ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்


ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்

23 Jul 2022,

நன்றி: சிறகு  —  http://siragu.com/ஆவணியே-தமிழ்ப்-புத்தாண்ட/ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்

பழந்தமிழர் ஆவணித் திங்களையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர்.

முன்னுரை:

சித்திரை ஆண்டின் முதல் மாதமாக இன்றைய வழக்கத்தில் இருப்பது பிற்காலத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றமாகும். அது வைதீக சமயம் தமிழக மண்ணில் ஆணித்தரமாகக் காலூன்றியதன் காரணமாக ஏற்பட்ட ஆரியப் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவு. அதனால் வியாழவட்ட 60 ஆண்டுகள் ‘சுழற்சி முறைக் கணக்கிடல்’ அடிப்படையில், வடமொழி ஆண்டுப் பெயர்கள் கொண்ட காலக்கணிப்பு முறை அரசு ஆதரவுடன் தமிழகத்தில் நடைமுறைக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டது எனலாம். வைதீகத்தின் தாக்கம் கொண்டுவந்த விளைவே சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கமாகும்.

தமிழக அரசின் முயற்சியாக, 60 ஆண்டு சுழற்சி முறையைக் கைவிட்டு, திருவள்ளுவர் பிறப்பைத் தொடக்கமாகக் கணக்கில் கொண்ட தொடர் ‘வளர்ச்சி முறைக் கணக்கிடலில்’ தைத்திங்கள் புத்தாண்டின் தொடக்கமாக 1971ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதை ஏற்காத பிரிவினர் அதை மறுதலித்தார்கள். அதுமட்டுமின்றித் தொடர்ந்து வடமொழி பெயர் கொண்ட ஆண்டுகளின் பெயர்களை வலிந்து தமிழ்ப்படுத்திப் புழக்கத்திற்கு விட்டார்கள். இருப்பினும் தமிழ்ப் புத்தாண்டு இது என்று தொடர்ந்து ஒரு வடமொழி ஆண்டுப் பெயரை அறிவிக்கும் அவல நிலை இன்றும் தொடர்ந்தே வருகிறது.

புத்தாண்டு குறித்த சர்ச்சைகள்:

ஒவ்வொரு தைத்திங்களும் பொங்கல் பொங்குவதுடன் பொங்கல் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக ‘எது தமிழ்ப் புத்தாண்டு?’ என்ற பட்டிமன்றம் போன்ற விவாதங்களும் வழக்கத்திற்கு வந்தது. அது அத்துடன் நிற்காது மீண்டும் சித்திரைத் திங்கள் தொடக்கத்தில் மீண்டும் ஒரு பாட்டம் விவாதங்கள் தொடங்கிவிடும். ஆனால் இரு பிரிவினரிடமுமே ‘தைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’ என்பதற்கோ, அல்லது ‘சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’ என்பதற்கோ உறுதியான சான்றுகள் எதுவுமே இல்லை. இந்த மாதம்தான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்று உறுதியாக அறுதியிட்டு நேரடியாகக் கூறாத கல்வெட்டுப் பதிவுகள், இலக்கிய வரிகள் போன்றவற்றை எல்லாம் இயன்றவரை மேற்கோள் கொடுத்து வாதிடுவார்கள்.

சொல்லப் போனால் தமிழ்த் திங்களின் கால அளவீட்டு முறையை இன்று வழக்கத்தில் பின்பற்றுவோர் பொதுமக்களில் எவரும் இல்லை என்பதுதான் உண்மை. அது இறைவழிபாட்டுடன் தொடர்புடையதாக, அதாவது வைதீகத்துடன் தொடர்புடையதாகக் கோவில்களில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இன்று என்ன தமிழ் மாதம் அல்லது நாள் என்று ஒரு நூறு பேரிடம் கேள்வி கேட்டால் ஒரு 3 விழுக்காட்டினர் கூட சரியான விடை அளிக்க இயலாத நிலைதான் இன்றைய நடைமுறை. இருப்பினும் இது ஒரு தன்மானப் பிரச்சனையாகத் தமிழர் இடையே தொடர்கிறது. இந்த விவாதக் களத்தில் இந்த இருபிரிவினர் மட்டுமல்ல, மற்றொரு பிரிவினரும் உள்ளனர். அவர்கள் ஆவணிதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், தொல்காப்பியம் மூலம் அவ்வாறு பொருள் கொள்ள இயலும் என்று கூறும் பிரிவினர். இவர்கள் பலநாள் படுக்கையில் இருக்கும் நோயாளி போல வலுவிழந்த நிலையில் இடையில் வந்து, நலிவுற்ற குரலில் முடிந்தவரை முனகிப் பார்த்துவிட்டு தங்கள் வாதங்கள் எடுபடாது என்று காணாமல் போய்விடுவார்கள். ஆனால், தை, சித்திரை போன்ற மற்ற பிரிவினருக்கு தங்கள் கருத்து அடிப்படைக்கு வலுவான சான்றுகள் ஏதும் இல்லாவிடினும் வாதக் களமிறங்கி வன்மையாக ஆடுவார்கள். எத்திரணியைப் பலமாகச் சொற்களால் தாக்குவார்கள்.

இன்றைய வழக்காறுகள், இலக்கண, இலக்கிய, நிகண்டுகள் மற்றும் கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகள்:

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்குச் சான்றுகளாக அமையும் இன்றைய 1. வழக்காறுகள், 2. இலக்கண, 3. இலக்கிய, 4. நிகண்டுகள் மற்றும் 5. கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகளை அடுத்துக் காணலாம் …

1. கொல்லம் ஆண்டு வழக்காறு:

தமிழரிடம் இருந்து பிரிந்த சென்ற பழந்தமிழ் மலையாள உறவுகள் தங்களுக்கென பொ.ஆ. 825ஆம் ஆண்டு முதல் புதியதாகக் கட்டமைத்துக்கொண்ட ‘கொல்லம் ஆண்டு’ என்ற வளர்ச்சி முறைக் காலக் கணக்கிடல் முறையில் ஆவணியைத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் வழக்கம் ஒரு சான்று.[1] இவ்வழக்கம் பழந்தமிழர் பண்பாட்டின் எச்சம் எனலாம். கேரளத்தில் ஆகஸ்ட் 17ஆம் நாள் வாக்கில் புத்தாண்டு தொடங்கும்.

2. தொல்காப்பிய நூற்பா:

தொன்மையான தமிழ் நூலான தொல்காப்பியத்தில் அகத்திணை இயலில் ஐவகை நிலங்களுக்குரிய பொழுதுகளை வகுத்துரைக்கும் பொழுது, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் (தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல்: 6 — 10) என்னும் பெரும் பொழுதுகளை கார் காலத்தினைத் தொடக்கமாகக் கொண்டு குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.

2.Tholkappiyar.png

இத் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும் (இவரது காலம் பொ.ஆ.14-ஆம் நூற்றாண்டு) இதன் பொருளைத் தெளிவாக விளக்கிக் கீழ்க்காணும் உரை தந்துள்ளார்.

“காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டுமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்.”

சிங்கவோரை = ஆவணித்திங்கள், கற்கடகவோரை = ஆடித் திங்கள்; அதாவது ஆவணி முதலாக ஆடி இறுதியாக உள்ள காலம் ஓர் ஆண்டாம், ஆதலினால் அவற்றை இரண்டிரண்டு மாதங்கள் கொண்ட கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறுவகைப் பருவங்கள் கொண்டதாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது[2].

3. சிலப்பதிகாரம்:

சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 25),  பகுதியில் இளங்கோவடிகள் கார் முதலிய ஆறு வகைப் பருவங்களையும் முறையே வரிசைப்படுத்தியே எழுதியுள்ளார். மதுரை மாநகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் மனம் செலுத்தினராம். தங்களின் நினைவோட்டத்தில் அப்பெண்கள் கார்காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என வரிசையாக ஒவ்வொரு கால நிகழ்வுகளையும் நினைவு கூர்வதாக இளங்கோவடிகள் சொல்லிச் செல்கிறார் [3].

3.Ellango.png

‘கார்’ அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் (96)

குறுங்கண் அடைக்குங் ‘கூதிர்’க்காலையும் (101)

வெண் மழை அரிதில் தோன்றும் ‘அச்சிரக்காலையும்’ (105)

‘பங்குனி’ முயக்கத்துப் ‘பனியரசி’ யாண்டுளன் (112)

‘இன்னிள வேனில்’ யாண்டுளன் கொல் (117)

‘கோடையொடு’ புகுந்து கூடலாண்ட வேனில் வேந்தன்(124)

[அச்சிரக்காலையும்=முன்பனிக் காலமும்; பங்குனி, பனியரசு =பின்பனிக் காலமும்]

இக்கால வரிசை தொல்காப்பியம் குறிப்பிடும் அதே வரிசையில் அமைவதைக் காணலாம்.

4. நிகண்டுகள்:

I.  திவாகர நிகண்டு:

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு மற்றொரு உறுதியாக, எழுத்தில் பதியப்பட்ட சான்றைச் சேந்தன் திவாகரம் என்னும் திவாகர நிகண்டு கொடுக்கிறது [4].

     அறு வகைப் பருவமாவன

     காரே, கூதிர், முன் பனி, பின் பனி,

     (சீர்) இள வேனில், முது வேனில் (என்று ஆங்கு)

     இரு மூன்று வகைப் பருவம்; (அவை தாம்

     ஆவணி முதலா இரண்டு இரண்டாக

     மேவின திங்கள் எண்ணினர் கொளலே).

     (6 பெயர்கள்)     [சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர் தொகுதி-134]

4.Divakara_Nikandu.jpg

இருதிங்கள் சேர்ந்த காலப்பகுதி பருவம் எனப்படும். ஆவணி தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாக முறையே கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு பருவங்களைக் கொண்டது ஓர் ஆண்டு என்பதாகவும், கார் பருவத்தை முதன்மையாக வைத்து அது தொடங்கும் ஆவணி முதலாக வைத்துப் பிற மாதங்களை எண்ணியுள்ளனர் என்பதை இப்பாடல் கூறுகிறது.

