்கான கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்டு வருகின்றன. இப்போதும் தோராயமாக தமிழர்களது 18,000 ஆயிரம் ஏக்கர் காணி சிங்ள இராணுவத்தின் பிடியில் உள்ளது. தமிழர்களது வழிபாட்டு இடங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு இலங்கைத் தமிழர் கூட இல்லை.

இந்தச் சூழ்நிலையில் தந்தை செல்வநாயகத்தின் கனவுகனை நினைவாக்குதல் எங்கள் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும். இலக்கை அடையுமட்டும் எமது பயணத்தை நிறுத்தக் கூடாது.  கூடினோம் பிரிந்தோம் என்றிராமல் கனடா ததேகூ இல் இணைந்து எமது சுமையை குறையுங்கள். அடுத்த ஆண்டு தந்தை செல்வநாயகத்தின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல். சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதற்கு உங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை.

பூர்வீக மகான்களின் ஞாபகத்தை  தீவர பக்தியடன் வளர்க்காத நாட்டில்  புதிய மகான்கள்  பிறக்க  வழியில்லை. என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் அறிவுனை. நன்றி. வணக்கம்.

(சென்ற ஞாயிற்றுக்கிழமை கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தந்தை செல்வா அவர்களது 49 ஆவது நினைவேந்தல் நாளன்று நக்கீரன் ஆற்றிய தலைமையுரை)

About nakkeran 207 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply