இலங்கை — ஒரு காலத்தில் Crown Jewel of Indian Ocean என்று அழைக்கப்பட்டது.

சிங்கப்பூரே பொறாமைப்படும் அளவுக்கு வளர்ச்சிக்கான அனைத்துக் காரணிகளையும் கொண்டிருந்த ஒரு தீவு.

தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒருமித்த கருத்துடன், நாட்டின் பொருளாதாரத்தைத் தோளோடு தோள் நின்று சுமந்த காலம் அது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில், இரு இனங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகச் செயல்பட்டன.

கல்வி மற்றும் நிர்வாகத் திறனில் சிறந்து விளங்கிய தமிழர்கள், நாட்டின் அரசாங்கக் கட்டமைப்பு மற்றும் வணிகத் துறையை வலுப்படுத்தினர்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மற்றும் உள்நாட்டுத் தேவைகளுக்கான உற்பத்தியில் சிங்கள மக்கள் பெரும் பங்காற்றினர்.

இரு சமூகங்களும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர். பொருளாதாரம் சீராக இயங்கியது. இனங்களுக்கு இடையில் பிரிவினை இல்லை, மாறாக ஒரு ஆரோக்கியமான ஒத்துழைப்பே நிலவியது.

ஆனால், அதிகார ஆசை இந்த நல்லிணக்கத்தைச் சிதைக்கத் தொடங்கியது.

பிரிட்டனின் புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தில் பயின்ற, மிகவும் புத்திசாலி என்று கருதப்பட்ட S.W.R.D. பண்டாரநாயக்க, ஒரு பெரும் வரலாற்றுப் பிழையைச் செய்தார்.

தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தவும், பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறவும் அவர் கையில் எடுத்த நாசகார ஆயுதம்-

தனிச் சிங்களச் சட்டம்” (Official Languages Act).

S.W.R.D. பண்டாரநாயக்கவின் “தனிச் சிங்களச் சட்டம்” என்பது வெறும் மொழி மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் அடையாளத்தை அழித்து, மற்றொரு சமூகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய ஒரு செயலாகும்.

அன்றைய காலகட்டத்தில் உயரடுக்கினரின் இரட்டை வேடத்திற்கு (The Elite Hypocrisy) பண்டாரநாயக்க ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் (Oxford University) பயின்றவர். ஆங்கில மொழியின் வலிமையும், அது உலகளாவிய ரீதியில் வழங்கும் வாய்ப்புகளையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.

தனது பிள்ளைகளான சந்திரிகா மற்றும் அநுர ஆகியோரை இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் உயர்கல்வி கற்க வைத்தார். அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்தார்.

சாதாரண நாட்டு மக்களுக்கு “சிங்களம் மட்டும்” என்று கூறி, அவர்களை ஆங்கில அறிவில் இருந்து துண்டித்தார். இதன் மூலம் சாதாரண மக்கள் உலக அறிவைப் பெறுவதைத் தடுத்து, அவர்களைத் தனது அரசியல் செல்வாக்கிற்குள் அடிமைகளாக வைத்திருக்க முயன்றார்.

1956-க்கு முன்பு, இலங்கையின் நிர்வாகத்தில் தமிழர்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தனர். ஆனால் இந்தச் சட்டம் அனைத்தையும் மாற்றியது.

அரசாங்க வேலைகளில் சேர சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்ததால், தகுதியுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலையிழந்தனர் புறக்கணிக்கப்பட்டனர்.

கல்வித் துறையிலும் தமிழர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தர கட்டுப்பாடுகள்( Standardisation) தமிழ் மாணவர்களின் மருத்துவ மற்றும் பொறியியல் கனவுகளைச் சிதைத்தன.

அகிம்சை வழியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் (சத்தியாகிரகங்கள்) அரசாங்கத்தால் வன்முறையாக ஒடுக்கப்பட்டபோது, இளைஞர்கள் ஆயுதம் ஏந்தத் தொடங்கினர். இதுவே விடுதலைப் புலிகள் (L*TT*E) மற்றும் டெலோ (TELO), ஈபிஆர்எல்எஃப் (EPRLF) புளட்(PLOTE), ஈரோஸ் (EROS)போன்ற பல அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தது.