சேந்தன் திவாகரம் என்னும் திவாகர நிகண்டும் அதன் காலமும்: சேந்தன் திவாகரம் நிகண்டு என்றால் என்ன? அது எந்தக் காலத்து நூல்? யார் எழுதியது? போன்ற விவரங்கள் அறிந்திருப்பவர் எண்ணிக்கை சராசரி தமிழரில் குறைவே. சேந்தன் திவாகரம் என்பது ஒரு நிகண்டு, இது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல்.  அதாவது இக்கால வழக்கில் அரிய சொற்களின் பொருளை அறிய உதவும் அகராதி நூல் என்பதற்கு நிகரானது. ஒரு சொல்லுக்கு நிகரான சொற்களைக் கொடுப்பதால் நிகண்டு என்று அழைக்கப்பட்டது என்றும் பொருள் தரப்படுகிறது, நிகண்டு ஒரு வடமொழிச் சொல் என்றும் கூறுவாருண்டு. நிகண்டு என்ற சொல் பிற்காலச் சொல், முன்னர் இத்தகைய பொருள் விளக்கம் தரும் நூல்கள் ‘உரிச்சொற் பனுவல்’ என்று தொல்காப்பியர் அடியொற்றி சொற்களுக்கு விளக்கம் தரும் நூல்களாக அறியப்பட்டன. நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது அருஞ்சொற்களுக்கு பொருள்கூறும் தொல்காப்பியமே. நிகண்டுகளை மனனம் செய்து முற்றிலும் அறிந்திருப்பது முற்காலத் தமிழ்க் கற்றலுக்கும் மொழிப்புலமை பெறுவதற்கும் அடிப்படையாக இருந்தது[5].

சேந்தன் திவாகரம், நாகப்பட்டினம் அருகே உள்ள அம்பல் என்னும் சிற்றூரில் வாழ்ந்த சேந்தன் என்ற சிற்றரசன் அல்லது வள்ளலின் ஆதரவில் திவாகரன் என்ற சமண முனிவரால் தொகுக்கப்பட்டதற்குச் சேந்தன் திவாகரம் நூலில் சான்றுகள் உள்ளன.[6] திவாகர முனிவரை சைவர் என்று குறிப்பிடுவதைப் பிழை என்று பேராசிரியர் வையாபுரி பிள்ளை தனது ‘தமிழிலக்கிய சரித்திரத்தில் காவிய காலம்’ என்ற நூலில் (பக்கம் 164) மறுத்துள்ளார்.[7]

நிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இதன் காலம் ஏழாம் அல்லது எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகப் பல ஆய்வாளர்களால் வெவ்வேறுவகையில் கணிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.[7] இந்த நிகண்டே முதல் நிகண்டு என்று ஆய்வாளர் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நூல் ஆதி திவாகரம் என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படும் கூற்றுக்குச் சான்று இல்லை என்று மறுக்கப்படுவதுடன், சேந்தன் திவாகரம் நூலின் மற்றொரு பெயரே ஆதி திவாகரம் என்று கூறப்படுகிறது.[8]  திவாகர நிகண்டின் 12 தொகுதிகளில், 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் தமிழ்ச் சொல்லுக்கு நிகரான பொருள் தரும் பல வடமொழிச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பல நிகண்டுகள் பிற்காலத்தில் வீரமாமுனிவரின் சதுரகராதி வரையும் அதற்குப் பின்னரும் கூட தோன்றியுள்ளன. சேந்தன் திவாகரம் நூலைத் தழுவி இருபதாம் நூற்றாண்டு வரை சுமார் இருபது நிகண்டுகள் வந்திருப்பது தமிழின் சிறப்பாகக் கூறப்படுகிறது.[7]

அவற்றில் குறிப்பிடத்தக்கவை பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு போன்ற நிகண்டுகளாக்கும்.

திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயற்றியது) (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு)

பிங்கல நிகண்டு (பிங்கல முனிவர் இயற்றியது)

சூடாமணி நிகண்டு (மண்டல புருடர் இயற்றியது)

முழுமையான ‘சேந்தன் திவாகரம்’ 1923ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சுவடிவம் பெற்றது, பின்னர் 1958-ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது. சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, ஆகிய நிகண்டுகளின் தொகுதி சாந்தி சாதனா பதிப்பாக 2004ஆம் ஆண்டு வெளியானது.[4]

5.Nigandu_list.jpgஆய்வாளர்களின் குறிப்புகளிலிருந்து பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதே காலத்தால் முற்பட்ட நிகண்டு நூலான சேந்தன் திவாகரம் என்பது தெளிவாகிறது. இந்த நூல் இக்காலத்திற்கு முற்பட்ட தமிழக இலக்கிய வழக்காறுகளைப் பதிவு செய்யும் ஆவணமாகத் திகழ்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பதற்கு வழியில்லை.

ஆண்டின்‌ தொடக்கத்தைக்‌ கார்ப்பருவத்தினை முதலாகக் கொண்டு, ஆவணி மாதத்திலிருந்து தொடங்கினர்‌ பழந்தமிழர். கார்காலம்‌ தொடங்கும்‌ காலமான ஆவணித்திங்கள், தொல்காப்பியம்‌ அகப்பொருள்‌ விளக்கம் பகுதியில் இடம் பெற்றுள்ளது போலவே திவாகர நிகண்டிலும் இடம்‌ பெற்றுள்ளது. ஒவ்வொரு பருவத்திற்கும்‌ இரண்டிரண்டு திங்களாகக் காலத்தைப் பகுத்த முறையை “ஆவணி முதலா இரண்டிரண்‌டாக மேவின திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே” என்றுதான் திவாகரப்‌ பாடல்‌ குறிப்பிடுகிறது.

மேலும், குறிப்பிடத்தக்க வகையில் சித்திரையைத் துவக்கமாகக் கொள்ளும் வசந்தம் என்ற சொல்லே திவாகர நிகண்டில் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி காலத்தை வகைப்படுத்தும் முறையான வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம் என ‘இருதுகள்’ அல்லது பருவ வகைப்பாடும் [6 Ritu (season): Vasant Ritu (Spring), Grishma Ritu (Summer), Varsha Ritu (Rain), Sharad Ritu (Autumn), Hemant Ritu (Pre-winter), and Shishir or Shita Ritu (Winter)] திவாகர நிகண்டில் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகண்டு உருவான காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஆட்சிகளும் சமயக் காட்சிகளும் மாறியதும், அவற்றின் எதிரொலியாகத் தமிழரின் காலக்கணக்கிடலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதும் இக்குறிப்பிலிருந்து தெளிவாகிறது.

– தொடரும்

Kandiah MURUGATHASAN's profile photo

Kandiah MURUGATHASAN

24 Jul 2022, 05:25:16

to mint…@googlegroups.com

…மீண்டும் (ஒரு பாட்டம் )விவாதங்கள் தொடங்கிவிடும்…..

திருமதி.தேமொழி அவர்கள் பதிவிட்ட ஆவணியே தமிழப் புது;தாண்டின் தொடக்கம் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் ‘ஓரு பாட்டம் ‘ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு வியந்து மகிழ்ந்தேன்.

அதற்குக் காரணம் யாழ்ப்பாண ஊர்களில் நாளாந்த வாழ்வில் பலமுறை இச்சொல் பயன்பட்டு வருகின்றது.

உதாரணங்கள்

ஓரு பாட்டம் மழை பெய்து முடிஞ்சுது
ஒரு பாட்டம் அழுது முடிச்சு பிறகு இப்ப சிணுங்குகிறாள்
ஒரு பாட்டம் தோட்டததுக்கு போய் புல்லுப் பிடுங்கிக் கொண்டு வந்து மாட்டுக்குப் போட்டிட்டன்
ஒரு பாட்டம் உடுப்புத் தோயச்சு காய விட்டிட்டன்
இப்படிப் பல

எங்களுடைய அம்மாவே ஒரு நாளில் பலமுறை இச்சொல்லை பயன்படுத்துவார்.இங்கு ஜேர்மனியில் எனது மனைவியே ஒரு பாட்டம் சட்டிகளை கழுவி வச்சிட்டம் இன்னும் கிடக்குது என்பார்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் ஒரு பாட்டம் சொல் இன்னும் புழககத்தில் இருந்து வருகின்றது.

தொல்காப்பியர் காலத்துத் தமிழ்ச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் இன்னும் புழக்கத்திலஇ இருந்து வருகின்றது என்று ‘இலங்கையில் தமிழ்ப் பண்பாடு ‘ என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அடுத்து கட்டுரையை வாசித்த போது எல்லாமே மாறுதலுக்குரியது என்பதற்கப்பால் ஆரியத் தாக்கம் தொடர்ந்து வலுவாகி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.


Kandiah MURUGATHASAN's profile photo

Kandiah MURUGATHASAN

24 Jul 2022

…மீண்டும் (ஒரு பாட்டம் )விவாதங்கள் தொடங்கிவிடும்…..

திருமதி.தேமொழி அவர்கள் பதிவிட்ட ஆவணியே தமிழப் புத்தாண்டின் தொடக்கம் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் ‘ஓரு பாட்டம் ‘ என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியந்து மகிழ்ந்தேன்.

அதற்குக் காரணம் யாழ்ப்பாண ஊர்களில் நாளாந்த வாழ்வில் பலமுறை இச்சொல் பயன்பட்டு வருகின்றது.

உதாரணங்கள்

ஓரு பாட்டம் மழை பெய்து முடிஞ்சுது
ஒரு பாட்டம் அழுது முடிச்சு பிறகு இப்ப சிணுங்குகிறாள்
ஒரு பாட்டம் தோட்டததுக்கு போய் புல்லுப் பிடுங்கிக் கொண்டு வந்து மாட்டுக்குப் போட்டிட்டன்
ஒரு பாட்டம் உடுப்புத் தோயச்சு காய விட்டிட்டன்
இப்படிப் பல

எங்களுடைய அம்மாவே ஒரு நாளில் பலமுறை இச்சொல்லை பயன்படுத்துவார்.இங்கு ஜேர்மனியில் எனது மனைவியே ஒரு பாட்டம் சட்டிகளை கழுவி வச்சிட்டம் இன்னும் கிடக்குது என்பார்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் ஒரு பாட்டம் சொல் இன்னும் புழககத்தில் இருந்து வருகின்றது.

தொல்காப்பியர் காலத்துத் தமிழ்ச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் இன்னும் புழக்கத்திலஇ இருந்து வருகின்றது என்று ‘இலங்கையில் தமிழ்ப் பண்பாடு ‘ என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அடுத்து கட்டுரையை வாசித்த போது எல்லாமே மாறுதலுக்குரியது என்பதற்கப்பால் ஆரியத் தாக்கம் தொடர்ந்து வலுவாகி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

On Sat, Jul 23, 2022 at 7:06 PM தேமொழி <jsthe…@gmail.com> wrote:

Muduvai Hidayath's profile photo

Muduvai Hidayath

unread,

24 Jul 2022, 05:55:36

to minTamilGroup

tamil.jpg

பழந்தமிழர் ஆவணித் திங்களையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர்.

என்ற கட்டுரையின் 

தொடர்ச்சி . . . 

நன்றி: சிறகு  — http://siragu.com/ஆவணியே-தமிழ்ப்-புத்தாண்-2/
ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் – பகுதி – 2

தேமொழி

Jul 30, 2022

II.   பிங்கல நிகண்டு:
சேந்தன் திவாகரம் நிகண்டின் செய்தியைத் தொடர்ந்து பிங்கல நிகண்டு தரும் செய்திகளையும் காணலாம்.  சேந்தன் திவாகரம் செய்த திவாகர முனிவரின் மகன் பிங்கல முனிவர் வரையறுத்து விரித்துச்செய்த பிங்கல நிகண்டு சங்க மருவிய காலத்து நிகண்டு என்று குறிப்பிடப்படுகிறது.  இதைப்  பிங்கல நிகண்டின் சிறப்புப் பாயிரமும், “செங்கதிர் வரத்தாற் றிவாகரன் பயந்த பிங்கல முனிவனெனத் தன் பெயர் நிறீஇ-உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை” என்று குறிப்பிடுகிறது.  சூரியன் வரத்தால் வந்த திவாகர முனிவர் பெற்ற பிங்கல முனிவனானவன் பிங்கலம் என்று தன்பெயரைத் தன்நூலுக்குத் தந்து மக்களிடத்தும் அன்பு கூர்ந்து நூல் செய்யுங்காலத்தில், என்பது இதன் பொருள்.  

பிங்கல நிகண்டின் சிறப்பை, “செங்கதிர்வரத்திற்றோன்றுந் திவாகரர் சிறப்பின் மிக்க, பிங்கலருரை நூற்பாவிற் பேணினர் செய்தார் சேர, இங்கிவை இரண்டுங் கற்க எளிதலவென்று சூழ்ந்து” எனக் குறிப்பிடும் மண்டல புருடனின் சூடாமணி நிகண்டாலும், ஆதி திவாகரம் இறப்பப் பிங்கலம் நிலைபெற்றுள்ளது என்பது “பிங்கல முதலா நல்லோருரிச்சொலி னயந்தனர் கொளலே” எனவரும் நன்னூலாலும் உணரலாம் எனத் தமிழ்ப்புலவர் வீ. தி. சிவன் பிள்ளை எடுத்துரைக்கிறார்.[9] இந்த வரிகளிலிருந்து மண்டல புருடர் சூடாமணி நிகண்டு எழுதுகையில் முதன்மையான நிகண்டுகளாகக் கருதப் பட்டவை திவாகரரும் அவர் மகன் பிங்கலரும் உருவாக்கிய இரு நிகண்டுகளும்  என்பது தெரிகிறது.  அத்துடன் பிங்கல நிகண்டு  உருவான பின்னர் சேந்தன் திவாகரம் பயன்பாடு குறைந்து பிங்கல நிகண்டு அத்தேவையை நிறைவு செய்ததையும்  அறிய முடிகிறது.  

சேந்தன் திவாகரம் நிகண்டைத் தொடர்ந்து தோன்றிய பிங்கல முனிவர் செய்த பிங்கலந்தையென்னும் “பிங்கல நிகண்டு” நூலும் ஆவணி முதலாகக் காலம் கணக்கிடப்பட்டதை அறிவிக்கிறது.   அத்துடன் ‘இருது’ என்பதும் பருவம் என்ற சொல்லுக்கு நிகரானது (பருவமும் இருதுவுமொருபொருட்கிளவி) என்றும் குறிப்பிடுகிறது.

கார் காலத்தைத் தொடக்கமாகக் கொண்டு கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனப் பருவங்கள் இரண்டிரண்டு திங்கள்கள் கொண்டதாக ஆறு பருவங்கள் குறிப்பிடுவது வழக்கம் போல;  வசந்த காலத்தைத் தொடக்கமாகக் கொண்டு வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம் என இருதுகள் இரண்டிரண்டு திங்கள்கள் கொண்டதாக ஆறு இருதுகள் குறிப்பிடும் வழக்கத்தையும் காட்டுகிறது. [9]  

இதில் இருக்கும் வியக்கத்தக்கச் செய்தி என்னவெனில், இந்த இருது வரிசையில் இடம் பெறும் வருடம் என்பதன் பிறப்பும் ஆவணித் திங்கள்தான்.  ஆக, வருஷப் பிறப்பு என்றாலும் அது  மீண்டும் ஆவணி என்றே அமைகிறது. ஆண்டைக் குறிக்கும் வடமொழிச் சொல் ‘வருஷ’ (varSa) என்பதே மழை/கார்காலத்தின் தொடக்கத்தைத்தான் குறிக்கிறது. வடமொழியில் ஆண்டு, மழை ஆகியவற்றுக்கான சொல் (varSa=year; varSA=rain)  வருஷ என்றே  இருப்பது தற்செயலான ஒற்றுமையாக இருக்க வழியில்லை.  கார்காலமே முற்காலத்தில் பரந்துபட்ட  இந்திய மண்ணின் பெரும்பாலான பகுதிகளில் ஓர் ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கக் கூடிய வாய்ப்பிருந்திருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளலாம்.  பருவகால வகைப்பாடுகள் குறித்து விரிவாகக் கீழ்க்காணும் சூத்திரங்கள் விவரிக்கின்றன.

பிங்கலநிகண்டு:   முதலாவது ‘வான்வகை’ – சூத்திரங்கள்:
          பருவமும்‌ இருதுவும்‌ பகரில்‌ ஒன்றே. (208)

          அறுவகைப்‌ பருவ காலம்‌

          காரே, கூதிர்‌, முன்‌ பனி, பின்‌ பனி,

          சீர்‌ இளவேனில்‌, முதுவேனில்‌ என்று ஆங்கு
          இரு மூன்று வகைப்‌ பருவம்தானே. (6 பெயர்கள்‌) (209)

 அவைதாம்‌ ஆவணி முதலா இரண்டு இரண்டாக
          மேவிய திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே. (210)

இந்த சூத்திரங்களுக்கு அடுத்து வருவது …
          அறு வகை இருது
          வசந்தம்‌, இரீடம்‌, வருடம்‌, சரமே,
          ஏமந்தம்‌, சிசிரம்‌, என இருது ஆறு ஆகும்‌.  (6 பெயர்கள்‌) (211)

          அவை தாம்‌ சித்திரை முதலாச்‌ செல் மாதம்‌
          இரண்டா வைத்தன எண்ணிக்‌ கொள்க என்ப.  (212)

பிங்கலநிகண்டு:  இரண்டாவது ‘வானவர்’ வகை – சூத்திரங்கள்:
          பருவமும் இருதுவும் ஒருபொருட்கிளவி

          அறுவகைப் பருவகாலப் பெயர் –
          கார்,கூதிர், முன்பனி, பின்பனி,
          இளவேனில், முதுவேனில்.
          அவைதாம் – ஆவணி, புரட்டாதி கார்;  
          ஐப்பசி, கார்த்திகை கூதிர்;  
          மார்கழி, தை  முன்பனி;
          மாசி, பங்குனி பின்பனி;  
          சித்திரை, வைகாசி இளவேனில்;
          ஆனி, ஆடி முதுவேனில்.

          அறுவகை இருதுவின் பெயர் –
          வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம்.
          அவைதாம் – சித்திரை, வைகாசி வசந்தம்;  
          ஆனி, ஆடி கிரீடம்;
          ஆவ‌ணி, புரட்டாதி வருடம்;
          ஐப்பசி,  கார்த்திகை சரம்;  
          மார்கழி, தை ஏம‌ந்தம்;
          மாசி, பங்குனி சிசிரம்.

III.   சூடாமணி நிகண்டு:
சூடாமணி நிகண்டு இந்த வரிசையில்  காலத்தால் பிற்பட்ட  நிகண்டு ஆகும்.  பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது சூடாமணி நிகண்டு.  விருத்தப்பாவால் ஆன இந்நூல் 12 பிரிவுகளின் கீழ்,  1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.[10]  

 ஆவணி முதல்‌ இரண்டிரண்டு மாதம்‌
          ஆகிய அறுவகைப்‌ பருவம்‌

          பரவிய காரே, கூதிர்‌,
          முன்‌, பினிற்‌ பனிகளோடு,
          விரவிய இளைய வேனில்‌,
          விரைந்திடு முதிர்ந்த வேனில்‌,
          மருவும் “ஆவணியே ஆதி”
          மற்று இரண்டு இரண்டு மாதம்‌
          பருவம்‌ மூவிரண்டும்‌ ஆய்ந்து
          பார்த்திடின்‌ வாய்த்த பேராம்.  (6 பெயர்கள்‌) (95)

ஆண்டின் தொடக்கம் என்பதை “ஆவணியே ஆதி”  என்ற சொற்றொடரின் மூலம் 

16 ஆம் நூற்றாண்டின்  சூடாமணி நிகண்டு அறுதியிட்டுக் கூறுவதைக் காணமுடிகிறது.  

5. திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள்:
திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளை  அவை வெட்டப்பட்ட  காலமான  9ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம்  நூற்றாண்டுவரை காலக்கோட்டில் வரிசைப்படுத்தி ஆராய்ந்ததில்;  பிரபவ முதல் அட்சய என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ள “அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்” கொண்ட கணக்கு விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.[11]  இந்தக் காலக் குறிப்பு மாற்றம் விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் தொடங்கித்தான் திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர், இந்தப் பேரரசின், இந்த மன்னரின், இத்தனையாவது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது என்று குறிப்பிடும் முறைதான் கல்வெட்டுகளில்  முன்னர் வழக்கமாக இருந்திருப்பது தெரிகிறது.