பண்டாரநாயக்கவின் சட்டம் சிங்கள இளைஞர்களுக்கு வேலை தரும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நடைமுறை வேறுவிதமாக இருந்தது.

ஆங்கிலத்தை விரட்டியடித்ததால் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தன. இதனால் படித்து முடித்த சிங்கள இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கவில்லை.

“நாங்கள் சிங்களம் மட்டும் படித்துவிட்டு கூலி வேலைகளா செய்வது? அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலம் படித்து வெளிநாடுகளில் சொகுசாக வாழ்வதா?” என்ற கோபம் கிராமப்புற சிங்கள இளைஞர்களிடம் எழுந்தது.

இந்த ஏமாற்றமே ரோஹண விஜேவீர தலைமையில் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) உருவாகக் காரணமாகியது. 1971 மற்றும் 1980-களின் இறுதியில் தென்னிலங்கையில் அரசுக்கு எதிராகப் பெரும் ஆயுதக் கிளர்ச்சிகளை அவர்கள் முன்னெடுத்தனர்.

பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இந்த உள்நாட்டுக் கலவரங்களில் கொல்லப்பட்டனர்.

பண்டாரநாயக்கவின் இந்த ஒரு சட்டம், நாட்டை இருவேறு திசைகளில் இருந்து எரியச் செய்தது.

வடக்கில் இன ரீதியான போர்.

தெற்கில் வர்க்க ரீதியான போர்.

“மதம் மற்றும் மொழி ஆகியவற்றுடன் விளையாடுவது ஒரு நாட்டின் அழிவின் ஆரம்பம்.”

மொழி ரீதியான பாகுபாடு இனவாதமாக மாறி, இறுதியில் முப்பதாண்டு கால உள்நாட்டுப் போராக வெடித்தது.

ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின.

நாட்டின் உள்கட்டமைப்பு சிதைந்தது.

அறிவுசார் சமூகம் நாட்டை விட்டு வெளியேறியது (Brain Drain).

இலங்கை இன்று அடைந்திருக்கும் பொருளாதாரச் சரிவுக்கும், அன்றைய அந்த ஒரு சட்டமே விதை போட்டது.

அன்று பண்டாரநாயக்க ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடர அனுமதித்திருந்தால், இன்று இலங்கை ஆசியாவின் மிகப் பெரும் பொருளாதார மையமாக, அதாவது சிங்கப்பூருக்கு இணையாக இருந்திருக்கும்.

மொழிப் போர்வைக்குள் மக்களைச் சுருக்கியதால், நாடு முப்பதாண்டு கால உள்நாட்டுப் போரில் சிக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தது.

இனங்களுக்கு இடையே இருக்கும் வெறுப்பை நீக்கி, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள்.

ஆங்கிலத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ அல்லது கட்டாய மொழியாக மாற்ற வேண்டும். இது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான மொழித் தடையை உடைக்கும்.

ஆங்கிலம் பரவலாகப் பேசப்படும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (Investors) மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

கடந்த கால கசப்புகளை மறந்து, ‘இலங்கையர்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் முன்னேற இதுவே சரியான நேரம்.

இனம் மற்றும் மொழி அரசியலைத் தாண்டி, பொருளாதார வளர்ச்சியையும் உலகளாவிய தொடர்பையும் இலக்காகக் கொண்டு ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்துவதே இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி.

இலங்கை இழந்தது வெறும் பொருளாதாரத்தை மட்டுமல்ல, ஒரு முழுத் தலைமுறையின் திறமையையும் கனவுகளையும் ஆகும்.

இன்று இலங்கை மீள வேண்டுமானால், அன்று இழந்த அந்த ‘ஆங்கில வழிக் கல்வி’ மற்றும் ‘சமத்துவமான மொழிக்கொள்கை’ ஆகியவற்றை மீண்டும் நிலைநிறுத்துவது கட்டாயமானதொன்று.

Be the first to comment

Leave a Reply