முடிவுரை:
எனவே ஆரூடம் பார்க்க வழக்கிலிருந்த ஆரிய வைதீகப் பண்பாட்டின்  அறுவகை இருது (வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம்) என்ற காலக் கணக்கிடல் முறை, தமிழ் நாட்டை ஆண்ட அந்நியர்களான நாயக்கர்கள் ஆட்சிக் கால கட்டத்தில் கோயில் எல்லையைக் கடந்து பொதுமக்களின் வாழ்வுமுறையில் நுழைந்துள்ளது. அதுவரை வழக்கத்திலிருந்த ஆவணிப் புத்தாண்டு முறையை நீக்கி வைதீக சித்திரைப் புத்தாண்டு வழக்க முறைக்கு மாற்றியது என்றுதான் இந்த மூன்று நிகண்டுகளின் செய்திகளையும் ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் முடிவெடுக்க வேண்டியுள்ளது.  மேலும், 16 ஆம் நூற்றாண்டிற்குப்  பின்னர் தோன்றிய இலக்கியங்களையும், நிகண்டுகளையும் ஆராய்வதன் மூலம் இதை உறுதி செய்யலாம்.   இம்மாற்றம் சோதிட நாட்காட்டியின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றம் என்பதும் தெளிவாகிறது[12].  

அத்துடன் “சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்பது வரலாற்றில் ஒரு பொய்” என்பதும் தெளிவாகிறது.

(1) பழந்தமிழர் காலக் கணக்கீட்டின் தொடர்ச்சியாக பண்டையத் தமிழ் உறவுகளான கேரள நாட்டில் வழக்கில் இருக்கும் கொல்லம் ஆண்டு கணக்கிடல் முறை,
(2) தொல்காப்பியரின் பொருளதிகாரம் (அகத்திணையியல்: 6  — 10),
(3) சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 —  125),
(4) திவாகர, பிங்கல, சூடாமணி நிகண்டுகள் தரும் செய்திகளின் ஒப்பீடு,
(5) திருவல்லிக்கேணி கோயிலின் தொடர் கல்வெட்டு அறியத் தரும் செய்திகள்,
இவற்றின் மூலம்  “ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்” என்று உறுதியாகக் கூறலாம்.  

சரியான தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட விரும்பும் ‘உண்மையான தமிழராய்’ இருந்தால் வரும் ஆவணித் திங்கள் துவக்கத்தைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடலாம், அவ்வாறு மாற்றச் சொல்லி அரசுக்கும் கோரிக்கை அனுப்பலாம். ஆவணிப் புத்தாண்டை மீண்டும் அதிகாரப்பூர்வமாக வழக்கத்திற்குக் கொண்டுவர அரசும் முயற்சி மேற்கொள்வதும் வரவேற்கத்தக்கதே.

மேலும், எதிர்காலத் தலைமுறைக்கு  எளிதாகப் பழந்தமிழ் வழக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் பாடநூல்களில் தமிழ் மாதங்களின் வரிசையை 1. ஆவணி, 2. புரட்டாசி, 3. ஐப்பசி, 4. கார்த்திகை, 5. மார்கழி, 6. தை, 7. மாசி, 8. பங்குனி, 9. சித்திரை, 10. வைகாசி, 11. ஆனி, 12. ஆடி என்று மாற்றி அமைக்கலாம்.  பழந்தமிழர் வழக்கம் இடைக்காலத்தில் அரச ஆதரவுடன் மாற்றம் பெற்றிருந்தால், அதே அரச ஆதரவுடன்தான்  மாற்றம் செய்வது தேவையாக இருக்கும்.

ஏனெனில், தமிழர் ஒருவர் சித்திரைப் புத்தாண்டு விரும்பியோ அல்லது தைப் புத்தாண்டு விரும்பியோ என்பது ஒரு பொருட்டல்ல. உண்மைதான் முக்கியம். வரலாற்று உண்மை நிலைநாட்டப் படவேண்டும். பிழை சீர் செய்யப்படுதல் தேவை.  

இது தவிர்த்து,  காலம் முழுவதும், உலகம் முழுவதும் நாட்காட்டிகளை மாற்றியமைத்துக் கொண்டதும் செப்பனிட்டுச்  சீர் செய்து கொண்டதும் வரலாறே.  மலையாள கொல்லம் ஆண்டு வளர்ச்சி முறைக் கணக்கிடலும் அவ்வாறான ஓர் எடுத்துக்காட்டே.  திருவள்ளுவர் பிறப்பைத் தொடக்கமாகக் கணக்கில்  கொண்ட தொடர் வளர்ச்சி முறைக் கணக்கிடல் முறையில் தைத்திங்கள் புத்தாண்டின் தொடக்கமாகத் தமிழக அரசால் அறிவிக்கப் பட்டதும் இத்தகைய மாற்றம் என்ற வகையிலேயே அடங்கும். இது ஓர் ஏற்கத்தக்க ஒரு மாற்றமே.  

மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, திருமலை நாயக்கர் சித்திரை மாதத்திற்கு மாற்றியதை ஏற்றுக் கொண்டு தமிழர் இன்றும்  சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடிக் கொண்டிருப்பது போலத்தான் இம்மாற்றமும்.[13]  எனவே, ஆவணியில் இருந்த புத்தாண்டுப் பிறப்பை, இடைக்காலத்தில்  சித்திரைக்கு மாற்றிக் கொண்ட தமிழர்களுக்கு, அதே போல இப்பொழுதும் தைத்திங்களைப்  புத்தாண்டின் தொடக்கமாக ஏற்றுக் கொள்வதில்  மனத்தடைகள் இருக்கத் தேவையில்லை.  

சான்றாதாரங்கள்:
[1]  ‘Kollam Era,’ K.V.Sarma, Indian Journal of History of Science, 31(1), p.99. 1996.  
[https://web.archive.org/web/20150527163650/http://www.new1.dli.ernet.in/data1/upload/insa/INSA_1/20005b5f_93.pdf]

[2]  பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், (பக்கம் – 21), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2007.  
[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdluhy.TVA_BOK_0006010/page/20/mode/2up]

[3]  சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், 4. ஊர் காண் காதை.
[https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=16]

[4]  சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, சாந்தி சாதனா பதிப்பு, 2004.
[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZUy.TVA_BOK_0002448]

[5]  நிகண்டு நூல்கள்.
[https://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412554.htm]

[6] உரிச்சொல் நிகண்டு, மு. அருணாசலம், செந்தமிழ், பக்கம்: 1- 12. 1965.
[https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0008294_செந்தமிழ்_April_May_1965.pdf]

[7]  திவாகரம் முதல் தொகுதி, சென்னைப் பல்கலைக் கழகம் பதிப்பு, பக்கம்: xii-xv, 1990.
TVA_BOK_0022928_திவாகரம்_தொகுதி_1.pdf
[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0022928_திவாகரம்_தொகுதி_1.pdf]

[8]  தமிழ் அகராதிக் கலை, பேரா. சுந்தரசண்முகனார், புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பக வெளியீடு, பக்கம்:80, 1965.
[https://ta.wikisource.org/s/2t33]

[9]  பிங்கல முனிவர் செய்த பிங்கலந்தையென்னும் “பிங்கல நிகண்டு” – பாகம் 1. (சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்), வீ. தி. சிவன் பிள்ளை. 1890.
[https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0515_01.html]

[10]  சூடாமணி நிகண்டு, சரசுவதி மகால் நூலகம் பதிப்பு, 1999.
[https://www.tamilvu.org/library/nationalized/pdf/05-kovaiilancheran/soodamaninikhandu.pdf]

[11] திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள், தேமொழி, 2021.
[http://siragu.com/திருவல்லிக்கேணி-கோயில்-க/]

[12]  TN celebrates new New Year, dumps ‘Brahminical’ tradition, M.R. VenkateshJan, Hindustan Times. Jan 14, 2009.
[https://www.hindustantimes.com/india/tn-celebrates-new-new-year-dumps-brahminical-tradition/story-qCcoJFXhGF91kJR8WAsF9O.html]

[13]  மதுரை சித்திரைத் திருவிழா – ஆய்வாளர்கள் சொல்லும் சுவாரஸ்யத் தகவல்கள், ஜோ மகேஸ்வரன், பிபிசி தமிழ், 13 ஏப்ரல் 2022.
https://www.bbc.com/tamil/arts-and-culture-61096773

தேமொழி's profile photo

“சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி”

சாந்தி சாதனா (சென்னை) 2004

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZUy.TVA_BOK_0002448/page/172/mode/1up

நூலில் இருந்து ….

Screenshot sathana published2.jpg

Screenshot sathana published.jpg
Screenshot sathana published5.jpg
Screenshot sathana published3.jpg
Screenshot sathana published4.jpg

—————————

பிங்கலமுனிவர் செய்த

பிங்கலந்தையென்னும் “பிங்கல நிகண்டு” – பாகம் 1

(சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்)

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0515_01.html

project madurai.jpg

—————————

தேமொழி's profile photo

தேமொழி

மேலதிகத் தகவல் கேட்டவர்களுக்காக இப்பதிவுகள்:

          நச்சினார்க்கினியர்-காலம் 14 ஆம் நூற்றாண்டு
          திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயற்றியது)  (9 ஆம் நூற்றாண்டு)
          பிங்கல நிகண்டு (பிங்கல முனிவர் இயற்றியது)  (10 ஆம் நூற்றாண்டு)
          சூடாமணி நிகண்டு (மண்டல புருடர் இயற்றியது)  (16 ஆம் நூற்றாண்டு)

———————————————————- 

தொல்காப்பியம் பொருளதிகார மூலமும்
நச்சினார்க்கினியருரையும்

முன்னைந்தியல்கள் – பாகம் – ஒன்று
கணேசையர்பதிப்பு
இரண்டாம் பதிப்பு
உலக தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை) 2007
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdluhy.TVA_BOK_0006010/page/20/mode/2up

Tholkappiyam Nachinarkiniyar.jpg
Tholkappiyam Nachinarkiniyar2.jpg

————————————————–

இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியர் கால ஆண்டுத் தொடக்கம் ஆவணி – சி.இலக்குவனார்

இலக்குவனார் திருவள்ளுவன்      12 July 2015     No Comment

tholkappiyam_peyar04

தொல்காப்பியர் கால ஆண்டுத் தொடக்கம் ஆவணி

பல்வேறு நிலைகளிலே காதலைத் துய்த்து மகிழ்வதற்கு, தக்க பருவங்களையும், நேரங்களையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். காதலில் முல்லை முதன்மைப் பங்கு வகிக்கிறது. எனவே முல்லைப் பருவத்தையும் நேரத்தையும் குறிப்பிடும் பொழுது முதலில் அவர் கார்காலத்தைக் குறிப்பிடுகிறார். எனவே அறிஞர்கள் சிலர் தொல்காப்பியர் காலத்தில் ஆண்டுத் தொடக்கம் கார் பருவத்தின் முதல் திங்களாகிய ஆவணி எனக் கருதுகின்றனர். கேரளாவில் இன்றைய நாளிலும் ஆவணியை முதலாகக் கொண்ட ஆண்டினை கணக்கிட்டு வருவது நடைமுறையில் இருப்பதை இதற்குச் சார்பாகக் கூறுவர் (நூற்பா. 6, 7, 8, 9, 10 இவற்றிற்கான நச்சினார்கினியர் உரை)

– பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 480

(Tholkāppiyam in English with critical studies)

++

ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் திருவள்ளுவன்      22 January 2017     1 Comment

ஆவணியில்  தொடங்குவது ஆண்டு!

சித்திரையில் தொடங்குவது வருடம்!

 தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் மேற்குறித்த தலைப்பு புதிராக இருக்கலாம். தைப்புத்தாண்டிற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தாலே கண்டன அம்பு தொடுப்போர் இருப்பதையும் அறிவேன்.

  60 ஆண்டுக் காலச்சுழற்சியில் அறிவுக்குப் பொருந்தாத ஒழுக்கக்கேடான கதைகளைக் கற்பித்து இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரை ஆண்டு மாறியதால் வந்த தைப்புத்தாண்டு வரவேற்கத்தக்கதே. நாம் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியதே! அதே நேரம் கடந்த கால வரலாற்றை அறியவேண்டியதும் நம் கடமையாகும்.  அந்த வகையில் அமைந்தததே இக்கட்டுரை.

  வருடம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஆண்டு என்பது என எண்ணுவோரே உள்ளனர். வருடம் என்று சொன்னால் தமிழ்ப்பற்றற்றவன் என முத்திரை குத்தும் தனித்தமிழன்பர்களும் உள்ளனர். ஆனால் இரண்டுமே வெவ்வேறு காலப் பகுப்பைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களே!

ஆண்டு, வருடம் இரண்டுமே ஏறறத்தாழ 365 நாட்களும் 12 திங்களும் 52 வாரங்களும் கொண்ட கால  அளவுதாம். ஆனால்,அத்தகைய காலத்தின் தொடக்கமும் நிறைவும் வெவ்வறோனவை.

 பேராசிரியர் சி.இலக்குவனார், தொல்காப்பியர் காலத்தில் ஆண்டின் தொடக்கம் ஆவணியாக இருந்திருக்கும் என்கிறார்.  அவர்,

அறிஞர்கள் சிலர் தொல்காப்பியர் காலத்தில் ஆண்டுத் தொடக்கம் கார் பருவத்தின் முதல் திங்களாகிய ஆவணி எனக் கருதுகின்றனர். கேரளாவில் இன்றைய நாளிலும் ஆவணியை முதலாகக் கொண்ட ஆண்டினை கணக்கிட்டு வருவது நடைமுறையில் இருப்பதை இதற்குச் சார்பாகக் கூறுவர் (நூற்பா. 6, 7, 8, 9, 10 இவற்றிற்கான நச்சினார்கினியர் உரை)

எனத் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (பக்கம் 480) என்னும் நூலில்(Tholkāppiyam in English with critical studies) குறிப்பிடுகிறார்.

  “கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன. பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே. இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.” என்றும் செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 137) தெரிவிக்கிறார்.

  இதுதான் சரியானது என்பதை ஆண்டு என்பதன் சொற்பொருளே விளக்குகிறது.

  365 நாளுக்கு ஒரு முறை முளைக்கும் மூங்கிலுக்கு  ஆண்டு  எனப் பெயர்.   அண்டையிற் கிளைத்து  முளைக்கும் மூங்கில்  முளை  அண்டு எனப்பெற்றது; ஆண்டு என மாறியது. இக்குறிப்பைச்  செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலியிலும் காணலாம்.

 மூங்கில் முளைக்கும் திங்கள் ஆவணி. எனவேஓராண்டுக் கால அளவைக்குறிப்பிடும் மூங்கில் தோன்றிய மாதத்தில் இருந்து ஆண்டினைக் கணக்கிட்டுள்ளனர்.

  சேரநாடாக இருந்த கேரளத்தில் தமிழில்இருந்து கிளைத்த மலையாள மொழியில் மூங்கில், ஆண்டு எனக் குறிக்கப்படுகின்றது; ஆவணி முதல் ஆடி முடிய உள்ள காலத்தை ஆண்டுப் பகுப்பாகக்  கருதும்  ஆண்டுக்கணக்கு  நடைமுறை   உள்ளது. எனவேதொல்காப்பியர் காலத்தில் ஆண்டு என்பது  ஆவணி முதல் ஆடி முடியவே என்பதை  இவை மெய்ப்பிக்கின்றன.

  நிதியாண்டு, கல்வியாண்டு, வேளாண்(பயிர்)ஆண்டு என்று நாம் வெவ்வேறு வகையாக இப்பொழுது குறிப்பிடுகிறோம். இவைபோல் சித்திரையை முதலாகக் கொண்ட 12 மாதக் காலப்பகுப்பும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், எப்பொழுதிலிருந்துவந்தது என்று தெரியவில்லை. சூரியன் முதலான கோள்கள், சுழற்சிகள் மாற்றத்தின் அடிப்படையில்  சித்திரை முதலாகக் கொண்ட வருடம் தோன்றியிருக்கலாம். நிகண்டுகளிலும் வருடம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது

  சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடிவது வருடம். சித்திரைத்திங்கள் மேழ ஓரையில் வருகிறது. மேழம் என்பது வருடை என்னும் ஒரு வகை ஆட்டைக் குறிக்கும். வருடையில் தொடங்கும் ஆண்டுப்பகுப்பு வருடம் எனப்படலாயிற்று. வருடம் என்பதை நாம் வருசம் எனக் குறிப்பதால் தமிழ்ச்சொல்லல்ல என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. வேறு காலப்பகுப்பைக் குறிக்கும் ஆண்டு என்னும் சொல்லே வருடத்திற்கான நல்ல தமிழ்ச்சொல் என நாம் எண்ணிவிட்டோம்.

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து (நக்கீரர்: நெடுநல்வாடை: அடிகள் 160-161)

என வரும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஆட்டினை – சித்திரையை – முதலாக உடைய காலப்பகுப்பைக் குறிக்கின்றது.

  சித்திரையை ஆண்டுத் தொடக்கமாகக் கூறும்பலரும் இவற்றை விளக்கியுள்ளனர்.

  ஆனால், மற்றொரு செய்தியும் உள்ளது. நட்சத்திரங்கள் அடிப்படையில் பார்த்தாலும்  27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் புரவி (அசுவினி) என்பதாகும்.  அடுத்தது அடுப்பு(பரணி), மூன்றாவது ஆரல்(கார்த்திகை). புரவி, அடுப்பு, ஆரலில் ஒரு பகுதி தோன்றும் காலம் சித்திரைத் திங்களாகும். எனவே, நட்சத்திரங்களின் அடிப்படையில் பார்த்தால் வருடத் தொடக்கம் என்பது சித்திரைதான்.

  ஆனால்,  சித்திரை வருடத்திற்கும் ஆவணிஆண்டிற்கும் இடையில்  தையை முதலாக உடைய காலப்பகுப்பு இருந்திருக்கலாம். சிலர் தொல்காப்பியர் காலத்திற்கும் முன்னர் முதலில் தை ஆண்டுத் தொடக்கமாக இருந்திருக்கும் என்கின்றனர். அவ்வாறு இருந்து சான்றுகள் கிடைக்காவிட்டாலும் அவ்வாறு இல்லாமல் இருந்தாலும் நாம் தை முதல்நாளை  ஆண்டுப்பிறப்பாகக் கொள்ளத் தடை ஏதும் இல்லை.

  சல்லிக் கட்டு என்பது கிரந்த எழுத்துப் பயன்பாட்டில் குறிக்கப்பெறுகிறது. இதனால் ஏறுதழுவல் தமிழர்க்குரியதல்ல என்றாகிவிடுமா?

  தொடக்கத்தில் 60 ஆண்டு காலச் சுழற்சி முறையும் பயன்பாட்டில் இருந்துள்ளது. சீனாபோன்ற நாடுகளில் இன்றும் அறுபது ஆண்டுமுறை உள்ளது.

  தமிழகத்திலும் 60 ஆண்டு சுழற்சி முறை இருந்துள்ளது. பின் வந்த ஆரியர்கள், கிருட்டிணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த குழ்நதைகளே  60 ஆண்டுகள் என  ஒழுக்கததிற்கும் பண்பாட்டிற்கும் கேடுவிளைவிக்கும் கதையைக் கட்டியதாலும்  பழந்தமிழ்ப்பெயர்களை அழித்து சமற்கிருதப் பெயர்களைச் சூட்டியதாலும்,  நம்மால் இவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகிறது.

  பழம்  ஓலைச்சுவடிகள் அல்லது தொல்லாராய்ச்சி மூலம் 60 ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள் கிடை த்தால் நாம் அவற்றைப் பயன்படுத்தலாம்.  திணிக்கப்பட்ட சமற்கிருதப்பெயர்களுக்கான தமிழ்ப்பெயர்களைச் சூட்டி அதைப் பயன்படுத்தத் தேவையில்லை. எனவேதான், திருவள்ளுவர் ஆண்டு என்னும்  தொடர் ஆண்டினைத் தமிழறிஞர்கள் வலியுறுத்தினர். அரசும் ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பித்துள்ளது. அரசின் ஆணைகளில் தவறாமல் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெறுகிறது. இலக்கிய இதழ்களில் திருவள்ளுவர் ஆண்டினைக் குறிக்கின்றனர். ஆனால், அழைப்பிதழ்கள், கல்வெட்டுக்குறிப்புகள், பத்திரப்பதிவுகள்,அன்றாட நடைமுறை ஆகியவற்றில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. நாம் அனைவரும் உறுதிஎடுத்து எல்லா இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த வேண்டும்.

  திருவள்ளுவர் ஆண்டினைப் பின்பற்றும்போது, இயல்பாகவே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமான தை முதல்நாள்தானே ஆண்டுப்பிறப்பாகும். எனவே, தமிழ்ப்புத்தாண்டாகத் தை முதல்நாளைக் குறிப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், தமிழ்நாட்டில்  கட்சிகைளப்பொருத்தே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால்  அதிமுக செய்தனவெல்லாம்  தவறு. அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக செய்தனவெல்லாம் தவறு என்னும் போக்கே மேலோங்கியுள்ளது. மாறி மாறி ஆண்டுத் தொடக்கத்தை மாற்றுவது என்பது நல்ல நடைமுறை யல்ல.  இதனைத் தவிர்க்க,

ஆவணி முதல்நாள் தொல்காப்பியர் ஆண்டுத்தொடக்கம்

தை முதல்நாள் திருவள்ளுவர் ஆண்டுத்தொடக்கம்

சித்திரை முதல்நாள் இளங்கோவடிகள்ஆண்டுத் தொடக்கம்

என்று பின்பற்றலாம்.

  அரசாணைக்கிணங்க நடைமுறையில் உள்ள திருவள்ளுவர் ஆண்டினை எல்லா இடங்களிலும் கட்டாயமாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று ஆண்டுப்பிறப்பையும் சிறப்பாகக்கொண்டாட வேண்டும். இதன் மூலம் சித்திரையில்  தொடக்கத்தில் ஆண்டுப்பிறப்பைக் கொணடாடியவர்களும் வழக்கம்போல் கொண்டாட வழி ஏற்படும். தை முதல்நாளே ஆண்டுப்பிறப்பு என்போரும் தமிழ்ப்புத்தாண்டினைக் கொண்டாடி மகிழலாம். நமக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண இலக்கியமான மூவாயிரம் ஆண்டிற்கும் முற்பட்ட தொல்காப்பியம், தொல்காப்பியர் சிறப்புகளைப் பாரறியச் செய்யலாம்.

ஆவணி  முதல் நாளே ஆண்டின் தொடக்கம் !

சித்திரைமுதல் நாளே வருடத்தின் தொடக்கம்!

தை முதல்நாளே திருவள்ளுவர் ஆண்டின்  தொடக்கம்!

என்பனவற்றை ஏற்று  முவ்வகை ஆண்டுப்பகுப்பையும் போற்றுவோம்!

தமிழின் சிறப்பை நாளும் பரப்புவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

“Tamil in Digital Media” group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT…@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u…@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

You received this message because you are subscribed to the Google Groups “மின்தமிழ்” group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u…@googlegroups.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b877b521-8825-4a2e-ac01-57c7de9a270bn%40googlegroups.com.

அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Dr. Mrs. S. Sridas's profile photo

Dr. Mrs. S. Sridas

அன்புள்ள முனைவர் தேமொழி அவர்களுக்கு,

வணக்கம்.

கனடா, தொல்காப்பிய மன்றத்தின் (2023)ஆண்டு விழாவில் “தொல்காப்பிய மலர்” ஒன்று வெளியிடுவதாக உள்ளோம். எங்கள் மலருக்கு தமிழ் புத்தாண்டு பற்றிய தங்கள் கருத்தை ஆய்வுரையாக எழுதிக் கொடுக்கமுடியுமா? இன்று, ஆவணி 14 ஆம் திகதி. ஆவணி 21 ஆம் திகதிக்கு முன்னதாகக் கொடுக்க முடிந்தால் உபகாரமாக இருக்கும். 

கட்டுரை எழுதவேண்டிய விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியைக் கணக்கில் எடுக்கவேண்டாம். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் திகதி ஆவணி 21.

கட்டுரை கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். முடிந்தால் எழுதித் தரவும். முடியாவிட்டால் குறையில்லை. நான் கேட்கத் தாமதமாகிவிட்டது. 

பெரும்பாலும், உள்நாட்டு (கனடா) ஆய்வாளர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுப்பதே தொல்காப்பிய  மலரின் நோக்கம். சில புறனடைகளும் உண்டு. நன்றி.

அன்புடன்

Dr. Mrs. S. Sridas

Phone: 647-881-3613

E-mail: selvam…@gmail.com

நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமா?

— முனைவர் தேமொழி

‘எது தமிழ்ப் புத்தாண்டு?’ 1971ஆம் ஆண்டு  முதல் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமான முறையில் பின்பற்றப்படும் தைத் திங்களின் முதல் நாளா அல்லது அதுநாள் வரையில் வழக்கத்தில் இருந்துவந்த சித்திரைத் திங்களின் முதல் நாளா  என்ற புத்தாண்டு குறித்த சர்ச்சைகள் தமிழகத்தில் ஒரு தொடர்கதை.  ஆனால், இந்த இருநாட்களும் அல்ல, தொல் தமிழ் நாட்டில் ஆண்டின் தொடக்கமாக இருந்தது ஆவணித் திங்கள் முதல் நாள்தான் என்பதற்கு அசைக்கமுடியாத சான்றுகள் உள்ளன.  

எனவே சித்திரை முதல் நாள் ஆண்டின் தொடக்கமாகவும், அதன் வியாழவட்ட 60  ஆண்டுகள் சுழற்சி முறைக் கணக்கிடலில் பயன் கொள்ளப்பட்ட ‘வடமொழி ஆண்டுப் பெயர்கள்’ கொண்ட காலக்கணிப்பு முறை வழக்கத்திற்கு வந்தது பிற்காலத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றம் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  வைதீகத்தின் தாக்கம் கொண்டுவந்த விளைவே இடையில் தொடங்கிய  சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கமாகும்.  அந்நாட்களில் அக்காலத்தில் ஆட்சியிலிருந்த அரச ஆதரவுடன் சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கம் தமிழகத்தில் நடைமுறைக்கு  ஏற்றுக் கொள்ளப்பட்டது எனலாம்.  

தைத்திங்கள் புத்தாண்டு விரும்பிகளோ அல்லது சித்திரைத்திங்கள் புத்தாண்டு விரும்பிகளோ தங்கள் வாதத்தை ஆணித்தரமாக நிறுவுவதற்கென இரு  பிரிவினருமே  ‘தைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’ என்பதற்கோ, அல்லது ‘சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’  என்பதற்கோ உறுதியான சான்றுகள் எதுவுமே அளித்தது இல்லை.   இந்த மாதம்தான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்று “உறுதியாக அறுதியிட்டு நேரடியாகக் கூறாத”  கல்வெட்டுப் பதிவுகள்,  இலக்கிய வரிகள் போன்றவற்றை எல்லாம் இயன்றவரை மேற்கோள் கொடுத்து  வாதிடுவார்கள்.  

சித்திரை என்பதற்கு அறிவியல் மற்றும் வானியல் அடிப்படையில் சான்று கொடுக்க முற்படுகையில், தஞ்சை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரையில் தமிழர் புத்தாண்டு என்ற உரையை பேராசிரியர் முனைவர் சி.கோ.தெய்வநாயகம் வழங்கினார். இவ்வுரையில் நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமாக அமைகிறது, தமிழர் புத்தாண்டின் தொடக்கம் அறிவியல் அடிப்படையில் வானியல் நிகழ்வை அடியொற்றி அமைகிறது என்று கூறுகிறார். அந்த உரையில் நிழலற்ற நாளில் ஆண்டின் தொடக்கம் என்று அவர் விளக்கும் பகுதியின்  சுருக்கம் அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு என்பது தமிழர்களுக்கு எப்பொழுது தொடங்குகிறது என்றால், வானியல் நிகழ்வுகளின்படி,  அறிவியல் அடிப்படையில் வலசை போகும் சூரியனின் வடபுல நகர்வில் சித்திரை திங்களில் மேஷ ராசியில் சூரியன் நுழையும் பொழுது,  அரைநாள் நண்பகல் பொழுதில் இரு குச்சிகளை வைத்து அவற்றின் நிழல் மூலம்  காலத்தை அளவிட்ட பண்டைய நாட்களில், சூரியன் மிகச் செங்குத்தாக வான் உச்சியில் வரும்பொழுது கோலின் நிழல் சாய் கோண நிலையில் விழாமல், கோலின் அடியிலேயே விழும் நாள்தான் ஆண்டின் தொடக்கம் எனக் கொள்ளப்பட்டது. எனவே சித்திரைத் திங்களின் நிழலற்ற நாளில்  இளவேனில் பருவத்துடன் தமிழர் புத்தாண்டு தொடங்குகிறது என விளக்குகிறார் (https://www.youtube.com/watch?v=_ja_dxCOyFs&t=382s).  

நிழலற்ற நாள் என்பது பண்டைய நாட்களில் பருவ கால அளவீட்டின் பகுதியாக இருந்திருக்கக் கூடும்.   அதற்கான வாய்ப்புண்டு. இருப்பினும் இது ஓர் அறிவார்ந்த கணிப்பு (educated guess). இது மிகப் பொருந்தக்கூடிய ஒன்று என்றாலும், சான்றுக் குறிப்புகள் அற்ற ஒரு யூகம் என்பதில் ஐயமில்லை.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவெனில்;  நிழலற்ற நாள்  என்ற வானியல்  நிகழ்வு ஆண்டில் இருமுறை நிகழ்கிறது. புவிநடுக்கோட்டிற்கு (Equator) அருகில், கடக ராசிக்கும் (tropic of cancer) மகர ராசிக்கும் (tropic of Capricorn) இடையே உள்ள வெப்ப மண்டலப் பகுதியில் (tropical region) உள்ள இடங்கள் ஆண்டிற்கு  இருமுறை   நிழலற்ற நாட்களை எதிர்கொள்ளும்.

1. சூரியனின் வடதிசைச் செலவில் சித்திரையில் ஒருமுறை நிழலற்ற நாளும், 2. சூரியனின் தென்திசைச் செலவில் ஆவணியில் ஒருமுறையும் நிழலற்ற நாள்  நிகழ்கிறது. மக்கள் சித்திரையில் வரும் நிழலற்ற நாளைப் பேசுவதைப் போல ஆவணியில் வரும் நிழலற்ற நாளுக்கு  முக்கியத்துவம் தருவதாகத் தெரியவில்லை. சித்திரை புத்தாண்டு நிழலற்ற நாளில் என்ற கோட்பாடு ஆவணி நிழலற்ற நாளுக்கும் பொருந்துமன்றோ ?

நிழலற்ற நாள் (Zero Shadow Day) என்ற வானியல் நிகழ்வின் அறிவியல் பின்னணி:
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் புவி தன் அச்சில் தோராயமாக 23.5° சாய்வாகச் சுற்றுகிறது.  துருவங்கள் மாறி மாறி சூரியனை அணுகியும் விலகியும் சாய்கோணத்தில் சுற்றுவதால் புவியில் பருவநிலை மாறுதல்கள் ஏற்படுகிறது. வானில் சூரியனின் நகர்வு நாள்தோறும் மாறும். சூரியனுடைய நகர்வின் அடிப்படையில் (சூரியனைச் சுற்றிய பூமியின் சுழற்சியின் அடிப்படையில்) பருவங்கள் இயற்கையாக அமையும்.  புவியின் தென் துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து சுற்றுகையில் வடதுருவப் பகுதியில் நீண்ட இரவும், புவியின் வட துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து  சுற்றுகையில் தென் துருவப் பகுதியில் நீண்ட இரவும் ஏற்படும்.

புவியின் நிலநடுக்கோட்டிலிருந்து கிடைக்கோடு (Latitude) – மகரரேகை 23.5° அளவில் உள்ள தென் மண்டலப் பகுதியும், நிலநடுக்கோட்டிலிருந்து கிடைக்ககோடு  – கடக ரேகை   23.5° அளவில் உள்ள வட மண்டலப்பகுதியும் உள்ள புவியின் வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள இடங்கள் ஆண்டிற்கு இரண்டு நாட்களில் சூரியனை மிகச் சரியாக அதன் வான் உச்சியில் கொண்டிருக்கும், அந்நாட்களில் அப்பகுதியில் நிழலற்ற நாள் ஏற்பாடும்.  கடகரேகை மகரரேகைகளுக்கு அப்பால் உள்ள வட துருவ தென் துருவப் பகுதிகளில் சூரியன் வான் உச்சியை அடையாது என்பதால் அப்பகுதிகளில்  நிழலற்ற நாட்கள் ஏற்பட வாய்ப்பில்லை.    

Thamizhanangu-August-2023-Themozhi - 1.jpg

டிசம்பர் 22 குளிர்காலக் கதிர்த்திருப்ப நாள் (solstice), ஜூன் 21 கோடைக்கால கதிர்த்திருப்ப நாள். இவ்வாறு சூரியன் வட தென் திசைகளை நோக்கி மாறி மாறி நகர்வது சூரியனின் தென்திசைச் செலவு என்றும் சூரியனின் வடதிசைச் செலவு என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியனின் தென்திசைச் செலவு/தட்சிணாயனம் (ஜூன் 21 — டிசம்பர் 22);
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும்  காலத்தினை தென்திசைச் செலவு என்று கூறுகின்றனர். இக்காலம்  ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். தென்திசைச் செலவு ஆடித் திங்களில் தொடங்கி மார்கழியில் முடிகிறது.

சூரியனின் வடதிசைச் செலவு/உத்தராயணம் (டிசம்பர் 22 — ஜூன் 21);
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலத்தினை வடதிசைச் செலவு என்று கூறுகின்றனர். இக்காலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். வடதிசைச் செலவு தைத்திங்களில் தொடங்கி ஆனியில் முடிகிறது. சூரியனின் வடதிசைச் செலவு தொடக்க நாளில் தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
Thamizhanangu-August-2023-Themozhi - 2.jpg

நிழலற்ற நாள் என்பது நிழல் காண இயலா நாள் ஆகும்.  அது சூரியன் நாம் இருக்கும்  பகுதிக்கு மேல் நேர் செங்குத்தாக  வான் உச்சியில் உள்ள நாள். அன்று நண்பகலில் நம் நிழல் நாம் பார்க்க இயலாதவாறு நம் காலடியிலேயே விழுவதால் நிழலற்ற நாள் என்ற பெயர் பெற்றது. சூரிய நகர்வினால் பிற நாட்களின் நண்பகலில் நம் நிழல்  சாய்கோணத்தில் விழுவதால் நண்பகலில் நம்மால் நம் நிழலைக் காண இயலும்.  நிழலற்ற நாள் என்ற வானியல் நிகழ்வு புவியின் வெப்பமண்டலப் பகுதியில் ஆண்டுக்கு இருமுறை நிகழ்வதன் காரணம் சூரியன் வடக்கிலிருந்து தெற்கிலும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் வலசை போவதால்தான்.  புவியின் நிலநடுக்கோட்டில் இருந்து துருவங்களுக்கு உள்ள சூரியனின் சாய்வுக் கோணம் அளவிடப்படும்.  இந்த சாய்வுக் கோணத்தின் பாகை அளவும்,  நாம் இருக்கும்  பகுதியின் கிடைக்கோடு இருக்கும் பாகை அளவும் சமமாக இருக்கும் நாளில் சூரியன் நம் தலைக்கு மேல் வான் உச்சியில் இருக்கும்.

இந்த ஆண்டின் முதல் நிழலற்றநாளாக, ஏப்ரல் 25, 2023ஆம் நாள்  அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.  ஏப்ரல் 25ம் நாளில் ஆண்டின் முதல் நிழலற்ற நாளை எதிர்கொண்ட இதே பகுதிகளில்  அடுத்த நிழலற்ற நாள்  ஆகஸ்ட் 17 ஆம் நாள் ஏற்படும்.  இந்த ஏப்ரல் 25 மற்றும்  ஆகஸ்ட் 17, 2023 நிழலற்ற நாட்கள்  சென்னை, பெங்களூரு, மங்களூரு பகுதிகளை ஒட்டி அவற்றுக்கு அருகில் நிகழும் நிழலற்ற நாட்கள். இப்பகுதிகள் சற்றொப்ப ஒரே கிடைக்கோட்டில் அமைந்துள்ள இடங்கள்.  சூரியனின் தொடர்ச்சியான நகர்வினால்  நிழலற்ற நாட்கள் என்பது இந்தியாவின் வெவ்வேறு பகுதிக்கும் மாறுபடும் என்பதைக் கொடுக்கப்பட்டுள்ள  படங்கள் தெளிவாக விளக்கும்.  எடுத்துக் காட்டாக; மதுரையில் – ஏப்ரல் 15, ஆகஸ்ட் 27 ஆகிய நாட்களிலும்; கோயம்புத்தூரில் – ஏப்ரல் 18, ஆகஸ்ட் 24 ஆகிய நாட்களிலும் நிழலற்ற நாட்கள் ஏற்படும்.  
Thamizhanangu-August-2023-Themozhi - 3.jpg

Thamizhanangu-August-2023-Themozhi - 4.jpg

இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பில்  நிழலற்ற நாட்கள் சூரியன் அப்பகுதிகளின் உச்சிக்கு வரும் நாளுக்கேற்ற வகையில் மாறுபடும். இவ்வாறு நிழலற்ற நாட்கள் தமிழகப் பகுதியில் நிகழும் நாட்கள்  ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 வரை ; ஆகஸ்ட் 16 முதல் செப்டெம்பர் 1 வரை.  
தமிழ்நாடு, கேரளா பகுதிகளின் நிழலற்ற நாள்கள்:
10 ஏப்ரல் & 1 செப்டம்பர்— கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம்
11 ஏப்ரல் & 31 ஆகஸ்ட்— கோவளம், திருவனந்தபுரம், திருச்செந்தூர்
12 ஏப்ரல் & 30 ஆகஸ்ட்— கொல்லம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி
13 ஏப்ரல் & 29 ஆகஸ்ட்— கோவில்பட்டி, ராமேஸ்வரம், ராமநாதபுரம்
14 ஏப்ரல் & 28 ஆகஸ்ட்— ஆலப்புழா, சிவகாசி, விருதுநகர், பரமக்குடி
15 ஏப்ரல் & 27 ஆகஸ்ட்— கொச்சி, மதுரை, சிவகங்கை, காரைக்குடி
16 ஏப்ரல் & 26 ஆகஸ்ட்— கொடைக்கானல், திண்டுக்கல், வேதாரண்யம்
17 ஏப்ரல் & 25 ஆகஸ்ட்— திருச்சூர், பாலக்காடு, திருச்சி, நாகப்பட்டினம்
18 ஏப்ரல் & 24 ஆகஸ்ட்— கோயம்புத்தூர், கரூர், காரைக்கால், பூம்புகார்
19 ஏப்ரல் & 23 ஆகஸ்ட்— கோழிக்கோடு, ஊட்டி, ஈரோடு, சீர்காழி, சிதம்பரம்
20 ஏப்ரல் & 22 ஆகஸ்ட்— வயநாடு, முதுமலை, சேலம், நெய்வேலி, கடலூர்
21 ஏப்ரல் & 21 ஆகஸ்ட்— தர்மபுரி, விழுப்புரம், பாண்டிச்சேரி
22 ஏப்ரல் & 20 ஆகஸ்ட்— மைசூர், திருவண்ணாமலை, திண்டிவனம்
23 ஏப்ரல் & 19 ஆகஸ்ட்— ஓசூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு
24 ஏப்ரல் & 18 ஆகஸ்ட்— மங்களூர், பெங்களூரு, வேலூர், ஆற்காடு, திருவள்ளூர்
25 ஏப்ரல் & 17 ஆகஸ்ட்— உடுப்பி, சித்தூர், திருத்தணி, மீஞ்சூர், புலிகாட்
26 ஏப்ரல் & 16 ஆகஸ்ட்— திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீஹரிகோட்டா

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் சித்திரை ஆண்டு தொடக்கம் நிழலற்ற நாளில் ஏற்படுகிறது  என்ற கூற்று ஆவணியில் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கும் மாறுபாடின்றி அப்படியே பொருந்தும்.

பழந்தமிழர்கள் ஆவணியில்தான் ஆண்டைத் தொடங்கினார்கள்.  இன்றும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாக அன்றைய  சேரநாடாக இருந்த இன்றைய கேரளாவில் ஆவணியின் முதல்நாள்தான் புத்தாண்டு  தொடங்குகிறது.

இன்றைய 1. வழக்காறுகள், 2. இலக்கண, 3. இலக்கிய,  4. நிகண்டுகள் மற்றும் 5. கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகள் அடிப்படையில்  ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கான சான்றுகள் ‘ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’ என்ற கட்டுரையில் கீழ் வருமாறு காட்டப்பட்டுள்ளது.
(1) வழக்காறு:  தமிழரிடம் இருந்து பிரிந்த சென்ற பழந்தமிழ் மலையாள உறவுகள் தங்களுக்கென பொ.ஆ. 825ஆம் ஆண்டு முதல் புதியதாகக்  கட்டமைத்துக்கொண்ட ‘கொல்லம் ஆண்டு’ என்ற வளர்ச்சி முறைக் காலக் கணக்கிடல் முறையில் ஆண்டின் தொடக்கம் ஆவணியைத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் வழக்கம் ஒரு சான்று. இவ்வழக்கம் பழந்தமிழர் பண்பாட்டின் எச்சம் எனலாம்.  கேரளத்தில் ஆகஸ்ட் 17ஆம் நாள், ஆவணித் திங்கள் முதல் நாளில்தான்  புத்தாண்டு தொடங்குகிறது. இது வழக்கில் உள்ள சான்று.

(2) இலக்கணம்: தொன்மையான தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் நூற்பா (அகத்திணையியல்: 6  — 10)    அகத்திணை இயலில் ஐவகை  நிலங்களுக்குரிய பொழுதுகளை வகுத்துரைக்கும் பொழுது; “காரும் மாலையும் முல்லை;  குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”  என்று கார் காலத்தினைத் தொடக்கமாகக் கொண்டு  கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்   என்னும் பெரும் பொழுதுகளைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.  இத் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியரும் இதன் பொருளைத் தெளிவாக விளக்கி “காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டுமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்” என்று விளக்கம் தருகிறார். அதாவது ஆவணி முதலாக ஆடி இறுதியாக உள்ள காலம் ஓர்  ஆண்டாகும் என்று தெளிவு படுத்துகிறார். இது எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சான்று.

(3) இலக்கியம்:  தொல்காப்பிய நூற்பா சொல்வது போலவே சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 125),      ‘கார்’ அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் (96) என்று தொடங்கும் பாடல் பகுதியில் இளங்கோவடிகள் கார் முதலிய ஆறு வகைப் பருவங்களையும் அதே முறையில் வரிசைப்படுத்தி எழுதியுள்ளார்.  மதுரை மாநகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் மனம் செலுத்தினராம். தங்களின்  நினைவோட்டத்தில் அப்பெண்கள் கார்காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என வரிசையாக ஒவ்வொரு கால நிகழ்வுகளையும்  நினைவு கூர்வதாக இளங்கோவடிகள் சொல்லிச் செல்கிறார்.

(4) நிகண்டுகள் (அகராதி நூல்கள்): ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு மற்றொரு உறுதியான, எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட சான்றை முதல் நிகண்டான, 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சேந்தன் திவாகரம் என்னும் ‘திவாகர நிகண்டு’ கொடுக்கிறது.

          “அறு வகைப் பருவமாவன
          காரே, கூதிர், முன் பனி, பின் பனி,
           (சீர்) இள வேனில், முது வேனில் (என்று ஆங்கு)
          இரு மூன்று வகைப் பருவம்; (அவை தாம்
          ‘ஆவணி முதலா’ இரண்டு இரண்டாக
          மேவின திங்கள் எண்ணினர் கொளலே).”
                    —  (6 பெயர்கள்)  [சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர் தொகுதி-134]

இருதிங்கள் சேர்ந்த காலப்பகுதி பருவம் எனப்படும். ஆவணி தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாக முறையே கார், கூதிர், முன்பனி, பின்பனி,  இளவேனில், முதுவேனில் என ஆறு பருவங்களைக் கொண்டது ஓர் ஆண்டு என்பதாகவும், கார் பருவத்தை முதன்மையாக வைத்து அது தொடங்கும்  ஆவணி முதலாக வைத்துப்  பிற மாதங்களை எண்ணியுள்ளனர் என்பதை இப்பாடல் கூறுகிறது.  எனவே இந்த நூல் 10 ஆம் நூற்றாண்டிற்கும்  முற்பட்ட தமிழக இலக்கிய வழக்காறுகளைப் பதிவு செய்யும் ஆவணமாக இது திகழ்கிறது என்பதை மறுக்க இயலாது.  இதுவும் ஆண்டின்‌ தொடக்கத்தைக்‌ கார்ப்பருவத்தினை முதலாகக் கொண்டு,  ஆவணி மாதத்திலிருந்து தொடங்கினர்‌ பழந்தமிழர் என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொட்டியே அமைந்துள்ளதைக் காணலாம். ஒவ்வொரு பருவத்திற்கும்‌ இரண்டிரண்டு திங்களாகக் காலத்தைப் பகுத்த முறையை “ஆவணி முதலா இரண்டிரண்‌டாக மேவின திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே” என்றுதான் திவாகரப்‌ பாடல்‌ குறிப்பிடுகிறது.

திவாகரா நிகண்டைத் தொடர்ந்து,  அதையொட்டி விரித்து எழுதப்பட்ட பிங்கலநிகண்டும் “ஆவணி முதலா இரண்டு இரண்டாக மேவிய திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே. (வான்வகை  சூத்திரம் 210) “  என்ற ஆண்டுப் பிறப்பு ஆவணி முதலாகத் தொடங்குகிறது  என்றே  கூறுவதுடன்  சித்திரையில், வசந்தத்தில் ஆண்டு தொடங்குவது ஆரிய சமஸ்கிருத வழக்கம் என்றும் கூறுகிறது.  இந்த வரிசையில் காலத்தால் பிற்பட்ட, 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டு ஆண்டின் தொடக்கம் என்பதை,  “ஆவணியே ஆதி”  மற்று இரண்டு இரண்டு மாதம்‌  பருவம்‌ மூவிரண்டும்‌ ஆய்ந்து  பார்த்திடின்‌ வாய்த்த பேராம்.  (சூத்திரம் 6 பெயர்கள்‌-95)  என்று அறுதியிட்டுக் கூறுகிறது. எனவே 16 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களுக்கான ஆண்டின் தொடக்கம் ஆவணியில் தொடங்குகிறது என்பதற்கு உறுதியான, எழுத்தில் ஆவணப்படுத்தப்பட்ட  சான்றுகள் நிகண்டுகளிலும் இருக்கின்றன.

(5) கோயில் கல்வெட்டுகள்: திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளை  அவை வெட்டப்பட்ட  காலமான  9ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம்  நூற்றாண்டுவரை காலக்கோட்டில் வரிசைப்படுத்தி ஆராய்ந்ததில்;  பிரபவ முதல் அட்சய என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ள “அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்” கொண்ட கணக்கு விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  இந்தக் காலக் குறிப்பு மாற்றம் விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் தொடங்கித்தான் திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர், இந்தப் பேரரசின், இந்த மன்னரின், இத்தனையாவது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது என்று குறிப்பிடும் முறைதான் கல்வெட்டுகளில்  முன்னர் வழக்கமாக இருந்திருப்பது தெரிகிறது.

ஆகவே மேற்குறிப்பிட்ட,

(1) பழந்தமிழர் காலக் கணக்கீட்டின் தொடர்ச்சியாக பண்டையத் தமிழ் உறவுகளான கேரள நாட்டில் வழக்கில் இருக்கும் கொல்லம் ஆண்டு கணக்கிடல் முறை,
(2) தொல்காப்பியரின் பொருளதிகாரம் (அகத்திணையியல்: 6  — 10),
(3) சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 —  125),
(4) திவாகர, பிங்கல, சூடாமணி நிகண்டுகள் தரும் செய்திகளின் ஒப்பீடு,

(5) திருவல்லிக்கேணி கோயிலின் கல்வெட்டுத் தொடர் வரிசை அறியத் தரும் செய்திகள் மூலம்  ஆவணியே தமிழர்களுக்கான ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

இப்பொழுது  இந்த வரிசையில் . . .
முன்னர் கொடுக்கப்பட்ட  நிழலற்ற நாள் ஆண்டின் தொடக்கம் என்ற வானியல் மற்றும் அறிவியல் அடிப்படை விளக்கமும் பொருந்துவதைக் காணலாம்.

பிற்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஆட்சிகளும் சமயக் காட்சிகளும் மாறியதும், அவற்றின் எதிரொலியாகத் தமிழரின் காலக்கணக்கிடலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதும் சான்றுகள் மூலம்  தெளிவாகிறது.  

தமிழ் நாட்டை ஆண்ட அந்நியர்களான நாயக்கர்கள் ஆட்சிக் கால கட்டத்தில் ஆரூடம் பார்க்க வழக்கிலிருந்த ஆரிய வைதீகப் பண்பாட்டின் சித்திரைத் திங்களைத் தொடக்கமாகக் கொண்ட காலக் கணக்கிடும் முறை தமிழகத்தின் கோயில் வளாக எல்லையைக்  கடந்து பொதுமக்களின் வாழ்வுமுறையில் நுழைந்துள்ளது. இம்மாற்றம் சோதிட நாட்காட்டியின் அடிப்படையில் அக்கால அரச ஆதரவுடன் ஏற்படுத்திக் கொண்ட மாற்றம் என்பதும் தெளிவாகிறது.  தமிழகத்தில் அதுவரை வழக்கத்திலிருந்த ஆவணிப் புத்தாண்டு முறை நீக்கப்பட்டு வைதீக சித்திரைப் புத்தாண்டு வழக்க முறைக்கு புத்தாண்டு மாற்றப்பட்டது என்றுதான் தரவுகள் மூலம் முடிவெடுக்க இயலும்.  ஆகவே தரவுகளின் அடிப்படையில் பழந்தமிழர் ஆவணித் திங்களையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர். ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று உறுதியாகக் கூறலாம்.  

கட்டுரைக்கு உதவியவை:
நிழல் இல்லா நாள்
https://astron-soc.in/outreach/wp-content/uploads/2023/04/ZSD_Tamil.pdf

தமிழ்நாடு-கேரளா நிழல் இல்லா நாள்
https://astron-soc.in/outreach/wp-content/uploads/2017/04/zsd_kerala_tn.jpg

நிழல் இல்லா நாள் – ஆண்ட்ராய்ட் கைபேசி செயலி
https://play.google.com/store/apps/details?id=com.alokm.zsd

The Public Outreach & Education Committee of the Astronomical Society of India (ASI – POEC)
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/

India Sunrise and Sunset Times
https://www.sunrisesunsettime.org/asia/india/

சித்திரை தமிழர் புத்தாண்டு -பேராசிரியர் முனைவர் சி.கோ.தெய்வநாயகம்
https://www.youtube.com/watch?v=_ja_dxCOyFs&t=382s

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், தேமொழி, இலக்கிய மீளாய்வு, பக்கம் 97- 112, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம், 2023.

நன்றி: 

படங்கள் உதவி — விக்கிப்பீடியா மற்றும் இந்திய வானியல் கழகத்தின் கல்வி, பொதுமக்கள் தொடர்பு குழு
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்

— முனைவர் தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –
திசைக்கூடல் – 339 [ஆகஸ்ட் 13, 2023]
https://youtu.be/F7Qm6Uu

——

நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமா?

  —  முனைவர் தேமொழி
தமிழணங்கு – ஆகஸ்ட் 2023
பக்கம்: 37-47
https://archive.org/details/2023_20230819/page/37/mode/2up

Be the first to comment

Leave a Reply